செவ்வாய், செப்டம்பர் 03, 2019

சாதி பற்றி வினவின் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்

A. நடைமுறை

"புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை" - என்ன செய்ய வேண்டும், லெனின் (பக்கம் 25, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது)

வினவு, ம.க.இ.க-வின் நடைமுறை என்பது புரட்சிகரமான நடைமுறையாக இல்லாததற்குக் காரணம் அவர்களது சாதி பற்றிய கோட்பாடு (மட்டுமின்றி இன்னும் அடிப்படையான கோட்பாடுகளும்) மேம்போக்கானது, தவறானது. எனவே, வினவு, ம.க.இ.வின் நடைமுறை (களத்தில் தோழர்களின் தீரமான போராட்டங்கள்) புரட்சிகரமான இயக்கமாக மாறாமல் தேங்கிப் போயிருக்கின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தவறான கோட்பாடும், 40 ஆண்டுகளாக அதை பரிசீலித்து சரி செய்யத் தவறிய கோட்பாட்டு தலைமையும்தான்.

இல்லை என்றால் ம.க.இ.க-வின் கடந்த கால நடைமுறை போராட்டங்கள், சாதி ஒழிப்புப் பற்றிய அதன் கோட்பாட்டோடு எப்படி தொடர்புடையனவாக இருந்தன என்று சொல்லுங்கள்? அவை அந்தக் கோட்பாட்டுக்கு எப்படி வலு சேர்த்தன அல்லது அதை மேம்படுத்த உதவின என்று விளக்குங்கள். அப்படி எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

அதனால்தான், வினவு, ம.க.இ.க சாதி எதிர்ப்பு அரசியலை பேசுகின்ற, நடைமுறையில் ஈடுபடுகின்ற எல்லோரையும் முத்திரை குத்தி அவமதிப்பதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

B. ரஞ்சித் பற்றி வினவு இங்கு துலக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் "தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும்" செலக்டிவாக பேசுகிறார் என்று.

இந்த அலட்சியப்பார்வையின் அடிப்படை எது? சாதி குறித்த சித்தாந்த ஓட்டாண்டித்தனமா? இல்லை சாதி ஆதிக்க பார்வை மேலெழுந்ததா? இரண்டுமேதான். முன்னது பின்னதை மேலெழுவதற்கான காரணமாக இருக்கிறது.

சாதி பற்றிய வினவின் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது? அரை நிலப்பிரபுத்துவம் என்ற அதன் கோட்பாட்டு முடிவு எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது.

முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய "இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம்" என்ற நூல் மார்க்சின் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. மார்க்சின் அந்தக் குறிப்புகளில் இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.*

a. முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு

"1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பிற ஆசியபாணி சமூகங்களின் சொத்துடைமை முறை]

2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே குடிமகன் மட்டுமே ஒரு தனி உடைமையாளர், ஆனால் அவரது சொத்துடைமை தனியாகவும் இருப்பது. [ரோமானிய பழங்குடி சமூகங்களின் சொத்துடைமை முறை]

3. இறுதியாகத் தனிச்சொத்துடைமைக்கு துணையாக மட்டுமே சமூகச் சொத்துடைமை இருப்பது. தனிச்சொத்துடைமையே சமூகத்துக்கு அடிப்படையாகவும், உறுப்பினர்கள் கூடும் பொழுதும் பொதுத்தேவைகளின் போதும் மட்டுமே சமூகம் உண்மையில் நிலவுவது. [ஜெர்மானிய பழங்குடிகளின் சொத்துடைமை முறை]

- ஆகிய இந்த வெவ்வேறு வடிவங்களிலான சமூக அல்லது பழங்குடி உறுப்பினர்களின் ஓரிடத்தில் குடியேறிய பழங்குடி நிலத்துடனான உறவு பழங்குடியின் இயற்கையான குணாம்சங்கள் மீது ஒரு பகுதியாகவும், உண்மையில் பழங்குடி நிலத்தின் உடைமை செலுத்துவதில், பலனை அனுபவிப்பதில், பொருளாதார நிலைமைகளின் மீது ஒரு பகுதியாகவும் சார்ந்து நிற்கிறது.

உடைமை செலுத்துவதை, பலனை அனுபவிப்பதை தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை, பகைமையான அல்லது அண்டைப் பழங்குடியுடனான உறவுக் குடியேற்றங்களினால் ஏற்படும் திருத்தங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன."

(இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், பக்கம் 58 - படிப்பதற்கு வசதியாக வாக்கியங்களை பிரித்து, வரிசை எண் தரப்பட்டுள்ளது, சதுர அடைப்புக் குறிக்குள் எனது குறிப்புகள்)

இதில் 1-ல் சொல்லப்படுவது இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை, 2-ல் ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை, 3-ல் ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை. இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

b. குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு "முதலாளித்துவ உற்பத்திக்கு முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்தின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது".

இதற்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு (சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு "மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்"

எனவே, இந்தப் பகுதியில் மார்க்ஸ் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தையும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவை மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் போது இந்த்க் குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

c. இந்திய சாதி முறை பற்றி

1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் [வம்சாவழி கணங்கள்] மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய [படிநிலை] வரிசை ஆகும், அதில் [கணங்கள்] ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. கணங்களுக்கிடையே திருமண உறவு உரிமை இல்லை, கணங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வான சலுகைகளைப் பெற்றவை. [கணங்கள்] ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட, மாற்றிக் கொள்ள முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச - 409)

(சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறை. இந்த வாக்கியம் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூலில் இடம் பெறவே இல்லை!)

2. "[அடிமை முறை, பண்ணையடிமை முறை ஆகியவற்றுக்கு உரிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது" (குருண்ட்ரிச 433) [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது. ஆனால், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்கிறது.]

3. "பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறு சமுதாயங்களின் மேல் நிற்கும் உச்சபட்ச அதிகாரம் [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோற்றமளிக்கிறது.  உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்" (குருண்ட்ரிச 404)[இதில் இந்திய சமுதாயப் பொருளாதரப் படிவம் அரசனுக்கு நிலவுடைமை சொந்தமாக இருப்பதை மட்டும் வலியுறுத்துகிறது. பரம்பரை வழி பாத்தியதை பெறும் "சமுதாயங்களைப்" பற்றிய பரிசீலனைக்கு உள்ளே போகவில்லை.]

d. இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற ஆவணம் இது போன்ற குறிப்புகளை சொல்லி விட்டு

"ஆசியச் சொத்துடைமை வடிவம், மறுஉற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் மட்டுமல்ல, எங்கெல்ஸ், லெனின் ஆகியோரும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். பழம்பண்டு ஜெர்மானிய, ஸ்லாவினிய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஒன்றுதான் ஆசியச் சொத்துடைமை வடிவம் மற்றும் உற்பத்தி முறையாகும். சில பிரத்தியோகமான காரணங்களினால் இந்த வடிவமும் முறையும் எடுத்திருப்பினும், உலகெங்கும் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்கள், முறைகளின் சாராம்சத்தில் இருந்து வேறுபாடானதோ, விதிவிலக்கானதோ அல்ல" (பக்கம் 105)

“சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஆகிய வர்ணங்கள் ஐரோப்பாவில் நிலவிய அரசு உயர்குடி, பிரபுத்துவ உயர்குடி, நிதி ஆதிக்க உயர்குடியான பாட்ரீஷியன்கள், உழைக்கும் நகர்ப்புற பிளெபியன்கள் மற்றும் விவசாயிகள் போன்ற சில பிரிவு வர்க்கங்கள் அடங்கிய ஒரே வகையினரான சமூக எஸ்டேட்டுகளையே குறிக்கும். சாதி அடிப்படையிலான குலத்தொழில்கள், குடிசைத் தொழில் மற்றும் விவசாயத்தின் ஐக்கியத்தைப் பராமரித்த வேளையில், வர்ண அடிப்படையிலான வைசிய சமூகப் பிரிவு, பண்ட உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான கூறுகளைப் பெற்றிருந்ததையே காட்டுகிறது” (பக்கம் 110)

“இந்தியச் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பே கிடையாது என்பதில்லை. அதேபோல் பொதுச்சொத்துடைமை அடிமைமுறையையும் மறுப்பதற்கில்லை” (பக்கம் 109)

“நிலப்பிரபுத்துவத்தின் சாராம்சம் தனிச்சொத்துடைமையோ, கைத்தொழிலும் விவசாயமும் வேறு வேறாக வளர்வதோ மட்டுமல்ல; அதன் பிரதானமான அம்சம் உழைப்பாளர் நிலத்தோடும் பிற உற்பத்திச் சாதனங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான்; சாதிய அமைப்பு முறை, பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மூலம் சமூகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் நிலத்தோடும் உழைப்பாளனை பிணைத்திருக்கிறது” (பக்கம் 110)

என்று முடிவு செய்கிறது.

இவ்வாறு, 'இந்தியாவின் சாதி முறை என்பது ஐரோப்பாவின் சமூக எஸ்டேட்டுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை', 'இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இருந்தது, பொதுச்சொத்துடைமை அடிமை முறை இருந்தது', எனவே 'இந்தியாவுக்கும் ஐரோப்பிய சமூகங்களுக்கும் வேறுபாடு இல்லை' என்று முடிவு செய்கிறது அந்த ஆவணம். அதன் அடிப்படையி்ல இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று வரையறுக்கிறது. சாதி பற்றிய யதார்த்தத்தை திரை போட்டு மூடுகிறது.

சாதி பற்றி மார்க்ஸ் கொடுத்திருக்கும் குறிப்புகளை பின்பற்றி அம்பேத்கரின் எழுத்துக்களையோ, அதற்குப் பிந்தைய வரலாற்று அறிஞர்களின் படைப்புகளையோ கருத்தில் கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. அதன் பிறகு 1990-களில் பெரும் அளவில் வெளியிடப்பட்ட ஆய்வுகளை "பின் நவீனத்துவம்", "மார்க்சிய விரோதம்" என்று தாக்கிக் கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

இவ்வாறாக, வினவு குழுவினர் சாதி (இந்திய சமூகம்) பற்றிய கோட்பாட்டில் 1980-ல் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல், இன்று வரை வறட்டுவாதிகளாகவே தொடர்கின்றனர்.

இது வினவு பரிதவிப்புடன் பரிசீலிக்க வேண்டிய‌ விஷயம். குறைந்தபட்சம் தன்னை இன்னமும் நம்பி வந்தடையும் வாசகர்களுக்கு நேர்மையாக இதைப் பற்றி வினவு பேசியிருந்திருக்க வேண்டும். மாறாக, "நீ‌ பெரிதா நான்‌ பெரிதா", "யார் சுத்தமான‌‌ கம்யூனிஸ்டு" என ரத்த பரிசோதனை செய்யும் வகையில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பின்குறிப்பு : என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

* இது தொடர்பான மார்க்சின் முழுக் குறிப்புகளையும் படிக்க விரும்புபவர்களுக்கு https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm , https://www.marxists.org/archive/marx/works/1857/grundrisse/ , https://www.youtube.com/watch?v=lIx2tEweLeE]

குருண்ட்ரிச மேற்கோள்கள் நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. (பக்க எண்கள் மார்க்சிஸ்ட் இன்டெர்நெட் ஆர்கைவ்-ன் பி.டி.எப் கோப்புடையவை)

https://www.vinavu.com/2019/08/26/vinavu-q-and-a-about-director-pa-ranjith-cpi-cpm-parties-and-tamil-groups/#comment-534503 -க்கு மறுமொழி