ஞாயிறு, டிசம்பர் 14, 2008

சுயம்

ஒரு மனிதனை பெட்டிக்குள் அடைத்து, கட்டம் போட்டு வாழ்க்கையை முடக்கிப் போடுவதில் மிகவும் வெற்றிகரமாக தொடர்ந்து வருவது நம்முடைய சாதிக் கட்டமைப்பு. மாந்தரின் இயல்புகளை சூத்திரர், வணிகர், அரசர், அந்தணர் என்று தலைமுறை தலைமுறையாக வளர்ப்பு முறையின் மூலமாக, உணவுப் பழக்கங்கள் மூலமாக, புறச் சூழலின் தூண்டுதலின் மூலமாக, செய்யும் தொழில் மூலமாக தொடரச் செய்து கட்டத்துக்கு வெளியில் மனதை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பது சாதிக் கட்டமைப்பு.

சீனாவில் இளம்பெண்களின் பாதம் சிறியதாக இருப்பதை அழகாக, தகுதியாக கருதினார்களாம். சிறுமிகளின் பாதங்களை துணியால் இறுகக் கட்டி நடக்க விடாமல் செய்து, பாதத்தின் இயல்பு வளர்ச்சியை தடுத்து, வாழ்நாள் முழுமைக்கும் ஊனமுறச் செய்து அந்த அழகைச் சாதித்துக் காட்டினார்களாம். நாமும் வியாபாரி, அந்தணர், படை வீரர், சூத்திரர் என்று முத்திரை குத்திய கூண்டுக்குள் முடங்கிக் கொண்டு நம்மை நாமே கட்டிப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சாதியை எதிர்த்து எழுப்பப்பட்ட போர் முழக்கங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கும் தளைத்து நிற்கிறது சாதீயம். ஒவ்வொரு சமூக உறுப்பினரின் மனதிலும் தனது சாதியை ஆழமாக ஊன்றி, அவரை வளர விடாமல் தடுத்து நிறுத்துவதில் இந்துத்துவா சக்திகள் வெற்றி கண்டு வருகின்றன.

'நம்ம சாதி அமைப்புகளை எல்லாம் இவனுங்க ஊடுருவி விட்டானுங்க. சாதி இல்லை, சமத்துவம் என்று பேசி முற்போக்கு வாதிகளான நாமெல்லாம் விட்டுச் சென்ற வெற்றிடங்களை இந்துத்துவா வாதிகள் பிடித்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அதனால நான் எல்லாரிடமும் சாதி அடையாளத்தை காட்டும் படி சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நாமும் இவனுங்களோடு போட்டி போட்டு சாதி சங்கங்களை கைப்பற்ற வேண்டும்'

திராவிட இயக்கத்தினால் விடுதலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு நண்பர் இப்படிச் சொன்னார். இதுதான் இந்துத்துவா இயக்கத்தின் வெற்றி. இந்துத்துவா என்பது ஆரிய சாதிக் கட்டமைப்பை திரும்பிக் கொண்டு வரும் தீவிர முயற்சிதான்.

என்றைக்கு எதிராளி வகுத்த விதிமுறைக்குட்பட்டு அவனை எதிர்க்க முயற்சிக்கிறோமோ அன்றைக்கே நமது நிலைமை தோல்வியடைந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

திராவிடக் கட்சிகளில் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்யும் போது சாதியை ஒரு தகுதியாக பார்ப்பது இந்துத்துவத்தின் வெற்றி. அதிமுக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி, வட மாவட்டங்களில் இன்னொரு சாதி, எல்லா மாவட்டங்களிலும் ஒரு சாதியை ஆதரவாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது, எம்ஜிஆருக்குப் பிந்தைய தலைமையின் இயல்பான இந்துத்துவ வியூகம். அதே சுழலில் மாட்டிக் கொண்டு திமுகவும் சாதி சார்ந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்ட பிறகு யார் ஆட்சி அமைத்தாலும் சமூகமும், அரசும் இந்துத்துவ முறையில்தான் இயங்குகின்றன.

திராவிட இயக்கத்தின் தோல்விக்கு இப்படித்தான் முன்னுரை எழுதப்பட்டது. அரசியல் கட்சியாக இல்லாமல் சமூக சீர்திருத்த இயக்கமாகவே தொடர வேண்டும் என்று ஐயா பெரியார் சொன்னதன் காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். வாக்குப் பெட்டி நோக்கில் கொள்கைகள் நீர்த்துப் போய் தமது நோக்கங்களுக்கு எதிரிகள் வகுத்த ஆட்ட விதிகளின் படி ஆட ஆரம்பித்து அவர்களைப் போலவே ஆகி விடுவோம் என்று அவர் பயந்ததை நடத்திக் காட்டிய பெருமை கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.

நேற்றைக்கு தினத்தந்தியில் 1990ல் விபி சிங்கைப் பாராட்டி நடத்திய விழாவில் கலைஞர் படித்த கவிதையை மீண்டும் தூசி தட்டி விபிசிங் நினைவுப் படத் திறப்பு விழாவில் படித்ததைப் போட்டிருந்தார்கள். தூசி தட்டப்பட்டது கவிதை எழுதப்பட்டிருந்த தாள்களிலிருந்து மட்டும்தான். அந்தக் கவிதை வரிகளின் மீது தூசி படிந்து, அதன் மேல் தார் அடித்து, உருத்தெரியாமல் அடிக்கப்பட்டிருக்கிறது இன்றைக்கு.

முதலுக்கே மோசம் வந்த பின்னர்
முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?

ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்
ஆனது ஆகட்டுமே - இந்த ஆட்சிதான் போகட்டுமே

என்று ஆட்சியைத் தூக்கி எறியத் துணிந்தவர், காசுக்காக தன்னையே விற்கத் துணிந்த விபச்சாரத் தரகர் ஒருவர் சமூகத்துக்காக பெரிய மனிதர் வேடம் போடுவது போல, ஆட்சிக்காக எல்லாவற்றையும் பலியிட்டு விட்டு, இட ஒதுக்கீடு, உருவச் சிலை நிறுவுதல் என்று வெற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னையும் சமூகத்தையும் கண்கட்டிக் கொண்டிருக்கிறார்.

பாரதீய சனதாவுடன் கூட்டு வைத்து கூட ஆட்சியை பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்யூனிச்டு கட்சிகளைப் பகைத்துக் கொண்டாவது காங்கிரசுடன் கூட்டுத் தொடருவதற்கு ஒரே காரணம் ஆட்சிப் பற்றைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்!

இப்படி எல்லாம் செய்து நாம் ஆட்சியைத் தக்க வைக்கா விட்டால், ஆட்சியைப் பிடிக்கா விட்டால், எதிரிகள் ஆட்சியில் அமர்ந்து விட நம்மால் செய்ய முடியும் மாற்றங்கள் எல்லாம் நடக்காமலே நின்று போகும் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் கலைஞர் பாணி அரசியலுக்கு ஆதரவாளர்கள்.

முதலுக்கே மோசம் வந்த பின்னர் முயலாக ஆமையாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறோம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!

வாழை மரம் தன்னை வெட்டிக் கட்டியதை அறியாமல்
வருவோரை வரவேற்கும் மணவீட்டில்

என்று அதே கவிதையில் எழுதியிருக்கிறார். வெட்டிக் கட்டிய வாழை மரமாகத்தான் இன்றைக்கு ஆட்சிக் கட்டிலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எலிகள் நடனமாடுமிங்கே அதற்குப்
புலிகள் தாளம் போட்டிடுமோ

என்று கேள்வி கேட்டவர், பாரதீய சனதா கட்சியும், காங்கிரசு கட்சியும் ஆடும் நடனத்துக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தார் கடந்த 10 ஆண்டுகளில்.

சிங்கங்களையும் புலிகளையும் இதுதான் சுயம் என்று காயடித்து வீட்டு முற்றத்தில் கட்டுற வைத்து மூளைச் சலவை செய்து தளைத்த இந்துத்துவாவின் மறு தலை தூக்கல்தான் இன்றைய சாதி முறை சமூகத்தின் மறுமலர்ச்சி.

சாதியின் பெயரால் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முயலும் ஒவ்வொருவரும் அதை எந்தப் பெயரில் செய்தாலும் வருணாசிரமவாதிகள் வகுத்த கட்டமைப்புக்குள் தம்மை உட்படுத்திக் கொள்பவர்கள்தான்.