சனி, பிப்ரவரி 19, 2011

வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு!

தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்கள் மூலம், மீனவகுடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி யிருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை/இந்திய அரசுகளுக்கு எதிராகவும் தமிழ் இணையப் பயனர்கள் ஒருமித்த குரலை பல நாட்களாக எழுப்பி வருகிறோம்.

சென்னை கடற்கரையில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

நாம் அனைவரும் நேரில் போய் நிலவரத்தைக் கண்டறியவும், பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு (வேறு நோக்கங்களின்றி) நாம் செயல்படுவதை மீனவ மக்களுக்கு தெரிவிக்கவும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ் இணையப்பயனர்கள் நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவ கிராமங்களுக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நேரில் சென்று நிலவரங்களை அறிந்து
  • வலைப்பதிவுகளாகவும்
  • டுவீட்டுகளாகவும்
  • ஃபேஸ்புக்கிலும் தகவல்களாகவும்
  • கூகுள் பஸ் உரையாடல்களாகவும்
  • யூடியூப் காணொலிகளாகவும்
  • ஒளிப்படங்களாகவும்
இணையத்தில் வெளியிடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.

நண்பர்கள் மார்ச் 4, 5, 6 அல்லது 7 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) ஏதாவது ஒரு நாளில் தமது வசதிக்கேற்ற நாளைக் குறிப்பிட்டால், அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.

வெளியூரில் இருப்பவர்கள் நாகப்பட்டினம் அல்லது ராமேஸ்வரம் வந்துவிட்டால், உள்ளூர் நண்பர்களின் உதவியுடன் மீனவ கிராமங்களுக்குப் போய் வரலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து, அவர்களையே பேசச்செய்து, ஆவணப்படுத்தலாம். 600க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் இப்பயணம் அமையட்டும்.

இந்த முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான இணைய பயனர்கள் கலந்து கொண்டு நமது குரலுக்கு நம்மால் ஆன செயல் வடிவம் கொடுக்க முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கப் பயன்படும் கூகுள் குழுமத்தில் சேர்ந்து மின்னஞ்சல் அனுப்பி  (tnfisherman@googlegroups.com)
http://groups.google.com/group/tnfisherman பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றாக இந்த இடுகையில் பின்னூட்டமாகவோ masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள். 

புதன், பிப்ரவரி 16, 2011

19ம் தேதி சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டம்.

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தகவல் தொழில் நுட்பத் துறையினரின் உண்ணாநிலைப் போராட்டம், வரும் சனிக்கிழமை (19ம் தேதி) காலை 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

http://save-tamils.org/

இடம்:
ஐடி காரிடார்,
சோளிங்கநல்லூர் சிக்னல்,
ஆர்டிஓ அலுவலகம் அருகில்.

நானும் கலந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன். அலுவலக நேரத்துக்கு (காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை) என்று இல்லாமல், அந்த நாளின் 24 மணி நேரமும் உண்ணாமல் இருப்பதாக முடிவு.

நேரில் வர முடியாதவர்கள், அவரவர் வீட்டில் கூட உண்ணாநோன்பு இருக்கலாம். 

ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

வேலூருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபுரம்


இறைவனின் பெயரால் நடத்தப்படும் இது போன்ற அவலங்களை அனுமதிப்பது நமது சமூகத்தின் அழுகல்களை காட்டுகிறது. 

பெரிய பெரிய கோவில்களும், தங்கம் வேயப்பட்ட அறைகளும் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டங்களில் உருவானவை. அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தும் முயற்சியில் சமூகம் ஈடுபடலாம். 

21ம் நூற்றாண்டில் மக்களின் உழைப்பைச் சுரண்டும் வகையில் புதிதாக தங்கக் கோயில் கட்டும் கொள்ளைக் கூட்டங்களை என்ன செய்யப் போகிறோம்?

இத்தனை பணம் எங்கிருந்து திரட்டினார்கள் என்று வருமான வரி சோதனை நடத்த வேண்டும்.  இவ்வளவு நிலத்தை எப்படி ஆக்கிரமித்தார்கள் என்று நில வரம்புச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்க வேண்டும். 

இவற்றில் ஆரம்பித்து விட்டு, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட தங்கம் பூசப்பட்ட கோவில் வளாகத்தை மட்டும் வழிபாட்டுத் தலமாக விட்டு விட்டு, மீதி இருக்கும் இடங்களை ஒரு பெரிய பள்ளிக் கூடமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கலாம். 

கிராமம் பிரபலம் ஆவதற்கு இறைவன் பெயரையும், ஆன்மீகத்தையும் மலிவாகப் பயன்படுத்துவது பெரிய தவறு. வேலை வாய்ப்பும் இடம் வளர்வதும் வணிக நடவடிக்கைகள் (குடுகுடுப்பை சொல்லும் சுற்றுலா, பொருளாதார மையங்கள்).  அவற்றுக்கு ஆன்மீக முலாம் பூசி மக்களை ஏமாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். 

உள்ளூர் பண்ணையார்கள் மற்றும் பூசாரிகளிடம் சிக்கியிருந்த கோவில்களை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு வந்தது தேவையான சீர்திருத்த நிலை என்று எனக்குத் தோன்றுகிறது. 

இந்தத் தங்கக் கோவில் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்று எனக்குத் தோன்றுகிறது. 

நான் ஏன் கிரிக்கெட் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கிறேன்!

கிரிக்கெட் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம்  - செந்தழல் ரவி

//எனக்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி. சச்சின் க்ரீஸை விட்டு இறங்கி அடிக்கு சிக்ஸரும், காலுக்கு வரும் யார்க்கரை அப்படியே போர் ஆக இழுக்கும் ட்ராவிடும், ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை கவரில் விளாசும் கங்குலியும் ஆடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.

இந்தியா தோற்றால் அப்செட் ஆகிவிடுவது, ஜெயித்தால் ஏதோ நானே களத்தில் இறங்கி ஆடியது போலவும் சந்தோஷப்பட்ட காலம் ஒன்று உண்டு.

ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.//

//நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது, வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.

சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது. தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

கிரிக்கெட் போட்டிகளை டிவியிலும் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் தொடர்பாக இணைய போரம்களில் விவாதிக்ககூடாது. கிரிக்கெட் தொடர்பாக வலைப்பதிவுகள், ட்விட்டர் பதிவுகள், பேஸ்புக் அப்டேட்டுகள் என்று எதுவும் கூடாது.//


இலங்கையைப் புறக்கணிப்போம் - முகிலன்

//நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.//

அதற்கு ஈடாக, அதே நேரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி விளையாட போனது. 

//கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம்.

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். //

வியாழன், பிப்ரவரி 03, 2011

மீனவர் மீது தாக்குதல் - நண்பர்களுக்கு மின்னஞ்சல்

வணக்கம் ,

கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடலுக்குப் போகும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் வழக்கமாகிப் போயிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குப் போக பயப்படும் படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 539 மீனவர்கள் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. ஜனவரி 2011ல் மட்டும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் சூழலில் இந்த வாழ்வாதார பிரச்சனை தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்தும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடியும் இணைய சமூகங்களில் ஆர்வலர்கள் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களைப் போல, இந்தப் போராட்டமும் நிகழ் உலகுக்கும் பரவி துன்புறுத்தப்படும் மீனவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேறு ஆதரவற்ற எளிய மீனவ மக்களுக்காக உங்கள் குரலையும் எழுப்புங்கள். #tnfisherman என்ற குறிச்சொல்லுடன் டுவிட்டரில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் செய்தியை பரவச் செய்யுங்கள். உங்கள் சில நிமிடங்கள் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அருமருந்தாக அமையலாம்.

மேல் விபரங்களுக்கு http://www.savetnfisherman.org

அன்புடன்,