புதன், டிசம்பர் 19, 2007

நரேந்திர மோடியும் அத்வானியும் எப்படி குற்றவாளிகள் (என் பார்வையில்)

நரேந்திர மோடி குறித்த பதிவில் நடந்த விவாதங்களில் படிப்பதற்கு இடியாப்பச் சிக்கலாகிப் போய் விட்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்த இந்த இடுகை.

ஒரு சின்ன வேண்டுகோள்:

நாம் வலைப்பதிவுகளில் விவாதிப்பதால் நரேந்திர மோடியின் வெற்றி தோல்வியோ, அப்சல் குரு வழக்கின் முடிவோ தீர்மானிக்கப்பட்டு விடப் போவதில்லை. எனக்கு சரி எனப்படுவதை நான் எழுதுகிறேன். அதில் என்ன தவறு என்று உங்களுக்குப் படுகிறதோ அதை விளக்குங்கள். தேவையில்லாமல் என்னையோ, மற்றவர்களையோ திட்டுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. அப்படித் திட்டுவதால் எனக்குப் பெரிய வருத்தமும் இல்லை.

என்னுடைய பார்வையில் ஏன் அத்வானியும், நரேந்திர மோடியும் குற்றவாளிகள், தேசத் துரோகிகள்?

  • வல்லவன் வகுத்ததே நீதி என்று இருப்பது ஒரு முறை - பழைய மன்னராட்சி
  • கூட்டத்தில் அதிகமான பேர் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நீதி என்று இருப்பது இன்னொரு முறை - கும்பல் சார்ந்த அமைப்புகள் (தோல்வியடைந்த சீன, சோவியத் பரிசோதனைகள்)
அந்த முறைகளில் என்ன குறைபாடு என்றால் அமைதியும் திடத்தன்மையும் நீடிக்க முடியாமல், அடிக்கடி போர்களும் அழிவும் ஏற்படும். நீடித்த அமைதி இல்லாமல் முன்னேற்றமும், வளர்ச்சியும் குன்றி விடும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று சமூகம் பின்தங்கியே இருக்க நேரிடும்.

அவற்றுக்கு மாற்றுதான் அரசியலமைப்பு ஒன்றை வகுத்து, ஒரு பகுதியின் எல்லா மக்களும் அதை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவது. அரசியல் சட்டப்படி ஒவ்வொரு பணியையும் செய்ய தெளிவாக வரையறுக்கப்பட்ட முறைப்படி வெவ்வேறு பதவிகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • சட்டம் இயற்ற சட்டசபை/நாடாளுமன்றம்,
  • நிர்வாகத்தை நடத்த அரசு அதிகாரிகள்,
  • வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம்,
  • இவை எல்லாவற்றையும் கண்காணிக்க ஊடகத் துறை,
  • நாட்டுக்கு பாதுகாப்புக்கு படைகள்
    என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இந்த அமைப்பை ஏற்றுக் கொண்ட மக்கள் அனைவரும் வகுக்கப்பட்ட நெறிமுறைப்படி வேலைகள் நடக்கும் என்று நம்பி தமது தொழில், தனி வாழ்க்கையை கவலையின்றி பார்க்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரருடனோ, மாற்று குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்தால், 'அவர் ஆள் திரட்டி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்' என்ற அச்சமில்லாமல், இரண்டு பேரும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதித் துறையை அணுகி பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
  1. 'நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது. ஆளைத் திரட்டி நாங்கள் அவமானம் என்று கருதும் ஒரு கட்டிடத்தை இடித்துப் போடுவோம். எங்கள் கருத்தை ஏற்காத மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை' என்று செயல்பட்டவர்கள் (அத்வானி தலைமையிலான கூட்டம்) அரசியலமைப்பை அசைத்துப் பார்த்தார்கள்.

    அவர்கள் செய்ததை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
    என் முடி அலங்காரம் பிடிக்கவில்லை என்று நான்கு தெருவில் இருக்கும் மக்கள் கூட்டமாக வந்து எனக்கு மொட்டை அடித்து விட்டால் அதுவும் நியாயமாகி விடும்.

  2. 'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.

  3. 'குறிப்பிட்ட நிகழ்ச்சி, குறிப்பிட்ட குழுவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைத்தேன், அதனால் அந்தக் குழுவினரைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்க கூட்டம் வெறி கொண்டு திரிந்த போது, அதிகாரத்தில் இருந்த நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கொஞ்சம் ஆதரவும் கொடுத்தேன். அப்படி இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்' என்று சொல்லும் முதலமைச்சர் (நரேந்திர மோடி) இந்திய இறையாண்மையை உடைத்துப் போட்ட பெருங்குற்றவாளி.
இந்த வாதங்களில் என்ன தவறு என்று பொறுமையாக விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

தொடர்புடைய முந்தைய இடுகைகள்

திங்கள், டிசம்பர் 10, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள்

விபரங்கள் வினையூக்கியின் இந்தப் பதிவில்

செல்லாவின் நச் கவரேஜ்
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு
புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்!
நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து
புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!

அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தாவும், வினையூக்கியும் நானும் ஒன்பது மணி வாக்கில் (வாடகை) காரில் பாண்டிச்சேரி சற்குரு உணவகத்தை அடைந்தோம். சாப்பிடப் போகும் இடத்தில் முகுந்த், ஓசை செல்லா உட்கார்ந்திருந்த மேசையில் சேர்ந்து கொண்டோம்.

நல்ல திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமான பங்கேற்பாளர்கள்.

இரா சுகுமாரன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து உரை ஆற்ற, முகுந்த் தமிழ் எழுத்துருக்கள், e-கலப்பை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகுமாரன் குறள் மென்பொருளைக் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து தமிழ்99 முறையில் தட்டச்சிடுவது குறித்துப் பேச முனைவர் இளங்கோவன் வந்தார். அதில் என்னையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஆற்றொழுக்காகப் போயிருக்க வேண்டிய அந்த அறிமுகத்தில் என்னுடைய குறுக்கீடுகளும் சேர்ந்தன. வகுப்பறை போன்ற சூழல் உருவாகி விடக் கூடாது என்று முனைந்து கொஞ்சம் un-conference பாணியைக் கொண்டு வர முயன்றோம்.

இயங்கு தளங்களைக் குறித்த அமர்வின் முன்னுரையில் சூடான விவாதத்துக்கு ஒரு அடித்தளம் அமைந்து விட்டது. ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் கலகலப்பாக பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார். உபுண்டு லினக்சு பற்றிய அவரது 10 நிமிட ஆரம்பத்திற்கு அப்புறம் சூழல் பரபரப்பாக மாறி விட்டது. முகுந்த் 'மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று ஓரிரு நிமிடங்கள் மைக்ரோசாப்டு நிறுவனத்தின் பங்களிப்பையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு மேலும் அந்த அரசியல் தத்துவ விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று உபுண்டுவில் தமிழ் இடைமுகம், பயன்பாடுகள் என்று ராமதாஸ் இறங்கினார்.

அந்த அரை மணி நேர அமர்வின் இறுதியில் 'உபுண்டு குறுவட்டு, நிறுவும் விளக்கக் கையேடு அடங்கிய பொதியை விருப்பமிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு காணிக்கை போடலாம்' என்று அறிவித்தார் ராமதாஸ். அடுத்த சில நிமிடங்களிலேயே 50 பொதிகளும் ஆர்வலர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன.

இணையத்தில் தமிழ் இதழ்கள், இணையத் தமிழ் இதழ்கள், தமிழ் வலைத்தளங்கள் என்று ஒரு தொகுப்பை முனைவர் இளங்கோவன் வழங்க அத்துடன் உணவு இடைவேளை வந்தது. இலை போட்டு வடை பாயாசம், இனிப்புடன் சாப்பிட்டு விட்டு மதிய அமர்வுகள்.

பேராசிரியர் இளங்கோ வலைப்பதிவு என்றால் என்ன, எப்படி பிளாக்கர் மூலம் ஒரு கணக்கு ஆரம்பித்து பதிய ஆரம்பிக்கலாம் என்று கச்சிதமாக விளக்கினார். அவரது அமர்வின் ஆரம்பத்தில் 'கூடவே கணினியில் செய்முறை பயிற்சியும் ஆரம்பித்து விடலாமா' என்று நாங்கள் கேட்டது கொஞ்சம் அதிகப்படியாகப் போய் அவர் சூடாக பதிலளித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மக்கள் கணினிகளைச் சூழ்ந்து கொண்டு ஜிமெயில், பிளாக்கர், பதிவுகள் என்று அலையில் கால் நனைத்தார்கள்.

தொழில் நுட்ப அமர்வுகளாக, திரட்டிகளில் இணைத்தல், ஒலி ஒளி இடுகைகள், செய்தியோடைகள், வோர்ட்பிரஸ் பயன்பாடு என்று பலனுள்ள அமர்வுகள் தொடர்ந்தன.

மொத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பட்டறை. கல்லூரி தமிழ்த் துறை மாணவிகள், பேராசிரியை, தமிழ் ஆர்வலர்கள் என்று பல பெண்கள் மிக ஆர்வத்துடன் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் உருவாக்கி இணைய உலகிற்குள் அடி எடுத்து வைக்க வழி செய்து கொடுத்த நிகழ்ச்சி.

சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுவை நண்பர்கள், அருமையான அமர்வுகளை வழங்கிய இளங்கோவன், இளங்கோ, செறிவூட்டிய ஓசை செல்லா, முகுந்த், வினையூக்கி, நந்தகுமார், உபுண்டு ஆமாச்சு, நான் என்று நிறைவான ஒரு நாள்.

பின்குறிப்பு
கோவை, சென்னை, புதுவை - மூன்று பட்டறை கண்டவர்கள் என்ற சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மா சிவகுமார், வினையூக்கி மற்றும் முகுந்த். கழகங்களின் மேடைப் பேச்சாளர், இலக்கிய உலகின் பட்டிமன்ற பேச்சாளர் என்று வரிசையில் 'பட்டறை பேச்சாளர்' என்று ஒன்றை உருவாக்கும் காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

வியாழன், டிசம்பர் 06, 2007

நரேந்திர மோடி என்ற கிரிமினல்

Addressing an election meeting at Mangrol in South Gujarat yesterday, Modi questioned the crowd as to what should have been done to a man who dealt with illegal arms and ammunition, to which it shouted back "kill him".

குஜராத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், திறமையான நிர்வாகம் என்ற பசுத் தோல்களைப் போர்த்திக் கொண்டு வந்த ஓநாயின் காதுகள் வெளியே தெரிகின்றன.

சமூக சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் கூட்ட நீதி (mob justice) கலாச்சாரத்தில் கொடுமைகள் நிகழ்த்தும் மோடியின் கொட்டம் அடங்க வேண்டும்.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு சாகும் வரை சிறைச்சாலையில் வாட அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் மோடி போன்ற அரசியல்வாதிகள்.

திங்கள், அக்டோபர் 22, 2007

சோஷலிசம்தான் தீர்வா (அசுரன்) - 2

'வயிறு காய்ந்தால்தான் வேலை பார்ப்பான்' என்று மிருக நிலையில் வைத்து செயல்படுவது ஒரு முறை. 'தன் திறமைகளைப் பயன்படுத்தி தன்னால் இயன்ற மிகச் சிறந்த வேலையை செய்ய முயல்வான்' என்பது நாகரீகமடைந்து கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய மாண்பு.

இந்த பணியின் பலன் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சிவப்பு உடையோ, கதர் உடையோ, காவி உடையோ, அணிந்த ஒரு கூட்டத்தினரின் உரிமையாக இல்லாமல், அவரவர் தமது உழைப்பின் பலனை தன்னைச் சுற்றி இருப்பவரில் அதிகத் தேவை இருப்பவருக்குப் பயன்படும்படி செலவழிக்கும் உரிமை இருக்க வேண்டும். யாருக்கு அதிகத் தேவை, அதை எப்படி அவருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை தனிமனிதருக்கு இருக்க வேண்டும்.

அந்த நோக்கம் எப்படி எல்லோருக்கும் தோன்றும்?

அத்தகைய நோக்கம் இல்லா விட்டால் என்னதான் புரட்சி செய்தாலும் உள்ளே இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள். பொதுவுடமை, சமூக நலன் அடிப்படையாக இயங்குபவர்கள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பிலும், பேராசையும் சுயநலமும் தவிர்த்து தமது திறமையையும் வருமானத்தையும் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். அந்த அடிப்படை மனதில் விதைக்கப்படாதவர்கள், இரும்புத் திரை அல்லது மூங்கில் திரைக்குள்ளும் எப்படி தனது பேராசைக்குத் தீனி போடுவது என்று வழி தேடிக் கொண்டிருப்பார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் மனம் மாறா விட்டால் சமூகம் மாற முடியாது.

காந்தி போராடித்தான் சுதந்திரம் வந்ததா?
தார்மீக உரிமை மாற்றுவதுதான் மாற்றத்தின் முதல்படி. 'ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் செய்துதான் பிரித்தானிய பேரரசு இந்தியாவில் நீடிக்க முடியும்' என்று ஆன நாளில் பலர் மனதில் காலனி அரசு தனது அரசாளும் உரிமையை இழந்து விட்டது.

இன்றைக்கு இந்திய அரசமைப்பை சாடும் குழுவினரும் அதைத்தான் நாடுகிறார்கள். பெருவாரியான நடுநிலை மக்களின் மனதில் அமைப்பைக் குறித்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டால் மாற்றம் தொடங்கி விடும். மாற்றம் என்பது மானிட தத்துவம். ஒன்று போய் மற்றது வருவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அந்த மாற்றங்களுக்கான தளம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு அமைப்பின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஒரு அமைப்பை மாற்றி அதன் இடத்தைப் பிடிக்க பல கொள்கைகள் போட்டி போடும். அதில் எது வெற்றி பெறும், அடுத்தக் கால கட்டத்தில் எத்தகைய அமைப்பு நிலை பெறும் என்று சொல்ல முடியாது. கடை விரிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதிகம் பேர் கொள்ள வந்தால், வணிகம் தளைக்கும், இல்லை என்றால் கோணியைச் சுற்றிக் கொண்டு போக வேண்டியதுதான்.

இது இயல்பாக மனித சமூகத்தில் நடக்கக் கூடியது கார்ல் மார்க்ஸ் முன்கூறும் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியும் கம்யூனிசத்தின் மலர்ச்சியும் இந்த வழியில் வரக் கூடியவை. ஏதாவது ஒரு பிரிவினரின் சர்வாதிகார அமைப்பு அரசு அமைக்கும் போது மேலே சொன்ன மாற்றங்களுக்கான விதைகளை முயற்சிகளையே வேர் பிடிக்க விடாமல் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பணியாக ஆகி விடுகிறது.

யாரும் அமைப்பைக் குறை சொல்லிக் கருத்து தெரிவிக்கக் கூடாது. போராட்டங்கள் நடத்தக் கூடாது. அமைப்பில் தலைவர் அல்லது தலைமைக் குழு சொல்வதுதான் இறுதி முடிவு. அதற்கு மேல் மாற்றுக் கருத்து இல்லை என்று இருக்கும் அமைப்புகள் எல்லாம் வளர்ச்சி நின்று போன மரம் போல உளுத்து போய் உதிர்ந்து போகும்.

அப்படி உளுத்து உதிர்ந்த கோட்பாடுகளின் கொடி பிடித்து 'அந்தக் கோட்பாடுகளின் படி, அந்த வழிமுறைகளின் படி நடந்து கொண்டிருந்த போது சீனாவிலும் சோவியத் ரஷ்யாவில் பாலாறும் தேனாறும் ஓடியது. அந்த இன்பத்தைத் தாங்க முடியாத மக்கள் சதி செய்து ஏகாதிபத்திய வழிமுறைகளுக்கு வழி விட்டார்கள். நாமும் அதே வழியில் போவதுதான் தேவையான மாற்றம்' என்று செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் புரட்சிகர இயக்கங்களின் வழி.

அது அவர்களின் உரிமை. பல விதமான கருத்துக்களும், கட்சிகளும், பத்திரிகைகளும், செயல்படலாம் என்பதுதான் இந்தியா போன்ற அரசமைப்புகளின் சிறப்பு.

உலகம் இது வரை கண்ட சமூக அமைப்புகளில் இப்போது செயல்படும் மக்களாட்சி முறையான
  • பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமியற்ற,
  • படித்து பட்டம் பெற்ற அதிகாரிகள் பிரதிநிதிகளின் தலைமையின் கீழ் நிர்வாகம் நடத்த,
  • இரண்டையும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்களா என்று நீதி மன்றங்கள் சோதித்துப் பார்க்க,
  • இதில் எல்லாம் என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் சேர்ந்து
சிறந்தது.

இதில் இருக்கும் குறைகள் பல தெரிகின்றன. இது மாறி இதை விடச் சிறந்த முறை மலர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இதற்கு மாற்று இதை விட மோசமான, மனிதர்களை இயந்திரங்களாக நடத்திய முறைதான் என்று சொல்வது எப்படி சரியாகும்?

சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)

ஞாயிறு, அக்டோபர் 21, 2007

சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)

எல்லா "மதங்களையும்" தூக்கிச் சாப்பிட்டு விடும் ஒரு மதம் "கம்யூனிசம்" என்று சொல்லப்படும், கட்சி சார்ந்த, புரட்சி செய்ய முனையும் கூட்டத்தினரின் மதம்.

சக மனிதனை ஏய்த்து வயிறு வளர்க்கும் கூட்டத்துக்கு ஏதாவது ஒரு கருவி கிடைத்து விடும். 'மதம் என்று சொல்லிக் கொண்டு தேவாலயங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மதகுருக்களை ஒழித்துக் கட்டுவதாகச் ' சொல்லிக் கொண்டு வந்த புரட்சியாளர்கள், பொதுவுடமை என்று சொல்லிக் கொண்டு கட்சி அலுவலகங்களில், கட்சி என்ற பெயரில் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். (சோஷலிச சீனாவிலும் சோஷலிச ரஷ்யாவிலும்).

கோட்பாடுகள், சித்தாந்தங்கள் எல்லாம் ஒரு உறைதான். சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள்தான் அதில் வாழும் மக்களின் மனப்போக்கைச் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. 'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்று வாழும் மனிதர்கள் இருக்கும் உலகில் மனிதம் தளைக்கும்.

தனிமனிதர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் சரியானதாக இருந்து விட்டால் எந்த முறையிலும் மனிதம் தளைக்கும். கம்யூனிசப் புரட்சி என்று மக்களை ஒடுக்கிய சர்வாதிகாரிகளும் (சோவியத்தின் ஸ்டாலின், அவர் வழி வந்தவர்கள், சீனாவின் மாவோயிச வழி வந்தவர்கள்) உண்டு, முதலாளித்துவ முறையில் எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க விளையும் சமூகங்களும் (வடக்கு ஐரோப்பிய நாடுகள்) உண்டு.

அப்படி ரஷ்யாவும் சீனாவும் பின்பற்றிய சோஷலிசம்தான் விடிவு என்றால் அந்த இரண்டு நாடுகளில் அந்த இசத்தின் கதி என்ன ஆச்சு? ரஷ்யாவில் 70 ஆண்டுகளும், சீனாவில் 30 ஆண்டுகளும் வாய்ப்பு கிடைத்தும், பெருமளவு மக்கள் தொகை, மிகப்பெரிய நிலப்பரப்புடன் இருந்தும் தாக்குப் பிடிக்காமல் அந்தப் 'பொற்காலம்' எங்கே போச்சு?

அதை நம்பித்தான் எல்லோரும் ஆயுதம் ஏந்தி புரட்சியில் இறங்க வேண்டுமாம். தனிமனித உரிமைகள், தனிமனிதனை மதிக்கும் சமூகங்கள்தான் தளைக்கும். அதை மறுக்கும் சோஷலிசம் என்ற முறையில் ஜல்லி அடிக்கும் வித்தகர்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள்தாம்.

பொதுவுடமை என்பது அழகான தேவையான நிலைமை. அதை அடைவதற்கான வழி ஸ்டாலினும், மாவோவும் காட்டியதா அல்லது இந்தியாவின் சிறிய பெரிய 'கம்யூனிஸ்டு இயக்கங்கள்' காட்டுவதா?

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பாதையான இணையம் உருவானது எந்த வழியில்? அதில் எல்லோரும் நடைபோட உதவ எந்த வழியில் சாத்தியமாகும்?

எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் திறவூற்று மென்பொருட்கள் எந்த வழியில் உருவாகின்றன? சமவுடமை சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மதிப்பு உண்டு. எந்த மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை.

மனிதன் சமூகத்துக்கு அடிமை என்று செங்கொடி ஏந்தி சீன, சோவியத் தலைவர்கள் படம் ஏந்தி நடக்கும் இயக்கத்தினர் காட்டும் வழி இரு பெரும் நிலப்பரப்புகளில் இரு பெரும் மக்கள் சமூகங்களில் தோல்வி அடைந்து போன ஒன்று.

அசுரனின் கட்டுரை

புதன், அக்டோபர் 17, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர் - 2

"அறிஞர் அண்ணா குறுகிய காலம்தான் ஆட்சி செய்தார். அதனால் அவரது உண்மையான திறமையை எடை போட முடியாது. "

"கலைஞரும் சரி, செல்வி ஜெயலலிதாவும் சரி, முன்பு எம்ஜிஆரும் சரி, தனது ஆட்சி அண்ணாவின் ஆட்சி என்றே சொன்னார்கள்"

'கலைஞர் தமிழுக்குக் காப்பு. அதனால் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தமிழர் நலன்கள் ஓங்குகின்றன. அவர் ஆட்சியில் வந்து விட்டால் குறுகிய காலத் திட்டங்கள் நிறைவேறினாலும் நீண்ட கால நோக்கில் தமிழர் கனவுகளுக்குப் பின்னடைவுதான். ' இது என்னுடைய மூளை அலை.

அதற்காக ஜெயலலிதாதான் மாற்று என்னும் போது வெறுத்துப் போகிறது.

உங்கள் கருத்து என்ன? வலது பக்கம் ஒரு தேர்ந்தெடுங்கள். ஒருவருக்கு ஒரு வாக்குதான். ஆனால், ஒரே முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு செய்து கொள்ளலாம்.

சனி, அக்டோபர் 13, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர்

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் தமிழகம் நான்கு முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. அவர்களில் நல்ல முதலமைச்சர் யார் என்று ஒரு கருத்துக் கணிப்பு.

வலது பக்கம் உங்கள் தேர்வைக் குறிப்பிடுங்கள்.

வெள்ளி, அக்டோபர் 12, 2007

காலம் கருதுதல்

திட்டமிடலுக்கு எளிதான வேலைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றும் முடிய முடிய டிக் அடித்துக் கொண்டே போவதிலிருந்து ஆரம்பித்து பல கருவிகள் இருக்கின்றன.

கூகிள் காலண்டர் பயன்படுத்தலாம், அல்லது மேசைத் தளக் கருவிகளாக வரும் கோண்டாக்ட் என்ற கேடிஈ கருவி அல்லது எவலுயூஷன் என்ற ஜினோம் கருவியைப் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் கிடைக்காததால் கூகிள் காலண்டர் ஒத்து வராது. கணினி சார்ந்த முறைகளை நம்பித்தான் ஆக வேண்டும்.

திட்டமிடுதல் ஒரு புறம், அந்தத் திட்டத்தைப் பார்த்து அதன்படி வேலைகள் போகிறதா என்று கண்காணிப்பது இன்னோரு புறம், ஒவ்வொரு பணி முடிந்த விபரத்தைக் குறித்துக் கொண்டு மாலையில் அல்லது அடுத்த நாள் காலையில் திட்டத்துக்கு நடைமுறைக்கும் என்று வேறுபாடுகள் என்று அலசுவதும் மிகத் தேவையானது.

மே மாத முதல் வாரத்திலிருந்து ஒரு விரிதாள் சார்ந்த வடிவை ஏற்படுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தேன். அதன் அடிப்படை மாறாமல் இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதன் அமைப்பில் பல மேம்பாடுகள்.

வாரத்துக்கு ஒரு கோப்பு, அதன் பெயர் week18.ods என்று வாரா வாரம் எண் கூடிக் கொண்டே போகும். ஒவ்வொரு தாளிலும் எட்டு விரிதாள்கள். வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு தாள்கள். ஒரு தாளில் வாரம் முழுவதுக்குமான தகவல்கள். இப்போது யோசிக்கும் போது தேதியைப் தாள்களின் பெயராகக் குறிப்பிடாமல் கிழமையைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இனிமேல் மாற்றி விட வேண்டியதுதான்.

பழைய முறையில் ஒவ்வொரு வார இறுதியிலும், முந்தைய வாரக் கோப்பின் நகலை அடுத்த வாரக் கோப்புக்காக week19.ods என்று பெயர் சூட்டிச் சேமித்துக் கொண்டு தாள்களின் பெயர்களை மாற்றுவேன். கிழமைகளைக் குறிப்பிட ஆரம்பித்தால் அந்த வேலை மிச்சம். வாரத் திட்டமிடலும் இன்னும் வசதியாக இருக்கும்.

முழு வாரத்துக்கான தாளில் ஏழு நாட்களுக்கான குறுக்கு வரிசைகள், அவற்றுக்கு எதிரில் நெடுக்காக மூன்று பிரிவுகள், காலை, மதியம், மாலை என்று. இப்போது ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். தமிழில் பெயர் கொடுத்துக் கொள்ளலாம்.

திங்கள் என்று பார்த்தால் அதன் எதிரில் காலையில் என்ன வேலை, மதியம் என்ன வேலை, மாலையில் என்ன வேலை என்று பொதுவாகக் குறித்து வைத்துக் கொள்வது. திங்கள் காலை அல்லது ஞாயிறு மாலை அன்றே அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் எங்கு இருப்போம், போன்ற விபரங்கள் திட்டமிட்டு விடலாம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளுக்கான திட்டமிடல். நாளுக்கான தாளில் குறுக்காக ஏழு பெரும் பிரிவுகள்.
  • காலை 6 முதல் 9 வரை தனி வேலைகள், ஒரே பிரிவாக.
  • 9 முதல் 11 வரை மாதாந்திர இலக்குகளுக்கான பணிகள் - ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறு பிரிவாக இரண்டு பிரிவுகள்.
  • அதே போல 11 முதல் 1 மணி வரை இரண்டு சிறு பிரிவுகள் வாராந்திரம் முடிக்க வேண்டிய பணிகளுக்கான கட்டங்களுடன்.
  • 1 மணி முதல் 2 மணி வரை மீண்டும் தனி வேலைகளுக்கு.
  • 2 முதல் 4 வரை ஆண்டு இலக்குகள், தேவைகள் சார்ந்த பணிகள். (இரு சிறு பிரிவுகளாக)
  • 4 முதல் 6 வரை நீண்ட கால நோக்கிலான பணிகள், இதுவும் 4-5, 5-6 என்று இரண்டு உள் பிரிவாக
  • மாலை 6 முதல் 9 வரை தனி வேலைகள் ஒரே உள்பிரிவாக.
இப்படி ஏழு பெரும் பிரிவுகளும் அவற்றினுள் 11 சிறு பிரிவுகளுமாக குறுக்குக் கட்டங்கள். ஒவ்வொரு குறுக்குக் கட்டத்துக்கும் எதிரில் நான்கு நெடுக்குக் கட்டங்கள். முதலாம் கால், இரண்டாம் கால், மூன்றாம் கால், நான்காம் கால் என்று கட்டம் உருவாகி விடும்.

மதியம் 12 முதல் 1 மணி வரை வாராந்திர பணிகளை முடிக்க வேண்டும் என்று குறுக்குக் கட்டம் இருந்தாலும் அந்த ஒரு மணி நேரத்தை 4 கால்பகுதிகளாகப் பிரிக்க நெடுக்குப் பிரிவுகள் இரண்டின் சேர்க்கையில் நான்கு கட்டங்கள் கிடைக்கும். அதே போல காலை 6-9ம் நான்கு கட்டங்களாக கிடைக்கும்.

ஒரு பணியை முடித்ததும் அந்த கட்டத்துக்குள், பணி விபரத்தின் இறுதியில் done என்று குறித்துக் கொள்கிறேன். இதைக் கூட மாற்றி கட்டத்தின் பின்னணி நிறம் அல்லது எழுத்துருவை மாற்றி விடுவதாகச் செய்யலாம்.

இப்போது செய்ய வேண்டிய மாற்றங்கள்:
  1. தேதிகளுக்குப் பதிலாக வார நாட்களை பெயராகச் கொடுத்தல்
  2. பெயர்களையும் விபரங்களையும் தமிழில் எழுதுதல். தாள்களின் பெயர்கள், உட்பிரிவுகள், நேரங்கள், கால்பகுதிகள் என்று எழுதிக் கொள்ளலாம்.
  3. பணி முடிந்ததைக் குறிக்க பின்னணி நிறம் மாற்றிக் கொள்ளுதல்
  4. அதிகாலை எழுந்ததும் முதல் வேலையாக நாளுக்கான திட்டமிடல்.
  5. ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறரை முதல் ஏழரை வரை வாராந்திரத் திட்டமிடலுக்கு ஒதுக்கிக் கொள்ளுதல்
  6. காலையில் திட்டமிடும் போது முந்தைய நாளின் பணிகள் எப்படி முடிந்தன என்று அலசி விட்டுப் போனவற்றை அந்த நாளுக்குக் கொண்டு வருதல். திட்டமிடலையும் சேர்த்து அரை மணி நேரம் வரை ஆகலாம்.
  7. வாராந்திரத் திட்டமிடலின் போதும் முந்தைய வாரத் திட்டமிடல் எப்படி போனது என்று அலச வேண்டும். திட்டமிடலையும் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 4

திட்டம் தரையைத் தொடும் போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் பாதக சாதகங்கள் உறைக்க ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் நல்லெண்ணம் படைத்த பத்திரிகை விவாதங்களிலோ பொதுநல வாதிகளால் நீதிமன்றங்களிலோ எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டால் திட்டத்தை அலசி ஆராய்தல் ஆரம்பித்து விடலாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குரல் கொடுக்க தன்னார்வல நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள், போராளிக் குழுக்கள் இறங்கி திட்டத்தை மாற்றியமைக்க முயல்கின்றன. இப்படி அடித்துப் பிடித்து சரியான வழியில் வந்து சேர்கிறோம்.

மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. கையில் காசு இல்லாத மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களை வரவேற்க முயற்சிக்கிறார்கள். இருப்பதில் எதைச் செய்தால் தமக்கு ஆதாயம் என்று இயங்கக் கூடிய தனியார் நிறுவனங்களுக்கு அரசே நிலம் கையகப்படுத்திக் கொடுக்க முயல்வதுதான் சிக்கலில் கொண்டு விட்டிருக்கிறது.

ஒரு சாலை போடவோ, அணை கட்டவோ அரசு தனது முன்னுரிமையைப் பயன்படுத்தி தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது, கவிஞர் வைரமுத்து தண்ணீர் தேசம் நாவலில் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூழ்கிய தனது கிராமம் குறித்து எழுதிய மன வேதனையைத் தாண்டி பொது நலனுக்காகத்தானே கொடுக்கிறோம் என்ற ஆறுதலும், அதே காரணத்தால் பிற பகுதி மக்களின் ஆதரவும் இருக்கும்.

'யாரோ லாபம் சம்பாதிக்க ஏன் அரசு முனைய வேண்டும். அதற்கு நாங்கள் ஏன் நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்' என்று ஆத்திரம் பொங்குகிறது. 'வணிக முறையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றால் நேரடியாக விவசாயிகளிடம் போய் பேரம் பேசி நிலத்தை வாங்கிக் கொள்ளட்டுமே. அப்படி சிலர் விற்க மறுத்து விட்டால் தொழிற்சாலை வராமல் போய் விடலாம். இதற்கு அரசு என்ன வக்காலத்து!' என்று தோன்றத்தான் செய்யும்.

சீனாவில் இதே மாதிரியான சூழலில் தனியார் நிறுவனம் அரசின் ஆதரவுடன் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டு போயிருந்திருக்கும். பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இதுதான் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு. ஏழை சொல் கூட அம்பலத்தில் ஏற வாய்ப்புகள் இருக்கின்றன. யாரும் யாரையும் மிதித்துப் போட்டு விட்டு தமது நலனைப் பார்த்துக் கொள்ள முடியாது.

துப்பாக்கிச் சூடு நமது அமைப்புகள் சரியாக இயங்காததன் விளைவு. நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம். பத்திரிகைகள் ஆரம்ப நிலையிலேயே இது குறித்து விவாதங்களை உருவாக்கத் தவறியிருக்கலாம். (முதல் பக்கச் செய்தியாக சட்டமன்றத்தில் மைக்குகள் உடைக்கப்பட்து இருக்கும் போது இதை யார் கண்டு கொள்வார்கள்!)

மாநில அரசுகள் தமக்கு சாதகமான வகையில் சரியாக ஆராயாமல் தனியார் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கலாம். அந்த மாநில எதிர்கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்துக்காக மோதலைத் தூண்டி விட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருக்கலாம்.

இதற்கெல்லாம் கொடுத்த விலை ஏழு உயிர்களை இழந்தது. சீனாவில் வெளியில் தெரியாமலேயே பல நூறு உயிர்கள் இத்தகைய திட்டங்களின் பேரில் பலி கொடுக்கப்பட்டு விடும். கேட்க ஆளிருக்காது.

வியாழன், அக்டோபர் 11, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 3

நூறு கோடி மக்கள் வாழும் நிலப்பரப்பில் ஒரே நாளில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் பெரும் புரட்சியே வெடித்து விடலாம். எதிர்ப்புரட்சியைக் குறித்து கவனமாக இருக்கும் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் சோதனைச் சாலை போல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடிவு செய்தார்கள்.

நாட்டின் தென்கோடி மாநிலமான குவாங்தோங்கின் சென்சென், சாந்தோ, சூஹாய் பகுதிகளிலும் அருகாமையில் ஷியாமென் என்ற இடத்திலும் எல்லைகளை வரையறுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார்கள். தொழில் வணிக நடவடிக்கைகளைப் பொறுத்த வரை இந்தப் பகுதிகள் சீனாவின் வெளிநாடாகக் கருதப்பட்டன.

இந்தப் பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் குறைவான கட்டுப்பாடுகளுடன்
  • தமக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
  • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.
  • உற்பத்தியை உள்நாட்டிலேயே விற்க விரும்பினால் வழக்கமான இறக்குமதி போல சுங்க வரி செலுத்தி விட வேண்டும்.
  • தேவைப்படும் போது வேலைக்கு ஆள் எடுத்துக் கொள்ளலாம், தேவை குறைந்து விட்டால் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.
அடுத்த இருபது ஆண்டுகளில், வெற்றிபெற்ற கொள்கைகளை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்திக் கொண்டார்கள். தோல்வி அடைந்த முயற்சிகளை அப்படியே கை விட்டு விட முடிந்தது. கட்சியும், ஆட்சியும், நிலவுடமையும் ஒரே அமைப்பின் கைகளில் இருந்ததால் எதிர்ப்புக் குரல்களுக்கு இடமில்லை. உள்கட்சி அரசியலைத் தாண்டி கொள்கை நடைமுறைக்கு வந்து விட்டால் பொது மக்களுக்கு வேறு புகலிடம் கிடையாது.

இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு சோஷலிச பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப் பட்டாலும் தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாடுகளுக்கிடையே இயங்கியே வந்தன. நிலங்கள் பரம்பரை பரம்பரையாக கைமாற்றப்பட்டு வாங்கவும் விற்கவும் சட்டங்கள் இருக்கின்றன. பல கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஆட்சி அமைக்கும் அரசியலமைப்பும், மக்கள் வாக்களித்து ஆட்சியை மாற்றும் உரிமைகளும் இருக்கின்றன.

1990களின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்கனவே இருந்த தளைகளை விலக்குவதாகவே இருந்ததே தவிர பழைய கொள்கைகளை முற்றிலும் மாற்றுவதாக இருக்கவில்லை. உலகமயமாக்கலும் சீர்திருத்தங்களும் நாடு முழுவதுக்கும் ஒரே நேரத்திலேயே அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்த கொள்கை வகுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரும் காலம் இது.

2000ம் ஆண்டில் கொள்கை அறிவிக்கப்பட்டது. 2004ல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. மாநில அரசுகளின் பரிந்துரையின் படி மத்திய அரசின் ஒற்றைச் சாளர அலுவலகம் ஒன்று மண்டலம் குறித்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்.

மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கு பல அதிகாரங்கள், உள்ளூர் மக்களுக்கு சில உரிமைகள் என்று ஒவ்வொரு தனிமனிதன் வரை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அந்த அரசமைப்பு சட்டத்தைக் கட்டிக் காக்க நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கின்றது.

இதனால் புதிய திட்டங்கள் உருவாக்கும் போது தட்டுத் தடுமாறியே சரியான பாதையை அடைய முடிகிறது. முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நேர்மையான சற்றே நேர்மை குறைந்த அதிகாரிகள் நடைமுறைத் திட்டம் தீட்டுகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் போது, பல நிறுவனங்கள் களத்தில் குதிக்கின்றன. தமது நலத்தை வளத்தைக் குறுக்கு வழியில் பெருக்கிக் கொள்ளப் பார்க்கும் தொழில் / வணிக நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு திட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள்.

தொலைக்காட்சியில் மென்பொருள் பற்றி...

"இணையத்தில் கிடைக்கும் இலவச மின்பொருட்கள்" என்ற தலைப்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஜெயா தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பாரதி என்ற நண்பர் கலந்து கொள்கிறார். திறவூற்று/பரி நிரல் உலகில் பல ஆண்டுகளாக அனுபவம் உடைய பாரதி பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் திறவூற்று மென்பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும்.

வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் பாருங்கள். தெரிந்தவர்கள், நண்பர்களுக்கும் தகவல் சொல்லுங்கள்.

புதன், அக்டோபர் 10, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 2

சீனாவில்
  • முடியாட்சி முடிந்து 1911ல் குடியரசு மலர்கிறது.
  • அதற்கு பின்னர் உள்நாட்டுப் போர், அன்னிய ஆதிக்கம் எதிர்ப்பு
  • இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் ஆண்டுகளில் கம்யூனிஸ்டு செம்படைக்கும் தேசிய மக்கள் கட்சி (குவமின்தாங்) யின் ஆட்சியாளர்களுக்கும் கடுமையான சண்டை
  • கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று 1949ல் ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.
  • குவமின்தாங் ஆட்சியாளர்கள் தாய்வான் தீவில் குடியேறி அமெரிக்காவின் ஆதரவுடன் தாங்கள்தான் உண்மையான சீனா என்று குட்டித் தீவுக்குள் அரசமைத்துக் கொள்கிறார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை, கம்யூனிஸ்டு கட்சியின் சர்வாதிகாரம் என்ற அடிப்படையில்தான் சீனாவில் அரசியல் பொருளாதாரம் நடந்து வருகிறது.
  • கட்சி, ஆட்சி, தொழில் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் கட்சி உறுப்பினர்கள் / தலைவர்களின் ஆதிக்கம்தான்.
  • தனியார் சொத்துரிமை கிடையாது.
  • எல்லா நிலங்களும், எல்லா வளங்களும் சமூகத்துக்கு உரிமையானவை.
  • மத்தியத் திட்டக் குழு வகுத்தபடி பயிர் செய்ய வேண்டும் வரும் விளைச்சலை விதிக்கப்பட்ட விலைக்கு விற்று விதிக்கப்பட்ட வருமானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படி தனி மனிதருக்கு உழைக்க ஆர்வம் இருக்கும்? கல்வி முறை எப்படி இருந்தது? பணம் எப்படிப் பயன்பட்டது? என்ற கேள்விகளை இப்போதைக்கு தள்ளிப் போட்டு விட்டு இந்த முறையின் விளைவுகளைப் பார்க்கலாம்.

பற்றாக்குறைகள், பஞ்சம், வறுமை என்று ஒவ்வொரு இக்கட்டாகத் தள்ளாடி வந்து கொண்டிருந்தது செஞ்சீனா. 1970களில் அமெரிக்கா முதலான மேல் நாடுகள் கம்யூனிஸ்டு அரசை அங்கீகரிக்க ஆரம்பித்தன. தாய்வானில் ஒதுங்கியிருந்து குவமின்தாங் அரசுதான் சீனா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் உண்மையான சீன அரசை ஏற்றுக் கொண்டு அரசு முறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

உள்நாட்டு அரசியலிலும் சேர்மன் மாவோவின் காலம் முடிந்து மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. கம்யூனிசம் என்ற கனவைப் பற்றிப் பேசியே கவலைகளை மறக்கச் செய்யும் வித்தைகளின் சரக்கு தீர்ந்து விட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்த வேண்டும், வெளி நாட்டு முதலீடுகளை அனுமதிக்க வேண்டும், சந்தைப் பொருளாதாரத்தை முயன்று பார்க்க வேண்டும் என்று தேவைகள் ஏற்பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 1

நம் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக போராட்டங்கள், விவாதங்கள், ஏன் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு, சாவுகள் வரை போய் விட்டன.

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்த கொள்கை சீனா 1980களில் கொண்டு வந்த கொள்கையை தழுவியே இருக்கிறது என்கிறார்கள்.
  • சீனாவில் இவை போல பிரச்சனைகள் இருந்தனவா?
  • பாமக போல எதிர்ப்புக் குரல்கள் எழவில்லையா?
  • எப்படிச் சமாளித்து நடத்தினார்கள்.
  • பல வளரும் நாடுகளில் அதே போல செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு எப்படிச் சாதித்துக் காட்டினார்கள்?
பொதுவாக கம்யூனிஸ்டு கட்சியினர் சங்கடமான கேள்விகளுக்கு விடையாகப் பயன்படுத்தும் ஒரு சமாளிப்பு, 'அங்கிருந்த சூழல்கள் வேறு, இங்கிருக்கும் சூழல்கள் வேறு' என்பது.

'சீனாவே சந்தைப் பொருளாதாரத்தையும், உலக மயமாக்கலையும் ஆதரிக்கும் போது, நீங்கள் ஏன் இந்தியாவில் எதிர்க்கிறீர்கள்?'
'மேற்கு வங்கத்தில் உங்கள் அரசு பின்பற்றும் அதே கொள்கைகளை பிற மாநிலங்களில் ஏன் எதிர்க்கிறீர்கள்?'

இப்படி கேட்டால் மேலே சொன்ன பதில்தான் வரும்.

சீனாவில் 1980களின் நிலவரமும், இந்தியாவில் 2000ம் ஆண்டுகளின் நிலவரமும் ஒரே மாதிரி இல்லைதான். அப்படி என்ன வித்தியாசம்? அவர்களால் சிக்கல் இல்லாமல் செய்ய முடிந்தது நமக்கு ஏன் இவ்வளவு தலைவலி தருகிறது.

வியாழன், செப்டம்பர் 27, 2007

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

ஊர்க் கோபுரத்தில் ஏறி உலகம் உய்ய மந்திரம் உரைத்த பெரியவர் போல கல்விக்கு விளக்காக பாட நூல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கும், அதை எல்லோரும் அறியச் செய்த சிவபாலன் அவர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007

ஒரு லட்சம் கோடீஸ்வரர்கள்+83 கோடி பேருக்கு நாளுக்கு இருபது ரூபாய்கள்

மெர்ரில் லைஞ்ச்/கேப்ஜெமினியின் அறிக்கை ஒன்றின் படி இந்தியாவில் மில்லியன் அமெரிக்க டாலர்கள் (4 கோடி ரூபாய்கள்) சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாம்.

'இவர்கள் எல்லாம் வட்டி கட்டும் போது, வீடு கட்ட செலவழிக்கும் போது, வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் போது மீதி நூற்றுப் பத்து கோடி பேருக்கும் சுபிட்சம் கிடைத்து விடும்'. அந்த நம்பிக்கையில்தான் நிதி அமைச்சரும், பிரதம மந்திரியும் 9% வளர்ச்சியைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது?

(இந்தச் சுட்டி டெக்கான் குரோனிக்கிளின் செப்டம்பர் 23, 2007ன் பக்கத்தைச் சுட்டியது. நாள் மாற பக்கமும் மாறி விட்டது.)்).

யாஹூ
இந்தியன் எக்சுபிரசு
இந்து நாளிதழ்
இன்னொரு சுட்டி


83 கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்களாம். முறை சாராத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 79 பேர், தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பினர்களில் நூற்றுக்கு 88 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் நூற்றுக்கு 80 பேர். நூற்றுக்கு 84 இசுலாமியர்கள் இவ்வளவு வருமானத்தில் தமது தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

'அது எப்படிங்க இருக்க முடியும். இருபது ரூபாய் வருமானத்தில் யார் வேலை பார்க்கிறாங்க?' இது ஒரு நண்பரின் கேள்வி.

மாதம் இரண்டாயிரம் ரூபாய்கள் வருமானம் வரும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய்கள் கூடத் தேறாது. அப்படி பல குடும்பங்கள் சென்னை நகரிலேயே இருக்கின்றன. கிராமங்களிலும். சிறு நகரங்களிலும் இன்னும் குறைந்த வருமானம் இருக்கலாம்.

1990களில் ஆரம்பித்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பணக்காரர்களின் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறது. ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கிறது. ஒழுகிப் போகும் வித்தை நடக்கவில்லை.

நம்மைச் சுற்றி நடப்பது மட்டும் உண்மை இல்லை. நகரங்களுக்கு வெளியேயும், மென்பொருள் துறைக்கு வெளியேயும் இந்தியா வாழ்கிறது. போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 07, 2007

தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களே - வாருங்கள்

இந்தியாவில் என்று தகவல் தொழில் நுட்பப் பொருட்கள் உருவாக்கி விற்கும் துறை தளைக்கும்?

"இந்தியர்கள் எப்போதும் வெளி நாடுகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைப் பயன்படுத்த மட்டும் செய்தால் போதாது. உள்ளூரிலேயே புதிய கருத்துக்கள் உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரமும் தொழிலும் முன்னேற முடியும்.

India has to become a bigger investor in ideas, and that's research and development, creation of the next generation of ideas to move its economy, its industry forward. You can't continue to take ideas generated from other parts of the world and bring them to India. You have to start creating your own ideas. "

-- இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரேக் பெரட்.

'நம்ம ஊரில் அரசியல் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. எல்லாம் சரியான பிறகு இங்கு வேலை பார்க்கிறோம். அது வரை, மேலை நாடுகளுக்குப் போய் எமது திறமைகளை, எமது சமூகம் அளித்த திறமைகளை அந்த சமூகங்களுக்கு பணி புரிய பயன்படுத்தி பொருள் ஈட்டுகிறோம். என்ன செய்து கடனைத் தீர்ப்பது என்று முடிந்த அளவு இந்தியாவில் இயங்கும் தன்னார்வலர் நிறுவனங்களுக்கு நன்கொடைகள் கொடுத்தும், உதவி செய்தும் தாகத்தைத் தணித்துக் கொள்கிறோம்.'

ஊர் கூடி.. 1 - காலக்கண்ணாடி
டாலர்கள் வேண்டாம், உங்கள் திறமை வேண்டும

திங்கள், செப்டம்பர் 03, 2007

தமிழ்ச் சாதியை என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.



நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

-- பாரதியார்

வேண்டுகோள்

  1. டோண்டு சார் வேண்டுமென்றே குத்திக் கிளறும் நோக்கத்தோடு எழுதும் இடுகைகளை நிறுத்தவும்
  2. போலிக் குழுவினர் தாம் இதுவரை போட்ட எல்லா ஆபாச இடுகைகளையும், பின்னூட்டங்களையும் நீக்கவும்
  3. செல்லா தமிழில் எழுதுவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவும்

கேட்டுக் கொள்கிறேன்.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2007

நானாக இருப்பேன்!!

என் சுயத்தை வெளியில் தேடாமல் என்னுள்ளேயே வளர்த்துக் கொள்வேன்.

யாரும் என்னை அழ விட அனுமதிக்க மாட்டேன் (தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர)

பத்திரிகைகளின் அட்டையில் வரும் உருவங்கள் போல இருப்பதுதான் அழகு என்று இல்லை

யாரும் என்னைக் கடுப்படிக்க முடியாது.

"உன் வாழ்த்து அட்டைகளை நீயே வச்சுக்கோ!"

என்னை நான் காதலிக்கிறேன்.

குண்டான பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் கடைக்கான விளம்பரத்தில் ஒரு குண்டுப் பெண்ணின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்த வாசகங்களின் குத்துமதிப்பான தமிழாக்கம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - பெங்களூர் இணைப்பில் ஏப்ரல் 11, 2007 அன்று படித்தது.

திங்கள், ஆகஸ்ட் 13, 2007

புதன், ஆகஸ்ட் 08, 2007

பட்டறை - விவாதம்

பதிவர் பட்டறையில் மாலன் பேசியதைக் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த சமயத்தில் அரங்கை ஒருங்கிணைத்தவன் என்று முறையில் சின்ன குறிப்பு:

உண்மையில் கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாற்றுத் திசையில் விவாதம் திரும்பாமலும் நேரம் அதிகமாக ஆகி விடாமலும்தான் கவனம் செலுத்தினேன். அதனால்தான் நன்னடத்தை தொடர்பான உரையைத் தொடர்ந்து விவாதம் நீளாமல் நிறுத்த நேரிட்டது.

பொறுப்புள்ள மூத்த பத்திரிகையாளராக, பதிவராக காலையில் ஒரு விவாதத்தின் போது 'அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை' என்று அழகாக விளக்கினார் மாலன்.

வலை நன்னடத்தை என்ற தலைப்பில் பேச வேண்டிய முத்துகுமரன் வர முடியாமல் போகவே கடைசி நேரத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்தத் தலைப்பில் பேசினார் மாலன். அந்த உரையின் இறுதியில் பெயரிலியுடனான அவரது விவாதங்கள், ஒரு ஆங்கில நாளிதழ் ஆசிரியரைக் குறித்த குறிப்புகள், அதை ஒட்டி ஈழத்தமிழர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அனைத்தும் பட்டறையின் நோக்கத்துக்கும் உணர்வுக்கும் பொருந்தாதவை என்றே நம்புகிறேன்.

இனிமேல் பட்டறைகள் நடத்தும் போது இது போன்ற கருத்து அரங்குகள் தேவை இல்லை என்று தோன்றுகிறது. அவற்றைத்தான் நாள்தோறும் பதிவுகளில் செய்கிறோம். அவ்வப்போது சந்திப்புகளில் பேசிக் கொள்கிறோம். பட்டறைகளில் கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் மட்டும் நடந்தால் போதும்.

திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறை - நிறைவுற்றது

உணவு இடைவேளைக்குப் பிறகு வலைப்பதிவுகள் மூலம் சம்பாதிப்பது குறித்து கிருபா சங்கர் பேசினார். ஆங்கிலத்தின் பிரபலமான பதிவர் என்று அவரை அறிமுகப்படித்த அது இவர் இல்லையாம். கூகுள் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது அதிக நேரத்தைப் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்த செய்து தொழிலுக்குத் தேவையான தொடர்புகள், வெளிச்சத்துக்காக பதிவுகளைப் பயன்படுவது குறித்தும் சிறிது பேசிக் கொண்டோம்.

ரஜினி ராம்கி சமூக அக்கறை குறித்துப் பேசினார். சுனாமி நிவாரணத்துக்காக அவர் ஒருங்கிணைத்து வலைப்பதிவு நடவடிக்கைகளை விளக்கினார். இந்த அமர்வுக்கிடையே வலை நண்பர்களுக்காக படம் பிடித்த நண்பருக்காக பட்டறையின் போக்கைக் குறித்துப் பேசிக் கொண்டேன். இப்படி ஒரு பட்டறை பற்றி கனவு கண்டு அதை இடை விடாது சொல்லிச் சொல்லி ஆட்களை ஒன்று சேர்த்து சாதித்த பாலபாரதியின் பணியிலிருந்து பங்கேற்ற பலரின் விபரங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

ரஜினி ராம்கியைத் தொடர்ந்து அடுத்த இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு அருள் செல்வன் இணையத்தின் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்பது குறித்துப் பேசினார். கடைசியாக வலைப்பதிவுகளில் மாறுபட்ட முயற்சிகள் குறித்து பொன்ஸ் தொகுத்தளிக்க அதில் ஈடுபடும் நண்பர்கள் தத்தமது முயற்சிகள் குறித்துப் பேசினார்கள்.

அதியன் எழுத்துரு மாற்றி குறித்து கோபியின் விளக்க அமர்வு கூட்டத்தைக் கட்டிப் போட்டது. விக்கிபீடியா குறித்து ஆமாச்சு, தேடு வேலை குறித்து செந்தழல் ரவி, விக்கி பசங்க குறித்து பினாத்தல் சுரேஷ், உபுண்டு குறித்து மீண்டும் ஆமாச்சு, மொபைல் புத்தகங்கள் குறித்து ஒரு நண்பர் பேசினார்கள். இவை தவிர மாற்று, சற்றுமுன், வலைப்பதிவர் உதவிக் குழு, பூங்கா, மகளிர் சக்தி, லிவிங் ஸ்மைல் வித்யா, எயிட்ஸ் விழிப்புணர்வு முயற்சிகள் என்று பொன்ஸ் சுருக்கமாக விளக்கினார்.

உச்சகட்டமாக ஓசை செல்லா ஒலி ஒளிப் பதிவுகள் குறித்து விளக்கி, அதன் மாதிரிகளையும் காட்டினார். அதற்குள் ஐந்தரை நெருங்கியிருந்தது். முடித்து வைக்கும் உரையை ஆரம்பித்து வாழ்த்துக் கவிதை படிக்க ஒருவரை அழைக்க, ஆதரவாளர்களுக்கு விக்கி நன்றி சொல்ல, பாலபாரதி தன்னார்வலர்களில் சிலருக்கு வெளிச்சம் போடும் விதமாக ஒவ்வொருவராக முன்னுக்கு அழைத்து கூட்டாக நிற்க பட்டறை முடிவடைந்தது.

பட்டறை - களை கட்டியது

உபுண்டு குழுவினர் ஆமாச்சு ஒருங்கிணைப்பில் ஒரு மேசை போட்டு லினக்ஸ் பற்றிய விபரங்களை வழங்க ஆரம்பித்தனர். லினஸ் அகாடமியிலிருந்து இன்னொரு பக்கம் திறவூற்று மென்பொருள் பயிற்சிகள் குறித்த விபரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். தேன்கூடு நிறுவனத்தின் சார்பில் வந்திருந்த டி சட்டைகளை மாணவர்களுக்கு வினியோகித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.

CNN IBN தொலைக்காட்சியினர் பயிற்சி வகுப்புகளில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிறுவனங்களுக்கும் முந்தைய வாரமே தகவல் சேர்த்து நிகழ்வன்றும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் அந்தத் துறையின் தனது நண்பர்கள் மூலம் பட்டறைக்கு ஆகக் கூடுதல் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நூறு கைகள் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க பட்டறை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

இடைவேளைக்குப் பிறகு முகுந்த், பேச்சை உரையாக மாற்றும் நுட்பம், உரையைப் படித்துக் காட்டும் வசதிகள், எழுத்துப் பிழை திருத்தும் செயலிகள் என்று தமிழில் வர வேண்டிய நுட்பங்களைப் பட்டியலிட்டார். காசி தமிழ் வலைப்பதிவுகள் ஒரு அறிமுகம் என்று வலைப்பதிவுகளை கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதில் நடக்கும் அரசியல்கள் கூட வெளிச்சத்துக்கு வந்தன.

அதைத் தொடர்ந்த மாலன் இணைய நன்னடத்தை என்று தனது அமர்வை ஆரம்பித்தார். இந்த அமர்வில் தான் வாயே திறக்கப் போவதில்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து ஓசை செல்லாவையும் விவாதத்தில் இறங்க வைத்து சுறுசுறுப்பாகப் போனது.

'தனியாக வீட்டில் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கும் சுதந்திரம் இன்னொருவர் சேரும்போது மட்டுப்படுகிறது. தெருவில் இறங்கும் போது இன்னும் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் போன்ற பட்டறைக்கு வந்தால் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.'

'ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வாழும் போது, செயல் போடும் போது கட்டற்ற தன்னிச்சை என்பது சாத்தியமில்லை. உரிமைகள் அதிகமாக இருப்பவர்களுக்கு பொறுப்பும் அதிகம். இணையத்திலும் அத்தகைய நடத்தை ஒழுங்குகள் யாரும் புகுத்தாமலேயே தானாகவே உருவாகிக் கொள்கின்றன' என்று கட்டம் போட்டுக் காட்டினார் மாலன்.

'திரைப்படங்களுக்கு தணிக்கை தேவையா? இணையத்தைத் தணிக்கை செய்ய முடியுமா' என்று செல்லா எடுத்துக் கொடுக்க முடிவே இல்லாத இந்த விவாதத்தை அத்துடன் நிறுத்தி விட்டு, வலையில் பாதுகாப்பு குறித்து லக்கிலுக் பேச ஆரம்பித்தார்

மொக்கை பதிவு என்றால் என்ன, கும்மி பதிவர் என்றால் யார் என்று வரையறைகளோடு ஆரம்பித்த அவரது அமர்வின் இடையில் வெளியே போய் ஆனந்த விகடன் குழுவினர் பிடித்து மணலில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விக்கி, லக்கிலுக், பொன்ஸ் என்று குழுப் படம்

நாகூரிலிருந்து வந்திருந்த இஸ்மாயில் பாதுகாப்பு அமர்வில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க கூடுதல் நுட்பமான கேள்விகளை தனி மடலில் விவாதித்துக் கொள்ளலாம் என்று முடித்தோம். அதற்குள் தாமதமாக மதிய உணவு வந்து சேர்ந்து விட ஒன்றே முக்காலுக்கு உணவு இடைவேளை. நல்ல பசி வந்து விட்டதால் அமிர்தமாக ருசித்ததாம் உணவு.

ஜெயா தொலைக்காட்சியினர் காலியாக இருந்த பயிற்சி அறையில் நான்கு பேரை உட்கார வைத்து படம் எடுக்க உதவுமாறு கேட்க, காலையில் அவ்வளவு சுறுசுறுப்பாக நடந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இப்போது செயற்கையாக எடுக்காதீர்கள், இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து மதிய அமர்வுகளைப் படம் பிடியுங்கள் என்று கேட்டால் அடுத்த பணிக்குப் போகும் அவசரம்.

கடைசியில் கருத்து அரங்கில் பட்டறை பெயர் பின்னணியில் இருக்கப் பேசச் சொன்னார்கள். மூச்சு விடாமல் போட்ட போட்டில் படம் பிடிக்க வந்திருந்த இளைஞர் கடைசியில் தமிழில் தட்டச்ச வலைப்பதிய விபரங்கள் கேட்டு விட்டுத்தான் கிளம்பினார். 'அந்தத் தொலைக்காட்சி மூலம் ஆயிரக்கணக்கானோருக்குத் தமிழ்க் கணிமை விபரங்கள் போய்ச் சேர வேண்டும், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும், இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன்.

பட்டறை - இணையமும், தமிழ் இணையமும்

கலந்து கொள்ள வந்தவர்களில் சிலர் தமது எதிர்பார்ப்புகளையும் கருத்துகளையும் சொன்னார்கள். பத்ரி, சிவஞானம்ஜி, ராமகி, மாலன், காசி, முகுந்த் என்று ஆரம்பித்து அந்த அரங்கில் நிரம்பியவர்களின் பட்டியலில் மைசூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கோவை, மதுரை, நாகூர், நாகர் கோவில், விழுப்புரம், கடலூர் என்று பல ஊர்களிலிருந்து பட்டறைக்காகவே வந்திருந்தவர்களும் இருந்தார்கள். பெங்களூருலிருந்து, சென்னைக்கு அடுத்த அளவில் பதிவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

விக்கி unconference என்றால் என்ன என்று விளக்கினார். பட்டறையின் மூன்று அறைகள், அதில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள், எல்லோரும் பங்கேற்க வேண்டியதன் அவசியம், பட்டறை ஏற்பாடு செய்ததின் பின்னணி என்று கலகலப்பாக ஆரம்பித்து வைத்த உணர்வு நாள் முழுவதும் தொடர்ந்தது.

மேல் அறைகளில் பொன்ஸ், வினையூக்கி ஒருங்கிணைப்பில் நடந்த தொழில் நுட்ப அமர்வுகளைப் பற்றிப் பிற்பாடு நிறையக் கேட்க முடிந்தது. இடையில் செந்தழல் ரவி நடத்திய வகுப்பில் பெருந்திரளான மக்கள் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களைப் போலக் கூடி இருந்ததையும், பினாத்தல் சுரேஷ் மதியத்துக்கு மேல் நடத்திய பிளாஷ் வகுப்பு மிக அதிக ஆர்வம் காட்டப்பட்ட அமர்வாகவும் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

வினையூக்கி மட்டும் 30 பேருக்கு மேல் பயிற்சி அளித்ததாகச் சொன்னார். சில கல்லூரி மாணவர்கள் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்துத் தமிழில் பதிவு போட ஆரம்பித்து விட்டிருந்தார்கள். பயிற்சி அறைகளில் நிலவிய சூழல் மனம் நிறைப்பதாக இருந்தது.

என்னுடைய நேரம் பெரும்பாலும் கருத்தரங்கில் கழிந்தது. பத்தரை மணிக்கு பத்ரி இணையம் குறித்த தனது குறிப்புகளை வழங்கினார். அமர்வுகளை ஒலிப்பதிவு செய்ய தனது கையடக்க கருவியை அமைத்திருந்தார். நாள் முழுவதும் புரஜெக்டரில் குறிப்புகளைப் போடுவது, ஒலி அமைப்புகளில் உதவுவது என்று முன் வரிசையில் அவரும் நந்தாவும் அமர்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

சரியாக பத்தரைக்கு ஆரம்பித்த பத்ரி இணையத்தில் என்னென்ன சாத்தியம் என்று பட்டியலிட்டு விட்டு,
  • அதையெல்லாம் தமிழில் செய்ய முடியுமா? - ஆம்
  • செய்கிறோமா? - இல்லை,
  • ஏன்?
என்று கொளுத்திப் போட்டார். அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் முனைப்பெடுத்துச் செயல்பட வேண்டும். தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், இது வரை தமிழ்க் கணிமையின் வளர்ச்சி தனிநபர் சார்ந்ததாகவே இருந்து வருகிறது என்று தனது கருத்தைச் சொன்னார்.

தமிழ் நாட்டில் விற்கப்படும் கணினிகளில் தமிழ் அமைப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். தமிழ் ஆதரவு இருக்கும் செல் பேசிகள் மட்டுமே விற்கப் பட வேண்டும் என்று சட்டம் போடுவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றார்.

'இது போன்ற கருத்தரங்குகளில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதால் என்ன பயன்? இங்கு வந்திருப்பவர்களால் முடிகிள பணியை பேசுவது பொருத்தமாக இருக்கும்' என்று மாற்றுக் கருத்து வர, 'நாம் பேசினால்தான் கருத்துத் திரட்டல் நடந்து மாற்றங்கள் ஆரம்பிக்கும்' என்று வித்யா சொன்னார்.

'இது போன்ற கொள்கை குறித்த விவாதங்கள் நடக்க வேண்டுமா' என்று கேள்வி எழுப்பி, வேண்டும் என்று தனது கருத்தையும் சொல்லி விட்டு, இணையத்தில் பத்திரிகைகளும் அரசுத் தளங்களும் ஒருங்குறியையே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கை நாராயணன் பேசினார்.

'இந்தப் பட்டறையின் நோக்கம், தமிழ்க் கணிமை, வலைப்பதிதல், இணைய நுட்பங்களைப் பரவலாக்குதல், புதியவர்களுக்கு அறிமுகம் செய்தல். கொள்கைகள் குறித்து விவாதிப்பதால் அந்த நோக்கத்துக்கு மாறாக நேரம் செலவழியும்' என்று மாலன் பேசி அந்த திசையை அடைத்து விட்டார்

அமெரிக்கை நாராயணன் தனது நன்கொடையாக அரங்கிலேயே 5000 ரூபாய்கள் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து முகுந்தராஜ் - மில்லியன் தட்டச்சுகளை உருவாக்கிய eகலப்பையின் படைப்பாளி- தமிழ் இணைய மைல் கற்கள் என்று பேசினார். தமிழ் டாட் நெட், முரசு அஞ்சல், மதுரைத் திட்டம், திஸ்கி, டேப், டேம், eகலப்பை, ஒருங்குறி, தமிழ் லினக்ஸ், வலைப்பதிவுகள், விக்கிபீடியா என்று பட்டியலை முடித்ததும் இணையத் தமிழ் மாநாடுகள் அவற்றில் விடுபட்டதாக மாலன் சேர்த்தார்.

இன்னும் செய்ய வேண்டிய பணிகளாக தொடர விரும்பிய முகுந்த் காபி இடைவேளைக்குப் பிறகு செய்யலாம் என்று ஏற்றுக் கொள்ள ஒரு சின்ன இடைவேளை.

பட்டறையை நோக்கி...

நானும் சக பயணி வினையூக்கியும் வளசரவாக்கம் வந்து சேர்ந்தோம். அதற்குள் வீடு போய் விட்டிருந்த ஜெயா பதிவு மேசைக்குத் தேவையான விபரங்களைத் தொகுத்து அனுப்பி விடுவதாகவும், அச்செடுத்துக் கொண்டு வந்து விடுமாறும் தொலைபேசினார். நாகர்கோவிலிலிருந்து வந்த எட்வினும் அவரது நண்பரும் தொலைபேச ராமாபுரத்துக்கு வர ரயிலில் கிண்டி வந்து ஆட்டோ பிடித்துக் கொள்ளச் சொன்னேன். வீட்டுக்கு வந்து தூங்கப் போகும் முன் அவர்களும் வந்து சேர்ந்து விட, அதிகாலையிலேயே நான் கிளம்பி விடுவேன், நீங்கள் பேருந்து பிடித்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தூங்க ஏற்பாடுகளையும் காட்டி விட்டுத் தூங்கி விட்டேன்.

அப்படி பின்னிரவில் வந்து சேர்ந்து அடுத்த நாள் முழுவதும் பட்டறையில் பங்கேற்று விட்டு ஞாயிறன்று மாலையே நாகர்கோவிலுக்குப் பேருந்து பிடித்துப் போய் விட்டார் அவர்.

காலையில் நாலரைக்கு எழுந்து மிக அவசியமான வேலைகளை மட்டும் முடித்து விட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். ஜெயா அனுப்பியிருந்த கோப்புகளை சரிபார்த்து அச்சிட்டுக் கொண்டேன். வருபவர்களில் தமிழ்த்துறை மாணவர்கள், இணையத் தளத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாமல் வருபவர்கள் என்று மூன்று வகையான பட்டியல்கள், அந்தந்த மேசைகளுக்கான பெயர், அறைகளுக்கு வினையூக்கி சூட்டிய திருவள்ளுவர், பரிமேலழகர், நக்கீரர் என்ற பெயர் எல்லாம் அச்செடுத்துக் கொண்டேன்.

சாகரன் நினைவு மலர் பிரதிகளையும் வினியோகிக்க எடுத்து வைத்துக் கொண்டேன். அதிகாலை எழுப்பி விடும் சேவை கேட்டிருந்த நண்பர்களுக்குத் தொலைபேசி மணி அடித்துக் கொண்டே இன்னும் ஓரிரு பொருட்களை எடுத்துக் கொண்டு வினையூக்கியின் வீட்டுக்கு ஓரிரு நிமிடங்கள் மட்டும் தாமதமாக போய்ச் சேர்ந்தேன்.

மேக மூட்டமான வானிலை. தூறல்கள் கூட ஆரம்பித்திருந்தன. 25 நிமிடங்களில் ஆற்காடு சாலையின் நீளத்தை அளந்து ராதாகிருஷ்ணன் சாலையை முழுவதும் கடந்து காமராசர் சாலையில் இருக்கும் பட்டறை வளாகத்துக்கு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்த வளாக பாதுகாப்புப் படையினரிடம் அரங்குகளைத் திறக்கும் படிக் கேட்டோம். ஜெயகுமார் பொறுப்பாக தாளில் கையெழுத்து போட்டு பூட்டுகளில் ஒட்டிப் போயிருந்தார்.

உண்மைத்தமிழன், நந்தா, ஜேகே, அதியமான் என்று வந்து கையை மடித்து விட்டுக் கொண்டு களத்தில் இறங்கினோம். அருள், ஜெய் சீக்கிரம் வந்து விட்டார்கள். ஜெயா தனது பொறுப்புக்குத் தேவையான பொருட்களுடன் வந்தார். குப்பையாகக் கிடந்த அரங்குகளை பாதுகாப்புப் பணியிலிருந்த முதியவரே பெருக்கிச் சரி செய்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால் வேலை செய்யும் பெண்மணிகள் வர மாட்டார்களாம்.

வினையூக்கி முதலானோர் கணினிகளை இயக்கி முதல் மாடியில் ஏற்பாடுகளை ஆரம்பித்தார்கள். நந்தாவுடன் போய் திருவல்லிக்கேணி சங்கீதாவில் சாப்பிட்டு விட்டு 4 பொட்டலங்களில் பொங்கல்/வடை வாங்கி வந்தோம். அதில் எண்ணெய் அதிகம் என்ற புகாருடன் சிலருக்குப் பயன்பட்டது.

சிபி நிறுவனத்தினர், ஐசிஎன் கணிப் பொறியாளர்கள், லைனஸ் அகாடமியிலிருந்து சரவணன், என்று ஒவ்வொருவராகக் கூடக் கூட்டம் களை கட்ட ஆரம்பித்தது. கட்ட வேண்டியவை, நிறுத்த வேண்டியவை, சோதிக்க வேண்டியவை எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்தன.

கருத்து அரங்கில் ஆரம்ப அமர்வில் விக்கி பேசச் சொல்லியிருந்ததற்காக அரை மணி நேரம் உட்கார்ந்து குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டேன். ஒன்பது மணியிலிருந்தே பங்கேற்பாளர்கள் வர ஆரம்பித்து ஒன்பதரை மணிக்கெல்லாம் அரங்கம் ஓரளவு நிரம்பி விட்டது. இன்னும் பத்து நிமிடங்கள் பார்க்கலாம் என்று சிலர் சொல்ல, சரியான நேரத்துக்கு வந்தவர்களை காக்க வைப்பது சரியில்லை என்று எனது கட்சிக்கு ஐகாரஸ் பிரகாஷ் உறுதியான ஆதரவு தெரிவிக்க ஒன்பதரை மணிக்கு விக்கி அறிமுக அமர்வை ஆரம்பித்து விட்டார்.

பட்டறைக்கு முதல் நாளில்.....

சனிக் கிழமை காலையில் அலுவலக வேலைகளை முடித்து விட்டு 11.30க்கு வினையூக்கியை கூட்டிக் கொண்டு பன்னிரண்டு மணி வாக்கில் அரங்கத்துக்குப் போகலாம் என்று திட்டம். வேலைகள் முடிந்து கிளம்பும் போதே தாமதமாகி விட்டது. வினையூக்கி வீட்டுக்குப் போய் அவரையும் ஏற்றிக் கொண்டு வித்லோகா புத்தகக் கடைக்குப் போனோம். நந்தா அங்கே காத்திருப்பதாக பாலா தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

வெள்ளி மாலையே சிபி நிறுவனத்தார் இணைய இணைப்பு நிறுவி விட்டதாகத் தகவல் வந்திருந்தது. சனிக்கிழமை மதியம் வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்த கணினிகள் வந்து சேரும். அவற்றை வாங்கி வைப்பதிலிருந்து அரங்கத்தில் ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டும்.

வித்லோகாவில் கணிச்சுவடி புத்தகத்தையும் குறுந்தகட்டின் இறுதி வடிவத்தையும் பார்த்து விட்டு அரங்கிற்கு கிளம்பி விட முடிவு செய்தோம். சனி அன்றும் வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க நாங்கள் போய்ச் சேர்ந்த நேரம் மதிய உணவு வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மேலே வகுப்பறைகளில் வரிசை வரிசையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த கடைசி அறையில் முகாமைப் போட்டு விட்டுக் காத்திருத்தலை ஆரம்பித்தோம்.

மூன்று பேருமாக அமர்ந்து நிகழ்வன்று மூன்று பகுதிகளிலும் எப்படி ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தோம். பயிற்சி அறைக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக வினையூக்கி ஒத்துக் கொண்டார். ஏழெட்டு கணினிகளை அமைத்து புதிதாக வருபவர்களுக்கு தனித்தனியாக தன்னார்வலர்கள் கற்றுக் கொடுக்கும் அறை அந்த பயிற்சி அறை. இந்த அறையும் தொழில் நுட்ப வகுப்புகள் நடக்கும் அறையும் முதல் மாடியில் இரண்டு வகுப்பறைகளில் ஏற்பாடு.

தொழில் நுட்ப வகுப்புகளில் 12-13 கணினிகள் அமைத்து பல்வேறு பொருட்களில் தொழில் நுட்ப நுணுக்கங்கள் 20-30 பேருக்கு ஒரே நேரத்தில் விளக்குவதாக அமையும். இந்த இரண்டு அறைகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக பொன்ஸ் இருப்பார் என்று ஏற்கனவே பேசியிருந்தோம்.

தரைத் தளத்தில் கருத்து அரங்கு. 150 இருக்கைகளுடன், குளிர் சாதன வசதியுடனான அரங்கம். பொதுவான விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் இங்கு நடக்கும். இதன் அமர்வுகளை விக்கியும் நானும் ஒருங்கிணைப்பதாக ஏற்பாடு.

சிபியிலிருந்து ஒரு பொறியாளர் வந்து வேலையைத் தொடர ஆரம்பித்தார். கணினி நிறுவனத்திலிருந்து கிளம்பும் போது தகவல் சொல்லி விடுவதாகத் தொலைபேசி. சுந்தர், அதைத் தொடர்ந்து ஜெயா வளாகத்துக்கு வர வழி கேட்டு தொலைபேசினார்கள். வளாகம் எங்கு இருக்கிறது என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் என்றால் சேப்பாக்கம் வளாகத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டுத் தொலைபேசியவர்களை அதிகம்.

அடுத்ததாக யோசிப்பவர் மகேசன் வந்து சேர்ந்தார். தமிழ்த் துறையினரைத் தொடர்பு கொண்டு புரொஜக்டர், ஒலி அமைப்புகளை சரி பார்க்க ஜெயாவும் யோசிப்பவரும் போய் விட்டார்கள். ஜே கே என்ற ஜெயகுமார் அடுத்து வந்தார்.

இருபது கணினிகள் எல்சிடி திரைகளுடம் வந்து இறங்கி விட இடம் களை கட்ட ஆரம்பித்தது. வினையூக்கியின் திட்டப்படி வகுப்பறைகளில் இருக்கைகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அரங்கத்தில் பொருட்களைக் கொண்டு வைக்க ஆரம்பித்தோம்.

லக்கிலுக்கும் லெனின் என்ற அவர் நண்பரும் வினைலில் அச்சடித்த பேனர்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த செல்லா ஓய்வெடுத்துக் கொண்டு கிளம்பும் முன். 'மேக்அப் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராக இருங்கள், ஒளிபரப்பு ஆரம்பமாகப் போகிறது' என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வந்தார். அவர் சனிக்கிழமையும், நிகழ்வன்றும் நிகழ்த்திய தொடர் புகைப்படப் பதிவுகள் பட்டறையின் போக்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தன. உடனுக்குடன் இணையத்துக்குத் புகைப்படங்கள் போய்ச் சேர்ந்தன.

விக்கி, ஜெயாவுடன் ஒருங்கிணைப்புகளைப் பற்றிப் பேசும் போது, வரவேற்பு, பதிவு செய்யும் மேசை, தகவல் உதவி, உணவு/தேநீர் வழங்குதல், என்று மேலாண்மை பணிகளுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜெயா முன்வந்தார். அதற்கான குறிப்புகளையும் ஏற்பாடுகளையும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டார். நுழைவாயிலில் கட்டுவதற்கான பேனரைத் தனக்குத் தெரிந்த அச்சிடுபவரைப் பிடித்து தொலைபேசியிலேயே விபரங்கள் சொல்லி இரவு ஒன்பது மணிக்கு முன்பு தயாராகும் படி ஏற்பாடு செய்து விட்டார்.

அருள்குமார் அலுவலகத்திலிருந்து காபி இயந்திரம் வந்து சேர்ந்தது. மாணவர்கள் தம் பிடித்து முதல் மாடியில் ஏற்றி வைத்து விட்டார்கள். அருள், ஜெய் சங்கர், உண்மைத்தமிழன் என்று மாலையிலும் நிகழ்வன்றும் தூண்களாகச் செயல்பட்ட தன்னார்வலர்கள் எல்லோரும் கூடி விட்டோம். வினியோகிக்க வேண்டிய பொருட்களை பைகளில் போட்டு வைத்து விடலாம் என்று ஆரம்பித்தோம். குறுந்தகடும், கருத்து கேட்கும் படிவமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. கணிச்சுவடி பொட்டலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

பாலபாரதி பார்த்து பார்த்து அட்டகாசமாக செய்திருந்த காகிதப் பைகளினுள், அருள் குமார் ஏற்பாடு செய்திருந்த குறிப்பேடு, பேனா, ஹலோ பண்பலையினர் கொடுத்திருந்த சாவி வளையம், பட்டறை தொடர்பாக வினியோகிக்க அடித்திருந்த அறிவிப்பு ஒன்று போட ஆரம்பித்தோம். வட்டமாக உட்கார்ந்து கொண்டு கோல் தொடரில் பேசப்பட்ட வேலை முடங்கும் புள்ளிகளைப் பற்றிய சிரிப்புகளோடு 250 பைகளையும் நிரப்பிக் கொண்டிருந்தோம்.

பொன்ஸ், கருத்து திரட்டும் படிவங்களை அச்சடித்துக் கொண்டு வந்தார். பாலபாரதி குறுந்தகடுகளைக் கொண்டு சேர்த்தார். செந்தழல் ரவி தனது அனானி நண்பருடன் கிழக்கு ஆசியா பார்த்த பொலிவுடன் வந்தார். அவரது அனானி நண்பரையும் பை நிரப்பும் வட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். கடைசி வரை என்ன பெயரில் எழுதுகிறேன் என்பதே வெளிப்படுத்தவே இல்லை அந்த அனானி நண்பர்.

கண்ணில் படும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் கிளம்பினால்தான் காலையில் வரும் போது பரபரப்பில்லாமல் நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று பேசிக் கொண்டாம். மேலறைகளில் கணினி அமைப்புகளை ஐசிஎம் நிறுவனத்தார் செய்து முடித்தார்கள். அதற்குத் தேவையான மின்னிணைப்பு பெட்டிகளை சைதாப்பேட்டை வரை போய் எடுத்து வந்து விட்டார் நந்தா.

விக்கி ஒரு வெள்ளப் பலகையில் நிகழ்ச்சி நிரலை எழுதிக் கொண்டிருக்கும் போது, மேலறைகளில் ஜெயகுமார் கணினிகளின் மும்முரமாக இருக்கும் போது இரண்டு பேரிடமும் கதவுகளைப் பூட்டி விட்டுக் கிளம்பும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் புறப்பட்டோம். காலையில் தன்னார்வலர்கள் 7 மணிக்கு வர வேண்டும் என்று சொன்ன விக்கியிடம் வாயை விட்டு காலையில் கதவைத் திறக்க வேண்டிய பொறுப்பை வாங்கிக் கொண்டேன்.

பட்டறை - வினை முடித்த இனிமை

மனம் நிறைந்து விட்டால் உடல் வலிகள் படுத்துவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலைக்குச் சுற்றுலா போனோம். இறங்கும் போது கால்நடையாக, ஒற்றை அடிப் பாதை வழியாக இறங்கலாம் என்று முடிவு செய்து முட்புதர்களையும், தலையில் விறகு சுமந்து இறங்கும் உள்ளூர் வாசிகளையும் கடந்து நான்கைந்து பேராக வந்தோம். கால்கள் வலி உச்சக்கட்டத்தில். மலையை விட்டு இறங்கிய பிறகான ஓரிரு கிலோமீட்டர்களை கடக்க முடியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்கு எழுந்திருக்கவே முடியாத சோர்வு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக எழுந்து விட முடிந்தது.

அதே புத்துணர்ச்சி இப்போதும். மலை ஏறி இறங்கிய உழைப்பும் களைப்பும் மனதில் ஏற்பட்ட நிறைவினால் ஈடு கட்டப்பட்டிருக்கின்றன. பதிவர் பட்டறை முடிந்ததும் இந்த உணர்வு.

செவ்வாய், ஜூலை 31, 2007

சொல்லடி சிவசக்தி

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிகவுழன்று
பிறர் வாடப் பலசெயல்கள்செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

- பாரதி
(நினைவூட்டலுக்கு நன்றி - நந்தா)

ஞாயிறு, ஜூலை 22, 2007

இரும்பு குளிருது, மரம் குளிரலை. ஏன்?

குளிர் காலத்தில் சிமின்டு தரையில் படுத்தால் குளிரும். பாய் விரித்துப் படுத்தால் குளிருவதில்லை. உலோகப் பரப்பைத் தொட்டால் குளிர்கிறது, மரப்பரப்பு குளிருவதில்லை.

நம்ம உடம்பிலிருந்து சூட்டை கடத்தும் பரப்புகளைத் தொட்டால் நம் உடல் வெப்பத்தை இழப்பதால் குளிர்கிறது. வெப்பத்தைக் கடத்த முடியாத பரப்புகளைத் தொடும் போது குளிர்வதில்லை.

அதே போலக் வெளியில் போகும் போது கம்பளி ஆடை அணிவது உடல் வெப்பத்தை இழக்காமல் காத்துக் கொள்ள மட்டுமே. கம்பளி ஆடைக்கு என்று கதகதப்பாக்கும் இயல்பு கிடையாது.

விடையளித்த (முந்தைய பதிவில்) வவ்வாலுக்கும், பெயர் சொல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட நண்பருக்கும் நன்றி.

அடுத்த கேள்வி:
தோசை சாப்பிட்டால் அதிகமா தண்ணீர் தவிப்பது ஏன்?

வெள்ளி, ஜூலை 20, 2007

சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது ஏன்?

விடை உதவி - வவ்வால்

"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் "

இணையத்தில் தேடியதில் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கட்டுரைகள் ரத்த ஓட்டம் செரிமானத்துக்கு அதிகமாகத் தேவைப் படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மந்த நிலை ஏற்படுகின்றது என்றே சொல்கின்றன.

விழித்திருந்து படிக்க வேண்டும் என்றால் வயிறு நிறைய சாப்பிடாமல் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தலை சாய்த்தல் கேட்கிறது என்றால், கொஞ்சம் யோசியுங்க.

அடுத்த கேள்வி:

உலோகம் குளிர்ச்சியாகவும், மரக்கட்டை குளிராமலும் இருப்பது ஏன்?

தொலைக்காட்சி நிகழ்ச்சி அனுபவங்கள்

பன்னிரண்டு மணி நிகழ்ச்சிக்கு பத்தரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். சிறிது நேரமாவது என்ன பேசப் போகிறோம் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நான் ஆரம்பித்த திசையைப் பார்த்து நிகழ்ச்சி இயக்குநருக்கு உதறல் எடுத்து விட்டது. 'இது போலப் பேசினால் சி என் என் ஐபிஎன் பார்க்கிறவனுக்குத்தான் புரியும். நம்ம நிகழ்ச்சியில செங்கல் பட்டுக்கு அப்பால இருப்பவங்கதான் கேள்வி கேட்கப் போறாங்க. என் பையன் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கான், எப்படி வேலை கிடைக்கும், இப்படி நடைமுறைக் கேள்விகளாத்தான் இருக்கும்' என்று தரைக்கு இறக்கினார்.

இயக்குனர் கெட்டிக்காரத்தனமாக பொருளை அலசிக் கேள்விகளை தொகுப்பாளினிக்கு கோடி காட்டினார். தொகுப்பாளினி, ஆங்கிலத்தில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, வாக்கியங்களை ஒத்திகை பார்த்த வண்ணம் இருந்தார். நேரடி ஒளிபரப்பானதால் எங்கும் தடுமாறி விடக் கூடாது என்று கவனம்.

பதினொன்றரைக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் ஒப்பனை அறை. பான் கேக் என்று ஒன்றைத் தடவித் தடவி முகத்தை மினுமினுக்க முயன்றார் அந்த ஒப்பனையாளர். 'எல்லாம் அனுபவம்தான் சார், படிப்பெல்லாம் படிச்சி இந்த வேலை செய்ய முடியாது' என்று விளக்கம் கேட்டுக் கொண்டேன்.

தலையை அங்கும் இங்கும் நகர்த்த முடியாமல் ஒலிக் கருவி ஒரு காதில், சட்டை மேல் பொத்தானுக்கு அருகில் ஒலி வாங்கி. தொகுப்பாளினியைப் பார்த்து ஒரு படப் பெட்டி. நான் பார்க்க இன்னொரு திசையில் பெட்டி. ஒரு ஏழெட்டு பேர், மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய ஏற்பாடுகள். சலித்துப் போன முகத்தோடு எதிரில் ஒளிப் பதிவாளர். நிலையாக அமைக்கப்பட்ட கருவியை இயக்க வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் அதற்கான தயாரிப்புகள் திறன் தேவைப்படுவதாகத்தான் இருக்க வேண்டும்.

இன்னும் 10 நிமிடங்கள், எட்டு நிமிடங்கள், 40 விநாடிகள், இருபது விநாடிகள் என்று எண்ணிக் கொண்டே, ஆரம்ப வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டே இருந்தார் தொகுப்பாளினி. 'ஹலோ வியூவர்ஸ், வெல்கம் டு மெடுமிக்ஸ் ஹலோ ஜெயா டிவி. இந்த நிகழ்ச்சியில ஒவ்வொரு நாளும் பல்வேறு துறையைச் சேர்ந்தவங்க, அந்தத் துறை தொடர்பான உங்க கேள்விகளுக்கு விடை அளிக்கிறாங்க. அந்த வரிசையில இன்றைக்கு பிஎஸ்ஜி லெதர்லிங்க் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான திரு சிவகுமார் மென்பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் என்பதைக் குறித்து பேச இருக்கிறார், வாங்க சார்'

என்று அவர் கை கூப்ப நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னரே தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தனவாம். ஒரு மணி நேரத்தில் தொகுப்பாளர் கேள்வி கேட்டு நான் பேச முடிந்தது சில நிமிடங்களே இருக்கும். வரிசையாக அழைப்புகள்.

'பிஎஸ்சி ஜூவாலஜி படிச்சிருக்கேன், எம்சிஏவும் படிச்சேன், அப்புறம் கல்யாணம் ஆகி, பேபியும் ஆனதாலே அஞ்சு வருஷம் கேப் விழுந்திருச்சி, என்ன செய்யலாம்'

'பிஎஸ்சி முடிச்ச பிறகு எம்பிஏ பண்ணலாமா, எம்சிஏ பண்ணலாமா, எதுக்கு வேல்யூ அதிகம்?'

'மெக்கானிக்கல் பிஈ முடிச்சிருக்கேன். ஆட்டோ கேட் கோர்ஸ் பண்ணியிருக்கேன். வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?'

'எம் மக பிசிஏ படிச்சிட்டிருக்கா, அதுக்கப்புறம் எம்சிஏவும் படிக்கலாமா?'

'நான் பிஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன். அடுத்தது சி, சி++ கோர்ஸ் பண்ணலாமா?'

'பிளஸ் 2 முடிச்சிருக்கேன். பிஈ ஐடி நல்லதா, கம்பியூட்டர் சைன்ஸ் நல்லதா'

'கால் சென்டரில வேல பார்க்கிறேன். சாப்ட்வேரில மாறணும் அதுக்கு என்ன கோர்ஸ் படிக்கலாம்?'

'எம்பெடட்டட் கோர்ஸ் பண்ணலாம்னு பார்க்கிறேன். அதுக்கு மதிப்பு இருக்கா?'

என்று அடிப்படையான கேள்விகள். கப்பலில் ஏறி விட வழி என்ன என்று, உயிரியல் படித்தவர்களிலிருந்து. பொறியியல் படித்தவர்களிலிருந்து, ஐந்தாறு ஆண்டுகள் வேலை அனுபவம் இருப்பவர்கள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

தொழில் வாய்ப்பு என்றுதான் பேச ஆசை. இயக்குனர் சொன்னது போல வேலை வாய்ப்புளுக்குத்தான் கேள்விகள் அதிகம். தொழில் வாய்ப்பு என்று தலைப்புக் கொடுத்திருந்தால் தொழில் குறித்துக் கேட்பவர்களுக்கு இணைப்புக் கிடைத்திருக்கும்.

இடையில் இரண்டு வணிக இடைவேளைகள். ஒன்றரை நிமிடங்கள். தண்ணீர் குடித்து தொண்டையை நனைத்துக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருந்தது.

பேச மறந்தது நிறைய இருந்தது. நிறுவன வளம் திட்டமிடல் மென்பொருட்கள் குறித்து, திறவூற்று மென்பொருட்கள் குறித்து, நமது மென் பொருள் தேவைகளைக் குறித்து, தமிழ்க்கணிமை குறித்து என்று செல்லப் பொருட்களை ஆரம்பித்து வளர்க்க இடமே கிடைக்கவில்லை. காலையில் எழுதிப் பார்த்திருந்த கருத்துக்கள் ஏதோ ஒரு வடிவில் நுழைந்து கொண்டன. கேள்விகள் கேட்டு உடனேயே புரிந்த வரை பதில் சொல்லி விட்டு அது சரியா தவறா என்று மதிப்பெண் தெரியாமலேயே அடுத்த கேள்வி என்று நகர்ந்து கொண்டே இருந்தது.

கூடுமான வரை தமிழிலேயே பேசியது நன்றாக இருந்தது என்று அப்புறம் கருத்து சொன்ன இரண்டு நண்பர்கள் குறிப்பிட்டார்கள். பல இடங்களில் ஆங்கிலத்திலேயே நின்று விட்ட உணர்வு எனக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் நடப்பில் அந்த அளவு தமிழில் பேசுவதே குறிப்பிடும்படியாகப் போய் விட்டது.

அலுவலக நண்பர்களே மேல் வீட்டில் கூடி தொலைக்காட்சித் திரையிலிருந்து படக்கருவியால் பிடித்து வைத்திருந்தார்கள். நான்கைந்து கோப்புகளாக 2ஜிபி அளவுக்கு இருந்தது. படத்தில் திரையில் பட்டை பட்டையாக ஓடுகிறது. ஒலி நன்றாக பதிந்திருக்கிறது. அதைப்பார்த்து பேச்சை உரையாக மாற்றவும் முயற்சிக்கலாம்.

வியாழன், ஜூலை 19, 2007

சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

வவ்வால் போன பதிவிலேயே விடையைச் சொல்லி விட்டார். 'குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக் குறைக்கும்' என்று.

வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின் உயிர் வேதி வினைகள் அனைத்தும் உடல் வெப்ப நிலையிலேயே நடக்கும் படி தகவமைந்திருக்கும்.

சாப்பிட்டுட, குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றின் உள் வெப்பநிலை குறைந்து உணவைச் செரிக்கும் வினைகள்
பாதிக்கப்படும் என்று அனுபவம்.

வெதுவெதுப்பான நீர்தான் வயிற்றுக்கு நல்லது.

அடுத்த கேள்வி:
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?

மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் - சில எண்ளங்கள்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_509.html

புதன், ஜூலை 18, 2007

குழம்பில் புளி ஊற்றுவது எதுக்கு?

புளிப்பு சுவை என்ற வெளிப்படையான விடை ஒரு புறம் இருக்க, புளி சேர்ப்பதால் என்ன வேதியியல் மாற்றம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

தூய்மையான தண்ணீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருக்கும். உயிரினங்கள் வாழ்ந்து தழைக்க இந்த சமச் சூழல் தேவை. புளியில் அமிலத் தன்மை இருக்கிறது. புளி சேர்த்தக் குழம்பில் அமிலக் காரச் சமநிலை மாறி, அமிலத் தன்மை மிஞ்சி விடும். இதனால் உணவுப் பொருளில் வளர்ந்து பெருகி குழம்பைக் கெட்டுப் போக வைக்கக் கூடிய நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து குழம்பு அதிகமான நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டிகள் இல்லாத காலங்களில் செய்த உணவை முடிந்த வரை கெட்டுப் போகாமல் காத்துக் கொள்ள இந்த புளி சேர்ப்பது பயன்பட்டது. சமைத்த மீதத்தை ஆறியதும் குளிரப் பெட்டியில் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும் போது இந்தக் காரணம் அடிபட்டுப் போகிறது.

அடுத்த கேள்வி:
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

ஜெயா தொலைக் காட்சியில் "மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்" என்ற பொருளில் நேரடி ஒளிபரப்பாக நாளை (ஜூலை 19, 2007) இந்திய நேரம் பகல் 12 முதல் 1 மணி வரை "ஹலோ ஜெயா டிவி" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.
  • தொழில் வாய்ப்புகள் என்றுதான் நான் சொன்னாலும் வேலை வாய்ப்புகளுக்குத்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று மாற்றிக் கொண்டார்கள்
  • வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பருக்கு நன்றி

வெள்ளி, ஜூலை 13, 2007

தலைக்கவசம்

ஐந்து ஆண்டு முன்பு வண்டி வாங்கியதிலிருந்தே தலைக்கவசம் வாங்கும் எண்ணம் அவ்வப்போது வரும். ஓரிரு கடைகளில் போய்ப் பார்த்தாலும் நிறைவாகக் கிடைக்கவில்லை. அப்படி விடாப்பிடியாக வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அப்புறம் படிப்படியாக, 'கவசம் போடாமல் ஓட்டுவதுதான் சிறந்தது' என்று கற்பித்துக் கொண்டேன். பணப்புழக்கங்கள் குறைந்த பிறகு வாங்கும் எண்ணமே தொலைந்து போனது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு, அரசு அறிவிப்பு என்ற வந்ததும் வீம்பு வந்து விட்டது. 'யார் நம்மை கட்டாயப்படுத்துவது' என்ற வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே போனேன். இன்னொரு பக்கம் இந்த அறிவிப்பால் கடைகளில் தேவை அதிகரித்த செயற்கையான சூழலில் மாட்டிக் கொள்ளவும் கடுப்பாக இருந்தது.

அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து வாங்கிய போதும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி சோம்பலாகவே ஓடி நாளும் வந்து விட்டிருந்தது. ஜூன் 1 அன்று ஊரில் இல்லை. அடுத்த நாள் வண்டியை வெளியில் எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

ஜூன் 2 அன்று திருவான்மியூருக்குப் போக வண்டி தேவைப்பட்டது. வாங்க முடிவு செய்து பகிர்வூர்தியில் ஏறி பிக் பஜார் அருகில் இறங்கி சாலையைக் கடக்கப் போகும் போது நண்பரிடமிருந்து தொலைபேசி. 'தலைக்கவசம் கட்டாயம் இல்லை' என்று முதல்வர் அறிவித்து விட்டாராம். வாங்காமலேயே திரும்பி வண்டியை எடுத்துக் கொண்டு திருவான்மியூர். பின்னர்தான், 'பிடித்து அபராதம் விதிக்கா விட்டாலும், சட்டம் இருக்கத்தான் செய்கிறது' என்று புரிந்தது.

'தலைக்கவசம் தவறாமல் அணிவதன் மூலம் சட்டத்தை மதிக்கிறேன் என்ற பெருமை எனக்கு உண்டு' என்று ஒரு பெண் டெக்கான் குரோனிக்கிள் ஆசிரியர் கடிதம் பகுதியில் எழுதியிருந்தார்.

எல்லா சட்டங்களையும் கடைப்பிடிப்பது கடமை. ஏற்றுக் கொள்ளா விட்டால் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது இல்லை என்றால் சட்டத்தை மீறி விட்டு அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்ட மீறலை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி செய்ய வேண்டும். மாட்டிக் கொள்ளாதது வரை உத்தமன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல்.

'சில சட்டங்களைப் பின்பற்றுவேன், சிலவற்றை பின்பற்ற மாட்டேன்' என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆனாலும் 15 நாட்களாக தலைக் கவசம் அணியாமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மாமா ஒருவர் தொலைபேசி, புதிதாக ஆரம்பித்திருந்த நிறுவனம் குறித்துப் பேசக் கூப்பிட்டார்கள். 'இன்னும் தலைக்கவசம் வாங்கவில்லையா' என்று கண்டிக்கக் கூடியவர். அதனாலேயே உடனேயே வாங்கி விடுவோம் என்று அதே பிக் பஜாருக்குப் போய் விட்டேன்.

காலையில் நாளிதழில் ' இரு சக்கர வண்டியிலேயே காரில் போகும் வசதியை உணர்கிறேன் ' என்ற கடிதம் ஒன்றும் கவர்ந்தது. தூசி, சத்தங்கள் தொல்லை இல்லாமல் வண்டி ஓட்டலாம்.

கட்டாயக் கெடுபிடிகள் இல்லாததால் விற்பனை நெருக்கடியும் குறைந்திருக்கும் என்று தோன்றியது. இந்தக் கடைக்கு முதன் முதலில் வருகிறேன். பெரிய மெகா மார்ட் பாணிதான். முன் பக்கத்திலேயே தலைக்கவசங்களைக் குவித்து வைத்திருந்தார்கள். அங்கு விசாரிக்க அடுத்த பகுதியில் கைக்கடிகாரம் விற்கும் பகுதிக்கு அனுப்பினார்கள். வெளிர் நிறமாக வாங்க வேண்டும் என்று பார்த்து கடும் நிறத்தில்தான் சரியான அளவு கிடைத்தது. வெளிர் நிற வெளிப்புறம் வெப்பத்தை எதிரொளித்து சூடாவதைக் குறைக்கும். கறுப்புப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று காரணம்.

தலைக் கவசம் அணிந்திருப்பதால் பல வசதிகள். சில தொந்தரவுகள். தொலைபேசி அடித்தால் எடுத்துப் பேச முடியாது. யாரிடமாவது வழி கேட்க உரக்கப் பேச வேண்டியிருக்கிறது. நம் மூச்சுக் காற்றே நம் முகத்தைச் சுடும்.

வசதிகள், தூசித் தொல்லை பாதிக்காது. அரை மணி நேரம் சுற்றி விட்டு வந்து முகத்தைத் துடைத்தால் அப்பியிருக்கும் அழுக்கு இளிக்கும் காட்சியைத் தவிர்த்து விடலாம். வாகனங்களின் ஓசை பாதியாகக் குறைந்து விடுகிறது. வெகு தூரப் பயணங்களில் காற்று அறைந்து ஏற்படும் சோர்வும் குறைந்து விடுகிறது.

அடிப்படை உரிமைகள்

ஒரு பின்னிரவில் எழும்பூர் போவதற்காக பயணம். பத்து மணி வாக்கில் வளசரவாக்கத்தில் பேருந்து பிடித்து ஜெமினியில் இறங்கினேன். கடற்கரை நோக்கிப் போகும் அந்தப் பேருந்தில் அண்ணா சாலையில் வலது புறம் திரும்பி ராயப்பேட்டை போகும் சாலையில் இறக்கி விட்டார்கள். புதுக் கல்லூரிக்கு அருகில்.

அங்கிருந்து திரும்பி அண்ணா சாலைக்கு வந்து எழும்பூர் போகும் பேருந்து ஏதாவது பிடிக்கலாம் என்று எண்ணம். கல்லூரியில் படிக்கும் போது பெசன்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை போகும் 23C பழக்கமான பேருந்து. அது அண்ணா சாலை வழியாகத்தான் போகும். அந்த நினைவில் நடந்தேன்.

நடைபாதையில் மனிதர்கள் தூங்க ஆரம்பித்திருந்த நேரம். முதலில் இரண்டு வயதான பெண்கள் மூடிக் கொண்டு நடக்கும் வழியிலேயே. கடை ஒன்றின் பக்கவாட்டு வாசல் படியில் உயரத்தில் இன்னொரு அம்மா, அவருக்கு என்று பதிவான இடம் என்று நினைத்துக் கொண்டேன். ஓரிரு அடிகள் வந்ததும் தலை வரை மூடிய இளைஞன் ஒருவன் பக்கவாட்டில் படுத்து காலை எதன் மீதோ தூக்கித் போட்டிருந்தான். அடுத்த கணம் அந்த எதன் மீதோ என்று நினைத்தது என்ன என்று புரிந்தது.

கடந்து சென்ற சில கணங்களில் ஆண் அத்து மீற முயற்சிப்பதும் பெண் செல்லமாக முரண்டுவதும் புலப்பட்டது.

வழக்கமாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் மனமும் ஏதோ கனவுலகில் இருப்பது போல ஓடியது. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை ஒன்றில் நடைபாதை வாசிகள் நீண்ட நாட்கள் காதலித்து பெண்ணின் உறுதியால் தாலியும் கட்டிய பிறகு முதலிரவு கொண்டாட புதர் மறைவுக்குப் போகிறார்கள். இரவுக் காவலர் ஒருவர் வந்து அவர்கள் விபச்சாரம் செய்வதாக அழைத்துச் செல்கிறார்.

சென்னை நகரின் பரபரப்பான பகுதியில், சில அடிகள் தொலைவில் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கக் குடும்பம் நடத்தும் அவலம். உண்ண உணவு, உடுக்க உடை, தலைக்கு மேல் கூரை, ஆரம்பக் கல்வி இவை அடிப்படை உரிமைகளாக இருக்க வேண்டும். எத்தனை பெற்றுக் கொள்வது என்று சரியான முடிவெடுக்கச் சொல்லித் தரத் தவறும் சமூகம் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

சொத்துரிமை, தொழில் செய்யும் உரிமை இருப்பது போல, அந்த உரிமைகள் மீறப்படும் போது அரசாங்கத்தின் எல்லாக் கரங்களும் பதறிக் கொண்டுச் செயல்பட்டு விடுவது போல
தனி ஒருவனுக்கு உணவு இல்லா விட்டால் காவல் துறையும், நிர்வாகத் துறையும், நீதித் துறையும் உசுப்பப்பட வேண்டும். ஊடகங்களில் தலைப்புச் செய்தி வர வேண்டும்.

பின் நவீனத்துவம் - முனைவர் ரமணியின் பேச்சிலிருந்து குறிப்புகள்

கோவையில் நடந்த பதிவர் பட்டறையில் பின் நவீனத்துவம் பற்றி முனைவர் ரமணி:
  • பின்நவீனத்துவம் என்பது, நவீனத்துவம் என்று பின்பற்றப்பட்ட கட்டுகளை உடைத்து கலை, அறிவியல், தொழில், பொதுப் பண்பாடு என்று எல்லா துறைகளிலும் புதிய பாதைகளை உருவாக்கும் போக்கு.
    (சொல்வதைப் பார்த்தால் இன்றைக்கு நடக்கும் எந்த மாற்றத்தையும் பின் நவீனத்துவம் என்று அடையாளம் ஒட்டி வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது).

  • பழைய புனித பிம்பங்களை உடைக்கும் இளையதலைமுறையினரின் போக்கு பின் நவீனத்துவம். இடம், பயனைப் பொறுத்து கட்டிடம் வடிவமைத்தல், இசைத் துறையில் வரையறைகளை மாற்றுதல், இலக்கியத் துறையில் எதிர்க் கலைத்துவப் படைப்புகளை உருவாக்குபவர் பின்நவீனத்துவ படைப்பாளி.

    (புதுக் கவிதை, அயன் ராண்டின் ஹோவார்டு ரோர்க், ஏ ஆர் ரஹ்மான்/இளையராஜாவின் இசை முறைகள் போன்றவை தனக்கென மரபுகளை உருவாக்கினார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத பாத்திரங்களைப் படைத்திருப்பார்கள். சல்மான் ரஷ்டியின் எழுத்துக்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட போக்குகள் இருக்கின்றன.)

  • பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல், ஊடகம் எல்லா துறைகளிலும் மையம் உடைந்து விட்டது. அசலுக்கும் நகலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்து விட்டது. இணையத்தில் யாரும் எழுதுவது அவருக்கு உரியது என்று சொல்ல முடியாது.

    ஊடக உள்ளடக்கங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சிக்கும் DRM போன்றவை, அரசியல் ஆதிக்கப் போக்குகள் மறைந்து விடுகின்றன. எந்த நாடும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

  • உலகளாவிய சமூகமாக மாறுகிறது. எந்த குழுவும் இன்னொரு குழுவின் மீதும் மேலாதிக்கம் செலுத்தும் நிலைமை இருக்க முடியாது. மென்பொருள் ஆதிக்கத்தின் மூலமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

  • எப்படிப்பட்ட கலை இலக்கியம் இருக்க வேண்டும் என்று முதலாளித்துவ சக்திகள் தீர்மானித்தன. சந்தைப் பொருளாதாரத்தின் மூலமாக ஏற்பட்ட தொழில் நுட்ப மாற்றங்களின் வழியாக, யதார்த்தவியல் தொடர்ந்து இரண்டாவது உலகப் போரின் இறுதி வரை மோனோபொலி முதலாளித்துவத்தின் இரண்டாவது நிலை, நவீனத்துவம் நிலை நாட்டியிருந்தது.

  • இன்றைய கால கட்டம் முதலாளித்துவத்தின், பன்னாட்டு, நுகர்வோர் பொருளாதாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உற்பத்தியை விட நுகர்வு முதன்மை பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலமாக எந்த உற்பத்திச் சிக்கலையும் தீர்த்து வைக்கலாம். அணுக்கரு, மின்னணு தொழில்நுட்பங்கள், சமூக, அரசியல், அறிவியல் மாறுதல்களின் திரட்சியாக வருகின்றன.

  • நவீனத்துவம் (modernism) ஒழுங்கை எதிர்பார்க்கிறது. பகுத்தறிவுக்கு முதலிடம் கிடைத்தது. எந்த அளவு ஒழுங்கு இருக்கிறதோ அந்த அளவு சமுதாயம் சீராக இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒழுங்கு, ஒழுங்கீனம் என்ற நிலைமை பராமரிக்கப்பட்டது. ஒழுங்கு அடையாளம் காண ஒழுங்கீனமும் அங்கங்கு இருந்தே ஆக வேண்டும் என்று நிச்சயப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

  • வெள்ளையர் அல்லாதோர், ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள். மூட நம்பிக்கை என்று அடையாளங்கள் ஒட்டப்பட்டு ஒதுக்கப் பட்டனர். ஒழுங்கீனத்தை ஒதுக்கி வைக்க அழித்து விட முயற்சிகள் எடுக்கப்பட்டன. முத்திரை குத்துவதன் மூலம் சமுதாயத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதாக முயற்சித்தார்கள்.

  • காரல் மார்க்சின் தஸ் கேபிடல் போன்ற கொள்கைகள் எப்படி தனது நம்பிக்கைகள், விழுமியங்கள் பற்றி செயல்பட வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கிரேன்ட் நரேடிவ்ஸ். 'முதலாளித்துவம் தானாக மறுகிப் போகும், அதன் பிறகு பொற்காலம் மலரும்' என்று சொல்வது மார்க்சிசம்.

  • நடைமுறையில் இருப்பதை மூடாமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு குறு கொள்கை விளக்கங்களைப் பற்றிப் பேசுகிறது பின்நவீனத்துவம். இது பரவலானது இல்லை என்று தெளிவாகக் காட்டுகிறது. தனிநபர் வாதம்தான் பின்நவீனத்துவத்தின் அடிப்படை.

  • கொள்கை கோட்பாடு போன்றவற்றுக்கு அவசியம் இல்லாத ஒன்றாகி விட்டது. 1950க்கு பிறகு பின் நவீனத்துவம் ஆரம்பித்தது. வரலாறு திரும்ப ஓடுவதில்லை, திரும்ப நடக்கிறது.

  • வசதி, அமைதி, செல்வம், பணி, வேலை வாய்ப்புகள் அரசியலைத் தீர்மானிக்கின்றன. இனியும் இந்துத்துவம், பிராமணீயம், சாதீத்துவம், உலக மயமாக்கல் போன்ற கொள்கை அடிப்படைகள் தகர்ந்து விடுகின்றன.

புதன், ஜூலை 04, 2007

விவசாயி - ஒரு சிறு முயற்சி

விவசாய பொருளாதாரம் பற்றிப் பல கருத்துக்கள் கல்வெட்டும், வவ்வாலும் நடத்தும் விவாதத்தில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வெட்டின் பின்னூட்டத்திலிருந்து;

===================================================================
ஒரு சின்ன திட்ட வடிவம்:

(இதில் குறைகள்/பிழைகள்/தவறான தகவல்கள் இருக்கலாம். இங்கே பொதுவில் பேசுவதே அனுபவம் உள்ளவர்களுடம் இருந்து சரியான தகவல்களைப் பெறுவதற்கே. எனது அனுமானங்கள் தவறு என்னும் பட்சத்தில் திருத்தவும்)
  1. தக்காளியின் விலை எல்லா காலத்திலும் சீராக இருப்பதில்லை. 5% ஏற்ற இறக்கங்களை ஒத்துக் கொள்ளலாம்.
  2. ஆனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக மாறுவது என்பதும் அதுவே தீடிரென்று 8 ரூபாயாகக் குறைவதும் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பிரச்சனை.
  3. இப்போது நாம் பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்தாகி விட்டது.
  4. இதற்கான தீர்வுகள் என்ன?
அ. விவசாயத் திட்டமிடல்

ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)

இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.

ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.

** ஒரு நாளைக்கு 3 கிலோ உற்பத்தி மட்டுமே இருக்கும் பட்சத்தில் நம்மால் ஆண்டு முழுவதும் நுகர்வோரின் தேவையை ஒத்துக் கொள்ளப்பட்ட 5% ஏற்ற இறக்கங்களுடன் பூர்த்தி செய்ய இயலும்.
** உற்பத்தியை 3 கிலோக்குள் வைத்து இருக்க முடியவில்லை எப்போதும் 5 கிலோவையே தொடுகிறது என்றால் அதிகமுள்ள 2 கிலோக்கான மாற்றுச் சந்தையை கண்டறிய வேண்டும்.

உ. இந்த 3 கிலோ உற்பத்தியை மாவட்ட அளவின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள தக்காளி பயிர் செய்யத்தக்க விவாசாய நிலங்களில் பிரித்து பயிரிடலாம்.

ஊ. புதியதாக ஒருவர் தக்காளி பயிரிட நினைக்குப் போது அவர் நமது தகவல் நிலையத்தை அணுகுவார்.

தக்காளி அறுவடைக்கு வர 50 நாட்கள் ஆவதாகக் கொண்டால் அவர் அந்த 50 வது நாளில் 3 கிலோவுக்கு குறைவாக "விளைச்சல் Forecast" செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த குறையை சரி செய்ய பயிர் செய்ய வேண்டும்.

எ. "விளைச்சல் Forecast" அவரை தக்காளி பயிரிட அனுமதிக்காத பட்சத்தில் அவர் மற்ற பயிர்களின் (அவரது நிலத்தில் அந்தப் பருவத்தில் விளையக்கூடிய) விளைச்சல் Forecast ஐப் பார்த்து அதைப் பயிரிட வேண்டும்.

ஏ. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ( 4 மாதங்கள் என்று கொள்வோம்) எந்த விவாசாயப் பொருட்களின் "விளைச்சல் Forecast" ம் சரியாக அமையவில்லை என்றால் அவர் விளைவிக்காமைக்கு மானியம் பெறத் தகுதியாகிறார். அத்துடன் அவர் "விளைச்சல் Forecast" ன் படி 4 வது மாத முடிவில் பயிரிடப் போகும் பயிரை உடனே முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஐ. இந்த மானியம் அரசின் உதவியால் மட்டுமே சாத்தியம் என்றாலும்,மானியத் தொகைக்காக இலாபத்தில் ஒரு பங்கை சேமிப்பாக நாம் வைத்துக் கொள்ளலாம்.இதனால் அரசை (மண் குதிரையை) நம்பி இந்த திட்டத்தில்( ஆற்றில்) இறங்கும் சாத்தியம் குறையும்.

* இது கடலை கடுகுக்குள் புகுத்த நினைக்கும் திட்டம் போல் தெரிந்தாலும் சாத்தியமே என்று தோன்றுகிறது.
=========================================================================

மென்பொருள் உருவாக்கத்துக்கான திட்டப் பக்கம் இங்கே

காந்தி - ஒரு கேள்வி

காந்தி, இந்திய விடுதலைக்காக காங்கிரசு பணியில் ஈடுபட்டது ஏன்?

சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்.?

'ஒரே ஒரு சத்தியாக்கிரகி உள்ளத் தூய்மையுடன் உறுதியாக இருக்கும் வரை வெற்றி கிடைத்து விடும்' என்று தென்னாப்பிரிக்காவில் இருந்த நம்பிக்கை எங்கே போனது? காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள வேண்டும்' என்று நம்பிய அவர் ஏன் புது தில்லியில் வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்?

ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே அவரது சத்தியம் நாடெங்கும் பரவி ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தி அனைவருக்கும் உறுதியும், வளமும், முன்னேற்றமும் பெற்றுத் தந்திருக்காதா?

வியாழன், ஜூன் 28, 2007

விவசாயி - என்னதான் தீர்வு (தொடர்ச்சி)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

விவசாயம் செய்யும் நண்பர் ஒருவரின் குமுறல்.

"ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்? (என்ன செய்தது அரசு?)

இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?"

முழுப்பதிவும் இங்கே . இதைப் படித்த பிறகுதான் இந்தப் பதிவை எழுதினேன். அதில் வந்த பின்னூட்டங்களிலிருந்து:

  1. "விவசாயிகளுக்கு ஒரே வழி கூட்டுறவை ஏற்படுத்தி பெரிய நிறுவனமாவதே (அமுல் - பால் உற்பத்தியாளர்கள்). அதன்பின் மொத்தமாக விற்பனை செய்வது அல்லது நேரடி விற்பனை என்பதை அவர்கள் யோசிக்கலாம்." - பத்ரி

  2. "விவசாயத்தில் கூட்டுறவு முயற்சி தேவை. கிராமங்களில் எக்கச்சக்கமான கூட்டுறவு பால் பண்ணைகளைப் பார்த்து இருப்பீர்கள். பாலும் உடனேயே விற்கவேண்டிய பொருள்.இருந்தாலும் அது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது." - கல்வெட்டு

  3. "விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்ய முறையான ஒரு அமைப்போ அல்லது முறைமையோ இல்லாததுதான் இன்றைய விவசாய விளைபொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்." - உண்மைத் தமிழன்.

  4. "நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்." - கொங்கு ராசா

  5. "திடீர் என ஒரே பயிரை அதிக அளவில் அனைவரும் பயிரிட்டு அதிகமாக உற்பத்தி செய்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். அதற்கு மேல் நாடுகளில் உள்ளது போல் பயிர் பதிவு முறை மற்றும் பயிரிடும் பரப்பளவினை முன் கூட்டி தீர்மனிக்கும் முறை வேண்டும்." - வவ்வால்
மென்பொருள் துறையில் உலகுக்கே சேவை செய்யும் நம் நாட்டில் 'ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?' என்று தகவல் திரட்டும் ஒரு பயன்பாடு உருவாக்கி நடைமுறைப் பழக்கத்துக்கு கொண்டு வர முடியாதா?

ஞாயிறு, ஜூன் 24, 2007

விவசாயி - என்னதான் தீர்வு?

விவசாய விளைபொருட்களை யாரோ வியாபாரி திரட்டி, அதை லாரிக் காரரின் கைக்கு ஒப்படைத்து, கோயம்பேடு வந்திறங்கி, மொத்த வியாபாரி வாங்கி கடையில் வைத்திருப்பதை, கீரைக்கார அம்மா/மூலைக்கடை உரிமையாளர் வாங்கி வந்து விற்பதில் பல குறைபாடுகள் இருக்கின்றன,
  1. வெளிப்படையாகத் தெரிவது ஒவ்வொரு கை மாறும் போதும் ஏறும் செலவுகள்.
  2. ஒவ்வொரு கை மாறலிலும் சிதைந்து போகும் ஒரு பகுதி காய் கனிகள்.
  3. ஒவ்வொரு கை மாறலிலும் இழக்கும் தகவல் பரிமாற்றம்.
மூன்றாவதான தகவல் பரிமாற்றத்தின் இழப்புகளால்
  • விவசாயிக்கு, எந்தச் சந்தையில் என்ன பொருள் தேவைப்படுகிறது என்ற விபரம் புரியாமல் போய் விடுகிறது. விளையா விட்டால் பேரிழப்பு, நிறைய விளைந்தாலும் எல்லோருக்கும் விளைச்சல் ஏற்பட விலை சரிந்து கைக்காசு இழப்பு என்று வாழ்க்கையே நிச்சயமற்றதாகப் போய் விடுகிறது.

  • தனது விளைபொருளை வாங்கிச் சாப்பிடப் போகும் மனிதர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் விவசாயிகள் என்ன முறையிலாவது விளைச்சலைப் பெருக்க ஆரம்பிக்கிறார்கள்.

    சாப்பிடுபவர்கள் உடலைப் பாதிக்கும் அளவுக்கு பூச்சிக் கொல்லி பயன்படுத்துதல், மாம்பழங்களைப் பழுக்க வைக்க சுண்ணாம்புக்கல்லை பயன்படுத்துதல் என்று தீங்கு விளைவிக்கும் செயல்கள் வாங்கப் போகும் வியாபாரியின் கண்ணைக் கட்டுவது என்ற நோக்கத்துடன் செய்யப் படுகின்றன.

    இதே தோட்டக்காரர், மாம்பழம் வாங்கப் போவது தெருவின் கடைசி வீட்டில் வசிக்கும் பத்து வயது சிறுமி என்றால் நிச்சயமாக ஆரோக்கியமான முறையில்தான் விளைச்சலை பெருக்க முயற்சிப்பார்.
இந்த வகையில், மேற்சொன்ன நான்கு கை மாறும் முறை மாறி, விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் பெரு நிறுவனம் வாங்கி வர, அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.

இடையில் லாரிக் காரர்களுக்கு, வியாபாரிகளுக்கு, சிறு கடை நடத்துபவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்ற வாதம், 'கணினி மயமானால் வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை இழப்பார்கள்' என்று போராடிய அதே சரியில்லாத வாதம்தான்.

சந்தைப் பொருளாதாரத்தில் பரிணாம வளர்ச்சி என்ற ஆழிப் பேரலையை தடுத்து நிறுத்தி விட முடியாது. எண்பதுகளில் எதிர்த்த கணினி மயமாக்கம் இன்று எல்லா வங்கிகளிலும் நடைமுறையில் வந்திருக்கிறது. (அந்த ப் போராட்டங்களினால் கால தாமதமானது ஒரு தீங்காக இருந்தாலும், நிர்வாகம் வேலை செய்பவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வைத்தது, அதன் நன்மை).

விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.
  • நுகர்வோருக்கு சரியான விலையில் தீங்கற்ற கலப்பற்ற பொருட்கள் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
  • விவசாயிகளுக்கு வாடிக்கையாளர்களுடன் அண்மை ஏற்பட்டு விவசாயம் செய்வதில் உறுதியான நிலை உருவாகும்.
(தொடரும்)

பதிவர் சந்திப்பு - இது பழசு

ஏப்ரல் மாத ஒரு ஞாயிற்றுக் கிழமை

மாலை நண்பர்கள் இருவர் அலுவலகத்துக்கு வந்திருந்து ஏழரை மணிக்குக் கிளம்பிய பிறகு செல்லாவைக் கூப்பிட்டேன். தாமதமாகி விட்டதுதான். மாலையிலிருந்தே எதிர்பார்த்திருந்திருப்பார். ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை நான். அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து கை கால் எல்லாம் கழுவி, உடை மாற்றி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவர் அழைப்பு. அவரது நண்பர் வந்து விட்டாராம், அப்படியே பாண்டிபஜார் நாயுடுஹால் எதிரில் இருக்கும் கேரளா ஜுவெல்லர்ஸ் பின்னால் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சு அருகில் வரச் சொன்னார்.

தூக்க உணர்வு வந்து விட்டிருந்ததைக் களைந்து விட்டு, பேன்டு சட்டை போட்டு வண்டியில் கிளம்பினேன். நெசப்பாக்கம், கே கேநகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக திநகர் சுரங்க வழியை அடையும் போது இரண்டே இரண்டு சாலை நிறுத்தங்களைத்தான் சந்தித்திருந்தேன். நகருக்குள் வருவதற்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. வாகன நெரிசல் குறைவான ஊருள்ளான வழி.

பாண்டிபஜார் சாலையில் திரும்பி ஒரு இடத்தில் குத்து மதிப்பாக நிறுத்திப் பேசினேன். சரியாக அதே இடத்தில் நாயுடு ஹால், இடது பக்கம் கேரளா ஜுவெல்லர்ஸ், அந்த கட்டிடத்துக்குப் பின்னால் ஸ்ரீகிருஷ்ணா இனிப்புக் கடை உள்ளது என்று அவர் நண்பர் வழி சொல்ல வண்டியை நிறுத்தி விட்டு நடந்து போனேன்.

அந்தக் கடையின் எதிரில் வெற்றாகக் கிடக்கும் ஒரு மனை. நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். வீடு இல்லாமல் அங்கேயே தூங்கக் கூடியவர்கள் என்று பட்டது. கடைக்கு வெளியே பூக்கட்டி விற்கும் ஒரு அம்மா, அவரிடம் வம்பளந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மாவிடம் வம்பு செய்ய வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரை கல்லை எடுத்துக் கொண்டு துரத்தும் இந்த அம்மா என்று சுவாரசியங்களுக்குக் குறைவில்லை.

பை நிறைய மாதிரிகளுடன், உடலில் உருட்டி வலியை, சலிப்பைக் குறைக்கும் கருவி ஒன்றை விற்கும் இரண்டு பேர். கிருஷ்ணா இனிப்பகம் உள்ளே போகிறவர்களையும், வெளியே வருபவர்களையும் நிறுத்தி விற்க முயன்று கொண்டிருந்தார்கள். காதில் செல்பேசியை ஒட்டிக் கொண்டே, அல்லது செல் பேசியை ஒரு அடித் தள்ளிப் பிடித்துக் கொண்டே பெண்களும், ஆண்களும்.

கடையின் முன், தமிழ்ப் புலவர்கள் குறித்து நிகழ்ச்சி விபரங்கள், தமிழிசை இசை நிகழ்ச்சி விபரங்கள் என்று வைத்திருந்தார்கள். 'வாயில் கரையும் ஒரே மைசூர் பாகு' என்று ஒரு தட்டி.

அந்த இடத்தில் ஏதோ சுவர்க்கம் போல விளக்குகளுடன் மின்னும் கடை. வெளியிலேயே காத்திருந்தேன்.

இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து விடுவோம் என்று சொல்லியிருந்தவர்கள், பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள்.

ரிலையன்ஸ் வெப் வோர்ல்டில் இருந்தார்களாம். நண்பரின் வீடு அருகில்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்து, முன்னறையில் குளிரூட்டியைப் போட்டார். ஒரு முன்னறை, அடைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளறை, கீழிறங்கிப் போகும்படி சமையலறை. கைக்கடக்கமான வீடு. அறை குளிரூட்டும் கருவியைத் தவிர ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி இடத்தைப் பிடித்திருந்தன.

அவரது தகவல் செறிந்த புத்திசாலித்தனமாக வாதங்களைக் கேட்க ஆரம்பித்தோம். தமிழ் நாடு அரசியல், கருணாநிதி, ஜெயலலிதா, அதிமுக/திமுக, கேரளா, துபாயில் அவர் வேலை பார்த்தது, அவர் உதவியவர்கள் பற்றிய கதைகள், இப்போதைய அவரது பணி என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்.

பேசிப் பேசி களைத்ததாலோ என்னவோ, எனக்குக் குடிக்கத் தோன்றுகிறது என்று குப்பிகளையும், காய்கனிகளையும் வெளியே எடுத்து வைத்தார். எனக்கும் கடுமையான பசி.

பழங்கள் வெளியே வர ஒரு ஆப்பிளைக் கைப்பற்றிக் கொண்டேன். ரம்மில் 7 அப் ஊற்றுக் கொண்டார்கள். செல்லா காய்களை சிறிது சிறிதாக வெட்ட ஆரம்பித்தார். அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்த முஸ்லீம் பெரியவர் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் செய்த பிரியாணியில் மயங்கி 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்தார்களாம்.

அவரது நண்பர் ஒரு ஆங்கிலோ இந்தியரைக் குறித்துச் சொன்னார். சிறிது நேரத்தில் அவருக்குத் தொலைபேசியும் செய்தார். பத்து மணிக்குக் கிளம்பலாம் என்பது நீண்டு பத்தரைக்குப் புறப்பட்டேன். வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனியாக நின்றது. ஓனிக்ஸ் நிறுவன ஊழியர் சாலையோரத்தை தூய்மை செய்து கொண்டிருந்தார்.

இப்போது பனகல் பூங்கா வழியாக, போத்தீஸ் எதிரில் இருகக்கும் சாலையில் திரும்பி, சுரங்கப் பாதையில் நுழைந்து மேற்கு மாம்பலம் பிடித்து, அசோக் நகர், அசோகா தூண் வழியாக கேகே நகர் அடைந்தேன். இந்த நேரத்தில் சாலை நிறுத்தங்களில் நிற்பது யாருக்குமே தேவை என்று படுவதில்லை.

மனவளமும் பணவளமும்

நமது வாழ்வில் மூன்று அடுக்குகள் இருப்பதாகச் சொல்லலாம். ஒன்று பொருளாதாரம், இரண்டு அறிவு, மூன்றாவது மனம்/மனிதம்.
  • இருபது வயதில் 10,000 சம்பளம், 30 வயதில் 30,000 வாங்க வேண்டும், நாற்பதில் கோடீஸ்வரனாகி விட வேண்டும், ஐம்பதில் இன்னும் சொத்து சேர்த்திருக்க வேண்டும், அறுபது வயதில் ஓய்வு பெற்று வாழ பணம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறோம்.

  • பன்னிரண்டு வகுப்பு வரை பள்ளி, அப்புறம் பொறியியல் பட்டம், வேலை பார்க்கும் போது கூட தொலைதூரக் கல்வி, வாரத்துக்கு ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பெரும்பாலானோர் தொடர்ந்து முயல்கிறோம்.

  • நமது மனதை/மனிதத்தை வளர்க்க முயற்சியாக எடுப்பதில்லை. பணம் ஈட்டும் போது, அறிவை ஈட்டும் போது மனம் என்னக் கற்றுக் கொள்கிறதோ எப்படி முதிர்ச்சி அடைகிறதோ அதே போக்கில் விட்டு விடுகிறோம். அந்த முயற்சிகளில் எதிர் வினையாக மனச் சோர்வு, உடல் நிலை பாதிப்பு வரும் போது தியானம், மனவளக்கலை பயிற்சிகள் என்று நிவாரணம் தேடுகிறோம்.
வரும் முன் காப்போம் என்று அல்லது இன்னும் ஒரு படி மேல் திட்டமிட்டு ஒவ்வொரு வயதிலும் 'எனது மனவளம் இந்த அளவில் இருக்க வேண்டும்' என்று வகுத்துச் செயல்படுவது நன்மை தரும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் பார்க்கப் போனால் பணம் ஈட்டவும், அறிவைப் பெருக்கவும் அடித்தளமாக அமைவது மனவளம்தான். சின்ன வயதில் பெற்றோர் தந்த அடித்தளமும், பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக் கொண்ட (மறைமுகமாக) முறைகளும் மனதை வளமாக வைத்திருக்க உதவுகின்றன. அதன் மேல்தான் அறிவு வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அமைய முடியும். ஆனால் இந்த மனவளத்துக்கு நாம் முனைப்பாக பெரிதாக செய்து விடுவதில்லை.

'முக்கியமான தேர்வு இன்று. தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் படித்தால் போதும் என்று இருக்கக் கூடாது, ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்' என்பது எல்லோருக்கும் அறிவளவில் தெரியும். ஆனால் எத்தனை பேர் அதை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம்.

அதே போல இன்றைக்கு இரண்டு மணிக்கு ஒரு முக்கியமான தொழில் முறை சந்திப்பு. அதற்கு திட்டமிட ஓரிரு நாட்கள், குளித்து உடை உடுத்துத் தயாராக ஓரிருமணி நேரம் என்று செலவளிக்கிறோம். சந்திப்பு எப்படிப் போகும் என்று முழுமையாகத் திட்டமிட்டிருக்க முடியாது. சந்திப்பின் போக்கைப் பொறுத்து சரியான முடிவுகள், சரியான பதில்களை உருவாக்க உதவுவது எது?

மகாபாரதத்தில் ஒரு கதை.
பரசுராமருக்கு அரசகுலத்தவரைக் கண்டால் ஆகாது. பிராமணர்களுக்கு மட்டும்தான் தனது வித்தையைக் கற்றுக் கொடுப்பார். அர்ச்சுனனுடன் போட்டிப் போட வேண்டிய கர்ணன் அவரிடம் தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி மாணவனாகச் சேர்கிறான். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்கிறான். ஒரு நாள், ஆசிரியர் மாணவனின் தொடையில் தலை வைத்துத் தூங்குகிறார்.

வண்டு ஒன்று வந்து தொடையில் அமர்கிறது. ஆசிரியருக்கு தொந்தரவு வரக்கூடாதே என்று அசையாமல் உட்கார்ந்திருக்கிறான் கர்ணன். வண்டு தொடையைத் துளைத்து ரத்தம் பெருக்கெடுத்து குருவை எழுப்பி விடுகிறது.

'ஒரு பிராமணனால் இவ்வளவு வலி தாங்க முடியாது, நீ அரச குலத்தைச் சேர்ந்தவன்' என்று உண்மையைக் கேட்கிறார். அவன் தனது பொய்யை ஒப்புக் கொண்டு விட, 'தேவையான நேரத்தில் என்னிடம் கற்று ஆயுத வித்தைகள் மறந்து போகும்' என்று சாபம் கொடுத்து விடுகிறார்.

அர்ச்சுனனுடன் இறுதிப் போர் புரியும் போது, உண்மையிலேயே மறந்து விடுகிறது. அறிவு இருக்கிறது, மனம் ஒத்துழைக்க மறுத்து விடுகிறது.

கணினியிலும் இதே கதைதான்
கணினியில் எல்லா நிரல்களும் மென்பொருள்களும் வன்தகட்டில் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் கணினியின் இயக்கி (processor) விபரங்களை எடுத்து வெளியே கொடுக்கா விட்டால் என்ன பலன்?

கணினியின் வன்பொருள் நமது சொத்துக்கள் என்றால், அதில் அடங்கியிருக்கும் மென்பொருட்கள் நமது அறிவுச் செல்வம், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செயலில் கொண்டு வருவது நமது மனவளம்.

மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள மனதுக்குச் சரியான தீனி போட வேண்டும். சின்னச் சின்ன சாதனைகளில் மனதை நிறைத்துக் கொள்ளாமல் செயற்கரிய செய்ய முயல வேண்டும்.

காந்தி - சில கேள்விகள்

காந்தியின் கொள்கைகளை, சமூகக் கருத்துகளை, மத நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரை புறக்கணிக்க முடியவில்லை.
  1. மேற்கத்திய கல்வி கற்று சோவியத் புரட்சியால் கவரப்பட்டிருந்த நேருவுக்கு காந்தியின் பல கருத்துக்கள் முட்டாள்தனமாகப் பட்டாலும் அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார்.

    ஏன்?

  2. 'இவர் வருணாசிரம தருமத்தைத் தாங்கிப் பிடிக்கத்தான் முயல்கிறார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் அநியாயம் செய்கிறார்' என்று தனித்தலைமை உருவாக்கிய அம்பேத்கார் காந்தியின் மீது பெரு மதிப்பும், அவரது உடல் நலனில் அக்கறையும் வைத்திருந்தார்.

    'கிழவன் செத்தால் சாகிறான்' என்று விட்டு விட்டுப் போக முடியவில்லை.

    ஏன்?

  3. 'இந்திய இளைஞர்களின் துடிப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருக்கிறார்' என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி விரும்பவில்லை என்றதும் காங்கிரஸ் தலைமைப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். காந்தியின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

    இளைஞர்களின் பெருவாரியான ஆதரவு இருந்தாலும் நேதாஜியின் முடிவு காந்திக்கு வழி விடுவதாகவே இருக்கிறது.

    ஏன்?

  4. 'முதலில் கோயிலுக்குள் வரணும் என்பாங்கள், அப்புறம் நம்ம வீட்டுக்கே வந்து விடுவார்கள்' என்று இறுக்கத்துடன் இருந்த வர்ணாசிரமவாதிகள் காந்தியின் உயிருக்குப் பயந்து கத்தியின்றி ரத்தமின்றி இந்துக்கள் அனைவருக்கும் கோயில்களைத் திறந்து விடச் சம்மதிக்கிறார்கள்.

    ஏன்?

  5. 'இந்தியாவில் முஸ்லீம்கள் மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ முடியாது' என்ற பாகிஸ்தான் உருவாக்கத்துக்குப் பிறகும் பல கோடி முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணில் இருந்து விடத் தீர்மானித்து மதச் சார்பற்ற இந்தியக் குடியரசை உருவாக்குவதில் பங்கேற்கின்றனர்.

    ஏன்?

சனி, ஜூன் 23, 2007

காந்தி - சில புரிதல்கள்

காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் இணையத்தில் பிடிஃஎப் வடிவில் கிடைக்கின்றன. அவரது வாழ்வின் கடைசி மாதங்களில் நடந்து உரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என்று முதலில் இறக்கி வைத்திருக்கிறேன்.

அவரது சத்தியத் தெளிவயும், நடைமுறைக் கொள்கைகளும், வாய்மை, நேர்மை, மனித குல நன்மை, சேவை உணர்வு என்று இணைத்துப் பார்த்தால் மிக இயல்பாக தெரிகின்றன. புரியாமல் சேற்றை வாரி இறைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

'பிரிவினை என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று எப்போது சொன்னார்' என்று தெரியவில்லை. தில்லியில் அதிகாரம் குவிந்த இந்தியா என்ற நாடு அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு சிறு பகுதியும் தமது பொது வேலைகளைக் கவனித்துக் கொண்டால் பிரிவினை என்று முஸ்லீம் லீக் கேட்பதற்கு தேவையே இல்லாமல் போயிருக்கும்.

நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இங்கிலாந்தைப் போல, சோவியத் யூனியனைப் போல, அமெரிக்காவைப் போல நவீன தேசிய அரசை உருவாக்கி தாம் அதை ஆள வேண்டும் என்று ஆசை. காந்தியின் கனவு சற்றே காலத்துக்கு முற்பட்டது. திறந்த மனதுடன் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முன்வந்திருந்தால் கிழக்கு மேற்குக்கு இன்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

காந்தியின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரது ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இந்துத்துவாவாதியான அரவிந்தன் கூட காந்தீயப் பொருளாதாரம் என்று தமக்கு சாதகமான ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் அவர் காத தூரம் ஓடி விடுவார், அல்லது இந்துத்துவா இயக்கங்களிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்வார்.

கதர் உடுத்துவது, தொப்பி வைப்பது, நூல் நூற்பது என்று அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து தனது கருத்துக்களை நீர்க்கச் செய்து விட்டார் என்று தோன்றுகிறது. கதர் என்பது அடுத்த மனிதனை/ நமது வாழ்வை சீரளிக்காமல் உருவாக்கும் பொருளைப் பாவிக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். கதரை மட்டும் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையான கொள்கையை விட்டு விட்டார்கள்.

இதே போலத்தான் இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டும் என்பது. இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாக இருப்பது அவமானம். இந்திய மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் அந்த நிலை வரும் முன்னால் எல்லா இந்திய மொழிகளுக்கும் மதிப்பும், சம மரியாதையும் கொடுக்கும் பண்பு மக்களிடையே வளர்ந்திருக்க வேண்டும்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்ததால் தென்னிந்திய அல்லது வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுத் தீவிரம் புரியாமல் போயிருக்கலாம். அதை உள்வாங்கிய நேருதான் சரிவர செயல்படுத்தினார். அந்த வகையில் நேரு காந்தியின் முதன்மையான சீடர் என்பதில் ஐயமில்லை. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதைத் தனது கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடிந்த தலைவர் அவர்.

படேலுடனான கடிதப் போக்குவரத்து, படேல் குறித்த கருத்துக்களும் தொகுக்கப்பட்ட காந்தியின் படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. படேல், சுபாஷ் சந்திர போஸ், போன்றோரிடம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் தனது கொள்கைகளைப் பிசகாமல் கடைப்பிடிப்பவர் நேரு மட்டும்தான் என்று கண்டு கொண்டிருக்கிறார்.

தனது குருவை வெளிப்படையாக விமரிசிக்கவும் நேரு தயங்கியதில்லை. தனக்கு சரி எனப் பட்டதை ஆதரித்து காந்தியுடன் சண்டை போடுவதும் பல முறை நடந்திருக்கிறது. மற்றவர்கள் போல காந்தியின் மக்கள் செல்வாக்குக்குப் பணிந்து நடக்காமல், எது சரியென்று பட்டதோ அதை மட்டும் ஏற்று நடந்த நேருவின் மீது காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஞாயிறு, ஜூன் 17, 2007

தோல் துறை பட்டதாரிகள் சந்திப்பு

அண்ணா பல்கலை, அழகப்பா கல்லூரி தாண்டி சாலை நிறுத்தத்தில் நிற்கும் போது தோல் கழகம் நோக்கி மாணவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இங்கும் வெளி வாசலில் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வந்து விட்டிருந்தேன். அரங்கினுள் நுழையும் போது அதிகக் கூட்டம் இல்லை. மேடையில் அருகில் பார்த்துக் கையை ஆட்டினால், பதிலுக்கு புன்னகைத்தார். நேராகப் போய் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.

சிறப்புரை ஆற்ற வந்திருந்த முனைவர் பீமா விஜயேந்திரன், அவரது வருகையை வழிநடத்தும் திரு ராம்குமார் என்பவர் வந்து அறிமுகம் செய்து கொண்டனர். நம்ம ஊரில் நாலணா தொழில் செய்பவர்கள் கூட பேச்சைக் கேட்க வருபவர்களிடம் பழகி விடுவதை தவிர்த்து விடுவார்கள்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முனைவர் விஜயேந்திரன் பின்வரிசையில் இருந்த மாணவர்களையும் கைகுலுக்கி அளவளாவினார். அமெரிக்க நாகரீகத்தின் இந்த இயல்பு மிகப் பாராட்டுக்குரியது. யாரும் வானத்தில் இருந்து இறங்கியதாக நினைப்பதில்லை அவர்கள். எல்லோரையும் மதித்துப் பழகும் போக்கு இயல்பாகவே வருகிறது.

சிறிது சிறிதாக அரங்கம் நிரம்பி முனைவர் டி ராமசாமி வரும் போது பத்து நிமிட தாமதம். அவர் இப்போது மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் செயலராகவும், மத்திய ஆராய்ச்சி நிலையங்களின் தலைவராகவும் தில்லியில் பணியாற்றி வருகிறார். நமது தோல் துறை மாணவர்களின் கூட்டமைப்பை வளர்த்து ஆளாக்கிய பெருமை அவருக்கே. இப்போதும் அதை சரியாக வழிநடத்திப் போக வேண்டும் என்று ஆர்வத்தோடு தனது வேலைகளுக்கிடையில் இது போன்ற கூட்டங்களுக்கு வந்து கலந்து கொள்கிறார்.

முதலில் முனைவர் விஜயேந்திரனுக்கு பாராட்டு, அவரது சிறப்புரை, இந்த ஆண்டு ஆல்பா சிறப்புரை விருது வழங்கல், அதன் பிறகு ஆல்பா ஆண்டு பொதுக் கூட்டம், கடைசியில் சாப்பாடு.

ஜகன்னாதன் வரவேற்புரை, அதன் பிறகு முனைவர் ராமசாமியின் வழக்கமான நடையில் பேச்சாளரை அறிமுகம் செய்தல். முனைவர் விஜயேந்திரன் படிப்பில் தலைசிறந்தவராக இருந்ததாகவும் முதுகலைப்பட்டம் தோல் நுட்பத்தில் பெற்ற பிறகு விர்ஜினியா பல்கலையில் ஆராய்ச்சியில் இறங்கி, பாலிமர் துறையில் பெயர் பெற்றவர். இப்போது தாவரங்களிலிருந்து பெட்ரோல் பொருட்களுக்கு மாற்று உருவாக்குதல், வேதி வினை மூலம் ஆற்றலை உருவாக்குதல், நேனோ தொழில்நுட்பம் எனப்படும் மீச்சிறு பொருட்களைப் பற்றி ஆராய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்லாராம். ஓஹையோ பல்கலையில் பணி புரிகிறார்.

முனைவர் விஜயேந்திரன் பேச ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தின் தன் அம்மாவைக் குறிப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் குரல் உடைந்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு அதே நடுங்கும் குரலில் தொடர்ந்தார். தாம் படித்த கல்லூரியில் சிறப்பு செய்யப் பட்டு உரை ஆற்ற வரும் போது தனது படிப்புக்காக பெற்றோர் செய்து தியாகங்களை நினைத்திருப்பார்.

ஆண்டு பொதுக்குழு நடவடிக்கைகள், தீர்மானங்கள் முடிந்து சாப்பாட்டுக்குக் கிளம்பினோம். கீரை சூப் ஒன்று., வறுத்த சோற்றை எடுக்காமல் வெள்ளை சோறு, ரசம், கடலை, உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டேன், தயிர் சாதம், பூரி, பொரித்த வெண்டைக்காய்,, கோழிக்கறி தேவையில்லை. என் உடம்பையும் முகத்தையும் குறித்து மூன்று பேரும் கேட்டு விட்டனர்.

'உடல் ஒல்லியாக இருப்பது நல்லதுதான், ஏன் முகம் வாடிக் கிடக்கிறது. வயிற்றையே காணவில்லை. நன்றாக சாப்பிடு' என்று அறிவுரைகள். 'மாலையில் சாப்பிடாத பசி வாட்டம்' என்று சொன்னேன். 'உங்களுக்குப் பொறாமை' என்று கிண்டலடித்துத் தப்பித்தேன்.

புதிய ஆல்ஃபா தலைவர் ஐஸ்கிரீமுக்கு இழுத்துப் போய் விட்டார். அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர். நேற்றிலிருந்து ஆல்பா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்குத் தொலைபேசி கொஞ்சம் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஒரு இணைய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.

இறுதியாண்டு மாணவர்கள் நான்கு பேர், சிஎல்ஆர்ஐ ல் நான்கு கணினிகள், இணைய இணைப்பு கொடுத்தால் மூன்று மாதங்களில் எல்லா ஆல்பா உறுப்பினர்களின் தகவல்களையும் தொகுத்து உலகின் எந்த மூலையிலிருந்தும் தொடர்பு வளர்க்கும்படி செய்து விடலாம்.