திங்கள், மார்ச் 25, 2019

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

ஞாயிறு, மார்ச் 24, 2019

லிடியன் நாதஸ்வரம் - உலக இசை அரங்கில் ஒரு தமிழ்ப் புயல்

லிடியன் நாதஸ்வரம் என்ற பையன் அமெரிக்காவில் நடக்கும் World’s Best என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று $10 லட்சம் (சுமார் ரூ 7 கோடி) வென்றிருக்கிறான்.


12 வயது லிடியன் பியானோ மேதையாக இருக்கிறான். ஒரே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளை வாசிப்பது, அதி வேக கதியில் வாசிப்பது என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாய் பிளக்க வைக்கிறான்.

ஹேரி பாட்டர் பின்னணி இசை, அதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபிள் இசை, பின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் - ஒரு கையால் அதையும், ஒரு கையால் இதையும் வாசிக்கிறான். “Oh my God, you ought to be kidding me” என்று கத்துகிறார் ஒருங்கிணைப்பாளர். அடுத்து ஜூராசிக் பார்க் இசை, தனது கை விரல்கள் தோற்றுவிக்கும் மாயத்தைக் கேட்டு அவனது முகத்தில் குழந்தைத்தனமான குதூகலம், சூப்பர் மேன் அடுத்து.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னாலும் பியானோ வாசிக்க முடியும் என்று ஒரு எளிய வாசிப்பை செய்து காட்டி விட்டு, "impressed?" என்று கேட்க, "ஆம்" என்று அப்பாவி தமிழ் முகத்துடன் பதில் சொல்கிறான், லிடியன்.

மொசார்ட்டின் டர்க்கிஷ் மார்ச் என்ற மெட்டை கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கிறான். ”பியானோவுடன் நிலாவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா வாசிக்க விரும்புவதாகச்" சொல்கிறான்.


flight of the bumble bee என்று ஒரு தேனீ பறக்கும் ஓசையை இசையாக வடிக்கிறான். 108 beats per minute – metronym அமைத்துக் கொண்டு அதை வாசிக்கிறான், நடுவர்களும் பார்வையாளர்களும் உண்மையிலேயே வாயைப் பிளக்கின்றனர். அதன் பிறகு 325 beats per minute

அவனது அப்பாவும் பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். லிடியன் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் பயிற்சி பள்ளியில் பயின்றிருக்கிறான்.


விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போலவே பக்காவான செட், ஒருங்கிணைப்பவர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று நிறைந்த அரங்கத்துக்கு வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டுகின்றன. இறுதிக் கட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் லிடியனும் உடல் வித்தைகள் செய்யும் குழுவான குக்கிவானும் இருக்கின்றனர். கடைசியில் லிடியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெறுகிறான்.

லிடியன் முகத்தில் ஒரு புன்னகை கீற்றைத் தவிர பெரிதாக கொண்டாட்டமோ, குதித்தலோ, முட்டி மடக்குதலோ இல்லை. ஆழமான பையனாக இருக்கிறான். அவனது அப்பாவும் அமைதியானவராக இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சேர்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், குக்கிவான் குழு ஆரவாரம் செய்து கொள்கின்றனர்.

யூடியூபில் லிடியன் முதலிடம் பெறும் வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு செய்தி, scroll.in செய்தி, விகடன் சினிமாவில் ஒரு வீடியோ, ஏ.ஆர் ரஹ்மான் லிடியனை பாராட்டி பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை ஊடகங்களில் எதையும் காணவில்லை. தமிழ்நாடு, இந்தியாவில்தான் இருக்கிறதா?

லிடியனுக்கு நமது கைத்தட்டல்களையும், பாராட்டுதல்களையும் பரிசாக்குவோம்!

வியாழன், மார்ச் 21, 2019

இந்துத்துவர்களை புலம்ப வைத்த 3 விளம்பரங்கள்

மீபத்தில் புரூக் பாண்ட் ரெட் லேபல் டீக்கான கும்பமேளா விளம்பரமும், சர்ப் எக்செல் டிட்டெர்ஜென்ட் பொடிக்கான விளம்பரமும் இந்துத்துவா படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின.

சர்ப் எக்செல் விளம்பரத்தில் ஒரு சிறுமி ஹோலி சாயக் கறைகள் பட்டு விடாமல் இசுலாமிய சிறுவனை தொழுகைக்கு மசூதி அழைத்துச் செல்கிறாள். இருவரும் 10-12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இது லவ் ஜிகாத் விளம்பரம் என்று பக்தர்கள் குரல் எழுப்பினார்கள். சர்ப் எக்செல்-ஐ புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தனர்.



புரூக்பாண்ட் ரெட் லேபல் டீ விளம்பரத்தில் தன் வயதான அப்பாவை கும்பமேளா கூட்டத்தில் தொலைத்து விட்டுப் போக முயற்சிக்கும் மகன் மனம் திருந்துவதைப் பற்றியது. இறுதிக் காட்சியில் அப்பாவும் மகனும் மண்சட்டியில் ரெட்பேல் டீ குடிக்கின்றனர்.


கும்பமேளாவில் பல வயதானவர்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்படுகின்றனர் என்று ஒரு செய்தியையும் அது சொல்கிறது. அன்றாட நுகர்பொருள் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் போட்டி நிறுவன முதலாளியான பாபா ராம்தேவ் தனது போட்டியாளரை கண்டித்திருக்கிறார். இந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக அந்த வெளிநாட்டு பிராண்டை புறக்கணிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலாக அவரது பிராண்டை வாங்க வேண்டுமாம்.

இந்த இரண்டு பிராண்டுகளும் ஹிந்துஸ்தான் யூனி லீவருக்கு சொந்தமானவை.

யூனிலீவரின் பிராண்டுகளை புறக்கணிக்கும்படி சொல்லும் ஒவ்வொரு மெசேஜுக்கும் பதிலாக பலர் அந்தச் சலவை பொடியை கூடுதல் கிலோக்கள் வாங்கப் போவதாக தெரிவித்திருக்கின்றர். சர்ப் எக்செல் விளம்பரத்தை யூடியூபில் 1 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். மொத்தம் 1.28  லட்சம் லைக்குகள், 22,000 டிஸ்லைக்குகள். 5,161 கமென்டுகள்.

"அன்றாட நுகர்வு பொருட்களைப் பொறுத்தவரையில் நுகர்வோர் பிராண்ட் நிறுவனத்தின் மீது சொல்லப்படும் சித்தாந்த ரீதியான குற்றச்சாட்டுக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அதனால் என்ன வகையான பிரபலமும் சாதகமானதுதான்" என்கிறார்கள் சந்தைப்படுத்தல்  நிபுணர்கள். சென்ற ஆண்டு நைக் பொருட்களை புறக்கணிப்பதாக நடந்த இயக்கத்தைத் தொடர்ந்து அதன் விற்பனை அதிகரித்திருக்கிறது. #metoo விளம்பரத்தைத் தொடர்ந்து ஜில்லெட் பிளேட்டுக்கு எதிரான பிரச்சாரமும் விற்பனையை பாதிக்கவில்லை என்று பி&ஜி சொல்லியிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போன்றது இந்த பிக் பஜார் விளம்பரம். மே 2017-ல் வெளியிடப்பட்ட இதுவும் 1 கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.


இஸ்லாமிய பெண் மருத்துவர், ரம்சான் நோன்பு திறத்தல், சீக்கிய அம்மாவின் அன்பும் நேசமும், பெண் மருத்துவரின் முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த புன்னகை - பார்க்கப் பார்க்க திகட்டாத விளம்பரம்.

மதவெறியும், வெறுப்பும், பிரிவினை பிரச்சாரமும் சாதாரண உழைத்துப் பிழைக்கும் மக்களுக்கு அன்னியமானவை என்பதுதான் விஷயம்.

செய்தி ஆதாரம் : Can #Boycott be good for business and brands?

வியாழன், மார்ச் 14, 2019

சைக்கோ ராட்சசர்கள் - பொள்ளாச்சியில் மட்டும்தானா?

ராட்சசன் படம் வந்தது 2018-ல். பொள்ளாச்சி சைக்கோ ராட்சசர்கள் 2012 முதலாகவே தமது வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராட்சசன் திரைப்படத்திலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி சைக்கோக்கள் பண்ணை வீடு, பங்களா வீடு, கார் என்று குற்றம் நடத்த வசதியான இடத்தை சொத்தாக வைத்திருக்கின்றனர்.

பணத் திமிரும், அதிகார போதையும், ஆணாதிக்க வக்கிரமும் ஒன்று கலந்த சைக்கோக்கள் பொள்ளாச்சி கிரிமினல்கள். இவர்களால் 7 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடூரத்தைக் கண்டு 2019-ல் நாம் பதைக்கிறோம். அந்தப் பெண்கள் வதைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக அது நமது கவனத்துக்குக் கூட வரவில்லை, அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூட இல்லை. ஏன்? நக்கீரன் கோபால் சொல்வது போல கடைசியாக புகார் கொடுத்த பெண் தைரியமாக அதைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் பல பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள்.

புகார் கொடுத்தால்தான் விசாரிப்போம் என்கிறது போலீஸ். அதாவது, யாரும் புகார் கொடுத்திருக்கா விட்டால் போலீஸ் அதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இதில் பொள்ளாச்சிக்கு ஏதாவது தனிச்சிறப்பு இருக்கிறதா என்ன? மற்ற ஊர்களில் அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும், அவரது திமிரெடுத்து அலையும் மகன்களும் இல்லையா? பணக்கார தறுதலைகளுக்கு பண்ணை வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையா? அங்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம்?

"பெண்கள் பாவம் மயங்கி விட்டார்கள், காரைக் கண்டு ஏமாந்து விட்டார்கள், செல்ஃபோன் சனியனை பயன்படுத்தி சீரழிந்து போய் விட்டார்கள்" என்று நக்கீரன் கோபால் உட்பட பலர் புலம்புகிறார்கள். "செல்ஃபோன் வந்த போதே நான் சொன்னேன், இது கையிலேயே இருக்கும் சனியன்" என்று என்கிறார் நக்கீரன் கோபால்.

ராட்சசன் திரைப்படத்தில் செல்ஃபோன், பண்ணை வீடு எல்லாம் காட்டி அந்தக் குழந்தைகளை மயக்கவில்லை, சைக்கோ கொலைகாரன். பள்ளி நிகழ்ச்சிகளில் மேஜிக் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குழந்தைகளை கவர்கிறான். சோப்புக் குமிழ் விட்டே சிறு குழந்தையை மயக்குகிறான். மேஜிக் ஷோக்களும், பெண்கள் பள்ளிக்கு போவதும், சோப்புக் குமிழ் விடுவதும் சனியன்கள் என்று நக்கீரன் கோபால் குமுறினால் எப்படி இருக்கும்?

பிரச்சனை அங்கு இல்லை.

1300 வீடியோக்கள் மொத்தம் இருக்கின்றன என்று நக்கீரன் கோபால் ஒரு புறம் சொல்ல, பாலியல் வீடியோக்களை தேடும் தளத்தில் பொள்ளாச்சி வீடியோ, பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ என்ற தேடுதல்கள் முதலிடம் பிடித்திருப்பதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்.

"என் இணையம், என் ஃபோன், நான் வீடியோ பார்ப்பேன்" என்று வக்கிரத்தை தேடும் உலகத்தில், "என் பண்ணை வீடு, என் கார், என் பணம் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற நினைப்பு ஆதிக்கம் செலுத்தும் உலகத்தில், "நீதாம்மா பத்திரமா இருந்துக்கணும்" என்றும், "ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமாக வளர்க்கணும்" என்றும் பேசிக் கொண்டே இருந்தால் போதுமா?

"உன் ஃபோட்டோவை வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். "அப்படி யாராவது மிரட்டினால் கவலைப் படாதீர்கள்" என்று பெண்களுக்கும், "பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை விட்டு ஆண் குழந்தைகளை ஒழுக்கமாக வளருங்கள்" என்று பெற்றோருக்கும் அறிவுரைகள் சொல்கிறோம்.

ஒருவன் காதலிப்பது போல நடித்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அங்கு காதலனின் அம்மா போல நடிப்பதற்கு ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து வதைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் நக்கீரன் கோபால் சொல்கிறார். வீடியோக்களின் சில பகுதிகளையும் காட்டுகிறார்.

அந்தப் பண்ணை வீட்டில் வேலை செய்தவர்கள், அந்த சைக்கோ கிரிமினலின் அம்மாவாக நடித்த பெண் இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

புகார் வந்த பிறகும் புகார் கொடுத்தவரை அடிக்கும் வகையில் அ.தி.மு.க காலிகளுக்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

“காவி சொந்தங்களே, நமது கூட்டணியை தேர்தலில் பாதிப்பதற்காக இந்தப் பிரச்சனையை கிளப்புகிறார்கள்" என்று பேசும் பா.ஜ.க/பார்ப்பன கும்பலுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

முகிலன் காணாமல் போனது பற்றி கேட்ட போது "தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க முடியாது" என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாரே. அது போல இந்தப் பிரச்சனையில் "ஒவ்வொரு பண்ணை வீட்டு நிகழ்வுகளுக்கும் நான் பொறுப்பு கிடையாது" என்று சொல்லலாம்.

இவர்களுக்கும் அறிவுரை உண்டா? பெற்றோர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மட்டும்தான் அறிவுரையா?

அந்த சைக்கோ கிரிமினல்களில் ஒருவன் "பல பெண்கள் தனக்கு ஆதரவு" என்றும் வீடியோவில் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். நித்தியானந்தா மடத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு ஆதரவு என்று மார் தட்டிக் கொண்டான் அந்த சைக்கோ.

“நமக்கெதுக்கு வம்பு" என்று ஒதுங்கிப் போவது, "என்னை மட்டும் நான் கவனித்துக் கொண்டால் போதும், என் குடும்பத்துக்கு எது நல்லது என்று மட்டும் பார்த்தால் போதும்" என்றும் தினம் தினம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே அதற்கும் 7 ஆண்டுகளாக தொடர்ந்த இந்தக் கொடூரத்துக்கும் தொடர்பு இல்லையா?

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் படியாக அவர்களது குடும்பங்களும், வேலை செய்யும் இடங்களும், படிக்கும் இடங்களும் ஏன் இல்லை? பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக புகார் சொல்ல விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குடியிருப்புகளில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? கல்லூரியில், பள்ளிக் கூடத்தில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? ஏதாவது பிரச்சனை என்றால் இந்தக் கமிட்டியில் முறையிட்டால் நியாயம்/தீர்வு கிடைக்கும் என்று ஏன் இல்லை?

பொள்ளாச்சி வெளிச்சத்துக்கு வந்து விட்டது, வெளிச்சத்துக்கு வராமல் துன்புறுத்தப்படும் எத்தனை பெண்கள் இந்தக் கொடூர சமூகத்தில் இருக்கிறார்களோ!

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

ஞாயிறு, மார்ச் 10, 2019

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

சனி, மார்ச் 09, 2019

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

புதிய பாதை படைக்கும் தே.மு.தி.க - சுதீஷ், பிரேமலதாவின் அரசியல் சாணக்கியம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி ஒரே நேரத்தில் அ.தி.மு.கவுடனும், தி.மு.கவுடனும் கூட்டணி பேரம் நடத்தியது என்று ஒரு சர்ச்சை ஓடுகிறது. கூட்டணி பேரம் நடத்தியதில் தவறில்லையாம் அதை வெளிப்படையாக சொன்னதுதான் பிரச்சனையாம். முன்னதாக பா.ம.கவும் இரு தரப்பிடமும் பேரம் பேசியது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. இப்படி ஒளித்து மறைத்து வெட்கப்பட்டுக் கொண்டு செய்து வந்தவற்றை வெளிப்படையாக போட்டு உடைக்கும் கட்சிகளுக்கு முன்னோடி விஜயகாந்தின், இல்லை இல்லை, அவரது மனைவி பிரேமலதாவின் தே.மு.தி.க.

தேசியம், திராவிடம் எல்லாவற்றையும் உதிர்த்து போட்டு விட்டு கட்சி நடத்த முடியும் கட்டம் வந்திராத 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால், பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என்பதை எல்லாம் சேர்க்க வேண்டியது இருந்தது. அப்போதுதான் அரசியலில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க முடியும்.

அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கட்சி ஆரம்பித்த மருத்துவர் ராமதாஸ் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்தார். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்களை கவர் செய்ய வேண்டிய அரசியல் நிலைமை அன்று இருந்தது.

சமீபத்தில் டி.டி.வி தினகரன் என்பவர் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு இந்த பாவலாக்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஜெயலலிதா, பண மூட்டை இரண்டும் சேர்ந்ததுதான் அவரது கட்சியின் கொள்கையும் விதிமுறைகளும்.

சரி, இப்போது தே.மு.தி.கவுக்கு திரும்பி வருவோம்.

சமூக அநீதிகளைக் கண்டு கொதிக்கும் இளைஞனாக திரைப்படங்களில் வில்லன்களை பந்தாடியவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா, மனைவியில் தம்பி சுதீஷ் இவர்களை மையமாக வைத்து உருவானதுதான் தே.மு.தி.க என்ற கட்சி. அரசியலில் நுழைவதற்கு தயாரிப்பாக பல ஆண்டுகளாகவே ரசிகர் மன்றங்களை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவி செய்வது என்று ஒரு பிராண்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

2005-ல் தனியாக கட்சி ஆரம்பித்து 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்த விஜயகாந்தின் தலையை தட்டி வைக்க வேண்டும் என்பதும் தி.மு.கவின் கணக்காக இருந்தது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை கோயம்பேடு மேம்பாலம் கட்டுவதற்காக இடித்து விட்டார்கள். அதைத் தவிர்க்கும்படி சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தி.மு.கவின் டி.ஆர்.பாலுவை பல முறை சந்தித்தும் அவர்கள் மசியவில்லை. விஜயகாந்தோ இந்த அநீதியை எதிர்த்து முகம் சிவந்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆளும் கட்சியாகவும், தே.மு.தி.க முக்கிய எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பின் அ.தி.மு.க அமைச்சர் மரியம் பிச்சை கார் விபத்தில் பலியான போது, "இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதை அனுபவிக்க முடியாமல் அய்யோ பாவம் பலியாகி விட்டார்" என்று அறிக்கை விட்டார் விஜயகாந்த். இவ்வாறாக, சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது அனுபவிப்பதற்கானது என்ற ஊரறிந்த ரகசியத்தை தன் வாயாலும் போட்டு உடைத்து விட்டார்.

அதன் பிறகு ஜெயலலிதாவுடன் முட்டிக் கொண்டு ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்ற வெளிப்படையான ரகசியத்தை உலகுக்கு அறிவித்தார். கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சி தாவ வைப்பது என்று ஜெயலலிதா தே.மு.தி.கவை திட்டமிட்டு சிதைத்தார். இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாகி பேசுவது பிரச்சனையாக இருந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனும் 2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்றும் போட்டியிட்டு எதுவும் தேறவில்லை.

எனவே, இப்போது போட்ட முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள பிரேமலதாவும், சுதீஷூம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கலக்கியிருக்கின்றனர். "பெண் வீட்டில் இருந்தால் நான்கு பேர் கேட்டு வரத்தான் செய்வார்கள்" என்ற ரகசியத்தை அம்பலமாக்கியிருக்கிறார்.

தமிழகமே, இதற்கு மேல் என்ன வேண்டும், அரசியல் தரத்துக்கு!

வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

பெண்கள் மீது வேலைச் சுமையை குறைக்க உறுதி கொள்வதற்கான நாள்

ன்று சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. 1917 ரசிய சோசலிச புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அது கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் பெண்கள் மேலும் மேலும் தொழிலாளர்களாக வருகின்றனர். சாதி, மத கட்டுப்பாடுகளால் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த பெண்கள் கார்மென்ட் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் வேலை செய்ய போகிறார்கள். ஏன், கட்டிட வேலையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இது சமூக வாழ்வில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதே குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்பதற்குத்தான். ஆண் தொழிலாளர்களை விட குறைந்த கூலி, வேலை நேரத்தில் இடைவேளை எடுக்காமல் தீவிரமாக உழைக்க வைத்தல், பிரச்சனைகளை எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் இவற்றை முன் வைத்துதான் முதலாளிகள் பெண் தொழிலாளர்களை வரவேற்கிறார்கள்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கார்மென்ட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் பெண் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதில் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என்பதைக் காட்டின. ஆண், பெண் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து பெண்களுக்கு கூலி, வேலை நேரம், பதவி உயர்வு, பணி நிலைமைகள் போன்றவற்றில் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள். வேலை இடங்கள் பலவற்றில் ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற நிலையில் அதில் சேரும் பெண்களை தனிப்பட்ட பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைக்கும் நபர்கள் உள்ளனர். இவர்களை எதிர்த்து சட்டங்கள், நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தாலும், சக தொழிலாளர்கள், தொழிற்சங்க செயல்பாடுகள்தான் இந்த கொடூரத்தை நமது பணி வாழ்விலிருந்து ஒழித்துக் கட்டும்.

வேலை செய்யும் இடத்தில் 8 மணி நேரம், வேலைக்கு போய் வர ஒரு சில மணி நேரம், அதற்கு பிறகு வீட்டுக்கு வந்து வீட்டு வேலை, சமையல், குழந்தைகளை பராமரிக்கும் வேலை என்று பெண் தொழிலாளர்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்படுகிறது. ஆண் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது இதற்கான ஒரு தீர்வாக உள்ளது. உண்மையில், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு வசதிகளை கேட்க வேண்டும். ஆண்களை விட குறைந்த வேலை நேரம், அல்லது வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆள் அமர்த்துவதற்கு கூடுதல் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டியிருக்கும் அம்மாக்களுக்கு குழந்தைகளை பராமரித்து கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை வேலை செய்யும் இடத்தில் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

மேலும், மகப்பேறு, மாத விடாய் நாட்கள் போன்றவற்றில் பெண்ணின் உடல் உபாதைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு விடுப்பு, ஓய்வு நேரம், ஓய்வு இடம், சிறப்பு உணவு, சிறப்பு ஊதியம் வழங்குவதை சட்டரீதியாகவும், தொழிலாளர் அமைப்புகள் மூலமும் கொண்டு வர வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள், பெண் தொழிலாளர்கள், பெண் பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓட்டுனர்கள், விண்வெளி வீரர்கள் என்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சரிநிகர் சமானமாக தமது பங்களிப்பை செய்வதற்கான நிலையை உருவாக்குவது சமூக பொறுப்புள்ள எல்லோரது கடமையாகும்.

வியாழன், மார்ச் 07, 2019

உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்

நாம் ஏன் மார்க்சியத்தையோ வேறு ஏதோ ஒரு தத்துவத்தையோ நாடுகிறோம்? நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம். பார்க்கும் போது இது ஏன் இப்படி உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு விபத்து நடக்கிறது, ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது, ஒரு படுகொலை அரங்கேற்றப்படுகிறது. இதிலெல்லாம் யாருடைய பங்களிப்பு என்ன? யாருக்கு ஆதாயம், யாருக்கு இழப்பு? இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று பல கேள்விகள் வருகின்றன. அவற்றுக்கு விடை கிடைப்பதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இவ்வாறு நான் எதிர்கொண்ட பல கேள்விகளுக்கு மார்க்சின் மூலதனம் நூலை படிப்பதன் மூலம் விடைகள் கிடைத்தன. மேலும், மூலதனம் நூலை 21-ம் நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கு பொருத்தும் ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையான ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை வந்தடைய உதவியது

நான் மூலதனம் நூலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூலதனம் வாசிப்பு வட்டம் சைதாப்பேட்டையில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் பிரதிநிதிகள் சங்கக் கட்டிடத்தில் நடத்தும் வகுப்பில் வாசிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு 3-4 ஆண்டுகளாக தொடர்ந்து 3 பாகங்களும் வாசித்து முடிக்கப்பட்டன. நடுவில் பல வகுப்புகளை நான் தவற விட்டிருந்தேன். இதற்கிடையில் ஜான் ஸ்மித்தின் ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் என்ற ஆய்வறிக்கையின் பிரதியும் கிடைத்து அதை படித்திருந்தேன்.

மார்க்சின் மூலதனமும், ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு எப்படி விடை அளித்தன என்பதை பேச வேண்டுமானால் எனது பணி வாழ்க்கை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும்.

நான் படித்தது பி.டெக் (லெதர் டெக்னாலஜி). வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளை தெரிந்தவர்களுக்கு தோல்துறை பற்றி தெரிந்திருக்கும். ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோலை அழுகாமல் பதப்படுத்தி கெமிக்கல் போட்டு ஷூ, கைப்பை, தோல் மேலாடை போன்றவை செய்ய பொருத்தமான லெதராக மாற்றுவதை டேனிங் என்று அழைக்கிறோம். அந்தத் தொழில்நுட்பத்தை சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பாக படித்தேன்.

தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் டேனரிகள் மிக அதிக அளவில் உள்ளன. ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளிலும், சென்னையிலும் பல சிறிய மற்றும் நடுத்தர தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், நான் படித்து முடித்ததும் வேலை செய்யப் போனது மத்திய பிரதேசம் தேவாஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள டாடா குழுமத்தின் தோல் உற்பத்தி தொழிற்சாலைக்கு. இந்தியாவிலேயே அதுதான் மிகப்பெரிய தோல் பதனிடும் ஆலை. அந்த ஆலையில் 4 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அந்த ஆலையில் ஒரே கூரையின் கீழ் 1000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இங்கு semi-finished தோலை finished தோலாக உற்பத்தி செய்தனர்.

இங்கு 4 ஆண்டுகள் வேலை செய்த பிறகு டாடாவின் சீன அலுவலகத்தில் ஷாங்காய் நகரத்துக்குச் சென்றேன். டாடாவில் உற்பத்தியாகும் தோல்கள் அதன் ஹாங்காங் அலுவலகம் மூலம் சீன தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

டாடா ஷாங்காயில் 2 ஆண்டுகள் வேலை செய்த பிறகு தொழில்நுட்ப கன்சல்டன்ட் சேவை வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஷாங்காய் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அதன் பிறகு சென்னைக்கு வந்து தோல் தொழிற்சாலைகளுக்கான ERP மென்பொருள் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தினேன்.

ERP என்றால் என்ன? ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பல பொருட்களை வாங்குவார்கள். அவை உள்ளீட்டு பொருட்கள். என்ன வாங்கினோம், யாரிடம் வாங்கினோம், நம் கையில் என்ன சரக்கு இருக்கிறது. என்ன உற்பத்தி நடக்கிறது, என்ன உற்பத்தி நிகழ்முறை, இறுதியாக என்ன பொருள் உற்பத்தி செய்து வெளியில் விற்றோம், யாரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, உற்பத்திச் செலவு என்ன போன்றவற்றை நிர்வகிக்கும் மென்பொருள் செய்ய வேண்டும்.

இந்த மென்பொருள் உற்பத்தி உலகமயமாதல் என்ற நிகழ்முறையில் மிக முக்கியமான விஷயம். எனவே, இதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.

டாடா ஆலை மிகப்பெரியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நான் அங்கு வேலை செய்யப் போகும் போது அவர்கள் ஒரு ERP மென்பொருளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு முன்னர் விற்பனை பிரிவில் இருக்கும் ஒருவர் கச்சா பொருள் கையிருப்பு என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் பிரிவுக்குப் போய் கேட்க வேண்டும். அந்தப் பிரிவு நிர்வாகி ஒரு அறிக்கை வைத்திருப்பார், அல்லது லெட்ஜரை புரட்டிப் பார்த்து தகவல் சொல்வார்.

இந்த ERP மென்பொருளில் எல்லோரும் ஒரே கணினி கட்டமைவில் வேலை செய்வார்கள். கச்சாப் பொருள் பிரிவில் அவர்கள் தமது தகவல்களை உள்ளிடுவார்கள். விற்பனை பிரிவில் விற்பனை தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்வார்கள். ஒரு பட்டனை தட்டினால் என்ன சரக்கு இருக்கிறது, என்ன வாடிக்கையாளருக்கு என்ன ஆர்டர் என்று பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு நான் வேலை செய்யப் போன்ற சீனாவிலும் சரி இந்தியாவிலும் சரி டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் குறைவு. சிறு, நடுத்தர நிறுவனங்கள்தான் அதிகமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்யலாம் என்று திட்டமிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதில் கூடுதலாக ஒரு புதிய சிந்தனையை சேர்க்க திட்டமிட்டேன்.

ராணிப்பேட்டையில் உற்பத்தியாகும் தோல் சீனாவில் காலணியாக மாற்றப்பட்டு ஹாங்காங் வழியாக அமெரிக்கா போய் சேருகிறது. அமெரிக்காவில் காலணி வாங்கும் ஒருவர் ஒரு பட்டனை தட்டினால் தோல் எங்கு செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் என்பது கனவுத் திட்டம். எனவே, ஏன் இந்த உற்பத்தி சங்கிலியில் இருப்பவர்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தேன். ஒரே நிறுவனத்துக்கு ஒற்றை மென்பொருள் இருப்பதைப் போல எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மென்பொருளை பயன்படுத்தக் கொடுத்தால் ஒட்டு மொத்த உற்பத்தி சங்கிலியையும் இணைத்து விடலாம் என்று திட்டம். அதாவது, இன்று பிரபலமாகியிருக்கும் கிளவுட் முறையில் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான மென்பொருள் செய்ய திட்டமிட்டோம்.

உதாரணமாக, காலணி தொழிற்சாலையில் இருந்து டேனரிக்கு தொலைபேசி தான் கேட்டிருந்த தோல் தயாராகி விட்டதா என்று கேட்டால் கூட சரியான பதில் கிடைக்காது. இவர்கள் சொல்வதைத்தான் அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை ஏன் இருக்க வேண்டும்? அவரே கணினியில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்த முடியாதா?

ஆனால், இன்றைய தனியார் அடிப்படையிலான உற்பத்தி முறையில் இது வேலை செய்யவில்லை. உற்பத்தி நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லா தகவல்களையும் கஸ்டமருக்கு வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. எல்லோரும் தத்தமது தரவுகளை தமது கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இப்படி பல தடைகளைத் தாண்டியும், தாண்ட முடியாமலும் வணிக ரீதியாக அந்த நிறுவனம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அரசியல், பொருளாதாரம், ஆய்வு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை ஒரு பின்னணியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 1

(2வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

செவ்வாய், மார்ச் 05, 2019

மூக்கைப் பொத்திக் கொண்டு தினமலரின் பட்டத்தை படிக்கலாம்

தினமலரின் பட்டம் அறிவியல் இணைப்பு பற்றி 2 வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

நேற்று வாங்கிய பத்திரிகையில் அறிவியல் புரியாதா? என்பதுதான் முதல் பக்க தலைப்பு, அதை நடத்துவது சபாவில் அறிவியல் என்ற அமைப்பு. அதில் விஜய் ஷெனாய், சந்தியா கௌஷிகா, சித்தபிரா சின்கா, ஹரிணி நாகேந்திரா ஆகியோரின் புகைப்படங்களுடன் அவர்கள் பதில் சொன்ன கேள்விகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“சபாவில் அறிவியல் (Science at Sabha) என்ற பெயரில் சென்னை கணித அறிவியல் கழகம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. "சபாக்களில் சங்கீதம் மட்டும்தான் கேட்க முடியுமா? அறிவியல் தகவல்களைக் கேட்டால் எப்படி இருக்கும்" என்ற எண்ணத்தோடு இதை நடத்துகிறார்கள்.

புறாக்கூடுகளைப் போன்றதே எலக்ட்ரான்களும் என்கிறார் விஜய் ஷெனாய், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு. நியூரான் தகவல்கள் எப்படி பயணம் செய்யும் என்று சந்தியா கௌஷிகா, TIFR மும்பை பேசியிருக்கிறார். விளக்கம் சொல்லும் கோட்பாடுகள் என்று சென்னை கணித அறிவியல் கழகத்தின் சித்தபிரா சின்கா முன் வைத்திருக்கிறார். ஸ்மார்ட் நகரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஹரிணி நாகேந்திரா உரையாற்றியிருகிறார்.

இது தவிர 2-ம் பக்கத்தில் ஆதார், அருண் ஜெட்லி, ஆதார் பற்றிய செய்திகள், இந்திரா நூயி, சாகோஸ் தீவுகள், ஆட்டிசம் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருந்தன. 3-ம் பக்கத்தில் த.வி வெங்கடேஸ்வரனின் பதில்கள். புயலில், மரங்களும், எடை அதிகமான பொருட்களும் பறக்கின்றன, மனிதன் ஏன் பறப்பதில்லை என்ற 11-ம் வகுப்பு மாணவனின் கேள்வி. சூரியனால் பூமியில் என்னென்ன நடக்கின்றது, சூரியன் அழிந்தால் பூமிக்கு என்ன ஆகும் என்று 8-ம் வகுப்பு படிக்கும் நவீன். தொழில்நுட்பங்கள் பெருகி இருக்கும் நவீன காலத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நடக்காதது ஏன் என்று 12-ம் வகுப்பு படிக்கும் பூர்ணி. நீரைக் கொதிக்க வைத்த பிறகு பாத்திரத்தில் சிறு சிறு குமிழ்கள் தோன்றுவது ஏன் என்று பவன் கார்த்திக் என்ற மாணவர் கேட்டிருக்கிறார். பூர்ணியின் கேள்வியைத் தவிர மற்ற மூன்றும் ஒரு குழந்தையின் மனதில் தோன்றும் இயல்பான கேள்விகள். அவற்றை அறிவியல் துல்லியத்துடன் எளிமையாக விளக்கி பதில் சொல்கிறார். பூர்ணியின் கேள்வி அரசியல் உள்ளடக்கம் நிரம்பியது. அதற்கு நேரடியான பதிலை தருகிறார். இந்த ஒரு பக்கமே பட்டத்தை விண்ணில் பறக்க விட்டு விடுகிறது.

அடுத்த பக்கம் இயற்கை நம் நண்பன் என்ற பெயரில் கட்டு விரியனுக்கும் வெள்ளிக்கோல் வரையனுக்கும் இடையேயான வேறுபாடு, போருக்குப் பலியாகும் இயற்கை என்ற தலைப்பில் மொசாம்பிக் நாட்டை முன் வைத்து போர் எதிர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. நினைவாற்றலை மேம்படுத்த இரண்டு உத்திகள் என்று ஒரு பக்கம். குடும்ப பாசம் தொடர்பான ஒரு அறநெறிக் கதை.

தமிழ் பக்கத்தில் உணவு உண்பது பற்றியும், வலி மிகுதல் பற்றியும், தமிழில் சொல்வளம் பற்றியும் தகவல்கள். வெளியாகியுள்ளன. கணித அருள் யாருக்கு என்ற தலைப்பில் 41 பேர் கொண்ட வகுப்பில் மிட்டாயை கணித அறிவை பயன்படுத்தி தானே கைப்பற்றிய மாணவனை பற்றிய கதை. இறுதியில் ஆசிரியர் அவனை பாராட்டி எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்து மாணவர் கடிதங்கள், மைக்கேலாஞ்சலோ (இத்தாலி நாட்டு ஓவியர் -15-ம் நூற்றாண்டு), வாலன்டினா டெரஷ்கோவா (விண்வெளியில் பறந்த முதல் பெண் - ரஷ்யர்), ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் (புகைப்படத் துறையின் முன்னோடி - 18ம் நூற்றாண்டு), அனைத்துலக மகளிர் நாள், அமெரிக்கோ வெஸ்புகி (இத்தாலிய கடற்பயணி - 15-ம் நநூற்றாண்டு), பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் பிறந்த நாள் குறிப்புகள், யூரி ககாரின் விண்வெளியில் முதல் மனிதர் என்ற குறிப்பு, அவரது மேற்கோள்தான் கடைசிப் பக்கத்தில் முழுப்பக்கமாக.

மொத்தத்தில் அதே தரத்தில் தொடர்வதாக உள்ளது.

செய்தித் தாளில் கூட்டணி பேரத்தில் தி.மு.கவை குழப்புவதற்கான செய்தி, அதே நேரம் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்கு தே.மு.தி.க கடுப்பேற்றுவதாகவும் செய்தி இணையாக வெளியாகியிருந்தது.

முதல் பக்கத்திலேயே மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா பற்றிய செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது. கடைசி பக்கத்தில் "காவிரியும் ஒரு நாள் கங்கையாகும், பிரவாகமெடுத்து ஓடுவதில் அதன் தங்கையாகும்" என்ற தலைப்பில் கும்பமேளாவுக்காள அலகாபாத் போய் வந்த எல்.முருகராஜ் என்ற தினமலர் நிருபரின் கட்டுரை. சாமியார்களின் புகைப்படம், புனித நீராட குவிந்த பக்தர்கள் என்று இன்னொரு புகைப்படம்.

கங்கையை வழிபடுவது போல காவிரியையும் வழிபட ஆரம்பித்தால் காவிரியிலும் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடும் என்று ஒரு அபத்தத்துடன் கட்டுரையை முடிக்கிறார். 'கங்கையிலும் சாக்கடை, கழிவுகள் கலக்கின்றன, காவிரி கர்நாடக மழை வெள்ளத்தினால் மட்டுமே நீர் பெறுகிறது, கங்கை இமயமலை பனி உருகலிலும் நீரை பெறுகிறது' இதை எல்லாம் புறக்கணித்து விட்டு பக்தி மயமாக அடித்து விட்டிருக்கிறார்கள்.

இதில் நகரத்தின் பெயரை அலகாபாத் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது.

கடைசி பக்கத்தில் "படைகள் மீது சந்தேகமா என்று மோடி விளாசல்", "மசூத் அஸார் மரணமா, வாய் திறக்க பாக் மறுப்பு" என்று தேர்தல் பிரச்சாரம். அமெரிக்க பல்கலையில் இந்தியருக்கு பதவி, இலங்கை பிரதமர் திருப்பதியில் என்று இந்து மத, இந்திய பிரச்சாரம்.

12-ம் பக்கத்தில் ராணுவ வெறி, எதிரி நாட்டின் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒரு முக்கால் பக்கக் கட்டுரை.

ஒரு பக்க பொருளாதார செய்திகள், அதில் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்திருப்பது, போர் அபாயம் சந்தையை பாதிப்பது என்று எழுதுகின்றனர்.

கூட்டணி விவகாரங்கள் பற்றி ஒரு பக்கம்.

“பாக் விமானத்தை விரட்டி அடித்தது எப்படி, அபிநந்தனின் சாதுர்யத்தை குறித்து பரபரப்பு தகவல் என்று ஒரு செய்தி. வாசகர் கடிதத்தில் அ.தி.மு.க தலைமையில் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்வதாகவும், பாக்.கிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள்.

அதன் பிறகு போலீஸ் செய்திகள் ஒரு பக்கம் முழுவதும்.

அண்ணா நூலகத்தில் தனியார் நிறுவனம் நடத்திய அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது குறித்து கல்வியாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம். தேர்தல் பிரச்சார அரசியல் கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்திருக்கிறது. கோட்டூர்புரத்தில் உள்ள இந்த நூலகத்தில் இப்படி நடந்ததை விமர்சிக்கிறது