வியாழன், டிசம்பர் 02, 2010

குடும்பப் பாசம் கட்சியையும், மாநிலத்தையும் சீரழித்தது

திமுகவின் சார்பில் நீரா ராடியா பேரம் பேசும் ஏற்பாடு எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்?

1. திரு மாறன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில்  மத்திய அமைச்சராக இருந்த போது, திமுகவின், தமிழ்நாட்டின் நலன்களை பார்த்துக் கொள்ள முடிந்தது. அவரது அனுபவமும், பிற கட்சித் தலைவர்களுடன் இருந்த தொடர்புகளும் பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்கியிருக்கும்.

இப்போது திரும்பிப் பார்த்தால், ஈழத்தில் தமிழர் நலனுக்கும் சரியான கவனம் அப்போது இருந்ததை உணர முடிகிறது.

2. மாறனின் மறைவுக்குப் பிறகு, திமுக தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து விலகுவதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒரு முக்கிய காரணம், 'அனுபவமே இல்லாத ஒரு இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க' பாஜக மறுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டம் காங்கிரசுடனான பேரங்களில் சரிவர நடந்து 2004 தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் தயாநிதி மாறன் அமைச்சரானார்.  டி ஆர் பாலு திமுகவின் தில்லி முகமாக செயல்பட ஆரம்பித்தார்.

3. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டி ஆர் பாலுவும் கழற்றி விடப்பட்டு கனிமொழி, மாறன், ராசா கைகளில் பேச்சு வார்த்தை விடப்பட்டது. அவர்கள் யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் விழிக்க, நீரா ராடியாவின் கையில் திமுகவின் (அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டின்) மானம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்று திருக்குறள் படித்த திரு கருணாநிதி,  குடும்பப் பாசம் கண்ணை மறைக்க, அறிஞர் அண்ணா முதல் வைகோ தொடர்ந்து, மாறன் வரை தில்லியில் முன் நிறுத்திய திராவிடக் கட்சிகளின் மதிப்பை அதல பாதாளத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

(Due to continuous spam, disabled comments - 2-1-2011)

ஈழப் போர்க் குற்றவாளிகள்!

"போர்க் குற்றங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்கள் ஆட்சியிலும், ஃபொனெஸ்கோ எதிர்க்கட்சியிலும் இருப்பதால், அவை தொடர்பான விசாரணைகளும் மேல் நடவடிக்கைகளும் சாத்தியமில்லை."

"தமிழ் மக்களும் (அப்படி வலியுறுத்துபவர்கள் பழிவாங்கப்படலாம் என்பதால்) இப்போதைக்கு போர்க்குற்ற விசாரணையை பெரிதாக வலியுறுத்தவில்லை."

இலங்கைக்கான அமெரிக்க தூதரின் ஜனவரி 15, 2010 தேதியிட்ட செய்தி

புதன், டிசம்பர் 01, 2010

அரசியலும் தொழில் வணிகமும் - புதிய உலகம்

அரசியல், பன்னாட்டு உறவுகள், வணிக நிறுவனங்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் அனைத்திலும் மூடிமறைப்பிலேயே பணிகள் நடந்து வந்திருக்கின்றன.

'மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள், நாம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி, பேரம் பேசி முடிவுகள் எடுத்து அறிவிப்போம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'

இந்தியாவில் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் பரிமாற்றங்கள் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது இவை தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான புதிய உலகின் நிதர்சனங்கள்.

இதற்கான எதிர்வினையாக, அதிகார வட்டங்களும், வணிக நிறுவனங்களும் தமது தகவல் பரிமாற்றங்களை இன்னமும் ரகசியமாக பூட்டி வைக்க முயற்சிப்பார்கள். இணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டை முடக்கிப் போடும் சட்டங்களும் ஒப்பந்தங்களும் வர ஆரம்பிக்கலாம். இவை வெற்றி பெற்று விட்டால் ஆர்வெலின் 1984 / மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று ஆட்டி வைக்கும் சில சூத்திரதாரிகளுக்கு நாம் ஆடிக் கொண்டிருக்கும் நிலைமை தொடரும்.

இந்தத் தகவல் விடுதலையை (information wants to be free) தடுக்க முடியாவிட்டால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் நடந்து கொள்ளும் அடிப்படை முற்றிலும் மாற வேண்டியிருக்கும். நான்கு சுவர்களுக்குள் ஒன்றும், வெளியுலகுக்கு ஒன்றுமாக இரட்டை வேடங்கள் வைத்திருக்க முடியாமல் போய் விடும்.

சிக்கலான பேச்சு வார்த்தைகள், அதீத ஆதாயம் தரும் தொழில் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியிருக்கும்.

பர்கா தத் - பத்திரிகையாளர்

நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் (ndtvயின் பர்கா தத், இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, வீர் சங்க்வி முதலானோர்) தமது எல்லைகளைத் தாண்டியதாக வெளி வந்தது.

1. செய்தி சேகரிக்கிறோம் என்ற ஆர்வத்தில் அதிகார தரகர்களாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது.

2. ஒன்றரை ஆண்டுகள் முன்பு நடந்த இந்த உரையாடல்கள் செய்திகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்கள் - நீரா ராடியா என்ற தொழில் முனைவர் அரசியல் தரகராக செயல்படுவதைக் குறித்து இவர்கள் தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் விவாதிக்கவில்லை.

3. தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகும் அவை பற்றிய விபரங்களை தத்தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தார்கள்.

வேறு வகையில் ஊழல் அல்லது தவறு செய்யாமல் இருந்தாலும், இந்த அடிப்படை பத்திரிகை தர்மத்தில் அவர்கள் தவறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக தாக்கப்பட்டவர் பர்கா தத். பர்காகேட் என்று தலைப்பிட்டு இணையத்தில் பரவலான விவாதங்கள் நடந்தன.

ஒரு வழியாக பர்கா தத், சக பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளை சந்தித்து, அந்த நிகழ்ச்சியை சுருக்காமல் அப்படியே ஒளி பரப்பு செய்திருக்கிறார்கள் ndtvயில்.

http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/barkha-dutt-other-editors-on-radia-tapes-controversy/178964?hp

தவறு செய்வது மனித இயற்கை. செய்த தவறை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் அத்தகைய தவறுகளை தவிர்ப்பதாக உறுதி சொல்வது, சிறந்த மனிதர்களின் அடையாளம்.

பர்கா தத்தும், NDTVயும் தாமதமானாலும் தமது சிறப்பைக் காட்டியிருக்கிறார்கள் and she is pretty :-)