வெள்ளி, அக்டோபர் 02, 2009

சாதி அழிய வேண்டும்! சாதி வெறியர்கள் ஒழிய வேண்டும்!

மூத்த பதிவர் ஒருவர் சாதி அமைப்பைத் தூக்கிப் பிடிக்க ஜெயமோகனின் காந்தி பற்றிய கட்டுரையின் முதற் பகுதியை மட்டும் மேற்கோளிட்டு எழுதியிருக்கிறார்.

அதன் இறுதிப் பகுதிகளிலிருந்து மேற்கோள்கள்

1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது

சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின்
புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும். மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

காந்தி பதில் அளித்தார். ” ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.”

ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

ஊடகங்கள் குறித்து கேள்விகள்.

1. பொதுவாக அரசியல், தொழில் நிறுவனங்கள், திரைப்படத் துறை, இலக்கியம் குறித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சூடான, ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கின்றன. பல தரப்புகளின் குறைநிறைகளை குடிமக்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடு குறித்து ஏன் அதிகம் பேசப்படுவதில்லை? குறைந்த பட்சம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அச்சு ஊடக இதழ்கள் பற்றியும், அச்சு ஊடகங்களில் தொலைக்காட்சி ஓடைகளைப் பற்றியுமான விமரிசனங்கள் இடம் பெறலாம்.

'எங்கள் விவகாரத்தில் நீ தலையிடாதே, உங்கள் செயல்பாடுகளைப் பற்றி நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்' என்று ஏதாவது எழுதப்படாத புரிந்துணர்வு இருக்கிறதா?

2. பத்திரிகைகள் படிக்கும் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் குறித்து அறியும் போது வாசகர்களும் பார்வையாளர்களும்தான் விற்கப்படும் பொருட்கள், விளம்பர நிறுவனங்கள்தான் ஊடகங்களின் வாடிக்கையாளர்கள் என்று தோன்றுகிறது. (பிரபலமாக இருக்கும் ஊடகங்களை மட்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்). இந்தக் கருத்து அமெரிக்க இணைய விவாதங்களில் பரவலாகக் காணக் கிடைக்கிறது.

எதை வெளியிட வேண்டும்? எதை ஒளிபரப்ப வேண்டும்? என்று தீர்மானிப்பதில் விளம்பரதாரர்களின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது? உள்ளடக்கத்தை வடிவமைப்பதில் விளம்பர விற்பனைக்கு உதவும்படி இருக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?

சில அவதானங்கள்:

1. தொலைக்காட்சி, பண்பலை வானொலிகளில் பொதுமக்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகளின் அடிப்படை நோக்கம் ஒளி/ஒலிபரப்பின் வீச்சை தீர்மானித்து அதைக் காட்டி விளம்பரம் வாங்குவது என்று படுகிறது.

2. எகனாமிக் டைம்ஸ் போன்ற வணிக நாளிதழ்களிலும், தி இந்து போன்ற நாளிதழ்களின் வணிகப் பக்கங்களிலும் நிறுவனங்கள் பற்றி வெளிவரும் செய்திகளில் பல கிட்டத்தட்ட அந்தந்த நிறுவனங்கள் எழுதிக் கொடுத்தது போலவே தெரிகின்றன. விளம்பரத்தைப் போல இதற்கும் பணம் வாங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அது அதிகாரபூர்வமாக நிர்வாகத்துக்குப் போகிறதா அல்லது தனிப்பட்ட ஊழியரின் பைக்குள் போகிறதா என்பது வேறு கேள்வி

3. பத்திரிகைத் துறையின் நிர்வாகம் பத்திரிகாசிரியர்களிடமிருந்து விலகிப் போய், வணிக நிர்வாகிகளிடம் போய் விட்டது. மக்களாட்சியின் நான்காவது தூண் என்று தாங்கப்படும் ஊடகத்துறை வியாபாரமாக மாறி விட்டதால் தேவையான விவாதங்கள், அவசியமான செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேருவது பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக நலன், தேச நலன், மக்கள் தொண்டு என்று பத்திரிகை நடத்திய காலங்கள் போய் ஆகக் கூடுதல் ஆதாயம் சந்திப்பது ஒன்றே நோக்கமாக ஊடகத் துறை மாறியிருக்கிறது.

3. இந்த நிலைகளுக்கு மாற்றாக ஏதாவது நடக்கிறதா? சமீப காலங்களில் மாற்றங்கள் வரும் அறிகுறிகள் தெரிகின்றனவா?

வெளியிலிருந்து பார்க்கும் போது சுத்தமாக நம்பிக்கையே இல்லை!