திங்கள், மே 16, 2011

12 விடுதலைப் புலிகள் பலவீனமாதல் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

43. இரண்டாவதாக, மார்ச் 2004ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  கிழக்கும் படைத்தலைவர், பொதுவாக கர்னல் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவருடன் 500 போராளிகளை அழைத்துக் கொண்டு இயக்கத்திலிருந்து பிரிந்து போனார். அவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலை பலிகள் (TMVP) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை உருவாக்கி, தனியாக ஒரு துணை போர்ப்படையை பராமரித்து ஆட்சி புரியும் UPFAயின் அங்கமாக சேர்ந்து கொண்டார்.

இந்தப் பிளவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைமையில் கருணாவிற்கு இருந்த இடம், மிகவும் ரகசியமான அந்த அமைப்பைப் பற்றிய ஆழமான அறிவை அவருக்குக் கொடுத்திருந்தது. அரசாங்கம் இறுதிக் கட்டத் தாக்குதலுக்குத் தயாரித்துக் கொள்வதற்கு அந்த அறிவை சரிவர பயன்படுத்திக் கொண்டது. TMVP துணை போர்ப்படைகளையும் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட மற்ற தமிழ் தீவிரவாதக் குழுக்களையும், அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையிலும், தமிழ் மக்களிடையே உளவு அறியவும் ஈடுபடுத்தியது.

44. மூன்றாவதாக, சர்வதேச நிலைமைகளும் முக்கியமானவை. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் நாடு கடந்த தொடர்புகளையும் எதிர்த்து, பயங்கரவாதத்தைச் சந்திக்கும்  முன்னணி நாடுகளுடன் ஒருங்கிணைந்தது செயல்பட எடுத்த முன்முயற்சி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

2005ல் தமிழரான இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை படுகொலை செய்தது அதன் உலக மதிப்புக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் (17). இலங்கை அரசு இந்தச் சூழலில் செயல்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதித் தாக்குதலுக்கு பிற நாடுகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டது. 

45. 2005 தேர்தலுக்குப் பிறகு அரசாங்கமும், விடுதலைப் புலிகள் இயக்கமும் CFAயின் விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தன. இருப்பினும், இரண்டு தரப்பும் தொடர்ந்து ராணுவ மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. ஆகஸ்டு 2006ல் முழுஅளவு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாநிலத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாசன நீரை அளித்த மாவில் அணையின் கதவுகளை விடுதலைப் புலிகள் மூடிய போது, அரசு கிழக்கு மாநிலத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்க ஆயிரக்கணக்கான போர்ப்படைகளை தாக்குதலுக்கு அனுப்பியது. கருணா பிரிவின் உதவியுடன் ஜூலை 2007ல் அரசு இருபது ஆண்டுகளில் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தை தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது

46. கிழக்கு மாகாணத்தில் அரசுப் படைகளின் ராணுவ வெற்றிக்குப் பிறகு, ஜனவரி 2008ல் வடக்கு மாகாணத்தின் சிலபகுதிகள், வன்னி பகுதியின் சில பெரிய இடங்கள் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. குறிப்பாக வன்னி பகுதியின் நான்கு மாவட்டங்களில் தமது நடைமுறைத் தலைநகரமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், கூடவே வவுனியாவின் வடக்குப் பகுதியையும், மன்னாரின் வடமேற்கு பகுதியையும், யாழ்ப்பாண தீபகற்பத்தின் சிறு பகுதிகளையும் கட்டுப்படுத்தினார்கள்.

(17) 2006 வரை 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தன. கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தமது முடிவை 2006ல் வெளியுறவுத் துறை அமைச்சரின் படுகொலைக்குப் பிறகு அறிவித்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி திரட்டுதல், ஆயுதம் வாங்குதல் போன்ற நடவடிக்கைகள் அதற்குப் பிறகு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டன.

47. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த ராணுவ வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு, ஜனவரி 16, 2008ல் இலங்கை அரசு முழு அளவு ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர், டோக்கியோ கூட்டு தலைவர்கள், மற்றும் பிற உறுப்பு நாடுகள், CFAவை ரத்து செய்து ஒரு ராணுவ தீர்வை தேடும் அரசின் முடிவு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்கள். அதே சமயம், தன்னுடைய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் அங்கீகரித்தார்கள்.

பிப்ரவரி 2008ன் மத்தியில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் தீவு முழுவதும் அதிகமானதால், போர்ப் பகுதிகளுக்கு வெளியில் இருந்த பொதுமக்களின் மீது போரின் தாக்கம் அச்சமளிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அரசுப் படைகளின் வான்வழி தாக்குதல் மற்றும் வெகுதூர தாக்குதல் நடவடிக்கைகளால், போர்ப்பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 2008ல் அரசு தனது இறுதி ராணுவ தாக்குதலாக, கிளிநொச்சிக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்தது
(இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பு முடிந்தது. அடுத்த பகுதிகள் விரைவில்)


ஞாயிறு, மே 15, 2011

11. (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

ஆனால் சமீபத்திய குடியரசுத் தலைவர்கள் எந்தத் தீவிர எதிர்விளைவுகளும் இல்லாமல், இந்தத் திருத்தத்தைப் புறக்கணிக்க முடிந்ததால் அது நடைமுறையில் செயலிழந்து போனது.  செப்டம்பர் 2010ல் நாடாளுமன்றம் 18வது திருத்தத்தை நிறைவேற்றி 17வது திருத்தத்தை சமன் செய்தது. சுதந்திரமான கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கான வழிகளை நீக்கி, குடியரசுத் தலைவரின் பதவிக்கால கட்டுப்பாடுகளையும் நீக்கியது.

39. முப்பது ஆண்டுகளாக நடந்த போர், சுதந்திரமான அமைப்புகளின் சிதைவு, சட்டப்படியான ஆட்சி பலவீனப்பட்டது இவற்றின் விளைவாக எல்லா குடிமக்களின் மனித உரிமைகளும் மோசமடைந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி தாக்குதலுக்காக அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருந்த போது, மனித உரிமைகளுக்கு இன்னும் இழப்பு ஏற்பட்டது.

பல நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமான செய்தி சேகரித்தல், எதிர் கருத்துகள் மற்றும் மனிதாபிமான செயல்களுக்கான இடம் கூட வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது (13). 2006ன் ஆரம்பத்திலிருந்து ராணுவ நடவடிக்கைகள் பற்றி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்களை மேலும் மேலும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பாதுகாப்பு செயலர் அறிவித்தார், நடவடிக்கைகளை எதிர்மறையாக குறிப்பிடுவதை சட்டப்படி குற்றமாக ஆக்கினார்.

தாக்குதல்கள், ஆள் காணாமல் போதல், கொலைகள் உள்ளிட்ட ஊடகங்களின் மீதான அழுத்தங்கள் மேலும் மேலும் ஊடக சுயத்தணிக்கைக்கு வழி வகுத்தன. அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து வந்த உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள்  சிலரை நாட்டை விட்டே வெளியேற வைத்தன.

அனுமதிச் சீட்டு மறுப்பு மற்றும் ரத்து செய்தல்கள் போன்ற நடவடிக்கைகளின் அதிகரிப்பு  அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்களை பாதுகாப்பற்றும் சில நேரங்களில் அவர்களது நிலைமையை அபாயகரமாகவும் உணரச் செய்தன. (14)

C. போரின் கடைசிக் கட்டங்களை நோக்கி
40 போரின் கடைசிக் கட்டங்களாக உருவெடுக்கும் நிலைமையில் இன்னும் மூன்று கூடுதல் காரணிகள் குறிப்பிடத்தக்கவை.

41. முதலாவதாக, 2000ல் ஆரம்பித்த குறுகிய கால அமைதி உடன்பாடு, அப்போது இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் நார்வேயை நடுவராக செயல்படுவதற்கு வேண்டுகோள் விடுத்தனர். இரு தரப்பும் பிப்ரவரி 2002ல் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை(CFA) ஏற்படுத்தினார்கள்.  நேருக்கு நேர் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தெற்கு பிராந்தியத்தின் பெண்கள் பங்கு கொண்ட பெண்களுக்கான துணை ஆணையம் உள்ளிட்ட நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.

இந்த அமைதி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம், 'மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான டோக்கியோ மாநாடு' (2003) மூலம் ஆதரித்தது. அரசியல் நடவடிக்கைகளை டோக்கியோ கூட்டுத் தலைமையின் (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே மற்றும் அமெரிக்கா) மூலம் கண்காணித்தது. இலங்கை கண்காணிப்பு குழு (SLMM), தன்னிச்சையான சர்வதேச நிறுவனம் CFAயின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு களத்தில் நடந்த மீறல்களை ஜனவரி 2008 வரை கண்காணித்தது. 2008ல் அரசாங்கம் அதைக் கலைத்து  முறையாக CFAவை ரத்து செய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் 2003ல் CFAவை தன்னிச்சையாக ரத்து செய்து விட்டிருந்தது. 2006ல் புதிதாகத் ஆரம்பித்த சண்டைகளுக்கிடையே CFA பெயரளவில்தான் இருந்து வந்தது. ஆனாலும் முறையாக CFA நடைமுறையில் இருந்த போது SLMMல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இருப்பது சாத்தியமாக இருந்தது.

42. இந்த அமைதி முயற்சியும் நீடிக்கும் சண்டையை நிறுத்துவதில் தோல்வி அடைந்ததன் மூலம் முந்தைய அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளின் தோல்விப் பட்டியலில் சேர்ந்தது. இரண்டு தரப்பிலும் இருந்த தீவிரவாதம், தொடரும் இன பாகுபாடுக்கும், சகிப்பின்மைக்கும் காரணமாக இருந்தது.(16).

தீவிர சிங்கள தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே CFAவில் கையெழுத்திட்டதை எதிர்த்து வந்தார்கள். ஏப்ரல் 2003ல் அந்த உடன்பாட்டை ரத்து செய்த விடுதலைப் புலிகளின் முடிவு, தன்னிச்சையாக வடக்கு கிழக்கில் இடைக்கால சுயநிர்வாக ஆணையத்தை ஏற்படுத்தும் அவர்களின் முயற்சிகள் சிங்கள தேசியவாத எதிர்ப்புகளை தீவிரப்படுத்தி, தேசியவாத கட்சிகளின் கூட்டணி ஒன்றை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (UPFA) என்ற பெயரில் உருவாக்கியது. UPFA 2005 தேர்தல்களில் சிறு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போதைய குடியரசுத் தலைவர் ராஜபக்சவின் தலைமையில் இறுதிப் போரை நடத்துவதற்கான அரசியல் ஆதரவை உருவாக்கியது.

(13) சட்ட விரோதமான, உடனடி, காரணமற்ற கொலைகள் பற்றிய சிறப்பு அறிக்கை - ஃபிலிப் அல்ஸ்டன் - இலங்கைக்கான தூதகம் (E/CN.4/2006/53/Add.5); கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போனவர்கள் குறித்த செயல் குழுவின் அறிக்கை (E.CN.4/2000/64/Add.1); சித்திரவதைக்கு எதிரான ஆணையத்தின் முடிவுகளும் பரிந்துரைகளும்: இலங்கை (CAT/C/LKA/CO/2).

(14) http://ipsnews.net/news.asp?idnews=43509

(15) இறுதிக் கட்டங்களில், கூட்டுத் தலைமையினர் இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமைகளைப் பற்றிப் பல கலந்தாய்வுகளை நடத்தி தமது கவலையை தெரிவித்தும் பொதுமக்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தும் பல அறிக்கைகளை வெளியிட்டனர்.

(16) 2002 CFAல் முடிவடைந்த அமைதி முயற்சிகளுக்கு முன்பு, போருக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன : இந்திய அரசால் வழிநடத்தப்பட்டு 1985ல் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த திம்பு பேச்சு வார்த்தை; இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்ட 1987ன் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் அதிகாரப் பகிர்தல் மற்றும் தமிழ் மொழிக்கு சம உரிமை போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. 1995ல் ஏற்பட்ட போர் நிறுத்தமும் நேரடிப் பேச்சு வார்த்தையும் சில மாதங்களில் முறிந்து போனது

(தொடரும்)

சனி, மே 14, 2011

தமிழர் எதிரி காங்கிரசுக்கு எதிரான பரப்புரை தாக்கங்கள்

(ஏப்ரல் 30 அன்று இன்னொரு பதிவில் எழுதி வைத்தது. கருத்துக் கணிப்புகள் என்று சொல்லி சூதாட விரும்பாமல் பரவலாக பகிர்ந்து கொள்ளவில்லை) என்னுடைய உள்ளுணர்வில், நான் பேசிய மக்களின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஸ்வீப்தான் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இது போன்ற தேர்தல் கணிப்பு அல்லது விருப்பத்தை செய்வது ஒரு குருட்டு வித்தை போன்றதுதான். 'நடந்தால் அப்போதே சொன்னேன்' என்று சொல்லிக் கொள்ளலாம், 'இல்லை என்றால், மக்கள் மந்தைகள்' என்று பழி போட்டுக் கொள்ளலாம். 'பெரிய நிறுவனங்களில் புள்ளியியல் அடிப்படையில் செய்யும் கணிப்புகளும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்' என்பது என் கருத்து

ஈழப் படுகொலைகள் பற்றி ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது.

  • ஆனந்த விகடனை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். திருமாவேலனின் கட்டுரைகள், தமிழ்நதி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கணிசமான ஒரு பகுதியினரின் மனதில் ஈழப் பிரச்சனையின் ரணத்தை உயிரோடு வைத்திருந்தது.
  • அடுத்ததாக சீமானின் பரப்புரை, அவரது இயக்கம், தனிப்பட்ட செயல்முறை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அளவில் ஈழப் பிரச்சனையின் முகமாக செயல்பட்ட அவரது பணி மகத்தானது.
  • மூன்றாவதாக காங்கிரசை எதிர்த்துக் களப்பணிஆற்றிய தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை. அப்போதே நினைத்தது போல தேர்தலின் வெற்றி தோல்வியை விட கணிசமான மக்களிடம் ஈழப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அது தனக்குரிய பங்கை ஆற்றியது.
  • கடைசியாக நெடுமாறன், வைகோ போன்று தொடர்ந்து உறுதியாக உழைக்கும் தலைவர்கள். மேலே சொன்ன மூன்று பேரும் கடைசிக் கட்ட போரில் நடந்த அநியாயங்களால் மனம் வெதும்பி செயல்பட்டவர்கள் என்றால் இவர்கள் எந்த கால கட்டத்திலும் மனம் ஊசலாடாமல் உறுதியாக நின்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் நான்காவதாக ஜெயலலிதாவையும் இதில் சேர்க்கலாம். கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துவதாகத் தோன்றினாலும். முந்தைய நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் பேசி பத்திரிகைகளில் செய்தி இடம் பெறச் செய்த வகையில் அவரது பணி முக்கியமானது.

அவரது நிலைப்பாடுகளை சராசரி தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக பார்க்கலாம். 1989 வரை ஈழ இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவு. 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது தவறு என்ற குற்ற உணர்வில் கடுமையான ஒதுக்கி வைத்தல், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளதாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்தது.

இறுதிக் கட்டப் போரில் நியாயங்கள், சர்வதேச சட்டங்கள், மனிதாபிமானம் மனித உரிமைகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு போருக்குப் பின் மக்களை கேவலமாக நடத்தும் சிங்கள பேரினவாத அரசின் மீது கோபம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

இது சரி தவறு என்று அவரவர் அரசியல், உணர்வு நிலைப்பாடு பொறுத்து இருக்கலாம். ஆனால் இது ஒரு வகையான விளக்கம்.

இந்தியா டுடேயின் தேர்தலுக்குப் பின்னான கருத்துக் கணிப்பின் திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 105-120 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இதனால் என்ன விளைவு ஏற்படும்?

திமுக உச்ச வரம்பு வெற்றி பெற்றால்

திமுக கூட்டணி - 130 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 25
பாமக - 15
விசி - 5

அதிமுக கூட்டணி - 104 தொகுதிகள்
அதிமுக - 75
தேமுதிக - 15
கம்யூனிஸ்டுகள் - 10
பிறர் - 5

சிறுபான்மை அரசாக இந்த முறை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசுதான் ஏற்படும் அல்லது

அதிமுக, தேமுதிக, காங்கிரசு சேர்ந்து அரசு அமைக்கும் சூழலும் ஏற்படலாம். கம்யூனிஸ்டுகள் எதிரணிக்குப் போய் விடுவார்கள். பாமக அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம். திமுகவின் 2G ஊழலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று காங்கிரசு அதிமுக அணிக்குப் போய் விடலாம்.

இரண்டாவது சூழலில் திமுக கீழ் வரம்பு வெற்றி பெற்றால்,
திமுக கூட்டணி - 115 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 15
பாமக - 7
விசி - 3

அதிமுக கூட்டணி - 120 தொகுதிகள்
அதிமுக - 80
தேமுதிக - 20
கம்யூனிஸ்டுகள் 15
பிறர் - 5

இந்தச் சூழலில் அதிமுக+தேமுதிக+பிறர் ஆட்சி அமைக்க முடியும், கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தரலாம்.

நான் நடத்திய பத்து பதினைந்து பேரிலான கருத்துக் கணிப்பின் அடிப்படையில்
1. அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2. அரசு உதவி பெறுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் - கூலி வேலை செய்பவர்கள், முதியவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்.
3. 200 ரூபாய் பெரிய தொகையாக கருதுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.
4. திமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்

4. சுயதொழில் செய்பவர்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். - வியாபரம், சேவைத் தொழில்கள் (மருத்துவர், வழக்கறிஞர், கணக்காளர்கள்), நிலம் படைத்த விவசாயிகள், மீனவர்கள்
5. நீண்ட கால திமுக ஆதரவாளர்களில் பலர் அதிமுகவுக்கு வாக்களிக்கா விட்டாலும், சுயேச்சை அல்லது 49 O வாக்கு அளித்திருக்கிறார்கள்.
6. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளைச் சட்டை வர்க்கத்தினர் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
7. இளைஞர்களில் பலர் சீமானின் தாக்கத்தால் ஈழப் பிரச்சனை தொடர்பான வெறுப்பில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

என்னுடைய கணிப்பில் திமுகவின் வாக்கு சதவீதம் 2009 நாடாளுமன்றத் தேர்தலை விடக் குறைந்திருக்க வேண்டும். 2009 மே மாதத்துக்குப் பிறகுதான் ஈழத்துக்குச் செய்த துரோகத்தின் முழு சோகமும் மக்களைத் தாக்கியது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் 2G ஊழல், திரைப்படத் துறை ஆதிக்கம் குறித்த கோபங்கள் வெளியாக ஆரம்பித்தன. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

என்னுடைய கணிப்பின் படி, போட்டி நிலைமை இருந்திருந்தால்
திமுக - 65
காங்கிரசு - 10
பாமக - 15
விசி - 5

அதிமுக - 90
தேமுதிக - 25
கம்யூனிஸ்டுகள் - 20
மமக - 3

ஸ்வீப் என்று இருந்தால் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும். அந்தச் சூழலில்
திமுக - 10
காங்கிரசு - 6
பாமக - 8
விசி - 2

அதிமுக - 140
தேமுதிக - 40
கம்யூனிஸ்டுகள் - 23
மமக - 3

முதல்கணிப்பின் படி முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும். கம்யூனிஸ்டுகள்+தேமுதிக கடிவாளங்களுடன் அதிமுக ஆட்சி அமைவது இருப்பதில் நல்ல அமைப்பாக இருக்கும்.

10. அதிகாரக் குவிப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் மற்றும் முறையீட்டு நீதிமன்றங்களின் தலைவர் மற்றும் நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை வரையறுக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை நியமிப்பதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படிப்பட்ட தேர்வுகளைப் பயன்படுத்திக் கொண்ட தற்போதைய அரசின் மீது குடும்ப அரசியல் நடத்துவதான குற்றச்சாட்டுகளை உள்ளன (10)

36. நெருக்கடி நிலை ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் இருப்பது, அரசியல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நெருக்கடி நிலைமை விதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை இன்னும் அதிகமாக்கியதோடு நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஒரு பக்க சார்பை அதிகப்படுத்தி சுதந்திரமான கட்டுப்பாடுகளையும் சமநிலைப்படுத்தலையும் பலவீனப்படுத்தியது.

நெருக்கடி நிலை ஆட்சி முறை 1983லிருந்து 2001 வரை 1989ல் ஒரு சிறு இடைவெளியுடன் இருந்தது, திரும்பவும் 2005லிருந்து இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது.

தற்போது அமலில் இருக்கும் (11) 1979 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான நெருக்கடி நிலை கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்கு அசாதரணமான அதிகாரத்தைக் கொடுத்து அதிகார முறைகேடுகள் மற்றும் உரிமை மீறல்களை தட்டிக் கேட்கும் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பெரிதும் மட்டுப்படுத்துகின்றன. மற்ற சட்டங்களும் அரசின் கடமையான பல்வேறு உரிமை மீறல்களை விசாரிப்பதை பலவீனப்படுத்தின.

குறிப்பாக பிணைச் சட்டம் எண் 20, 1982 (ஆகஸ்டு 1977க்கும் டிசம்பர் 16, 1988க்கும் இடையே அமலில் இருந்தது)ன் படி, எந்த ஒரு அமைச்சர் , சிவில் அல்லது ராணுவ அதிகாரிகள், அல்லது அவர்களின் கட்டளையின் கீழ் பணியாற்றும் யார் மீதும், சட்டப்படியோ அல்லது சட்ட விரோதமாகவோ சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நல்ல எண்ணத்தில் எடுக்கும் செயல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதை தடை செய்யப்படுகிறது. இத்தகைய சட்டப் பாதுகாப்பை வழங்குவதன் இந்தப் பிணை சட்டம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.

37. இந்த சட்டங்கள் காணாமல் போதல், சட்ட விரோத கொலைகள், சித்திரவதை போன்ற மனித உரிமை மீறல்கள் நடப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கின. அந்தக் கொடுமைகளுக்கு எதிராக முறையான சட்ட மற்றும் அரசியல் சட்ட பாதுகாப்புகள் இருந்தும் அவை பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் போயின, (12). பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சுரண்டல்கள் போன்ற பாலினம் தொடர்பான வன்முறைகளும் அவற்றுக்கு எதிரான சட்ட பாதுகாப்பு இருந்தும் பரவலாக நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ந்த  'தன்னிச்சையற்று ஆள் காணாமல் போவது மற்றும் மற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய குடியரசுத் தலைவர் ஆணையங்களின் விசாரணைகள் பல,  முக்கியமான உண்மை அறியும் பணியைப் புரிந்தன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமோ, மீறல்களின் அமைப்பு ரீதியான இயல்பையோ அவற்றால் வெளிக் கொண்டு வர முடியவில்லை. இந்த அளவில், விசாரணை ஆணையங்கள், சட்ட விரோதச் செயல்களை கட்டுப்படுத்தவோ, உண்மையை நிலைநாட்டவோ, நியாயத்தை நிலைநாட்டவோ போதுமான கருவிகளாக இருக்கவில்லை.

38. அரசு அமைப்புகளை வலுவாக்கவும், அவற்றின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் 2001ல் 17வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் முடிந்தன. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்கு சட்ட பூர்வமான கட்டுப்பாடுகளை அளிப்பதைக் நோக்கமாகக் கொண்ட அந்தத் திருத்தம், காவல்துறை, தேர்தல், மனித உரிமை, லஞ்சம், நிதி, மற்றும் பொதுத்துறை ஆணையங்களுக்கான நியமனங்களை மேற்பார்வை செய்ய ஒரு சுதந்திரமான அரசியல் சட்ட குழுமத்தை உருவாக்கியது. இந்தக் குழுமம் உயர் நீதித்துறை அலுலர்கள், பணியாளர் ஆணையம், அரசு வழக்கறிஞர்கள் போன்ற உயர் பதவி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.

(10) தற்போதைய அரசாங்கத்தில் குடியரசுத் தலைவரின் மூன்று சகோதரர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார்கள். ஒரு சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சராக போரின் இறுதி ஆண்டுகள் முழுவதிலும் பணியாற்றி, இப்போதும் அந்தப் பதவியை கையில் வைத்திருக்கிறார்.. இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ச, குடியரசுத் தலைவரின் மூத்த ஆலோசகர் பதவியை வைத்துக் கொண்டு பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவரின் வடக்கு மாநில மறுகுடியிருப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான செயல்குழுவின் தலைவராக இருக்கிறார். மூன்றாவது சகோதரர் சமல் ராஜபக்ச, மக்களவையின் சபாநாயகராக பணிபுரிகிறார். இன்னும் பல உறவினர்கள் அரசின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்

(11) கெசட் எண் No. 1405/14 (EMPPR 2005, கெசட் எண் 1651/24, மே 2, 2010ல் திருத்தப்பட்டது)ல் வெளியிடப்பட்ட 2005ன் அவசர நிலை (பல்வேறுபட்ட அனுமதிகளும் அதிகாரங்களும்) ஒழுங்குபடுத்தல் எண். 1 ஐப் பார்க்கவும், பொது பாதுகாப்பு ஆணையின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட கெசட் எண் No. 1474/5 (EPPTSTAR 2006, திருத்தப்பட்ட வடிவில்)ல் வெளியான 2006ன் அவசர நிலை
(பயங்கரவாதம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களை தடுப்பதும் தடை செய்வதும்) ஒழுங்குபடுத்தல் எண் 7 ஐப் பார்க்கவும்.

(12) சட்ட விரோதமான, உடனடி, காரணமற்ற கொலைகள் பற்றிய சிறப்பு அறிக்கை ஃபிலிப் அல்ஸ்டன் - இலங்கை தூதகம் (E/CN.4/2006/53/Add.5); கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போனவர்கள் குறித்த செயல் குழுவின் அறிக்கை (E.CN.4/2000/64/Add.1); சித்திரவதைக்கு எதிரான ஆணையத்தின் முடிவுகளும் பரிந்துரைகளும்:
இலங்கை (CAT/C/LKA/CO/2). குறிப்பிட்ட குற்றச் சட்டம் இல்லாத ஆள் காணாமல் போவதைத் தவிர மற்ற குற்றங்களுக்கு குற்றச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு பொருப்பு நிர்ணயத்துக்கான வழிகளை குறிப்பிட்டுள்ளன. 

 (தொடரும்)

வெள்ளி, மே 13, 2011

9. விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
 32. விடுதலைப் புலிகள் நவீன தற்கொலை வெடிகுண்டுகளை உருவாக்கி, அவற்றை ராணுவ, அரசியல் மற்றும் பொது இலக்குகளின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தினார்கள். விடுதலைப்புலி தற்கொலை படையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி (1991), இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்கே பிரேமதாச (1993) மற்றும் பல இலங்கை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களின் சாவுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

பொருளாதார மற்றும் மத இலக்குகளின் மீது தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி பெருமளவு பொதுமக்கள் சாவுக்கும் வழிவகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் ஒதுக்கி வைக்கும் அரசியலைப் பின்பற்றினார்கள். 1990ல் வடக்கு முஸ்லீம்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றினார்கள். தனது கட்டுப்பாட்டு  பகுதிகளின் எல்லைகளில் இருந்த கிராமங்களில் வாழும் சிங்களர்களையும் முஸ்லீம்களையும் படுகொலை செய்தார்கள். தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வன்முறை, மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் போன்ற உத்திகள் விடுதலைப் புலிகளால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.

சிறுவர்களான பையன்களையும், பெண்களையும் படைவீரர்களை அமர்த்திப் பயன்படுத்துவதில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெயர் போனது. அதன் அணுகுமுறைகளின் காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.  செப்டம்பர் 11, 2011க்குப் பிறகு அதன் மீதான தடைகள் அதிகமாயின.

33. 1990களிலிருந்து மே 2009 வரை விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு கிழக்கு இலங்கையின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையேயான  நிலப்பரப்பை கட்டுப்படுத்தும் போராட்டத்தின் போக்கைப் பொறுத்து இந்தப் பகுதிகளின் எல்லைகள்  மாறி வந்தன.

ஒரு நடைமுறை அரசாங்கமாக செயல்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இந்த நோக்கத்திற்காக விடுதலைப்புலிகள் நன்கு திட்டமிடப்பட்ட சர்வதேச அணுகுமுறையை உருவாக்கினார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சொந்தமாக காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், குடிபெயர்வு துறை, வங்கிகள், மற்றும் சில சமூக பணிகளை உருவாக்கினார்கள்(9)

தரை, வான் மற்றும் கடல் திறமைகளுடன், கரில்ல மற்றும் பாரம்பரிய உத்திகளைக் கடைப்பிடிக்கும், பரவலான உளவு அமைப்பால் ஆதரிக்கப்பட்ட நவீன போர்ப்படையையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

34. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் உலகெங்கிலும் பரவியிருக்கிறார்கள். அவர்களில் பெரு எண்ணிக்கையிலானவர்கள், 1980களிலிருந்து அரசாங்கத்தின் வன்முறையான அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து போனவர்கள், மற்றவர்கள் பொருளாதார வாய்ப்புகளுக்காக போனவர்கள். இந்த நாடு கடந்த மக்கள்குழு போரின் போது முக்கியமான பங்கு வகித்தது.

சில பிரிவினர் முக்கியமான பண உதவி, பரப்புரை, சண்டையின் போது விடுதலைப் புலிகளின் தவறுகளை தொடர்ந்து மறுப்பது போன்ற எந்தக் கேள்வியும் கேட்காத நிபந்தனையற்ற ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு அளித்தனர்.  எல்லா ஆதரவும் தானாக கிடைத்தது என்று சொல்ல முடியாது கட்டாயப்படுத்தல் உட்பட்ட தனது உத்திகளை இலங்கையின் கரைகளுக்கு அப்பாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் பரப்பியது.

பெரு எண்ணிக்கையில் இலங்கை தமிழ் அகதிகள் வாழும் நாடுகளில் அவற்றைப் பயன்படுத்தி தமிழர்கள் சொந்த தாய்நாடு ஏற்படுத்த விரும்புவதையும் அதை அடைவதற்கான முறைகளையும் பற்றிய தனது  வரையறையை அனைவர் மீதும் சுமத்தியது. விடுதலைப் புலிகளின் வன்முறைக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு எந்த இடமும் இருக்கவில்லை.

B. சட்டப் படியான ஆட்சி முறை மற்றும் மனித உரிமைகள் வலுவிழந்தது.
35. இலங்கையின் 1978 அரசமைப்புச் சட்டம் அரசின் ஒருங்கிணைந்த இயல்பை வலியுறுத்தி அதிகப்படியான அதிகாரங்களை நிர்வாக குடியரசுத் தலைவரிடம் குவித்தது. அவர் நாட்டின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் தலைமை தளபதியாகவும் பணியாற்றுகிறார். இவற்றைத் தவிர, குடியரசுத் தலைவர் தனது விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு அமைச்சகத்தின் தலைமையையும் ஏற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு, நிதி, திட்டமிடுதல், துறைமுகங்கள் மற்றும் வான்பயணம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய 5 அமைச்சகங்களின் தலைமை வகிக்கிறார் :

(9) அதே நேரம் அரசு அமைப்புகளை இந்தப் பகுதிகளில் தொடர்ந்து இயங்க வைத்து உடல்நலம் கல்வி போன்ற சில சமூகப் பணிகளை அரசு அளித்தது.

(தொடரும்)

வியாழன், மே 12, 2011

8. இனப் போராட்டங்கள் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

=============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
 =============

29. 1970களின் போது தெற்கில் வசிக்கும் சிங்கள இளைஞர்கள் வர்க்க அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக ஒரு பக்கமும், இன அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக வடக்கில் தமிழ் இளைஞர்கள் இன்னொரு பக்கமும், தேசிய கட்டமைப்புகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். தீவிரவாதத்தைக் கையில் எடுத்து அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களை நடத்தினார்கள்(7).

அரசு இந்த இயக்கங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதியது. அடிப்படையான அரசியல் பிரச்சனைகளை தீர்க்காமல், அரசின் அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டங்களை, ஆட்களை காணாமல் போகச் செய்வது, சட்ட விரோதக் கொலைகள் மற்றும் சித்திரவதை போன்ற அடக்குமுறைகள் மூலம் அரசு (8) ஒடுக்கியது.

30. பாரபட்சமான அரசு கொள்கைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் சூழலில் 1950களில், தமிழர்களின் உரிமைப் போராட்டம், ஆரம்பத்தில் காந்திய வழியில் அகிம்சை போராட்டமாக ஆரம்பித்தது. போகப்போக தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுத எதிர்ப்பாக உருவெடுத்தது. தமிழர்களுக்கான தனிநாடு என்பது இந்தப் போராட்டங்களின் மத்திய கோரிக்கையாக இருந்தது.

1970களில் உருவான விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் தீவிரவாதக் குழுக்கள் அரசியல் விவாதங்களை சமரச அணுகுமுறையிலிருந்து பிரிவினையை நோக்கித் திருப்பினார்கள். தமிழர்கள் மீதான  சிங்கள பேரினவாதிகளின் வன்முறை அடக்குமுறைகள் தீவிரமாகி வரும் நேரத்தில் தமிழ் போர்க் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களும் அதிகரித்தன.

அரசின் சில பகுதிகள் 1977, 1979, 1981 மற்றும் 1983ல் தமிழர் எதிர்ப்பு வன்முறைகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், சில நேரங்களில் நேரடி உதவி செய்வதாகவும் செயல்பட்டன. இந்த வன்முறைகள் 1983ல் நடந்த பரவலான தமிழர் எதிர்ப்புத் தாக்குதல்களில் முடிந்தன. சிங்கள வன்முறை கும்பல்கள் அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, அதிகாரபூர்வ வாக்காளர் பதிவுப் பட்டியல்களைப் பயன்படுத்தி தமிழர்களை அடையாளம் கண்டு குறி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன, பெருமளவு இடப்பெயர்வும், தமிழர்களின் சொத்து அழிப்பும், தமிழர்கள் வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதும் நடந்தது.

13 இலங்கை வீரர்களை வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கொன்றதற்கு எதிர்வினையாக தாக்குதல்கள் நடந்தன என்று அரசாங்கம் வாதிட்டது. இரண்டு பக்கமும் வன்முறையில் ஈடுபட்டது அந்த ஆண்டுக்கு முன்பும் நடந்திருந்தாலும் 1983ம் ஆண்டு வன்முறைகள் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் தொடக்கம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

2. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்.
31. 1983 இனக் கலவரங்களுக்குப் பிறகு தமிழர்கள் மீதான அடக்குமுறை அதிகரிக்கவே தமிழ்சமூகம் தீவிரவாதத்தை நோக்கித் திரும்பியது. தமிழ்நாட்டில் நிலவிய பயிற்சி மற்றும் அமைப்புக்கு சாதகமான சூழலை ஆதாயமாக பயன்படுத்தி தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியது. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த விடுதலைப்புலிகள், மிகவும் கட்டுப்பாடான, மிகவும் தேசிய உணர்வுள்ள தமிழ் தீவிரவாதக் குழுவாக உருவெடுத்தார்கள்.

1980களின் மத்தியில் பிரிவினை வாதத்தை முன்வைக்கும் பெரிய குழுவாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தது. இந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் போகப்போக தீவிரமான வன்முறை உத்திகளை கையாண்டார்கள். மற்ற தமிழ் குழுக்களை வாயடைக்கச் செய்ய வன்முறையைக் கையாண்டார்கள், தம்மைத் தாமே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அதன் மர்மமான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தை எதிர்பார்த்தார், கண்மூடித்தனமான பின்பற்றுபவர்களை உருவாக்கினார்.

இயக்கத்தினுள் மாற்றுக் கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாகவோ, அரசு சார்பில் வேலை செய்வதாவோ சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று பெயர் சூட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்து விட்ட வன்முறை தமிழ் சமூகத்தினிடையே பயத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியது.

(7) தெற்கு இலங்கையில் படித்த ஏழை கிராமப்புற இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இடது சாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி அல்லது மக்கள் விடுதலை முன்னணி) 1971ல் அதன் முதல் ஆயுதம் தாங்கிய எழுச்சியையும், 1987ல் இரண்டாவது எழுச்சியையும் நடத்தியது. அரசின் விலக்கி வைக்கும் கொள்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் பாரம்பரிய தமிழ் அரசியல் தலைவர்களுக்கு சவாலாகவும் பல தமிழ் தீவிரவாத இளைஞர் இயக்கங்கள் உருவாயின.

(8) தன்னிச்சையற்ற இடம் பெயர்தல் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை (முழு தீவு), 2001;
மேற்கு, தெற்கு மற்றும் சபரகாமுவா மாகாணங்களில் தன்னிச்சையற்ற இடம்பெயர்வு மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை, 1997;
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையற்ற இடம்பெயர்வு மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை, 1997;
மேற்குப் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இடைக்கால அறிக்கை (www.disappearances.org/news/mainfile.php/reports_srilanka);
மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் , “Sri Lanka:
காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கொலைகளில் ‘காணாமல் போவது மற்றும் கொலையை கிளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தும் உத்தி”
(ஆம்ஸ்டர்டாம், 1994), p. 26.

(தொடரும்)

புதன், மே 11, 2011

7. இலங்கை குடியரசும் பேரினவாதத்தின் பின்னணியும் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

II. சண்டையின் வரலாறு மற்றும் அரசியல் பின்னணி
24. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆயுதப் போருக்குப் பிறகு, மே 19, 2009ல் இலங்கை அரசாங்கம் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் (விடுதலைப்புலிகள்) மீதான தனது வெற்றியை அறிவித்தது. இறுதிக் கட்டப் போர் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறுவது குறித்த எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. அவற்றைப் பற்றி பொதுச்செயலாளருக்கு அறிவுரை வழங்கும்படி குழு பணிக்கப்பட்டது.

சிக்கலான, விவாதக்குட்பட்ட இலங்கையின் அரசியல் வரலாற்றை பகுப்பாய்வது குழுவின் பணியில் அடக்காது என்றாலும், கடைசிக் கட்டப் போர் நிகழ்வை அது தொடர்பான அரசியல் மற்றும் சமூக சூழலில் பொருத்திப் பார்க்க, வரலாற்றின் சில கூறுகளை கருத்தில் கொள்வதை குழு அவசியமாகக் கருதுகிறது.

25. இலங்கை ஜனநாயக சோஷலிய குடியரசு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 18 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இலங்கையில் வாழும் 2.1 கோடி மக்கள் இனத்தாலும், மொழியாலும் வேறுபட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

74% பேர் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களர்கள், 18 சதவீதம், தமிழ் பேசும் பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் (இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் முறையே 13 சதவீதம் மற்றும்  5 சதவீதம்), 7 சதவீதம் மூர்கள் மற்றும் மலாய்கள் அடங்கிய இசுலாத்தைக் கடைப்பிடிக்கும் பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள், 1 சதவீதம் சிறு தேசிய குழுக்களான பர்கர்கள், மற்றும் வெத்தாக்கள் இன்னும் பிற குழுக்கள்(5), கிருத்துவர்கள் சில சமூகங்களில் சிறு சதவீதத்தினராக இருக்கிறார்கள்.

26.  முதலில் போர்ச்சுக்கீசியர்கள், பிறகு டச்சுக்காரர்கள், இறுதியாக பிரித்தானியர்கள் என்று தொடர்ந்த நான்கு நூற்றாண்டுகள் குடியேற்ற ஆட்சிக்குப் பிறகு பிரித்தானியர்களிடமிருந்து 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றது(6). 

சுதந்திரம் பெற்றதிலிருந்து வெவ்வேறு இனக் குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலை குழுவினால், பேரினவாத சிங்கள அரசின் கீழ்  இலங்கை ஆட்சி செய்யப்படுகிறது, அதில் சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மக்களாட்சியின் உறுதியான அடையாளங்களான பொது வாக்குரிமை, பல கட்சி முறை, சிறப்பான தேர்தல் முறை, இவற்றுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயர்ந்த படிப்பறிவு வீதங்கள், குறைந்த குழந்தை இறப்பு வீதம் போன்ற முக்கியமான மனித மேம்பாட்டு சாதனைகளுக்கு நடுவில் அவற்றுக்கு முரணாக நீண்ட உள்நாட்டுப் போர் வரலாறு இலங்கைக்கு இருக்கிறது.

A. இன உணர்வும் அரசியலும்.
27. அரசியல் மற்றும் இன அடிப்படையில் அதிகமாகி வந்த பிரிவுகளின் வன்முறை வெளிப்பாடுதான் ஆயுதம் தாங்கிய போராட்டம். சிங்கள மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை போராட்டமாக அது வெளிப்பட்டது.

1. தேசியஇன உணர்வின் எழுச்சி
28. சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் மேல்தட்டு மக்கள், குறுகிய கால அரசியல் லாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மத மற்றும் இன உணர்வுகளைத் தூண்டி விட்டார்கள். அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பல இனஇயல்புடன் கூடிய அரசை உருவாக்கும் நீண்ட கால கொள்கைகள் பின்பற்றப்படாததால், மாற்றங்களினாலும் பிரிவுகளினாலும், ஒன்றுபட்ட தேசிய அடையாளம் உருவாவது பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சிங்கள-புத்த தேசியம் உருவாகி புத்த மதத்தின் புனித இடமான இலங்கையின் சிறப்பு பாதுகாப்பாளர்களாக சிங்களர்களுக்கு சிறப்பு இடம் இருக்கிறது என்று வாதிட்டது. இந்தக் கூறுகள், அரசின் தன்மை, நிர்வாகத்தன்மை மற்றும் இனங்களுக்கு இடையேயான உறவில் அழிவுக்கு வழிவகுத்த தொடர்ந்து பீடிக்கும் விளைவுகளுக்கு காரணமாக அமைந்தன.

(5) மலையகத் தமிழர்கள், உள்நாட்டுத் தமிழர்கள் அல்லது தோட்டத் தமிழர்கள் என்றும் அறியப்பட்ட இந்தியத் தமிழர்கள், பிரித்தானியர்கள் தென் இந்தியாவிலிருந்து 19வது மற்றும் 20வது நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டங்களில் வேலை செய்ய இலங்கைக்கு அழைத்து வந்த தொழிலாளர்களின் வழி வந்தவர்கள் ஆவார்கள். பல ஆண்டுகள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அவர்கள் இலங்கையின் மிகவும் வறிய, ஒதுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாக இருக்கிறார்கள்.

முஸ்லீம்கள், இலங்கையின் தனிப்பட்ட தேசிய இனமாக கருதப்படுகிறார்கள்.
மக்கள் தொகை புள்ளி விபரங்கள் http://www.statistics.gov.lk/page.asp?page=Population தளத்திலிருந்து.

(6) 1972 அரசியல் சட்டத்தின்படி, பெயர் மாற்றப்பட்டதற்கு முன்பு சிலோன் குடியரசு என்று அறியப்பட்டது.

(தொடரும்)

செவ்வாய், மே 10, 2011

6. இலங்கை அரசின் ஒத்துழையாமை (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
21. அந்தக் குறிப்புரை தெளிவுபடுத்துவது போல, செப்டம்பர் 2010ன் ஆரம்பத்திலிருந்து பணியை முடிக்கும் வரை, குழு இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்தது. இந்தக் குழு பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்கும் பொறுப்பை மட்டுமே கொண்டிருப்பதாகவும், எந்த விதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை என்றும் குழுவினரும் ஐக்கிய நாடுகள் அலுவலர்களும் அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெளிவு படுத்தினார்கள்.

பல மாதங்கள் குழுவுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்த பிறகு, அரசு குழுவை இலங்கைக்கு வருமாறு அழைத்தது. ஆனால் நடைமுறையில் பயணத்தின் வழிமுறைகளை குழுவுடன் விவாதிக்க மறுத்ததன் மூலம் அந்த அழைப்பை  திரும்பப் பெற்றுக் கொண்டது. டிசம்பர் 2010ல் ஒரு கடிதம் மூலம் 'குழு எல்எல்ஆர்சிக்கு மனு கொடுப்பதை மட்டும் செய்ய முடியும்' என்று அரசாங்கம் வலியுறுத்திய பிறகும் குழு இலங்கைக்குப் பயணம் செய்யும் விருப்பத்தை மறுபடியும் உறுதி செய்தது.

ஜனவரி 2011ன் தொடக்கத்தில் அரசாங்கம் இந்த அணுகுமுறையை நிராகரித்த பிறகு பயணத்தைப் பற்றி தொடர்பு கொள்ளவே இல்லை. மாறாக, குழுவின் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளித்தது, அவை ஜனவரி இறுதியில் அனுப்பி வைக்கப்பட்டன, எல்எல்ஆர்சி மற்றும் பிற உள்நாட்டு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு சிறு குழுவை அரசாங்கம் நியூயார்க்குக்கு அனுப்பி வைத்தது, அதில் எல்எல்ஆர்சியின் எந்த உறுப்பினரும் இல்லை. 

22. குழு இலங்கைக்குப் பயணம் செய்து பொறுப்பு நிர்ணய பிரச்சனையில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் எல்எல்ஆர்சியை சந்திக்க இலங்கை அரசு அனுமதி மறுத்ததைக் குறித்து இந்தக் குழு தன் வருத்தத்தை பதிவு செய்கிறது. இலங்கைக்குப் போவது பணிக்குத் தேவையான ஒன்றாக இல்லா விட்டாலும், (அதிகார நிலைப்பாடுகளை பிற வழிகளில் குழு தெரிந்து கொண்டாலும்) எல்எல்ஆர்சி மற்றும் அரசு அலுவலர்களை சந்தித்து அவர்களின் புரிதல்களை நேரடியாக தெரிந்து கொள்ளவும், குழுவின் நிபுணத்துவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

எழுத்து மூலமான பதில்களை வரவேற்று, நேருக்கு நேர் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாலும், இந்தக் குழு எதிர்பார்த்த உறவாடலாக அது இல்லை.

E. குழுவின் பதிவுகளின் ரகசியத் தன்மை.
23. சில எழுத்து மற்றும் வாய்மொழி தகவல்களை, பிற்பாடு பயன்படுத்துவதில் முழுமையான ரகசிய காப்பீட்டு நிபந்தனையின் கீழ் குழு வரப்பெற்றது. முறையான சட்ட ஆலோசனையின் கீழ், சட்ட விவகாரங்களுக்கான அலுவலகம் (OLA) பொதுச்செயலாளரின் வெளியீடான "தகவல் சென்சிடிவிடி, வகைப்பாடு, கையாளுதல் (ST/SGB/2007/6)" ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை குழுவின் பதிவுகளுக்கு பயன்படுத்தலாம் என்று சொன்னது. 

அந்த வெளியீடு ஒரு ஆவணத்தை கண்டிப்பாக ரகசியமானது என்று வகைபிரிக்க வழிசெய்கிறது. 20 ஆண்டுகளுக்கு அதை அணுகுவதில் கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்குப் பிறகு ரகசிய நீக்கல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வைத்திருப்பது அல்லது வெளியிடுவதன் சாதகங்களை எடை போடவும் வழி செய்கிறது. கூடவே ஓஎல்ஏ, குழுவின் பணிக்கு தேவைக்கேற்ப பிற்பாடு பயன்படுத்தும் முழுமையான ரகசியத்துக்கான உறுதிமொழியை குழு வழங்கலாம் என்று உறுதி செய்தது. அதன் விளைவாக கிட்டத்தட்ட குழுவின் எல்லா பதிவுகளும், "கண்டிப்பாக ரகசியமானவை" என்று வகைபிரிக்கப்பட்டு, சிலவற்றில் எதிர்கால பயன்பாடு குறித்த கூடுதல் பாதுகாப்புகளும் தரப்பட்டுள்ளன.

பிளஸ் -2 ஃபெயில் (புனைவு)


பிளஸ்-2 தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர் அன்புச் செல்வத்திடம் தினக் கண்ணாடி நிருபர் பேட்டி கண்ட விபரங்கள்

பத்திரிகையாளர் :
நீங்க பிளஸ்-2வில் ஃபெயிலானது பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

அன்புச் செல்வம்:
அதைக் கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்க பிளஸ்-2வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தீர்கள்?

பத்திரிகையாளர் :
நான் படிச்ச சமயத்தில் பிளஸ்-2 கிடையாது, பியூசி படித்தேன்.

அன்புச் செல்வம் :
பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடச் செய்யாத உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க வெட்கமாக இல்லையா?

பத்திரிகையாளர் :
இல்லை...., நல்லா படிப்பீங்க, மார்க் எடுப்பீங்கன்னு உங்க அப்பா அம்மா நம்பிக்கை வச்சிருந்தாங்க....

அன்புச் செல்வம் :
நான் 4ம் வகுப்பு படிக்கும் போது கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய போது எனது ஆசிரியர் என்னைக் கட்டித் தழுவி கண்ணீர் உகுத்ததை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

7ம் வகுப்பில் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வாங்கி வந்த போது என்னை வருங்காலத்தின் விடிவெள்ளி என்று எல்லோரும் போற்றியதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

அதை எல்லாம் விடுங்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றேனே அதைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?

பத்திரிகையாளர்:
இல்லை...., டிவி பார்ப்பதைக் குறைத்து கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் பாசாகியிருப்பீங்க என்று சொல்றாங்களாமே?

அன்புச் செல்வம்:
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, நான் பார்க்கிறேன். அவன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாது, திரையரங்குக்குப் போய்தான் படம் பார்க்க வேண்டும். பொறாமையில் பேசுபவர்களை உலகம் நன்கு அறியும்.

பத்திரிகையாளர் :
சரி, இப்போ என்னதான் செய்யப் போறீங்க? திரும்பவும் எழுதி பாஸாகும் உத்தேசம் உண்டா? உங்க கூட ஃபெயிலானவங்க எல்லாம் மறு தேர்வு எழுதப் போறதா சொல்றாங்களே!

அன்புச் செல்வம்:
அதைப் பற்றிச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் முடிவு எடுக்கப்படும். இப்போது எங்கள் வீட்டுக்கு கம்பி வழி இணைப்புக்குப் பதிலாக நேராக வீட்டுக்கு (DTH)சேவை வாங்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

அன்புச் செல்வத்துடன் சுற்றும் அவரது ரசிகரான 8ம் வகுப்புப் படிக்கும், இளையகண்ணன் கருத்து சொல்கையில்

அன்புச் செல்வத்தைப் பிடிக்காதவங்கதான் கடுப்பில் அவரைக் கொற சொல்றாங்க. அவனுங்க எல்லாம் பக்கத்து வீட்டுக் கார பழனிச்சாமிக்கு வால் பிடிப்பவனுங்க!

அன்புச் செல்வம் அண்ணனைப் போல சைட் அடிப்பதில் எக்ஸ்பர்ட் யாரும் உண்டா?

ஒரு முறை தெருமுனையில் குட்டைச் சுவரில் நாங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு பெண் கடந்து போக, அவர் அடித்த கமென்டில் அந்தப் பெண் ஓடியே போய் விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வழியாகப் போவதையே அந்தப் பெண் விட்டு விட்டாள்.

அவரது கிண்டல் அடிக்கும் திறமைக்கு நான் எப்போதுமே ரசிகன்.

அவரைக் குறை சொல்லணும் என்றாலும் எங்களைப் போன்ற ரசிகர்கள்தான் சொல்லணும். அவங்க அப்பா அம்மாவுக்கும் ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்கு!

அவங்க வீட்டில் டிவி புரோகிராம் எல்லாம் ஒழுங்க வர வைப்பது யாரு? கேபிளை ஒழித்து, DTH கொண்டு வர முயற்சிப்பது யாரு? அதை எல்லாம்  யோசிக்காம, பிளஸ்-2 எக்சாம் பத்தி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க

ஒரு நாள் அவர் சினிமாவில் பெரிய டைரக்டரா வரும் போது பங்களாவில் சொகுசாக வாழப்போவது அவங்க அப்பா அம்மாதானே! அப்போ அவர் படித்த ஆசிரியர்கள் என்று பத்திரிகைகளில் படம் வெளியாகும் போது வேண்டாம் என்று சொல்லி விடுவார்களா!

திங்கள், மே 09, 2011

5. தகவல் சேகரிப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை

===============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
===============

16. இந்தக் குழுவின் பணித் திட்டம் இரண்டு கட்டங்களாக அமைத்துக் கொள்ளப்பட்டது. முதல் கட்டத்தில் தனது பொறுப்புடன் தொடர்புடைய பொருத்தமான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் உடைய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து இலங்கையின் ஆயுதப் போர் குறித்த பலவகையான தகவல்களை இந்தக் குழு திரட்டியது.

இந்தத் தகவல்களில் சில எழுத்து வடிவில் வந்தன - பொதுவாகக் கிடைக்கும் ஆவணங்கள் - அரசு ஆவணங்கள், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அரசு சாரா நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் ரகசியமாக குழுவுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள். மற்ற தகவல்கள், குழு மற்றும் அதன் செயலகம் நடத்திய பல சந்திப்புகள் மூலம் திரட்டப்பட்டன.

இந்தக் குழு ஐக்கியநாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் கடைசிக்கட்ட போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட தனிநபர்களையும் சந்தித்தது. பணியின் இரண்டாவது கட்டத்தில் இந்தக்குழு அறிக்கையைத் தயாரித்தது. இந்த அறிக்கை பதிப்பிப்பதற்கு பொருத்தமான வகையில் எழுதப்பட்டுள்ளது.

17. பொதுமக்களை தொடர்பு கொள்வதைப் பொறுத்த வரை, இந்தக் குழு ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து எழுத்து மூலமான தாக்கீதுகளைக் கேட்டு ஒரு பொது அழைப்பு விடுத்தது. அக்டோபர் 21, 2010ல் குழுவின் தலைமை அலுவலர், இலங்கையின் நிரந்தர தூதுவருக்கு அறிவிக்கையின் நகலை இணைத்து, அது ஐக்கியநாடுகள் சபையின் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்ற குறிப்போடு இந்த முடிவை எழுத்து மூலம் அறிவுறுத்தினார்.

ஆங்கில அறிவிக்கை அக்டோபர் 27, 2010 அன்று வெளியிடப்பட்டது, தொடர்ந்து சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளும் வெளியிடப்பட்டன. டிசம்பர் 15, 2010 என்று அறிவிக்கப்பட்ட கடைசி நாள் பின்னர் டிசம்பர் 31, 2010 வரை நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 31, 2010 வரை இந்தக் குழு 2300 அனுப்புனர்களிடமிருந்து சுமார் 4000 அறிக்கைகளைப் பெற்றது.

18. பெருவாரியான அறிக்கைகளில் குறிப்பிட்ட வகையான விதிமுறை குற்றச்சாட்டுகள் அல்லது இறுதிக் கட்டத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தின் விதிமுறை குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிய தனிநபர் புகார்கள் அடங்கியிருந்தன.

நிகழ்வுகளின் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட ஆவணத் தகவல்களும் வரப்பெற்றன. 

பொதுத் தகவல்கள் மற்றும் நிலவரத்தின் குறிப்பிட்ட நிலைமை பற்றிய பாரபட்சமில்லாத ஆய்வு அறிக்கைகளும் சிறிய அளவில் பெறப்பட்டன.  பொதுவில் கிடைக்கும் மூலங்களிலிருந்து அனுப்பப்பட்ட ஊடக அறிக்கைகள், இணைய இணைப்புகள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவையும் தாக்கீதுகளின் ஒரு குறிப்பிட்ட அளவாக இருந்தன.

கடைசியாக, உண்மையான  தகவல்கள் அல்லது ஆராய்ச்சி இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்ட பரிந்துரைகள் செய்யும்படியும் குழுவிற்கு அறிவுறுத்தும் வேண்டுகோள்களும் பெருவாரியாக வரப்பெற்றன.

19. தாக்கீதுகளை தனித்தனியாக சரிபார்க்க முடியாததால், குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை அளவீடுகளை பராமரிக்க, அவற்றை குழு நேரடி மூலமாக பயன்படுத்தவில்லை (அத்தியாயம் III A வைப் பார்க்கவும்). சில தாக்கீதுகள், மற்ற வழிகளில் கிடைத்த தகவல்களை சரிபார்க்க உதவின.

குழுவின் நடைமுறை பொறுப்புக்கான காலகட்டத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அடங்கிய பெரும் அளவிலான தாக்கீதுகள், கடைசிக் கட்ட போர் தொடர்புடையதாக மட்டுமில்லாமல் பரவலாக கடந்தகாலத்தை விவாதிப்பதன் அவசரத் தேவையை வலியுறுத்தின.

D. இலங்கை அரசுடன் உறவாடல்.
20. இந்தக் குழு உருவாக்கப்பட்டதிலிருந்தே,  பொறுப்பை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கவும், அரசின் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும், எப்படி பொறுப்பு நிர்ணயித்தல் செய்லடுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட விரும்பியது. இந்தக் குழு நடைமுறையில் அரசாங்கத்திற்கு ஒரு உதவி அமைப்பாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையை பொதுச்செயலாளர் குழுவிடமும் அரசாங்கத்திடமும் தெரிவித்தார்.

குறிப்பாக எல்எல்ஆர்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது பலனுடையதாக இருக்கும் என்று குழு தொடர்ந்து கருதியது. ஏனென்றால் அரசாங்கம், அதை உள்நாட்டில் உருவான பொறுப்பு நிர்ணய வழிமுறை என்று அறிவித்திருந்தது. அதே நேரத்தில் மற்ற உள்நாட்டு அமைப்புகளும் பொறுப்பு நிர்ணயத்தைப் பொறுத்த வரை முக்கிய பங்கு வகிக்கின்றன் என்று கருதிய குழு அரசாங்கத்தின் மூலமாக அவற்றுடன் சேர்ந்து பணியாற்ற விழைந்தது.  இலங்கை அரசுடனும் எல்எல்ஆர்சியுடனும் தொடர்பு கொள்ள குழு எடுத்துக் கொண்ட முயற்சிகளை பிற்சேர்க்கை 2ல் காணலாம்.
 

ஞாயிறு, மே 08, 2011

எரிந்து போகும் இராவணன் மனை!

சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்
ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன-எரிந்தன, நெடு நிலை ஏழும்.

1. 2006 ஏப்ரலில் இலங்கையில் இறுதிப் போர் ஆரம்பமாகிறது. என்ன நடக்குமோ? (27-4-06)
மீண்டும் ஈழப் போர்

2. 'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' (19-12-06)
ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

3. நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன். (24-12-06)
ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

4. தமிழ்ச் செல்வனின் மறைவு (2-11-07)
:-(((

5.  ஆயிரம் ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்து, பல லட்சம் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்கி வெறியாட்டம் ஆடும் சிங்கள ராணுவமும், இந்தியப் பத்திரிகைகளும், இந்திய அரசியல் தலைவர்களும் நாசமாகப் போகட்டும். (18-5-09)
கொக்கரிக்கும் எல்லோரும் நாசமாகப் போகட்டும் 

6. செய்தித் தளங்களில் எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ரீடிஃப் டாட் காமில் போட்டிருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பத் தலைவர், அப்பாவி இளைஞர் என்றுதான் முகங்களைக் காட்டியது. தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என்று வில்லன் சித்திரிப்புக்கு உட்பட்டு விட முடியாத படங்கள். உண்மையில் வயிறு கலங்கியது. இப்படி ஒரு கொக்கரிப்பா!  (19-5-09)

யார் பயங்கரவாதி!

7. ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்? (21-5-09)

வாய்ச் சொல் வீரர்கள்

8. முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! (28-1-10)
கையறு நிலையில் தமிழகம்!

9. 72 வயது மூதாட்டியான திருமதி பார்வதியை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிய இந்திய அரசின் நடத்தை குறித்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். (18-4-10)

ஒரு இந்தியக் குடிமகனின் எதிர்ப்பு நிலை

10. கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது. (20-4-10)
நாட்டுக்குத் தலைவனுக்கு குடும்பப் பாசம் கண்ணை மறைத்திருந்தது

11. "எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்."

அ. தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு (30-5-10)
ஆ. தமிழகம் இழைத்த துரோகம் (31-5-10)
இ. தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு (1-6-10)
ஈ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1 (10-6-10)
உ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 2 (17-6-10)
ஊ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 3 (14-6-10)
எ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 4  (23-6-10)
ஏ. தமிழ்ப் புழுக்கள் (23-6-10)
ஐ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5 (23-6-10)
ஒ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6 (25-6-10)
ஓ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7 (26-6-10)
ஔ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8 (26-6-10)

12. வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள் (6-7-10)

13. இலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன் என்ற இடுகைக்கு சில திருத்தங்கள்:
இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் - 2 (8-7-10)

14. தமிழ்நாட்டு மக்களின் (நம்) மீது முத்துக் குமாருக்கு இருந்த நம்பிக்கை கண்கலங்க வைக்கிறது. தன் உடலை துருப்புச் சீட்டாக்குமாறு திட்டம் சொல்லி உடல் நீத்த முத்துக்குமாரின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்து விட்டோம்?!

அவரது மரண அறிக்கையை நகல் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூட நிறைவேறவில்லை. பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கும் இந்த நியாயத்துக்கான குரலைக் கொண்டு சேர்ப்போம்.

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் (14-7-10)
அ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 1 உழைக்கும் தமிழ் மக்களுக்கு (15-7-10)
ஆ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
இ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
ஈ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 4 வெளிமாநிலத்தவருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 5 காவல் துறையினருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 தமிழீழ மக்களுக்கு (16-7-10)
ஊ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 7 சர்வதேச சமூகத்துக்கு (16-7-10)
எ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 8 பதினான்கு அம்ச கோரிக்கைகள் (16-7-10)

15. போர்க் குற்றங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்கள் ஆட்சியிலும், ஃபொனெஸ்கோ எதிர்க்கட்சியிலும் இருப்பதால், அவை தொடர்பான விசாரணைகளும் மேல் நடவடிக்கைகளும் சாத்தியமில்லை

ஈழப் போர்க் குற்றவாளிகள்! (02-12-10)

4. நடைமுறை அதிகாரங்கள் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

2. குழுவின் நடைமுறை அதிகாரம்

12. "போரின் இறுதிக் கட்டங்கள்" பற்றிய கூட்டு அறிக்கை செயல்படுத்தப்படுவதைக் குறித்து பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்கும்படி குழுவின் பணி விதிமுறைகள் வேண்டுகின்றன. செப்டம்பர் 2008லிருந்து மே 2009 வரையான கால கட்டத்தில் இந்தக் குழு கவனம் செலுத்தியது. இந்தக் காலகட்டம் மிக மோசமான பன்னாட்டு சட்ட விதிமீறல்கள் நடந்ததாகச் சொல்லப்படும் கடுமையான கொடுமையான போர்க் காலத்தை உள்ளடக்கியுள்ளது.

செப்டம்பர் 2008 என்பது விடுதலைப்புலிகளின் நடைமுறை தலைநகரமான கிளிநொச்சி மீது அரசாங்கத்தின் இறுதி ராணுவ தாக்குதல் ஆரம்பித்ததைக் குறிக்கிறது. வன்னியில் பணிபுரிந்து வந்த பன்னாட்டு அமைப்புகளின் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்து விட்டதால் பன்னாட்டு கண்காணிப்பும் இத்தோடு முடிவுக்கு வருகிறது.

13. சில சமயங்களில், கூடுதல் புரிதலுக்காக, இறுதிக் கட்டம் என்று மேலே வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முற்பட்ட பிரச்சனைகளையும் இந்தக் குழு விவாதிக்கிறது. கூடுதலாக, இறுதிக் கட்டப் போர் முடிவதற்கு முன்பு ஆரம்பித்து அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புடைய, பகை நிலைமை முடிந்த பிறகும் தொடர்ந்த, இன்றும் தொடரும் மீறல் குற்றச்சாட்டுகளையும் இந்தக் குழு கருத்தில் எடுத்துக் கொண்டது.  ஆயுதப் போராட்டத்துக்கு நெருங்கிய தொடர்பு இல்லாத உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை, குறிப்பாக இலங்கையின் பிற பகுதிகளில் நடந்தவற்றை இந்தக் குழு ஆராயவில்லை.

3. விதிமீறல் குற்றச்சாட்டுகளின் பொருளடக்கம்
14. குறிப்புரை விதிமுறைகள், மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றது. சண்டையில் கலந்து கொள்ளாத மக்களை நடத்தும் வழிமுறைகள், போர் உத்திகள், நடத்தைகள் போன்ற மனிதாபிமான சட்டங்களைப் பொறுத்த வரை, ஜெனீவா கூட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்ட பாரம்பரிய அளவீடுகளையும் மற்றும் வழக்கத்திலுள்ள சர்வதேச சட்டத்தின் அளவீடுகளையும் இந்தக் குழு முன்வைக்கிறது.

மனித உரிமை சட்டங்களைப் பொறுத்த வரை, இந்தக் குழு அரசியல் குடிஉரிமையையும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளையும், குறிப்பாக இலங்கை நிறைவேற்றியுள்ள பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இதைச் செய்யும் போது, பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் ஆயுதப் போர்களின் தாக்கங்கள் பற்றிய பாதுகாப்பு சபை தீர்மானங்களை இந்தக் குழு கருத்தில் கொண்டது. நீடித்த அமைதி மற்றும் சமாதானத்தின் மீது இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்தக் குழு அங்கீகரிக்கிறது. (4).

பொறுப்பு நிர்ணயம் தொடர்பான மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை உள்ளடக்கி இலங்கையின் உள்நாட்டு சட்டங்கள் இருக்குமானால் இலங்கையின் சட்டங்களையும் இந்தக் குழு விவாதிக்கிறது. கடைசியாக இந்தக் குழு போரின் முக்கிய பங்காளர்களான அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் செய்ததாகக் கூறப்படும் மீறல்களைப் பற்றி பேசுகிறது.

C. பணித்திட்டம்.
15. இந்தக் குழு தனது பணிமுறைகளை தானே வகுத்துக் கொள்ளும் என்றும் ஒரு செயலகத்தின் உதவி அதற்கு இருக்கும் என்றும் குறிப்புரை விதிகள் குறிப்பிடுகின்றன. செப்டம்பர் 2010 மத்தியில் பணியைத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் அமைப்புக்குள் பணி புரியும் ஊழியர்களிலிருந்து ஒரு செயலகம் உருவாக்கப்பட்டது.

வேறு வழிகளில் கிடைக்காத ஆலோசனைகளைப் பெற இந்தக் குழு ஒரு சில வெளிநிபுணர்களையும் கூடுதலாகப் பயன்படுத்திக் கொண்டது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலகத்தின் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஏற்கனவே இருக்கும் குறிப்புரை குழுவும் இந்தக் குழுவுக்கு உதவி செய்தது.

(4) பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் 1325 (2000), 1612 (2005), 1674 (2006), 1820 (2008), 1882 (2009) and 1888 (2009) ஆகியவற்றைப் பார்க்கவும்.

(தொடரும்)

சனி, மே 07, 2011

3. குழுவின் பொறுப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

=====
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) - ஆங்கில மூலம்
======
எனவே, இந்தக் குழு மனிதநேய மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்ட மீறல்களுக்கான, குறிப்பாக பலவீனமான குழுக்களான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மீறல்களுக்கான, பொறுப்பு நிர்ணயிப்பது தொடர்பான செயல்முறைகள், தகுதரங்கள், ஒப்பீட்டு அனுபவங்கள் பற்றிப் பரவலாக கவனம் செலுத்தியது. இந்த பிரச்சனை தொடர்பாக நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின்  தற்போதைய அணுகுமுறைப் பற்றிய முழுச் சித்தரிப்பை அளிக்க முயற்சிக்கிறது. 

பொறுப்பு நிர்ணயிப்புக்கு தொடர்புடைய அல்லது தொடர்பு இருக்கக்கூடிய இலங்கையின் உள்நாட்டு அமைப்புகளையும் பரிசீலித்து, அவை இலங்கையின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கடமைகளை எந்த அளவு நிறைவு செய்கின்றன என்றும் உலக அரங்கில் சிறப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைளை எந்த அளவு பிரதிபலிக்கின்றன என்றும் குழு ஆராய்ந்தது.

கடைசியாக, இந்தக் குழு இறுதிக் கட்ட போருக்கான பொறுப்பு நிர்ணயிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டது. 'கற்றுக் கொண்ட பாடங்கள், மற்றும் சமாதான ஆணையம்(LLRC)' உருவாக்கப்பட்டது இந்தக் கொள்கைகளில் அடங்கும்.

8.  பொறுப்பு நிர்ணயம் என்பதை, கடந்தகால மனித உரிமை மற்றும் மனித கௌரவ மீறல்களுக்கு தனிநபர் மற்றும் அமைப்புகளின் அரசியல்ரீதியான, சட்டரீதியான மற்றும் தார்மீக பொறுப்பை நிர்ணயிப்பதற்கான பொதுவான நடைமுறையாக இந்தக் குழு  கருதுகிறது. பொறுப்பு நிர்ணயம், உண்மை, நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் சண்டைக்குப் பிறகு நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தத் தேவையான விரிவான செயல்பாடுகளும் இதனுடன் ஒருங்கிணைந்து இருக்கிறது என்றும் இந்தக் குழு கருதுகிறது.

அறிக்கையின் பிற்பகுதி பொறுப்பு நிர்ணயத்தின் கூறுகளையும் பகுதிகளையும், பொறுப்பு நிர்ணயம் குறித்த இலங்கை அரசின் கருத்துக்களையும் விவரிக்கிறது.

9. பொறுப்பு நிர்ணயத்துக்கான தகுதரங்களும் வழிமுறைகளும் வெற்றிடத்தில் பரிசீலிக்கப்பட முடியாது. குழுவின் குறிப்பு விதிகளில்  பொதுச்செயலாளருக்கு அது அளிக்கும் அறிவுரை, விதிமீறல்களின் தன்மை மற்றும் வீச்சைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. "தன்மை மற்றும் வீச்சு" என்பவை குற்றச்சாட்டுகளின் பரவல், சட்ட தகுதிகள் இரண்டையும் குறிப்பிடுகின்றன.

எனவே  குற்றச்சாட்டுகளின் வீச்சை நிர்ணயிக்க பல்வேறுபட்ட இடங்களிலிருந்து தகவல்களை திரட்டி, அவற்றின் சட்ட அடிப்படையைப் பரிசீலித்து பொறுப்பு நிர்ணயம்பற்றிய கூட்டு அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக ஆகச் சிறந்த அறிவுரையை பொதுச்செயலாளருக்கு குழு அளிக்க இந்த விதிமுறை வேண்டுகிறது.

சர்ச்சைக்குள்ளான தகவல்களின் உண்மை நிலை குறித்து குழுவால் முடிவு எடுக்க முடியாததால், ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கமாக புரிந்து கொள்ளப்படும் 'உண்மை அறிதலை' இந்தக் குழு நடத்தவில்லை. அரசுகளின், அரசுசாரா அமைப்புகளின் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது தவறுகள் குறித்த முடிவுகளை உருவாக்கும் முறையான விசாரணையையும் இந்தக் குழு நடத்தவில்லை. (3)

10. இலங்கையில் பொறுப்பு நிர்ணயம் செய்வதற்கு பொதுச்செயலாளர் பயன்படுத்தும் வகையில், குற்றச்சாட்டுகள் மற்றும் பொறுப்பு நிர்ணயத்துக்கான பலவகை வழிமுறைகளைப் பற்றிய குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில், பரிந்துரைகளை இந்தக் குழு அளித்திருக்கிறது.  பணி செய்த காலகட்டத்தில் குழுவுக்குக் கிடைத்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

11. பணியின் ஆரம்பத்திலிருந்தே பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகளும், இந்தக் குழு பொதுச்செயலாளருக்குக் கீழ் பணி புரிந்தாலும், இறுதியில் பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்க இருந்தாலும், தன்னிச்சையாக செயல்படுவதற்கான அதிகாரம் அதற்கு இருப்பதாக தெளிவு படுத்தினார்கள். மேலும் குழு இலங்கை அரசைச் சார்ந்து செயல்படத் தேவையில்லை என்பதை ஐக்கிய நாடுகளின் அலுவலர்கள் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தினார்கள்.

(2) கூட்டு அறிக்கையின் முழு உரையை பிற்சேர்க்கை 1ல் காணலாம். 

(3) 'பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு' பிரிவில் ஐக்கியநாடுகளின் 'உண்மை அறிதல் பற்றிய அறிவிக்கை'யைப் பார்க்கவும்.  
பொதுச்சபை தீர்மானம், A/RES/46/59 (1991); ஐக்கிய நாடுகளின் சட்டவிவகாரங்கள் அலுவலகம், அரசுகளுக்கு இடையேயான சச்சரவுகளை அமைதியாக தீர்த்து வைப்பது பற்றிய கையேடு (1992), pp. 24-33.

(தொடரும்)

காங்கிரசைத் தோற்கடிப்போம் முன்னணி

கண்ணனிடமிருந்து மின்னஞ்சல்

வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு பரப்புரையை நடத்தி முடித்த "காங்கிரசு எதிர்ப்பு முன்னணி" யின் மீளாய்வு கூட்டம் கடந்த 22/4/2011 அன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. அதில் வேலூர் பரப்புரையின் நிறை/குறைகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் '2014 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கான அரசியல் தேவையும், அரசியல் மாற்றமும்' பேசப்பட்டன.

'மே 13 தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் காங்கிரசு பெரும் தோல்வியை தழுவும் தருணத்தில் நாம் எப்படி வினையாற்றப் போகிறோம்' என்ற விடயங்கள் பேசப்பட்டன.

இறுதியாக '63 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்த இயக்கங்களை ஒன்று திரட்டி சென்னையில் "காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து சென்னையில் பெரிய விழா ஒன்றினை நடத்த' முடிவுசெய்யப்பட்டது.

'அதே போல காங்கிரசு தோல்வி பெறும் தொகுதிகளிலும் மீண்டும் மக்களை சந்தித்து நன்றியினையும் தெரிவித்துக்கொள்ளும் முறைகளையும் வாய்ப்பு இருந்தால் தெருமுனைகூட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் ' எனப் பேசப்பட்டன.

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஒத்த அமைப்புகள் அல்லது தனி நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
9940963131/9003154128

வெள்ளி, மே 06, 2011

2. குழு உருவாக்கம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

================
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
================
பொறுப்பாணை, உள்ளடக்கம் மற்றும் பணித் திட்டம்

A. குழு உருவாக்கம்
5. இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் நடந்தாகக் கூறப்படும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறிய நிகழ்வுகளுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒரு நிபுணர் குழு அமைப்பதாக பொதுச்செயலாளர் ஜூன் 22, 2010 அன்று அறிவித்தார். குழுவின் குறிப்பு விதிகள் பின்வருமாறு அமைக்கப்பட்டன.

பொதுச்செயலாளரின் பயணத்தின் முடிவில் மே 23, 2009 அன்று வெளியிடப்பட்ட பொதுச்செயலாளர் மற்றும் இலங்கை குடியரசுத் தலைவரின் கூட்டறிக்கையில், இலங்கை அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கும் (விடுதலைப்புலிகள்) இடையேயான ராணுவ நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் இந்தப் புகார்களைத் விசாரிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்த பின்னணியில் இந்தத் தருணத்தில்,
  1. பொதுச்செயலாளர் போரின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான மேற்சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படுவது குறித்து அவருக்கு அறிவுரை கூற  நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளார்.
  2. இந்தக் குழுவின் நோக்கம், பொறுப்பை நிர்ணயிப்பதாக தரப்பட்ட கூட்டு உறுதிமொழி நிறைவேற்றப்படுவதற்கு விதிமீறல்களின் தன்மை மற்றும் வீச்சின் அடிப்படையில் தொடர்புள்ள வழிமுறைகள், சர்வதேச தகுதரங்கள், ஒப்பீட்டு அனுபவங்கள் பற்றி  பொதுச்செயலருக்கு அறிவுரை கூறுதல் ஆகும்.
     
  3. இந்தக் குழு தேவையான மற்றும் பொருத்தமான அனுபவம் உடைய மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். குழு தனது பணி முறைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். இதற்கு ஒரு செயலகத்தின் உதவியும், OHCHRன் ஆதரவும் இருக்கும்.
  4. பணி ஆரம்பித்து 4 மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை பொதுச்செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  5. இந்தக் குழுவுக்கு பொதுச்செயலாளரின் எதிர்பாராத செலவுத் திட்டத்திலிருந்து நிதி வழங்கப்படும்.
  6. மார்சுகி தாருஸ்மேன் (இந்தோனேசியா), தலைமை; ஸ்டீவன் ரட்னர் (யுனைடட் ஸ்டேட்ஸ்); யாஸ்மின் சூகா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரை இந்தக் குழுவின் உறுப்பினர்களாக பொதுச்செயலாளர்  நியமித்தார். இந்தக் குழு செப்டம்பர் 16, 2010ல் தனது பணியை முறையாகத் தொடங்கியது.(1)
B. குழுவின் பொறுப்பாணை

1. குழுவின் பொதுவானபணி
7.  பொதுச்செயலாளருக்கும் இலங்கை குடியரசுத் தலைவருக்கும் இடையேயான மே 23, 2009 கூட்டு அறிக்கையின்படி, எல்லாக் குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் வீச்சைப் பொறுத்து பொறுப்பை நிர்ணயிக்க இலங்கை அரசு இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிப்பது இந்தக் குழுவின் கடமையாகும். (2)

(1). இடையில் ஏற்பட்ட மாற்றங்களினால், குழுவின் அறிக்கைக்கான காலக் கெடு பிற்பாடு மார்ச் 2011 வரை நீட்டிக்கப்பட்டது.

(தொடரும்)

வியாழன், மே 05, 2011

1. அறிமுகம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
அறிமுகம்

1. இலங்கையில் நடந்த போர், சச்சரவுகளுக்கு நடுவில் கொடும் துயரத்தில் முடிவடைந்தது. கொடூரங்களுக்குப் பெயர்போன தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 27 ஆண்டு சண்டை முடிவுக்கு வந்ததில் இலங்கை மக்களும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களும்  நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால், நாட்டின் ஆயுதப்படைகள் இந்த வெற்றியை அடையப் பயன்படுத்திய முறைகளைப் பற்றி இலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள பலர் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகள், வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான வன்னியின் ஒரு சிறு மூலைக்கு தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான பொதுமக்கள் எங்கும் தப்பித்துப் போக முடியாமல், தீவிரமான இரண்டு போர்க்குழுக்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டதை பல மாதங்கள் பெரும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களுமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அரசுத் தரப்பின் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் அந்தப் பகுதியை விட்டுத் தப்பி ஓட முயற்சித்தபோது பெண்களும் குழந்தைகளும் உட்பட பலர் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

மனிதாபிமான உதவிகளுக்கான தேவை அதிகரித்த இந்த நேரத்தில் இலங்கை அரசு அவற்றின் மீதான தடைகளை அதிகரித்துக் கொண்டே போனது. அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், குறைந்தபட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்ச் சேரும் வகையில் சண்டையில் போதுமான இடைவெளி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

2. சண்டை பகுதியிலிருந்து பாரபட்சமில்லாத செய்தி சேகரிப்பு மிகக் குறைவாக இருந்ததால், மே 19, 2009ல் இலங்கை குடியரசுத் தலைவரின் வெற்றி பிரகடனத்தோடு முடிவடைந்த இறுதி ராணுவத் தாக்குதலின் போது உண்மையில் என்ன நடந்தது என்று தெளிவாக தீர்மானிப்பது சிரமமாக இருந்தது. 

இருந்தாலும், அரசாங்கத்தின் முந்தைய கணிப்புகளை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சண்டைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 2,90,000 பொதுமக்கள், சூழப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏறக்குறைய 14,000 பேர், அவர்களில் பலர் பலத்த காயமடைந்தவர்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின் கீழ் கடல் வழியாக காப்பாற்றப்பட்டார்கள்.

இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தீர்மானிக்கப்படா விட்டாலும், கிடைக்கும் எல்லா அறிகுறிகளிலிருந்தும் உயிரிழப்பு மிகவும் அதிகமாக இருந்தது என்று தெரிகிறது. இது இப்படியிருக்க, அரசாங்கம் தான் 'மனிதாபிமான பாதுகாப்பு நடவடிக்கை'யை, 'பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது' என்ற கொள்கையுடன் நடத்தியதாகத் தொடர்ந்து சாதித்து வருகிறது. 

3. உள்நாட்டுப் போர் முடிந்த மூன்றே நாட்களுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் இலங்கைக்குப் போய், சண்டை நடந்த சில பகுதிகளையும் போர்ப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்த்தப்பட்ட மக்களுக்கான முகாம்களையும் நேரில் சென்று பார்த்தார். அந்த பயணத்தின் முடிவில், பொதுச்செயலாளர் இலங்கை குடியரசுத் தலைவருடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

ராணுவ நடவடிக்கைகளின் போது மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் அந்தப் புகார்களைப் பற்றி விசாரிப்பதாக ஒத்துக் கொண்டார். அந்த கூட்டு வாக்குறுதியின் விளைவாகவே இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

4. இந்தக் குழுவின் பொறுப்பாணை, போரின் கடைசிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது குறித்து பொதுச்செயலளாருக்கு ஆலோசனை வழங்குவதாகும். பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்ட நிகழ்வுகளின் தன்மை மற்றும் வீச்சையும் இலங்கை அரசின் எதிர்வினைகளையும் குழு இந்த அறிக்கையில் அலசுகிறது.  குறிப்பாக, பன்னாட்டு தகுதரம் மற்றும் ஒப்பீட்டு அனுபவங்களின் அடிப்படையில், 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சமாதான குழுமம் (LLRC)' மதிப்பீடு செய்யப்பட்டது. 

இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பு நிர்ணயத்துக்கான உள்நாட்டு அமைப்புகளைப் பற்றியும் இந்தக் குழு ஆராய்கிறது. இந்தப் பணியின் போது, இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் பின்னணியையும், பொறுப்பு நிர்ணயத்துக்கான தற்போதைய சூழலையும் குழு கணக்கில் எடுத்துக் கொண்டது. குழுவினரின் பணிகளிலிருந்து உருவான இந்த அறிக்கையில் பொதுச்செயலளாருக்கு ஆலோசனை வழங்கும் விதமாக பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.

(தொடரும்)