சனி, செப்டம்பர் 30, 2006

சந்தை வலிமையின் விளைவுகள் (economics 24)

வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விலைக்குப் பொருட்களை விற்பது நிறுவனம் தனது ஆதாயத்தை மேம்படுத்திக் கொள்ளும் வழி (price discrimination).
ஏற்கனவே பார்த்து போல விலை பத்து ரூபாய் இருக்கும் போது ஐம்பது ரூபாய் கொடுத்தும் பொருள் வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கும் அதே பத்து ரூபாய் விலையில் விற்க வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் ஐம்பது ரூபாய் கொடுக்க முடிபவரிடம் ஐம்பது ரூபாய் விலைக்கும், அந்த விலையில் வாங்காமல் போய் விடக் கூடியவர்களுக்கு குறைந்த விலையிலும் விற்க முடிந்தால் விற்பனையும் குறையாது ஆதாயமும் அதிகமாகும்.

இது எல்லா இடங்களிலுமே நடப்பதுதான்.

  • ரயில் வண்டியில் முதல் வகுப்பில் போனாலும் இரண்டாம் வகுப்பில் போனாலும் போய்ச் சேருவது ஒரே இடம்தான். முதல் வகுப்பில் , கூடுதலாக சில வசதிகளை அளித்து இரண்டு மூன்று மடங்கு வசூலிக்கிறார்கள்.

  • அமெரிக்க பாடப் புத்தகங்கள் இந்தியாவில் விற்கும் போது மூவாயிரம் ரூபாய் விலையை ஐநூறு ரூபாயாகக் குறைத்து Eastern Economy Edition என்று விற்கிறார்கள்.

  • ஒரே பைக்கை சமுராய் என்று ஸ்டிக்கர் ஒட்டி பத்தாயிரம் ரூபாய் ஏற்றி விற்றது TVS நிறுவனம்.
முழுமையான போட்டி இல்லாமல் சந்தைப் பங்கு பெரிய நிறுவனங்களிடம் குவிந்திருக்கும் போது என்ன நன்மை கிடைக்கிறது? ஏன் இத்தகைய போட்டிக் குறைவை அனுமதிக்க வேண்டும்?

இன்றைய விவசாய விளை பொருட்களுக்கான சந்தையைப் பார்த்தாலே இதற்கான விடை கிடைத்து விடும்.

  1. சந்தையிலிருந்து வரும் குறிகளை அவதானித்து அதற்கேற்ப உற்பத்தியை மாற்ற எல்லோருக்கும் சரியான, முழுமையான சந்தை நிலவரங்கள் (marker information) கிடைப்பதில்லை.

  2. அப்படியே விபரங்கள் கிடைத்தாலும் அதன் அடிப்படையில் செயல்பட்டு சந்தைக்கு பொருட்களைக் கொண்டு வரும் போது நிலவரம் தலை கீழாக மாறி, பெரும் இழப்பு ஏற்படுகிறது.

    எல்லா விவசாயிகளுக்கும் அமோக விளைச்சல் கிடைத்தால் சந்தையில் அளவு கூடி விலை சரிந்து ஆறு மாதம் முன்பு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் செயல்பட்டதற்கு தண்டனை கிடைக்கிறது.

  • சந்தையில் தமது பொருட்களுக்கான தேவையை கட்டுபடுத்த முடிந்தால்தான் ஒரு நிறுவனமோ தனி நபரோ சரியாகத் திட்டம் போட்டு பெரும் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.

    புதிய பாணி உடைகள், புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை சந்தையில் விலை போகும் உறுதி இருந்தால்தான் உருவாகும்.

    முழுமையான போட்டிச் சந்தையில் என்ன செய்தாலும் நமக்கு என்ன ஆதாயம் என்ற விரக்தியில் புதிய முயற்சிகளே இல்லாமல் சமூக முன்னேற்றம் தேங்கி விடும்.

இது ஒரு புறம் இருக்க, பெரும்பாலான உலகை மாற்றும் கண்டு பிடிப்புகள் தனிநபர்களின் வீட்டுப் பின்புறத்திலும், சிறு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் நடக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 29, 2006

யாருக்காக?

சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பெரிய குறை யாருக்கு அதன் பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்தான். உலக மயமாக்கலால் மொத்த உற்பத்தியும் பலன்களும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த நல்லூழினால் சிலரிடமே செல்வம் குவிவதைத் தடுக்க முடிவது இல்லை.

அப்படிக் குவியும் செல்வத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது, ஆற்றலிலோ முயற்சியிலோ எந்த வகையிலும் குறைந்து விடாத பிறருக்கும் பலன்களை எப்படிச் சேர்ப்பது என்பதைக் கற்றுக் கொண்டு செயல்படுத்தினால்தான் சந்தைப் பொருளாதார மயமாக்கம் வெற்றி பெற முடியும்.

இதை விவாதிக்கும் நேர்முகம் ஒன்று இன்றைய இந்து நாளிதழில்.

நடைமுறையில் போட்டி (economics 23)

இப்படி பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் முழுமையான போட்டி நிலவும் சந்தைகள் ஒரு பக்கம், அதில் விற்பனை விலையை யாரும் தன்னுடைய நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியாது. இன்னொரு எல்லையில் போட்டியே இல்லாமல் ஒருவரே விலையை தீர்மானிக்க முடியும் ஏகபோகச் சந்தை. நடைமுறையில் இந்த இரண்டுக்கும் நடுவில்தான் பெரும்பாலான சந்தைகள் இயங்குகின்றன.

ஒரு துறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கும் போது என்ன நடக்கும்? ஒரு தொழிற்சாலையின் குறைந்த அளவு உற்பத்தி உயர்ந்த அளவில் இருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். எடுத்துக்காட்டாக, பயணிகள் விமானம் விற்பதில் உலகளவில் இரண்டே நிறுவனங்கள்தான் 90 சதவீதத்துக்கும் அதிகமான சந்தையை ஆக்கிரமித்துள்ளன. (Boeing and Airbus)

  • தொலைக் காட்சி விற்பனையில் உயர் ஆதாயம் உள்ளது என்று திடீரென்று நான் ஒரு புதிய தொழிற்சாலை ஆரம்பித்து களத்தில் குதிக்க முடியாது. அதற்குத் தேவைப்படும் ஆரம்ப முதலீடு, ஒரு தொழிற்சாலை செயல்படும் போது ஆதாயம் கிடைக்கும் உற்பத்தி அளவை முழுவதும் விற்றுத் தீர்க்கும் திட்டங்கள் இல்லாமல் உள்ளே நுழைய முடியாமல் போய் விட சில நிறுவனங்களே போட்டி போடுகின்றன.
  • சென்னை வேலூர் தடத்தில் நல்ல கூட்டம். என் கையில் பணம் இருந்து பேருந்து வாங்க முடிந்தாலும் உடனடியாக சேவை ஆரம்பித்து விட முடியாதபடி அரசுக் கொள்கைகள் தடுத்து விடலாம். இதுவும் போட்டியாளர்களின் எண்ணிக்கைக் குறைவதற்கு ஒரு காரணம்.
இப்படிப்பட்டச் சந்தையில் விலையும் அளவும் எப்படி அமையும்?

ஒவ்வொரு போட்டியாளரும் தனது சந்தை வலிமையின் அடிப்படையில், தனது பொருள்/சேவையில் வாடிக்கையாளருக்கு இருக்கும் கவர்ச்சியைப் பயன்படுத்தி, முழுமையான போட்டி நிலவும் சந்தையில் நிலவக் கூடிய விலையை விட அதிகமாக அமைத்து குறைவான அளவை விற்க முடியும்.

  • போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களது பொருளின் வேறுபாடுகள் குறையக் குறைய இந்த ஆதாயமும் குறைந்து போகும்.

  • எல்லா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து கூட்டாக விலையை தீர்மானிக்க ஆரம்பித்தால் நிலைமை மோனோபோலி போல ஆகி விடும்.

கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே இப்படி போட்டியாளர்கள் கூடி விலையை உயர்த்தும் போக்கு சட்ட விரோதமாக உள்ளது. நேரடியாக திட்டம் போட்டு விலை ஏற்றா விட்டாலும் மறைமுகமாக விலையை ஏற்றும் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆட்டக் கோட்பாடு எனப்படும் game theory இதைப் புரிந்து கொள்வதில் உதவும்.

உலக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு இப்படிப்பட்ட வெளிப்படையான கூட்டுச்-சந்தைக்-கட்டுப்பாட்டில் ஈடுபடுகிறது. 1973-1975ல் இந்த நாடுகள் ஒன்று சேர்ந்து எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைத்து சந்தைக்கு வரும் எண்ணெய் அளவைக் கட்டுப்படுத்தி விட்டன. எண்ணெய் விலை ஒரே ஆண்டில் நான்கு மடங்கு அதிகமாகி உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது.

அன்றிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கூட்டணி தொடர்கிறது. எல்லா உறுப்பினர்களும் கட்டுப்பாடாக உற்பத்தி அளவுகளைக் கட்டுப் படுத்த வேண்டும். ஒருவர் ஏமாற்ற முயன்றால் இந்த ஒப்பந்தம் முறிந்து போய் விடும். எல்லாவற்றையும் சமாளித்து இன்றைக்கும் உலக எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக OPEC இருந்து வருகிறது.

வியாழன், செப்டம்பர் 28, 2006

போட்டியில்லா விட்டால்..... (economics 22)

ஏகபோக ஆதிக்கத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

சந்தையில் வந்து சேரும் பொருளின் அளவு குறைந்தால் விலை ஏறும் என்பது தெரியும். போட்டி நிலவும் போது விலையை யாரும் கட்டுப்படுத்த முடியாததால் ஒவ்வொரு விற்பனையாளரும் போட்டி போட்டுக் கொண்டு செலவுகளைக் குறைத்து சந்தை விலைக்குக் குறைந்த செலவில் தம்மால் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்து விற்பார்கள்.

இதனால் சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிலவும் தொழில் நுட்ப வசதிகள், மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மிகச் சிறந்த முறையில் உற்பத்தி நடந்து அந்த விலைக்கு வாங்க விரும்பும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருள் கிடைத்து விடுகிறது. இதுதான் முழுமையான போட்டிச் சந்தையின் மிகப் பெரிய ஆதாயம்.

ஒரே நிறுவனம் மட்டும் விற்கவோ வாங்கவோ செய்தால் என்ன நடக்கும்?

அந்த நிறுவனம் சொல்வதுதான் விலை. அதனால் எந்த விலையில் தமது வருமானம் உச்சமாகிறதோ அந்த விலை அமையும் படி அளவைக் குறைத்துக் கொள்ளும் ஒரு ஏகபோக நிறுவனம்.

சோப்புப் பொடி தயாரிக்கும் நிறுவனத்தின் சந்தையை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட விலையில் விற்கும் எடை விபரத்தைப் பார்க்கலாம்.

சந்தையில் பத்து கிலோ மட்டும் இருந்தால் 90 ரூபாய்க்கு விற்கலாம். 40 கிலோ விற்க வேண்டுமானால் விலை 20 ரூபாயாக குறைய வேண்டும். 90 ரூபாய்க்கு வாங்கியிருக்கக் கூடியவர்களுக்கும் இந்த விலைக்குறைப்பு கொடுக்க வேண்டியிருக்கும்.

























அளவுவிலை மதிப்பு
1090 900
20 70 1400
30 40 1200
40 20 800
மேற்சொன்ன அளவுகளில் உற்பத்தி செய்ய நிறுவனத்தின் செலவுக் கணக்கு இப்படி இருக்கலாம்.


























அளவு செலவு கிலோவுக்கு
10 1000 100
20 1140 57
30 1200 40
40 1240 31

போட்டிச் சந்தையில் எந்த விலையில் தேவையும் வழங்கலும் சமமாக இருக்குமோ அந்த அளவு உற்பத்தியாகி விற்றுப் போகும். மேலே சொன்ன சந்தையில் தேவையும் வழங்கலும் சமமாக இருக்கும் 30 கிலோ உற்பத்தியாகி 40 ரூபாய்க்கு விற்றுப் போகும்.

ஒரே நிறுவனம் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தும் சந்தையில் அந்த நிறுவனத்தின் ஆதாயம் தேடும் தன்மை இந்த அளவு உற்பத்தியைத் தராது. எந்த அளவில் நிறுவனத்தின் ஆதாயம் மிக அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு உற்பத்தியைக் குறுக்கிக் கொள்ளும் இந்த நிறுவனம்.
































அளவு செலவு வரவு ஆதாயம்
10 1000 900 -100
20 1400 1140 +260
30 1200 1200 0
40 1240 800 -440


மோனோபோலி நிறுவனம் 30 கிலோ உற்பத்தி செய்து 40 ரூபாய்க்கு விற்றால் எல்லாச் செலவும் போக ஒன்றும் மிஞ்சாது. அதனால் ஆதாயம் அதிகமாக இருக்கும் அளவான 20 கிலோ மட்டும் சந்தைப்படுத்தி 70 ரூபாய்க்கு விற்கும். இதனால் கூடுதலாக 10 கிலோ உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தும் உற்பத்தியாகாமல் போய் முப்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கக் கூடிய நிறைய பேருக்கு சோப்புப் பொடி கிடைக்காமல் போய் விரும்.

40 ரூபாய் விலையில் உருவாகியிருக்கக் கூடிய நுகர்வோர் கொசுறு மதிப்பில் பெரும்பகுதி 70 ரூபாயில் மறைந்து விடுகிறது. கிடைக்கும் ஆதாயம் அனைத்தும் ஒற்றை நிறுவனத்துக்கே போய்ச் சேருகிறது.

இதன் விளைவாக, மோனோபோலி நிறுவனம் மூலப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் வீணடித்தல் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

புதன், செப்டம்பர் 27, 2006

சோனியா என்ற அருந்தலைவி?

இந்தியாவில் நிலவும் நாடாளுமன்ற மக்களாட்சியில் அரசியல் கட்சிகள், மக்கள், அரசுகள் இவற்றுக்கிடையேயான உறவுகள் பெரும்பாலும் குழப்படியாகவே இருந்து வருகின்றன.

நேரு அதன் பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று நீண்ட ஆதிக்கத்தில் கட்சியும் அரசும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட, யார் என்ன செய்ய வேண்டும் என்ற வரையறை மங்கலாகவே இருந்தது. தமிழ் நாட்டில் எம்ஜிஆர்/ஜெயலலிதா, கருணாநிதி தலைமைகளும் இப்படி இரண்டையும் ஒரே கையில்தான் வைத்திருந்தன.

கேரளா/மேற்கு வங்கம் மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக வைத்து ஆரோக்கியமான உறவைப் பேணி வருகிறார்கள்.

இப்போது காங்கிரசு சோனியா காந்தியின் தலைமையிலும் அரசு மன்மோகன் சிங் தலைமையிலும் அப்படி ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்கி வருவதை அலசும் கட்டுரை இன்றைய இந்து நாளிதழில்.

இது இப்படியே வளர்ந்தால் சோனியா காந்தியின் பங்கு வரலாற்றில் ஒரு முக்கியமான பத்தியில் இடம் பெற்று விடும்.

அரைகுறைப் போட்டி (economics 21)

இன்றைக்கு நாம் பேசும் பொருளாதாரச் சுதந்திரம், போட்டிச் சந்தை என்பதெல்லாம் பொருளாதாரம் விவாதிக்கும் முழுமையான போட்டியுள்ள சந்தைகள் கிடையாது. காய்கறிகள், உணவுத் தானியங்கள், பங்குச் சந்தை போன்ற சில இடங்களில், அரசாங்கம் விழிப்பாக இருந்து ஏமாற்றுப் பேர்வழிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் போது முழுமையான போட்டிச் சந்தை நிலவுகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திப்பது அரைகுறை போட்டி நிலவும் சூழ்நிலைகள்தான். கடையில் போய் தொலைக் காட்சி வாங்கும் போது வெவ்வேறு நிறுவனங்களிற்கிடையே தமது பொருளை விற்க போட்டி நிலவுவது பொருளாதார வரையறைப்படி முழுமையானது இல்லை.

அதனால் கேடுகளும் கிடையாது. சில விற்பனையாளர்கள் அல்லது சில வாங்குபவர்கள் என்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தொழில் நுட்ப முன்னேற்றம், அளவு சேர்ந்த ஆதாயங்கள் இவற்றினால் கிடைக்கும் நன்மைகள் போட்டிச் சந்தையில் கிடைக்காமலே போகலாம்.

சில துறைகளில் ஒரே ஒரு நிறுவனம் செயல்படுவதுதான் இயற்கையாக நன்மை பயக்கும். இது மோனோபோலி எனப்படும் ஏகபோக சந்தை அமைப்பு. ஒற்றை வாங்குபவர் அல்லது விற்பவர் இருந்து மறுபக்கம் பல்லாயிரக் கணக்கான பேர் இருப்பது இந்தச் சந்தையின் இயற்கை.

  • கணினி இயங்கு தளம் என்பது ஒன்றே ஒன்று இருப்பது புதிய பயன்பாடுகளை உருவாக்குவதிலும், புதிதாகக் கணினி கற்றுக் கொள்பவர்களுக்கும், கணினிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்கவும் பெரிது உதவும்.

  • ஒரு ஊரில் ஒரே ஒரு காவல் துறை இருந்தால் போதும். இரண்டு போட்டி போடும் காவல் நிறுவனங்கள் இருந்தால் பல விரும்பத்தகாத விளைவுகள்தான் ஏற்படும்.

  • ஊரெங்கும் குழாய் அமைத்து தண்ணீர், மின்சாரம், இணையச் சேவை கொடுப்பதிலும் ஒரே நிறுவனம் செயல்பட்டால் குறைந்த செலவில் வேலையை முடிக்கலாம்.

இங்கு பெரிய சிக்கல், ஒரே நிறுவனம் செயல்படும் போது விலை, உற்பத்தி அளவு, வாடிக்கையாளர் நலன்கள் போன்றவை எப்படி சரியாக செயல்படுத்தப்படும் என்பதுதான். போட்டி இருக்கும் போது ஒருவருடன் ஒருவர் போட்டிக் கொண்டு இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கிறது. ஏக போக சந்தையில் கதை அவ்வளவு தெளிவாக இருக்காது.

இரண்டாவதாக, இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படும் சந்தைகள். பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் இந்த வகையில் அடங்கி விடுகின்றன.
  • கோலா என்றால், பெப்சியும் - கோக்க கோலாவும்.

  • சோப்பு என்றால் லீவரும், பிராக்டர் அன்ட் கேம்பிளூம்

  • கார் என்றால் மாருதி, டாடா, யுண்டாய், ஃபோர்டு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்த வகை சந்தை அமைப்பை ஆலிகோ போலி என்கிறார்கள். சில நபர்கள் என்று பொருள்.

மூன்றாவதாக நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் பொருளிலும், சேவையிலும் ஒரு சிறு வேறுபாடு இருப்பதால் விற்பவருக்கு குறுகிய அளவில் ஏகபோக ஆதிக்கம் கிடைக்கிறது.

  • சென்னையில் நூற்றுக் கணக்கான உணவகங்கள் இருந்தாலும் சரவண பவனில் சாப்பாடு தரம், சேவை பலருக்குப் பிடிப்பதால் அதைத் தேடிப் போகிறார்கள்.

  • ஒரே படம் ஓடினாலும் ஆலந்தூர் ஜோதி திரையரங்கை விட்டு விட்டு சத்தியம் வளகாத்துக்குப் போகிறோம்.

  • ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சிகை திருத்தும் நிலையம் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஆதிக்கம் இருந்தாலும் அதிகமாக முறைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் வேறு இடம் பார்க்க மாற்றுகள் நிறைய இருக்கும். இதற்கு பெயர் போட்டியுள்ள ஏகபோகம். (monopolistic competition)

செவ்வாய், செப்டம்பர் 26, 2006

ஓகைக்கு நன்றி

ஒரு அழகிய பள்ளத்தாக்கு. அமைதியான மக்கள். வெளியிலிருந்து யாரும் அதிகம் வருவதில்லை.
கடவுள் ஒரு இனிய சதி செய்து குவாய்ல என்ற பூச்செடியை அங்கு பரப்பி வைத்திருந்தான்.
அந்தப் பூவை ஒருவர் மற்றவர் மீது எறிந்தால் சிரிப்பு வரும், மகிழ்ச்சி பொங்கும், மனம் மலரும். அதே பூவை பலர் மீது எறியத் தூண்டும்.
இப்படியாக பூ எறி பட்டு எல்லோரும் எப்போதும் சிரிப்புடனும் அன்புடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் பூ மக்களின் உடைகளில் ஒட்டிக் கொண்டு போய் விழுந்த இடமெல்லாம் புதிதாக முளைக்கும்.
அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் குறைவே இல்லை.

ஒரு நாள் வெகு தூரத்திலிருந்து கண் காணாத இடத்திலிருந்து ஒருவன் இங்கு வந்தான்.
வந்தவனுக்கு இந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் ஆச்சரியமாகவும் கடுப்பாகவும் இருந்தது.

அவர்கள் ஊரில் சௌஹென் என்ற முட்செடிதான் எறிந்து கொள்வது.
அது ஒருவர் மீது பட்டால் மனதுக்கு துன்பமும் எறிந்தவர் மீது கோபமும் பொங்கும்.
பதிலுக்கு அடுத்துக் கண்ணில் படும் நான்கு பேர் மீதாவது அதே சௌஹென் எறியத் தோன்றும்.

இந்த சௌஹென்னும் ஒட்டிக் கொண்டு வளர்ந்து விடும் தன்மை படைத்தது.
இது இருக்கும் இடத்தில் ஒரே வெறுப்பும் அழிவும்தான்.
இது முளைக்கும் இடத்தில் குவாய்ல வளர வழியே இல்லை.

அன்னியன் உடையில் ஒட்டிக் கொண்டு வந்த, அவன் எறிந்த சௌஹென் பள்ளத்தாக்கில் வேலை செய்ய ஆரம்பித்தது.
பழைய கொண்டாட்டங்கள் மறைந்து அடிதடியும் நாசபுத்தியும் ஆட்சி ஏறின.
குவாய்ல எல்லாம் பூண்டறுந்து போயின.
முகங்களில் புன்னகையும் மனங்களில் குதூகலமும் ஒழிந்தன.

ஒரு நாள் கடவுளுக்கு தனது செல்லப் பள்ளத்தாக்கின் நினைவு வந்து போய்ப் பார்த்தால் அலங்கோலம் வரவேற்கிறது.
அவர் மண்வெட்டி எடுத்து சௌஹென் புதர்களை வெட்டி இரவோடு இரவாக எல்லா முட்களையும் தீக்கிரையாக்கினார்.
அதிகாலையில் நகரம் விழிக்கும் முன்னால் குவாய்ல மலர்களை தெருவெங்கும் பரப்பி வைத்தார்.

அன்று முதல் அந்த பள்ளத்தாக்கில் சிரிப்பும் மகிழ்ச்சியும் திரும்பின.
கடவுளின் மனதுக்கு அருகிலான இடமாக சிறப்பு தொடர்ந்தது.

  1. சின்ன வயதில் கேட்ட கதையை நினைவு படுத்தி எழுதியது.
  2. குவாய்ல என்பது சீன மொழியில் மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
  3. சௌஹென் என்பது வெறுப்புக்கான சொல்.
  4. "புன்னகை மலர்களைத் தூவுங்கள். வெறுப்பு முட்களை எரித்து விடுங்கள்" என்று நினைவுபடுத்திய ஓகைக்கு நன்றி.

பரிசு பெற்றவர்கள்

முதல் வாரத்தில் சிறந்த பின்னூட்டத்துக்கான பரிசு பெற்ற கைப்புள்ளை Waiting for Mahatma என்ற ஆர் கே நாராயணனின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது வாரத்துக்கான சிறந்த பின்னூட்டத்துக்காக ஆதம் ஸ்மித்தின் Wealth of Nations புத்தகத்தை பத்மா அரவிந்த் பெறுகிறார்.

மூன்றாவது வாரத்திலும் அவரது பின்னூட்டமே சிவஞானம்ஜி மற்றும் துளசி கோபால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பரிசாக காந்தியில் Social Service - Vol 1 புத்தகம் வழங்கப்படுகிறது.

நன்றியும் வாழ்த்துக்களும்,

திங்கள், செப்டம்பர் 25, 2006

பிச்சை எடுக்கும் லட்சாதிபதிகள்

இன்றைய இந்து பத்திரிகையில் சென்னை பக்கத்தில் ஒருவரின் ஆசிரியருக்கு கடிதம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் வாயு வாங்குபவர்கள் ரேஷன் அட்டையைக் காட்டினால் ஒரு அட்டைக்கு ஒரு உருளை என்று அளவாகத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டார்களாம். பல பணக்காரக் குடும்பங்கள், நியாய விலைக் கடை பொருட்கள் தேவையில்லை என்று அட்டையே வாங்கவில்லையாம். அவர்களை பொது வினியோகத்துறையிடம் இருந்து அதை உறுதிப்படுத்தி கடிதம் வாங்கி வந்தால்தான் தொடர்ந்து வாயு உருளை கொடுப்போம் என்று கூறி விட்டார்களாம்.

அரசாங்கத்தின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறார் கடிதம் எழுதியவர். இந்தத் தொல்லைகளைக் கொடுத்தால் பணக்காரர்கள் தனியார் நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப் போய் விடட்டும் என்று அரசாங்கம் கை கழுவி விட்டு விட்டதாக வருத்தப்படுகிறார்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அரசு சார் நிறுவனங்களில் சமையல் வாயு இணைப்பு மூலமாக ஒரு உருளைக்கு நூற்றிப் பத்து ரூபாய் வீதம் மீதப் படுத்துவதை எப்படி விட்டுக் கொடுத்து விட முடியும்? தனியார் நிறுவன வாயு இணைப்பு பெற்றுக் கொண்டால் மாதம் இரண்டு உருளைக்கு இருநூற்று இருபது ரூபாய் அதிகம் செலவானால் பணக்காரர்களின் கதி என்ன ஆகும்?

இப்படி எல்லாம் பணத்தை வீணாக்கினால் எப்படி புதிதாக வந்துள்ள உயர் துல்லிய தொலைக்காட்சி பெட்டி வாங்க முடியும்? எப்படி வெளியில் போய் அமெரிக்க துரித உணவு சாப்பிட முடியும்? ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா போக முடியாமல் போய் விட்டால்? அட்சய திருதியைக்கு நகை வாங்குவது எப்படி?

ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

பரிசுப் பின்னூட்டங்கள் - 3

செப்டம்பர் இரண்டாவது வாரம் economics என்ற தலைப்பிலான பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் அட்டவணை இந்தச் சுட்டியில் காணலாம். அட்டவணை.

சில சொந்த காரணங்களால் இரண்டு வார விடுப்பு எடுக்க வேண்டி வந்து விட்டது. அடுத்த பகுதி புதன் கிழமையிலிருந்து தொடரும்.

பங்களித்த அனைவருக்கும் நன்றி. பரிசு பெறும் நண்பரின் பெயர்.......துளசி கோபால், சிவஞானம்ஜி அவர்களால் மதிப்பிடப்பட்டுப் பின்னர் அறிவிக்கப்படும்.

சனி, செப்டம்பர் 09, 2006

போட்டிச் சந்தை (economics 20)

போட்டிச் சந்தையில் அரசு தலையிடக் கூடாது இன்று வைக்கப்படும் வாதங்கள் எல்லாம் பொருந்துவது விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருவாரியாக இருந்து எந்த ஒருவரும் சந்தை விலையை மாற்றி விட முடியாத ஒரு சில துறைகளில் மட்டுமே. காய்கறிகள்/பழங்கள், தனிமனிதர் சேவைகள் போன்ற சந்தைகளில் மட்டுமே இந்தக் கோட்பாடுகள் செல்லுபடியாகும்.

போட்டிச் சந்தை எப்படி இருக்கும்?

  • எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்வார்கள்.

  • ஒரு விற்பனையாளரின் உற்பத்தி கூடுவதாலோ குறைவதாலோ அவரைப் பொறுத்த வரை சந்தையின் தேவை மாறி விடப் போவதில்லை.

  • இப்படி எல்லோருமே அதிகம் உற்பத்தி செய்தால் விலை சரிந்து விடும் என்பது இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையோ அதைப் புரிந்து கொள்ளும் திறனோ யாருக்கும் இருக்காது.

  • அதனால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வருவதுதான் விற்பனையாளருக்கு இருக்கும் ஒரே ஆதாயம் அதிகரிக்கும் வழி.

  • ஒவ்வொரு அலகு அதிக விற்பனையும் சந்தை விலையை ஈட்ட முடிவதால், அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவு விலையை விடக் குறைவாக இருக்கும் வரை உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போகலாம்.

  • சந்தை விலையும் கடைசி அலகின் உற்பத்திச் செலவும் சமமாக இருக்கும் நிலையில்தான் ஒவ்வொரு விற்பனையாளரின் உற்பத்தியும் அமையும்.

இப்படி எல்லோரும் தன்னிச்சையாகச் செயல்படும் போது ஒரு சில உற்பத்தியாளர்களின் ஒரு அலகு உற்பத்தி செய்ய் ஆகும் செலவை
விட சந்தை விலை சரிந்து விட்டால், அவர்கள் தமது உற்பத்தியை நிறுத்தி இழப்பை தவிர்ப்பார்கள். விற்கும் விலை அளவைப் பொறுத்து மாறும் செலவுகளை மட்டுமாவது சரிக்கட்டுவது வரை உற்பத்தியும் விற்பனையும் தொடரலாம். அந்தப் புள்ளிக்குப் பிறகு தொழிலை விட்டு விடுவதுதான் இழப்பைத் தவிர்க்கும் ஒரே வழி.

  • உற்பத்தி அளவைப் பொறுத்து மாறாத செலவுகள் முழுமையாக ஈடு கட்டப்படா விட்டாலும் ஒரு விற்பனையாளர் தொடர்ந்து தொழில் செய்யலாம். மாறாச் செலவுகளில் ஒரு பகுதியாவது தேறினால் இழப்பில் கூட விற்பனை நடக்கும். இது உடனடிக் காலத்தில்.

  • இப்படியே பல நாட்கள் போனால் மாறாச் செலவுகளையும் குறைக்க முயற்சிகள் செய்து விற்பனையை நிறுத்தி விடுவார்.

குறுகிய காலத்தில் விலை மாறினாலும் சந்தைக்கு வரும் பொருட்களின் அளவு சரியான வீதத்தில் மாறி விடுவதில்லை. மாறாச் செலவுகளையும் மாற்ற முடியும் நீண்ட காலப் போக்கில்தான் விலை மாற்றத்தின் முழுத் தாக்கமும் நடைமுறைக்கு வரும்.

வெள்ளி, செப்டம்பர் 08, 2006

விலைமதிப்பில்லா உயிர்கள்

"விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றெல்லாம் செய்தி வருகிறதே!"

  • அதெல்லாம் இந்தப் பத்திரிகைக்காரங்க செய்ற பம்மாத்து. நாட்டுல ஒவ்வொருத்தன் செத்துக்கிட்டுத்தான் இருக்கான். அதுக்கு ஒரு சாயம் பூசி தமுக்கு அடிச்சு பெரிசாக்குறாங்க!

  • வாழ்க்கைய ஒழுங்க நடத்தத் தெரியல, கடன வாங்கிக்கிட்டு கட்ட முடியாமல் செத்துப் போறாங்க அதுக்கு நாம என்ன செய்ய முடியும்!

  • வேலை இல்லை பணம் இல்லை எல்லாம் கதை. உழைக்க விருப்பமிருப்பவனுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அத விட்டு விட்டு கழுத்தறுக்குறானுங்க!

  • செத்தா அரசு ஒரு லட்சம் கொடுக்கும் என்று எல்லாம் போய்ச் சேருது. போனது தொல்லை என்று அரசுகள் கண்டுக்காமல் இருந்தால்தான் புத்தி வரும்.

இப்படி எல்லாம் மேலே சொன்ன கேள்விக்கு விடைகள் வெள்ளை சட்டை போட்ட குளிரூட்டிய அறையில் பணி புரியும் நகர வாசிகளிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன்.

இதெற்கெல்லாம் பதிலாக இன்றைய இந்து நாளிதழில் ஒரு விரிவான கட்டுரை வெளியாகி உள்ளது. கண்களை மூடிக் கொண்டு பிரச்சனையே இல்லை என்று இருந்து விடுவது அபாயகரமானது. நமது சகோதரர்களின் துயரத்தை போர்க்கால அடிப்படையில் துடைக்க நடவடிக்கைகள் தேவை. இல்லையென்றால் காலம் கடந்து விடலாம்.

தொழில் நிறுவனங்கள் (economics 19)

யுண்டாய் கார்களின் விற்பனை அதிகரித்து விட்டால், உடனடி காலத்தில் மூலப்பொருட்கள் வாங்குவதை அதிகரித்து, தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை பார்க்க வைத்து உற்பத்தியை ஆயிரத்து ஐநூறாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். இப்படி உற்பத்தி அதிகமாகி உருவாகிய கார்கள் எல்லா கார்களுக்குமான செலவை கீழே இழுத்து விடுவதால் நிறுவனத்துக்கு ஆதாயம் அதிகம். அதனால்தான் எப்போதும், விற்பனையை அதிகமாக்கிக் கொள்வதில் போட்டி.

ஒரு நாளைக்கு ஐயாயிரம் கார் என்று தேவை அதிகமாகி விட்டால், அதே தொழிற்சாலையில் அவற்றை உற்பத்தி செய்து விட முடியாது. அதற்கு புதிய பட்டறை, இயந்திரங்கள் என்று வாங்கி நிறுவ மாதங்கள் பிடிக்கலாம்.

மாறுபடும் செலவுகளை மாற்றி உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளும் கால அளவை உடனடிக் காலம் என்றும் நிலையான செலவுகளையும் மாற்றி விட முடிகிற கால அளவை நீண்ட காலம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

தொழில் புரட்சி தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட போது ஒரு தனி மனிதன் இவ்வளவு பணம் முதலீடு செய்து உள்ளூர் ஆட்களை வேலைக்கு வைத்து உற்பத்தியை சமாளிக்க முடியாது என்று உணரப்பட்டது. அதற்காக கூட்டுச் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் என்ற கோட்பாடு உருவானது.

ஒவ்வொருவரும் தனித்தனியாக வேலை பார்ப்பதை விட ஒரு சிலர் ஒன்று சேர்ந்து நிறுவனம் ஆரம்பித்து அதற்கான பணத்தை முதலீடு செய்து, தொழிலாளர்களைத் திரட்டி, உற்பத்தியை மேலாண்மை செய்து கொண்டால் கிடைக்கும் உற்பத்தி அளவு சமூகத்தில் எல்லோருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், சமூகத்தின் பிரதிநிதிகளான அரசாங்கங்கள் அது மாதிரி நிறுவனங்கள் உருவாக சட்ட அடிப்படை உருவாக்கின.

ஒருவர் தனியாகச் செய்யும் தொழிலில் ஆரம்பித்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் கூட்டுத்தொழில், பலர் தனிப்பட்ட முறையில் சேர்ந்து உருவாகும் தனியார் பங்குத் தொழில், பொது மக்களுக்கும் பங்கு விற்று உருவாகும் பொதுப்பங்குத் தொழில் என்று ஒவ்வொரு வகை நிறுவனமும் சமூகம் தனது ஒட்டுமொத்த நலனுக்காக ஒரு சிலரை சேர்ந்து தொழில் ஆரம்பிக்க வழி செய்யக் கொடுத்ததே ஆகும்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாவதற்கு இங்கிலாந்து பாராளுமன்றம் சிறப்புச் சட்டம் போட்டு அனுமதி கொடுத்தது. அதாவது முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வணிக நிறுவனம் ஆரம்பிக்க நாட்டு அரசனோ, நாடாளுமன்றமோ சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும், இந்தக் கூட்டு முயற்சியால் நாட்டுக்கு நன்மை விளையுமா என்று சீர் தூக்கி மக்கள் பிரதிநிதிகள் அதற்கு அனுமதி கொடுத்தார்கள். கூட்டு முயற்சி சமூகத்தை சீர் குலைக்க ஆரம்பித்தால் நிறுவனத்தைக் கலைத்து அரசே அதன் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதும் நடந்தது. இதே கிழக்கிந்திய கம்பெனியை 1858க்குப் பிறகு கலைத்து விட்டு இங்கிலாந்து அரசு நேரடி ஆட்சியை ஏற்றுக் கொண்டது.

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் எளிதாக ஒரு நிறுவனம் தொடங்கிக் கொள்ளும் வசதியை சட்டங்கள் கொடுத்தாலும் அதன் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நிறுவனத்தின் செயல்கள் ஒட்டு மொத்தமாக நன்மை அளிக்கும் என்ற உத்தரவாதத்தில் அனுமதி கொடுக்கப்படுகிறது. அந்த உத்தரவாதம் மறைந்து விட்டால் நிறுவனத்தைக் கலைத்து விடவும் அதே சட்டம் இடமளிக்கிறது.

ஒரு வணிக நிறுவனத்தின் இருப்பு, தனி மனிதனின் இருப்பைப் போல கடவுள் கொடுத்த உரிமை கிடையாது. அதன் நலன்கள் தனிமனித/ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்கு மேற்பட்ட்வை அல்ல. முதலீடு செய்தவர்கள், கடன் கொடுத்தவர்கள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுப்புறச் சூழல் இவை அனைத்துக்கும் கிடைக்கும் மொத்த ஆதாயத்தைப் பொறுத்துதான் நிறுவனத்தின் உரிமை உள்ளது. ஒரு தரப்புக்கு மட்டும் ஆதாயம் குவிய மற்றத் தரப்புகள் பலத்த இழப்புக்கு ஆளாகும்போது அதை தடுத்து நிறுத்தவோ, ஒழுங்கு படுத்தவோ சமூகத்துக்கு இருக்கும் உரிமை அரசுகள் மூலம் நிலை நாட்டப்படுகிறது.

நவீன மேற்கத்திய அரசியல் பொருளாதாரத்தில் இந்த வணிக நிறுவனங்களின் பங்கு ஆதிக்கம் நோக்கத்துக்கு மாற்றாக வளர்ந்து விட்டிருக்கிறது. அதனால்தான் ஒரு மைக்ரோசாப்டும், ஒரு சுமங்கலி கேபிள் விஷனும், ஒரு என்ரானும், ஆர்தர் ஆண்டர்சனும் பொது நன்மையைக் கொள்ளை அடித்து தமது பங்குதாரர்களை மட்டும் வளப்படுத்தும் வசதி வளர்ந்து விட்டிருக்கிறது.

வியாழன், செப்டம்பர் 07, 2006

உற்பத்திச் சங்கிலிகள் (economics 18)

சரி, இப்போது நிலம், கருவிகள், உழைப்பாளிகள் எல்லாவற்றையும் ஒரு சேர அதிகரிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மூன்று வகையான சாத்தியங்கள் உள்ளன.

1. எல்லா மூலப் பொருட்களையும் இரண்டு மடங்காக்கினால் உற்பத்தியும் இரண்டு மடங்காகிறது.
2. மூலப் பொருட்களை இரண்டு மடங்காக்கினால் உற்பத்தி இரண்டரை மடங்காகிறது.
3. மூலப் பொருட்களை இரண்டு மடங்காக்கினால் உற்பத்தி ஒன்றரை மடங்காகிறது.

  • ஒருவர் ஒரு குடத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் முப்பது குடம் தண்ணீர் இறைத்து கொண்டு வர முடியும். இன்னொருவர் அதே போல வேலை பார்த்தால் அவரும் முப்பது குடம் இறைத்து விடலாம். மொத்தம் அறுபது குடங்கள். இது மாறா உற்பத்தி அதிகரிப்பு.

  • இப்போது மூன்றாவது ஒருவர் வருகிறார், அவர் ஒரு திட்டம் வகுத்து தண்ணீர் இறைத்து சுமப்பதற்கு சிறப்பான முறையைச் சொல்லித் தர மூன்று பேர் சேர்ந்து மூன்று குடங்களைப் பயன்படுத்தி மூன்று மணி நேரத்தில் நூறு குடங்கள் இறைத்து விடுகின்றனர். இது அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிப்பு.

  • இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று விவகாரமான ஒருவரை கொண்டு வருகிறோம். அவர் வந்து குழப்பியதில் இதுவரை செய்து கொண்டிருந்த வேலை சீர் குலைந்து நான்கு பேர் நான்கு குடங்கள் பயன்படுத்தி நூற்றுப் பத்து குடங்கள்தான் இறைக்க முடிகிறது. இது குறையும் உற்பத்தி அதிகரிப்பு.

இரண்டாவதான அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிப்பு தொழிற்புரட்சிக்குப் பிந்தைய உற்பத்தி துறைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. எடுத்துக் காட்டாக யுண்டாய் கார் தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவு பட்டறை, கருவிகள், தொழிலாளிகள், இடுபொருட்கள் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு நூறு கார் உற்பத்தி செய்யலாம் என்று இருந்தால், எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காக்கினால் இருநூறு கார் இல்லாமல் ஐநூறு கார் வரை செய்து விடலாம்.

இதன் முக்கிய ஒரு விளைவு, உற்பத்தியின் அளவு அதிகமாக அதிகமாக கடைசி அலகு உற்பத்திக்கான செலவு குறைந்து கொண்டே போகும். மைக்ரோசாப்டு விண்டோசு இயங்கு தளம் உருவாக்க கோடிக் கணக்கான டாலர்கள் ஆராய்ச்சி, உருவாக்கம், தரக்கட்டுப்பாடு என்று செலவிடப்படுகின்றன. ஆனால் பொருள் தயாரான பிறகு இன்னும் ஒரு குறுந்தகடு பதிந்து விற்பனை ஆகும் செலவு ஒரு சில டாலர்கள்தாம்.

உயர் தொழில் நுட்பமும் விலை உயர்ந்த கட்டமைப்புகளும் தேவைப்படும் துறைகளில் இந்த அளவு தரும் சேமிப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒரு கார் தொழிற்சாலை கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவிட்டு கருவிகளை அமைப்பது, ஊழியர்களை சேர்ப்பது இவை பல மாத காலம் பிடிக்கும். இந்த பணம் செலவளித்து தொழிற்சாலை அமைந்து விட்டால் ஒவ்வொரு கார் உற்பத்திக்கும் செலவாவது அதற்குத் தேவையான மூலப் பொருட்கள், ஊழியர்களின் நேரம் இவைகள்தாம்.

முதல் வகை செலவு உடனடியாக மாற்றி விட முடியாது. தொழிற்சாலை கட்ட எட்டு மாதங்கள் ஆகுமானால் செலவாகும் தொகையை கூட்டவோ குறைக்கவோ பல மாதங்கள் பிடிக்கும்.. இரண்டாவது வகை செலவை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்ளலாம். விற்பனை நிலவரத்தைப் பொறுத்து கார்களின் உற்பத்தி எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

இதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

  • தொழிற்சாலை கட்டிடத்தின் மீதான ஒரு நாள் செலவு, போட்ட முதலீட்டுக்கான வட்டித் தொகை, சம்பளம் முதலியவை ஒரு மாதத்துக்கு - ரூபாய் 150 லட்சம் (இதை உடனடியாகக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.)
  • ஒரு கார் செய்ய மூலப் பொருட்கள், மின்சாரம் போன்ற மாறும் செலவுகள் : ரூபாய் 1 லட்சம்.

  1. காரே செய்யா விட்டாலும் முதலில் சொன்ன நிலையான செலவு செய்யத்தான் வேண்டும்.

  2. நாளுக்கு பத்து கார்கள் மட்டும் உற்பத்தி செய்தால் அவற்றின் மீதான மாறும் செலவுகள் - ரூபாய் 10 லட்சம்.
    நிலையான செலவுகள் - ரூபாய் 150 லட்சம்.
    ஒரு காரின் மீதான செலவு 160லட்சம்/10 = 16 லட்சம்.

  3. உற்பத்தி நூறு கார்களாக அதிகரித்தால் இது 250லட்சம்/100 = 2.5 லட்சம் என்று மாறி விடும்.

  4. இதுவே தினசரி ஆயிரம் கார்கள் அதே தொழிற்சாலையில் செய்ய ஆரம்பித்தால் ஒரு கார் மீதான செலவு = 1150 லட்சம்/1000 = ரூபாய் 1.15 லட்சம் என்று ஆகி விடும்.
நிலையான செலவு அதிகமான எண்ணிக்கையிலான உற்பத்தி அளவில் பங்கிட்டு விடப்படுவதால் ஒரு கார் மீதான செலவு குறைந்து கொண்டே போகிறது.

வீட்டில் சமைக்கும் போது நான்கு பேருக்குச் சமைப்பதை விட ஆறு பேருக்குச் சமைப்பதற்கு முயற்சியும் நேரமும் மாறப் போவதில்லை. அரிசியும், காய்கறிகளும் மட்டும்தான் அதிகம் தேவைப்படும்.

பரிசு பெறும் பின்னூட்டம்

Economics என்ற தலைப்புடனான எனது பதிவுகளில் இடப்பட்ட பின்னூட்டங்களில் தேன்துளி எழுதியவை இந்த வாரத்தின் தலை சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கைப்புள்ள இந்த வாரமும் அருமையான கருத்தாழமிக்க இரண்டு பின்னூட்டங்களை கொடுத்திருந்தார். மதிப்பீடு செய்த சிவஞானம்ஜி ஐயாவுக்கும் துளசி அக்காவுக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணையின் சுட்டி இதோ.

வாழ்த்துக்கள்.

கொசுறு மதிப்பு என்ற பதிவில் தேன்துளியின் பின்னூட்டம் இதோ:

"சிவகுமார். நீங்கள் கொசுறுவிலையை விட்டு கொடுக்க அந்த வாகனத்தை வாங்குவதன் மூலம் நீங்கள் பெற்றதாக உங்கள் சமுதாய அங்கீகரிப்பு இல்லை உங்களின் ஆசையை பூர்த்தி செய்த திருப்தியையும் வாங்கி இருக்கிறீர்கள். இதைத்தான் விற்பனையாளர்கள் பெற்றுவிட நினைக்கிறார்கள்.

கோகோகோலா பானம் என்பது ஒரு நாகரீக மாற்றத்தை அடைந்ததாகவோ இளமை, மகிழ்ச்சியை பெற்றதாகவோ விற்பனைவிளம்பரங்கள் மூலம் அடிமனதில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி அதை பூர்த்தி செய்ய ஒரு விலையை கூடுதலாக நிர்ணயிக்கிறார்கள். இதை நீங்கள் சமுதாய விற்பனைத்துறை( social marketing) காணமுடியும்.

sales is a common battle between sellers and buyers surplus. இதில் சில சமயம் தங்கள் கொசுறு விலையை விற்பனையாளர்கள் அது அந்த பொருளை விற்காமல் வைத்திருக்க ஆகும் விலையைவிட(holding cost) குறைவாக இருந்தா விட்டுவிடுவதையும் காணமுடியும். எளிமையாக அருமையாக நீங்கள் எழுதியிருந்தாலும் இது ஒரு சிக்கலான வியாபார நுணுக்கம். உங்கள் கடைசி கருத்துக்கள் முற்றிலும் உண்மை."

புதன், செப்டம்பர் 06, 2006

யாருக்காக? (economics 17)

ஆரம்பத்தில் எதற்கு வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன? அவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?

நாகரீக சமூகம் ஒன்று சேர்ந்து, சந்தைகள் உருவானபோது ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தவற்றை விளைத்து சந்தையில் அதை விற்று தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டிருப்பான். பொருளின் உற்பத்திக்கு மூன்று விதமான மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன என்று பார்த்தோம். இயற்கையாக கிடைப்பவை, மனித உழைப்பு, உற்பத்திக்கு ஆகும் கால தாமதத்தின் போது முடக்க வேண்டிய மூலதனம் ஆகியவை.

குறிப்பிட்ட அளவு மூலப் பொருட்களைப் பயன்படுத்தினால் எவ்வளவு விளையும் என்பது அப்போது நிலவும் தொழில் நுட்ப அறிவைப் பொறுத்தது.
  • பள்ளம் தோண்ட ஐம்பது ஆட்கள் மண்வெட்டி பிடித்து ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்தால் ஐந்து அடி ஆழமும் ஐம்பது அடி நீளமும் தோண்டி விடலாம்.

  • இரண்டு பேர் இயந்திர டிராக்டர் மூலம் தோண்டினால் அதே வேலை இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும்.
இப்படி மூலப் பொருட்களை அதிகரித்துக் கொண்டே போனால் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.
  • இரண்டு சமையற்காரர்கள் ஆறு மணி நேரத்தில் நூறு பேருக்கான உணவை சமைத்து விடுகிறார்கள்.
  • ஆட்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினால் எவ்வளவு சீக்கிரம் முடிக்கலாம்? எட்டு பேர் சேர்ந்து வேலை செய்தால்? நேரம் குறைந்து கொண்டே வரும்.
  • நான்கு பேர் வேலை பார்க்கும் போது ஐந்து மணி நேரத்தில் முடிந்து விடலாம். எட்டு பேர் வேலை செய்தால் நான்கரை மணி நேரத்தில் முடிந்து விடும்.
  • எனக்கு மிக அவசரமாக சாப்பாடு வேண்டும், ஐம்பது சமையல்காரர்களை சமையலறைக்குள் அனுப்பினால்? சாப்பாடு தயாராக ஆறு மணி நேரம் இல்லை, பத்து மணி நேரம் கூட ஆகி விடலாம்.
இப்படி ஒரு வகையான மூலப் பொருளை அதிகரிக்கும் போது உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு கூடுதல் உள்ளீடுக்கும் முந்தைய உள்ளீடை விடக் குறைவாகவே அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் உற்பத்தி குறையவும் ஆரம்பித்து விடலாம்.

குறிப்பிட்ட உள்ளீடுகளுக்கு எவ்வளவு மொத்த உற்பத்தி, சராசரியாக ஒரு அலகுக்கு எவ்வளவு உற்பத்தி, கடைசியாக சேர்த்த உள்ளீட்டுக்கு என்ன உற்பத்தி என்பவை மூன்று அளவீடுகள். குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட கருவிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நெல்லை பயிரிடுகிறோம். உழைப்பாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் விளைச்சல் எப்படி மாறும் என்று பார்க்கலாம்.

  • யாருமே உழைக்கவில்லை என்றால் விளைச்சல் எதுவுமே இருக்காது.
  • ஒருவர் வயலில் இறங்கி வேலை செய்தால் நான்கு மூட்டை நெல் விளைகிறது. இப்போது மொத்த விளைச்சல் நான்கு மூட்டை, சராசரி விளைச்சல் நான்கு மூட்டை, கடைசியாக சேர்த்த அந்த ஒருவரின் கூடுதல் பங்களிப்பு நான்கு மூட்டை.
  • இரண்டு பேர் வேலை பார்த்த வயலில் ஆறு மூட்டை விளைகிறது. மொத்தம் ஆறு மூட்டை, சராசரி மூன்று மூட்டை, கூடுதல் விளைச்சல் இரண்டு மூட்டை.
  • மூன்று பேர் வேலை பார்த்தால் ஏழு மூட்டை கிடைக்கிறது. மொத்தம் ஏழு மூட்டை, சராசரி இரண்டுக்கு கூடுதல், கூடுதல் விளைச்சல் ஒரு மூட்டை.

இதே போல ஒரே அளவு உழைப்பாளிகள் உழைக்கும் போது நிலத்தின் அளவை அதிகரித்தாலும் ஒவ்வொரு அலகுக்கும் கிடைக்கும் கூடுதல் விளைச்சல் முதலில் மிக அதிகமாகவும் போகப் போகக் குறைந்து போவதாகவும் இருக்கும். கூடுதல் விளைச்சல் குறைந்து கொண்டே போவதை குறைந்து போகும் கடைசி விளைச்சல் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் குறிப்பிட்ட அளவு நிலத்தில் பல கோடி விவசாயிகள் உழைப்பதால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பலன் குறைவாக இருக்கிறது. விவசாயத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய எஞ்சி இருப்பவர்களின் சராசரி பலன் அதிகரித்து விடும்.

திங்கள், செப்டம்பர் 04, 2006

பரிசுப் பின்னூட்டங்கள் - 2

போன வாரம் economics என்ற தலைப்பிலான பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் அட்டவணை இந்தச் சுட்டியில் காணலாம். அட்டவணை

சிவஞானம்ஜி ஐயா வெளியூர் சென்றிருப்பதால் முடிவை அறிவிப்பதில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படலாம்.

பதிவுகளின் தொகுப்பு கீழே:

  1. Economics - 1
  2. விடை தேடும் கேள்விகள்?
  3. விடை தேடும் முறைகள்
  4. வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல்
  5. விடை கொடுக்கும் மந்திரக்கோல்
  6. பன்னாட்டு வர்த்தகம்
  7. அரசாங்கம் தேவையா?
  8. கொடுத்தலும் வாங்கலும்
  9. என்ன விலை கொடுப்பது?
  10. என்ன விலைக்கு விற்பது?
  11. நடைமுறைக்கு உதவுமா?
  12. விவசாயக் கொடுமைகள்
  13. வரிகளும் சாவும்
  14. கடைசி அலகு
  15. கொசுறு மதிப்பு
  16. கொசுறு மதிப்பு - மேலும்

செப்டம்பர் 5 மாலை வரை யாராவது பின்னூட்டம் இட்டு தமது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளி, செப்டம்பர் 01, 2006

மரணம்

ஆறு ஏழு வயதிருக்கும் போது எனக்கு நாம் செத்தால் யார் யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பார்க்கும் ஆசை வந்தது. மதிய வேளைகளில் செத்து விட்டது போலக் கிடக்க முயற்சி செய்வேன். செத்துப் போனால் மூச்சு வராது, கண்கள் மூடியிருக்கும் என்று புரிந்தது. கண்கள் மூடியிருக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அண்ணனிடம் பேச்சு கொடுத்ததில் சிலர் கண்கள் திறந்த படியும் இறந்து போகிறார்கள் என்று தெரிந்தது. பல முறை நான் செத்து விட்டது போலக் கிடப்பதாக நினைத்து படுத்துக் கிடப்பேன். யாராவது வந்து பார்க்கும் வரை பொறுமை இல்லாமல் எழுந்து விடுவேன், அப்படியே வந்து விட்டவர்களும் யாருமே நான் செத்து விட்டேன் என்று அழுது புலம்ப ஆரம்பித்து விடவில்லை. பகல் நேரத்தில் ஏன் கிடத்தி வைத்திருக்கிறது என்று திட்டுகள்தான் மிச்சம்.

எனக்கென்னவோ சாவைப் பற்றி அவ்வளவு வருத்தங்களோ அதன் தாக்கத்தைப் பற்றிய புரிதல்களோ இருந்ததேயில்லை. மிகச் சமீப காலங்கள் வரை யாரோ ஒருவர் போய் விட்டால் அப்படியா என்று கேட்டுக் கொள்ளும் போக்கே இருந்தது. அந்த இழப்புகளின் சோகம் எனக்கு புரியவேயில்லை. சின்ன வயதில் ரயில் விபத்தில், வங்க தேச புயலில் இத்தனை பேர் செத்தார்கள் என்று வரும் போது நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கைகள் ஏறும் போது அதில்தான் ஆர்வம் இருக்குமே ஒழிய இழப்புகளின் கொடிமை மனதில் பட்டதே இல்லை.

மூன்று நான்காம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டுப் பாட்டி இறந்து விடவே (வயதாகித்தான்), இறந்த உடலைப் பார்த்ததே இல்லை என்று அம்மாவிடம் அனுமதி கேட்டு விட்டு போய்ப் பார்த்து விட்டு வந்தோம். வாழ்ந்த போது இருந்ததை விட பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை.

அப்புறம் என் தாத்தா முதலிலும் அப்புறம் சில ஆண்டுகள் நோயில் கிடந்து ஆத்தா (பாட்டி)யும் போய்ச் சேர்ந்த போதும் எந்த வருத்தங்களும் ஏற்பட்டு விடவில்லை. வயதாகி விட்டது போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்ற ஒரு போக்குதான்.

முதல் முறை சாவு ஒன்று என்னைத் தாக்கியது என் சித்தப்பா மனைவி இறந்த போது. சாங்காயில் நான் இருந்த போது சேதி வந்தது. முதலில் வழக்கம் போலத் துடைத்துப் போட்டு விட்டேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு அதன் தீவிரம் மனதில் இறங்கியது. இனிமேல் சித்தப்பா வீட்டுக்குப் போனால் சித்தி இருக்க மாட்டாள். அவளை இன்மேல் பார்க்கவே முடியாது என்று உண்மை மெல்ல மெல்ல உறைத்தது. அப்போதுதான் ஒரு இறப்பின் சோகங்கள் புரிய ஆரம்பித்தன எனலாம் (அதற்குள் இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தேன்.).

அதன் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு, ஒவ்வொரு வாழ்வின் அருமையையும் உணர்ந்த பிறகு, சுனாமியின் போது தப்பி ஓடி வந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் புலம்பலுக்கிடையேயான முகத்தைப் பார்த்த போது வாழ்வின் பெருமையும் மரணத்தின் உண்மையான தாக்கங்களும் புரிந்தன.

கதைகளிலும் திரைப்படங்களிலும் மரணங்கள் என்னை ஆழமாகப் பாதித்தன.

பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் மாறாத இளமைத் தோற்றம் வேண்டுமென்றால் இள வயதிலேயே இறந்து விட வேண்டும் என்று சொன்னாலும் அவன் கொல்லப்பட்டபோது சூழ்ந்த இருள் என் மனதிலும் சூழ்ந்தது.

மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் அமலா புதை குழியில் மாட்டிக் கொண்டு மூழ்குவதை ஒவ்வொரு அங்குலமாகக் காட்டியிருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு தூக்கமும் சரியாக வரவில்லை, சாப்பாடும் இறங்கவில்லை.

கொசுறு மதிப்பு - மேலும் (economics 16)

இந்தக் கொசுறு மதிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த இன்னொரு பதிவு.

பொதுவாக மேற்கத்திய வகுப்பறைகளில் நவீன பன்னாட்டு நிறுவனங்கள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க முடிவது பொருளாதார விதிகளின் படி சமூக நலத்துக்கு எதிரானது என்பதை ஆழமாக விவாதிப்பது இல்லை.

இந்த லாபங்களுக்கு பல முகங்கள் இருந்தாலும் பெரும் பங்கு வகிக்கும் ஒரு காரணி இப்படி வாடிக்கையாளர்களின் நுகர்வு கொசுறு மதிப்பையும், தமக்கு பொருட்களை விற்பவர்களின் உற்பத்தி கொசுறு மதிப்பையும் சமூக நெறிகளுக்கு மாறாக கொள்ளை அடித்துக் கொள்வதுதான் ஒரு வணிக நிறுவனத்தின் வெற்றியாகவும், பங்குச் சந்தையில் அதன் பங்குகள் விலை உயரவும் காரணியாகவும் கருதப் படுகின்றன.

ஒரு நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக, போட்ட முதலுக்கான பலனும் கிடைத்த பிறகு எஞ்சி நிற்கும் பெருமளவு பணம் இப்படி ஈட்டப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். ஒரு ஆண்டில் நிறுவனத்தின் செலவு விபரம் இதோ:
  • மூலப் பொருட்கள் வாங்கியது - 10 கோடி ரூபாய்
  • ஊழியர்களுக்கு சம்பளம் - 6 கோடி ரூபாய்
  • கட்டிடம், மின்சாரம், போக்குவரத்து போன்ற செலவுகள் - 4 கோடி ரூபாய்
  • வங்கி வட்டி முதலான செலவுகள் - 3 கோடி ரூபாய்

  • சந்தைப்படுத்துதல் தொடர்பான செலவுகள் - 20 கோடி ரூபாய்

  • மொத்தச் செலவினம்: 43 கோடி ரூபாய்
வருமானம்:
  • உற்பத்தியான பொருட்களின் எண்ணிக்கை - பத்து லட்சம்
  • ஒரு பொருளின் விலை - 1000 ரூபாய்
  • மொத்த வருமானம் - 100 கோடி ரூபாய்
  • மொத்த லாபம் 57 கோடி ரூபாய்

  • வருமான வரி அரசுக்கு (சமூகத்துக்கு) - 20 கோடி ரூபாய்

  • மொத்த முதலீடு - 1 கோடி ரூபாய்
எஞ்சி இருக்கும் 37 கோடி ரூபாயை 1 கோடி ரூபாய்க்குக் கிடைத்த ஆதாயமாகக் கணக்கிட்டு கொண்டாடிக் கொள்கிறார்கள்.

பொருளாதார உண்மைகளின் படி சந்தையில் சரியான போட்டி இருந்தால் விலை கடைசி அலகுக்கு ஒரு வாடிக்கையாளர் கொடுக்கத் தயாராக இருந்த விலையான 400 ரூபாய்க்குத்தான் விற்றிருக்க முடியும்.

இப்படியே ஒவ்வொரு தலையிலும் பார்த்தால், மூலப் பொருள் வாங்கும் போது விவசாயியின் நிலையைப் பயன்படுத்தி சரியான சந்தை விலை அமைய விடாமல், தனது ஆதிக்கத்தின் மூலமாக குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டதில் ஐந்து கோடி ரூபாய் மிச்சம், ஊழியர்களுக்கு போட்டி நிலவும் சந்தையில் அமையும் சம்பளம் கொடுத்து விடாமல் தனது பெருவிரலுக்கிடையே கசக்கிப் பிழிந்து சேமித்ததில் இரண்டு கோடி ரூபாய் மிச்சம் என்று கழித்துக் கொண்டே வந்தால் சரியான போட்டி நிலவும் ஒரு சந்தையில் இந்த நிறுவனத்தின் கணக்கு இப்படி அமையலாம்:

  • 1. மூலப் பொருட்களை வாங்கியது - 15 கோடி ரூபாய்
  • ஊழியர்களுக்கு சம்பளம் - 8 கோடி ரூபாய்
  • கட்டிடம், மின்சாரம் முதலியவை - 4 கோடி ரூபாய்
  • வங்கி வட்டி முதலானவை - 3 கோடி ரூபாய்
  • சந்தைப் படுத்தல் செலவுகள் - 2 கோடி ரூபாய் (என்ன செய்தாலும் தனது விற்கும் விலையை சந்தை விலைக்கு மேலே ஏற்றிக் கொள்ள முடியாததால் வீண் செலவு தவிர்க்கப்படுகிறது)

  • மொத்தச் செலவினம்: 32 கோடி ரூபாய்
வருமானம் :
  • உற்பத்தி அளவு : 10 லட்சம்
  • பொருளின் விலை : 400 ரூபாய்
  • மொத்த வருமானம் : 40 கோடி ரூபாய்

  • மொத்த ஆதாயம் - 8 கோடி ரூபாய்
  • அரசுக்கு வரிகள் - 2 கோடி ரூபாய்
  • ஒரு கோடி முதலீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் ஆதாயம்.
குடுவையில் இருந்து விடுவித்த பூதம் போல பெரிதாக வளர்ந்த இந்த நிறுவன நலன்கள் அவை சேவை செய்வதற்கான மக்களின் நலன்களை விட பெரிதாகி விடுகின்றன. சரி எதற்கு இத்தகைய வணிக நிறுவனங்கள் முதல் முதலில் அனுமதிக்கப்பட்டன? அத்தகைய அமைப்புகளின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு

ஜூலை 6 இந்து நாளிதழில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் இரண்டாவது பசுமைப் புரட்சியின் தேவை பற்றி எழுதியிருக்கிறார்.

மதுரா சுவாமிநாதன் இன்றைய (செப்டெம்பர் 1) இந்து நாளிதழில் அரசின் அலட்சியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் பற்றி எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டும் வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்கு மதி செய்ய வேண்டியிருக்கும் நிலைமை கவலை தரக்கூடியது. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டில் நமக்குத் தேவையான உணவு தானியங்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாமை அரசின் தவறான கொள்கைகளால்தான் என்று கூறலாம். உழவர்களுக்கு சரியான விலை கொடுத்து கோதுமை வாங்கிக் கொள்ளாமல் (குவின்டாலுக்கு 750 ரூபாய்), இதே அரசு வெளி நாடுகளிலிருந்து குவின்டாலுக்கு 1000 ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது.

அதே ஆயிரம் ரூபாய் விவாசாயிகளுக்கு விலையாகக் கொடுக்கப்பட்டால், பயிரிடும் பொருளாதாரக் கணக்கு மாறி உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்படாதா?

சுவாமி நாதனின் கட்டுரையில், வியாபாரிகளையும், பொதுச்சந்தையையும் நம்பியிராமல் கிராமங்கள் தோறும் தானியக் கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதை உள்ளூர் மக்களே நிர்வகிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். குறைந்த பட்சம் சில கிராமங்களின் ஒன்றிய நிலையில் உணவு தானியக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக தமது விளைபொருட்களை விவசாயிகள் சேமித்து அரசுத் திட்டங்களுக்கும் பொது விநியோகத்துக்கும் பயன்படுத்தலாம்.

விளைச்சல் முடிந்ததும், குறிப்பிட்ட விலையை விவசாயிக்கு அரசு அளித்து, தானியங்களை உள்ளூர் கிடங்குகளில் சேமிக்க வேண்டும். மறைமுகமாக இத்தகையக் கிடங்குகளுக்கு வங்கிக் கடன் அளிப்பதும் மூலமும் செய்யலாம். அந்த வட்டாரத்தில் தேவைப்படும், உணவுக்கு வேலை, நியாய விலை விற்பனை போன்ற தேவைகளுக்கு இங்கிருந்தே தானியங்கள் அனுப்பப்பட வேண்டும்.

தனியார் வியாபாரிகள், தரகர்கள் விவசாயிகளின் தேவைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு சரியான விலை கொடுக்காமல் பொருட்களை வாங்கிச் சென்று விடுவதைத் தடுக்க இத்தகைய கிடங்குகள் மூலம் குறைந்த பட்ச விலை வைத்தே விற்பனை செய்ய வேண்டும். எண்ணெய் விற்கும் நாடுகள் கூட்டு சேர்ந்து எண்ணெய் விலை உலகச் சந்தையில் குறைந்து விடக் கூடாது என்று செயல்படுவதைப் போல, நாடெங்கும் இருக்கும் இந்த விவசாயக் கூட்டுறவு கிடங்குகள், குறிப்பிட்ட விலைக்குக் கீழ் தானியங்களை விற்பதில்லை என்று முடிவு செய்ய வேண்டும். அத்தகைய முடிவு அரசுக் கொள்கை மூலம் அமைக்கப் பட வேண்டும்.

அடக்க விலையில் யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நகரிலிருந்து குடும்பங்கள் கூட தமது மாதத் தேவைகளை வாங்கிச் செல்லலாம். அரசின் நெல் கொள்முதல் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் கூட இல்லாமல் இருக்கும் போது வெளிச் சந்தையில் அரிசி இருபது ரூபாய்க்கு மேல் விற்பது ஏன்? நெல்லை குத்தி உமி நீக்க தரம் பிரித்து விற்க பத்து ரூபாய் செலவாகி விடுமா என்ன?

இந்தக் கிடங்குகளில் அரிசியாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும். இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய இறக்குமதி செய்ய வேண்டியிருப்பது கண்டு கண்டிப்பாக மனம் கசந்து போயிருப்பார். இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் எதற்கு வீணாக அரிசி இறக்குமதி செய்து கடையில் வாங்கி சமைக்க வேண்டும், அமெரிக்காவிலிருந்து சமைத்து வரும் உணவுப் பொருட்களை நேரடியாக வாங்கி உண்டு விடுவோமே என்று உயர் மத்திய தர மக்கள் நினைக்கும் நிலைமை வந்து விடலாம்.

அவர்களுக்கு அப்படி வாங்க வாய்ப்பு இருக்கும் அதே நேரத்தில், இன்னும் பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் ஏழை மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பார்க. ப சிதம்பரம் ஐயா, என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தொழில் குறிப்புகள்

புதிய தொழில் நடத்துவதில் தனி நபர் நிறுவனமா கூட்டு நிறுவனமா அல்லது, தனியார் பங்கு நிறுவனமா என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் முதல் வாய்ப்பிலேயே தனியார் பங்கு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டோம். இதில் பல நன்மைகள் சில சிக்கல்கள்.
  • தனி நபர் நிறுவனமாக இருக்கும் போது நல்ல திறமையான நிர்வாகிகளை, ஊழியர்களை ஈர்ப்பது எளிதல்ல.
    ஒரு ஆளை நம்பித்தான் நிறுவனம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் மனதளவில் சமாதானம் கொடுத்து விடுவதில்லை.

    சிலர் தனி நபர் பங்கு நிறுவனமாகப் பதிந்து கொண்ட பிறகும், நிறுவனத்தில் இயக்குநர்களாக தனது சொந்தக் காரர்களை பெயரளவுக்குப் போட்டு, தனி நபர் நிறுவனமாகவே நடத்தி வருவார்கள்.
  • இயக்குனர்கள் குழுவில் தகுதி வாய்ந்த வெளி ஆட்களைச் சேர்ப்பதன் மூலம் அவ்வபோது நிறுவனத்தில் செயலாக்கத்தைப் பற்றி ஒரு சுதந்திரமான நேர்மையான மதிப்பீடு செய்து கொள்ளலாம். மொத்தம் பன்னிரண்டு இயக்குனர்கள் வரை நியமித்துக் கொள்ளலாம்.

  • நிறுவனத்தில் 50 வரை பங்கு தாரர்களை சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் நம் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வரும் போது பங்கு நிறுவனமாக இருந்தால் சட்ட விதகளின்படியும், நடைமுறைகளுக்கும் வசதியாக இருக்கும்.
  1. நான் அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு பெரிய பாடம், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்(கள்) செய்ய முடியாத, செய்ய விரும்பாத எந்த வேலையும் கண்டிப்பாக நடக்கப் போவதில்லை.
    சம்பளம் கொடுத்து ஆள் வைப்பது என்பது ஓரளவுக்குத்தான் உதவும்.
    ஒன்று தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு அதைச் செய்யும் விருப்பம் இருக்க வேண்டும், அல்லது அத்தகைய விருப்பம் உள்ள ஒருவரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும்.

  2. பணம் ஈட்ட வேண்டும் என்ற கட்டாயம்தான் ஒரு நிறுவனத்தின் அடிநாதம். அந்தக் கட்டாயம், அந்த அவசரம் தலைமையிடம் இல்லாவிட்டால் நிலைமை சுணக்கம்தான். வெளியிலிருந்து வந்த பணத்தின் தாங்குதலோ, சுயமாக பணம் ஈட்ட வேண்டும் என்ற உந்துதல் இல்லாத மனப் போக்கோ, வாடிக்கையாளரிடமிருந்து பணம் ஈட்டுவதைப் பின் தள்ளி விடலாம். இதற்கு பல காரணங்களைச் சொல்லிக் கொள்ளலாம்.

    நாங்கள் நீண்ட கால வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம். ஒரு சில ஆண்டுகள் லாபம் வராவிட்டால் சகித்துக் கொள்வோம் என்பது முன் அனுபவம் இல்லாது தொழில் நடத்து முயலும் என்னைப் போன்றவர்களின் ஒரு நம்பிக்கை. இது முற்றிலும் தவறு.

    முதல் மாதத்திலிருந்தே நிறுவனத்தின் செலவுக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடிய வேண்டும். உங்கள் நீண்ட கால கனவு உலகை வெல்வதாக இருக்கலாம். பத்து ஆண்டுகளில் உலகை வெல்வதற்கு இன்று ஒரு வாடிக்கையாளரையாவது வெல்லும் படி ஒரு தீர்வு அளிக்கும் திறமை, முறைமை இருக்க வேண்டும். இல்லை என்றால் பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் பேசிக் கொண்டிருப்பீர்கள்.

    வாடிக்கையாளருக்குச் சேவை செய்வதுதான் எங்கள் குறிக்கோள். அவரை மகிழ்வித்து விட்டால் அவர் பணம் தராமலா போய் விடுவார் என்பது இன்னொரு வாதம். அவ்வளவு பெரிய மகிழ்ச்சியில் கோடி ரூபாய் கொடுக்கப் போகும் அவரிடம் ஒரு சிறிய அளவில் சேவை மகிழ்ச்சி கொடுத்து ஆயிரம் ரூபாய் வாங்கும் வழியைப் பாருங்கள். ஒருவர் எழுதும் காசோலைதான் அவரது மகிழ்ச்சியின் அளவு கோல். ஒரு நிறுவனத்தின் வருமானம் தான் அது சமூகத்துக்குத் தேவையா என்பதன் வழிகாட்டி.

தமிழ் மணக்க ...

தமிழ் டாட் நெட்
1997ல் சாங்காயில் கணினி வாங்கியதும் இணையத்தில் தமிழ் என்று தேடியதும் முரசு அஞ்சல் பற்றித் தெரிந்தது. அதை நிறுவி இணைமதி எழுத்துருவில் தட்டச்சு செய்து கொள்ளவும் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவு செய்து கொள்ள முடிந்தது. அப்படியே தமிழ் டாட் நெட் என்ற மடற் குழுவில் போய்ச் சேர்ந்து விட்டேன்.

பாலா பிள்ளை என்ற மலேசியத் தமிழர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரின் முனைப்பில் அவரது செலவில் தமிழ் டாட் நெட் என்ற பெயரைப் பதிவு செய்து அதில் தமிழர் பக்கங்கள், ஒரு மடற்குழு, தமிழ் மென்கருவிகள், மதுரைத் திட்டம் என்று பலவற்றுக்கும் இடம் கொடுத்திருந்தார். இணையத்தில் சமூகங்களை உருவாக்குவது என்று அந்த காலத்திலேயே கனவு கண்ட தீர்க்க தரிசி அவர்.

ஒரு சமூகம் உருவானால் அதை நடத்திச் செல்ல அதில் பங்கேற்பவர்களே முன் வர வேண்டும். அதற்காக யாரும் பள்ளி ஆசிரியர் மாதிரி நடத்திச் செல்ல முடியாது என்பது அவரது போக்கு. தமிழ் டாட் நெட் மடற்குழுவில் மட்டுறுத்தல் கிடையாது. யார் வேண்டுமானாலும், இணைந்து கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

மலேசியாவிலிருந்து லோகநாதன் என்பவர் சளைக்காமல் தினமும் நீளமான மடல்கள் அனுப்புவார். ஜெயபாரதி என்ற பெரியவர் சத்தான பல கட்டுரைகளை அனுப்புவார். சிங்கப்பூரிலிருந்து பழனியப்பன், அவரது நண்பர்கள் என்று ஒரு குழு. அமெரிக்கா, கனடாவிலிருந்து சிலர். துபாய், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பலர் சுவையான மடல்களை விவாதத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே பங்களிப்பு. இந்த மடற்குழுவின் உச்சக் கட்டத்தில் ஐக்கிய அரபு நண்பர்கள் கானல் என்ற பத்திரிகையை ஆரம்பித்து வலையில் வெளியிட்டனர். ஒரு சங்கத்தை ஏற்படுத்தி மாதம் தோறும் சந்திப்பது என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். நண்பர் ஆசிப் மீரானின் முதிர்ச்சியான எழுத்துக்களைப் பார்த்து ஒரு நடுத்தர வயதுக் காரர் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். கடைசியில் நேரில் ஒரு முறை பார்க்கும் போது சின்ன வயதினாராக இருந்தார்.

கத்தாரில் இருந்து சுலைமான் என்று ஒருவர் எழுதுவார். அவரது மடல்களை ஒரு வார்த்தை விடாமல் படித்து விடுவேன். பல முறை படிக்கும்படி மிக சுவையாக எழுதுவார். அவரை பெருசு என்று அவரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் கலாய்ப்பார்கள். இப்படி ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகியிருந்தது.

முகமூடிகள் என்றும் உண்டு

அங்கும் முகமூடிகள் உண்டு. வேறு பெயரில் எழுதுபவர்களும், மாற்றுப் பெயரிலேயே எழுதுபவர்களும் சேர்ந்து அணிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். பல சங்கடமான விவாதங்களை ஆரோக்கியமாக விவாதிக்க முகமூடி குழு ஒன்று முயன்றது.

வெறுப்பை உமிழும் தமிழரசன் என்பவரின் மடல்கள் சர்ச்சைக்காளாயின. அவருக்கு எதிர்மறையாக சில நண்பர்கள் போட்டி வெறுப்புப் பேச்சை ஆரம்பித்தார்கள். சுரேஷ் குமார் என்பவர் எழுத ஆரம்பித்ததும்தான் பிரச்சனை வெடித்தது. பலர் இந்தச் சூழலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

லோகநாதனின் மெய்கண்டார், ஜெயபாரதியின் அகத்தியர் போன்ற தனி யாகூ குழுக்களைத் தொடர்ந்து பழனியப்பன் தமிழ் உலகம் என்ற குழுவை ஆரம்பித்து ஓரளவு மட்டுறுத்தலோடு தமிழ் டாட் நெட் குழுவின் குறைகளைக் களைந்து குழு நடத்த ஆரம்பித்தார். தமிழ் டாட் நெட் களையிழந்து இன்று என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.

சமூகத்தின் தோல்வி

பாலா எதுவும் செய்வதில்லை என்பது மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஒவ்வொரு மடலுக்கும் நான் உட்கார்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சமூகமே குழுக்கள் அமைத்து பரிந்துரை செய்ய வேண்டும், விதி முறைகளை வகுக்க வேண்டும், கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும், என்னுடைய நேரத்தை இதிலேயே செலவிட முடியாது என்று அவரது வாதம்.

அங்கும் 'பாலா எதற்காக இதைச் செய்கிறார். இதற்கு ஆகும் செலவை ஏன் வெளிப்படையாக ஏன் காட்டுவதில்லை' என்று விவாதங்கள் தொடர்ந்தன. இப்படி தனி மனிதரின் செலவில் நடக்கும் இடத்தைப் பயன்படுத்துவதற்கு என்றாவது நாம் விலை கொடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற நெருடல் பலருக்கு இருந்து வந்தது. யாகூ குழுமங்களில் அது மறைந்து விட்டது. நாம் எல்லோரும் இங்கு சமம்தான், என்ற சமூக மனப்பான்மை வந்து விட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் இந்தக் குழுமங்களில் நேரம் குறைக்க வேண்டும் என்று எல்லாவற்றின் மடல்களையும் படிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டேன். பிற நாடுகளை சேர்ந்த, உலக அளவிலான ஆங்கில மொழியில் இயங்கும் தொழில் நுட்பக் குழுக்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

இணையச் சமூகங்கள்

தமிழாயிருந்தாலும் சரி, பிற குழுக்களிலும் சரி "டீச்சர் இவன் என்ன அடிச்சிட்டான்" என்று அழும் உறுப்பினர்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன, தமிழ் குழுக்களில் இது கொஞ்சம் அதிகம். இலவசமாக என் காசைப் போட்டுச் சேவை தருகிறேன், அதில் குறை கண்டு பிடிப்பது அழுவாச்சித் தனம் என்ற பாலா பிள்ளை இன்றைக்கு காசி ஆறுமுகம் இவர்களின் போக்கு சமூகத்துக்கு பங்கம் விளைத்து விடுகிறது.

கூகிளின் தேடல் சேவை முதலிலிருந்தே இலவசம்தான். ஆனால் பயன்படுத்துவர்களின் வசதியை நலனை ஒவ்வொரு அடியிலும் மிகக் கவனமாக பார்த்து வளர்த்ததால் இன்று பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. தான் பெற்று வளர்த்த இந்த தமிழ் மணத்தை காசி விட்டுப் போவது தனக்குக் கிடைத்த வரலாற்றுப் பொறுப்பை விட்டு விடுவது போல்தான் ஆகிறது.

அவரின் ஈடுபாடு இல்லாவிட்டால் தமிழ் மணம் வேறு ஒருவரின் கையில் முற்றிலும் போய் விட்டால், தமிழ் மணத்தின் மணம் கண்டிப்பாகக் குறைந்து விடும். காசி மட்டும்தான் இதை நடத்த முடியும், அவருக்கு மட்டும்தான் இதைப் பெரிய நிறுவனமாக மாற்றும் உள்ளறிவு இருக்கும். அதற்கு வெளிப்படையாக சமூக உருவாக்கலில் ஈடுபடலாம், அல்லது கொஞ்சம் மறைத்து வைத்து வணிக நிறுவனமாக உருவாக்கலாம். இரண்டும் செய்ய முடியாது.

உலக அளவிலான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பங்கேற்கும் சில மடற்குழுக்களிலும் நான் பங்கேற்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு வகை. ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த மூல நிரல் பணிகளும் கூட்டுப் பணிகள்தாம். இவற்றின் வெற்றி தோல்விகளுக்குப் பல காரணிகள் எனக்குப் புரிகின்றன.

  1. சமூகத்தின் பணிகளை ஒருங்குபடுத்த பயன்படுத்த எளிமையான, வசதிகள் நிறைந்த மென்பொருட்கள். அவற்றைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல், குறைகளைக் களைதல், பயன்படுத்துபவர்களுக்கு உதவி செய்தல் என்ற வேலைகளைச் செய்யும் தொழில் நுட்ப வல்லுனர்கள். (காசி, மதி போன்றவர்கள்)

  2. விவாதங்களில் பரிமாற்றங்களில் வரும் சச்சரவுகளைத் தீர்க்க உறுதியாக பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வழி முறைகள். சில இடங்களில் இது சமூகத்தை உருவாக்கியவரிடமே இருக்கும். சில இடங்களில் சமூகத்தில் புகழ் பெற்ற ஒருவரின் முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அல்லது ஒரு சிலர் ஒன்று சேர்ந்து சச்சரவு தீர்க்கும் முறைகளை வகுத்து நடத்தலாம்.

  3. சமூகத்தின் வெற்றிக்குத் தேவையான பரிமாற்றங்களில் தீவிரமாக ஈடுபடும் பத்து பதினைந்து உறுப்பினர்கள். தொழில் நுட்ப வல்லுனர்கள் சமூகத்தின் முதுகெலும்பு என்றால் இவர்கள்தான் சமூகத்தின் முகங்கள். இந்த பரிமாற்றங்களைப் பார்த்தே புதியவர்கள், அதிகம் பங்கு கொள்ளாத உறுப்பினர்கள் இங்கு கவரப்படுவார்கள். (துளசி கோபால், போஸ்டன் பாலா போன்றவர்கள்)

முதல் வேலைக்கான செலவுகளை ஈடு கட்ட வேண்டுமானால் இந்த மூன்றையும் சேராத பங்கு கொள்ளாத உறுப்பினர்கள் ஆயிரக் கணக்கில் ஈர்க்கப் பட வேண்டும். அவர்களின் வருகையால் வணிக வழிகளில் பொருள் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

தேன் கூட்டில் தமிழ் மணம் மாதிரி விவாதங்கள் அதிகம் இல்லை. 1ஐ ஒரு நிறுவனமே முதலீடாக ஏற்றுக் கொண்டு 3ஐ மட்டும் சமூகத்தின் கையில் விட்டு வைத்துள்ளது.

கூகிளின் தேடுதல் சேவை, பிளாக்கர் சேவை, பல நூற்றுக் கணக்கான மடற்குழுக்கள், பல நூற்றுக் கணக்கான மென் பொருள் உருவாக்கப் பணிகள் நிறுவனம் சார்ந்து இயங்கி வருகின்றன.

இன்னொரு வகையில், ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒருவரை ஒருவர் மதிக்கும் பலர் ஒன்று சேர்ந்து தமது திறமைகளை ஒருங்கிணைத்து உலகையே புரட்டிப் போடும் வேலைகளைக் கூடச் செய்து வருகிறார்கள்.
  • லினஸ் டோர்வால்ட்ஸ் ஆரம்பித்து நடத்தி வரும் லினக்சு இயங்கு தள உருவாக்கம்,
  • விக்கிபீடியா எனப்படும் எல்லோரும் சேர்ந்து உருவாக்கும் கலைக் களஞ்சியம்,
  • புராஜெக்ட் குடன்பெர்க் போன்ற மின் நூலாக்கப் பணிகள்,
  • அதே மாதிரி தமிழ் மின் நூல்கள் உருவாக்கும் மதுரைத் திட்டம்

    என்று தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு செயல்படும் வெற்றிக் கதைகளும் நிறைய உண்டு.
ஆர்வமாக ஆரம்பிக்கப்பட்டு பலர் சேர்ந்து பணியாற்றி ஏதாவது காரணத்தினால் குறைபாட்டினால் அப்படியே மறைந்து போய் விட்ட முயற்சிகளின் எண்ணிக்கையோ பல்லாயிரக் கணக்கில் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் எந்த பாதையில் போகப் போகிறோம்?

கொசுறு மதிப்பு (economics 15)

நான் லிட்டருக்கு பத்து பைசா வீதம் தண்ணீர் வரி கட்டினால், முந்நூறு லிட்டர் பயன்படுத்தும் போது நான் செலவளிக்கும் தொகை முப்பது ரூபாய். ஆனால் அந்த முந்நூறு லிட்டரில் முதல் லிட்டர் தண்ணீருக்கு நான் ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்கத் தயாராக இருந்தேன், இல்லையென்றால் உயிரே போய் விடும். ஒவ்வொரு லிட்டருக்கும் அது குறைந்து கொண்டே வந்தாலும், முந்நூறாவது லிட்டருக்கு நான் கொடுக்கத் தயாரான விலை பத்து பைசாவிலேயே முதல் லிட்டரையும் மீதி 298 லிட்டர்களையும் வாங்கிக் கொள்கிறேன்.

முந்நூறாவது லிட்டருக்கு முந்தைய ஒவ்வொரு லிட்டரிலும் எனக்குக் கிடைக்கும் பலனை விட குறைந்த விலையே கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்தக் குறைந்து விலைக்கும், நமக்குக் கிடைக்கும் பலனின் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு நுகர்வோர் கொசுறு மதிப்பு எனப்படுகிறது.

கொசுறு என்றால் ஐம்பது ரூபாய்க்கு காய்கறி வாங்கினால் கிடைக்கும் ஐம்பது பைசா கறிவேப்பிலை இல்லை.
ஊசி வாங்கினால் ஒட்டகம் கிடைக்கும் தள்ளுபடி விலை. ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஒரு பொருளை பத்து பைசாவுக்கு வாங்கி அனுபவித்து விட முடிகிறது.

போட்டி நிறைந்த சந்தைச் சூழல் இல்லாத பல துறைகளில், நுகர்வோரிடமிருந்து இந்தக் கொசுறு மதிப்பைத் தட்டிப் பறிப்பதுதான் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
  • எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், தள்ளு வண்டியில் வாழைப்பழம் வாங்கும் போது பேரம் பேசித்தான் வாங்குவார்.
  • அவரால் ஒரு பழத்துக்கு ஐம்பது ரூபாய் கூட கொடுக்க முடியும்.
  • அவரது மலச் சிக்கலுக்குத் தேவையான வாழைப்பழத்துக்கு நூறு ரூபாய் கூடக் கொடுக்கத் தயார்.

ஆனால் அன்றைய சந்தை விலையான இரண்டு ரூபாய் கொடுத்து மீதியை கொசுறு மதிப்பாக ஈட்டி விடுகிறார். வியாபாரிக்கும் இது புரிகிறது. காரில் வந்து இறங்குகிறார், பழத்தைப் பார்த்ததும் ஓரம் கட்டினார், என்று கணக்குப் பார்த்து அருகில் வேறு யாரும் இல்லா விட்டால், ஒரு பழம் இரண்டரை ரூபாய் என்று சொல்லிப் பார்க்கிறார். அரை டஜன் வாங்கினால் மூன்று ரூபாய் தேறுமே, செல்வந்தரின் கொசுறு மதிப்பை இவர் எடுத்துக் கொள்ள முயல்கிறார்.

யாருக்குமே அத்தகைய முயற்சி பிடிப்பதில்லை. நமக்குக் கிடைக்க வேண்டிய கொசுறு மதிப்பை விட்டுக் கொடுத்து விட மனம் வருவதில்லை "ஆளப் பாத்து விலை சொல்றான் அவன், அப்புறம் அவன்கிட்ட போறதேயில்ல" என்று முடிவு செய்து விடுகிறோம்.

நடைமுறையில் பல இடங்களில் நாம் இதை விட்டுக் கொடுக்கிறோம். யாரிடம் என்ன விலை வைத்து விற்பது என்று கணக்குப் போடுவது மார்க்கெட்டிங் துறையின் மிகப் பெரிய கேள்வி. ஒரு நிறுவனம், தமது வாடிக்கையாளர்களை தனித்தனி சந்தைகளாகப் பிரித்து அதிகம் கொடுத்து வாங்க விரும்புபவர்களுக்கு அதிக விலையிலும், அந்த விலையில் வாங்காமல் இருந்து விடக் கூடியவர்களுக்கு அவர்கள் வாங்கி விடக் கூடிய குறைந்த விலையிலும் விற்க பல உத்திகளைக் கையாளுகிறார்கள்.

  • விளம்பரங்கள், பெயர் உருவாக்கம், பிரபலமானவர்களின் சிபாரிசு என்று பல விதங்களில் ஒரே சட்டையை இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒன்று என்று அதே தரச் சட்டை இருநூறு ரூபாய்க்கு விற்கும் கடைக்குப் பக்கத்திலேயே போய் வாங்கச் செய்து விடுகிறார்கள்.
    நாம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து சட்டை வாங்கும் வசதி படைத்தவர்கள், அந்த ஆயிரத்து எண்ணூறு ரூபாய் கொசுறு மதிப்பை விட்டுக் கொடுக்க ஏதாவது ஒரு காரணம் காட்டி நம் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

  • டிவிஎஸ் சுசுகி சமுராய் என்று ஒரு வண்டி இருந்தது. நான் வாங்கும் போது நாற்பதாயிரம் கொடுத்து வாங்கினேன்.
    அதே எஞ்சின், அதே தொழில் நுட்பத்துடன் கூடிய இன்னொரு வண்டி மேக்ஸ் ஆர் என்பது முப்பதாயிரத்துக்கு விற்றது, அப்போது. என் கையில் காசு இருந்தது.
    சமுராயாகத் தோற்றமளிக்க, எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய கொசுறு மதிப்பை விற்பனை நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்து பத்தாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்தேன்.

  • திரும்பவும் தண்ணீரை எடுத்துக் கொண்டால் தாகத்தைத் தீர்க்க தேவைப்படும் தண்ணீரின் மதிப்பு மிக அதிகம் என்று உணர்ந்து பல கோடி மதிப்பிலான வணிகம் நடைபெறுகிறது.
    பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், கோலா பானங்கள் என்று நமது கொசுறு மதிப்பைத் தட்டிப் பறிக்கும் முயற்சிகள் ஏராளம்.
    போட்டி போடும் பொருட்கள் மட்டும் அருகிலேயே கிடைக்கா விட்டால், நல்ல நீர், இளநீர், கரும்புச்சாறு என்று கோலா விற்கும் கடைக்கு அருகில் கிடைக்காத நிலைமை இருந்தால், குடிநீரே கிடைக்காத நிலை இருந்தால், நாம் பாட்டிலுக்கு நூறு ரூபாய் கொடுத்துக் கூட கோலா குடிக்கத் தயாராக இருப்போம்.

  • கோலாக்களை எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள், பெரிய தொழில் நிறுவனங்களில் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் கம்யுனிஸ்டுகள், அவர்கள் போட்டிச் சந்தைக்கு எதிரானவர்கள் என்று பரவலான கருத்துக்கள்.
    உண்மையில் சந்தைப் பொருளாதாரத்தைக் கற்றுத் தேர்ந்த யாரும், முதல் முதன்மை கோட்பாட்டிலான பொருளாதாரக் காரணிகளைப் புரிந்து கொண்டவர்கள், பொது மக்களின் குடி நீரில் கிடைக்கும் கொசுறு மதிப்பைக் கொள்ளை அடிக்கும் போக்கையோ, ஓரிரு பெரிய நிறுவனங்கள் சந்தையை ஆக்கிரமித்து அதற்கு வசதி ஏற்படுத்திக் கொள்வதையோ கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்கள்.