சனி, பிப்ரவரி 20, 2010

ஒரு புதிய நம்பிக்கை

1. 1929 பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்த பொருளாதாரத் தேக்கம் (The Great Depression) பல ஆண்டுகளுக்கு நீடித்தது. அப்போதைய அமெரிக்க அரசும் பல அரைகுறை முயற்சிகளின் மூலம் வங்கிகளின் மற்றும் வணிக நிறுவனங்களின் கிழிந்து கொண்டிருந்த அடிப்படைகளை தைக்க முயன்று தோற்றது.

'போதுமான அளவு செய்யவில்லை, தேவைக்கதிகமாக செய்கிறார்கள்' என்ற விவாதங்களுக்கிடையில் அமெரிக்க பொருளாதாரமும் கூடவே உலகப் பொருளாதாரமும் தள்ளாடி தள்ளாடி நகர்ந்து கொண்டிருந்தது.

யாரோ செய்த செயல்களுக்காக, ஒரு சில பணமூட்டைகளின் பேராசையின் விளைவாக பல கோடி மக்கள் வேலை இழந்து, வாழும் முறை சிதறி துன்பப்பட்டார்கள்.

2. 2007ல் ஆரம்பித்த பொருளாரச் சுணக்கம் முந்தைய பொருளாதார தேக்கத்தை விட ஆழமானது என்றில்லா விட்டாலும் அதற்கு நிகரானது என்றுதான் தோன்றுகிறது. கால வெள்ளம் திரும்பி ஓடி அதே இடத்தில் ஓடுவது போன்று அந்த ஆண்டுகளில் நடந்த கொள்கை விவாதங்கள், அரசு நடவடிக்கைகள் இன்றும் அப்படியே மறுபடியும் நிகழ்வது போலத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் வேலை தேடுபவர்களின் வீதம் டிசம்பர் 2009ல் 10% ஆக இருந்து ஜனவரி 2010ல் 9.7% ஆகக் குறைந்திருக்கிறது. 2010 முழுவதும் இந்த வீதம் 9.5% முதல் 9.7% வரை இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள்.

3. Great Depressionலிருந்து வெளியில் வருவதற்கு வங்கிகளுக்கு பணம் கொடுத்தோ, வணிக நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளித்தோ கட்டுப்படியாகவில்லை. இறுதியாக

'வேலை இல்லை அதனால் மக்கள் பொருட்கள் வாங்க முடியவில்லை,
மக்கள் பொருட்கள் வாங்குவதில்லை அதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும்,
நிறுவனங்கள் செலவுகளைக் குறைப்பதால் இன்னும் பலருக்கு வேலை போகிறது.'

என்ற நச்சுச் சுழலிலிருந்து வெளியில் வருவதற்கு உதவி புரிந்த அமெரிக்க அரசின் திட்டம்தான் புது நம்பிக்கை (New Deal) என்று பெயர் சூட்டப்பட்டது.

அரசாங்கம் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியை ஆரம்பித்தது. அதற்கான முதலீடு அரசாங்கம் செய்தது. அதில் வேலை செய்ய ஆயிரக் கணக்கான பேர் அமர்த்தப்பட்டார்கள்.

'அப்படி வேலை கிடைத்தவர்கள் பொருட்கள் வாங்க ஆரம்பித்தார்கள்'
'பொருட்களின் விற்பனை உயர நிறுவனங்கள் விரிவடைய ஆரம்பித்தன'
'நிறுவனங்கள் வளர வளர வேலை வாய்ப்புகளும் பெருகின'

என்ற நேர்மறை சுழற்சிக்கு பொருளாதாரம் திரும்பியது.

3. Franklin D Roosveltன் புதிய நம்பிக்கையைப் போன்று ஒரு புதிய நம்பிக்கை அமெரிக்காவுக்குத் தேவை. என்ன செய்யலாம்?
  • பொதுவான கல்வி அறிவு வேலைத் திறன் உள்ளவர்கள் யாரும் சேர்ந்து கொள்ளும்படியாக வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
    சாலைகள் அமைக்கும் திட்டத்தில், பொறியிலாளர்கள், வடிவமைப்பாளர்களில் ஆரம்பித்து எந்த படிப்பும் தேவையில்லாத கையாள் வரை வேலை வாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

  • திட்டத்தின் பலன் எதிர்கால சமூகப் பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.
    புதிதாக உருவாக்கப்பட்ட சாலைகள் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன.

புதன், பிப்ரவரி 17, 2010

சொல்லி சாதிப்போம்

'வெந்தால் தின்போம் விதி வந்தால் சாவோம்'

என்று வாழாமல்

'ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் துல்லியமாக திட்டமிட்டு சாதிக்கும்'

வாழ்க்கை வாழ்வோம்.