புதன், மே 30, 2007

மதி கந்தசாமி - வலை மகுடம்

2006 ஏப்ரலில் தமிழில் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் புது மாடு குளிப்பாட்டும் வேகத்தில் ஏதேதோ எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒரு இடுகை எழுதி தமிழ்மணத்தில் இணைத்து சில நிமிடங்களில் காணாமல் போய் விட்டது. இன்னும் ஒரு முறை பதிந்து இணைத்தால் மீண்டும் காணவில்லை. அதைக் குறிப்பிட்டு மறுபடியும் இணைத்தால், ஒரு மின்னஞ்சல்.

'இடுகையின் தலைப்பு நீளமாக இருப்பதால் பிளாக்கர் அதை விழுங்கியிருக்கும்' என்று சுருக்கமாக குறிப்பிட்டு வழி காட்டியிருந்தார் மதி கந்தசாமி.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு காவல் தேவதை போல தடுமாறும் போது கை கொடுத்து, பின்னணியில் தனது தொழில் நுட்பப் பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார் மதி.
  • ஆரம்பத்தில் தமிழ் வலைப்பதிவுகளைத் தொகுத்துக் கொடுத்த வலைப்பதிவை நடத்தியது,
  • தமிழ்மணத்தை காசி ஆறுமுகம் நடத்தும் போது பல வேலைகளில் பங்கேற்றது,
  • தமிழ் மீடியா இனிஷியேடிவ் நிறுவனம் பொறுப்பேற்ற பிறகு அதிகாரப் பூர்வமாக இணைந்தும் தனிப்பட்ட முறையிலும்
தமிழ் வலைப்பதிவர்கள் சமூகம் தளைக்க இன்றியமையாத பணி ஆற்றி வருகிறார்.

அவரது எழுத்துக்களின் ஈழத்து வேர்களும் மேற்கத்திய மணமும் ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன. சென்னையில் தனது வாழ்க்கையைக் குறித்து அவர் எழுதியிருந்த இடுகையில் பயன்படுத்திய சொல்லாடல்கள் மறக்க முடியாதவை.

திடீரென்று நான் ரசித்த காதல் கதைகள் என்று ஒரு பெரிய திரைப்படப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவ்வளவு படங்களைத் தேர்ந்தெடுக்க எத்தனை படங்களைப் பார்த்திருப்பார் என்று வியப்பாக இருந்தது.

இன்றைக்கும் யாராவது புதிய பதிவரின் குழப்பான நேரங்களில் எங்கிருந்தோ அவரது உதவிக் கரம் நீண்டு கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, மே 25, 2007

லாபம் என்பது கெட்ட வார்த்தையா!

ஆதாயங்களை பலன்களை ஊழியர்கள், சமூகம், வாடிக்கையாளர், விற்பனையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படி பிரதம மந்திரி மன்மோகன் சிங் வலியுறுத்தல்

இந்துவில் செய்தி

இது பற்றி என்னுடைய பழைய இடுகை ஒன்று

செவ்வாய், மே 22, 2007

தோல் துறை (தொகுப்பு)

தோல் துறை பற்றிய அறிமுகம், மேலாண்மை, சுற்றுப் புறச் சூழல் சிக்கல்கள் குறித்த பதிவுகளின் தொகுப்பு

இங்கே.

நிறுவனத்தின் வளங்களை கட்டி மேய்க்க உதவும் மென்பொருள் பயன்பாடு ERP எனப்படும் நிறுவன வள திட்டமிடல் (நிவதி). நிவதி மென்பொருளை உருவாக்குதல், அதன் அடிப்படைக் கூறுகள், நடைமுறைப்படுத்துதல் குறித்து அடுத்து எழுதுவதாக திட்டம்.

கோவை சந்திப்பு - விடுபட்டவை

கோவை சந்திப்பு பற்றிய இடுகையில் பல விபரங்கள் விட்டுப் போயின. அதற்கு என்னென்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்ததில்:
  1. முந்தைய இரவு 10.30க்கு ஏறி, காலை ஐந்து மணிக்கு கண் விழித்து, ஓடும் பேருந்தில் ஐந்தேகால் முதல் ஆறேகால் வரை எழுதியதால் இருக்கலாம்.

  2. கடைசி வரிசையில் 29ம் எண் இருக்கையில் தூக்கித் தூக்கிப் போடத் தூக்கம் சரியாக இல்லாத கலக்கத்தால் இருக்கலாம்.

  3. வலது புறம் 30ம் எண் இருக்கையில் பயணித்த கொஞ்சம் குண்டான இளைஞர், தூக்கத்தில் அரை மணிக்கு ஒரு முறை தனது கனத்த கையை வேகமாக என் தோளில் இறக்கிக் கொடுத்த அதிர்ச்சியில் தூக்கம் தடைப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஏற்பட்ட சோர்வால் இருக்கலாம்.

  4. இடது புறம் நடைபாதைக்கு அப்பால் இருந்த 27, 28 எண்களில் இருந்து இளம் சகோதரிகளின் இருப்பின் பாதிப்பால் இருக்கலாம்.

  5. பேருந்தில் குலுக்கலில், முன் இருக்கையின் மீது கணினி போய் மோதி உடைந்து விடக் கூடாது என்ற தவிப்பால் இருக்கலாம்.

  6. காலையில் பல் தேய்க்காமலேயே எழுதும் கசப்புணர்வாக இருந்திருக்கலாம். (சிறிலின் பாதிப்போ!)

  7. எதுவும் இல்லை, வயதாகி விட்டது, நினைவாற்றல் குறைந்து வருகிறது என்ற உண்மையாகவும் இருக்கலாம்.
எப்படியோ விட்டுப் போனவைகளில் பல நேற்று மாலையே உறைத்து விட்டது. இன்று காலையில் வினையூக்கியின் பதிவைப் படித்ததும் மீதியும் நினைவுக்கு வந்தது.
  • ஓசை செல்லா
    தங்குவதற்கு ரேட்சன் விடுதியை ஏற்பாடு செய்ததிலிருந்து ஆரம்பித்து இந்தப் பட்டறையை தனியொருவராக திட்டம் வகுத்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்துக் கடைசி நிமிடத்தில் அம்மை கண்ட காரணத்தால் மூன்று நாட்கள் அலைய முடியாமல், தொலைபேசி மூலமாகவே முடிந்த வரை செய்து வந்திருக்கிறார் செல்லா.

  • காலையில் பல் தேய்க்காமலேயே தொலை படக் காட்சி, ஒலிக் காட்சி மூலமாக வெகு நேரம் உரையாடிய சிறில் அலெக்ஸ்.
    சற்று முன் பதிவைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இது போன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவர்களால் செய்தி பகிர்ந்து கொள்ளப்படும் கூட்டுப் பதிவு இது உலகிலே முதல் முறையாக இருக்கலாம்.

  • காலையில் தலையைக் காட்டி விட்டு போய் விட்ட பதிவர் உதயசெல்வி அவர்கள்

  • எல்லோருக்கும் சாக்லெட்டும், சுகுணா திவாகருக்கு பின்நவீனத்துவ சிற்பமும் வாங்கி வந்திருந்த செந்தழல் ரவி. உள்ளே போட்டிருந்த பனியன் வாசகம் தெரியட்டும் என்று திறந்த சட்டையுடன் உள்ளே அவர் நுழைந்ததுமே அறையில் ஒரு டிகிரி வெப்பம் ஏறியது. ஏற்கனவே புழுக்கம் அதிகமாகத்தான் இருந்தது.

  • செல்லாவும் தானும் எப்படி இணைய உலகில், ஆர்க்குட்டில் அடிபட்டு உதைபட்டு இருந்த காலத்தில் புணர்ச்சி பழகுதல் வேண்டா என்று பார்க்காமலேயே நட்பு ஆரம்பித்த கதையை விவரித்த பாமரன்.

    செல்லாவைப் போல பாமரன் இருக்கிறாரா, பாமரன் போல செல்லா இருக்கிறாரா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு இரண்டு பேரின் கருத்துக்களும் சொல்லாடல்களும், பேச்சுப் பாணியும் ஒரே மாதிரி இருக்கின்றன.

  • தங்கச்சி குளிக்கத் தடுக்குக் கட்ட வக்கில்ல
    ராமருக்குக் கோயில் கட்ட செங்கல் தூக்கப் போறான்
    என்று முகவரிக் கவிதை சொன்ன பாலபாரதியின் கவிஞர் நண்பர் கோவை முத்து.

  • 'தில்லி முழுவதும் உங்கள் பொருளாதாரக் கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப் படுகின்றன' என்று முதலில் காலையிலும் (மொத்தம் ஐந்து தமிழ்ப்பதிவர்களிடையே மட்டும்தான் என்று பின்னர் சொன்னார்), மாலையில் அபிஅப்பா தொலைபேசிய போது, என்னிடம் அலைபேசியைக் கொடுக்கும் முன்னர், நான் ஹேன்ட்சம்மாக இருக்கிறேன் என்று அவருக்கும் சொல்லி என் வாழ்க்கையை முழுமை பெற வைத்த சென்ஷி.

  • பத்திரிகை நிருபராக வந்தாலும், பேசப்பட்ட பொருட்களில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்து நாளிதழின் சுபா.

  • ஜோயல் ஆன் சாஃப்டுவேர் சுட்டி.
பிற இடுகைகள்
  1. என்னுடையது
  2. செந்தழல் ரவி
  3. வினையூக்கி
  4. வினையூக்கி - 2
  5. சுப்பையா வாத்தியார்
  6. சென்னப்பட்டிணம் - 1, 2, 3
  7. பாலபாரதி
  8. தியாகு
  9. மோகன் தாஸ
  10. முகுந்தராஜ்
  11. சுகுணா திவாகர்
  12. புதிய பாலபாரதி

திங்கள், மே 21, 2007

கோவை சந்திப்பு

கோவை பதிவர் பட்டறைக்கான நாள். தங்கியிருந்த படுக்கை வசதி விடுதியில் கழிவறை, குளியலறை வசதிகள் நேர்த்தியாக தூய்மையாக வைத்திருந்தார்கள். காலை எழுத உட்கார்ந்தேன். முகுந்தராஜ் தொலைபேசியில் 'காந்திபுரத்தில் இறங்கி இடம் தேடுவதாக' கேட்டார்.

பெட்ரோல் நிலையத்தை அடுத்த சந்தில் பெயர்ப்பலகை வைத்திருப்பதை அடையாளம் சொன்னேன். சொல்லி விட்டு 'வெளியில் வந்து பார்ப்போம்' என்று ஒரு டி சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தால் வரவேற்பு மேசையருகில் ஒருவர் பார்த்துப் புன்னகைத்தார்.

முகுந்த் இப்படி இருக்க மாட்டாரே என்று தடுமாறிப் பார்த்தால் அவரே கையை நீட்டி, 'உண்மைத் தமிழன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நேரம் முகுந்தும் வந்து சேர்ந்தார். என்னைப் போலவே உடலில் சதை கிதை பூசி விடாமல் அப்படியே இருந்தார் முகுந்த்.

மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு அனுப்பி விட்டார்கள். குளித்து, உடை மாற்றித் தயாராகி கீழே வந்தோம்.

கீழே என்னை விடவும் ஒல்லியாக ஒருவர் இருக்க முடியும் என்று காண்பிக்க சென்ஷி நின்றிருந்தார். அவர் ஏற்கனவே குளித்து சாப்பிட்டு முடித்திருந்தார். தில்லியிலிருந்து 2 நாட்கள் பயணித்து வந்திருக்கிறார். ஏதோ மதிய வேளையில் பொழுது போகலாம் என்று பதிவர் சந்திப்புக்குப் போவதில் ஆரம்பித்து இப்படி நாட்கள் பல செலவழித்து எல்லோரும் வருவது வியப்பாக இருந்தது.

'சும்மா ஒரு நேரம் போக்கு சார், இதால எதுவும் பெருசா சாதிச்சிட முடியாது' என்றுதான் எல்லோரும் உள்ளே நுழைகிறோம். அவர்களுக்குள் ஒரு சிலராவது தீவிரமாகி விடுகிறார்கள்.

பேருந்து நிலையத்தின் எதிரிலேயே இருந்து அன்னபூர்ணா கௌரிசங்கர் விடுதியில் சாப்பிடப் போனோம். முகுந்துக்கு பெங்களூரில் நல்ல பொங்கல் கிடைப்பதில்லையாம். இரண்டு பொங்கல், காபி சாப்பிட்டார். நான் இட்லி, எலுமிச்சை சேவை, தோசை என்று நாலு நாள் சாப்பிடாதது போல வெளுத்து வாங்கினேன். தோசைதான் கொஞ்சம் தாமதமாக வந்தது. உண்மைத் தமிழனும் இட்லி, தோசை, காபி.

வெளியே வந்து நான்கு பேராகப் போக ஆட்டோ கேட்டால் 50 ரூபாய் என்று சொன்னார்கள். சென்ஷி கோவைக்குப் பழக்கமானவராம். அவரது வழிகாட்டலில் பேருந்தைப் பிடிக்கப் போனோம். சாலையைக் கடந்து எதிர்த்திசையில் பேருந்து நிறுத்தத்தில் 7ம் தடப் பேருந்தில் உட்கார இருக்கையோடு ஏறிக் கொண்டோம்.

சரியாக அடையாளங்கள் சொல்லி தபால் நிலையம் அருகில் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்டிருந்தோம். கடைசி நிமிடத்தில் அவர் கூடுதல் உதவி செய்ய விரும்பி, கட்டிடத்தின் பெயரைக் கேட்டார். அதற்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொல்லி இறக்கி விட்டார்.

நடந்து தபால் நிலையம் அருகில் வந்து கேட்டுக் கேட்டு கௌதம் ஆர்கேட் வந்து சேர்ந்தோம். இரண்டாவது மாடிக்கு மூன்று சுற்றுகள் படி ஏறி தாட் இக்னைட் அமைப்பின் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம். மின்தடையாம். குளிரூட்டும் கருவி, மின்விசிறி, விளக்குகள் எல்லாம் அணைந்து பாலபாரதியும், வினையூக்கியும் அறையையும் கருவிகளையும் ஒழுங்கு படுத்தும் நண்பர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆறு பேர் ஆகி விட்டோம். சிறப்பு விருந்தினர் வர வேண்டும் என்று 'கோவை வந்தாலும் இந்த புழுங்கும் சூழலைக் கூட்டிக் கொண்டா வர வேண்டும்' என்று உட்கார்ந்திருந்தோம். இடையில், வந்த ஓரிருவர் சொல்லாமல் கிளம்பக் கூடச் செய்து விட்டார்கள்.

பாமரன், ஆறுமுகம் ஐயா வந்து சேர்ந்தார்கள். எல்லோரது சுய அறிமுகத்தைத் தொடர்ந்து பத்தரை மணிக்கு ஆறுமுகம் ஐயா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சூடான வெளிச்சமான படப்பிடிப்பு விளக்கு, சின்ன அறையில் பத்துப் பதினைந்து பேர் இருந்தது மின்னிணைப்பு கிடைத்து குளிரூட்டி ஓட ஆரம்பித்தும் புழுக்கம் குறையவில்லை.

அடுத்த அமர்வில் பின்நவீனத்துவம் குறித்து கட்டுரை வாசிக்க பேராசிரியர் ரமணி.

ஆறுமுகம் ஐயா, இளையராஜாவை முறையாக இசை பயிலாத இரண்டாம் தரக் கலைஞர் என்று கருத்து சொல்ல செந்தழல் ரவியிடமிருந்து ஒரு உறுமல் கேட்டது. அதன் பெருக்கமாக அறையெங்கும் ஒவ்வொருவர் பேச ஆரம்பித்து கட்டுடைக் கோட்பாடுகளை வெளுத்து வாங்கினார்கள்.

அந்த இழையிலிருந்து பிடித்து தனது பின் நவீனத்துவக் கட்டுரை வாசிப்பை ஆரம்பித்தார் பேராசிரியர் ரமணி. தொழிற்புரட்சி, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவி வந்து நவீனத்துவ சிந்தனைகளான ஒழுக்கம், மையம், சமூக நெறிகள் என்று பலவற்றை உடைத்து தனி மனித கலைகள், மையங்கள் உடையும் அரசியல், பரவலாக்கப்படும் அறிவு என்று பின்நவீனத்துவம் பற்றி நீளமாகப் பேசினார். இடையிடையே வாக்குவாதமும் வெடித்தது.

சுகுணாதிவகர், ராஜானஜ் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். 'ரிலையன்ஸ் பிரஷ், கோக் போன்ற நிறுவனங்கள் நமது தேர்வுகளையே அழித்து விடுகின்றன. அவர்களையே சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றன, என்ன செய்வது' என்று மையங்கள் அழிகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து சொன்னார்கள்.

பேராசிரியர் ரமணி பொறுமையாக விவாதத்தில் தான் ஈடுபடாமல் மற்றவர்கள் அடித்துக் கொள்வதை அவதானித்துக் கொண்டார். தனது கட்டுரை சிந்தனைகளைத் தூண்டி விடுவதுதான் நோக்கம் என்று சொன்னார்.

இந்தியன் எக்ஸ்பிரசின் நிருபர் விபரங்களை வாங்கிக் கொண்டார்.

இந்துவிலிருந்து வந்திருந்த நிருபர், எல்லோரிடமும் கலந்துரையாட வேண்டும் என்று கூட்டினார். வலைப்பதிவுகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டார். பாலபாரதி எப்படி தருமி, என்ற கல்லூரிப் பேராசிரியரிடம் தான் ஆரம்பித்த விவாதத்தில் பெங்களூரிலிருந்து மோகன்தாஸ் கலந்து கொண்டார் என்று ஆரம்பிக்க அப்படியே தமிழ்மணம், எழுதும் கருவிகள், இலவசமாகக் கிடைக்கும் எழுத்துருக்கள் என்று நீண்டது. முகுந்து இகலப்பை குறித்து தவறாக கட்டுரை ஒரு முறை வெளி வந்ததைக் குறிப்பிட்டார்.

லிவிங்ஸ்மைல் வித்யா வலைப்பதிவுகளில் தனக்குக் கிடைத்த கருத்துத் தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அரவாணிகளைக் குறித்த பார்வை மாற்றம் உருவாக அவரது பதிவு எப்படி ஒரு தூண்டுதலாக இருந்தது என்று சொன்னார்.

உணவு இடைவேளை முடிந்து அடுத்த அமர்வில் முகுந்த் eகலப்பை, தமிழ் விசை என்ற பயர்பாக்சு நீட்சி, அதியன் என்ற எழுத்துரு மாற்றி, வலைப்பதிவுகளின் புதிய இடுகைகளை எப்படி உடனுக்குடன் தெரிந்து கொள்வது என்ற முறைகள் விளக்கினார். தமிழ்பதிவுகள் என்று தான் உருவாக்கிய திரட்டி பற்றியும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கமாகக் குறிப்பிட்டார். எங்கிருந்து தகவிறக்குவது, எப்படி நிறுவுவது, எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கினார்.

பயர்பாக்சு இருந்தால் மட்டுமே தமிழ்விசை, அதியன் வேலைக்கு ஆகும். இன்டர்நெட் எக்சுபுளோரர் பாவிப்பவர்கள் மனம் திரும்பி மேம்பட்ட பயர்பாக்சுக்கு மாறும்படிக் கேட்டுக் கொண்டார். யாகூ மெசஞ்சரில் எகலப்பையை பாவிக்க முடியாத நிலைக்கு மாற்றாக மீபோ என்ற வலை உலாவி சார்ந்த பயன்பாட்டை செயல்விளக்கம் காண்பித்தார்.

பலரும் தமது கேள்விகளை ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது.

அடுத்ததாக நான் ஜோயல் ஆன் சாஃப்டுவேர் என்று ஆங்கில வலைப்பதிவைச் சுட்டி அதை எழுதும் ஜோயல் ஸ்பால்ஸ்கி எப்படி எழுதுவதன் மூலம் தனது தொழிலையும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடிந்தது என்று விளக்கினேன். ஜிமெயிலில் புதிய லேபல்கள உருவாக்கி உள்ளே வரும் அஞ்சல்களை எப்படி குறிப்பிட்ட லேபல் பொருந்தும்படி செய்யலாம் என்றும் காட்டினேன்.

உண்மைத்தமிழனின் 22 பக்கங்களுக்குக் குறையாத இடுகைகள் பயர்பாக்சில் வட்ட வட்டமாகத் தெரிவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, அவர் பதிவிடும் போது ஜஸ்டிஃபை என்ற தேர்வை கிளிக்காமல் இருந்தால் போதும் என்று தெரிந்தது.

போலி உண்மைத் தமிழனைப் போற்றி எல்லோரும் சொன்னார்கள். போலிகளிலேயே நகைச்சுவை உணர்வோடு, ரசிகர் மன்றம் அமைத்து கலாய்க்கும் அந்தப் போலியைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கலாம் என்று தைரியம் சொன்னோம். எண்ணைப் பெயரோடு இணைப்பது, எலிக்குட்டி சோதனை, புகைப்படம் இணைத்தல் என்று தனது அடையாளங்களைத் திட்டம் செய்து கொண்டாலும் அதே முறைகளில் போலியும் இணைத்து விடுவது சிரமமாக இருக்கிறது அவருக்கு.

மணிமொழியான் பெண் கவிஞர்களில் தாமரையைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். வேட்டையாடு விளையாடு படத்தின் பாடல்கள், வசீகரா பாடல் என்று விளக்கினார் சென்ஷி. பெண்கள் உறவுகளைப் பார்ப்பது உடல் தோற்றத்தை மட்டும் அடிப்படையைக் கொள்ளாமல் உள்ள உணர்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள் என்று மணிமொழியான் சொன்னார்.

ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, கடலில் கலக்காமல் பல கிளைகளாகப் பிரிந்து ஓய்ந்து விடும் ஆறு போலக் கூட்டம் வடிந்து முடிந்தது. கூட்டம் முடிந்தது குறித்த ஒரு இடுகையோடு பாலபாரதி கணினியையும் மூடி வைத்தார். மூன்று நாட்களாக கூட்டத்திற்கான ஏற்பாடுகளுக்கு உழைத்துக் களைத்திருந்த பாலபாரதிக்கு சரிவர நன்றி கூட சொல்ல முடியாமல் கிளம்பினோம்.

சென்னை திரும்ப முன்பதிவு எதுவும் இல்லாமலிருக்க உண்மைத் தமிழன் உங்களை பேருந்து ஏற்றி விட்டுத்தான் போவேன் என்று சொல்ல இரண்டு பேரும் காந்திபுரம் திரும்பி வந்தோம். ஏழரை மணி இணைய உரையாடலுக்கு இணைய மையம் தேடி அலைந்தோம். பத்து பதினைந்து நிமிடங்களுக்குப்ப பிறகு பூச்சி மொய்க்கும் கணினியுடனான மையத்தில் உட்கார்ந்தோம். ஒன்பது மணிக்கருகில் அது முடிந்து கீழே கேபிஎன்னில் கேட்டால் கடைசி வரிசையில் ஒரே ஒரு இருக்கை 29ம் எண் இருக்கிறத என்று கொடுத்தார்கள்.

சேலம் போய், இடம் பிடித்து சென்னை போய்ச் சேருவதற்குள் தாவு கழன்று விடும், இதுதான் உத்தமம் என்று நன்றியோடு சீட்டை பதிவு செய்து விட்டு சாப்பிட இடம் தேடினோம். எல்லா விடுதிகளிலும் கூட்டம், காத்திருப்போர் வரிசை நீளங்கள். கோயம்புத்தூரில் ஞாயிறு மாலைகளில் வீட்டுச் சமையலை நிறுத்தியே விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு விடுதிகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

உண்மைத்தமிழன் பசியில் அசந்து போயிருந்தார்.. கடைசியில் ஒரு வழியாக ஆரியாஸ் என்று விடுதியில் இடம் பிடித்துக் கொண்டோம். ஒன்பதரை மணிக்கு கேபிஎன் அலுவலகத்துக்குத் திரும்பி வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

வெள்ளி, மே 11, 2007

மாயாவதிக்கு வாழ்த்துக்கள்

நான்காவது முறையாக உத்தர பிரதேச முதலமைச்சர் ஆகப் போகும் மாயாவதிக்கு வாழ்த்துக்கள்.

சாதி வெறி, குண்டர் கலாச்சாரம், மத வெறிகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தும் கும்பல்கள், குடும்ப அரசியல் நடத்தும் கூட்டங்கள் வேரறுந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள், தலைவர்கள் பொறுப்புகளைப் பெறும் போக்கு வளர வாழ்த்துக்கள்.

திங்கள், மே 07, 2007

வலைப்பதிவுகள் - ஒரு உரையாடல்

திரு மலைநாடனும் நானும் வலைப்பதிவுகள் குறித்து ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பாவதற்காக உரையாடியதன் பதிவு

இங்கே

சனி, மே 05, 2007

மன்னிப்பு

சுட்டிக் காட்டிய அரவிந்தனுக்கு நன்றிகளும் தமது பங்களிப்பை அளித்த நாட்டுப் பெரியவர்களுக்கு் மன்னிப்புகளும்

என்னுடைய நல்லதைச் செய்வோம் என்ற இடுகையின் பின்னூட்டங்களில் ஒன்றில்் 'வெளி நாட்டு உழைப்பில்/அறிவில் உருவான பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்திக் கொண்டு நமது பங்களிப்பாக எதையுமே அளிக்காத ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாக வாழ்கிறோம்' என்று எழுதியிருந்தேன்.

'இந்தியாவிலிருந்து மனித குலம் முழுமைக்கும் பயன்படும் வகையில் உருவான படைப்புகள், பிற நாடுகள் உருவாக்கிய படைப்புகளை நாம் பயன்படுத்தும் அளவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவானது. இன்னும் பெருவாரியானவர்கள் உருப்படியான புதியவற்றை படைத்தால்தான் நமது கடன் தீரும்' என்பதை வலியுறுத்தும் நோக்கில் அப்படி எழுதியிருந்தேன்.

ஆனால், எழுதியிருந்த வாக்கியம், 'இந்தியாவில் யாருமே அப்படிப் பங்களிப்பதில்லை' என்று பொருள் படும்படி அமைந்து விட்டது. அதற்காக எனது வருத்தங்களும், அப்படிப் பங்களிக்கும் பெரியவர்களிடம் எனது மன்னிப்புகளும்.

அரவிந்தன் ஏற்கனவே எழுதிய பட்டியலுடன் என்னுடைய சேர்க்கைகள்:
  1. அநீதியை எதிர் கொள்ள கத்தியின்றி ரத்தமின்றி தம் பக்கம் நியாயம் இருக்கும் மக்கள் தமது மனத் தூய்மையாலும், உறுதியாலும் போராட்டம் நடத்த மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட சத்தியாக்கிரக முறை.

  2. பல ஆயிரம் மக்களுக்கு பொருளாதார ஆதரவு அளிக்கும் வகையில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும், பங்காள தேசத்தைச் சேர்ந்த மொகம்மது யூனுஸ் உருவாக்கிய மைக்ரோ கிரெடிட் முறை.

  3. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது நாட்டின், சமூகத்தின் கடன் என்று காமராசரால் தொடங்கப்பட்டு எம்ஜிஆரால் விரிவு படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் உலக வங்கியால் ஏற்கப்பட்டு பிற பகுதிகளிலும் பரிந்துரைக்கப்படுகிறது.

  4. பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் என்று இல்லாமல் இணைந்து வாழும் வசதி செய்து கொடுத்த முனைவர் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசமைப்புத் திட்டம் பல வகை மக்கள் கூட்டங்கள் சேர்ந்து வாழத் தலைப்படும் பிற நாடுகளுக்கு வழி காட்டியாக உள்ளது.
  5. தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)
இவற்றை எல்லாம் இன்னும் மேம்படுத்தி, நாம் ஒவ்வொருவரும் நமது பங்குக்கு ஆக்க பூர்வமாக பணிகளைச் செய்வதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் பெருமை தரக்கூடியது. மறைவாக நமக்குள்ளே பழம் கதை பேசுவதை விட திறமான புலமை எனில் பிற நாட்டாரும் உணர்ந்து போற்றும் படி இருக்க வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவற்றை தீயினும் கொடியதாக அஞ்சி ஒதுக்கி ஆக்க பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுவோம்.

வெள்ளி, மே 04, 2007

பொருளாதாரப் புத்தகம்

பொருளாதாரம் குறித்து நான் பதிவுகளாக வெளியிட்டவற்றைத் தொகுத்து புத்தகம் ஒன்றைத் வெளியிட நண்பர் ஒருவர் முன்வந்திருக்கிறார். இடுகைகளின் தொகுப்பைக் குறிப்புகளுடன் இங்கே காணலாம்.

முதல் இரண்டு வரிசைகளில் இருக்கும் 50 பகுதிகள் பொருளாதாரவியலை நான் புரிந்து கொண்ட அளவில் விளக்குகின்றன.

மூன்றாவது வரிசையில் இருக்கும் 12 பகுதிகள் பொருளாதார சமூகம் எப்படி மாறினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசைகளை வெளிப்படுத்துகின்றன.

பின்னூட்டமிட்டவர்கள் தமது அனுமதியைக் கொடுத்தால், இந்தப் பதிவுகளில் வெளியான பின்னூட்டங்களையும் புத்தகத்தில் தொகுத்து வெளியிடுவது என்று திட்டம். என்னிடம் அஞ்சல் முகவரி இருக்கும் நண்பர்களை தனிமடலிலும் தொடர்பு கொள்கிறேன்.

புத்தக விற்பனையில் வரும் எழுதியவருக்கான பங்கிற்கு மாற்றாக பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் இலவசப் பிரதியும், மின்நூல் வடிவில் இணையத்தில் இலவச தகவிறக்கமும் அளிக்குமாறு, பதிப்பாள நண்பரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பின்னூட்டமிட்டவர்கள் (யாரும் விட்டுப் போகவில்லை என்று நம்புகிறேன்):
  1. துளசி கோபால்
  2. இளா
  3. கார்த்திக்வேலு
  4. சிவஞானம்ஜி
  5. வடுவூர் குமார்
  6. டோண்டு
  7. கைப்புள்ள
  8. டண்டணக்கா
  9. கவிதா கெஜானனன்
  10. அருள்குமார்
  11. சீமாச்சு
  12. பத்ரி
  13. கலாநிதி
  14. நாமக்கல் சிபி
  15. சிறில் அலெக்ஸ்
  16. வீரமணி
  17. Sree
  18. SP VR சுப்பையா
  19. ஜயராமன்
  20. பொன்ஸ்
  21. பத்மா அரவிந்த்
  22. வைசா
  23. எஸ்கே
  24. பழூர் கார்த்தி
  25. மயிலிறகு
  26. tamilreber
  27. வவ்வால்
  28. ஜெய்
  29. Muse
  30. Vajra
  31. Sri Rangan
  32. தென்றல்
  33. குறைகுடம் (ப்ரசன்னா)
  34. Indian
  35. Meenapriya
  36. Surveysan
  37. வினையூக்கி
  38. Bala
  39. பிரதீப்
  40. Murthi
  41. மயூரன்
  42. நற்கீரன்
  43. துர்கா
  44. arasan

புதன், மே 02, 2007

நல்லதைச் செய்வோம்

தனிமனிதர்களாக நமது வாழ்க்கைக்குக் கிடைத்துள்ள மூலப் பொருட்கள் நமது உடலும், அறிவும், அனுபவமும்தான். அதை பயனுள்ள சேவையாக வழங்குவதன் மூலம் நமது ஊதியத்தைப் பெறுகிறோம்.

நமது நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறோமோ, வீணாக்கலை எவ்வளவு குறைக்கிறோமோ, நமது நேரத்தின் மதிப்பை எவ்வளவு அதிகமாக்கிக் கொள்கிறோமோ நமக்குக் கிடைக்கும் ஆதாயமும் அவ்வளவு அதிகமாகும்.

நாம் சோம்பேறியாக இருந்து விட்டால் தென்கொரியாவில் இருக்கும் இன்னொரு மாணவன் நம்மை விட திறமையாகச் செயல்பட்டு நமது வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டு விடுவான். இதுதான் உலகமயமாக்கலின் சிக்கல்.

தனிமனிதர்களும் சரி, நிறுனங்களும் சரி, தொழிலாளிகளும் சரி, தொழில் முனைவோரும் சரி, தமது பழம்பெருமையில் சோம்பி இருந்து விட முடியாது.

ஒரு அரசு தனது உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, நாட்டு மக்களின் நல வாழ்வைக் கவனிக்காமல் எல்லோருக்கும் இலவசத் தொலைக்காட்சி வழங்குவதில் தனது வருமானத்தைச் செலவிட்டால். அதே வருமானத்தை உருப்படியான பணிக்குப் பயன்படுத்தும் இன்னொரு நாடு இந்த நாட்டை முந்திச் சென்று விடும்.

ஒரு ஊரின் மக்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு, சாதியின் பெயரால் சக மனிதனை அடக்கிக் கொண்டு இருந்தால். அப்படிச் செய்யாத ஊர் முன்னேறிச் சென்று விடும்.

இந்தியா ஆயிரம் ஆண்டுகளாக வறுமையில் உழன்று கொண்டிருப்பதன் காரணம், படையெடுத்து வரும் வீரர்களிடம் எல்லாம் தோற்று மண்டியிட்டதன் காரணம் நம்முள் இருக்கும் பிணிகளே தவிர, வெளியிலிருந்து யாரும் நம்மை இப்படி நசுக்கி வைத்திருக்கவில்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.

அழிவு வாதிகளை அழிவு வழிக்குப் போகாமல் தடுக்க முடிந்தால், ஒன்று பத்தாக முடிந்தால் ஒரு சில மாதங்களில் முழு உலகும் மாறி விட முடியும். நல்ல ஒரு சேதியை உரக்கச் சொன்னால் அது பல காதுகளுக்குப் பரவி, அந்த மனங்களுக்குள் புகுந்து, இன்னும் உரத்த சிந்தனைகளாக வெடித்து உலகையே மாற்றி விட முடியும்.

அதே போலத்தான் தீய செய்திகளும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். நெருப்பைப் போலப் பரவக் கூடியது தீமை.

எந்த எண்ணமும் - நல்லதோ, தீயதோ - சரியாகச் சொல்லப்பட்டால் காட்டுத் தீ போலப் பரவக் கூடியது.

செவ்வாய், மே 01, 2007

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

உலகில் எல்லா தீமைகளும் மறைந்து போனால் எவ்வளவு ஆக்கபூர்வமான வேலைகள் நடக்க வெளி ஏற்படும். போர்களும் ஆயுத உற்பத்தியும், ஒருவரை ஒருவர் வெறுத்தலும், கோபமும், ஆத்திரமும் மறைந்து விட்டால் ஏற்படும் வெற்றிடத்தில் ஆக்க சக்தி நிரம்பி வழியும். கண்ணுக்கு கண் என்று ஒருவரை ஒருவர் குருடாக்கிக் கொண்டிராமல் ஏதாவது ஒரு இடத்தில் திசை திரும்பி எல்லா மாந்தரும் ஒரே திசையில் தமது முயற்சியைச் செலுத்தினால் வானை அளப்பதும் விண்மீன்களில் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனிதனுக்கு முடியாமலா போகும்!

நம்முடைய ஆற்றல்கள் வெவ்வேறு திசைகளில் திரும்பி பிளவுபட்டுக் கிடக்கின்றன. இரும்புத்துண்டில் அணுக்களின் ஈர்ப்பு விசைகள் எதிரெதிர் திசைகளில் நோக்கிக் கொண்டிருப்பதால் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன. மின்சாரப் பாய்ச்சல் மூலம் எல்லா அணுக்களையும் ஒரே திசையில் மின்ஈர்ப்பை செலுத்தத் தூண்டினால் தனது சுற்றுப் புறத்தை மாற்றி விடக் கூடிய காந்த சக்தி உருவாகிறது.

இது போல உருவான எல்லாக் காந்தங்களும் ஒரே திசையில் நோக்கியிருந்தால் எந்த பெரும் சக்தியையும நகர்த்தி தாம் விரும்பிய நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தமக்கு ஒப்புதல் இல்லாது சக்திகளை எதிர்த்து விரட்டி விடலாம்.

இயற்கையை மனிதன் தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள இது ஒன்றே வழி. ஆழிப் பேரலைகளும், சுழிக்காற்றுகளும் ஒருங்கிணைந்து மனித சக்தியின் முன் ஒரு குழந்தை போல பாசத்தோடு கழுத்தைக் கட்டிக் கொள்ளும். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு எதிரெதிர் திசையில் நின்று கொண்டிருக்கும் மனிதக் கூட்டங்கள்தான் பேரலைகளில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பேச்சுப் போட்டிகளில் மட்டும் முழங்க வேண்டிய வெற்றுரை அல்ல.

மனிதன் கடலைத் துளைவ, வானை அளக்க வல்ல ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஒரே வழி அன்பு வழி. ஒவ்வொரு மனதும் அன்பால் நிரம்பி வழிய வேண்டும். வெள்ளை, கறுப்பு, மஞ்சள், பழுப்பு மனிதர்கள், பலவேறு மதத்தினர், ஏழை, பணக்காரர், பல நூறு மொழி பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தம்மை இறைவனாகப் போற்றித் தம் சக மனிதர்களையும் தம்மைப் போன்ற மதிப்பினராக நடத்தினால் இது நிச்சயம் நடக்கும்.

முதலாளிக்கு எதிராக தொழிலாளி ஆயுதம் ஏந்த வேண்டும், இந்துவுக்கு எதிராக முஸ்லீமும், முஸ்லீமுக்கு எதிராக கிருத்துவரும், கிருத்துவருக்கு எதிராக இந்துக்களும் கை உயர்த்த வேண்டும் என்ற பேதை தத்துவங்கள் இருக்கும் வரை இங்கு உய்வுக்கு வழியில்லை. அடிப்படையில் தெய்வ இயல்பு படைத்த மனிதர்கள் மனது வைத்தால், நம் வாழ்நாளிலேயே அந்த சொர்க்க பூமியை உருவாக்கி விடலாம். விண்கலத்தில் ஏறி தூரத்து தாரகைகளுக்கு பயணம் செய்து வரலாம்.

அதுவரை சபிக்கப்பட்டவர்களாக இந்த பூமிப்பந்துடன் கட்டுண்டு கிடப்பதுதான் நமது விதியாக இருந்து விடும். நமது மனம் என்னும் பேராற்றலை சரியான திசையில் செலுத்தி அந்த உடோபிய உலகை உருவாக்குவது இன்றைய உலகின் ஒவ்வொரு மனிதப் பிறவியின் கையில் இருக்கிறது. எதுவும் வேண்டாம், சிறப்பாக எதையும் சாதிக்க வேண்டாம். மனதினுள் சின்னதாக ஒலித்துக் கொண்டிருக்கும் நல் வாழ்வை வலியுறுத்தும் குரலுக்கு செவி சாய்த்தால் போதும்.

உலகம் தயாராக இருக்கிறதா அல்லது எள்ளி நகையாடப் படுமா என்பதைக் குறித்தெல்லாம் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டே போக வேண்டும். தயக்கமின்றி செயலில் இறக்கி நல்ல எண்ணங்கள் எல்லா மனங்களிலும் பரவ எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.