திங்கள், அக்டோபர் 22, 2007

சோஷலிசம்தான் தீர்வா (அசுரன்) - 2

'வயிறு காய்ந்தால்தான் வேலை பார்ப்பான்' என்று மிருக நிலையில் வைத்து செயல்படுவது ஒரு முறை. 'தன் திறமைகளைப் பயன்படுத்தி தன்னால் இயன்ற மிகச் சிறந்த வேலையை செய்ய முயல்வான்' என்பது நாகரீகமடைந்து கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய மாண்பு.

இந்த பணியின் பலன் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சிவப்பு உடையோ, கதர் உடையோ, காவி உடையோ, அணிந்த ஒரு கூட்டத்தினரின் உரிமையாக இல்லாமல், அவரவர் தமது உழைப்பின் பலனை தன்னைச் சுற்றி இருப்பவரில் அதிகத் தேவை இருப்பவருக்குப் பயன்படும்படி செலவழிக்கும் உரிமை இருக்க வேண்டும். யாருக்கு அதிகத் தேவை, அதை எப்படி அவருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை தனிமனிதருக்கு இருக்க வேண்டும்.

அந்த நோக்கம் எப்படி எல்லோருக்கும் தோன்றும்?

அத்தகைய நோக்கம் இல்லா விட்டால் என்னதான் புரட்சி செய்தாலும் உள்ளே இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள். பொதுவுடமை, சமூக நலன் அடிப்படையாக இயங்குபவர்கள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பிலும், பேராசையும் சுயநலமும் தவிர்த்து தமது திறமையையும் வருமானத்தையும் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். அந்த அடிப்படை மனதில் விதைக்கப்படாதவர்கள், இரும்புத் திரை அல்லது மூங்கில் திரைக்குள்ளும் எப்படி தனது பேராசைக்குத் தீனி போடுவது என்று வழி தேடிக் கொண்டிருப்பார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் மனம் மாறா விட்டால் சமூகம் மாற முடியாது.

காந்தி போராடித்தான் சுதந்திரம் வந்ததா?
தார்மீக உரிமை மாற்றுவதுதான் மாற்றத்தின் முதல்படி. 'ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் செய்துதான் பிரித்தானிய பேரரசு இந்தியாவில் நீடிக்க முடியும்' என்று ஆன நாளில் பலர் மனதில் காலனி அரசு தனது அரசாளும் உரிமையை இழந்து விட்டது.

இன்றைக்கு இந்திய அரசமைப்பை சாடும் குழுவினரும் அதைத்தான் நாடுகிறார்கள். பெருவாரியான நடுநிலை மக்களின் மனதில் அமைப்பைக் குறித்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டால் மாற்றம் தொடங்கி விடும். மாற்றம் என்பது மானிட தத்துவம். ஒன்று போய் மற்றது வருவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அந்த மாற்றங்களுக்கான தளம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு அமைப்பின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஒரு அமைப்பை மாற்றி அதன் இடத்தைப் பிடிக்க பல கொள்கைகள் போட்டி போடும். அதில் எது வெற்றி பெறும், அடுத்தக் கால கட்டத்தில் எத்தகைய அமைப்பு நிலை பெறும் என்று சொல்ல முடியாது. கடை விரிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதிகம் பேர் கொள்ள வந்தால், வணிகம் தளைக்கும், இல்லை என்றால் கோணியைச் சுற்றிக் கொண்டு போக வேண்டியதுதான்.

இது இயல்பாக மனித சமூகத்தில் நடக்கக் கூடியது கார்ல் மார்க்ஸ் முன்கூறும் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியும் கம்யூனிசத்தின் மலர்ச்சியும் இந்த வழியில் வரக் கூடியவை. ஏதாவது ஒரு பிரிவினரின் சர்வாதிகார அமைப்பு அரசு அமைக்கும் போது மேலே சொன்ன மாற்றங்களுக்கான விதைகளை முயற்சிகளையே வேர் பிடிக்க விடாமல் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பணியாக ஆகி விடுகிறது.

யாரும் அமைப்பைக் குறை சொல்லிக் கருத்து தெரிவிக்கக் கூடாது. போராட்டங்கள் நடத்தக் கூடாது. அமைப்பில் தலைவர் அல்லது தலைமைக் குழு சொல்வதுதான் இறுதி முடிவு. அதற்கு மேல் மாற்றுக் கருத்து இல்லை என்று இருக்கும் அமைப்புகள் எல்லாம் வளர்ச்சி நின்று போன மரம் போல உளுத்து போய் உதிர்ந்து போகும்.

அப்படி உளுத்து உதிர்ந்த கோட்பாடுகளின் கொடி பிடித்து 'அந்தக் கோட்பாடுகளின் படி, அந்த வழிமுறைகளின் படி நடந்து கொண்டிருந்த போது சீனாவிலும் சோவியத் ரஷ்யாவில் பாலாறும் தேனாறும் ஓடியது. அந்த இன்பத்தைத் தாங்க முடியாத மக்கள் சதி செய்து ஏகாதிபத்திய வழிமுறைகளுக்கு வழி விட்டார்கள். நாமும் அதே வழியில் போவதுதான் தேவையான மாற்றம்' என்று செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் புரட்சிகர இயக்கங்களின் வழி.

அது அவர்களின் உரிமை. பல விதமான கருத்துக்களும், கட்சிகளும், பத்திரிகைகளும், செயல்படலாம் என்பதுதான் இந்தியா போன்ற அரசமைப்புகளின் சிறப்பு.

உலகம் இது வரை கண்ட சமூக அமைப்புகளில் இப்போது செயல்படும் மக்களாட்சி முறையான
  • பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமியற்ற,
  • படித்து பட்டம் பெற்ற அதிகாரிகள் பிரதிநிதிகளின் தலைமையின் கீழ் நிர்வாகம் நடத்த,
  • இரண்டையும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்களா என்று நீதி மன்றங்கள் சோதித்துப் பார்க்க,
  • இதில் எல்லாம் என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் சேர்ந்து
சிறந்தது.

இதில் இருக்கும் குறைகள் பல தெரிகின்றன. இது மாறி இதை விடச் சிறந்த முறை மலர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இதற்கு மாற்று இதை விட மோசமான, மனிதர்களை இயந்திரங்களாக நடத்திய முறைதான் என்று சொல்வது எப்படி சரியாகும்?

சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)

ஞாயிறு, அக்டோபர் 21, 2007

சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)

எல்லா "மதங்களையும்" தூக்கிச் சாப்பிட்டு விடும் ஒரு மதம் "கம்யூனிசம்" என்று சொல்லப்படும், கட்சி சார்ந்த, புரட்சி செய்ய முனையும் கூட்டத்தினரின் மதம்.

சக மனிதனை ஏய்த்து வயிறு வளர்க்கும் கூட்டத்துக்கு ஏதாவது ஒரு கருவி கிடைத்து விடும். 'மதம் என்று சொல்லிக் கொண்டு தேவாலயங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மதகுருக்களை ஒழித்துக் கட்டுவதாகச் ' சொல்லிக் கொண்டு வந்த புரட்சியாளர்கள், பொதுவுடமை என்று சொல்லிக் கொண்டு கட்சி அலுவலகங்களில், கட்சி என்ற பெயரில் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். (சோஷலிச சீனாவிலும் சோஷலிச ரஷ்யாவிலும்).

கோட்பாடுகள், சித்தாந்தங்கள் எல்லாம் ஒரு உறைதான். சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள்தான் அதில் வாழும் மக்களின் மனப்போக்கைச் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. 'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்று வாழும் மனிதர்கள் இருக்கும் உலகில் மனிதம் தளைக்கும்.

தனிமனிதர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் சரியானதாக இருந்து விட்டால் எந்த முறையிலும் மனிதம் தளைக்கும். கம்யூனிசப் புரட்சி என்று மக்களை ஒடுக்கிய சர்வாதிகாரிகளும் (சோவியத்தின் ஸ்டாலின், அவர் வழி வந்தவர்கள், சீனாவின் மாவோயிச வழி வந்தவர்கள்) உண்டு, முதலாளித்துவ முறையில் எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க விளையும் சமூகங்களும் (வடக்கு ஐரோப்பிய நாடுகள்) உண்டு.

அப்படி ரஷ்யாவும் சீனாவும் பின்பற்றிய சோஷலிசம்தான் விடிவு என்றால் அந்த இரண்டு நாடுகளில் அந்த இசத்தின் கதி என்ன ஆச்சு? ரஷ்யாவில் 70 ஆண்டுகளும், சீனாவில் 30 ஆண்டுகளும் வாய்ப்பு கிடைத்தும், பெருமளவு மக்கள் தொகை, மிகப்பெரிய நிலப்பரப்புடன் இருந்தும் தாக்குப் பிடிக்காமல் அந்தப் 'பொற்காலம்' எங்கே போச்சு?

அதை நம்பித்தான் எல்லோரும் ஆயுதம் ஏந்தி புரட்சியில் இறங்க வேண்டுமாம். தனிமனித உரிமைகள், தனிமனிதனை மதிக்கும் சமூகங்கள்தான் தளைக்கும். அதை மறுக்கும் சோஷலிசம் என்ற முறையில் ஜல்லி அடிக்கும் வித்தகர்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள்தாம்.

பொதுவுடமை என்பது அழகான தேவையான நிலைமை. அதை அடைவதற்கான வழி ஸ்டாலினும், மாவோவும் காட்டியதா அல்லது இந்தியாவின் சிறிய பெரிய 'கம்யூனிஸ்டு இயக்கங்கள்' காட்டுவதா?

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பாதையான இணையம் உருவானது எந்த வழியில்? அதில் எல்லோரும் நடைபோட உதவ எந்த வழியில் சாத்தியமாகும்?

எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் திறவூற்று மென்பொருட்கள் எந்த வழியில் உருவாகின்றன? சமவுடமை சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மதிப்பு உண்டு. எந்த மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை.

மனிதன் சமூகத்துக்கு அடிமை என்று செங்கொடி ஏந்தி சீன, சோவியத் தலைவர்கள் படம் ஏந்தி நடக்கும் இயக்கத்தினர் காட்டும் வழி இரு பெரும் நிலப்பரப்புகளில் இரு பெரும் மக்கள் சமூகங்களில் தோல்வி அடைந்து போன ஒன்று.

அசுரனின் கட்டுரை

புதன், அக்டோபர் 17, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர் - 2

"அறிஞர் அண்ணா குறுகிய காலம்தான் ஆட்சி செய்தார். அதனால் அவரது உண்மையான திறமையை எடை போட முடியாது. "

"கலைஞரும் சரி, செல்வி ஜெயலலிதாவும் சரி, முன்பு எம்ஜிஆரும் சரி, தனது ஆட்சி அண்ணாவின் ஆட்சி என்றே சொன்னார்கள்"

'கலைஞர் தமிழுக்குக் காப்பு. அதனால் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தமிழர் நலன்கள் ஓங்குகின்றன. அவர் ஆட்சியில் வந்து விட்டால் குறுகிய காலத் திட்டங்கள் நிறைவேறினாலும் நீண்ட கால நோக்கில் தமிழர் கனவுகளுக்குப் பின்னடைவுதான். ' இது என்னுடைய மூளை அலை.

அதற்காக ஜெயலலிதாதான் மாற்று என்னும் போது வெறுத்துப் போகிறது.

உங்கள் கருத்து என்ன? வலது பக்கம் ஒரு தேர்ந்தெடுங்கள். ஒருவருக்கு ஒரு வாக்குதான். ஆனால், ஒரே முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு செய்து கொள்ளலாம்.

சனி, அக்டோபர் 13, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர்

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் தமிழகம் நான்கு முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. அவர்களில் நல்ல முதலமைச்சர் யார் என்று ஒரு கருத்துக் கணிப்பு.

வலது பக்கம் உங்கள் தேர்வைக் குறிப்பிடுங்கள்.

வெள்ளி, அக்டோபர் 12, 2007

காலம் கருதுதல்

திட்டமிடலுக்கு எளிதான வேலைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றும் முடிய முடிய டிக் அடித்துக் கொண்டே போவதிலிருந்து ஆரம்பித்து பல கருவிகள் இருக்கின்றன.

கூகிள் காலண்டர் பயன்படுத்தலாம், அல்லது மேசைத் தளக் கருவிகளாக வரும் கோண்டாக்ட் என்ற கேடிஈ கருவி அல்லது எவலுயூஷன் என்ற ஜினோம் கருவியைப் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் கிடைக்காததால் கூகிள் காலண்டர் ஒத்து வராது. கணினி சார்ந்த முறைகளை நம்பித்தான் ஆக வேண்டும்.

திட்டமிடுதல் ஒரு புறம், அந்தத் திட்டத்தைப் பார்த்து அதன்படி வேலைகள் போகிறதா என்று கண்காணிப்பது இன்னோரு புறம், ஒவ்வொரு பணி முடிந்த விபரத்தைக் குறித்துக் கொண்டு மாலையில் அல்லது அடுத்த நாள் காலையில் திட்டத்துக்கு நடைமுறைக்கும் என்று வேறுபாடுகள் என்று அலசுவதும் மிகத் தேவையானது.

மே மாத முதல் வாரத்திலிருந்து ஒரு விரிதாள் சார்ந்த வடிவை ஏற்படுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தேன். அதன் அடிப்படை மாறாமல் இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதன் அமைப்பில் பல மேம்பாடுகள்.

வாரத்துக்கு ஒரு கோப்பு, அதன் பெயர் week18.ods என்று வாரா வாரம் எண் கூடிக் கொண்டே போகும். ஒவ்வொரு தாளிலும் எட்டு விரிதாள்கள். வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு தாள்கள். ஒரு தாளில் வாரம் முழுவதுக்குமான தகவல்கள். இப்போது யோசிக்கும் போது தேதியைப் தாள்களின் பெயராகக் குறிப்பிடாமல் கிழமையைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இனிமேல் மாற்றி விட வேண்டியதுதான்.

பழைய முறையில் ஒவ்வொரு வார இறுதியிலும், முந்தைய வாரக் கோப்பின் நகலை அடுத்த வாரக் கோப்புக்காக week19.ods என்று பெயர் சூட்டிச் சேமித்துக் கொண்டு தாள்களின் பெயர்களை மாற்றுவேன். கிழமைகளைக் குறிப்பிட ஆரம்பித்தால் அந்த வேலை மிச்சம். வாரத் திட்டமிடலும் இன்னும் வசதியாக இருக்கும்.

முழு வாரத்துக்கான தாளில் ஏழு நாட்களுக்கான குறுக்கு வரிசைகள், அவற்றுக்கு எதிரில் நெடுக்காக மூன்று பிரிவுகள், காலை, மதியம், மாலை என்று. இப்போது ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். தமிழில் பெயர் கொடுத்துக் கொள்ளலாம்.

திங்கள் என்று பார்த்தால் அதன் எதிரில் காலையில் என்ன வேலை, மதியம் என்ன வேலை, மாலையில் என்ன வேலை என்று பொதுவாகக் குறித்து வைத்துக் கொள்வது. திங்கள் காலை அல்லது ஞாயிறு மாலை அன்றே அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் எங்கு இருப்போம், போன்ற விபரங்கள் திட்டமிட்டு விடலாம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளுக்கான திட்டமிடல். நாளுக்கான தாளில் குறுக்காக ஏழு பெரும் பிரிவுகள்.
  • காலை 6 முதல் 9 வரை தனி வேலைகள், ஒரே பிரிவாக.
  • 9 முதல் 11 வரை மாதாந்திர இலக்குகளுக்கான பணிகள் - ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறு பிரிவாக இரண்டு பிரிவுகள்.
  • அதே போல 11 முதல் 1 மணி வரை இரண்டு சிறு பிரிவுகள் வாராந்திரம் முடிக்க வேண்டிய பணிகளுக்கான கட்டங்களுடன்.
  • 1 மணி முதல் 2 மணி வரை மீண்டும் தனி வேலைகளுக்கு.
  • 2 முதல் 4 வரை ஆண்டு இலக்குகள், தேவைகள் சார்ந்த பணிகள். (இரு சிறு பிரிவுகளாக)
  • 4 முதல் 6 வரை நீண்ட கால நோக்கிலான பணிகள், இதுவும் 4-5, 5-6 என்று இரண்டு உள் பிரிவாக
  • மாலை 6 முதல் 9 வரை தனி வேலைகள் ஒரே உள்பிரிவாக.
இப்படி ஏழு பெரும் பிரிவுகளும் அவற்றினுள் 11 சிறு பிரிவுகளுமாக குறுக்குக் கட்டங்கள். ஒவ்வொரு குறுக்குக் கட்டத்துக்கும் எதிரில் நான்கு நெடுக்குக் கட்டங்கள். முதலாம் கால், இரண்டாம் கால், மூன்றாம் கால், நான்காம் கால் என்று கட்டம் உருவாகி விடும்.

மதியம் 12 முதல் 1 மணி வரை வாராந்திர பணிகளை முடிக்க வேண்டும் என்று குறுக்குக் கட்டம் இருந்தாலும் அந்த ஒரு மணி நேரத்தை 4 கால்பகுதிகளாகப் பிரிக்க நெடுக்குப் பிரிவுகள் இரண்டின் சேர்க்கையில் நான்கு கட்டங்கள் கிடைக்கும். அதே போல காலை 6-9ம் நான்கு கட்டங்களாக கிடைக்கும்.

ஒரு பணியை முடித்ததும் அந்த கட்டத்துக்குள், பணி விபரத்தின் இறுதியில் done என்று குறித்துக் கொள்கிறேன். இதைக் கூட மாற்றி கட்டத்தின் பின்னணி நிறம் அல்லது எழுத்துருவை மாற்றி விடுவதாகச் செய்யலாம்.

இப்போது செய்ய வேண்டிய மாற்றங்கள்:
  1. தேதிகளுக்குப் பதிலாக வார நாட்களை பெயராகச் கொடுத்தல்
  2. பெயர்களையும் விபரங்களையும் தமிழில் எழுதுதல். தாள்களின் பெயர்கள், உட்பிரிவுகள், நேரங்கள், கால்பகுதிகள் என்று எழுதிக் கொள்ளலாம்.
  3. பணி முடிந்ததைக் குறிக்க பின்னணி நிறம் மாற்றிக் கொள்ளுதல்
  4. அதிகாலை எழுந்ததும் முதல் வேலையாக நாளுக்கான திட்டமிடல்.
  5. ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறரை முதல் ஏழரை வரை வாராந்திரத் திட்டமிடலுக்கு ஒதுக்கிக் கொள்ளுதல்
  6. காலையில் திட்டமிடும் போது முந்தைய நாளின் பணிகள் எப்படி முடிந்தன என்று அலசி விட்டுப் போனவற்றை அந்த நாளுக்குக் கொண்டு வருதல். திட்டமிடலையும் சேர்த்து அரை மணி நேரம் வரை ஆகலாம்.
  7. வாராந்திரத் திட்டமிடலின் போதும் முந்தைய வாரத் திட்டமிடல் எப்படி போனது என்று அலச வேண்டும். திட்டமிடலையும் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 4

திட்டம் தரையைத் தொடும் போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் பாதக சாதகங்கள் உறைக்க ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் நல்லெண்ணம் படைத்த பத்திரிகை விவாதங்களிலோ பொதுநல வாதிகளால் நீதிமன்றங்களிலோ எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டால் திட்டத்தை அலசி ஆராய்தல் ஆரம்பித்து விடலாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குரல் கொடுக்க தன்னார்வல நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள், போராளிக் குழுக்கள் இறங்கி திட்டத்தை மாற்றியமைக்க முயல்கின்றன. இப்படி அடித்துப் பிடித்து சரியான வழியில் வந்து சேர்கிறோம்.

மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. கையில் காசு இல்லாத மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களை வரவேற்க முயற்சிக்கிறார்கள். இருப்பதில் எதைச் செய்தால் தமக்கு ஆதாயம் என்று இயங்கக் கூடிய தனியார் நிறுவனங்களுக்கு அரசே நிலம் கையகப்படுத்திக் கொடுக்க முயல்வதுதான் சிக்கலில் கொண்டு விட்டிருக்கிறது.

ஒரு சாலை போடவோ, அணை கட்டவோ அரசு தனது முன்னுரிமையைப் பயன்படுத்தி தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது, கவிஞர் வைரமுத்து தண்ணீர் தேசம் நாவலில் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூழ்கிய தனது கிராமம் குறித்து எழுதிய மன வேதனையைத் தாண்டி பொது நலனுக்காகத்தானே கொடுக்கிறோம் என்ற ஆறுதலும், அதே காரணத்தால் பிற பகுதி மக்களின் ஆதரவும் இருக்கும்.

'யாரோ லாபம் சம்பாதிக்க ஏன் அரசு முனைய வேண்டும். அதற்கு நாங்கள் ஏன் நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்' என்று ஆத்திரம் பொங்குகிறது. 'வணிக முறையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றால் நேரடியாக விவசாயிகளிடம் போய் பேரம் பேசி நிலத்தை வாங்கிக் கொள்ளட்டுமே. அப்படி சிலர் விற்க மறுத்து விட்டால் தொழிற்சாலை வராமல் போய் விடலாம். இதற்கு அரசு என்ன வக்காலத்து!' என்று தோன்றத்தான் செய்யும்.

சீனாவில் இதே மாதிரியான சூழலில் தனியார் நிறுவனம் அரசின் ஆதரவுடன் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டு போயிருந்திருக்கும். பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இதுதான் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு. ஏழை சொல் கூட அம்பலத்தில் ஏற வாய்ப்புகள் இருக்கின்றன. யாரும் யாரையும் மிதித்துப் போட்டு விட்டு தமது நலனைப் பார்த்துக் கொள்ள முடியாது.

துப்பாக்கிச் சூடு நமது அமைப்புகள் சரியாக இயங்காததன் விளைவு. நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம். பத்திரிகைகள் ஆரம்ப நிலையிலேயே இது குறித்து விவாதங்களை உருவாக்கத் தவறியிருக்கலாம். (முதல் பக்கச் செய்தியாக சட்டமன்றத்தில் மைக்குகள் உடைக்கப்பட்து இருக்கும் போது இதை யார் கண்டு கொள்வார்கள்!)

மாநில அரசுகள் தமக்கு சாதகமான வகையில் சரியாக ஆராயாமல் தனியார் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கலாம். அந்த மாநில எதிர்கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்துக்காக மோதலைத் தூண்டி விட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருக்கலாம்.

இதற்கெல்லாம் கொடுத்த விலை ஏழு உயிர்களை இழந்தது. சீனாவில் வெளியில் தெரியாமலேயே பல நூறு உயிர்கள் இத்தகைய திட்டங்களின் பேரில் பலி கொடுக்கப்பட்டு விடும். கேட்க ஆளிருக்காது.

வியாழன், அக்டோபர் 11, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 3

நூறு கோடி மக்கள் வாழும் நிலப்பரப்பில் ஒரே நாளில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் பெரும் புரட்சியே வெடித்து விடலாம். எதிர்ப்புரட்சியைக் குறித்து கவனமாக இருக்கும் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் சோதனைச் சாலை போல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடிவு செய்தார்கள்.

நாட்டின் தென்கோடி மாநிலமான குவாங்தோங்கின் சென்சென், சாந்தோ, சூஹாய் பகுதிகளிலும் அருகாமையில் ஷியாமென் என்ற இடத்திலும் எல்லைகளை வரையறுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார்கள். தொழில் வணிக நடவடிக்கைகளைப் பொறுத்த வரை இந்தப் பகுதிகள் சீனாவின் வெளிநாடாகக் கருதப்பட்டன.

இந்தப் பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் குறைவான கட்டுப்பாடுகளுடன்
  • தமக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
  • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.
  • உற்பத்தியை உள்நாட்டிலேயே விற்க விரும்பினால் வழக்கமான இறக்குமதி போல சுங்க வரி செலுத்தி விட வேண்டும்.
  • தேவைப்படும் போது வேலைக்கு ஆள் எடுத்துக் கொள்ளலாம், தேவை குறைந்து விட்டால் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.
அடுத்த இருபது ஆண்டுகளில், வெற்றிபெற்ற கொள்கைகளை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்திக் கொண்டார்கள். தோல்வி அடைந்த முயற்சிகளை அப்படியே கை விட்டு விட முடிந்தது. கட்சியும், ஆட்சியும், நிலவுடமையும் ஒரே அமைப்பின் கைகளில் இருந்ததால் எதிர்ப்புக் குரல்களுக்கு இடமில்லை. உள்கட்சி அரசியலைத் தாண்டி கொள்கை நடைமுறைக்கு வந்து விட்டால் பொது மக்களுக்கு வேறு புகலிடம் கிடையாது.

இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு சோஷலிச பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப் பட்டாலும் தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாடுகளுக்கிடையே இயங்கியே வந்தன. நிலங்கள் பரம்பரை பரம்பரையாக கைமாற்றப்பட்டு வாங்கவும் விற்கவும் சட்டங்கள் இருக்கின்றன. பல கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஆட்சி அமைக்கும் அரசியலமைப்பும், மக்கள் வாக்களித்து ஆட்சியை மாற்றும் உரிமைகளும் இருக்கின்றன.

1990களின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்கனவே இருந்த தளைகளை விலக்குவதாகவே இருந்ததே தவிர பழைய கொள்கைகளை முற்றிலும் மாற்றுவதாக இருக்கவில்லை. உலகமயமாக்கலும் சீர்திருத்தங்களும் நாடு முழுவதுக்கும் ஒரே நேரத்திலேயே அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்த கொள்கை வகுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரும் காலம் இது.

2000ம் ஆண்டில் கொள்கை அறிவிக்கப்பட்டது. 2004ல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. மாநில அரசுகளின் பரிந்துரையின் படி மத்திய அரசின் ஒற்றைச் சாளர அலுவலகம் ஒன்று மண்டலம் குறித்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்.

மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கு பல அதிகாரங்கள், உள்ளூர் மக்களுக்கு சில உரிமைகள் என்று ஒவ்வொரு தனிமனிதன் வரை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அந்த அரசமைப்பு சட்டத்தைக் கட்டிக் காக்க நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கின்றது.

இதனால் புதிய திட்டங்கள் உருவாக்கும் போது தட்டுத் தடுமாறியே சரியான பாதையை அடைய முடிகிறது. முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நேர்மையான சற்றே நேர்மை குறைந்த அதிகாரிகள் நடைமுறைத் திட்டம் தீட்டுகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் போது, பல நிறுவனங்கள் களத்தில் குதிக்கின்றன. தமது நலத்தை வளத்தைக் குறுக்கு வழியில் பெருக்கிக் கொள்ளப் பார்க்கும் தொழில் / வணிக நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு திட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள்.

தொலைக்காட்சியில் மென்பொருள் பற்றி...

"இணையத்தில் கிடைக்கும் இலவச மின்பொருட்கள்" என்ற தலைப்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஜெயா தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பாரதி என்ற நண்பர் கலந்து கொள்கிறார். திறவூற்று/பரி நிரல் உலகில் பல ஆண்டுகளாக அனுபவம் உடைய பாரதி பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் திறவூற்று மென்பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும்.

வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் பாருங்கள். தெரிந்தவர்கள், நண்பர்களுக்கும் தகவல் சொல்லுங்கள்.

புதன், அக்டோபர் 10, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 2

சீனாவில்
  • முடியாட்சி முடிந்து 1911ல் குடியரசு மலர்கிறது.
  • அதற்கு பின்னர் உள்நாட்டுப் போர், அன்னிய ஆதிக்கம் எதிர்ப்பு
  • இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் ஆண்டுகளில் கம்யூனிஸ்டு செம்படைக்கும் தேசிய மக்கள் கட்சி (குவமின்தாங்) யின் ஆட்சியாளர்களுக்கும் கடுமையான சண்டை
  • கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று 1949ல் ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.
  • குவமின்தாங் ஆட்சியாளர்கள் தாய்வான் தீவில் குடியேறி அமெரிக்காவின் ஆதரவுடன் தாங்கள்தான் உண்மையான சீனா என்று குட்டித் தீவுக்குள் அரசமைத்துக் கொள்கிறார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை, கம்யூனிஸ்டு கட்சியின் சர்வாதிகாரம் என்ற அடிப்படையில்தான் சீனாவில் அரசியல் பொருளாதாரம் நடந்து வருகிறது.
  • கட்சி, ஆட்சி, தொழில் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் கட்சி உறுப்பினர்கள் / தலைவர்களின் ஆதிக்கம்தான்.
  • தனியார் சொத்துரிமை கிடையாது.
  • எல்லா நிலங்களும், எல்லா வளங்களும் சமூகத்துக்கு உரிமையானவை.
  • மத்தியத் திட்டக் குழு வகுத்தபடி பயிர் செய்ய வேண்டும் வரும் விளைச்சலை விதிக்கப்பட்ட விலைக்கு விற்று விதிக்கப்பட்ட வருமானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படி தனி மனிதருக்கு உழைக்க ஆர்வம் இருக்கும்? கல்வி முறை எப்படி இருந்தது? பணம் எப்படிப் பயன்பட்டது? என்ற கேள்விகளை இப்போதைக்கு தள்ளிப் போட்டு விட்டு இந்த முறையின் விளைவுகளைப் பார்க்கலாம்.

பற்றாக்குறைகள், பஞ்சம், வறுமை என்று ஒவ்வொரு இக்கட்டாகத் தள்ளாடி வந்து கொண்டிருந்தது செஞ்சீனா. 1970களில் அமெரிக்கா முதலான மேல் நாடுகள் கம்யூனிஸ்டு அரசை அங்கீகரிக்க ஆரம்பித்தன. தாய்வானில் ஒதுங்கியிருந்து குவமின்தாங் அரசுதான் சீனா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் உண்மையான சீன அரசை ஏற்றுக் கொண்டு அரசு முறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

உள்நாட்டு அரசியலிலும் சேர்மன் மாவோவின் காலம் முடிந்து மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. கம்யூனிசம் என்ற கனவைப் பற்றிப் பேசியே கவலைகளை மறக்கச் செய்யும் வித்தைகளின் சரக்கு தீர்ந்து விட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்த வேண்டும், வெளி நாட்டு முதலீடுகளை அனுமதிக்க வேண்டும், சந்தைப் பொருளாதாரத்தை முயன்று பார்க்க வேண்டும் என்று தேவைகள் ஏற்பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 1

நம் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக போராட்டங்கள், விவாதங்கள், ஏன் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு, சாவுகள் வரை போய் விட்டன.

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்த கொள்கை சீனா 1980களில் கொண்டு வந்த கொள்கையை தழுவியே இருக்கிறது என்கிறார்கள்.
  • சீனாவில் இவை போல பிரச்சனைகள் இருந்தனவா?
  • பாமக போல எதிர்ப்புக் குரல்கள் எழவில்லையா?
  • எப்படிச் சமாளித்து நடத்தினார்கள்.
  • பல வளரும் நாடுகளில் அதே போல செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு எப்படிச் சாதித்துக் காட்டினார்கள்?
பொதுவாக கம்யூனிஸ்டு கட்சியினர் சங்கடமான கேள்விகளுக்கு விடையாகப் பயன்படுத்தும் ஒரு சமாளிப்பு, 'அங்கிருந்த சூழல்கள் வேறு, இங்கிருக்கும் சூழல்கள் வேறு' என்பது.

'சீனாவே சந்தைப் பொருளாதாரத்தையும், உலக மயமாக்கலையும் ஆதரிக்கும் போது, நீங்கள் ஏன் இந்தியாவில் எதிர்க்கிறீர்கள்?'
'மேற்கு வங்கத்தில் உங்கள் அரசு பின்பற்றும் அதே கொள்கைகளை பிற மாநிலங்களில் ஏன் எதிர்க்கிறீர்கள்?'

இப்படி கேட்டால் மேலே சொன்ன பதில்தான் வரும்.

சீனாவில் 1980களின் நிலவரமும், இந்தியாவில் 2000ம் ஆண்டுகளின் நிலவரமும் ஒரே மாதிரி இல்லைதான். அப்படி என்ன வித்தியாசம்? அவர்களால் சிக்கல் இல்லாமல் செய்ய முடிந்தது நமக்கு ஏன் இவ்வளவு தலைவலி தருகிறது.