சனி, மார்ச் 27, 2010

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

  • நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்குக் கொடுத்த வாக்கை அப்பட்டமாக மீறி
  • தாம் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்து பதவி ஏறிய இந்திய அரசமைப்பு சட்டத்தை மதிக்காமல்
கும்பல் ஒன்றின் வெறியைத் தூண்டி, சட்ட விரோதமாக பாப்ரி மஸ்ஜித் இடிபடுவதற்கு தூண்டுதலாகவும் உடந்தையாகவும் இருந்த இந்துத்துவா அமைப்புகளை நோக்கி இந்திய அரசமைப்பின் சக்கரங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அஞ்சு குப்தா போன்ற தேசபக்த குடிமக்களால் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது!

வியாழன், மார்ச் 18, 2010

சுவாமி பரமஹம்ச நித்யானந்தர்

ஆனந்த விகடனில் ஜக்கி வாசுதேவின் கட்டுரைகள் வரும் போது குமுதத்தில் பரமஹம்ச நித்யானந்தரின் கட்டுரைகள் வெளியாகி வந்தன.

ஜக்கி வாசுதேவ் எங்கோ உயரத்தில் உட்கார்ந்து கொண்டு படிப்பவர்களை கீழ் நோக்கி தேவ மொழிகளை உதிர்ப்பது போன்ற தொனியில் ஒலிக்கிறார். பரமஹம்ச நித்யானந்தர் நமக்கு அருகில் உட்கார்ந்து நம்மை மதித்து பேசுவது போன்ற உணர்வு.

(பிற்பாடு குமுதத்தில் பணி புரிந்த ஒரு நண்பர் மூலம் அந்த கட்டுரைகளை எழுதுவது குமுதம் எழுத்தாளர்கள்தான். சுவாமிகளுக்கு காண்பித்து விட்டு வெளியிடுவார்கள் என்று தெரிய வந்தது). எப்படியானாலும், இந்த சாமியார் இருப்பவர்களுக்குள் அணுக எளிமையானவர் என்ற எண்ணம் இருந்தது.

அவரது தொலைக்காட்சி பேச்சுக்களையோ புத்தகங்களையோ சந்தித்ததில்லை. அவரை நேரிலும் பார்த்ததில்லை. 'ஆபாச வீடியோ' என்று தமிழகத்தின் தலைத் தொலைக்காட்சி வெளியிட்ட போது பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

மனிதனுக்கு மட்டும்தான் சிந்திக்கும் மனம் வாய்த்திருக்கிறது. தினந்தோறும் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலாக அவற்றைத் தாண்டி இன்னும் இன்னும் யோசிக்க வேண்டிய உந்துதல் இருக்கிறது. அந்த உந்துதலை எல்லாம் சக மனிதர் மீது செலுத்தி, அடிப்படை பொறுப்பை இறக்கி வைத்து விடுவது நிம்மதியான ஒரு தேர்வு.

'நம்ம வேலையை நாம் செய்து கொண்டே போகலாம். மேல் வழிகாட்டலுக்கு சாமியாரிடம் பொறுப்பை விட்டாகி விட்டது'. அந்த பொறுப்பை விடுவதற்கான மனிதரிடம் சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும் என்று நாமே வகுத்துக் கொள்கிறோம்.

அவ்வளவு நம்பிக்கை வைத்த ஒரு சாமியாரோ அல்லது இன்னொரு மனிதரோ, நாம் கற்பித்துக் கொண்ட பண்புகளில் தவறும் போது, அவரை மையமாக வைத்து கட்டிய கோட்டைகள் எல்லாம் உடைந்து சிதறி விடுகின்றன.

இன்னொருவர் மீது கோட்டை கட்டவும் வேண்டாம், அது இடிந்து விழும் போது கோபப்படவும் வேண்டாம். நம்முடைய பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தி விடும் சோம்பேறிகளாக இருந்து விட்டு, "அப்படி சுமத்துவது சாத்தியமே இல்லை, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று உணரும் போது ஏமாற்றம் வருகிறது.

நம்முடைய மனதின் பறத்தலுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. வேறு யார் மீதும் சுமத்தினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.