புதன், அக்டோபர் 19, 2011

மாயைகள்


இந்து மத ஞான மரபு இல்லாத சீனா எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்' என்ற பதற்றம் எப்படிப்பட்ட ஊகங்களுக்குக் கொண்டு விடுகிறது!!

//சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.//

சீனாவின் கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல தொழில்பேட்டைகளுக்கும் குடியிருப்பு நகரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய் வந்திருக்கிறேன். (1997-2001). அப்படிப்பட்ட கட்டுப்பாடு அரசியல் காரணங்களுக்காக திபெத், ஷின்ஜியாங் போன்ற பகுதிகளில் (அங்கெல்லாம் தொழில் வளர்ச்சி கிடையாது) இருக்கலாம்.

//அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள்.//
இல்லை

//மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது//

ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் 'சட்ட விரோதமாக' நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

சனி, அக்டோபர் 15, 2011

காஷ்மீர் பற்றி அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே


"காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பிரிக்க முடியாத ஒரு பகுதி. யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்" - அண்ணா ஹசாரே


Mr. Hazare said, “Kashmir is an important, inseparable part of India, and having any other opinion about this is not acceptable. I am ready to give my life for Kashmir.”


காஷ்மீருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் என்ன சம்பந்தம்?  அங்கு உள்ள மக்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லோரையும் இடது கையால் ஒதுக்கி விட்டு இப்படி சொல்வது ஒரு பள்ளிச் சிறுவனின் மூர்க்கத்தனமான தேசப்பற்று வெளிப்பாடாக இருக்கிறது. 

அன்னா ஹசாரேவின் பல கருத்துக்கள், பேசும் விதம், நடை உடை பாவனைகள் அந்த பாணியிலேயே இருக்கின்றன. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உலக பார்வையில் எல்லாவற்றையும் நோக்கும் அணுகுமுறைதான் தெரிகிறது.



'அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு காந்தியின் மீது இருந்த மரியாதை (பிம்பம்) சிதைய ஆரம்பித்திருக்கிறது, அவரும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது' என்று ஒருவர் ஓரிரு மாதங்கள் முன்பு குறிப்பிட்டார்!



ஆனால் அன்னா ஹசாரேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பித்து வரிசையாக முக்கிய அமைச்சர்கள் கடிதம் எழுதுவதும் பேச்சு வார்த்தை நடத்துவதும் ஏன்? இவரும் அடுத்தடுத்த பிரச்சனைகளில் தனது 'கருத்து' முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.  இதை போலத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்தியை ஊதிப் பெருக்கியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


காஷ்மீரின் விடுதலை என்ற பொருளை எடுத்துக் கொண்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான வாதங்களையும் அதை எதிர்த்து காஷ்மீர் பிரிந்து செல்வதற்கான நியாயங்களையும் பேச வேண்டும்.  


'யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்று மிரட்டுவது' தவறு.



'இந்திய தேச பக்தி, ஒருமைப்பாடு' என்பதை மட்டும் சொல்லி, மற்ற காரணங்களை புறக்கணிப்பது அயோக்கியத்தனம்.  அன்னா ஹசாரேவை என்றுமே முற்போக்காளர்கள் ஆதரித்ததாக தெரியவில்லை. 


தேசிய இனங்கள்

'பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு இனத்தினர் தமது அரசியல் தேவைகளை தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்' என்பது அடிப்படை ஜனநாயகம். இந்த உரிமை அளிக்காத நாடுகள் எல்லாம் பெயரளவில் ஜனநாயக நாடுகள் மட்டுமே (அது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவானாலும் சரி). 

ஸ்பெயினில் பாஸ்க் விடுதலை இயக்கம்,இங்கிலாந்தில் ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் லிபரேஷன் ஆர்மி)  போராட்டங்கள் எல்லாம் கொடுமையான அடக்குமுறை, வன்முறைகள் மூலம் ஒடுக்கப்பட்டன. 

20ஆம் நூற்றாண்டின் பொருளாதாரக் கட்டாயங்கள் இது போன்று தேசிய இனங்களை அடக்கி சிறைப்பிடித்து வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தன. அந்த பொருளாதார சூழ்நிலைகள் மாறி வரும் போது சிறைப்பிடிக்கப்பட்டவர்கள விடுதலை பெறுவது நடக்கும். 

தாக்குபவர்களின் வன்முறையையும் தற்காத்துக் கொள்பவர்களின் வன்முறையையும் ஒப்பிடக் கூடாது. விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வன்முறை தம் மீதான ஒடுக்குமுறையை (வன்முறை அடிப்படையிலான) எதிர்த்த வெளிப்பாடு. ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் இல்லாமல் போனால் வன்முறையும் ஒழிந்து விடும். 


ஸ்பெயின் அரசு வன்முறையை ஒழிக்க ஒரே ஒரு வேலை செய்தால் போதும், தமக்கு சம்பந்தம் இல்லாத பாஸ்க் பகுதியிலிருந்து தமது ஆதிக்கத்தை விலக்கிக் கொண்டால் போதும். 

இந்தியா


இந்திய அரசியல் சட்டத்தை யார் உருவாக்கினார்கள்? மக்கள் எப்போது இதற்கு ஒப்புதல் அளித்தார்கள்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949, ஜனவரி 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950, ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952ல்தான் நடந்தது. அப்போது இருந்த மாநில சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்தான் அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் இருந்தார்கள். 

மக்களாட்சி என்பது கீழிருந்து உருப்பெற வேண்டும். ஒவ்வொரு பகுதி மக்களும் அரசியலமைப்பு சட்டத்தை விவாதித்து தமது கருத்துக்களை சேர்த்து நிறைவேற்ற வேண்டும். மோசமான ஜனநாயகம் என்பது மக்கள் தொகையில் மிகச்சிறு சதவீதத்தினர் (பெரு நிறுவனங்கள்+ அரசியல் தலைவர்கள்) நாட்டின் பெரும்பான்மை இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பின் பெரும்பகுதியையும் வீணடிப்பதாக இருக்கும் போது, உண்மையான ஜனநாயகத்தின் தேவை அதிகமாகிறது. 



இப்போதைய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு போடும் நடைமுறை ஒரு திருவிழாவாக முடிகிறதே அல்லாமல், மக்களை முன்னேற்ற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் அமைப்பிற்கான தேர்வாக இல்லை என்பது நிதர்சனம்.


தேர்தலில் வாக்களிப்பதுதான் உரிமை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி கொள்ளயடிக்கப் போவது கருணாநிதியா, ஜெயலலிதாவா --- அல்லது நகராட்சித் தலைவராக X வந்து சம்பாதிக்க வேண்டுமா அல்லது Y வந்து சம்பாதிக்க வேண்டுமா என்று வாக்களித்து விட்டு அவர்கள் சம்பாதிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொட்டுவதுதான் உரிமையா?



1. ஜனநாயகம் கீழ்மட்டத்திலிருந்து மேல் நோக்கி அதிகாரம் பரவுவதாக இருக்க வேண்டும். 

2. அரசு நிர்வாகம், நீதித் துறை, சட்டம் இயற்றும் துறை மூன்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்க வேண்டும். 
(மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்துத் தலைவரை விட கிராம அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் அதிக அதிகாரம் செலுத்துகிறார்கள்). 

3. மக்கள் எந்த பிரதிநிதியையும் திருப்பி அழைக்கும் உரிமையும் நடைமுறையும் இருக்க வேண்டும். 

4. உண்மையாக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் உழைக்கும் மக்களிடமிருந்து இத்தகைய அதிகாரத்தைப் பறிக்கத் திட்டமிடும், கும்பல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். 

இந்தக் கும்பல்கள் உழைக்காமல் இருப்பதால் முழு நேரமும் இந்த அதிகாரப் பிடிப்பு குறித்து யோசித்து செயல்பட முடிகிறது. அவர்களுக்கான அந்த இடம் இல்லாமல் போக வேண்டும். 


காஷ்மீர்




காஷ்மீரில் அப்படி என்ன சூழல்கள் நிலவுகின்றன? அந்த ஊர் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது யார்? அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்? அவர்களது பிரிந்து செல்லும் கோரிக்கைக்கான வரலாற்றுப் பின்னணி என்ன? 


காஷ்மீரை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதால்தான் தீவிரவாதம் தலையெடுக்கிறது (என்று பாகிஸ்தான் சொல்கிறது). இந்தியாவே தீவிரவாதத்துக்கு காரணமாக இருக்கிறது. 

சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் (பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர்) தமது இன மக்களுடன் சுதந்திரமாக பழக வேண்டும், வர்த்தகம் செய்ய வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் முடிவு செய்ய உரிமை இருக்கிறதா? 

கடந்த 20 ஆண்டுகளிக் காஷ்மீரில் எத்தனை இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?  பெண்களும் சிறுவர்களும் தெருவுக்கு வந்து போராடுவதற்கான அடக்குமுறைகளுக்கு யார் பொறுப்பு? இந்திய ராணுவம் ஏன் காஷ்மீரில் குவிக்கப்பட்டிருக்கிறது?  ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் ஏன் நடைமுறையில் இருக்கிறது? 

எல்லை நெடுகிலும் முள்வேலி போட வேண்டும் என்று புலம்பும் தலைவர்கள் இன்னும் மனநோய் காப்பகத்துக்கு அனுப்பப்படாமல் இருப்பது ஏன்? 

உலக நாடுகளுக்கு இந்திய பிராந்தியத்தில் ஆதாயம் பெறுவதற்கு இந்தியா என்ற வல்லரசின் துணை தேவைப்படுகிறது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் இவர்கள் யாரையும் காஷ்மீரிகள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை. தமது வாழ்க்கை பற்றிய அரசியலை தம்மைச் சார்ந்தவர்களே (காஷ்மீரிகளே) தீர்மானிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!



காஷ்மீர் மக்களுக்கும், வடகிழக்கு மக்களுக்கும் அவர்கள் நாடுகள் இந்தியாவின் கையில் சிக்கி காலனியாக மாறி இருக்கின்றன. அவர்களுக்கு எப்போது சுதந்திரம்? (வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் மறுக்க இது போன்ற வாதத்தைத்தான் வைத்திருந்தார்).

திங்கள், அக்டோபர் 10, 2011

மாநில சுயாட்சியும் மங்காத்தாவும்

டாடாக்கள், அம்பானிகள், மிட்டல்கள், சரத்பவார்கள் போன்ற சூட்டு போட்ட பெரிய மனிதர்கள், கிளப்பில் மங்காத்தா ஆடி இந்திய தேசத்தின் வளத்தைப் பெருக்கி வந்தார்கள். 

மாறன்கள், அன்புமணிகள், ஸ்டாலின்கள், அழகிரிகள், சசிகலாக்கள் போன்ற அரை டவுசர் போட்ட சிறுவர்கள், ஆடுபவர்களுக்கு சிகரெட், கூல் டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் வாங்கி வருவது, புதிய சீட்டுக் கட்டு மாற்றித் தருவது என்று எடுபிடி வேலைகள் செய்து கொடுத்தால் கணிசமான டிப்ஸ் வாங்கி வளமாக வாழலாம், இந்திய தேசத்தில். 

'50 ஆண்டுகளாக கேட்டுப் போராடி வந்த மாநில சுயாட்சி வரப் போகிறது, நாமும் மங்காத்தா மேசையில் உட்காரலாம்' என்று துணிந்து பெரிய மனிதர்களின் வட்டத்தில் உட்காரத் துணிந்த தயாநிதி மாறனும், ஆ ராசாவும் இப்போது கிளப் காவலர்களால் தெருவில் தள்ளப்பட்டு நையப் புடைக்கப்படுகிறார்கள் (அன்புமணி ஏற்கனவே தெருவுக்கு அனுப்பப்பட்டு விட்டார்). 

இப்போதைய உடனடி தேவை மாநில சுயாட்சிக்கான மக்கள் போராட்டம். நம்ம ஊர் மாறன்களும், அன்புமணிகளும் (அவருக்கு தனியாக ஒரு மாநிலம் கூட பிரித்துக் கொள்ளலாம்), தாங்களும் பெரிய மனிதர்களாக மங்காத்தா ஆட ஒரு கிளப்பும் ஆட்ட மேசையும் அவசரமாக தேவைப்படுகிறது. 

மக்களே உங்கள் குரலை எழுப்புங்கள், போராட்டங்களை ஆரம்பியுங்கள்!