பயணம் செய்வது அதிகமாகி விட்டதால், கம்பியில்லா இணைய இணைப்பு கருவி வாங்கலாம் என்று முடிவு. ஏர்டெல், ரிலையன்ஸ், எம்டிஎஸ் என்று பரிந்துரைகள் கிடைத்தன, யாரும் பிஎஸ்என்எல் பெயரையே எடுக்கவில்லை.
முயற்சித்து பார்க்கலாம் என்று 3G டேடா கார்டு பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்டேன். ஒரு தொலைபேசி எண் தருகிறேன் என்று மொபைல் எண் (9486109966) சொன்னார். அவர் பெயர் கிருபாகரன் என்றும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.
வெளியில் வந்ததும் எண்ணை அழைத்தேன்.
'3G டேடா கார்டு வாங்க வேண்டும். அது பற்றின விபரங்கள் வேண்டும். என்ன செலவாகும்? மாதாந்திர கட்டணம் எவ்வளவு? வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'
இளமையான ஒரு குரல் பதில் சொன்னது.
'2,900 ரூபாய் ஆகும் சார், அதிலேயே 1 GB யூசேஜ் சேர்த்து கொடுத்து விடுவோம். கருவியில் விலை 2,100 ரூபாய், ஆக்டிவேசன் சார்ஜ் 110 ரூபாய்' என்று பட்டியலிட்டார். '7.2 mbps வேகத்திலான மோடம் தருவோம். 1 GBக்கு 423 ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் ரோமிங் பிரீ'
'எந்தெந்த ஊரில் பயன்படுத்தலாம். எல்லா ஊரிலும் வருகிறதா?'
'நீங்க எந்தெந்த ஊர்களில் பயன்படுத்துவீர்கள்? இந்தியா முழுவதும் எல்லா இடத்திலும் சேவை உண்டு'
'மெயினா வேலூரிலும் சென்னையிலும் வேண்டும்'
'சென்னையில் எந்தெந்த இடங்கள்?'
'வளசரவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர். இன்னொரு விஷயம். நான் பயன்படுத்துவது லினக்ஸ் கணினி. அதில் இந்தக் கருவி வேலை செய்யுமா என்று பார்க்க வேண்டும். என்ன மாடல் என்று சொன்னால் தேடிப் பார்ப்பேன்'
'7.2 mbps மோடம், நீங்க லேப்டாப்பை கொண்டு வாங்க, செட் செய்து விடலாம். நீங்க மதியம் 2 மணிக்கு மேல் வாங்க, இப்போ நான் வெளியில் ஒரு பயிற்சியில் இருக்கிறேன். மதியத்துக்கு மேல் வாங்க'
'பணம் செக்காக கொடுக்கலாமா, கேஷ்தான் தர வேண்டுமா?, என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?'
'கேஷ்தான் சார், உங்க ஐடி புரூப், ஒரு போட்டோ அவ்வளவுதான். அதில் இருக்கும் முகவரியையே எடுத்துக் கொள்ளலாம். தலைமை தபால் நிலையம் அருகில் வந்து விடுங்க, பழைய பேருந்து நிலையம் தாண்டி ஊரிஸ் காலேஜ் எல்லாம் போகும் வழியில்'
நினைத்ததை விட வேகமாக நடக்கிறதே என்று வீடு வந்து சேர்ந்தேன். இணையத்தில் பிஎஸ்என்எல் 3G அட்டை பற்றி தேடினேன். லினக்சில் எப்படி பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை வட்டத்தில் ஒருவர் ஒரு பக்க வழிகாட்டி இணையத்தில் போட்டிருந்தார், பிஎஸ்என்எல் அதிகாரிதான். கர்நாடகா வட்டத்தில் ஒரு பெரிய கையேடு பிடிஎப் ஆகி வெளியிட்டிருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர இந்தியா பிராட்பேண்ட் பாரம், இன்னொரு வலைப்பதிவில் விபரங்கள் கிடைத்தன. இணைப்பு வேகம் எல்லோருக்கும் நன்றாக கிடைக்கிறது. லினக்சில் இயக்குவதற்கான வழிகளும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன. wvdial நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த விபரங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். மதியம் போகும் போது பயன்படலாம்.
2 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார் என்று உடனேயே புறப்பட்டு விடவில்லை. 2.30க்கு அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.
'என்ன சார், வருவதாகச் சொன்னீங்களே, இன்னும் வரவில்லையே'. ஆச்சரியமாயிருந்தது, இவ்வளவு வாடிக்கையாளர் சேவையா!
உடனேயே புறப்பட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. 'உங்க ஐடி புரூபில் இருக்கும் முகவரியை சொல்லுங்க சார்' என்று குறித்துக் கொண்டார். 'நீங்க எப்படி வருவீங்க பைக்கிலா' என்று கேட்டு பேருந்து என்று சொன்னதும், 'ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க, அங்கிருந்து அழைத்தால் நானே வந்து அழைத்துப் போகிறேன்'. இவர் உண்மையிலேயே பிஎஸ்என்எல் ஊழியர்தானா அல்லது வேறு ஏதாவது முகவரா என்று சந்தேகமே வந்து விட்டது.
போவதற்கு முன்பு wvdial நிறுவிக் கொள்வது என்று நிறுவிக் கொண்டேன். மடிக்கணினி, அதற்கான வயர், போட்டோ, காசோலை ஒன்றும் கூட எடுத்துக் கொண்டேன். ஓட்டுனர் உரிமம் நகல் எடுப்பதற்கு வழியில் முடியவில்லை.
பழைய பேருந்து நிலையம் தாண்டிய பிறகு ராஜா தியேட்டர் நிறுத்தம் இறங்கி, தொலைபேசினால் சாலையைக் கடந்து தபால் நிலையம் வரச் சொன்னார். தபால் நிலையம் அருகில் வந்து திரும்பவும் அழைத்தேன் அவரை எங்கு தேடுவது. தபால் நிலையத்துக்கு பின்புறம் பிஎஸ்என்எல் ஆபீஸ் இருக்கிறது.
கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகுடன், உருண்டையான முகத்துடன் சுமார் 40+ வயதுள்ளவர் வந்தார். நேர்த்தியான சீருடை அணிந்திருந்தார். மகிழ்ச்சியாக கை குலுக்கினார். வாடிக்கையாளர் மையத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று சொன்னார். அருகிலேயே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டை நகலுக்கு நகலகத்துக்குப் போய் வந்தேன். காத்திருக்கச் சொன்ன இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவரது அலுவலகம் அங்குதானாம்.
அந்த இடத்தில் நிறைய குரங்குகள் உலாவிக் கொண்டிருந்தன. 5-10 நிமிடங்களில் வந்தார். 'என்ன சார், இங்கேயே உட்கார்ந்துட்டீங்க' என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனார். பெரிய, பழைய கால அலுவலக கட்டிடம். ஒரு அறையை சாவி கொண்டு திறந்தார். உயரமான கூரையுடன் அறை. நடுவில் மேசை, ஒரு தொலைபேசி. சுவர்களில் பிஎஸ்என்எல் போஸ்டர்கள். இப்போது சந்தேகமாக இருந்தது, இவர் உண்மையில் பிஎஸ்என்எல் ஊழியர்தானா?
அவரது நட்பான அணுகுமுறையும் பேச்சும் பிஎஸ்என்எல் பாணியில் இல்லா விட்டாலும், உடை, முகபாவம், அறையின் எளிமை தனியார் நிறுவனமாக இருப்பதை ரூல் அவுட் செய்தது. ஒரு சின்ன அட்டை கவரில் இருந்து கருவியை எடுத்தார். விண்ணப்ப படிவத்தை நிரப்பச் சொன்னார். எனது தொலைபேசியை வாங்கி அதில் சிம்மைப் போட்டு ஆக்டிவேசன் செய்ய ஆரம்பித்தார்.
இந்த சிம்மை தொலைபேசி கருவியில் போட்டு பேசவும் பயன்படுத்தலாம், 3G கருவியில் போட்டு 3G எண்ணாகவும் பயன்படுத்தலாம், கணினியில் டேடா கார்டை போட்ட பிறகு மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவையும் செய்யலாமாம்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பி முடிப்பதற்குள் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் நிலவரத்தை குறுஞ்செய்தியாகக் காட்டினார். அதன் பிறகு சிம் அட்டையை எடுத்து கருவியில் போட்டு மடிக்கணினியில் இணைக்கச் சொன்னார். நான் கொண்டு போயிருந்த வழிகாட்டி கோப்புகளின் படி wvdial.conf கோப்பை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். 'அதெல்லாம் வேண்டாம் சார், தானாகவே செட் ஆகி விடும்' என்று சொன்னார்.
'லினக்சுக்கும் அப்படி மென்பொருள் செய்து விட்டார்களா என்ன, பரவாயில்லையே!' என்று சொல்லிக் கொண்டே கருவியை வாங்கி சொருகிறேன். ஓரிரு நிமிடங்களில் நெட்வொர்க் மேனேஜரில் அடையாளம் காணப்பட்டு சின்னம் காட்டியது. அதன் மீது கிளிக்கினால், enable mobile broadband இருந்தது, அதை கிளிக் செய்து விட்டு wvdial ஓட விட்டால் டிவைஸ் இல்லை என்று வந்தது. டிவைஸ் பெயரை மாற்ற வேண்டும்.
ACM என்று டிவைஸ் செட் ஆகியிருந்தது. நெட்வொர் மேனேஜரில் அதைப் பார்த்து wvdial.confல் மாற்றி இயக்கினால் இணைந்து விட்டது.
அருகில் கிருபாகரன் காத்திருந்தார். 'ஒண்ணும் செய்யாதீங்க சார், காத்திருங்க, அதுவே வரும். நான் விளக்கமாகச் சொல்கிறேன்' என்றார். நான் கூகுள் குரோமை இயக்கி இணையத்தில் இணைத்துக் காட்டியதும் நம்பவே முடியவில்லை. 'எப்படி சார், சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாம கனெக்ட் ஆகவே செய்யாதே, இது என்னெவென்று புரியவில்லையே' என்றார்.
'அதுதான் நான் முதலிலேயே சொன்னேன். இதில் இருக்கும் சாப்ட்வேர் விண்டோசுக்கு எழுதியிருப்பார்கள், லினக்சின் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நான் இணையத்தில் இருந்து எடுத்து வந்த முறையைப் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன்' என்று விளக்கினேன்.
'அந்த சாப்ட்வேர் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது, கணக்கில் மீதி விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?' கர்நாடகா பிஎஸ்என்எல் கொடுத்திருந்த கையேட்டில் லினக்சில் சாப்ட்வேர் நிறுவுவதற்கான வழி கொடுக்கப்பட்டிருந்தது. நான் நிறுவிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
'சிம் கணக்கில் குறைந்த பட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அதை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். பிரவுசிங்குக்கு ரீசார்ஜ் செய்யலாம். 1GB - 403 ரூபாய், 0.5 GB - 202 ரூபாய், 25 MB - 101 ரூபாய், 5GB - 751 ரூபாய், 2GB - 716 ரூபாய் எல்லாமே 1 மாத வேலிடிட்டிதான். 5GB கட்டணம் டிசம்பர் 31 வரை ஆபர்தான். அதற்கு பிறகு வேறு ஆபர் வரலாம். சிம் எண 9445040622. ஆரம்ப ஆக்டிவேஷனில் 200 MB பயன்பாடு உள்ளடங்கியிருக்கிறது. அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.'
'வெளிப்படையாக சொல்லப்போனால், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் உங்களிடம் பேசினேன். இப்போ இணையத்தில் இணைந்தாகி விட்டது. பிஎஸ்என்எல்லில் இப்படி ஒருவரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.' முகத்தில் உணர்ச்சிகளை அதிகம் காட்டாத மனிதர். கேட்டுக் கொண்டார்.
'எங்களை எப்படியாவது அழித்து விடணும் என்று மேலிடத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் சார். தனியார் நிறுவனத்துக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு நார்ம்ஸ் என்று அதே வசதியை மறுக்கிறார்கள். ஐடியா செல்லுலர் காரன் மைக்ரோவேவ் பயன்படுத்தி இணைப்பு தருகிறான். நாங்கள் அப்படி செய்ய நார்ம்ஸ் அனுமதிக்காது, அது மனித உடலுக்குக் கெடுதியாம். ஆனால் தனியார் செய்தால் கெடுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் செய்யணும் சார்'
'நிச்சயம் செய்கிறோம் சார். நானும் நான்கு நண்பர்களுக்கு நிச்சயம் இது பற்றி சொல்வேன்'
அவரது விசிட்டிங் கார்டு தந்தார். 'எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார், கார்டு கொடுத்தாச்சு என்று நாங்கள் பேசாம இருக்க மாட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் பேசுங்க. உங்களை மாதிரி பெங்களூரில் வேலை பார்க்கும் ஒருத்தர் வாங்ககிக் கிட்டு போனார். நாட்றாம்பள்ளி வரை காரில் இணைப்பு தொடர்ந்து இருந்ததாம். பெங்களூர் போய் பேசினார்' என்று விபரங்கள் சொன்னார்.
புறப்படும் போது 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார். சரி என்று வெளியில் வந்தால், அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு டீக்கடையில் 2 டீ சொன்னார். நன்றாக இருந்தது. என்னை காசு கொடுக்க அனுமதிக்கவில்லை. 'அவர் வாங்க மாட்டாரே' என்று தானே கொடுத்து விட்டார்.
வேலூரிலிருந்து வாலாஜா வரை பயணத்தில் பேருந்தில் பயன்படுத்த முடிந்தது, வாலாஜாவில் தொழிற்சாலையிலும் இணைப்பு கிடைத்தது. வேலூரில் வேகம் சிறப்பாக இருந்தது. அடுத்த 10 நாட்கள் பயன்படுத்திப் பார்த்து உறுதியான மதிப்பீடு செய்யலாம்.