புதன், ஜூலை 06, 2011

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமும், கோயில்களில் பொக்கிஷங்களும்

 • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், விலைமதிப்பு வாய்ந்த கற்கள் நிறைந்த பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 • சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பலர் பல லட்சம் கோடி மதிப்பிலான கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டும் பொதுவான அம்சங்களைக் கொண்டவை

1. பெருமதிப்பிலான இந்த புதையல்கள் எப்படி உருவாயின?
நாட்டு மக்களிடமிருந்து சம்பாதித்த, கொள்ளையடித்த அல்லது பறித்த பணத்தை, அது அரசாங்கத்தின் மூலமாக மக்கள் நலப்பணிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் தனி மனிதர்கள் பதுக்கி வைத்ததன் விளைவுகள்தான் இவை.

இவற்றை உருவாக்கியவர்கள் இரண்டு முறை குற்றவாளிகள். மக்களையும், அரசையும் ஏமாற்றிப் பணத்தை திரட்டியது ஒரு குற்றம். திரட்டிய பணத்தை பயன்படுத்தாமல் பதுக்குவது இரண்டாவது குற்றம்.

2. இவற்றை அப்படியே விட்டு வைத்தால் என்ன?
இந்த செல்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள், பொதுவான புழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளுக்கு வெளியில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு வீட்டை வாங்கும் போது கறுப்புப் பணம் வைத்திருப்பவர், வாங்கும் மதிப்பில் 80%த்தை தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து விற்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். 20%த்துக்கு மட்டும் வரி கட்டுவார்கள்.

வெளிநாட்டில் படிக்கப் போகும் தனது மகனுக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக் கொள்வார்கள்.

கோயிலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முன்னாள் அரச குடும்பத்தினர் அல்லது மடஅதிபதிகள், அதை வைத்து மற்றவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.

3. இவற்றை அரசு கைப்பற்றி மக்கள் நலனுக்கு செலவழிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? 

'இத்தனை லட்சம் கோடி டாலர்கள் வெளியில் வந்தால் இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு மிகவும் அதிகமாகி விடும் (1 டாலருக்கு 20 ரூபாய் என்று ஆகி விடலாம்), அதனால் ஏற்றுமதி நின்று போய் விடும், நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கும்' என்று ஒரு விந்தையான வாதம் வைக்கப்பட்டது.

10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம்+ஒரு லட்சம் கோடி மதிப்பிலான கோவில் நகைகள் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

'பணப் பற்றாக்குறை அல்லது அன்னிய செலாவணி மதிப்பு குறைந்து விடக் கூடாது' என்று செய்யாமல் இருக்கின்ற பல திட்டங்களை செயல்படுத்தலாம். இது போன்ற புதிய இறக்குமதி பரிமாற்றங்களில் பணம் செலவாகும் போது பாரம்பரிய ஏற்றுமதி/இறக்குமதி செலவாணி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக்  கொள்ளலாம்.
 • பல்வேறு துறைகளில் நிபுணர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தலாம். 
 • நவீன எந்திரங்களை, தொழில் நுட்பங்களை விலைக்கு வாங்கலாம். 
 • புதிய ஆய்வு நிறுவனங்கள் ஏற்படுத்தலாம். 
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பணத்தை வைத்து பிற நாட்டவரின் உழைப்பை நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.

4. பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியர் சொல்வது ஏன்?

அடுத்த கத்தி நம்மைப் போன்ற மடங்களின் தலைக்கு மேல் என்று தோன்றுவதாலும் இருக்கலாம்.

திங்கள், ஜூலை 04, 2011

இலங்கையில் இனப்படுகொலை - நாம் என்ன செய்யப் போகிறோம்!

எதுவும் நடக்காமல் இருந்து, இறுதிக் கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களும், 60 ஆண்டுகளாக நடந்து வரும்  இன அழிப்பும் உலக சமூகத்தின்/மக்களின் கவனத்திலிருந்து மறைந்து மறந்து போய் விடுவதுதான் குற்றவாளிகளான இலங்கை இனவெறி அரசும், கூட்டாளி இந்திய அதிகார அமைப்பும் வேண்டுவது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

 • பேரழிவையும் பெருங் கொலைகளையும் நடத்திய போர் முடிவடைந்தது,
 • ஐநா பொதுச்செயலாளர் குறைந்தபட்ச நடவடிக்கையாக ஒரு ஆலோசனை குழுவை நியமிக்கிறார்
 • இலங்கை அரசிடமிருந்து எந்த வகையிலும் ஒத்துழைப்பு இல்லாமல் குழு தனது ஆராய்வு அறிக்கையை சமர்ப்பிக்கிறது.


 • பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி, போர்க் காலத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை ஆவணப் படமாக வெளியிடுகிறது.
 • தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்த்லில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும், இலங்கை இனவெறி அரசு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
 • ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கப்படும் வர்த்தக சலுகைகளை ரத்து செய்கின்றன.
 • பிரிட்டன், ஃபிரான்சு முதலான ஐரோப்பிய நாட்டு அரசியல் தலைவர்கள் போர்க்குற்றங்கள் பற்றி தமது கடுமையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.


சாதாரணமாக ஒரு கொலை நடக்கும் போதே கொலையாளிகள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தம்மை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள் என்று சொல்வார்கள். சர்வதேச பார்வையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் வெளியேற்றி விட்டு சாட்சிகள் இல்லாமல் இலங்கை அரசு நடத்திக் கொண்ட இறுதிக் கட்டப் போர் நிகழ்வுகளிலிருந்து தப்பிக் கசிந்து வந்துள்ள தடயங்கள் நடந்த குற்றங்களின் பிரும்மாண்டத்தின்
சில நுனிகளை மட்டும் காட்டுகின்றன.

இந்தத் தடயங்களை பொருட்படுத்தாமல் எல்லோரும் மறந்து போக வேண்டும் என்பதுதான் குற்றவாளிகளின் விருப்பம், நோக்கம்.

அந்த நோக்கத்தை முறியடிக்க நியாயம் விரும்பும் ஒவ்வொருவரும், மனித நலனில் ஆர்வமுள்ள அனைவரும் தொடர்ந்து தமது குரலை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். உலகின் கவனத்திலிருந்து இந்தப் படுகொலை
நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கச் செய்வது நமது கடமை.

அந்தக் கடமையில் வெளிப்பாடுகள்தான் ஜூன் 26ல் மெரீனாவில் நடந்த நினைவேந்தல் நிகழ்வும், ஜூலை 2ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலும், கடலூர் மாவட்டம் வடலூரிலும் நடந்த அடையாள உண்ணாவிரதப் போராட்ட்ங்களும்.

மும்பையிலும், பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், தில்லியிலும் போராட்டக் குழுவினர் இது குறித்த நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.

அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஜூலை 8ம் தேதியை இலங்கைத் தமிழர்களுடன் ஒன்றுசேர்ந்து நிற்கும் நாளாக கடைப்பிடிக்க உள்ளது (solidarity day). நாடு முழுவதும் மாநிலத்தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவிருக்கிறார்கள்.

சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்ற வந்த சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர், அந்தக் கட்சித் தலைவர் முலாயம் சிங் மூலம் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை எழுப்ப முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்) சுஷ்மா சுவராஜ், தமிழக சட்டசபைத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தன்னை உலுப்பியதாகச் சொல்லியிருக்கிறார்.

போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற பெயரில் செயல்படும் 19 இயக்கங்களின் கூட்டமைப்பு, திரட்டப்பட்ட கையெழுத்துக்களை ஐநா சபைக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளது.

சமீப காலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போல இந்த போராட்டங்கள் தம்மை தலைவராக முன்னிறுத்திக் கொள்ளாத, தலைவராக முன்னிறுத்த விரும்பாத இளைஞர் இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு வைகோவை அல்லது சீமானை தனிப்பட்ட முறையில் தாக்கி செயலிழக்கச் செய்தது போல முடக்கிப் போட்டு விட முடியாமல் பல ஆயிரக் கணக்கான உணர்வும் ஊக்கமும் நிறைந்த இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நியாயம் கோரும் இந்தப் போராட்டம் தனது நோக்கங்களை அடைந்தே தீரும்.

மெரீனாவில், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு


ஜூன் 26ம் தேதி ஐநாவின் சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு இலங்கை இனவெறி அரசால் கொல்லப்பட்ட  பல லட்சம் தமிழர்களுக்கும் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. 

நான் மதிப்பிட்டது 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருப்பார்கள் என்று. ஆனால், நிகழ்வை ஏற்பாடு  செய்திருந்த மே17 இயக்கத்தினர் 25,000 மெழுகுவரத்திகளை வினியோகித்ததாக தெரிவிக்கிறார்கள். அதன் மூலம்
குறைந்தது 25,000 பேர் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டார்கள் என்று கணக்கிட முடிகிறது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி தர மறுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மெரீனா கடற்கரையில் பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு ஒன்று இருக்கிறதாம். ஐநா சித்திரவதை தடுப்பு நாள் என்று வலியுறுத்தி அனுமதி
பெறப்பட்டதாம்.
 • ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது 
 • கடற்கரையை அசுத்தம் செய்யக் கூடாது
 • 500 பேருக்கு மேல் கூடக்கூடாது 
 • முழக்கங்கள் எழுப்பக் கூடாது

உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் காவல் துறையினர்

அந்த எதிர்பார்ப்பில்தான் காவல்துறையினரும் வந்திருந்தார்கள். கூடியிருந்த கூட்டத்தில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டிருந்தால் அதைக் கையாள முடியாத நிலையில்தான் காவல்துறையினர் இருந்தார்கள். 

நல்ல வேளையாக, கூட்டத்தின் நோக்கத்திலிருந்து சிறிதும் விலகாமல் அனைவரும் அமைதியாகக் கூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டுக் கலைந்து போனார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எந்த் தொல்லையும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.