செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்


எந்த பெரிய கட்சியும், பெரிய தலைவரும் அழைப்பு விடாமல் வெளிப்படையாகத் தெரியாத உணர்வலையால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே நோக்கத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மக்கள் எழுச்சிப் போராட்டம் என்று சொல்லலாம்.

1. 2009ல் இறுதிக் கட்ட ஈழப் போரில் ஆரம்பித்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு கெட்டிக்காரத்தனமான முதலமைச்சரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

2. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனையை சேவ் தமிழ்ஸ் முன்னெடுத்தது.

3. 2011 சட்டசபை தேர்தலின் போது மேலே சொன்ன மாநிலம் தழுவிய செயல்பாடுகள் நடந்தன. பெரு ஊடகங்கள் இவற்றை முழுவதுமாகவே இருட்டடிப்பு செய்தாலும் (விகடன் குழுமம் தவிர) ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் சிறு சிறு குழுக்களாக மாநிலம் எங்கும் இயங்கினார்கள்.

விளைவாக காங்கிரசு சேர்ந்திருந்த கூட்டணிக்கு பலத்த அடி கிடைத்தது.

4. இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கையைத் தொடர்ந்து  போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற கூட்டமைப்பின் கீழ் 19 இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்தன.

பெரும்பாலும் தனித்தனியான குழுக்களாகவே செயல்பட்டார்கள்.

இந்த போராட்டத்துக்கு சேனல்4 தொலைக்காட்சி, ஹெட்லைன்ஸ் டுடே, ஜெயா டிவி என்ற காட்சி ஊடகங்களிலும், தினமணி, விகடன் போன்ற அச்சு ஊடகங்களிலும் முழுமையான தகவல்கள் வெளியாகி தமிழகமெங்கும் போய்ச் சேர்ந்தன.

இறுதியில் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது வரை நடந்தது.

5. ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்குத் தூக்கு என்று மத்திய அரசு உறுதி செய்து நிறைவேற்ற தூண்டிய பிறகு நிகழ்ந்த எழுச்சி மாநிலமெங்கும் வெகு வேகமாக பரவியது.

அனைத்து அரசியல் கட்சிகள் (காங்கிரசு தவிர), பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், தலைவர்கள்/பேச்சாளர்கள் (சோ, சுப்ரமணியசாமி, தங்கபாலு, இராம கோபாலன் தவிர) தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

வெள்ளிக் கிழமை சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டத்தில் ஆரம்பித்து, எந்தவிதமான மைய ஒருங்கிணைப்பும் இல்லாமல் மாணவர்களும் போராளிகளும் எல்லா பெரிய நகரங்களிலும் போராட்டங்களை  முன்னெடுத்தார்கள். துயரத்துக்குரிய நிகழ்வாக தோழர் செங்கொடியின் உயிர்த்தியாகம் அமைந்தது.

இந்த எழுச்சியின் தாக்கம் சட்டசபையில் ஒருமனதான தீர்மானமாகவும், உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையாகவும் உருவெடுத்திருக்கிறது.