திங்கள், டிசம்பர் 26, 2011

தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்

15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது.  15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.

15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது.  மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது.  அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர்.

மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது.  அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.

'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.

அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.

நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.

ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது.  அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.

அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல  பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

டாடாவின் புதிய தலைமை


டாடா குழுமத்தின் இப்போதைய தலைவரான ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறும்போது அவரது இடத்தில் வரப் போகிறவர் அவரது மச்சான் உறவுமுறைக்கார சைரஸ் மிஸ்திரி என்று அறிவித்திருக்கிறார்கள்.

'உலகெங்கிலுமுள்ள திறமையான தலைமை நிர்வாகிகளை பரிசீலித்து அடுத்த குழுமத் தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம்' என்று இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களில் பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தது போல பரிசீலனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

டாடா குழும நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனிப்பெரும் உரிமையாளரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி (இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்). குடும்பத்துக்கு வெளியில் கட்டுப்பாடு போய் விடக்கூடாது என்ற ஒழுக்கமும், அதிக பங்குகள் வைத்திருப்பவர்தான் சட்டாம்பிள்ளை என்ற கார்பொரேட் ஒழுங்குமுறையும் தூக்கிப்பிடிக்கப்பட்டது யாருக்கும் வியப்பைத் தந்து விடவில்லை.

இந்தியாவின் பிற தொழிலதிபர்கள் புதிய இளவரசருக்கு தமது நல்வாழ்த்துக்களை முறையாக தெரிவித்துக் கொண்டார்கள்.

'அனில் அம்பானி ஊழல் செய்திருக்கலாம், சத்யம் ராமலிங்க ராஜூ மோசடி செய்திருக்கலாம், ஆனால் ஒரு டாடாவைப் போல ஒரு இன்போசிஸ்சைப் போல எல்லா நிறுவனங்களும் செயல்படுவதுதான் சொர்க்கபுரியை உருவாக்கும் மார்க்கம்'. 2010-11 நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய டாடா குழுமம்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் ஆதர்ச பிரதிநிதியாக தூக்கிப்பிடிக்கப்படுகிறவர்கள்.

'டாடான்னா நேர்மை' என்று விளம்பரங்களில் அவர்களே பறைசாற்றிக் கொள்வது யாருக்கு நேர்மையாக இருப்பது?

1840களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து அபின் விற்பதன் மூலம் சீன மக்களை போதைக்கு அடிமையாக்கும் விரிவாக்கக் கொள்கையை பின்பற்றியது. '(creation of wealth ) நாட்டுக்கு வளம் உண்டாக்குவது என்றால் நாட்டை ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் ஒட்டி நின்று பணம் சேர்ப்பதுதான்' என்பதை 19ம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பின்பற்றியவர் இன்றைய டாடாக்களின் மூதாதையர். அபின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து பொருள் ஈட்டியவர் ஒரு டாடா.

இது தொடர்பாக ஹாங்காங் அரசு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து (http://www.legco.gov.hk/1886-87/h870325.pdf)

"கூட்டத்தின் போது 'ஹாங்காங் அபின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்' என்ற ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தகர்களின் சார்பாக டேவிட் சாசூன் & சன்ஸ் நிறுவனத்தின் ஷெல்லிம் எசகீல் ஷெல்லிமும் டாடா & கம்பெனியின் ருத்தன்ஜீ டாடாவும் அடங்கியவர்கள் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்கள்”

20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவின் தந்தைதான் ருத்தன்ஜீ தாதாபாய் டாடா. 1991லிருந்து இன்று வரை பொறுப்பில் இருக்கும் ரத்தன் டாடா ஜேஆர்டி டாடாவின் மருமகன்.

1868ல் ஜாம்ஷெட்ஜி டாடா துணித்துறை நிறுவனம் ஒன்றை மும்பையில் நிறுவி டாடா குழுமத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். 1877 ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்ட நன்னாளில் தானும் தனது நண்பர்களும் பணம் போட்டு ஆரம்பித்த நாக்பூர் ஜவுளி ஆலைக்கு 'பேரரசி ஆலை' என்று பெயர் சூட்டி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ஜாம்ஷெட்ஜி டாடா.

'தமது அரசியல் அதிகாரம் போய் விட்டாலும் இந்தியாவை தொடர்ந்து கொள்ளை அடிக்க வழி வேண்டும்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலேயர்கள் 1884ல் ஆரம்பித்து வைத்த இந்திய தேசிய காங்கிரசின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் நின்றவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

இந்தியாவின் முதல் எ்கு ஆலை, மகாராஷ்டிரத்தில் நீர்மின்நிலையம், பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தாஜ்மகால் ஐந்து நட்சத்திர விடுதி என்று எதிர்கால டாடா குழுமத்தின் பரந்து பட்ட வர்த்த பேரரசின் அடித்தளங்களை அவர் உருவாக்கினார். இவற்றுக்குத் தேவையான நிலம், இயற்களை வளங்கள், அரசாங்க மானியம், வேண்டிய அனுமதிகள் பெறுவதற்கு அப்போதைய ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு இந்த 'தேசிய' நிறுவனங்களை கட்டி அமைத்தார்.

'இந்திய தேசிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது' என்று டாடாவின் வரலாற்றாசிரியர்களால் வியக்கப்படும் டாடா ஸ்டீல் முதலாம் உலகப் போரின் போது ஆங்கிலேய போர் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தண்டவாளங்கள் அமைக்க எ்கு தயாரித்து அளித்தது.

1916ல் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், "அமோக லாபம்... ஆரம்ப வடிவமைப்பை விட 30% உற்பத்தி அதிகரிப்பு... தயாராக, வாங்க விரும்பும் சந்தைகள், ஆர்டர் பதிவேடு நிரம்பி வழிகிறது" என்று மகிழ்ச்சியுடன் நிறுவன தலைவர் அறிவிப்பதற்கு உறுதுணையாக ஏகாதிபத்திய பேரழிவு போரை பயன்படுத்திக் கொண்டது இந்த தேசபக்த குழுமம்.

1938ல் பொறுப்பேற்ற ஜேஆர்டி டாடா அடுத்தடுத்து அமைந்த காங்கிரசு 'சோசலிச' உருவாக்கிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ் இவற்றுக்கு ஏற்றபடி டாடா குழும நிறுவனங்களை வளர்த்துச் சென்று தமது முன்னோடிகளின் சீரிய பணிகளை தொடர்ந்தார்.

இப்போதைய தலைவர் ரத்தன் டாடா, நெருக்கி வந்த உலக ஏகாதிபத்தியங்களுக்குத் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட ஆண்டுகளில் நீரா ராடியா போன்ற கார்பொரேட் தரகர்கள், பன்னாட்டு நிதி சூதாட்டம், மெகா ஊழல்கள் என்று டாடா குழும நிறுவனங்களை காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்தார்.

குழும நிறுவனங்களின் தேசிய பாசாங்குகளை உடைத்து டாடா ஸ்டீலை பிரிட்டனின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விழுங்க வைத்து அதை செரிக்க கசாயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டாடா மோட்டாருக்கு பிரிட்டனின் லேண்ட்ரோவர் - ஜாகுவார் என்ற கடப்பாரையை ஊட்டி விட்டு பன்னாட்டு குழுமமாக்கியிருக்கிறார். டிசிஎஸ் என்று அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி தகவல் தொழில் நுட்ப புரட்சியிலும் தமக்குரிய கணிசமான பங்கை பிடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களாயிருந்தாலும், நேருவின் சோசலிச அரசாக இருந்தாலும், 1980களுக்குப் பிறகான உலகமயமாக்கப்பட்ட சூழலாயிருந்தாலும், காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப தாளம் போட்டு திறமையாக தமது கால் பரப்பி வளர்வதுதான் இவர்களின் சிறப்பு. நேற்று முளைத்த காளான்களாக அம்பானிகளும், மிட்டல்களும் ஊழல்களில் மாட்டி விழித்துக் கொண்டிருக்க அப்படி எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், சட்டத்தின் வரையறைக்குள் தனது கொள்ளைகளை வைத்துக் கொள்வது அல்லது தமக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற கார்பொரேட் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

'காலத்துக்கேற்ப தொழில் முனைவு செய்வதுதான் எங்கள் தர்மம், அந்தந்த கால கட்ட அமைப்புகளுக்குள் திறமையாக செயல்பட்டு நாட்டில் வளங்களை உருவாக்கினோம்' என்பதுதான் டாடா போன்றவர்களின் தத்துவம். இனிய இசையை ஓட விட்டு, நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலை போட்டு தன் கழுத்து அறுக்கப்படுவதை உணராமலேயே ஆட்டின் சங்கை அறுப்பது அவர்களது அணுகுமுறை. அறுபடும் ஆடுகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இழைக்கும் கொடூரங்களை பொருட்படுத்தாமல் வர்த்தகம் செய்யும் இவர்களுக்கும் நாசி ஜெர்மனி அரசாங்கத்துக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வழங்கி ஹோலகாஸ்டுக்கு துணை போன ஐபிஎம் நிறுவனத்துக்கும் என்ன வேறுபாடு!

டாடா குழுமம் போன்ற 'நியாயமான' ஒரு நிறுவனம் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஆப்பிரிக்காவின் கடற்கரை நாடுகளிலிருந்து கருப்பு இன மக்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் விற்பனை செய்யும் அடிமை வியாபாரத்தின் மூலம் வளம் சேர்க்கத் தயங்கியிருப்பார்களா?

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சுவரும் ஒரு கற்பாறையும் - ஆஷிஷ் குமார் சென்


The Wall And A Hard Place ‘Careful what you wish for’: 
Warnings for Pandora’s new haunt 
ASHISH KUMAR SEN

லாஸ்ஏஞ்சலீசுக்கு அருகில் உள்ள பர்பாங்க் பகுதி குடிமக்கள் வரவிருக்கின்ற புதிய பக்கத்து வீட்டுக்காரரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஊழியர்களுக்கு அடிமாட்டு கூலி கொடுப்பது, குறைபாடுள்ள நலத்திட்டங்கள் செயல்படுத்துவது, பக்கத்து வீட்டுக்காரர்களை வேலையிழக்க வைப்பது போன்றவை குறித்து அதன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் கோபத்தின் இலக்கு : பெரிய-பெட்டி சில்லறை வணிகர் வால்மார்ட் “வால்மார்ட் இந்த நாட்டில் சில்லறை வணிகமும் உற்பத்தியும் நடைபெறுவதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் கேட் நிக்சா.

யாருடைய ஊரிலெல்லாம் வால்மார்ட் கடை திறக்கப்படவிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் அவரிடம் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. “கடுமையாக போராடுங்கள், அல்லது ஊரை விட்டு தொலைந்து போய் விடுங்கள். ஏனென்றால் வால்மார்ட் உங்கள் ஊரையே பாழாக்கி விடப் போகிறது. ”

அமெரிக்காவில் வால்மார்ட் புதிய ஒரு கடை திறக்கத் திட்டமிடும் ஒவ்வொரு சமயமும் இந்த எச்சரிக்கை எழுகிறது. இந்த பெரு வணிக சங்கிலி தொடர் சிறு வணிகர்கள் மீது செலுத்தும் அழிவு பூர்வமான தாக்குதல் எல்லாவற்றையும் விட பெரிய கவலையாக இருக்கிறது. கிராமப்புற சமூகங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்த சில்லறை வணிகர்களை வால்மார்ட் அழித்தொழித்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வால்மார்ட்டைப் போல் இல்லாமல், குடும்பங்களால் நடத்தப்படும் கடைகள், தமது வருமானத்தை சமூகத்துக்குள்ளேயே செலவழிக்கிறார்கள். அவர்கள் மூடப்பட நேரிடும் போது மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. “பொதுவாக, (பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள்) சில்லறை விற்பனையை அதிகரிக்கிறார்கள், ஆனால் அது போட்டியிடும் சிறு சில்லறை வணிகர்களை அழிப்பது மூலமாகத்தான் நடக்கிறது,” என்று 'வால்மார்ட் இயக்கம்' பற்றி ஆய்வு செய்த அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் கென்னத் ஈ ஸ்டோன் சொல்கிறார்.

அவுட்லுக் கருத்து கேட்டதற்கு வால் மார்ட் பதில் சொல்லவில்லை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரு சில்லறை வணிகர்கள் உதவுவார்கள் என்று தம்பட்டம் அடிக்கப்படுவது கேள்விக்குரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சிகாகோவின் மேற்கு பக்கத்தில் வால்மார்ட்டின் தாக்கம் குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேவிட் மெர்ரிமேன் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார். விற்பனை அல்லது வேலை வாய்ப்பில் எந்த அதிகரிப்பையும் அவர் காணவில்லை. “சமூகத்துக்கு பொருளாதார முன்னேற்ற ஆதாயம் எதுவும் கிடைப்பதை நாங்கள் பார்க்க முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் தன்மையையும் விமர்சிப்பவர்கள் கேள்விக்குரியதாக்குகிறார்கள். “வால்மார்ட், டெஸ்கோ, கேரபோர் போன்ற கார்பொரேட்டுகள் இந்தியாவுக்கு வருவது பற்றிய பரபரப்புகளுக்கிடையே, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகக் கீழ் நிலை வேலை வாய்ப்புகளைத்தான வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்” என்று இந்தியா ரிசோர்ஸ் மையத்தின் உலக எதிர்ப்பு இயக்குனரான அமித் ஸ்ரீவத்சவா சொல்கிறார்.

வழங்கும் தொடர் சங்கிலியின் எல்லா கண்ணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள் தமது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். வால்மார்ட் தனது பெரிய அளவையும் வாங்கும் திறனையும் பயன்படுத்தி தான் வாங்கும் விவசாய பொருட்களுக்கும் தொழிற்சாலை பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கிறது ” என்கிறார் ஸ்ரீவத்சவா. இதன் விளைவாகத்தான் வாங்கும் உற்பத்தியாளர்களை “நசுக்குவதில் " வால்மார்ட் புகழ் பெற்றது. சிறு விவசாயிகள்தான் இழப்புகளை சந்திக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால், பல உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டின் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்கிறார் ஸ்டோன். பெரும் பெட்டி சில்லறை வணிகர்கள் அளிக்கும் குறைந்த விலைதான் நுகர்வோருக்கு கிடைக்கும் ஆதாயங்களில் முதல் இடம் பிடிக்கிறது. வேட்டையாடும் விலை குறித்த வால்மார்ட்டின் புகழ் பெரிதுபடுத்தப்பட்டது என்று சில பொருளியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். “நுகர்வோர் தாமாகவேதான் ஏற்கனவே இருக்கும் கடைகளை விட்டு வால்மார்ட்டுக்குப் போகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏதோ ஆதாயம் கிடைக்கிறது என்பது தெளிவு” என்று சொல்கிறார் மெர்ரிமேன்.

அமெரிக்காவின் வால்மார்ட் அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்? “பெரும்-பெட்டி கடை திறந்ததும் உலகே அழிந்து விடப் போவதில்லை என்று இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்டோன். காலணி அல்லது ஹார்ட்வேர் போன்ற தனிப்பட்ட கவனம் தேவைப்படும் கடைகள் பெரிய கடைகளுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டு தாக்குப் பிடிப்பதோடு செழித்து வளரக் கூட முடியும்.

ஐக்கிய உணவு மற்றும் வணிக தொழிலாளர்கள் பன்னாட்டு தொழிற்சங்கத்தின் ஆதரவில் செயல்படும் 'வால்மார்ட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது' அமைப்பின் பேச்சாளர் பென் வேக்ஸ்மேனின் கண்ணோட்டம் இவ்வளவு உற்சாகமாக இல்லை. “வாங்குபவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கான பாடம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொல்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத் துறையை திறந்து விட்டே தீருவோம் என்று இந்திய அரசாங்கம் அடம் பிடிக்க விரும்பினால், குறைந்தபட்சம் ஊழியர்களின் ஊதியமும் நலத்திட்டங்களும் மாற்ற முடியாத கல்லில் பொறிக்கப்பட்டதாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். “இந்தியாவின் சில்லறை வணிகத்தில் எந்த மாதிரியான தரத்தை அமைக்க வேண்டுகிறீர்கள் என்பதற்குத்தான் நாம் வந்து சேருகிறோம்" என்று அவர் சொல்கிறார். “அந்த தரங்களை ஏற்படுத்துவதை வால்மார்ட் கையில் விட்டு விட்டால், அதல பாதாளத்தில்தான் அவை போய் நிற்கும்”

கருப்புப் பணம்


கருப்புப் பணம் என்றால் என்ன? 

அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் கணக்கில் வராமல் புழங்கும் பணம் கருப்புப் பணம் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.

அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் எப்படி பணம் புழங்குகிறது? 

வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க, வருமானத்தை கணக்கில் காட்டாமல் தனிக் கணக்கில் எழுதிக் கொள்வார்கள். கணக்கில் காட்டும் வருமானத்துக்கு வரி கட்டினால் போதும். தனிக்கணக்கில் சேரும் பணம் கருப்புப் பணம்.

ஒரு நிறுவனம் முதல் 10 ஆண்டுகளுக்கு மத்திய விற்பனை வரி கிடையாது என்ற சலுகையுடன் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ் செய்யும் போது பரஸ்பரம் ஒத்துக் கொண்ட விலைக்கு மேல் விற்பனை வரி என்று குறிப்பிட்டு வசூலித்து கொள்கிறார்கள். அரசாங்கத்துக்குக் கட்டுவதில்லை.

'யாரும் கண்டு கொள்ளப் போதவில்லை, அப்படியே யாராவது விற்பனை வரி துறையிலிருந்து விசாரிக்க வந்தால் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சரி கட்டிக் கொள்ளலாம். மாதா மாதம் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும் போது எப்போதாவது அவருக்கு 50,000 கொடுத்தால் லாபம்தானே!'

ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் 'ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி இருக்கு. 33% வரி கட்டணும். நாம எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ அதில் 33% வருமான வரியாக கட்ட வேண்டியதுதான்' என்று சொன்னார். 'நாம் எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ' என்பதுதான் இங்கு குறித்துக் கொள்ள வேண்டியது. லாபத்திற்கு வரி இல்லை, 'காட்டும்' லாபத்துக்குதான் வரி.

இன்னொரு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சில கோடி ரூபாய் வருமானம் இருக்கும். உரிமையாளருக்கு அக்கவுண்டன்ட் என்ன லாபம் காட்டுகிறார் என்றே தெரியாது. 'ஆண்டு இறுதியில் இவ்வளவு லாபம் காட்டலாமா என்று கேட்பார், சரி என்று சொன்னால் அதை வைத்து கணக்கை முடித்து உரிய வரி கட்டி விடுவார்.'

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலேயே இப்படி என்றால் பெரிய நிறுவனங்களில் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சிஏக்களையும் வக்கீல்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தில்லாலங்கடி செய்ய முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது ஏன் நடக்க வேண்டும்? ஒருவர் நேர்மையாக தொழில் செய்ய முடியாதா? எல்லோரும் ஒழுங்காக வரி கட்டி விட்டால் பிரச்சனை இல்லைதானே!

இது கைதிகளின் சிக்கல் என்ற prisoner's dilemmaவுடன் தொடர்புடையது.

மென்பொருள் நிறுவனம் A என்று வைத்துக் கொள்வோம். மென்பொருள் செய்து அதை சந்தையில் விற்க போட்டி நிறுவனம் B என்று வைத்துக் கொள்வோம்.

நவீன முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுகளின் தந்தை எனப் போற்றப்படும் ஆதம் ஸ்மித் 'ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது, கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வைத்து விடுகிறது' என்று அடிப்படையை வரையறுக்கிறார்.

'ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நிறுவனமும் தம்மால் முடிந்த வரை தமது லாபத்தை வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்வதுதான் நாடு முழுவதும் முன்னேறுவதற்கான வழி' என்றுதான் சொல்லித் தருகிறார்கள்.

B நிறுவனத்தை நடத்துபவர்கள் நேர்மையாக லாபம் கணக்கிட்டு வரி கட்டுகிறார்கள் என்றும் A நிறுவனத்தினர் செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்து காண்பித்து குறைந்த லாபத்துக்குத்தான் வரி கட்டுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இதன் மூலம் A நிறுவனத்திடம் அதிக பணம் சேர்ந்து விடும். அதை

1. வாடிக்கையாளருக்கு விலை குறைத்து விற்க பயன்படுத்தலாம் - இதனால் போட்டியாளரை விட்டு எல்லோரும் விலகி A நிறுவனத்திடம் வந்து விடுவார்கள்.
2. ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் + மற்ற சப்ளையர்களுக்கு கூடுதல் விலை கொடுக்கப் பயன்படுத்தலாம் - இதன் மூலம் போட்டியாளர்களின் ஊழியர்களும் சப்ளையர்களும் அவரை விட்டு A நிறுவனத்திடம் வந்து விடுவார்.
3. மூன்றாவதாக, இப்படி மிச்சம் பிடித்த பணத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மூலதனமாக பயன்படுத்தலாம்

போட்டியாளர் நிறுவனம் B சிறிது காலத்தில் மூடப்பட்டு விடும்.

டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடான survival of the fittestபடி செயல்படும் சந்தை பொருளாதாரத்தில் A நிறுவனம்தான் fit ஆக இருக்கும். யார் ஆகக் கூடுதல் பணத்தை மிச்சம் பிடிக்கிறார்களோ அந்த வகை நிறுவனங்கள் மட்டும் சந்தையில் நிற்க நேர்மையான நிறுவனங்கள் அழிந்து போய் விடும். இதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை வழிகாட்டல்.

இந்த போட்டி போடுதலின் மூலம் மேலும் மேலும் புதிய வழிகளில் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக கூடுதல் பணம் சேமிக்க முயற்சிக்கும் போட்டி நடக்கும். புதிய பொருட்கள் அறிமுகம், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தல் என்ற போட்டிகளுடன் கூடவே உயிர் வாழ்வதற்கான முக்கியமான போட்டியாக இது இருக்கும்.

இந்தியாவில் கருப்புப் பணம்

அன்னிய காலனி ஆதிக்கத்தின் கீழ் ஆட்சியாளர்களின் சட்டத்துக்குட்பட்டு நாட்டின் வளங்களை சுரண்டிச் சென்றார்கள் பிரிட்டிஷ் முதலாளிகள். அதனால் அது கருப்புப் பணம் என்ற வரையறைக்குள் வராது. சுதந்திர அரசாங்கம் அமைந்த பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வரிகள் விதிக்கப்பட்டன. அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வளர்ச்சிப் பருவத்தில் இருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தையும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளும் போதுமானதாக இருந்தன. அவற்றின் மூலதனம் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு வர ஆரம்பிக்கவில்லை. அதனால் நாட்டின் கட்டுமானங்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. துறைமுகங்கள், சாலைகள், ஐஐடிகள், ஐஐஎம்கள் என்று பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டன. இதற்குத் தேவையான நிதி வரி விதிப்பின் மூலம் திரட்ட முயற்சிக்கப்பட்டது.

கார்பொரேட் வரி என்பது வருமானத்திலிருந்து செலவுகளை எல்லாம் கழித்து விட்டு வரும் லாபத்தின் மீது விதிக்கப்படுவது. வாங்கும் பொருட்களுக்கான செலவு+ஊழியர்களின் ஊதியம்+வங்கிக் கடன் கட்டுவது+ தனிக் கடன் கட்டுவது+எந்திரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் தேய்மானம் என்று பல வகை செலவினங்களை கழித்த பிறகு மீந்திருக்கும் லாபத்தில் பெரும்பகுதி மேலே சொன்ன நாட்டின் கட்டுமானங்களை இலவசமாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்திடம் வந்து சேருவது.

அப்போதைய உச்சக் கட்ட கார்பொரேட் வரி வீதம் 90% வரை இருந்தது. இவ்வளவு அதிகம் வரி இருப்பதால் வரி ஏய்க்கிறோம் என்று செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்துக் காண்பித்து, வரி ஏய்ப்பு செய்தன நிறுவனங்கள். கூடவே அன்னிய செலவாணி நெறிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவதும், ஏற்றுமதி செய்யப்பட்ட பணத்தை முழுமையாக கொண்டு வந்து விடுவதும் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் கணிசமான கருப்புப் பணம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பதுக்கப்பட்டது. ஒரு உதாரணம் : ஏற்றுமதி விலையில் 12.5% வரை வெளிநாட்டு முகவருக்கு முகமை கட்டணமாக கொடுக்கலாம் என்று சட்டம் சொன்னது. ஒரு நிறுவனம் வெளிநாட்டு முகவரிடம் பேரம் பேசி 2% கட்டணம் மட்டும் ஏற்படுத்திக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். சுவிட்சர்லாந்தில் தனது குழும நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, 12.5% டாலர் வருமானத்தை அந்த குழும நிறுவனத்துக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்து 2% உரிய முகவருக்கு அனுப்பும் ஏற்பாடு சட்டப்படி சரி. வெளிநாட்டு குழும நிறுவனம் சந்தைப்படுத்தல் போன்ற சேவைகளை செய்வதாக சொல்லிக் கொள்ளலாம். இப்படியாக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து வங்கியில் சேர்த்து விடலாம்.

இது மிகவும் மெலிதான, சட்டத்தை வளைத்து சேகரிக்கும் பணம். இன்னும் 'திறமையான' நிறுவனங்கள் இன்னும் பல மடங்கு பணத்தை வெளிநாட்டில் பதுக்கிக் கொள்ளலாம்.

இந்த பணம் அடுத்தடுத்த சுழற்சிகளில் உள்நாட்டில் சொத்துக்கள் வாங்கும் போதும், வெளிநாட்டிலிருந்து அன்னிய முதலீடாகவும், நாட்டுக்குள்ளேயே திரும்பி வரும்.

1. உதாரணமாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு வரவேற்பு அளிக்க ஆரம்பித்த பிறகு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு பணம் மௌரீஷியஸ் போன்ற வரி சொர்க்கங்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தன. என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தாபோல் மின்சார நிறுவனம் ஏற்படுத்த கொண்டு வந்த பணம் இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கியிருந்த பணம் என்று என்ரான் திவாலான பிறகு வெளியான ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

2. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அனுமதித்த பிறகு, participatory notes என்ற p நோட்டுகள்  மூலம் பணம் பங்குச் சந்தைக்குள் பாய்ந்தது. அதன் படி தனி நபர்கள் நிதி நிறுவனத்திடம் தமது பணத்தைக் கொடுத்து, தமது சார்பில் முதலீடு செய்யக் கோருவார்கள். இந்த p நோட்டுகளை முதலீடு செய்யும் நிதி நிறுவனத்தின் பெயர் மட்டும்தான் அரசுக்குத் தெரியும். அதன் பின் இருக்கும் நபர்களின் பெயர் அரசுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

3. இதைத் தவிர ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் அமைச்சகங்களை தமது கையில் போட்டுக் கொண்டு சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வது 1990களுக்குப் பிறகு நடக்கிறது. வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக காட்டி பிஎஸ்என்எல்லுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை 2000 கோடி அளவு ஏய்த்த பிறகு, சுமார் 50 கோடி ரூபாய் அபராதம் கட்டி அதை சரி செய்து கொண்டது ரிலையன்ஸ்

இந்த கருப்புப் பணம் என்பது கரன்சி நோட்டுகளாக அல்லது தங்கக் கட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது இல்லை. உள்ளூரில் கருப்புப் பணம் மஞ்சள் பைகளில் போட்டு கை மாற்றப் படுகிறது. அந்தப் பணத்தை யாரும் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துக் கொள்வதில்லை. அந்தப் பணத்தை அடுத்த பரிமாற்றத்தின் கருப்புப் பண பகுதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பணம் என்பது புழக்கத்தில் விடப்படுவதில்தான் அதன் சக்தியை பெறுகிறது.

தேர்தல் சமயங்களில் கைச்செலவுக்காக இந்தியாவை நோக்கிய இந்த பணப் பாய்ச்சல் பெருமளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் கட்சி பிரச்சாரத்துக்கான செலவுகள், வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் என்று அவிழ்த்து விடப் படுகிறது. மேலே சொன்னது போல கருப்புப் பணத்தை உருவாக்கி பயன்படுத்தத் தெரியாத கட்சி தேர்தலில் தோற்றுப் போய் அழிந்து போக கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் கட்சிதான் நிலைத்து நிற்கும்.

1990களுக்குப் பிறகு இந்த வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு வருமான வரி வீதத்தைக் குறைத்தார்கள், அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகளை தளர்த்தினார்கள். பெரா என்பது பெமா என்று பல் பிடுங்கப்பட்டது. அதனால் 1990களுக்குப் பிறகு கருப்புப் பணமாக பராமரிப்பதற்கு தேவை குறைய ஆரம்பித்தது. கருப்பை வெள்ளையாகவே வைத்திருக்க வாய்ப்புகள் நிறைய ஏற்பட்டன. பாரம்பரியமாக கருப்புப் பணம் என்று கருதப்பட்ட வழிகள் அடைபட்டு, அவை சட்டபூர்வமாகி விட்டன.

ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் கருப்புப் பணத்தின் அளவு பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஏன்? எப்படி?

மேலே நாம் பார்த்தது போல தனியார் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் போது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் பணம் சம்பாதிப்பது பிழைத்திருப்பதற்கான அடிப்படை தேவை ஆகிறது.

1990களுக்குப் பிறகு தாரளமயமாக்கம், தனியார் மயமாக்கம் மூலம் பல பொதுத்துறை செயல்பாடுகள் தனியார் முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டன. தொலைபேசித் துறை,  விமானப் போக்குவரத்துத் துறை, சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்குதல், சேவைத் துறை என்று தனியார் செயல்படும் அனுமதி வழங்கும் போது அவற்றுடன் தொடர்புடைய தேசத்தின் வளங்களும் தனியாரின் கட்டுப்பாட்டில் மேலாண்மையின் கீழ் போகின்றன.

உதாரணமாக தொலைபேசி துறையில் அலைக்கற்றை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த நிலம், சுரங்கத் துறையில் கனிம வளங்கள் என்று அது வரை அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் சொத்துக்கள் தனியாரின் மேலாண்மைக்கு விடப்பட்டன.

இப்படி கருப்புப் பணம் உருவாகி செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. 2G அலைக்கற்றையை எடுத்துக் கொள்வோம். உரிமம் பெறுவதற்கு அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக அதிகாரிகளுக்கும்/அமைச்சர்களுக்கும் கொடுத்து அலைக்கற்றை பெற்று விட்டால் அதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டலாம். கூடுதலாக கொடுப்பதற்கு சேர்த்து வைத்த கருப்புப் பணம் சுழற்சியில் கொண்டு வரப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் ஓட்டுகளை விலைக்கு வாங்க இறக்கி விடுகிறார்கள்.

சுரங்கத் துறையில் ஜனார்தன ரெட்டி குறைந்த உரிமத் தொகை செலுத்தி விட்டு அனுமதி பெறாமல் பெருமளவு இரும்புத் தாதுவை வெட்டி ஏற்றுமதி செய்கிறார். டன்னுக்கு குறைந்த உரிமக் கட்டணம் அரசுக்குச் செலுத்தி விட்டு பல மடங்கு அதிக விலையில் விற்கிறார். அது கூட போதவில்லை, அவருக்கு, அரசுக்குக் கணக்கே காட்டாமல் பெருமளவு வெட்டி விற்கிறார். அந்த கணக்குக் காட்டாமல் பெறும் வருமானம்தான் அவரது எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடு.

மேலே பார்த்தது போல சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிலம் மலிவு விலையில் ஒதுக்கீடு பெற்று கருப்புப் பணத்துடன் விற்பனை நடைபெறுவது. நாட்டின் இயற்கை வளங்களை கையாளுவதில்தான் கருப்புப் பணம் புழங்குகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

$1.4 டிரில்லியன் சுவிஸ் வங்கிகளில். 25 லட்சம் கோடி ரூபாய் என்று பல விதமான கணக்குகள் சொல்லப்படுகின்றன.

கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று அண்ணா ஹசாரே மைதானங்களிலும், அத்வானி ரதத்திலும், நாடாளுன்றத்திலும் பேசுவதன் சாத்தியங்கள் என்னென்ன? 

இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் முழுவதையும் நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு வரியே போட வேண்டாம். ஒவ்வொரு கிராமத்துக்கும் இத்தனை கோடி ரூபாய் பிரித்துக் கொடுத்து விடலாம், அல்லது ஒவ்வொரு குடிமகனுக்கும் இத்தனை லட்ச ரூபாய் கொடுத்து விடலாம் என்று பேசுகிறார்கள். இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்.

மேலே நாம் பார்த்தது போல இந்த கருப்புப் பணம் இருப்பது நிதர்சனமான உண்மை. அது வெள்ளை பணப் புழக்கத்தை விட சில மடங்கு அதிகமாக இருப்பதும் உண்மை. ஆனால் அது என்னென்ன வடிவில் இருக்கிறது. கரன்சிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை.

அவை தொழிற்சாலைகளாக, அம்பானியின் 400 கோடி அடுக்கு மாடி கட்டிடமாக, பெரு நிறுவன உரிமங்களாக, தங்க நகைகளாக, வெளிநாட்டு கடன் பத்திரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் கருப்புப் பணத்தை மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே அல்லது அத்வானி விரும்பினார், முகேஷ் அம்பானி அல்லது ரத்தன் டாடாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைப்பது என்றுதான் பேச வேண்டும்.

அப்படிப் பேசாமல் கருப்புப் பணம் என்று பொதுப்படையாக பேசுகிறார்கள். நாமும் ஏதோ மாயம் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கருப்புப் பணம் நமது வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

பணம் என்றால் என்ன? 

பணம் என்பது எல்லோரும் கையாளும் ஒன்று. பிறந்த பச்சிளம் குழந்தையின் கையில் 100 ரூபாய் நோட்டைத் திணிக்கும் ஒருவர், 'பாருங்க, எவ்வளவு கெட்டியா பிடிச்சிருக்கு, நிறைய பணம் சம்பாதிக்கும் வளர்ந்து' என்று சொல்வார். உலக அறிவே இல்லாத குழந்தையைக் கூட பணத்துடன் இணைத்துப் பேசுவது நமக்கு இயல்பாக தோன்றுகிறது.

பணம் அவ்வளவு இயல்பானதா? இல்லை, பணம் என்பது இயற்கையில் உருவாகவில்லை. அது மனித குலம் கண்டுபிடித்த மகத்தான ஒரு கருவி. எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று மிகச் சுருக்கமாக பார்க்கலாம்.

இனக்குழு சமூகங்களில் அல்லது நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்திருந்தார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவை உற்பத்தி செய்ய காய் கனிகளைத் தேடிப் போக வேண்டும் அல்லது விலங்குகளை வேட்டையாட வேண்டும். மிக எளிமையான பிற்போக்கான காலத்தில் பசி எடுத்ததும் ஒரு உந்துதலால் இரையைத் தேடிப் போயிருப்பார்கள், கிடைத்த உணவை சாப்பிட்டு உடலுக்கு சக்தியை ஈட்டியிருப்பார்கள். அந்த சக்தியை அடுத்த நாள் பசிக்கு உணவு தேடப் பயன்படுத்தியிருப்பார்கள்.

உழைப்பு -> விளை பொருள் -> நுகர்வு -> உழைப்பு -> விளைபொருள் என்று இந்த சுழற்சி நிகழ்கிறது. இதுதான் இயற்கை மனிதனுக்குக் கொடுத்த உள்ளுணர்வு சார்ந்த நடவடிக்கை.

இதில் முக்கியமான பகுதி, தனது உழைப்பால் விளைந்த பொருளை நுகர்வதன் மூலம் அடுத்த நாள் உழைப்புக்கான சக்தியை பெறுகிறார். உடலுக்குத் தேவையான அளவுக்குத்தான் உழைத்து விளைபொருள் ஈட்டியிருப்பார். ஈட்டியதை தானே நுகர்ந்து அடுத்த நாள் உழைப்புக்கு சக்தியாக மாற்றிக் கொண்டிருப்பார்.

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு விளக்கம்.

ஒருவர் வேட்டையாட போகிறார் - ஒரு நாள் வேட்டையாடி 2 முயல்கள் கொண்டு வருகிறார். ஒருவர் பழம் பறிக்கப் போகிறார், ஒரு நாள் பழம் பறித்து 10 பழங்கள் எடுத்து வருகிறார். இரண்டு பேருமே தமக்குத் தேவையான சக்திக்கு ஏற்ற உணவை கொண்டு வருகிறார்கள். தினமும் முயல் சாப்பிட்டு சலித்த முதலாமவர் இரண்டாமவரிடம் பழத்தை பரிமாறிக் கொள்ள விரும்புகிறார். எப்படிப் பரிமாறிக் கொள்வார்கள்?

2 முயலுக்கு 10 பழங்கள் என்ற வீதத்தில்தான். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கான சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஒரு பக்கம், நீ ஒரு நாள் வேலை செய்து இதை ஈட்டினாய், நானும் அதே உழைப்பில் அதை ஈட்டினேன் அதனால் இரண்டும் சமம்.

அதாவது பரிமாற்றம் நடப்பது குறிப்பிட்ட பொருளை ஈட்டுவதற்கு செலவிட்ட உழைப்பின் அளவைப் பொறுத்தே இருந்தது. இதுதான் பண்டமாற்று என்பது.

நாகரீகமும், பகுத்தறிவும், நுட்பமும் வளர வளர  உணவு மட்டுமில்லாமல், போர்த்திக் கொள்ள விலங்குகளின் தோல்கள், அலங்கரித்துக் கொள்ள எலும்புகள் என்றும் பொருட்கள் உருவாகியிருக்கும். ஒரு ஆட்டின் தோலை பதப்படுத்தி உடையாக தயார் செய்ய 5 நாட்கள் உழைப்பு பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மாற்றாக அந்த மனிதருக்கு 5 நாட்கள் உயிர் வாழத் தேவையான (அதாவது 5 நாட்கள் உழைப்பில் உருவான) பழங்கள் அல்லது இறைச்சி கொடுத்திருப்பார்கள்.

1 பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் = 10 முயல்கள் = 50 பழங்கள்.

பதப்படுத்தப்பட்ட தோல் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் பழங்களோ, முயல்களோ உடனேயே நுகரப்பட வேண்டும். காலப் போக்கில் 10 முயல் வைத்திருப்பவர் அதற்கு மாற்றாக பெற்ற பதப்படுத்தப்பட்ட தோலை கொடுத்து விட்டு மூன்றாமவரிடம் 50 பழங்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது ஆட்டுத் தோலுக்கு இடை மதிப்பு ஏற்பட்டு விட்டது.

ஒருவரிடம் 10 பதப்படுத்தப்பட்ட தோல்கள் இருந்தால், அவருக்கு 50 நாட்களுக்கான உணவு உத்தரவாதமாக இருக்கிறது. ஒவ்வொரு தோலை விற்றுக் கிடைக்கும் உணவு மூலம் 5 நாட்கள் உயிர் வாழலாம். உணவு பழமாகவோ, இறைச்சியாகவோ இருக்கலாம். ஒரு நாள் கடினமாக உழைத்து வேடைடயாடி 20 முயல்களை பிடித்துக் கொண்டு வந்த ஒருவர் அதற்கு மாற்றாக 2 தோல்களை வாங்கி தனது சேமிப்பாக வைத்துக் கொள்வார்.

இது போல சீக்கிரம் கெட்டுப் போகாத, ஆனால் பரிமாற்ற மதிப்பு (நுகர்வு+உழைப்பு) கொண்ட பொருட்கள் இடைத் தரகர்களாக செயல்பட ஆரம்பித்தன.

50 கிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய ஆகும் உழைப்புக்கு ஈடான மதிப்பு தங்க நாணயத்துக்கு பரிமாறப்பட்டிருக்கும். ஆனால் காகித பணம், வங்கி வைப்புகள், பங்குச் சந்தைகள், நவீன நிதி மூலதன கருவிகள் மூலம் பணம் என்பது உழைப்பினால் உருவாகாமலே சந்தையில் வெளிவிடப்படுகிறது.

இதனால் உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் பணம் மதிப்பை இழந்து விடுகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட 2 மடங்கு கருப்புப் பணம் புழங்குகிறது என்றால், ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதி மதிப்புதான் அவருக்குப் பயன்படும் பொருட்கள் வாங்க பயன்படுகிறது என்று பொருள். கருப்புப் பணத்தின் புழக்கத்தால் விலைவாசி, 3 மடங்காக உயர்ந்திருக்கும்.

புதன், நவம்பர் 23, 2011

சென்னை - வேலூர் பேருந்து கட்டணம் - ஒரு சிறு விவாதம்

வேலூர் 102 விரைவுப் பேருந்து நிற்க ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார் நீல நிற சீருடை அணிந்த, கண்ணாடி போட்ட கொஞ்சம் வயதான நடத்துனர். இரண்டு பேருந்துகள் தாண்டி குளிர் சாதன பேருந்தும் கண்ணில் பட்டது. கட்டணங்கள் ஏறியிருக்கும் நிலையில் அதில் போவதெல்லாம் கட்டுப்படி ஆகாது.

ஒரு குடும்பமாக 102 விரைவு வண்டி நடத்துனரிடம் "எவ்வளவு டிக்கெட்" என்று பெண் ஒருவர் கேட்டார்.

"81 ரூபாய்" - அதிர்ச்சி.

நாளிதழில் 40 ரூபாய் வேலூர் கட்டணம் 68 ரூபாய் என்று போட்டிருந்தது. அது சாதாரண பேருந்தில் இருக்கலாம். அப்படி ஒரு பேருந்து ஓடுவதாகவே தெரியவில்லை. பொதுவாக கிடைப்பது 46 ரூபாய் வாங்கும் விரைவுப் பேருந்துகள்தான். அது இப்போது 81 ஆக்கியிருக்கிறார்கள்.

"இது என்னங்க அநியாயம். இப்படி ஏத்திட்டாங்க"

"என்னம்மா 10 வருஷமா ஏத்தலை, தங்க விலை எவ்வளவு ஏறியிருக்கு, டீசல் விலை எவ்வளவு ஏறியிருக்கு, அதான் இதுவும் ஏறுகிறது"

"உங்களுக்குத் தெரியாததா, போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்தாலே போதும். டயர் வாங்க, உதிரிப் பாகம் வாங்க என்று எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள். பழைய கட்டண வீதத்திலும் தனியார் பேருந்துகள் லாபத்தில்தானே ஓடின. அவங்க கொள்ளை அடிப்பதற்கு மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்"

"இப்படி அநியாயம் பண்றீங்களே!"

"இவங்களை ஒன்னும் சொல்ல முடியாதுங்க, இவங்களும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். மேலே இருக்கிறவங்கதான் கொள்ளை அடிப்பவர்கள்"

குடிக்காத 12 மணி நேரம் உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்

"பேருந்து கட்டணம் உயர்ந்ததால் உங்களுக்கு வியாபாரம் அதிகரிக்கத்தான் செய்யும். பெரிய அளவில் இல்லா விட்டாலும், மக்கள் ஆட்டோ பிடிக்க யோசிக்கும் தருணங்கள் அதிகமாகும்"

"அப்படியா! எவ்வளவு ஏத்தியிருக்காங்க. காலையில் விலை ஏறியிருக்கு என்று தலைப்புச் செய்தி பார்த்தேன், ஆனா விபரம் தெரியாது."

கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவருக்கு எப்படி விபரம் தெரியாமல் இருக்கிறது.

"கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஏறி விட்டதுங்க, வடபழனியிலிருந்து சிறுசேரி செல்ல குளிர் சாதன பேருந்தில் 33 ரூபாய் இருந்தது 50 ரூபாய் ஆகி விட்டது. வேலூருக்கு 40 ரூபாய் இருந்தது 72 ரூபாய் ஆகி விட்டது "
(எக்ஸ்பிரஸ் பேருந்தில் 46லிருந்து 81 ஆக உயர்ந்தது பின்னர் தெரிந்தது)

"ஆமா, வேலூரிலிருந்து எங்க அக்கா பேசினாங்க. எப்போ சென்னை வருகிறீர்கள் என்று கேட்டேன். இப்போ பஸ் கட்டணம் எல்லாம் ஏறி விட்டது. வர முடியாது, குறைந்த பிறகுதான் வருவேன் என்று சொன்னார்."

"நான்கு பேர் கொண்ட குடும்பம் வேலூரிலிருந்து சென்னை வந்தால் போக வர கூடுதல் செலவு 200 ரூபாய் ஆகி விடும். கஷ்டம்தான். உங்க ஆட்டோ சங்கம் எல்லாம் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இதற்கு போராட வேண்டும். முன்பெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் நினைத்தா நகரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியும். இப்போ போராட்டங்களை இல்லாம போச்சு. "

"அப்படி யாரும் யோசிக்கிறதில்லைங்க, ஒரு நாள் வண்டி ஓட்டினா வண்டிக்கு வாடகை கட்டலாம், பெட்ரோல் மற்ற செலவு போக வீட்டுக்கு காசு கொண்டு கொடுக்கலாம். ஸ்டிரைக் பண்ணினா அதுக்கு மண் விழுந்து விடும். எங்க சங்கம் இருக்கு, வருஷத்துக்கு ஏதோ சந்தா கட்டுகிறோம் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு. அவர்களிடம் சொல்லி இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும்"

"இப்படியே போய்க் கொண்டிருநால் என்ன ஆகும்? மக்களுக்கு அவங்க வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும் போதுதான் போராடும் எண்ணம் வருகிறது. கூடங்குளத்தில் பாருங்க, மக்களுக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. நம்ம குழந்தை குட்டிகள், பேரக் குழந்தைகள் வாழ்க்கைக்கு அபாயம் என்று உணர்ந்ததும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். மீனவர்கள் அதிகாலை மீன் பிடிக்கப் போய் விட்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம்"

"அப்படியா அது என்ன போராட்டம்? ஏன் போராடுகிறார்கள்?"

விபரங்கள் சொல்லி விட்டு, "எனக்கு ஆச்சரியமா இருக்கு, நீங்க நாட்டு செய்திகளே தெரியாம இருக்கீங்களே என்று"

"ஆமா சார் எனக்கு நேரமே கிடைப்பதில்லை, 10 மணிக்கு ஆட்டோ எடுத்தா இரவு 10 மணி வரை ஓட்டுவேன். அப்புறம் வீட்டுக்குப் போய் படுத்து தூங்கினா காலையில் 8.30க்குத்தான் எழுந்திருக்க முடியும். அவ்வளவு உடம்பு வலியும் அசதியும் இருக்கும். மற்ற சிலரைப் போல நான் குடிப்பதில்லை. 10 மணிக்கு திரும்பவும் வண்டி எடுக்கணும்.


இரண்டு பசங்க, ஒரு குழந்தை 2ம் வகுப்பு, இன்னொரு குழந்தைக்கு 3 வயது. மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்குப் போவதில்லை. நம்ம குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, எதிர்காலத்துக்கும் திட்டமிடணும் என்றால் உழைத்தால்தான் ஆகும்.

2ம் வகுப்பு குழந்தைக்கு 1500 ரூபாய் பீஸ் வாங்கினாங்க. போகப் போக அதிகமாகும் என்று தோணுது. ஒரு குழந்தை மட்டும்தான் இருக்கணும் என்று தோன்றுகிறது. அப்போதான் சமாளிக்க முடியும்."

"இந்த கட்டணம் இன்றைய நிலவரத்துக்குக் குறைவுதான். போகப் போக திடீரென்று அரசு உதவு பெறும் பள்ளிகள் இனிமேல் சுயநிதி பள்ளிகளாக மாற வேண்டும் என்று யாராவது சொன்னாலும் சொல்லி விடலாம். அப்போ கட்டணம் எல்லாம் பல மடங்கு ஏறி விடும்"

"ஆமா சார், நினைச்சாலே பயமா இருக்கு. பாடுபட்டு பிழைப்பதில் கஷ்டம் வர வர அதிகமாகிக்கிட்டே போகிறது. நம்ம குழந்தைகளை எந்த மாதிரி உலகத்தில் விட்டு விட்டுப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தால் மனம் கலங்குகிறது"

"குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் மக்கள் வெளியில் வருவது மாலையில் குறைந்து விடும்" என்று அவர் குறிப்பிட்டார்.

"நீங்க எந்த பகுதி"

"மண்ணடி"

"ஓ, மண்ணடியா! இப்போதான் ஓட்ட ஆரம்பிக்கிறீங்களா, இதை முடித்து விட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதானா"

"காலையில் இருந்தே ஓட்டுகிறேன். 10 மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போகணும். கோயம்பேடு போய் போவேன்".

பிஎஸ்என்எல்லுக்கு மாற வேண்டியதுதான்!

பயணம் செய்வது அதிகமாகி விட்டதால், கம்பியில்லா இணைய இணைப்பு கருவி வாங்கலாம் என்று முடிவு. ஏர்டெல், ரிலையன்ஸ், எம்டிஎஸ் என்று பரிந்துரைகள் கிடைத்தன, யாரும் பிஎஸ்என்எல் பெயரையே எடுக்கவில்லை. 


முயற்சித்து பார்க்கலாம் என்று 3G டேடா கார்டு பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்டேன். ஒரு தொலைபேசி எண் தருகிறேன் என்று மொபைல் எண் (9486109966) சொன்னார். அவர் பெயர் கிருபாகரன் என்றும் குறித்துக் கொள்ளச் சொன்னார். 

வெளியில் வந்ததும் எண்ணை அழைத்தேன். 
'3G டேடா கார்டு வாங்க வேண்டும். அது பற்றின விபரங்கள் வேண்டும். என்ன செலவாகும்? மாதாந்திர கட்டணம் எவ்வளவு? வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'


இளமையான ஒரு குரல் பதில் சொன்னது.


'2,900 ரூபாய் ஆகும் சார், அதிலேயே 1 GB யூசேஜ் சேர்த்து கொடுத்து விடுவோம். கருவியில் விலை 2,100 ரூபாய், ஆக்டிவேசன் சார்ஜ் 110 ரூபாய்' என்று பட்டியலிட்டார். '7.2 mbps வேகத்திலான மோடம் தருவோம். 1 GBக்கு 423 ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் ரோமிங் பிரீ'

'எந்தெந்த ஊரில் பயன்படுத்தலாம். எல்லா ஊரிலும் வருகிறதா?'

'நீங்க எந்தெந்த ஊர்களில் பயன்படுத்துவீர்கள்? இந்தியா முழுவதும் எல்லா இடத்திலும் சேவை உண்டு'

'மெயினா வேலூரிலும் சென்னையிலும் வேண்டும்'

'சென்னையில் எந்தெந்த இடங்கள்?'

'வளசரவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர். இன்னொரு விஷயம். நான் பயன்படுத்துவது லினக்ஸ் கணினி. அதில் இந்தக் கருவி வேலை செய்யுமா என்று பார்க்க வேண்டும். என்ன மாடல் என்று சொன்னால் தேடிப் பார்ப்பேன்'

'7.2 mbps மோடம், நீங்க லேப்டாப்பை கொண்டு வாங்க, செட் செய்து விடலாம். நீங்க மதியம் 2 மணிக்கு மேல் வாங்க, இப்போ நான் வெளியில் ஒரு பயிற்சியில் இருக்கிறேன். மதியத்துக்கு மேல் வாங்க'

'பணம் செக்காக கொடுக்கலாமா, கேஷ்தான் தர வேண்டுமா?, என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?'

'கேஷ்தான் சார், உங்க ஐடி புரூப், ஒரு போட்டோ அவ்வளவுதான். அதில் இருக்கும் முகவரியையே எடுத்துக் கொள்ளலாம். தலைமை தபால் நிலையம் அருகில் வந்து விடுங்க, பழைய பேருந்து நிலையம் தாண்டி ஊரிஸ் காலேஜ் எல்லாம் போகும் வழியில்'

நினைத்ததை விட வேகமாக நடக்கிறதே என்று வீடு வந்து சேர்ந்தேன். இணையத்தில் பிஎஸ்என்எல் 3G அட்டை பற்றி தேடினேன். லினக்சில் எப்படி பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை வட்டத்தில் ஒருவர் ஒரு பக்க வழிகாட்டி இணையத்தில் போட்டிருந்தார், பிஎஸ்என்எல் அதிகாரிதான். கர்நாடகா வட்டத்தில் ஒரு பெரிய கையேடு பிடிஎப் ஆகி வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர இந்தியா பிராட்பேண்ட் பாரம், இன்னொரு வலைப்பதிவில் விபரங்கள் கிடைத்தன. இணைப்பு வேகம் எல்லோருக்கும் நன்றாக கிடைக்கிறது. லினக்சில் இயக்குவதற்கான வழிகளும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன. wvdial நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த விபரங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். மதியம் போகும் போது பயன்படலாம்.

2 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார் என்று உடனேயே புறப்பட்டு விடவில்லை. 2.30க்கு அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.

'என்ன சார், வருவதாகச் சொன்னீங்களே, இன்னும் வரவில்லையே'. ஆச்சரியமாயிருந்தது, இவ்வளவு வாடிக்கையாளர் சேவையா!

உடனேயே புறப்பட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. 'உங்க ஐடி புரூபில் இருக்கும் முகவரியை சொல்லுங்க சார்' என்று குறித்துக் கொண்டார். 'நீங்க எப்படி வருவீங்க பைக்கிலா' என்று கேட்டு பேருந்து என்று சொன்னதும், 'ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க, அங்கிருந்து அழைத்தால் நானே வந்து அழைத்துப் போகிறேன்'. இவர் உண்மையிலேயே பிஎஸ்என்எல் ஊழியர்தானா அல்லது வேறு ஏதாவது முகவரா என்று சந்தேகமே வந்து விட்டது.

போவதற்கு முன்பு wvdial நிறுவிக் கொள்வது என்று நிறுவிக் கொண்டேன். மடிக்கணினி, அதற்கான வயர், போட்டோ, காசோலை ஒன்றும் கூட எடுத்துக் கொண்டேன். ஓட்டுனர் உரிமம் நகல் எடுப்பதற்கு வழியில் முடியவில்லை.


பழைய பேருந்து நிலையம் தாண்டிய பிறகு ராஜா தியேட்டர் நிறுத்தம் இறங்கி, தொலைபேசினால்  சாலையைக் கடந்து தபால் நிலையம் வரச் சொன்னார். தபால் நிலையம் அருகில் வந்து திரும்பவும் அழைத்தேன் அவரை எங்கு தேடுவது. தபால் நிலையத்துக்கு பின்புறம் பிஎஸ்என்எல் ஆபீஸ் இருக்கிறது.

கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகுடன், உருண்டையான முகத்துடன் சுமார் 40+ வயதுள்ளவர் வந்தார். நேர்த்தியான சீருடை அணிந்திருந்தார். மகிழ்ச்சியாக கை குலுக்கினார். வாடிக்கையாளர் மையத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று சொன்னார். அருகிலேயே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டை நகலுக்கு நகலகத்துக்குப் போய் வந்தேன். காத்திருக்கச் சொன்ன இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவரது அலுவலகம் அங்குதானாம்.

அந்த இடத்தில் நிறைய குரங்குகள் உலாவிக் கொண்டிருந்தன. 5-10 நிமிடங்களில் வந்தார். 'என்ன சார், இங்கேயே உட்கார்ந்துட்டீங்க' என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனார். பெரிய, பழைய கால அலுவலக கட்டிடம். ஒரு அறையை சாவி கொண்டு திறந்தார். உயரமான கூரையுடன் அறை. நடுவில் மேசை, ஒரு தொலைபேசி. சுவர்களில் பிஎஸ்என்எல் போஸ்டர்கள். இப்போது சந்தேகமாக இருந்தது, இவர் உண்மையில் பிஎஸ்என்எல் ஊழியர்தானா?

அவரது நட்பான அணுகுமுறையும் பேச்சும் பிஎஸ்என்எல் பாணியில் இல்லா விட்டாலும், உடை, முகபாவம், அறையின் எளிமை தனியார் நிறுவனமாக இருப்பதை ரூல் அவுட் செய்தது. ஒரு சின்ன அட்டை கவரில் இருந்து கருவியை எடுத்தார். விண்ணப்ப படிவத்தை நிரப்பச் சொன்னார். எனது தொலைபேசியை வாங்கி அதில் சிம்மைப் போட்டு ஆக்டிவேசன் செய்ய ஆரம்பித்தார்.

இந்த சிம்மை தொலைபேசி கருவியில் போட்டு பேசவும் பயன்படுத்தலாம், 3G கருவியில் போட்டு 3G எண்ணாகவும் பயன்படுத்தலாம், கணினியில் டேடா கார்டை போட்ட பிறகு மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவையும் செய்யலாமாம்.

விண்ணப்ப படிவத்தை நிரப்பி முடிப்பதற்குள் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் நிலவரத்தை குறுஞ்செய்தியாகக் காட்டினார். அதன் பிறகு சிம் அட்டையை எடுத்து கருவியில் போட்டு மடிக்கணினியில் இணைக்கச் சொன்னார். நான் கொண்டு போயிருந்த வழிகாட்டி கோப்புகளின் படி wvdial.conf கோப்பை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். 'அதெல்லாம் வேண்டாம் சார், தானாகவே செட் ஆகி விடும்' என்று சொன்னார்.

'லினக்சுக்கும் அப்படி மென்பொருள் செய்து விட்டார்களா என்ன, பரவாயில்லையே!' என்று சொல்லிக் கொண்டே கருவியை வாங்கி சொருகிறேன். ஓரிரு நிமிடங்களில் நெட்வொர்க் மேனேஜரில் அடையாளம் காணப்பட்டு சின்னம் காட்டியது. அதன் மீது கிளிக்கினால், enable mobile broadband இருந்தது, அதை கிளிக் செய்து விட்டு wvdial ஓட விட்டால் டிவைஸ் இல்லை என்று வந்தது. டிவைஸ் பெயரை மாற்ற வேண்டும்.

ACM என்று டிவைஸ் செட் ஆகியிருந்தது. நெட்வொர் மேனேஜரில் அதைப் பார்த்து wvdial.confல் மாற்றி இயக்கினால் இணைந்து விட்டது.

அருகில் கிருபாகரன் காத்திருந்தார். 'ஒண்ணும் செய்யாதீங்க சார், காத்திருங்க, அதுவே வரும். நான் விளக்கமாகச் சொல்கிறேன்'  என்றார். நான் கூகுள் குரோமை இயக்கி இணையத்தில் இணைத்துக் காட்டியதும் நம்பவே முடியவில்லை. 'எப்படி சார், சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாம கனெக்ட் ஆகவே செய்யாதே, இது என்னெவென்று புரியவில்லையே' என்றார்.

'அதுதான் நான் முதலிலேயே சொன்னேன். இதில் இருக்கும் சாப்ட்வேர் விண்டோசுக்கு எழுதியிருப்பார்கள், லினக்சின் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நான் இணையத்தில் இருந்து எடுத்து வந்த முறையைப் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன்' என்று விளக்கினேன்.

'அந்த சாப்ட்வேர் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது, கணக்கில் மீதி விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?' கர்நாடகா பிஎஸ்என்எல் கொடுத்திருந்த கையேட்டில் லினக்சில் சாப்ட்வேர் நிறுவுவதற்கான வழி கொடுக்கப்பட்டிருந்தது. நான் நிறுவிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

'சிம் கணக்கில் குறைந்த பட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அதை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். பிரவுசிங்குக்கு ரீசார்ஜ் செய்யலாம். 1GB - 403 ரூபாய், 0.5 GB - 202 ரூபாய், 25 MB - 101 ரூபாய், 5GB - 751 ரூபாய், 2GB - 716 ரூபாய் எல்லாமே 1 மாத வேலிடிட்டிதான். 5GB கட்டணம் டிசம்பர் 31 வரை ஆபர்தான். அதற்கு பிறகு வேறு ஆபர் வரலாம். சிம் எண 9445040622. ஆரம்ப ஆக்டிவேஷனில் 200 MB பயன்பாடு உள்ளடங்கியிருக்கிறது. அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.'

'வெளிப்படையாக சொல்லப்போனால், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் உங்களிடம் பேசினேன். இப்போ இணையத்தில் இணைந்தாகி விட்டது. பிஎஸ்என்எல்லில் இப்படி ஒருவரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.' முகத்தில் உணர்ச்சிகளை அதிகம் காட்டாத மனிதர். கேட்டுக் கொண்டார்.

'எங்களை எப்படியாவது அழித்து விடணும் என்று மேலிடத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் சார். தனியார் நிறுவனத்துக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு நார்ம்ஸ் என்று அதே வசதியை மறுக்கிறார்கள். ஐடியா செல்லுலர் காரன் மைக்ரோவேவ் பயன்படுத்தி இணைப்பு தருகிறான். நாங்கள் அப்படி செய்ய நார்ம்ஸ் அனுமதிக்காது, அது மனித உடலுக்குக் கெடுதியாம். ஆனால் தனியார் செய்தால் கெடுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் செய்யணும் சார்'

'நிச்சயம் செய்கிறோம் சார். நானும் நான்கு நண்பர்களுக்கு நிச்சயம் இது பற்றி சொல்வேன்'

அவரது விசிட்டிங் கார்டு தந்தார். 'எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார், கார்டு கொடுத்தாச்சு என்று நாங்கள் பேசாம இருக்க மாட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் பேசுங்க. உங்களை மாதிரி பெங்களூரில் வேலை பார்க்கும் ஒருத்தர் வாங்ககிக் கிட்டு போனார். நாட்றாம்பள்ளி வரை காரில் இணைப்பு தொடர்ந்து இருந்ததாம். பெங்களூர் போய் பேசினார்' என்று விபரங்கள் சொன்னார்.

புறப்படும் போது 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார். சரி என்று வெளியில் வந்தால், அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு டீக்கடையில் 2 டீ சொன்னார். நன்றாக இருந்தது. என்னை காசு கொடுக்க அனுமதிக்கவில்லை. 'அவர் வாங்க மாட்டாரே' என்று தானே கொடுத்து விட்டார். 


வேலூரிலிருந்து வாலாஜா வரை பயணத்தில் பேருந்தில் பயன்படுத்த முடிந்தது, வாலாஜாவில் தொழிற்சாலையிலும் இணைப்பு கிடைத்தது. வேலூரில் வேகம் சிறப்பாக இருந்தது. அடுத்த 10 நாட்கள் பயன்படுத்திப் பார்த்து உறுதியான மதிப்பீடு செய்யலாம். 

வியாழன், நவம்பர் 03, 2011

ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?

http://www.jeyamohan.in/?p=21829

சிறு வயதில் கடவுள் நம்பிக்கையுடன், 'மாலையில் 6 மணி அடித்தால் விளக்கு வைத்து சாமி பாட்டு படிக்க வேண்டும்' என்ற பக்தி ஒழுக்கத்திலும், ரமண மகரிஷியின் 'நான் யார்' என்ற தியான முறையை கடைப்பிடித்த அப்பாவின் ஆன்மீகத் தேடலின் தடயங்களாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி முதல், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றிய புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்த சூழலில் வளர்ந்தவன் நான். பகவத் கீதையின் சுலோகங்களை படிக்க பல முறை முயற்சி செய்ததும், ராஜாஜியின் ராமாயணம்,மகாபாரதத்தை பல முறை படித்ததும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் போது ஜே கிருஷ்ணமூர்த்தியின் 'எண்ணங்களின் குவியல்தான் நான்' ஆதலால் அறிந்ததினின்றும் விடுதலை பெற்று வாழ்வதுதான் ஆன்மீக வாழ்க்கை என்று படித்துப் படித்து புரிந்து கொள்ள முயன்றேன். அதன் பிறகு ஓஷோவின் வாழ்க்கையை கொண்டாடும் உரைகளையும், கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும் படித்து பிரமித்திருக்கிறேன். 

இவை அனைத்திலும் ஊடாக நெருடிய விஷயம், ஆன்மீக அக வாழ்க்கைக்கும், லௌகீக புற வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு. 

ரமண மகரிஷிதான் மனித வாழ்க்கையின் வழிகாட்டி என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும் ஆன்மீகம் பரவும் போது மலையில் குடிசைகளில் எளிமையாக சமைத்து விலங்குகளுடன் வாழ்வதுதான் மிஞ்சுமா என்றும், ஓஷோவின் போதனைகள்தான் ஆன்மீகத்துக்கு இட்டுச் செல்பவை என்று ஏற்றுக் கொண்டால் எல்லோரும் ஆசிரமத்தில் மூன்று வேளை தியானம், ஆனந்த நடனம் என்று வாழ ஆரம்பித்து விட்டால் வெளி உலகில் நாம் பள்ளியில் படிக்கும் அறிவியலுக்கும், நிறுவனத்தில் பயன்படுத்தும் உற்பத்தி இயந்திரங்களுக்கும், இன்று தட்டச்சிக் கொண்டிருக்கும் கணினிகளுக்கும் இடம் இல்லாமல் போய் விடும். ஓஷோவின் ஆசிரமத்திற்கு சாப்பிட உணவு கூட அந்த அமைப்பில் இல்லாதவர்களிடமிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது (அவர்களும் ஆன்மீக வழியில் இறங்கி விட்டால் என்ன ஆகும்?). 

இதுதான் அடிப்படை உறுத்தல்!

அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஏதாவது ஒன்றை மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. நாள் முழுவதும் அறிவியல் வழியில் வேலை செய்து விட்டு, மாலையிலும் வார இறுதியிலும் ஆன்மீக வழியில் வாழ்வது வாழ்க்கையை ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட இரு துருவங்களில் இழுப்பதாகப் பட்டது. 

இயற்கையாகவே ஏதாவது (திரைப்படம் எடுத்தல், மென்பொருள் எழுதுதல், நாற்காலி செய்தல், வண்டி ஓட்டுதல்) புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று உந்துதலை உணர முடிகிறது. சக மனிதர்களோடு சமூகமாக வாழ்வது இன்னொரு அடிப்படை பண்பாக தோன்றுகிறது. ஆன்மீக வழியில் இந்த இரண்டையுமே மறுக்க வேண்டியிருக்கிறது. 

இப்படி இருக்கையில் ஆன்மீகமா, அறிவியலா என்ற கேள்வி வரும் போது அறிவியல் என்று தேர்ந்தெடுப்பது சரியாகப் படுகிறது. ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?

புதன், அக்டோபர் 19, 2011

மாயைகள்


இந்து மத ஞான மரபு இல்லாத சீனா எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்' என்ற பதற்றம் எப்படிப்பட்ட ஊகங்களுக்குக் கொண்டு விடுகிறது!!

//சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.//

சீனாவின் கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல தொழில்பேட்டைகளுக்கும் குடியிருப்பு நகரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய் வந்திருக்கிறேன். (1997-2001). அப்படிப்பட்ட கட்டுப்பாடு அரசியல் காரணங்களுக்காக திபெத், ஷின்ஜியாங் போன்ற பகுதிகளில் (அங்கெல்லாம் தொழில் வளர்ச்சி கிடையாது) இருக்கலாம்.

//அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள்.//
இல்லை

//மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது//

ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் 'சட்ட விரோதமாக' நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

சனி, அக்டோபர் 15, 2011

காஷ்மீர் பற்றி அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே


"காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பிரிக்க முடியாத ஒரு பகுதி. யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்" - அண்ணா ஹசாரே


Mr. Hazare said, “Kashmir is an important, inseparable part of India, and having any other opinion about this is not acceptable. I am ready to give my life for Kashmir.”


காஷ்மீருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் என்ன சம்பந்தம்?  அங்கு உள்ள மக்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லோரையும் இடது கையால் ஒதுக்கி விட்டு இப்படி சொல்வது ஒரு பள்ளிச் சிறுவனின் மூர்க்கத்தனமான தேசப்பற்று வெளிப்பாடாக இருக்கிறது. 

அன்னா ஹசாரேவின் பல கருத்துக்கள், பேசும் விதம், நடை உடை பாவனைகள் அந்த பாணியிலேயே இருக்கின்றன. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உலக பார்வையில் எல்லாவற்றையும் நோக்கும் அணுகுமுறைதான் தெரிகிறது.'அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு காந்தியின் மீது இருந்த மரியாதை (பிம்பம்) சிதைய ஆரம்பித்திருக்கிறது, அவரும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது' என்று ஒருவர் ஓரிரு மாதங்கள் முன்பு குறிப்பிட்டார்!ஆனால் அன்னா ஹசாரேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பித்து வரிசையாக முக்கிய அமைச்சர்கள் கடிதம் எழுதுவதும் பேச்சு வார்த்தை நடத்துவதும் ஏன்? இவரும் அடுத்தடுத்த பிரச்சனைகளில் தனது 'கருத்து' முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.  இதை போலத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்தியை ஊதிப் பெருக்கியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


காஷ்மீரின் விடுதலை என்ற பொருளை எடுத்துக் கொண்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான வாதங்களையும் அதை எதிர்த்து காஷ்மீர் பிரிந்து செல்வதற்கான நியாயங்களையும் பேச வேண்டும்.  


'யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்று மிரட்டுவது' தவறு.'இந்திய தேச பக்தி, ஒருமைப்பாடு' என்பதை மட்டும் சொல்லி, மற்ற காரணங்களை புறக்கணிப்பது அயோக்கியத்தனம்.  அன்னா ஹசாரேவை என்றுமே முற்போக்காளர்கள் ஆதரித்ததாக தெரியவில்லை. 


தேசிய இனங்கள்

'பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு இனத்தினர் தமது அரசியல் தேவைகளை தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்' என்பது அடிப்படை ஜனநாயகம். இந்த உரிமை அளிக்காத நாடுகள் எல்லாம் பெயரளவில் ஜனநாயக நாடுகள் மட்டுமே (அது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவானாலும் சரி). 

ஸ்பெயினில் பாஸ்க் விடுதலை இயக்கம்,இங்கிலாந்தில் ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் லிபரேஷன் ஆர்மி)  போராட்டங்கள் எல்லாம் கொடுமையான அடக்குமுறை, வன்முறைகள் மூலம் ஒடுக்கப்பட்டன. 

20ஆம் நூற்றாண்டின் பொருளாதாரக் கட்டாயங்கள் இது போன்று தேசிய இனங்களை அடக்கி சிறைப்பிடித்து வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தன. அந்த பொருளாதார சூழ்நிலைகள் மாறி வரும் போது சிறைப்பிடிக்கப்பட்டவர்கள விடுதலை பெறுவது நடக்கும். 

தாக்குபவர்களின் வன்முறையையும் தற்காத்துக் கொள்பவர்களின் வன்முறையையும் ஒப்பிடக் கூடாது. விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வன்முறை தம் மீதான ஒடுக்குமுறையை (வன்முறை அடிப்படையிலான) எதிர்த்த வெளிப்பாடு. ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் இல்லாமல் போனால் வன்முறையும் ஒழிந்து விடும். 


ஸ்பெயின் அரசு வன்முறையை ஒழிக்க ஒரே ஒரு வேலை செய்தால் போதும், தமக்கு சம்பந்தம் இல்லாத பாஸ்க் பகுதியிலிருந்து தமது ஆதிக்கத்தை விலக்கிக் கொண்டால் போதும். 

இந்தியா


இந்திய அரசியல் சட்டத்தை யார் உருவாக்கினார்கள்? மக்கள் எப்போது இதற்கு ஒப்புதல் அளித்தார்கள்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949, ஜனவரி 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950, ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952ல்தான் நடந்தது. அப்போது இருந்த மாநில சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்தான் அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் இருந்தார்கள். 

மக்களாட்சி என்பது கீழிருந்து உருப்பெற வேண்டும். ஒவ்வொரு பகுதி மக்களும் அரசியலமைப்பு சட்டத்தை விவாதித்து தமது கருத்துக்களை சேர்த்து நிறைவேற்ற வேண்டும். மோசமான ஜனநாயகம் என்பது மக்கள் தொகையில் மிகச்சிறு சதவீதத்தினர் (பெரு நிறுவனங்கள்+ அரசியல் தலைவர்கள்) நாட்டின் பெரும்பான்மை இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பின் பெரும்பகுதியையும் வீணடிப்பதாக இருக்கும் போது, உண்மையான ஜனநாயகத்தின் தேவை அதிகமாகிறது. இப்போதைய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு போடும் நடைமுறை ஒரு திருவிழாவாக முடிகிறதே அல்லாமல், மக்களை முன்னேற்ற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் அமைப்பிற்கான தேர்வாக இல்லை என்பது நிதர்சனம்.


தேர்தலில் வாக்களிப்பதுதான் உரிமை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி கொள்ளயடிக்கப் போவது கருணாநிதியா, ஜெயலலிதாவா --- அல்லது நகராட்சித் தலைவராக X வந்து சம்பாதிக்க வேண்டுமா அல்லது Y வந்து சம்பாதிக்க வேண்டுமா என்று வாக்களித்து விட்டு அவர்கள் சம்பாதிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொட்டுவதுதான் உரிமையா?1. ஜனநாயகம் கீழ்மட்டத்திலிருந்து மேல் நோக்கி அதிகாரம் பரவுவதாக இருக்க வேண்டும். 

2. அரசு நிர்வாகம், நீதித் துறை, சட்டம் இயற்றும் துறை மூன்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்க வேண்டும். 
(மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்துத் தலைவரை விட கிராம அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் அதிக அதிகாரம் செலுத்துகிறார்கள்). 

3. மக்கள் எந்த பிரதிநிதியையும் திருப்பி அழைக்கும் உரிமையும் நடைமுறையும் இருக்க வேண்டும். 

4. உண்மையாக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் உழைக்கும் மக்களிடமிருந்து இத்தகைய அதிகாரத்தைப் பறிக்கத் திட்டமிடும், கும்பல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். 

இந்தக் கும்பல்கள் உழைக்காமல் இருப்பதால் முழு நேரமும் இந்த அதிகாரப் பிடிப்பு குறித்து யோசித்து செயல்பட முடிகிறது. அவர்களுக்கான அந்த இடம் இல்லாமல் போக வேண்டும். 


காஷ்மீர்
காஷ்மீரில் அப்படி என்ன சூழல்கள் நிலவுகின்றன? அந்த ஊர் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது யார்? அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்? அவர்களது பிரிந்து செல்லும் கோரிக்கைக்கான வரலாற்றுப் பின்னணி என்ன? 


காஷ்மீரை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதால்தான் தீவிரவாதம் தலையெடுக்கிறது (என்று பாகிஸ்தான் சொல்கிறது). இந்தியாவே தீவிரவாதத்துக்கு காரணமாக இருக்கிறது. 

சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் (பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர்) தமது இன மக்களுடன் சுதந்திரமாக பழக வேண்டும், வர்த்தகம் செய்ய வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் முடிவு செய்ய உரிமை இருக்கிறதா? 

கடந்த 20 ஆண்டுகளிக் காஷ்மீரில் எத்தனை இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?  பெண்களும் சிறுவர்களும் தெருவுக்கு வந்து போராடுவதற்கான அடக்குமுறைகளுக்கு யார் பொறுப்பு? இந்திய ராணுவம் ஏன் காஷ்மீரில் குவிக்கப்பட்டிருக்கிறது?  ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் ஏன் நடைமுறையில் இருக்கிறது? 

எல்லை நெடுகிலும் முள்வேலி போட வேண்டும் என்று புலம்பும் தலைவர்கள் இன்னும் மனநோய் காப்பகத்துக்கு அனுப்பப்படாமல் இருப்பது ஏன்? 

உலக நாடுகளுக்கு இந்திய பிராந்தியத்தில் ஆதாயம் பெறுவதற்கு இந்தியா என்ற வல்லரசின் துணை தேவைப்படுகிறது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் இவர்கள் யாரையும் காஷ்மீரிகள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை. தமது வாழ்க்கை பற்றிய அரசியலை தம்மைச் சார்ந்தவர்களே (காஷ்மீரிகளே) தீர்மானிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!காஷ்மீர் மக்களுக்கும், வடகிழக்கு மக்களுக்கும் அவர்கள் நாடுகள் இந்தியாவின் கையில் சிக்கி காலனியாக மாறி இருக்கின்றன. அவர்களுக்கு எப்போது சுதந்திரம்? (வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் மறுக்க இது போன்ற வாதத்தைத்தான் வைத்திருந்தார்).