ஞாயிறு, நவம்பர் 26, 2006

கிரிக்கெட்டில் வெற்றியா தோல்வியா?

இந்து நாளிதழின் விளையாட்டுப் பிரிவு தலைமை ஆசிரியர், நிர்மல் சேகர். அவரைப் போல் விளையாட்டுக்களை அனுபவித்து ரசித்து எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவரது இன்றைய கட்டுரையைப் படியுங்கள்.

அவர் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு சம்பவம், இரண்டு ஆண்டுகள் விம்பிள்டன் வெற்றி வீரராக இருந்து அடுத்த ஆண்டில் இரண்டாம் சுற்றில் தோற்ற உடனான பத்திரிகையாளர் சந்திப்பில், போரிஸ் பெக்கர் சொன்னது.

"ஏன் எல்லோரும் இப்படி உம்மென்று இருக்கிறீர்கள். மைதானத்தில் யாரும் செத்து விடவில்லை, நான் ஒரு ஆட்டத்தில் தோற்று விட்டேன் அவ்வளவுதான்." இது நடக்கும் போது பெக்கருக்கு இருபது வயது நிரம்பவில்லை.

விதர்பாவில் விவசாயிகள் சாகும் பிரச்சனையை விட்டு விட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் இல்லை, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியோ, தோல்வியோ!

தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா: இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !

சனி, நவம்பர் 25, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 5

சில விருப்பங்கள் என்று குறிப்பிட வேண்டுமானால்.
 1. technoratiயில் இருப்பது போல ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு கணக்குக் கொடுத்து தனது பதிவுகளை ஒரே இடத்தில் கண்காணிக்க வசதி செய்யலாம்.

 2. பதிவுகளை ஒரு சில காரணிகளின் அடிப்படையில் மதிப்பிட்டு வரிசைப் படுத்தலாம்.
  • 10 அதிகமாகப் பார்வையிடப்பட்ட பதிவுகள்
  • 10 அதிகமாக பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள்
  • அதிகமான் எண்ணிக்கையில் எழுதிய பதிவர்கள்
  • பின்னூட்டம் கொடுத்தவர்கள்
  • நீண்ட காலம் பதிந்து கொண்டு இருப்பவர்கள்
   என்று சுவையான விபரங்களைப் பட்டியலிடலாம

 3. செந்தழல் ரவி வேலை வாய்ப்பு பதிவு ஆரம்பித்ததைத் தொடர்ந்து யாராவது வர்த்தக வாய்ப்புகளுக்காக ஒன்றை ஆரம்பிக்கலாம்.

 4. ஒவ்வொருவரும் தன் வீட்டில் கேரேஜ் விற்பனை செய்வது போல கடை திறக்கலாம். இது நடக்கலாம், நடக்காமல் போகலாம்.

  நமக்கு தொழில் செய்வது, பணம் ஈட்டுவது என்பது ஒரு அவமானமாகவே இன்னும் இருந்து வருகிறது. வலைப்பதிவின் மூலம் ஒருவர் சம்பாதிக்க முயல்வதை இழிவாகக் கருதும் வரை இது வளர முடியாது.

 5. வலை திரட்டிகளிலேயே, இலக்கியம், வணிகத் தொடர்புகள், விவாத மேடை என்று தனிப் பிரிவுகள் வடிவமைப்புகள் கொடுக்கலாம்.

 6. வலைப்பதிவர்கள் சிலரை குறிப்பிட்ட காரணியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பதிவுகளுக்கு மதிப்பெண் கொடுக்கச் சொல்லலாம். எல்ல்லோருக்கும் இந்த உரிமை இல்லாமல் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு மட்டும் கணினி நிரல் அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும்
  .
  மட்டுறுத்தும் வசதியை அளித்து மோசமான பதிவுகளை கீழிறக்கச் செய்யலாம்.
(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

==நிறைந்தது. ===
1, 2, 3, 4

வெள்ளி, நவம்பர் 24, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 4

வலைத் திரட்டிகளில் அடுத்து என்னென்ன வசதிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பட்டியலிடாமல், எதைச் சாதிக்க முயல்வோம் என்று சில எண்ணங்களைக் கொடுத்தால் விவாதத்துக்குப் பலனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் பன்னாட்டு தேசிய இனங்களில் ஒன்று. இந்தியா, ஈழம், மலேசியா/சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைத்து, தமிழர்களுக்கென்று பொதுவாக இருக்கும் பழக்கங்கள், பண்புகள், அறிவுகள் மூலம் உலகளாவிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தமிழ் டாட் நெட்டில் தமிழ் மடற்குழு மூலமாக சமூகம் உருவான போது அதன்அடுத்த நிலை என்று எறும்புகள் முயற்சி நடைபெற்றது. மின்னஞ்சலைப் பயன்படுத்தி உருவான மடற்குழுக்கள் அடுத்த நிலையைப் பிடிக்க தவறி விட்டன. மடற்குழுக்கள் மூலமே சாதித்துக் காட்டிய பல மென்பொருள் உருவாக்கத் திட்டங்கள், மதுரைத் திட்டம் போன்று வையவிரிவு வலையின் மீது இயங்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம்.

ஒவ்வொருவரும் உருவாக்கி வைத்திருக்கும் வலைப்பூக்களை தொகுத்து தரும் பணிகளை செய்கின்ற வலைத் திரட்டிகள். அடுத்து என்ன? இலக்கிய வளர்ச்சி, பொருளாதார தொடர்புகள்? அறிவியல் தொழில்நுட்பப் பணிகள்? சமூகச் சங்கங்கள்?

மதுரை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு அப்புறம் தருமி அவர்கள் வலைப்பூவுலகம் தமிழ்நாட்டுக்காக ஒரு think tank ஆகா பரிணமிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டிருந்தார்.

திராவிடத் தமிழர்கள், சென்னப்பட்டிணம், விக்கி பசங்க என்று குழு சேர்பவர்கள் ஒவ்வொரு திசையில் அடுத்தக் கட்டத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. எழுதிப் பதித்து, பின்னூட்டம் இட்டு போவதுடன் கூடுதலாக, கீழ்த்தரமான மொழியில் கீழ்த்தரமான வகையில் பதிவுகள் போடுவதற்கு மாற்றாக இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அத்தகைய சிந்தனைகளின் விளைவாக தேவைகள் வந்தால் தொழில் நுட்ப வளர்ச்சி அவற்றைத் தொடர்ந்து வந்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

வியாழன், நவம்பர் 23, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 3

வலைப்பதிவுகள், நம்ம வீட்டில் கொலு வைத்திருப்பது போல.

பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும் (பொன்ஸ் பக்கங்கள்).

நமது படைப்புகளை கற்பனைகளை உருக்கொடுத்து அலங்கரித்து வைக்கிறோம். அதைப் பார்க்க யாரும் வரலாம் என்று பொதுவாக அறிவித்து விடுகிறோம். அது பற்றிய விபரங்கள் அறிந்த மக்கள் வருகிறார்கள். பெரும்பாலானோர் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமலேயே, தாம் யாரென்று வெளிப்படுத்தாமலேயே போய் விடுகிறார்கள். ஒரு சிலர் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

இந்தச் சமூகத்தில் நல்ல பண்பு, யாராவது நமது வலைபதிவுக்கு வந்து பின்னூட்டம் எழுதினால் அவருக்கு உடனேயே பதில் சொல்வது. நம் வீட்டுக்கு யாராவது வந்து நம்மிடம் பேசினால் பதில் சொல்லாமல் இருப்போமா?

இன்னும் ஒரு அடி தாண்டினால், நமது வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்கள் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு நாமும் போய் எதிர்மரியாதை செய்ய வேண்டும். அங்கிருக்கும் படைப்புகளைப் பார்த்து நமது கருத்துக்களை எழுத வேண்டும்.

பிரபலமாக எல்லோராலும் விரும்பப்படும் வலைப்பதிவர்கள் மேலே சொன்ன இரண்டையும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். (துளசி கோபால், கடல் கணேசன்).

ஒவ்வொரு வலைப்பதிவும் அதன் படைப்பாளியின் வீட்டு அறை போல. உங்களுக்குப் பிடித்திருந்தால் அடிக்கடி போகலாம். உங்கள் படைப்புகளை விரும்பும் பிறர் அடிக்கடி உங்கள் வீட்டுக்கு வருவார்கள். யாரும் யாருக்கும் உயர்வு கிடையாது. எழுதுவதற்கு நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் பதிகிறார்கள். படிப்பவருக்குக் கருத்து தோன்றினால் எழுதிப் போடுகிறார். இன்னும் உந்துதால் வந்து விட்டால், தனது பதிவில் ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார்.

இதில் என்ன அருமை என்றால் எல்லோருமே வாசகர்கள், படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசகர் கடிதம் எழுதுபவர்கள். பத்திரிகாசிரியர் என்றால் கொம்பு முளைத்திருக்கும், எழுத்தாளர் என்றால் தேவதைகள் போலச் சிறகுகள் இருக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் அவரளவில் படைப்பாளிகள்.

படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளைக் குறைக்கின்றன வலைப்பதிவுகள். முன்பெல்லாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஏஜென்டுகளை நம்பி இருப்பார்கள். இப்போது நேரடியாக ஏற்றுமதி நடக்கிறது. இடைத்தரகர்கள் மறைந்து போகும் மாயம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

புதன், நவம்பர் 22, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 2

வலைப்பதிவு திரட்டிகளின் அடுத்த நிலை என்பதில் இரண்டு பரிமாணங்கள். தொழில் நுட்பம், சமூகம். தொழில் நுட்பத்தில் புதிதாக சாதிக்கும் வல்லமை நம் கையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஆங்கிலத்தில், மேல் நாட்டில் இன்று ஏற்படும் மேம்பாடுகள் நமக்கு நாளை வந்து சேரலாம்.

சமூக நிலையில், வலைப்பதிவுகள் என்பது இது வரை எந்த ஒரு சமூகமும் கண்டிராத புதிய பரிமாணம். அதனால் எதனோடும் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியாது.

இரண்டு மூன்று பழக்கமானவைகளுடன் ஓரளவு ஒப்பிடலாம்.

முதலில் பத்திரிகைகள், படைப்புகள், வாசகர்கள்.

முன்பெல்லாம் எழுத்துத் திறமை பெற்றவர்கள் 'தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதி, திரும்பப் பெற வேண்டும் என்றால் தபால்தலை ஒட்டிய சுயவிலாசம் எழுதிய உறையுடன்' பத்திர்கைகளுக்கு தமது படைப்புகளை அனுப்பிப் பார்க்க வேண்டும். பத்திரிகை ஆசிரியருக்குப் பிடித்திருந்தால் அந்தப் படைப்பு அச்சில் வரும். பத்திரிகை நிறுவனம், தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு நாடெங்கும் பத்திரிகை கிடக்கச் செய்கிறது. அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க லட்சக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான வாசகர்கள். படித்தவர்களில் மிகச் சிலர் தமது கருத்துக்களைக் கடிதமாக எழுதி அனுப்புவார்கள்.

எழுத்தாளர், வாசகர் கடிதம் எழுதுபவர், பத்திரிகை ஆசிரியர் என்று சிறு எண்ணிக்கையானவர்களைத் தவிர்த்து பெருவாரியான மக்கள் ஓசையில்லாமல் படித்து விட்டுப் போய் விடுகிறவர்கள்.

வலைப்பதிவுகள் மூலம் நமக்கு நாமே எழுத்தாளர், பதிப்பாளர். படைப்புகளை, நமக்குப் பிடித்ததை எழுதி விரும்பினால் உடனேயெ வெளியிட்டு விடலாம்.

கணினி நிரல் எழுதத் தெரிந்தால்தான் எதையும் கணினியில் படைக்க முடியும் என்ற தடை நீங்கி, தட்டச்சு செய்து உள்ளிட்டு விட்டால் நமது படைப்பு வெளியாகி விடும். யார் வேண்டுமானாலும் வந்து படித்துக் கொள்ளலாம். "பட்டனை அமுக்கி வெளியிடுங்கள் (push buttom publishing)" என்ற முழக்கத்துடன் இலவசச் சேவைகளை அளிக்கிறார்கள்.

யார் வருவார்கள்? இப்படி ஒருவர் எழுதி வைத்திருக்கிறார் என்று எப்படி மக்களுக்குத் தெரியும்?

நாம் எழுதி வெளியிட்ட விபரங்களைத் திரட்டி தலைப்பையும் முதல் நான்கு வரிகளையும் இன்னொரு தளத்தில் விளம்பரப்படுத்தும் மென்பொருள் சேவைகளும் இலவசமாக இயங்குகின்றன. (தமிழ் மணம், தேன்கூடு, தமிழ்பிளாக்ஸ்). இத்தகைய தளத்தில் நூற்றுக் கணக்கானோர் எழுதியவற்றின் விபரங்கள் காணக் கிடைப்பதால் வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

எழுத முடிந்த யாரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் பார்வைக்குத் தமது படைப்பு விவரங்களை அனுப்புவது எளிதாகிப் போய் விட்டதுதான் வலைப்பதிவுகள். மேலே சொன்ன திரட்டிகள் மூலமாகவோ அல்லது நமது முகவரி மூலமாகவோ நாம் எழுதியதைப் படித்து விட்டுக் கருத்து சொல்லவும் எளிதான வசதிகள் வலைப்பதிவு கருவியிலேயே இருக்கிறது. சொல்ல வேண்டியதைத் தட்டச்சு செய்து ஒரு கிளிக்கினால் பின்னூட்டமாக நமது கருத்தை வெளியிட்டு விடலாம். இது வாசகர் கடிதம்.

இத்தோடு பத்திரிகையோடு ஒப்பிடுவது நின்று போகிறது. பத்திரிகையை அச்சிட, வினியோகம் செய்ய செலவு அதிகம். எத்தனை பேர் காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று கணக்கு கிடைத்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

1

செவ்வாய், நவம்பர் 21, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

தூள் படத்தின் ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தொழிற்சாலைக்குள் வெடிமருந்தை வைத்து விட்டு நீண்ட கயிற்றில் தீவைத்து வெடிக்க முயற்சிப்பார்கள். நாயகன் விக்ரம் ஓடிப்போய் அந்தத் தீ வெடிமருந்தை அடைந்து விடாமல் நாசத்தைத் தவிர்த்து விடுவார். தமிழர் நான்கு பேர், அதுவும் படித்த அறிவுஜீவிகள் சிலர் கூடும் இடத்தில் இயல்பாகவே இருக்கும் வெடிக்கும் பொருளுக்கு முன்னால் தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டார், "வலைப்பூக்களில் சாதியைக் குறித்த விவாதங்கள் தேவையா?" என்ற விவாதத்தைத் துவங்கி வைத்த பாலபாரதி.

டி பி ஆர் ஜோசப், முதலில் எழுந்து இந்த விவாதமே இங்கு தேவையா? என்று கொஞ்சம் சூட்டைத் தணித்தார். 'மும்பையில் வலைப்பதிவர்கள் செய்தது போல ஒரு சங்கமாகப் பதிவு செய்து நிருபர்களுக்கான உரிமைகளைப் பெற முயற்சிக்கலாம், அது போன்ற நடைமுறை செயல்களைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை செலவிடலாம்' என்பது அவர் கருத்து.

சென்னைப் பட்டிணம் கூட்டு வலைப்பதிவு ஆரம்பித்து ஆரம்ப கால சந்திப்புகளிலேயே இத்தகைய வளர்ச்சியை வலியுறுத்தியிருந்தார் பாலபாரதி. சாந்தி அக்கா என்ற பதிவைப் போட்ட அதே பாலபாரதிதான் அனானி ஆட்டம் என்று வரவேற்கும் பதிவுகளையும் போடுகிறார். தனி ஒருவராக வெற்றிகரமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய இவர் செய்யக் கூடியது நிறைய இருக்கிறது.

சிமுலேஷன் "வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை. அதற்கு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.

முன்பு மிக மோசமாக இருந்த வலைப் பதிவுச் சூழல் இப்போது மோசம் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளதாக ரோஸா வசந்த் கூறினார். 'முன்பெல்லாம் குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசுவதே பாவம் என்று இருந்த நிலை போய் இப்போது சுதந்திரமாக அடித்துக் கொள்ளும் நிலை இருப்பது மேல்தான். இது இன்னும் முன்னேறி ஆரோக்கியமான சூழல் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.

"அலுவலகத்தில் வேலை பற்றி விவாதிக்கும் போது நாம் சாதி பற்றி பேசுகிறோமா? உருப்படியாக வேலை நடக்கும் இடங்களில் சாதிப் பேச்சை எடுப்பது எதிர்மறையாகத்தான் முடியும்" இது நான்.

"சாதி என்பது ஒரு நடைமுறை உண்மை. அதை விவாதிக்க மாட்டோம் என்று கண்ணை மூடிக் கொண்டால் பிரச்சனை மறைந்து விடுமா என்ன? ஒடுக்கப்பட்ட குழுவினர் ஒன்று சேர்ந்து செயல்பட இந்தத் தளமும் உதவட்டுமே" என்று அருள்குமார் சாதி பற்றிய விவாதங்கள் தவிர்க்க வேண்டியவை அல்ல என்று கருத்து சொன்னார்.

"அடிப்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு மனக்கஷ்டங்களும் நேர விரயமும் ஆகலாம். ஆனால் வெறும் பார்வையாளராக படித்து விட்டுப் போகும் தம்மைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களை அத்தகைய விவாதங்கள் காட்டுகின்றன" என்று பூபாளன் என்ற வாசகர் கூறினார்.

"பாலபாரதி குறிப்பாகச் சொன்ன ஒரு விவாதம் அறிவுபூர்வமாகத்தான் நடைபெற்றது என்பது தன் கருத்து" என்று ஓகை சொன்னார்.

கூட்டம் முடிந்து வளசரவாக்கம் நோக்கிப் போகும் போது கூட வந்த கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த நண்பர், அவர்கள் ஊரிலும் "இது போல கூட்டங்களில் காரமான விவாதங்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரக் கூட்டம் ஐந்து ஆறு மணி நேரத்துக்கு நீடித்து விடும். இங்கும் அது மாதிரி நடக்கப் போகிறதோ என்று பயந்தேன், ஆனால் சுருக்கமாக முடிந்து விட்டது" என்றார். அவர்கள் அடித்துக் கொள்வது இலக்கிய வாதங்களில்தானாம்.
அவரது பார்வையில் சென்னையில் மூன்று வேறுபாடுகள், "பலப் பல நிறங்களில் சுவர் வண்ணங்கள், சுவரொட்டிகள், பல வகையான உணவுகள், அதிக மக்கள் கூட்டத்தினாலோ வேறு எதனாலோ விளையும் குப்பைக் குவியல்கள்,"

இடைவேளையில் கிளிநொச்சியின் அகிலன், சாவின் நிழலில், குண்டு வீச்சின் பயத்தில் வாழும் வாழ்க்கையை விவரித்தார். குண்டு வீச்சினால் மரணம் அடைந்த குழந்தைகளைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்கு முன் அவரை மாமா என்று அழைத்து விளையாடிய, தாயும் தந்தையும் இல்லாத குழந்தைகளை அடிபட்டு பிணமாகப் பார்த்த துயரத்தை விவரித்தார். எவ்வளவுதான் குறை இருந்தாலும் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத பகுதி ஈழம் என்று தமிழ்நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த கட்டம் என்று நான் கட்டுரை வாசிக்க இருந்தேன். பல நாட்கள் முன்னர் பாலா சொன்ன அன்றே ஒரு பக்கம் எழுதி வைத்து விட்டாலும் அதை விரிவுபடுத்தி எழுதுவதை கடைசிவரை தள்ளிப் போட்டு ஞாயிறு மதியம்தான் அச்செடுத்து முடித்தேன். அந்தக் கட்டுரையைத் தனி பதிவாக வெளியிடுகிறேன்.

"எல்லோரும் சுஜாதா ஆக முடியாது. ஆயிரம் பேர் எழுதும் வலைப்பதிவு உலகில் பத்து பேர் பெரிய எழுத்தாளராக உருவாகலாம். ஆனால், ஒவ்வொருவரும் தமது துறை அறிவைத் தமிழில் தர முயற்சிக்கலாம், முயற்சிக்க வேண்டும்" என்று ராமகி ஐயா கேட்டுக் கொண்டார். "அரசியல் பற்றிய விவாதங்கள், திரைப்பட விவாதங்கள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றையே முழு நேரமும் செய்யாமல் பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சமூகத்துக்குப் பலன் அளிக்கும்படியான ஆக்கங்களை உருவாக்குங்கள் என்று அவரது வேண்டுகோள்".

"வலைப்பதிவு பற்றிய தொழில் நுட்ப நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது. மென்பொருள் துறையில் பணி புரியும் மற்றும் வலைப்பதிவு நுணுக்கங்களைக் கற்று உணர்ந்தவர்கள் கூட்டாக பிறருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். மீள்பதிவு எப்படி போடுவது என்று தெரியாமல் இருந்த தான் பொன்ஸ் விளக்கிய பிறகு அதைக் கற்றுக் கொள்ள முடிந்தது" என்று பாலா ஆரம்பித்து வைத்தார்.

"பின்னூட்டத்தில் சுட்டி கொடுப்பது எப்படி என்று கூடத் தெரியாமல் இருக்கலாம். ஒருவர் கொடுத்த பின்னூட்டத்தை சிறிது மாற்றி வெளியிட என்ன வழி என்று தெரியாது. இதற்கெல்லாம் தெரிந்தவர்கள் தமது அறிவைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்" இது லக்கிலுக்.

"சென்னையில் நடைபெற்ற பிளாக்கேம்பில் பங்கேற்ற விக்கி என்ற விக்னேஷ், தமிழ்பதிவர்களுக்காக இது போன்ற தொழில் நுட்ப சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம்" என்று முன் வைத்தார். என்னென்ன முக்கியமான கேள்விகள் என்று திரட்டி அவற்றில் பத்துப் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து செயல்முறை விளக்கம் கூட அளிக்கலாம். அவருடைய வழிகாட்டலில் ஒரு கூட்டு வலைப்பதிவும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

பிளாக்கர் பீட்டாவிற்கு மாறி தான்படும் அவதிகளை விவரித்த மரபூர் சந்திரசேகரன், பொருள்வாரியாக பதிவர்களை, பதிவுகளை தேடுவதற்கு வசதிகள் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிறைய பேசுவார்கள் என்று நான் எதிர் பார்த்திருந்த வரவனையான், எஸ்கே ஐயா, முத்து தமிழினி இவர்களெல்லாம் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 'இது போன்ற சந்திப்புகளில் பொதுவாக சில தலைப்புகளைத் திரட்டி வரும் நாட்களில் எல்லோரையும் எழுத வரவேற்கலாம்' என்று எஸ்கே சொன்னார்.

இட்லிவடையின் புகைப்படப் பிரதிநிதி வந்து படங்கள் எடுத்துச் சென்றார். அவர்தான் இட்லிவடை என்று அவர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சிலர் சொன்னார்கள். இட்லி வடை என்பவர் உயரமாக, ஒல்லியாக, வெள்ளையாக, பல ஆண்டுகள் எழுத்து அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம். இது போன்ற ஊகிப்புகளைக் குழப்ப இரண்டு மூன்று பேராக ஒரே முகமூடி பேரைப் பயன்படுத்துவதும் வாடிக்கை.

முகமறிய விரும்பிய பல பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதாரப் பேராசிரியர் சிவஞானம்ஜி ஐயா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடற்குழுக்கள் மூலம் தெரிந்திருந்த ராமகி ஐயா இவர்களை ஒருவழியாக பார்த்து பேச முடிந்தது.

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை -1

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.

முதலில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த சிலருக்கு தெரியாமல் இருக்கக் கூடிய விபரங்கள்:

தனிக் கணினிகள் கணக்கிடுதலைத் துரிதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர் பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் வண்ணம் வளர்க்கப்ப்பட்டன. இந்தக் கணினிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கணினி வலைகள் உருவாயின. இந்த வலைப்பின்னல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து உலகளாவிய ஒரு கணினி இணையம் உருவானது எண்பதுகளின் பிற்பகுதியில்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் குறிப்பிட்ட தேவைக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகப் போர் மூண்டு கணினிக் கட்டமைப்பின் ஒரு பகுதி அழிந்து விட்டாலும், மற்ற பகுதிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். இன்றைக்கும் இணையத்தில் எந்தக் கணினியும் மையக் கணினி கிடையாது. ஒன்று போனால் இன்னொன்று அதன் பணியை எடுத்துக் கொள்ளும்.

அந்த அடிப்படையில் உருவான தொழில்நுட்ப கட்டமைப்பைப் பயன்படுத்தி பயன்பாடுகள் பல உருவாயின. அவற்றில் புகழ் பெற்ற இரண்டு மின்னஞ்சல்களும் வைய விரிவு வலையும். அடுத்த பத்து ஆண்டுகளில் மின்னஞ்சல்கள் மூலை முடுக்கெல்லாம் பரவி உலகெங்கும் உள்ள தொழில்களுக்கும் தனி நபருக்கும் தகவல் தொடர்பு கருவியாக வளர்ந்து விட்டன.

வையவிரிவுவலை கோடிக் கணக்கான வலைப் பக்கங்களை இணைக்கும் ஊடகமாக உருவானதும் அதைப் பயன்படுத்தி நடைமுறை கருவிகளை உருவாக்க பெரும் இயக்கம் ஆரம்பித்து டாட்காம் பூம் என்று விரிந்து வெடித்து ஓய்ந்தது.

இப்போது இரண்டாவது அலையாக இணையத்தையும் அதன் மேல் இயங்கும் வையவிரிவு வலையையும் பயன்படுத்தி கணினிகளைத் தாண்டி கணினிக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களை இணைக்கும் முயற்சிகள் பல வெற்றிகரமாக உருவாகி வருகின்றன.

வலைப்பதிவுகள், வலைப்பக்கங்களை உருவாக்குவதை எளிதாக்க வேண்டும் என்று முயன்றதில் வந்த சிக்கலற்ற கருவிகள். வையவிரிவுவலை ஆரம்பத்திலேயே இருந்தக் கருவிகளையே பயன்படுத்தி செயல்படுபவைதான் வலைப்பூக்களை எழுதி சேமிக்கும் முறை. யார் வேண்டுமானாலும் தனது எண்ணங்களை, புரிதல்களை, அனுபவங்களை வலையில் இடலாம் என்று வசதி செய்து கொடுக்கின்றன வலைப்பூ கருவிகள்.

எழுதியதைப் பரவலாக்கும் வலைச் சேவை தொழில்நுட்பம் மட்டும்தான் சமீப காலத்தியது.

சென்னபட்டிணம்

வெள்ளி, நவம்பர் 17, 2006

வலை மகுடம் - 1

தமிழ் வலைப்பதிவுகளின் வெற்றியைப் பற்றி எழுதும் போது, வெளிப்படையான உடற்பொருட்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
 • பிளாக்கர் சேவையை இலவசமாக வழங்கும் நிறுவனம்.
 • தமிழில் ஒருங்குறி எழுத்துப் பலகைகள், எழுத்துருக்கள் உருவாக்கி தமிழில் எழுத வழி செய்த தன்னார்வலர்கள்,
 • வலைப்பதிவுகளைத் திரட்டி பரவலாக்க உதவிய திரட்டி சேவைகள்

இவற்றின் பங்களிப்பு பலமுறை சுட்டிக் காட்டப்பட்டு விட்டன.

எல்லாம் இருந்தாலும் யாராவது எழுதினால்தானே படிப்பவர்கள் வருவார்கள். படிப்பவர்கள் பின்னூட்டம் இட்டால்தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

இந்த இரண்டிலும் ஓசையில்லாமல் பெரும்பங்கு ஆற்றி வருபவர் எல்லோருக்கும் அறிமுகமான, இரண்டு ஆண்டுகளாக ஒளி வீசி வரும், இந்த வாரம் கூடுதலாக வெளிச்சம் போடப்பட்டுள்ள துளசிகோபால் அவர்கள். தமிழ் வலைப்பூவுலகின் உயிர்ப் பொருளான பதிவுகள், பின்னூட்டங்கள் உருவாக்கத்தில் முழுமையாக பணியாற்றி வருகிறார் அவர்.

வலைப்பதிவு என்பது தன்னுடைய வீடு போல என்பது அவர் கருத்து என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

 1. வீட்டை அழகுபடுத்தி தேவையில்லாதவற்றை நீக்கி வைத்திருப்பது
 2. வீட்டுக்கு வந்து நம்மிடம் பேசுபவர்களுக்கு (பின்னூட்டம் இடுபவர்கள்) மதிப்பளிக்கும் விதமாக அதற்கு உடனேயே பதிலளிப்பது.
 3. நம் வீட்டுக்கு வந்து போனவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் பதிவைப் பற்றிக் கருத்தைப் பின்னூட்டமாக கொடுப்பது.

இந்த மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒருவர் துளசி கோபால். இந்த உறவுப் பின்னலுக்கு அடிப்படைகளை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்து விட்டால், ஓரிரு மாதங்களில் ஒரு நெருக்கமான சமூகம் உருவாகி விடும்.

இதையெல்லாம் தாண்டி, புதிதாக வந்த யாராவது உருப்படியாக எழுத ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் படித்து பின்னூட்டம் இடுவது, இந்த உறவுச் சங்கிலிக்குப் புதிய கண்ணிகளைச் சேர்க்கிறது. இதிலும் இந்த வார நட்சத்திரத்துக்கு நிகர் அவரேதான்.

எவ்ரிடே மனிதர்கள் என்று அவர் எழுதும் பதிவுகள் மூலம் அவரது மனித நேயத்தையும் சக மனிதர்கள் மீதான பரிவையும் தெரிந்து கொள்கிறோம். இதுவரை நானூறுக்கும் அதிகமான பதிவுகள் எழுதி (இந்த வாரம் ஐநூறைத் தொட்டு விடுகிறாரோ?) மூத்த, சுறுசுறுப்பான பதிவராக செயல்படுகிறார்.

எங்கெல்லாம் ஆக்கபூர்வமான பதிவுகள் வெளியாகின்றனவோ, அங்கெல்லாம் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கலாம். அதில் என்னுடைய பதிவும் ஒன்று என்பதால் நானும் நல்லபடியாக எழுதுகிறேன் என்று பெருமைப் பட்டுக் கொள்வேன்.

தான் பின்பற்றும் வழிமுறைகளை, அடிப்படை தத்துவங்களை புதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக அவர் எழுத ஆரம்பிக்கலாம். தமிழ் வலைப்பதிவை வளமூட்டும் அவரது பணிக்கு நன்றி தெரிவித்து அவருக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இது போன்ற செயற்கரிய செயல்படும் பதிவர்களின் சிறு பட்டியலை நிரந்தரமாக முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்யலாம். அதை ஆரம்பித்து வைக்க துளசிதளம் முதல் பதிவாக இடம் பெற கேட்டுக் கொள்கிறேன்.