ஞாயிறு, டிசம்பர் 31, 2006

சாதி ஒழியத்தான் வேண்டுமா? -2

சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் திருமண உறவுகளைக் குறுக்கிக் கொள்வதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?

நன்மைகள்:
நம்மைப் போன்ற பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், சமயச் சடங்குகள் உடைய குடும்பத்தில் உறவு ஏற்படுத்துவது மூலம் திருமணத்துக்குப் பிறகான சேர்ந்து வாழ்தல் எளிதாக இருக்கும்.

தீமைகள்:
நெருங்கிய உறவுக்குள்ளே திருமண உறவு வைத்துக் கொள்வதால் மரபணுத் தேர்வுகள் குறைபாடுகளையே மிகைப்படுத்தி பிறக்கும் குழந்தைகளை குறைபாடுடையவர்களாகச் செய்து விடுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு படித்த குடும்பங்களில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.

அதையே சிறிதே பெரிய வட்டத்துக்குள் செய்வதுதான் சாதிக்குள்ளேயே திருமணம். மரபணுத் தேர்வுகளில் நன்மை தரும் பண்புகள் வருங்காலச் சந்ததியினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், தாயும் தந்தையும் வேறுபட்ட மரபணுக் கூறுகளைக் கொண்டிருத்தல் தேவை.

பல நூறு ஆண்டுகளாக சிறிய வட்டத்துக்குள் குறுக்கி நமது வளர்ச்சிக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம்.

தீர்வு:
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, மனப் பொருத்தம், குடும்பப் பொருத்தம், ஏன் பணப் பொருத்தம் கூடப் பார்ப்பது தேவையாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் தேர்வை ஒடுக்கிக் கொள்வது அறிவுடமையாகாது. சாதி என்ற கட்டுப்பாடு இல்லாமல் நமது உறவு வட்டங்களை பெரிதாக்கிக் கொள்வது சமூகத் தேவை.

சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2
சாதி ஒழியத்தான் வேண்டும் - 3

சனி, டிசம்பர் 30, 2006

சாதி ஒழியத்தான் வேண்டுமா?

சாதி என்பது நமது வாழ்வின் நெருங்கிய ஒன்றாகப் போய் விட்டது.
 • நமது வீட்டில் அம்மா செய்யும் சமையல்,
 • நமது உறவினர்கள்
 • வீட்டு நிகழ்ச்சிகளில் செய்யும் சடங்குகள்
 • சொந்த ஊர் பழக்கங்கள்
இவற்றை எல்லாம் சாதி அடையாளத்தோடு இணைத்துக் கொள்கிறோம்.
 • நம்ம வீட்டுச் சமையல் பரம்பரை பரம்பரையாக வந்தது. அதே போன்ற சமையல் பழக்கங்கள் ஒரே சாதிக்குள் இருப்பதைப் பார்த்து உணவுப் பழக்கத்துக்கும் சாதிக்கும் தொடர்பு நம் மனதுக்கு ஏற்பட்டு விடுகிறது.
 • வரையறையின்படி நமது உறவினர்கள் அனைவருமே ஒரே சாதியினராகப் போய் விடுகிறார்கள்.
 • ஒரே குழுவுக்குள் உறவுகளை மட்டுப்படுத்திக் கொண்டதால் எல்லோரும் பின்பற்றும் சடங்குகள் ஒரே மாதிரியாக அமைந்து அவற்றுக்கும் சாதி முத்திரை கிடைத்து விடுகிறது.
சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் பிறப்புடனேயே வரும், வளர்ப்பில் பழகும், உறவுகள், உணவுப் பழக்கங்கள், வழிபாட்டு முறைகளும் போய் விடுமே என்று ஒரு அச்சம் வந்து விடுகிறது. அதனால்தான் பழக்கமான சாதி இருந்து விட்டுப் போகட்டுமே, அதன் ஏற்றத்தாழ்வுகளை மட்டும் ஒழித்து விடுவோம் என்று தோன்றுகிறது.

சாதி இருந்து விட்டுப் போகட்டுமே என்று தோன்றும் போது, உண்மையில் நாம் தக்க வைக்க விரும்புவது மேலே சொன்ன பரம்பரைச் சொத்துக்களைத்தான்.

சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது
 1. குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் அந்தக் குடும்பம் சார்ந்த குழுவுக்குள் மட்டுமே திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு.
 2. குழு அடையாளத்தைப் பெற்று விட்டதால் சமூக நிலை, குழுவின் உயர்வு தாழ்ச்சிகள் தானாக அமைந்து விடுகின்றன என்ற அனுமானம்
என்ற பழக்கங்கள் மறைய வேண்டும் என்பதுதான்.

ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. திருமண உறவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. அவற்றை ஒரே சாதிக்குள் மட்டும் என்று கட்டுப்படுத்துவதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?

சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2

ஞாயிறு, டிசம்பர் 24, 2006

ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன்.
 1. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் இன்னும் பொருத்தமானவையா என்று தெரிந்தவர்கள் உறுதி செய்யவும்.
 2. விருப்பமுள்ளவர்கள் இதை அச்செடுத்து தங்கள் உறவினர், நண்பர்கள் வட்டத்துக்குள் மட்டுமாவது கையெழுத்து வாங்கவும்.

  (தமிழில் இரண்டு பக்கம் - ஒரே தாளின் இரு புறமும், ஆங்கிலத்தின் இரண்டு பக்கங்கள் - ஒரே தாளின் இரு புறமும், கையெழுத்துப் பக்கங்கள் தேவைக்கேற்ப - பக்கத்துக்கு பன்னிரண்டு கையெழுத்துக்கள் பெற்று, ஒவ்வொரு பக்கத்துக்கும் வரிசை எண் கொடுத்து விடுங்கள்)
 • இதன் மூலம் யாழ்ப்பாணம் பற்றிய விழிப்புணர்வு வளரும் என்பது உடனடி பலன்.
 • மேல் நடவடிக்கையாக சேகரித்த கையெழுத்துப் பக்கங்களை ஒன்று சேர்த்து திரு அவர்களுக்கு அனுப்பி ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் தமிழ்/ ஆங்கில வடிவங்கள் கீழே:

அன்புள்ள நண்பர்களே,

இந்த விண்ணப்பத்தில் உங்கள் கையெழுத்தைச் சேர்க்கவும். முழுவதும் படித்து இதன் விபரங்களைப் புரிந்து கொண்டு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கையொப்பமிடவும்:

இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியின் முக்கிய நகரம் யாழ்ப்பாணம். அங்கு சுமார் ஆறு லட்சம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். 50,000 இலங்கை அரசின் சிங்கள ராணுவ வீரர்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கைத் தீவின் மற்ற பகுதிகளோடு சேர்க்கும ஒரே சாலை A9 என்ற நெடுஞ்சாலை. இந்தச் சாலையின் வழியாகத்தான் எல்லாவிதமான சரக்குப் (உணவு, மருந்து, பிற பொருட்கள்) போக்குவரத்தும், மக்கள் போக்குவரத்தும் நடைபெற வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு இந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தியதன் மூலம், யாழ்ப்பாண மக்களுக்கு வெளியுலகுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் எல்லா பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களையும் அரசு மூடி விட்டது.

ஆறு லட்சம் மக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க வழியில்லாமல் செய்து விட்டது அரசாங்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பள்ளிக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரிகள் திறக்கக் காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களாலும், அரசுகளாலும் அனுப்பப்படும் உதவிப் பொருட்கள் அனைத்தும் ராணுவத்தின் மூலம் அனுப்பப்படுவதால், ராணுவத்தின் தேவைக்கே அவை பயன்படுத்தப்படுகின்றன. மீதியிருக்கும் பொருட்கள் உலகின் எங்கும் இல்லாத அளவு மிக உயர்ந்த விலையில் வெளிச் சந்தையில் விற்கப்படுகின்றன. சில பொருட்களின் விலைகள் வருமாறு:

தீப்பெட்டி - பெட்டி ரூ 30 (முந்தைய விலை ரூ 2)
அரிசி - கிலோ ரூ 180 (முந்தைய விலை ரூ 35)
சர்க்கரை - கிலோ ரூ 400 (முந்தைய விலை ரூ 60)
தேங்காய் - ஒன்று ரூ 90 (முந்தைய விலை ரூ 15)
தேங்காய் எண்ணெய் - லிட்டர் ரூ 450 (முந்தைய விலை ரூ 75)

மிளகாய் - கிலோ ரூ 480 (முந்தைய விலை ரூ 160)
புளி - கிலோ ரூ 150 (முந்தைய விலை ரூ 60)
தேயிலை - கிலோ ரூ 800 (முந்தைய விலை ரூ 300)
முட்டை - பெட்டி ரூ 55 (முந்தைய விலை ரூ 6)
பெட்ரோல் - லிட்டர் ரூ 650 (முந்தைய விலை ரூ 100)
டீசல் - லிட்டர் ரூ 150 (முந்தைய வலை ரூ 45)

நுண்ணுயிரிக் காய்ச்சல் வேகமாகப் பரவி, அதற்குத் தேவையான மருந்துகள் கூட கிடைக்காமல் இதுவரை பாதிக்கப்பட்ட 30,000க்கும் அதிகமான மக்கள் அவதியுறுகிறார்கள்.

A9 சாலை இயல்பான போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டால் இந்தத் துயரங்களில் பெரும் பகுதி நீக்கப்படலாம். இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முடிந்தால் இதனை நகலெடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கையெழுத்து பெறும் வேலையை முடிந்தால் செய்யலாம். இதன் மூலம்,
6 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து அடிப்படைத் தேவைகள் போய்ச் சேர,
1 லட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர
6000 மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர
நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்க

உங்கள் நடவடிக்கை உதவி புரியலாம்

இந்த விண்ணப்பத்தின் ஆங்கில வடிவம் இணையத்திலும் கையெழுத்துக்காக கிடைக்கிறது.
http://www.petitiononline.com/TAMEELAM/petition.htmlDear Friends,
Please sign the following petition. Please read till the end.

Jaffna is a place in the north of SriLanka, with a population of
approximately 6 lakh (all Tamils) and 50,000 soldiers of Srilankan
Army(all Sinhalese). A9 Road is the only road that connects Jaffna to
the mainland SriLanka. This is the road through which all kind of
transport (food, medicine, material, people)takes place. The Srilankan
government has closed this road a month back, depriving the Jaffna
people, access of anything outside Jaffna. The government has also
closed all the schools, colleges and government offices in Jaffna. 6
lakh people are deprived of food, medicine and other basic necessities.
More than 1 lakh school students are stopped from going to school. More
than 6000 college students await the reopening of the colleges. The
relief materials sent by all foreign NGOs and other countries are sent
only through the Srilankan Army and and distributed only by the
Srilankan and most of which is obviously consumed the Army itself. The
rest of the relief materials that comes out of the Army are sold out for
a very high price that wouldn't exist in any part of the world. A sample
of the cost of some essential goods:-

Match Box- Rs 30/box, (from Rs 2)
Rice:- Rs 180/Kg, (from Rs 35)
Sugar:- Rs 400/kg (from Rs.60)
Coconut:- Rs 90 (from Rs 15)
Coconut oil:- Rs 450/litre (from Rs 75)
Chilli :- Rs 480/kg(from Rs.160 )
Tamarind:- Rs 150/Kg (from Rs 60)
Tea:- Rs 800/Kg(from 300)
Egg:- Rs 55/unit from (Rs 6)
petrol:- Rs 650/litre (from Rs 100)
Diesel:- Rs 150/litre (from Rs 45)

Viral fever is rapidly spreading and so far 30,000 people have got
affected and they suffer without any medicine to even reduce their pain.

All these things to be brought to normalcy if the A9 road is opened for
the public. Please help the people of Jaffna by signing this petition.

http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

Also forward this email to all your friends,

If you forward, your wishes may or may not come true but you can
certainly help

6 lakh people to get food, medicine and other basic amenities
1 lakh students to continue school education
6000 students to continue their graduate studies
All the diseased to get medicine

சனி, டிசம்பர் 23, 2006

சாதி ஒழிய வேண்டும் - 2

சாதி ஒழிய வேண்டும்

Bad News India,
புரியலியே. இன்னும் தெளிவா எழுதி இருக்கலாமோ?

சாதி ஒழிய வேண்டும். பல நூறு ஆண்டுகள் ஒடுக்கப்பட்டவர்கள் தமது நிலைமையை முன்னேற்றிக் கொள்ள சாதி அடையாளத்தைத் தேடிக் கொள்வது தேவை என்றாலும், அப்படிச் செய்வது, இப்படி ஒரு கொடுமுறையை உருவாக்கிய சாத்திரங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும் எனபதை உணர்ந்து செயல்பட வேண்டும் (necessary evil).

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், இப்படி சாதியின் பெயரால் சலுகைகள் கொடுக்கப்படுவதால் தாம் தமது சாதி அடையாளங்களை தோளில் அணிந்து கொள்ளலாம் என்று இல்லாமல், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைக்க மட்டுமின்றி மற்ற எல்லா நேரங்களிலும் சாதியை அடையாளமாகக் காட்டுவது அவமானமாகக் கருதப்பட வேண்டும்.

லக்கிலுக்,
சாதி ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனாலும் பல தலைமுறைகளாக சாதிமுறையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான ஒரு நீதி உங்களிடம் இருக்கிறது எனப் புரியவில்லை.

இருட்டில் தொலைத்ததை அங்கேயே தேட வேண்டியது நியாயந்தான். ஆனால், இருட்டை உருவாக்கிய கூட்டம் இன்னும் விளக்கை மறைத்துக் கொண்டு இருக்க நாம் தேடிக் கொண்டே இருந்து விட வேண்டி வரும். சீக்கிரம் இழந்ததைப் பிடித்து விட்டு, அடக்கி ஆள நினைக்கும் சாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட வெளிச்சத்தில் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

ஓகை,
சூதாட்ட விடுதியின் உதாரணத்த்தை எவ்வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியவில்லை

சாதி அமைப்பின் கீழேயே நியாயம் தேட முனைவது, சூதாட்ட விடுதியில் பணம் ஈட்ட முனைவது போலத்தான். இன்றைக்கு இந்து நாளிதழில் தலைமை நீதிபதி நியமனம் பற்றிய அறிவிப்பில் அவரது சாதி பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அதுதான், இந்த மனுசாத்திரத்தின் கொடுமை. இது ஒழிய வேண்டுமானால், சாதிக்குக் கொடுத்துள்ள அங்கீகாரம் போக வேண்டும்.


ஹரிஹரன்,

சாதியற்ற சமூகம் என்பது இம்மாதிரி உழைப்பால் மேலேறி வந்தபடியே அனைவரும் கல்வி கற்கின்றபோது மட்டுமே சாத்தியமாகும்.

ஒவ்வொருவரும் சாதி அடையாளங்களை முற்றிலும் துறந்து விட முன் வந்தால் சாதி ஒழிந்து விடும். கல்வியினால் மட்டுமே அது ஒழிந்து விடாது. பெரும் படிப்பு படித்த பல சாதிகளில் சாதி உணர்வு அதிகமாவதுதானே நடந்து கொண்டிருக்கிறது. உடலில் சாதி அடையாளங்கள், திருமண உறவுகளில் சாதி பார்ப்பது, பிறரின் சாதியை அறிய முயன்று ஒரே சாதி என்று தெரிந்தால் குறித்த சாதித் தமிழில் பேசுவது இவை அனைத்துமே அவமானங்களாக கருதி ஒதுக்கப்பட்டால் சாதி ஒழிந்து விடும்.

தமிழன்,

ஓத்துக்கொள்ளாதவர்களைச் ச்ட்டம் தண்டிக்க வேண்டும்.
சட்டத்தை விட தனிமனித மன மாற்றம், சமூக கருத்தாக்கம் தேவை. மற்றபடி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உருப்படியானவை:
 1. இந்திய அரசியல் சட்டத்திலே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று இருப்பது போய் சாதி ஒழிய வேண்டும் என்று வரவேண்டும்.இதற்காகத்தான் பெரியார் அன்று சட்டத்தை எரித்தார்.அதைப் பண்டித நேரு அவர்களிடம் சரியாக எடுத்துச் சொல்லாமல் மாற்றி பெரியார் இந்தியாவுக்கு எதிரானவர் என்று தடம் மாற்றிவிட்டனர்,
 2. அனைவர்க்கும் பிறப்பில் இருந்து இறப்புவரை ஒரு எண் தரப்பட வேண்டும்.அது அவர்கள் செய்யும் தொழில் வேலை வருமானம் வங்கி கணக்கு என்பது அனைத்தையும் இணைக்கும்,ஏமற்ற முடியாது வரவைக் காண்பிக்கவேண்டிவந்து விடும் அதிலேயே சாதிகளையும் குறிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டால் படிப்பு வேலை எதற்கும் சாதியே போடவேண்டியதில்லை.யார் எந்த சாதி என்பது ரகசியமாகவே இருக்கும்.அடுத்த தலைமுறைக்குச் சாதியே தெரியாது.
 3. ஆரம்பக்கல்வி முதலே ஆண்களும் பெண்பிள்ளைகளும் சேர்ந்தே உட்காரவேண்டும்.பேசிப் பழகி வளர்ந்து விட்டால்,காதல் மணங்கள் மலரும்,பல பிரச்சனைகள் ஒழியும்.
 4. அடுத்தத் தலைமுறையிலிருந்துக் கட்டாயமாகவும்,இந்த தலைமுறை விரும்புபவர்களும் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்,சாதி அமைப்புகள் கலைக்கப்படவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள்,தென் ஆப்பிரிக்காவைப் பாருங்கள்.

இது போன்ற எண்ணங்கள் வளர வேண்டும், பரவ வேண்டும் என்று நம்புவோம்.

அனானி,
சாதிகளை எல்லாம் பேப்பரில் எழுதி எரித்து விட்டு சாதி ஒழிந்தது என்று சந்தோசபடுங்கள். சாதிகளாவது ஒழியிறதாவது.

தீண்டாமை என்பது சமூகத்தின் முன் அவமானமாகவும், சட்டத்தின் முன் குற்றமாகவும் மாறியது கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததுதான். அதே போல் இன்று ஆரம்பித்தால் அடுத்த தலைமுறைக்குள் சாதி அடையாளம் அவமானமாக மாறி விடுவது நடக்கலாம்.

சாதி ஒழிய வேண்டும்

சூதாட்ட விடுதியில் யாரும் விடுதிக்கு எதிராக வெற்றி பெற்று விட முடியாது. விதிகளை அமைத்தவர்கள் அவர்கள். யார் என்ன செய்தாலும் தமக்கு ஒரு பங்கு வந்து விடுமாறுதான் விதிகளையே அமைத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறிப்பிட்ட பங்கு விதிகளை வகுத்த வகுப்பினருக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு அடித்து ஆடுகிறீர்களோ, அவ்வளவுக்களவு நீங்கள் எதிர்க்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் வளர்ந்து வருவார்கள்.

குறிப்பிட்ட சாதியினர் உழைப்பால் முன்னேறியிருக்கிறார்கள், அதைப் போல மற்றவர்களும் செய்ய வேண்டியதுதானே என்று சொல்லும் ஹரிஹரன், பிரெஞ்சுப் புரட்சியின் போது, "ரொட்டி இல்லையென்றால், கேக் சாப்பிடட்டும்" என்ற அரசியின் கூற்றை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னும் விபரமாகப் புரிய வேண்டுமென்றால், Invisible Man என்று கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் இனப் பாகுபாடுகளைப் பற்றி எழுதிய நாவலைப் படித்துப் பாருங்கள். (நான் இதை முழுவதும் படிக்கவில்லை )

'விதிகளுக்குக் கட்டுப் பட்டு கடினமாக உழைக்கும் 'நிக்கர்'களுக்கு நாங்கள் போடும் பொறைகள் சாப்பிடக் கிடைக்கத்தானே செய்கின்றன' என்று இன்றைக்கும் நிற ஆதிக்க வாதிகள் விவாதித்து வருகிறார்கள். அதே வகையில் சேர்வதுதான் உங்கள் கட்டுரைகளும்.

சாதி, அதனால் ஏற்பட்ட, அனுபவித்த கொடுமைகளை ஒழிக்க - சாதி அடையாளம் நிரந்தரத் தீர்வு ஆகாது. ஒவ்வொரு முறை சாதியின் பெயரால் ஒருவர் செயலாற்றும் போதும், அவர் சாதி முறை,் உள்ளமைந்த ஏற்றத் தாழ்வு, ஆதிக்கக் கோட்பாடுகளுக்கு உரம் சேர்க்கிறார்.

வேறு என்னதான் வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், சாதி அடையாளத்துடன் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஒடுக்கப்பட்டவர்கள் போராடுவது அவர்களை பயன்படுத்தி வந்த ஆதிக்க சாதியினரின் கைகளைப் பலப்படுத்துவதுதான்.

வியாழன், டிசம்பர் 21, 2006

பீட்டாவுடன் உறவாடலின் குறிப்புக்கள்

சோவியத் காலங்களில் ஒரு நாள் உளவுத் துறை அலுவலர்கள் வந்து சைபீரியாவுக்கு ஓலை கொண்டு வந்து காண்பிப்பார்களாம். அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டால் பழைய வாழ்க்கையை முற்றிலும் மறந்து விட்டு இருக்கும் வரை புதிய அனுபவத்துக்குள் நுழைய வேண்டியதுதான்.

ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சேவையில் உள் நுழைந்ததும், 'உங்கள் புதிய பிளாக்கர் தயாராக இருக்கிறது' என்ற கண்ணை நிறைக்கும், தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத தகவல் பட்டி தோன்றும். அந்த அழைப்பை ஏற்று திரும்பி வர முடியாத பிளாக்கர் பீட்டா எனப்படும் புதிய உலகுக்குள் நுழைந்து விட்டால் ஆனந்தங்களும், கடுப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு துரத்த ஆரம்பித்து விடும்.

தமிழ் பதிவர்களுக்கு முதல் இழப்பு, வார்ப்புருவில் தமிழில் செய்து வைத்திருந்த மாற்றங்கள் எல்லாம் பூச்சி பூச்சியாக மாறி விடுவது. என்னுடைய பதிவுகளில் பழைய பதிவுகள் எல்லாவற்றிலும் பின்னூட்டம் இட்டவர்களின் தமிழ்ப் பெயர்களுக்கும் அதே கதிதான். இதை யாரிடம் முறையிட வேண்டும் என்று பிளாக்கரில் விபரங்கள் தேடியும் கிடைக்கவில்லை. பீட்டா என்றால் பயன்படுத்துபவர்களின் குறை நிறைகளை வாங்குவதுதானே முதன்மை நோக்கம்!!

பழைய வார்ப்புருவை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முயன்றால் புதிய பிளாக்கரின் பல வசதிகள் கிடைக்காமல் போய் விடும். முந்தைய பதிப்பில் வார்ப்புருவில் எந்த மாற்றமும் html எனப்படும் மீயுரை நிரலை மாற்றுவதன் மூலமே செய்ய முடியும். புதிய பதிப்பில் நிரல் எழுதத் தெரியாதவர்களும் அழகு படுத்தும் வண்ணம் பல பிரிவுகளாக மேம்படுத்தும் சிறு வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.

பீட்டாவுக்கு உங்கள் பதிவுகள் மாற்றப்பட்டு விட்டன என்ற தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்ததும், உங்கள் கூகிள் கணக்கினைப் பயன்படுத்தி பீட்டா பிளாக்கருக்குள் நுழைந்து டேஷ் போர்டு எனப்படும் கருவிப் பலகைக்கு வந்து சேரலாம்.

 • கருவிப் பலகையில் Template என்ற சுட்டியை கிளிக்கி வரும் பக்கத்தில் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினால், புதிய வார்ப்புருவுக்கு மாறினால்தான் புதிய வசதிகளை பயன்படுத்த முடியும் என்ற தகவல் பக்கம் வரும். (வலைப்பதிவின் வலது மேல் உச்சியில் இருக்கும் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினாலும் இதே பக்கம் வந்து விடும்).

 • Upgrade Your Template என்று வார்ப்புரு தேர்வை புது பதிப்புக்கு மாற்றுவதை ஏற்றுக் கொண்டால், அடுத்த பக்கத்தில் பிடித்த வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்க அவற்றின் படங்களைக் காண்பிக்கிறார்கள். சில படங்களுக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் கூட உண்டு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதன் முன்னோட்டம் உடனடியாகக் காணக் கிடைக்கும். பிடித்த வட்டத்தில் புள்ளி வைத்து Save Template என்று சொல்லி விட்டால் புதிய தனிப்பயனாக்கக் கருவிப் பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள்.

 • இங்கு உங்கள் வலைப்பூவின் பல்வேறு பகுதிகள் படங்களாகத் தெரியும். அவற்றின் இடங்களை எலிக்குட்டியால் இழுத்து மாற்றிக் கொள்ளலாம். உள் விபரங்களை மாற்ற Edit என்ற சுட்டியைப் பாவிக்க வேண்டும். அதில் வரும் வெளிச் சாளரமும் எளிமையாக வடிவமைக்க வசதியாக இருக்கின்றது.

 • புதிதாக வார்ப்புருவில் ஏதாவது நிரலையோ, படத்தையோ, பட்டியலையோ, முழக்கங்களையோ சேர்க்க Add a Page Element என்ற சுட்டியைச் சொடுக்கினால், பல வகையான அலங்கரிப்புக் கூறுகளுக்கு படங்களாகத் தேர்வுகள். எடுத்துக் காட்டாக் statscounter நிரலைச் சேர்க்க HTML/JavaScript பகுதியை Add to Blog என்று சொடுக்கி வரும் பெட்டியில் தேவையான நிரலை ஒத்து ஒட்டிக் கொள்ளலாம்.
பிற்காலத்தில் வார்ப்புருவை மாற்றினாலும், இப்படிச் சேர்த்த பிற்சேர்க்கைகள் இழக்காமல் புதிய வார்ப்புருவிலும் சேர்க்கப்பட்டு விடுவதால், தினம் ஒரு வார்ப்புரு என்று கூட அலங்கரிப்பை மாற்றிக் கொள்ள வசதி கிடைத்து விடும்.

தமிழ் மணம் கருவிப் பட்டையை இணைக்க http://blog.thamizmanam.com/archives/51 என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும்.

புதன், டிசம்பர் 20, 2006

நிறவெறி பிடித்த தமிழர்கள்

'கறுப்பாக இருப்பது இழிந்தது. வெள்ளைத் தோல்தான் முன்னேற்றத்தின் அடையாளம்' என்பது இன்னொரு பிரச்சாரம். குழந்தை பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு நிலையிலும், 'அவன் கறுப்புதான், அவன் நல்ல நிறம்' என்று சமூக அடிமைத்தனத்தை பிரச்சாரம் செய்கிறோம்.

என்னதான் நுணுக்கமாக வேறுபட்டாலும் எல்லோருமை அரை நிறமான பழுப்பு நிறம்தான் என்பதை மறந்து விடுகிறோம். இதே பழக்கத்தில் ஊறிப் போய் இங்கு வெள்ளையானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட வெள்ளை தோல் படைத்த இனத்தவர் முன்பு தாழ்ந்து போய் விட்ட உணர்வு ஏற்படுகிறது. மிகக் கீழ்நிலையில் இருக்கும் வெள்ளை இனத்தவர் கூட முதல் பார்வையில் மதிப்பைப் பெற்று விடுகிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் நம்முடைய பழக்கங்களும், மனப்போக்கும்தான்.

மிக உயர்ந்த நிலையில் பணம் படைத்தவர்கள் கூட தமது முகத்தில் கெட்டியாக பவுடர் பூசிக் கொண்டு விமான நிலையத்துக்குள் வருவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். நம்முடைய தோல், நம்முடைய பழக்கங்கள், நம்முடைய உணவு முறை, நம்முடைய முக அமைப்பு இயற்கையில், பல்லாண்டு கால வாழ்க்கையில் விளைந்தவை. அவற்றை இழிந்ததாகக் கருதுவது நமது தாழ்நிலைக்கு அடிப்படைக் காரணம்,

இந்த இடைவெளியில்தான் பேர்அன்ட்லவ்லி என்று சக்கைப் போடு போட்ட சிகப்பழகு களிம்பு. இப்போது ஆண்களுக்கும் வந்து விட்டதாம். இந்த நிறவெறியை, நிறத் தாழ்வுணர்வை ஒழிக்க:

1. முகப்பவுடர்கள், சிகப்பழகு களிம்புகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம். நம்முடைய முகம் இயல்பாகவே அழகாக, கம்பீரமாக இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு வெளியே கிளம்புவோம்.

2. பல ஆண்டுகளாகப் பழகி விட்ட மனதை சரிப்படுத்த, நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒரே முகத்தை வெவ்வேறு நிறங்களில் பொருத்திக் கற்பனை செய்து பார்க்கலாம். வெள்ளையாக ஒரு பெண்ணைப் பார்த்தால், இதே முகம் கறுப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்று உருவகித்துப் பார்த்துக் கொள்ளலாம். கறுப்பு நிறத்தவரைப் பார்க்கும் போது வெள்ளை நிறத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த முறையைப் பின்பற்றி ஒரு சில வாரங்களிலேயே (ஆறு வாரங்கள்!!), தோல் நிறத்தைச் சார்ந்த அழகுணர்ச்சியை மாற்றிக் கொள்ள முடிந்தது.

3. யாரிடமும் தோல்நிறத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவதை எழுதுவதைத் தவிர்க்கலாம்.

நமது மண் தந்த, நமது பெற்றோர் தந்த தோல் நிறம் எதற்கும் குறைந்தது இல்லை, அதை மாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. அதைப் பெருமையாக ஏற்று தன்னம்பிக்கையோடு நடைபோடப் பழகுவோம்.

செவ்வாய், டிசம்பர் 19, 2006

ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' என்று லக்கிலுக் அடக்கமாக எழுதியிருந்தார். ஞாயிறு அன்று மதியம், சிவஞானம்ஜி ஐயா தொலைபேசி 'நியூசியிலிருந்து துளசி அம்மா வந்திருக்காங்க, மாலையில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கலாம்' என்று சொல்லியிருந்தார்.

சளியும் காய்ச்சலும் நிழலடிப்பது போலப்பட்டாலும் விடாப்பிடியாக நான்கு நாள் தாடியோடுக் கிளம்பி பனகல் பூங்கா அருகில் வண்டி நிறுத்த இடம் தேடி, நிறுத்தக் கூடாத இடம் என்று பிறகு புரிந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே போக வரும் போது எதிரில் அருள் குமாரும், வீரமணியும் சந்திப்பு இடம் மாறிவிட்டதாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடேசன் பூங்கா என்பது கேபிஎன் அலுவலகம் இருக்கும் சாலையில் என்று மங்கலாக நினைவு இருந்தாலும், உறுதி செய்து கொள்வதற்காக ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கேட்க அவர், ஜிஎன் சாலையில் போய் வலது புறம் சந்தில் திரும்பச் சொன்னார்.

அப்படியே தேடித் திரும்பிப் போகும் போது வண்டி மேலே போக மறுத்து நின்று விட்டது. தள்ளிக் கொண்டே போய் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு அருகிலிருக்கும் வாசல் வழியாக பூங்காவுக்குள் போனேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே, என்னைப் போன்ற கிட்டப்பார்வையினருக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வட்டம் அமைத்து அமர்ந்திருந்தார்கள் பதிவர்கள். பாசக்காரத் தலைவர் பாலபாரதி தனக்கு அருகிலேயே இடம் போட்டு என்னை அமர்த்திக் கொண்டார்.

கூட்டங்களின் உயிர்ச் சக்தி போன்ற பாலா அவ்வப்போது தம்மடிக்க தேநீர் குடிக்க போய் விட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உரையாடல் முன்திட்டமிடப்படாமல் இருந்தாலும் சுறுசுறுப்பாகவே போனது.

எல்லோராலும் சங்கம் வைத்துக் கலாய்க்கப்பட்டாலும், தானும் அதை சுணங்காமல் ஏற்றுக் கொண்டாலும், பாலபாரதியின் எண்ணத் தெளிவு பலமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. லக்கிலுக்கிலிருந்து அறிமுகத்தை ஆரம்பித்து வைக்கும்படி பாலபாரதி கேட்டுக் கொண்ட பொழுது புரியாவிட்டாலும் அவருக்கு இடது புறம் அமர்ந்திருந்த திரு எனப்படும் திருவள்ளுவர் கடைசியாக எல்லோருக்கும் பிறகு பேசினால் முத்தாய்ப்பாக இருக்கும் என்று யோசித்து அதைச் சொல்லியிருப்பார் என்று படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துயரமுறும் மக்களைப் பற்றி திரு பேசியதிலிருந்து திரும்பி, தமிழகத்தில் அகதிகளாக வந்திருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச்சு மாறி விட்டதை சுட்டிக் காட்டி இதைப் போலத்தான் வலைப்பதிவுகளிலும் பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்புவது பலமுறை நடந்து விடுகிறது என்று பாலா உணர்த்தினார்.

முதல் முறை இதே நடேசன் பூங்காவில் சந்தித்து மாமல்லபுரம் போய் விட்டு வந்த பதிவுகளின் விளைவாகத் தொடங்கியது சென்னப்பட்டிணம் கூட்டுப் பதிவு. சென்ற மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் விளைவாகத் தொடங்கியது வலைப்பதிவர் உதவிக் குழு என்ற கூட்டுப் பதிவு. 'ஏதாவது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதன் தலையில் கல்லைப் போடு அல்லது ஒரு கமிஷனைப் போடு' என்று அரசியல்வாதிகளைப் போல நாமும் பேசி விட்டுக் கலைந்து போக மனமில்லாமல் ஒரு கூட்டுப் பதிவு அல்லது குழு உருவாக்குவதோடு நின்று விடுகிறோமோ என்று தோன்றியது.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாதம், தமிழ்நாட்டு மக்களை நம்பி அகதிகளாக வரும் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்று பேசி விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலேயே கலைந்து விட்டோம்.
 • தெருக்களில் இறங்கி, அல்லது தத்தமது வட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது
 • உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி அகதி முகாம்களுக்குப் போய்ப் பார்ப்பது
 • ஊடகங்களில் பரவலாக எழுதி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவது
என்று உருப்படியான சில கருத்துக்கள் வெளி வந்தன. எதுவுமே கடைசி உருவம் பெறாமலேயே இருந்து விட்டன. கையெழுத்து இயக்கம் நடத்துவதன் மூலம் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். தமிழ் வலைப்பதிவர்களில் சிலர் ஆளுக்கு நூறு கையெழுத்து வாங்குவது என்று முடிவு செய்தாலும் சில ஆயிரம் கையெழுத்துக்களைத் திரட்டி விடலாம்.

திரு அவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கான அறிக்கையை ஒட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடித்து தன்னார்வலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையில், தமது நண்பர்கள், உறவினர்களிடம் மட்டுமாவது கையெழுத்து வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு முன்வருபவர்கள் பின்னூட்த்திலோ, தனிமடலிலோ தமது ஆர்வத்தைத் தெரிவிக்கவும்.

ஞாயிறு, டிசம்பர் 17, 2006

காந்தி மீண்டும் வர வேண்டும் !!

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகான் நீ வாழ்க வாழ்க!

சுப்பிரமணிய பாரதியார்

சனி, டிசம்பர் 16, 2006

நாட்குறிப்பு எழுதுங்கள்

நாட்குறிப்பு எழுதுவதால் பல பலன்கள் கிடைக்கின்றன.

1. Communication
கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறன் அதிகரிக்கிறது. (communication). நம்முடைய எண்ணங்களை சரியாக அணி வகுத்து பிறருக்கு எடுத்துச் செல்வதற்கான பயிற்சி தினசரி எழுதும்போது கிடைக்கிறது. எழுதும் போது கிடைக்கும் இந்த அதிகரிப்பு, பேசும் போதும் உதவுகிறது. வீடு, வேலை, வெளியிடங்களில் நம்முடைய எண்ணங்களை திறமையாக வெளிப்படுத்துவதற்கு இது உதவும்.

2. மொழித் திறன் (language skills)
சித்திரமும் கைப்பழக்கம் என்பதன் படி நமது தாய் மொழியிலோ ஆங்கிலத்திலோ வளமையாக எழுத ஆரம்பிக்கும் போது மொழியறிவில் இருக்கும் பழுதுகள், சின்ன வயதில் கற்று மறந்து விட்ட இலக்கண விதிகள் கவனத்துக்கு வந்து மொழித் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

3. Introspection
நாளில் நடந்ததைத் திரும்பிப் பார்த்து தவறுகளை உணர்ந்து கொள்ள முடியும். நேரத்தை வீணாகக் கழித்ததைப் புரிந்து கொண்டு மனதளவில் திருத்திக் கொள்ளுதல் நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் கிடைக்கிறது.

4. விழிப்புணர்வு

நாளில் வேலைகளைச் செய்யும் போது இவற்றைப் பற்றி குறிப்புகள் எழுத வேண்டுமே என்ற நிதானிப்பு மனதில் ஓடிக் கொண்டேயிருக்க நம்முடைய செயல்களில் அமைதியும் தெளிவும் அதிகரிக்கிறது.

உணர்ச்சிகளில் மூழ்கி, நடப்பதற்கு எதிர்வினைகளை செய்து கொண்டே போனால், நம் வாழ்க்கை நம் கையில் இருக்காது. விழிப்புணர்வு நாள் முழுவதும் இருந்தால் எந்த ஒரு சூழலிலும் அந்த கணத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு நல்ல பலன் கிடைக்கும் வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்.

5. பிறர் கருத்துக்கள்

எழுதிய நாட்குறிப்புகளை பிறருடன் பகிர்ந்து கொண்டால், நம்முடைய செயல்களுக்கான ஒரு உரைகல் இருந்து கொண்டேயிருக்கும். படிப்பவர்களின் கருத்துக்கள் நமது குறைபாடுகளைச் சுட்டியும், நிறைகளைப் போற்றியும் நம்மை வழி நடத்தும்.

நம்மைப் பொறுத்த வரை நம்முடைய செயல்களுக்கு ஒரு மதிப்பீடு இருக்கும். சென்னையில் கிண்டியிலிருந்து மைலாப்பூர் போக நான் குறிப்பிட்ட வழியில் போகிறேன். அதுதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்று பல ஆண்டுகளாக அதிலேயே ஓடிக் கொண்டிருக்கிறேன். இன்னொருவருக்கு அதை விடக் குறுகலான வழி தெரிந்திருக்கலாம். நமது வழியை அவரிடம் சொன்னால், அவர் நம்மை மேம்படுத்தலாம.

6. அனுபவப் பாடங்கள்.

பல விஷயங்கள் மிக இயல்பானதாக வெளிப்படையானதாக நமக்குத் தோன்றுவது இன்னொருவருக்கு இன்னும் புதுமையாக இருக்கலாம். நம்முடைய வளர்ப்பு, பின்புலம், அனுபவங்களில் நாம் ஈட்டிய பாடங்கள் இன்னொருவருக்குக் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.

பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது அனுபவங்கள் அவர்களுக்கும் படிப்பினையாக இருக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நம்முடைய வழி சிறந்ததாக இருந்தால் அவரும் அந்த வழியில் போக ஆரம்பித்து விடலாம்

படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்

இன்றைய கல்வி முறையின் அழுத்தங்கள் பல இடங்களை உடைத்து வருகின்றன.
 • தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்
 • பள்ளியில் கண்மூடித்தனமான போட்டி,
 • மாணவர்களுக்கு ஓய்வே இல்லாத தயாரிப்புகள்,
 • குறுக்கு வழியில் மதிப்பெண்கள்,
 • கல்லூரி இடம் பிடிப்பு,
 • வியாபாரமாகி விட்ட கல்விக் கூடங்கள்
  என்று மேற்கத்திய சமூகங்களுக்கு சேவை செய்யும் இளைஞர்களைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மதிப்பீட்டு முறை
பன்னிரண்டு ஆண்டு பள்ளிப்படிப்பை
 • ஒரு ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் உச்சகட்டமாக ஆக்கி,
 • மூன்று மணி நேரத் தேர்வுகளாக ஆறேழு தாள்களில் எழுதி
 • ஒவ்வொரு தாளையும் இருபது நிமிடத்தில் சுண்டிப் பார்க்கும்
வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மதிப்பீட்டைப் புறக்கணித்து மாணவன் முகத்தையே பார்த்திராத ஒருவர் மாணவனின் தேர்வுத்தாளை மதிப்பிட்டு கல்வித் தரத்தை தீர்மானிப்பது முட்டாள்தனமானது.

கல்வி ஊடுமொழி
குழந்தைகள் அன்னிய மொழியில் படிப்பதுதான் இயற்கை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய கிராமங்களில் கூட கூரை போட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி என்று ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய அனுபவத்தில் தாய்மொழியில் கல்வி பெறாதவர்கள் உலக வாழ்க்கையில் எவ்வளவு திறமையாக நடந்து கொண்டாலும், அவர்களுடைய சிந்தனை ஆழம் குறைவாக இருக்கிறது. எல்லா பொதுவான கருத்துக்களைப் போல இதற்கும் எதிர்மறையாக பல தனி உதாரணங்களைக் காட்டலாம் என்றாலும், பொதுவாக ஆங்கில வழிக் கல்வி சிந்தனைத் திறனை முடக்கி விடுகிறது என்றே சொல்வேன்.

கணினி பற்றிக் கற்கும் போது RAM என்பதை ரேம் என்று தமிழில் எழுதிக் கற்றுக் கொள்ளலாம். அல்லது நினைவகம் என்று தமிழ்ப் படுத்திக் கற்கலாம். ரேம் என்று படித்தால் வெளி உலகுடன் உறவாடும் போது திணறல் குறைவாக உடனேயே சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் புரிதல் முழுமையடையாது.

நினைவகம் என்று கற்றுக் கொண்டால் ஆங்கிலத்தில் உரையாடும் போது, எழுதும் போது அதற்கான ஆங்கிலச் சொல்லை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இந்தத் தொல்லையை மட்டும் சமாளித்துக் கொண்டால் கிடைக்கும் பலன் அளவிட முடியாதது.

கல்வி என்பது விபரங்களை மனதில் திணித்துக் கொண்டு, பின்னர் வாந்தி எடுப்பது இல்லை. உணவை சாப்பிட்டு செரித்து, ஆற்றலாக வெளிப்படுவதுதான் கல்வி. அப்படி செரிக்க உதவுவது நினைவகம் என்ற சொல். நினைவகம் என்று படித்ததும், பல நிலையிலான புரிதல்கள் கிடைக்கின்றன.

அந்தப் புரிதல்களின் விளைவாக சிந்தனை கிளரப்பட்டு, பல திசைகளில் எண்ணங்கள் ஓட முடியும். பல்வேறு துறைகளில் கற்றுக் கொண்டவற்றை இந்த புரிதலுடன் இணைத்து புதிய கருத்துக்கள், கண்டு பிடிப்புகள் உருவாகலாம்.

நம்முடைய கல்வி இந்தத் திசையில் திரும்பினால்தான் நம் சமூகம் தன்னுடைய முழுமையான பங்களிப்பை மனித குலத்துக்கு வழங்க முடியும். மூன்றாயிரம் ஆண்டு வழி வந்த பண்பாடு வெளியிலிருந்து கிடைத்த அறிவுச் செல்வங்களை இணைத்து உலகுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவை ஏராளம். நமக்குப் பொருந்தாததை நம் உடல் செரிக்க முடியாததை உள்ளே தள்ளி வந்தால் வயிற்று வலியும் வாந்தியும்தான் மிஞ்சும்.
 • பள்ளிக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். பத்து ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாணவர்கள் தமது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 • ஆசிரியர் மீது நம்பிக்கை வைக்கும் கல்வி முறை இருக்க வேண்டும்.உயர் கல்விக் கூடங்களில் இருப்பது போல் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள், தொடர்ச்சியான மதிப்பீடு மூலம் வழங்கப்பட வேண்டும்.

 • எழுத்துத் தேர்வை மட்டும் சார்ந்திராமல், பேச்சுத் திறன், கை வேலை, எழுதுதல், நுண்கலைகள் போன்றவற்றையும், மற்றவர்களுடன் பழகும் திறன், ஆசிரியரின் சொந்த மதிப்பீடு இவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உள்ளுறை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

 • ஆண்டு இறுதியில் பொதுத் தேர்விலும் எழுத்துத் தேர்வு, பேச்சு, ஆசிரியர்/பெற்றோர் கூட்டத்தில் செய்து காட்டுதல், புதிய படைப்புகள் என்று வெளிப்படையாக நடத்தி மதிப்பிட வேண்டும்.

வியாழன், டிசம்பர் 14, 2006

பத்ரியின் எண்ணங்கள்

பிளாக் என்பது முதலில் தெரிய வந்தது பத்ரியின் மூலம்தான். அப்போது ழ-கணினி வேலைகளில் மூழ்கி, மடற்குழுக்களில் அடித்துக் கொண்டிருந்த நேரம். எங்களை எல்லாம் அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாகக் குறைப்பட்டுக் கொண்டு வாதாடிக் கொண்டிருந்தேன் நான். அப்போது ஏற்பாடு செய்திருந்த ழ-கணினி வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்து அதைப் பற்றித் தன்னுடைய பிளாக்கில் எழுதுவதாக தமிழினிக்ஸ் குழுவில் மடல் எழுதியிருந்தார்.

அவராவது வந்து பார்த்து, 'நாங்கள் ஒன்றும் இது வரை பணி செய்த தன்னார்வலர்களை ஒதுக்கி விட்டுப் போக நினைக்கவில்லை என்று நடுநிலையாக எழுதட்டும்' என்று நினைத்துக் கொண்டேன். அன்றையக் கூட்டத்துக்கு அரைக் கால் சட்டையுடன், அமெரிக்க பாணி இயல்பான உடையில் வந்திருந்தவர்தான் பத்ரி என்று ஊகித்துக் கொண்டோம்.

அடுத்த நாளிலிருந்து மூன்று பகுதிகளாக கூட்டம் பற்றி எழுதி புகைப்படங்களையும் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். அன்றிலிருந்து thoughtsintamil.blogspot.com என்ற வலைமுகவரி தினசரி போய்ப் பார்க்கும் இடமாக மாறி விட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய இடுகைகள், நாட்டு நடப்புகளை அலசும் பார்வைகள் என்று வலைப்பதிவுகள் என்ற பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட ஆரம்பித்தது பத்ரியின் வலைப்பதிவின் மூலமாக.

இந்திய அளவில் நடந்த சிறந்த வலைப்பதிவுகளுக்கான போட்டிகளில் பரிசுகள் பெற்றது, ஆர்வம் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தது என்று கவனத்தை இழுத்துப் பிடித்தே வைத்திருந்தது பத்ரியின் வலைப்பதிவு. அவரது பதிவில் இணைத்திருந்த வலது பக்கச் சுட்டிகளின் மூலம் மற்ற வலைப்பூக்களையும் போய்ப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பல மாதங்களாக அவரது முகப்புப் பக்கம்தான் எனக்கு வலைப்பூக்களை மேய்வதற்கான நுழைவாயிலாக இருந்தது.

தமிழ் மணத்தில் ஏற்பட்ட சச்சரவுகள், மறு மொழி மட்டுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டது, சிலபதிவுகள் திரட்டுதல் நிறுத்தப்பட்டது போன்றவை நடக்கும் போது பத்ரியின் எழுத்துக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எப்போது அந்தத் தொட்டிலை விட்டு வளர்ந்து வெளியே வந்து வலைப்பூவுலகில் தன்னிச்சையாக உலாவவும், எனக்கென ஒரு அடையாளமும் உருவாக்கி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன் என்பது நினைவில்லா விட்டாலும், தாயின் மடியைப் போல வலைப்பூக்களின் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள உதவியது பத்ரியின் பதிவுதான். என்னைப் போலவே பலர் பத்ரியின் பதிவு மூலம் வலைப்பதிவுலகத்துக்குள் நுழைந்திருப்பார்கள் என்பது உறுதி.

திங்கள், டிசம்பர் 04, 2006

மாற்று வழி 3 - லினக்ஸ்

http://kaniporul.blogspot.com/2010/08/3_12.html

வலைமகுடம் - 2

உயரப் பறக்கும் பருந்து போல பார்வை பரத்தி எங்கு என்ன நடக்கிறது என்று உடனடி தீர்ப்பு சொல்லி அதையே ஒரு பதிவாகச் செய்து விட்டவர் போஸ்டன் பாலா. பலருக்கு ஊக்கமூட்டுபவராக இருக்கிறார். ஈதமிழ் என்ற தனது முதன்மைப் பதிவில் அவருக்கே உரித்த பாணியில் வலது பக்கம் நீளமான அலங்கரிப்புகள். விட்டேற்றியான நடையில் சுழன்றடிக்கும் சாட்டையாக வந்து விழும் சொற்களில் பல பொருட்களைப் பற்றி எழுதி விடுவார்.

பாபா என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் போஸ்டன் பாலா தனது புகைப்படத்தை வரை கோடுகளாக வெளியிட்டிருப்பதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு செயலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

ஜூன் 2006ல், ஒரு மாத இடைவெளி விட்டு அந்த நேரத்தில் எழுதி வைத்திருந்த இருபது, இருபத்தைந்து பதிவுகளை காலையில் ஒன்று மாலையில் ஒன்றாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திரமாக பாலா இருந்தார். திடீரென்று ஒரு பதிவில் இந்த வார உண்மையான நட்சத்திரம் மா சிவகுமார் என்று நான் வெளியிட்ட எல்லா பதிவுகளையும் தொகுத்து போட்டார். அன்று முதல் அவ்வப்போது snapjudgeல் இணைப்பதிலும், எப்பொழுதாவது எழுதும் பின்னூட்டங்களிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டார்.

முத்து தமிழினி ஒரு இடத்தில் சொன்னது போல snapjudgeல் ஒரு பதிவு இடம் பெறுவதை வைத்து அதன் தரத்தை எழுதியவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவரது உள்ளேற்கும் திறன் வியக்கத்தக்கது. ஓவியக் கலை ரசிப்பிலிருந்து, புத்தக விவரிப்புகள், திரைப்பட விமரிசனங்கள், அரசியல் நிகழ்வுகள், சக வலைப்பதிவர்களைக் கலாய்த்தல் என்று எல்லாத் துறைகளிலும் கை வைத்து தனக்கே உரிய பாணியில் அவற்றின் பரிமாணங்களை வெளிப்படுத்தி விடுவார். இவரது ஈரப்பதம் இல்லாத நகைச்சுவைப் பதிவுகள் ஒரு நிமிடம் இழுத்துப் பிடித்து பல மணி நேரங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கக் கூடியவை.

இது வரை நேரில் பார்த்திரா விட்டாலும், எண்ணங்களால் மிக நெருங்கிய உணர்வைத் தரும் பதிவர் பாலா. என் பார்வையில் பட்ட வரையிலேயே நான்கைந்து இடங்களில் எனது எழுத்து பதிவை பரிந்துரைத்து எழுதியிருந்தார். இந்த எழுத்து பதிவில் எப்போதாவது தடுமாற்றம் வந்து விடுமோ என்று படும் போது ஒரு பின்னூட்டம் பாலாவிடமிருந்து வந்திருக்கும்.

பாலாவின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும்.

ஞாயிறு, நவம்பர் 26, 2006

கிரிக்கெட்டில் வெற்றியா தோல்வியா?

இந்து நாளிதழின் விளையாட்டுப் பிரிவு தலைமை ஆசிரியர், நிர்மல் சேகர். அவரைப் போல் விளையாட்டுக்களை அனுபவித்து ரசித்து எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவரது இன்றைய கட்டுரையைப் படியுங்கள்.

அவர் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு சம்பவம், இரண்டு ஆண்டுகள் விம்பிள்டன் வெற்றி வீரராக இருந்து அடுத்த ஆண்டில் இரண்டாம் சுற்றில் தோற்ற உடனான பத்திரிகையாளர் சந்திப்பில், போரிஸ் பெக்கர் சொன்னது.

"ஏன் எல்லோரும் இப்படி உம்மென்று இருக்கிறீர்கள். மைதானத்தில் யாரும் செத்து விடவில்லை, நான் ஒரு ஆட்டத்தில் தோற்று விட்டேன் அவ்வளவுதான்." இது நடக்கும் போது பெக்கருக்கு இருபது வயது நிரம்பவில்லை.

விதர்பாவில் விவசாயிகள் சாகும் பிரச்சனையை விட்டு விட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் இல்லை, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியோ, தோல்வியோ!

தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா: இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !

சனி, நவம்பர் 25, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 5

சில விருப்பங்கள் என்று குறிப்பிட வேண்டுமானால்.
 1. technoratiயில் இருப்பது போல ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு கணக்குக் கொடுத்து தனது பதிவுகளை ஒரே இடத்தில் கண்காணிக்க வசதி செய்யலாம்.

 2. பதிவுகளை ஒரு சில காரணிகளின் அடிப்படையில் மதிப்பிட்டு வரிசைப் படுத்தலாம்.
  • 10 அதிகமாகப் பார்வையிடப்பட்ட பதிவுகள்
  • 10 அதிகமாக பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள்
  • அதிகமான் எண்ணிக்கையில் எழுதிய பதிவர்கள்
  • பின்னூட்டம் கொடுத்தவர்கள்
  • நீண்ட காலம் பதிந்து கொண்டு இருப்பவர்கள்
   என்று சுவையான விபரங்களைப் பட்டியலிடலாம

 3. செந்தழல் ரவி வேலை வாய்ப்பு பதிவு ஆரம்பித்ததைத் தொடர்ந்து யாராவது வர்த்தக வாய்ப்புகளுக்காக ஒன்றை ஆரம்பிக்கலாம்.

 4. ஒவ்வொருவரும் தன் வீட்டில் கேரேஜ் விற்பனை செய்வது போல கடை திறக்கலாம். இது நடக்கலாம், நடக்காமல் போகலாம்.

  நமக்கு தொழில் செய்வது, பணம் ஈட்டுவது என்பது ஒரு அவமானமாகவே இன்னும் இருந்து வருகிறது. வலைப்பதிவின் மூலம் ஒருவர் சம்பாதிக்க முயல்வதை இழிவாகக் கருதும் வரை இது வளர முடியாது.

 5. வலை திரட்டிகளிலேயே, இலக்கியம், வணிகத் தொடர்புகள், விவாத மேடை என்று தனிப் பிரிவுகள் வடிவமைப்புகள் கொடுக்கலாம்.

 6. வலைப்பதிவர்கள் சிலரை குறிப்பிட்ட காரணியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பதிவுகளுக்கு மதிப்பெண் கொடுக்கச் சொல்லலாம். எல்ல்லோருக்கும் இந்த உரிமை இல்லாமல் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு மட்டும் கணினி நிரல் அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும்
  .
  மட்டுறுத்தும் வசதியை அளித்து மோசமான பதிவுகளை கீழிறக்கச் செய்யலாம்.
(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

==நிறைந்தது. ===
1, 2, 3, 4

வெள்ளி, நவம்பர் 24, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 4

வலைத் திரட்டிகளில் அடுத்து என்னென்ன வசதிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பட்டியலிடாமல், எதைச் சாதிக்க முயல்வோம் என்று சில எண்ணங்களைக் கொடுத்தால் விவாதத்துக்குப் பலனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் பன்னாட்டு தேசிய இனங்களில் ஒன்று. இந்தியா, ஈழம், மலேசியா/சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைத்து, தமிழர்களுக்கென்று பொதுவாக இருக்கும் பழக்கங்கள், பண்புகள், அறிவுகள் மூலம் உலகளாவிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தமிழ் டாட் நெட்டில் தமிழ் மடற்குழு மூலமாக சமூகம் உருவான போது அதன்அடுத்த நிலை என்று எறும்புகள் முயற்சி நடைபெற்றது. மின்னஞ்சலைப் பயன்படுத்தி உருவான மடற்குழுக்கள் அடுத்த நிலையைப் பிடிக்க தவறி விட்டன. மடற்குழுக்கள் மூலமே சாதித்துக் காட்டிய பல மென்பொருள் உருவாக்கத் திட்டங்கள், மதுரைத் திட்டம் போன்று வையவிரிவு வலையின் மீது இயங்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம்.

ஒவ்வொருவரும் உருவாக்கி வைத்திருக்கும் வலைப்பூக்களை தொகுத்து தரும் பணிகளை செய்கின்ற வலைத் திரட்டிகள். அடுத்து என்ன? இலக்கிய வளர்ச்சி, பொருளாதார தொடர்புகள்? அறிவியல் தொழில்நுட்பப் பணிகள்? சமூகச் சங்கங்கள்?

மதுரை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு அப்புறம் தருமி அவர்கள் வலைப்பூவுலகம் தமிழ்நாட்டுக்காக ஒரு think tank ஆகா பரிணமிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டிருந்தார்.

திராவிடத் தமிழர்கள், சென்னப்பட்டிணம், விக்கி பசங்க என்று குழு சேர்பவர்கள் ஒவ்வொரு திசையில் அடுத்தக் கட்டத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. எழுதிப் பதித்து, பின்னூட்டம் இட்டு போவதுடன் கூடுதலாக, கீழ்த்தரமான மொழியில் கீழ்த்தரமான வகையில் பதிவுகள் போடுவதற்கு மாற்றாக இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அத்தகைய சிந்தனைகளின் விளைவாக தேவைகள் வந்தால் தொழில் நுட்ப வளர்ச்சி அவற்றைத் தொடர்ந்து வந்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

வியாழன், நவம்பர் 23, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 3

வலைப்பதிவுகள், நம்ம வீட்டில் கொலு வைத்திருப்பது போல.

பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும் (பொன்ஸ் பக்கங்கள்).

நமது படைப்புகளை கற்பனைகளை உருக்கொடுத்து அலங்கரித்து வைக்கிறோம். அதைப் பார்க்க யாரும் வரலாம் என்று பொதுவாக அறிவித்து விடுகிறோம். அது பற்றிய விபரங்கள் அறிந்த மக்கள் வருகிறார்கள். பெரும்பாலானோர் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமலேயே, தாம் யாரென்று வெளிப்படுத்தாமலேயே போய் விடுகிறார்கள். ஒரு சிலர் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

இந்தச் சமூகத்தில் நல்ல பண்பு, யாராவது நமது வலைபதிவுக்கு வந்து பின்னூட்டம் எழுதினால் அவருக்கு உடனேயே பதில் சொல்வது. நம் வீட்டுக்கு யாராவது வந்து நம்மிடம் பேசினால் பதில் சொல்லாமல் இருப்போமா?

இன்னும் ஒரு அடி தாண்டினால், நமது வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்கள் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு நாமும் போய் எதிர்மரியாதை செய்ய வேண்டும். அங்கிருக்கும் படைப்புகளைப் பார்த்து நமது கருத்துக்களை எழுத வேண்டும்.

பிரபலமாக எல்லோராலும் விரும்பப்படும் வலைப்பதிவர்கள் மேலே சொன்ன இரண்டையும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். (துளசி கோபால், கடல் கணேசன்).

ஒவ்வொரு வலைப்பதிவும் அதன் படைப்பாளியின் வீட்டு அறை போல. உங்களுக்குப் பிடித்திருந்தால் அடிக்கடி போகலாம். உங்கள் படைப்புகளை விரும்பும் பிறர் அடிக்கடி உங்கள் வீட்டுக்கு வருவார்கள். யாரும் யாருக்கும் உயர்வு கிடையாது. எழுதுவதற்கு நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் பதிகிறார்கள். படிப்பவருக்குக் கருத்து தோன்றினால் எழுதிப் போடுகிறார். இன்னும் உந்துதால் வந்து விட்டால், தனது பதிவில் ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார்.

இதில் என்ன அருமை என்றால் எல்லோருமே வாசகர்கள், படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசகர் கடிதம் எழுதுபவர்கள். பத்திரிகாசிரியர் என்றால் கொம்பு முளைத்திருக்கும், எழுத்தாளர் என்றால் தேவதைகள் போலச் சிறகுகள் இருக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் அவரளவில் படைப்பாளிகள்.

படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளைக் குறைக்கின்றன வலைப்பதிவுகள். முன்பெல்லாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஏஜென்டுகளை நம்பி இருப்பார்கள். இப்போது நேரடியாக ஏற்றுமதி நடக்கிறது. இடைத்தரகர்கள் மறைந்து போகும் மாயம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

புதன், நவம்பர் 22, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 2

வலைப்பதிவு திரட்டிகளின் அடுத்த நிலை என்பதில் இரண்டு பரிமாணங்கள். தொழில் நுட்பம், சமூகம். தொழில் நுட்பத்தில் புதிதாக சாதிக்கும் வல்லமை நம் கையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஆங்கிலத்தில், மேல் நாட்டில் இன்று ஏற்படும் மேம்பாடுகள் நமக்கு நாளை வந்து சேரலாம்.

சமூக நிலையில், வலைப்பதிவுகள் என்பது இது வரை எந்த ஒரு சமூகமும் கண்டிராத புதிய பரிமாணம். அதனால் எதனோடும் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியாது.

இரண்டு மூன்று பழக்கமானவைகளுடன் ஓரளவு ஒப்பிடலாம்.

முதலில் பத்திரிகைகள், படைப்புகள், வாசகர்கள்.

முன்பெல்லாம் எழுத்துத் திறமை பெற்றவர்கள் 'தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதி, திரும்பப் பெற வேண்டும் என்றால் தபால்தலை ஒட்டிய சுயவிலாசம் எழுதிய உறையுடன்' பத்திர்கைகளுக்கு தமது படைப்புகளை அனுப்பிப் பார்க்க வேண்டும். பத்திரிகை ஆசிரியருக்குப் பிடித்திருந்தால் அந்தப் படைப்பு அச்சில் வரும். பத்திரிகை நிறுவனம், தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு நாடெங்கும் பத்திரிகை கிடக்கச் செய்கிறது. அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க லட்சக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான வாசகர்கள். படித்தவர்களில் மிகச் சிலர் தமது கருத்துக்களைக் கடிதமாக எழுதி அனுப்புவார்கள்.

எழுத்தாளர், வாசகர் கடிதம் எழுதுபவர், பத்திரிகை ஆசிரியர் என்று சிறு எண்ணிக்கையானவர்களைத் தவிர்த்து பெருவாரியான மக்கள் ஓசையில்லாமல் படித்து விட்டுப் போய் விடுகிறவர்கள்.

வலைப்பதிவுகள் மூலம் நமக்கு நாமே எழுத்தாளர், பதிப்பாளர். படைப்புகளை, நமக்குப் பிடித்ததை எழுதி விரும்பினால் உடனேயெ வெளியிட்டு விடலாம்.

கணினி நிரல் எழுதத் தெரிந்தால்தான் எதையும் கணினியில் படைக்க முடியும் என்ற தடை நீங்கி, தட்டச்சு செய்து உள்ளிட்டு விட்டால் நமது படைப்பு வெளியாகி விடும். யார் வேண்டுமானாலும் வந்து படித்துக் கொள்ளலாம். "பட்டனை அமுக்கி வெளியிடுங்கள் (push buttom publishing)" என்ற முழக்கத்துடன் இலவசச் சேவைகளை அளிக்கிறார்கள்.

யார் வருவார்கள்? இப்படி ஒருவர் எழுதி வைத்திருக்கிறார் என்று எப்படி மக்களுக்குத் தெரியும்?

நாம் எழுதி வெளியிட்ட விபரங்களைத் திரட்டி தலைப்பையும் முதல் நான்கு வரிகளையும் இன்னொரு தளத்தில் விளம்பரப்படுத்தும் மென்பொருள் சேவைகளும் இலவசமாக இயங்குகின்றன. (தமிழ் மணம், தேன்கூடு, தமிழ்பிளாக்ஸ்). இத்தகைய தளத்தில் நூற்றுக் கணக்கானோர் எழுதியவற்றின் விபரங்கள் காணக் கிடைப்பதால் வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

எழுத முடிந்த யாரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் பார்வைக்குத் தமது படைப்பு விவரங்களை அனுப்புவது எளிதாகிப் போய் விட்டதுதான் வலைப்பதிவுகள். மேலே சொன்ன திரட்டிகள் மூலமாகவோ அல்லது நமது முகவரி மூலமாகவோ நாம் எழுதியதைப் படித்து விட்டுக் கருத்து சொல்லவும் எளிதான வசதிகள் வலைப்பதிவு கருவியிலேயே இருக்கிறது. சொல்ல வேண்டியதைத் தட்டச்சு செய்து ஒரு கிளிக்கினால் பின்னூட்டமாக நமது கருத்தை வெளியிட்டு விடலாம். இது வாசகர் கடிதம்.

இத்தோடு பத்திரிகையோடு ஒப்பிடுவது நின்று போகிறது. பத்திரிகையை அச்சிட, வினியோகம் செய்ய செலவு அதிகம். எத்தனை பேர் காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று கணக்கு கிடைத்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

1

செவ்வாய், நவம்பர் 21, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

தூள் படத்தின் ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தொழிற்சாலைக்குள் வெடிமருந்தை வைத்து விட்டு நீண்ட கயிற்றில் தீவைத்து வெடிக்க முயற்சிப்பார்கள். நாயகன் விக்ரம் ஓடிப்போய் அந்தத் தீ வெடிமருந்தை அடைந்து விடாமல் நாசத்தைத் தவிர்த்து விடுவார். தமிழர் நான்கு பேர், அதுவும் படித்த அறிவுஜீவிகள் சிலர் கூடும் இடத்தில் இயல்பாகவே இருக்கும் வெடிக்கும் பொருளுக்கு முன்னால் தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டார், "வலைப்பூக்களில் சாதியைக் குறித்த விவாதங்கள் தேவையா?" என்ற விவாதத்தைத் துவங்கி வைத்த பாலபாரதி.

டி பி ஆர் ஜோசப், முதலில் எழுந்து இந்த விவாதமே இங்கு தேவையா? என்று கொஞ்சம் சூட்டைத் தணித்தார். 'மும்பையில் வலைப்பதிவர்கள் செய்தது போல ஒரு சங்கமாகப் பதிவு செய்து நிருபர்களுக்கான உரிமைகளைப் பெற முயற்சிக்கலாம், அது போன்ற நடைமுறை செயல்களைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை செலவிடலாம்' என்பது அவர் கருத்து.

சென்னைப் பட்டிணம் கூட்டு வலைப்பதிவு ஆரம்பித்து ஆரம்ப கால சந்திப்புகளிலேயே இத்தகைய வளர்ச்சியை வலியுறுத்தியிருந்தார் பாலபாரதி. சாந்தி அக்கா என்ற பதிவைப் போட்ட அதே பாலபாரதிதான் அனானி ஆட்டம் என்று வரவேற்கும் பதிவுகளையும் போடுகிறார். தனி ஒருவராக வெற்றிகரமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய இவர் செய்யக் கூடியது நிறைய இருக்கிறது.

சிமுலேஷன் "வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை. அதற்கு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.

முன்பு மிக மோசமாக இருந்த வலைப் பதிவுச் சூழல் இப்போது மோசம் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளதாக ரோஸா வசந்த் கூறினார். 'முன்பெல்லாம் குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசுவதே பாவம் என்று இருந்த நிலை போய் இப்போது சுதந்திரமாக அடித்துக் கொள்ளும் நிலை இருப்பது மேல்தான். இது இன்னும் முன்னேறி ஆரோக்கியமான சூழல் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.

"அலுவலகத்தில் வேலை பற்றி விவாதிக்கும் போது நாம் சாதி பற்றி பேசுகிறோமா? உருப்படியாக வேலை நடக்கும் இடங்களில் சாதிப் பேச்சை எடுப்பது எதிர்மறையாகத்தான் முடியும்" இது நான்.

"சாதி என்பது ஒரு நடைமுறை உண்மை. அதை விவாதிக்க மாட்டோம் என்று கண்ணை மூடிக் கொண்டால் பிரச்சனை மறைந்து விடுமா என்ன? ஒடுக்கப்பட்ட குழுவினர் ஒன்று சேர்ந்து செயல்பட இந்தத் தளமும் உதவட்டுமே" என்று அருள்குமார் சாதி பற்றிய விவாதங்கள் தவிர்க்க வேண்டியவை அல்ல என்று கருத்து சொன்னார்.

"அடிப்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு மனக்கஷ்டங்களும் நேர விரயமும் ஆகலாம். ஆனால் வெறும் பார்வையாளராக படித்து விட்டுப் போகும் தம்மைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களை அத்தகைய விவாதங்கள் காட்டுகின்றன" என்று பூபாளன் என்ற வாசகர் கூறினார்.

"பாலபாரதி குறிப்பாகச் சொன்ன ஒரு விவாதம் அறிவுபூர்வமாகத்தான் நடைபெற்றது என்பது தன் கருத்து" என்று ஓகை சொன்னார்.

கூட்டம் முடிந்து வளசரவாக்கம் நோக்கிப் போகும் போது கூட வந்த கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த நண்பர், அவர்கள் ஊரிலும் "இது போல கூட்டங்களில் காரமான விவாதங்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரக் கூட்டம் ஐந்து ஆறு மணி நேரத்துக்கு நீடித்து விடும். இங்கும் அது மாதிரி நடக்கப் போகிறதோ என்று பயந்தேன், ஆனால் சுருக்கமாக முடிந்து விட்டது" என்றார். அவர்கள் அடித்துக் கொள்வது இலக்கிய வாதங்களில்தானாம்.
அவரது பார்வையில் சென்னையில் மூன்று வேறுபாடுகள், "பலப் பல நிறங்களில் சுவர் வண்ணங்கள், சுவரொட்டிகள், பல வகையான உணவுகள், அதிக மக்கள் கூட்டத்தினாலோ வேறு எதனாலோ விளையும் குப்பைக் குவியல்கள்,"

இடைவேளையில் கிளிநொச்சியின் அகிலன், சாவின் நிழலில், குண்டு வீச்சின் பயத்தில் வாழும் வாழ்க்கையை விவரித்தார். குண்டு வீச்சினால் மரணம் அடைந்த குழந்தைகளைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்கு முன் அவரை மாமா என்று அழைத்து விளையாடிய, தாயும் தந்தையும் இல்லாத குழந்தைகளை அடிபட்டு பிணமாகப் பார்த்த துயரத்தை விவரித்தார். எவ்வளவுதான் குறை இருந்தாலும் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத பகுதி ஈழம் என்று தமிழ்நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த கட்டம் என்று நான் கட்டுரை வாசிக்க இருந்தேன். பல நாட்கள் முன்னர் பாலா சொன்ன அன்றே ஒரு பக்கம் எழுதி வைத்து விட்டாலும் அதை விரிவுபடுத்தி எழுதுவதை கடைசிவரை தள்ளிப் போட்டு ஞாயிறு மதியம்தான் அச்செடுத்து முடித்தேன். அந்தக் கட்டுரையைத் தனி பதிவாக வெளியிடுகிறேன்.

"எல்லோரும் சுஜாதா ஆக முடியாது. ஆயிரம் பேர் எழுதும் வலைப்பதிவு உலகில் பத்து பேர் பெரிய எழுத்தாளராக உருவாகலாம். ஆனால், ஒவ்வொருவரும் தமது துறை அறிவைத் தமிழில் தர முயற்சிக்கலாம், முயற்சிக்க வேண்டும்" என்று ராமகி ஐயா கேட்டுக் கொண்டார். "அரசியல் பற்றிய விவாதங்கள், திரைப்பட விவாதங்கள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றையே முழு நேரமும் செய்யாமல் பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சமூகத்துக்குப் பலன் அளிக்கும்படியான ஆக்கங்களை உருவாக்குங்கள் என்று அவரது வேண்டுகோள்".

"வலைப்பதிவு பற்றிய தொழில் நுட்ப நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது. மென்பொருள் துறையில் பணி புரியும் மற்றும் வலைப்பதிவு நுணுக்கங்களைக் கற்று உணர்ந்தவர்கள் கூட்டாக பிறருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். மீள்பதிவு எப்படி போடுவது என்று தெரியாமல் இருந்த தான் பொன்ஸ் விளக்கிய பிறகு அதைக் கற்றுக் கொள்ள முடிந்தது" என்று பாலா ஆரம்பித்து வைத்தார்.

"பின்னூட்டத்தில் சுட்டி கொடுப்பது எப்படி என்று கூடத் தெரியாமல் இருக்கலாம். ஒருவர் கொடுத்த பின்னூட்டத்தை சிறிது மாற்றி வெளியிட என்ன வழி என்று தெரியாது. இதற்கெல்லாம் தெரிந்தவர்கள் தமது அறிவைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்" இது லக்கிலுக்.

"சென்னையில் நடைபெற்ற பிளாக்கேம்பில் பங்கேற்ற விக்கி என்ற விக்னேஷ், தமிழ்பதிவர்களுக்காக இது போன்ற தொழில் நுட்ப சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம்" என்று முன் வைத்தார். என்னென்ன முக்கியமான கேள்விகள் என்று திரட்டி அவற்றில் பத்துப் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து செயல்முறை விளக்கம் கூட அளிக்கலாம். அவருடைய வழிகாட்டலில் ஒரு கூட்டு வலைப்பதிவும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

பிளாக்கர் பீட்டாவிற்கு மாறி தான்படும் அவதிகளை விவரித்த மரபூர் சந்திரசேகரன், பொருள்வாரியாக பதிவர்களை, பதிவுகளை தேடுவதற்கு வசதிகள் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிறைய பேசுவார்கள் என்று நான் எதிர் பார்த்திருந்த வரவனையான், எஸ்கே ஐயா, முத்து தமிழினி இவர்களெல்லாம் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 'இது போன்ற சந்திப்புகளில் பொதுவாக சில தலைப்புகளைத் திரட்டி வரும் நாட்களில் எல்லோரையும் எழுத வரவேற்கலாம்' என்று எஸ்கே சொன்னார்.

இட்லிவடையின் புகைப்படப் பிரதிநிதி வந்து படங்கள் எடுத்துச் சென்றார். அவர்தான் இட்லிவடை என்று அவர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சிலர் சொன்னார்கள். இட்லி வடை என்பவர் உயரமாக, ஒல்லியாக, வெள்ளையாக, பல ஆண்டுகள் எழுத்து அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம். இது போன்ற ஊகிப்புகளைக் குழப்ப இரண்டு மூன்று பேராக ஒரே முகமூடி பேரைப் பயன்படுத்துவதும் வாடிக்கை.

முகமறிய விரும்பிய பல பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதாரப் பேராசிரியர் சிவஞானம்ஜி ஐயா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடற்குழுக்கள் மூலம் தெரிந்திருந்த ராமகி ஐயா இவர்களை ஒருவழியாக பார்த்து பேச முடிந்தது.

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை -1

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.

முதலில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த சிலருக்கு தெரியாமல் இருக்கக் கூடிய விபரங்கள்:

தனிக் கணினிகள் கணக்கிடுதலைத் துரிதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர் பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் வண்ணம் வளர்க்கப்ப்பட்டன. இந்தக் கணினிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கணினி வலைகள் உருவாயின. இந்த வலைப்பின்னல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து உலகளாவிய ஒரு கணினி இணையம் உருவானது எண்பதுகளின் பிற்பகுதியில்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் குறிப்பிட்ட தேவைக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகப் போர் மூண்டு கணினிக் கட்டமைப்பின் ஒரு பகுதி அழிந்து விட்டாலும், மற்ற பகுதிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். இன்றைக்கும் இணையத்தில் எந்தக் கணினியும் மையக் கணினி கிடையாது. ஒன்று போனால் இன்னொன்று அதன் பணியை எடுத்துக் கொள்ளும்.

அந்த அடிப்படையில் உருவான தொழில்நுட்ப கட்டமைப்பைப் பயன்படுத்தி பயன்பாடுகள் பல உருவாயின. அவற்றில் புகழ் பெற்ற இரண்டு மின்னஞ்சல்களும் வைய விரிவு வலையும். அடுத்த பத்து ஆண்டுகளில் மின்னஞ்சல்கள் மூலை முடுக்கெல்லாம் பரவி உலகெங்கும் உள்ள தொழில்களுக்கும் தனி நபருக்கும் தகவல் தொடர்பு கருவியாக வளர்ந்து விட்டன.

வையவிரிவுவலை கோடிக் கணக்கான வலைப் பக்கங்களை இணைக்கும் ஊடகமாக உருவானதும் அதைப் பயன்படுத்தி நடைமுறை கருவிகளை உருவாக்க பெரும் இயக்கம் ஆரம்பித்து டாட்காம் பூம் என்று விரிந்து வெடித்து ஓய்ந்தது.

இப்போது இரண்டாவது அலையாக இணையத்தையும் அதன் மேல் இயங்கும் வையவிரிவு வலையையும் பயன்படுத்தி கணினிகளைத் தாண்டி கணினிக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களை இணைக்கும் முயற்சிகள் பல வெற்றிகரமாக உருவாகி வருகின்றன.

வலைப்பதிவுகள், வலைப்பக்கங்களை உருவாக்குவதை எளிதாக்க வேண்டும் என்று முயன்றதில் வந்த சிக்கலற்ற கருவிகள். வையவிரிவுவலை ஆரம்பத்திலேயே இருந்தக் கருவிகளையே பயன்படுத்தி செயல்படுபவைதான் வலைப்பூக்களை எழுதி சேமிக்கும் முறை. யார் வேண்டுமானாலும் தனது எண்ணங்களை, புரிதல்களை, அனுபவங்களை வலையில் இடலாம் என்று வசதி செய்து கொடுக்கின்றன வலைப்பூ கருவிகள்.

எழுதியதைப் பரவலாக்கும் வலைச் சேவை தொழில்நுட்பம் மட்டும்தான் சமீப காலத்தியது.

சென்னபட்டிணம்

வெள்ளி, நவம்பர் 17, 2006

வலை மகுடம் - 1

தமிழ் வலைப்பதிவுகளின் வெற்றியைப் பற்றி எழுதும் போது, வெளிப்படையான உடற்பொருட்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
 • பிளாக்கர் சேவையை இலவசமாக வழங்கும் நிறுவனம்.
 • தமிழில் ஒருங்குறி எழுத்துப் பலகைகள், எழுத்துருக்கள் உருவாக்கி தமிழில் எழுத வழி செய்த தன்னார்வலர்கள்,
 • வலைப்பதிவுகளைத் திரட்டி பரவலாக்க உதவிய திரட்டி சேவைகள்

இவற்றின் பங்களிப்பு பலமுறை சுட்டிக் காட்டப்பட்டு விட்டன.

எல்லாம் இருந்தாலும் யாராவது எழுதினால்தானே படிப்பவர்கள் வருவார்கள். படிப்பவர்கள் பின்னூட்டம் இட்டால்தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

இந்த இரண்டிலும் ஓசையில்லாமல் பெரும்பங்கு ஆற்றி வருபவர் எல்லோருக்கும் அறிமுகமான, இரண்டு ஆண்டுகளாக ஒளி வீசி வரும், இந்த வாரம் கூடுதலாக வெளிச்சம் போடப்பட்டுள்ள துளசிகோபால் அவர்கள். தமிழ் வலைப்பூவுலகின் உயிர்ப் பொருளான பதிவுகள், பின்னூட்டங்கள் உருவாக்கத்தில் முழுமையாக பணியாற்றி வருகிறார் அவர்.

வலைப்பதிவு என்பது தன்னுடைய வீடு போல என்பது அவர் கருத்து என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

 1. வீட்டை அழகுபடுத்தி தேவையில்லாதவற்றை நீக்கி வைத்திருப்பது
 2. வீட்டுக்கு வந்து நம்மிடம் பேசுபவர்களுக்கு (பின்னூட்டம் இடுபவர்கள்) மதிப்பளிக்கும் விதமாக அதற்கு உடனேயே பதிலளிப்பது.
 3. நம் வீட்டுக்கு வந்து போனவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் பதிவைப் பற்றிக் கருத்தைப் பின்னூட்டமாக கொடுப்பது.

இந்த மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒருவர் துளசி கோபால். இந்த உறவுப் பின்னலுக்கு அடிப்படைகளை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்து விட்டால், ஓரிரு மாதங்களில் ஒரு நெருக்கமான சமூகம் உருவாகி விடும்.

இதையெல்லாம் தாண்டி, புதிதாக வந்த யாராவது உருப்படியாக எழுத ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் படித்து பின்னூட்டம் இடுவது, இந்த உறவுச் சங்கிலிக்குப் புதிய கண்ணிகளைச் சேர்க்கிறது. இதிலும் இந்த வார நட்சத்திரத்துக்கு நிகர் அவரேதான்.

எவ்ரிடே மனிதர்கள் என்று அவர் எழுதும் பதிவுகள் மூலம் அவரது மனித நேயத்தையும் சக மனிதர்கள் மீதான பரிவையும் தெரிந்து கொள்கிறோம். இதுவரை நானூறுக்கும் அதிகமான பதிவுகள் எழுதி (இந்த வாரம் ஐநூறைத் தொட்டு விடுகிறாரோ?) மூத்த, சுறுசுறுப்பான பதிவராக செயல்படுகிறார்.

எங்கெல்லாம் ஆக்கபூர்வமான பதிவுகள் வெளியாகின்றனவோ, அங்கெல்லாம் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கலாம். அதில் என்னுடைய பதிவும் ஒன்று என்பதால் நானும் நல்லபடியாக எழுதுகிறேன் என்று பெருமைப் பட்டுக் கொள்வேன்.

தான் பின்பற்றும் வழிமுறைகளை, அடிப்படை தத்துவங்களை புதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக அவர் எழுத ஆரம்பிக்கலாம். தமிழ் வலைப்பதிவை வளமூட்டும் அவரது பணிக்கு நன்றி தெரிவித்து அவருக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இது போன்ற செயற்கரிய செயல்படும் பதிவர்களின் சிறு பட்டியலை நிரந்தரமாக முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்யலாம். அதை ஆரம்பித்து வைக்க துளசிதளம் முதல் பதிவாக இடம் பெற கேட்டுக் கொள்கிறேன்.

ஞாயிறு, அக்டோபர் 29, 2006

தாண்டவராயனுக்குத் தண்டம்

"நீர் பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்து அவனவன் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடுறான். எழுதுவதை நிறுத்து!"

சூடான ஒரு விவாதத்துக்கு மத்தியில் பெயரிலியாக வந்து, அப்புறம் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தாண்டவராயன் என்று முகவரி கொடுத்த நண்பர் சொன்னது அது.

பொதுவாக அடுத்தவர்களைப் பற்றியக் குறைகளை நாம் வெளிப்படையாகச் சொல்வது இல்லை, 'எதற்கு வீணாக ஒருவரை நோகடிக்க வேண்டும்' என்று சமாதானம். இது போல் விவாதங்களின் போது வரும் கருத்துக்கள்தான் நமக்குக் கிடைக்கும் விமரிசனம்.

பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்தது 'ஒவ்வொருவரின் வாழ்க்கையைத் தொட்டுப் போகும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு செயல்பட உதவ வேண்டும், எல்லோரும் படிக்க வேண்டும்' என்ற நோக்கில்தான்.

'நான் எழுதுகிற போக்கில் எழுதுகிறேன், படித்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி' என்று எழுதும் இன்னொரு பதிவைப் போன்றது இல்லை இது.

இந்த நோக்கத்தில் முற்றிலும் வெற்றியடையவில்லை என்றுதான் எனக்கும் தோன்றியது, அதைச் சுட்டிக் காட்டிய தாண்டவராயனுக்கும் நன்றி.

தனி மனிதர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசும் microeconomics என்ற பிரிவு முடிந்து, அரசுகளும் நிதிநிலை அறிக்கைகளும், பணமும் வங்கிச் சேவைகளும், நாட்டின் வளர்ச்சியும் செல்வங்களும் போன்றவற்றை அலசும் macroeconomics பற்றி ஆரம்பிக்க வேண்டும்.

இதை எழுதி வைத்து இடைவெளி விட்டு வெளியிடலாம் என்று எண்ணம். அடுத்த ஒரு மாதத்தில் முப்பது பகுதிகளாக macroeconomics பற்றி எழுதி வைத்து விட்டு, டிசம்பரில் மீள்பார்வை பார்த்து சீர்படுத்தி வெளியிட்டால் இன்னும் சிறப்பாக அமையும், தாண்டவராயன் போன்றவர்களும் பயனடைய உதவியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கூடவே நவம்பரில் பதிவுகளுக்கு விடுமுறை கொடுத்து எழுதி முடிக்கத் திட்டமிட்டிருப்பவை:

1. என்னைப் பாதித்த புத்தகங்களைப் பற்றிய தொகுப்பு ஒன்றையும் ஆரம்பித்ததை முடித்து விட வேண்டும். இது வரை போட்ட பட்டியலில் இருபத்தைந்துக்கும் அதிகமான புத்தகங்கள் வந்து விட்டன.

2. வலைப்பதிவுகளுடன் என்னுடைய அனுபவங்களைப் பற்றிய ஒரு தொகுப்பை எழுதத் தேவை இருக்கிறது.

3. நேரம் கிடைக்கும் போது எழுத்து பதிவில் கலவையாக எழுதிப் பதிந்துள்ள நாட்குறிப்புகளைப் பிரித்து வகை செய்து வோர்ட்பிரஸ்ஸில் ஆரம்பித்துள்ள புதிய வலைப்பூவில் தொகுக்கும் வேலையை செய்ய வேண்டும்.

4. இவற்றைத் தவிர இரண்டு சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் எழுதவும், நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலைகளுக்கு நவம்பரை ஒதுக்கி விட்டு, டிசம்பரில் மீண்டும் சந்திக்கலாம். எழுத்து பதிவில் நாட்குறிப்புகளாக எழுதுபவை உடனுக்குடன் வெளிவரும்.

வியாழன், அக்டோபர் 26, 2006

WTO (economics 36)

வரிகள், வர்த்தகம் பற்றிய பொது உடன்பாடு (GATT) என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக பல சுற்றுகளாக நடந்த பேச்சு வார்த்தைகள் 1995ல் உலக வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு டுங்கல் என்பவர் உருவாக்கிய உடன்பாட்டு வரைவு உதவியது. இன்றைக்கு 135க்கும் மேலான உலக நாடுகள் இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. உலக வர்த்தகத்தில் 90%க்கு மேல் WTO உறுப்பு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்றன.

இந்த உடன்படிக்கைகளின் அடிப்படை விதிகள்:

1. நாடுகள் ஏற்றுமதி இறக்குமதிக்கான வரிகளைக் குறைக்க, வரி சாராதத் தடைகளை குறைக்க முன் வர வேண்டும். இந்தியா கடந்த பதினைந்து ஆண்டுகளில் இறக்குமதி வரியின் அதிகபட்ச சதவீதத்தை குறைத்துள்ளது. வர்த்தகமே தடை செய்யப்பட்ட எதிர்மறைப் பட்டியல்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

2. ஏதாவது ஒரு நாட்டுக்குக் குறிப்பிட்ட சலுகையை அளித்தால் அதே சலுகை மற்ற உறுப்பு நாடுகளுக்கும் கொடுக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் முட்டி மோதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழங்கள் மீதான வரியைக் குறைத்துக் கொண்டால், அதே வரிதான் இந்திய ஏற்றுமதிகளுக்கும் விதிக்கப்படும். ஒரு உறுப்பினரின் பேரம் பேசும் முயற்சி எல்லோருக்கும் பலன் அளிக்கும்.

மேலே சொன்ன பிராந்திய ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகள் இதில் வராது.

3. ஏதாவது கருத்துவேறுபாடுகள், வர்த்தகப் பூசல்கள் ஏற்பட்டால் அவற்றைப் பேச்சு வார்த்தை மூலம், ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் பேச்சு வார்த்தைகளின் மூலம் இன்னும் வர்த்தகத் தடைகளை தளர்த்தி எல்லோருக்கும் பலன் அளிக்கும் வகையில் உலக வர்த்தகம் நடக்க வழிகள் உருவாக்கப்படுகின்றன. போன இரண்டு சுற்றுகளில் முரசொலி மாறன், கமல்நாத் என்ற இந்திய அமைச்சர்களின் தலைமையில் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் சுயநலத் திட்டங்களை வெற்றிகரமாகத் தடுத்தி நிறுத்தியதும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இந்த அமைப்பில் புதிதாக ஒரு நாடு சேர வேண்டும் என்றால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். 2005ல் சீனா இதில் சேருவதற்கு முன்பு ஒவ்வொரு உறுப்பு நாட்டுடனும் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டியிருந்தது. அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை பல ஆண்டுகளாக நீடித்தது. அதன் பிறகு ஒரே ஆண்டில் மீதி உறுப்பினர்கள் தத்தமக்குத் தேவையான விஷயங்களில் சீனாவுடன் உடன்பாடு செய்து கொண்டனர்.

இந்தியா இந்த அமைப்பின் உருவாக்கிய உறுப்பினர். இதை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று உரத்த குரல்கள் அவ்வப்போது கேட்கின்றன.
 • உள்ளே இருப்பதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
 • ஒரு முறை வெளியே வந்து விட்டால், பிறகு திரும்பச் சேர நினைத்தால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சம்மதிக்க வேண்டியிருக்கும்.
 • வெளியே இருக்கும் போது நூற்றி முப்பது நாடுகளுடனும் தனித்தனியே வர்த்தக வழிகளை வகுக்க வேண்டியிருக்கும்.
 • உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகப் போய் விடுவொம்.

புதன், அக்டோபர் 25, 2006

எல்லைகளை உடைக்கும் வர்த்தகம் (economics 35)

ஒரு இந்தியாவுக்குள்ளேயே பொருளாதார ஒருங்கிணைப்பை சரிவரச் செய்ய முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? எல்லா பகுதியினரும் பயன்பெறும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியைக் கையாள்வது குதிரைக் கொம்பாக உள்ளது.
 • சிவகாசியில் பட்டாசுத் தொழில் வளர ராஜஸ்தானத்தில் தொழில் நலிந்து போவதுதான் சந்தைப் பொருளாதாரத்தின்படி சரியான நிகழ்வு.
  ராஜஸ்தானத்தில் வேறு தொழில் தளைத்து அவர்களும் பல பெற்று விடுவார்கள்.
  ஆனால், ராஜஸ்தானத்தில் இருக்கும் பட்டாசுத் தொழிலாளருக்கு பிழைப்பு என்ன ஆகும்?
  இந்தத் தொழிலில் தேர்ந்தவராக வாழ்ந்து விட்டு வேறு துறையில் கூலி வேலைக்குப் போக முடியுமா? இல்லை என்றால் சிவகாசிக்கு மூட்டைக் கட்டிக் கொண்டு போகலாம்,
  அதனால் ஏற்படும் உளைச்சல்களுக்கு யார் பொறுப்பு?
இதுதான் உலகமயமாக்கலின் கேள்விகள். நீண்ட கால நோக்கில் பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், உடனடிக் காலத்தில் ஒவ்வொரு குழுவாக பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
 • என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளும் முன்னரே பிழைப்பு மறைந்து போய் குடும்பம் கடனில் மூழ்கி விடுகிறது.
 • வேலை கிடைக்கும் இடத்துக்கு தடையின்றி போய்க் குடியேறவும் வழிகள் கிடையாது.
 • பொருட்கள் எல்லை தாண்டி பாய வழிமுறைகள், மூலதனம் நாடு விட்டு நாடு போக தனி விதிகள், மக்கள் குடி பெயர இன்னொரு முறை என்று சமச்சீரின்றி இருப்பது, உலகளாவிய மாற்றங்களை புரிந்து கொள்ளும்படி தகவல் கிடைக்காமல் இருப்பது இரண்டும் சேர்ந்து மாபெரும் துயரங்களை உருவாக்கிச் சென்று விடுகின்றன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வர்த்தகத்தின் பலன்களை காண முயலும் முயற்சிகள் பல நிலைகளில் நடக்கின்றன.

இரண்டு நாடுகள் தமக்கிடையே செய்து கொள்ளும் bilateral ஒப்பந்தங்கள், இந்திய - ரஷ்ய வர்த்தக ஒப்பந்தம், இந்திய - தென்னாப்பிரிக்க உறவுகள், அமெரிக்க - ஜப்பான் உறவு என்று இயல்பாக நடக்கின்றன.

இதையே கொஞ்சம் விரிவாக்கி பிராந்தியக் கூட்டமைப்புகள் வெவ்வேறு ஆழத்தில் உருவாகியுள்ளன.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC)
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)
ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம் (EU)
வட அமெரிக்க வர்த்தக வட்டாரம் (NAFTA)

என்று நாடுகள் ஒன்று சேர்ந்து தமக்குள் சாதகமான வர்த்தக நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒரே நிலப்பரப்பில் இருக்கும் நாடுகள் பிரிந்திருந்தாலும் இயல்பான பொருளாதார இணைப்பு ஏற்புடையது என்று உருவானவை இந்த அமைப்புகள்.

ஐரோப்பிய ஒன்றியம் போல எல்லைகளைத் தளர்த்தி, ஒரே பணம் ஏற்றுக் கொண்டு பொருட்களும், மக்களும் பணமும் தடையின்றி பாயும் இறுக்கமான உறவுகளிலிருந்து, SAARC போல இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லோரையும் சண்டைக்குள் வைத்திருக்கும் குழப்படிகள் வரை பல நிலைகளில் இத்தகைய அமைப்புகள்.

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் உருவாகி வருவதுதான் உலக வர்த்தக நிறுவனம் எனப்படும் WTO.

பரிசு பெறும் பின்னூட்டங்கள்


 1. அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரையிலான பொருளாதாரம் தொடர்பான பதிவுகளில் பின்னூட்டங்களுக்கான பரிசைப் பெறுபவர் பத்மா அரவிந்த். இரண்டு வாரம் முன்பே, அக்டோபர் 11 அன்று நடுவர்கள் சிவஞானம்ஜி அவர்களும் துளசி கோபால் அவர்களும் முடிவை அறிவித்து விட்டாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும்.

  பத்மா அரவிந்துக்கு அவர் தேர்ந்தெடுக்கும் புத்தகம் பரிசாக அனுப்பப்படும். பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணை இங்கே .

 2. அக்டோபர் 11 முதல் அக்டோபர் 17 வரையிலான பொருளாதாரம் தொடர்பான பதிவுகளில் இடப்பட்ட பின்னூட்டங்களுக்கான பரிசைப் பெறுபவர் வவ்வால்.

  250 ரூபாய் மதிப்பிலான புத்தகம் வாங்கிக் கொள்ள பரிசுக் கூப்பன் அனுப்பி வைக்கப்படும். பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணை இங்கே .

 3. போன வாரத்தில் வெளியான இரண்டு பதிவுகள் மற்றும் இந்த வாரம் வெளியாகப் போகும் நான்கு பதிவுகளில் இடப்படும் பின்னூட்டங்களில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் பின்னூட்டத்துக்கு ரூபாய் 250 மதிப்பிலான புத்தகக் கூப்பன்கள் பரிசாக வழங்கப்படும்.

வியாழன், அக்டோபர் 19, 2006

சுதேசியா விதேசியா? (economics 34)

அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களோ, குடும்பங்களோ, கிராமங்களோ, மாநிலங்களோ தமக்கு நன்கு தெரிந்த வேலையை மட்டும் பார்த்து, மற்றவருக்கு விற்பது மூலம் வரும் வருமானத்தைப் பயன்படுத்தி தேவைகளை வாங்கிக் கொள்வது போலத்தான் நாடுகளுக்கிடையான வர்த்தகமும். நடைமுறையில் பல வேறுபாடுகள்:
 1. நாட்டு அரசுகள் வருமானத்துக்காக இறக்குமதி ஏற்றுமதியின் மீது சுங்க வரி விதிப்பதால் எல்லைகளைக் கடந்து பொருட்கள் போகும் போது கட்டுப்பாடுகள் போடப் படுகின்றன.

 2. ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் பணம் வெவ்வேறாக இருப்பதால் வர்த்தகத்தில் பணப் பரிமாற்றம் என்ற கூடுதல் சிக்கலும் வருகிறது.

 3. பொருட்கள் எல்லைகளைத் தாண்டி பாய்ந்தாலும், மக்களும், மூலதனமும் அதே சுதந்திரத்தோடு தமக்கு ஏற்ற நாட்டுக்குப் போவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.
இத்துடன் தேசிய நலன், பாதுகாப்புக் காரணிகள் என்று காரணம் சொல்லியும் பன்னாட்டு வர்த்தகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
 • 'பஞ்சாபில் விளையும் கோதுமையை நம்பி இருந்தால் நம்ம ஊர் பாதுகாப்பு என்னாவது?' என்று தமிழ்நாட்டில் கோதுமை பயிரிட முயற்சி செய்வதில்லை.

 • சிவகாசியில் தீப்பெட்டி, மத்தாப்பு தொழில் வளரும் போது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கும் அத்தகைய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதற்கெதிராக யாரும் போர்க்கொடி பிடிக்கவில்லை.
  மத்தாப்பு தொழிலில் வல்லமை பெற்ற தொழிலாளர்கள், ஒரு முடிவு எடுத்து விட்டால் அடுத்த ரயிலைப் பிடித்து சிவகாசி வந்து வேலை தேடிக் கொண்டிருப்பார்கள்.
  அவ்வளவு மாற்றங்களை விரும்பாத தொழிலாளர்கள் அந்த ஊரில் தளைக்கும் தொழிலுக்கு மாறியிருப்பார்கள்.
  தொழில் நடத்தும் முதலாளிகளும் தமது மூலதனத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சிவகாசியில் தொழில் தொடங்க தடைகள் குறைவு. இப்படியே மொத்த துறையும் மிகச் சிறப்பான வழியில் தன்னை அமைத்துக் கொண்டிருக்கிறது.

 • இந்தியாவின் தோல் துறையின் பாதிக்கும் மேல் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. நாடெங்கிலுமிருந்து தோல்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.
  தோல் தொழில்நுட்பம் படித்த வல்லுனர்கள் சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் வெவ்வேறு ஊர்களில் தொழிற்சாலை தொடங்க முயற்சிகள் நடப்பதைத் தவிர எந்த அரசும் தடைகளை விதித்துப் பொருளையும், மக்களையும் சுதந்திரமாக தமக்கு ஏற்ற இடத்துக்குப் போவதைத் தடுப்பதில்லை.
இப்படிப் பொருளாதாரக் கணக்கு மட்டும் போடும் போது, இத்தகைய மாறுதல்களால் தனி நபர்கள் வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு, குடும்பத்தோடு குடி பெயர்வது, அல்லது குடும்பத்தை ஊரில் விட்டு வந்து தனியே பணம் ஈட்ட வருவது என்று பல சிரமங்களை மாற்றங்களுக்கு ஆளாகும் தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், ஒட்டு மொத்தக் கணக்கில் போன பதிவின் சர்ஜனைப் போல எல்லோருக்குமே நன்மைதான் அதிகமாகும்.

வரலாற்றுக் காரணங்களால் மக்கள் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு எல்லைகள், வேறு வேறு பணங்கள், அரசுக் கெடுபிடிகள் என்று பிளவுபட்டிருக்கிறார்கள். இதனால் பன்னாட்டு வர்த்தகம் என்பது பல் பிடுங்குவது போல பலவித தயாரிப்புகளோடு, வலியோடுதான் நடைபெற வேண்டியிருக்கிறது.
 • தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரங்களுடன் வர்த்தகத்துக்குத் தடை இல்லை. நாற்பது கிலோமீட்டரில் இருக்கும் தமிழீழம் வேறு நாடு, வர்த்தகம் கிடையாது.
 • பஞ்சாபிலிருந்து கேரளாவுக்கு சரக்கும், மக்களும் போவதில் தடையில்லை, ஆனால் கூப்பிடு தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் வேறு நாடாம்.
 • கல்கத்தாவிலிருந்து குஜராத்துக்கு வர்த்தகம் இயல்பாக நடைபெறலாம். மிக அருகில் இருக்கும் வங்காளதேசத்துக்கு தடைகள் ஏராளம்.
நாட்டு எல்லைகளை மங்கச் செய்து பன்னாட்டு வர்த்தகத்தைப் பெருக்கச் செய்யும் முயற்சிகள் ஏதாவது நடக்கின்றனவா?

புதன், அக்டோபர் 18, 2006

சீனப் பொம்மை் இந்திய மென்பொருள்் (economics 33)

ஒரு ஊரில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் வசிக்கிறார். மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை செய்வதில் மிகக் கைராசியும் அனுபவமும் வாய்ந்தவர்.

பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது தட்டச்சுக் கற்றுக் கொண்டு நிமிடத்துக்கு எண்பது சொற்கள் தட்டச்சும் திறனும் பெற்றிருக்கிறார். அதாவது தட்டச்சு செய்வதிலும் அவரை மிஞ்ச யாரும் இல்லை.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தட்டச்சு வல்லுனர் நிமிடத்துக்கு அறுபது சொற்கள் அடிக்கக் கூடியவர். தனது ஆவணங்களைத் தயாரிக்க அந்த உதவியாளரை வேலைக்கு வைத்துக் கொள்வாரா அல்லது தானே செய்து கொள்வாரா?

பொழுது போக்கு, சொந்த வேலைகள், மனவளக் கலைகள் சார்ந்த பணிகள் போக தினமும் தொழிலுக்கு செலவிடக் கிடைக்கும் நேரம் ஐந்து மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். தன்னுடைய ஆவணங்களையும் தானே தட்டச்சு செய்து கொண்டால் அவர் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சைகளும் ஒரு மணி நேரம் தட்டச்சு வேலையும் செய்ய வேண்டியிருக்கும்.

நான்கு மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 4 லட்சம்.

ஒரு மணி நேர தட்டச்சு வேலையைச் செய்ய உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டால் அவர் இரண்டு மணி நேரத்தில் முடிக்கிறார். கொடுக்க வேண்டிய சம்பளம், நாளுக்கு ஆயிரம் ரூபாய்.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 5 லட்சம்
ஒரு மணிநேர தட்டச்சு வேலைக்குச் செலவிடுவது = ரூபாய் ஆயிரம

தானே எல்லா வேலையும் செய்து கொண்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சம். இரண்டு வேலையிலுமே தான் வல்லவராக இருந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரம் ரூபாய்.

இரண்டு வேலையிலுமே அவரே மற்ற எல்லோரையும் விட கைதேர்ந்தவராக இருந்தாலும், எந்த வேலையில் அவரது ஒப்பீட்டுத் திறன் அதிகமாக இருக்கிறதோ அந்த வேலையை மட்டும் செய்து விட்டு இரண்டாவதை தனக்கு அடுத்த நிலையில் இருப்பவரிடம் விட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம்.

இதே கோட்பாட்டின்படி உலகின் பல்வேறு நாடுகளும், நாடுகளின் பல்வேறு பகுதிகளும் தமது ஒப்பீட்டுத் திறன் எதில் சிறப்பாக இருக்கிறதோ அந்த வேலையைச் செய்து பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து தமக்குத் தேவையான பொருட்களைப் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்
 • அமெரிக்காவில் விமானம் செய்யும் தொழில் நுட்பமும் அதி நவீனமானது, கோதுமை பயிரிடுதலும் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் நடத்தலாம் என்று இருந்தாலும், அமெரிக்கா விமானங்கள் செய்வதில் மட்டும் ஈடுபட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனக்குத் தேவையான கோதுமையைப் பிற நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

 • இதே வாதத்தின்படி சீனா விளையாட்டுப் பொம்மைகளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறது.

 • இந்தியாவின் மென்பொருள் உருவாக்குனர்கள் உலகின் பல பகுதிகளின் தேவைகளுக்கு வேலை செய்கிறார்கள்.

 • உலகில் எந்த நாடுமே பயணிகள் விமானம் வாங்க அமெரிக்காவின் போயிங், அல்லது ஐரோப்பாவின் ஏர்பஸ்ஸை நாடுகின்றன.
இது ஏட்டுச் சுரைக்காய். இதன்படி உலகமயமாக்கம் எல்லோருக்கும் நல்லதைச் செய்யும் ஒரு மந்திரக் கோல். நடைமுறையில் உலகமயமாக்கலுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?

சனி, அக்டோபர் 14, 2006

நிலஉரிமை நியாயமா? (economics 32)

ஒருவருக்கு வருமானம் வரும் வழியில் முக்கியமானது அவருக்குச் சொந்தமான நிலத்துக்குக் கிடைக்கும் குத்தகை அல்லது நிலத்தை விற்கும் போது கிடைக்கும் ஆதாயம்.
 • அமெரிக்காவில் ஐரோப்பியர் இறங்கிய முதல் நூறு ஆண்டுகளுக்கு மேற்கு எல்லை என்று முன்னேறிச் சென்று பூர்வகுடிகளை ஒழித்துக் கட்டி இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடித்தார்களோ அவருக்கு நிலம் சொந்தம். தானே பயன்படுத்தியோ குத்தகைக்கு விட்டோ, நிலத்தைப் பயன்படுத்தி வரும் வருமானத்தை அவர் தன்னுடைய முதல் முயற்சிகளுக்கு ஆதாயமாக பெறுகிறார்.

 • ஒருவர் பொட்டல் காட்டில் கரடுமுரடான, பாறை நிரம்பிய நிலத்தை வாங்கி அதில் உழைத்துப் பணம் போட்டு நிலத்தைப் பண்படுத்தி மேம்படுத்துகிறார். இன்னொருவர் நிலத்தை வாங்கி கட்டிடம் கட்டுகிறார். இதற்கும் செய்த முதலீட்டுக்கான ஆதாயம் வாடகையாக கூடிய விற்பனை விலையாக வருகிறது.
ஆனால் 'நிலம் என்பது ஒருவரது உரிமை இல்லை, அதன் பலன்கள் சமூகத்துக்கு உரிமையாக இருக்க வேண்டும்' என்று ஆரம்பம் முதலே குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் மதிப்புக்கு வரி விதிப்பு (Land Value Taxation ), நிலம் விற்கும் போது ஆதாயத்துக்கு உயர் வரி வீதம் (Stamp Duty) என்று அரசுகள் நிலத்தில் வரும் ஆதாயங்களை எடுக்க முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன.
 • 'நிலத்தின் மதிப்பு உயர்வது நில உரிமையாளரின் உழைப்பினால் இல்லை. சுற்றிலும் நடக்கும் முன்னேற்றங்கள், புதிய அரசு திட்டங்கள் எல்லாம் நிலத்தின் விலையை ஏற்றி விடுகின்றன. எனவே, நிலத்தின் சந்தை மதிப்பில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என்று சொல்வது LVT. எல்லோருக்கும் உரிமையாக இருக்க வேண்டிய நிலத்துக்கு வாடகையாகத்தான் இந்த வரி என்றும் சொல்லலாம்.

 • ஆனால் நிலத்தின் மீதான இந்த வரி மிகச் சில நாடுகளிலேயே விதிக்கப்படுகிறது. தாய்வான், சிங்கப்பூர், ஆங்காங் போன்ற சிறிய நாடுகளில் இந்த வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் எல்லாமே நிலம் பற்றாக்குறையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பெரிய நாடுகளிலும் எல்லா மக்களும் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் வகையில் நிலச் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாகவோ, இணையாகவோ இத்தகைய வரி விதிக்கப்படலாம். இதனால் கிடைக்கும் பலன்கள்:
 1. நிலத்தின் மீதான வரி வருமான வரி, ஆதாய வரி போல உழைப்பையோ தொழில் முனைவையோ குறைக்காது என்பதால் இதன் மீதான வரி அரசுக்கு வருமானம் தரும் அதே நேரம், பொருளாதார வளர்ச்சியையும் தடுக்காது.

 2. நகர மையத்தில் இருக்கும் நிலத்திற்கு வரி அதிகமாகவும் பொட்டல் காட்டு நிலத்தின் மீது வரி குறைவாகவும் இருப்பதால் புதிய திட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகள் பரவலாக நடைபெற இந்த வரி உதவி செய்யும்.

 3. சும்மா வைத்திருந்தாலும் வரி கட்ட வேண்டும் என்று இருப்பதால் நில உரிமையாளர்கள் நிலத்தை பயன்படுத்த முயற்சி எடுப்பார்கள். வாங்கி வைத்திருந்து விலை ஏறியதும் விற்று விடலாம் என்ற சூதாட்டம் குறைந்து விடும்.

 4. நிலத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்பது என்பது சாத்தியமில்லாததால் இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் குறைவு.

ஆண்களுக்கு மட்டும் - 3 (எதிர்வினைகள்)

அப்பா, எவ்வளவு குற்றச்சாட்டுகள். அதுதான் அவசர அவசரமாக பாலாவின் பின்னூட்டத்துக்கு நேற்றே பதில் போட்டேன். ஒவ்வொருவரும் தனதளவில் சோதனை செய்து பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு மறு பக்கத்தை எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.

இனிமேல் பின்னூட்டங்களுக்கு பதில்:

1. போஸ்டன் பாலா

//---ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?---How can we be so sure?//

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. உங்களுக்கும் தெரியாது.

//---விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. ---Then, are you against GLBT too (Gays, Lesbians, bi-sexual, transgender)?//

இல்லை பாலா, அது இன்னொரு விவாதத்துக்கான பொருள். Straight எனப்படும் ஆண்களுக்கு சுயஇன்பத்தில் நேரம் செலவளிப்பது அவசியமா என்பதுதான் இங்கு கேள்வி!

//If a management guru (similar to the temple visit) consults for one hour he/she may get 200 dollars. The same rate is not given for a construction worker (movie experience in the above metaphor). Apples & oranges... :D//

அந்த மேலாண்மை வல்லுனர் அந்த ஒரு மணி நேரத்தில் கட்டிட வேலை பார்த்தால் 10 டாலர் கிடைக்கும் என்று வேலை பார்ப்பது என்பதுதான் சரியான ஒப்புமையாக இருக்கும். அதை செய்ய விரும்புவது அவரது தேர்வு, செய்யாமல் இருப்பதும் அவரே முடிவு செய்து கொள்வது.

2. சிறில் அலெக்ஸ்

சரியாக இந்தப் பதிவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. ஒவ்வொருவரும் தன்னளவில் அலசிப் பார்த்து சரியெனப்படும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே பல்வேறு ஊடகங்களில் 'சுய இன்பம் காண்பதே இயற்கை, அதை செய்யாமல் இருப்பது செயற்கை' என்று மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் நமக்கு மாற்றுக் கருத்தை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லாவா?

3. தெக்கிட்டான்

//என்ன அவ்ளோ ஆணித்தரமாக ஒரு முடிவாக அந்த "சாதித்தவர்களைப்" பற்றியான கணிப்பில் கூறியிருக்கிறீர்கள்.//

நான் கேள்விதான் எழுப்பியிருக்கிறேன் தெக்கிட்டான். ஆணித்தரமாக எதுவும் சொல்லவில்லை. அவர்களும் மனிதர்கள்தாம் என்றாலும் அவர்கள் சாதித்ததை நாம் எல்லோரும் செய்து விடவில்லையே. ஏன்? நேரத் திட்டமிடலும் பயன்பாடும் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது.

//மற்றபடி தாங்களின் எண்ணவோட்டங்களை மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.//

கண்டிப்பாக, ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி தமக்கு சரியெனப்படுவதை செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

4. Babble

வாங்க Babble.

//குற்ற உணர்ச்சியா? இது என்ன புது கதையா இருக்கு?//
//மனுசன் வெறும் முன்னேற்றத்துக்கான செயல்ல மட்டுமே நேரம் செலவழிச்சா இயந்திரம் ஆயிடுவான் ஐயா//

ஏன் அப்படி சொல்கிறீர்கள். ஏழு ஆண்டு உழைத்து நாவல் எழுதிய கிரண் தேசாய் இயந்திரமா ஆகி விட்டார். அதற்காக அவர் முன்னேற்றத்துக்கான செயல் மட்டும் செய்தார் என்று அனுமானிக்க முடியாது என்றாலும் உழைத்தால்தான் உயர்வு என்பது தெளிவுதானே.

//மனசு/உணர்வுகளுக்கு எத்தனையோ பரிமாணம் இருக்கு, அதை நீங்க சில பரிமாணத்துக்குள்ள அடைக்க நினைக்கிறது வியப்பா இருக்கு.//
மனசின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு எந்த பரிமாணங்களில் வளரலாம் என்று புரிய முனைவதுதான் நம் வாழ்க்கை இல்லையா? எல்லோருமே ஒரே கருத்துதான் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாதே.

//இது ஏன் ஆண்களுக்கு மட்டும்? பெண்கள் இதுல ஈடுபடுறது இல்லையா? அப்படியே ஈடுபடலைனாலும் இந்த பதிவ படிக்கக்கூடாதா?//
நான் ஒரு பெண்ணாக இல்லாததால், மருத்துவராக இல்லாததால் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றி பழக்கங்களைப் பற்றி விவாதிக்க எனக்கு தகுதியில்லை. அதனால்தான் அப்படி தலைப்பு கொடுத்தது.

//போன தலைமுறை ஆள் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. அவங்க கூட தெளிவா இருந்திருப்பாங்களோன்னு தோணுது.//

போன தலைமுறையில் சுய இன்பம் காண்பது இல்லை என்றா சொல்கிறீர்கள்? இதில் தலைமுறையோ, இசங்களோ உதவாது, நம் மனமே நமக்கு ஆசான் என்று கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

5. ஓகை
//குற்ற உணர்வு இல்லாதவர்கள் சிலரை குற்ற உணர்வு கொள்ளவைப்பதும், இலேசாக இருப்பவர்களை பலமாக திசை திருப்புவதும், குற்ற உண்ர்வுடன் செய்து கொண்டிருப்பவர்களை பீதி கொள்ளச் செய்வதும் இப்பதிவின் பலன்களாக இருக்கும்.//

//இதை எதிர்த்துச் சொல்பவர் சிலர். தவறில்லை என்று சொல்பவர் மிகப் பலர். இதில் மருத்துவர்களும் மற்றவர்களும் ஏராளமாக உண்டு.//

எனக்குத் தெரிந்து எதைப் படித்தாலும் இது தவறில்லை என்று சொல்லப்படுவதுதான் கிடைக்கிறது. எதிர்க் கருத்தை வெளிப்படுத்தும் முயற்சிதான் இது.

//ஒரு வாதத்துக்காக எல்லா ஆண்களும் இதைச் செய்வதை இன்று நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நாளில் உலகம் நாசமாய்ப் போய்விடும்.//

எப்படி?

//மிருகக் காட்சி சாலைகளில் சில மிருகங்களுக்கு இது செய்துவிடப் படுவதுண்டு.//

எப்படி?

6. பிரேமலதா
//Fundamentally wrong you are.//
எப்படி?

//எப்பெல்லாம் விந்து வெளிடறாரோ அப்பெல்லாம் குழந்தையா ஆக்கிட்டுத்தான் விடுவேன்னு அடம்புடிச்சாருன்னு வைங்கோ, பாப்புலேசன் பிரச்சினை என்னத்துக்காகிறது. அப்புறம், ஒருதடவையே மில்லியன் வருதே, அத்தனையும் குழந்தையாக்கிட்டுத்தான் விடுவாரமா? இவரப் படைச்ச கடவுளேல்ல வேண்டாம்னு முடிவெடுத்து ஒரு மில்லியன்ல ஒண்ணுதான் பிழைச்சாலும் பிழைக்கும்னெல்லாம் அவரேல்ல முடிச்சுட்டாரு.//

பிரேமலதா இது விதண்டாவாதம் :-) ஒரு மில்லியன் வருவதற்கு காரணம், ஒன்றாவது சினைமுட்டையுடன் சேர்ந்து கருவுறுவதற்கான நிகழ்தகவை உயர்த்துவதற்குத்தான்.

திரும்பவும், இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. மாறுபட்டக் கருத்தை வைத்ததுதான் என்னுடைய பொறுப்பு.

7. பாலபாரதி
//நாள் ஒன்றுக்கு ஒன்பது முறை என்ற அளவில் இருப்பவர்களை குறைத்துக்கொள்ளச் சொல்லலாம். நிறுத்தச்சொல்ல முடியாது.//

நம் கருத்தாக சொல்லலாம், ஏற்றுக் கொள்வது தனி விருப்பம்தான் இல்லையா!

//இன்று பெரிய அளவில் சாதிக்கும் பலரும் பாலியல் வடிகாலுக்கு வழி இருப்பவர்கள் தான் என்பதையும் உணர வேண்டும்.//

இதில் என்ன சந்தேகம்.

8. மதன்

//what do you advocate as an alternative? Repression of feelings? Isn't it more harmful psychologically than your concept of guilt?//

இணையத்தில் பொம்மை பார்க்கச் செலவளிக்கும் நேரத்தை எழுத்திலோ, கவிதையிலோ, ஓவியத்திலோ, உறவுகளுக்கோ செலவளிப்பது எப்படி உணர்வுகளை அடக்குவதாகும்? இயற்கையாக வரும் உணர்வுகள் வேறு, நாமாக வலிந்து போய் தூண்டிக் கொள்வது வேறு, இல்லையா?

//do you advocate free sex, prostitution and rape? After all what are women for? Only to receive our semen, the seed of life?//

இதுவும் விதண்டாவாதம் மதன். நான் மேலே சொன்னது போல புதியது காணும் முயற்சிகளில் நேரத்தைச் செலவளிப்பதுதான் மாற்று வழி.

வெள்ளி, அக்டோபர் 13, 2006

ஆண்களுக்கு மட்டும் - 3

சுய இன்பம் பெறுவதால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சியைத் தவிர்த்து விட்டால் எந்த பின்விளைவுகளும் கிடையாது என்பது பெட்டிக் கடைகளில் விற்கும் திரைச்சித்ரா. பருவகாலம் முதல், Marriage Manual என்று கையேடுகளிலும், இணையத்தில் சக்கை போடு போடும் எல்லா விதமான பாலுணர்வைத் தூண்டும் தளங்களும் தரும் உறுதி மொழி.

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் 'உங்களுக்கு ஒரு பெரிய கவலை மனதில் இருக்கிறது' என்று ஆரம்பிப்பது பாதுகாப்பானது. கவலை இல்லா விட்டால் சோதிடம் பார்க்க ஏன் வருகிறார்கள். திரைச் சித்ராவின் வாசகர்களுக்கு எது ஆறுதலைத் தருமோ எது அவர்களது விற்பனையைப் பாதிக்காதோ அதை சொல்வதுதானே நியாயம்?

பாதிப்பே இல்லையா, என்ன?

எஸ்கே ஐயா சொல்வது போல "ஒரு சொட்டு விந்துக்கு பல சொட்டு ரத்தம் இழப்பாகும்" என்ற பயமுறுத்தல்களை விட்டு விடுவோம்.

உண்மையை நம்மளவில் ஆராய்ந்து பார்ப்போம். சுயஇன்பத்துக்குப் பிறகு ஏற்படும் குற்றஉணர்ச்சி தவிர்க்கவே முடியாது. எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும் துடைத்துப் போட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்க முடியாது. மனித மனதையும் உடலையும் எண்ணிப் பார்த்தால் இதன் பின்னணி விளங்கும்.

உணர்வுகளைத் தூண்டி, உடலைத் தயார் செய்து, விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. அதை விடுத்து செயற்கையாக உணர்வுகள் மூலம் உடலை செலுத்தி வெறுமையில் முடிவது உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

பதினைந்து நிமிடம் கோவிலுக்குப் போனால் ஏற்படும் நிம்மதி அடுத்த பல மணி நேரங்களுக்கு தொடர்கிறது என்றால் ஒரு மணி நேரம் படம் பார்ப்பதில் செலவிட்டால் அதன் விளைவுகள் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?

தேவை இல்லை
வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு எத்தனை மணி நேரம் இந்த பலனற்ற செயலில் செலவளிக்கிறோம்? இது இல்லாமல் முடியாது என்ற விவாதத்துக்கு இதை எண்ணிப் பாருங்கள். ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா? சாதிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், ஒரு மணி நேரம் விதைத்தால் எத்தனை மணி நேர பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு செயல்படுவார்கள் அல்லவா?

எல்லோரும் செய்வதால் நாமும் செய்ய வேண்டியதில்லை
இது நம்ம ஊரில் மட்டும் இல்லை, உலகளவில் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தொழில் பாலுணர்வு தொழில்தான். அமெரிக்க விவாதத் தளங்களிலும் இது பற்றிய கிண்டல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆனால், ஒவ்வொருவரும் இந்த மணி நேரங்களையும் தொடரும் பாதிக்கப்பட்ட நேரங்களையும் புதியன படைக்கும் முயற்சிகளில் செயல்பட்டால் ஒரு சமூகம் எவ்வளவு சாதிக்கலாம்?

நம்முடைய படைப்பாற்றலுக்கு வடிவம் கொடுக்க வேண்டும்
சுய இன்பம் காண்பது நம்முடைய உருவாக்கும் உந்துதலுக்கு அரைகுறை நிறைவு அளித்து விடுகிறது. அதை விடுத்து உணர்வுகளைக் கவிதைகளாகவோ, ஓவியமாகவோ, கதையாகவோ வடிக்க ஆரம்பிக்கலாமே, புதியது படைத்த முழு நிறைவும் கிடைத்து விடும்.

ரஜினிக்கு ஏன் கோடிகள்? (economics 31)

 1. அதீத ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் (profix maximizing enterprises)
  'தொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும் சுரண்டி அந்த நிறுவனம் கொழிக்கிறது' என்று எதிர்ப்பவர்க்ள் ஒரு புறமிருக்க, 'அப்படி முழு சுதந்திரத்துடன் நிறுவனம் செயல்பட்டால்தான் சந்தைப் பொருளாதாரம் சரிவர செயல்படும்' என்று நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

  ஒரு தொழிலாளி வேலைக்கு வரும் போது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார். அந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவரால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் ஆதாயத்தை அவருக்கு சம்பளமாகக் கொடுக்காமல், குறைந்த தொகையில் வேலை வாங்கிக் கொண்டு அதிகப்படியை தனது ஆதாயமாக பெருக்குவது முதலாளித்துவம்.

  இதைத் தடுக்கத்தான் தொழிற்சங்க அமைப்புகள் தோன்றி கூட்டாக சம்பள பேரம் பேசும் முறை வழக்கில் உள்ளது.

 2. செல்வந்தர்களுக்கு வரி விதித்து ஏழைகளுக்கு சலுகை வழங்கும் அரசுகள் (welfare states)

  'அரசாங்கம் எளியவர்களையும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களையும் பராமாரிக்கும் வண்ணம், உதவித் தொகைகள், மானியங்கள், இலவசத் திட்டங்கள் அளிக்க வேண்டும்' என்று ஒரு புறத்தார் சொல்ல, 'வெற்றிகரமாக உழைப்பவர்களிடமிருந்து எடுத்து சோம்பேறிகளுக்குக் கொடுத்தால் நாடு எப்படி உருப்படும்' என்று அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எதிர் கருத்தினர்.

  சத்துணவு போடுவதை விட தொழிற்சாலைகள் கட்டினால் அப்பாமார்களுக்கு வேலை கிடைத்து குழந்தைகள் வீட்டிலேயே சாப்பிட வசதி ஏற்படுமே என்று சத்துணவு திட்டத்தை எதிர்த்தார்கள்.

  அரசாங்கள் சந்தை என்ற காட்டில் யார் வலிமை உள்ளவரோ அவர் பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும், நலிந்தவர்கள் உதிர்ந்து போவது இயற்கையின் தேர்வு என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

 3. விலை விளையாட்டில் ஈடுபடும் வியாபாரிகள் (speculators)

  சந்தைப் பொருட்களை வியாபாரி பதுக்கி வைத்து விலையை ஏற்றி அப்புறம் விற்பதை வியாபாரத் திறன் என்று புகழ்பவர்களும், அது சமூகத்துக்குச் செய்யும் கொடுமை என கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று இகழ்பவர்களும் இருக்கிறார்கள்.

  இப்போது பருப்பு முதலான தானியங்களின் விலை தாறுமாறாக ஏறியிருப்பது மூலப்பொருள் வர்த்தகத்தை (commodity trading) அரசு அனுமதித்ததால்தான் என்கிறார்கள். (நன்றி : இந்த வார குமுதம் பத்திரிகை).

  குறைந்த விலைக்குக் கிடைக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்துக் கொண்டு விலை ஏறிய பிறகு விற்பது பதுக்கல் வியாபாரம் என்கிறோம்.

  இன்றைக்கு துவரம் பருப்பு விலை கிலோ முப்பது ரூபாயாக இருக்கும் போது இரண்டு மாதத்துக்குப் பிறகு அது கிலோ அறுபது ரூபாயாக ஏறி விடும் என்று அனுமானித்து இரண்டு மாதத்துக்குப் பிறகு ஐம்பத்தைந்து ரூபாய்க்கு நான் ஆயிரம் கிலோ வாங்கிக் கொள்கிறேன் என்று பந்தயம் கட்டலாம். அதற்கு முன்பணமாக 5% மதிப்பைக் கட்டி விட வேண்டும். (2500 ரூபாய்).

  இரண்டு மாதத்தில் விலை அறுபது ரூபாயாக ஏறியிருந்தால் ஆதாயமான 5000 ரூபாயையும் என்னுடைய முன்பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். விலை முப்பத்தைந்திலேயே நின்று விட்டிருந்தால் 20000 ரூபாய் நான் இழப்பேன்.

  'சந்தையை ஒழுங்கு படுத்துவதில் இந்த அனுமான வியாபாரங்கள் பெரிதும் உதவுகின்றன' என்பது இதை ஆதரிப்பவர்களின் வாதம். 'நம்மைப் போன்ற முதிர்ச்சியடையாத, நெறிப்படுத்தப்படாத சந்தைகளில் இதைச் சூதாட்டமாகப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விலைகளை ஏற்றி விடுவதுதான் மிஞ்சும்' என்பது எதிர்ப்பவர்களின் கட்சி. கடைசியில் விலை உயர்வு சாதாரண மக்களின் தலையில்தானே விடியும்.

  சிபியும், பொன்ஸும் சொன்னது போல பங்கு வர்த்தகத்திலும் இது போல அனுமான விளையாட்டுக்கள் உண்டு. இந்த செயல்பாடுகள் SEBI போன்ற மட்டுறுத்தும் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் விலை ஏறுவதும் இறங்குவதும் இதில் பங்கு பெறாத பொது மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை.

 4. சொத்து வாரிசுகளுக்குப் போதல் (Inheritance taxes)

  'அப்பா உழைத்தார், சொத்து சேர்ந்தது, அது மகனுக்கும் போய்ச் சேருவது என்ன நீதி, ஒருவர் தனது சொத்துக்களுக்கு உயில் எழுதி வைத்துப் போய்ச் சேர்ந்தால் சொத்துக்களின் மதிப்பில் பெரும்பகுதி வரியாகக (inheritance tax) கட்டப்பட வேண்டும்' என்று அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்கள் உள்ளன. 'தந்தையும் சொத்து குழந்தைகளுக்குப் போய்ச் சேருவதில் என்ன இடையூறு' என்று இருக்கும் சமூகங்கள் நம்ம ஊர் சமூகங்கள்.

  'உழைக்காமல் வசதிகள் வந்தால் அதை வீணாக்கி தவறான வழியில் போவதுதான் நடக்கும். வாரிசுகளுக்கு சொத்து கொடுப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பது சமூகத்துக்கு நல்லது' என்று சமூகவியல் வாதிகள் சொல்ல, 'அப்படி நடந்தால் யார்தான் சிரமப்பட்டு உழைப்பார்கள். செத்த பிறகு எவனோ கொண்டு போவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும் என்று இருந்து விட மாட்டார்களா' என்று முதலாளிகளைச சார்ந்தவர்கள் வாதிடுவார்கள்.

 5. சிறப்பு வருமானங்கள்

  "கலைத்துறை, விளம்பரத்துறைமற்றும் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தரும் ஊதியத்தை, அவர்களது திறமையை மட்டும் அல்லாமல் அவர்கள் மக்களிடையே கொண்ட செல்வாக்கும் சேர்த்து நிர்ணயிக்கிறது. இங்கே ஊதியமும் அவர்களது திறமையும் மட்டும் அல்லாமல் இன்னபிறவும் அவர்களது வருமானத்தை நிர்ணயிக்கின்றன." == பத்மா அரவிந்த்

  டெண்டூல்கருக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் அவரது போன்ற கிடைத்தற்கரிய திறமைக்கும் அந்தத் திறமைக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்புக்கும் உள்ள அங்கீகாரம்தான். அதே போலத்தான் ரஜினியின் நடிப்புத் திறனும் மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கும்.

  இங்கும் வழங்கலுக்கும், தேவைக்கும் இடையான இழுபறிதான் வருமானத்தைத் தீர்மானிக்கிறது.

  செஸ்ஸில் அரிய திறமை படைத்த ஆனந்துக்கு டெண்டூல்கர் அளவு வருமானம் கிடைகாதது செஸ் விளையாட்டை கண்டு களிக்க மக்களின் தேவை குறைவாக இருப்பதுதான்.

இன்னொரு வருமான வழி நிலத்தின் மதிப்பு கூடுவதால் கிடைக்கும் ஆதாயம். அது தனிநபருக்கு சொந்தமா அல்லது வரி விதிப்பின் மூலம் அரசே எடுத்துக் கொள்ள வேண்டுமா?

வியாழன், அக்டோபர் 12, 2006

ஆண்களுக்கு மட்டும்தான் உதவும்

யூதர்களும், முஸ்லீம்களும் பின்பற்றும் ஒரு பழக்கம் ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆண்குறியின் நுனித்தோலை வெட்டி விடுவது . என்னுடைய முஸ்லீம் நண்பர்கள் சிறுநீர் கழித்த பிறகு ஆண்குறியை நீரால் கழுவுவதையும் வழக்கமாக வைத்திருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்குறியின் முனையை மூடியிருக்கும் தோலின் பின்பக்கம் அழுக்கு சேர்வது இயல்பாக நடக்கிறது. தோலின் மடிப்புகளுக்குப் பின்னால், சுரப்புகளின் காய்ந்த துகள்கள் சேர்ந்து விடுகின்றன. ஆங்கிலத்தில் smegma எனப்படும் இந்தப் படிவுகள் துர்நாற்றத்தை உருவாக்குவதுடன், உணர்ச்சி பூர்வமான இந்தப் பகுதியில் மேல் தோலுடன் உராய்ந்து சிரமத்தைக் கொடுக்கின்றன. சில நேரம் பாக்டீரியாக்கள் சேர்ந்து எரிச்சலையும் உருவாக்கலாம்.(balantis)

குளிக்கும் போது நுனித் தோலை முற்றிலும் பின் தள்ளி தோல் குறியுடன் இணையும் இடத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது இதை நீக்குவதற்கான வழி. சோப்புகள் எதையும் பயன்படுத்தாமல், தூய்மையான குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தலை செய்யலாம். மிகக் கவனமாக தோலையோ, உறுப்பையோ காயப்படுத்தி விடாத வணணம் தினமும் சுத்தம் செய்வது நலனைத் தரும்.

துணிந்தவருக்கு துக்கமில்லை் (economics 30)

பொருளாதார வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலை ஒவ்வொரு துறையிலும் இருக்கிறது.

 • இன்றைக்கு விதை விதைத்தால் நமது சாப்பாட்டுக்குப் போக மீதமிருக்கும் நெல்லை விற்று மீதித் தேவைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று விவசாயி கணக்குப் போடுகிறார். ஆறு மாதத்துக்குப் பிறகு நெல் அறுவடையாகி சந்தைக்குப் போகும் போது விலை குவின்டாலுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற துணிச்சலில் செலவுகள் செய்கிறார். அறுவடை காலத்தில் விலை குவின்டாலுக்கு ஐநூறு ரூபாய் என்று சரிந்து விட்டால் என்ன கதி?

 • தொழிற்சாலை கட்டி இயந்திரங்கள் வாங்கி வேலைக்கு ஆள் வைத்து பொருளை உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வந்தால் இன்ன விலைக்கு விற்கலாம் என்று துணிந்து தொழில் நடத்தும் தொழில் முனைவோருக்கும் கணிப்புகள் பொய்த்துப் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. மருந்து, உயர் மின்னணுப் பொருள் இவற்றின் உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் ஆராய்ச்சி செலவுகளுக்கும் போகின்றன.

 • தேர்தலில் நிற்பதற்கு ஓரிரு கோடி செலவளிக்கிறோம், வெற்றி பெற்று விட்டால் ஒன்றுக்கு மூன்றாகப் பார்த்து விடலாம் என்ற துணிச்சலில் தேர்தலில் நிற்பதும் ஒரு வகையில் வாய்ப்பை முயன்று பார்ப்பதுதான்.
இப்படி தன் சேமிப்பை முடக்கிப் பணத்தைப் போட்டு நாள் பிடிக்கும் வழிகளில் பொருட்களையும் சேவைகளையும் உருவாக்கத் துணிச்சல் காட்டும் தொழில் முனைவோருக்கு வெற்றி பெற்றால் பரிசாக ஆதாயம் கிடைக்கிறது. அது இல்லா விட்டால் எந்த விதமான முயற்சிகளும் புதிதாக மேற்கொள்ளப்படாமல் பொருளாதார நடவடிக்கை முடங்கிப் போய் விடும்.

ஒருவர் வேலை செய்து மாதக் கடைசியில், வார இறுதியில், நாள் தோறும் வாங்கும் ஊதியத்தைத் தவிர்த்து இன்னொரு வருமானம் வரும் வழி மேலே சொன்ன துணிச்சலுக்குக் கிடைக்கும் ஆதாயம். இந்த ஆதாயத்தின் மறுபக்கம், தோல்வியடைந்தால் துண்டைப் போட்டுக் கொண்டு போக வேண்டிய இழப்பு. எங்கு அதிக நிச்சயமின்மை நிலவுகிறதோ அந்தத் துறைகளில் ஆதாயமும் அதிகமாக இருக்கும்,

பில் கேட்ஸ் எண்பதுகளில் தனது உழைப்பின் மூலமும், திட்டமிடல் மூலமும் தொண்ணூறுகளில் பெரும்பலன் அளித்த மென்பொருள் உருவாக்கத்துக்கு வித்திட்ட முனைப்புக்கு பரிசுதான் இன்று அவருக்கு வரும் பெரு ஆதாயங்கள்.

உழைத்தால் காசு, அப்போ துணிந்து இறங்கியதற்கு இன்றைக்கு ஆதாயம் என்ற இரண்டிலுமே யாருக்கும் எந்த மனத் தாங்கலும் இருக்க முடியாது. அடுத்தவர்களிடமிருந்து திருடுவது, ஏமாற்றிப் பணம் ஈட்டுவது என்பது சரியில்லை என்பதும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

சர்ச்சைக்குள்ளாகும் வழிகள் இன்னும் சில இருக்கின்றன. ஒரு தரப்பார் முழு மூச்சாக எதிப்பதும், மற்றொரு தரப்பில் முழு ஆதரவு தருவதுமாக சூடு பறக்கும் விவாதத்துக்குள்ளாகும் அவை என்ன?

புதன், அக்டோபர் 11, 2006

ஆண்களுக்கு மட்டும்

இன்றைய இந்து சென்னைப் பதிப்பு மெட்ரோ பிளஸ் பகுதியில் தனிசுகாதாரம் பற்றி ஒரு கட்டுரை. உடல் துர்நாற்றம், வாய் நாற்றம், கசங்கிய அழுக்கான ஆடை உடுத்துவது, காலுறை பிரச்சனைகள் என்று பட்டியல் போட்டு விட்டு் முதல் இரண்டுக்கும் வழி எதுவுமே சொல்லாமல் முடித்து விட்டார்கள்.

நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்தால் நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40 டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம் கமழ்கிறதா?

உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம். பல்லில் படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில் இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது.

வழக்கமாக பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும் பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை bad breath (மோசமான சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப் போயிருந்தால் அதைத் தொட்டு காற்று வாய் வழியாக வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது.

உடலெங்கும் சுற்றி வரும் ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து மேல்தோலுக்கு வந்து விடுகிறது.

 1. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம்.
  காலையில் எழுவதற்கும் வேலைக்கு கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் திண்டாட்டம்தான்.
  முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

 2. அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள் அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.

 3. தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப் போய் விடும்.

 4. சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. சாப்பாட்டு வேளையைத் தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம் வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.