மனிதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 13, 2019

ஒரு மின்னல் பார்வையில் கிழக்குக் கடற்கரை இந்தியாவும், வட இந்தியாவும்

மார்ச் 24-ம் தேதி இரவு தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி மாலை வரை சென்னை - விஜயவாடா - விசாகபட்டினம் - புபனேஸ்வர் - ஹவுரா, கொல்கத்தா - தன்பாத் - கயா - அலகாபாத் - டெல்லி - கோட்டா - ரத்லாம் - சூரத் - மும்பை - புனே - சென்னை பயணம்

ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு போனதால் நகர்வில் இருக்கும் மக்கள் பிரிவினரையே முதன்மையாக பார்த்தேன்.

நிம்மதியற்ற, அலைந்து கொண்டே இருக்கும், கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் மக்கள் பட்டாளம் இந்தியாவின் சாரமாக இருக்கிறது.

விவசாயிகளும் சரி முறையான தொழிலாளர்களும் சரி, ஒப்பந்தத் தொழிலாளர்களும் சரி, மாணவர்களும் சரி, நிறைவின்றி தேட்டத்திலும் ஓட்டத்திலும் உள்ளனர். எதை பிடிப்பது, எதை விடுவது, எங்கு போய் வாழ்வது என்ற நிம்மதியின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஓட்டத்தை விஜயவாடாவில் தொடங்கி, விசாகப்பட்டினம், புபனேஸ்வர், ஹவ்ரா, கொல்கத்தா, தன்பாத், கயா, அலகாபாத், காசியாபாத், டெல்லி, கோட்டா, ரத்லாம், சூரத், மும்பை, பாந்த்ரா, புனே, என்று எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த இடங்களில் இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதியைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களை பார்க்க முடிந்தது.

டம் விட்டு இடம் போய் படிக்கும், படிப்பில் திருப்தி இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் -
  • விஜயவாடாவில் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் வாரங்கல் பையன் - மேற்படிப்பு போக வேண்டும்
  • எம்.பி.பி.எஸ் முடித்து அமெரிக்கா போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சுவிக்ஞன் இந்தியாவையும் அவனது பெற்றோரையும் வெறுக்கிறான்
  • லக்னோவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் தென்னிந்தியாவின் உணவு பழகாமல் சிரமப்படுகிறான்
  • புபனேஸ்வர் ரயிலில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் படிக்கும் பிரதீக் nutritionist ஆக விரும்புகிறான், 
  • இன்போசிஸ்-ல் வேலை செய்யும் பாலாவுக்கு புபனேஸ்வரை தவிர வேறு எங்காவது போய் வேலை செய்ய வேண்டும் என்று தவிப்பு. 
இன்னும் பலர் இடம் விட்டு இடம் பெயர்ந்து படிக்க, வேலை செய்ய போயிருக்கின்றனர்.
  • புபனேஸ்வர் பேருந்தில் சந்தித்த ஒரு மாணவர் சென்னையில் சி.டி.சி5 விப்ரோவில் இன்டெர்ன்ஷிப் செய்திருக்கிறார். 
  • சுவிக்ஞன் சி.எம்.சி வேலூருக்குப் போயிருக்கிறார். 
  • வெல் ஸ்பன் நிறுவனத்தில் வாபிக்கு வேலைக்குப் போகும் பையன் உலகத்தைப் பார்த்திருக்கிறான்.
  • ராஜ்குமார் என்ற சூரத்தில் இறங்கிய பையன் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடை விற்பனை செய்வதற்கு ஆள் தேடித் தரும்படி கேட்கிறான். 
  • சென்னை வரும் ரயிலில் கல்புர்கியில் ஏறிய பையனுக்கு 25 வயதுதான். கல்லூரியில் துறைத் தலைவரை அடித்து மண்டை உடைந்து, மூளை வெளியில் வந்து 6 மாதம் சிறையில் இருந்திருக்கிறான். இப்போது கட்டுமான கம்பெனியில் வேலை. இன்னும் 5 ஆண்டுகள் வேலை செய்து விட்டு பின்னர் தன் விருப்பப்படி வாழப் போகிறானாம். 
  • தன்பாதில் அமித், அப்பா கோல் இந்தியா ஓய்வு பெற்றவர், அண்ணன் போக்குவரத்துத் தொழில் செய்து கொண்டிருக்க இவர் சொகுசாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 
  • தன்பாதில் இன்னும் இரண்டு இளைஞர்கள் இந்தியா விஷன் என்ற கம்பெனி கால் சென்டரில் வேலை செய்கின்றனர். 
  • ரேணிகுண்டாவுக்குப் போகும் பையன் வீட்டில் கிராமத்து டிபன் கடை. அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில். தம்பி கல்லூரியில். இவன் கடை நடத்த வேண்டும். அட்டெண்டன்ஸ்-க்காக கல்லூரிக்குப் போயக் கொண்டிருக்கிறான். 
இது போக சிறப்புத் திறன் இல்லாத தொழிலாளர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
  • மும்பை - சென்னை ரயிலில் திருவல்லா வரை போவதற்கான டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கும் இளைஞன். கையில் காசு இல்லை, சாப்பிடுவதில்லை. 
  • கோட்டா - ரத்லாம் ரயிலில் சந்தித்த அலகாபாத்துக்கு அப்பால் இருந்து ராஜ்கோட்டுக்கு அப்பால் வேலைக்குப் போகும் இளைஞர்கள், பூரியும் ஊறுகாயும் தொட்டுத் தின்று வயிற்றை நிறைத்துக் கொள்கின்றனர், ஒரு வேளை உணவு, வாய்க்கு ருசியில்லாத உணவு.
  • ஹவுராவில் ரிக்‌ஷாவில் அழைத்துச் சென்று ரூம் காட்டிய இசுலாமிய தொழிலாளி. ஜார்கண்டை சேர்ந்தவர். மோடி, அமித் ஷாவை ஏளனம் செய்கிறார். 
  • புபனேஸ்வரில் ராஜூ என்ற பையன். திருப்பூரில் வேலை செய்திருக்கிறான். ஜார்கண்டை சேர்ந்தவன். புபனேஸ்வரில் அக்கா வீட்டில் இருக்கிறான். ரயிலை தவற விட்டு அபராதம் கட்டியிருக்கிறான். 
  • புனா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த லத்தூர் விவசாயியும் அவரது மகனும். 
நகரங்களுக்குள் சந்தித்தவர்கள்
  • கொல்கத்தாவின் இமிடேஷன் நகை கடை நடத்தும் முன்னாள் ராணு வீரர் 1992-ல் சென்னைக்கு வந்தாராம். ஆவடி heavy ordinance தொழிற்சாலையில் பயிற்சி எடுத்தாராம். இப்போது வெளியில் போவது எல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்.
  • புபனேஸ்வரில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் தேடி வந்த ஒரு பழுத்துக் கனிந்த வயதான அம்மா, வேகா வெயிலில் ஒரு நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தார். தண்ணீர் பாட்டிலை கொடுத்ததும், பாட்டில் மூடியை வாங்கி அதில் ஊற்றிக் குடித்தார். இளைப்பாறி விட்டு கிளம்பும் போது தலையில் கைவத்து ஆசீர்வதித்து விட்டுப் போனார்.
    நான் பேசுவது அவருக்குப் புரியவில்லை, அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை. ஆனால், அங்கு ஒரு பிணைப்பு இருந்தது.
தேர்தல் விவாதங்கள்
  • அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒடிசா அரசியல் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் புத்திசாலித்தனமாக பேசிய ஒரு வயதானவர்.
  • மும்பை - சென்னை ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு விவசாயிகள் தேர்தல் பற்றி விவாதத்துக் கொண்டு வந்தனர். சந்திரபாபு நாயுடு பெண்களின் பெயரில் மாதம் ரூ 5,000 அனுப்பியதால் பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருக்கிறது என்று பேசினார்கள் என்று ரேணிகுண்டா கல்லூரி பையன் கூறினான். அந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 
  • இதைத் தவிர புபனேஸ்வரில் நிதீஷ்குமார் கட்சியின் பிரச்சார வாகனம் ஒன்று. வேறு எங்கும் தெருக்களில் தேர்தல் தீவிரத்தை காணவில்லை. 
  • மோடியைப் பற்றி கயா ரயில் நிலையத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 
தொகுத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க - இந்துத்துவ அரசியல் வட இந்தியாவில் கேள்வி கேட்பார் இல்லாத ஆதிக்கத்தில் இல்லை. அதை எதிர்த்து கடுமையான எதிர்ப்பு நீரோட்டம் செயல்படுகிறது. அது வெளியில் தலைகாட்டுவதற்கு தயங்குகிறது.

ரகசிய வாக்களிப்பு முறையில், நிச்சயமாக பா.ஜ.கவின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமையும். VVPAT மூலம் யாருக்கு ஓட்டு போட்டாய் என்ற தெரிந்து விடும் என்ற அச்சமும் இருக்கலாம்.

கொல்கத்தாவைத் தவிர கம்யூனிஸ்டுகள் வேறு எங்கு கண்ணில் பட்டனர். தன்பாதில்? டெல்லியில்? ரத்லாமில்? சூரத்தில் - இல்லை என்பதுதான் பதில். அதற்குப் பதிலாக கோயில்களும், பா.ஜ.கவின் மேளாக்களும் நிரம்பி வழிகின்றன.

தனிப்பட்ட அனுபவம்

எந்த இடத்திலும் உடனடியாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படவே இல்லை. இணைய இணைப்பும், பழகிப் போய் விட்டிருந்த உணவு முறையும், எளிய வாழக்கை முறையும் கிடைத்த வாய்ப்புகளை நிறைவோடு பயன்படுத்தி பயணிப்பதை எளிதாக்கியிருந்தன.

பேச்சுக் கொடுத்தவர்கள் எல்லாம் இயல்பாக நெருக்கமாக பேசினார்கள். வாழ்க்கை விபரங்களை பகிர்ந்து கொண்டார்கள். முக்கியமாக தன்பாதில் அமித், புபனேஷ்வருக்கு அருகில் பிரதீக், வாபியில் வேலை செய்யும் QC தொழிலாளி, ரேணிகுண்டாவில் படிக்கும் மாணவர், கட்டுமானத் துறையில் safety engineer வேலை செய்யும் 25 வயது இளைஞர் என யாரும் தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.

கோட்டாவிலிருந்து ரத்லாம் வரையிலான பயணத்தில் தொழிலாளர்கள் நெருக்கமாகி விட்டார்கள். ரத்லாமில் இறங்க வேண்டாம், வடோதராவில் இறங்கி மும்பைக்கு ரயிலை பிடிக்கலாம் என்று வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ரத்லாம் - சூரத் பாதையில் ராஜ்குமாரும், வாபி பையனும் நெருக்கமாக பேசினார்கள். ரத்லாம் - சூரத் ரயிலில் கூட்ட நெரிசலில் பெண்களும், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்கார்வதற்கு சண்டை போட்டு இடம் வாங்கிக் கொடுத்தேன்.

ஆள், இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை, தென்னிந்தியர் என்று பலர் ஊகித்துக் கொண்டனர்.

திங்கள், மார்ச் 25, 2019

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

ஞாயிறு, மார்ச் 24, 2019

லிடியன் நாதஸ்வரம் - உலக இசை அரங்கில் ஒரு தமிழ்ப் புயல்

லிடியன் நாதஸ்வரம் என்ற பையன் அமெரிக்காவில் நடக்கும் World’s Best என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று $10 லட்சம் (சுமார் ரூ 7 கோடி) வென்றிருக்கிறான்.


12 வயது லிடியன் பியானோ மேதையாக இருக்கிறான். ஒரே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளை வாசிப்பது, அதி வேக கதியில் வாசிப்பது என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாய் பிளக்க வைக்கிறான்.

ஹேரி பாட்டர் பின்னணி இசை, அதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபிள் இசை, பின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் - ஒரு கையால் அதையும், ஒரு கையால் இதையும் வாசிக்கிறான். “Oh my God, you ought to be kidding me” என்று கத்துகிறார் ஒருங்கிணைப்பாளர். அடுத்து ஜூராசிக் பார்க் இசை, தனது கை விரல்கள் தோற்றுவிக்கும் மாயத்தைக் கேட்டு அவனது முகத்தில் குழந்தைத்தனமான குதூகலம், சூப்பர் மேன் அடுத்து.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னாலும் பியானோ வாசிக்க முடியும் என்று ஒரு எளிய வாசிப்பை செய்து காட்டி விட்டு, "impressed?" என்று கேட்க, "ஆம்" என்று அப்பாவி தமிழ் முகத்துடன் பதில் சொல்கிறான், லிடியன்.

மொசார்ட்டின் டர்க்கிஷ் மார்ச் என்ற மெட்டை கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கிறான். ”பியானோவுடன் நிலாவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா வாசிக்க விரும்புவதாகச்" சொல்கிறான்.


flight of the bumble bee என்று ஒரு தேனீ பறக்கும் ஓசையை இசையாக வடிக்கிறான். 108 beats per minute – metronym அமைத்துக் கொண்டு அதை வாசிக்கிறான், நடுவர்களும் பார்வையாளர்களும் உண்மையிலேயே வாயைப் பிளக்கின்றனர். அதன் பிறகு 325 beats per minute

அவனது அப்பாவும் பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். லிடியன் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் பயிற்சி பள்ளியில் பயின்றிருக்கிறான்.


விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போலவே பக்காவான செட், ஒருங்கிணைப்பவர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று நிறைந்த அரங்கத்துக்கு வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டுகின்றன. இறுதிக் கட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் லிடியனும் உடல் வித்தைகள் செய்யும் குழுவான குக்கிவானும் இருக்கின்றனர். கடைசியில் லிடியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெறுகிறான்.

லிடியன் முகத்தில் ஒரு புன்னகை கீற்றைத் தவிர பெரிதாக கொண்டாட்டமோ, குதித்தலோ, முட்டி மடக்குதலோ இல்லை. ஆழமான பையனாக இருக்கிறான். அவனது அப்பாவும் அமைதியானவராக இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சேர்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், குக்கிவான் குழு ஆரவாரம் செய்து கொள்கின்றனர்.

யூடியூபில் லிடியன் முதலிடம் பெறும் வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு செய்தி, scroll.in செய்தி, விகடன் சினிமாவில் ஒரு வீடியோ, ஏ.ஆர் ரஹ்மான் லிடியனை பாராட்டி பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை ஊடகங்களில் எதையும் காணவில்லை. தமிழ்நாடு, இந்தியாவில்தான் இருக்கிறதா?

லிடியனுக்கு நமது கைத்தட்டல்களையும், பாராட்டுதல்களையும் பரிசாக்குவோம்!

வியாழன், மார்ச் 21, 2019

இந்துத்துவர்களை புலம்ப வைத்த 3 விளம்பரங்கள்

மீபத்தில் புரூக் பாண்ட் ரெட் லேபல் டீக்கான கும்பமேளா விளம்பரமும், சர்ப் எக்செல் டிட்டெர்ஜென்ட் பொடிக்கான விளம்பரமும் இந்துத்துவா படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின.

சர்ப் எக்செல் விளம்பரத்தில் ஒரு சிறுமி ஹோலி சாயக் கறைகள் பட்டு விடாமல் இசுலாமிய சிறுவனை தொழுகைக்கு மசூதி அழைத்துச் செல்கிறாள். இருவரும் 10-12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இது லவ் ஜிகாத் விளம்பரம் என்று பக்தர்கள் குரல் எழுப்பினார்கள். சர்ப் எக்செல்-ஐ புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தனர்.



புரூக்பாண்ட் ரெட் லேபல் டீ விளம்பரத்தில் தன் வயதான அப்பாவை கும்பமேளா கூட்டத்தில் தொலைத்து விட்டுப் போக முயற்சிக்கும் மகன் மனம் திருந்துவதைப் பற்றியது. இறுதிக் காட்சியில் அப்பாவும் மகனும் மண்சட்டியில் ரெட்பேல் டீ குடிக்கின்றனர்.


கும்பமேளாவில் பல வயதானவர்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்படுகின்றனர் என்று ஒரு செய்தியையும் அது சொல்கிறது. அன்றாட நுகர்பொருள் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் போட்டி நிறுவன முதலாளியான பாபா ராம்தேவ் தனது போட்டியாளரை கண்டித்திருக்கிறார். இந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக அந்த வெளிநாட்டு பிராண்டை புறக்கணிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலாக அவரது பிராண்டை வாங்க வேண்டுமாம்.

இந்த இரண்டு பிராண்டுகளும் ஹிந்துஸ்தான் யூனி லீவருக்கு சொந்தமானவை.

யூனிலீவரின் பிராண்டுகளை புறக்கணிக்கும்படி சொல்லும் ஒவ்வொரு மெசேஜுக்கும் பதிலாக பலர் அந்தச் சலவை பொடியை கூடுதல் கிலோக்கள் வாங்கப் போவதாக தெரிவித்திருக்கின்றர். சர்ப் எக்செல் விளம்பரத்தை யூடியூபில் 1 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். மொத்தம் 1.28  லட்சம் லைக்குகள், 22,000 டிஸ்லைக்குகள். 5,161 கமென்டுகள்.

"அன்றாட நுகர்வு பொருட்களைப் பொறுத்தவரையில் நுகர்வோர் பிராண்ட் நிறுவனத்தின் மீது சொல்லப்படும் சித்தாந்த ரீதியான குற்றச்சாட்டுக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அதனால் என்ன வகையான பிரபலமும் சாதகமானதுதான்" என்கிறார்கள் சந்தைப்படுத்தல்  நிபுணர்கள். சென்ற ஆண்டு நைக் பொருட்களை புறக்கணிப்பதாக நடந்த இயக்கத்தைத் தொடர்ந்து அதன் விற்பனை அதிகரித்திருக்கிறது. #metoo விளம்பரத்தைத் தொடர்ந்து ஜில்லெட் பிளேட்டுக்கு எதிரான பிரச்சாரமும் விற்பனையை பாதிக்கவில்லை என்று பி&ஜி சொல்லியிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போன்றது இந்த பிக் பஜார் விளம்பரம். மே 2017-ல் வெளியிடப்பட்ட இதுவும் 1 கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.


இஸ்லாமிய பெண் மருத்துவர், ரம்சான் நோன்பு திறத்தல், சீக்கிய அம்மாவின் அன்பும் நேசமும், பெண் மருத்துவரின் முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த புன்னகை - பார்க்கப் பார்க்க திகட்டாத விளம்பரம்.

மதவெறியும், வெறுப்பும், பிரிவினை பிரச்சாரமும் சாதாரண உழைத்துப் பிழைக்கும் மக்களுக்கு அன்னியமானவை என்பதுதான் விஷயம்.

செய்தி ஆதாரம் : Can #Boycott be good for business and brands?

வெள்ளி, மார்ச் 08, 2019

பெண்கள் மீது வேலைச் சுமையை குறைக்க உறுதி கொள்வதற்கான நாள்

ன்று சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. 1917 ரசிய சோசலிச புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அது கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் பெண்கள் மேலும் மேலும் தொழிலாளர்களாக வருகின்றனர். சாதி, மத கட்டுப்பாடுகளால் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த பெண்கள் கார்மென்ட் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் வேலை செய்ய போகிறார்கள். ஏன், கட்டிட வேலையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இது சமூக வாழ்வில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதே குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்பதற்குத்தான். ஆண் தொழிலாளர்களை விட குறைந்த கூலி, வேலை நேரத்தில் இடைவேளை எடுக்காமல் தீவிரமாக உழைக்க வைத்தல், பிரச்சனைகளை எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் இவற்றை முன் வைத்துதான் முதலாளிகள் பெண் தொழிலாளர்களை வரவேற்கிறார்கள்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கார்மென்ட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் பெண் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதில் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என்பதைக் காட்டின. ஆண், பெண் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து பெண்களுக்கு கூலி, வேலை நேரம், பதவி உயர்வு, பணி நிலைமைகள் போன்றவற்றில் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள். வேலை இடங்கள் பலவற்றில் ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற நிலையில் அதில் சேரும் பெண்களை தனிப்பட்ட பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைக்கும் நபர்கள் உள்ளனர். இவர்களை எதிர்த்து சட்டங்கள், நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தாலும், சக தொழிலாளர்கள், தொழிற்சங்க செயல்பாடுகள்தான் இந்த கொடூரத்தை நமது பணி வாழ்விலிருந்து ஒழித்துக் கட்டும்.

வேலை செய்யும் இடத்தில் 8 மணி நேரம், வேலைக்கு போய் வர ஒரு சில மணி நேரம், அதற்கு பிறகு வீட்டுக்கு வந்து வீட்டு வேலை, சமையல், குழந்தைகளை பராமரிக்கும் வேலை என்று பெண் தொழிலாளர்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்படுகிறது. ஆண் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது இதற்கான ஒரு தீர்வாக உள்ளது. உண்மையில், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு வசதிகளை கேட்க வேண்டும். ஆண்களை விட குறைந்த வேலை நேரம், அல்லது வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆள் அமர்த்துவதற்கு கூடுதல் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டியிருக்கும் அம்மாக்களுக்கு குழந்தைகளை பராமரித்து கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை வேலை செய்யும் இடத்தில் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

மேலும், மகப்பேறு, மாத விடாய் நாட்கள் போன்றவற்றில் பெண்ணின் உடல் உபாதைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு விடுப்பு, ஓய்வு நேரம், ஓய்வு இடம், சிறப்பு உணவு, சிறப்பு ஊதியம் வழங்குவதை சட்டரீதியாகவும், தொழிலாளர் அமைப்புகள் மூலமும் கொண்டு வர வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள், பெண் தொழிலாளர்கள், பெண் பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓட்டுனர்கள், விண்வெளி வீரர்கள் என்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சரிநிகர் சமானமாக தமது பங்களிப்பை செய்வதற்கான நிலையை உருவாக்குவது சமூக பொறுப்புள்ள எல்லோரது கடமையாகும்.

செவ்வாய், பிப்ரவரி 12, 2019

ஊடக பிரச்சாரமும் உண்மையை உணர்தலும்

wordsmith என்ற இணையதளத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு சிந்தனை என்ற பகுதி.

Leo Szilard என்ற 1898 முதல் 1964 வரை வாழ்ந்த இயற்பியலாளரின் சிந்தனை.

முதல் உலகப் போரின் போது தனது நாடான ஹங்கேரியும், ஆஸ்திரியா, ஜெர்மனியும் செய்வது அனைத்தும் சரி, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, அமெரிக்கா தவறு என்று செய்தித் தாள்கள் எழுதியிருக்கின்றன. அப்போது அவரது வயது 16.

நம்ம இரண்டு நாடுகள் மட்டும் சரி, மொத்த உலகமும் தவறு என்பது எப்படி என்று கேள்வி எழுந்து விரைவில் தனது சக வகுப்பு மாணவர்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். போர்க் காலத்தில் கூட சமகால நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று கோணத்தில் பார்க்க முடியும் என்கிறார். மிகச் சிறப்பாக உள்ளது, அவர்களது மின்னஞ்சல் சேவையில் நானும் இணைந்து கொண்டேன்.

இந்த இணையதள சேவையை நடத்துவது அனு கர்க் என்பவர்.

"
A THOUGHT FOR TODAY:

I was sixteen years old when the first World War broke out, and I lived at that time in Hungary.

From reading the newspapers in Hungary, it would have appeared that, whatever Austria and Germany did was right and whatever England, France, Russia, or America did was wrong.

A good case could be made out for this general thesis, in almost every single instance. It would have been difficult for me to prove, in any single instance, that the newspapers were wrong, but somehow, it seemed to me unlikely that the two nations located in the center of Europe should be invariably right, and that all the other nations should be invariably wrong.

History, I reasoned, would hardly operate in such a peculiar fashion, and it didn't take long until I began to hold views which were diametrically opposed to those held by the majority of my schoolmates. ...

Even in times of war, you can see current events in their historical perspective, provided that your passion for the truth prevails over your bias in favor of your own nation.

-Leo Szilard, physicist (11 Feb 1898-1964)

புதன், ஜனவரி 18, 2012

தரும சிந்தனை


ஆலிவர் டுவிஸ்டு என்ற நாவலில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும் புகழ் பெற்ற "I want some more" என்ற காட்சி. கதை நடப்பது தொழிற்புரட்சிக்குப் பிறகான இங்கிலாந்தில். 'ஏழைகள் சட்டத்தின்' கீழ் திக்கற்றவர்கள் பராமரிக்கப்பட்ட காலம் அது.

========
அனாதையான ஆலிவர் டுவிஸ்டை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்மணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அதன் படி ஒரு குழந்தை எவ்வளவு குறைந்த அளவு உணவில் உயிர் வாழ முடியுமோ அது வரை உணவு அளவு குறைக்கப்படும்.  அதற்குள் குழந்தை பலவீனத்தாலோ, குளிரினாலோ இறந்து விடும் அல்லது கவனக்குறைவால் தீயில் விழுந்து உயிரை விட்டு விடும்.

இந்தச் சூழலில் வளர்ந்த ஆலிவர் டுவிஸ்ட் 9வது பிறந்த நாளில் வெளிறிப் போன தோலோடு குறுகிப் போன வடிவத்தில், நோஞ்சானாக இருந்தான்.

நாட்டில் அனாதைகளை பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினரான திரு பம்பிள் அன்று விடுதிக்கு வந்தார். இது போன்ற அனாதைகளுக்கான இல்லங்களை ஏழை மக்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று அந்த வாரிய உறுப்பினர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.

'காசு கொடுக்கத் தேவையில்லாத உணவு விடுதி -  பொதுச் செலவில் காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு என்று சொகுசாக வாழலாம். தூங்குவதற்கு உறுதியான ஒரு கூரை - வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.' என்று ஏழை குழந்தைகள் இந்த இல்லங்களை விரும்புவதாக மோப்பம் பிடித்து விட்ட ஆணைய உறுப்பினர்கள் "நாமதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். உடனடியாக அதைச் செய்வோம்" ஒரு விதியை ஏற்படுத்தினார்கள்.

'அனாதை இல்லத்தில் படிப்படியாக பட்டினியில் சாவது அல்லது வெளியில் போய் முழுப்பட்டினியாக உடனடியாக சாவது' இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிவு செய்தார்கள். குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கணக்கில்லாத அளவு தண்ணீரை பெறுவதற்கும், சோள தொழிற்சாலையிலிருந்து படிப்படியாக குறைவான அளவு ஓட்மீல் பெறுவதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

இவற்றை வைத்து நாளைக்கு மூன்று வேளையும் நிறைய தண்ணீர் சேர்த்த கஞ்சி ஊற்றினார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை வெங்காயம் வழங்கப்பட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் அரைத் துண்டு அப்பம் கூடுதலாக வழங்கப்பட்டது.

பையன்களுக்கு உணவு கொடுக்கப்படும் அறை கல்லால் கட்டப்பட்ட ஒரு முனையில் செம்பு பதிக்கப்பட்ட பெரிய ஹால். செம்பு பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சீருடை அணிந்த மாஸ்டர் ஓரிரு பெண் உதவியாளர்களோடு  சாப்பாட்டு வேளைகளில் கஞ்சியை அகப்பையில் எடுத்து ஊற்றுவார். இந்த விருந்துணவில் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு அகப்பை மட்டும் கிடைத்தது, முக்கியமான திருவிழா நாட்களில் மட்டும் 65 கிராம் ரொட்டியும் கிடைக்கும்.

கஞ்சி கிண்ணங்களை கழுவ வேண்டிய தேவையே வந்ததில்லை. பையன்கள் தமது கரண்டிகளால் அவை பளபளக்கும் வரை சுரண்டி சுத்தம் செய்து விடுவார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விரிந்த கண்களுடன் செம்பு பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தமது விரல்களை நக்கி அதில் தவறி சிதறியிருக்கக் கூடிய துளிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

பொதுவாக பையன்களுக்கு பசி அதிகம். ஆலிவர் டுவிஸ்டும் அவனது சேக்காளிகளும் மூன்று மாதங்கள் இந்த சிறுகக் கொல்லும் பட்டினியை அனுபவித்தார்கள். கடைசியில் அவர்கள் பசியில் வெறி பிடித்தவர்களாக ஆனார்கள். இது போன்ற பட்டினிக்குப் பழக்கம் இல்லாத ஒரு நெட்டையான பையன், 'இன்னொரு கிண்ணம் கஞ்சி கிடைக்கா விட்டால் அன்று இரவு அவனுக்குப் பக்கத்தில் தூங்கும் பையனை தின்று விட'ப் போவதாக குறிப்பால் உணர்த்தினான்.

பையன்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை யார் மாஸ்டரிடம் போய் கூடுதல் கஞ்சி கேட்பது என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பொறுப்பு ஆலிவர் டுவிஸ்டின் மீது விழுந்தது.

அன்று மாலை மாஸ்டர் சமையல்கார சீருடையில் பாத்திரத்தின் அருகில் நின்று கஞ்சியை பரிமாறினார். பிரார்த்தனை சொல்லப்பட்டது. பையன்களின் முன்பிருந்த கஞ்சி சில நிமிடங்களில் மறைந்தது. பையன்கள் ஆலிவருக்குக்  கண் சாடை காட்டினார்கள், குழந்தையாக இருந்தாலும் பசியின் களைப்பிலும், துயரத்தின் தைரியத்திலும், தனது இடத்திலிருந்து எழுந்த ஆலிவர் டுவிஸ்ட் மாஸ்டருக்கு அருகில் போய்

"சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும் சார், பிளீஸ்" என்றான்.

குண்டான ஆரோக்கியமான மாஸ்டர் வெளிறிப் போனார். அந்த சிறு போராளியை வியப்புடன் சில விநாடிகள் முறைத்துப் பார்த்தார். அதற்குப் பிறகு தாங்கலாக கஞ்சி பாத்திரத்தை பிடித்துக் கொண்டார்.

"என்ன!"

"பிளீஸ் சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்,"

கையிலிருந்த அகப்பையால் ஆலிவரின் தலையில் ஒரு அடி வைத்து விட்டு அவனது கைகளை முறுக்கி கூச்சல் இட்டார் மாஸ்டர்.
----
வாரியத்தின் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அறைக்குள் பம்பிள் பரபரப்பாக ஓடி வந்தார். உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதரைப் பார்த்து

"மிஸ்டர் லிம்ப்கின்ஸ், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், சார்!. ஆலிவர் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கிறான்!"

ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சி அலைகள் பரவி பெரும் பயம் தெரிந்தது.

"இன்னும் கொஞ்சமா! நிதானப்படுத்திக் கொண்டு தெளிவாக பதில் சொல்லுங்கள் பம்பிள். உணவு குழு ஒதுக்கிய இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவன் இன்னும் கொஞ்சம் கேட்டான் என்றா சொல்கிறீர்கள்?" என்றார் மிஸ்டர் லிம்ப்கின்ஸ்.

"அப்படித்தான் கேட்டான், சார்," என்று பதில் சொன்னார் பம்பிள்.

"அந்த பையன் தூக்கில் தொங்குவான், இந்தப் பையன் தூக்கில் தொங்கத்தான் போகிறான் என்று எனக்குத் தெரிகிறது" வெள்ளை கோட்டு போட்ட பெரிய மனிதர் சொன்னார்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012


13ம் தேதி ;

ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் (上海地建) என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.

வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.

போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.

இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.

5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.

1。 விஜயபாரதம் கடையில் ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன்.  இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.

விருபா.காம் என்று கடை இருந்தது.  கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000  புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.

'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார். கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.

நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.

பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை.  'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.

பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.

ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.

F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.

2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது கிஷன்ஜி பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.

காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.

அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.

கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.

3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் ஐடி துறை நண்பா என்ற புத்தகத்தையும் ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.

5. ஆழி பதிப்பகம்  ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள்.  ஆம்பூர் பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.

ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.

தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.

அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.

தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன். உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.

உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது.  அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார்.  'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.

அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.

அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.

சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.

சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.

6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் The New Industrial State என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.

அடுத்த நாள் - 14ம் தேதி:

புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன்.  இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம்.  இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.

'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.

'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'

'ஆமா  பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்'

'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'

'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.

7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் A History of Capitalism என்று  மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.

8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர் என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், முரண்பாடு பற்றி மாசேதுங் வாங்கினேன். போராடும் தருணங்கள் இன்னொரு பிரதி.

காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.

12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க  தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். லூர்தம்மாள் சைமன் பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.

13. பாவை பதிப்பகத்தில் Mathematics Can be fun என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.

14. கீழைக்காற்றில் அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.

15. டிஸ்கவரி கடையில் சாமியாட்டம் வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.

சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.

திங்கள், டிசம்பர் 26, 2011

தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்

15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது.  15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.

15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது.  மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது.  அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர்.

மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது.  அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.

'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.

அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.

நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.

ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது.  அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.

அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல  பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

புதன், டிசம்பர் 01, 2010

அரசியலும் தொழில் வணிகமும் - புதிய உலகம்

அரசியல், பன்னாட்டு உறவுகள், வணிக நிறுவனங்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் அனைத்திலும் மூடிமறைப்பிலேயே பணிகள் நடந்து வந்திருக்கின்றன.

'மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள், நாம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி, பேரம் பேசி முடிவுகள் எடுத்து அறிவிப்போம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'

இந்தியாவில் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் பரிமாற்றங்கள் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது இவை தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான புதிய உலகின் நிதர்சனங்கள்.

இதற்கான எதிர்வினையாக, அதிகார வட்டங்களும், வணிக நிறுவனங்களும் தமது தகவல் பரிமாற்றங்களை இன்னமும் ரகசியமாக பூட்டி வைக்க முயற்சிப்பார்கள். இணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டை முடக்கிப் போடும் சட்டங்களும் ஒப்பந்தங்களும் வர ஆரம்பிக்கலாம். இவை வெற்றி பெற்று விட்டால் ஆர்வெலின் 1984 / மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று ஆட்டி வைக்கும் சில சூத்திரதாரிகளுக்கு நாம் ஆடிக் கொண்டிருக்கும் நிலைமை தொடரும்.

இந்தத் தகவல் விடுதலையை (information wants to be free) தடுக்க முடியாவிட்டால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் நடந்து கொள்ளும் அடிப்படை முற்றிலும் மாற வேண்டியிருக்கும். நான்கு சுவர்களுக்குள் ஒன்றும், வெளியுலகுக்கு ஒன்றுமாக இரட்டை வேடங்கள் வைத்திருக்க முடியாமல் போய் விடும்.

சிக்கலான பேச்சு வார்த்தைகள், அதீத ஆதாயம் தரும் தொழில் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியிருக்கும்.

பர்கா தத் - பத்திரிகையாளர்

நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் (ndtvயின் பர்கா தத், இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, வீர் சங்க்வி முதலானோர்) தமது எல்லைகளைத் தாண்டியதாக வெளி வந்தது.

1. செய்தி சேகரிக்கிறோம் என்ற ஆர்வத்தில் அதிகார தரகர்களாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது.

2. ஒன்றரை ஆண்டுகள் முன்பு நடந்த இந்த உரையாடல்கள் செய்திகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்கள் - நீரா ராடியா என்ற தொழில் முனைவர் அரசியல் தரகராக செயல்படுவதைக் குறித்து இவர்கள் தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் விவாதிக்கவில்லை.

3. தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகும் அவை பற்றிய விபரங்களை தத்தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தார்கள்.

வேறு வகையில் ஊழல் அல்லது தவறு செய்யாமல் இருந்தாலும், இந்த அடிப்படை பத்திரிகை தர்மத்தில் அவர்கள் தவறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக தாக்கப்பட்டவர் பர்கா தத். பர்காகேட் என்று தலைப்பிட்டு இணையத்தில் பரவலான விவாதங்கள் நடந்தன.

ஒரு வழியாக பர்கா தத், சக பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளை சந்தித்து, அந்த நிகழ்ச்சியை சுருக்காமல் அப்படியே ஒளி பரப்பு செய்திருக்கிறார்கள் ndtvயில்.

http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/barkha-dutt-other-editors-on-radia-tapes-controversy/178964?hp

தவறு செய்வது மனித இயற்கை. செய்த தவறை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் அத்தகைய தவறுகளை தவிர்ப்பதாக உறுதி சொல்வது, சிறந்த மனிதர்களின் அடையாளம்.

பர்கா தத்தும், NDTVயும் தாமதமானாலும் தமது சிறப்பைக் காட்டியிருக்கிறார்கள் and she is pretty :-)

திங்கள், ஜூலை 26, 2010

நியாயமான விலை

வீட்டில் சமையல் வாயு தீர்ந்து விட்டது.

தொலைபேசி சொன்னால் மாலையில் ஆறு மணிக்கு மேல் ஒரு இளைஞர் இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து சேர்த்தார். 800 ரூபாயைக் கொடுத்தால்

"ஒரு அஞ்சு ரூபாய் இருந்தா கொடுங்க சார்!'

"அஞ்சு ரூபாய் எதுக்கு....."

"மொத்தம் 755 ரூபாய், 50 ரூபாய் திருப்பித் தருகிறேன்"

"ஏம்பா, 725 ரூபாய் விலை, 25 ரூபாய் சேர்த்து, 750 என்று எடுத்துக்க வேண்டியதுதானே!"*

"இல்ல சார், என்னோட சேவைக் கட்டணம், 30 ரூபாய், 755 ஆகுது"

நியாயம்தானே, அவரது கட்டணத்தை எப்படிக் குறைத்துக் கொள்ள முடியும்.

"சார் அடுப்புக்கு வாயு போகும் குழாய் பழசாகி வெடித்துப் போயிருக்கு, மாத்திடுங்க, 200 ரூபாய்க்கு புதுசு வருகிறது"

"சரிப்பா, நாளைக்கு இந்த பக்கம் வந்தா ஒண்ணு கொண்டு வந்து மாட்டி விடு"

"நீங்க இருக்கீங்களான்னு ஃபோன் பண்ணிட்டு வரேன்."

அடுத்த நாள் தொலைபேசி விட்டு வந்து புது குழாயைப் பொருத்தி விட்டார். 200 ரூபாய் கொடுத்தால்,

"இன்னும் 15 ரூபாய் கொடுங்க சார், என்னோட கட்டணம்"

கணக்கு கறாராக இருக்கிறது.

வெளியில் போகும் போது,
"உங்க கிட்ட ஏதாவது பழைய நோக்கியா சார்ஜர் இருக்குமா சார், தேவைப்படுகிறது"

இரண்டு நாட்கள் முன்புதான் கெட்டுப் போன தொலைபேசிக்கு மாற்றாக புதிது வாங்கியிருக்க பழசின் மின்னேற்றி இருந்தது. சரியாக எப்படி தெரிந்தது?

"அதுக்கு என்ன விலை தருவே? கடையில் என்ன விலைக்கு விற்கிறதோ அதில் பாதி கொடுத்து விடு"

ஒரு நிமிடம் திகைப்பு.
"சரிதானே சார், நான் என் கட்டணத்தைக் கறாராக வாங்குவது போல பொருளையும் விலை கொடுத்துதானே வாங்கணும். டூப்ளிகேட் சார்ஜர் 60 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 25 ரூபாய் தருகிறேன்"

25 ரூபாய் வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டேன்.

*caltex என்ற பெயரில் கிடைக்கும் தனியார் சேவையைத்தான் பயன்படுத்துகிறேன். 12 கிலோ வாயு உருளையின் விலை ரூபாய் 725/-
குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்காக அரசு கொடுக்கும் சலுகை விலை சமையல் வாயு சேவையை பயன்படுத்துவதில்லை - அங்கு 14 கிலோ உருளையின் விலை ரூபாய் 355/-

புதன், ஜூலை 14, 2010

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை

தமிழ்நாட்டு மக்களின் (நம்) மீது முத்துக் குமாருக்கு இருந்த நம்பிக்கை கண்கலங்க வைக்கிறது.

தன் உடலை துருப்புச் சீட்டாக்குமாறு திட்டம் சொல்லி உடல் நீத்த முத்துக்குமாரின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்து விட்டோம்?!

அவரது மரண அறிக்கையை நகல் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூட நிறைவேறவில்லை.

பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கும் இந்த நியாயத்துக்கான குரலைக் கொண்டு சேர்ப்போம்.


விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
-- முத்துக்குமார்

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் . இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே....

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம் ராமேஸ்வரம் மீனவர்கள். உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுனென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகும் உங்களுடைய அந்த நடவடிக்கை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்கப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்குக் கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது - உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவர்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (They are not the reason; just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியது, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியின் கொலை மறுபடியும், இன்டர்போல் மூலமாக, அந்தக் கொலையின் மூலமாக பலனடைந்தவர்களையும், இலங்கை உளவுத் துறை, ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைல-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்-கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள் - நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

- எனது பதினான்கு அம்ச கோரிக்கைகள் -
  1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

  2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

  3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

  4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

  6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

  7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக் ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

  8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

  9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

  10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

  13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை 99, 9380927441

திங்கள், ஜனவரி 11, 2010

நூலறிவு

636 - மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.

- 64 அமைச்சு

For the one with sharp intellect and wide reading, what complex issue can they not confront successfully?

இயல்பான அறிவுக் கூர்மையுடன், பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் எதிர்காண முடியாத பணி எதுவும் இருக்கிறதா என்ன?

நிறைய படிக்க வேண்டும்.
சான்றோரின் படைப்புகளை படிக்க வேண்டும்.
மனதுக்கு செறிவூட்டும் படைப்புகளை படிக்க வேண்டும்.

புதன், டிசம்பர் 23, 2009

அவ்வையாரின் மூதுரை

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' என்ற வரி நினைவுக்கு வந்தது. முழுப்பாடலையும் இணையத்தில் தேடிய போது கிடைத்தது
http://kuralamutham.blogspot.com/2009/08/80.html

பள்ளியில் படித்ததில் கருத்து மட்டும் நினைவிலிருந்திருக்கிறது. கருத்தைச் சொல்ல வந்த புலவர் அதற்கு உவமானமாக சொன்னவை மனதைச் சிலிர்க்க வைக்கின்றன.

'நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்கிறது' என்று திகட்டும் அளவிலான சிறப்பையும்
'முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்' என்று முகத்தில் அறையும் ஏளனமும், அம்மம்மா!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணவில்லை!

வெள்ளி, டிசம்பர் 18, 2009

நல்லது செய்தவர்க்கு நல்லது நடக்கும்

நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருதலால்

ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

காலம் கருதுதல்

'எதைச் செய்வது எதை விடுவது, ஒரு நாளில் 24 மணி நேரம்தானே இருக்கிறது?'

இப்படிச் சலித்துக் கொள்ளாதவர்கள் குறைவுதான். (இந்த பிரச்சனை இல்லாதவர்கள் தமது திறமைகளுக்கேற்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லலாம் :-)

செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதற்கு திட்டமிடலும், கண்காணித்தலும், சரிசெய்துகொள்ளலும் தேவை.

ஒரு கண்ணாடி குடுவையில் பெரிய கற்களை போட்டு நிரப்பிய பிறகு இருக்கும் இடைவெளிகளில் சின்னச் சின்னக் கற்களை நிரப்ப இடம் இருக்கும். அதற்கும் மேல் மணல் துகள்களை புகுத்தி விடலாம். இதுக்கு மேல் என்ன அடைக்க முடியும் என்று நினைத்தால், தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வைக்கலாம்.

இது பற்றிய குட்டிக்கதையை மின்னஞ்சல்களில் படித்திருக்கலாம். செய்ய வேண்டியவற்றை
  • செய்தே தீர வேண்டியவை (பெரிய கற்கள்),
  • செய்தால் நன்றாக இருக்கும் (சின்ன கற்கள்),
  • செய்யா விட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் (மணல் துகள்கள்),
  • முடிஞ்சா செய்தால் போதும் (தண்ணீர்)
    என்று பிரித்துக் கொள்ளலாம்.
அப்போது பெரிய கற்களுக்காக போட்ட திட்டம் ஒரு போதும் தவறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

காலை 8 மணிக்கு மேலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று திட்டம். எப்படியாவது 8 மணிக்கு போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டால் அது தவறிப் போய் தாமதமாகப் போகும் சாத்தியங்கள் அதிகம்.

வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கலாம், வண்டி பஞ்சர் ஆகி விடலாம், யாருக்காவது உதவி செய்ய நிற்க வேண்டி நேரலாம். இது போன்ற காரணங்களால் முக்கியமான சந்திப்புக்கு தாமதமாகி விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

  • முதலில் கல்லைப் போடுங்கள் - 8 மணிக்கு அலுவலகத்தில் மேலாளருடன் சந்திப்பு.
  • அதைச் சுற்றி சரளைக் கற்களை புகுத்துங்கள் - 7.30 முதல் 8 வரை அலுவலகத்தில் மின்னஞ்சல்கள் படிப்பு
  • கொஞ்சம் மணல் துகள்களை சேருங்கள் - வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் (அரை மணி நேரம் ஆகும்) வழியில் ஒரு காபி. 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பாமல், காபி குடிக்க 15 நிமிடங்களைச் சேர்த்து 6.45க்குக் கிளம்பி விட வேண்டும்.
  • கடைசியில் தண்ணீர் - 6.30 முதல் 6.45 வரை செய்தித்தாள் படிக்க வேண்டும்.
அதாவது 6.30க்கு முழுவதும் தயாராகி விட வேண்டும்.

இப்போது ஏதாவது காரணத்தால் தாமதம் ஏற்பட்டால் செய்தித் தாள் படிப்பதை ரத்து செய்யலாம், அதையும் தாண்டி தாமதமாகும் வாய்ப்பு தெரிந்தால் காபி குடிக்கும் நிறுத்தத்தை விடுத்து நேராக அலுவலகம் போய் விடலாம். என்ன செய்தும் நினைத்த நேரத்துக்குப் போய்ச் சேர முடியவில்லை. 7.45க்குத்தான் போக முடிந்தது என்றால் மின்னஞ்சல் படிப்பதைத் தள்ளிப் போட்டு விட்டு 8 மணிக்கு சந்திப்புக்குத் தயாராக இருக்கலாம்.

முக்கியமான ஒரு பணியைச் சுற்றி மற்ற சின்னப் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டால், சமூக சூழல்களில் மற்றவர்களுக்குக் கொடுத்த திட்டங்களை தவறாமல் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

இருவர் கருத்தொருமித்து

டால்ஸ்டாயின் அன்னா கரனீனா என்ற நாவலில் கெவினும், கிட்டியும் சந்திக்கும் ஒரு கட்டம். கதையின் ஆரம்பத்தில் வேறு ஒரு படைவீரனின் உறவை மனதில் வைத்துக் கொண்டு கெவினின் காதலை நிராகரித்திருப்பாள் கிட்டி. அதனால் மனமுடைந்த தனது கிராமத்துக்குப் போய் விட்டிருப்பான் கெவின். கிட்டியின் மற்ற காதலும் கை கூடாமல், அவளும் மனமும் உடலும் மோசமாகி தேறியிருக்கிறாள். இப்போது இரண்டு பேரும் சேர்வதற்கான கட்டம்.

இரண்டு பேரும் பேசிக் கொள்ளும் போது மேசையின் மீது சொல்ல நினைக்கும் சொற்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எழுதிக் காட்டுகிறாள் கிட்டி. அதைப் புரிந்து கொண்டு கெவின், தன் பதிலை அதே முறையில் எழுதிக் காட்டுகிறான். இப்படியே நீளமாக உரையாடிக் கொள்கிறார்கள்.

இந்த முறையில் பேசிக் கொள்வது என்பது கருத்தொருமித்த இரண்டு பேரால் மட்டுமே முடியும். ஒரு வாக்கியத்தில் 8 சொற்கள் இருந்தால் ஒவ்வொன்றாக ஊகித்துப் புரிந்து கொள்வது என்பது வேலைக்காகாது. பேசுபவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டால்தான் முடியும்.

டால்ஸ்டாயின் இன்னொரு நாவலான போரும் அமைதியும் (வார் அண்ட் பீஸ்) கதையில் மேரியும், நிக்கோலசும் இப்படிப் பேசிக் கொள்வார்கள். கணவன் ஏதோ ஒன்றைப் பற்றிப் (அரசியல் நிலைமை) பேச ஆரம்பிப்பான், மனைவி தொடர்பில்லாத வேறு ஒரு திசையில் ஆரம்பிப்பாள் (குழந்தைகளின் நடத்தை). இவன் ஒரு வாக்கியம் முடித்த பிறகு அதற்கு பதில் சொல்லாமல் மனைவி தனது பேச்சுக்கான ஒரு வாக்கியத்தை சொல்வாள். அதற்கு பதிலாக கணவன் தான் பேசும் பொருளில் அடுத்த வாக்கியத்தை சொல்வான்.

இரண்டு பேருக்குமே இரண்டு பேச்சுமே முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.

அது போன்று இவரின் மனம் இப்படித்தான் சிந்திக்கும் என்று தெரிந்த உறவினர்தான் இப்படியான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும். கருத்தொருமித்த காதலரிடையே இது போன்று சாத்தியமாகும்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பொதுவாக சமூகத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்ளும் போது நடப்பதை விவரிப்பார். ஒவ்வொருவரின் மனமும் அவரது எண்ணங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. நண்பர் சொல்வதைக் கேட்டு உள்வாங்கிக் கொள்ள இடமில்லை மனதுக்குள். ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர், தான் என்ன சொல்ல வேண்டும் என்று மனதுள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார். மற்றவர் பேசுவதில் வசதியான ஒரு இடைவெளி கிடைத்தால், அதில் புகுந்து கொண்டு தனது கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்திருப்பார். இவர் பேசிக் கொண்டிருக்க மற்றவர் தனது கருத்துக்களில் மூழ்கி எப்போது இடைவெளி கிடைக்கும் என்று காத்திருப்பார்.

உண்மையில் கருத்துப் பரிமாற்றமே நிகழ்வதில்லை. கிருஷ்ணமூர்த்தி சொல்லும் கம்யூனியன் என்பது அரிதாகவே நடக்கிறது. கருத்துப் பரிமாற்றம் ஒழிந்து போய் கருத்து ஒருமிப்பு ஏற்படுவதுதான் கம்யூனியன். இருவருமே பேசும் பொருளை அணுகிப் புரிந்து கொள்ளும் நோக்குடன் இருக்கும் போது இது ஏற்படும். தன் மூப்பு, தன்னை உயர்த்திக் காட்டுவது போன்ற பக்க நோக்கங்கள் இல்லாமல் போய் பேசுவதைப் புரிந்து கொள்ளும் முதன்மை நோக்கம் மட்டும் இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும்.

கூட்டங்களில் கேள்வி கேட்பவர்கள் குறித்து சுஜாதா எழுதியிருப்பார். நீளமாக கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லும் பிரபலம் ஆழ்ந்து அலசி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது கேள்வி கேட்டவர் அதை கவனித்திருக்கவே மாட்டார். கேள்வி கேட்டு விட்டுச் சுற்றுமுற்றும் ஒரு பெருமையான பார்வை. அத்தோடு கீழே உட்கார்ந்து அடுத்த கேள்வி பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார் அல்லது பக்கத்தில் இருப்பவரிடம் சின்ன உரையாடல் ஒன்றில் இறங்கியிருப்பார்.

வகுப்பறைகளில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பவர்களிலும் இது போன்ற ஒரு சாதி உண்டு. ஏதாவது கேட்டே தீர வேண்டும் என்று கேட்டு விட்டு பதிலைக் குறித்துக் கவலைப்படாமல் உட்கார்ந்து கொள்வார்கள்.

அவை எல்லாம், கருத்துக்களை வெளிப்படுத்தும் மேடை அல்லது தளம் எல்லோருக்கும் கிடைத்து விடாத காலங்கள். இப்போது இணைய இணைப்பும் எழுதும் விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தமது கருத்துக்களை கொட்டி வைக்க இணையத் தளங்கள் எளிதில் உருவாக்க முடிகிறது. பிரபலங்கள் மட்டும்தான் மேடை போட்டு அல்லது பத்திரிகையில் அச்சிட்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்ற நிலைமை குறைந்து விட்டது.

இங்கிலாந்தில் ஹைட்பார்க் பூங்காவில் இதற்குத்தான் வழி செய்து கொடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் வேலைக்குப் போயிருந்த போது ஒரு வார இறுதியில் லண்டன் சுற்றிப் பார்க்கக் கிளம்பியிருந்தேன். நார்தாம்ப்டன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயில் பிடித்து லண்டன் வந்து சேர்ந்தேன். தேம்ஸ் நதி, பிக்பென் கடிகாரம், லண்டம் நிதி நிறுவனங்களின் பகுதி, மேடம் திஸ்ஸாட்ஸ் மெழுகுப் பொம்மைக் காட்சிக் கூடம், என்றெல்லாம் பார்த்து விட்டு ஹைட்பார்க் பூங்காவுக்கும் போனேன். கொஞ்சம் ஏமாற்றம்தான். நாமும் ஏதாவது இடத்தில் நின்று கொண்டு பேச ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டிருந்தேன். அங்கு பார்த்தால் கொஞ்சம் அரைக் கிறுக்கான மத போதகர்கள்தான் வாளிகளைக் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் முன்பு ஓரிருவர் கூட இல்லை. கொஞ்சம் சுவையாகப் பேசும் ஒருவர் முன்பு நான்கைந்து பேர் நின்பு கொண்டிருந்தார்கள்.

யார் வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட இடம். ஒரு வார இறுதி நாளில் பார்த்ததை வைத்து முடிவு செய்து விட முடியாது. ஏதாவது முக்கியமான நிகழ்வை அல்லது கருத்தை விவாதிக்க ஒருவர் அதை கருத்துக் களமாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

பேச்சு, எழுத்து, கலை எல்லாமே தகவல் பரிமாற்றம், அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாகப் பயன்படுகின்றன. இசைக் கருவி ஒன்று இசைத்தல், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், வீடு கட்டுதல், சமையல் செய்தல், மென்பொருள் நிரல் எழுதுதல், வலைப்பதிவு எழுதுதல் ஒவ்வொன்றும் ஒருவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த உதவும் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. சின்ன வயதிலிருந்தே பேசுவதற்கு சரியான பயிற்சி கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்.

பற்றாக்குறை இருக்கும் அமைப்புகளில் இந்த தகவல் பரிமாற்றத் திறமைகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லா விட்டாலும் சிறப்பாக வளர்ந்து விடத்தான் செய்யும்.

இரு மனங்களும் பேசிக் கொள்ளாமலேயே ஒருத்தர் சொல்ல வருவதை மற்றவர் புரிந்து கொள்ளும் படி இருந்தால் இதில் பாதகங்களும் உண்டு. எதிராளியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் உணர்வு கிடைத்து விட்ட ஒருவர் சில நாட்களிலேயே பைத்தியம் பிடித்து ஓட ஆரம்பித்து விட்டான் என்று ஒரு கதை சொல்வார்கள். மனிதப் பிறவி என்பதின் மாண்பை உணர்ந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாது என்றுதான் தோன்றுகிறது.

ஆதம் சுமித்தின் வரலாற்றுப் பிழை

கடந்த முன்னூறு ஆண்டுகளாக கோலோச்சி வரும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் ஆதம் சுமித். "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன. அப்படி நடப்பதுதான் குறைந்த செலவில், சரியான வழியில் நடப்பதற்கான ஒரே முறை" என்று கோட்பாட்டு முறையில் நிறுவிக் காட்டியவர் ஆதம் சுமித்து.

ஆதம் சுமித்து வாழ்ந்தது 18ம் நூற்றாண்டில். அவர் எழுதிய நூல் - An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations

அந்த முறையில் இருக்கும் ஓட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்து மாற்று பொருளாதாரச் சமூக அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுத்தவர் கார்ல் மார்க்சு. இவரது Das Kapital என்ற நூலும், கம்யூனிச பிரகடனமும் 20ம் நூற்றாண்டின் உலக அரசியலின் இழுபறிகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆதம் சுமித்தின் சுயநலமே சமூக நலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 300 ஆண்டுகளின் தொழில்நுட்ப , பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் கலப்படமற்ற நன்மைகள் மட்டுமா என்று கேட்டால் இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் மனிதரை மனிதர் கொல்வதற்கும் அழிவு வேலைகளுக்கும் பயன்படுவது பெரிதும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான மக்களை துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்துவதிலேயே முடிந்தது. ஆதிக்கம் செலுத்த முடிந்த நாடு அல்லது சமூகங்கள் நலிந்த பிரிவினரை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொள்வது நடந்து கொண்டிருக்கிறது.

ஆதம் சுமித்தின் கோட்பாடு மனிதனின் இயற்கை இயல்பை தூண்டி விடுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விலங்குகளாக காட்டில் வாழும் போது இயற்கை போக்குகள் இப்படி இருந்திருக்கும்:

1. உணவுக்காக அல்லது போட்டியின் காரணமாக சக மனிதனையும் பிற விலங்குகளையும் கொல்வது இயற்கையாக இருந்திருக்கும்.

2. உடலின் தூண்டுதலின் பேரில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, கழிவது, உறவு கொள்வது இயல்பாக இருந்திருக்கும்.

3. தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஓடித் தப்பிப்பது இயல்பாக இருந்திருக்கும். கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் திரும்பத் தாக்குவதும் நடக்கும்.

ஒரு சிலர் இந்த இயல்புப் போக்குகளைக் கைவிட்டு, சக மனிதருடன் ஒத்து வாழும் முறையை வகுத்து கூடி வாழ ஆரம்பித்திருப்பார்கள். அப்படி இயற்கை போக்கைக் மட்டுறுத்தி குழுவாக வாழ ஆரம்பித்தவ சமூகங்கள், இயற்கையாக விலங்கு நெறியில் வாழ்ந்த மனிதர்களை விட சிறப்பாக தளைத்து பெருகியிருப்பார்கள். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், நலம் பயக்கும் முறைகளை சேர்த்துக் கொண்டே போன சமூகங்கள்தான் இன்றைக்கும் தாக்குப் பிடித்து இருக்கின்றன.

தன்னுடைய நலத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்று மனிதருக்குப் போதிக்கும் கோட்பாடு, மனிதரின் மனதுள் புதைந்து கிடக்கும் விலங்கு இயல்பை தூண்டி விடுவதாக அமைந்து விட்டது. அப்படித் தூண்டி விட்டாலும், முழுவதும் பல்லாயிரமாண்டு பரிணாம வளர்ச்சியை உதறி விட்டு விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பி விடவில்லை.

அலுவலகத்தில், பணியிடத்தில் சுயநலத்தின் அடிப்படையில் பணியாற்றி விட்டு வீட்டுக்கு வரும் ஒருவர் தனது குழந்தையிடம் விலங்காகப் பழகாமல், நன்னடத்தை கோட்பாட்டின்படிதான் பழகுவார். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நல்லது செய்யும் அதே நேரத்தில் தொழிற்சாலை இருக்கும் ஊரின் நீர்நிலைகளை நச்சுப்படுத்தத் தயக்கம் வருவதில்லை.

அந்த இரட்டை வாழ்க்கைதான் சந்தைப் பொருளாதார சமூகத்தின் சரிவுகளுக்கான வித்து. ஓராண்டுக்கு முன்பு இதே மாதம் லேமன் பிரதர்ஸ், அமெரிக்கன் இன்ஷூரன்சு முதலான அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு வந்ததன் மூல காரணம் இந்தக் கட்டுப்பாடற்ற தனிமனித பேராசைத் தூண்டுதல்கள்தான்.

வெள்ளி, மே 22, 2009

மழைக்காலம் மீண்டும் வரும்

அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல்
உற்றுளி தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு