வலைப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 09, 2019

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

ஞாயிறு, மே 08, 2011

எரிந்து போகும் இராவணன் மனை!

சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்
ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன-எரிந்தன, நெடு நிலை ஏழும்.

1. 2006 ஏப்ரலில் இலங்கையில் இறுதிப் போர் ஆரம்பமாகிறது. என்ன நடக்குமோ? (27-4-06)
மீண்டும் ஈழப் போர்

2. 'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' (19-12-06)
ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

3. நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன். (24-12-06)
ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

4. தமிழ்ச் செல்வனின் மறைவு (2-11-07)
:-(((

5.  ஆயிரம் ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்து, பல லட்சம் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்கி வெறியாட்டம் ஆடும் சிங்கள ராணுவமும், இந்தியப் பத்திரிகைகளும், இந்திய அரசியல் தலைவர்களும் நாசமாகப் போகட்டும். (18-5-09)
கொக்கரிக்கும் எல்லோரும் நாசமாகப் போகட்டும் 

6. செய்தித் தளங்களில் எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ரீடிஃப் டாட் காமில் போட்டிருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பத் தலைவர், அப்பாவி இளைஞர் என்றுதான் முகங்களைக் காட்டியது. தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என்று வில்லன் சித்திரிப்புக்கு உட்பட்டு விட முடியாத படங்கள். உண்மையில் வயிறு கலங்கியது. இப்படி ஒரு கொக்கரிப்பா!  (19-5-09)

யார் பயங்கரவாதி!

7. ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்? (21-5-09)

வாய்ச் சொல் வீரர்கள்

8. முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! (28-1-10)
கையறு நிலையில் தமிழகம்!

9. 72 வயது மூதாட்டியான திருமதி பார்வதியை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிய இந்திய அரசின் நடத்தை குறித்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். (18-4-10)

ஒரு இந்தியக் குடிமகனின் எதிர்ப்பு நிலை

10. கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது. (20-4-10)
நாட்டுக்குத் தலைவனுக்கு குடும்பப் பாசம் கண்ணை மறைத்திருந்தது

11. "எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்."

அ. தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு (30-5-10)
ஆ. தமிழகம் இழைத்த துரோகம் (31-5-10)
இ. தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு (1-6-10)
ஈ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1 (10-6-10)
உ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 2 (17-6-10)
ஊ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 3 (14-6-10)
எ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 4  (23-6-10)
ஏ. தமிழ்ப் புழுக்கள் (23-6-10)
ஐ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5 (23-6-10)
ஒ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6 (25-6-10)
ஓ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7 (26-6-10)
ஔ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8 (26-6-10)

12. வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள் (6-7-10)

13. இலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன் என்ற இடுகைக்கு சில திருத்தங்கள்:
இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் - 2 (8-7-10)

14. தமிழ்நாட்டு மக்களின் (நம்) மீது முத்துக் குமாருக்கு இருந்த நம்பிக்கை கண்கலங்க வைக்கிறது. தன் உடலை துருப்புச் சீட்டாக்குமாறு திட்டம் சொல்லி உடல் நீத்த முத்துக்குமாரின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்து விட்டோம்?!

அவரது மரண அறிக்கையை நகல் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூட நிறைவேறவில்லை. பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கும் இந்த நியாயத்துக்கான குரலைக் கொண்டு சேர்ப்போம்.

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் (14-7-10)
அ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 1 உழைக்கும் தமிழ் மக்களுக்கு (15-7-10)
ஆ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
இ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
ஈ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 4 வெளிமாநிலத்தவருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 5 காவல் துறையினருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 தமிழீழ மக்களுக்கு (16-7-10)
ஊ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 7 சர்வதேச சமூகத்துக்கு (16-7-10)
எ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 8 பதினான்கு அம்ச கோரிக்கைகள் (16-7-10)

15. போர்க் குற்றங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்கள் ஆட்சியிலும், ஃபொனெஸ்கோ எதிர்க்கட்சியிலும் இருப்பதால், அவை தொடர்பான விசாரணைகளும் மேல் நடவடிக்கைகளும் சாத்தியமில்லை

ஈழப் போர்க் குற்றவாளிகள்! (02-12-10)

வெள்ளி, ஏப்ரல் 23, 2010

பெண் ஏன் அடிமையானாள்?

யமுனா ராகவன் என்பவர் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணின் நிலையைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். ஒரு தமிழ்நாட்டு ஆணின் மனதை ஊடுருவிப் படித்தது போல எழுதியிருந்தார். (எல்லா ஆண்களுக்கும் எல்லா குறிப்புகளும் பொருந்தா விட்டாலும்), இப்படி ஒரு பெண்ணின் மனதை எந்த ஆணாவது எழுத முடியுமா?

நான் பார்த்த வரையில் கான்வென்டில் படித்த பெண்களுக்கு ஒரு விடுதலை மனதளவில் கிடைத்திருக்கிறது. பெண் உடலின் மீது அசூயையோ, தான் ஆணை விடக் குறைந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மையோ முற்றிலும் இல்லாமல் செய்யும் நம்பிக்கை சிஸ்டர்கள் கொடுத்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

சமூக அளவிலான மாற்றங்கள் இதைச் செய்து காட்டலாம்.
  • சாங்காயில் சீனப் பெண்கள் ஆண்களுக்கு எந்தத் தாழ்வும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன்.
  • திருவனந்தபுரம் பெண்கள் குறிப்பாகவும், கேரளப் பெண்கள் பொதுவாகவும் இந்த விடுதலை பெற்றவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
  • உழைக்கும் வர்க்கத்தில் பெண்கள் இது போன்ற தளைகளில் கட்டுறாமல் இருப்பதாக தமிழ்ச்செல்வன் கேணி கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
இதைப் போன்று பல பெண்கள் இருந்தாலும், பெரும்பான்மை கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கப் பெண்கள் மனதளவில் அடிமைப் படுத்தப்பட்டு, அதனால் தினசரி வாழ்க்கையில் துன்புற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த துன்பங்களின் அழகான கொஞ்சம் நீளமான வெளிப்பாடாக அந்த இடுகை.

அந்த இடுகைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக உடனேயே ஒரு தமிழ்மண பயனர் கணக்கு பதிந்து கொண்டேன். masivakumar என்று ஏற்கனவே பெயர் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்ததால் பல நாட்கள் முயற்சித்து விட்டிருந்தேன். நேற்றைக்கு ma_sivakumar என்று பதிந்து கொண்டேன். முதல் முறையாக வாக்களித்தது இந்த இடுகைக்குத்தான்.

திங்கள், செப்டம்பர் 21, 2009

எப்போதும் நட்சத்திரம் - தமிழ்மணம்

இணையத்தில் தமிழ் மொழியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன. தமிழ் டாட் நெட் என்று மடற்குழு ஆரம்பித்து, டிஸ்கி தகுதரம் உருவாக்கி குறியாக்கத்தை நெறிப்படுத்தியதில் ஆரம்பித்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஆயிரக்கணக்கான தமிழ் பயனர்களின் கூட்டு உழைப்பில் தமிழ் நிறைய சாதித்திருக்கிறது

வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை தமிழ் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்று சொல்லப்படும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து தாக்கம் குறையாமல் செயல்படுகிறது தமிழ்மணம். அப்படி வலைப்பதிவுகள் என்றாலே தமிழ்மணம் என்ற உருவகம் ஆரோக்கியமானதுதானா என்று பல விவாதங்களும் நடந்திருக்கின்றன, நடக்கின்றன. அது ஒரு புறம்.

என் பார்வையில் தமிழ்மணத்தின் வெற்றிக்கான அடிப்படை காரணம் அதன் வடிவமைப்பிலிருந்து ஒவ்வொரு கொள்கை முடிவுகளிலும் அடங்கியிருக்கும் 'பதிவர்களும் படிப்பவர்களும்தான் தமிழ்மணத்தை செலுத்துகிறார்கள்' என்ற எண்ண ஓட்டம்தான். ஆரம்பத்திலிருந்தே முகப்பு பக்கத்திலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி பதிவர்களின் மற்றும் பின்னூட்டங்களின் போக்குதான் தமிழ்மணத்தை செலுத்தி வருகிறது. contentஐ நெறிப்படுத்தி வழங்கும் போது தனது அடையாளம் தெரியாமல் பின்னணியில் மறைந்து கொள்கிறது தமிழ்மணத்தின் பயன்பாட்டு முறை.

பதிவு எழுதும் ஒவ்வொருவரும் தமிழ்மணத்தில் பங்கேற்பது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார்கள். கூடவே ஒவ்வொரு பதிவுக்கும் புதுப்புது உத்திகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் செய்து வருகிறது தமிழ்மணம்.

  1. பதிவர் புதிய இடுகையை எழுதிய உடன், புதுப்பிக்கும் பெட்டியில் முகவரியை கொடுத்து தகவல் கொடுத்தல்.
  2. மறுமொழி ஒன்று இடப்பட்டால், அந்த இடுகை மறுமொழி பட்டியலில் காண்பிக்கப்படுதல்
  3. வாசகர் பரிந்துரைக்கும் இடுகைகளின் பட்டியல்
  4. சூடான இடுகைகளின் பட்டியல்
  5. வாரம் ஒரு பதிவரை நட்சத்திரமாக காட்டுவது.
இவற்றில் சிலவற்றில் சர்ச்சைகள், சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வாசகர்களுக்காக, வாசர்களால் செலுத்தப்படும் திரட்டி என்ற உணர்வை தமிழ் மணம் ஏற்படுத்துகிறது.

காசியின் மூளையில் உதித்த இந்த சேவை வடிவம் பெற்று வளர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு TMI நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்ட பிறகும் புதுப்புது வடிவங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுகளை மட்டும் கொண்டு ஒரு சமூகமாக இயங்குவது தமிழ்பதிவர்களைத் தவிர வேறு எந்த மொழியிலும் இணையத்தில் நான் பார்த்ததில்லை. அதற்கு தமிழ்மணத்தின் பணிதான் முதல் முழுக் காரணம்.

மிகவும் தேவையான ஒன்றாக செய்ய வேண்டியது, நீண்டகால பதிவர்கள், தொடர்ந்து பதிபவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள், இவர்களுக்கு ஒரு அடையாளமும், அங்கீகாரமும் கொடுப்பது. நட்சத்திர வாரம் என்ற முறை அதை ஓரளவுக்குச் செய்கிறது. ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த முறை மூலம் முழுமையான அங்கீகாரங்கள் கொடுப்பது சாத்தியமில்லைதான்.

Hall of Fame போல 10 சிறந்த பதிவர்கள், 10 சிறந்த வாசகர்கள் என்று பட்டியல்கள் ஏற்படுத்தலாம்.

நன்றி, வாழ்த்துக்கள்.

வியாழன், செப்டம்பர் 17, 2009

வலைப்பதிவர்கள்

தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தது 2004ல். சில மாதங்களுக்குப் பிறகு நானும் எழுத ஆரம்பித்து நிறைய நேரம் செலவழித்து அந்த ஆர்வம் ஓய்ந்து போய் விட்டது.

ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எழுதி மகிழ்வித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், கொஞ்ச காலம் எழுதி ஒதுங்கி விட்டவர்கள், எழுதுவதில் பெரிதாக கவராவிட்டாலும் இணையத்துக்கு வெளியிலான சாதனைகளில் மதிப்பைப் பெற்றவர்கள் என்று நிறைய பேரை தெரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு தமிழ் பதிவுலகில் துருவ நட்சத்திரங்கள்
1. பத்ரியின் எண்ணங்கள்
2. டோண்டு ராகவன்
3. லக்கி லுக்
4. ஆசிப்மீரானின் வேதம்
5. கண்ணபிரான் ரவிசங்கர்
6. துளசிகோபால்

ஒளி வீசி பயனளித்து இப்போது அடக்கி வாசிப்பவர்கள்
1. மோகன்ராஜ் - கைப்புள்ள
2. டிபிஆர் ஜோசப்
3. உருப்படாதது
4. ரோசா வசந்த்
5. முத்து தமிழினி

வலைப்பதிவுகள் மூலம் அறிமுகமாகி நிஜ உலகில் வியக்க வைப்பவர்கள்
1. பாலபாரதி
2. அதியமான்
3. வினையூக்கி
4. முனைவர் இளங்கோவன் (புதுவை)

வாசிப்பனுபவங்களுக்கு நன்றி.

திங்கள், செப்டம்பர் 14, 2009

தமிழ்மணத்துக்கு நன்றிகளுடன் - மா சிவகுமார்

'உங்கள் நட்சத்திர வாரத்தில் அண்ணா நூற்றாண்டு நாள், பெரியார் பிறந்த நாளும் வருகின்றன. . இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அண்ணா செய்தது மிகப்பெரிய சாதனையாகத் தோன்றுகிறது. அவருடைய இயக்கம் இன்று சுயநலக்கும்பல்களால் சீரழிக்கப் பட்டு விட்டாலும், அதனால் சில நேரங்களில் அண்ணா மீதே கோபமெழுந்தாலும், அமர்ந்து சிந்திக்கையில் அன்று அவர் செய்தது பெரும் ஜனநாயக மாற்றம். ஒபாமாவின் 'மாற்றம்' போல் அன்றே தமிழகத்தில் நிகழ்ந்தது.'
என்று சொர்ணம் சங்கர் எழுதியிருந்தார்.

தனிப்பட்ட முறையில், கடந்த ஒரு ஆண்டுகளாக இருந்த அலுவலகத்தை மாற்றி இன்றைக்குக் காலையிலிருந்து புதிய அலுவலகத்தில் செயல்பட ஆரம்பித்திருக்கிறோம். தமிழ்மண நட்சத்திரமாக இருக்கும்படி மடல் வந்த அன்று இன்றைக்கு புது இட மாற்றம் நடக்கும் என்று தெரியாது.

சோதிடம் போன்ற (மூட) நம்பிக்கைகள் இருப்பவர்களுக்கு, அடுத்த வாரம் விசேஷம். சனி கிரகம் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். 'சிம்மராசிக் காரரான தனக்கு ஏழரை நாட்டுச் சனி பிடித்ததால்தான் தேர்தலில் தோற்றோம், இப்போது நிலவும் கிரகச் சூழலில் இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம்' என்று மலை மேல் ஏறிக் கொண்டிருப்பது 'திராவிட' என்று பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி.

H1N1 நுண்கிருமி மூலம் பரவும் நோயின் பரபரப்புகள் கொஞ்சம் ஆறிப் போய் விட்டிருக்கின்றன.

ஒன்றரை ஆண்டுகளாக பிடித்தாட்டிய பொருளாதார சுணக்கம் கொஞ்சம் தெளிந்து இளங்குருத்துக்கள் துளிர் விட ஆரம்பித்திருக்கின்றன. ஆனாலும் இருண்ட முகங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மையும்தான் ஏற்றுமதித் துறை, கட்டிடத் துறை வட்டாரங்களில் காணக் கிடைக்கின்றன. இந்தியாவில் அரசாங்க திட்டங்களில் பங்கேற்கவும், வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொலைதொடர்புத் துறையிலும் வாய்ப்புகளுக்குக் குறைவே இல்லை.

பொய்த்துப் போன தென்மேற்கு பருவ மழையால் இன்னொரு பக்கம் தளர்ச்சி. நுகர்பொருட்கள், வாகனங்கள், வேளாண் பொருட்கள் துறையில் இருக்கும் நிறுவனங்கள் தற்காலிகப் பின்னடவைத் தவிர்க்கப் பாடுபட வேண்டியிருக்கும்.

ஒரு ஆண்டாக கீழே கீழே போய்க் கொண்டிருந்த பங்குச் சந்தை வெறி பிடித்தது போல ஒரு வாரம் மேலே அடுத்த வாரம் கீழே என்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக மேல்நோக்கிய போக்கு தெரிகிறது. நாளுக்கு நாள் மணிக்கு மணிக்கு நடக்கும் மாறுதல்களில் வாங்கி விற்க முனையும் சிறுமுதலீட்டாளர்கள் இன்னும் கையைச் சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழகத்தின் தெற்குப்பகுதியில் ஈழத்தில் காரிருள் சூழ்ந்திருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாமல் ஒரு இனமே நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம், காஷ்மீர், ஈழம் என்று தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் உலகில் பொதுவாக நிலவும் 'தீவிரவாத' அடக்குப் போக்கில் திணறிக் கொண்டிருக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வுக்கு இருக்கும் இடங்களை விட விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஏற்கனவே பல லட்சம் கட்டி பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நெற்றிகளில் கவலைக் கோடுகள். பெற்றோர்களின் மனதில் கலக்கம். மென்பொருள் துறையால் கவரப்பட்டு பல்லாயிரக்கணக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி இடங்கள் காற்றாடுகின்றன.

அமெரிக்காவில், சாதாரண மக்கள் வயிற்றில் ஈரத் துணி போட்டுக் கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்க போராடிக் கொண்டிருக்க, Wall Street முதலீட்டாளார்களும், வங்கி பெருந்தலைகளும் இன்னமும் மில்லியன் டாலர் ஊக்கத் தொகைகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உடல்நலத் துறையில் சீர்திருத்தங்களின் கழுத்தை முறித்துப் போடும் முயற்சியில் பெரும் மருந்து நிறுவனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன.

மென்பொருள் உலகில் திறவூற்று மென்பொருட்கள் (open source) மைய நீரோட்டத்திற்கு வந்து விட்டன. 'முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள், அதன் பிறகு உங்களைப் பார்த்துக் கை கொட்டி சிரிப்பார்கள், அடுத்ததாக உங்களை நசுக்கி விட முயற்சிப்பார்கள், அத்தோடு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்'. பெரும் சக்திகளை எதிர்த்து அறத்தின் வலிமையை மட்டும் துணையாகக் கொண்டு போராடும் முயற்சிகளுக்கு சொன்னது லினக்சு முதலான திறவூற்று மென்பொருட்களுக்கு பொருந்துமானால், இப்போது நசுக்கி விடும் முயற்சிகளைத் தாண்டி வந்து விட்டிருக்கிறோம்.

அகில இந்திய அளவில் காங்கிரசுக் கட்சி கூடுதல் 40 இடங்களைப் பிடித்ததன் மூலம் ராகுல்காந்தியும் சோனியா காந்தியும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக காட்சியளிக்கிறார்கள். திராவிடப் பெருந்தலைகள், கூடுதல் இரண்டு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக கையில் கப்பறையுடன் தில்லி போய் அவர்கள் முன் நிற்க வேண்டியிருந்தது. அத்தோடு மாநில நலன்கள், அல்லது தமிழர் நலன்கள் குறித்துப் பேசுவதற்கான உரிமையும் அடகு வைக்கப்பட்டு விட்டது.

இந்துத்துவா இயக்கங்கள் தேர்தலில் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவால் ஒருத்தரை ஒருத்தர் புதைத்து முன் தான் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது அப்படியே தொடர்ந்து அந்த இயக்கங்களே வேரறுந்து போகும் என்று நப்பாசை இருந்தாலும், அவ்வளவு சீக்கிரத்தில் நல்லது நடந்து விடாது என்ற எச்சரிக்கையும் ஒலிக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளும் எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தனிக் குணமுள்ள தமிழினம், தமக்குப் பிடித்தபடி தகவமைத்துக் கொள்கிறது. இணையமும், தமிழ்த் தளங்களும், கணித்தமிழுக்காக ஆர்வலர்கள் போட்ட அடித்தளமும் இன்றைக்கு எப்படிப் பயன்படுகிறது என்று கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பெரும்பாலான முயற்சிகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், இவற்றுக்கு வெளியே கொஞ்சம் சின்ன அளவில் கதை, கவிதை கட்டுரை என்று படைப்புகளாக வெளி வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பத்தில் படைப்பாக்கங்கள் தமிழ் சமூகத்திலிருந்து உருவானதாக எதுவும் கண்ணுக்கெட்டியது வரை காணக் கிடைக்கவில்லை.

இப்படி மனதை ஆக்கிரமிக்கும் பல பொருள்களைப் பற்றி அடுத்து வரும் ஒரு வாரத்தில் பதிவுகளாக எழுதுகிறேன். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே நிறைய எழுதி தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் திட்டமாகவே இருந்து விட்டன. தினமும் இந்திய நேரப்படி அதிகாலை 7 மணிக்கு ஒன்று, காலை 9 மணிக்கு ஒன்று மதியம் 1.30க்கு ஒன்று, மாலை 6.30க்கு ஒன்று என்று பதிவிட வேண்டும் என்று நினைப்பு.

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

இணையத் தளங்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகின்றனவா, சீர்குலைக்கின்றனவா?

நான்குவழிச் சாலைகள் வண்டி ஓட்டுபவர்களுக்கு வசதி அதிகரித்துள்ளனவா அல்லது அவர்களது உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றனவா? என்று கேட்டால் எப்படி இருக்கும். அது போன்ற கேள்விதான் இதுவும்.

இணையத்தளங்களில் சீர்குலைவுகள் இருக்கின்றனவா? நிச்சயமாக, ஏராளம் இருக்கின்றன. கஞ்சா குடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினால் சில விநாடிகளில் நூற்றுக்கணக்கான இணையப் பக்கங்களை தேடு கருவிகள் பட்டியலிட்டுக் கொடுத்து விடுகின்றன. அணுகுண்டு செய்வது எப்படி என்று வீட்டிலேயே செய்து பார்க்கும் வழிமுறைகள் கூட கிடைக்கின்றன.

ஏதாவது ஏடாகூடமாக நடந்தால்தான் அது செய்தி என்பது ஊடகங்களின் இயல்பு. மேலே சொன்னது போல இணையத்தைப் பார்த்து சீரழிந்தவர்களின் கதைகள் பரவலாக வெளிவருகின்றன. இணையத்தில் வழிகாட்டல்களைப் பற்றிய தகவல்கள் பற்றிப் பேசப்பட்டாலும் அவை எதிர்மறை செய்திகளைப் போல பெரிய அளவில் பரவுவதில்லை.

இணையத்தில் ஆரம்பத்தில் நிலையான பக்கங்கள் இருந்தன. ஒரு நிறுவனம், அல்லது தனி நபர் தம்மைப் பற்றிய தகவல்களை நான்கு பக்கம் எழுதி ஒரு கணினியில் போட்டு வைத்து அதற்கான இணைய முகவரியும் கொடுத்து விட்டால், அதை மற்றவர்கள் வந்து பார்த்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதுதான் இணையப் பக்கங்களின் முதல் கட்டம்.

இப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் web 2.0 என்ற இணையக் காலகட்டத்தில் அந்த ஆரம்ப கால வலைப்பக்கங்களை பல படிகள் தாண்டிச் சென்று மிகப் பெரிய சமூகங்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழில்நுட்பமாக இணையம் மாறியிருக்கிறது.

விவாதக் களங்கள், வலைப்பதிவுகள், மடற்குழுக்கள், சமூக வலைத் தளங்கள் என்று புதுப் புது அணுகுமுறைகளில் நூற்றுக் கணக்கான தளங்கள் உருவாகியிருக்கின்றன. சீர்குலையும் போக்கில் இருக்கும் ஒரு இளைஞன் இணையத் தளங்களுக்குச் சென்றுதான் சீர்குலைய வேண்டும் என்று இல்லை. அதற்காக புதிய வழிகளைக் காட்டுவதில் கொஞ்சம், சிறிதளவில் கூடுதல் இருக்கலாம். அவ்வளவுதான்.

ஆனால் வழி தேடிக் கொண்டிருக்குள் இளைஞர்களுக்கு செம்மையான வழிகாட்டுதலை செய்ய பல கோணங்களில் பல வடிவங்களில் பல நோக்கங்களில் இணையத் தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நான் பெரிதும் இடம் பெற்ற நடவடிக்கைகள், தமிழ் மடற்குழுக்கள், தமிழ் வலைப்பதிவுகள், தொழில்நுட்ப விவாதக் களங்கள், மடற்குழுக்கள். பொதுவாக நண்பர்கள் வட்டம் சின்னதாக இருக்கும் எனக்கு பல நட்புகள் இந்த நடவடிக்கைகள் மூலம் கிடைத்தன. நான்கு பேர் இருக்கும் கூட்டத்தில் பேசுவதற்கு அல்லது புதிதாக சந்தித்தவர்களிடம் நட்பு கொள்வதற்கு தயக்கங்கள் உள்ளவன் நான். இணையத்தில் அந்த தளைகள் அறுந்து எழுத்தில் வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

அதே நேரத்தில் வெளிஉலகில் நான் வைத்திருந்த தடைகளை எல்லாம் இணையம் மாயமாக மறைந்து விடச் செய்யவில்லை. இப்போதும், சமூகக் குழுக்களுக்கான வலைத் தளங்களில் நான் முழுவதுமாக ஈடுபட முடிவதில்லை. தனி நபர் நடவடிக்கைகளில்தான் ஈடுபட முடிகிறது.

இசையில் ஆர்வம், ஒளிப்படத் துறையில் ஆர்வம், வெளிநாட்டில் படிப்பதற்கு ஆர்வம், இயற்பியல் துறையில் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் என்று எந்த ஒரு திசையில் ஆர்வம் பிறந்தாலும் அதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு செழுமையாக வளர்க்க வழிகாட்டும் படி இணையத் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாடப் புத்தகத்துக்கு வெளியில் ஏதாவது தகவல் தெரிய வேண்டும். கூடுதல் விளக்கம் வேண்டுமென்றால் ஒரு உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர்கள் அல்லது நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் வழி காட்டும். இன்றைக்கு இணையம் வழியாக அதே போல சில ஆயிரம் ஆசிரியர்கள் அல்லது சில லட்சம் புத்தகங்கள் அந்தத் துறையைப் பற்றி வழி காட்டுவதற்கு கிடைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

கேட்க வேண்டிய தளங்களைத் தெரிந்து கொண்டு அங்கு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டால், அவ்வப்போது ஊம் கொட்டிக் கொண்டிருந்தால், சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருந்தால் சின்னப் பையன் கூட மெத்தப் படித்த மேதைகளின் சபையில் இடம் பிடித்து விடலாம். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் மெத்தப் படித்த மேதைகளின் மன்ற மையங்கள் இணையத்தில் இருக்கின்றன. அந்த மேதைகள் ஒரு நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், உலகெங்கும் உள்ள தலை சிறந்த எல்லோரும் கலந்து கொள்ளும் மையங்களாக அவை இருக்கின்றன. அங்கு மடல் பரிமாறிக் கொள்பவர்களை தேவையில்லாம் கடுப்பேற்றாமல், அமைதியாக நடக்கும் உரையாடல்களை படித்துக் கொண்டிருந்தால், ஏதாவது புரியவில்லை என்றால் கேட்டு பதில் பெற்று, புதிதாக ஏதாவது உரையாடலை துவக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக ஆரம்பித்து வைத்தால் கடையநல்லூரில் இருக்கும் எட்டாம் வகுப்பு மாணவன், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளருடன் உறவாடிக் கொள்ளலாம்.

கோடம்பாக்கத்தில் திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞன் ஹாலிவுட்டின் தொழில் நுட்ப வல்லுநர்களைத் தொட்டு விடலாம். மனித மனங்களை இணைப்பதற்கான ஒரு அற்புதக் கருவிதான் இணையம். அதை பிரமாதமான வழிகளில் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் உலகெங்கிலும் இருக்கும் பயனர்கள். நம்ம ஊர் இளைஞர்கள் அல்லது எந்த ஊர் இளைஞர்களும் தமது வாழ்க்கைப் பாதையை முழுவதுமாக மாற்றிக் கொள்வதற்கு போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டுவழிப்பாதைதான் இணையப் பாதை. அதில் ஏறி எங்கே போக வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில். அந்த சாலையோரம் இருக்கும் நிழற்குடையின் கீழ் படுத்துத் தூங்கப் போகிறேன் என்று இருப்பது அவரவர் விருப்பம். அதற்கு எட்டுவழிப்பாதை பொறுப்பேற்காது.

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

வணக்கம்

போன ஆண்டு மார்ச்சு 15ம் தேதி வாக்கில் வலைப்பதிவுகளுக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஒரு இடுகையாக வெளியிட்டேன். பின்னூட்டப் பெட்டிகள், தமிழ்மண இணைப்பு, ஸ்டாட்ஸ்கவுண்டர் இணைப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டேன். முழுமையாக ஒரு கத்தரிப்பு.

'ஒரு ஆண்டுக்கு வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. எந்த நல்ல செயலுக்கும் ஒரு இடைவெளி கொடுத்தால்தான் அதன் உண்மையான நிறைகுறைகள் தெரியும். ஒரு ஆண்டுக்குப் பிறகு இன்னும் எழுத வேண்டும், பதிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் சந்திப்போம்'.

ஓராண்டு தாண்டியே விட்டது. ஒதுங்கியிருத்தல் முழுமையாக இருந்திருக்கவில்லை. முதல் 6 மாதங்களுக்கு பதிவதையும், பின்னூட்டங்கள் இடுவதையும், பிற பதிவுகளைப் படிப்பதையும் அறவே ஒதுக்கியிருந்தாலும் அதன் பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதும், பதிவதும் ஆரம்பித்தது. முன்பு இருந்த வேகமும் பிடிப்பும் விட்டுப் போயிருந்தன.

'திரும்பவும் வலைப்பதிவுகளில் ஈடுபட ஆரம்பிக்க வேண்டுமா? தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் சமூகங்களில் பங்கேற்க வேண்டுமா? அதை விட்டு இருந்த நாட்களில் வலைப் பதிவதால் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?' என்று யோசித்துப் பார்த்தால், சாதகங்கள்தான் அதிகம்.

ஏன் வலைப்பதிவில் பதிய வேண்டும்?
  1. எழுதுவதற்கான ஊக்கம் பதிவுகளாகப் போட்டு நான்கு பேர் படித்து பின்னூட்டம் பார்த்து அதற்கு எதிர்வினை கொடுக்கும் போது நிறையவே கிடைக்கிறது. 'ஒரு மணி நேரம் உட்கார்ந்து நமக்கே நமக்காக எழுதுவோம்' என்று நினைத்தாலும் கூடவே பிறருக்குப் போய்ச் சேரும் என்ற எண்ணம் பெரிதும் துணை புரிகிறது.

  2. அப்படி தவறாமல் எழுதிக் கொண்டிருப்பது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க, மனதுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கிறது.

  3. நமது பதிவுகளை படிப்பவர்களுடன் ஏற்படும் நட்பு. பின்னூட்டங்கள் மூலம் பெயர் தெரிந்து மனதளவில் நெருக்கமாகும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள், நேரில் சந்திக்க முடியும் நண்பர்கள், முழுமையான நட்பாக பரிணமிக்கும் நண்பர்கள் என்று நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்புகள் ஏராளம்.

    அப்படி எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் என்றோ சந்திக்க நேரும் போது நெடுநாள் பழகியவர் போல உணர முடிவதும் கிடைத்தற்கரியது.

  4. நமது கருத்துகளை பதிந்து வைத்து வெளிப்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு சமூகக் கடமை என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால், இனிமேல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், பொருள் செய்ய விரும்பு, புரட்டிப் போட்ட புத்தகங்கள் மூன்றுக்குமே தொடர்ந்து எழுதி பதிய உத்தேசம். இப்படிப்பட்ட தீர்மானங்களுக்கு வழக்கமாக ஏற்படும் கதி நேர்ந்து விடாமல் நல்லபடியாக தொடரும் என்று உறுதியுடன்.

ஞாயிறு, ஜனவரி 25, 2009

கண்டனத்துக்குரிய டோண்டு ராகவன்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வலைப்பதிவை ஆரம்பித்ததும் ஆரம்ப இடுகைகளில் ஒன்று, டோண்டு ராகவனின் சாதி அமைப்பைத் தூக்கிப்பிடிக்கும் போக்கைக் கண்டிப்பதாக இருந்தது.

இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்ட அவரது கருத்தாக்கங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். டூண்டு என்ற பெயரில் அவரைத் தாக்கி அடக்கி வைத்திருந்தவரின் முறைகள்தான் சரியோ என்று தோன்றுகிறது.

குமுதம் என்ற வருணாசிரம ஆதரவுப் பத்திரிகையில் வெளியிடப்படும் கட்டுரைகளைத் தமக்கு தூண்டுதலாக அவர் சொல்வதில் இருக்கும் அவலம் நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் நோய்களின் முதல்.

டோண்டுவின் கருத்துக்களை தேவையில்லாமல் இணைத்து விளம்பரம் கொடுப்பதாக இருந்தாலும், கசப்புடனேயே இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

புதன், ஜனவரி 21, 2009

விக்கிபீடியா பயிற்சி வகுப்பு

தொலைபேசியில் ரவிசங்கர் அழைத்து விருகம்பாக்கத்தில் கிருபாசங்கரின் வீட்டில் நடக்கும் விக்கி பட்டறைக்கு வந்திருப்பதாகவும் விசைப்பலகை தமிழ் 99 ஒட்டிகளை எடுத்துக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டார். 3 மணிக்கு பட்டறை ஆரம்பிக்கிறதாம்.' 5 மணி வரை நடக்குமாம். 3 மணிக்கே வருவது நடக்காது, முடியும் முன்னர் எப்படியும் வந்து விடுகிறேன்'

ரேமண்ட்சு காட்சிக் கடைக்கு அருகில் காமராசர் சாலைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆவிச்சி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். அருகில் இருந்த ஒரு அங்காடியில் அப்பி ஆப்பிள் சாறு வாங்கி வறண்டு போயிருந்த தொண்டையை நனைத்துக் கொண்டேன்.

போக வேண்டிய அடுக்கு மாடிக் கட்டிடத்தின் பெயரை மறந்து போயிருந்தேன். தொலைபேசி அடித்தால் எடுக்கவில்லை. நிகழ்ச்சி ஆரம்பித்து ஓசை எழும்பாமல் அமைத்துக் கொண்டிருப்பார் என்று ஊகித்தேன். காமராசர் சாலைக்குள் நுழைந்து வலது புறம் முதலில் இருந்த கட்டிடத்தில் கேட்டால் அங்கு இல்லை. தொடர்ந்து நடந்து சாலிக்ராமம் நோக்கிப் போக ஆரம்பித்தேன். தெருவின் பெயரும் மாற ஆரம்பித்தது. அந்த நேரம் ரவிசங்கர் திரும்பி அழைத்திருக்கிறார். ஓசை கேட்டிருக்கவில்லை. நான் அழைத்துப் பேசினால் கட்டிடத்தின் பெயரைச் சொல்லி விட்டார். கிருபாசங்கர் கீழே வந்து காத்திருப்பதாகச் சொன்னார். 'கறுப்பு டிசட்டையும், நீல நிற ஜீன்சும் போட்டிருப்பேன்'

தெரு முனை திரும்பிப் பார்க்கும் போது கட்டிடத்தின் வாசலிலேயே குறிப்பிட்ட நிற உடை அணிந்து நின்றிருந்தவரைப் பார்த்து விட்டேன். என்னைத்தான் அவர் ஊகித்திருக்க முடியாது. அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு, அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்தவரை, 'உங்களைத் தெரியாதவர்கள் வலைப்பதிவு உலகில் உண்டா' என்று சொல்லி தொடர்ந்தேன். கீழே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அவரையும் அழைத்தன.

மாடியில் வீட்டுக்குள் இரண்டு கணினிகளில் ரவிசங்கரும் இன்னொரு நண்பரும் கூடியிருந்த ஆர்வலர்களுக்கு விக்கிபீடியா குறித்து விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஐகாரஸ் பிரகாஷ் நீண்ட நாட்களுக்குப் பார்க்க முடிந்தது. நானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அறிமுக நிலை விளக்கங்கள் மட்டும்தான் சாத்தியமாகும் கூட்டம். இணையம், கூகிள் என்று தொடர்பில்லாத திசைகளிலும் பேச்சு நீண்டது.

பட்டறை முடிந்ததும் வந்திருந்த எல்லோரையும் தனித்தனியாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் கிருபா. இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பல முறை அனுபவம் இருந்ததால் எதை எப்படிச் செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று மொட்டை மாடிக்குப் போனோம். கூட பிசுகட்டுகள், தண்ணீர் பாட்டில்.

ரவி, சிவகுமார், ஐகாரஸ் பிரகாஷ் என்று 'பிரபல வலைப்பதிவர்கள்' ஒரு பக்கமும், கிருபா மற்றும் இரண்டு நண்பர்கள் இன்னொரு புறமும் என்று ஆறு பேர். விக்கிபீடியா, வலைப்பதிவுகள், டிவிட்டர் என்று பேசிக் கொண்டிருந்தோம். வில்லு படம் குறித்து டிவிட்டரில் தனது பிரபலமான விமரிசனத்தை பிரகாஷ் குறிப்பிட்டு சிரிப்பலைகளைத் தவழ விட்டார். பதிவர் பட்டறை போல விக்கிபீடியா பட்டறை ஏற்பாடு செய்யலாம் என்று பேச்சு வந்ததும், மார்ச்சு 15 என்று கிருபா நாள் குறித்து சொல்லி விட்டார். 'இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு 2 மாத இடைவெளி சரியாக இருக்கும்.'

'ஆங்கில விக்கிபீடியாவில் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் 20 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள்தாம்' என்று ரவிசங்கர் உறுதியாகச் சொன்னார். 'தமிழிலும் அந்த வயதுக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து பட்டறை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம்' என்று பேச்சு வந்தது.

விக்கியில் எழுதுவதற்கு விக்கி மீஉரை தெரிந்திருக்க வேண்டிய தடை குறித்தும் பேசினோம். 'பார்ப்பது போல கிடைக்கும்' உரைத் தொகுப்பி உருவாக்குவதற்கு பணம் ஒதுக்கியிருக்கிறார்கள். அது வந்து விட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும்'

ஊடகங்களில் வெளிச்சம் போட பாலபாரதி போன்றவர்களை அணுகலாம். கலைஞர் தொலைக்காட்சியில் பணி புரியும் நண்பர் எண்ணையும் ரவிசங்கரிடம் கொடுத்தேன். 1000 நாட்களில் 100000 கட்டுரைகள் என்று முயற்சி ஆரம்பித்த செந்தில்நாதன் தொடர்பையும் வாங்கிக் கொண்டார். எல்லோரையும் சேர்த்து முயற்சி ஆரம்பிக்கலாம்.

ஆறு மணிக்கெல்லாம் விடைபெற்றுக் கிளம்பினோம். கீழே கிரிக்கெட் விளையாட்டு முடிந்து வேறு ஓட்டங்கள் ஆரம்பித்திருந்தன. வெளியில் வந்து ரவி, பிரகாஷிடம் விடை பெற்றுக் கொண்டு ஆவிச்சி எதிரில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பேருந்து பிடித்து அலுவலகத்துக்கே வந்து விட்டேன்.

ஞாயிறு, மே 18, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பட்டறை

ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் பயணம் (மே 11, 2008). காலையில் ஐந்தரை மணிக்கு கார் வருமாறு சொல்லியிருந்தோம். அலுவலகத்தில் வண்டியில் ஏறி விட்டு வினையூக்கி வீட்டில் அவரையும் அழைத்துக் கொண்டு கத்திப்பாராவுக்கு பேருந்தில் வந்து காத்திருப்பதாகச் சொன்ன பாலபாரதியும் சேர்ந்து கொள்ள ஆறு மணிக்குள் நெடுஞ்சாலையைப் பிடித்து விடுவதாகத் திட்டம். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.

5 மணிக்கு வினையூக்கியின் தொலைபேசி அழைப்பு. தயாராகி காத்திருப்பதாக தகவல். பாலபாரதியிடமிருந்து குறுஞ்செய்தி, பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டார். அலுவலகத்துக்கு சரியாக ஐந்தரை மணிக்கு வந்து விட்டேன். கணிச் சுவடி மற்றும் விசைப்பலகை ஒட்டிகளை ஒரு பையில் போட்டு எடுத்து வைத்திருந்தேன். பாலாவின் மடிக்கணினியில் சூசே லினக்சு நிறுவத் தேவையான தட்டுகளடங்கிய பொதியையும் மடிக்கணினி பையில் எடுத்துக் கொண்டிருந்தேன்.

வண்டி வரும் அடையாளமே தெரியவில்லை. யாருக்குத் தொலைபேசி கேட்க வேண்டும் என்று எண்ணும் வாங்கி வைத்திருக்கவில்லை. ஓட்டுனர் ஐந்து மணிக்கே வந்து இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்திருக்கிறார். அவரிடமும் என் தொலைபேசி எண் இருக்கவில்லை. போன ஒரு தடவை போல, தேநீர் தயாரித்து குடித்து, பாலபாரதி கேட்ட அறிவுமதியின் தொலைபேசி எண்ணை மின்னஞ்சலிலிருந்து எடுத்து கொடுத்து விட்டு சரி, பேருந்திலேயே கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் தெரு முனையில் வழி கேட்டுக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அதற்குள் பேச ஆரம்பித்திருந்த வினையூக்கிக்கான தொலைபேசி அழைப்பில் நிலவரத்தைச் சொல்லி 10 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னேன்.

வினையூக்கியின் வீட்டில் அவர் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டார். வடபழனியை தவிர்த்து கே கே நகர் வழியாக நூறடி சாலைக்கு வந்து அசோகா தூண் சுற்றி கிண்டி வந்தோம். கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலம் ஏறி இறங்கி பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பாலபாரதி தொலைபேசியிருந்தார். தவிர்க்க முடியாத தம்முடன் தாண்டி நின்றிருந்தார்.

ஏறியவுடன் ஓட்டுனரிடம் 'உங்க பேரென்ன?' என்று ஒரு அதட்டலாகக் கேட்டு விட்டு உட்கார்ந்தார். 'பாட்சா'. பாட்சா பாயாக மாறி விட்ட ஓட்டுனர் மிகவும் உற்சாகமாக கடைசி வரை வண்டி ஓட்டினார். ஒரு மனிதரின் பெயர் கேட்பதன் மூலம் நட்பு சூழலை உருவாக்கி விட்டாரே என்று வியந்து கொண்டேன். வாய் விட்டுச் சொல்லவில்லை.

அப்போது ஆரம்பித்த பேச்சு போகும் போதும் வரும் போது ஒரு சில மணித்துளிகள் தவிர்த்து ஓயவே இல்லை. வினையூக்கி சிறிது நேரத்துக்கெல்லாம் மௌனமாகி விட்டார். கேட்டால், 'காது கொடுத்துக் கொண்டிருக்கிறேன்' என்று அரை மயக்கத்தில் பதிலளித்தார். ஒன்று, எங்கள் விவாதங்கள் அவ்வளவு செறிவாக இருந்திருக்க வேண்டும். அல்லது சகிக்க முடியாத அறுவையாக இருந்திருக்க வேண்டும்.

வழக்கம் போல எனக்கு நல்ல பசி வந்து விட்டது. பாலாவுக்கும் சரி வினையூக்கிக்கும் சரி, வழக்கமாக தூங்கி எழுந்திருக்காத நேரம். பாலபாரதி ஆய் சரியாக போகாத விபரங்களை சொல்லி வந்தார். போகும் போது இயற்கை உந்துதல்களை பேச மறுக்கும், தயங்கும் போக்குக்குச் சவுக்கடியாக பாலபாரதி சொன்ன கருத்துக்களோடு நகர்ந்தது.

'தலைக்கு சாயம் அடித்துக் கொள்ளுங்க' என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'ஏதாவது ஒருத்தன் சொன்னா அப்படியா செய்றேன் என்று கேட்டுக்க வேண்டியதுதானே, உடனேயே முடியாது என்று ஏன் சொல்லணும்'. 'அதுக்காக பொய் சொல்ல முடியுமா, மனதுக்கு பட்டதைத்தான் சொல்வேன்.'

வழியில் சாலையோரமாக ஒரு சின்ன ஊரில் நிறுத்தினார்கள். தேநீர் கடையில் பிஸ்கட்டுகள், முறுக்குகள்தான் இருந்தன. நான் தேநீர் குடிப்பதே இல்லை என்று முடிவு கட்டி எனக்குச் சொல்லாமலே விட்டு விட்டார் பாலா. அடுத்த கடையில் சுடச் சுட வடைகள் போட்டு விற்றுக் கொண்டிருக்க அதில் நான்கு வாங்கி ஆளுக்கொன்று கபளீகரம் செய்தோம். சந்தடி சாக்கில் எனக்கும் இனிப்பு குறைவாக, கடுப்பம் குறைவாக ஒரு தேநீர் சொல்லிக் கொண்டேன்.

திண்டிவனம் வரை சாலை உயர் தரமாக இருக்க, தாண்டிய பிறகு வேலை நடந்து கொண்டிருப்பதால் ஒரு அகலப் பாதையில் இரு திசையிலும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு ஊரில் ஏதோ ஊர்வலம் என்று ஒரு பக்கச் சாலை அடைபட்டிருந்தது. வாகன ஓட்டி பாட்சா எதிர்த் திசையில் ஏறி பிற வண்டிகளைத் தாண்டி நின்று கொண்டார். தவறு என்று தெரிந்தும் நமக்கு நேரம் மிச்சப்படுகிறது என்று தெரிந்ததும் தடுக்காமலேயே இருந்து விட்டோம்.

விழுப்புரம் வருவதற்கு சற்று முந்தைய இடத்தில் ஒரு சின்ன ஊரில் திருமண விழாவுக்காக சாலையோரத்தில் மண மக்களின் புகைப்படங்களை அழகு படுத்தி பெரிய தட்டிகளை வைத்திருந்தார்கள். மிக்க ரசனையோடு பெண்ணை அழகிய, மகிழ்ச்சி காட்டும் முகத்துடனான கோணங்களில் வைத்திருந்த தட்டிகள் மிக்க நிறைவைக் கொடுத்தன. ஏதோ கணினி வரைகலை நிறுவனத்தைச் சார்ந்தவரின் திருமணம் என்று நினைத்துக் கொண்டோம்.

ஒன்பது மணி தாண்டி சிறிது நேரத்தில் விழுப்புரத்துக்குள் நுழைந்து விட்டோம். என் பசி அதற்குள் அடங்கி மந்தமாகி விட்டிருந்தது. புதுச்சேரி சாலையில் கல்லூரி இருக்கிறது. புதுச்சேரி போகும் சாலையின் திசைகாட்டிக்கு அருகிலேயே சாப்பிடும் விடுதிக்கான விளம்பரம்.

அதைப் பிடித்துக் கொண்டு நேராக விடுதிக்கு முன் வண்டி நிறுத்தச் சொன்னோம். நல்ல கூட்டம். முதலில் கிச்சடி, தொடர்ந்து தோசை. கடைசியில் பாதி காபி. சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு வழி கேட்டு வந்து சேரும் போது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. முனைவர் இளங்கோவன் தமிழ் 99 குறித்து உரையை ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் தொடங்கியதாக இரா சுகுமாரன் சொன்னார்.

வகுப்பறை போல எல்லோரையும் உட்கார வைத்து கணினிகளை சாட்சியாக வைத்து தமிழ்99ன் அருமை பெருமைகளை நுணுக்கங்களை விவரித்துக் கொண்டிருந்தார். 'இது பட்டறைங்க, ஆராய்ச்சி அறை இல்லீங்க' என்று மனதுக்குள் கூவிக் கொண்டே வந்த களைப்பாறினோம். வாய்ப்பு கிடைத்ததும் நடை முறை பயிற்சியை ஆரம்பிக்க முயற்சி செய்தோம்.

'எல்லோரும் கணினிகளின் அருகில் போய் விடுங்க. சொல்வதை எல்லாம் உங்கள் கைப்பட செய்து பார்த்தால்தான் மனதில் நிற்கும். நாங்க முன்னால் நின்று கொண்டு பேச நீங்கள் ஞாயிற்றுக் கிழமை அரைத்தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் இல்லை. நீங்கள் பயிற்சி செய்ய ஏற்கனவே விபரம் தெரிந்தவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பதுதான் நல்ல முறை' என்று நாற்காலிகளை திசை திருப்ப வைத்து கணினிகளுக்கு முன்பு எல்லோரையும் நகரச் சொல்லி விட்டேன்.

சில நிமிட கலங்கலுக்குப் பின்பு எல்லோரும் கணினிகளின் முன்பு உட்கார்ந்து கொண்டார்கள். கணினி முன்பு இடம் கிடைக்காமல் உட்கார்ந்திருந்த ரமேஷ் என்ற பையனை திரையில் விளக்கம் காட்டுவதற்காக காட்சித் திரை பொருத்தப்பட்ட கணினியை இயக்கிக் கொண்டிருந்த அருண பாரதிக்கு அருகில் போகச் சொல்லி ரமேஷூக்கு கணக்கு ஏற்படுத்தி செய்முறை விளக்கம் காட்டச் சொன்னேன்.

முதல் முயற்சியில் நான்கைந்து பேர் மின்னஞ்சல் முகவரி தொடங்க முடிந்தது. அடுத்தடுத்தவர்கள் கடவுச் சொல், கணக்குக்கான பெயர் எல்லாம் சரியாக கொடுத்து சமர்ப்பிக்கும் போது ஏதேதோ பிழை காட்டி உருவாக்க மறுத்தது. கூகுளில்தான் எல்லோரையும் நுழைத்து விட்டுக் கொண்டிருந்தோம்.அப்படியே பிளாக்கருக்குப் போய் விடலாமே!

ஒரு கட்டத்தில் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்து ஒரு வலைப்பதிவு உருவாக்குவதையும் சொல்லி முடிக்க ஏழெட்டு பேர் அதற்குள் உருவாக்கி விட்டிருந்தார்கள். அது வரை முடியாதவர்களை வேர்ட்பிரெஸ் கணக்கு உருவாக்கி வலைப்பதிவு போடச் சொன்னோம். கணினிகளில் தமிழில் எழுதும் வசதி, எழுத்துரு வசதி இல்லாமல் இருந்தது. அதனால் எல்லா வேலையும் ஆங்கிலத்தில்தான் நடந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 100 பேர் அரங்கத்தில் இருந்தார்கள். தமிழ்நம்பி பிஎஸ்என்எல்லில் அவருக்கு இருக்கும் தொடர்புகளையும், அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் மூலம் மற்ற ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறார்கள். வசதியான கணினி பயிற்சி அறை. 37 கணினிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.

கோ சுகுமாரன் உடனுக்குடன் புகைப்படங்களையும் நிகழ்ச்சி விபரங்களையும் புதுவை பதிவர்கள் வலைப்பதிவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

வலைப்பதிவுகளில் படங்களை, ஒலி ஒளிக் கோப்புகளை இணைப்பது குறித்து வினையூக்கி பேசினார்

'எல்லாமே ஆங்கிலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்துருக்கள் எழுது கருவிகள் குறித்த அமர்வை முடித்து விட்டால்தான், எல்லோரும் தமிழில் தட்டச்ச முடியும்' என்று சொல்லி முனைவர் இளங்கோவன் அடுத்த அமர்வை ஆரம்பித்தார்.

அந்த அமர்வின் நடுவில் அமைச்சர் வந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ சலிப்பில் ஒதுக்கமான நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் பரிவாரம் வந்தது. கல்லூரி முதல்வர், விழுப்புரம் நகராட்சி தலைவர், அமைச்சர் பொன்முடி மூவருக்கும் நாற்காலி. அமைச்சரின் உதவியாளர் பேச்சாளர்களை ஒருங்கிணைத்தார்.

பேசுவதற்காக ஒலிவாங்கி மேடை, நாற்காலிகள், மேசைகள், பொன்னாடை போர்த்துதல், வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை, நன்றியுரை என்று ஒவ்வொன்றாக முறையாக செய்தார்கள். பேசிய எல்லோருமே ஓரிரு நிமிடங்களுக்குள் தமது பேச்சை சிற்றுரையாக முடித்துக் கொண்டது சிறப்பு. அமைச்சர் மட்டும் நீளமான உரை. பொருட்பிழை எதுவும் இல்லாமல், எழுதி கொண்டி வந்திருந்த குறிப்புகளிலிருந்து பொருத்தமாக பேசினார்.

பேச்செல்லாம் முடிந்து எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள் என்ற கட்டத்தில், 'அமைச்சருக்கும் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்' என்று முனைவர் இளங்கோவின் காதில் சொல்ல, அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு ஒலிவாங்கியில் கழகத் தமிழில் கொஞ்சம் புகழ் மாலைகள் சூட்டி விட்டு இரண்டு நிமிடங்களில் அமைச்சர் பொன்முடிக்காக் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறோம் என்று அறிவித்தார்.

அருண பாரதி சுறுசுறுப்பாக கணக்கு உருவாக்க ஆரம்பித்தார். நானும் கூட்டத்தை முன்பக்கத்தில் கடந்து திரை பொருத்திய கணினிக்கு அருகில் அருண பாரதி செய்வதை ஒலிபெருக்கியில் சொல்லும் பொறுப்பை எடுத்தேன். நான்கைந்து நிமிடங்களில் பொன்முடி2008 என்று அடையாளத்தில் ஜிமெயில் கணக்கு, கலைஞர் என்ற பெயருடன் ஒரு வலைப்பதிவும் உருவாக்கி, முதல் இடுகையைப் போட்டுக் காண்பித்து விட்டார்கள். உரத்த கைத் தட்டல்களுடன் அதை நிறைவு செய்தது கூட்டம்.

அத்துடன் அமைச்சர் குழாம் புறப்பட்டு போய் விட முனைவர் இளங்கோவன் தமிழ் எழுத்துருக்கள், தட்டச்சுவது குறித்த அமர்வைத் தொடர்ந்தார். ஒரு மணி தாண்டி விட்டது. பசி எடுக்க ஆரம்பித்தது. அவர் தனது பேச்சை முடித்து இடைவெளி விட்ட நேரத்தில், தமிழ் 99 விசைப்பலகை ஒட்டிகள் குறித்த அறிவிப்பை செய்து 2 ரூபாய்கள் நன்கொடை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

சர சரவென்று 100 ரூபாய்களுக்கு மேல் வாங்கிக் கொண்டார்கள் அன்பர்கள். கறுப்பு, வெள்ளை என்று இரண்டு ரகங்கள். சில ஒட்டிகளில் எழுத்துக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. பாரி முதன் முதலில் என்னிடம் கொடுத்த ஒட்டிகளைப் போல தரம் இல்லை என்று தோன்றியது. இவை தமிழ்நம்பிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டிகள்.

மதிய உணவுக்கு அழைத்தார்கள். மூன்று வகை கலந்த சோறு, அப்பளம். முன் நடைபாதையில் வட்டமாக உட்கார்ந்து, அதற்குள் வந்து சேர்ந்தி விட்டிருந்த விக்கி, அவர் நண்பர், பாலபாரதி, வினையூக்கி, பாட்சா என்று நன்கு சாப்பிட்டு முடித்தோம். தமிழ்நம்பியிடம் வினையூக்கிக்கு ஒரு நேர்முகம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்ற வகையில் அவரது அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டுமே!

ஆர்வம் குறையாமல் எல்லோரும் சாப்பாட்டுக்குப் பிறகு கூடி விட்டார்கள். எல்லோருக்கும் சுவையாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கச் சொன்னார்கள். தமிழ்மணம், தமிழ்ப்பதிவுகளின் எண்ணிக்களை, தேன் கூடு, தமிழ் வெளி, தமிழ் பிளாக்ஸ் என்று பல தளங்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளை விளக்கிக் கொண்டிருந்தேன். கூகிள் ரீடரில் இணைப்பது குறித்த அமர்வை ஒரு நண்பர் தொடங்க, அது சிறிது நேரம் தொடர்ந்தது. பாலபாரதி, விக்கி, நான் என்று இடையிடையே பங்களிப்பு செய்து கொண்டிருந்தோம்.

பாலாவின் கணினியில் சூசே லினக்சு நிறுவும் வேலையை ஆரம்பித்தோம். நல்ல வேளையாக வந்த சிக்கல்கள் எல்லாம் சுலபமாக அவிழ்ந்து ஒரு மணி நேரத்துக்குள் அவரது கணினியின் ஒரு பிரிவில் லினக்சு வேலை செய்ய ஆரம்பித்து விட்டிருந்தது.

கடைசியாக இயங்குதளங்களில் தமிழ் என்று ஒரு அமர்வில் நான் பேச வேண்டும். அதற்கு முன்பே இரா சுகுமாரன் தமிழ் மென்பொருள் கருவிகள் குறித்து பேசி விட்டிருந்தார். விண்டோசு, லினக்சு என்று நான் தயக்கமாகத்தான் பேச ஆரம்பித்தேன். எதிர்பார்த்திராத ஒரு அமைதி, ஆர்வத்தை உணர முடிந்தது. சில நிமிடங்களிலேயே நான்கைந்து பேர் லினக்சு குறித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.

பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அவர்கள். அவர்கள் பள்ளிகளில் லினக்சு நிறுவப்பட்ட கணினிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிய ஆர்வமாக இருந்தார்கள்.

ஞாயிறு, மார்ச் 16, 2008

மீண்டும் சந்திப்போம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் ஓரளவு நிறைவாகவே செய்ய முடிந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இடுகைகள் எழுதி பல விலைமதிக்க முடியாத நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

இப்படி ஒரு தருணம் வரும் போது கொஞ்சம் நிதானித்து, செய்கைகளை ஆராய்ந்து இதற்கு அடுத்த நிலை என்று அலசிப் பார்க்க வேண்டும். வலைப்பதிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நான் எப்படி நகர முடியும்? ஒரு நேரத்தில் சரியாகப் பட்ட-பலனுள்ளதாக இருந்த பழக்கங்கள் எல்லா நேரத்திலும் தேவை என்று சொல்லி விட முடியாது.

நான் தமிழ் மணம் சமூகத்தில் பங்கேற்பதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறேன்.

இதே பழக்கங்கள், தேடல்கள், கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை இன்னொரு தளத்தில் இன்னொரு வடிவத்தில் வெளிப்படலாம். இதன் மூலம் ஏற்படும் நேரத்தில் வேறு ஒரு தளத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்ற விதிப்படி பழையவர்கள் திட்டமிட்டு புதியவர்களுக்கு வழி விட்டு நிற்பது உதவலாம். என்னுடைய இருப்பு சிலருக்கு மனத்தடையாக இருக்கலாம். அப்படி ஒருவர் இருந்தாலும் எனது விலகல் அவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொருள் சார்ந்த ஆக்க பூர்வமான பதிவுகள் அதிகமாக வேண்டும் என்று ஆர்வமுடைய நண்பர்கள், தாம் எழுத திட்டமிட்டிருப்பதை தள்ளிப் போடாமல், உடனேயே ஆரம்பித்து விடுமாறு என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியதால் தனிப்பட்ட முறையில் சிறிதளவாவது பலனடைந்ததாக உணரும் ஒவ்வொருவரும் தம் பங்குக்கு ஒரு சில இடுகைகளாவது எழுதி வெளியிடலாம்.

அடுத்த ஒரு ஆண்டுக்கு நான் வலைப்பதிவுகள் சமூகம் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு ஈர்ப்பு பலமாக இருந்தால் திரும்பி பார்க்கலாம். அது வரை எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

இன்னொரு தளத்தில், இன்னொரு உருவில் நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். அப்படியொரு தளத்தில் மீண்டும் சந்திப்போம்.

வெள்ளி, பிப்ரவரி 22, 2008

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - கொஞ்சம் பழசு

ஓசை செல்லா தொலைபேசி சென்னையில் இருப்பதாகவும் மாலையில் மெரீனா கடற்கரையில் சந்திக்கலாம் என்றும் காலையில் சொல்லியிருந்தார். அது குறித்து லக்கிலுக்கின் அஞ்சலும் வந்திருந்தது.

அலுவலகத்திலிருந்து 6.20க்கு, வினையூக்கியின் வீட்டில் ஆறரைக்கு, ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து ஜெமினி வட்டம். அதன் பிறகு அகலமான சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் என்று ஆரம்பித்திருக்கும் தலைவலியால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்தான். அதற்கு யார் என்ன அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள், அத்தனை கார்களை எப்படி நெருக்கடி கொடுக்க விடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

'காந்தி சிலையின் பின்னால் ஒரு குளம் மாதிரி இருக்கும், தண்ணீ இருக்காது' என்று லக்கிலுக்கின் தொலைபேசி வழிகாட்டலைப் பின்பற்றி போய்ச் சேர்ந்து விட்டோம்.

என்னுடைய கைபேசியில் யாரையாவது அழைத்தால் 'அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் பில் கட்டணம் செலுத்தும் நாள் கடந்து விட்டது. தடை இல்லாத சேவையைப் பெற உடனடியாக பணம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்' என்று ஒரு இயந்திரக் குரல், தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்காமலேயே நிறுத்தி விட்டேன். (அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் பேசி விட்டு அதன் பிறகு இணைக்கிறார்கள் என்பது அடுத்த நாள் காலையில் தெரிந்தது. 'பில் கட்டியாச்சா' என்று கூப்பிட்டுக் கேட்ட இளைஞரிடம் குமுறியதில் அந்த குரலை உடனே நீக்கித் தந்து விட்டார். அது அடுத்த நாள் காலையில்). தொலைபேசியில் யாரையும் அழைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

செல்லாவும் சிவஞானம்ஜியும் உட்கார்ந்திருக்க, லக்கியும் அதியமானும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வரப் போயிருக்கிறார்களாம். ஆழியூரானின் வண்டி பாதியில் நின்று விட்டிருக்கிறது. நான்கு பேரும் வந்து சேரும் இடைவெளியில் அவித்த கடலைப் பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். செல்லா பஜ்ஜி வாங்கி வந்திருந்தார்.

அதியமான் 'என்ன மொட்டை எல்லாம் போட்டிருக்கீங்க, உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே' என்று ஆரம்பித்து, 'மோடி ஜெயித்து விட்டாரே' என்று தொடர்ந்து தனக்குப் பிடித்த விவாதங்களைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார். 'அதியமான் இருக்கும் இடத்தில் சூட்டுக்குக் குறைவே கிடையாது'

இடையில் ஆழியூரானின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் மட்டும் அதியமானுக்கு சரக்கு இருக்கவில்லை. மற்ற எல்லாவற்றிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். முறுக்கு, போளி என்று அடுத்த சுற்று ஆரம்பமானது. ஒன்பது மணி ரயிலைப் பிடிக்க சந்திப்பின் காரணகர்த்தா செல்லா கிளம்பி விட மற்றவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம். செல்லா தொலைபேசி 'உருப்படியாக புராஜக்ட் தமிழ் ரெடி பற்றிக் கொஞ்சம் பேசுங்க' என்று நினைவூட்டினார்.

ஒன்பது மணிக்கு பாலபாரதி கூட்டத்தை முடித்து வைத்தார், சுறுசுறுப்பாக வண்டியை எடுத்தால், 'பின்பக்கம் காத்து குறைவா இருக்கு' என்று எச்சரித்தார்கள். சில அடிகள் போகும் போதே உள்டியூபில் ஓட்டை என்று தெரிந்து விட்டது. அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டு லக்கி தனது வண்டியில் பஞ்சர் பார்ப்பவரை அழைத்து வருவதாகக் கிளம்பினார். ஆழியூரான் தனது வண்டிக்கு வழி செய்யக் கூடவே போனார்.

லக்கியின் உதவியைப் பிடித்துக் கொண்டு நான் பாலபாரதி, வினையூக்கி, அதியமான் சேர்ந்த அரட்டையில் கலந்து கொண்டேன். சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும் படி லக்கி கலக்கிக் கொண்டிருந்தார். டியூப் வேலைக்காகாது என்று புதுசு போட்டு விட்டார்கள், 160 ரூபாயாம், அவ்வளவுக்குக் கையில் காசு இருக்கவில்லை. அதியமானிடம் நிதி திரட்டிப் பணம் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

அதியமானும், வினையூக்கியும், ஆழியூரானும், நானும் எங்காவது சாப்பிட்டு விட்டுத் தொடர முடிவு செய்தோம். கடற்கரைச் சாலையைத் தாண்டி வெளியே வரும் போதே வண்டி இன்னும் ஆடுவது போலப் பட்டது. பார்த்தால் முன் சக்கரத்திலும் ஓட்டை விழுந்திருக்கிறது. யாராவது வேண்டுமென்றே கிழித்திருப்பார்களோ என்று சந்தேகப் புத்திக்கு, 'ஒரு ஆணி முன்னால் குத்தி, அப்புறம் பின் சக்கரத்தையும் பதம் பார்த்திருக்கும்' என்று ஆழியூரான் சொன்னார்.

பத்தரை மணிக்கு மேல் பஞ்சர் கடையைத் தேடி, நண்பர்களின் உதவியோடு, அண்ணா சாலை பள்ளிவாசலின் அருகில் போய்ச் சேர்ந்தோம். இந்த டியூபும் வேலைக்காகது. அடுத்த 160 ரூபாய்கள். முன்பக்க டயரும் வழுக்கையாகி விட்டது என்று எச்சரித்தார்.

எதிரில் இருந்த புகாரி ஓட்டலின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்ததால் அங்குதான் சாப்பிடப் போகிறோமோ என்று நினைத்தால், அதன் அருகிலேயே அருந்த வசந்தபவன் வரவேற்றது. இட்லி, இன்னும் ஒரு பிளேட் இட்லி, இன்னும் ஒரு இட்லி என்று சாப்பிட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு முன்பனிக் குளிரில் நடுங்கிக் கொண்டே வீடு வந்து சேரும் போது நள்ளிரவு பன்னிரண்டு தாண்டி விட்டிருந்தது.

செவ்வாய், ஜனவரி 15, 2008

மொக்கை

நண்பர் ராமச்சந்திரன் உஷாவின் tagஐத் தொடர்ந்து







மொக்கை






சரிதானே!

வரவேற்கிறேன்!

http://fuelcellintamil.blogspot.com/

'தமிழில் அறிவியல் நுட்பம் சொல்லும் படைப்புகள் பெருக வேண்டும் என்ற நோக்கில்' நண்பர் ஆரம்பித்திருக்கும் இந்த வலைப்பதிவுக்கு வரவேற்புகள்.

வலைப்பதிவுகள் குறித்த தொழில்நுட்ப வேலைகள் ஒன்றிரண்டை செய்ததால் என் பெயரையும் பங்களிப்பாளராக சேர்த்திருக்கிறோம்.

திங்கள், டிசம்பர் 10, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள்

விபரங்கள் வினையூக்கியின் இந்தப் பதிவில்

செல்லாவின் நச் கவரேஜ்
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு
புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்!
நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து
புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!

அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தாவும், வினையூக்கியும் நானும் ஒன்பது மணி வாக்கில் (வாடகை) காரில் பாண்டிச்சேரி சற்குரு உணவகத்தை அடைந்தோம். சாப்பிடப் போகும் இடத்தில் முகுந்த், ஓசை செல்லா உட்கார்ந்திருந்த மேசையில் சேர்ந்து கொண்டோம்.

நல்ல திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமான பங்கேற்பாளர்கள்.

இரா சுகுமாரன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து உரை ஆற்ற, முகுந்த் தமிழ் எழுத்துருக்கள், e-கலப்பை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகுமாரன் குறள் மென்பொருளைக் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து தமிழ்99 முறையில் தட்டச்சிடுவது குறித்துப் பேச முனைவர் இளங்கோவன் வந்தார். அதில் என்னையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஆற்றொழுக்காகப் போயிருக்க வேண்டிய அந்த அறிமுகத்தில் என்னுடைய குறுக்கீடுகளும் சேர்ந்தன. வகுப்பறை போன்ற சூழல் உருவாகி விடக் கூடாது என்று முனைந்து கொஞ்சம் un-conference பாணியைக் கொண்டு வர முயன்றோம்.

இயங்கு தளங்களைக் குறித்த அமர்வின் முன்னுரையில் சூடான விவாதத்துக்கு ஒரு அடித்தளம் அமைந்து விட்டது. ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் கலகலப்பாக பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார். உபுண்டு லினக்சு பற்றிய அவரது 10 நிமிட ஆரம்பத்திற்கு அப்புறம் சூழல் பரபரப்பாக மாறி விட்டது. முகுந்த் 'மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று ஓரிரு நிமிடங்கள் மைக்ரோசாப்டு நிறுவனத்தின் பங்களிப்பையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு மேலும் அந்த அரசியல் தத்துவ விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று உபுண்டுவில் தமிழ் இடைமுகம், பயன்பாடுகள் என்று ராமதாஸ் இறங்கினார்.

அந்த அரை மணி நேர அமர்வின் இறுதியில் 'உபுண்டு குறுவட்டு, நிறுவும் விளக்கக் கையேடு அடங்கிய பொதியை விருப்பமிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு காணிக்கை போடலாம்' என்று அறிவித்தார் ராமதாஸ். அடுத்த சில நிமிடங்களிலேயே 50 பொதிகளும் ஆர்வலர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன.

இணையத்தில் தமிழ் இதழ்கள், இணையத் தமிழ் இதழ்கள், தமிழ் வலைத்தளங்கள் என்று ஒரு தொகுப்பை முனைவர் இளங்கோவன் வழங்க அத்துடன் உணவு இடைவேளை வந்தது. இலை போட்டு வடை பாயாசம், இனிப்புடன் சாப்பிட்டு விட்டு மதிய அமர்வுகள்.

பேராசிரியர் இளங்கோ வலைப்பதிவு என்றால் என்ன, எப்படி பிளாக்கர் மூலம் ஒரு கணக்கு ஆரம்பித்து பதிய ஆரம்பிக்கலாம் என்று கச்சிதமாக விளக்கினார். அவரது அமர்வின் ஆரம்பத்தில் 'கூடவே கணினியில் செய்முறை பயிற்சியும் ஆரம்பித்து விடலாமா' என்று நாங்கள் கேட்டது கொஞ்சம் அதிகப்படியாகப் போய் அவர் சூடாக பதிலளித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மக்கள் கணினிகளைச் சூழ்ந்து கொண்டு ஜிமெயில், பிளாக்கர், பதிவுகள் என்று அலையில் கால் நனைத்தார்கள்.

தொழில் நுட்ப அமர்வுகளாக, திரட்டிகளில் இணைத்தல், ஒலி ஒளி இடுகைகள், செய்தியோடைகள், வோர்ட்பிரஸ் பயன்பாடு என்று பலனுள்ள அமர்வுகள் தொடர்ந்தன.

மொத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பட்டறை. கல்லூரி தமிழ்த் துறை மாணவிகள், பேராசிரியை, தமிழ் ஆர்வலர்கள் என்று பல பெண்கள் மிக ஆர்வத்துடன் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் உருவாக்கி இணைய உலகிற்குள் அடி எடுத்து வைக்க வழி செய்து கொடுத்த நிகழ்ச்சி.

சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுவை நண்பர்கள், அருமையான அமர்வுகளை வழங்கிய இளங்கோவன், இளங்கோ, செறிவூட்டிய ஓசை செல்லா, முகுந்த், வினையூக்கி, நந்தகுமார், உபுண்டு ஆமாச்சு, நான் என்று நிறைவான ஒரு நாள்.

பின்குறிப்பு
கோவை, சென்னை, புதுவை - மூன்று பட்டறை கண்டவர்கள் என்ற சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மா சிவகுமார், வினையூக்கி மற்றும் முகுந்த். கழகங்களின் மேடைப் பேச்சாளர், இலக்கிய உலகின் பட்டிமன்ற பேச்சாளர் என்று வரிசையில் 'பட்டறை பேச்சாளர்' என்று ஒன்றை உருவாக்கும் காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.