திங்கள், ஜனவரி 28, 2008

கொடும்பாவங்கள்

காந்தி அடிகளின் சமாதியில் இப்படி எழுதப்பட்டுள்ளதாம்

ஏழு கொடும்பாவங்கள்
 1. உழைக்காமல் ஈட்டிய செல்வம்
 2. கட்டுப்பாடு இல்லாத நுகர்வு
 3. மனிதம் இல்லாத அறிவியல்
 4. பண்பாடு இல்லாத அறிவு
 5. கொள்கை இல்லாத அரசியல்
 6. நேர்மை இல்லாத வியாபாரம்
 7. தியாகம் இல்லாத வழிபாடு
??????????

பகல் கொள்ளையர் - ரிலையன்சு

நான் ஏன் ரிலையன்சு பொருட்கள்/ சேவைகளை வாங்குவதில்லை?

சந்தைப் பொருளாதாரத்தின் சாபக்கேடு, வணிக நிறுவனங்களும் அரசு நிர்வாகங்களும் கள்ள உறவு வைத்து கொண்டு வாடிக்கையாளர்களையும் பொது மக்களையும் ஏமாற்றுவதுதான்.
 1. 'சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் செல்பேசி சேவை வழங்குபவர்கள், குறிப்பிட்ட வட்டாரத்துக்கு வெளியே இணைப்பு கொடுக்கும் ஊர்மாற்று சேவை (roaming) அளிக்க அனுமதி கிடையாது' என்ற விதிக்குட்பட்டு உரிமம் வாங்கிய ரிலையன்சு நிறுவனம், அந்த விதிகளை மீறி நாடெங்கும் ஊர்மாற்று சேவை வழங்கியது.
  சில வாரங்களுக்குப் பிறகு அது முறையீட்டு அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும், தண்டத் தொகையாக சில நூறு கோடி ரூபாய்கள் கட்டி விட்டு அத்தகையை சேவையையே அனுமதிக்க வைத்து விட்டது ரிலையன்சு.
  இது போல விதியை உடைத்து, மற்ற போட்டியாளர்களை விட சிறப்பு திறன் பெற்றுக் கொள்வது ரிலையன்சுக்குப் பழகிப் போன ஒன்று.

 2. கிராமப் புறங்களில் தொலைதொடர்பு சேவை வழங்கும் பொறுப்புடைய பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மானியமாக தனியார் நிறுவனங்கள் ADC எனப்படும் இணைப்புக் குறைபாட்டுக் கட்டணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒரு அழைப்பு இந்தியாவுக்கு வந்தால் கணிசமான தொகை குறைபாட்டுக் கட்டணமாக பிஎஸ்என்எல்லுக்குப் போகும்.
  அதை உடைத்து, கள்ளத்தனமாக பிஎஸ்என்எல் வலையமைப்பையே பயன்படுத்தி, உள்ளூரிலிருந்தே இணைப்பு வருவதாக பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தது ரிலையன்சு நிறுவனம்.
  உண்மை அம்பலமானதும் தண்டம் கட்டி விட்டுத் தொடர்ந்து அந்த சட்ட விரோதச் செயலை செய்து வருகிறது.

 3. நெகிழித் தொழிலில் வேறு போட்டியாளர்களை ஒழித்து முற்றுரிமை (monopoly) பெற்று விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்போது முற்றுரிமையுடன் கொள்ளை ஆதாயம் சம்பாதிப்பதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர் தெரிவிக்கிறார்.

 4. சந்தைப் பொருளாதாரத்தில் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள், தம்மிடம் வந்து சேரும் செல்வம் சமூகம் முழுவதற்குமானது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பதவியில் நாம் இருப்பதால் நம்மிடம் வருகிறது என்று உணர்ந்து பொறுப்புடன் அதை மீண்டும் தொழில் வளர்ச்சிக்கோ, சமூக நலனுக்கோ பயன்படுத்த வேண்டும்.

  முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.
இப்படி தவறான வழிகளில் நிறுவனத்தை வளர்த்துத் தொழிலைப் பெருக்குவது, அப்படி அடாவடியாகப் பிடித்து சந்தை ஆதிக்கத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை பொறுப்பில்லாமல் செலவழிப்பது என்ற இரட்டைக் குற்றவாளியான ரிலையன்சு குழுமம் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்க வேண்டும். அது நடக்காமல் போவதால், என்னளவில் அந்தக் குழுமத்தைப் புறக்கணித்து வருகிறேன்.
 • ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை.
 • ரிலையன்சு ஃபிரஷ் கடைகளில் பொருள் வாங்குவதில்லை.
 • ரிலையன்சு தொலைபேசிச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
 • ரிலையன்சு இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
நெகிழித் துறையில் நாம் வாங்கும் பொருட்களில் பல ரிலையன்சுக்கு ஆதாயம் சேர்க்கின்றன என்பதை உணர்கிறேன். அவற்றின் முழு விபரமும் மாற்றும் கிடைத்தவுடன் அவற்றையும் புறக்கணிக்க ஆரம்பிப்பேன்.

ஞாயிறு, ஜனவரி 27, 2008

இப்படிச் செய்யலாமே!

 1. நாளிதழ் தினமும் படிப்பவர்கள் பழைய தாள்களை ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை பழைய விலைக்குப் போடுவது வழக்கம். அதை நேரடியாகச் செய்யாமல் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார அம்மா, அல்லது கட்டிடக்காவல்காரர் அல்லது அது போன்று அந்த நூறு ரூபாய்கள் பெரிதாகப் பயன்படுபவர்களிடம் கொடுத்து விற்றுக் கொள்ளச் சொல்லாமே!
 2. சமையல் வாயுவுக்கு அரசு ஒரு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய்களுக்கு மேல் மான்யம் வழங்குகிறதாம். அந்தக் கூடுதல் விலையைத் தாங்கிக் கொள்ள முடிந்த நாம் அரசு சமையல் வாயுவை புறக்கணித்து, அரசு நிறுவனங்களிடமிருந்து வணிக முறை இணைப்பையோ அல்லது தனியார் இணைப்பைப் பெற்றுப் பயன்படுத்தலாமே!
 3. பழைய பொருட்களை ஒழிக்கும் போது சட்டையோ, கால்சட்டையோ, பையோ, பாத்திரமோ ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படாமல் இருக்கிறது என்று பார்த்தால் அதைப் பயன்படுத்த முடிபவரிடம் கொடுத்து விடலாமே!

புதன், ஜனவரி 23, 2008

சீனா மனிதர்கள் மூலம் (வாங் ஷிங்)

சீனாவுக்குப் போனதும் யாரையும் பீடிக்கக் கூடிய ஒரு வியாதி உடனடி படிப்பறிவின்மை. அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள், தெருப்பெயர்கள் எங்கு பார்த்தாலும் சீன மொழி எழுத்துக்கள்தான் வரவேற்கும்.

மொழி கற்றுக் கொள்ளா விட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். வேலை எப்படி பார்ப்பது?

ஆறு மாத கல்லூரி வகுப்பில் சேர்ந்து மொழி அறிவைத் தேத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தால், எங்கள் நிறுவனத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். ஓய்வு நேரத்தில் கற்றுக் கொண்டால் போதும்.

கூட வேலை பார்த்த சீன நண்பர் யாராவது வார இறுதிகளில் வந்து கற்றுத் தர ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஒரு நாள், 'நம்ம அலுவலகத்தை பெருக்கி தூய்மை செய்ய வரும் அம்மாவின் மகள் உனக்கு சீன மொழி கற்றுத் தருவாளாம்' என்று சொல்ல வேடிக்கையாக இருந்தது.

வாரா வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளைகளில் 2 மணி நேரம் வகுப்பு. முதல் முதலில் சந்தித்த போது உருண்டை முகம், ச்சின்னக் கண்கள், உப்பிய கன்னங்கள், ஒல்லியான உருவம் என்று குழந்தைப் பொம்மை போல இருந்த அந்தப் பெண்ணா நமக்கு ஆசிரியர் என்று வியப்பாக இருந்தது.

சாங்காய் நார்மல் பல்கலைக் கழகம் என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாங் ஷிங் என்று பெயர். வாங் என்பது குடும்பப் பெயர் ஷிங் என்பது கூப்பிடும் பெயர். இது போதாது என்று சீனாவின் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்றையும் சூட்டி விடுகிறார்கள்.

'நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் பேர் கொடுத்தார்' எலன் என்ற பெயர். வெளி நாட்டினருக்கு வசதியாக அந்தப் பெயராம். சீனாவின் உலகமயமாக்கலுக்கு மக்களைத் தயார் செய்யும் போக்கு. நம்ம ஊரிலாவது கால் சென்டரில் வேலை செய்யப் போகிறவர்களுக்கு மட்டும்தான் மேல் நாட்டுப் பெயர். இங்கு எல்லா குழந்தைகளுக்குமா!

எனக்கு அத்தகைய ஆங்கிலப் பெயர்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். யாரையுமே அவர்களது சீனப் பெயராலேயே கூப்பிடுவது என்று உறுதி செய்து கொண்டேன்.

வார நாட்களுக்கு அலுவலகம் வருவது போல சனி, ஞாயிறிலும் காலையில் எழுந்து குளித்து, தரையடி ரயில் பிடித்து 9 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன். 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுவேன்.

'நாங்கெல்லாம் சாங்காய்னீஸ்' என்று பெருமை. 'சீனாவில் 95% ஹான் இனத்தவர்' என்று பாடத்தில் வரும் போது 'நானும் ஹான் இனம்தான்' என்று பெருமை.

1997ல் நான் அங்கு போய்ச் சேர்ந்திருந்த போதுதான் ஆங்காங் சீன ஆட்சியின் கீழ் வரும் நாள் வந்தது. அதற்கான கொண்டாட்டமாக சாங்காயின் மக்கள் மைதானத்தில் பெருங்கூட்டம் கூடியதாம். அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது, 'கூட்டத்துக்குப் பிறகு திரட்டிய குப்பையின் அளவு 30 டன்னாம். நாங்கல்லாம் வெட்கப்படணும்.' என்று கண்களை உருட்டிக் கொண்டு சொல்கிறார்.

சில மாதங்கள் வகுப்புக்குப் பிறகு ஒரு நாள், 'எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று ஆசிரியையும் அவர் அம்மாவும் சொன்னார்கள். 'சரி, போகலாமே' என்று தயார் செய்து கொண்டோம். அலுவலகம் இருக்கும் 20 மாடிக் கட்டிடப் பகுதிக்கு அருகில்தான், ஷான்ஷி தெற்கு தெருவில்தான் வீடு.

வாய்ஹாய் சாலை என்ற பணம் புரளும் சாலையை வெட்டிச் செல்லும் தெரு ஷான்ஷி தெற்குத் தெரு.

(தொடரலாம்)

செவ்வாய், ஜனவரி 15, 2008

மொக்கை

நண்பர் ராமச்சந்திரன் உஷாவின் tagஐத் தொடர்ந்துமொக்கை


சரிதானே!

வரவேற்கிறேன்!

http://fuelcellintamil.blogspot.com/

'தமிழில் அறிவியல் நுட்பம் சொல்லும் படைப்புகள் பெருக வேண்டும் என்ற நோக்கில்' நண்பர் ஆரம்பித்திருக்கும் இந்த வலைப்பதிவுக்கு வரவேற்புகள்.

வலைப்பதிவுகள் குறித்த தொழில்நுட்ப வேலைகள் ஒன்றிரண்டை செய்ததால் என் பெயரையும் பங்களிப்பாளராக சேர்த்திருக்கிறோம்.

ஞாயிறு, ஜனவரி 13, 2008

இந்து மதம்

தனிமனிதருக்கு அளவற்ற தன்னிச்சை கொடுக்கும் ஒரு அமைப்புதான் இந்து மதம். தம்மை வழிநடத்திக் கொள்ள பிடித்தமான வழிமுறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
 • கோயில்கள் கட்டி
 • அல்லது மூதாதையரின் நினைவுச் சின்னங்களை போற்றி
 • அல்லது பெரியவர் என்று மதிக்கும் மதத் தலைவர்களைப் பின்பற்றி
 • அல்லது தனியாக ஆராய்ந்து
 • அல்லது கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசி
வாழ்க்கை நடத்திக் கொள்ளலாம். இப்படி இருந்தால்தான் ஒருவர் இந்து என்று வரையறை கிடையாது.

சாதி அமைப்பு என்பது இந்து மதத்தைப் பிடித்த சொறிப் புண். உடலெங்கும் புண்ணாகி, குருதியெல்லாம் கிருமிகளாக 'இந்து மதமே அழிந்தால்தான் சாதி ஒழியும' என்று வெறுத்துக் கூறும் அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது.

'நாங்கெல்லாம் சாதி பார்ப்பதில்லை' என்று முற்போக்கு பேசும் மேல்தட்டு மக்கள் கூட தம் வீட்டுத் திருமணத்துக்கு இணை பார்க்கும் போது தமது சாதியையே தேடுகிறார்கள்.

'சாதியினால் விளைந்த அநீதிகளை சாதி மூலம் அணி திரள்வதன் மூலம்தான் சரி செய்ய முடியும்' என்று அதற்கான எதிர்வினைகள்.

நோய்க்கு மருந்து நோய்க்கிருமிகளிடமே இல்லை. இன்றைக்கும் சாதிக் கட்சிகள், திருமண விளம்பரங்களில் சாதி உட்பிரிவு உட்படக் குறிப்பிட்டு தேடுவதன் அடிப்படைக் காரணம், இந்து சமூகத்தின் கருத்து உருவாக்கிகள், தமது சாதி ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாததுதான்.

இப்படி தமது சாதிதான் பெரிது என்று பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தால் இந்து மதம் என்ற ஒன்று இல்லாமல் அழிந்து போகும். சடங்குகளும், ஏற்றத் தாழ்வுகளும், மொழி உயர்வு தாழ்வுகளும் இந்து மதம் இல்லை. அந்தப் புற அடையாளங்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் அப்புறம் அந்த அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள மதம் இல்லாமல் போய் விடும்.
 • 'மறுமுறை பிறந்தவர்கள், கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்கள்' என்று சொல்லும் சாத்திரங்களை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி, 'நானும் எல்லோரையும் போன்ற மனிதன்தான். நான் யாரை விடவும் குறைந்தவன் இல்லை, வேறு யாரும் என்னை விடக் குறைந்தவர்கள் இல்லை' என்ற பொதுமறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 • மக்கள் பேசும் மொழியில் புழங்காத மதத்தை எத்தனை சூலாயுதம் தாங்கிய கட்சி, வன்முறை அமைப்புகள் வந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது.
 • ஒவ்வொரு இந்துவும் சம உரிமையுடன் புழங்கும்படி மதம் சீர்திருந்த வேண்டும். கோயில்களில் யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம், கடவுளுக்கு வழிபாடு தமிழ் மொழியிலேயே நடைபெறலாம் என்ற நடை முறை வர வேண்டும்.
 • சாதி அடையாளங்களைக் காட்டும் புறச் சின்னங்களை அவமானமாக ஒதுக்க வேண்டும்.
 • அனைவராலும் செய்ய முடியாத, செய்யத் தேவையற்ற சடங்குகளை மதத்தின் பெயரால் ஒரு சாதியினர் மட்டும் செய்யக் கூடாது.

வியாழன், ஜனவரி 10, 2008

கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்

இப்போது இசுரேல் என்று சொல்லப்படும் பகுதி பாலஸ்தீனமாகவே இருந்து வந்தது.

சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல், அந்த நேரத்தில் ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியா பாலஸ்தீனத்தை பிரித்து ஒரு பகுதியை யூதர்களின் நாடாகவும், இன்னொரு பகுதியை பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தது. அதை ஐக்கிய நாட்டுச் சபையும் ஏற்றுக் கொண்டது. ஆனால், பெரும்பான்மையாக அங்கு வசித்த பாலஸ்தீனர்களும் பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த பிற அரபு நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக பரம்பரை பரம்பரையாக பாவித்து வந்த நிலத்தை விட்டுக் கொடுக்கும் வலியை விட பல மடங்கு பெரியது, தமது நிலத்தை/தொழிலை/வீட்டை யாருக்கோ சொந்த நாடு அமைக்க விட்டுக் கொடுப்பது. அதைத்தான் செய்யும் படி பாலஸ்தீனியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். உலகெங்கிலுமிருந்தும் யூதர்கள் இசுரேலுக்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டார்கள்.

அப்படி தமது நாட்டை இழந்த பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரபு நாடுகளுக்கும் இருக்கும் வலியும் கோபமும் புரிந்து கொள்ளக் கூடியதே.

அமெரிக்காவின் ஆதரவிலும் ஆயுதங்களினாலும் தமது மக்களின் வீரத்தினாலும் யூதர்களின் புதிய நாடு பாலஸ்தீனிய எதிர்ப்பை ஒடுக்கி வல்லானாக வாய்க்கால் வகுத்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டபகுதிகளைக் கூடப் பிடித்து வைத்துக் கொண்டு சொந்த ஊருக்குள்ளேயே அகதிகளாக மாற்றி விட்டிருக்கிறது.

பாலஸ்தீனமும் இந்தியா போல பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்சென்னை பகுதியை, பாகிஸ்தான் பிரிவினையால் நாடற்று போய் விட்ட சிந்திக்களுக்கு சொந்த மாநிலம் என்று தனியாகப் பிரித்து விட்டால் எப்படி இருக்கும். மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க இந்த இடமெல்லாம் பாவம் தமக்கென்று நாடு இல்லாத சிந்திக்களுக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டோம்' என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?

அதே கதைதான், இஸ்ரேலிலும் நடந்தது. யாருடைய நிலத்தை யாரோ எடுத்து யூதர்களுக்கு வழங்கி விட்டார்களாம். அதற்கு பரவலான பிரதிநிதித்துவம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் வேறு. கேட்க வேண்டிய அந்த ஊர் மக்களை யாரும் கேட்கவில்லை!

அன்றிலிருந்து அமெரிக்காவின் அடாவடியான இசுரேல் ஆதரவு போக்கால் உலகில் அமைதி குலைந்திருக்கிறது. தனது வணிக நலன்களுக்காக சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களது சர்வாதிகார ஆட்சிகளையும் தாங்கிப் பிடித்து வருகிறது. மக்கள் விருப்பப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் ஈராக், ஈரான் மட்டுமே. அந்த இரண்டுடன் அமெரிக்காவுக்கு ஆகாது.

எப்போ தீர்வு வரும்?

செவ்வாய், ஜனவரி 08, 2008

நல்லாரும் தீயாரும்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

-மூதுரை, ஔவையார்

கலைஞர்

போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.

அந்தத் தவறுக்கான விலை கலைஞரும் திமுகவும் கொடுத்து விட்டார்கள். அதே பாதையில் மதுரையில் கொலைக்கும் தயங்காத மு க அழகிரி குழுவினர், சென்னையிலிருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது என்று அந்த நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.

ஆரம்பத்திலிருந்தே கொள்கைகளையும் கட்சியையும், தொண்டர்களையும் தனது, தன் குடும்பத்து நலனுக்கு அவை எப்படி் உதவும் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கு அவற்றைக் கையாண்டு கொண்ட சராசரி அரசியல்வாதிதான் அவர் என்பது என்னுடைய புரிதல். அப்படிப்பட்ட ஒருவரை தமிழினத் தலைவர், ஒப்பற்ற அரசியல்வாதி என்று போற்றும் போது அரசியலின் தரம் தாழ்ந்து விடுகிறது.

தமிழகத்துக்கு தலைவராக இப்படிப்பட்ட ஒருவரை விடப் பல மடங்கு உயர்ந்த பலர் கிடைப்பார்கள். கிடைக்க வேண்டும். கைத்தடி முதலாளித்துவமான அரசியலையும் தொழிலையும் கலந்து தன்னை வளைப்படுத்திக் கொண்ட கீழ்த்தரமான அரசியல்தான் அவரது. ஜெயலலிதாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் கிடையாது கருணாநிதி. அவரது அரசியலால்தான் ஜெயலலிதா போன்றவர்கள் காலூன்ற முடிகிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ அவ்வளவு நன்மை தமிழகத்துக்கு.

ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.

தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.

நோய்கள்தாம் நமக்கு வரங்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் விடிவே இல்லை. பிணி தீர முதற்படி இப்படி ஒரு பிணி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வதுதானே. அதையே மறுத்துக் கொண்டிருந்தால் என்றைக்கு விடிவு?

'திமுகவின் ஆட்சி தமிழர்களின் நலன் விளையும் ஆட்சி. அதிமுக ஆட்சி சுயநல ஆட்சி' என்று பரவலான கருத்து உண்டு. அந்தக் கருத்தில்தான் எனக்கு மாறுபாடு. ஜெயலலிதா ஆளும் போது தமிழர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று விழிப்பாவது இருக்கும். திமுக ஆட்சியில் அது போய் ஒரு பொய்யான ஆறுதல் வந்து விடுகிறது.

எதிரிகளை விட துரோகிகள் அதிக தீமை செய்பவர்கள் என்ற வகையில் திமுக அரசு தமிழர் நலனை குழி தோண்டி புதைப்பதுதான்.
 1. ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியவில்லை. தனது பதவியும், குடும்ப நலனும் பெரிதாகப் போய் விட்டன. அதிமுக ஆட்சியில் வெளிப்படையான விரோதம் தெரிந்திருக்கும்.
 2. சட்ட ஒழுங்கு அடாவடி அரசியல் இன்னும் தொடர்கிறது. அதிமுக ஆட்சியில் இதைவிட மேலாக இருந்திருக்கும்.
 3. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடக்காமல் போயிருக்கலாம்.
 4. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதை நடக்க விடாமல் செய்தது இவர்கள்தான்.
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் தமிழர் நலன் பொறுத்த வரை பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே சொந்த நலனுக்காக பெரும் ஊழல் செய்பவர்கள். ஜனநாயக மரபுகளை மதிக்காதவர்கள்.

திமுக ஆட்சியில் அப்படி இல்லை என்ற பொய் உணர்வைப் பெறுவதால் நீண்ட கால நோக்கில் அது சமூகத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கிறது என்று நம்புகிறேன். நமது சமூகத்துக்கு இதுதான் தலைவிதி என்று கிடையாது.

சனி, ஜனவரி 05, 2008

கட்சிகளும் கடவுளரும்

'இப்படி இரண்டு பிள்ளைகளுக்கு அப்படி ஒரு அப்பா!' கடவுள் மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தாராம் எங்க தாத்தா. அவரது மகன்களான அப்பாவும் சரி, சித்தப்பாவும் சரி பெரிய பக்திமான்கள்.

'ஊரெல்லாம் எரிஞ்சுதாம், சீதை மட்டும் எரியலையாம் என்ன கதை!' என்று அவரது வசனம் ஒன்றும் நினைவிருக்கிறது. மற்றபடி எனக்கு விபரம் தெரிந்து அவருடன் பேச, விவாதிக்க முடியும் முன் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். 'தாத்தா திக காரர்' என்று அவ்வப்போது கேட்டதுண்டு.

அதன் எதிர்வினையோ என்னவோ அப்பா ஆன்மீகத்தில் முழு மூச்சாக ஆழ்ந்தவர். இதைத் தொட்டு அதைத் தொட்டு, ரமணர் முதல், ஓஷோ வரை, காந்தி முதல் அரவிந்தர் வரை எல்லோரையும் படித்துக் கொண்டிருப்பார். அந்த வழியில் தவிர்க்க முடியாத இந்துத்துவா நண்பர்களும் நிறைய உண்டு. அதன் தாக்கம் எங்கள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்து தேர்தல் பற்றிய பேச்சு, வீட்டில் ஒரு நாள் மாலை வேளை. 'இனிமேல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யாருன்னு கேட்டா என்னடே எழுதுவ' அப்பா அண்ணனை இப்படிக் கேட்க, 'எம்ஜிஆர்னு எழுதிடாதே, எதாவது சினிமாக் காரன் என்று ஆயிடும். எம்ஜிராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்.' எம்ஜிஆர் என்றால் சினிமாக்காரர், எம் ஜி ராமச்சந்திரன் என்றால் முதலமைச்சர்.

அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் ஊரில் தாத்தா வீட்டில் நின்றதாக நினைவு. தினமும் மாலையில் தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு பையன்கள் ஊர்வலமாக வருவார்கள் 'போடுங்கம்மா ஓட்டை, ரெட்டை எலையப் பார்த்தே!' என்று முழக்கம். அந்த ''விசிலடிச்சான் குஞ்சுகள்' 'சினிமா மயக்கத்தில்' கடுமையாக உழைத்திருக்கிறார்கள். 'அக்கா இரட்டை எலைக்குப் போட்டுடுங்க, அத்தே இரட்டை எலைக்கு போட்டுடுங்க' என்று பேசிக் கொண்டே துண்டு பிரசுரங்களைக் கையில் திணிப்பார்கள்.

'ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலையை விட்டுட்டுல்லா நிக்காராம்'. 'மக்கள் தொண்டாற்ற நான்கு இலக்கச் சம்பளத்தைத் துறந்து விட்டுத் தேர்தலுக்கு நிற்கும் அண்ணன் முத்து கிருஷ்ணனை மறந்து விடாதீர்கள்' என்று அதிமுக வேட்பாளரைப் பற்றிப் பேச்சு. இது 1980 தேர்தல் என்று நினைக்கிறேன். அவரை எதிர்த்து காங்கிரசின் சங்கரலிங்கம். பெரிய கல்லூரியின் தாளாளர். ஊரில் யாருக்கும் தலை வணங்கத் தேவை இல்லாத மனிதர். கடைசியில் இரட்டை இலைதான் வெற்றி பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் அதிமுக திமுகவுக்கு இடையிலான போட்டியில் திமுகவின் ரத்தினராஜ் வெற்றி பெற்றார். அவர் அம்மாவின் கூடப் படித்தவர் என்ற அபிமானத்தில் அவருக்கு ஓட்டு போட்டதாக அம்மா சொல்லிக் கொள்வார்கள்.

தமிழாசிரியரான அம்மாவுக்குக் கலைஞர் மீது தனி அபிமானம். 'எங்களை எல்லாம் ஏத்தி வச்சது அவர்தான். தமிழாசிரியர்களின் சம்பள விகிதங்களை உயர்த்திக் கொடுத்தது அவர்தானாம். ஆனால் அவரது கடவுள் மறுப்பு அரசியல் மீது அம்மாவுக்கும் வெறுப்பு உண்டு. அப்பாவின் சித்தி மகன்களில் ஒருவர் திக கடவுள் மறுப்பு புத்தகங்களைக் கொடுப்பார், இன்னொருவர் இந்துத்துவா அரசியலில் ஈடுபடுவார். இரண்டின் மீதும் சம அளவு வெறுப்பு அம்மாவுக்கு. எப்படியாவது பிள்ளைகளை அந்தத் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று நிறையத் திட்டு விழும்.

மஞ்ஞை வசந்தன் என்பவர் எழுதிய 'அர்த்தமற்ற இந்துமதம்' என்ற புத்தகத்தைப் படித்துதான் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்றே தெரியும். இந்துமதத்தை பொதுவாகவும், கண்ணதாசனின் கருத்துக்களை குறிப்பாகவும் மறுத்து எழுதப்பட்ட நூல் அது. இன்றைக்கு எந்தப் புத்தகக் கடையிலும் பார்க்க முடிவதில்லை. கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் அர்த்தமுள்ள இந்து மதம் இன்றும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அப்பாவுக்கு கலைஞர் மீது பயங்கர வெறுப்பு. 'பஞ்ச காலத்துல அரிசிய எல்லாம் கேரளாவுக்குக் கடத்திட்டான்க' என்று சாடை மாடையாகக் குறிப்பிடுவார். எம்ஜிஆரின் அரசியல் மீதும் பிடிப்பு கிடையாது. 'கோமாளி, நிலையான புத்தி கிடையாது' என்று கடுப்பு.

செவ்வாய், ஜனவரி 01, 2008

சாமி சிரிக்கும்

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்

- ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

சாதனைப் பதிவர் - காசி

சந்திப்பின் பின்னணி

திருப்பூருக்கு ஒரு தொழில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் போய்க் கொண்டிருந்தோம்.

தமிழ்மணம் குறித்துப் பேசும் போது அதை உருவாக்கிய காசி பற்றிச் சொல்லி இப்போது அவர் கோவையில்தான் தொழில் நடத்துகிறார் என்று சொன்னதும் வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனுக்கு ஆர்வம் வந்து விட்டது. 'சேவை செய்யும் கருவி உருவாக்கி விற்கிறார்' என்று அவரது உதவியாசிரியரிடம் சொல்லி ஒரு பேட்டி எடுத்து வர திட்டம் போட்டார்.

அப்படியே ஓசை செல்லாவுக்குத் தொலைபேசி காசியின் தொடர்பு எண்ணைக் கேட்டால், சிறிது நேரத்தில் காசியே அழைத்தார். வண்டி ஓட்டத்தில் இணைப்பு அறுந்து விட சரிவர பேச முடியாமல் துண்டித்துப் போனது.

திருப்பூர் வந்ததும் விடுதிக்கு அழைத்துப் போக வண்டிகள் ஏற்பாடு. விடுதியில் வந்து சேரும் போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. அங்கிருந்து தொலைபேசி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கோவையில் காசியை பேட்டி காண ஏற்பாடு செய்து கொண்டோம். வளர்தொழில் உதவி ஆசிரியர் முத்து பாண்டியுடன் நானும் போவதாகத் திட்டம் போட்டுக் கொண்டேன். எங்களது கருத்தரங்கம் மாலை நான்கு மணிக்குத்தான் என்பதால், காலையில் எட்டு மணிக்கெல்லாம் பேருந்து பிடித்து கோவை போய் பேசி விட்டு மதியம் இரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று திட்டம்.

பத்து மணி கோவையில் இருக்க வேண்டும் என்றால் எட்டரைக்கு பேருந்து ஏற வேண்டும், அதனால் ஏழே முக்கால் வாக்கில் கிளம்பி விடுவோம் என்று திட்டமிட்டிருந்தாலும் முத்துபாண்டியும் என்னைப் போலவே அதிகாலை சேவலாக இருக்க ஏழு மணிக்குப் பேருந்து நிலையம் வந்து விட்டோம். ஒரு தேநீரைக் குடித்து விட்டுப் பேருந்தில் ஏறினால், இழுத்து இழுத்து எட்டே முக்காலுக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. வழி நெடுக பத்திரிகை நடத்துவதில் இருக்கும் சிரமங்களையும் தடைகளையும் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார் முத்துப்பாண்டி.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அன்னபூர்ணா கவுரிசங்கரில் சாப்பிட்டு விட்டு தொலைபேசினால் காசியும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தனது வண்டியிலேயே வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அவர்களது விற்பனை அறைக்கு அழைத்துப் போனார்.

சந்தவை, சந்தகை என்று கொங்கு பகுதியில் அழைக்கப்படும், பொதுவாக மற்ற இடங்களில் சேவை என்று அறியப்பட்ட, சிலரால் இடியாப்பம், சேமியா என்று சொல்லப்படும் உணவு தயாரிக்கும் கருவி வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறார்.

ஏழு ஆண்டு திட்டமிடல்

பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்து அதற்கு மேல் பட்டம் பெற்று சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே பட்ட மேல்படிப்பு ஐஐடியில் முடித்து விட்டு கோவையில் ரூட்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து கொண்டிருந்தாராம். இளம் வயதிலேயே ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்று இன்று வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரை துடைக்கும் கைப்பிடியுடன் கூடிய mopஐ வடிவமைப்பதில் பெரும்பங்காற்றினாராம்.

தனியாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றி நண்பர்களுடன் விவாதித்து மூன்று நண்பர்களாக திட்டம் போட ஆரம்பித்தார்களாம். காசி, புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் உருவாக்கத்தில் வல்லவர், இன்னொரு நண்பர் திட்டங்கள் வகுத்தல், செயல்படுத்தலில் திறமை வாய்ந்தவர், மூன்றாமவர் நடைமுறைப் படுத்தலில் ஆர்வம் உள்ளவர்.

சேவை மேஜிக் என்ற இப்போது உருவாக்கியுள்ள கருவிக்கான எண்ணம் 1999ல் தோன்றியதாம். 2001ல் முதல் மாதிரியைச் செய்து பார்த்து இது சாத்தியமானதுதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் முதலீடு வேண்டும் என்பதை உணர்ந்து சில ஆண்டுகள் அதற்கான பணம் சேமிப்பதில் ஈடுபட்டு விட்டு தொழிலில் இறங்கலாம் என்று முடிவு செய்தார்களாம். வீட்டு பயன்பாட்டுப் பொருளாக விற்கப்படவுள்ள இந்த உருவாக்கத்திற்கான காப்புரிமையையும் அதற்குள் பெற்று விடலாம் என்று முடிவு செய்தார்களாம்.

2002ல் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களது வாடிக்கையாளரான ஜெராக்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க ஆராய்ச்சிப் பிரிவில் பொறியியல் சேவைப் பிரிவில் பணி புரிய போயிருக்கிறார் காசி. இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அது நீண்டு நீண்டு நான்கு ஆண்டுகளாக ஆகி விட்டது.

அந்த இடைக்காலத்தில்தான் தமிழ்மணம் உருவாகியிருக்கிறது. தமிழ்மணத்தின் சிறப்பும் வெற்றியும் எப்படி உருவாகின என்பதின் பின்னணியும் காசியுடன் பேசும் போதுதான் புரிந்தது. ஒரு தொழிலை உருவாக்க ஏழு ஆண்டுகளாக திட்டமிட்டுத் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அவரது அதே செய்நேர்த்தியும், சிந்தனை ஆழமும்தான் தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கியிருக்கிறது.

இப்படியே இருந்தால், அமெரிக்க, பெருநிறுவன சொகுசு வாழ்க்கையில் மூழ்கி நம்முடைய முதன்மை நோக்கத்தைக் கைவிட்டு விடுவோம் என்று விழித்துக் கொண்டு வேலையே விட முடிவு செய்து, 'வெளி நாடு போய் விட்டுத் திரும்புபவர்கள் ஆறு மாதங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்' என்ற டிசிஎஸ்ஸின் விதிமுறையையும் நிறைவு செய்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஹோம் (NuHom) என்ற தனியார் பங்கு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொருளும் சேவையும்

இரண்டு ஆண்டு உழைப்பின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு எங்களை வரவேற்றது.

ஒரு பக்கச் சந்தில் சிறிய அலுவலகம். வண்டியை நிறுத்தி விட்டு வெளிக்கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால்் அந்த பார்வை மையத்தில் பணி புரியும் பெண் பத்து மணிக்கு மேல்தான் வருவாராம். முன்னறையில் சமையல் அடுப்பு, சேவை மேஜிக் செய்முறைக்கான ஏற்பாடுகள் ஒரு புறம், பக்க வாட்டுச் சுவரில், செய்முறை குறும்படத்தைக் காட்ட ஒரு காட்சிப் பெட்டி,

உள்ளறையில் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்க உட்கார்ந்து பணி புரிய மேசை நாற்காலிகளும்.

'நேற்று ஒரு கண்காட்சிக்குப் போய் வந்தோம். எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டும் போனோம். அதான் எல்லாம் தாறுமாறா கிடக்கு' என்று சொல்லப்பட்ட இடத்திலேயே ஒழுங்கும் நேர்த்தியும் தெரியத்தான் செய்தது.

'என்ன காசி பெட்டியில் நிறங்களைக் காணவில்லை' என்று உள்ளே நுழைந்ததும் கண்ணில் பட்ட அட்டைப் பெட்டிகளைப் பார்த்துக் கேட்டேன். இன்னொரு பக்கம் தரையில் வண்ண மயமாக, கடையில் விற்பனைக்கு வைக்கக் கூடிய கவர்ச்சிகரமான பெட்டி வெளிப்புற வடிவமைப்புடன் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

எங்கிருந்து எடுத்தார் என்று நாம் கவனிக்கக் கூட தேவையில்லாமல் அவர் மேசை மீது ஒரு மாதிரி முளைத்து விட்டிருந்தது.

கீழ்ப் பாத்திரம் சாதாரண ஆறு லிட்டர் குக்கர்தான். கொஞ்சம் விளிம்பில் மாறுபாடுகள் உண்டு. அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதைக் குறிக்க ஒரு வரி போட்டிருக்கிறார்கள். இதை கீழ்ப் பாத்திரம் என்று அழைக்கிறார்.

அந்தப் பாத்திரத்தின் மூடியில் சிறப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இது நடுப் பாத்திரம். மாவை ஊற்றுவதற்கு ஒட்டாத பூச்சு பூசப்பட்ட உட்பகுதி. வெளிப் பகுதியில் உலோக முடி. உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு.

அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி மூடி அடுப்பில் வைத்து விட்டால் 25 நிமிடங்களில் மாவு வெந்து விடும். அதன் பிறகு மேல் பாத்திரமான நெகிழியில் (பிளாஸ்டிக்கில்) செய்யப்பட்ட மேல் பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டையும் போட்டு விட்டால், நீராவியின் அழுத்தத்திலேயே பிஸ்டன் தண்டு தள்ளப்பட்டு சேவை நடுப்பாத்திரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் அச்சின் வழியாக தள்ளப்பட்டு நெகிழி பாத்திரத்தில் சேர்ந்து விடுகிறது.

இத்தோடு நான்கு பேர் சாப்பிடும் அளவிலான சேவை தயார்.

நம்முடைய பாரம்பரிய உணவான சந்தவையின் செய்முறையை எளிமைப்படுத்தி வேலையைக் குறைத்து பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஆரம்பிக்கப் பட்ட முயற்சி இது.

இந்த உணவின் சிறப்பு இப்போது கொங்கு பகுதிகளில் மட்டும்தான் தெரிகிறது. ஆனால் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சேவை நாழிகள் முயற்சித்த எல்லோரையும் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போல அதிக நேரம் வீணாகாமல், பிசுபிசுப்பு இல்லாமல், துருப்பிடித்து விடாமல், எந்திர இணைப்புகள் இல்லாமல் கிடைக்கும் கருவி, சேவையை அன்றாடம், வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்யப்படும் உணவாக ஆக்கி விடலாம்.

இரண்டு நிமிட நூடுல்ஸின் கெடுதல்கள் என்று குங்குமத்தில் வந்த கட்டுரையை பெரிதாக நகலெடுத்து வைத்திருக்கிறார். குழந்தைகள் தொலைக்காட்சியால் மூளைச் சலவை செய்யப்பட்டும், வேலை குறைவு என்று பெற்றோர்களும் 2 நிமிட மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த அதைப் பார்க்கும் மற்றக் குழந்தைகளும் அதையே கேட்க தினமும் அதையே சாப்பிடும் போக்கு கூட வந்து விட்டது.

அதிலிருந்து ஆரம்பித்து, நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே விடை கண்டிருந்தார். இன்னும் நமக்குத் தோன்றாத நூற்றுக் கணக்கான நுணுக்கங்களையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
ஏன் சேவை என்று பெயர் வைத்தோம், ஏன் காப்புரிமை கிடைக்கும் வரை காத்திருந்தோம் என்றெல்லாம் ஒவ்வொன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூடியின் மேல், Important:Read Instructions Before Use என்ற பாதுகாப்பு எச்சரிக்கையை 'ஆங்கிலம் தெரியாத நமது இல்லத் தலைவிகள் எப்படி படிக்க முடியும்' என்று, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் கொடுத்திருக்கிறார்கள்.

கீழ்ப் பாத்திரத்தின் பக்கவாட்டில் செயல்முறை விளக்கப்பட வரிசை ஒன்றையும் பொறித்திருக்கிறார்கள். ஒரு வேளை மற்ற விளக்கங்களை பார்க்காத, அல்லது மறந்து விட்ட ஒருவருக்கும் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்று.

ஆறு லிட்டர் குக்கர் கடையில் ஆயிரத்து இருநூறு ரூபாய்களுக்குக் கிடைக்கிறதாம். இந்த புதிய கருவியின் விலை இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுதானாம். தேடித் தேடி செலவுகளையும் இழுத்துப் பிடித்து ஆகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறார்கள். இன்னும் உற்பத்தி அளவு அதிகமாகும் போது விலை குறையலாம்.

உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்துள்ளது.

சந்தைப்படுத்துதல்
 • ஆரம்பத்தில் வீடு வீடாகப் போய் விற்கும் முறையைப் பின்பற்றினார்களாம். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று முயன்று பார்க்கக் கொடுப்பதில் ஆரம்பித்து அவர்களது தொடர்புகளுக்கும் விற்பதை செய்திருக்கிறார்கள்.
 • அந்த முறையில் நிறைய உழைப்பும் செலவும் தேவைப்படுவதைப் பார்த்து செயல் விளக்கத் திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அதை குறுவட்டில் பதித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுத்து விடுகிறார்களாம்.
 • மல்லிகா பத்ரிநாத்தை அணுகி முப்பது வகை சேவை சமையல் என்று ஒரு கையேடு எழுதித் தரச் சொல்லி அதையும் இலவசமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
 • கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான விளக்கக் கையேடும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தயாரித்திருக்கிறார்கள். அதையும் வடிவமைத்து, எழுதி உருவாக்கியவர் காசிதானாம்.
 • பாத்திரக் கடையில் அடுக்கி வைத்திருந்தால் பார்க்க பளிச்சென்று தெரிய வேண்டும் என்று மஞ்சள் நிறத்தில் அட்டைப் பெட்டி வடிவமைப்பு.
 • குடும்பப் பாங்கான முகம் வேண்டும் என்று பளபளப்பான நடிகைகளைத் தவிர்த்து பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகையை விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள்.
 • 2750 ரூபாய்களுக்கு கருவியை வாங்கி விட்டு சேவை செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு நடு மேல் பாத்திரங்களை பயன்படுத்தாமல் தனியாக விற்கும் இன்னொரு மூடியை (+200) வாங்கிப் பொருத்தி சாதாரண உயர் அழுத்தக் கலனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் குக்கருடன் இன்னொன்று கூடுதல் வசதிக்காக.
திட்டங்கள்
 • இப்போது மாதம் 500 எண்ணிக்கை தயாரிக்கும் உற்பத்தித் திறனை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். கூடவே விற்பனைக்கான முகவர்களையும் ஒவ்வொருவராக நியமிக்க வேண்டும்.
 • சந்தைப்படுத்தலில் வல்லவராக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் இன்னும் வேகமாகச் செய்யலாம். இன்னொரு பங்குதாரர் உற்பத்தி சம்பந்தமான பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம்.
 • அரிசி மாவில் மட்டுமின்றி ராகி, கோதுமை மாவுகளிலும் சேவை செய்யலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
சில ஆலோசனைகள்
 • இதற்கு இன்னும் சில கூட்டல்கள் வேண்டும். தோசை இட்லி மாவுகளே கடையில் அரைத்துக் கிடைக்கும் இந்தக் காலத்தில் புழுங்கலரிசியை அரைத்து மாவாக்கி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மனத்தடை. ஆரம்ப காலத்தில் நியூ ஹோம் நிறுவனமே வேறு யாரிடமாவது இணைந்து அரைத்த புழுங்கலரிசி மாவையும் பொதிந்து விற்கலாம்.
 • சேவை செய்த பிறகு பல்வேறு சுவைகளில் அதை தாளிப்பதற்கான கலவைகளும் தயாரிக்கப்பட வேண்டும். எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, புளி சேவை, தக்காளி சேவை என்று பல முயற்சித்து பார்க்கலாம். மேகி நூடில்சில் கொடுப்பது போல முன்தயாரிப்பாக இந்த சுவைப் பொதிகளும் தனியாக விற்கப்பட்டால் சேவை செய்து சாப்பிடுவதற்கான இன்னொரு மனத்தடை விலகலாம்.
பரவலாக தீவிரமாக பிரபலப்படுத்தப்பட்டு, உற்பத்தி, வினியோகம், சந்தைப்படுத்துதல் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அரிசி உண்ணும் சமூகங்களான தென் சீனா, வியட்நாம், தென்கிழக்காசிய நாடுகள் என்று ஆரம்பித்து இத்தாலிய பிட்சாவும், நூடுல்சும் சாப்பிடும் அகில உலகுக்கும் பரவ வாய்ப்பிருக்கும் ஒரு கண்டுபிடிப்பு இது.

அதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டி தகுந்த ஆட்களை வேலைக்கு வைத்து, திறம்படச் செயல்பட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்க நகரங்களிலும், ஆஸ்திரேலிய நகரங்களிலும் சேவை உணவு விடுதிகள் பரவும் நிலை வந்து விடலாம்.