தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 08, 2019

மோடியின் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து நிற்கும் "விவேகம்"


விவேகம்  - Reason
நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான போர்
ஒரு ஆனந்த் பட்வர்தன் - திரைப்படம்
8 பகுதி ஆவணப்படம் (240 நிமிடங்கள், வண்ணப்படம், 2018)


2013 முதல் நம் நாட்டில் நடக்கும் பல்வேறு அரசியல் மாற்றங்களை எப்படி தொகுத்து சொல்லலாம்? மகாராஷ்டிராவின் தாராளவாத/ஜனநாயக படைப்பாளியின் பார்வையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் என்னவாக தெரிகின்றன?

ஆனந்த் பட்வர்தனின் 2018 ஆவணத் திரைப்படம் Reason இந்தக் கேள்விகளுக்கான விடையை தருகிறது. 8 பகுதிகளாக மொத்தம் 4 மணி நேரம் ஓடும் படம்.

Reason என்பது மராத்திய மொழியில் விவேக் என்பதன் மொழிமாற்றம், தமிழில் விவேகம் என்று மொழிபெயர்க்க வேண்டும். 

நரேந்திர தாபோல்கரில் தொடங்கி கவுரி லங்கேஷ் வரை மகாராஷ்டிராவில் புனே, கோலாப்பூர், குஜராத்தில் ஊனா, உ.பியில் தாத்ரி, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகம், கோவாவின் ராம்னாதி கிராமத்தில் மக்கள் மத்தியில் மர்மமாக இயங்கும் சனாதன் சன்ஸ்தாவின் ஆசிரமம் என்று பயணிக்கிறது இந்தக் கதை.

மோடி ஆட்சிக்கு வருவது, ரோகித் வெமுலாவின் தற்கொலை, கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு, அக்லக் படுகொலை, ஜிக்னேஷ் மேவானி, சிவாஜி, சாவார்க்கர், காந்தி, கோட்சே, மாலேகான் குண்டு வெடிப்பு, மும்பை பயங்கரவாத தாக்குதல், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி என்று பல டஜன் இழைகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் பிணைத்து நெய்திருக்கும் திரைக்கதை. மகாராஷ்டிராவில் மராட்டா, குஜராத்தில் தலித்துகள், பீகாரைச் சேர்ந்த ஒரு பூமிகார், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், சனாதன் சன்ஸ்தாவின் ஜெயந்த் அத்வாலே என்று சாதியக் கட்டமைவு பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட
பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தாபோல்கர்
ஊடகங்கள், அர்னாப் கோஸ்வாமி, கல்வி தனியார் மயம் என்ற வகையில் கார்ப்பரேட் அரசியலும் எட்டிப் பார்க்கிறது. மைய இழையில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அது மறைக்கப்படவோ, மறக்கப்படவோ இல்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோவியத் யூனியன், அமெரிக்கா என்று உலகளாவிய ஏகாதிபத்திய அரசியலையும் படம் தொட்டுச் செல்கிறது.

நரேந்திர தாபோல்கரும், கோவிந்த் பன்சாரேவும் மகத்தான மனிதர்களாக நம் மனத்திரையில் உருவெடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவின் போராட்டமும், கன்னையா குமாரின் எதிர்ப்பும் உயிர் பெற்று திரையில் ஓடுகின்றன. ஆர்.எஸ்.எஸ், சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத், பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற சங்க பரிவார அமைப்புகளின் அதிகொடூர செயல்பாடுகளும், திட்டங்களும், பிரச்சாரங்களும் திரையில் நிஜமாக உருவெடுக்கின்றன. ஊனா, தாத்ரி, ஜம்மு, ராஜஸ்தான் என்று சனாதன பயங்கரவாதிகளுக்கு போலீஸ் துணை நிற்கிறது.

நிழல் வேலைகள் நடக்கும் சனாதன் சன்ஸ்தா ஆசிரமம்
ஆயிரக்கணக்கான காக்கி-வெள்ளை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முன் மோகன் பாகவத் உரையாற்றுகிறார். வீர சாவார்க்கருக்கு நாடாளுமன்றத்தில் உருவப் படம் திறக்கப்படுகிறது. அதைச் செய்பவர்கள் வாஜ்பாயியும், அப்துல் கலாமும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தோற்றம் பற்றியும், அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடாதவர்கள் பற்றியும் படம் பேசுகிறது. அந்தமான் சிறைக்குப் போன சாவார்க்கர் 5 முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்து சாம்ராஜ்யத்துக்கு விசுவாசமாக சேவை செய்ய முன்வந்து வெளியில் வந்தவர். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடாமல் இந்து மகாசபா, முஸ்லீம் வெறுப்பு என்று அரசியல் செய்தார். காந்தியை கொலை செய்ய சதித்திட்ட வழக்கில் முதல் குற்றவாளி. சில விபரங்களின் போதாமை காரணமாக விடுவிக்கப்பட்டார். கோட்ஸே இந்து மகாசபாவைச் சேர்ந்தவர் என்கின்றனர் சங்கிகள். ஆனால், இந்து மகாசபாவின் நிறுவனர் சாவார்க்கரின் உருவப்படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்துக்கு நேர் எதிரே திறக்கின்றனர்.

சனாதன் சன்ஸ்தா தலைமை சாமியார்
ஜெயந்த் அதவாலே
இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கிறோம், மனு சாஸ்திரம்தான் நமது அரசியல் சட்டம். பசுவை புனிதமாக கும்பிட வேண்டும், அயோத்தியில் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட வேண்டும், இந்தியாவில் வாழ வேண்டுமானால் வந்தே மாதரம் சொல்ல வேண்டும், காஷ்மீர் எங்களுக்கே என்று சூத்திரங்களை கொள்கைகளாக வைத்திருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நிழலில், அதன் பெயரில் ஹேமந்த் கர்கரே திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத கொலையாளிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுகின்றனர். பங்கஜ் நிகிலியானியும், கஜேந்திர சவுகானும் தணிக்கைத் துறை தலைவராக, திரைப்படக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகின்றனர்.

குஜராத்தில் ஊனா வன்கொடுமையை தொடர்ந்து செத்த மாட்டை புதைக்க மாட்டோம் என்று தலித்துகள் போராடுகின்றனர். ஆகஸ்ட் 15 அன்று சுயமரியாதை, சுயகௌரவ உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்கள் மீது ஆதிக்க சாதியினரின் தாக்குதல் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் நினைவாக இந்தியா கேட்-ல் மெழுகுவர்த்தி ஏற்ற வந்தவர்களை போலீஸ் குண்டுகட்டாக தூக்கிச் செல்கிறது.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்
கவுரி லங்கேஷ்
தாபோல்கரும், கோவிந்த பன்சாரேவும் தமது வாழ்வை உழைக்கும் மக்களுக்காக, பகுத்தறிவுக்காக, சரியானதற்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான இளங்குருத்துக்கள் முளைக்கின்றன. ராம்னாதி கிராம மக்கள் சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தை எதிர்த்து கூட்டம் போடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமார், கோவிந்த் பன்சாரே, காங்கிரஸ்-ஐ சார்ந்திருக்கும் ஜிக்னேஷ் மேவானி வருகிறார். ஹார்திக் பட்டேல் வரவில்லை. யாகூப் மேமனின் நியாயம் பேசப்படுகிறது, அப்சல் குருவின் நியாயம் பேசப்படுகிறது. மரண தண்டனைக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு என்கிறார். இறைச்சி உணவு, அது மாட்டிறைச்சியாக இருந்தாலும் சரி, கோழி இறைச்சியாக இருந்தாலும் சரி தவிர்ப்பது நல்லது என்கிறார். பீமா கோராகான் பற்றி எதுவும் பேசப்படவில்லை. மும்பையின் தாராவி பற்றி பேசப்படவில்லை. பேராசிரியர் சாய்பாபா பற்றி, சுதா பரத்வாஜ் பற்றி, ஆனந்த் தெல்டும்டே பற்றி எதுவும் பேசப்படவில்லை. குஜராத்தில் இறைச்சி சாப்பிடுவதற்குக் கூட தனி பகுதிக்குத்தான் போக வேண்டும் என்பதைப் பற்றி கேட்ட இளைஞருக்கு ஆனந்திடம் பதில் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்த் பன்சாரேவும்,
(மதவாத எதிர்ப்புக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்)
அவரது மனைவியும்
ஆனந்த் பட்வர்தன் சொல்லும் அரசியல் என்ன?

'இந்து மதம் வேறு இந்துத்துவா வேறு. இந்து மதத்தில் சாதியை ஒழிக்கா விட்டால் இந்து மதத்தையே நிராகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி இந்துத்துவத்தை எதிர்த்தவர். காங்கிரஸ் அமைத்த ஓஷிவாரா ரயில் நிலையத்தின் பெயரை ராம் மந்திர் என்று பா.ஜ.க அரசு மாற்றுகிறது.

பாகிஸ்தானும் இந்தியாவைப் போல மதச்சார்பற்ற நாடாகத்தான் தோன்றியது. 1980-ல் தொடங்கி ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக ரீகனின் அமெரிக்கா, பாகிஸ்தானில் ஜிகாதி இசுலாமிய தீவிரவாதத்தை வளர்த்து விட்டது. அப்போது ஜியா உல் ஹக் பாகிஸ்தானை இசுலாமிய குடியரசு என்று மாற்றி விட்டார். நாம் அந்த பாதையில் போக வேண்டும் என்று சொன்னால் இந்து ராஷ்டிரம் என்று பேசுங்கள். நான் அப்படி சொல்லவில்லை, மதச் சார்பற்ற விவேகத்தின் அடிப்படையிலான நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'

ஒரு மாணவர் ஏன் இந்துக்களை மட்டும் மோசமாக காட்டுகிறீர்கள் என்று ஆரம்பித்து காஷ்மீர், ஹஜ் மானியம், இந்து நாடு என்று கேள்விகள் கேட்டார். அந்தக் கேள்விகளை ஊக்குவித்து பதில் சொன்னார், ஆனந்த். இன்னொரு பெருசு மாட்டிறைச்சிதான் புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். ஊடகங்களில் கன்னையா குமார், ரோகித் வெமுலா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதும் அதற்கு யாகூப் மேமன், அப்சல் குருவைப் பற்றி விளக்கம் அளித்தார்.

அறிவுத்துறையினர் மத்தியில் பரவலாகக் கொண்டு போய் போதுமான ஆதரவு கிடைத்த பிறகுதான் படத்தை பரவலாக வெளியிட முடியும். தமிழில் மாற்றுவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும். ஆனால், அதை ஒரு திரையிடும் இயக்கமாகக் கொண்டு செல்லும் ஒரு டீம் வேண்டும். இல்லை என்றால் முயற்சி வீணாகப் போய் விடும்.

இன்றைய காலத்துக்கு தேவையான, அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய கலைப் படைப்பு இது. ஆனந்த் பட்வர்தன் போன்ற படைப்பாளிகள் இருக்கும்வரை ஜனநாயகமும், பகுத்தறிவும் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கும்!

சனாதன் சன்ஸ்தா பற்றிய விளக்கமான ஆங்கிலக் கட்டுரை (படங்களுடன்)

செவ்வாய், ஜனவரி 31, 2012

தட்டச்சும் திறன்


10ம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையின் போது ஆங்கிலத் தட்டச்சு கற்றுக் கொள்ளப் போனோம். வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் போய் நகரத்தின் மையத்தில் இருக்கும் தட்டச்சு பயிற்றுப் பள்ளியில் படிக்க வேண்டும். asdf lkjh என்று அடிப்பதுதான் முதல் பாடம். இதை ஒரு பக்கம் முழுவதும் அடிக்க வேண்டும். இரண்டு எழுத்து வரிசைகளுக்கும் இடையே இடைவெளி, ஒரு வரி முடிந்த உடன் அடுத்த வரிக்குப் போகும் திருப்பு விசையை அழுத்துவது போன்றவற்றை சரியாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

முதல் நாள் அடித்த தாளைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், 'இது என்ன கோழி பீ கிண்டி வைத்தது போல இருக்கிறது' என்று கமென்ட் அடித்தார். புதிதாக வருபவர்களிடம் அவர் அடிக்கும் வாடிக்கையான கமென்ட் என்று இப்போது தெரிந்தாலும், அந்த தாளில் எழுத்துக்கள் அப்படித்தான் கோழி கிண்டி வைத்த பீ போல சிதறியிருந்தன.

அந்த ஒழுங்கு கை வந்த பிறகு அடுத்தடுத்த எழுத்து வரிசைகள், எழுத்துக்களின் மொழி ரீதியான சேர்க்கைகள் என்று பயிற்சி. ஒரு கட்டத்தில் abcdef என்று அடிப்பது ஆரம்பித்தது. மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களை அடிக்க இடது அல்லது வலது புறம் இருக்கும் ஒரு விசையை அழுத்திக் கொண்டு எழுத்தை அழுத்த வேண்டும். தொடர்ந்து மேல் வரிசை எழுத்துக்களை அடிக்க அதே விசையை அழுத்தி இடது புறமாக தள்ளி பூட்டி விட முடியும். அனைத்துமே இயந்திரவியல் அடிப்படையில் உருவான கருவி.

எழுத்துக்களின் இடம், விரல் பயன்பாடு மனதில் பதிந்த பிறகு முதலில் ஆரம்பித்த மெஷினிலிருந்து மாறி இன்னொரு மெஷினில் பழக ஆரம்பித்தோம். முதல் மெசின் பழசாகி விட்ட இது போன்று கத்துக்குட்டிகள் பழக்கமில்லாத விரல்களால் அழுத்தி அழுத்தி விசைகள் கெட்டித்துப் போயிருப்பது. இந்த மெஷின் பழக்கப்பட்டவர்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தியது.

சிறு சிறு உரைகள் அடிக்க ஆரம்பித்தோம். அதிலிருந்து வளர்ந்து கடிதம் எழுதுதல் வரை வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருட பயிற்சிக்குப் கீழ்நிலை தேர்வுக்குப் போகச் சொன்னார்கள். எஸ்எல்பி பள்ளியில் ஒரு கூடத்தில் தேர்வு. காலையில் முதலில் வேகத்துக்கான தேர்வு. குறிப்பிட்ட பத்தியை வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூடவே தேர்வு எழுத வந்திருந்த அண்ணன், நேரம் ஆரம்பித்த உடன் ஏற்படும் பெரு ஓசையைக் கண்டு திகைத்து விடக் கூடாது என்று எச்சரித்திருந்தான். அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் வந்த சத்தம் அது வரை கற்பனை செய்திருக்காததாக இருந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த எந்திரத்தில் ஒரு விசை சிக்குவதாக இருந்தது. பழகும் போது அதை பெரிய குறையாக புகாராக சொல்லவில்லை. தேர்வில் அந்த சிக்கிய எழுத்தில்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதை வெளியில் வந்து சொன்ன பிறகு யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு மேல்நிலை தேர்வுக்குப் படித்ததாக நினைவில்லை. கீழ்நிலை அல்லது லோயர் தேர்வில் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் அடிக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கிடைக்கும். மேல்நிலை தேர்வு எழுதினால் 45 சொற்கள் அடிக்கும் தேர்ச்சி வந்திருக்க வேண்டும்.

இது ஆங்கிலத்தில், எந்திரத் தட்டச்சுக் கருவியில். ஆங்கிலத்தில் கணினியில் இதை விட கணிசமான அளவு அதிக வேகத்தில் அடித்திருக்க முடியும். அப்படி கணிசமான அளவு அடிக்க வேண்டிய வாய்ப்பு கணினியில் ஏற்படவே இல்லை. அலுவலகத்தில் சிறு சிறு கடிதங்கள், பெரும்பாலும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி விடக் கூடியவை அடிக்க வேண்டியிருந்தது.

டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கு விற்பனைப் பிரிவில் இருந்த கணினியில் இந்த கடிதங்கள் அடிக்கும் வேலை கூட எனக்குக் கிடைக்கவில்லை. நிறுவன மென்பொருளுக்கான சர்வருக்கான முனையத்தில் தரவு உள்ளிடும் சிறு சிறு வேலைகள் செய்தேன். லோட்டஸ் 1,2,3 பயன்பாட்டைப் பயன்படுத்தவும் செய்தேன்.

கடிதங்கள் அடிப்பதற்கு முன்னாள் தட்டச்சு எழுத்தர் பெண்மணி இருந்தார். வேகமாக தரவு உள்ளிடுவதற்கு கணினி துறையிலேயே ஓரிருவர் இருந்தார்கள். விற்பனைக்குப் பொதிந்து தயாராகும் தோல்களைப் பற்றிய  அளவைகளை உள்ளிடும் போது அவர்கள் விரல்கள் நம்புவதற்கு அரிதான வேகத்தில் நடனமாடி முடித்து விடும். அவர்கள் நியூமரிக் பேட் எனப்பட்ட எண் பட்டியை மட்டும் பயன்படுத்துவார்கள். அவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தட்டுத் தடுமாறிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த தலைமுறை கணினியாக விண்டோசு 95 போட்டு ஒரு கணினி வந்தது. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் பிரிவுக்கான கையேடு தயாரிக்கும் பணி எனக்கு வந்தது. அந்தக் கணினி மிகவும் மெதுவாக இயங்கும். ஒரு பக்கம் அடிப்பதற்கு ஒரு மணி நேரம்  வரை கூட பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். மைக்ரோசாப்டு வேர்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஆன நேரம் ஒரு பக்கம், விண்டோஸ் 95க்குத் தேவையான நினைவகம், செயலகம் இல்லாததாலும் கணினி தள்ளாடியிருக்கலாம். எப்படியோ, சில நூறு பக்கங்களுக்கு வரும் அந்த மேனுவலை அடித்துத் திருத்தி மாற்றி முடிப்பதற்கு பல இரவுகள் வேலை செய்திருந்தேன். கணினியில் தட்டச்சுவதிலும், கணினி பயன்படுத்துவதிலும் சரளமான வேகம் வந்து விட்டிருந்தது.

இப்போதும் எண் பட்டியில் எண்களை உள்ளிடுவதில் தோல் பொதியும் பிரிவில் இருப்பவருடன் ஒப்பிடும் அளவு கூட தேர்ச்சி வந்ததில்லை.
(அதே போல உற்பத்தி தளத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியதேயில்லை. மேலாளர்கள் அப்படி தொழிலாளர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்க்க ஊக்குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இதற்கு முன்பு அது போன்று இயந்திரங்களை இயக்கித் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றி உயர்வாக பாராட்டியும் சொல்வார்கள்.

எளிதாக இயங்கும் எல்லா வேலைகளையும் என் கைப்பட செய்திருக்கிறேன். வேகமாக நகரும் பட்டியின் கீழ் லாவகமாக தோலை நுழைத்து மெருகூட்டும் பணியில் கடைசி வரை கை வைக்கவில்லை. கொஞ்சம் தவறு செய்தால் கை விரல்கள் நசுங்கி விடும் அபாயம், அப்படி நசுங்கா விட்டாலும் அந்த வேகமாக நகரும் கரத்தைப் பார்க்கும் போதே பயம் ஏற்பட்டு விடும். அதையும் கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. )

அதன் பிறகு ஷாங்காயில் கணினி வாங்கிய பிறகு நிறைய தட்டச்சி பழகினேன். முரசு அஞ்சல் மூலம் தமிங்கில தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டேன். தமிழ் 99 விசைப்பலகைக்கு முன்பே இதைக் கற்றுக் கொண்டதால் என்னை பிற்போக்கு வாதி என்று கருத முடியாது. தமிழ் 99 வந்த பிறகு சுமார் 8 ஆண்டுகள் அதிலேயே பழகியதை வேண்டுமானால் தாமதம் சொல்லலாம். ஆனால், கணினி நுட்பங்களில் புதிய தகுதரங்கள் நடைமுறைக்கு வருவதிலும் கணிசமான நேரம் பிடிக்கத்தான் செய்கின்றன.

தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும். எழுத்துருக்களுக்கான தகுதரம் தனி, விசைப்பலகைகளுக்கான தகுதரம் தனி. எழுத்துருக்களுக்கு டிஸ்கி, டேப், யூனிகோடு என்று தகுதரங்கள். விசைப்பலகைக்கான தகுதரங்கள் எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று வரையறுப்பவை.

கணினிக்கு முன்பே தமிழ் தட்டச்சு முறைக்கான தகுதரம் ஒன்று இருந்தது. நான் அதைக் கற்றுக் கொண்டதில்லை, அது யளனகப என்று வரும் என்று நினைவு. அதில் பழகியவர்கள் அப்படியே கணினியிலும் பயன்படுத்தும்படி மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.

அப்படி தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்காக உருவானதுதான் அஞ்சல் அல்லது phonetic முறை. இதில் தமிங்கில எழுத்துக் கூட்டல் முறையில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடலாம். ammaa என்று அடித்தால் அம்மா என்று புரிந்து கொள்ளும் விசைப் பலகை தகுதரங்கள் உருவாயின. இவற்றில் சிறு சிறு மாறுதல்களுடன் பல வகைகள் கிடைத்தன.

ந என்ற எழுத்துக்கு எந்த விசை, ண அடிப்பது எப்படி, நெடிலுக்கான முறை, ஒற்றெழுத்துக்களை உள்ளிடுதல், இரட்டை எழுத்துக்களை உள்ளிடுத்தல் என்று பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது.

இந்த தொந்தரவு எதுவும் இல்லாமல், தமிழுக்கு இயல்பான விசைப்பலகை வடிவமைப்புதான் தமிழ்99. தமிழ் 99 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒரு மனதாக எல்லோராலும் பாராட்டப்படுவது. ஆங்கில தட்டச்சு அறிமுகம் இல்லாதவர்கள்,  முதல் முறை கணினியில் தமிழ் தட்டச்சுக் கற்றுக் கொள்பவர்கள் இதைத்தான் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் வேகமாக தட்டச்சுபவர்களும் தமிழில் எழுத இதைக் கற்றுக் கொள்வது அவசியம். தமிழில் நிறைய எழுதும் போது மிக உதவியாக இருக்கும்.

நான் சுமார் 2007 வாக்கில் தமிழ் 99 எழுதப் பழகிக் கொண்டேன். சுமார் 6 மாதங்களில் தமிங்கில முறையில் இருந்த வேகத்தை எட்டிப் பிடித்து விட்டேன். தமிங்கிலத்தில் எவ்வளவு வேகமாக எடுத்தாலும் நிமிடத்துக்கு 25 சொற்கள் என்ற வேகத்தைத் தாண்ட முடிந்ததில்லை. அந்த முறையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆதாயம் இருந்தாலும், பல எழுத்துக்களுக்கு 3 விசைகளை அழுத்த  வேண்டியிருந்தது. ணி என்று அடிப்பதற்கு shift-n+i அடிக்க வேண்டும்.

தமிழ் 99 தட்டச்சு முறை தமிழின் 30 அடிப்படை எழுத்துக்களுக்கு இடம் ஒதுக்கியது. இந்த 30 எழுத்துக்களையும் ஒரே விசை அழுத்துவதன் மூலம் அடிக்கலாம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களைப் பெற 'ணி' என்று அடிக்க ண்+இ என்று இரண்டு விசைகள் அடித்தால் போதும். ஒரு சராசரி தமிழ் உரையை எடுத்துக் கொண்டால் இது வேலையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து விடும். குறைந்த முயற்சியில் வேலையை முடித்து விடலாம்.

இப்போது தமிழ் 99 முறையில் தட்டடச்சும் போது வேகம் நிமிடத்துக்கு 30 சொற்களுக்குக் குறையாமல் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து தட்டச்சுவதை இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 1800 முதல் 1900 சொற்கள் வரை அடித்து விடலாம்.

இதே போன்று ஆங்கில உரைகளையும் அடித்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளிட்டுப் பழக வேண்டும். மதுரைத் திட்டத்தின் கீழ் மனோன்மணியம் நூலை டிஸ்கி எழுத்துருவில் தமிங்கில தட்டச்சு முறையில் உள்ளிட்டுக் கொடுத்திருக்கிறேன். அது போன்ற திட்டம் ஏதாவதில் இப்போது செய்து பார்க்கலாம். அதே போன்று ஆங்கில நூல் உள்ளிடலையும் project gutenberg போன்ற தளங்களுக்காக செய்து பார்க்கலாம்.

புத்தகத்தைப் பார்த்து அடிப்பதில் தன்னிச்சையாக அடிப்பதை விட வேகம் குறையலாம் அல்லது கூடலாம். தன்னிச்சையாக அடிக்கும் போது மனதில் தோன்றும் வாக்கியங்களை மூளைக்குள்ளாகவே எழுத்துக்கான விசைப்பலகை அழுத்துவதற்கான கட்டளையாக மாறி விடுகிறது. புத்தகத்தைப் பார்த்து அடிக்கும் போது கண்கள் எழுத்துக்களைப் படித்து மூளைக்கு அனுப்பி, அதை விசைக்கான கட்டளையாக மாற்ற வேண்டியிருக்கும். முதல் வேலையில் சிந்தனைக்கான நேரம் அதிகம், இரண்டாவது முறையில் எழுத்த பார்த்து உள்ளுணரும் நேரம் அதிகம். எழுத்து->விசை மாற்றத்துக்கான நேரம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

1. தானாக எழுதுவது = மூளையில் சொல் தோன்றுதல்+மூளைக்குள் எழுத்து + எழுத்து->விசை மாற்றம்
2. புத்தகத்தைப் பார்த்து எழுதுவது = கண்கள் உரையைப் பார்த்தல்+மூளையில் சொல் எடுத்துக் கொள்ளுதல்+எழுத்து->விசை மாற்றம்.

சிந்திப்பதை விட வாசிப்பதுதான் அதிகம் செய்திருக்கிறோம் (??). அதனால் இரண்டாவதன் வேகம்தான் அதிகமாக இருக்க வேண்டும். கண்கள் மூளைக்கு எழுத்துக்களை கடத்தும் வேகம், நாம் சிந்தித்து வாக்கியம் உருவாக்குவதை விட  பல மடங்கு அதிக வேகத்தில்தான் இருக்க வேண்டும். முயற்சித்துப் பரிசீலனை செய்து பார்த்தால்தான் தெரியும் உண்மை நிலவரம்.

வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு

http://www.savetnfishermen.org/

அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.

இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1. தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.

2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

To : Dr. Manmohan Singh - Prime Minister of India

http://www.savetnfishermen.org/

Dear Prime Minister,

More than 500 Tamil Nadu fishermen were killed by Sri Lankan navy in the past 20 years. Attack on the fishermen by Sri Lankan navy is a frequent occurrence. 

Your government fails to take any action to stop these attacks and killings. 

We request you to 

a. Warn SriLankan government to stop attacking Indian fishermen. In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries. 

b. Ensure adequate patrolling of Palk Straits by Indian Navy to provide protection to Tamil Nadu fishermen. 

c. Take steps to get back Katchatheevu from Sri Lanka which is an important landing point for Tamil Nadu fishermen in their day to day fishing activities. 

Tamil Nadu and tamils are also part of India. Your policies towards SriLanka  blatantly disregard Tamil sentiments. We request you to correct your policies taking Tamil sentiments and welfare into account. 

Best regards,

Ma Sivakumar

செவ்வாய், ஜனவரி 18, 2011

ஜெயமோகனின் இடம்

'இவங்க எல்லாம் ஒரு வித்தையைக் கைகொண்டிருக்காங்க அவ்வளவுதான். நன்றாக எழுதுவது என்பது நன்றாக களைக்கூத்தாடுவது போன்றது. பொறுமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உள்ள யாருக்கும் கைவந்து விடும். '

'அந்த வித்தையை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவர் பிரபல எழுத்தாளர் என்பதாலேயே அவரை பெரிய சிந்தனையாளராகப் போற்ற வேண்டியதில்லை'

நண்பர் கல்வெட்டு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து இது.

சுஜாதா எனக்கும் மானசீகக் கடவுள். சுஜாதா எழுதிய எதையும் படித்து விடுவேன். படிப்பவர்களுக்கு மனமகிழ்வைத் தந்தவர் என்ற முறையில் அவர் ஒரு great entertainer.

சுஜாதா அரசியல், தத்துவ விஷயங்களில் தனது ஆளுமையைப் பயன்படுத்த  முயற்சிக்கவில்லை. கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்றவற்றில் கலைத் துறை பற்றிய தனது கருத்துக்களை மட்டும் சொல்லியிருந்தார். அதைப் படிக்கும் போது 'அது ஒரு தனி மனிதரின் கருத்து, ஆராய்ந்து வெளிப்படும் தத்துவ வெளிப்பாடு இல்லை' என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

எழுத்து வித்தையைக் கைப்படுத்திக் கொண்ட ஒரு எழுத்தாளர் ஜெயமோகன்.  எழுத்துத் திறமையால் பல நூறு பக்கங்களுக்கான கதைகளை எழுதியிருக்கிறார். இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பல ஆயிரக்கணக்கான வாசகர்களையும் பெற்றிருக்கிறார்.

நான் அவரது நூல்கள் எதையும் வாங்கியதில்லை. 

1. இணையத்தில் அவர் வெளியிட்ட கதைகளில் முதல் இரண்டை ஓசியில் படித்திருக்கிறேன். மத்தகம் , ஊமைச் செந்நாய்  இரண்டையும் முழுமையாக, ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் என் வழக்கப்படி படித்தேன்.  

அவை தந்த அனுபவங்கள் என்னால் தாங்க முடியாதபடி இருந்தன. அதற்குப் பிறகு இணையத்தில் வெளியான கதைகளையோ புத்தகமாக வாங்கியோ அவரது கதைகளைப் படிக்க மனம் செல்லவில்லை. (இன்னும் வயதாகி பக்குவப்பட்ட பிறகு படிக்க முடியலாம்). 

2. நான் மிகவும் ரசிப்பது  அவர் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகள்.  வழி, அச்சுப்பிழை, வாடிக்கையாளர்கள், குஷ்பு குளித்த குளம், யாப்பு, அமிர்தாஞ்சன் கீரை மிக்சர் இன்னும் பல.

3. அவரது அரசியல் கருத்துக்கள், சமூக சிந்தனைகள், பல்வேறு மனிதர்கள் பற்றிய அவரது மதிப்பீடுகள் எல்லாம் ஜெயமோகன் என்ற தனிமனிதரின் கருத்து மட்டுமே. ஆயிரக்கணக்கான பதிவர்கள், பஸ்ஸர்கள், டுவீட்டர்கள் போன்று இன்னொரு மனிதரின் கருத்து என்று மட்டும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

அவர் வெளிப்படையாக எழுதியிருக்கும் அவரது வாழ்க்கைப் பின்னணியையும், போராட்டங்களையும், பயணங்களையும், நெறிகளையும் வைத்துப் பார்க்கும் போது அவரது கருத்துக்களுக்கு மிகக் குறைந்த மதிப்பே கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் கொள்கையாளர்கள் பாலபாரதி, ஸ்ரீராமதாஸ். அவர்கள் எழுதும்/சொல்லும் கருத்துக்கு 100 மதிப்பெண்கள் கொடுத்து உள்வாங்கிக் கொள்கிறேன்,  ஜெயமோகனின் கருத்துக்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுத்துக் கொள்கிறேன். 

புதன், நவம்பர் 24, 2010

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா...

இணையத்தில் தமிழில் எழுத இருந்த சிரமங்களை உடைக்க இகலப்பை 1999/2000ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் முழுவதும் புதிதாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது இகலப்பை. முகுந்தின் வழிகாட்டலில் தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் திறவூற்று (open source) மென்பொருளாக வெளியிடப்படுகிறது.

இணையத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திப் பலனடையலாம். உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் உருவாக்கக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.

e-கலப்பை

வெள்ளி, ஜூலை 16, 2010

A call for justice to humanity - 1 (to Indian citizens from other states)

Mr. K Muthukumar sacrificed himself at the prime of his life to highlight the plight of Tamils suffering in SriLanka. At the height of war between LTTE and SriLankan government in 2009, he immolated himself protesting against the commissions and omissions of Tamil Nadu government and Indian central government.

He wrote a 4 page statement before his death addressing Tamil citizens of India, citizens of other states in India and the international community.

This is a translation of the message in English. As Muthukumar states Tamils are "a community with a great sense of justice to humanity".

Please read the dyeing declaration of an ordinary Indian citizen. Look at how he is trying to be just and fair even after deciding to take his own life for the sake of a suffering people.

Brothers from other states of India living in Tamil Nadu!,

You would have experienced that Tamil Nadu is a state where you can live with peace and security which may not be available even in your own state

Today, we are in a critical situation. Our brothers in Eelam (Sri Lankan Tamil areas) are being killed in our name as Indians by our government.

Indian government seeks to isolate us in this struggle. We do not want that to happen.

Hence, please let the central government know that our brothers who are fighting have your support also. Take up with those of your nationality who are part of governments.

Such an act of historical significance on your part would not only strengthen our hands but also prevent the danger of a Navnirman Seva or Sriram Seva emerging in Tamil Nadu in future.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 8 - பதினான்கு அம்ச கோரிக்கைகள்

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

- எனது பதினான்கு அம்ச கோரிக்கைகள் -
  1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

  2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

  3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

  4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

  6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

  7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக் ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

  8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

  9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

  10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

  13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 7 - சர்வதேச சமூகத்துக்கு

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று...

நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (They are not the reason; just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியது, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியின் கொலை மறுபடியும், இன்டர்போல் மூலமாக, அந்தக் கொலையின் மூலமாக பலனடைந்தவர்களையும், இலங்கை உளவுத் துறை, ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைல-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்-கருணா.

ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?

பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?

சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள் -

நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள்.

தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.

ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 - தமிழீழ மக்களுக்கு

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது - உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே...

ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவர்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம்.

அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 5 - காவல்துறையினருக்கு

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்?

உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்!

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்கப்பாற்பட்டது.

ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள்.

தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்குக் கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 4 - வெளிமாநிலத்தவருக்கு

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும்.

நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம்.

ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகும் உங்களுடைய அந்த நடவடிக்கை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 3 - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..

உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம் ராமேஸ்வரம் மீனவர்கள்.

உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுனென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...

உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை.

கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள்.

மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.

உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.

உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.

என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

வியாழன், ஜூலை 15, 2010

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 1 - உழைக்கும் தமிழ் மக்களுக்கு

போராளி முத்துக்குமாரின் மரண அறிக்கை ஒவ்வொரு பிரிவினராக அழைத்துப் பேசுகிறது. நான்கு பக்க அறிக்கையாக இருந்தால் சில பேர் படிக்காமல் இருந்து விடலாம். ஒவ்வொரு பிரிவாக எடுத்து, பத்தி பிரித்து, உரை வடிவமைத்து பதிவு செய்கிறேன்.

அடுத்தது முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
  • ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன?
  • அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
  • கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?
ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை,கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் . இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே....

அடுத்தது முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு
முழு அறிக்கை விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதி...

சனி, ஜூன் 26, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7

தொலைபேசி எதிர்வினைகள்

1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"

"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"

"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.

செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.

பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"

"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"

2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"

வெள்ளி, ஜூன் 25, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6

வலைப்பதிவர்களின் சமீபத்திய இடுகைகள்
இது தொடர்பான எனது முந்தைய இடுகைகள் (பிற இடுகைகளின் சுட்டிகளோடு)

புதன், ஜூன் 23, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5

சாந்தகுமார்

Shanthakumar: siva coimbatore yar poyirukardhu

me : http://masivakumar.blogspot.com/2010/06/4.html . I am boycotting it, Shantha!

Shanthakumar: mm nalla mudivu.

ennai poruthavarai, eezha punn innum aaravillai. pirabakaran maranathai nambinalum, meendu varuvar endru nambikkai vaithirundhalum, pallayirakkanakkana uyirgal sethu madivadhai pakkathu mannilirundhu paarthukkondu dhan irundhom..

matra vishangalilum ivargal aadum koothu, ketparillai. ------------removed--------------- aduthu varugiravanukku thalaiyai thattil vaithu koduthu viduvom

me : I will quote you in my blog and give your comments, it is okay?

Shanthakumar: perfectly ok..

தமிழ் எழுத்துக்களில்

சாந்தகுமார்: சிவா, கோயம்புத்தூர் யார் போயிருக்கிறது?

நான்: http://masivakumar.blogspot.com/2010/06/4.html . நான் மாநாட்டைப் புறக்கணிக்கிறேன், சாந்தா

சாந்தகுமார்: ம்ம், நல்ல முடிவு.

என்னைப் பொறுத்தவரை, ஈழப் புண் இன்னும் ஆறவில்லை. பிரபாகரன் மரணத்தை நம்பினாலும் மீண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிவதை பக்கத்து மண்ணிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

மற்ற விஷயங்களிலும் இவர்கள் ஆடும் கூத்து, கேட்பாரில்லை. -----------நீக்கப்பட்டது ------------ அடுத்து வருகிறவனுக்கு தலையில் தட்டி வைத்து கொடுத்து விடுவோம்

நான்: உங்கள் பெயர் குறிப்பிட்டு என் வலைப்பதிவில் உங்கள் கருத்தை வெளியிட்டுக் கொள்ளலாமா?

சாந்தகுமார்: நிச்சயமாகச் செய்யுங்கள்.