செவ்வாய், ஜனவரி 30, 2007

கொடுத்து வைத்தவர்கள்

உடுத்துக் கொள்ள முழு உடையும், சாப்பிட சேமித்து வைக்க குளிர் பெட்டியும், கூரை போட்ட வீடும், படுக்க வீடும் இருந்தால் உலகில் 75% மக்களை விட நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

வங்கிக் கணக்கிலும், பணப்பையிலும், காசு இருந்தால் உலகில் பணக்கார 8 சதவீதத்தில் நீங்களும் சேர்கிறீர்கள்.

சொந்தக் கணினியில் இதை நீங்கள் படித்துக் கொண்டு இருந்தால் அத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ள 1% மக்களில் நீங்களும் ஒருவர்.

யுத்தச் சூழலில் மாட்டிக் கொள்ளாதவராகவோ, சிறைப்படுத்தப்படாமலோ, சித்திரவதைக்குள்ளாக்கப்படாமலோ வாழ்க்கையைக் கழித்திருந்தால் அவற்றையெல்லாம் கடந்து வந்துள்ள 70 கோடி மக்களை விட சிறந்த வாழ்க்கையைப் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் கைம்மாறாக சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறோம்?

மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தியை குத்துமதிப்பாக தமிழ்ப்படுத்தியது.

சனி, ஜனவரி 27, 2007

ஊர் கூடி ...6 தமிழ் லினக்சு

http://kaniporul.blogspot.com/2010/08/6.html

ஊர் கூடி ... 5 - மோசில்லா வரலாறு

http://kaniporul.blogspot.com/2010/08/5.html

ஊர் கூடி ... - 4 என்னால் முடியுமா?

http://kaniporul.blogspot.com/2010/08/4_12.html

ஊர் கூடி.... - 3 இன்றைய நிலைமை

http://kaniporul.blogspot.com/2010/08/3_8796.html

வெள்ளி, ஜனவரி 26, 2007

ஊர் கூடி.... - 2 என்ன செய்ய முடியும்?

http://kaniporul.blogspot.com/2010/08/2_12.html

ஊர் கூடி.. 1 - காலக்கண்ணாடி

http://kaniporul.blogspot.com/2010/08/1_12.html

ஆப்பிரிக்காவில் ஆறு நாட்கள்

ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம் என்று ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் சொல்லி வைத்ததை நாமும் கிளிப்பிள்ளைகள் போல பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து, கற்றுக் கொண்டிருக்கிறோம். இருட்டு, வறுமை, பட்டினியில் சாகும் குழந்தைகள், எயிட்ஸ் நோய் பரவல், சண்டை என்று மனத் தோற்றங்கள்.

போன இடத்தில் நண்பர் இணைய உரையாடலில் இந்தியாவில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது 'ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது?' என்று கேள்வி வந்திருக்கிறது. பின்னால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர்க்காரர், 'மனிதர்களை கொன்று தின்று கொண்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள்' என பாதி கடுப்பாக பாதி நகைச்சுவையாகச் சொன்னாராம்.

ஆப்பிரிக்கா என்றால் தென்னாப்பிரிக்கா மனதுக்கு வந்து விடுகிறது, கிரிக்கெட் விளையாடும் நாடாதலால். நான் போனது, கண்டத்தின் மேற்கில் வடபகுதியில் இருக்கும் புர்கினா ஃபாஸோ. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று இது. ஸ்பெயினுக்கு அருகாக இருக்கும் அல்ஜீரியா என்ற பெரிய நாடு, அதற்குக் கீழே மாலி, நைஜர், அதற்கும் கீழே தென் மேற்காக இந்த நாடு உள்ளது. கடற்கரையைப் பிடிக்க வேண்டுமென்றால் எல்லை தாண்டி பெனின், கானா அல்லது ஐவரி கோஸ்டுக்குத்தான் போக வேண்டும்.

போகும் போது முதல் தாவலாக துபாய் வரை போய் விட்டு, அங்கிருந்து வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நம்ம கடாஃபி அண்ணனின் திரிபோலியில் இறங்கி விட்டு, அடுத்த விமானத்தில் வாகாதோகு என்ற தலைநகருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இந்த இரண்டு இடங்களுக்கு இடையேயான விமானச் சேவை ஆப்பிரிக்கியா என்ற நிறுவனத்துடையது. அதன் மீது 9999 என்று பெரிதாக எழுதியிருக்கிறார்கள். 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகள் என்று அமைத்த நாளை அது குறிக்கிறதாம். இது லிபியாவின் திட்டம். இன்னொரு ஐக்கிய நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாகும் சாத்தியங்கள் இந்தக் கண்டத்துக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதை பொருட்கள், போர் வெறி, அன்னிய தலையீடுகள் இல்லா விட்டால் நம் வாழ் நாளிலேயே கூட அப்படி ஒரு அற்புதம் நடந்து விடலாம்.

புர்கினா ஃபாஸோ என்ற நாடு தமிழ் நாட்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு பெரியது, அளவில். மக்கள் தொகையோ தமிழக மக்கள் தொகையில் பாதி. பெரிய நகரங்களில் மேல் நாட்டு உதவியுடன் போட்டுக் கொண்ட சாலைகளைத் தவிர சரியான சாலைகள் ஊர்களில் எங்கும் கிடையாதாம்.

நாங்கள் போன நிறுவனத்திலேயே வேலூர் மாவட்டத்திலிருந்து இரண்டு பேர், மைசூரைச் சேர்ந்த ஆனால் தமிழில் சரளமாகப் பேசும் ஒருவர், மும்பையைச் சேரந்த ஒருவர் என்று நான்கு இந்தியர்கள் பணி புரிகிறார்கள். மேலாண்மை பட்டம் பெற்று திட்டப் பணிகளில் அனுபவம் பெற்ற இன்னொரு தமிழர் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றிற்காக உள்ளூரிலேயே புதிய தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரையும் சந்திக்க வாய்த்தது.

தமிழ் நாட்டிலிருந்து (கிருஷ்ணகிரி, திருச்சி, சென்னை, பணகுடி - நாகர்கோவில் அருகில்) நான்கு பேர் நகருக்கு வெளியே சாலையில்லாத தெரு விளக்கு இல்லாது அத்துவானக் காட்டில் தங்கியிருந்து கிறித்துவ மத அமைப்பு ஒன்றின் சார்பில் சமூகப் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

இவர்களைத் தவிர குஜராத்திலிருந்து பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் ஓரிருவரைச் சந்தித்தோம்.

பொதுவாக 'கறுப்பன்கள்' என்று பேச்சில் கிண்டலாகக் குறிப்பிடுவது, அவன்-இவன் என்று எல்லோரையும் குறிப்பிடுவது, இந்த ஊரில் ஒன்றுமே கிடையாது, ஒழுக்கமே கிடையாது என்று ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவது என்ற பேச்சுக்களைத் தாண்டி இவர்கள் ஊரை விட்டு மொழி தெரியாத ஊரில் செய்து வரும் பணிகள் மகத்தானவை.

ஞாயிறு, ஜனவரி 21, 2007

சாதி ஒழிய வேண்டும் - 5

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி.
----- ஔவையார்

பாட்டு உதவி - மதுரைத் திட்டம்
சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2
சாதி ஒழிய வேண்டும் - 3
சாதி ஒழிய வேண்டும் - 4

சனி, ஜனவரி 06, 2007

நிறவெறி பிடித்த தமிழர்கள் - 2

தமிழர்களின் நிறவெறி என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் இருந்து விட்டது. பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், எனது எண்ணத்தை மேலும் தெளிவு படுத்தும் விதமாகவும் இந்த தொடர்ச்சி:

ஓரளவு உலகைச் சுற்றி வந்து கறுப்பு இனத்தவர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து உணர்ந்து விட்டவர்களுக்கு தமிழர்களிடையே இது போல உணர்வுகள் இருப்பது ஆச்சரியமாகத் தெரியலாம். சராசரி தமிழ்க் குடும்பத்தில், தமிழகத்தின் சிறு ஊர்களிலும், நகரங்களிலும் தோலின் நிறத்தின் மூலம் குழந்தைகளின், வளர்ந்தவர்களின் தன்னம்பிக்கையையே அழித்துப் போடுவது பெருமளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது எனது அவதானம்.

சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற வரும் ஒரு பெரிய மனிதரின் முகம் மட்டும் பொடி பூசப்பட்டு கழுத்துடன் வேறுபட்டு அசிங்கமாகத் தெரிவதும், சின்னச் சின்னக் குழந்தைகள் கூட பவுடரை அப்பி வெள்ளையாக தோன்ற முயற்சிப்பதும் அன்றாடம் பார்க்கக் கிடைக்கும் காட்சிகள்.

மாசிலா சொல்வது போல் கலை, ஊடகங்களின் கருத்தாக்கங்களும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு என்று வைரமுத்து பாட்டு எழுதிய போது எவ்வளவு புதுமையாகத் தெரிந்தது?

என் பையன் சாங்காயில் படிக்கும் போது (குழந்தைகள் பள்ளி) கறுப்பு நிறத்தில் படத்துக்கு வண்ணம் தீட்டியதால் அந்தப் பள்ளியின் தலைமைஆசிரியை குழந்தைக்கு மனம் பாதித்திருக்கிறது என்று சொல்ல வந்து விட்டார். கறுப்பு என்றாலே இழுக்கு என்பது எவ்வளவு நிலைகளில் புகுத்தப் பட்டு விடுகிறது.

இது இந்தியா முழுவதும் இருக்கிறது என்று நாம் சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. உலகில் எத்தனை பகுதிகளில் இது மாதிரி தாழ்வுணர்ச்சிகள் நிலவினாலும், நம்மிடையே அப்படி ஒரு உணர்ச்சிக் குறை இருந்தால் அதை ஒதுக்கி மற்றவருக்கும் வழிகாட்டியாக இருக்க முடியும்.

ஹரிஹரன் சொல்வது போல, அருள் சொல்வது போல உரக்கச் சொல்லி இந்தக் கசடு தங்கியிருக்கும் உள்ளமே இல்லை தமிழரிடையே என்ற நிலையை உருவாக்க அதிக நாள் பிடிக்காது.

நிறவெறி பிடித்த தமிழர்கள்- 1

கைகழுவும் இடம்.

விமானங்களில் கழிவறைகளில் ஒரு அறிவிப்பைப் பார்க்கலாம்:

"உங்கள் வேலை முடிந்த பிறகு முகம் கழுவிய இடத்தை காகிதத் துண்டால் துடைக்கவும். அடுத்து வரும் பயணிக்கு வசதியாக கழிவறையை விட்டுச் செல்லவும்."

சில உணவு விடுதிகளில் கைகழுவும் இடம் தூய்மையாக இருக்கும். அப்படி வைத்திருக்க ஒரு ஆள் முழு நேரமும் துடைத்துக் கொண்டே இருப்பார். விமானங்கள் போல் அறிவிப்பை வைத்தோ, அது இல்லாமல் எல்லோரும் தாமாக உணர்ந்தோ, தாம் பயன்படுத்திய பிறகு பொது இடத்தை தூய்மையாகவும் வசதிக் குறைவின்றியும் விட்டுச் சென்றால் எப்படி இருக்கும்?

கழுவும் பீங்கான் தொட்டியில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளைப் பார்க்க நேரிடாது. கழுவும் இடத்தில் தண்ணீர் நொசுநொசுப்பைப் பார்க்க வேண்டியிருக்காது. பொதுக் கழிவறைகள் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தூய்மையாக இருக்கும்.

செவ்வாய், ஜனவரி 02, 2007

தமிழரின் சாபக்கேடுகள்

தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள நோய்கள்
  1. சாதிப் பிரிவுகள்
  2. தமது நிறம் குறித்த தாழ்வுணர்ச்சி
  3. தமது மொழியை இரண்டாந்தரமாகக் கருதுவது
  4. தமது உணவுப் பழக்கங்களை அவமானமாகக் கருதுவது
  5. தமது பெயரைக் கூட விட்டுக் கொடுத்து விட்டது.