திங்கள், பிப்ரவரி 18, 2019

21-ம் நூற்றாண்டின் பெரியாரிய பகுத்தறிவு பிரச்சாரம்

சென்னையில் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உயர் ஆற்றல் இயற்பியல் விஞ்ஞானி அதீஷ் தாபோல்கர் "அறிவியலும் மூடநம்பிக்கையும்" என்ற தலைப்பில் அறிவியலுக்கும் (மூட) நம்பிக்கைகளுக்கும் இடையேயான உறவைப் பற்றி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி தரமணியில் உள்ள Institute of Mathematical Sciences-ல் நடைபெற்றது.



அதீஷ் தாபோல்கர் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கரின் சொந்தக்காரர்தான். நரேந்திர தாபோல்கர் அதீஷ் தாபோல்கரின் அங்கிள்.

“அவர் மிகவும் பாசமான பெரியப்பா. மிகவும் உற்சாகமாக இருப்பார்.” என்றார் அதீஷ். நரேந்திர தாபோல்கர் ஒரு மருத்துவர். ஆனால், மருத்துவப் பணியுடனேயே சமூகத்தை பீடித்த பிற நோய்களையும் எதிர்த்துப் போராடினார். மகாராஷ்டிரா அந்த்ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (அநிச -ANIS) என்ற அமைப்பின் மூலம் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்தார். அவர் சொல்லிலும் செயலிலும் ஜனநாயகத்தை பின்பற்றுபவர். அவரது பேச்சுக்களில் கூட வன்முறையோ ஆத்திரமோ இருக்காது. ஆனால், பகுத்தறிவை பயன்படுத்தும்படி பிரச்சாரம் செய்த அவரது கருத்துக்களை தாங்கிக் கொள்ள முடியாத வன்முறை கும்பல் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டது. அந்த வன்முறை கும்பல் இது போன்று நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம் கல்புர்கி, கவுரி லங்கேஷ் என்ற பகுத்தறிவாளர்கள் பலரை கொலை செய்திருப்பது இப்போது தெரியவருகிறது.

நரேந்திர தாபோல்கர்
நரேந்திர தாபோல்கர் இறப்பிற்குப் பிறகு அநிச செயல்பாடுகள் முடங்கி விடும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதற்குப் பிறகு மகாராஷ்டிராவின் 10 கிளைகள், 2000 தன்னார்வலர்களுடன் அநிச எப்போதும் போல தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மராட்டிய பகுத்தறிவாளர் அகர்கர் "எது சரியானதோ அதை பேசுவது, எதை என்னால் முடியுமோ அதை செய்வது" என்ற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

"ஒரு விஞ்ஞானி என்ற முறையில் நாம் சமூகத்தில் இருந்து விலகி இருக்கிறோம். குறிப்பாக கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானிகள் தமது கோபுரங்களில்தான் பெரும்பாலான நேரம் குடியிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சமூகத்துக்கான நமது கடமையையும் நினைவு கூர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது" என்று கூறும் அதீஷ் தாபோல்கர், 2013 ஆகஸ்ட் 20-ம் தேதி நரேந்திர தாபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனது விஞ்ஞானி பணியிலிருந்து சில மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அநிச-வின் நீண்ட கால குறிக்கோளான மகாராஷ்டிரா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் (மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் கருப்பு மேஜிக்கையும் தடுப்பதற்கும் ஒழித்துக் கட்டுவதற்குமான சட்டம் 2013) நிறைவேற்றப்படுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டார்.

"நம்பிக்கை, மூடநம்பிக்கை போன்றவை பற்றிய இது போன்ற உரைகள் பொதுவாக தத்துவ விசாரணையாக போய் விடும் அபாயம் இருக்கிறது. எனவே, இதை குறிப்பான, பருண்மையான அடிப்படையில் என் உரையை அமைத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்த உரையின் அடிப்படை இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அதீஷ் தாபோல்கர்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அறிவியல் விசாரணை, பகுத்தறிவு, பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றை பேணி வளர்ப்பதை தனது வழிகாட்டு நெறிமுறைகளில் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது கருத்துரிமை, தான் நம்பும் வழிபாட்டு முறையை பின்பற்றும் உரிமை, மத உரிமை ஆகியவற்றையும் வழங்குகிறது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் இந்த இரண்டு ஒன்றுக்கொன்று முரண்படும் உரிமைகளுக்கு இடையேயான உரையாடல் மூலம் நிறைவேற்றப்பட்டது.

எது மூட நம்பிக்கை என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது? போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை நம்ப வேண்டும் என்பதை சிறிதளவு மாற்றிச் சொன்னால். ஒரு விஷயத்துக்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் கூட அதைத் தொடர்ந்து நம்புவது கூடாது என்று நான் சொல்லுவேன். இரண்டுக்கும் இடையே மிக நுணுக்கமான வேறுபாடு உள்ளது. முதல் கொள்கை எதையும் நம்புவதை நிபந்தனைக்குட்படுத்துகிறது. இரண்டாவது கொள்கை ஒரு விஷயத்தை நம்பாமல் கைவிட வேண்டியதற்கான வரையறையை முன் வைக்கிறது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா பல்வேறு தரப்பினருக்கிடையேயான விவாதங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட மேலவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிப் போனது. இதில் மிக மூத்த, மரியாதைக்குரிய நீதித்துறை அறிஞர்கள் பங்கேற்றனர். எது மூடநம்பிக்கை என்பதை வரையறுப்பதில் மிக கவனமாக செயல்பட்டனர். இந்த மசோதாவில் ஒரு இடத்தில் கூட கடவுள் என்பது வரவில்லை. 64 செயல்பாடுகளை மூடநம்பிக்கை என்று பட்டியலிட்டு அவை படிப்படியாக குறைக்கப்பட்டு 16 செயல்பாடுகள்தான் இறுதி மசோதாவில் சேர்க்கப்பட்டன.

அப்படி தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்னென்ன?

அ. வெறுங்கையால் அறுவை சிகிச்சை செய்வதாக கூறிக் கொள்வது. இப்படி ஒரு சாமியார் நூற்றுக்கணக்கான சிகிச்சைகளை செய்து கொண்டிருந்தார். அவர் கட்டணமாக பணம் வசூலிப்பது இல்லைதான். ஆனால் நன்கொடை பெற்றுக் கொள்வார். அப்படி பல ஆயிரம் ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒரு துணியை உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் போட்டு மூடி, தனது கைகளால் சில அசைவுகளை செய்வார், எந்த விதமான காயமும் ஏற்படாது, ரத்தம் வராது. ஆனால், சிகிச்சை பெறுபவர் தான் குணமடைந்ததாக உணர்ந்து நன்கொடை கொடுத்து விட்டு போய் விடுவார். பின்னர் அவரை அந்த நோய் தாக்கி பாதிக்கப்படுவார். இதை இந்த மசோதா தடை செய்கிறது.

ஆ. ஒரு பெண்ணை சூனியக்காரி என்று பட்டம் சூட்டி கொலை செய்வது, சொத்தை பிடுங்குவது ஆகியவற்றை இந்த சட்டம் தடை செய்கிறது. சூனியக்காரி என்ற பட்டம் சூட்டுவது பெரும்பாலும் நிலவுடைமை தொடர்பான பிரச்சனைகளில் நடக்கிறது. குறிப்பாக தலித் பெண் நிலத்தையோ வேறு உரிமைகளையோ கோரும் போது அவரது எதிர் தரப்பினர் அவருக்கு சூனியக்காரி என்று பட்டம் சூட்டி விட்டால் அவர் சொல்வதை யாரும் கேட்காமல் போய் விடுவார்கள். இதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

இ. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு அதன் மூலம் பெண்களை பாலியல் ரீதியாக கேடாக பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஆசாராம் பாபு விஷயத்தில் அது அப்பட்டமான ரேப். ஆனால் பல சாமியார்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணே சாமியாரை ஆதரிப்பார். சாமியார் கிருஷ்ணனின் அவதாரம் என்று நம்புவார். இந்த நிலையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு போட முடியாது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகள் ஒழிப்பு சட்டம் அதற்கு வழி செய்கிறது.

ஈ. பாம்புக்கடிக்கு முறையான சிகிச்சை பெறுவதை தடுத்து மாய தீர்வு சொல்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

அகில இந்திய மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கம்
இது போன்று 14 வகையான மோசடி செயல்பாடுகளை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஒருவர் தன்னுடைய வீட்டில் கணபதி ஹோமம் செய்தால் வீடு நன்றாக இருக்கும் என்று கருதினால் அதைப் பற்றி இந்த சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது இஞ்சி டீ குடித்தால் சரியாகி விடும் என்று நம்பினால் இந்த சட்டம் அதில் தலையிடாது. குறிப்பாக, தனி மனிதர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் பிறரை பொருளாயத ரீதியில் கேடாக பயன்படுத்தாத வரையில் அவற்றில் இந்தச் சட்டம் தலையிடப் போவதில்லை.

இப்போது நம்பிக்கை பற்றி பேசலாம்.

ஹிக்ஸ் போஸான் துகளை உருவாக்கும் ஒரு நிகழ்வு பற்றிய சித்திரம்
அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு அறிவியலும் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. அதற்கு உதாரணமாக ஹிக்ஸ் போஸான் பற்றி சொல்லலாம். ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருக்க வேண்டும் என்று கோட்பாட்டு ரீதியாக நிரூபணம் ஆன பிறகும் அதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பான செயல்முறை நிரூபணம் கிடைத்த பிறகுதான் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அறிவியல் விதிகள் நிகழ்தகவு அடிப்படையில் செயல்படுகின்றன. ஒரு விதி ஆகப் பெரும்பாலானா நேரங்களில் இப்படி நிகழும் என்றுதான் கணிக்க முடியும். 5-வது மாடியில் இருந்து குதித்தால் உயிருக்கு ஆபத்து என்பது அறிவியல் கோட்பாட்டிலிருந்தும் பெறப்படுகிறது. ஆனால், அது பல நூறு முறை பல நூறு விபத்துகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனாலேயே ஒருவர் அப்படி விழுந்து உயிர் தப்புவதை சாத்தியமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவ்வப்போது செய்தித் தாள்களில் அத்தகைய செய்திகளை படிக்கிறோம்.

அது போல ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலான நம்பிக்கைக்கு மதிப்பு அதிகம். தங்கத்தால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வானத்தில் பறக்கிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால், பரிணாம வளர்ச்சி பற்றி நமக்குத் தெரிந்த வரையில் குதிரைக்கு இறக்கை இருப்பதோ, பறப்பதோ சாத்தியமில்லை என்று நாம் நம்புகிறோம். மேலும், உலோகத்தில் செய்யப்பட்ட குதிரை என்பது சாத்தியமில்லை என்பது உயிரியலில் தெளிவாக தெரிய வருகிறது. எனவே, அது நிகழ்வதற்கு மிக சாத்தியக் குறைவான ஒன்று என்று நிராகரித்து விடலாம். ஆனால், அப்படி ஒரு குதிரை இல்லவே இல்லை என்று சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆற்றல் மாறா கோட்பாடு என்பது கோடிக்கணக்கான நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே, அதை மீறுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை யாராவது சொன்னால் அதை உடனேயே நிராகரித்து விடலாம். வெறும் கையில் விபூதியை தோற்றுவிப்பேன் என்று யாராவது சொன்னால் அதை போய் ஆய்வு செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது மோசடி என்று உடனேயே முடிவு செய்து விடலாம்.

காந்தி ராமன் பெயரால் மதக் கலவரத்தை தடுத்து நிறுத்தினார். நவகாளியில் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தினார். அவரது நம்பிக்கையை நான் ஏன் கேள்வி கேட்க வேண்டும். ஆனால், யோகி ஆதித்யநாத் அதே ராமன் பெயரில் மசூதியை இடிக்கவோ, முஸ்லீம்கள் மீது வன்முறையை தூண்டவோ செய்தால் அதை எதிர்ப்பேன். இதுதான் தனிப்பட்ட நம்பிக்கைக்கும் சமூக ரீதியில் கேடான நம்பிக்கைக்கும் இடையேயான வேறுபாடு.

இந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் என்பது இந்து மதத்துக்கு எதிரானது என்றும், இந்தியாவுக்கு எதிரானது ஐரோப்பிய கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பது என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு ஒரு நீண்ட அறிவியல் பாரம்பரியம் உள்ளது. இந்திய பாரம்பரியத்தில் லோகயதா தத்துவமும், சாருவாகன முறையும் பகுத்தறிவு, அறிவியல் முறையை பின்பற்றியவை.  பாஸ்கராச்சாரியா, ஆர்யபட்டா, மத்வாச்சாரியாவின் படைப்புகளில் நுண்கணிதத்தின் ஆரம்ப கோட்பாடுகள் காணப்படுகின்றன. சி.வி.ராமன், சந்திரசேகர் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை நாம் நிராகரிக்கிறோமா? அறிவியலில் ஐரோப்பிய அறிவியல், இந்திய அறிவியல் என்று ஒன்று இல்லை.

அதே நேரம் மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்வதில்லை. புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி லினஸ் பாலிங் சளியை சரி செய்ய வைட்டமின் சி உதவும் என்று நம்பினார். அது தொடர்பாக ஒரு புத்தகமும் எழுதினார், அதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் விஞ்ஞானிகள் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகவும் பல கோடி பேரின் கருத்தாகவும்தான் தொடர்கிறது. ஒரு உண்மையாக மாறி விடவில்லை.

கடந்த சுமார் 400 ஆண்டுகளில் மனித குலம் சாதித்துள்ள இந்த அறிவியல் பாரம்பரியம் மகத்தான ஒன்று. இது மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும். இன்றைக்கு உலகைப் பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது முன் எப்போதையும் விட அதிகம். எனவே, பல விஷயங்களில் நாம் அதிக நம்பிக்கை அளவுடன் முன் கணிப்புகளை சொல்ல  முடிகிறது.

கடவுள் என்ற கருதுகோள் மனிதன் விளக்கம் சொல்ல முடியாத விஷயங்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் கடவுள் என்ற கருதுகோள் தேவைப்படும் இடம் சுருங்கிக் கொண்டே போகிறது. கண் என்பது எவ்வளவு சிக்கலான அற்புதமான உறுப்பு, அதை யாராவது புத்திசாலிதானே படைத்திருக்க வேண்டும் என்பது கடவுள் இருப்பதற்கான ஆதாரமாக சொல்லப்படும் ஒரு வாதம். ஆனால், இன்றைக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின்படி கண் எப்படி தோன்றியது என்பதற்கு மிக எளிமையான கண்ணிலிருந்து அதிகரித்துக் கொண்டே போகும் சிக்கலிலான நூற்றுக் கணக்கான கண் வகைகள் உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, கண் என்பது பரிணாம வளர்ச்சிப் போக்கில் இந்த சிக்கலான அமைப்பை பெற்றது என்று முடிவு செய்ய முடிகிறது.

ஒரு காலத்தில் மின்னல் என்பது இந்திரன் வஜ்ராயுதத்தை பாய்ச்சுவதால் ஏற்பட்டது என்றும் மழை என்பது வருணபகவானின் கொடை என்றும் நம்பினார்கள். சூரிய பகவான் என்ற கருதுகோளை வைத்திருந்தார்கள். ஆனால், மனிதனின் அறிவு வளர வளர, இன்றைக்கு மின்னல் எப்படி ஏற்படுகிறது என்பதை துல்லியமாக புரிந்து கொண்டிருக்கிறோம். சூரியன் என்பது என்ன, அதில் எப்படி ஒளியும், வெப்பமும் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோம்.

மேலும், இந்த அண்டத்தில் பல கோடி நட்சத்திரத் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன. அவற்றில் ஒரு நட்சத்திரத் திரளின் நடுத்தர அளவிலான ஒரு நட்சத்திரமான சூரியனின் ஒரு சிறிய கோளான பூமியில் வாழும் மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய கடவுள்தான் இந்த ஒட்டு மொத்த உலகையும் இயக்குகிறார் என்பது கொஞ்சம் அதிகமாக படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. நீங்கள் கடவுளை நம்பினால் அதில் நான் தலையிடப் போவதில்லை. என்னுடன் வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவர் சொந்த வாழ்க்கையில் மூட நம்பிக்கைகளை பின்பற்றினால் அதில் நான் தலையிட மாட்டேன். தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியில், “என்னப்பா இங்கு முன்னேறிய அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வேலை செய்து விட்டு வெளியில் போய் இதைச் செய்கிறாயா" என்று அவரிடம் அதை விமர்சிக்கலாம். அதற்கு மேல் நான் போக முடியாது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை பொறுத்தவரை அது அந்த மாநிலத்துக்கு மட்டுமானது. இது போன்ற மோசடி பேர்வழிகள் பேசாமல் இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உதராணமாக, அந்த அறுவை சிகிச்சை பேர்வழி (அவர் ஒரு முஸ்லீம்) கர்நாடகாவுக்கு மாறிப் போய் விட்டார். எனவே, இது போன்ற நாடு தழுவிய சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. இப்போது கர்நாடகாவும் அத்தகைய சட்டத்தை இயற்றி விட்டது.
நாடு தழுவிய சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகாராஷ்டிராவின் அநிச போன்ற தோழமை அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் கேள்வி கேட்கும் உணர்வை பரப்ப வேண்டும். மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அறிவியலில் நமக்குத் தெரியாத, நாம் ஈடுபடாத துறை பற்றி கருத்து சொல்லும் போது ஒரு பணிவு வேண்டும். நான் ஒரு கோட்பாட்டியல் இயற்பியலாளராக இருந்த போதும் இன்னொரு துறை பற்றி கருத்து சொல்லும் போது கவனமாகத்தான் சொல்வேன்."

விஞ்ஞானி ஒருவர் தான் வாழும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அது போன்று முகம் கொடுக்கப்பட வேண்டிய பிரச்சனையாக அவர் கருதுவது என்ன என்பதையும், அறிவியல் - நம்பிக்கை - மூட நம்பிக்கை இவற்றுக்கிடையேயான உறவு என்ன என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த உரை உதவியாக இருந்தது.

அதீஷ் தாபோல்கர் இத்தாலியின் திரிஸ்தே நகரில் உள்ள அப்துஸ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையத்தின் "உயர் ஆற்றல் இயற்பியல் மற்றும் அண்டவியல்" துறைத்தலைவராக பணியாற்றும் விஞ்ஞானி.

குவாண்டம் கருந்துளைகள் பற்றியும், ராமானுஜனின் படைப்புகளுடன் அதற்கு இருக்கும் தொடர்பு பற்றியும் ஆய்வு செய்பவர்.

ஐ.ஐ.டி கான்பூர் முதுகலை பட்டம் பெற்று பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஜெஃப் ஹார்வி என்ற பேராசிரியரின் வழிகாட்டலில் பி.எச்.டி பட்டம் பெற்றார். ரட்ஜர்ஸ், ஹார்வர்ட், கால்டெக் போன்ற கல்வி நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றிய பிறகு 1996-ம் ஆண்டு டாடா அடிப்படை ஆய்வு கழகத்தில் 2010 வரை விஞ்ஞானியாக பணியாற்றினார். இழை (ஸ்டிரிங்) கோட்பாட்டில் மீசீர்மை (super symmetry) தீர்வுகள் தாபோல்கர்-ஹார்வி நிலை என்று அறியப்படுகிறது.

இது தொடர்பான ஒரு செய்தி

Atish Dabholkar calls for law against superstition

ஞாயிறு, பிப்ரவரி 17, 2019

மோடியை பத்திரிகையாளர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்?

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 5 (இறுதி)

வினோத் ஜோஸின் நேரம் நல்லதாக இருந்தது. எல்லோருக்கும் மோடியின் அதிருப்தி வெறும் பாராமுகத்தோடு நின்று விடுவதில்லை. 2002 தேர்தலுக்கு முன்பு மோடிக்கு சிறு வயதில் திருமணம் நடந்தது என்றும் மனைவியுடன் மோடி சேர்ந்து வாழவில்லை என்பதையும் கேள்விப்பட்டு, அவரது மனைவியை தேடிப் பிடித்து பேச முடிவு செய்தார் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அகமதாபாத் நிருபர் தர்சன் தேசாய். அதிகாலையில் யசோதாபென் சிமன்லால் என்ற அந்த பெண்மணியின் ஊரான பிராமன்வாடாவுக்கு போயிருக்கிறார். அங்கு கடும் முயற்சிக்குப் பிறகு அவர் வேலை செய்யும் பள்ளிக் கூடத்தை கண்டு பிடித்து யசோதா பென், அவரது சகோதரர், அவர் வேலை செய்யும் பள்ளியின் தலைமையாசிரியர் இவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறார். அவர்கள் மூவருமே பேச மறுத்து விட, உள்ளூர் பாஜக ஊழியர்கள் 'தர்சன் தேசாய் அழையா விருந்தாளி' என்றும் 'சீக்கிரம் இடத்தைக் காலி செய்து விடுவது நல்லது' என்றும் வார்த்தைகளாலும், உடல் மொழிகளாலும் உணர்த்தியிருக்கின்றனர்.

அலைந்து திரிந்து, களைப்பாக இரவு வீடு வந்து சேர்ந்த தர்சன் தேசாய் தனது வீட்டுக்கு வெளியே செருப்பை கழற்றிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலிக்கிறது. “முதலமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார்". சில நொடிகளுக்குப் பிறகு முதலமைச்சர் இணைப்பில் வருகிறார்.

“அப்புறம், என்னதான் வேணும் உனக்கு" என்கிறது அந்த இறுக்கமான குரல்.

“புரியலையே"

“உன்னோட பேப்பரில் என்னை எதிர்த்து நிறைய எழுதறீங்க. மோடி மீட்டர் (2001 மதப் படுகொலை கலவரங்களின் போது மோடியை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒரு பத்தி தொடர்) என்று கூட தொடர்ந்து வெளியிட்டீங்க. ஆனா, இப்போ நீ வரம்பை மீறி போய்க்கிட்டு இருக்கே.”

கொஞ்சம் நெர்வசாக “அப்படி எதுவும் இல்லை, உங்களுக்கு என்ன வேணுமோ, அதை எங்க ஆசிரியரோட பேசிக்கோங்க"

“சரி, பத்திரமா இருந்துக்கோ".

என்று சொல்லி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

யசோதாபென் உடனான மோடியின் திருமணம் அவருக்கு 8 வயதாகும் போது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. 13 வயதில் திருமண விழா நடத்தப்பட்டது. 17-18 வயதில் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான சடங்களை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்த நன்னாளில் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மோடி.

சட்டப்படி திருமணமானவராக இருந்தாலும், அவரது மனைவியுடன் தொடர்புகள் இல்லாமல், திருமணமான உண்மையை ஆர்.எஸ்.எஸ்சில் தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறார் மோடி. ஆர்.எஸ்.எஸ் விதிகளின் படி ஒருவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராகவோ இருந்தால் ஒழிய திருமணமாகி விட்டால் முழு நேர பிரச்சாரக் ஆக பணி புரிய தகுதி இழந்து விடுவார். மோடி தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொண்டு தலைவராக உருவெடுக்கும் வரை இந்த உண்மையை அவர் தானாக யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.

அரசியலில் மற்றவர்களின் பலவீனங்கள்தான் தனது வளர்ச்சிக்கான உரம் என்பதை உணர்ந்தவர் மோடி. 1997-ல் இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பொறுப்பாளராக இருந்த போது முதல் ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஊழல் புகழ் சுக்ராம் குற்றம் சாட்டப்பட்டு காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஆரம்பித்திருந்தார். அவருடன் பா.ஜ.கவை இணைத்து ஊழலையும் பா.ஜ.கவையும் ஒரு சேர வலுப்படுத்தியவர் மோடி. கட்சித்  தாவல்களுக்கு புகழ் பெற்ற ஹரியானாவில் முதலில் முன்னாள் காங்கிரஸ் பெருச்சாளியின் பன்ஸிலாலின் கட்சிக்கு ஆதரவு, அதைத் தொடர்ந்து அவரது காலை வாரி விட்டு கிரிமினல் கொலையாளியான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் ஹரியானா லோக்தள கட்சிக்கு ஆதரவு என்று கட்சியை வளர்த்தார் மோடி.

ஆனால், தன்னுடைய முகமூடிகளும், அடாவடிகளும், சதித் திட்டங்களும் எடுபடாத இடங்களிலும் மோடி சிக்கிக் கொண்டது உண்டு.

பத்திரிகையாளர் கரண் தாப்பர் நடத்தும் "ஹா(ர்)ட் டாக் (உறுதியான உரையாடல்)” என்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மோடி 2007-ல் ஒத்துக் கொண்டார். குஜராத்தை தாண்டி தேசிய அரசியலில் தனது இருப்பு பரவ வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம். காந்திநகரில் முதலமைச்சர் அலுவலகத்தில் நேர்முகத்துக்கான பதிவு நடந்தது. தாப்பர் டெல்லியிலிருந்து வந்திருந்தார்.

தாப்பர், மோடி ஒரு வளர்ச்சி நாயகன் என்று பலராலும் புகழப்படுவதையும், ராஜீவ் காந்தி வளர்ச்சி குழுமம் அவரை அங்கீகரித்திருந்ததையும் குறிப்பிட்டு விட்டு, இருந்தாலும், “பலர் உங்களை ஒரு படுகொலையாளி என்று முஸ்லீம்களுக்கு எதிராக முன்முடிவுடையவர் என்றும் முகத்துக்கு நேராகவே பழிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இமேஜ் பிரச்சனை இருக்கிறதா, முதலமைச்சர் அவர்களே!” என்று ஆரம்பித்தார்.

மோடியின் முகம் இறுகி சிவந்தது. "எனக்கு இமேஜ் பிரச்சனை இல்லை, உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், ஒரு சிலருக்குத்தான் பிரச்சனை" என்றார்.

“அப்போ, இது ஒரு சில நபர்களின் சதி என்கிறீர்களா"

“நான்  அப்படி சொல்லவில்லை, நீங்கதான் சொல்கிறீர்கள்"

“நாங்கள  சொல்லவில்லை, உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. நீங்கள் குஜராத் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்த நீரோ என்று ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி சொல்லியிருக்கிறார்"

“அப்படி தீர்ப்பு ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்.”

“உண்மை இல்லைதான்,ஆனால் இது உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து. குஜராத்தின் நீதி பரிபாலன அமைப்பின் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உங்கள் இமேஜ் பிரச்சனையை சரி செய்து கொள்ள நீங்கள் ஏன் 2002-ல் நடந்த கொலைகளுக்காக  வருத்தம் தெரிவிக்கக் கூடாது"

“நான் என்ன  சொல்லணுமோ அதை அப்பவே சொல்லிட்டேன். எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது. போய் பாருங்க. புதுசா எதுவும் சொல்றதுக்கில்லை".

“இன்னும் ஒரு தடவை சொன்னா என்ன குறைஞ்சுடும்".

“எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். கொஞ்சம் தண்ணி வேணும், இதை இத்தோட முடிச்சுக்கலாம்"
என்று தனது சட்டையில் பொருத்தியிருந்த மைக்கை கழற்றிக் கொண்டே எழுந்திருக்கிறார்.

“நட்புக்காக நீங்கதான் இங்க வந்தீங்க, அப்படியே இருப்போம், இப்போ போதும்" என்று எழுந்து நேர்முகம் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறுகிறார் மோடி.

இந்திய மக்கள் இது போன்று தர்க்க ரீதியான நேரடியான கேள்விகளை கேட்டு சட்டையை பிடித்து உலுக்கும்போதுதான் மோடியையும் அவரை வைத்து ஆட்சி செய்யும் இந்துத்துவ அரசியலையும் நாட்டை விட்டு துரத்தி அடிக்க முடியும்.

(முடிந்தது)

சனி, பிப்ரவரி 16, 2019

மோடியின் சுயமோக புராணம்

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 4

பா.ஜ.க தலைவரும் அப்போதைய பிரதமருமான வாஜ்பாய் மோடியை பற்றிய அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருந்தார். 2002 குஜராத் சட்ட மன்ற தேர்தலின் போது அகில இந்தியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வர விரும்பினால் ஆரம்ப கட்டங்களில் வந்து போய் விடுமாறு உத்தரவிட்டிருந்தார் மோடி. கடைசி நேரத்தில் வந்து ஒரு சுற்று சுற்றி விட்டு, தாங்கள்தான் வெற்றியை உறுதி செய்ததாக யாரும் சொல்லி விடக் கூடாதே.

கோத்ராவின் கொடூரங்களில் விளையவிருந்த வெற்றிக்கு தான் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார்.

அருண் ஜேட்லி, உமாபாரதி மற்றும் பிற  கட்சி ஊழியர்களுடன் டெல்லியிலிருந்து விமானத்தில் அகமதாபாத் வரும் வழியில், 'பொதுவாக ஒரு பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் ஒரு மாநில தலைநகருக்குப் போகும் போது அந்த மாநில முதல்வர்தான் பரபரப்புடன் காத்திருப்பார். இங்கோ, பிரதமரான நான் மோடிஜி என்ன சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்துடன் போய்க் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தார் வாஜ்பாய். ஆனால், அவரது தொனி சீரியசாகவே இருந்தது.

தனது அயோத்தி யாத்திரையின் குஜராத் பகுதியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மோடிக்கு கொடுத்து அவரை வளர்த்து விட்டவர் அத்வானி. அத்வானி துணையோடு, முதலில் வகேலாவை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார் மோடி. 1995-ல் மோடி டெல்லிக்கும் அனுப்பப்பட்ட போதும், 2001-ல் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட போதும், மோடிக்கு ஆதரவாக உறுதியாக நின்றவர் அத்வானி. 2002 கலவரங்களுக்குப் பிறகு மோடி முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அதை எதிர்த்து மோடியை ஆதரித்தார் அத்வானி. குஜராத்தில் தனது அதிகாரத்தை உறுதி செய்து கொண்ட மோடி, 2014 தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு அத்வானியை தூக்கி எறிந்திருக்கிறார்.

குஜராத் பா.ஜ.க.வில் மோடியை விட மூத்த போட்டியாளர்கள் சங்கர் சிங் வகேலாவும், கேஷூபாய் பட்டேலும். 1980-களில் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த வகேலாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்த மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்தது. 1989-ல் அத்வானி குஜராத்திலிருந்து போட்டியிடலாம் என்று முடிவு எடுக்கப்பட்ட போது வகேலாவின் நாடாளுமன்றத் தொகுதியான காந்திநகரில் போட்டியிடுமாறு பரிந்துரைத்து வகேலாவுக்கு செக் வைத்தார் மோடி. 1990-களில் வகேலா கட்சியிலிருந்து பிரிந்து போய், காங்கிரசில் சேர்ந்தார். இப்போது காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி நடத்துகிறார்.

மோடி முதல்வரான பிறகு தொடர்ந்து ஓரம் கட்டப்பட்ட கேஷூபாய் இப்போது தனிக் கட்சி ஆரம்பித்து நடத்தினார், பின்னர் வயதான காலத்தில் பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்டார்.

இவ்வாறாக, ஒரு கட்டத்தில் மோடியின் தலைமையில் ஆளும் கட்சி பா.ஜ.க, வகேலா தலைமையில் எதிர்க்கட்சி காங்கிரஸ், கேஷூபாய் பட்டேல் தலைமையில் மூன்றாவது கட்சி கேஷூபாய் பட்டேல் என்று குஜராத்தின் தேர்தல் அரசியலின் அனைத்து தரப்புமே இந்துத்துவா சக்திகளின் வெவ்வேறு குழுக்களின் கூடாரமாக விளங்கியது.

2002-ம் ஆண்டு கலவரங்களின் போது முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி வசித்து வந்த குல்பர்க் குடியிருப்பு சங்கம் இந்துத்துவா கலவர கும்பலால் சூழப்பட்டது. ஜாஃப்ரியின் வீட்டில் தமக்கும் பாதுகாப்பு என்று அக்கம் பக்கத்திலுள்ள இஸ்லாமியர்களும் அங்கு தஞ்சம் புகுந்தனர். ஜாஃப்ரி தனது நூற்றுக் கணக்கான அரசியல் தொடர்புகளுக்கு தொலைபேசி நிலவரத்தை விளக்கி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார். குஜராத் காவல்துறை தலைமை இயக்குனர், அகமதாபாத் காவல் துறை ஆணையர், மாநில தலைமை செயலர், அமைச்சர்கள், ஏன் டெல்லியில் இருந்த அப்போதைய துணை பிரதமர் அத்வானி வரை தொடர்பு கொண்டார் அவர்.

முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டதாக தப்பிப் பிழைத்த ஒரு சாட்சியம் பின்னர் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். முதலமைச்சரிடமிருந்து அவருக்கு வசவுகள் மட்டுமே கிடைத்தன.

வெளியில் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. அப்போது குஜராத் உளவுத் துறையின் துணை ஆணையராக பணி புரிந்த சஞ்சீவ் பட்டின் உளவாளி அந்த இடத்தில் இருந்து அவருக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான். நிலைமை மோசமாகிக்  கொண்டிருப்பதை உணர்ந்த சஞ்சீவ் பட், உள்துறை பொறுப்பையும் தன்னிடம் வைத்திருந்த முதலமைச்சர் மோடியிடம் பல முறை தொலைபேசியில் நிலவரத்தை தெரிவித்ததுடன், பிற்பகலில் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க கோருகிறார். அமைதியாகக் கேட்டுக்  கொண்ட மோடி, 'சஞ்சீவ், ஜாஃப்ரிக்கு தனது துப்பாக்கியால் சுடும் வழக்கம் இருந்திருக்கிறதா என்று பார்த்து சொல்லு' என்று மட்டும் பதில் சொல்கிறார். வெளியில் வரும் பட், ஈசான் ஜாஃப்ரி தொடர்பாக முதல்வரை சந்திக்க வந்து கொண்டிருந்த காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் அமர்சிங் சௌத்ரியையும் முன்னாள் உள்துறை அமைச்சர் நரேஷ் ராவலையும் எதிர் கொள்கிறார்.

அந்த நேரத்தில் களத்தில் இருந்த அவரது உளவாளியிடமிருந்து சஞ்சய் பட்டுக்கு தொலைபேசி வருகிறது. ஜாஃப்ரி வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக அவன் தகவல் சொல்கிறான். 'இந்த ஆளுக்குத் (மோடி) தெரியாமல் இந்த நகரில் ஒரு துரும்பு கூட அசைவதில்லை' என்று தான் உணர்ந்ததாக சஞ்சீவ் பட் பதிவு செய்கிறார்.

2010-ம் ஆண்டு மோடி மகராஷ்டிரா எல்லையில் உள்ள சோன்காட் என்ற பழங்குடியினர் பகுதியில் நடத்திய சத்பாவனா உண்ணாவிரத பந்தலுக்குப் வினோத் கே ஜோஸ் என்ற பத்திரிகையாளர் போகிறார். தான் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாக அருள் பாலிக்கும் பேரரசன் என்ற பிம்பத்தை கட்டியமைப்பதற்கு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மோடி மேற்கொண்ட வரிசையான உண்ணாவிரதங்களின் ஒரு பகுதி அது.

வினோத் கே ஜோஸ் பல மாதங்களாகவே மோடியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மோடியை நேர்முகம் காண வாய்ப்பு அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும், 'உங்கள் வேண்டுகோளை மோடிஜிக்கு சொல்லி விட்டேன். அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. (இல்லை என்றும் சொல்லவில்லை). பொறுமையாக காத்திருங்கள்' என்று மோடியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜக்தீஷ் தக்கார் பதில் அளித்திருக்கிறார்.

சோன்காட்டுக்கு போவதற்கு முன்பும் தக்காரை தொடர்பு கொண்டு தான் உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மோடியிடம் பேசுவதற்கு நேரம் கேட்க முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்.

மேடையில் மோடி அசையாமல் தாடையில் கை வைத்து தலையில் ஒரு விரலை நீட்டி மோன நிலையில் அமர்ந்திருக்க உள்ளூர் கட்சிக் காரர்களும் அரசு அலுவலர்களும் அவர் புகழ் பாடும் உரைகளையும் பாடல்களையும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு சில ஆண்களும், பெண்களும், “முரசு முழங்கவே! முரசு முழங்கவே! அமைதிக்காக முரசு முழங்கவே! மோடிஜியின் புகழ் பாடும் முரசு முழங்கவே!" என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை பரிதாபமான மெட்டில் பாடுகிறார்கள். பாடல் முடிந்ததும் எழுந்த கரவொலி அடங்கிய பிறகு, “இந்த அழகான பாடலை எழுதி, இயற்றி, பாடியது வேறு யாருமில்லை,  நம்முடைய மேதகு மாவட்ட ஆட்சியர் ஆர் ஜே பட்டேல்தான்" என்று அறிவிக்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். கூட்டம் ஆரவாரமாக கை தட்டுகிறது.

மாலை வரை இதே போல போனால் தாக்குப் பிடிக்காது என்று அருகில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திக் கொண்டிருந்த போட்டி உண்ணாவிரத பந்தலுக்குப் போவதற்காக எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார் வினோத் ஜோஸ். மோடி கையை அசைத்து அவர் கவனத்தை ஈர்க்கிறார். என்னையா என்று தூரத்திலிருந்தே கேட்டு, ஆமோதிப்பையும் பெறுகிறார் வினோத். மோடி தக்காரை நோக்கி சைகை செய்கிறார். 70 வயதுக்கும் அதிகமான தக்கார் மோடியின் வாயருகே தனது காதை கொண்டு போய் உத்தரவை வாங்கிக் கொள்கிறார்.

மேடையிலிருந்து தனது தள்ளாத உடலை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வினோத்தை நோக்கி ஓடி வருகிறார் அவர். எந்த நேரத்தில் விழுந்து விடுவாரோ என்று  தோன்றும்படி மூச்சிரைக்க வந்து, 'மோடிஜி உங்களுக்கு நேர்முகம் தருவதாக சொன்னார். ஆனால், இங்கு உண்ணாவிரதத்தில் இருப்பதால் முடியாது. வரும் வெள்ளிக் கிழமை காந்திநகரில் வந்து பாருங்கள்' என்று தகவல் சொல்கிறார்.

உண்ணாவிரதம் முடித்து மாலையில் உரையாற்ற மோடி வருகிறார். அவர் கையில் சில துண்டு காகிதங்கள் இருக்கின்றன.

அந்தப் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை விவரிக்கிறார் : ஒரு புதிய பாலம், காட்டின் வழியாக புதிய சாலை, ஒரு அணை. மொத்தம் 200 கோடி ரூபாய். ஒவ்வொரு அறிவிப்புக்கும் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. அதன் பிறகு, 'உலகம் வளர்ச்சியை நாடும் போது குஜராத்தை நோக்கி வருகிறது. குஜராத்தை நோக்கி வந்தால் உலகத்திற்கு வளர்ச்சி கிடைக்கிறது' என்று மந்திர உச்சாடனத்தை மோடி ஆரம்பிக்கிறார். 'வளர்ச்சி, வளர்ச்சீசீசீ, வளர்ச்சீசீசீசீ' என்று அவர் முழங்கி கைகளை முன்னும் பின்னும் அசைக்க கூட்டம் அந்த உச்சாடனத்தை திரும்பி சொல்லிக் கொண்டே ஆடுகிறது. 'வளர்ச்சி-குஜராத், குஜராத்-வளர்ச்சீசீசீ'' என்று மோடியும் அவரது பக்தர்களும் பஜனையை தொடர்கின்றனர்.

காந்திநகர் திரும்பிய வினோத் ஜோஸ் நேர்முகம் தொடர்பாக மோடியின் அலுவலகத்தை அணுகிய போதெல்லாம் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது இந்தக் கதையின் முடிவு.

வெள்ளி, பிப்ரவரி 15, 2019

மோடியின் எழுச்சி - பா.ஜ.க.விலும் கலக்கம்தான்

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 3

கேஷூபாய் பட்டேலுடன் சேர்ந்து, அவரது போட்டியாளரும் இன்னொரு மூத்த தலைவருமான சங்கர் சிங் வகேலாவின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார் மோடி. அதை எதிர்த்து வகேலா செய்த கலகத்தைத் தொடர்ந்து எட்டப்பட்ட சமரசத்தின்படி முதலமைச்சராக சுரேஷ் மேத்தா என்ற வகேலா ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். மோடி டெல்லி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1996-ம் ஆண்டு வகேலா நடத்திய மாநாடு ஒன்றில் அவரது ஆதரவு அமைச்சர் ஒருவர் மோடி-கேஷூபாய் கோஷ்டியினரால் வேட்டியை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்டார். வகேலா கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கி பின்னர் காங்கிரசுடன் இணைந்தார். 1997-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று கேஷூபாய் பட்டேல் மீண்டும் முதல்வர் ஆனார்.

2000-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகராட்சிகளை இழந்தது. பலவீனமான கேஷூபாய் பட்டேல் தலைமையில் 2003-ம் ஆண்டு ஆரம்பத்தில் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவது சிரமம் என்று மோடி கட்சித் தலைமையின் மத்தியிலும், பத்திரிகையாளர் மத்தியிலும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்ச் பகுதியை பூகம்பம் தாக்கியது. பூகம்பத்தின் மையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகமதாபாதில் கூட அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் கொல்லப்பட்டனர்.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கேஷூபாய் பட்டேல் அரசு சொதப்பியது.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சட்டமன்ற தொகுதிக்கும், வடக்கு குஜராத்தில் உள்ள சபர்கந்தா நாடாளுமன்ற தொகுதிக்கும் செப்டம்பர் மாதம் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதும், கேஷூபாய் பட்டேல் நீக்கப்பட வேண்டும் என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்தது. 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி டெல்லி தலைமையின் முடிவின் படி, சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாத மோடி குஜராத்தின் சுல்தானாக முடிசூடிக் கொள்ள அனுப்பி வைக்கப்பட்டார்.

மோடி குஜராத் முதல்வராகும் போது வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்களாக, மோடியின் அதிகாரத்துடன் போட்டி போட்டு எதிர்ப்பவர்களாக கட்சியில் இருந்தவர்கள் ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி மற்றும் கோர்தன் ஜஃபாடியா. ஒரு தேர்தலில் கூட  போட்டியிட்டு வெற்றி பெற்றிராத மோடி இவர்கள் அனைவருக்கும் மேல் டெல்லி தலைமையால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஹரேன் பாண்டியா கேஷூபாய் பட்டேல் அமைச்சரவையில் நிதித் துறை பொறுப்பு வகித்தவர். 2001-ல் மோடி முதலமைச்சராக நியமிக்கப்பட்ட போது ஹரேன் பாண்டியாவின் தொகுதியான எல்லிஸ் பிரிட்ஜில் போட்டியிட விரும்பினார். எல்லிஸ் பிரிட்ஜ் சிறிய தொகுதியாகவும் பாஜகவின் செல்வாக்கு மண்டலமாகவும் இருந்தது.

ஆனால், “யாராவது ஒரு இளைஞனுக்கு வழிவிடச் சொல்லுங்கள், செய்கிறேன். ஆனா இந்த ஆளுக்காக (மோடிக்காக) நான் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று பாண்டியா மறுத்திருக்கிறார். அந்த அளவு மோடியின் மீது கடுப்பில் இருந்திருக்கின்றனர் கேஷூபாய் படேல் கோஷ்டியினர். மோடி சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் சட்ட மன்ற உறுப்பினரான வாஜூபாய் வாலா என்ற அமைச்சரை வழி விடச் செய்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டார். ரியல் எஸ்டேட் முதலாளியான வாஜூபாய் வாலா பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார்.

அதன் பிறகு 2002-ல் முஸ்லீம் படுகொலைகளுக்குப் பிறகு நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஹரேன் பாண்டியாவை வேட்பாளராக நியமிக்க மறுத்தார், மோடி. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தலைமையும், டெல்லியிலிருந்து பா.ஜ.க தலைமையும் தொலைபேசியிலும், நேரில் ஆள் அனுப்பியும் மேலும் பிரச்சனை செய்யாமல் பாண்டியாவுக்கு எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை கொடுக்கும்படி வலியுறுத்தினார்கள். மோடி பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தனக்கு சோர்வாகவும், தளர்ச்சியாகவும் இருக்கிறது என்று அகமதாபாத் பொது மருத்துவமனைக்குப் போய் படுத்துக் கொண்டார்.

கொதித்துப் போன ஹரேன் பாண்டியா மருத்துவமனைக்குள் சென்று, “யேய், கோழையைப்போல தூங்காதே, தைரியமிருந்தா எனக்கு சீட் தர மாட்டேன்னு நேருக்கு நேரா சொல்லு" என்று வசை மழை பொழிந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால், மோடியின் பிடிவாதம் வென்றது. பாண்டியா தேர்தலில் போட்டியிடவில்லை.

பாண்டியாவை பலனுள்ள தலைவர் என்று கருதிய பா.ஜ.க. தலைமை, அவரை தேசிய செயற்குழு உறுப்பினராகவோ, கட்சி செய்தித் தொடர்பாளராகவோ நியமித்து டெல்லிக்கு அழைத்துக் கொள்ள முடிவு செய்தது. “மோடி தனது சுயநலத்துக்காக கட்சியையும் சங்க பரிவாரத்தையும் அழித்து விடுவார்" என்று பாண்டியா பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்து தொடர்ந்து பேசி வந்தார். இவர் டெல்லிக்கு முக்கியப் பொறுப்பில் போனால் மோடியின் நீண்டகால அரசில் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல் நேரலாம் என்ற சூழலில் ஹரேன் பாண்டியாவை டெல்லிக்கு மாற்றும் கட்சியின் உத்தரவு கடிதம் அவருக்கு தொலை நகல் மூலம் வந்து சேர்ந்த அடுத்த நாள் காலையில் அவர் அகமதாபாத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தனது மகனது மரணத்துக்கு அரசியல் பின்னணிதான் காரணம் என்றும் மோடியின் கட்டளையின் பேரில் அது நடத்தப்பட்டது என்றும் பாண்டியாவின் தந்தை விட்டல்பாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். போதிய சாட்சியங்கள் இல்லை என்று நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டிருந்தது.

ஹரேன் பாண்டியாவிற்கு நேர்ந்தது தனக்கும் நேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டு உலாவுகிறார் மோடியின் சக சங்க பரிவார ஊழியர், 2002 கலவரத்தின் சக குற்றவாளி கோர்தன் ஜடாஃபியா. 2005-ம் ஆண்டு அவரை உளவுத் துறை அதிகாரி ஒருவர் தன்னை பின்தொடர்வதை உணர்ந்து, என்ன சமாச்சாரம் என்று அவரிடம் கேட்டிருக்கிறார் கோர்தன். "உள்துறை அலுவலகம்தான் உங்களை பின் தொடரச் சொல்லியது" என்று அதிகாரி சொல்லியிருக்கிறார்.

அடுத்த முறை முதலமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில், 'உங்க சொந்தக் கட்சி எம்.எல்.ஏவையே உளவு பாக்கிறீங்களே, என்ன விஷயம்" என்று குரல் எழுப்பியிருக்கிறார் ஜடாஃபியா. வாஜுபாய் வல்லா என்ற மூத்த அமைச்சர் அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார். மோடி எதுவும் பேசவில்லை. கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் அழைப்பதாக ஜடாஃபியாவுக்கு சீட்டு வருகிறது.

முதல்வரின் அறையில் அவரை சந்தித்த ஜடாஃபியாவிடம், “இல்லாம போயிடுவே கோர்தன்" என்று ஆரம்பித்திருக்கிறார் மோடி. உடன் மோடியின் நம்பிக்கைக்குரிய அமித் ஷாவும் உட்கார்ந்திருக்கிறார். “நீ அத்வானியிடமும், ஓ.பி மாத்துரிடமும் (பா.ஜ.க மூத்த தலைவர்கள்) என்னைப் பற்றி புகார் சொல்லிக்கிட்டு இருக்கிறாயாமே, பத்திரமா இருந்துக்கோ' என்கிறார் மோடி.

“இல்லாம போயிடுவேன்னா, உயிர் இல்லாமலா, அரசியல் ரீதியாகவா. எப்போ சாகணுமோ அப்போதான் நான் சாவேன். உன்னைக் கண்டு நான் பயப்பட மாட்டேன்" என்று பதிலளித்த ஜடாஃபியா இப்போது அரசு அளித்த போலீஸ் பாதுகாப்போடு தனியாக 12 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களோடுதான் சுற்றுகிறார். குஜராத்தில் நிலவும் அமைதியின் மறுபக்கம் இது.

மோடியை எதிர்த்த, அவருக்கு அடி பணிந்து சேவை செய்ய தயாராக இல்லாத, கோர்தன் ஜடாஃபியாவும், ஹரேன் பாண்டியாவும் தவிர குஜராத்தில் ஓரம் கட்டப்பட சஞ்சய் ஜோஷி டெல்லிக்கு மாற்றப்பட்டு 2008-ல் பாலியல் காட்சிகள் அடங்கிய போலி சீடி விவகாரத்தில் சிக்கினார். மீண்டும் பதவி கொடுக்கப்பட்டு 2011-ல் மோடியின் வற்புறுத்தலின் பேரில் தேசிய பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

(தொடரும் ...)
ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY
2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy
3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned
4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN
5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar
6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

வியாழன், பிப்ரவரி 14, 2019

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 2

"தான் வரித்துக் கொண்ட சித்தாந்தத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை, தனது அகநிலை வாழ்க்கையை குறுக்கிக் கொள்வது, தனது உணர்ச்சிகளைக் கண்டு தானே பயப்படுவது, வன்முறை மீதான காதல், அகங்காரத்தை முன் நிறுத்தி தன்னை நியாயப்படுத்திக்  கொள்வது" என மனோ தத்துவ நிபுணர்களும் சமூகவியல் ஆய்வாளர்களும் வரையறுத்துள்ள பாசிச மனப்பான்மைக்கான இயல்புகள் அனைத்தும் மோடியிடம் உள்ளதாக 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி என்ற சமூகவியலாளர் எழுதினார். பாசிஸ்ட் என்பதை ஒரு வசைச் சொல்லாகவோ, அரசியல் விமர்சனமாகவோ தான் பயன்படுத்துவதில்லை என்றும், ஒரு மனவியல் ஆய்வாளராக, ஒரு நோய் வரையறுப்பு என்ற வகையில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சந்திப்பின் போது மோடியிடம் இந்த இயல்புகளை தான் கண்டறிந்ததாக குறிப்பிட்டார்.

"இந்தியாவுக்கு எதிரான ஒரு அண்டம் தழுவிய சதிச் செயல் செயல்படுவதாகவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு முஸ்லீமையும் தேசத் துரோகியாக, எதிர்கால பயங்கரவாதியாக சந்தேகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைதியான குரலில், அளந்தெடுத்த சொற்களில் அவர் விவரித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது" என்று எழுதினார் ஆஷிஷ் நந்தி.

'மக்களை ஆள்வதற்கு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர், தான்' என்பதை மோடி உறுதியாக நம்புகிறார். அவரது புதிய திட்டங்களுக்கான சிந்தனை எப்படி உருவாகிறது என்று கேட்ட போது, “இது கடவுள் தந்த வரம் என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சிந்தனை எப்படி உருவானது என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். கடவுள் இதை எல்லாம் எப்படி என்னை செய்ய வைக்கிறார் என்றோ, எனக்கு இந்த சிந்தனைகள் எங்கிருந்து வருகின்றன என்றோ எனக்கே தெரியாது" என்கிறார் மோடி.

குஜராத் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக சீனாவிலிருந்து லட்சக்கணக்கான மோடி முகமூடிகளை இறக்குமதி செய்து 'மோடியே வாக்காளர்கள், மோடியே குஜராத், மோடி மீதான விமர்சனம் குஜராத் மீதான விமர்சனம், குஜராத் வாக்காளர்கள் மீதான விமர்சனம்' என்ற பிம்பத்தை கட்டியமைத்தார் மோடி. 182 தொகுதிகளிலும் தானே நிற்பதாக கருதி வாக்களிக்குமாறு தனது முகமூடி தரித்த வாக்காள பெருமக்களுக்கு அருள் வாக்கு வழங்கினார் மோடி.

அகமதாபாத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாத்நகரில் பிறந்த மோடி 1967-ம் ஆண்டு தனது 17-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 1971-ல் அகமதாபாத்தில் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் ஒரு ஆரம்ப நிலை ஊழியராக சேருவது வரை அடுத்த 4 ஆண்டுகள் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார்.

குஜராத்தில் 1969-ம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலைகள், நாசவேலை, பரவலான கொள்ளை அடங்கிய மதக் கலவரங்கள் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தை குறிக்கின்றன. செப்டம்பர் 18-ம் தேதி நிகழ்ந்த வன்முறை சிறிய அளவில் ஆரம்பித்தது. ஆனால், அடுத்த நாள் மதியம் வன்முறை வெடித்த போது, முஸ்லீம்கள் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். அகமதாபாத்தில் ஆரம்பித்த வன்முறை, வடோதரா, நாதியாத், கேடா, ஆனந்த், மேசானா, சபர்கந்தா மற்றும் பானஸ் கந்தா ஆகிய இடங்களுக்கு பரவியது. அகமதாபாத்தில் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. பெரும்பாலான முஸ்லீம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் அகமதாபாதை விட்டு ரயில்களில் வெளியேறினர்.

இந்தக் கலவரங்களைக் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ரெட்டி தனது அறிக்கையில் “கையில் முஸ்லீம் வீடுகளின் பட்டியலை வைத்திருந்த நபர்கள் கலவரக் கும்பல்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்கள்" என்று குறிப்பிடுகிறார். “இந்து கும்பல்கள்தான் வன்முறையை ஒரு தொழிலாக நடத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள்" என்றும் "முஸ்லீம்களின் வன்முறை எதிர்வினையாக நிகழ்ந்தது" என்றும் அந்த அறிக்கை முடிவு செய்தது.

ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜன சங்கம் (பா.ஜ.க.வின் முன்னோடி), ஹிந்து மகாசபா மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வெறுப்பு பிரச்சாரம் கலவரத்துக்கு உடனடி காரணமாக இருந்தது. 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மாபெரும் பேரணியை நடத்தியிருந்தது. முன்னதாக 1967-69ல் ஆர்.எஸ்.எஸ் நடத்திய பசு வதை தடுப்பு இயக்கம், பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கங்களோடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஹிந்து தர்ம ரட்ஷா சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அகமதாபாதில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில் மக்கள் மத்தியில் நிலவிய நிச்சயமின்மையை ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ முழக்கங்கள் மூலமாகவும், நடவடிக்கைகளிலும் அணி திரட்டியது. இந்த கலவரங்களில் 660 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் படிநிலைகளில் ஏறிய மோடிக்கு சங்க பரிவாரத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, விவசாயிகள் அமைப்பான பாரதிய கிசான் சங் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை குஜராத்தில் ஒருங்கிணைக்கும் பொறுப்பு 1981-ம் ஆண்டு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசு வேலைகளிலும், கல்விக் கூடங்களிலும் இட ஒதுக்கீடு அளிப்பது என்ற அப்போதைய மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்த ஆதிக்க சாதியினர் போராட்டத்தை சங்க பரிவாரங்கள் முன்னெடுத்தன. 1981-ல் இந்தப் போராட்டம் தலித்துகளுக்கு எதிரானதாக திருப்பி விடப்பட்டது.

1985-ல் இன்னும் தீவிரமாக நடந்த போராட்டம், இந்துக்களும், முஸ்லீம்களும் சரி விகிதத்தில் வாழ்ந்து வந்த அகமதாபாதின் தரியாபூர் பகுதியில் ஆரம்பித்து பரவலான மதக் கலவரமாக மாற்றப்பட்டது. அந்தப் பகுதியில் அகமதாபாதின் நொடித்துப்  போன ஜவுளி ஆலைகளிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தக் கலவரங்களில் 208 முஸ்லீம் மக்கள்  கொல்லப்பட்டனர்.

குஜராத் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் உள்ள பட்டேல் சாதியினர் இட ஒதுக்கீடு எதிர்ப்பு அரசியலை முன் வைத்து பா.ஜ.கவினால் அணி திரட்டப்பட்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் பார்ப்பன, பனியா சாதியினருடன் கூட, பட்டேல் சாதியினர் பா.ஜ.கவின் முக்கியமான வாக்கு வங்கியாக கட்டமைக்கப்பட்டனர்.

1987-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து பா.ஜ.கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு குஜராத்தின் சோம்நாத்திலிருந்து ஆரம்பித்த அத்வானியின் அயோத்தி ர(த்)த யாத்திரையின் குஜராத் பகுதியை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை அத்வானி மோடியிடம் கொடுத்திருந்தார். 600-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சென்ற அந்த யாத்திரையின் போது அத்வானி 50 கூட்டங்களில் உரையாற்றினார். இந்த யாத்திரை இந்து மத தீவிரவாதத்தையும், வன்முறையையும் உலகுக்கு அறிவித்தது. சில இடங்களில் பெண்கள் அத்வானிக்கு ரத்தத்தால் திலகமிட்டனர்.

அயோத்திக்கு போய்ச் சேருவதற்கு முன்பாகவே, பீகாரின் சமஷ்டிபூரில் அத்வானி கைது செய்யப்பட்டு யாத்திரை நிறுத்தப்பட்டவுடன் குஜராத்தில் கலவரம் வெடித்தது. 1990-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதி வாரத்தை "முடிவு கட்டும் வாரம் (determination week)” என்று அறிவித்தார் மோடி. விஸ்வ ஹிந்து பரிஷத் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் , நகரங்களிலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பிரச்சார கூட்டங்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் 219 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரங்களின் போது சிமன்பாய் பட்டேல் தலைமையிலான ஜனதா தள அரசில் பா.ஜ.க.வும் பங்கேற்றிருந்தது. அரசு அதிகாரத்தின் துணையோடு கலவரம் நடத்துவதற்கான வகுப்புகள் நடைமுறைக்கு வந்தன. எந்தக் கடை, எந்த வீடு இஸ்லாமியருடையது என்ற அரசு தரவுகள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டன கலவரக் கும்பல்கள். 1992-ல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மூண்ட கலவரங்களில் 441 பேர் கொல்லப்பட்டனர்.

1995 தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. குஜராத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பட்டேல் சாதியைச் சேர்ந்தவருமான கேஷூபாய் பட்டேல் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் வெற்றிக்கு தனது புதுமையான உத்திகளும், திட்டமிடலும்தான் காரணம் என்று கட்சித் தலைமையில் இருந்த நரேந்திர மோடி கருதினார். டெல்லி தலைமையின் குஜராத் பிரதிநிதியாக மோடி, மாநில அரசுக்கு வெளியிலிருந்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்.

(தொடரும்)
ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY

2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy

3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned

4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN

5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar

6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

புதன், பிப்ரவரி 13, 2019

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 1

ரேந்திர மோடி. 'இன்றைய இந்தியாவின் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வந்த தேவதூதர்.' 'குஜராத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் வளர்ச்சி நாயகர்.' என்று பாரதிய ஜனதா கட்சியாலும், ஊடகங்களாலும் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டமைக்கப்பட்ட பிரதமர் பதவிக்கான வேட்பாளர்.

'குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, 6 கோடி குஜராத்திகளுக்கும் வளர்ச்சியின் பலன்களை எந்த பாகுபாடும் இன்றி அள்ளிக் கொடுத்ததாக சொல்லப்படும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி குஜராத் மாநிலத்தில் நடந்த எந்த தேர்தலிலும் 50% வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட சாதனை புரிந்ததாக சொல்லப்படும் அவருக்கு 90 சதவீதத்தையும் தாண்டிய மகத்தான மக்கள் ஆதரவு ஏன் இல்லை?

'எது குஜராத்துக்கு நல்லதோ, அது குஜராத்திகளுக்கு நல்லது. எது குஜராத்துக்கு நல்லது என்பதை மோடி முடிவு செய்வார். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குஜராத்தின் நலனுக்கு விரோதமானவர்கள்.' இது அன்றைய மோடித்துவம். இந்தக் கோட்டின் இரு புறமும் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குஜராத் சரிபாதியாக பிரிந்து நின்றது.

'எது இந்தியாவுக்கு நல்லதோ அது இந்தியர்களுக்கு நல்லது. எது இந்தியாவுக்கு நல்லது என்பதை மோடி முடிவு செய்வார். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேசத் துரோகிகள்' என்ற இன்றைய மோடித்துவம் அப்போது கட்டமைக்கப்பட்டது. இந்த இந்துத்துவ-கார்ப்பரேட் கோட்டின் இருபுறமும் இந்திய சமூகத்தை சரிபாதியாக பிரித்து விடுவதுதான் பா.ஜ.க மற்றும் மோடி முன் வைத்து அமல்படுத்தி வரும் அரசியல் திட்டம். அதாவது, உரிமைகளுக்காக போராடும் தாழ்த்தப்பட்ட சாதியினர், தேசிய இனங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்க்கட்சி. மோடியும், பார்ப்பன-பனியா-மேட்டுக்குடி சாதியினர், கார்ப்பரேட் முதலாளிகள் ஆளும் கட்சி.

குஜராத்தின் மோடித்துவ பாணியிலான வளர்ச்சியை அகமதாபாத்திலிருந்து 30கி.மீ. தூரத்தில் உருவாக்கப்பட்டு வரும் கிஃப்ட் சிட்டி (Gujarat International Finance and Technology city - குஜராத் பன்னாட்டு நிதி மற்றும் தொழில்நுட்ப நகரம்) என்ற நிதிமூலதன தலைநகரம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இங்கு 884 ஏக்கர் நிலப் பரப்பில் 124 பல் அடுக்கு அலுவலக கட்டிடங்கள் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

'ஒரு பேரரசர், எனக்காக புதியதொரு நகரத்தை ஏற்படுத்து' என்று சிற்பியை பணிக்க அவர் போய் கண்ணாடியாலும், கான்கிரீட்டாலும் ஆன ஒரு புத்தம் புதிய நகரை உருவாக்குவது போல தோன்றுகிறது' என்கிறார் அந்த பணியில் ஈடுபட்டிருந்த  கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர்.

நவீன ஷாங்காயை வடிவமைத்த "கிழக்கு சீனா கட்டிட வடிவமைப்பு கழகம்" என்ற நிறுவனத்தை மோடி இதற்காக பணியில் அமர்த்தியிருந்தார். "இந்த நகரத்துக்கான ஒவ்வொரு வரைபடமும் சீனாவிலிருந்து வருகின்றது" என்கிறார் அந்த வடிவமைப்பாளர். இங்கு உருவாக்கப்பட உள்ள 7.3 கோடி சதுர அடி நவீன அலுவலக கட்டிங்களின் பரப்பளவு ஷாங்காய், டோக்கியோ, லண்டன் நகரங்களில் உள்ள மொத்த நிதித் துறை அலுவலக கட்டமைப்பை விட அதிகம். இவற்றில் பட்டை தீட்டப்பட்ட வைர வடிவத்திலான 80 மாடிகளைக் கொண்ட "டயமண்ட் டவர்" கட்டிடமும் பின்னிக் கொண்டிருக்கும் பாம்பின் வடிவிலான "நாகா டவர்" கட்டிடமும் அடங்கும். உலகின் முன்னணி நிதித் துறை நிறுவனங்களை மும்பையிலிருந்தும், முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஹைதராபாத், பெங்களூருவிலிருந்தும் குஜராத்துக்கு வர வைப்பதுதான் மோடியின் திட்டம்.

இது குஜராத்தின் ஒளிரும் பாதி. ஒவ்வொரு தேர்தலிலும் மோடிக்கு சரி பாதி ஓட்டுக்களை கொண்டு சேர்க்கும் நடுத்தர வர்க்க மேட்டுக்குடி சாதியினரின் சுயநலத்துக்கும், கார்ப்பரேட் லாப வேட்டைக்கும் இரை போடும் பாதி. இந்த பாதிக்கு, மோடி டாலர் கனவுகளை காட்டினார், “இங்கு ஒரு ரூபாயை விதைத்தால், நீங்கள் ஒரு டாலரை அறுவடை செய்யலாம்" என்று அன்னிய முதலீட்டாளர்களிடம் குஜராத்தை சந்தைப்படுத்தினார்.

இன்னொரு பாதியில் மோடியின் நெருங்கிய நண்பரான கார்சன் பட்டேலின் நிர்மா நிறுவனத்துக்கு குஜராத் அரசு ஒதுக்கிய 700 ஏக்கரின் கதை உள்ளது. 2003-ம் ஆண்டு மோடி அரசு மஹூவா பகுதியில் 700 ஏக்கர் புறம் போக்கு நிலத்தை சிமென்ட் ஆலை கட்டுவதற்காக நிர்மாவுக்கு ஒதுக்கியது. ஒதுக்கப்பட்ட நிலத்தில் 300 ஏக்கர் பரப்பளவிலான சதுப்பு நிலங்களும், நீர்நிலைகளும் அடங்கியிருந்தன. நீர்ப்பாசனத்துக்கும், கால்நடை வளர்ப்புக்கும் அவற்றைச் சார்ந்து இருந்த 50,000 விவசாயிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஆனால், நிர்மாவும், குஜராத் அரசும் அவர்களது எதிர்ப்பை புறக்கணித்தன.
மஹூவாவின் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் கனுபாய் கல்சாரியா மோடியை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். 11,000 விவசாயிகள் தமது இரத்தத்தால் எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டு அனுப்பினர். 5,000 விவசாயிகள் 400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அகமதாபாத் வரை நடந்து வந்து தமது எதிர்ப்பைக் காட்டினர்.

குஜராத் அரசும், நிர்மாவும் இந்த நிலங்களை தரிசு நிலங்கள் என்று வாதிட்டனர். இதை ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் முறையிட்டனர். ஆலையின் சுற்றுச் சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது. மோடியின் கட்டளைக்கேற்ப நடத்தப்படும் குஜராத்தின் 'வளர்ச்சி' மாதிரிக்கு எதிராக கிடைத்த அரிதான வெற்றியாக இதை மக்கள் கொண்டாடினர். ஆனால், டாக்டர் கல்சாரியா பா.ஜ.கவை விட்டு வெளியேற்றப்பட்டார். 2012 தேர்தலில் தனியாக நின்று தோல்வியை தழுவினார். மோடியும், கார்சன் பட்டேல்களும் தமது வெற்றிப் பயணத்தை தொடர்கின்றனர்.

இத்தகைய நவீன தொழில் மயமாக்கப்படும் நகர பொருளாதாரத்தின் பலன்களை குவிக்கும் வர்க்கத்தினருக்கும், படிப்படியாக தமது வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே கனன்று கொண்டிருக்கும் வன்முறை ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எரிமலையாக வெடிக்கிறது. 1970-களில் அகமதாபாத் ஜவுளித் துறை வீழ்ச்சிக்குப் பிறகு தமது வாழ்வாதாரங்களை இழந்த தொழிலாளர்களின் கோபத்துக்கு வடிகால் தேவைப்பட்டது. இப்போது தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரத்தில் தொழில் முனைவோர்களின் ரியல் எஸ்டேட் வேட்டையில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சீற்றத்துக்கு இரை தேவைப்படுகிறது.

குஜராத்தில் 57 நகரங்கள் உள்ளன. தொழில் மயமாக்கப்பட்ட நகரப் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அரசியல் தரகர்களுக்கும் வாய்ப்புக்களின் களமாக நகரங்கள் விளங்குகின்றன. இந்நகரங்களில் பெரும்பாலான பகுதிகள் முஸ்லீம்களும், இந்துக்களும் தனித்தனியாக, கறாராக பிரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வதாக உருவாக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் இந்து மதத்தைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கணிசமான பகுதியினர் மதவாதத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்கின்றனர். கலவரங்களின் போது கொள்ளைகளில் பங்கேற்றல், இல்லை என்றால் வன்முறைகளில் வெறித்தனமாக ஈடுபடுதல் என்று நடுத்தர வர்க்கத்தினர் மத வெறியாட்டத்தில் உற்சாகமாக இறங்குகின்றனர்.

இத்தகைய குஜராத், மோடி என்ற தேவதூதனின் வருகைக்காக பல பத்தாண்டுகளாக தயாரிக்கப்பட்டதா அல்லது பல பத்தாண்டுகளாக இந்துத்துவா சோதனைக் கூடமாக  கட்டமைக்கப்பட்ட குஜராத்துக்காக மோடி வளர்ந்து வந்தாரா?

(தொடரும் ...)

ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY

2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy

3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned

4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN

5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar

6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

செவ்வாய், பிப்ரவரி 12, 2019

ஊடக பிரச்சாரமும் உண்மையை உணர்தலும்

wordsmith என்ற இணையதளத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு சிந்தனை என்ற பகுதி.

Leo Szilard என்ற 1898 முதல் 1964 வரை வாழ்ந்த இயற்பியலாளரின் சிந்தனை.

முதல் உலகப் போரின் போது தனது நாடான ஹங்கேரியும், ஆஸ்திரியா, ஜெர்மனியும் செய்வது அனைத்தும் சரி, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, அமெரிக்கா தவறு என்று செய்தித் தாள்கள் எழுதியிருக்கின்றன. அப்போது அவரது வயது 16.

நம்ம இரண்டு நாடுகள் மட்டும் சரி, மொத்த உலகமும் தவறு என்பது எப்படி என்று கேள்வி எழுந்து விரைவில் தனது சக வகுப்பு மாணவர்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். போர்க் காலத்தில் கூட சமகால நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று கோணத்தில் பார்க்க முடியும் என்கிறார். மிகச் சிறப்பாக உள்ளது, அவர்களது மின்னஞ்சல் சேவையில் நானும் இணைந்து கொண்டேன்.

இந்த இணையதள சேவையை நடத்துவது அனு கர்க் என்பவர்.

"
A THOUGHT FOR TODAY:

I was sixteen years old when the first World War broke out, and I lived at that time in Hungary.

From reading the newspapers in Hungary, it would have appeared that, whatever Austria and Germany did was right and whatever England, France, Russia, or America did was wrong.

A good case could be made out for this general thesis, in almost every single instance. It would have been difficult for me to prove, in any single instance, that the newspapers were wrong, but somehow, it seemed to me unlikely that the two nations located in the center of Europe should be invariably right, and that all the other nations should be invariably wrong.

History, I reasoned, would hardly operate in such a peculiar fashion, and it didn't take long until I began to hold views which were diametrically opposed to those held by the majority of my schoolmates. ...

Even in times of war, you can see current events in their historical perspective, provided that your passion for the truth prevails over your bias in favor of your own nation.

-Leo Szilard, physicist (11 Feb 1898-1964)

தின "மலத்தில்" முளைத்த "பட்டம்"

11 பிப்ரவரி தேதியிட்ட தினமலரில் மோடி திருப்பூரில் பேசியதை விட முக்கியமாக தி.மு.க கூட்டணியில் கலகம் மூட்டி விடும் குசும்பு வேலை தலைப்புச் செய்தியாக வந்திருந்தது.

'பா.ம.க-வுக்கு ஆதரவாக துரை முருகனும், எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும் வாதிடுகிறார்களாம், அவர்கள் வி.சி.க-வை எதிர்க்கிறார்களாம். பா.ம.க அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் வி.சி.க-வுக்கு ஒரு இடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம்' என்கிறார்களாம்.

மெட்ரோ ரயில் தொடக்க நிகழ்ச்சி, கிருஷ்ணா நதி நீர் வந்து சேர்ந்தது, விரும்பிய சேனல்களுக்கு 9 கோடி வாடிக்கையாளர் மாற்றம் என நேர்மறையான செய்திகளே முன் பக்கத்தை நிறைத்தன. தேவைக்கேற்ப தமது பத்திரிகையின் செய்தி வெளியிடும் Mode-ஐ மாற்றிக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. 'நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது, ஆளும் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்' என்றால் 'எல்லாம் நன்றாக போகிறது' என்ற mood-ஐ உருவாக்க வேண்டும். இதுவே ஆளும் கட்சியாக தி.மு.க, காங்கிரஸ் இருந்தால் அவற்றை தோற்கடிக்க எதிர்மறை செய்திகள் வெளியிட வேண்டும். சரியான சாணக்கிய சைத்தான்கள்.

இதைத் தவிர, தி.மு.க மீது அவர் விமர்சனம், இவர் விமர்சனம், தி.மு.க போட்டியிட விரும்புபவர்களிடம் 2 கோடி கேட்கிறது என்று செய்தி. அ.தி.மு.க ஏதோ ஒற்றுமையின் கூடாரம் போலவும், சுத்த சுயம் பிரகாச அரசியல்வாதிகளால் நிரம்பியிருப்பது போலவும் அ.தி.மு.கவில் நடக்கும் பஞ்சாயத்துகள் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எப்படி ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பதற்கு எல்லா ஆளும் வர்க்க ஊடகங்களுக்கும் இந்த பார்ப்பன வர்த்தக பத்திரிகை ஒரு முன் உதாரணம்.

இந்த மலக்குழியில் நீந்தி போனால், இணைப்பாக "பட்டம்".

நல்ல தரமான அறிவியல் பூர்வமான தயாரிப்பு. ஆசிரியர் குழுவில் நமது யெஸ். பால பாரதி இருக்கிறார்.

"மறதி ஏன்" என்பது தொடர்பாக ஆய்வில் கலாச்சார நினைவாற்றல், செய்தித்தொடர்பு நினைவாற்றல் என்று இரண்டாக பிரித்து அவை எப்படி நேரம் போகப் போக குறைந்து செல்கின்றன என்று கிராஃப் போட்டு விளக்கியது ஒரு பக்கம்.

த.வி.வெங்கடேஸ்வரன் 4 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். 4-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு மாணவர்களின் கேள்விகள். மிக எளிமையான சந்தேகங்களை துல்லியமாக அறிவியல் ரீதியாக விடை சொல்கிறார். மரக்கதவுகள் மழை நாட்களில் மூட சிரமமாக இருப்பது ஏன், பொய் பற்கள் இயற்கை பற்களை விட சிறப்பாக செயல்படுமா, பூமி சுற்றாமல் இருந்தால் இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியுமா?, பச்சோந்தி எப்படி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது என்று ஆரம்பித்து சிக்சர்கள் அடிக்கிறார்.

பள்ளிகளில் bullying பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் ஆர்.வெங்கடேஷ் என்பவர் எழுதிய ஒரு பக்கக் கட்டுரை.

தமிழ் இலக்கணம், நன்னெறி கதைகள், வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள், எர்ன்ஸ்ட் ஹேக்கலின் மேற்கோள் கடைசிப் பக்கத்தில் என்று பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ், ஆசிரியர் குழுவில் இன்னும் பலரும்.

இத்தகைய அறிவியல் இணைப்பை வேத கால அறிவியலாக மாற்றுவதற்கு இந்த பார்ப்பன கும்பலுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? தமிழக மாணவர்கள் அதை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும் என்றாலும், அப்படி மாற்றுவதற்கான அதிகாரம் அவர்களிடம் இருப்பதை கவனத்தில் வைத்திருக்கத்தான் வேண்டும்.

வெள்ளி, பிப்ரவரி 08, 2019

மோடியின் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து நிற்கும் "விவேகம்"


விவேகம்  - Reason
நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான போர்
ஒரு ஆனந்த் பட்வர்தன் - திரைப்படம்
8 பகுதி ஆவணப்படம் (240 நிமிடங்கள், வண்ணப்படம், 2018)


2013 முதல் நம் நாட்டில் நடக்கும் பல்வேறு அரசியல் மாற்றங்களை எப்படி தொகுத்து சொல்லலாம்? மகாராஷ்டிராவின் தாராளவாத/ஜனநாயக படைப்பாளியின் பார்வையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் என்னவாக தெரிகின்றன?

ஆனந்த் பட்வர்தனின் 2018 ஆவணத் திரைப்படம் Reason இந்தக் கேள்விகளுக்கான விடையை தருகிறது. 8 பகுதிகளாக மொத்தம் 4 மணி நேரம் ஓடும் படம்.

Reason என்பது மராத்திய மொழியில் விவேக் என்பதன் மொழிமாற்றம், தமிழில் விவேகம் என்று மொழிபெயர்க்க வேண்டும். 

நரேந்திர தாபோல்கரில் தொடங்கி கவுரி லங்கேஷ் வரை மகாராஷ்டிராவில் புனே, கோலாப்பூர், குஜராத்தில் ஊனா, உ.பியில் தாத்ரி, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகம், கோவாவின் ராம்னாதி கிராமத்தில் மக்கள் மத்தியில் மர்மமாக இயங்கும் சனாதன் சன்ஸ்தாவின் ஆசிரமம் என்று பயணிக்கிறது இந்தக் கதை.

மோடி ஆட்சிக்கு வருவது, ரோகித் வெமுலாவின் தற்கொலை, கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு, அக்லக் படுகொலை, ஜிக்னேஷ் மேவானி, சிவாஜி, சாவார்க்கர், காந்தி, கோட்சே, மாலேகான் குண்டு வெடிப்பு, மும்பை பயங்கரவாத தாக்குதல், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி என்று பல டஜன் இழைகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் பிணைத்து நெய்திருக்கும் திரைக்கதை. மகாராஷ்டிராவில் மராட்டா, குஜராத்தில் தலித்துகள், பீகாரைச் சேர்ந்த ஒரு பூமிகார், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், சனாதன் சன்ஸ்தாவின் ஜெயந்த் அத்வாலே என்று சாதியக் கட்டமைவு பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட
பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தாபோல்கர்
ஊடகங்கள், அர்னாப் கோஸ்வாமி, கல்வி தனியார் மயம் என்ற வகையில் கார்ப்பரேட் அரசியலும் எட்டிப் பார்க்கிறது. மைய இழையில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அது மறைக்கப்படவோ, மறக்கப்படவோ இல்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோவியத் யூனியன், அமெரிக்கா என்று உலகளாவிய ஏகாதிபத்திய அரசியலையும் படம் தொட்டுச் செல்கிறது.

நரேந்திர தாபோல்கரும், கோவிந்த் பன்சாரேவும் மகத்தான மனிதர்களாக நம் மனத்திரையில் உருவெடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவின் போராட்டமும், கன்னையா குமாரின் எதிர்ப்பும் உயிர் பெற்று திரையில் ஓடுகின்றன. ஆர்.எஸ்.எஸ், சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத், பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற சங்க பரிவார அமைப்புகளின் அதிகொடூர செயல்பாடுகளும், திட்டங்களும், பிரச்சாரங்களும் திரையில் நிஜமாக உருவெடுக்கின்றன. ஊனா, தாத்ரி, ஜம்மு, ராஜஸ்தான் என்று சனாதன பயங்கரவாதிகளுக்கு போலீஸ் துணை நிற்கிறது.

நிழல் வேலைகள் நடக்கும் சனாதன் சன்ஸ்தா ஆசிரமம்
ஆயிரக்கணக்கான காக்கி-வெள்ளை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முன் மோகன் பாகவத் உரையாற்றுகிறார். வீர சாவார்க்கருக்கு நாடாளுமன்றத்தில் உருவப் படம் திறக்கப்படுகிறது. அதைச் செய்பவர்கள் வாஜ்பாயியும், அப்துல் கலாமும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தோற்றம் பற்றியும், அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடாதவர்கள் பற்றியும் படம் பேசுகிறது. அந்தமான் சிறைக்குப் போன சாவார்க்கர் 5 முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்து சாம்ராஜ்யத்துக்கு விசுவாசமாக சேவை செய்ய முன்வந்து வெளியில் வந்தவர். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடாமல் இந்து மகாசபா, முஸ்லீம் வெறுப்பு என்று அரசியல் செய்தார். காந்தியை கொலை செய்ய சதித்திட்ட வழக்கில் முதல் குற்றவாளி. சில விபரங்களின் போதாமை காரணமாக விடுவிக்கப்பட்டார். கோட்ஸே இந்து மகாசபாவைச் சேர்ந்தவர் என்கின்றனர் சங்கிகள். ஆனால், இந்து மகாசபாவின் நிறுவனர் சாவார்க்கரின் உருவப்படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்துக்கு நேர் எதிரே திறக்கின்றனர்.

சனாதன் சன்ஸ்தா தலைமை சாமியார்
ஜெயந்த் அதவாலே
இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கிறோம், மனு சாஸ்திரம்தான் நமது அரசியல் சட்டம். பசுவை புனிதமாக கும்பிட வேண்டும், அயோத்தியில் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட வேண்டும், இந்தியாவில் வாழ வேண்டுமானால் வந்தே மாதரம் சொல்ல வேண்டும், காஷ்மீர் எங்களுக்கே என்று சூத்திரங்களை கொள்கைகளாக வைத்திருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நிழலில், அதன் பெயரில் ஹேமந்த் கர்கரே திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத கொலையாளிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுகின்றனர். பங்கஜ் நிகிலியானியும், கஜேந்திர சவுகானும் தணிக்கைத் துறை தலைவராக, திரைப்படக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகின்றனர்.

குஜராத்தில் ஊனா வன்கொடுமையை தொடர்ந்து செத்த மாட்டை புதைக்க மாட்டோம் என்று தலித்துகள் போராடுகின்றனர். ஆகஸ்ட் 15 அன்று சுயமரியாதை, சுயகௌரவ உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்கள் மீது ஆதிக்க சாதியினரின் தாக்குதல் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் நினைவாக இந்தியா கேட்-ல் மெழுகுவர்த்தி ஏற்ற வந்தவர்களை போலீஸ் குண்டுகட்டாக தூக்கிச் செல்கிறது.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்
கவுரி லங்கேஷ்
தாபோல்கரும், கோவிந்த பன்சாரேவும் தமது வாழ்வை உழைக்கும் மக்களுக்காக, பகுத்தறிவுக்காக, சரியானதற்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான இளங்குருத்துக்கள் முளைக்கின்றன. ராம்னாதி கிராம மக்கள் சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தை எதிர்த்து கூட்டம் போடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமார், கோவிந்த் பன்சாரே, காங்கிரஸ்-ஐ சார்ந்திருக்கும் ஜிக்னேஷ் மேவானி வருகிறார். ஹார்திக் பட்டேல் வரவில்லை. யாகூப் மேமனின் நியாயம் பேசப்படுகிறது, அப்சல் குருவின் நியாயம் பேசப்படுகிறது. மரண தண்டனைக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு என்கிறார். இறைச்சி உணவு, அது மாட்டிறைச்சியாக இருந்தாலும் சரி, கோழி இறைச்சியாக இருந்தாலும் சரி தவிர்ப்பது நல்லது என்கிறார். பீமா கோராகான் பற்றி எதுவும் பேசப்படவில்லை. மும்பையின் தாராவி பற்றி பேசப்படவில்லை. பேராசிரியர் சாய்பாபா பற்றி, சுதா பரத்வாஜ் பற்றி, ஆனந்த் தெல்டும்டே பற்றி எதுவும் பேசப்படவில்லை. குஜராத்தில் இறைச்சி சாப்பிடுவதற்குக் கூட தனி பகுதிக்குத்தான் போக வேண்டும் என்பதைப் பற்றி கேட்ட இளைஞருக்கு ஆனந்திடம் பதில் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்த் பன்சாரேவும்,
(மதவாத எதிர்ப்புக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்)
அவரது மனைவியும்
ஆனந்த் பட்வர்தன் சொல்லும் அரசியல் என்ன?

'இந்து மதம் வேறு இந்துத்துவா வேறு. இந்து மதத்தில் சாதியை ஒழிக்கா விட்டால் இந்து மதத்தையே நிராகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி இந்துத்துவத்தை எதிர்த்தவர். காங்கிரஸ் அமைத்த ஓஷிவாரா ரயில் நிலையத்தின் பெயரை ராம் மந்திர் என்று பா.ஜ.க அரசு மாற்றுகிறது.

பாகிஸ்தானும் இந்தியாவைப் போல மதச்சார்பற்ற நாடாகத்தான் தோன்றியது. 1980-ல் தொடங்கி ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக ரீகனின் அமெரிக்கா, பாகிஸ்தானில் ஜிகாதி இசுலாமிய தீவிரவாதத்தை வளர்த்து விட்டது. அப்போது ஜியா உல் ஹக் பாகிஸ்தானை இசுலாமிய குடியரசு என்று மாற்றி விட்டார். நாம் அந்த பாதையில் போக வேண்டும் என்று சொன்னால் இந்து ராஷ்டிரம் என்று பேசுங்கள். நான் அப்படி சொல்லவில்லை, மதச் சார்பற்ற விவேகத்தின் அடிப்படையிலான நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'

ஒரு மாணவர் ஏன் இந்துக்களை மட்டும் மோசமாக காட்டுகிறீர்கள் என்று ஆரம்பித்து காஷ்மீர், ஹஜ் மானியம், இந்து நாடு என்று கேள்விகள் கேட்டார். அந்தக் கேள்விகளை ஊக்குவித்து பதில் சொன்னார், ஆனந்த். இன்னொரு பெருசு மாட்டிறைச்சிதான் புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். ஊடகங்களில் கன்னையா குமார், ரோகித் வெமுலா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதும் அதற்கு யாகூப் மேமன், அப்சல் குருவைப் பற்றி விளக்கம் அளித்தார்.

அறிவுத்துறையினர் மத்தியில் பரவலாகக் கொண்டு போய் போதுமான ஆதரவு கிடைத்த பிறகுதான் படத்தை பரவலாக வெளியிட முடியும். தமிழில் மாற்றுவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும். ஆனால், அதை ஒரு திரையிடும் இயக்கமாகக் கொண்டு செல்லும் ஒரு டீம் வேண்டும். இல்லை என்றால் முயற்சி வீணாகப் போய் விடும்.

இன்றைய காலத்துக்கு தேவையான, அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய கலைப் படைப்பு இது. ஆனந்த் பட்வர்தன் போன்ற படைப்பாளிகள் இருக்கும்வரை ஜனநாயகமும், பகுத்தறிவும் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கும்!

சனாதன் சன்ஸ்தா பற்றிய விளக்கமான ஆங்கிலக் கட்டுரை (படங்களுடன்)

செவ்வாய், பிப்ரவரி 05, 2019

கும்பல் அரசியல் - மம்தா, மோடி யார் பெஸ்ட்?

த்தியில் ஆளும் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ (மத்திய புலனாய்வு கழகம்) கொல்கத்தாவின் காவல்துறை ஆணையாளர் ராஜீவ் குமாரை விசாரிக்கவும் தேவைப்பட்டால் கைது செய்யவும் அவரது வீட்டுக்குப் போயிருக்கிறது. அப்படி போன சி.பி.ஐ அதிகாரிகளை அந்தப் பகுதி போலீஸ் பிடித்துச் சென்று ஸ்டேஷனில் அடைத்து வைத்திருக்கிறது. முதலமைச்சரான மம்தா பானர்ஜி பா.ஜ.கவின் இந்த 'பழிவாங்கும்' நடவடிக்கையை எதிர்த்து கொல்கத்தாவின் மெட்ரோ சென்டர் முன்பு தர்ணா ஆரம்பித்திருக்கிறார்.

கல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சாரதா சீட்டு மோசடி வழக்கையும் ரோஸ் பள்ளத்தாக்கு சீட்டு மோசடியையும் விசாரித்தவர். இந்த நிறுவனங்கள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த 2011-க்கு முன்பிருந்தே மேற்கு வங்கத்திலும் அண்டை மாநிலங்களிலும் செயல்பட்டு பண மோசடி செய்து வந்திருக்கின்றன. ஆனால், அந்த மோசடியில் பங்காளிகளாக இருந்த பல பிரமுகர்கள் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசிலும், தற்போது பாரதிய ஜனதா கட்சியிலும் உள்ளனர். மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி மற்ற மாநிலங்களைப்  போலவே இது போன்ற 420 நபர்களை சேர்த்துக் கொண்டுதான் நடந்திருக்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லைதான்.

2013-ம் ஆண்டு இந்த சீட்டு கம்பெனிகளில் பணம் போட்டவர்கள் போராட ஆரம்பித்த பிறகு மம்தா பானர்ஜி அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. சீட்டு கம்பெனியின் உரிமையாளர்கள் சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி இருவரும் கைது செய்யப்பட்டனர். திரிணாமூல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் கைது செய்யப்பட்டு சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி இருவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் குற்றாவளிகள் என்று தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 2014ல் முன்னாள் டி.ஜி.பியும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான ரஜத் மஜூம்தார் கைது செய்யப்படுகிறார்.

இதற்கிடையில் எல்லா சீட்டு மோசடி வழக்குகளையும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் சி.பி.ஐ-க்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ அக்டோபர் 2014-ல் சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி, குணால் கோஷ் மூவரின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது.
  • இது தொடர்பாக காங்கிரஸ் அதிருப்தியாளர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவை சி.பி.ஐ விசாரிக்கிறது. அவர் பா.ஜ.கவில் சரணடைகிறார்.
  • மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்படுகிறார்.
  • மம்தா பானர்ஜி கட்சியின் நம்பர் 2 முகுல் ராய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்புகிறது. முகுல் ராய் பா.ஜ.கவில் சரணடைகிறார். இவர் சாரதா சீட்டு மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளி. 
  • சி.பி.ஐ திரிணாமூல் எம்.பி தபஸ் பால், சுதீப் பண்டோபாத்யாயா ஆகியோரை கைது செய்கிறது.
இந்நிலையில்தான் இந்த வழக்கை விசாரிப்பதில் முறைகேடு என்று ஆகஸ்ட் 2017-ல் ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்புகிறது. ஆகஸ்ட் 2017-ல் இரண்டாவது சம்மன், மார்ச் 2018-ல் மூன்றாவது சம்மன், ஜூலை 2018-ல் உச்சநீதிமன்றத்தில் மனு சி.பி.ஐ தொடர்ந்து ராஜீவ் குமாரை விசாரிக்க முயற்சிக்கிறது. ராஜீவ் குமார் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்கிறார். டிசம்பர் 2018-ல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ சம்மன்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறது.

எனவே, மம்தா பானர்ஜியின் 'அய்யோ, பழிவாங்குறாங்களே' என்ற கதறல் 'சீட்டு மோசடி பேர்வழிகளை முன் வைச்சு எனக்கு கிடுக்கிப் போடுறாங்களே' என்பதுதான்.

ஆனால், 'பழிவாங்குறாங்களே' என்பதில் இதை விட அதிக நியாயம் இருக்கிறது என்பதுதான் இந்திய 'ஜனநாயகத்தின்' விசித்திரம்.  மேலே சொன விபரங்களிலிருந்து மம்தா பானர்ஜியையும், அவரது கட்சித் தலைவர்களையும், பிற மேற்கு வங்க அரசியல்வாதிகளையும் (இந்த மோசடியில் தொடர்பு இருப்பவர்கள்) மிரட்டுவதற்கு மோடியின் சி.பி.ஐ தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது என்று தெளிவாகிறது. "பா.ஜ.கவிடம் சரணடைந்தவர்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்படுகின்றன. பா.ஜ.கவை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழைய வழக்குகளை தூசு தட்டுகிறார்கள்" என்று சொல்பவர் சந்திரபாபு நாயுடு. பா.ஜ.கவுடன் கூடிக் குலாவி அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்ட அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிப்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது திடீரென்று சி.பி.ஐ அவரது வீட்டில் புகுந்து அவரை விசாரிக்க போயிருக்கிறது. இதற்கும் சென்ற மாதம் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடத்திய எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மாநாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி சொல்கிறார். எதிர்க்கட்சிகள் மாநாட்டை நடத்தாதீர்கள் என்று பா.ஜ.க மிரட்டியதாகவும், அதை கேட்காததால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்றும் சொல்லி தெருவில் இறங்கியிருக்கிறார்.

இப்போது மம்தா பானர்ஜி பாதுகாக்கப் போவதாக சொல்லி தெருவில் இறங்கியிருக்கும் அரசியல் சட்ட நடைமுறை என்ன?

அரசியல் சட்டப்படி போலீஸ் துறை மாநிலங்களின் அதிகாரத்துக்குள் வருகிறது. பொதுவாக ஒரு மாநிலத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் அந்த மாநில போலீசால் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும். மாநில போலீஸ் தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியாத அரசியல் நிலைமை அல்லது குற்றத்தின் தன்மை மாநில போலீசின் வரம்பை தாண்டி இருக்கும் போது என்ன செய்வது? அப்போதுதான் வெளியிலிருந்து உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்டதும் மாநில வரம்புகளை தாண்டி செயல்பட முடிவதுமான ஒரு விசாரணை அமைப்பு ஈடுபடுத்தப்படுகிறது. அதன் பெயர்தான் சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு ஆணையம்.

சி.பி.ஐ என்பது நாடு முழுவதற்குமான ஒரு போலீஸ் கிடையாது. அது குறிப்பிட்ட மாநிலத்தினுள் விசாரணை நடத்த அந்த மாநில அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சி.பி.ஐ-ன் தோற்றம் 1941-ல் காலனிய ஆட்சியாளர்களால் போருக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல், லஞ்சம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு போலீஸ் அமைப்பு ஆகும். போருக்குப் பின் மத்திய அரசு ஊழியர்களின் ஊழல்களை விசாரிப்பதற்காக டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் மூலம் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட வழி செய்யப்பட்டது. பின்னர் ஒரு உள்துறை அமைச்சக தீர்மானத்தின் மூலம் சிறப்பு போலீஸ் அமைப்பின் பெயர் சி.பி.ஐ என்று மாற்றப்பட்டது. அடுத்தடுத்த மத்திய அரசுகளாலும், நீதிமன்றங்களாலும் சி.பி.ஐ-ன் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசியல் சட்டத்துக்கு வெளியிலான ஒரு போலீஸ் அமைப்பாக மாற்றப்பட்டது.

பா.ஜ.க தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல் சட்ட நடைமுறைகளையும் பிற சட்டங்களையும் குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிவது, இந்திய ஜனநாயகத்தின் நிறுவனங்கள் அனைத்தையும் சீர் குலைப்பது ஆகியவற்றில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

குஜராத் சட்ட மன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையம் மோடி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அதே நேரத்தில் நடந்த வேறு மாநில தேர்தல் அறிவிப்போடு செய்யாமல் தள்ளி வைக்கிறது. மாநில ஆளுனர்கள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை இயக்குனர், தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் என்று சகட்டு மேனிக்கு தனது ஆட்களை புகுத்துகிறது. ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழுவில் குரு மூர்த்தி சேர்க்கப்படுகிறார். இந்திய அறிவியல் மாநாட்டில் டுபாக்கூர் ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரிந்தும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, 'இந்த போலி மதச் சார்பற்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை எல்லாம் நாம் கைப்பற்றி நமது நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட, கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் பற்றி கவலையில்லை. எதிராளியை பகைவனாக பார்த்து அழித்து விட வேண்டும். அதன் மூலம் வருங்கால இந்து சாம்ராஜ்யத்தை நிறுவி விட வேண்டும். அதற்கு இந்த சூத்திர பதர்களை எல்லாம் அழித்து விடுவது தர்ம யுத்தத்தின் ஒரு பகுதி, அதில் எல்லாம் செல்லும்' என்பது பா.ஜ.கவின் முரட்டுத்தனமான அரசியல். "என்ன ஆனாலும் நான் ஜெயிக்கணும், அதற்கு எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்பது பா.ஜ.கவின் சாணக்கிய நீதி.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியுடன் கூட்டணியை அறிவித்த உடன் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. கர்நாடகா சட்ட மன்ற தேர்தல்களுக்கு சற்று முன்னால் பெல்லாரி சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் மீதான எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ இழுத்து மூடியது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க வினரை அதட்டி மிரட்டி வைத்து நாடாளுமன்ற தொகுதி உடன்படிக்கைக்கு இழுத்து வருவதற்கு இதே சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ரெய்டு ஆயுதங்களைத்தான் மோடி பயன்படுத்துகிறார்.

இந்த முரடனிடம் போய் சட்டம் பேசுவது, நியாயம் பேசுவது எல்லாம் நடக்காது. ஜல்லிக்கட்டு காளை திமிறிக் கொண்டு வெளியில்தான் ஓடும். வயிற்றுக்குக் கீழ் முட்டக் கூடாது, பார்வையாளர்களை தாக்கக்கூடாது என்றெல்லாம் அதன் முன் சட்டம் பேச முடியாது. அது மிரண்டு ஓடும் போது சேதம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மற்றவர்கள்தான் செய்திருக்க வேண்டும்.

இந்த பா.ஜ.வின் முரட்டு அரசியல் இந்திய ஜனநாயகத்தை கலகலக்க வைத்திருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகள் அதிகாரத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சுமுகமாக ஆட்சி செய்து கொள்ள ஏற்பாடு செய்து வைத்திருக்கும் 'ஜனநாயக' நிறுவனங்களை சீர்குலைக்கிறது. 'நான் அடிப்பது போல அடிப்பேன், நீ அழுவது போல அழு, ஆனால் யாருக்கும் டேமேஜ் வராது' என்ற ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை கிழித்து எறிகிறது.

நாசூக்காக ஊழல் செய்யும் காங்கிரஸ், தடாலடியாக அரசியல் செய்து வந்த மம்தா பானர்ஜி, முலாயம் சிங் கட்சி, லல்லு கட்சி, நாகரீகமாக ஆள்வதாக சொல்லிக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, நவீன் பட்னாயக், சி.பி.எம் அரசுகள், சந்திரபாபு நாயுடு இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு பரஸ்பர புரிதல் இருந்தது. என்னதான் அடித்தாலும் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும். அதாவது அரசியல் நாகரீகம் இருக்க வேண்டும். உதாரணமாக, மோடியின் ஆட்சியில் குஜராத்தில் 3,000 இசுலாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்றாலும் அதற்காக அவர் மீது வழக்கு போட்டு தூக்கில் போடுவது வரை கொண்டு போவதை காங்கிரஸ் அரசு செய்யாது. ஏனென்றால் 'நமது ஆட்சி நிரந்தரம் இல்லை, நாளைக்கே திரும்பவும் பா.ஜ.க அரசு வந்து விட்டால் நமக்கும் இதே கதி வந்து விடும்' என்று ஒரு பயம் இருந்தது.

இந்த பரஸ்பர புரிதலை பா.ஜ.க உடைத்து விட்டது. தனது நலனுக்காக 'என்ன வேண்டுமானாலும் செய்வேன். நாளைக்கு நீ ஆட்சிக்கு வரும் போது எனக்கு என்ன கிடைக்கும் என்று கவலையில்லை. நானேதான் ஆட்சியில் இருக்கப் போகிறேன். எனவே, அதற்கான வேலைகள்தான் நான் செய்வேன். உன் ஊழலை விசாரிப்பதை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க வேண்டுமானால், எனக்கு எதிரான அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக் கொள். இல்லா விட்டால் சி.பி.ஐ, அமலாக்கத் துறை, ஆளுனர், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்று குடைச்சல்கள் ஆரம்பிக்கும். உன்னுடைய ஊழல் குற்றச்சாட்டுகள் இன்னும் தீவிரமாக இருந்தால், அதை மறைத்து தாக்குப் பிடிப்பதற்கான உனது சொந்த பலம் குறைவாக இருந்தால், நீ என் காலில்தான் விழ வேண்டும்.'

இதை எப்படி எதிர் கொள்ள முடியும்? பா.ஜ.கவின் இந்தத் திட்டமிட்ட, அமைப்பாக்கப்பட்ட அராஜகவாத அரசியலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ், சி.பி.எம், தி.மு.க போன்ற கட்சித் தலைமைகளின் அரசியல் சட்ட வழியிலான அணுகுமுறை வேலைக்கு ஆகாது.

பா.ஜ.க என்ற முரட்டுக் காளை அதிகாரம் என்ற கள்ளை குடித்து வெறி பிடித்திருக்கிறது. அது பிற கட்சியினரை சகட்டு மேனிக்கு அடித்துத் தூக்குகிறது. சாரதா சிட் ஃபண்ட் மோசடி பேர்வழிகளை முட்டியதை பார்த்து ஊழலுக்கு எதிரான தாக்குதல் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டால் எப்போது உங்கள் வயிறு கிழிந்து குடல் வெளியில் சரியும் என்று உத்தரவாதம் கிடையாது. அதனால்தான் பீகாரின் லல்லுவில் ஆரம்பித்து தமிழ்நாட்டின் ஸ்டாலின் வரையில் மம்தா பானர்ஜியின் தைரியத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்கிறார்கள். அவர் பின் அணிதிரள்கிறார்கள். அ.தி.மு.க அண்ணன்கள் ஏற்கனவே மோடியின் திருவடியில் படுத்தே விட்டதால் அவர்களுக்கு தைரியம் எல்லாம் கிலோ விலைக்கு கிடைத்தாலும் தேவையில்லை.

மம்தா பானர்ஜி எந்தக் கொள்கையும் இல்லாத தனது தலைமையின் கீழ் அதே போன்று கொள்கை/கோட்பாடு இல்லாத ஒரு பட்டாளத்தை குவித்து வைத்திருப்பவர்.  அவரைப் போன்ற தெருச் சண்டை காரரின் எதிர்ப்புதான் பா.ஜ.கவுக்கு எதிராக செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவையும் அவர் நடத்திய அ.தி.மு.க கட்சியையும் பார்த்து பா.ஜ.க பம்மியதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், ஜெயலலிதாக்களாலும், மம்தா பானர்ஜிகளாலும் கூட பா.ஜ.க என்ற வெறி கொண்ட மாட்டை முறியடிப்பது அவ்வளவு எளிதில்லை. நீதித்துறை, அதிகார வர்க்கம், ராணுவம், முதலாளிகள், அறிவுத்துறையின் மத்தியில் அதன் அமைப்பு பலத்தையும் வலைப்பின்னலையும் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க அரசியலை மம்தா பானர்ஜி போன்ற உதிரி அரசியல்வாதிகள் தற்காலிகமாக திகைக்கச் செய்யலாமே தவிர தோற்கடிக்க முடியாது.

உச்சநீதிமன்றம் மம்தா பானர்ஜியின் உதாரை சமாளிக்க இப்போது மோடி அரசுக்கு கறார் காட்டுவது போல காட்டியிருக்கிறது. அதைப் பார்த்து அரசியல் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு விடும் என்று மனப்பால் குடித்து விட முடியாது. சி.பி.ஐ இயக்குனரை இடமாற்றம் செய்த விவகாரத்தில் இடமாற்றம் செய்வதற்கு முறையை பின்பற்றவில்லை என்று தீர்ப்பு சொல்லி விட்டு அன்று இரவே மோடி முறையாக அவரை இடமாற்றம் செய்வதை அனுமதித்திருக்கிறது. (முதலில் செய்த முறைகேட்டுக்கு ஒரு கண்டனம் கூட கிடையாது). அதே நடைமுறைதான் இங்கும்.

இந்திய ஜனநாயகத்தின் முகத்திரையை கிழித்து அதற்கு கல்லறை கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.

திங்கள், பிப்ரவரி 04, 2019

சுவாமிநாதன் அய்யரின் மோடித்துவ திருப்பணி!

ப்போது குஜராத்தி/மார்வாடி/மும்பை இந்திய முதலாளிகளுக்கு வயிற்றை கலக்கும் விஷயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஜெயிக்காமல் போய் விடுவாரோ என்ற பயம்தான். அவர்களுக்கு தீனி போடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் அவர்களது பயத்தை தணித்து மனப்புண்ணுக்கு மருந்து போட வேண்டியிருக்கிறது. அதே நேரம் அவர்களது ஆதரவை மோடிக்கு தக்க வைக்கும் வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த வேலையை திறமையாகச் செய்து முதலாளிகளின் மனதை தடவிக் கொடுக்கும் நபர்தான் இந்த சுவாமிநாதன் அய்யர் என்பவர்.

வேலையின்மை வீதம் மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருப்பது பற்றி இவர் ஞாயிற்றுக் கிழமை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (“Job data’s is bad, but do not assume Modi will lose). ஸ்வாமினாமிக்ஸ் (ஸ்வாமியியல்) என்று அவரது 'திருநாமம்' சூட்டப்பட்ட அறிவியல் பெயரின் கீழ் இந்தப் பத்தியை தொடர்ந்து எழுதி வருகிறார், இந்த அறிவாளி. அவர் தன்னை தாராளவாத முதலாளித்துவ ஆதரவாளர் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்.

வேலையின்மை வீதம் 2011-12ல் 2.2% ஆக இருந்தது 2017-18-ல் 6.1% ஆக உயர்ந்திருக்கிறது இது 45 ஆண்டுகளாக இல்லாத ஒரு நிலைமை.

இந்த விஷயம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது, அல்லது பதுக்கி வைத்திருக்கிறது. அதன் மூலம் தனது மோசமான திருவிளையாடல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து போட்டிருப்பதை மூடி மறைக்க முயன்றது. இந்த அறிக்கையை டிசம்பர் 2018-லேயே வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிடாததை கண்டித்து தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பி.சி மோகனன், ஜே.வி மீனாக்சி ஆகியோர் ஜனவரி 29-ம் தேதி பதவி விலகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து  இந்த அறிக்கையின் விபரங்களை பிசினஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழ் வெளியிட்டு விட்டது. அதில் அம்பலமான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய  மோடி அரசின் புளுகுகளை அம்பலப்படுத்தி காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகளும், ஒரு சில பத்திரிகைகளும் எழுதி வருகின்றனர்.

இந்த அறிக்கையில் தெரிய வரும் இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உழைப்புச் சந்தையில் பங்கேற்பவர்களின் சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பது. உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது 16 முதல் 64 வயது வரை உள்ளவர்களில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. இது 2004-05-ல் 43% ஆக இருந்தது 2011-12ல் 39.5% ஆகக் குறைந்து, 2017-18ல் 36.9% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதாவது, வேலை செய்யத் திறமை உடைய மக்கள் பிரிவினரில் மேலும் மேலும் அதிகமான பிரிவினர் வேலை தேடுவதைக் கூட நிறுத்தியிருக்கின்றனர். 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், குடும்ப வேலை செய்பவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் இவர்கள் இயல்பாகவே வேலை தேடப் போவதில்லை, வேலையிலும் சேர்ந்திருக்கவில்லை. இவர்களைத் தவிர வேலையில் ஈடுபடுபவர்களும், வேலை தேடுபவர்களும் சேர்த்துதான் இந்த உழைப்புச் சந்தை பங்கேற்பு வீதம் கணக்கிடப்படுகிறது. இது ஆரோக்கியமான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் 60%-க்கு மேல் இருக்கிறது (உதாரணமாக சீனாவில் 68% ஆகவும் வங்கதேசத்தில் 56% ஆகவும், ஜப்பானில் 60% ஆகவும் உள்ளது).

நமது நாட்டில் ஏற்கனவே நலிந்து இருந்த இந்த வீதம் கடந்த 5 ஆண்டுகளில் கவலைக்கிடமான மட்டத்துக்கு போய் விட்டிருக்கிறது.

சரி, இவ்வளவு பேர் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டார்கள். வேலை தேடும் நடைமுறையில் இருப்பவர்களிடையே என்ன நிலைமை என்பதைத்தான் வேலையில்லாதவர்களின் சதவீதம் (6.1%) காட்டுகிறது.

இளைஞர்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். 15-29 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை வீதம் ஆண்களுக்கு 2011-12ல் 8.1% ஆக இருந்தது 2017-18ல் 18.7% ஆக உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு 2011-12ல் 13.1% ஆக இருந்தது 2017-18ல் 27.2% ஆக உயர்ந்திருக்கிறது.

அதாவது இந்த வயதில் வேலைக்கு போக தயாராக இருக்கும் பெண்களில் 4-ல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை, ஆண்களில் 6-ல் ஒருவருக்கு இந்த நிலைமை. இவர்கள் போக இந்த வயதில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் வேலை செய்யவே முன் வர முடியாத அளவுக்கு பொருளாதார, சமூக காரணங்களால் முடங்கியிருக்கிறார்கள்.

மேலே சொன்ன தரவுகளை உறுதி செய்யும் இன்னொரு விபரம் Centre for Monitoring Indian Economy – CMIE எனப்து ஒரு தனியார் நிறுவனம். அந்நிறுவனம் டிசம்பர் 2018-ல் வேலையின்மை வீதம் 7.4% ஆக இருந்ததாக மதிப்பிட்டிருக்கிறது. அதன் மதிப்பீட்டின்படி 2018 முழுவதும் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றிருக்கின்றன, 1.1 கோடி வேலை வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன.

இதை எல்லாம் பற்றி தாராளவாத முதலாளித்துவாதியான ஸ்வாமினாமிக்ஸ் எழுதும் அய்யருக்கு பதறவில்லை. இவ்வளவு உழைப்பு சக்தி வீணாகி பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே, முதலாளிகள் லாபம் ஈட்டுவது தடைப்படுகிறதே என்று கூட அவருக்கு கவலை இல்லை. இளைஞர்களின் ஆற்றல்கள் வீணடிக்கப்படுகின்றனவே என்றெல்லாம் அவர் யோசிக்கவே போவதில்லைதான்.

இந்த நிலைமையிலிருந்து மோடி அரசை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவருக்குக் கவலை.  அரசு நிறுவனம் மட்டும் மேலே சொன்ன புள்ளிவிபரத்தை சொல்லியிருந்தால் இது அரசு நிறுவனத்தின் திறன் குறைவு என்று சொல்லி விடலாம். தனியார் நிறுவனமான CMIE தரவுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, புள்ளிவிபரத்தை டபாய்க்க முடியாது.

எனவே, ஒரு பொருளாதாரவியல் 'நிபுணர்' ஆக இந்தக் கவலை அளிக்கும் நிலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத இந்த ஜால்ரா பேர்வழி சைடு வாங்கி ஜி.டி.பி வளர்ச்சிக்கு போய் விட்டார். 'மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7% ஆக உள்ளதே, மேலே சொன்னது உண்மையாக இருந்திருந்தால் அது ஆழமான பொருளாதார பெருமந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே' என்று கேட்கிறார்.

அதாவது 'உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது, முதலாளிகள் முதலீடு செய்வதும் குறைந்திருக்கிறது. இந்நிலையில் 7% வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படி அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தால் ஏற்றுமதி அதிகரித்திருக்க வேண்டும். அதுவும் குறைந்திருக்கிறது.' இத்தோடு இவரது பொருளாதார அறிவு முடிந்து விடுகிறது.

ஜி.டி.பி கணக்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கூட இப்போது விட்டு விடுவோம். அய்யர் யோசிக்கும் திசையிலேயே போய் நாமும் பரிசீலிக்கலாம்.

புதிய முதலீடுகள் இல்லை, உழைப்பாளர் பங்கேற்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வேண்டுமானால் உற்பத்தித் திறன் அதிகரிப்புதான் வழியா?

இன்னும் ஒரு முக்கியமான வழி, தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தொழிலாளி ஒரு நாளில் உழைக்கும் நேரம் அதிகமானாலும், அவரது உழைப்பின் தீவிரம் அதிகமானாலும் உற்பத்தியின் மதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும்.
  • டீ பிரேக், உணவு இடைவேளையை குறைத்தல் முதலியன
  • ஓவர் டைம் செய்தல்
    அல்லது 2வது 3வது வேலையில் ஈடுபடுதல் போன்றவை மூலம் ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தை ஒரு தொழிலாளி/உழைப்பாளி அதிகரித்துக் கொள்கிறார். 
  • சம்பளம் போதவில்லை என்றால் ஓவர் டைம், அதுவும் போதவில்லை என்றால் காலையில் பேப்பர் போடப் போவது, அதுவும் போதவில்லை என்றால் இரவில் செக்யூரிட்டி வேலைக்கு போவது என்று 3 வேலைகள் வரை செய்பவர்கள் இருக்கிறார்கள்.
  • இதோ போக தொழிற்சாலையில் வேலை தீவிரத்தை அதிகப்படுத்தியும் மதிப்பை அதிகரிக்கலாம்.
இந்த வகையில் ,
  • 2011-12ல் 40 கோடி தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 40 மணி நேரம் வேலை செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டில்  83,200 கோடி மணி நேரம் (40 கோடி உழைப்பாளர்கள் x வாரத்துக்கு 40 மணி நேரம் உழைப்பு x ஆண்டுக்கு 52 வாரம்) உழைப்புக்கான மதிப்பு படைக்கப்பட்டிருக்கும்.
  • 2017-18-ல் பங்கேற்பு குறைவு, வேலையின்மை வீதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 5 கோடி தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடாமல் இந்த எண்ணிக்கை 35 கோடியாக குறைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம் (மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் காட்டுவது இத்தகைய போக்கைத்தான்)

    இவர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 60 மணி நேரம் உழைப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

    இப்போது 2017-18ல் மொத்த உழைப்பு 1,09,200 கோடி மணி நேரம். எனவே, குறைவான தொழிலாளர்கள் அதே முதலீடு என்ற நிலையில் உற்பத்தி மதிப்பு 36,000 கோடி மணி நேரம் அதிகரித்திருக்கிறது. அதாவது 6 ஆண்டுகளில் 31.25% அதிகரிப்பு.
(இந்திய உழைப்பாளர்களில் கூலிக்கு வேலை செய்பவர்களும் உண்டு; சொந்தமாக சிறிய கடை, சிறிதளவு நிலம், ஆட்டோ, செய்தொழில் வைத்துக் கொண்டு இயங்குபவர்களும் உண்டு. இரண்டாவது பிரிவினர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு வாழ்க்கை பயணத்தை ஓட்ட பணமீட்ட ஓடுகின்றனர்.)

இது மிக அடிப்படையான கணக்கீடு. இன்னும் சிக்கலான விஷயங்களை இதற்குள் கொண்டு வரலாம். ஆனால், இதைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு 'நிபுணர்'தான் தன் பெயரில் ஒரு அறிவியலையே உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்த முதலாளிகளின் கால்நக்கி.

புள்ளிவிபரங்களை அந்த அளவுக்கு பேசி விட்டு இதனால் எல்லாம் மோடியும் பா.ஜ.கவும் தோற்றுவிடப் போவதில்லை என்று முதலாளிகளுக்கு ஆதரவு சொல்ல ஆரம்பிக்கிறார். '

வேலை வாய்ப்பு நிலைமை இவ்வளவு மோசமாக இருந்த போதும் திரும்பத் திரும்ப மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஜெயித்தது. எனவே பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லையாம், அல்லது இதை ஒரு பிரச்சனையாக பொருட்படுத்தவில்லையாம்.

அதற்கு ஆதரமாக டிசம்பர் 2018 வரையில் 21 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்து வந்ததாம். அதில் கோவா, மணிப்பூர், பீகார் போன்ற மாநிலங்களில் புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது இவருக்கு மறந்து போயிருக்கிறது. ஒட்டு மொத்தமாக கட்சிகளை விலைக்கு வாங்கி வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது நினைவுக்கு வரவில்லை. அரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் கூட்டணி கட்சிகளையே விழுங்கி ஆட்சியில் அமர்ந்ததும் இவருக்கு தெரியவில்லை. இதெல்லாம் மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்காமலே கொல்லைப் புற வழியாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததற்கான உதாரணங்கள். ஆனால் 21 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாலேயே மக்கள் வேலை இழப்புகளை தாங்கிக் கொண்டு மோடியை ஆதரித்திருக்கிறார்கள் என்று கதை விடுகிறார்.

மேலும் உ.பி நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள், டெல்லி சட்டமன்ற தேர்தல், கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் இவற்றை எல்லாம் பற்றி பேசாமல் விட்டு விடுகிறார்.  சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தோற்றாலும் அங்கும் வாக்கு சதவீதம் குறையவில்லையாம். மேலும், அந்த மாநிலங்களில் வரப் போகும் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்று பா.ஜ.க நம்புகிறதாம். எனவே, அந்தத் தேர்தல்களிலும் வேலை வாய்ப்பு இழப்பினால் மக்கள் பாதிக்கப்படவில்லையாம். இவரைப் பொறுத்தவரை பா.ஜ.கவினரின் நம்பிக்கைதான் அறிவியலின் ஆதாரம்.

எனவே, வேலை வாய்ப்பு நிலைமைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இல்லையாம்.

ஆகவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்  "முதலாளித்துவ பண முதலைகளே கவலைப் படாதீர்கள். நீங்கள் வழக்கம் போல உங்கள் சூறையாடலை, ஆடம்பர வாழ்க்கையை தொடருங்கள். மோடியும் பா.ஜ.கவும் மதவெறி, இனவெறி, சாதி வெறி, அரசியல் பேரம், அதிகார அமைப்புகளை ஏவி விடுவது, தேர்தல் முறைகேடுகள் என்று ஏதாவது செய்து தேர்தலில் ஜெயித்து தொழிலாளி வர்க்கத்தின் கோபத்திலிருந்து உங்களை காப்பாற்றும் வேலையை செய்து விடுவார்கள்" என்று முதலாளிகளுக்கு என்று தடவிக் கொடுக்கிறார், சுவாமிநாதன் அய்யர்.

சனி, பிப்ரவரி 02, 2019

இடைக்கால பட்ஜெட் : - மோடி அரசின் கடைசி ஜூம்லா

மோடி அரசின் சார்பாக இடைக்கால நிதி அமைச்சர் பியுஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். முழு நேர நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு போயிருப்பதால், பியுஷ் கோயல் அருண் ஜெட்லி செய்திருக்க வேண்டிய வேலையை செய்திருக்கிறார். அருண் ஜெட்லி ஆயுஷ்மான் பாரத் என்று இந்தியாவில் அவரது அரசே நடத்தும் திட்டத்தில் சிகிச்சை பெறாமல் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆகியிருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஏப்ரல் 1,  2019 முதல் மார்ச் 31, 2020 வரைக்குமான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை மோடி அரசு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் முடிந்து பா.ஜ.க தலைமையிலோ, காங்கிரஸ் தலைமையிலோ வேறு கூட்டணி தலைமையிலோ புதிய அரசு அமைவது வரையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசின் செலவுகளுக்கு நாடாளுமன்றத்திடம் பணம் கேட்பதுதான் வழக்கமான நடைமுறை (இதை vote on account என்று அழைக்கிறார்கள்). ஆனால், மோடி அரசு இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகள் பா.ஜ.கவின் மோடி அரசு உடைக்காத நடைமுறைகள், சிதைக்காத நிறுவனங்கள் இல்லை என்று சொல்லி விடலாம், அதில் இதுவும் சேருகிறது.

இந்த பட்ஜெட் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறது என்று மோடி முதலான பா.ஜ.க தலைவர்களும் ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தேர்தல் ஆண்டில் இது போல மரபை மீறி திட்டங்களை அறிவித்தது போங்காட்டம் என்று எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன. மோடி அரசின் இன்னும் ஒரு ஜூம்லா இந்த பட்ஜெட் அறிவிப்புகள். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு ஜூலையில் முழு பட்ஜெட்டில்தான் செய்ய முடியும். அதுவரை அவை வெறும் வாய்ச்சவடால்களாகவே இருக்கும். “எனக்கு மீண்டும் ஓட்டு போட்டால், நான் ஆட்சிக்கு வந்து இதை எல்லாம் உங்களுக்கு தருவேன்" என்பதுதான் மோடி சொல்லும் செய்தி.

சரி, ஜூம்லாவாக இருந்தாலும் என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

முதலில் வருமான வரிச் சலுகை.

அதற்கு முன் வருமானம் பற்றி பார்த்து விடலாம். உங்கள் வருமானம் ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டப் போவதில்லை. அதாவது மாதத்துக்கு ரூ 20,000-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வயித்துப் பிழைப்பே பெரும்பாடாக இருக்கும் போது வருமான வரியும் கட்ட முடியுமா, என்ன? இந்த வரம்புக்குள் நாட்டின் தொழிலாளர்களில், சிறு வணிகர்களில், விவசாயிகளில் 90% பேர் வந்து விடுவார்கள். எஞ்சியிருக்கும் சுமார் 5% பேருக்கு இந்த வருமான வரிச் சலுகைகள் பொருந்தும்.

இதில் என்ன சொல்கிறார்கள்? 2.5 லட்சத்துக்கும் 5 லட்சத்துக்கும் இடையே வருமானம் ஈட்டுபவர்கள் (மாத வருமானம் சுமார் ரூ 40,000 வரை) கட்ட வேண்டிய வரியான 12,500-ஐ தள்ளுபடியாக பெறலாம். அதாவது அவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது. இது பெரிய தொழிற்சாலைகளிலும், நடுத்தர அளவு நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், நடுத்தர வியாபாரிகளுக்கும் காசை மிச்சப்படுத்தும்.  இது போக சம்பளம் வாங்குபவர்கள் கழிக்க வேண்டிய தொகை அதிகரிப்பு, வங்கி வட்டி மீதான வரிச் சலுகை என்று சில அறிவிப்புகள் உள்ளன.

இரண்டாவது பெரிய திட்டம், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்பது. இதில் சுமார் 12 கோடி விவசாய குடும்பங்கள் அடங்கும். இந்தப் பணம் மூன்று  தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் போடப்பட்டு விடும்.

நல்ல விஷயம்தான்.

ஆனால், விவசாயி கேட்பது குறைந்த விலையில் விதை, உரம், வாடகைக்கு எந்திரங்கள், இன்னொரு பக்கம் விளைந்த பயிருக்கு உத்தரவாதமான கட்டுப்படியாகும் விலை. அதைப் பற்றி எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் கையில் காசாக தருகிறேன், பொழைச்சுக்கோ என்று சொல்லியிருக்கிறது மோடி அரசு.

இந்தத் திட்டத்தை டிசம்பர் 1, 2018 தேதியிலிருந்து அமல்படுத்தப் போவதாக சொல்லி ரூ 20,000 கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் கொடுத்த 20 ரூபாய் நோட்டைப் போலத்தான் இந்த இடைக்கால பட்ஜெட் உரை. 20 ரூபாய் நோட்டை கொடுத்தால் 2,000 ரூபாய் பணம் நோட்டுக்கு ஓட்டு என்ற முறையில் மார்ச் மாதம் பா.ஜ.க ஓட்டு கேட்பவர்களின் கணக்குகளுக்கு இந்தப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

ராகுல் காந்தியும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் குறைந்தபட்ச அடிப்படை வருமானம் என்ற பெயரில் எல்லோருக்கும் பணம் அனுப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அருண் ஜெட்லி போல வெளிநாடுகளுக்கு போய் சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத உழைக்கும் மக்களுக்கு அரசு மருத்துவமனையில் தரமான செலவில்லாத மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர் இவற்றை எல்லாம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி விட்டு பணமாக தருகிறார்களாம்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் தோற்றுப் போய் விட்ட அரசு கையில் காசு தருகிறோம் என்கிறது. என்னதான் நடக்கிறது?

பணம் கையில் வந்தால் அதைக் கொண்டு போய் முதலாளிகளிடம் பொருள் வாங்குவார்கள், தனியார் பள்ளியில் கட்டணம் கட்டுவார்கள், மருத்துவமனைக்கு செலவழிப்பார்கள். முதலாளிக்கு லாபம், அரசுக்கு பொறுப்பில்லை. இதுதான் பணமாக கொடுப்பதன் பின் இருக்கும் சூட்சுமம்.

குழந்தைக்கு சமைத்து சோறு போட வேண்டிய அப்பா, அம்மா, கையில் 5 ரூபாயை கொடுத்து கடையில் போய் மிட்டாய் வாங்கி சாப்பிடு என்று சொல்வது போன்றது. சமைக்க ஏற்பாடும் செய்யவில்லை, சமைக்க முடியவும் இல்லை. குழந்தைகளை பட்டினி போடுகிறார்கள்.

மூன்றாவது திட்டம்தான் மிக அயோக்கியமானது. சுமார் 10 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். 30 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 100 கட்ட வேண்டும். 18 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 55 கட்ட வேண்டும். 58 வயதுக்குப் பிறகு மாதம் ரூ 3,000 ஓய்வூதியம் கிடைக்குமாம்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. மாதச் சம்பளம் 7,000 8,000 10,000 வாங்கும் தொழிலாளி ஏன் 100 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கே 2,000 கோடி சம்பாதிக்கும் முதலாளியிடம் வரி போட்டு இந்தத் திட்டத்துக்கு பணம் சேர்க்க வேண்டியதுதானே?

மேலும், 58 வயதில் ஓய்வூதியம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சமீபத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு பிரச்சனை அவர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக வசூலித்த பணத்தை காணவில்லை என்பது. 2004-லிருந்து பணம் வசூலித்திருக்கிறார்கள். அவற்றை பங்குச் சந்தையில் போட்டு அதில் லாபம் வந்தால் ஓய்வூதியம் கிடைக்கும் என்றார்கள். பணம் போட்ட கம்பெனி திவாலாகி போனால் அந்தப் பணம் போனதுதான். ஓய்வூதியம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. இப்போது அதையும் தாண்டி வாங்கிய பணத்தை எல்லாம் பங்குச் சந்தையில் போட்ட கணக்கு கூட இல்லை என்று தெரிந்திருக்கிறது.

இந்நிலையில்தான் அத்துக்கூலிக்கு அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் பையிலிருந்து 50 ரூபாய், 100 ரூபாய் உருவி முதலாளிகளின் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கு பணம் சேர்க்கிறது மோடி அரசு. இந்தியாவின் சுமார் 10 கோடி தொழிலாளர்கள் ஆளுக்கு ரூ 100 செலுத்தினால் ஒரு ஆண்டுக்கு ரூ 1,000 கோடி வருகிறது. இதை எதிர்பார்த்து எச்சில் வடிய காத்திருக்கின்றன பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலைகள்.

இப்படி ஏமாற்று, மோசடி, திருட்டு அறிவிப்புகள் அடங்கிய ஜூம்லா பட்ஜெட்தான் மோடி ஆட்சியின் கடைசி காட்சியாக அரங்கேறியிருக்கிறது.

இந்த பா.ஜ.க, காங்கிரஸ் கார்ப்பரேட் கால்நக்கி கும்பல்களை ஒதுக்கித் தள்ளி விட்டு உழைக்கும் வர்க்கம் தனது ஓய்வூதியத்தையும், தொழில் செய்வதற்கான வசதிகளையும், யார் மீது எவ்வளவு வரி விதிப்பது என்பதையும்  தாமே தீர்மானிக்கும் வகையில் ஒரு அரசை உருவாக்குவதுதான் இதற்கு தீர்வு.