வெள்ளி, ஜூன் 30, 2006

ஆறு விலக்கங்கள்

வவ்வால் மற்றும் போனபெர்டடின் அன்பு அழைப்புக்கு இணங்கி ஆறு பற்றி ஒரு பதிவு. எனக்கு வியப்பளித்த ஒரு ஆறு கோட்பாட்டைப்பற்றி எழுதுகிறேன்.

Six Sigma என்ற ஆறு விலக்கங்கள் அடிப்படையிலான தரக் கட்டுப்பாடு முறைகள் பிரசித்தி பெற்றவை. இந்தக் கட்டுரை எழுதுவதற்கா விக்கிபீடியாவில படிக்கும் போதுதான் அமெரிக்காவின் மோட்டரோலா நிறுவனம் இந்தச் சொற்றொடருக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது என்று தெரிந்தது.

இது ஒரு புள்ளியியல் கோட்பாடு. பெரும்பாலானவை சராசரிக்கு அருகிலும், அதற்கு மேலேயும் கீழேயும் போக எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் என்பது பல இடங்களில் பொருந்தும் ஒன்று. இதை புள்ளியிலில் ஒரு நார்மல் கர்வ் அல்லது இயல்பங்கீடாக வரைவார்கள்.

மாணவர்களின் மதிப்பெண்களை எடுத்துக் கொள்வோம். நாற்பது மாணவர்களின் சராசரி மதிப்பெண் நாற்பது என்றால் நாற்பது பேரும் 35 முதல் நாற்பத்தைந்துக்குள் பெற்றிருந்தார்களா, அல்லது இருபது பேர் எண்பதுக்கு மேலும் இருபது பேர் பத்துக்கு கீழும் பெற்றிருந்தார்களா அல்லது இன்னும் பரவலான மதிப்பெண்களா என்று தெரியாது. அதைக் குறிக்க சராசரியிலிருந்து ஒவ்வொரு மதிப்பெண்ணும் எவ்வளவு மாறுபடுகிறது என்ற திட்ட விலக்கம் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் திட்ட விலக்கம்தான் சிக்மா எனப்படுகிறது.

சோப்புக் கட்டிகள் செய்வதைப் பார்க்கலாம். சோப்பின் எடை நூற்றைம்பது கிராம் இருக்க வேண்டும். ஆனால் எல்லாம் துல்லியமாக 150 கிராம் இல்லாமல் போகலாம். ஒரு கிராம் முன்னே பின்னே ஒத்துக் கொள்வோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்முடைய சோப்பு செய்யும் இயந்திரத்தில் தினசரி பத்து லட்சம் கட்டிகள் செய்யலாம். காலையில் செய்முறைய அமைக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பிறகு விடாமல் ஓடி பத்து லட்சம் கட்டிகள் வெளியே வந்து விடும். அதற்கு முன்னால், ஒரு மணி நேரத்தில் நூறு கட்டிகளைச் செய்து பார்த்து எடைகளை அளந்து அது 149 முதல் 151க்குள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது பத்து லட்சம் கட்டிகளும் அதற்குள் வந்து விடும்படி நம்முடைய செய்முறை இருக்கிறதா என்று சோதித்து விட வேண்டும்.

6 சிக்மா கட்டுப்பாட்டில் பத்து லட்சம் கட்டிகளில் நான்கை விடக் குறைவானவைதான் எடை 49ஐ விடக் குறைந்தோ 51ஐ விட அதிகமாகவோ போகலாம். இதற்கு நூறு கட்டிகளை அளக்கும் போது ஒவ்வொரு கட்டியின் எடை போட்டு, அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கத்தைப் பார்க்க வேண்டும். பன்னிரண்டு (2x6) திட்ட விலக்கங்களுக்குள் 99.9996599% சோப்புக் கட்டிகள் இருக்க வேண்டும். அப்படியென்றால் திட்ட விலக்கம் (51-49)/12=2/12 ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும். நூறு கட்டிகளில் திட்ட விலக்கம் இதை விட அதிகமாக இருந்தால் பத்து லட்சம் கட்டிகளில் நிச்சயமாக நான்கை விட அதிக எண்ணிக்கையில் கட்டிகள் நிராகரிக்கப்பட்டு விடும். எனவே செய்முறைகளில் மாறுதல்கள் செய்து நூறு கட்டிகளில் திட்ட விலக்கம் 0.083 க்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் செய்முறையை மாற்றி இன்னொரு மாதிரியை செய்து அளந்து பார்க்க வேண்டும்.

3 சிக்மா தரத்தில் நூற்றுக்கு 99.7% பொருட்கள் தர நிர்ணயத்துக்குள் வந்து விடும். பத்து லட்சத்துக்குப் பார்க்கும் போது 3,000 கட்டிகள் நிராகரிக்கப்பட்டு விடும். இதுதான் பொதுவாகப் பின்பற்றப்படும் தர நிர்ணய அளவு. 6 சிக்மா அளவு என்பது நிறுவனம் முயன்று விரயத்தைக் குறைத்து லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். உலகில் மிகச் சில நிறுவனங்களே இந்தக் கட்டுப்பாட்டுத் தரத்தை அடைந்துள்ளன.

ஆறு பற்றி பதிவிட எனக்கு நேரில் தெரிந்த, வலைப்பதிவில் அடக்கி வாசிக்கின்ற சிலரை அழைக்கிறேன்.

1. எல்லோரையும் கவர்ந்து விடும் நாகரீகக் கோமாளி
2. பல் துறை வித்தகர், பரவலான அறிவுடைய கொம்பன
3. எழுதினால் துள்ளு தமிழில் கலக்கி விடும் "உருப்படாத" நாராயணன்
4. எங்களுக்கெல்லாம் அண்ணன் கார்த்தி
5. நான் சந்தித்திராத நாச்சியார்
6. தமிழில் எழுதஅழைக்கும்் துர்கா

இந்தியாவின் மதச்சார்பின்மை - 2

சாணக்கியன், வஜ்ரா ஷங்கர், அருணகிரி ஆகியோர் கேட்ட அனுப்பிய கேள்விகளுக்கான என்னுடைய பதில்கள். இன்னும் பல கேள்விகள் எழுந்துள்ளன. என்னால் முடிந்த வரை பதிலளிக்க முயல்கிறேன்:

கேள்வி 1. முஸ்லீம் நாடுகளில் ஹஜ் மானியம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை.
கேள்வி 10. ஹஜ் பயணத்துக்கு மானியம் இருப்பது போல இந்துப் பயணங்களுக்கு ஏன் மானியம் இல்லை.

விடை
இதற்குத்தான் நான் என்னுடைய கருத்துக்களின் அடிப்படையைக் குறிப்பிட்டிருந்தேன். நாம் மட்டும் ஒரு முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் நமக்கும் ஹஜ் மானியம் கிடைக்குமே என்று முஸ்லீம்கள் கருதினால் இந்தியாவிலும் அவர்களுக்கு அதை கொடுப்பதை சரி என அவர்கள் நினைக்கலாம். அரசு மானியங்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_20.html

அதைச் சொல்ல வேண்டியது யார் என்பதுதான் கேள்வி. முஸ்லீம்கள் சமூகப் பெரியவர்கள் நம்முடைய மதக்கடமையைச் செய்ய அரசு உதவியை ஏற்றுக் கொள்வது சரியல்ல என்று உணர்ந்தால் "அவர்கள்" தம் சமூகத்தைத் திருத்த வேண்டும். அதன் மூலம் அரசுக் கொள்கையை மாற்ற வேண்டும். வெளியிலிருந்து இந்து அமைப்புகள் சுட்டிக் காட்டும் போது வீம்புதான் அதிகமாகும்.

கேள்வி 2. இந்தியாவில் குடியரசுத் தலைவரும், பிரதம் மந்திரியும் இந்துக்கள் அல்லாதவர்கள். ஒரு முஸ்லீம் நாட்டில் ஒரு முஸ்லீம் அல்லாதவர் நாட்டுத் தலைவர் ஆக முடியாது.
விடை
இந்திய அரசியலமைப்பு படி மதத்தின் காரணமாகவோ, மொழியின் காரணமாகவோ எவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படல் கூடாது. பெரும்பான்மையினர் மட்டும்தான் அரசுப் பதவிகளுக்கு வரலாம் என்ற முஸ்லீம் நாடுகளின் கொள்கையும் இந்தியாவுக்கு வர வேண்டுமா? இந்தி மொழி பேசும், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மத்தியப் பதவிகளுக்கு வரலாம் என்று நிலமை மாற வேண்டுமா?

இந்தியாவில் தகுதியுள்ள யாரும் நாட்டின் குடியரசுத்தலைவராக முடியும் என்று இருப்பது இந்தியாவின் மாட்சி. இந்த விஷயத்தில் இசுரேலிடமிருந்தோ, சவுதி அரேபியாவிடமிருந்தோ நாம் கற்க வேண்டியதில்லை. அவர்கள் நம்மைப் பார்த்துத் திருந்த வேண்டும்.


கேள்வி 3. முஸ்லீம் மதத் தலைவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக கட்டளைகள் பிறப்பிப்பதில்லை.
விடை: இதையும் சரி செய்ய வேண்டியது முஸ்லீம் மதச் சீர்திருத்தவாதிகளே தவிர வெளியிலிருந்து பிற மதத்தினர் குற்றம் சாட்டுவது உதவாது. எங்கெல்லாம் வறுமையும் பின் தேக்கமும் உள்ளதோ அங்குதான் முஸ்லீம்களோ பிற மதத்தினரோ வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதை மதத்தைக் குறித்து முத்திரை குத்துவது தகாது.

கேள்வி 4. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில் முஸ்லீம் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் பெரும்பான்மை ஜம்மு காஷ்மீரில் அது இதுவரை நடக்கவில்லை.

விடை: இதுவும் இந்துக்களுக்குப் பெருமை, நம்முடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. காஷ்மீர் மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை வளரும் போது அவர்களும் மதத்தைப் பார்க்காமல் வாக்களிக்கலாம். காஷ்மீரின் மன்னர் இந்துவாக இருந்ததை வரலாற்றில் படித்திருப்பீர்கள்.

கேள்வி 5. பாகிஸ்தானிலும், வங்காள தேசத்திலும் இந்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. இந்தியாவில் வளர்ந்து கொண்டே போகிறது.
விடை: பாகிஸ்தான், வங்காளதேச அரசுகள் சிறுபான்மையினரை ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது. அதனால் விளையும் விளைச்சலை அவர்கள் அனுபவிக்கிறார்கள், அனுபவிப்பார்கள். இந்திய மக்களும் அரசும் நல்லபடி நடந்து கொள்வதை, யாரோ ஒரு சில முரட்டு நாடுகள் செய்வதைப் பார்த்து மாற்றிக் கொள்ள முடியாது. நம்மை விடச் சிறப்பாக இருப்பவர்களைப் பார்த்து மேம்பட முயல வேண்டுமே தவிர, நம்மை விட கீழே இருப்பவரை நகல் செய்யக் கூடாது.

கேள்வி 6. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்ட இந்தியர்கள் தமது கோயில்களை மீட்க ஏன் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.
விடை: பிரிவினை பற்றி என்னுடைய கருத்தை ஏற்கனவே எழுதி விட்டேன். இந்தியாவில் இருக்கும் பகுதிகள் இந்துக்களுக்களின் ஏகபோகம் கிடையாது. எந்த மாறுதல்கள் ஏற்பட வேண்டுமானாலும், தொடர்புள்ள எல்லோரின் சம்மதமும் வேண்டும்.

கேள்வி 7. சோமநாதர் கோயிலை சீரமைக்க அரசு பணத்தைச் செலவளிக்காமல் பொது மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, தில்லியில் இடிக்கப்பட்ட மசூதிகளை அரசு செலவில் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியது ஏன்?

விடை: அப்படி காந்தி சொல்லியிருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. கோயில்கள் கட்டுவதும், மதத்தைப் பரப்புவதும் அரசின் வேலை இல்லை என்பதுதான் காந்தியின் கருத்து என்று எனது புரிதல். சோமநாதபுரம் கோயிலைப் பற்றி அந்த அடிப்படையில் கூறியிருக்கலாம். பரவலான மக்களிடம், கோயிலை மறுசீரமைக்க ஆதரவு இருந்தால் அதற்கான நிதியை அவர்களிடமிருந்து திரட்டி பணியைத் தொடங்க வேண்டும். அரசுப் பணத்தை அதற்குச் செலவளிக்கக் கூடாது என்பதில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

தில்லியில் மசூதிகளை அரசு செலவில் சரி செய்ய வேண்டும் என்பதின் பின்னணி என்ன என்று தெரியவில்லை. மசூதிகளை கலவரக் கூட்டத்தினிடமிருந்து பாதுகாக்கத் தவறிய அரசுதான் அதைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளில் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

கேள்வி 8. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது ஏன்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த நன்றி என்ன?

விடை: இமாலயத் தவறு என்று வேறு ஒரு காரணத்துக்காக மன்னிப்புக் கேட்ட ஒத்துழையாமை இயக்கத்துக்கு முந்தைய முயற்சிகள்தான் கிலாபத் இயக்கம். முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும், இந்திய மக்கள் முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் குரலையும் உலகுக்குக் காட்ட இந்திய மக்கள் தயாராக இருப்பார்கள் என்று கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் முஸ்லீம்களுக்கே அது ஒரு தர்மசங்கடமான முடிவாகப் போய் விட்டது.

இன்றும் பல மதங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இந்தியா முஸ்லீம்களை பாதிக்கும் விஷயங்களில் உலக அரங்கில் முஸ்லீம் சார்பான நிலையை இந்திய அரசு எடுப்பதுதான் நியாயம். இதற்காக என்னை இன்னும் தீவிரமாக போலி மதச்சார்பின்மைவாதி என்று சொல்லாமல் என்னுடைய அடிப்படை நம்பிக்கைகளை புரிந்து கொள்ள முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி 9. இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய மாநிலங்களில் அவர்களுக்கு ஏன் சிறுபான்மை பாதுகாப்பு இல்லை?
விடை: அப்படி இல்லையென்றால் அது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு குழுவும், கூட்டமும், இன்னொரு குழுவுக்கு அதன் உரிமைகளை மறுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி 11. சிறுபான்மை மதப் பள்ளிகளில் அவர்கள் மத நூல்கள் போதிக்கப்படும்போது, இந்துப் பள்ளிகளில் ஏன் இந்து மத நூல்கள் போதிக்கப்படுவதில்லை?
விடை: இந்து மதப்பள்ளிகளில் இந்து நூல்கள் போதிக்கப்படுகின்றன. நான் படித்த இந்து பள்ளியில் தினசரி இந்து மதப்பாடல்கள்தான் பாடப்படும். ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் போதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னால் அது விவாதத்துக்குரியதாகி விடும்.

கேள்வி 12. கோத்ராவுக்குப் பிறகான கலவரங்களை பெரிது படுத்திக் காட்டும்போது, காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 லட்சம் இந்துக்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?
விடை: கோத்ராவுக்குப் பிறகான கலவரங்கள் ஒரு பொறுப்பான அரசும், காவல் துறையும் வேண்டுமென்றே தூண்டி விட்டு அல்லது அடக்க முனையாமல் எரிந்த ஒன்று என்பது குற்றச்சாட்டு. காஷ்மீரில் கொல்லப்பட்ட இந்துக்களைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தும் தீவிரவாதிகளின் அடாவடியால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

கேள்வி 13. கோயில் பணத்தை சிறுபான்மையினர் நலனுக்காகச் செலவளிப்பது ஏன்? சிறுபான்மையினரின் பணம் அவர்கள் விருப்பப்படி செலவளிக்கப்படுகிறதே?
கேள்வி 16. இந்துக் கோயில்களின் நிர்வாகியாக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படலாம். சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?

விடை: எந்தக் கோயிலின் பணம் சிறுபான்மையினர் நலனுக்காக செலவிடப்படுகிறது? கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் நம்பிக்கை உடைய மக்களின் பிரதிநிதிகளால்தான் நிர்வாகிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் தாம்தான் அந்தப் பிரதிநிதி என்று நினைத்தால் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்.

இதுவே சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

கேள்வி 14. பள்ளிகளின் சீருடை இருப்பது போல, சட்டத்தில் ஏன் ஒரே மாதிரியான சமூகச் சட்டங்கள் இல்லை?f
விடை: பள்ளியில் சேரும்போது சீருடை போடுவேன் என்று ஏற்றுக் கொண்டு சேர்கிறோம். இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் போது பல்வேறு பிரிவினர் தமது வாழ்க்கையை தமது கோட்பாடுகளின் படி நடத்தலாம் என்ற உறுதிமொழியுடன் இன்றைய இந்திய நாடு உருவானது. சீரான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அனைவரது சம்மதமும் வேண்டும். அதை இந்துப் பெரும்பான்மை மட்டும் முடிவு செய்ய முடியாது.

கேள்வி 15. காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன்?
கேள்வி : நீங்கள் இந்தியக்குடிமகன் தானே? ஆம் எனில் காச்மீரத்தில் நிலம் வாங்க உங்களுக்கு உரிமை இல்லையே? எங்கே இருக்கிறது சமத்துவம்?

விடை: 370வது பிரிவின் கீழ்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அதன் விதிகள் அனைத்தும் காஷ்மீர் மக்களே விரும்பி சொல்லும் வரை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

370வது பிரிவு மாநிலம் ஒன்றுக்கு அதிக அதிகாரம் கொடுக்கிறது என்றால் அதை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்பதற்கு என்ன சொல்வீர்கள் தமிழ்நாட்டிலிருக்கும் நான் ஏன் காஷ்மீரில் போய் நிலம் வாங்க வேண்டும்? மும்பையிலிருந்து ஒருவர் ஏன் காட்டங்கொளத்தூரில் நிலம் வாங்கும் உரிமை இருக்க வேண்டும்? அது தேவையில்லாத சிக்கல்களைத்தானே வளர்க்கிறது?

இது ஒரு பெரிய கேள்வி. எனது அறிவுக்கு எட்டிய வரையில் இந்தியா முழுவதுமே நிலம் வாங்கிவிற்பதில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது நல்லது.

கேள்வி 1. தமிழ் நாடு உட்பட 4 மாநிலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் ஆட்சியாளர்களால் தடை செய்யப் பட்டுள்ளது, அதுவும் பார்க்கப்படாமலேயே. உலகெங்கிலும் கிருத்தவ தலைமையிடம் உள்ள நாடுகளிலும் நகரங்களிலும் இந்தப்படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்தியவின் மற்ற மாநிலங்களில் இந்தப்படம் கிருத்தவர்களின் மன நிலையை பாதித்துவிட்டதா? பதில், 'இல்லை' யெனில் ஏன் தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாஅது? இங்குதான் ஓட்டுவங்கி போலிமதச்சார்பின்மை ஓங்கி ஒலிக்கிறது.

விடை: டாவின்சி கோட் படத்தின் மீதான தடை கடுமையான கண்டனத்துக்குரியது. தீபா மேத்தாவின் தண்ணீர் படத்தை முடக்கியது போல உசைனின் ஓவியங்களைப் பழிப்பது போல இந்தத் தடையும் குறுகிய மனம் படைத்த மத சக்திகள் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதுதான்.

கேள்வி 2. பங்களாதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் 1 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறதே, அவர்களை வெளியேற்றவேண்டுமா? அவர்கள் குறிப்பிட்ட ஓட்டு வங்கி மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்தானே மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? வேறு காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

விடை: மக்கள் புலம் பெயருதல் என்பது பல காரணங்களுக்காக நடைபெறுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை ஒரே பகுதியாக இருந்தவை சில தலைவர்கள் சேர்ந்து கோடு கிழித்து விட்டதால், எல்லைப் புற மக்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருத வேண்டும், அந்தப் பக்கம் வறுமையில் வாடும் மக்கள், வேலை வாய்ப்புகளுக்காக இந்தப் பக்கம் வரக் கூடாது என்பது எவ்வளவு செயற்கையானது என்பதை நினைத்து பாருங்கள்.

நாளைக்கே சென்னையும், செங்கல்பட்டும் தனித்தனி நாடுகளாக ஆக்கப்பட்டால், செங்கல்பட்டிலிருந்து சென்னை வருபவர்கள் எல்லோரும் சட்டப்படி குற்றவாளிகள்தான். தர்மப்படி அது அவர்களது அடிப்படை உரிமை. இதிலும், பொருளாதார, அரசியலமைப்புகளின் ஆழ்ந்த விவாதங்கள் நடக்க வேண்டும்.

கேள்வி 2. இதுபோல் 1 கோடி இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தால் இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? மேம்போக்காக பதிலளிக்காமல் கேள்விக்குறி இட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

விடை: இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு வந்து பிழைப்பு நடத்த தேவை இருந்தால் அதை இங்கு வாழும் மக்களும் ஏற்றுக் கொண்டால் எந்த அரசும் எதையும் செய்ய முடியாது. அமெரிக்காவின் தென் பகுதிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த வேலைக்காரர்கள் லட்சக் கணக்கில் "சட்ட விரோதமாக" பணி புரிகிறார்களாம். அதை எதிர்த்து அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசுவதுதான் மிச்சம். ஒவ்வொரு வீடும், வணிக நிறுவனமும் அத்தகைய வேலைக்காரர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை நம்பி இருக்கும் போது, வாஷிங்டனில் இருக்கும் அரசுக்கு பேச்சு மட்டும்தான் மிஞ்சுகிறது.

அதே நிலைமைதான் பீகாரிலும், அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும் வாழும் வங்காள தேச குடியேறிகளுக்கும். தமிழ் ஈழ நண்பர்களுக்கு அந்த நிலைமை ஒரு போது வராது. தமிழ் நாட்டை விட வளமான நாடு கண்டு போர் நின்று ஈழம் கண்டதும், நம்ம ஊர் மக்கள் அங்கு குடி பெயரப் போகிறார்கள்.

கேள்வி 3. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் மற்றும் சிறப்புச் சலுகைகளுடன் எல்லா வாய்ப்புகளையும் கல்வி, வேலை, அரசியல் ஆகிய துறைகளில் அதிகமாகவே பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்போது புதிதாக இப்போது மத ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரச் உட்பட சில கட்சிகள் குரல் கொடுக்கின்றனவே, இது போலி மதச்சார்பின்மையின்றி வேறு என்ன?

விடை: உங்களுக்கும் இசுலாமிய நண்பர்கள் இருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். முஸ்லீம்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அரசு ஆதரவு கொடுத்து உதவிகள் தேவையில்லை என்று நீங்கள் மனதார நம்புகிறீர்களா? நான் பார்த்த வரையில், சராசர் முஸ்லீமின் பொருளாதார, சமூக நிலைமை இன்னும் பல படிகள் உயர வேண்டும். அதற்கு இட ஒதுக்கீடுதான் தீர்வா என்றால் தெரியவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கும் போது, அவர்களை விட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் முஸ்லீம்கள் பொது பிரிவில் போட்டி போட வேண்டும் என்பது சரி என்று படவில்லை.

இதற்கும் போலி மதச்சார்பின்மைக்கும் என்ன தொடர்பு? சமூகத்தின் ஒரு பகுதிக்கு அரசு உதவ வேண்டும் என்றால் அது போலி மதச்சார்பின்மை ஆகி விடாது. இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்த்ப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுக்கும் எல்லோரும் இந்துத்த்துவாவாதிகள் என்று சொல்வீர்களா என்ன?

கேள்வி 4: சிவில் சட்டங்கள் மதப்படி இருக்கலாமென்றால் கிரிமனல் சட்டஙகளும் ஏன் மதப்படி இருக்கக்கூடாது? ஒரு இச்லாமியர் திருடினால் கையை வெட்டவேண்டும் இச்லாமிய பெண் நடத்தை தவறினால் தெருவில் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இந்தியாவிலும் கடைபிடிக்கலாமே?

விடை:
நான் ஏற்கனவே சொன்னபடி முஸ்லீம் சமூகம் அப்படி விரும்பினால், கிரிமினல் சட்டங்களும் மதப்படி இருக்கலாம். அது வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சிவில் சட்டங்களும் அவர்கள் விரும்பும்போது மாற்றப்படலாம். அதைப் பற்றிப் பேச நமக்கு உரிமை கிடையாது.

இந்துக் கோயில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும், இந்துக்கள் சாதியைக் குறிப்பிட்டு திருமண விளம்பரம் கொடுப்பது கூடாது என்று முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்? நம்முடைய குறைகளைத்தான் நாம் நீக்க முயல வேண்டுமே ஒழிய, அடுத்தவரை பழிக்க நமக்கு உரிமை கிடையாது.


கேள்வி 5: அதை நமது நாகரீக சமுதாயம் ஏற்காது எனில் அதைப்போலத் தானே பலதார மணமும் 'தலாக்' விவாகரத்துக்களும்? உமது தங்கையை ஓர் இச்லாமியர் மதம் மாற்றி திருமணம் செய்து பின்னர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து உங்கள் தங்கையை தலாக் விவாகரத்து செய்தால்தான் உங்களுக்கு அதில் உள்ள தவறுகள் புரியுமா? இதை தனி நபர் தாக்குதலாக தயை கூர்ந்து நினைக்கவேண்டாம். உங்களுக்கு புரிய வைப்பதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னிக்கவும்.

விடை:
இதில் மன்னிப்புக் கேட்க எதுவும் இல்லை. என் தங்கை மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் அதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டுதான் செய்திருப்பாள். அந்த மதத்தின் சட்டங்கள் அநீதியானவை என்று நான் நினைத்தாலும் நானும் முஸ்லீமாக மாறினால் ஒழிய அதைப் பற்றி விவாதிக்க, குரானைப் படித்துப் புரிந்து கொண்டு குரானில் சொல்லியிருப்பது அப்படியில்லை என்று விவாதம் புரிய எனக்குத் தகுதி கிடையாது.

பல முஸ்லீம் நாடுகளில் முத்தலாக்கை தடை செய்துள்ளார்கள் என்று படித்தேன். அதே மாதிரி இந்திய முஸ்லீம் சமுதாயமும் தடை செய்ய முடிவு செய்யலாம். அதற்கு ஒரு மிகப் பெரிய தடைக் கற்கள் இந்துத்துவா சக்திகள்தான் என்பது எனது கருத்து. வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் இருக்கும் போது, சீர்திருத்தவாதிகளின் பேச்சு சமூகத்தில் எடுபடாது. நாம் இதை விட்டுக் கொடுத்தால் இன்னும் என்ன என்ன கேட்பார்களோ என்று பழமை வாதிகள் நடுநிலையாளர்களை பயமுறுத்த்தி சீர்திருத்தங்களை முடக்கி விடுவார்கள்.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன - 15

"ஒரு சமூக சேவகனின் முதல் எசமான் அவரது மனசாட்சிதான். நாட்டின் சமூகச் சட்டங்கள் மனசாட்சிக்கு் எதிராக இருக்குமானால், அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை. பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு மனிதனின் மனமாற்றம் போதும். எவ்வளவோ துன்பங்கள், தண்டனைகள் கிண்டல்களைச் சந்தித்தாலும், தனது நம்பிக்கையில், சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் ஒருவனது முன்னால் எல்லாம் தூளாகி விடும்."

சிறுவர் மணத்தின் மூலம் தன்னை விட இரண்டு வயது மூத்த சிறுமிக்கு விபரம் தெரியாத வயதிலேயே பெற்றோரால் மணமுடிக்கப்பட்ட ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு "அந்த மணத்தைப் புறக்கணிக்குமாறும், அந்த ஆணும் பெண்ணும் தமது வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று காந்தி சொன்ன அறிவுரை சட்டத்துக்கு எதிரானது என்று எழுதுகிறார் ஒரு வழக்கறிஞர்.

'ஒரு இந்து ஆண் பல தார மணம் புரிந்து கொள்ளலாம், பெண்ணுக்கோ ஒரே திருமணம்தான் என்று இருப்பதால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்' என்றும் கேட்கிறார் அந்த வழக்குரைஞர்.

அந்த வழக்கறிஞருக்குப் பதிலாகத்தான் காந்தி மேற்சொன்னதை எழுதுகிறார்.

வியாழன், ஜூன் 29, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 14

போனபெர்ட், காந்தி பற்றி எழுப்பிய வினாக்களுக்கான பதில்கள் இதில் அடங்கியுள்ளன என்று எண்ணுகிறேன்.
QUOTE
1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.
அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?
2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?
3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?
4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?
5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?
6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.
UNQUOTE

ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் அவனது எண்ணங்களையும் நடத்தையையும் பெரிதும் வழி நடத்துகின்றன.

காந்தி பிறப்பால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர், பிறந்த சாதியும் உயரந்தது என்று கருதப்பட்ட ் சாதி, தந்தையின் அலுவலின் மூலம் பலவிதமான உயர் நிலை தொடர்புகளும் குடும்பத்துக்கு இருந்தன. சிறுவயதில் வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதில் அவரது பெற்றோரும், சகோதரர்களும் மிகக் கட்டுப்பெட்டியாகவே இருந்து வந்துள்ளனர். விளையாட்டு வயதில் அதைக் கேலி செய்யும் போக்கைத் தவிர, எதிர்ப்புக்கான எந்த அறிகுறியும் காந்தியிடம் காணப்படவில்லை.

உள்ளூரில் சோடை போய்விடுவோம் என்ற பயத்தில் இலண்டனுக்குக் கப்பலேறிய இளைஞனின் முதல் நோக்கம் பாரிஸ்டர் பட்டம் பெற்று பெரிய வக்கீலாகி சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்தில் செய்த சோதனைகள் எல்லாம், செலவைக் கட்டுப்படுத்துவதையும், படிப்பை முடிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையே. இந்தியா வந்து வக்கீல் தொழிலிலும் எந்த விதமான எதிர்காலமும் காணப்படாத நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு மூட்டைக் கட்டிக் கொள்கிறார்.

தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.

இவை எல்லாமே காந்தியின் சுய சரிதத்தில் அவரே கூறியவை. இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.

உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.

சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே. காந்தியே சொன்னது மாதிரி, 'ஒரு விவாதத்தில் தன் கருத்தை நிலை நாட்டுமளவுக்கு பலம் இல்லாத தரப்புக்கு அதிக சாதகம் காட்ட வேண்டும்' என்ற முறையில் காந்தி பல இடங்களில் தனது நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தாலும், அம்பேத்காரின் திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே நம்புகிறேன்.

2. எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.

3. வன்முறையை எதிர்த்தாலும் ஒரு ஆட்சியின் கீழ் அது தரும் பலன்களை அனுபவித்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு அந்த ஆட்சிக்கு ஆபத்து வரும்ப் போது அதைக் காக்க ஆயுதம் எடுக்கும் கடமை உண்டு என்ற நம்பிக்கையில் அவர் ஆங்கிலேயர்களின் தரப்பில் சண்டை ஆதரவு திரட்டினார். ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்த போது, நாஜிக்களுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்காமல் அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முதிர்ச்சிக்கு (சிலர் சிரிக்கலாம்) போயிருந்தார்.

'காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி' என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது.

ஒரு வாதத்துக்கு நேரம் வந்ததும் இந்தியாவை ஆள் முடியாமல் ஊருக்கு ஓடி விட்டார்கள் ஆங்கிலேயர்கள் என்று வைத்துக் கொண்டாலும், காந்தியின் அரசியலால், இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாமல் சுதந்திர இந்தியா சிதறிப் போயிருக்கலாம்.

4. 'என்ன செய்தாவது, ஹிட்லரையும், சப்பானிய ஏகாதிபத்தியத்தையும் துணைக் கொண்டாவது நமது குறிக்கோளை அடைந்து விட வேண்டும்' என்பது நேதாஜியின் கொள்கை. 'நம் இலக்கை அடைந்த பிறகு நமது வழிகளை மக்களாட்சியாக தனிமனித உரிமையாக மாற்றிக் கொள்ளலாம்' என்பது அவரது எண்ணம். 'நாய் விற்றக் காசு குரைக்காது' என்ற நடைமுறைத் தத்துவம் அவரது.

'எப்படி நம் குறிக்கோளை அடைகிறோமோ அதைப் பொறுத்துதான் பலன்கள் இருக்கும்' என்பது காந்தியின் நம்பிக்கை. 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், வன்முறை மூலம் சுதந்திரம் அடைந்தால் நாம் அமைதியான நாட்டை உருவாக்க முடியாது' என்பது அவரது கொள்கை. 'அன்பால் எதிரியையும் வென்று விட வேண்டும், ஆங்கிலேயரை வெல்ல உதவிக்காக நாசிக்களையும், சப்பானியர்களையும் உதவிக்கு அழைப்பதை விட அடிமைகளாக இருப்பதே மேல்' என்பது காந்தியின் எண்ணம்.

இதனால்தான் நேதாஜி காங்கிரசை வழி நடத்த இரண்டாம் முறை முயன்ற முறை காந்தி தனது எதிர்ப்பினால் அவருக்கு வாய்ப்பை மறுத்தார். நேதாஜி ஒரு ஆண்டு காங்கிரசு தலைவராக இருந்தார் என்பதும், அப்போதும் காந்தி எதிர்த்திருந்தால் தலையாட்டிப் பொம்மையான கட்சி காந்தி சொல்வதையே கேட்டிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 13

காந்தியும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட மக்களும்

காந்தி பிறப்பால் உயர்ந்தது என்று கருதப்படும் சாதியைச் சேர்ந்தவர். அவர் என்னதான்
 • தன் வீட்டுக் கழிப்பறையைத் தானே செய்தாலும்,
 • உயர் சாதியினர் செய்யக் கூடாது என்று கருதப்பட்ட இழிந்தவை என்று ஒதுக்கப்பட்ட தோட்டி வேலை பிறருக்காகப் பார்த்தாலும்,
 • ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சமமாக மதித்து ஏற்றுக் கொண்டாலும்,
 • அந்தக் குடும்பத்தின் குழந்தையை தன் வளர்ப்பு மகளாக எடுத்துக் கொண்டாலும்,
 • ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்திருந்தால்தான் தான் அந்த திருமணத்தை ஆசிர்வதிப்பதாகச் சொன்னாலும்,
 • தாழ்த்தப்பட்டோருக்கு அரிசனங்கள் என்று பெயர் கொடுத்தாலும்,
அவர் பிறப்பால் உயரந்தது என்று கருதப்பட்ட் சாதியைச் சார்ந்தவர்.

தாழ்த்தப்பட்ட இனங்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வரும் கொடுமைகளை படித்துப் பார்த்து மட்டுமே புரிந்து கொண்டவர். அதனால்தான், அவ்வளவு புரிந்து கொண்டும், இந்து மதத்தின் வர்ணாசிரம தருமத்தை எதிர்க்காமல், 'சாதிகளினிடையே ஏற்றத்தாழ்வு மறைந்தால் மட்டும் போதும், சாதி முறையையே அழிக்க வேண்டாம்' என்று எழுதியும் சொல்லியும் வந்தார்.

சாதி முறையின் கொடுமுகத்தை நேரில் கண்ட தலித் தலைவர்களுக்கு அதில் கண்டிப்பாக உடன்பாடு இருக்க முடியாது. ஏதாவது செய்து தங்களை ஏமாற்றி, சாதி முறையை நீடிக்கச் செய்து தம்மை அடக்கி வைத்திருப்பதே காந்தியின் குறிக்கோள் என்று அவர்கள் நினைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.

காந்தி ஒரு போராளியாக இருந்தாலும், இருக்கும் அமைப்புகளை அப்படியேத் தூக்கி எறிந்து விட்டு புதிய உலகம் காண வேண்டும் என்ற கனவு காணும் போராளி இல்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விட, உள்ளே இருந்து கொண்டே ஆங்கிலேயர்களின் மனதை மாற்றி இந்தியாவுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் முதலில் முயன்றார். எல்லாக் கதவுகளும் அடைபட்ட பிறகுதான், வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி முழக்கமிட ஆரம்பித்தார்.

அதே போல, சாதி முறையை ஒரேயடியாக ஒழித்து விடுவோம் என்று முயலாமல், அந்த முறையினுள்ளேயே நடக்கும் அநீதிகளைக் களைவோம் என்று முயல்வோம். அதன் பிறகும்் வேலை ஆகவில்லை என்றால் சாதியை ஒழிப்பது பற்றி சிந்திக்கலாம் என்பது காந்தியின் அணுகுமுறை.

புதன், ஜூன் 28, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 12

காந்தியின் உண்ணாநோன்புகள் மிகப் பேர் பெற்றவை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம், சாக்கு. பெரும்பாலும் அவை தனிப்பட்ட காரணங்கள், பல முறை பொது நலனுக்காக.

உண்ணாநோன்பு காந்தியின் "சர்வரோகநிவாரணி"
1. மலச்சிக்கல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
2. ரத்தசோகை இருந்தால் உண்ணாமலிருங்கள்.
3. காய்ச்சல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
4. செரிமானம் சரியில்லையென்றால் உண்ணாமலிருங்கள்.
5. தலைவலி வந்தால் உண்ணாமலிருங்கள்.
6. மூட்டுவலி இருந்தால் உண்ணாநோன்பு மேற்கொள்ளுங்கள்.
7. சோகமாக இருந்தால் சாப்பிடாதீர்கள்.
8. படபடப்பாக இருக்கும்போது விரதமிருங்கள்.
9. பெருமகிழ்ச்சி வந்தால் உணவைத் தள்ளிப் போடுங்கள்.
10. உடல் பருத்தால் உணவு உண்ணாதீர்கள்.

இப்படி, ஏதாவது சாக்குச் சொல்லி உணவைக் குறையுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். உணவுக்குத் தேவையான அளவு உழைத்த பிறகே சாப்பிடுங்கள். மருத்துவருக்கும், மருந்துகளுக்கும் கொடுக்கும் பணத்தை முற்றிலும் மிச்சப்படுத்தி விடலாம்.

இந்தியாவில் பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு காந்தி மேற்கொண்ட உண்ணாநோன்புகள் பரவலாக அவதானிக்கப்பட்டன.
1. அத்தகைய முதல் நோன்பு, அகமதாபாது ஆலைத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் வலுவிழந்து போகக் கூடாது என்று தொழிலாளிகளை வலியுறுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது. அது எதிராளிகளும், காந்தியின் நண்பர்களுமான ஆலை முதலாளிகளின் மீதும் சங்கடத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை நல்ல முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தது.
2. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக 1924ல் மேற்கொள்ளப்பட 21 நாள் உண்ணாநோன்பு எதிர்பார்த்த பலன்களை ஈட்டாமல் போனது.
3. அரிஜனங்களுக்கு தனி வேட்பாளர் முறைக்குப் பதிலாக மாற்று இட ஒதுக்கீட்டு முறை வேண்டி 1935ல் அவர் மேற்கொண்ட நோன்பு ஆறு நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் இந்தியாவில் தீண்டாமை என்று கொடுமைக்கு இருந்த பெருமை அழிந்தது. கோயில்கள் ஆண்டவனின் சந்நிதிகளாயின. தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் அதற்கு அவமானப்பட வேண்டும் என்ற சமூக நிலை உருவாகியது.
4. கடைசியாக இந்து - முஸ்லீம் கலவரங்களுக்கு எதிராக கொல்கத்தாவிலும், புதுதில்லியிலும் 1947, 48ல் அவரது விரதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றின.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 11

காந்தி தன் வாழ்வில் இரண்டு முறை வன்முறை கூட்டங்களினால் அடித்துத் துவைக்கப்பட்டிருக்கிறார்.

முதல்முறை, தென் ஆப்பிரிக்காவில் போராடி வரும் நேரத்தில் இந்தியா திரும்பி விட்டு மனைவி மக்களுடன் திரும்ப தென் ஆப்பிரிக்க போன சமயம். அவர் சென்ற எஸ் எஸ் கூர்லாந்து என்ற கப்பலுடன் நாதேரி என்ற இன்னொரு கப்பலும் அதே நேரத்தில் மும்பையில் இருந்து நேட்டால் துறைமுகத்தை நோக்கிச் சென்றன. இரண்டு கப்பல்களும் ஒன்றாக துறைமுகத்தை அடைந்தன.

காந்தி இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பிரச்சாரம் செய்தார், இப்போது இந்தியர்களை குடியேற்றி தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களை அச்சுறுத்தும் வண்ணம் இரண்டு கப்பல் நிறைய பிணைக்கப்படாத சுயேச்சை இந்தியர்களைக் கூட்டி வந்துள்ளார் என்று வெள்ளை அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து மக்களைக் கோபப்படுத்தியிருந்தனர்.

கப்பல்களை கரைசேர விடாமல் திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெற்றன. அரசில் உயர் பதவியில் இருந்தவர்களு கூட இந்தியர்களுக்கு எதிரான இந்த முயற்சிகளை தூண்டி விட்டனர். 23 நாட்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் கப்பல்களை கரைக்கு வரவும், பயணிகளை கரையிறங்கவும் அதிகாரிகள் அனுமதித்தனர்.

தனது மனைவியையும் குழந்தைகளையும் முன் கூட்டியே வண்டியில் அனுப்பி விட்டு, காந்தி லாட்டன் என்ற வெள்ளை நண்பர் ஒருவருடன் கால்நடையாக போவது என்று முடிவு செய்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் அவரை அடையாளம் கண்டு கூச்சல் இடவே, ஒரு கலவரக் கூட்டம் கூடி விட்டது.

தன் நண்பரிடமிருந்து பிரிக்கப்பட்ட காந்தி கூட்டத்தின் கையில் தர்ம அடி வாங்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் வெளிப்புற அளியைப் பிடித்துக் கொண்ட காந்தியின் மீது அடிகளும், உதைகளும் சரமாரியாக விழுந்தன. அந்த சமயம் அங்கு தற்செயலாக வந்த காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டரின் மனைவியின் தலையீட்டால் அவர் உயிரோடு தப்பினார். அதற்குள் வெள்ளையர்கள் காந்தியின் முகத்திலும், உடலிலும் குத்துகளைப் பொழிந்து விட்டிருந்தனர். அவரது தலைப்பாகைப் பிடுங்கப்பட்டிருந்தது. அவர் வெள்ளையர்களால் காலால் உதைக்கப்பட்டிருந்தார்.

"அவருக்கு நடந்ததற்கு காந்தி தன் வாழ்நாள் முழுவதும் எல்லா வெள்ளை முகங்களையும் வெறுத்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் எட்வர்டு தாம்ஸன். ஆனால் காந்தி, தன்னைத் தாக்கியவர்களை சட்டத்தின் மீது தண்டிக்க முனைய மறுத்து விட்டார். அவர்கள் செய்ததற்கு பொறுப்பாளிகள், அவர்களைத் தூண்டி விட்ட தலைவர்கள்தான், அந்தத் தலைவர்களும் தான் குற்றமற்றவன் என்று தெரிந்தால் கண்டிப்பாக மனம் மாறுவார்கள் என்று கூறி வெள்ளைச் சமூகத்தின் அத்தகைய தலைவர்களில் ஒருவரான அரசு வழக்குரைஞர் எஸ்கோம்பிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டார்.

இதற்குப் பிறகு அவர் குற்றுயிராகத் தாக்கப்பட்டது பதான் இனத்தைச் சேர்ந்த முரட்டு தேசியவாதிகளால். இந்தியர்கள் அடையாள அட்டை வாங்குவதை கட்டாயப்படுத்தும், இந்தியர்களை அடையாள அட்டைக் கேட்டுத் தேடும் உரிமையை காவல் துறைக்கு வழங்கும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி காந்தி உட்பட பல இந்தியர்கள் சிறைக்குப் போனார்கள். சிறையிலிருந்து நேராக ஜெனரல் ஸ்மட்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்பட்ட காந்தி இந்தியர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து கொண்டால், கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற சமரசத்தை ஏற்றுக் கொண்டார்.

காந்தி பதினைந்தாயிரம் பவுண்டுகள் வாங்கிக் கொண்டு இந்தியர் நலன்களை விற்று விட்டார் என்று மீர் ஆலம் என்ற முரட்டு பதான் குற்றம் சாட்டினார். பதிவு செய்யச் செல்லும் எந்த இந்தியனையும் தான் கொல்லப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

அப்படியே முதல்முதலில் பதிவு செய்யப் போன காந்தியை ஒரு குழுவாகச் சேர்ந்து நையப் புடைத்து விட்டனர்.

தன்னைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட காந்தி அவர்களை விடுதலை செய்து விடுமாறும், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடரப் போவதில்லை என்றும் சொல்லி விட்டார்.

அதன் பின்பு, கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படாமல் சத்யாகிரகம் மீண்டும் ஆரம்பித்தது.

(லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த சம்பவங்கள்)

நாம், ஒருவர் ஒரு சுடுசொல் சொல்லி விட்டார் என்று வாழ்நாள் முழுவதும் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டோம் என்று இருக்கிறோம். நம்மைப் படைத்துக் காக்கும் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு விடிவே இல்லை என்று உணர்ந்தால் எந்த சக மனிதன் மீதும் கசப்பையும் வெறுப்பையும் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.

செவ்வாய், ஜூன் 27, 2006

திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை

அதிமுக தோற்று திமுக தலைமையிலான கூட்டணி வென்றால் என்னென்ன நல்லது நடக்கும் என்று நினைத்தோமோ அதில் பலவற்றில் மண்ணள்ளிப் போட்டாயிற்று.

ஜெயலலிதா மக்களாட்சி மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்து ஆணவமாக நடந்து கொண்டார் என்று சொன்ன நீங்கள் இன்றைக்கு அவர் செய்த அதே தவறுகளை அவர் பெயரைச் சொல்லியே நியாயப்படுத்தி செய்கிறீர்கள்.
 1. சட்ட சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூண்டோடு நீக்கம் செய்தல்
 2. அவைத் தலைவரை கட்சி உறுப்பினர் போல நடக்கச் செய்தல்
 3. எதிர்க்கட்சியினர் பேசும் போது குறுக்கே குறுக்கே பேசி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை ஆக்கிரமித்தல்
 4. தனக்கு மாறான கருத்துகளை ஒரு பத்திரிகை எழுதினால் அதன் மீது சகிப்பின்மையைக் காட்டுதல். கண்ணகி சிலை பற்றி மாற்றுக் கருத்தை எழுதி விட்டதால் ஊடகங்கள் எல்லாம் பார்ப்பனச் சதிக்கூட்டங்கள் என்று வெறுப்பை உமிழும் நீங்கள் ஜெயலலிதாவை விட எந்த விதத்தில் உயர்த்தி?
 5. பெட்ரோல் விலை ஏறியது, எதிர்க்கட்சியிலிருந்த போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்கக் கோரிய நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வீர்கள் என்பதுதானே உங்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணமாயிருந்திருக்கும். அவர்கள் எனக்கு என்ன பதிலைச் சொன்னார்களோ அதே பதில்தான் நானும் அவர்களுக்குச் சொல்லுவேன் என்றால் ஏன் ஆட்சி மாற்றம்?
 6. அதிகாரிகளைப் பந்தாடினார்கள், குறிப்பிட்ட குடும்பத்தை வளர்த்தார்கள் என்றெல்லாம் வெறுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மாற்றாக வந்த உங்களின் நடவடிக்கைகள் என்ன வேறுபாட்டைக் காட்டுகின்றன?
 7. கூட்டணிக் கட்சியினரைத் துச்சமாக மதித்தார் என்ற ஜெயலலிதாவுக்கும் காங்கிரசைக் கிள்ளுக்கீரையாக மிதிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றும் வென்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒருவரை அமைச்சராக்கியுள்ளீர்கள். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முதிர்ச்சி ஏன் இல்லாமல் போய் விட்டது. தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு என்று என்ன ஒரு சாக்கு.
இப்படிச் செயல்படுங்கள்
 • இரண்டு ரூபாய்க்கு அரிசி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கிடு, கோயில்களில் சம உரிமை என்று நீங்கள் செய்யும் சீர்திருத்தங்களைத் தொடருங்கள்.
 • தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை கைவிட்டு கட்சிப் பணிக்கு அனுப்புங்கள் (இளைஞர் அணித் தலைவர்?).
 • கேபிள் தொலைக்காட்சி வினியோகத்தை முறைப்படுத்தும் முழுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வாருங்கள்.
 • கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் மீது நடவடிக்கைகள் எடுங்கள். வாழ்வோம் வாழ விடுவோம் என்று இரண்டு பேரும் ஏதாவது உடன்படிக்கைக்கு வந்து விட்டீர்களா?
 • தமிழ் நாட்டின் நெடுஞ்சாலைகளில் இந்தி மொழி எழுத்துகளை் நீக்க வழி செய்யுங்கள்? வட மாநிலங்களில் தமிழுக்கு இடம் கொடுத்தவுடன் இங்கு வந்து எழுதச் சொல்லுங்கள்.
 • இறுதியாக, ஆனால் அனைத்திலும் முக்கியமாக தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியைக் கைவிட்டு விடுங்கள். அரசியலில் எவ்வளவோ நீக்குப் போக்கு காட்டியுள்ளீர்கள், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாததற்கு நிச்சயமாக உலகம் உங்களை வாழ்த்தும்.

தொ(ல்)லைக் காட்சி

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்

தொலைக் காட்சியை எடுத்துக் கொண்டால் எது அதிகம், குணமா? குற்றமா?

தொலைக்காட்சியின் மோசமான விளைவுகளைப் பற்றி பேச்செடுக்கும் போது எல்லாம், நேஷனல் ஜியோகிராபிக், அனிமல் பிளானட் போன்ற ஓடைகள் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளைத் தருகின்றன. குழந்தைகள் ஆங்கில நிகழ்ச்சிகளை பார்த்து ஆங்கில புலமையைப் பெருக்கிக் கொள்கிறார்கள், அதனால் தொலைக்காட்சியில் நல்லதும் கிடைக்கிறது என்ற வாதம் எழுகிறது.

மறு பக்கத்தில் நாள் முழுவதும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள், மெகா தொடர்கள், மணிக்கு ஒரு தடவை செய்திகளை உடைக்கும் செய்தி ஓடைகள் என்று நம் மனதை வெள்ளக்காடாக்கும் வகையில்தான் நிகழ்ச்சிகள் உள்ளன.

இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் என் வீட்டில் பார்த்து விட்டேன். பெரியவரும், சிறியவரும் காலையில் ஜெயா டிவி, சன் டிவியில் பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து, அரட்டை அரங்கம், 11.30 தமிழ்ப் படம் சன் டிவியில், சன் டிவியில் செய்தி வாசிக்கும் போது1 மணி படம் கே டிவியில், அப்புறம் திரைச்சோலை (சன் டிவியில்), கடைசியாக மாலைத் திரைப்படம் என்று இடைவிடாமல் தொலைக்காட்சி வரவேற்பறையை ஆக்கிரமித்திருந்தது.

குழந்தைகள் போகோ ஓடையிலும், தாய்மார்கள் மெகா தொடர்களிலும், மாணவர்கள் கிரிக்கெட் ஒளிபரப்பிலும், இதை எல்லாம் தாண்டிப் புனிதமான அப்பாக்கள், அண்ணன்கள் செய்தி ஓடைகளிலும் விட்டிப் பூச்சி போல விழுந்து கொண்டிருக்கிறோம்.

மனித வரலாற்றில் இது வரை பார்த்திராத ஒரு ஆக்கிரமிப்பு தொலைக்காட்சி. ஒரு நாளிதழ் வாங்கினால், நாம் அதைக் கையில் எடுத்து படித்து, மூளைக்கு வேலை கொடுத்தால்தான் சரக்கு மனதில் பதிகிறது. தொலைக்காட்சியிலோ, கையில் தானியக்கியுடன் உட்கார்ந்து கொண்டால் கண்களையும், காதுகளையும் முடமாக்கி விட்டு நேரடியாக மூளைக்கு காட்சிகளையும், ஒலிகளையும் அனுப்பி வைக்கின்றன நிகழ்ச்சிகள். திரைப்படக் கொட்டகையில் அத்தகைய நுட்பம் இருந்தாலும் அது மூன்று மணி நேரத்தில் ஓய்ந்து விடுகிறது. திரைப்படம் பார்க்க வீட்டிலிருந்து தயாராகி, உடை உடுத்தி அரங்குக்கு பயணித்து, சீட்டு வாங்கிக் காத்திருந்து மூன்று மணி நேரம் நமது மனதை வெளி ஆதிக்கத்துக்கு உட்படுத்துகிறோம். விடுமுறை நாள் முழுவது, மாலை முழுவதும், இரவு கண் விழித்து என்று வாழ்க்கையில் எந்த வித முயற்சியும் இல்லாமலேயே நுழைத்து விடக் கூடிய தொலைக்காட்சி குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீண்ட கால ஊறுகளை விளைவித்து வருகிறது.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் கூட விளம்பரங்கள். இள மனங்களை சீக்கிரமே பிடித்து விடுகிறார்களாம். இங்கிலாந்தில் குழந்தைகளை குறிப்பாகச் சுட்டி எந்த விளம்பரமும் செய்யப்படக் கூடாது என்ற சட்டமே உள்ளதாம்.

90களின் மத்தியில் தொடங்கிய இந்தப் போக்கின் முழு விளைவுகள நாம் பார்க்க ஆரம்பித்துள்ளோம். இனி வரும் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளால் விளைந்த சமூக குடும்ப ஊனங்கள் வெளியில் தெரிய வரும்.

அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டுமா அதற்குரிய குறுந்தகட்டை கடையில் போய் வாங்கி குறுந்தகடு இயக்கியில் போட்டுப் பாருங்கள். குழந்தைக்கு ஆங்கில அறிவுக்கு கார்ட்டூன்களும் கூடக் கடையில் கிடைக்கின்றன.

வீட்டின் கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு, ஒரு டிவிடி பிளையர் வாங்கி தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து விடுங்கள்.

செய்திகளை அறிந்து கொள்ள செய்தித் தாள்கள் இரண்டு மூன்று வாங்குங்கள். கேளிக்கைக்கு பாடல்களைக் கேளுங்கள், வெளியில் சென்று திரையரங்குகளில் திரைப்படம் பாருங்கள்.

தொலைக்காட்சி என்ற ஆக்கிரமிப்பை வீட்டுக் கூடங்களிலிருந்து விரட்டி அடியுங்கள். உங்கள், குழந்தைகளின், சமூகத்தின் எதிர்காலம் கண்டிப்பாக இன்னும் சிறப்பாக மாறி விடும்.

திங்கள், ஜூன் 26, 2006

இந்தியாவின் வறுமை

வறுமையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் உண்மையிலேயே வறுமை இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.

பங்குச் சந்தைகளின் குறியீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டரை மடங்கு மதிப்பில் உயர்ந்துள்ளன. மென்பொருள், தொலைச் சேவைத் துறைகளில் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேன் என்கிறார்கள். தியாகராய நகரில் துணிக்கடைகளிலும், நகைக் கடைகளிலும் கூட்டம் நெரிகிறது. இந்தியா ஒளிர ஆரம்பித்து விட்டது. வேறு வேலை இல்லாத கம்யூனிஸ்டுகள்தான் நாட்டில் வறுமை என்று பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உடல் வருத்தி உழைக்கத் தயாராகவுள்ள ஒவ்வொருவருக்கும் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சோம்பேறிகள், உழைக்க மறுப்பவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்?

இப்படி ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இந்தியாவில் எத்தனை பேர் வறுமைக் கோட்டிற்கு உள்ளனர், வறுமைக் கோடு என்றால் என்ன, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன, சிறு குழந்தைகளின் இறப்பு விகிதம் என்ன என்றெல்லாம் புள்ளி விபரங்களைச் சேகரித்து விவாதம் செய்யலாம். அதற்கெல்லாம் தேவையில்லாமல், இந்தியாவின் வறுமை ஒவ்வொரு நாளும் நமது முகத்தில் வந்து அறைகிறது.

1. ரயில் பெட்டிகளில் ஊர்ந்து ஊர்ந்து வந்து தன் சட்டையால் தரையில் கிடக்கும் குப்பைகளைத் திரட்டி விட்டுப் பயணிகளிடமிருந்து சில்லறைக் காசுகளை வாங்கிச் செல்லும் பையன்கள்.
2. சாப்பாட்டுக் கடைகளில் மேசைத் துடைக்கத் துணியோடு வந்து நிற்கும் அழுக்குச் சட்டைச் சிறுவர்கள்
3. வேகா வெயிலில் குழந்தையை சாலை ஓரம் தொட்டிலில் போட்டு விட்டுச் சாலை போடும் வேலை செய்யும் பெண்கள்
4. வீட்டு வேலை செய்ய ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வரும் பெண்கள்
5. சாலை நிறுத்தங்களில் ஓடி ஓடி வந்து பிச்சை எடுக்கும், வண்ணத் துணிகள் விற்கும் குழந்தைகள்
6. சாக்கடையருகில், அழுகிய காய்களையும் தரக்குறைவான அரிசியையும் பயன்படுத்திச் செய்த உணவுகளை வாங்கி உண்ணும் உழைப்பாளிகள்.

என்று இந்தக் காட்சிகள் நம் கண்களிலிருந்து மறைகின்றனவோ அன்று இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டது என்று பெருமூச்சு விடலாம். அதுவரை இந்தியா ஒளிர்கிறது என்ற கொண்டாட்டங்களையும், சுயப் பாராட்டல்களையும் தள்ளிப் போட்டுக் கொள்வோம்.

வறுமைக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் மன்னிக்க முடியாத காரணங்கள், மக்களால், மக்களுக்காக இயங்கும் அரசாங்கங்களின் செய்கையால் விளைபவை.

அவற்றில் முதன்மையானது மது விற்பனை. குஜராத் மாநிலத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் அரசுகளே மதுக் கடை உரிமங்களை விற்கின்றன. மது உற்பத்தியில் கலால் வரியும், மது விற்பனையில் விற்பனை வரியும் ஈட்டிக் கொள்கின்றன. தன்னுடைய ஆட்சியில் மது விற்பனை மூலம் அரசு ஈட்டிய வரி பல மடங்காக உயர்ந்தது தமிழகச் சட்டசபையில் செல்வி ஜெயலலிதா முதல்வராக பெருமை பேசினார்.

அப்படி ஏழைத் தகப்பன்கள், அண்ணன்கள், அம்மாக்களின் கையிலிருந்து தட்டிப் பறிக்கும் பணத்தின் ஒரு பகுதி அரசுக்குப் போய்ச் சேர்ந்து அதில் ஒரு சிறு பகுதி குழந்தைகளுக்குச் சத்துணவாகவும், மாணவர்களுக்கு மிதி வண்டிகளாகவும், முதியோருக்கு வேட்டிச் சேலைகளாகவும் கொடுக்கப்படுகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் மது விலக்கு முற்றிலுமாக அமல் படுத்தப்பட வேண்டியது அரசுகளின் கடமை. கள்ளச்சாராயம் பெருகுமே, குடிக்கப் பழகி விட்ட மேட்டுக் குடியினர் என்ன ஆவார்கள், வெளி நாட்டினருக்கு வசதிக் குறைவு ஏற்படுமே என்று பல சாக்குகள் சொல்லலாம். விபச்சாரம் சட்ட விரோதமாக நடைபெறத்தான் செய்கிறது என்று அரசே அதை ஊக்குவித்து, வரியும் வசூலித்து மக்கள் நலப் பணிகளுக்கு அதில் வரும் வருமானத்தைப் பயன்படுத்துவதாக ஏன் செய்வதில்லை? ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் மது உற்பத்தி ,விற்பனை மற்றும் குடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

இதே போன்று அரசு ஊக்குவிப்பில் நடைபெறும் லாட்டரிச் சீட்டுகள் தமிழ் நாட்டைப் போலத் தடை செய்யப்பட வேண்டும்.

இரண்டாவதாக அத்தியாவசியப் பொருட்களின் மீது வரி விதித்தல்:

அரசுக்கு வருமானம் வேண்டும் என்று பெட்ரோலியப் பொருட்களின் மீதான இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையில் சதவீதக் கணக்கில் வரிகள் விதிக்கப்படுகின்றன. எண்ணெய் விலை இரண்டு மடங்காக பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்த பிறகும் வரி வீதத்தைக் குறைக்காமல் அதிக விலையில் அதிக வரி வருமானம் என்று மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.

வசதி படைத்தவர்களும், வறியவர்களும் ஒரே அளவு வரியே செலுத்துவதால் அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளின் சுமை ஏழைகளின் மீது மிகக் கடுமையாக விழுகிறது.

மாநில அரசுகள் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் மீது கூட வரி விதிக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளும் முற்றிலும் நீக்கப் பட வேண்டும்.

மூன்றாவதாக, தரமான தாய்மொழிவழிக் கல்வி பத்தாம் வகுப்பு வரை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்களுக்குக் குறையாமல் வகுப்புகள், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம், ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சத் தகுதி மற்றும் தொடர்ந்த பயிற்சி, சரியான வகுப்பறை, கற்பிக்கும் கருவிகள் இவை ஏதாவது ஒரு குழைந்தைக்குக் கிடைக்காமல் இருந்தால் எந்தக் குடிமகனும் நீதி மன்றம் மூலம் அரசை பரிகார நடவடிக்கை எடுக்கப் பணிக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவது, வரி வருமானமும் இல்லை நாடு முழுவதும் பள்ளிக் கூடங்கள் அமைக்கக் காசுக்கு எங்கே போவது?

1. மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் வசிக்கும் வீடுகளுக்கான செலவுகள் குறைக்கப் பட வேண்டும்.
2. இந்தியாவின் பெருமையைக் காப்பாற்றுகிறோம் என்று பொய்யாக புது தில்லியில் நடத்தப்படும் விழாக்களும் கோலாகலங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
3. மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் சேவை மனப்பான்மையோடு அரசுப் பணத்தை மக்களின் வரிப் பணத்தை செலவளிப்பதைக் குறைக்க வேண்டும்.
4. பொதுத் துறை நிறுவனங்களைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று கோடிக் கணக்கில் விரயமாகும் காசு மிச்சப்படுத்தப்பட வேண்டும்.

நான்காவதாக பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முதலான கொள்கைகள் மூலம் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மதம், சாதி, வாழும் இடம் போன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துப் பகுதியினரின் திறமைகள் சமூக வளர்ச்சிக்குப் பயன்படச் செய்ய வேண்டும்.

ஐந்தாவதாக உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற நிலச் சீர்திருத்தங்கள் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி நாடு முழுவதும் செயல் படுத்தப்பட வேண்டும்.

ஆறாவதாக, எல்லாக் குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது அரசின் அடிப்படைக் கடமையாக அறிவிக்கப்பட வேண்டும். பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து குடிநீர் விற்கப்படும் தொழில் அடியோடு நின்று விடும் வண்ணம் எல்லா கிராமங்களிலும், பொது இடங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

சுயநல அரசியல்வாதிகள்

தமக்கு ஆதாயம் தேடிக் கொண்ட உறுப்பினர்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அங்கீகாரம் தர மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறார். முன் தேதியிட்டு இந்தத் திருத்தத்தைச் செயல்படுத்த வகை செய்வது சரியானதுதானா என்று மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்னொரு முறை இதை நிறைவேற்றினால் குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படித்தான் செய்யப் போகிறோம் என்று இடது சாரிகளும், காங்கிரசாரும் கொக்கரித்துள்ளனர்.

ஆனால், மனம் போன போக்கில் நாடாளுமன்றம் செயல்பட்டால் அதைத் தட்டிக் கேட்கும் கடமை குடியரசுத் தலைவருக்கும் உள்ளது என்பதை நிலை நாட்டிய கலாம் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.

ஞாயிறு, ஜூன் 25, 2006

மாற்றுவழிப் பாதை

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6792.html

நாடாளுமன்றம்

ஒவ்வொரு உறுப்பினரும் தன் சுயநலத்தைப் பற்றியே சிந்திக்கிறார்கள். பயத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் செயல்படுகிறது. அதிமுக்கியமான பிரச்சனை ஒன்று விவாதிக்கப்படும்போது பல உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருப்பதும், பலர் அவைக்கே வராமல் இருப்பதும் சாதாரணம். கவைக்குதவாத பொருள் பற்றி பல மணி நேரம் பேசிக் கொல்பவர்களும் உண்டு.

எந்த அலசலும் இன்றி தனது கட்சியின் கட்டளைப்படி வாக்களிப்பதே ஒரு உறுப்பினரின் கடமையாக உள்ளது. "கட்சிக் கட்டுப்பாட்டின்" கீழ் அப்படி ஒருவர் வாக்களிக்கத் தவறி விட்டால் அவர் பதவியிழந்து விடுகிறார். நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், நடத்துவதிலும் செலவிடப்படும் பணத்தை நல்ல மனிதர்கள் கையில் கொடுத்தால் நாட்டை எவ்வளவோ முன்னேற்றியிருக்கலாம். நாடாளுமன்றம் நாட்டின் விலை உயர்ந்த பொம்மை போல ஆகி விட்டது.

பிரதம மந்திரி தனது அதிகாரத்தையும் தன் கட்சியின் நலனையும் மட்டுமே சிந்திக்கிறார். நாட்டின் நலனும் நாடாளுமன்றத்தின் நோக்கங்களும் இரண்டாம் பட்சமாகி விட்டன. கையூட்டு வாங்க அல்லது கொடுக்காததாலேயே ஒரு பிரதமர் நேர்மையானவராகி விட மாட்டார். தான் விரும்பியதைச் சாதித்துக் கொள்ள பதவிகளையும் பட்டங்களையும் பயன்படுத்தும் பிரதமர் பெயரளவுக்குத்தான் நேர்மையாளர். அவரும் ஊழல்வாதி என்றே கருதப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கோ பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் வேத வாக்கு. ஊடகங்களோ ஒன்றிற்கு ஒன்று முரணாக தாம் சார்ந்த கட்சிக்கு வசதியாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒவ்வொருவரும் தாம் படிக்கக் கேட்க விரும்புவதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

இவை அனைத்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைப் பற்றி காந்தி 1913-ல் சொன்னது. இன்றைய இந்தியாவிற்கு இது பொருந்துகின்றதா?

சனி, ஜூன் 24, 2006

எது ஆடம்பரம?

ஏழைகளுக்கு உதவ வேண்டும், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் போதும், எழுதும் போதும்்ஏழைகளுக்கு உதவ வேண்டும், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் போதும், எழுதும் போதும் எது வீண் செலவு என்ற கேள்வி எழுகிறது.

ஒருவருக்கு ஆடம்பரமாகப் படுவது இன்னொருவருக்கு அத்தியாவசியமாக இருக்கலாம். இதைச் செய்யாதே, இப்படிச் செய் என்று எப்படி முடிவு செய்வது?

1. உணவுப் பொருட்களுக்காக, உணவுக்காக செலவளிக்கும் பெரும்பான்மையானவை ஆடம்பரமாக முடியாது.

ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட பாலாடைக் கட்டி, பிட்சா போன்ற மேல் நாட்டு உணவுகளை காசைக் கொட்டிச் சாப்பிடுவது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது, இனிப்புகளைச் சுவைப்பது இவை எல்லாம் ஆடம்பரம் என்று சொல்லலாம். ஆனால் ஒருவரின் வாழ்க்கை முறைக்கு இது பழகி விட்டால் அதை பொருளாதார முறையில் குறை கூறுவது சரியில்ல.

ஆரோக்கிய கோணத்தில், வயிற்றுக்கு எது ஒத்து வரும் என்று ஆராய்ந்து பார்த்து மேல் நாட்டு உணவுகள் நம் ஊர் காலநிலைக்கு சரிப்படாது என்றோ, குளிர்பானங்கள் உடலைக் கெடுத்து விடும் என்றோ ஒருவர் முடிவு செய்யலாம். அது வேறு.

2. கல்விக்காக, வேலைக்காக செலவிடுவது இப்போதைய வருமானத்தை எதிர்கால நன்மைக்காக முதலீடு செய்வது.

தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ, பிறருக்காகவோ எவ்வளவு செலவளித்தாலும் அது தகும். இதில் கணினி, புத்தகங்கள், பயணம் செய்ய ஊர்திகள், தொலைபேசிக் கணக்குகள், இணைய இணைப்பு மற்றும் பிற கருவிகள் அடங்கி விடும்.

இனிமேல் இரண்டும் புறமும் விவாதிக்க முடியும் பொருட்கள்:

3. வசதியான, பொருத்தமான உடைகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் ஆண்களும் பெண்களும் செலவு செய்வதும் அத்தியாவசியம்தான்.

ஆனால், தங்கமும் வெள்ளியும் இழையப்பட்ட பட்டுச் சேலைகளும், வெறும் தற்பெருமைக்காக பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களும் எந்த வகையில் சேரும்?

4. கேளிக்கைப் பொருட்கள், கருவிகள்

தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படங்கள், கேளிக்கையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் சீரான பயன்கள் உள்ளன. நாள் முழுதும் உழைத்த பிறகு இளைப்பாறவும், பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் துணை புரியவும் தேவையாக இவை இருக்கும் நேரத்தில், இவை ஆடம்பரம் என்ற கோட்டைத் தாண்டி விடுவது மிகச் சீக்கிரமாகவே நடந்து விடும்.

5. விக்கிரகங்களுக்கு வழிபாடு

திரைப்பட நட்சத்திரங்களுக்கு மன்றம் அமைப்பது, அவர்கள் உருவத்துக்கு பால் அபிஷேகம் செய்வது, கோயில்களின் கூரைக்குப் பொன் வேய்வது, கோயிலில் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்றவை மிகக் குறைத்துக் கொள்ளப்பட வேண்டியவை. மனத் திருப்திக்காக ஒரு சிறிய தொகையைச் செலவளித்து விட்டுப் போவது நல்ல பழக்கம்.

கவிதா சில நாட்களுக்கு முன் கோயில்களில் செய்யப்படும் அபிஷேகங்களைப் பற்றி எழுதிய பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்தது. உங்கள் கணினியையும் பிற உடமைகளையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு கோயிலில் நிகழும் வீணாக்கலைக் கண்டியுங்கள் என்று ஒருவர் எழுதியிருந்தார்.

6.போதைப் பொருட்கள், சூதாட்டச் செலவுகள்

புகையிலைப் பொருட்கள், மது பானங்கள், பாக்கு, சூதாட்டம் (லாட்டரிச் சீட்டும் சேர்த்து), விபச்சாரம், போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்க(??)

சூரியன் உதித்த பிறகு தூங்காதே
சூரியன் மறைந்த பிறகு சாப்பிடாதே

பின் தூங்கி பின் எழுபவர்கள் பொதுவாகக் குண்டாகி விடுவார்கள் என்பது நான் குத்து மதிப்பாக உணர்ந்தது.

இரவு 10 மணிக்கு மேல் இரவு உணவு உண்டு, பன்னிரண்டு மணிக்கு மேல் தூங்கப் போய் காலை எட்டு மணிவாக்கில் எழுந்து காலை உணவைப் புறக்கணிக்கும் உடல்கள் கொழுப்பு, சதை போட சாத்தியங்கள் அதிகம். சில காரணங்கள்:

1. அதிகாலையில் நம் உடலின் வளர்சிதைமாற்ற வீதம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து விட்டால், நாள் முழுவதும் உடலின் ஆற்றல் தேவை அதிகமாக இருப்பதால் சாப்பிட்ட உணவு சரிவர உட்கொள்ளப்பட்டு விடுகிறது.
2. அதிகாலைக் காற்றில் ஓசோன் அதிகமாக இருப்பதால், உடலில் உயிர் வாயு உட்கொள்ளலின் திறன் அதிகமாக்கப்படுகிறது.
3. வளர்சிதை மாற்ற வீதம் குறைவாக இருக்கும் மாலை/ பின்னிரவு நேரத்தில் சாப்பிடும் உணவு செரிக்க அதிக நேரமாவதுடன், அதன் ஆற்றலை உடல் பயன்படுத்துவதில் சுணக்கமும் ஏற்படலாம்.

இதில் எந்த அறிவியல் ஆதாரமும், ஆராய்ச்சியும் இல்லை. நான் பார்த்தது, உணர்ந்ததிலிருந்து எழுதியதுதான். பிறரின் அனுபவங்கள் வேறாக இருக்கலாம்.

வெள்ளி, ஜூன் 23, 2006

பொதுவுடமை சமூகம் சாத்தியமா?

நேருவின் சோஷலிச ஐம்பது ஆண்டுகளில் அரசும் அதன் அதிகாரிகளும் மனித உரிமைகளையும், தொழில் வளர்ச்சியையும் காலில் போட்டு மிதித்த அமைப்பைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

பொதுவுடமைச் சமூகம் அமைய, தொழிலாளர்களின் ஏகபோக அரசு முதலில் வர வேண்டும் என்று சொன்னதுதான் மார்க்சிசம் செய்த தவறோ? அரசாங்கம் எந்த உருவிலும் அளவிலும் ஒரு தேவையான தீமை. மிகப்பெரிய வடிவில் மக்களுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஒரு அரசின் அதிகாரங்கள் மக்களைத் துன்புறுத்துவதிலே வந்து முடியும். அதனுடன் சர்வாதிகாரத்தையும் கலக்கி விட்டால், கிடைப்பது அருவருக்கத்தக்க அபாயகரமான ஒரு பிராணி. அந்தப் பிராணிதான் சோவியத் யூனியனிலும் பிற "கம்யூனிச" ஆட்சிகளிலும் மக்களின் துயரத்தை விளைவித்தது.

அரசாங்கமே இல்லாமல் போகும் நிலை வரும் முன் அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும்? நமக்கு நாமே என்று ஒவ்வொருவரும் தம்மை ஆண்டு கொள்வது பொதுவுடமைச் சமூகத்தில் நடக்கும். தன்னை ஆள்வது என்றால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பொது நன்மைக்காக எப்படி மிகப் பொருத்தமாகச் சரியாகப் பயன்படுத்துவது என்று ஒரு அரசாங்கம் சிந்திப்பது போல ஒவ்வொருவரும் சிந்தித்து எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை அரசாங்கங்கள் இருப்பது பொதுவுடமை.

அதை அடைவதற்கான வழியில், அரசாங்கத்தின் அளவு குறுக வேண்டும், அதன் இருப்பிடம் மக்களுக்கு அருகில் மாற வேண்டும். நாகர்கோவிலில் சாலை அமைக்க தில்லியில் இருக்கும் அமைச்சகம் முடிவு எடுப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரநிதிகளின் மூலம் இந்த அமைப்பின் குறைகளை சரிக்கட்ட முனையலாமே ஒழிய அதன் அடிப்படைப் பழுது மிகப் பெரிய வீணடிப்புகளைத்தான் உருவாக்கும். ரயில் அமைச்சர் பீகாரைச் சார்ந்திருந்தால் அந்த மாநிலத்தில் வேலைகள் நன்கு நடக்கும், சாலை அமைச்சர் தமிழ் நாட்டை சார்ந்தவராயிருந்தால் மற்ற ஊர் சாலைகளுக்கு விடிவுகாலம் கிடைப்பது கடினம்தான். அரசாங்க எந்திரங்கள் இந்தக் குறையை தம்மால் முடிந்த அளவு ஈடு கட்ட முனைந்து மிகப் பெரிய மோசடிகளுக்கும், விரயத்துக்கும், மக்களின் துன்பத்துக்கும் வழி வகுக்கின்றன.

மாநில அரசின் அதிகாரங்கள் போக மத்திய அரசுக்கும், ஒவ்வொரு நாடும் விட்டுக் கொடுக்கும் பொது அதிகாரங்கள் உலக சபைக்கும் போவது போல இன்னும் பல நிலைகள் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிர் கொடுத்த ராஜீவ் காந்தி அரசு இந்தத் திசையில் நாட்டைச் செலுத்தியது. ஆனால் அது கடலில் கிடைத்த பெருங்காயம் போன்றது.

ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேண்டும். இன்றைய சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு வீட்டளவிலும், குடியிருப்போர் சங்கம் என்ற அமைப்புகள் அடுத்த நிலையிலும் உள்ளன. அதற்குப் பிறகு ஊராட்சி அல்லது நகராட்சி வட்டங்கள்தான். சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் எல்லோரும் தனி மனிதர்களின் நேரடித் தேர்வில் நடைபெறுகிறது.

ஐக்கிய நாட்டுச் சபைக்கு நேரடித் தேர்தலை நாம் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? நம் நாட்டுடைய உரிமை, நலன்களை விட்டுக் கொடுக்க விரும்பாமல். ஒரு அமைப்பைத் தாண்டி மேலிருக்கும் இன்னொரு அமைப்பு கீழிருக்கும் உறுப்பினர்களை நேரடியாக அணுகித் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைய ஓட்டைகள் ஏற்பட்டு விடும். இந்தியாவில் மாநில சட்ட்சபைகளை விட நாடாளுமன்றமும், அமெரிகாவில் நாடாளுமன்றத்தைத் தாண்டி குடியரசுத் தலைவரும் அதிகாரம் செலுத்துவது இப்படிக் கிடைக்கும் அதிகாரத்தில்தான்.

இதற்கு மாற்றாக முதல் படியாக மாநில அரசுகளை வாக்காளர்களாகக் கொண்ட தேர்தலில் மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநில நலன்கள் இன்னும் சிறப்பாக அமையும். அடுத்த படியில் ஊராட்சிகளும், நகராட்சிகளும் இணைந்து மாநில அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒரு பிரதிநிதி, அந்தப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து குடியிருப்போர் சங்கம், அவற்றின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து தெருவுக்கான அரசு, தெருவின் அரசுப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து வட்ட அரசுகள், பிறகு மாவட்ட அரசுகள், பிறகு மாநில அரசுகள், மத்திய அரசுகள், உலக அரசு என்று விரிந்து போகும் வட்டங்களாக ஆட்சி அமைய வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் கீழ் நிலையில் செய்ய முடியாத பணிகள் மட்டும் மேல் நிலைக்குக் கொடுக்கப்படும், தெருவைக் கூட்டிச் சுத்தமாக வைத்திருப்பது தெரு அரசு செய்யலாம், வீட்டுக்குள் சுத்தம் வீட்டு அரசின் கடமை, குடியிருப்பின் சுத்தம் குடியிருப்போர் அரசின் கடமை. இதைச் செய்ய ஏன் நகராட்சி வர வேண்டும்?

இதைச் செயல்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பணக்காரர்கள் வசிக்கும் தெருக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும், ஏழைச் சேரிகள் சிரமப்படும். ஆனால் இந்த மட்டத்தில் தீர்க்க முடியாத சிக்கல்கள் எதுவும் இருக்காது. அடுத்த உயர்ந்த நிலைக்கு வரி செலுத்துவதன் மூலம் ஏற்றத் தாழ்வுகளச் சரிகட்டப் பார்க்கலாம். ஆனால் நடைமுறையில் அதற்குத் தேவையில்லாமல் போய் விடலாம். பணக்காரர்கள் பணத்தால் தமது தெருவை வளப்படுத்தினால், ஏழைகள் உழைப்பால் செய்து விடலாம். இப்படி ஒரு உலகில் பணக்காரர்கள்/ ஏழைகள் என்று இல்லாமல் போய் விடலாம்.

இதுதான் உண்மையான தன்னாட்சி. 1947ல் வெள்ளைத்தோல் அதிகாரிகளைத் துரத்தி விட்டும் பழுப்புத் தோல் கொடுங்கோலர்களை ஆட்சியில் வைத்துள்ளோம்.

ஆட்சியாளார்கள் கொடுமையானவர்கள் இல்லை. ஆனால், இந்த பாராளுமன்ற ஆட்சியமைப்பில் இவ்வளவுதான் செய்ய முடியும். மக்கள் விரும்பாத போரில் நாட்டை ஈடுபடுத்திய டோனி பிளேராகட்டும், இல்லாதவரின் வயிற்றிலடித்து விட்டுப் பணக்கார வாரிசுகளுக்கு வரி நீக்கம் செய்ய முனையும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியாகட்டும் இப்போது உலகில் உள்ள ஆட்சி முறைகளில் சகிக்கக் கூடியதாக உள்ள பாராளுமன்ற ஆட்சி முறையில் இதைத் தவிர என்ன எதிர்பார்க்க முடியும்? நல்லது நடந்தால் அது தற்செயலாகத்தான் இருக்கிறது.

இதுதான் காந்தியின் சுயராஜ்யம். மார்க்ஸின் பொதுவுடமை. பிளாட்டோவின் குடியரசு. இந்த நிலைக்கு வந்த பிறகு தனி மனித சுதந்திரமும், உரிமைகளும் எல்லையற்று விரியும். கட்டுத் தளைகள் நீங்கி விட, மனித ஆற்றல்கள் பொங்கிப் பீரிடும். எதிர்மறை உணர்வுகள், நடவடிக்கைகள் அறவே ஒழிந்து விடும். மூடி வைத்த தண்ணீர், அடக்கி வைத்த ஆற்றல், தேங்கியிருந்த குளம் இவற்றில்தான் நச்சு விளைகிறது. மனிதனுக்கு தன்னாட்சி கிடைத்தால், மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, அன்பு வெள்ளம் பொங்க ஆரம்பித்து விடும்.

இதற்கு அடுத்த நிலைதான் உடோபியா. அங்கு இந்த அரசுகளின் தேவை உதிர்ந்து போய் விடும். ஒவ்வொரு மனிதனில் எல்லையற்ற அன்பும் ஆற்றலும் உலகுக்கும் சக உயிர்களுக்கும் எது நல்லதோ அதை மட்டுமே செய்யத் தூண்டும். காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு இல்லாத தகவல் தொடர்பு வசதிகள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள், வேலை செய்யும் இயந்திரங்கள் உள்ள இந்த காலத்தில் பழைய அரசு முறைகள் வழக்கொழிந்து போகாமல் நம் கழுத்தில் நுகத்தடிகளாக நம் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக மாறி விட்டன.

இயந்திரங்கள் இல்லாத போது மாடு இழுக்கும் வண்டியைப் பயன்படுத்தினோம். இழுக்கும் சக்தி உள்ள இயந்திரங்களை மாட்டு வண்டியில் பொருத்தி ஓட்டுவது மதியுடமையாகுமா? பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அரசு முறைகள் இன்றும் நடைமுறையில் இருப்பதின் நியாயம் என்ன?

சோவியத் யூனியனில் பிறந்து இரும்புத் திரையைக் கடந்து அமெரிக்கக் குடிமகளாக வாழ்ந்த அயன் ராண்டு என்ற பெண்மணியின் த ஃபவுண்டன் ஹெட் என்ற பெருங்கதையின் கருப் பொருள், தனி மனிதனுக்கு எதிரான அரசாங்கங்களின் கொடூரத்தைப் பற்றியது. அதன் பின்னணி கட்டிட வடிவமைப்புத் துறை. அதன் பாத்திரங்கள் கட்டிடத் துறையில் நடக்கும் மாறுதல்களைச் சார்ந்து உருவாக்கப்பட்டன.

கம்யூனிசத்துக்குக் கடுமையான எதிர்ப்பாளியான அயன் ராண்டின் புத்தகங்கள் இன்றும் உலகெங்கும் படிக்கப்பட்டு வருகின்றன. மேலே சொன்ன ஊற்றுக்கண் என்ற கதையில் ஒரு கருத்தைச் சொல்வார். கதையின் நாயகன் தனது கட்டிட வடிவமைப்புகளில் முன்னோர்களின் பாணிகளை வரைய மறுத்து விடுவான். அதனால் அவனைக் கல்லூரியிலிருந்து பட்டம் கொடுக்காமல் துரத்தி விடுகிறார்கள்.

இன்றைக்கு கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்டிடத்தின் இருப்பிடம், அதன் பயன்பாட்டுக்குப் பொருந்துமாறு கட்டிட வடிவமைப்பதுதான் என் வேலை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் அந்தக் காலத்தின் மேதைகளால் அந்தக் காலத்துக்குப் பொருந்துமாறு உருவாக்கப்பட்டதால் புகழ் பெற்றன. அந்தப் புகழை மட்டும் பார்த்து மற்றவர்கள் குறை சொல்ல முடியா வண்ணம் அந்த வடிவமைப்புகளை நகல் செய்வது ஒட்டுண்ணித்தனம். சொந்தத் திறமையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குதான் அது வேண்டும். எனக்கு அதுமாதிரியான ஊன்று கோல்கள் தேவையில்லை. யாருடைய பெயரையும் சொல்லாமலேயே என்னுடைய படைப்புகள் அவற்றின் சொந்தச் சிறப்புகளால் புகழ் பெறும் என்பது அவனது எண்ணம்.

அந்தக் காலத்தில் தூண்களை மரத்தில் அமைத்தார்கள். மரச் சட்டங்களுக்கு இடையே வரும் வெளியை மறைக்க அதைச் சுற்றி உலோகப் பட்டிகளை அலங்காரம் போல அடித்தார்கள். அந்த காலம் போய், காங்கிரீட்டில் தூண் அமைக்கும் வசதி வந்தது, பழைய பாணியை நகல் செய்து காங்கிரீட் தூண்களில் இணைப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், அப்படி இடைவெளி இருப்பது மாதிரி கோடு போட்டு, அந்தக் கோடுகளை மறைத்து அலங்காரங்கள் செய்கிறார்கள். அதன் பிறகு இரும்புத் தூண்கள், கண்ணாடி சுவர்கள் பயன்படுத்த முடிந்தது. இங்கும் அதே பாணியை நகல் செய்து இரும்பின் மீது கோடுகள் அமைத்து அதைச் சுற்றி அலங்காரங்கள் செய்கிறார்கள்.

என்ன முட்டாள்தனம்? மரத்திற்காக ஒரு மேதையால் ஏற்படுத்தப்பட பாணியை இந்தப் பாழும் சமூகம் காங்கிரீட் வந்தும் விடவில்லை, இப்போது இரும்பிலும் அதையேப் பயன்படுத்துமாறு என்னைச் சொல்கிறார்கள் என்று மறுத்து விடுவான் ஹோவார்டு ரோர்க் என்ற அந்த மனிதன்.

ஏன் இதைச் சொன்னேன் என்றால், நாமும் காட்டில் வாழும்போது அமைந்த, நதிக்கரை நாகரீகங்களில் அமைக்கபப்பட்ட பஞ்சாயத்துகளையும், பல நூறு ஆண்டுகள் முன்பு ஏற்பட்ட பாரளுமன்றக் குடியாட்சியையும் கட்டி அழுது கொண்டிருக்கிறோம். மாற்றங்கள் என்பவை ஒட்டு மருத்துவமாகச் செய்கிறோமே ஒழிய, புதிய வசதிகளுக்குப் பொருத்தமான அரசு முறை வேண்டாமா?

இதைச் செய்ய நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் போட அவசியம் இல்லை. ஒவ்வொரு குழுவும் தமக்குத் தேவையான பணிகளை ஒருங்கிணைக்கவும் வழி நடத்தவும் ஆரம்பித்து விடலாம். சொல்லப் போனால் இன்னும் ஒரு படி தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனும் தனது அரசை தனக்காக ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எங்கே போகிறோம் (கம்யூனிசம்)

எல்லோருக்கும் தேவைகளை நிறைவேற்ற நிறையவே இருக்கிறது. யாருடைய ஆடம்பரத்தையும் நிறைவேற்ற இருப்பது போதாது என்று சொன்னாராம் காந்தி. உண்மைதான். மனித மனத்தின் பேராசைகள்தான் வறுமைக்கும், போர்களுக்கும், துன்பத்துக்கும் காரணம்.

உடலைப் பேண உணவு, நாகரீகத்தைக் காட்ட உடை, உடலையும், உடையையும் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள நீரும் ஒரு சில பொருட்களும், இவற்றைத் தவிர்த்து நமக்கு வேறு என்ன தேவை?

எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று சேமித்து வைக்கும் பணம், அதில் வாங்கி வைக்கும் தங்கம், அதில் வாங்கிப் போடும் நிலம், விலை உயர்ந்த பொருட்கள், படுப்பதற்கு மெத்தைகள் என்று போகப் போக இதை எல்லாம் பக்கத்து வீட்டுக் காரனிடம் இருந்து பாதுகாக்க வலுவான பூட்டுகள், காவல் நிலையங்கள், எல்லைகளைக் காக்கப் பெரும்படைச் செலவுகள் என்று செலவளிக்க செலவளிக்க போதாமை வந்து விடுகிறது.

ஒரு குழுவினருக்குத் தேவைப்படுவதை தவிர்த்து விட்டுத்தான் இந்த ஆடம்பரங்களும் ஆடம்பரங்களைப் பாதுகாக்க வேண்டியவைகளும் உருவாகின்றன.

மனிதனின் பேராசையும் சுயநலமும்தான் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார சிக்கனத்துக்கும் வழி என்று இயங்குவதுதான் கடந்த முன்னூறு ஆண்டுகளில் பரவலாகி விட்ட இப்போது ஆட்சி செலுத்தும் சந்தைப் பொருளாதரத்தின் தாரக மந்திரம். இதனால் வளர்ச்சிகள் கண் கூடாகத் தெரிகின்றன. ஆனால் இது உண்மையான வளர்ச்சியா அல்லது ஊது காமாலையா?

இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன? எவ்வளவு மருந்துகள், எவ்வளவு எரி பொருட்கள், எவ்வளவு குண்டுகள், எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துயரம், எவ்வளவு சாவுகள். இப்படியே உழன்று கொண்டிராமல் அடுத்த நிலைக்குப் போக வேண்டாமா?

பங்குச் சந்தைக் குறியீடு பத்தாயிரத்தை தாண்டி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது ஒரு லட்சத்தை எட்டி விட்டது என்று வைத்துக் கொள்வோம். எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?

எங்கு பார்த்தாலும் அவசரம். குழப்பம் நிறைந்த முகங்கள். மருந்துகளிலேயே வண்டியை ஓட்டும் மனிதர்கள்.

பொது இடத்தில் துப்புபவர்கள், புகை பிடிப்பவர்கள், சாலை நிறுத்தத்தில் சிவப்பு விளக்கை மதிக்காதவர்கள், குப்பை போடுபவர்கள், அநியாய விலை வைத்து விற்பவர்கள், நியாய விலைக் கடையிலிருந்து பொருட்களை வெளிச் சந்தைக்குக் கடத்தும் ஊழியர்கள், கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்கள், தன் வேலையை செய்யாத ஆசிரியர்கள், கொள்ளை அடிக்கும் மருத்துவர்கள் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். இவை எல்லாவற்றுக்கும் இவர்கள் எல்லோருக்கும் ஒரே மருந்து மன மாற்றம்.

அடுத்த வீட்டை விட எனது வீடு உயரமாக இருக்க வேண்டும், என் குழந்தைகள் உயர்தனி வட்டத்தில் வளர வேண்டும், என் வீட்டில் எல்லாப் பொருட்களும் நிறைந்திருக்க வேண்டும், வெளியில் போகும் போது பகட்டு உடலில் மின்ன வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் குறைந்து மறைந்த்து நான் வாழ வேண்டும், என் வாழ்க்கை அடுத்த வீட்டுக் காரனுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தால் போதும்.

மந்திரம் போட்டது போல பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் மாயமாக மறைந்து விடும். சாலையோர வியாபாரி சொல்வது போல இது பல நோய்களுக்கான மருந்து. உடல் உபாதைகளை விரட்டி விடும். மன உளைச்சல்களை துரத்தி விடும். சச்சரவுகளை ஒழித்து விடும்.

மாற்றம் என்பது தனி மனிதனிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இந்த உலகமெ நுண் அளவிலும், பேரண்ட அளவிலும் ஒரே மாதிரிதான் இயங்குகிறது. ஒரு தனி மனிதனின் மனதில் நிகழும் புரட்சிதான் சமூக மாற்றங்களாக உருப்பெறுகிறது.

எல்லோரும் மாறட்டும் என்று காத்திருக்காமல், நம்மளவில் தொடங்கி விடலாம். "அவன நிறுத்தச் சொல்லு முதல" என்ற மணிரத்திரக் கோட்பாடு இல்லாமல் முதலடியை நாம் எடுத்து வைப்போம்.

தொழில் நிறுவனங்கள் தமது வருமானத்தை எப்படி ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு முறை எழுதிய பிறகு டோண்டு சாருக்குக் கோபம் வந்து விட்டது. லாபம் சம்பாதித்தால் தவறு, இந்தியா தனது சுயநலத்தைப் பார்த்துக் கொண்டால் தவறு என்று கிண்டல் அடித்தார்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இயற்கையான உணர்வுகள் நம்மை வழி நடத்த விட்டு விட்டால் என்ன பெருமை. அந்த உணர்வுகளை நெறிப்படுத்தி நாகரீகம் அடைந்ததுதான் மனித இனத்தின் சாதனை. பசித்தால் வேட்டைக்குப் போவோம், கிடைத்தால் அடுத்தவனிடமிருந்துத் தட்டிப் பறிப்போம் என்ற காட்டு நெறிகளை மட்டுப்படுத்தி ஒருவரை ஒருவர் மதித்து ஆற்றங்கரைகளில் வாழ ஆரம்பித்ததுதானே மனித நாகரீகம்.

முடிந்த வரை உழைப்போம், சுயநலத்தைப் பார்ப்போம், சொந்த வளங்களைப் பெருக்கிக் கொள்வோம் என்ற சந்தை நெறிகளை மட்டுப்படுத்தி ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வோம் என்று பொதுவுடமையில் வாழ ஆரம்பித்தால் நாம் தெய்வ நாகரீகத்துக்குப் போய் விடலாம்.

மார்க்சு கண்ட பொதுவுடமை சமூகமும், காந்தி கண்ட ராம ராஜ்ஜியமும், கீதை சொல்லும் கடமையைச் செய்தலும் வேறு வேறா? தலை சிறந்த சிந்தனையாளர்கள் நமக்கு விட்டுச் சென்ற கொடைகள் எதை வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள், பொதுவுடமைச் சமூகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகள்தான் காட்டப்பட்டுள்ளன. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்ற புத்தரும், அன்பே வடிவான ஏசு பிரானும், வாழ வழி முறைகளை வகுத்துச் சொல்லிச் சென்ற நபி பெருமானும் இன்று இருந்தால் நமது இந்த பேராசை, சுயநல வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

வியாழன், ஜூன் 22, 2006

பொதுவுடமை அல்லது உடோபியா

இப்படி ஒரு உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் தாராளமாகத் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன. உடுத்துவதற்கு உடைக்கும் பஞ்சமில்லை.

யாருக்கு என்ன வேலை செய்ய விருப்பமோ அவர் அந்த வேலையைச் செய்யலாம். காலையில் எழுந்து தோட்ட வேலை, நாளின் முற்பகுதியில் கணினி நிரல் எழுதுதல், மத்தியானம் நண்பருடன் சதுரங்கம் விளையாட்டு, மாலையில் ஒரு இயந்திரத்தின் மாதிரி உருவாக்கும் பணி, இரவில் காந்தியின் கொள்கைகளைப் பற்றிய ஒரு அலசல் கட்டுரை எழுத்து என்று ஒருவர் தனது நாளை செலவிடுகிறார்.

எல்லா மனிதரும் எல்லோரையும் நேசிக்கிறார்கள். பிறருக்கு எப்படி உதவியாக அமையும் என்ற நோக்கத்தோடுதான் எந்த வேலையும் செய்கிறார்கள் மக்கள். குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கதை சொல்வதில் இன்பம் காணும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளைக் கூட்டி வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுடன் விளையாட விரும்புபவர்கள் விளையாட்டிலும் இறங்குகிறார்கள்.

பயிர் செய்வதில் உண்மையான ஆர்வமும் அந்தத் தொழிலில் தன் மகிழ்ச்சியைக் காணும் மாந்தர் இயந்திரங்களின் துணையோடு முழு உலகத்துக்கும் தேவையான உணவுகளை விளைவித்து விடுகின்றனர். யாரும் செய்ய விரும்பாத, மனிதனுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்ய இயந்திரங்கள் உள்ளன.

சாப்பாடு இல்லாமல் யாரும் பட்டினிக் கிடப்பதில்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது பக்கத்தில் இருக்கும் வீட்டுக்குள் போனால் வீட்டுக் காரர்கள் அன்போடு வரவேற்று உணவுப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். யாரும் பேராசையுடன் சொத்துக்களையும் நிலத்தையும் வளைத்துப் போட்டுக் கொள்வதில்லை. என்ன தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாளைக்கு இல்லாமல் போய் விடுமே என்ற பயமே யாருக்கும் இல்லை. எல்லாம் எப்போதும் எல்லாருக்கும் கிடைக்கிறது.

அரசாங்கம், ராணுவம், வரி விதிப்பு என்று எதுவுமே இல்லை. காவல் நிலையங்கள் கிடையாது. நீதி மன்றங்கள் தேவையில்லை.

வெளியில் போகும்போதோ தூங்கும் போதோ வீட்டைப் பூட்டிக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. இல்லாமை இல்லாத நிலை இருப்பதால் யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் இருங்கள். இது என்ன பைத்தியக்காரக் கனவு என்று சிரிக்கும் முன், இதை பார்த்தவர்கள் இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய கிராமங்களில் ஏறக்குறைய இந்த நிலைதானே? என்னுடைய தாத்தா ஊரில் சாப்பாடு எந்த வீட்டிலும் கிடைக்கும், வீட்டு வாசலை அடைப்பது நள்ளிரவுக்கு அப்புறம்தான். காவல் நிலையங்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கி இருக்கும். எல்லோரும் எல்லோருடனும் அன்புடனும், உண்மையான அக்கறையுடனும் பழகுவார்கள். நேரத்தை வீணடிக்கும் பழக்கங்களும், கருவிகளும் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருந்தன.

நாம் நினைத்தால் நம் வாழ் நாளில் ஒரு பொதுவுடமை சமூகத்தைக் காணலாம். அதற்கு கத்தி ஏந்திய புரட்சி தேவையில்லை. அதற்கு பங்குச் சந்தைகள் தேவையில்லை. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பு கருவிகளும் உண்மையான முழுமையான பொதுவுடமை சமூகத்துக்கு நம்மை இட்டுச் செல்லப் பயன்படும். மனிதனுக்கு மனம் இருக்கிறதா என்பது மட்டுமே கேள்வி?

கம்யூனிசம் - என் பார்வையில்

சந்தையும் சுயநலமும்

ஒவ்வொருவரும் தமது சுயநல நோக்கத்தில் செயல்படுவதன் மூலம் சமூகத்தின் பொருளாதார வளங்கள் மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் சந்தைப் பொருளாதரத்தின் தாரக மந்திரம். கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சி இந்த மந்திரத்தின் மகிமைக்கு சாட்சி அளிக்கின்றன.

இதில் குறைகள் இல்லாமல் இல்லை. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழில்கள், பொருட்களில் கலப்படம் செய்யும் வியாபாரிகள், ஏழைகளாகப் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமை எனப் பலவிதமான பிணிகள் இந்த பொருளாதார விரிவாக்கத்தைப் பீடித்துள்ளன. உலகில் எந்த மூலையிலோ விளையும்/உற்பத்தியாகும் பொருள் நம் சந்தைகளுக்கும், கடைகளுக்கும் பல் பொருள் அங்காடிகளுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றன.

இங்கு கம்யூனிசம் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. வர்க்கப் போராட்டம், சோவியத் யூனியனின் தவறுகள், மேற்கு வங்காளத்தில் சீர்திருத்தம் வெளியில் கட்டுப்பெட்டித்தனம் என்று கம்யூனிசம் என்றாலே ஒரே மாதிரியான விஷயங்களை மட்டுமே பேசாமல், கம்யூனிசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் முனைவில் நான் தெரிந்து கொண்டவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சமூகப் பொருளாதார வல்லுநர்களின் ஒரு செல்ல அலுப்பு, "யார் வேண்டுமானாலும் பொருளாதாரம் பற்றி கருத்து சொல்ல வந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் பொருளாதாரம் படித்த பேராசியரை எதிர்த்துக் கருத்துச் சொல்ல பொருளாதாரமே படிக்காத பாமரக் குடிமகன் கூட வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்". அதுதான் நானும் வந்து விட்டேன்.

முதலில் இருந்து ஆரம்பிப்போம். பொருட்களின் பரிமாற்றம்தான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. என் தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருளை இன்னொருவருக்குக் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக எனக்கு வேண்டிய அவரிடம் இருக்கும் அதிகப் படி பொருளை வாங்கிக் கொள்வதுதான் பண்ட மாற்று.

இன்னும் அடிப்படையாகப் பார்த்தால் என்னுடைய நேரத்தை/உழைப்பை விற்று இன்னொருவரின் நேரத்தை / உழைப்பை வாங்குவதுதான் பரிமாற்றம். இடையில் பணம் என்று ஒன்றும் நுழைகிறது. என்னுடைய நேரத்தை, உழைப்பைப் பயன்படுத்தி நான் உருவாக்கும் பொருளை நானே பயன்படுத்தலாம், அல்லது தேவை போக மிஞ்சியதை இன்னொருவருக்கு விற்று விடலாம். அவர் என்னுடைய நேரத்தை வாங்கி விட்டு, அவர் நேரத்தைச் செலவளித்து ஈட்டிய பணத்தைக் கொடுக்கிறார்.

வேறு எந்த வித சிக்கல்களும் இல்லாத உலகில் வேலை செய்யும் உழைப்பு மட்டுமே காரணியாக இருக்கும். ஆனால், நடைமுறையில் இன்னும் இரண்டு கூறுகள் குறுக்கிடுகின்றன. நான் கடைக்குப் போய் கத்திரிக்காய் வாங்கும் போது கடையில் விற்கும் காய்கறியின் விலை மூன்றாகப் பிரிகிறது. நிலத்துக்கான குத்தகை, பாட்டளிக்கான கூலி, விவசாயிக்கான முதலீட்டு ஆதாயம். சில சமயம் இந்த மூன்றுமே ஒருவருக்கே போய்ச் சேரும்.

நான் என் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு, சொந்தமாக பராமரித்து, சந்தைக்கு வண்டியில் எடுத்து சென்று விற்று காசாக்கினால், நிலத்தின் உரிமையாளன் என்ற பேரில் ஒரு பகுதி நிலக் குத்தகைத் தொகையாகவும், நிலத்தில் வேலை செய்து, சந்தைக்கு எடுத்துச் சென்று விற்ற உழைப்புக்குக் கூலியாக ஒரு பகுதியும், விதை வாங்கி, வண்டி வாடகை கொடுத்து கைக்காசை வேறு வழியில் செலவளிக்காமல் முடக்கிப் போட்ட முதலீட்டுக்கான ஆதாயம் (அல்லது லாபம்) என்று ஒரு பகுதியும் கிடைத்த காசு என்னைச் சேருகிறது.

அந்தக் காசில் பேருந்துச் சீட்டு வாங்கும் போது அதில் ஒரு பகுதி பேருந்து நிறுவன ஊழியர்களின் சம்பளத்துக்கும், ஒரு பகுதி நிறுவனம் போட்டுள்ள முதலீட்டுக்கு ஆதாயமாகவும் போகிறது. இங்கு வெளிப்படையாக நில வருமானம் இல்லை.

இந்த மூன்று பகுதியையும் பார்த்தால் ஒன்று விளங்கும். நிலக் குத்தகை என்பது இயற்கையின் உழைப்பில் உருவாகும் மதிப்பு. நிலம், கடல், சூரிய ஒளி, காடுகள் இவை எல்லாம் தானே செல்வத்தை உருவாக்குகின்றன. இதற்கான பங்கு யாரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதில் குழப்பம் அதிகம் இருக்க வழியில்லை. ஆனாலும் இருக்கிறது. இன்றைய உலகில் கடலின் செல்வத்துக்கு மீனவர்கள் எந்த கடல் உரிமையாளருக்கும் குத்தகைக் கொடுக்க வேண்டியதில்லை. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடிப்பு உள்ளூர் நிர்வாகத்துக்கு காசு கொடுத்து விட்டு நடைபெறுகிறது.

தாதுப் பொருட்களான உரிமையும் பொது மக்களின் அரசுகளிடம்தான் உள்ளது. அரசு என்றால் எதிர்மறையாகப் பார்க்க வேண்டாம். உண்மையாக மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசுக்குப் போய்ச் சேரும் செல்வங்கள் பொது நலத்துக்காகப் பயன்படுத்தப்படும்.

நிலம் மட்டும்தான் தனி மனிதர்களிடம் மாட்டிக் கொள்கிறது. ஒருவர் இறந்த பிறகு அது வாரிசுகளுக்குப் போவதும், நிலத்தை வாங்கி விற்பதும் அன்றாட நடப்புகளாக உள்ளன.

இரண்டாவதாக மனித உழைப்பு. எந்தப் பொருளுக்கு அதிக உழைப்புத் தேவைப்படுகிறதோ அதன் விலை அந்த அளவுக்கு அதிகமாகி விடும். அந்தப் பணம் உழைப்பாளிக்குப் போய்ச் சேருகிறது.

மூன்றாவதாக முதலீடு. இயற்கை பணி புரிந்தாலும், உழைப்பாளிகள் உழைக்க தயாராக இருந்தாலும் இரண்டையும் ஒருங்குபடுத்தி தேவையான கருவிகளையும் மூலப் பொருட்களையும் கொடுத்து விளை பொருளை உருவாக்க ஒருவர் காசு செலவளிக்க வேண்டும். அவர் தன்னுடைய உடனடிச் செலவுகளைக் குறுக்கிக் கொண்டு பணத்தை இதற்குச் செலவிட வேண்டும். அதற்குப் பதிலாக விளை பொருள் விலை போன பிறகு, செலவளித்த மூலதனத்தை விட அதிகமாகப் பணம் கையில் நிற்க வேண்டும். இந்த கூடுதல் வருமானம்தான் அவருக்குக் கிடைக்கும் ஆதாயம்.

இந்த மூன்றும் சேர்ந்து செயல்பட்டால்தான் எந்தப் பொருளும் சந்தைக்கு வந்து சேர முடியும்.

கடையில் விற்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துக் கொள்வோம். இதில் இயற்கையின் பங்கு, அதை செய்யத் தேவையான பொருட்களான தாதுப் பொருட்கள், மின்சாரம் உற்பத்தியாகப் பயன்பட்ட நிலக்கரி, அருவி அல்லது அணு ஆற்றல். தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள், கடையில் விற்பனை செய்பவர்கள் மற்றும் பலரின் உழைப்பு தொழிலாளியின் பங்கு. பல நிலைகளின் முதலீடு செய்த தொழில் முனைவோரின் ஆதாயம் முதலின் பங்கு.

இப்படி எந்த பொருள் அல்லது சேவையை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்று காரணிகளைப் பார்க்கலாம். மூன்று காரணிகளும் ஒருவருக்கே போய்ச் சேரலாம் அல்லது பல நூறு பேருக்குப் பிரிந்து போகலாம். ஆனால் இவைதான் அடிப்படை காரணிகள்.

உழைப்பவருக்கு அவர் செய்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் மறு பேச்சே இல்லை. கிடைத்த பணத்தை செலவளிக்காமல் முதலீடு செய்த தொழில் முனைவருக்கு ஆதாயம் போய்ச் சேர வேண்டும் என்பதும் நியாயமே. இயற்கை வளத்துக்கான பங்கு யாருக்குச் சேர வேண்டும்?

யாருக்கும் சேரக்கூடாது என்பது வெளிப்படை. அது சமூகத்துக்குப் பொதுவில் இருக்க வேண்டும். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பது நிலத்தை பயன்படுத்தும் வரை அவர் யாருக்கும் குத்தகை கொடுக்க வேண்டாம் என்று இருக்க வேண்டும். நிலம் கை மாறும் போது யாரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதை முடிவு செய்வதில்தான் சந்தை வழி உதவுகிறது. ஒரு அரசு அலுவலகம் யாருக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நிச்சயம் சோவியத் யூனியன் போன்ற குழப்பத்தில்தான் முடியும். இதற்கு ஒரு வழி, உனக்கு இந்த நிலத்துக்கு இனிமேல் பலன் இல்லையா விட்டு விட்டுப் போய் விடு. வேறு யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர் வந்து எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லலாம். அது அடிதடிக்குத்த்தான் வழி வகுக்கும். அதனால்தான் இன்றைய நில வாங்கல் விற்றலும் சூதாட்டங்களும்.

பெரும்பாலான அரசுகள் நில விற்பனை மீது பதிவு வரி என்றும், விற்ற பணத்தின் மீது வருமான வரி என்றும் விதித்து நில மதிப்பு அதிகரிப்பின் பெரும்பகுதியை சமூகத்துக்கு எடுத்துக் கொள்ள முனைகின்றன.

இதற்கு ஒரு தீர்வு வேண்டும். விளை பொருளுக்கான விலையில் உழைக்காத தனி நபருக்குக் காசு போய்ச் சேரக் கூடாது, அதே நேரம், யார் நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு சரியான மாற்று வழியும் வேண்டும்.

சந்தைப் பொருளாதரத்தின் இரண்டாவது பெரும் சிக்கல் முதலீட்டு ஆதாயத்துக்கும், தொழிலாளி ஊதியத்துக்குமான இழுபறி. நியாயமான உலகில், என்னை வேலைக்கு வைப்பதால் நிறுவனத்தின் வருமானம் எவ்வளவு கூடுகிறதோ அந்தப் பணத்தை எனக்கு ஊதியமாகக் கொடுப்பதுதான் நடக்க வேண்டும். ஆனால் நடை முறையில், முதலாளியின் ஓங்கிய கை, தொழிலாளிகளை எவ்வளவு குறைவாகக் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு சம்பளமாகக் கொடுத்து, எஞ்சியதை ஆதாயமாகப் பையில் போட்டுக் கொள்ள உதவுகிறது.

முதலாளிக்கு உடனடித்தேவைகள் எல்லாம் நிறைவேறிய பிறகு எஞ்சிய பணம்தான் எதிர்கால வருமானத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டும். தொழிலாளிக்கோ தன் உழைப்பைப் பயன்படுத்திக் காசு ஈட்டி வீட்டில் அடுப்பெறிய வைக்க வேண்டிய அவசரம். அந்த அவசரத்தைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவுக் ஊதியத்தைக் குறைக்க முயல்வார் முதலீட்டாளர்.

இதைத்தான் உழைப்பாளியின் கூடுதல் மதிப்பு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். (கெட்ட பெயரை இப்போதைக்குச் சொல்லவில்லை :-)

அது என்ன கூடுதல் மதிப்பு?

இது எங்கும் நிறைந்து கிடக்கிறது. கடைக்குப் போய் வாழைப்பழம் சாப்பிடப் போகிறோம். விலை என்ன என்று கேட்கிறோம், கடைக் காரை ஒரு பழம் இரண்டு ரூபாய் என்று சொன்னாலும் வாங்கும் மன நிலையில் இருக்கிறோம். அவரோ ஒன்று ஒரு ரூபாய் என்று சொல்லவும், பேசாமல் வாங்கி விட்டுப் போகிறோம். இரண்டு ரூபாய்க்கான பலன் நமக்கு ஒரு ரூபாயிலேயே கிடைத்து விடுகிறது. அந்த ஒரு ரூபாய் நமக்குக் கிடைத்த கூடுதல் மதிப்பு.

கடைக்காரர் ஏன் ஒரு ரூபாய்க்கு விற்கிறார். அவருக்கு ஒரு ரூபாய் விலை கட்டுப்படியாகிறது. இப்போது இரண்டு ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தால் நாம் வாங்கிக் கொண்டாலும், ஒரு ரூபாய் மட்டும் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒருவர் பழம் வாங்காமல் போய் விடுவார், பழம் மீந்து போய் இழப்பாகி விடும்.

இப்போது கடைக்காரரிடம் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கடைக்கு வரும் ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பார் என்று அவர் தெரிந்து கொண்டால் ஆளுக்குத் தகுந்த விலையில் பழத்தை விற்று விடலாம். நியாயமான சந்தை பரிமாற்றத்தில் நமக்கு வர வேண்டிய ஒரு ரூபாய் நுகர்வோர் கூடுதல் மதிப்பை அவர் கொள்ளை அடித்து விடுகிறார். ஒரு ரூபாய்க்கு வாங்குபவருக்கும் விற்று இழப்பையும் தவிர்த்துக் கொள்கிறார்.

இதே கதைதான், முதலாளி தொழிலாளி உறவிலும். இவனுக்கு எவ்வளவு குறைவாக கொடுத்தால் வேலை பார்ப்பான் என்று மதிப்பிடும் அவகாசமும், வசதியும் இருப்பதால் முதலாளியின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. அந்த அனுகூலத்தைச் சமன் செய்யத்தான் தொழிலாளர் சங்கங்கள், கூட்டுப் பேரம் பேசுதல், பேரம் பேசுவதில் விவரம் தெரிந்த வெளியாள் உதவுதல் என்ற கோட்பாடுகள் பெரும்பாலான சமூகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. என்னதான் செய்தாலும், முதல் போடுபவருக்கு இருக்கும் அனுகூலத்தை முற்றிலும் சமன் செய்ய முடியாது.

இப்படிக் கிடைக்கும் கூடுதல் ஆதாயத்தை மீண்டும் முதலீடு செய்து தனது நிலையை முன்னேற்றிக் கொண்டே போவார்கள் முதலீடு செய்பவர்கள். ஆனால் இப்படி முதலீட்டின் அளவு அதிகமாகும் போது வேலைக்குத் தேவைப்படும் ஆட்களின் அளவும் அதிகமாகி தொழிலாளிகளின் வருமானமும் அதிகமாகி விடும்.

ஆனால், அப்படி வரும் அதிக வருமானத்தில் அதிக குழந்தைகளைப் பெற்று எதிர்கால தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி விடுகிறார்கள். இந்த கூடுதல் தொழிலாளர்களின் போட்டியால் ஊதியங்கள் அதிகரிப்பது மெதுவாகி விடுகிறது.

இப்படி மூலதனம் உழைப்பை உறிஞ்சிக் கொண்டே போகும் போது, உற்பத்தியாகும் பொருட்களின் அளவு அதிகமாகிக் கொண்டே போகும், ஆனால் அதை வாங்க வேன்டிய சந்தையின் அளவு குறுகி விடும்.

தாலிடோமைடு

1950-60களில் தாலிடோமைடு என்ற மருந்து கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி தலைச் சுற்றல் போன்றவற்றை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டு விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 நாடுகளில் விற்கப்பட்ட இந்த மருந்து தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

பின்னர் 1961ல் கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் இந்த மருந்தை உட்கொண்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனங்களோடு பிறக்கின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மருந்து தடை செய்யப் படுவதற்கு முன் ஏறக்குறைய 15,000 கர்ப்பங்கள் காயப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றில் 12,000 குழந்தைகள் ஊனங்களோடு பிறந்து, 8000 குழந்தைகள் மட்டுமே ஒரு வயதைத் தாண்ட முடிந்தது. தப்பித்த குழந்தைகள் வாழ் நாள் முழுவதும் ஊனத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஊனங்கள் உயிரணு மூலம் கடத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Thalidomide என்ற விகிபீடியா கட்டுரையில் இது பற்றிய முழு விபரங்களைப் பார்க்கலாம். பக்கத்தின் கீழே தாலிடோமைடு குழந்தைகள் எனப்படும் மனிதர்களில் புகழ் பெற்றவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.seacoastonline.com/news/05252006/health/104544.htm

என்ற சுட்டியில் இப்போது கருத்தடை மாத்திரைகளையும், பிற முறைகளையும் பயன்படுத்தி மாதவிடாயைத் தவிர்க்கும் பெண்களைப் பற்றிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையாக நிகழும் மாற்றங்களை செயற்கையாக அடக்கும் இத்தகைய வேதிப் பொருட்களின் நீண்ட கால விளைவுகளைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக லாபம் என்பதையே குறியாகக் கொண்டு செயல்படும் மருந்து நிறுவனங்கள் தங்கள் தொழில் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

புதன், ஜூன் 21, 2006

மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள்

நான் 2001 அக்டோபர் முதல் சொந்தமாகத் தொழில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தேன். பல தடைகளையும் தடுமாற்றங்களையும் தாண்டி இன்றைக்கு ஒரு திடமான வாடிக்கையாளர் பட்டியல், உறுதியான மென்பொருள் வலிமை இரண்டையும் ஈட்டிக் கொண்டு அடுத்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பயணத்தில் நான் சரியாகச் செய்தவற்றையும், செய்தவைத் தவறு என்று பின்னர் புரிந்தவற்றையும், என்னைப் போன்ற பிறர் எப்படி செயல்பட்டார்கள் என்று நான் தெரிந்து கொண்டவற்றையும், இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு மிகச் சரியான அணுகுமுறை என்ன என்று எனக்குத் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

A. ஏன் ஒரு புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை,
 • எட்டு ஆண்டுகள் இரண்டு நிறுவனங்களின் பல் வேறு பிரிவுகளில் பணியாற்றிய பிறகு எனது பலங்கள், பலவீனங்கள் பற்றிய ஒரு கணிப்பு வந்திருந்தது.
 • என்னுடைய எல்லா ஆற்றல்களையும், அறிவையும் பயன்படுத்தும் வண்ணம் அடுத்த வேலைக்குப் போவது குதிரைக் கொம்பாகவேத் தோன்றியது.
 • தோல் துறையில் நான் கற்றவை/தெரிந்து கொண்டவை, இந்தியா, சீனா, தாய்வான், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்து நான் உணர்ந்து கொண்ட தோல் துறையின் தேவைகள், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எனக்கு இருந்த பரிச்சயம், இணையம் என்ற எல்லாவற்றையும் புரட்டிப் போட வல்ல புதிய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் பற்றிய என்னுடைய புரிதல்கள் இவை அனைத்தையும் ஒருங்கே பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்றுதான் நான் தனியாக தொழில் தொடங்க முடிவு செய்தேன்.
இது சரியான காரணம்தானா என்று இப்போது சொல்ல முடியாது. எங்கள் நிறுவனம் உலகம் முழுவதும் கால் பதித்து பல்லாயிரம் கோடி டாலர் கணக்கில் வருமானம் ஈட்டும் போது இதை ஒரு முன் உதாரணமாக சொல்லிக் கொள்ளலாம். இப்போதைக்கு வேறு சில காரணங்களையும் பார்க்கலாம்.

 1. 'வேலை செய்யும் நிறுவனத்தில் நாம் நினைக்கும் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடியவில்லை. இந்தத் திட்டத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று நம்பி வேலையை விட்டு விட்டு தனியாக ஆரம்பித்தவர்கள் உண்டு.
  'புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும், நம்முடைய உழைப்பால் உலகில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்' என்ற கனவில் தொழில் செய்ய இறங்குகிறார்கள் இத்தகைய தொழில் முனைவோர். (இன்ஃபோசிஸ்)

 2. போட்டியை ஊக்குவிக்க வேண்டும் என்று வேலை பார்க்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தூண்டுதலினால் தனியாக ஆரம்பித்தவர்கள் உண்டு.

  நான் டாட்டாவின் வேலை பார்க்கும் போது, ஒரு சீன வாடிக்கையாளர் 'உனக்கு எவ்வளவு மூலதனம் வேண்டுமோ அதை நான் கடனாகத் தருகிறேன். இன்னும் ஓரிருவரைச் சேர்த்துக் கொண்டுப் போட்டி நிறுவனம் ஒன்றை ஆரம்பி' என்று சொன்னார்.

  'நான் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஒரு சிறு பகுதிதான். என்னுடைய வலிமைகளாக நீங்கள் பார்ப்பவை நிறுவனத்தின் சார்பில் விளைந்தவை, நான் தனியாக ஆரம்பித்தால் எனக்குப் போட்டி போடத் தேவையான எதுவும் இருக்காது' என்று மறுத்து விட்டேன்.

 3. கல்லூரியில் படிக்கும் போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கி, அதை சந்தைப்படுத்தும் முயற்சியில் முன் அனுபவம் இல்லாமலே தொழில் தொடங்குவதும் சாத்தியம்தான். (மைக்ரோசாப்டு)

 4. 'கையில் நிறையக் காசு உள்ளது, வங்கியில் வட்டி வீதம் குறைவு. தொழிலில் முதலீடு செய்வோம்' என்று ஆரம்பிப்பவர்களும் உண்டு.

 5. 'எத்தனை நாள் பிறருக்கு அடிமையாக உழைப்பது. தனியாகத் தொழில் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்' என்று நினைப்பவர்களும் உண்டு.
  'என்னுடைய விருப்பப்படி, என்னுடைய நேரத்தில் நான் வேலை செய்யலாம், யாரிடமும் பேச்சுக் கேட்க வேண்டியதில்லை, யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டியதில்லை' என்பவை இப்படிப்பட்ட தொழில் முனைவோரின் நோக்கங்கள்.

 6. 'நம் பையன் படித்து விட்டான், ஒரு தொழில் தொடங்கிக் கொடுக்கலாம்' என்று தந்தையின் ஆர்வத்திலும் தொழில்கள் தொடங்கப்படுகின்றன.
'ஒரு பொருள் அல்லது சேவைக்கான திட்டம் மனதில் இருந்து அதைச் செயல்படுத்தி விட வேண்டும்' என்று ஆரம்பிக்கப்படும் தொழில்கள், நீடித்து நிலைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது என்னுடைய கருத்து.

B. எப்போது தொழில் ஆரம்பிக்கலாம்?

ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கும் போதே வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் தொழில் ஆரம்பிக்கலாம் என்பதும் வந்து விட்டது.

 • படிக்கும் போது சிறு சிறு தொழில் முனைவுகள் செய்து பார்த்து, குடும்பத் தொழிலில் தந்தையுடன் சிறு வயதிலிருந்தே நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, அல்லது புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மிக வெற்றிகரமான ஒரு பொருளை உருவாக்கி தொழில் தொடங்கினால் ஒழிய, படித்து முடித்தவுடன் தொழில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.

  'ஒரு தொழிலில் என்னென்ன நடைமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும், என்னென்ன சிக்கல்கள் வரும், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்களைக் கையாள்வது' இதற்கெல்லாம் இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரு அமைப்புச் சார்ந்த சூழலில் (அவர்கள் செலவில்), தவறுகள் செய்து கற்றுக் கொள்வது நல்லது.

 • வேலைக்கு சேர்ந்து வசதியான அமைதியான வாழ்க்கையில் அமர்ந்தாகி விட்டது. எப்போது வேலையை விட்டு விட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும்?

  நிறுவனம் வேலையை விட்டு நீக்கி விட்டாலோ, சரியான ஊதியம் கொடுக்காமல் இருந்தாலோ அவற்றிற்கான தீர்வைக் காண முயற்சிக்க வேண்டுமே ஒழிய, புதிய தொழில் துவங்குவது ஒரு தீர்வாக அமையாது.

என்னைப் பொறுத்த வரை கடைசியாக வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும்போதே 'இனிமேல் வேறு வேலை தேடப் போவதில்லை' என்று முடிவு செய்து, இணையம் - தகவல் தொழில் நுட்பம் இவற்றை இணைத்து ஒரு தொழில் தொடங்க எண்ணிக் கொண்டிருந்தேன்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தகவல் தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுத்து புதிய தொழில் நுட்பத்தை அவர்களுக்கு அளிக்கலாம் என்ற எண்ணத்தை சிங்கப்பூரை சேர்ந்த ஒரு சீனர் எனக்குக் கொடுத்தார்.

எனக்குத் தெரிந்த துறை தோல் துறை, நம் ஊரில் தோல் சார்ந்த நிறுவனங்கள் நிறைய இருந்தன. சென்னையில் மென்பொருள் தொழிலும் வளர்ந்து கொண்டிருந்தது.

தோல் துறையில் இறக்குமதி ஏற்றுமதி ஏராளம் நடைபெறுகிறது. சிறிய நிறுவனங்கள் கூட பல நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது வளமை. அவர்கள் தகவல் பரிமாற்றிக் கொள்வது தொலைபேசி, தொலை நகலி, தபால் துறை, தனியார் தொலைச் சேவை நிறுவனங்கள் மூலம்தான். நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு தோல் பொருள் நுகர்வோரைப் போய்ச் சேரும் முன்னர் இத்தகைய தகவல் பரிமாற்றத்துக்கான செலவுகள் விலையில் கணிசமான பகுதி ஆகி விடுகின்றன.

இந்தச் செலவைக் குறைக்க கூடவே பிற சாத்தியங்களை உருவாக்க, இணையம் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகச் சேவையை அளிக்கலாம் என்பதுதான் திட்டம்.

எனக்கு அறிவுரை சொல்ல நிறைய பேர் இருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருமே புதிய தொழில் தொடங்கிய அனுபவம் இல்லாதவர்கள். எங்கள் குடும்பத்திலும் கிட்டத்தட்ட எல்லோருமே பணிக்கு ஊதியம் ஈட்டும் வேலைகளிலேயே இருந்தார்கள். ஒரு தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்ற உணர்வோ, அனுபவமோ முற்றிலும் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு குதித்து விட்டேன்.

C. காசு எங்கிருந்து வரும்?

ஆரம்பத்தில் வீட்டின் ஒரு அறையிலிருந்தே ஆரம்பித்து விட்டேன்.

செலவு என்று பார்த்தால் வீட்டு வாடகை, மாதாமாதம் வீட்டுச் செலவுகள், குழந்தகளின் படிப்பு என்று சொந்தச் செலவுகள். மாதச் சம்பளம் நின்று விடவே, சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் நிச்சயமற்ற நிலையப் புரிய வைத்து விடுவது அவசியம்.

நிலையான சம்பளம் வருவது நின்று சேமிப்பில் செலவு செய்யும் போது வாழ்க்கை முறைகள் / செலவு முறைகளில் ஏற்பட வேண்டிய மாறுதல்களை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமும் தெளிவாக விவாதித்து மறு ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.

தொழில் செலவுகளைக் கூடிய வரையில் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கில்தான் நாங்கள் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிரல் மென்பொருட்களை எங்கள் ஆதாரமாகப் பயன்படுத்த முடிவு செய்தோம். நமது ஆரம்பச் செலவுகள் குறைவது மட்டும் இல்லாமல், வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் காசு மிச்சம். நம்முடைய மென் பொருளைப் பயன்படுத்த காசு கொடுத்து பிற மென்பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆரம்பத்தில் சொந்த சேமிப்பு, நண்பர்கள், உறவினர்களில் ஆதரவுதான் முதலீட்டுக்கு வழி. ஒரு திட்டம் வைத்திருக்கிறேன், முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்பது நம் ஊரில் நடப்பது போலத் தெரியவில்லை. ஆரம்ப காலங்களில் தன் கையை தனக்கு உதவும்.

D. வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு சேவை தேவையா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

 • 'என்ன பொருள் அல்லது சேவை வழங்க வேண்டும்' என்பதை முடிவு செய்து கொண்டுதான் தொழிலில் இறங்குகிறோம். ஆனாலும், 'அந்தப் பொருள்/சேவைக்கு உண்மையிலேயே சந்தை இருக்கிறதா, அதைக் காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா' என்று ஆராய்ச்சி கண்டிப்பாக தேவை.

 • ஒரு திசையில் நேரத்தையும், பொருளையும் நிறைய செலவளிக்கும் முன்னால் குறி வைக்கும் வாடிக்கையளர்களின் பிரதிநிதி போன்ற ஒரு நிறுவனத்தில் ஆரம்ப முயற்சிகளைக் காட்டி அவர்களின் ஆர்வத்தை அளவிட வேண்டும். ஆர்வத்தின் அளவு அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் பணம்தான்.

 • இப்படியே ஒவ்வொரு படியிலும், வாடிக்கையாளரின் கருத்துகளை விலை கொடுக்கும் விருப்பத்தைப் பொறுத்து சேவையை திருத்திக் கொண்டே வர வேண்டும்.

  இணையத்தின் மூலம் வழங்கும் சேவையாக விற்று வந்த நாங்கள் இரண்டு ஆண்டுகளில் இணைய இணைப்பு இல்லாத வகையிலும் சேவை அளிக்கும் படி மாறிக் கொண்டோம்.

  ஏனென்றால் எங்களது வாடிக்கையாளர்களில் பலர் இணையத்தில் தொழில் விவரங்களைச் சேமிப்பதில் தயக்கம் காட்டினார்கள். கூடவே பல இடங்களில் இணையத் தொடர்பும் சரிவர இல்லை. இதனால் பல வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. எங்கள் வழிமுறையை மாற்றிக் கொண்ட பிறகுதான வளர்ச்சி ஆரம்பித்தது.
E. என்ன விலை வைப்பது?

எந்தப் பொருளுக்குமே விலை என்பதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. வாடிக்கையளருக்கு அதனால் கிடைக்கும் பலனை ஒட்டிய மதிப்பு, நிறுவனத்துக்கு அதைத் தயாரிக்க ஆகும் செலவை ஒட்டிய மதிப்பு. விலை இந்த இரண்டுக்கும் நடுவில் அமைய வேண்டும். பேரம் பேசும் போது எதற்கு அருகில் விலை அமைகிறது என்பது இரு தரப்பின் வர்த்தகத் திறமையைப் பொறுத்து அமைகிறது.

'ஒரு புதிய நிறுவனத்துக்கும் தன்னுடைய செலவினங்களை எப்படிப் பொருளின் விலையுடன் பொருத்த வேண்டும்' என்ற வழி முறைகள் தெளிவாக இருக்காது. 'வாடிக்கையாளருக்கு என்ன பலன் கிடைக்கும்' என்று கணக்கிட்டுக் காட்டக் கூடிய விபரங்கள் கூட இருக்காது. இந்த நிலையில் விலையை ஒரு அளவில் நிர்ணயித்து விட்டு டிரையல் எர்ரர் முறையில்தான் செயல்பட வேண்டும்.

ஆரம்ப காலங்களில் லட்சக் கணக்கில் சொல்லி வந்த விலையை வாய்ப்புகள் கிடைப்பதற்காக சில பத்தாயிரங்களுக்குக் குறைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் லட்சத்தைத் தாண்டியுள்ளோம்.

G. எப்படிச் சந்தைப் படுத்துவது?

நமக்கு இருக்கும் தொடர்புகள்தான் தொழிலின் உயிர் நாடி.

வேலைக்கு ஆள் தேடுவதிலாகட்டும், பொருளுக்கு வாடிக்கையாளரை அணுகுவதிலாகட்டும், நமக்கு யாரைத் தெரியும் என்பதுதான் நமக்கு என்ன தெரியும் என்பதை விட ஒரு படி மேலேயே இருக்கிறது. தோல் துறையில் இருக்கும் எங்கள் கல்லூரியில் படித்த சீனியர்கள், ஜூனியர்கள் மூலமாகத்தான் ஆரம்ப காலங்களில் எங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன.

ஒரே ஆளை விட ஒரு குழுவாக ஆரம்பிப்பது மிக நல்லது. ஒருவரில் இல்லாத திறமைகள் இன்னொருவரிடம் இருக்கும். எங்கள் நிறுவனத்தில் மனித உறவுகளில் தேர்ந்த ஒருவர் பங்குதாரராக முழு நேரப் பணி ஆரம்பித்த பிறகுதான் பல மேம்பாடுகள் ஏற்பட்டன. நான் பார்த்த வரை வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட திறமைகளைக் கொண்ட கூட்டாளிகள் சேர்ந்து இயங்குவது வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

செவ்வாய், ஜூன் 20, 2006

பெண்களை "விற்கிறார்கள்"

காலணி விற்க குட்டைப் பாவாடை அணிந்த ஒரு பெண்ணின் நீண்ட கால்களின் பாதங்களில் செருப்புகள். அப்படி ஒரு புகைப்படம் நாங்கள் போகும் ஒரு வாடிக்கையாளரின் காலணித் தொழிற்சாலையின் வரவேற்பறையில் இருந்தது. அந்த பெண் அமர்ந்து கொண்டு தன் ஒற்றைக் காலைத் தூக்கி வைப்பதாக தரையிலிருந்தான கோணத்தில் ஒரு புகைப்படம். கூட வந்த நண்பர் "என்ன கவர்ச்சியான புகைப்படம், அந்த பெண் என்ன சொல்ல வருகிறாள?்" என்று கிண்டலாகக் கேட்டார்.

எதுவும் சொல்ல வரவில்லை "தோற்றத்தைப் பார்த்தால் வாயு பிரிப்பதற்காக காலைத் தூக்கிக் கொண்டுள்ளார் போலத் தெரிகிறது" என்றேன். உடனடியாக அந்தப் புகைப்படத்தைப் போர்த்தியிருந்த கவர்ச்சிப் போர்வை கழன்று விழுந்தது. அந்தப் பெண்ணும் ஒரு குழந்தையாகப் பெற்றோர்களால் கொஞ்சி விளையாடப்பட்டு, வளர்ந்து வந்தவள். காலையில் பல் தேய்த்து முந்தைய நாளில் செரித்த உணவுக் கழிவுகளை வெளியேற்றி குளித்து, உணவு உண்டு, போன மாதம் கடையில் வாங்கிய ஆடையை அணிந்து கொண்டு வந்திருக்கலாம் என்ற மனித முகம் தோன்றி விட்டது.

காமம், வெறுப்பு, பயம் போன்ற உணர்ச்சிகளை உருவாக்க மனிதர்களிடமிருந்து மனிதத்தன்மையை உரித்து விடுகிறார்கள். விளம்பரத்தில் வரும் பெண்ணின் மனித முகம் மறைந்தால்தான் அவளை ஒரு காமக் கருவியாகப் பார்க்க முடியும். கட்சியின் தலைவர் அணுக முடியாதவராக இருந்தால்தான் ஒரு அதிசயம் இருந்து வரும், மாற்று மதத்தினர் எல்லோரும் நம்மைக் கொல்லக் கருவிகளோடு அலைகிறார்கள் என்று அவர்களை நெருங்க விடாவிட்டால்தான் பயமும், வெறுப்பும் வளரும்.

தன்னை நெருங்க விடாத தலைவர்களையும், பிறரின் மனிதத் தன்மையை உரித்து விடும் போதனைகளையும் கவனமாக அணுகுங்கள். இரண்டுமே மனித மூளைகளை மயக்கி தமக்குத் தேவையானவற்றைச் சம்பாதிக்கத் துடிப்பவை.

அதிகார மையங்களைச் சுற்றி இத்தகைய தீவட்டம் கவனமாக வளர்க்கப்படுகிறது. தங்கத் தாரகையாக இருந்தாலும், தமிழினத் தலைவராக இருந்தாலும் அவர்களும் எல்லோரையும் போல மனிதர்கள்தான். அவர்களுக்கு பசி எடுக்கிறது, மூன்று வேளைச் சாப்பிடுகிறார்கள், உடலுக்கான கடன்களைச் செய்கிறார்கள். விக்கிரகங்களை உடைத்து எறிவோம்.

இவன் முஸ்லீம், இவன் இந்து, இவன் பார்ப்பனன் என்று முத்திரை குத்தும் போக்கு, ஒரு மனிதனை குறிப்பிட்ட வார்ப்புக்குள் அடைத்து அவனது மற்ற பின்னணிகளை இருட்டடிக்கச் செய்யும். எந்த ஒரு மனிதனும் பல பண்புகளின் தொகுப்பு, அவனது மதம், சாதி, மொழி, பிறந்த இடம், படித்த படிப்பு, செய்யும் தொழில், அனுபவங்கள் எல்லாவற்றின் தொகுப்பும்தான் ஒரு மனிதன். மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து, ஒரே பண்பை வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி விடும் தலைவர்கள், கட்சிகள் ஆபத்தானவர்கள்.

இந்தியாவின் மதச்சார்பின்மை

இந்துத்துவா பற்றியும் காந்தி பற்றியும் நான் எழுதிய சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்களாகவும், மின் அஞ்சல் மூலமும் இந்தியாவில் போலி மதச்சார்பின்மை பின்பற்றப்படுகிறது, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், சிறுபான்மையினருக்குச் சலுகைகள் போட்டி போட்டுக் கொண்டு வழங்கப்படுகின்றன என்று சில நண்பர்கள் (சாணக்கியன், ஷங்கர்) கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் வரலாறு, அரசியலமைப்பு, இன்றைய நிலை போன்றவற்றை அலசிய பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலேயே இந்தியா ஒரு இந்து நாடு அல்ல. இந்தியா என்பது பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தினரும், பல்வேறு மொழி பேசுபவரும் சம உரிமைகளோடு வாழ ஒத்துக் கொண்டு அமைந்த ஒரு நாடு. பல்வேறு பிரிவினர் பல்வேறு காரணங்களால் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருந்தாலும், பிற பிரிவினரின் நலன்களை சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்போம் என்ற அடிப்படையில் அமைந்தது இந்தியக் குடியரசு.

அது சாத்தியமில்லை, பெரும்பான்மை இந்துக்களுடம் சேர்ந்து வாழும் போது முஸ்லீம்கள் தமது மதத்தையும் தனிக் கலாச்சரத்தையும், சமூகச் சட்ட திட்டங்களையும் தொடர்ந்து பின்பற்ற முடியாமல் போய் விடும், எனவே முஸ்லீம்கள் வாழும் எல்லாப் பகுதிகளும் பாகிஸ்தான் என்ற பெயரின் கீழ் தனி நாடாக ஆளப்பட வேண்டும் என்று போராடியது ஜின்னாவின் தலைமையின் கீழான முஸ்லீம் லீக். அதற்குத் தேவையே இல்லை, இந்துப் பெரும்பான்மை மற்ற மதங்களின் உரிமைகளை நம்பிக்கைகளை நசுக்கி விடாது, அதனால் இந்தியா ஒரே நாடாக இருக்க் வேண்டும் என்பது காந்தியின் தலைமையிலான காங்கிரசு.

ஜின்னாவின் கோட்பாட்டின் படி, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லாப் பகுதிகளும் (எல்லா) பாகிஸ்தானைச் சேர வேண்டும். பஞ்சாப், வங்காளம் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை மாநிலங்கள், ஹைதராபாத் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நகரங்கள், ஏன் நகரங்களில் முஸ்லீம் பெரும்பான்மை வட்டங்கள் கூடப் பாகிஸ்தானாகி விட வேண்டும். அத்தகைய பகுதிகள் இந்தியப் பெருநாடு முழுவதும் துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கலாம். ஆனால் அவை அனைத்திலும் ஷரியத் சமூகச் சட்டம் செயல்படும், முஸ்லீம் மதத்துக்குப் பொருந்தும் கல்விக் கூடங்கள் செயல்படும், முஸ்லீம்கள் புனித யாத்திரை போக அரசு மானியம் வழங்கும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை முஸ்லீம்களை நிர்வகிப்பார்கள். மொத்தத்தில் புவியியல் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடந்தாலும் இந்தப் பகுதிகளில் எல்லாம் முஸ்லீமகள் நிம்மதியாக வாழ முடியும்.

இது என்ன முட்டாள் தனம்? நாம் அமைக்கப் போகும் அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரும் தமக்கு விருப்பமான வகையில் வாழும்படிதான் அமையப் போகிறது. யாரும் பெரும்பான்மை பிரதிநிதி பலத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினர் விரும்பாத நடவடிக்கைகளை எடுக்க முடியாத வகையில்தான் அமையப் போகிறது. இந்தியா ஒரே நாடாகத் தான் இருக்க வேண்டும் என்பது காந்தியின் வாக்கு.

அந்த வாக்கை எதிர்த்து வன்முறைக் கலகங்களைத் தூண்டி தனது நோக்கத்தில் ஒரு பகுதியை மட்டும் நிறைவேற்றி பாகிஸ்தானை உருவாக்கிக் கொண்டார் திரு ஜின்னா அவர்கள். இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் இந்தியத் தலைவர்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து, உருவான அரசியலமைப்புச் சட்டத்தைச் சாட்சியாக வைத்து இந்திய நாட்டிலேயே வாழ முடிவு செய்தார்கள். அவர்கள் விரும்பும் வரை, அவர்களாக முன் வந்து மாற்றாத வரை, அவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புச் சட்டங்களை, சலுகைகளை, உரிமைகளை ரத்துச் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

அப்படி ரத்துச் செய்ய முனைபவர்கள், இந்தியா என்ற நவீன நாடு அமைக்கப்பட்டதன் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தைச் செல்லாததாக்குகிறார்கள். அப்படி அரசமைப்புச் சட்டம் செல்லாததாகி விட்டால் இந்தியாவில் சேர்ந்து வாழும் ஒவ்வொரு குழுவும் தனது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்று விடும். இந்தியா உடைந்துச் சிதற வேண்டும் என்று எண்ணுபவர்கள் மட்டுமே, பெரும்பான்மை மத அரசியலில் ஈடுபடுவார்கள்.

இந்த முன்னுரையுடன், எழுப்பபட்ட விவாதங்களைப் பார்ப்போம்.

போலி மதச்சார்பின்மை

1. முஸ்லீம் நாடுகளில் ஹஜ் மானியம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை.

2. இந்தியாவில் குடியரசுத் தலைவரும், பிரதம் மந்திரியும் இந்துக்கள் அல்லாதவர்கள். ஒரு முஸ்லீம் நாட்டில் ஒரு முஸ்லீம் அல்லாதவர் நாட்டுத் தலைவர் ஆக முடியாது.

3. முஸ்லீம் மதத் தலைவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக கட்டளைகள் பிறப்பிப்பதில்லை.

4. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில் முஸ்லீம் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் பெரும்பான்மை ஜம்மு காஷ்மீரில் அது இதுவரை நடக்கவில்லை.

5. பாகிஸ்தானிலும், வங்காள தேசத்திலும் இந்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. இந்தியாவில் வளர்ந்து கொண்டே போகிறது.

6. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்ட இந்தியர்கள் தமது கோயில்களை மீட்க ஏன் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

7. சோமநாதர் கோயிலை சீரமைக்க அரசு பணத்தைச் செலவளிக்காமல் பொது மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, தில்லியில் இடிக்கப்பட்ட மசூதிகளை அரசு செலவில் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியது ஏன்?

8. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது ஏன்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த நன்றி என்ன?

9. இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய மாநிலங்களில் அவர்களுக்கு ஏன் சிறுபான்மை பாதுகாப்பு இல்லை?

10. ஹஜ் பயணத்துக்கு மானியம் இருப்பது போல இந்துப் பயணங்களுக்கு ஏன் மானியம் இல்லை.

11. சிறுபான்மை மதப் பள்ளிகளில் அவர்கள் மத நூல்கள் போதிக்கப்படும்போது, இந்துப் பள்ளிகளில் ஏன் இந்து மத நூல்கள் போதிக்கப்படுவதில்லை?

12. கோத்ராவுக்குப் பிறகான கலவரங்களை பெரிது படுத்திக் காட்டும்போது, காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 லட்சம் இந்துக்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

13. கோயில் பணத்தை சிறுபான்மையினர் நலனுக்காகச் செலவளிப்பது ஏன்? சிறுபான்மையினரின் பணம் அவர்கள் விருப்பப்படி செலவளிக்கப்படுகிறதே?

14. பள்ளிகளின் சீருடை இருப்பது போல, சட்டத்தில் ஏன் ஒரே மாதிரியான சமூகச் சட்டங்கள் இல்லை?

15. காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன்?

16. இந்துக் கோயில்களின் நிர்வாகியாக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படலாம். சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?

இந்தக் கருத்துகள் அனைத்துமே முஸ்லீம்களுக்கும் நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க சம உரிமை உண்டு என்ற அடிப்படையில் பார்த்தால் செல்லாததாகி விடுகின்றன. சவுதி அரேபியாவிலும், இசுரேலிலும் சிறுபான்மையினரும், வலிமை குறைந்தவரும் நசுக்கப்படுவதற்கும் நமக்கும் ஒப்பீடே இல்லை. அவர்களது பிரச்சனையை அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். நம்முடைய தலைவர்கள் அளித்த கொடையின் பலன் களை நாம் அனுபவிக்கிறோம்.

திங்கள், ஜூன் 19, 2006

தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1307.html

எழுத்து

"என்னப்பா, நீ எதாவது பிளாக் எழுதிகிறாயா, நிறையப் பேர் எழுதறாளாமே. தேசிகன் கூட எழுதுகிறான். படிச்சுப் பார்த்தேன் நிறைய எழுதுகிறான். இந்த பிளாக்கில் உள்ள ஒரு பிரச்சனை என்ன என்றால், இட அளவு இல்லை. ஒரு பத்திரிகைக்கு எழுதும் போது இத்தனை சொற்கள்தான் இருக்க வேண்டும் பக்க அளவு தாண்டக் கூடாது என்று வந்து விடுகிறது. எழுதி அனுப்புவதை படித்துப் பார்த்து சரி பார்க்க ஒரு ஆசிரியர் வேறு இடையில். இந்த இடக் கட்டுப்பாடும், தொகுப்பாளரும் இல்லாமல் இந்த பிளாக்குகள் வளவளவென்று போய் விடுகின்றன. வெர்பல் டயரியா போல தலைக்குள் வருவதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்".

எழுத்தின் அருமை மலிந்து விடுகிறதே என்ற ஆதங்கத்தில் சொல்கிறாரோ என்று முதலில் நினைத்தாலும், நன்றாக எண்ணிப்பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று படுகிறது. எழுத்து ஒரு தவம் என்று நன்றாக எழுதிய எழுதும் படைப்பாளிகள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். அசோக மித்திரன் ஒரு ஆண்டுக்கு மூன்று நான்கு கதைகளுக்கு மேல் எழுத வரவில்லை என்கிறார். வலைப் பதிவுகளில் கூட சிலரின் எழுத்துகளுக்கு இருக்கும் கவர்ச்சி எல்லா பூக்களுக்கும் இல்லாமல் இருப்பதற்கு எழுதுபவரின் உழைப்பும் பயிற்சியும், சிந்தனை ஒழுக்கும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல எழுத்துக் கலையும் கைப்பழக்கம்தான். "எப்படி சார் இவ்வளவு எழுத உங்களுக்கு டைம் கிடைக்கிறது" என்று அவர்களது பெரிய மனித ரசிகர்கள் சொல்வார்கள் என்பார் எழுத்தாளர் சுஜாதா.

ஏதோ வேலை வெட்டி இல்லாமல் எழுதிகிறீர்கள். பெரிய திறமை ஒன்றும் இல்லை. எனக்கும் வேறு வேலைகளை விட்டு விட்டு நேரம் ஒதுக்கு எழுத உட்கார்ந்தால் நல்ல எழுத்து வந்து விடும் என்பதுதான் இப்படிச் சொல்பவர்களின் மறைமுகச் செய்தி என்று குறைப்பட்டுக் கொள்வார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வனும், அலை ஓசையும் வேலை வெட்டி இல்லாததால் ஒருவர் எழுதியதாகவா இருக்க முடியும். டிக்கன்ஸின் காப்பர்ஃபீல்டும், கிரேட் எக்ஸ்பெக்டேஷனும் எவ்வளவு உழைப்பும், மன ஒழுக்கமும் மனித அன்பும் பொதிந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரெனீனா இரண்டும் வேறு வேலையே இல்லாமல் எழுத்தே தொழிலாக வைத்திருக்கும் யாராலும் எழுதி விடக் கூடியதா என்ன?

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு வகையில் ஒரு யோகி. காந்தி கைராட்டையில் கண்ட தியானத்தை தமது எழுத்தை யாகமாகச் செய்யும் ஞானிகள் அவர்கள். ஒரு நல்ல சமையலுக்கு எப்படி தாயின் அன்பு தேவைப்படுகிறதோ அதே போல ஒரு நல்ல படைப்புக்கு ஒரு எழுத்தாளனின் அன்பு ஊட்டப்பட வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பும், கருணையும் பொங்கும் மனத்திலிருந்துதான் அழியா வரம் பெற்ற படைப்புகள் புறப்பட்டுள்ளன.

எழுத்துப் பட்டறைகள், கதை உருவாக்கும் தொழிற்சாலைகள் என்று நவீன உலகின் மேலாண்மைக் கோட்பாடுகளுக்குள் எழுத்தையும் கொண்டு வருகிறார்கள்.

அசோக மித்திரன் அயோவா நகரில் தான் கலந்து கொண்ட பட்டறையின் போது சக எழுத்தாளர் ஒருவரைப் பற்றி எழுதிய குறிப்புகளே ஒரு காவியம். காவியம் படைக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தால் எங்கு முடியும் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். மில்ஸ் அன்டு பூன் வரிசையில் கதை எழுத ஒரு வரைவுருவும், கதைகளை அரைத்துத் தள்ள எழுத்துத் தொழிலாளர்களும் கூட இருக்கிறார்களாம். தமிழிலும் மாலைமதி, முதலில் பேர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிட்டு வந்தாலும், வாராவாரம் புதிய கதை ஒன்றைத் தேடி வரைவுருவுக்குப் போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு ஓரிரு இதழ்களைக் கூட நான் படித்ததில்லை.

ராஜேஷ் குமார் நூற்றைத் தொட்டு விட்டார், இருநூறைத் தாண்டி விட்டார் என்று வெளி வந்த "நாவல்" களும் பிரபலமானவை. கிரைம் நாவல் என்று பாக்கெட் நாவல் வரிசைகளில் வந்த மாத வெளியீட்டில் அவர் கதைகள் மட்டும்தான் வெளி வரும். மாதா மாதம் அவரது துப்பறியும் நாயகனை வைத்து ஏதாவது பின்னுவர். நாயகன் பெயர் கூட மறந்து விட்டது. கொஞ்சம் சப்பென்றிருக்கும் ஆள் அந்த பாத்திரம். பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்/சுசீலாவும், சுபாவின் நாயகர்களும் இன்னும் கொஞ்சம் வண்ண மயமாக இருப்பார்கள். ஒரு காலத்தில் இவர்களது கதைகளை தேடித் தேடிப் படித்தேன்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி, ராஜேந்திர குமாரின் நாவல்கள். அவரது எழுத்தில் காமரசம் தழும்பும், விரசத்தின் எல்லையைக் கூடத் தொட்டு விடும். புஷ்பா தங்கதுரை என்று எழுதியவர் அதிர்ச்சி அளிப்பதற்காக அசிங்கமாக எழுதும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார் நான் படித்தவற்றில்.

ராஜேஷ் குமாரின் ஒரு சிறப்பு அவரது கதைகள் சுத்த சைவம். எந்த சிருங்கார வருணனைகளும், பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்களும் இல்லாமல் கதையையும் குற்றப் பின்னணிகளையும் நம்பியே பின்னப்பட்டவை அவர் எழுத்துகள். இன்னும் இந்த சாதி நாவல்கள் வெளி வருகின்றன என்று நினைக்கிறேன்.

பிவிஆர் என்று ஒருவர் உண்டு. கலைமகளின் ஆலமர விழுதுகள் என்ற தொடரில் அவரை முதல் முதலில் படித்தேன். பொதுவாக மேல்தட்டு உயர் குல தமிழ் பேசுவார்கள் இவரது பாத்திரங்கள். மனித இயல்புகளை நாடகத்தனமாக உரித்து வைப்பார்.

லஷ்மி என்ற எழுத்தாளர் என் அம்மாவின் அபிமான புத்தகங்களை எழுதியவர். நானும் மாய்ந்து மாய்ந்து அவரது எழுத்துகளைப் படித்துள்ளேன். சில ஆரம்ப கால படைப்புகளைத் தவிர பின்னால் வந்தவை எல்லாம் ஃபார்மூலா எழுத்தாகப் போய் விட்டது.

கல்கியைக் கரைத்து குடித்ததுடன், சாண்டில்யனின் வரலாற்று நாவல்களையும் பரவலாக மேய்ந்தேன். அவரது நாயகர்கள் ஜேம்ஸ்பாண்டு போல, கிண்டல் பேர்வழிகளாக, வீர தீரம் செறிந்தவர்களாக, பெண் விளையாட்டுக் காரர்களாக இருப்பார்கள். யாருக்கும் புரியாத திட்டங்களாலும், நடவடிக்கைகளாலும் எதிரிகளை சுழற்றி அடித்து விடுவார்கள். நாயகியுடன் குறைந்தது ஓரிரு காட்சிகளாகவது எழுதி விடுவார் சாண்டில்யன் தாத்தா. அவர் எழுதிய ஒரு சமூக நாவலிலும் கூட இதே போக்குதான். ஆண் பெண் உறவை விவரிக்க சில சொற்களைத் தவறாமல் கையாளுவார் இந்த எழுத்தாளர். பெரும்பாலும் குமுதத்தில்தான் இவர் கதைகள் வெளி வரும். அந்தக் குமுதத்தனமான எழுத்துக்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.

எழுத்தின் மூலம் பரவசப்படுத்தியது சுஜாதாதான். ஒரு கூட்டமே தமிழ் நாட்டில் அவர் மீது காதலாகத் திரிந்தது. எங்கள் காலனியிலும் சுஜாதா என்று சொன்னால் மறுபேச்சுக்கே இடம் கிடையாது. ஒரே புகழ் மாலைதான். சுபா, ராஜெஷ் குமார், பிகேபி என்று அடித்துக் கொள்ளும் எல்லோரும் சுஜாதாவுக்கு ஒரு மனதாக ஓட்டளிப்போம்.

கொஞ்சம் வளர்ந்து சுஜாதா பற்றிய விமரிசனங்களைப் படிக்கும் போது சங்கடமாக இருக்கும். உலகத்திலேயே தலை சிறந்த ஒரு தமிழ் எழுத்தாளனைப் போய் இப்படிச் சொல்கிறார்களே என்று கோபம் வரும். சின்ன வயதில் படித்த ஜானகி ராமனை திரும்பப் புரிந்து படித்த போது அதில் இருந்த ஆழம், கல்கியின் கதைகளை வளர்ந்தவனாக திரும்ப படித்த போது அதில் தெரிந்த உழைப்பு, ஜெயகாந்தனின் கதைகளில் இருந்த திமிர், புதுமைப்பித்தனின் படித்த சிறுகதைகளில் இருந்த எள்ளல் இதெல்லாம் இல்லா விட்டாலும் சுஜாதாவின் எழுத்துக்கள் இன்றும் தனது கவர்ச்சியைத் தக்க வைத்துள்ளன. பன்னிரண்டு வயது சிறுவனுக்கும் முப்பத்தைந்து வயது ஆளுக்கும் பாலமாக இருப்பதுதான் சுஜாதாவின் சிறப்பு.

அவரைப்் பார்க்க, பேச, பழக, சேர்ந்து வேலை செய்ய கிடைத்த போது வாழ்வின் ஒரு பகுதி முழுமையடைந்து விட்டது போலத் தோன்றியது. மடற்குழுக்களில் அவரை எள்ளிய ஓரிரு சிறுமதியினரைப் பார்த்து உணர்ச்சிப் பிளம்பாக விவாதித்தேன்.

எல்லோருடைய பழைய தகரப் பெட்டியினுள்ளும் ஒரு கதை இருக்கும் என்பார் சுஜாதா. தகரப் பெட்டிகள் இணைய வெளியில் திறந்து கொட்டப்பட்டுள்ளன. ஒரு எழுத்தாளன் எழுதுவதோடு கதை முடிவதில்லை. அதை வெளியிட்டு, வாசகன் படித்து அதற்கு ஒரு எதிர்வினை எழுந்தால்தான் எழுத்து முழுமை பெறுகிறது என்கிறார் அசோக மித்திரன். அப்படி பகல் வெளிச்சத்தையே பார்க்காமல் எத்தனை எழுத்துகள் மறைந்ததோ என்று அவரது ஆதங்கம். இன்றைக்கு அந்த இரண்டாவது கட்டத்துக்கான முயற்சி அளவுகள் குறைந்தே உள்ளன. அதனால்தான் ஆயிரக் கணக்குகளைத் தொட்டுள்ள தமிழ் வலைப்பூக்கள்.

"அசோக மித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரை இந்த நிலையில் வைத்திருப்பது தமிழ் சமூகத்துக்கு அவமானம். இத்தனை ஆண்டுகள் இவ்வளவு சிறந்த படைப்புகளைப் படைத்த இவர் இன்றும் பேருந்தில், மிதி வண்டியில் சுற்றும் நிலை இருப்பது ஏன்?" என்று பத்ரி ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினாராம். அமெரிக்க, மேற்கத்திய வாழ்க்கை முறைகளை அளவு கோலாகக் கொண்டு விட்ட நமக்கு இந்தக் கேள்விகள் தோன்றுவது ஆச்சரியமில்லை. அசோக மித்திரனின் பதிலும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. என் நிலை மோசம் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், நான் இதை மாற்ற வேண்டும் என்று விரும்புவேன் என்று நினைக்கிறீர்களா என்று அவர் பதிலளித்தாராம்.

எழுதுவதற்கு பேனாவும் காகிதமும் (அல்லது கணினியும் தமிழ் மென்பொருளும்) தான் எமது செல்வங்கள். உடலைப் பேண சாப்பாடும் உட்கார்ந்து எழுத இடமும் கிடைத்து விட்டால் வேறு என்ன தேடிப் போக வேண்டும்.

இன்றைய வலைப்பூ எழுத்தாளர்களின் அந்த முதிர்ச்சி, உழைப்பு, வளத்தை நான் பார்ப்பது டிபிஆர் ஜோசப், ரோஸா வசந்த், கைப்புள்ள, முத்து தமிழினி ஆகியோரின் பதிவுகளில். பத்ரியின் ஆய்வு செய்து எழுதப்படும் பதிவுகளிலும், கவிதாவின் சமூகப் பார்வைகளும், டோண்டு ராகவனின் அனுபவப் பாடங்களும் கவர்ந்து இழுத்தாலும் வலைப் பதிவு என்ற நிலையைத் தாண்டி விடவில்லை அவை.