ஞாயிறு, மார்ச் 29, 2009

தேர்தல் - தமிழகத் தேர்வுகள்

தமிழகத்தில் அரசியல் வணிகர்களும், சந்தர்ப்பவாதிகளும், குட்டையைக் குழப்புபவர்களுமாக கட்சிகள் அணி பிரித்துக் கொண்டு விட்டன.

யாருக்கு வாக்களிக்கலாம்?

எந்தக் கட்சி வேட்பாளர் நாடாளுமன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போது கூட்டணிகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்க வேண்டாம் என்று படுகிறது. கூட்டணி சேர்ந்து கொண்டவர்களே 'இது தொகுதிப் பங்கீடுதான், எந்த விதக் கொள்கை சார்ந்த பொருளையும் பார்க்க வேண்டாம்' என்று சொல்லி விட்ட பிறகு, வாக்காளர்களும் கூட்டணி சாராமல் கட்சி சார்ந்து வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும்.

எனது தேர்வுகள்:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபடும் கட்சி. திருமாவளவன் கட்சியின் முகமாக இருந்தாலும், கட்சியால்தான் திருமாவளவன் அடையாளம் பெற்றார். இந்தக் கட்சி தொகுதியில் போட்டியிட்டால் அவர்களுக்குத்தான் வாக்கு.

2. வலது / இடது பொதுவுடமை கட்சியினர்

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் வியாபார/தொழில்துறையை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் காங்கிரசு/பாஜக அதிகார அமைப்புகளுக்கு ஒரு கடிவாளமாக இருக்கக் கூடிய இந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிட்டால் அவருக்கு வாக்கு.

3. தேசிய முற்போக்கு திராவிட கழகம்

திரைப்படத் துறையில் ஈட்டிய தனது புகழை மூலதனமாக வைத்து அரசியல் செய்ய முயல்கிறார் விஜயகாந்த். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் பணிகளிலும் தனது முத்திரையை பதிக்க முயல்கிறார். இன்று வரை இது விஜயகாந்த் கட்சியாகத்தான் இருக்கிறது. கூடவே பழைய பெருச்சாளிகளும் குடியேறி இருக்கின்றன.

தொகுதியில் முதல் இரண்டு தேர்வுகள் கிடைக்கவில்லை என்றால் தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்கு.

4. மதிமுக

ஈழத் தமிழர் நலன் என்று ஒரே நிலைப்பாட்டுக்காக வைகோவை அறிகிறேன். மேலே சொன்ன மூன்று தேர்வுகளுமே இல்லாத நிலையில் (அப்படி இருக்காது என்று நம்புகிறேன்), மதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

5. வாக்களிக்கக் கூடாத கட்சிகள்
  • அதிமுக - தமிழர் விரோத தனிநபர் அரசியல்)
  • திமுக - ஒரு குடும்பம் வளர்க்கும் தமிழர் துரோக அரசியல்
  • காங்கிரசு - பதவி வெறி பிடித்த முதலாளித்துவ அரசியல்
  • பாஜக - மதவாத பிரிவினை அரசியல்
  • பாமக - சந்ததர்ப்பவாத பச்சோந்தி அரசியல்

திங்கள், மார்ச் 23, 2009

சனி விட்டது

பல வார பரபரப்புக்குப் பிறகு இந்தியன் பிரிமீயர் லீக் - இரண்டாவது பதிப்பு இந்தியாவில் நடைபெறாது என்று தீர்மானித்து விட்டார்கள். தேர்தல்கள், பாதுகாப்பு கொடுக்க முடியாதது என்று பல காரணங்கள் இருந்தாலும், இந்தச் சனியன் நம்ம ஊரை விட்டு சீக்கிரம் ஒழிந்து போவது எல்லோருக்கும் நல்லது.

வெளிநாட்டில் நடந்தாலும் தொலைக்காட்சி மூலமாக நம்ம வீடுகளின் வரவேற்பறைகளையும் இளைஞர்களையும் மனங்களையும் ஆக்கிரமிக்கப் போவது என்னவோ கசப்பான உண்மை.

மொத்தமாக திரை மூடப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.