செவ்வாய், ஏப்ரல் 14, 2009

பிரிவினை வாதி அத்வானி - தேசத் துரோகி நரேந்திர மோடி

ஒரு நாட்டை ஒருங்கிணைப்பது அந்த நாட்டின் ராணுவ வலிமையோ, அணு ஆயுத குவிப்புகளோ, பொருளாதார வெற்றிகளோ இல்லை.

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புறம் ஒன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்று நாட்டில் வாழும் மக்கள் எல்லோருக்கும் சிந்தனையில் உறுதியான இழை ஒன்று ஓட வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பவர்களை எல்லாம் பிடித்து அவர்கள் மனதில் அத்தகையை சிந்தனையை திணித்து விட முடியாது. தன்னலமற்ற தொலைநோக்குடைய தலைவர்களின் சீரிய தொண்டினால் அப்படிப்பட்ட மனப்போக்கு ஒரு நாடு முழுவதும் உருவாகும். அதை உருவாக்க பல ஆண்டுகள், தலைமுறைகள் பிடிக்கலாம்.

தமக்குள் பிளவுபட்டு, நம்மில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்து, உள்ளுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் இந்தியர் என்ற அடையாளம் அழிந்து போய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டுக் கிடந்தது இந்த நாடு. ஆங்கிலேயர்களின் போர் வெற்றிகளால் நாடு முழுவதிலும் பரவிய ஒரு ஆட்சி நிர்வாகம் ஏற்பட்ட பிறகு மக்களின் மனதில் நாமெல்லோரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்குவதற்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்ப பத்தாண்டுகளில் உழைத்த தேசியத் தலைவர்களின் சாதனைதான் நவீன இந்தியா.

வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த தலைவர்கள் தமது வாழ்க்கையையும் செல்வச் செழிப்புகளையும் தியாகம் செய்து பிரிவினைவாதிகளையும், பழமைவாதிகளையும் எதிர்கொண்டு அவர்களது பூசல் உண்டாக்கும் அரசியலை மழுங்கச் செய்து சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் இன்றைய இந்தியாவின் அடித்தளத்தை நிறுவினார்கள். நேரு இந்திய அரசியல் வானிலிருந்து மறையும் போது இந்திய மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும், 'இது எனது நாடு, இதன் தலைவிதியை நிர்ணயிப்பதில் எனக்கு சமமான பங்கு இருக்கிறது' என்று பெருமையுடன் உணரும் நிலைமை வந்து விட்டிருந்தது.

அந்த மென்மையான உணர்வுபூர்வமான தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் அரசியல் இந்துத்துவா சக்திகளின், அவர்களது அரசியல் முன்னணி பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள். 1980களின் இறுதி ஆண்டுகளில் ஆரம்பித்து ஒவ்வொரு ஆண்டும் மிக முனைப்புடன் இந்திய மக்களை பிரித்துப் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி நாட்டின் அடிப்படையையே குலைத்துப் போட முயலும் அத்வானிதான் மிகப்பெரிய பிரிவினைவாதி. இந்தியர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து போராடத் தூண்டும் மோடி ஒரு தேசத் துரோகி.

நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையுத் கட்டிக்காக்க இந்த தேசத்தின் பகைவர்களை வேரறுப்போம்.

திங்கள், ஏப்ரல் 13, 2009

அடுத்த பிரதமர்

மாயாவதி அடுத்த பிரதமராக வருவதன் அவசியம் என்ன? அத்வானி, மன் மோகன் சிங், சரத்பவார் அல்லது ராகுல்காந்தி தலைமையிலான நிர்வாகத்துக்கும் மாயாவதி தலைமையிலான நிர்வாகத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கும்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஊறிப் போய் விட்டு மனுவாத சமூகக் கட்டமைப்பு அதிகார மையங்களிலும் தொழில் வணிக வட்டங்களிலும் இன்னும் உயிரோட்டத்துடன் தளைத்துக் கொண்டிருக்கிறது. காவல் நிலையங்களிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும், அரசாங்க அதிகார மட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நீதி கிடைப்பது இன்றைக்கும் இயல்பானதாக இல்லை.

காவல் நிலையக் கண்காணிப்பாளரின் வளர்ப்புப் பின்னணி, அவர் கேட்டு நடக்க வேண்டிய உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், நிர்வாக அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே நடைமுறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

காங்கிரசு ஆட்சியில் நிதி அமைச்சரின் முதல் கவலை பங்குச் சந்தை குறியீட்டு எண் சரிந்து விடக் கூடாதே என்பதாகத்தான் இருக்கிறது. பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருந்தால்தான், முதலீட்டாளர்கள் தமது சேமிப்பை பங்குகளில் போடுவார்கள், அதை வைத்து தொழில் முனைவு தளைக்கும், அப்படி உருவாகும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதால் ஏழை மக்களும் ஒடுக்கப்பட்டவர்களும் முன்னேறுவார்கள் என்ற trickle down பொருளாதார முறைதான் அவருக்குத் தெரியும்.

பாரதீய ஜனதா ஆட்சியில் அரசின் முதன்மை கவலை, வர்த்தகர்கள் தொழிலதிபர்கள், மடாதிபதிகள் என்ன வேண்டுகிறார்கள் என்பதுதான். சமூகத்தின் மற்ற பகுதியினர் இவர்களது நோக்கங்களுக்கு துணையாக செயல்படுவது வரை சகித்துக் கொள்ளப்படுவார்கள். அதற்கு வெளியில் காலெடுத்து வைத்தால் கால் இருக்காது.

மாயாவதி (அல்லது அவரைப் போன்ற திறமையான பெண்மணி ஒருவர்) தலைமையில் ஆட்சி அமைந்தால், எந்த ஒரு காவல் நிலையத்திலும் எந்த ஒரு கடைநிலை காவலரும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை அலட்சியமாக நடத்தத் துணிய மாட்டார். மேலிடத்துக்கு சேதி போய்ச் சேர்ந்தால் தனக்கு வேலை மிஞ்சாது என்பது அவருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும்.

அதில் தவறுகள் நடக்காதா? நடக்கும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதகமான தவறுகள் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு சாதகமாக நடந்து விடும் தவறுகளை விட ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே இருக்கும்.

நிதி அமைச்சகம் வரவு செலவுத் திட்டம் தீட்டும் போது கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும், எல்லோருக்கும் கல்வி திட்டமும், தாய் சேய் நலத் திட்டமும் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் பிறகு அவற்றுக்குத் துணையாக தொழில் வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சிக்கான திட்டம் போடப்படும். பணம் படைத்தவர்கள் மேலும் பணம் செய்யும் வழிகளை மட்டும் சிந்தித்து இருந்து விட்டு, 'கூப்பாடு போட்டு விடக் கூடிய' பெரும்பான்மை மக்களின் வாயை அடைப்பதற்காக சமூக நலத் திட்டங்களை சேர்க்கும் நடைமுறை மாறி விடும்.

அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர் அதிபர் ஆனது போல இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவினர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்ததாகச் சொல்ல முடியும்.

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

மத்தியில் இப்படி ஒரு அரசு அமையுமா!

உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்தது இந்தியா முழுவதிலும் இன்றைக்கு நடக்கும் என்று வைத்துக் கொண்டால், இந்த தேர்தலில் பத்திரிகைகளின் ஒருமித்த கணிப்பான காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி இரண்டும் தலா ஏறக்குறைய 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது கணிப்பாகவே இருந்து விட வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் நடந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் எல்லா பெரிய கட்சிகளும் (சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு கட்சி) தனித்து போட்டியிட்டன. பெரும்பாலான தொகுதிகளில் நான்கு முனை போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 'எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள், காங்கிரசு யாரை ஆதரிக்கும், பிஜேபி என்ன நிலை எடுக்கும் என்றெல்லாம் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளும் கருத்துக் கட்டுரைகளும் வெளியிட்டன.

நான்காவது பகுதி தேர்தல் முடிந்த பிறகு என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவின் படி கட்சி நிலவரம் இப்படி இருக்கும் என்றார்கள்.
 • BSP - 131 to 141 (98)
 • BJP - 91 to 101 (107)
 • SP - 109 to 119 ()
 • Congress - 33 to 43 (25)
மற்ற கருத்துக் கணிப்புகளிலும் ஏறக்குறைய இப்படித்தான் கருத்து வெளியானது. அந்தந்த ஊடக நிறுவனத்தின் கட்சி அனுதாபத்தின் அடிப்படையில் பிஜேபியின் வெற்றி வாய்ப்புகள் ஏறி அல்லது இறங்கிக் காணப்பட்டன.

இது இன்னொரு பார்வை.
 • BSP - 150 to 160 (98)
 • BJP - 95 to 105 (107)
 • SP - less than 100 ()
 • Congress - 25 to 30 (25)
ஆனால் கடைசியில் மக்கள் என்ன தீர்ப்பளித்தார்கள்?
 • BSP - 206 (98)
 • BJP - 50 (107)
 • SP - 97 (
 • Congress - 22 (25)
இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு மௌனப் புரட்சி காத்திருக்கிறதா? காத்திருக்க வேண்டும் என்று ஆசை. தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் பெரிய தாக்கம் எதுவும் தெரியா விட்டாலும், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற இந்தி மொழி பேசும் பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.

மும்பையிலும், தில்லியிலும் தத்தமது பாரம்பரிய சூழல்களில் மூழ்கிப் போயிருக்கும் ஊடகங்கள் இப்படி ஒரு உள் நீரோட்டம் இருந்தாலும் அதை எதிர்நோக்காமல் போய் விடுவது ஆச்சரியத்துக்குரியதில்லைதான்.

எனது ஆசை:
 1. காங்கிரசு - 90
 2. பாரதீய ஜனதா கட்சி - 95
 3. பகுஜன் சமாஜ் கட்சி - 140
 4. கம்யூனிச கட்சிகள் - 40
 5. சோஷியலிச கட்சிகள் (எஸ்பி, ஆர் ஜே டி, பிஜேடி, ஜேடி-யூ முதலானவர்கள்) - 100
 6. மற்றவர்கள் - 70+
என்று முடிவுகள் வந்து பிஎஸ்பி மற்றும் இடது சாரிக் கட்சிகள் காங்கிரசு ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். சோஷலிச கட்சிகளில் லாலு, முலாயம் தவிர்த்த பிற கட்சிகள் இத்தகைய ஒரு ஆட்சிக்கு ஆதரவு தருவதும் நடந்தால் காங்கிரசை நம்பி காலம் தள்ள வேண்டியதையும் தவிர்க்கலாம்.

வியாழன், ஏப்ரல் 09, 2009

நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய குரல்கள்

நாடாளுமன்றத்துக்கு எந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். அதே இழையில் இன்னும் சில சிந்தனைகள்:

தவிர்க்க வேண்டிய கட்சிகள் - 3

மனிதகுலத்துக்கே எதிரான குற்றங்கள் என்று வரையறுக்கப்படுபவை பாசிசக் கோட்பாடுகள்.

பெரும்பான்மை மதத்தினர், பெரும்பான்மை மொழி பேசுபவர், பெரும்பான்மை சாதியினர் விரும்புவது எல்லாம் மற்றவர்கள் மீது திணிக்கப்பட வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பேசும் பாசிசக் கட்சிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

'இவர்கள் வந்தால் தொழில் துறைக்கு நல்லது நடக்கும்.'
'ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள்'
'பரிநிரல் (open source) மென்பொருள்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்'
'தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யாதவர்கள்'

என்று பட்டியலிட பல இருந்தாலும், எந்த காரணத்துக்காகவும் வேரூன்றக் விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் போன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகள் வாக்குகளை தமக்குள் பகிர்ந்து கொண்டு விட வெற்றி பெறும் சாத்தியங்கள் இருக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

'தேள், நட்டுவாக்களி, பாம்பு இவற்றைக் கண்டதும் எப்படி ஒழித்துக் கட்டுவீர்களோ அப்படி ஆழ்வார்க்கடியானைக் கண்டாலும் அழித்து விடுங்கள்' என்று பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் சொன்னது போல, எந்த காரணத்துக்காகவும் உள்ளே விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி.

இதே குணங்கள் இருக்கும் ஆனால் குறுகிய கால நோக்கில் அதிகாரத்தைப் பிடித்து விடச் சாத்தியமில்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
தேர்தலுக்குப் பிறகு நேராக பாரதீய ஜனதா கட்சிக்கு குடை பிடிக்கத் தயாராக இருக்கும் அஇஅதிமுக கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

1. தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, இன்றைக்கும் காவல் நிலையங்களிலும் அதிகார மட்டங்களிலும் நியாயம் கொடுக்கப்படாமல் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக நிற்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சி வேட்பாளர்களின் குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தமிழகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும். அதிகாரத்துக்கு பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வருவது சமூக அமைப்பினால் அடக்கப்பட்டு இருக்கும் பிரிவினருக்கு உண்மையான விடுதலையைக் கொண்டு வரும்.

ஈழத் தமிழரின் துயரங்களை அரசியல் லாபங்களுக்கு என்றில்லாமல் உண்மையான உறவுடன் பார்ப்பவர்கள், தீர்வுக்கு போராடுபவர்கள் என்ற விதத்திலும் விசிகே தகுதி பெறுகிறது.

2. 'பணம் இருப்பவன்தான் அரசியல்வாதி, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்று மாறிவரும் அரசியல் சூழலில் கொள்கைப் பிடிப்போடு உழைக்கும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இயங்கும் கம்யூனிச கட்சிகளின் பிரதிநிதிகள் அரசமைக்கும் கூட்டணியில் வலிமையான குரல் பெறுவது தேவை.

'அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் காலாவதி ஆகிவிட்டன. ரஷ்யாவைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள்' என்று குற்றம் சாட்டுபவர்கள் அமெரிக்காவின், ஐரோப்பாவின் பொருளாதார நிலைமையை அலசிப் பார்த்து விடுவது நல்லது.

உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்ற கம்யூனிசப் புரட்சிக்கு சாத்தியமில்லாத நாடாளுமன்ற ஆட்சி முறையில் இந்தக் கட்சியினரின் பங்களிப்பு நலிந்த பிரிவினர்களின் குரலாக ஒலிக்கும்.

ஒதுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

'கொலை கூடச் செய்து விட்டு வெள்ளை வேட்டியுடன், கழுத்தில் தடித்த தங்கச் சங்கிலியுடன் உலா வரலாம்.'
'ஒரு நாளிதழின் அலுவலகத்தை எரித்துப் போட்டு இரண்டு பேரைக் கொல்லக் காரணமாக இருந்தவர் அடுத்த தேர்தலில் வேட்பாளர் ஆகலாம்'

திராவிட இயக்கத்தின் இறுதிச் சடங்குகளை இனிதே செய்து வரும் கருணாநிதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குண்டர்கள், பணமுதலைகள் எல்லோரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஏழைகள், கிராமங்கள், சிறுபான்மையினர் என்று பேசிக் கொண்டு அவ்வப்போது ரொட்டித் துண்டுகளை வீசி விட்டு பரம்பரை ஆளும் வர்க்கத்தினரின் நலன்களை பேணும் காங்கிரசு கட்சி. கூப்பிடு தூரத்தில் நடக்கும் இனப்படுகொலைக்காக சுண்டுவிரலைக் கூட அசைக்காத கொலைகார பாதகர்கள் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வேறு வழியில்லா விட்டால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்சி - 1

தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

வணக்கம்

போன ஆண்டு மார்ச்சு 15ம் தேதி வாக்கில் வலைப்பதிவுகளுக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஒரு இடுகையாக வெளியிட்டேன். பின்னூட்டப் பெட்டிகள், தமிழ்மண இணைப்பு, ஸ்டாட்ஸ்கவுண்டர் இணைப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டேன். முழுமையாக ஒரு கத்தரிப்பு.

'ஒரு ஆண்டுக்கு வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. எந்த நல்ல செயலுக்கும் ஒரு இடைவெளி கொடுத்தால்தான் அதன் உண்மையான நிறைகுறைகள் தெரியும். ஒரு ஆண்டுக்குப் பிறகு இன்னும் எழுத வேண்டும், பதிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் சந்திப்போம்'.

ஓராண்டு தாண்டியே விட்டது. ஒதுங்கியிருத்தல் முழுமையாக இருந்திருக்கவில்லை. முதல் 6 மாதங்களுக்கு பதிவதையும், பின்னூட்டங்கள் இடுவதையும், பிற பதிவுகளைப் படிப்பதையும் அறவே ஒதுக்கியிருந்தாலும் அதன் பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதும், பதிவதும் ஆரம்பித்தது. முன்பு இருந்த வேகமும் பிடிப்பும் விட்டுப் போயிருந்தன.

'திரும்பவும் வலைப்பதிவுகளில் ஈடுபட ஆரம்பிக்க வேண்டுமா? தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் சமூகங்களில் பங்கேற்க வேண்டுமா? அதை விட்டு இருந்த நாட்களில் வலைப் பதிவதால் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?' என்று யோசித்துப் பார்த்தால், சாதகங்கள்தான் அதிகம்.

ஏன் வலைப்பதிவில் பதிய வேண்டும்?
 1. எழுதுவதற்கான ஊக்கம் பதிவுகளாகப் போட்டு நான்கு பேர் படித்து பின்னூட்டம் பார்த்து அதற்கு எதிர்வினை கொடுக்கும் போது நிறையவே கிடைக்கிறது. 'ஒரு மணி நேரம் உட்கார்ந்து நமக்கே நமக்காக எழுதுவோம்' என்று நினைத்தாலும் கூடவே பிறருக்குப் போய்ச் சேரும் என்ற எண்ணம் பெரிதும் துணை புரிகிறது.

 2. அப்படி தவறாமல் எழுதிக் கொண்டிருப்பது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க, மனதுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கிறது.

 3. நமது பதிவுகளை படிப்பவர்களுடன் ஏற்படும் நட்பு. பின்னூட்டங்கள் மூலம் பெயர் தெரிந்து மனதளவில் நெருக்கமாகும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள், நேரில் சந்திக்க முடியும் நண்பர்கள், முழுமையான நட்பாக பரிணமிக்கும் நண்பர்கள் என்று நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்புகள் ஏராளம்.

  அப்படி எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் என்றோ சந்திக்க நேரும் போது நெடுநாள் பழகியவர் போல உணர முடிவதும் கிடைத்தற்கரியது.

 4. நமது கருத்துகளை பதிந்து வைத்து வெளிப்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு சமூகக் கடமை என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால், இனிமேல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், பொருள் செய்ய விரும்பு, புரட்டிப் போட்ட புத்தகங்கள் மூன்றுக்குமே தொடர்ந்து எழுதி பதிய உத்தேசம். இப்படிப்பட்ட தீர்மானங்களுக்கு வழக்கமாக ஏற்படும் கதி நேர்ந்து விடாமல் நல்லபடியாக தொடரும் என்று உறுதியுடன்.