செவ்வாய், செப்டம்பர் 03, 2019

சாதி பற்றி வினவின் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்

A. நடைமுறை

"புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை" - என்ன செய்ய வேண்டும், லெனின் (பக்கம் 25, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது)

வினவு, ம.க.இ.க-வின் நடைமுறை என்பது புரட்சிகரமான நடைமுறையாக இல்லாததற்குக் காரணம் அவர்களது சாதி பற்றிய கோட்பாடு (மட்டுமின்றி இன்னும் அடிப்படையான கோட்பாடுகளும்) மேம்போக்கானது, தவறானது. எனவே, வினவு, ம.க.இ.வின் நடைமுறை (களத்தில் தோழர்களின் தீரமான போராட்டங்கள்) புரட்சிகரமான இயக்கமாக மாறாமல் தேங்கிப் போயிருக்கின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தவறான கோட்பாடும், 40 ஆண்டுகளாக அதை பரிசீலித்து சரி செய்யத் தவறிய கோட்பாட்டு தலைமையும்தான்.

இல்லை என்றால் ம.க.இ.க-வின் கடந்த கால நடைமுறை போராட்டங்கள், சாதி ஒழிப்புப் பற்றிய அதன் கோட்பாட்டோடு எப்படி தொடர்புடையனவாக இருந்தன என்று சொல்லுங்கள்? அவை அந்தக் கோட்பாட்டுக்கு எப்படி வலு சேர்த்தன அல்லது அதை மேம்படுத்த உதவின என்று விளக்குங்கள். அப்படி எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

அதனால்தான், வினவு, ம.க.இ.க சாதி எதிர்ப்பு அரசியலை பேசுகின்ற, நடைமுறையில் ஈடுபடுகின்ற எல்லோரையும் முத்திரை குத்தி அவமதிப்பதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

B. ரஞ்சித் பற்றி வினவு இங்கு துலக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் "தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும்" செலக்டிவாக பேசுகிறார் என்று.

இந்த அலட்சியப்பார்வையின் அடிப்படை எது? சாதி குறித்த சித்தாந்த ஓட்டாண்டித்தனமா? இல்லை சாதி ஆதிக்க பார்வை மேலெழுந்ததா? இரண்டுமேதான். முன்னது பின்னதை மேலெழுவதற்கான காரணமாக இருக்கிறது.

சாதி பற்றிய வினவின் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது? அரை நிலப்பிரபுத்துவம் என்ற அதன் கோட்பாட்டு முடிவு எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது.

முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய "இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம்" என்ற நூல் மார்க்சின் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. மார்க்சின் அந்தக் குறிப்புகளில் இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.*

a. முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு

"1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பிற ஆசியபாணி சமூகங்களின் சொத்துடைமை முறை]

2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே குடிமகன் மட்டுமே ஒரு தனி உடைமையாளர், ஆனால் அவரது சொத்துடைமை தனியாகவும் இருப்பது. [ரோமானிய பழங்குடி சமூகங்களின் சொத்துடைமை முறை]

3. இறுதியாகத் தனிச்சொத்துடைமைக்கு துணையாக மட்டுமே சமூகச் சொத்துடைமை இருப்பது. தனிச்சொத்துடைமையே சமூகத்துக்கு அடிப்படையாகவும், உறுப்பினர்கள் கூடும் பொழுதும் பொதுத்தேவைகளின் போதும் மட்டுமே சமூகம் உண்மையில் நிலவுவது. [ஜெர்மானிய பழங்குடிகளின் சொத்துடைமை முறை]

- ஆகிய இந்த வெவ்வேறு வடிவங்களிலான சமூக அல்லது பழங்குடி உறுப்பினர்களின் ஓரிடத்தில் குடியேறிய பழங்குடி நிலத்துடனான உறவு பழங்குடியின் இயற்கையான குணாம்சங்கள் மீது ஒரு பகுதியாகவும், உண்மையில் பழங்குடி நிலத்தின் உடைமை செலுத்துவதில், பலனை அனுபவிப்பதில், பொருளாதார நிலைமைகளின் மீது ஒரு பகுதியாகவும் சார்ந்து நிற்கிறது.

உடைமை செலுத்துவதை, பலனை அனுபவிப்பதை தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை, பகைமையான அல்லது அண்டைப் பழங்குடியுடனான உறவுக் குடியேற்றங்களினால் ஏற்படும் திருத்தங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன."

(இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், பக்கம் 58 - படிப்பதற்கு வசதியாக வாக்கியங்களை பிரித்து, வரிசை எண் தரப்பட்டுள்ளது, சதுர அடைப்புக் குறிக்குள் எனது குறிப்புகள்)

இதில் 1-ல் சொல்லப்படுவது இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை, 2-ல் ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை, 3-ல் ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை. இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

b. குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு "முதலாளித்துவ உற்பத்திக்கு முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்தின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது".

இதற்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு (சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு "மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்"

எனவே, இந்தப் பகுதியில் மார்க்ஸ் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தையும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவை மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் போது இந்த்க் குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

c. இந்திய சாதி முறை பற்றி

1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் [வம்சாவழி கணங்கள்] மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய [படிநிலை] வரிசை ஆகும், அதில் [கணங்கள்] ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. கணங்களுக்கிடையே திருமண உறவு உரிமை இல்லை, கணங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வான சலுகைகளைப் பெற்றவை. [கணங்கள்] ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட, மாற்றிக் கொள்ள முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச - 409)

(சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறை. இந்த வாக்கியம் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூலில் இடம் பெறவே இல்லை!)

2. "[அடிமை முறை, பண்ணையடிமை முறை ஆகியவற்றுக்கு உரிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது" (குருண்ட்ரிச 433) [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது. ஆனால், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்கிறது.]

3. "பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறு சமுதாயங்களின் மேல் நிற்கும் உச்சபட்ச அதிகாரம் [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோற்றமளிக்கிறது.  உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்" (குருண்ட்ரிச 404)[இதில் இந்திய சமுதாயப் பொருளாதரப் படிவம் அரசனுக்கு நிலவுடைமை சொந்தமாக இருப்பதை மட்டும் வலியுறுத்துகிறது. பரம்பரை வழி பாத்தியதை பெறும் "சமுதாயங்களைப்" பற்றிய பரிசீலனைக்கு உள்ளே போகவில்லை.]

d. இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற ஆவணம் இது போன்ற குறிப்புகளை சொல்லி விட்டு

"ஆசியச் சொத்துடைமை வடிவம், மறுஉற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் மட்டுமல்ல, எங்கெல்ஸ், லெனின் ஆகியோரும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். பழம்பண்டு ஜெர்மானிய, ஸ்லாவினிய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஒன்றுதான் ஆசியச் சொத்துடைமை வடிவம் மற்றும் உற்பத்தி முறையாகும். சில பிரத்தியோகமான காரணங்களினால் இந்த வடிவமும் முறையும் எடுத்திருப்பினும், உலகெங்கும் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்கள், முறைகளின் சாராம்சத்தில் இருந்து வேறுபாடானதோ, விதிவிலக்கானதோ அல்ல" (பக்கம் 105)

“சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஆகிய வர்ணங்கள் ஐரோப்பாவில் நிலவிய அரசு உயர்குடி, பிரபுத்துவ உயர்குடி, நிதி ஆதிக்க உயர்குடியான பாட்ரீஷியன்கள், உழைக்கும் நகர்ப்புற பிளெபியன்கள் மற்றும் விவசாயிகள் போன்ற சில பிரிவு வர்க்கங்கள் அடங்கிய ஒரே வகையினரான சமூக எஸ்டேட்டுகளையே குறிக்கும். சாதி அடிப்படையிலான குலத்தொழில்கள், குடிசைத் தொழில் மற்றும் விவசாயத்தின் ஐக்கியத்தைப் பராமரித்த வேளையில், வர்ண அடிப்படையிலான வைசிய சமூகப் பிரிவு, பண்ட உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான கூறுகளைப் பெற்றிருந்ததையே காட்டுகிறது” (பக்கம் 110)

“இந்தியச் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பே கிடையாது என்பதில்லை. அதேபோல் பொதுச்சொத்துடைமை அடிமைமுறையையும் மறுப்பதற்கில்லை” (பக்கம் 109)

“நிலப்பிரபுத்துவத்தின் சாராம்சம் தனிச்சொத்துடைமையோ, கைத்தொழிலும் விவசாயமும் வேறு வேறாக வளர்வதோ மட்டுமல்ல; அதன் பிரதானமான அம்சம் உழைப்பாளர் நிலத்தோடும் பிற உற்பத்திச் சாதனங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான்; சாதிய அமைப்பு முறை, பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மூலம் சமூகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் நிலத்தோடும் உழைப்பாளனை பிணைத்திருக்கிறது” (பக்கம் 110)

என்று முடிவு செய்கிறது.

இவ்வாறு, 'இந்தியாவின் சாதி முறை என்பது ஐரோப்பாவின் சமூக எஸ்டேட்டுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை', 'இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இருந்தது, பொதுச்சொத்துடைமை அடிமை முறை இருந்தது', எனவே 'இந்தியாவுக்கும் ஐரோப்பிய சமூகங்களுக்கும் வேறுபாடு இல்லை' என்று முடிவு செய்கிறது அந்த ஆவணம். அதன் அடிப்படையி்ல இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று வரையறுக்கிறது. சாதி பற்றிய யதார்த்தத்தை திரை போட்டு மூடுகிறது.

சாதி பற்றி மார்க்ஸ் கொடுத்திருக்கும் குறிப்புகளை பின்பற்றி அம்பேத்கரின் எழுத்துக்களையோ, அதற்குப் பிந்தைய வரலாற்று அறிஞர்களின் படைப்புகளையோ கருத்தில் கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. அதன் பிறகு 1990-களில் பெரும் அளவில் வெளியிடப்பட்ட ஆய்வுகளை "பின் நவீனத்துவம்", "மார்க்சிய விரோதம்" என்று தாக்கிக் கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

இவ்வாறாக, வினவு குழுவினர் சாதி (இந்திய சமூகம்) பற்றிய கோட்பாட்டில் 1980-ல் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல், இன்று வரை வறட்டுவாதிகளாகவே தொடர்கின்றனர்.

இது வினவு பரிதவிப்புடன் பரிசீலிக்க வேண்டிய‌ விஷயம். குறைந்தபட்சம் தன்னை இன்னமும் நம்பி வந்தடையும் வாசகர்களுக்கு நேர்மையாக இதைப் பற்றி வினவு பேசியிருந்திருக்க வேண்டும். மாறாக, "நீ‌ பெரிதா நான்‌ பெரிதா", "யார் சுத்தமான‌‌ கம்யூனிஸ்டு" என ரத்த பரிசோதனை செய்யும் வகையில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பின்குறிப்பு : என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

* இது தொடர்பான மார்க்சின் முழுக் குறிப்புகளையும் படிக்க விரும்புபவர்களுக்கு https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm , https://www.marxists.org/archive/marx/works/1857/grundrisse/ , https://www.youtube.com/watch?v=lIx2tEweLeE]

குருண்ட்ரிச மேற்கோள்கள் நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. (பக்க எண்கள் மார்க்சிஸ்ட் இன்டெர்நெட் ஆர்கைவ்-ன் பி.டி.எப் கோப்புடையவை)

https://www.vinavu.com/2019/08/26/vinavu-q-and-a-about-director-pa-ranjith-cpi-cpm-parties-and-tamil-groups/#comment-534503 -க்கு மறுமொழி

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சாதிய பிரச்சனை, வினவின் பிரச்சனை

1. கடந்த காலத்தில் ம.க.இ.க, வி.வி.மு தோழர்கள் களத்தில் நடத்திய வீரியமான போராட்டங்களை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. நீங்களும் கார்த்திகேயனும் கொடுத்த பட்டியலுடன் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்களை, குறிப்பாக 11 இசைப் பேழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பின்னர் வினவு மூலம் தி.மு.க/தி.க நீர்த்துப் போக வைத்து விட்ட பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்த பணியை, குறிப்பாக 2014 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலை செயலூக்கத்துடன் எடுத்துச் சென்றதை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

2. இங்கு அது இல்லை விவாதம். வினவு ரஞ்சித் பற்றிய தனது பதிலில் சொல்லியிருப்பது, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.”

அதாவது ‘இந்தியாவின் சாதிய பிரச்சனை பற்றி கற்பது, கற்று ஆய்வு என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்’ என்கிறது வினவு. ஆனால், வினவின் அமைப்பு ரீதியான சாதி பற்றிய ஆய்வும் கோட்பாடும் மிகவும் மேலோட்டமானது; மூலதனம் நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் எழுதிய Grundrisse என்ற முதல் பிரதியின் (first draft) குறிப்புகளை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்பட்டது. (பார்க்கவும் – இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்).

அந்த நூலில் மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் முதலாளித்துவ கூலி உழைப்பாளிக்கும் அதற்கு முந்தைய சமூகங்களில் உழைப்பாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்கானவை. ஆனால், அதன் ஊடாக மார்க்ஸ் முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமையில் ரோமானிய, ஜெர்மானிய, இந்திய வடிவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்புகளைச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து ஆரம்பித்து இந்தியாவில் சாதி பற்றிய பருண்மையான ஆய்வை செய்திருக்க முடியும்.

ஆனால், 1980-களில் எழுதப்பட்ட அந்த ஆவணம் அத்தகைய ஆய்வு எதையும் செய்யவில்லை. 1940-களுக்கு முன்பே அம்பேத்கர் செய்து முடித்து விட்ட சாதி பற்றிய ஆய்வுகளை பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் சாராம்சத்தில் ரோமானிய, ஜெர்மானிய சமூகங்களில் இருந்து வேறுபட்டது இல்லை (இயற்கை சார் உற்பத்தி, எளிய மறுஉற்பத்தி, உழைப்பாளி நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது போன்றவை), இந்திய சமூகம் காலனிய ஆட்சிக்குப் பிறகு அரை நிலப்பிரபுத்துவமாக மாறி விட்டது என்று முடித்துக் கொண்டது. சாதியக் கட்டமைப்பு பற்றிய பருண்மையான வரலாற்று அடிப்படையிலான ஆய்வைச் செய்யவில்லை.

அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் வெளியான சாதி பற்றிய பல ஆய்வுகளை “பின்நவீனத்துவம்” “அடையாள அரசியல்” என்று முத்திரை குத்தி புறக்கணித்து தான் எடுத்த “அரை நிலப்பிரபுத்துவம்” என்ற கோட்பாட்டிலேயே இன்று வரை நிற்கிறது வினவு/புதிய ஜனநாயகம்/புதிய கலாச்சாரம். இவ்வாறாக 35 ஆண்டுகளாக அமைப்பாகச் செயல்பட்ட வினவு சாதி பற்றிய ஒரு புரட்சிகர கோட்பாட்டை உருவாக்கத் தவறியிருக்கிறது. [இதைப் பற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்]

3. எனவே, 1-ல் சொன்ன ம.க.இ.க-வின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எல்லையைத் தாண்டி புரட்சிகர பரிமாணத்தை பெற முடியவில்லை. எனவே, சாதி ஒழிப்புக்கான பாதையை உருவாக்கவோ, சாதியப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சக்தியாக உருவெடுக்கவோ முடியவில்லை.

இன்றைய (2019) நிலையில் கூகை, casteless collective போல ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தும் போராட்டத்திலோ, நீலம் பண்பாட்டு மையம் போல சாதி எதிர்ப்புப் போராட்டத்திலோ வினவோ, ம.க.இ.கவோ இல்லை என்பது யதார்த்தம். அதற்குக் காரணம் மேலே சொன்ன கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்.

4. சாதி ஆணவம் என்பது தன்னை அறியாமல் கூட ஒருவருக்கு வரலாம். அதுவும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதி என்ற மலம் உள்ளே ஒட்டிக் கொண்டே இருக்கிறது. சாதியை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்டு (அம்பேத்கரை படித்து, பரியேறும் பெருமாள் போன்ற படைப்புகளை பார்த்து) தொடர்ந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் மூலம்தான் அதன் துர்நாற்றத்தை துரத்த முடியும். வினவு அதில் தவறியிருக்கிறது என்று சொல்கிறேன்.

5. மற்றபடி, என்னுடைய பின்னூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து நீங்கள் பட்டியல் இட்டிருக்கும் சொற்களை வாக்கியங்களோடு சேர்த்தே படித்துப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(இது ரஞ்சித் பற்றிய வினவின் கேள்வி-பதில் பதிவில் போட்ட மறுமொழி)

வியாழன், ஆகஸ்ட் 29, 2019

வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 4-வது மற்றும் கடைசி பதிவு.

4. வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

//அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.//

ரஞ்சித்துடன் இருப்பவர்கள் மீது முத்திரை குத்தும் குள்ளநரித்தனம், இது.

//இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும்.//

கூட்டாக சேர்ந்து தீர்வு காண முயற்சித்த வினவு “ஊரோடு ஒத்து வாழ் என்று 'முதிர்ச்சி'” அடைந்திருக்கிறது; பொதுவானவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் இயங்குகிறது. மேலும், புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமின்றி வடிவத்தையும் அத்தகைய பாசாங்கையும் கூட கைவிட்டு ஒரு செய்திப் பெட்டகமாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.


//இந்தச் சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?//

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகளாக மாறி விடுவது இது போன்ற அபத்தக் களஞ்சியங்களால்தான்.

முதன்மையான கேள்வி தனிநபரா, அமைப்பா என்பது இல்லை. சரியானதா, தவறானதா, புரட்சிகரமானதா, தேங்க வைப்பதா என்பதுதான் முதன்மையானது. அந்தக் கேள்விக்கு சரியான பதிலை வகுத்துக் கொண்டு நடைமுறையில் செயல்படும் அமைப்புதான் புரட்சிகர அமைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் தனிநபராக இருந்தாலும் ரஞ்சித் சரியான பிரச்சனையைப் பற்றி பேசுகிறார், சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடுகிறார். வினவு அமைப்பாக இருந்தாலும் தவறாக பேசுகிறது, தேக்கத்தை நோக்கிச் செலுத்துகிறது.

"உன் கண்ணுல ஒரு பதட்டம் இருக்கு. காலு தரையில நிக்கல. மொத்தத்துல நீ நீயா இல்ல. முதல்ல நில்லு.அப்புறமா வந்து நீ சொல்ல வேண்டியத சொல்லு" என்று ஒரு படத்தில் சூர்யாவிடம் அவரது காதலி சொல்வது போல வினவு நிதானத்தில் இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

சுட்டி

வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 3-வது பதிவு.

 3.
சாதிய பிரச்சனையில் வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும்

//ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.//

சாதியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், எனவே இந்திய சமூக மாற்றத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் கம்யூனிச “இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை" என்பது உண்மை. அந்த உண்மை அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதே தவிர, இந்த எண்ணம் ஒரு தனிநபரின் கற்பனையில் தோன்றிய ஒன்று இல்லை.

//சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம்.//

ரஞ்சித்தின் கூகை உருவாக்கியிருப்பது ஒரு ஜனநாயக வெளி. நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகளும், ரஞ்சித்துடன் நேரடி தலையீடுகளும் இன்றைய நமது சமூகத்தில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான போராட்டமாக உள்ளன.
கச்சநத்தத்திற்கு ரஞ்சித் போனதன் பின்னர்தான் மீடியா வெளிச்சம் வந்தது. சமீபத்தில் கூட ஒரு தலித் சிறுவன் தூக்கிலிடப்பட்ட போது மீடியா வெளிச்சம் கூட கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இழப்பீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் SC குடியிருப்பு தீக்கிரையாக்கப்பட்ட போதும், நீலம் பண்பாட்டு மையம் இழப்பீடு வாங்கி கொடுத்திருக்கிறது.


35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற கலாச்சார அமைப்புகள் கூகை போன்ற ஒரு ஜனநாயக வெளியையோ, நீலம் பண்பாட்டு மையம் போன்ற சாதிக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாட்டு அமைப்பையே உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. அதைப் பற்றிய சுயவிமர்சனத்துக்குப் பதிலாக வினவு ரஞ்சித் மீது தனது பொச்சரிப்பை வாரிக் கொட்டுகிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பிரிவினரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, வரலாறு முழுவதும் இப்படித்தான் வறட்டுவாதம் பேசிக் கொண்டிருந்தது. ரஞ்சித் அம்பேத்கர், பெரியார் அளவிலான செயல்பாட்டாளரா சிந்தனையாளரா என்பதைப் பற்றி கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் சமூக அக்கறை கொண்ட யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவரை அணுகும் வினவு பின்பற்றும் முறை சுத்தமான அக்மார்க் இந்திய 'கம்யூனிஸ்டு' முறை. இத்தகைய கண்ணோட்டம் சிபிஐ/எம்களில் நிலவுவது பற்றி வினவு முன்பு பேசியது இப்போது அவர்களுக்கே பொருந்துவது வேறொரு உண்மையைச் சொல்கிறது.

சுட்டி

சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 2-வது பதிவு.

2. சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

//சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது.//

ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பே ரஞ்சித் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் (மெட்ராஸ்). அதனால், ரஞ்சித்துக்குக் கிடைத்த பிரபலம் அவருடைய சமூகப் பார்வைக்கும், திறமைக்கும், செயல் திறனுக்கும் கிடைத்த பரிசுதானே தவிர, ரஜினியின் பிரபலத்திலிருந்து ஒட்டிக் கொண்ட ஜிகினா இல்லை.

//இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார்.//
ரஞ்சித், தனது படங்களிலும், பேச்சுக்களிலும் ஒவ்வொரு இடத்திலும் மிகத் தெளிவாக தன்னுடைய அரசியல் அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு அரசியல் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், அதில் என்ன தனிநபர்வாதப் பார்வையைக் கண்டது, வினவு?

//வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.//

"தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை" என்பதை மறுக்கும் வகையில் வினவு சார்ந்திருக்கும் அரசியல் கட்சி செய்தவற்றை பட்டியலிட்டால், ரஞ்சித்தின் செயல்பாடுகளோடு அவற்றை ஒப்பிட்டு பரிசீலித்திருந்தால் நேர்மையானதாக இருந்திருக்கும்.

//தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது.//

அதாவது அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லோருக்கும் புரியாதாம். வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை என்று சொல்வதற்குக் கூட தெம்பு இல்லை.

//இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.//
இந்தியாவில் சாதி பற்றி பல்வேறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கும்மி அடித்ததை விட அண்ணல் அம்பேத்கர் தனிநபராக பல மடங்கு அதிகமாகவும், சிறப்பாகவும் கற்று ஆய்வு செய்திருக்கிறார். அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்”, "சாதி ஒழிப்பு" இவற்றின் மீதான ஆய்வு முறையிலான விமர்சனக் கட்டுரை ஒன்றையாவது வினவு காட்ட முடியுமா? அல்லது இந்த அறிவு சாதனைகளுக்கு இணையாக சாதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று எழுதிய ஆய்வுக் கட்டுரையை (குறிப்பாக அம்பேத்கரின் சமகாலத்தில்) சொல்ல முடியுமா? [இதைப் பற்றி தனியாக விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது]

சுட்டி
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

வினவின் சாதி-ஆணவம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அவற்றை 4 பகுதிகளாக பார்க்கலாம்.

1. வினவின் சாதி-ஆணவம்

//இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?//

எழுத்தாளர் டோனி மாரிசன் / இயக்குனர் ரஞ்சித்
சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.
சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், அதுவும் பிரபலமாகும் பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது 'ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு' என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியங்களை படைத்த அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் பேட்டி ஒன்றை பாருங்கள். (சுட்டி கீழே)
"எப்போது வெள்ளையின மக்களைப் பற்றிய இலக்கியத்தை எழுதப் போகிறீர்கள்" என்று டோனி மாரிசனிடம் கேட்கிறார், பத்திரிகையாளர். அதற்கு டோனி மாரிசனின் பதில்? “இது எவ்வளவு மோசமான இனவாதம் நிரம்பிய கேள்வி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?"

"ரஞ்சித் தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் சீற்றம் கொள்கிறார்" என்பது "எவ்வளவு மோசமான சாதிஆணவம் நிரம்பிய கருத்து என்பதை" வினவு உணர முடியாததற்குக் காரணம் உள்ளது.

“நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன" என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது "தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டும்" என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்" என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.

சுட்டி

வியாழன், ஜூன் 20, 2019

மார்க்ஸ் : காம்ரேட் நம்பர் 1 - வீடியோ

"வாசகர் சாலை" அமைப்பு 15-06-2019 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் நடத்திய நிகழ்ச்சியில் "காரல் மார்க்ஸ் - காம்ரேட் நம்பர் 1" என்ற தலைப்பில் பேசியது.


 ஒரு தோழர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறந்த தோழர் எப்படி இருக்கிறார்? மார்க்ஸ் தோழர் எண் 1 என்றால் என்ன பொருள்?

ஒரு தோழர் ஒட்டு மொத்த மனிதகுல முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் சிறந்த ஆசிரியராகவும் பணிவான மாணவராகவும், நல்ல நண்பராகவும், இருக்கிறார்.

காரல் மார்க்ஸ் இந்த மூன்று அளவீடுகளிலுமே ஒரு தலைசிறந்த தோழராக, தோழர் எண் 1 ஆக இருக்கிறார்.

மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்தவர், பள்ளிப் பருவத்திலேயே மனித குலத்துக்கான வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதுதான் மிகச்சிறந்த வாழ்க்கைப் பணியின் தேர்வு என்று முடிவு செய்கிறார். தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றாலும் அப்போது ஜெர்மனியின் பல்கலைக் கழகங்களில் நிலவிய பிற்போக்கு அடக்குமுறை சூழலைக் கண்டு பேராசிரியர் பதவியை நாடாமல் பத்திரிகையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் வாழ்கிறார். 1840-களின் கொந்தளிப்பான போராட்டங்களின் இறுதியில் கண்டத்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு அடுத்த 35 ஆண்டு வாழ்க்கையை இங்கிலாந்தில் கழிக்கிறார்.

1850 முதல் 1860 வரையிலான கட்டம் அகதியாக, ஏதிலியாக லண்டனுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த அவரது வாழ்க்கை மிகவும் நெருக்கடியான ஒன்றாக இருந்தது."பல சமயங்களில் வீட்டில் பத்திரிகை இல்லாமல் எழுதுவதற்குக் காகிதம் கூட இல்லாமல், தபால் தலைகள் இல்லாமல், மருந்து இல்லாமல், டாக்டர்கள் இல்லாமல் வாழ வேண்டியிருந்தது. சில சமயங்களில் மார்க்சினுடைய கோட்டும் டிரவுசர்களும் வட்டிக்கடையி்ல அடகுக்கு இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை.

 - 4-வது குழந்தை ஹின்ரிச் குய்டோ 1849 நவம்பர் 5-ம் தேதி பிறந்தான்.

மார்க்ஸ் நோய் வாய்ப்பட்டார். கண் எரிச்சல், உடல்வலி அவரைப் பீடித்தது. 1853-ம் வருடம் அவருக்கு நுரையீரலில் நோய் கண்டது. அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிக்கடி நோயுற்றார்கள்.

ஜென்னி - "எங்களிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாத காரணத்தால்.. இரண்டு அமினாக்கள் வீட்டிற்குள் வந்த வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்சம் சாமான்களையும் படுக்கைகள், போர்வைகள், துணிமணிகள் ஆகிய அனைத்தையும் இன்னும் என்னுடைய ஏழைக் குழந்தையும் தொட்டிலையும், என்னுடைய மகளின் பொம்மைகளையும் கூட ஜப்தி செய்து விட்டார்கள். குழந்தைகள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வயது நிரம்பிய ஹின்ரிச் குய்டோ நிம்மோனியா காய்ச்சலால் 1850 நவம்பர் 19-ம் தேதி இறந்தாள். பிரான்சிஸ்கா 1851 மார்ச் 28-ம் தேதி பிறந்தது, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக 1852 ஏப்ரல் 14-ம் தேதி இறந்தது. 1857 ஜூலை மாதம் ஜென்னிக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டது.
அவருடைய எட்டு வயது மகன் எட்கார் 1855 ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தான். எல்லோருடனும் நட்புணர்வுடன் பழகுவான். எப்போதும் துரு துரு என்று எதையும் கேட்டு விசாரித்துக் கொண்டிருப்பான், கேள்விகள் கேட்பான். குடும்பத்தில் செல்லப் பிள்ளை.

 "புரட்சிகரமான போராட்டங்களுக்காக என்னிடமிருந்த அனைத்தையும் நான் தியாகம் செய்து விட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைச் செய்ததற்கான நான் வருத்தப்படவில்லை. நான் மறுபடியும் மற்றொரு வாழ்க்கையைத் தொடங்கினாலும் இதே வேலையைத்தான் செய்வேன். அப்போது நான் திருமணம் மட்டும் செய்து கொள்ள மாட்டேன்". (பக்கம் 463)

இத்தகைய தாங்க முடியாத இழைப்புகளுக்கு மத்தியில்தான் இந்த சமூக முன்னேற்றத்துக்கும் அதன் ஆதார சக்தியாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் தனது விசுவாசத்தை அணுவளவும் விட்டுக் கொடுக்கவில்லை மார்க்ஸ். அவரது கல்வித் தகுதிக்கும், சிந்தனைத் திறனுக்கும், எழுத்தாற்றலுக்கும் அவர் சிறிதளவு வளைந்து கொடுப்பதாக பிற்போக்கு வர்க்கங்களிடம் சென்றிருந்தால் அவரை தங்கத்தால் குளிப்பாட்டியிருப்பார்கள். மனித குல முன்னேற்றத்துக்காக தான் ஏற்றுக் கொண்ட பாதையை இடைவிடாமல் பிடித்து உறுதியாக நின்றார் மார்க்ஸ்.

அத்தகைய கடும் உழைப்பிலும், வாழ்க்கை போராட்டத்திலும் மத்தியில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான் மார்க்சின் படைப்புகள். அவை அரசியல் கட்டுரைகள் ஆகட்டும், மூலதனம் நூல் ஆகட்டும், விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாகட்டும். பாரிஸ் கம்யூனில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது பொழியப்பட்ட அவதூறுகளை எதிர்த்து சீறிப் பாய்ந்ததாகட்டும் தொழிலாளி வர்க்கத்தின் எனவே மனித குல எதிர்காலத்தின் தலைசிறந்த தோழராக விளங்கினார் மார்க்ஸ்.

மூலதனத்துக்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூட பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் பார்க்கும் போது அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத லட்சியத்துக்கு அர்ப்பணித்து விட்டார். ஆனால், அதுதான் மிகவும் கௌரவமான வாழ்க்கை என்று இப்போது நமக்குத் தெரிகிறது.

அவர் "கண்ணியமிக்க" அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும். தன்னுடைய அறிவை பயன்படுத்தி முழுப்பலனையும் (அது "பொது நன்மைக்காகவே") அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம். ஆனால், அந்த இலட்சியம் மாணவப் பருவத்தில் இருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை "அறிவாளிகளை" அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்.

மூலதனத்தின் "பட்டம் பெற்ற கைக்கூலிகள்" எத்தனை பேரை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் "சிறப்பித்திருக்கிறார்".

இரண்டாவதாக, தெரியாத, புரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நாம் நமது தோழரை நாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு தோழர் மார்க்ஸ்.
காரல் மார்க்சின் மாணவர்களின் மாணவர் எண் 1 என்று சொல்ல வேண்டுமானால் அவர் லெனின்தான். லெனினுக்கு மார்க்ஸ் எப்படி சிறந்த ஆசிரியராக இருந்தார் என்பதைப் பற்றி லெனினின் துணைவியார் க்ருப்ஸ்காயா எழுதியவற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

"எனக்கு மனச் சோர்வு, குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் எனது எழுதும் மேசைதான் புகலிடம். எழுத ஆரம்பிக்கும் போது இருந்த குழப்பம் எழுதி முடித்திருக்கும் போது விலகி தெளிவு ஏற்பட்டிருக்கும்" என்று கலைஞர் கருணாநிதி சொன்னதாக ஒரு இடத்தில் படித்தேன். கலைஞர் கருணாநிதிக்கு தனது சிந்தனைகளை தொண்டர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கிறது.

லெனின் சிக்கலான அரசியல் நிலைமைகள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்வதற்காக மார்க்சுடன் உரையாடுகிறார். மார்க்ஸ் எழுதிய நூல்களை அவர் வாசிக்கவில்லை. அவர் மார்க்சின் படைப்புகள் மூலமாக அவருடன் உரையாடுகிறார்.

லெனின் என்பவர் நமது புத்தகங்களை வைத்துக் கொண்டு நம்முடன் உரையாட முயற்சி செய்வார் என்ற நோக்கத்தில் மார்க்ஸ் தனது படைப்புகளை எழுதியிருக்க முடியாது என்பது உண்மைதான். ஏனென்றால், ஒரு கருத்தைப் படித்து விட்டு அதற்கு எதிர் கருத்தையோ, கூடுதலான கருத்துக்களையோ, உதாரணங்களையோ சிந்தித்து விட்டு நாம் தொடர்ந்து படிக்கும் போது மார்க்ஸ் அந்த கேள்விகளுக்கு விடை அளித்திருப்பதை பார்க்க முடியும். இது மார்க்சின் அதிசய சக்தியால் பிறந்தது இல்லை.

அது அவரது அசுர உழைப்பின் விளைபொருள். ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றால், அது தொடர்பாக கிடைக்கும் அனைத்து கட்டுரைகளையும், விபரங்களையும், கருத்துக்களையும் படித்து விடுகிறார். அந்தக் காலத்தில் உலகின் அறிவுச் செல்வங்களுக்கு எல்லாம் களஞ்சியமாக இருந்த பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் அதற்கு போதுமான ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. அந்த விஷயம் பற்றி பல்வேறு சிந்தனையாளர்கள் சரியாகவும் தவறாகவும் சொன்ன கருத்துக்களை குறித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு ஒட்டு மொத்த விஷயத்தையும் தனது வலுவான தர்க்கவியல் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரு கோர்வையாக தொகுத்துக் கொள்கிறார். விஷயத்தில் என்ன சாராம்சம் என்று புரிந்து கொள்கிறார்.

அதன் பிறகுதான் எழுத ஆரம்பிக்கிறார் மார்க்ஸ். அது தொடர்பாக பிறர் சொன்ன கருத்துக்கள், புள்ளி விபரங்கள், உதாரணங்கள், சம்பவங்கள் இவற்றை தான் தொகுத்துக் கொண்ட சித்திரத்தில் இணைக்கிறார். இணைத்து முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறார்.

உதாரணமாக, முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றியும், இங்கிலாந்துக்கும் ரசியாவுக்கும் இடையே நடந்த கிரீமியப் போர் பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றைக் குறிப்பிடலாம். இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக 3 பாகங்கள் "மூலதனம்", 3 புத்தகங்கள் "உபரி மதிப்புக் கோட்பாடுகள்" அடங்கிய புத்தகத்துக்கு முன் தயாரிப்பாக 920 பக்கம் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நூலின் முதல் வடிவத்தை அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற தலைப்பில் எழுதி வெளியிடுகிறார்.

அந்த வடிவம் படிப்பதற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கம் படித்து பலன் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து அந்தப் புத்தகத்தை அந்த வடிவத்தில் எழுதும் திட்டத்தைக் கைவிட்டு மேலே சொன்ன 6 பாகங்களால் ஆன புத்தகங்களாக தொகுக்கிறார். அவற்றில் முத்ல பாகத்தை மட்டும் இறுதி வடிவம் கொடுத்து, சமீபத்திய புள்ளிவிபரங்கள், தகவல்களை சேர்த்து செழுமைப்படுத்தி வெளியிடுகிறார்.

இது மார்க்ஸ் ஒரு மகத்தான ஆசிரியனாக இருப்பதற்கு எப்படிப்பட்ட மாணவராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

(குறிப்புகள் - வீடியோவில் பேசியவற்றை ஒட்டியது. அதன் நேரடி உரை வடிவம் இல்லை.

மேற்கோள்கள் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. என்.சி.பி.எச் வெளியிட்ட தேர்வு நூல்களின் தொகுதி 18-ல் உள்ளது)

திங்கள், மே 20, 2019

மகேந்திரா - பிந்தியா - ராகுல் காதல் கதை ft அர்னாப்


Hauterfly பிந்தியா என்ற பெண்ணுக்கும் மகேந்திரா என்ற அவரது நண்பருக்குமான உறவு பற்றிய வீடியோவாக இந்தியாவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையேயான உறவு பற்றி எடுத்திருந்தார்கள்.

இது போன்று மோடியை கலாய்க்கும், விமர்சிக்கும் வீடியோக்கள் கடந்த 1 ஆண்டில் பெருகியிருக்கின்றன. வட இந்திய, மும்பை கலாய்த்தல் தமிழ்நாட்டு கலாய்த்தல்களை தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

அந்தப் பெண் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டு மகேந்திரா மீது கோபமாக பேசிக் கொண்டே, டெக்ஸ்ட் செய்து கொண்டிருக்கிறாள். மகேந்திரா ஒரு பூக்கொத்து கொண்டு வந்து அவளது முகத்தில் திணிக்கிறான். அதிர்ச்சியடைந்து நிமிர்ந்து பார்க்கிறாள். “நான் இங்க இருப்பது எப்படி தெரியும்" என்று கேட்டால், அவளது ஆதார் அட்டையை காட்டுகிறான்.

கசந்து போயிருக்கும் உறவு பற்றி பேசுகிறாள். "நான் இறைச்சி சாப்பிட்டால் உனக்கு என்ன, என் நாயின் பெயரை ஏன் மாற்றினாய், என் தம்பிக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி விட்டு பின்னர் பக்கோடா போட்டு விற்கச் சொல்கிறாய், அந்த பிரெஞ்சு பெண்ணுடன் நீ பேஸ்புக்கில் பேசியது என்னவென்று கேட்டால் அந்த ஹிஸ்டரியையே அழித்து விட்டாய், என்னை வேவு பார்க்கிறாய், என்னுடைய பிரைவசி என்ன ஆச்சு, 5 ஆண்டுகளாக முயற்சித்தும் முடியவில்லை" என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறாள்.  "என் பணத்திலேயே ஒரு சிலை கொடுத்தாய், அது யாருக்கு வேண்டும். வேறு எதற்காகவது முதலீடு செய்திருக்கலாம்" என்று சொல்கிறாள்.

"உன்னுடைய முன்னாள் காதலனுக்கு எத்தனை தடவை வாய்ப்பு கொடுத்தாய், நான் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறேன், உன் அறையை யார் சுத்தம் செய்தார்கள், என்னுடைய அகமதாபாத் காதலியை விட்டு விட்டு உனக்காக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன், 20-30 மணி நேரம் நான் உழைக்கிறேன், உன் மீதான அக்கறையில்தானே உன்னை கண்காணிக்கிறேன், உன் பக்கத்து வீட்டுக்காரன் மீது நீ கோபமாக இருந்த போது அவர்கள் வீட்டிற்குள் குப்பையைப் போட ஏற்பாடு செய்தது யார்" என்று தனது சாதனைகளை அடுக்குகிறான் மகேந்திரா.

இதற்கிடையில் அர்னாப் கோஸ்வாமி வருகிறார். "பிந்தியா உன்னை anti romantic person என்று declare செய்கிறேன். நீ தில் கே துக்டே துக்டே கேங் என்று குற்றம் சாட்டுகிறேன். மகிந்த்ரா இல்லை என்றால் யார்? மரியாதையாக மகேந்திராவை காதலித்து விடு, இவருக்குப் பதிலாக பப்புவையா தேர்ந்தெடுக்கப் போகிறாய்" என்று மிரட்டுகிறார்.
"ஒரு நியூட்ரல் கருத்தும் தேவைதானே" என்று மகேந்திரா பிந்தியாவை சமாதானப்படுத்துகிறார்.  இரண்டு ஸ்பெஷல் டீ ஆர்டர் செய்கிறார்.

"நீ உண்மையான பிரச்சனைகளிலிருந்து எப்போதும் திசை திருப்பி விடுகிறாய். என்னுடைய முன்னாள் காதலன் சரியில்லை என்பதால்தானே உன்னை தேர்ந்தெடுத்தேன். நான் பார்க்க விரும்பிய படத்தை பார்க்க விட மாட்டேன் என்கிறாய்" என்று படபடக்கிறாள். "நீ செய்வதையெல்லாம் மதிக்கிறேன். ஆனால், அதற்காக மற்ற பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட முடியுமா?" என்கிறாள்.

பேச்சுவார்த்தை மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது, மகேந்திரா தனது காதலின் அளவு 56 இஞ்ச் மார்பு என்று தட்டிக் கொண்டிருக்கும் போது மகேந்திராவுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அமித் அழைப்பு. அவருடன் பேசி விட்டு 5 நிமிடங்களில் வருவதாகச் சொல்கிறார். "நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், நீ எங்கு போகிறாய்" என்று பிந்தியா படபடக்க, அவளது கன்னத்தில் தட்டி விட்டு போய் விடுகிறான்.

பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் ராகுல் என்பவன் கைச் சின்னத்தைக் காட்டிக் கொண்டு அவள் எதிரில் வருகிறான். "மறுபடியும் நீயா" என்று எழுந்து ஓடி விடுகிறாள்.

பா.ஜ.க – காங்கிரஸ் - இந்தியா இந்த உறவை இதை விடச் சிறப்பாக சித்தரிக்க முடியாது. ஹேட்ஸ் ஆப்.

அடைக்கலம் தரும் இலக்கியம் - அருந்ததி ராய்


Author Arundhati Roy

ருந்ததி ராய் பென் அமெரிக்காவின் "ஆர்தர் மில்லர் எழுதுவதற்கான சுதந்திரம் (Arthur Miller Freedom to Write)" உரையாற்றியிருக்கிறார். உரையின் தொடக்கத்திலேயே இன்றைய உலக நிலைமையை சுருக்கமாகவும், சிறப்பாகவும் தொகுத்துச் சொல்கிறார்.

"பனிச்சிரகங்கள் உருகிக் கொண்டிருக்கும்போது, பெருங்கடல்கள் சூடாகிக் கொண்டிருக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது, பூமியில் உயிர் வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும் சார்புநிலைகளின் மெல்லிய வலைப்பின்னலை நாம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் போது, மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையேயான எல்லையைக் கடந்து செல்லும்படி நமது மலைக்கத்தக்க அறிவாற்றல் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் போது, அதை விட மலைக்கத்தக்க நமது அகம்பாவம் ஒரு மனித இனமாக நாம் நீடித்து வாழ்வதற்கும் பூமி நீடித்து வாழ்வதற்கும் இடையேயான தொடர்பை புரிந்து கொள்ளும் நமது திறனை மங்க வைத்துக் கொண்டிருக்கும் போது, நாம் கலையின் இடத்தில் கணினி நிரல்களை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்கத் தேவையிருக்காத (எனவே அதற்காக ஊதியம் பெறாத) ஒரு எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கும் போது - இந்த முக்கியமான தருணத்தில்தான் வெள்ளை மாளிகையில் வெள்ளையின வெறியர்களும், சீனாவில் புதிய ஏகாதிபத்தியவாதிகளும், புதிய-நாஜிக்கள் திரண்டு நிற்கும் ஐரோப்பிய வீதிகளும், இந்தியாவில் இந்து தேசியவாதிகளும், பிற நாடுகளில் இவர்களைப் போன்ற கசாப்புக்கார இளவரசர்களும், அதைவிடக் குறைந்த சர்வாதிகாரிகளும் என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியாத எதிர்காலத்துக்குள் நம்மை வழிநடத்திச் செல்லவுள்ளார்கள்."
என்ன ஒரு கலைஞர். மொழியும், உலகைப் பற்றிய பார்வையும் துள்ளி விளையாடுகிறது.

அமெரிக்கா தாலிபானை அழிப்பதற்காக ஆப்கன் மீது போர் தொடுத்தது, இப்போது தாலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இதற்கிடையில் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளை அழித்திருக்கிறது. ஐ.எஸ் என்ற கொடூர பயங்கரவாதக் கும்பலை வளர்த்து விட்டிருக்கிறது. இப்போது அதேபோன்ற பயங்கரவாத பூச்சாண்டி காட்டி ஈரானைத் தாக்குவதற்கு தயாரித்து வருகிறது.

இந்தச் சூழலில் இலக்கியத்தின் இடம் என்ன?

இலக்கியம் என்பதை தான் எப்படி பார்க்கிறேன், எப்படி பழகுகிறேன் என்று விளக்குகிறார். fiction-க்கும், non-fiction-க்கும் இடையே இலக்கியத்தில் வேறுபாடு இல்லை என்றார். தான் அரசியல், சமூகப் பொருளாதார பிரச்சனைகள் குறித்து எழுதியவற்றை பலர் இலக்கியமாகவே பொருட்படுத்துவதில்லை. நீ மறுபடியும் எப்போது எழுதப் போகிறாய் என்று கேட்கிறார்களாம். என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆண்கள் அறிவுரை சொல்வார்களாம்.

ஆனால், பிற இடங்களில், நெடுஞ்சாலைகளுக்கு அப்பால் அவை மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்படுகின்றன, துண்டு பிரசுரங்களாக வினியோகிக்கப்படுகின்றன. தாக்குதலுக்குள்ளாகும் காடுகளுக்குள்ளும், கிராமங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் அவை பரவுகின்றன.

எனவே, இலக்கியம் என்பது எழுத்தாளராலும் வாசகர்களாலும் கட்டியமைக்கப்படுகிறது என்கிறார்.

1997-ல் வெளியான The God of Small Things-ல் அவரது கேரள வாழ்க்கை, அயமேனத்தில் குன்றின் மீதிருக்கும் அந்தப் பழைய வீடு, பாட்டியின் ஊறுகாய் தொழிற்சாலை, மீனாச்சல் ஆறு இவற்றின் பின்ணியில் அன்றைய கேரள வாழ்க்கையை சித்தரித்திருக்கிறார். அதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான பகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சாதியம் ஊறிக் கிடப்பதை அம்பலப்படுத்தும் பகுதிகளும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பை ஈட்டியதாம். அந்த நாவலில் சிரியன் கத்தோலிக்க அம்முவுக்கும் பறையர் சாதி வெளுத்தாவுக்கும் இடையேயான காதல் சமூகத்தின் கூட்டு முகச்சுழிப்பை ஈட்டியிருக்கிறது. 5 ஆண் வழக்கறிஞர்கள் அதற்குத் தடை கோரி வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அவரது அம்மா சிரியன் கத்தோலிக்க குடும்பங்களில் பெண்ணுக்கு சம சொத்துரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு எண்ணப் போக்கு இருந்திருக்கிறது. இதற்கிடையில் நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது உள்ளூர் மலையாளி பெருமையை தூண்டியிருக்கிறது. எனவே, நாவலுக்கு எதிரான  வழக்கை விசாரிக்க வந்த நீதிபதிக்கு ஒவ்வொரு முறையும் நெஞ்சுவலி வந்து அதைத் தள்ளிப் போட்டு விடுகிறார். இறுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அவரது முதல் நாவல் வெளியான ஒரு ஆண்டுக்குள் வாஜ்பாயின் பா.ஜ.க அரசு அணுகுண்டு சோதனை செய்தது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் இதுதான் என்னுடைய நாடு என்றால் நான் பிரிந்து செல்கிறேன் என்று ஒரு கட்டுரை (The Endo of Imagination) எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன எதிர்வினை வந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள் என்கிறார். அது முதல்தான் இந்திய தேசியவாதம் ஒரு அடாவடி வடிவத்தைப் பெற்றது என்கிறார்.

அணு குண்டின் கொடூரங்களை ஒவ்வொரு எலும்பிலும் உணர்ந்த தலைமுறை அது. வியட்னாமில் ஏஜென்ட் ஆரஞ்ச் போட்ட செய்திகளை பார்த்து வளர்ந்தவர். அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் 1000 பக்கங்கள் வந்து விட்டனவாம்.

கடைசியில் The Ministry of Atmost Happiness நிகழ்ந்தது. அதில் குடும்பங்களில் இருந்து துரத்தப்பட்டு விட்டவர்களின் கதை சொல்லப்படுகிறது. வீட்டின் கூரை பிய்ந்து போனவர்களின் கதை.

இலக்கியம் நமக்கு அடைக்கலம் தருவதால் அது நமக்குத் தேவைப்படுகிறது.

சனி, ஏப்ரல் 13, 2019

ஒரு மின்னல் பார்வையில் கிழக்குக் கடற்கரை இந்தியாவும், வட இந்தியாவும்

மார்ச் 24-ம் தேதி இரவு தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி மாலை வரை சென்னை - விஜயவாடா - விசாகபட்டினம் - புபனேஸ்வர் - ஹவுரா, கொல்கத்தா - தன்பாத் - கயா - அலகாபாத் - டெல்லி - கோட்டா - ரத்லாம் - சூரத் - மும்பை - புனே - சென்னை பயணம்

ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு போனதால் நகர்வில் இருக்கும் மக்கள் பிரிவினரையே முதன்மையாக பார்த்தேன்.

நிம்மதியற்ற, அலைந்து கொண்டே இருக்கும், கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் மக்கள் பட்டாளம் இந்தியாவின் சாரமாக இருக்கிறது.

விவசாயிகளும் சரி முறையான தொழிலாளர்களும் சரி, ஒப்பந்தத் தொழிலாளர்களும் சரி, மாணவர்களும் சரி, நிறைவின்றி தேட்டத்திலும் ஓட்டத்திலும் உள்ளனர். எதை பிடிப்பது, எதை விடுவது, எங்கு போய் வாழ்வது என்ற நிம்மதியின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஓட்டத்தை விஜயவாடாவில் தொடங்கி, விசாகப்பட்டினம், புபனேஸ்வர், ஹவ்ரா, கொல்கத்தா, தன்பாத், கயா, அலகாபாத், காசியாபாத், டெல்லி, கோட்டா, ரத்லாம், சூரத், மும்பை, பாந்த்ரா, புனே, என்று எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த இடங்களில் இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதியைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களை பார்க்க முடிந்தது.

டம் விட்டு இடம் போய் படிக்கும், படிப்பில் திருப்தி இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் -
 • விஜயவாடாவில் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் வாரங்கல் பையன் - மேற்படிப்பு போக வேண்டும்
 • எம்.பி.பி.எஸ் முடித்து அமெரிக்கா போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சுவிக்ஞன் இந்தியாவையும் அவனது பெற்றோரையும் வெறுக்கிறான்
 • லக்னோவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் தென்னிந்தியாவின் உணவு பழகாமல் சிரமப்படுகிறான்
 • புபனேஸ்வர் ரயிலில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் படிக்கும் பிரதீக் nutritionist ஆக விரும்புகிறான், 
 • இன்போசிஸ்-ல் வேலை செய்யும் பாலாவுக்கு புபனேஸ்வரை தவிர வேறு எங்காவது போய் வேலை செய்ய வேண்டும் என்று தவிப்பு. 
இன்னும் பலர் இடம் விட்டு இடம் பெயர்ந்து படிக்க, வேலை செய்ய போயிருக்கின்றனர்.
 • புபனேஸ்வர் பேருந்தில் சந்தித்த ஒரு மாணவர் சென்னையில் சி.டி.சி5 விப்ரோவில் இன்டெர்ன்ஷிப் செய்திருக்கிறார். 
 • சுவிக்ஞன் சி.எம்.சி வேலூருக்குப் போயிருக்கிறார். 
 • வெல் ஸ்பன் நிறுவனத்தில் வாபிக்கு வேலைக்குப் போகும் பையன் உலகத்தைப் பார்த்திருக்கிறான்.
 • ராஜ்குமார் என்ற சூரத்தில் இறங்கிய பையன் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடை விற்பனை செய்வதற்கு ஆள் தேடித் தரும்படி கேட்கிறான். 
 • சென்னை வரும் ரயிலில் கல்புர்கியில் ஏறிய பையனுக்கு 25 வயதுதான். கல்லூரியில் துறைத் தலைவரை அடித்து மண்டை உடைந்து, மூளை வெளியில் வந்து 6 மாதம் சிறையில் இருந்திருக்கிறான். இப்போது கட்டுமான கம்பெனியில் வேலை. இன்னும் 5 ஆண்டுகள் வேலை செய்து விட்டு பின்னர் தன் விருப்பப்படி வாழப் போகிறானாம். 
 • தன்பாதில் அமித், அப்பா கோல் இந்தியா ஓய்வு பெற்றவர், அண்ணன் போக்குவரத்துத் தொழில் செய்து கொண்டிருக்க இவர் சொகுசாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 
 • தன்பாதில் இன்னும் இரண்டு இளைஞர்கள் இந்தியா விஷன் என்ற கம்பெனி கால் சென்டரில் வேலை செய்கின்றனர். 
 • ரேணிகுண்டாவுக்குப் போகும் பையன் வீட்டில் கிராமத்து டிபன் கடை. அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில். தம்பி கல்லூரியில். இவன் கடை நடத்த வேண்டும். அட்டெண்டன்ஸ்-க்காக கல்லூரிக்குப் போயக் கொண்டிருக்கிறான். 
இது போக சிறப்புத் திறன் இல்லாத தொழிலாளர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
 • மும்பை - சென்னை ரயிலில் திருவல்லா வரை போவதற்கான டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கும் இளைஞன். கையில் காசு இல்லை, சாப்பிடுவதில்லை. 
 • கோட்டா - ரத்லாம் ரயிலில் சந்தித்த அலகாபாத்துக்கு அப்பால் இருந்து ராஜ்கோட்டுக்கு அப்பால் வேலைக்குப் போகும் இளைஞர்கள், பூரியும் ஊறுகாயும் தொட்டுத் தின்று வயிற்றை நிறைத்துக் கொள்கின்றனர், ஒரு வேளை உணவு, வாய்க்கு ருசியில்லாத உணவு.
 • ஹவுராவில் ரிக்‌ஷாவில் அழைத்துச் சென்று ரூம் காட்டிய இசுலாமிய தொழிலாளி. ஜார்கண்டை சேர்ந்தவர். மோடி, அமித் ஷாவை ஏளனம் செய்கிறார். 
 • புபனேஸ்வரில் ராஜூ என்ற பையன். திருப்பூரில் வேலை செய்திருக்கிறான். ஜார்கண்டை சேர்ந்தவன். புபனேஸ்வரில் அக்கா வீட்டில் இருக்கிறான். ரயிலை தவற விட்டு அபராதம் கட்டியிருக்கிறான். 
 • புனா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த லத்தூர் விவசாயியும் அவரது மகனும். 
நகரங்களுக்குள் சந்தித்தவர்கள்
 • கொல்கத்தாவின் இமிடேஷன் நகை கடை நடத்தும் முன்னாள் ராணு வீரர் 1992-ல் சென்னைக்கு வந்தாராம். ஆவடி heavy ordinance தொழிற்சாலையில் பயிற்சி எடுத்தாராம். இப்போது வெளியில் போவது எல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்.
 • புபனேஸ்வரில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் தேடி வந்த ஒரு பழுத்துக் கனிந்த வயதான அம்மா, வேகா வெயிலில் ஒரு நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தார். தண்ணீர் பாட்டிலை கொடுத்ததும், பாட்டில் மூடியை வாங்கி அதில் ஊற்றிக் குடித்தார். இளைப்பாறி விட்டு கிளம்பும் போது தலையில் கைவத்து ஆசீர்வதித்து விட்டுப் போனார்.
  நான் பேசுவது அவருக்குப் புரியவில்லை, அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை. ஆனால், அங்கு ஒரு பிணைப்பு இருந்தது.
தேர்தல் விவாதங்கள்
 • அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒடிசா அரசியல் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் புத்திசாலித்தனமாக பேசிய ஒரு வயதானவர்.
 • மும்பை - சென்னை ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு விவசாயிகள் தேர்தல் பற்றி விவாதத்துக் கொண்டு வந்தனர். சந்திரபாபு நாயுடு பெண்களின் பெயரில் மாதம் ரூ 5,000 அனுப்பியதால் பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருக்கிறது என்று பேசினார்கள் என்று ரேணிகுண்டா கல்லூரி பையன் கூறினான். அந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 
 • இதைத் தவிர புபனேஸ்வரில் நிதீஷ்குமார் கட்சியின் பிரச்சார வாகனம் ஒன்று. வேறு எங்கும் தெருக்களில் தேர்தல் தீவிரத்தை காணவில்லை. 
 • மோடியைப் பற்றி கயா ரயில் நிலையத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 
தொகுத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க - இந்துத்துவ அரசியல் வட இந்தியாவில் கேள்வி கேட்பார் இல்லாத ஆதிக்கத்தில் இல்லை. அதை எதிர்த்து கடுமையான எதிர்ப்பு நீரோட்டம் செயல்படுகிறது. அது வெளியில் தலைகாட்டுவதற்கு தயங்குகிறது.

ரகசிய வாக்களிப்பு முறையில், நிச்சயமாக பா.ஜ.கவின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமையும். VVPAT மூலம் யாருக்கு ஓட்டு போட்டாய் என்ற தெரிந்து விடும் என்ற அச்சமும் இருக்கலாம்.

கொல்கத்தாவைத் தவிர கம்யூனிஸ்டுகள் வேறு எங்கு கண்ணில் பட்டனர். தன்பாதில்? டெல்லியில்? ரத்லாமில்? சூரத்தில் - இல்லை என்பதுதான் பதில். அதற்குப் பதிலாக கோயில்களும், பா.ஜ.கவின் மேளாக்களும் நிரம்பி வழிகின்றன.

தனிப்பட்ட அனுபவம்

எந்த இடத்திலும் உடனடியாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படவே இல்லை. இணைய இணைப்பும், பழகிப் போய் விட்டிருந்த உணவு முறையும், எளிய வாழக்கை முறையும் கிடைத்த வாய்ப்புகளை நிறைவோடு பயன்படுத்தி பயணிப்பதை எளிதாக்கியிருந்தன.

பேச்சுக் கொடுத்தவர்கள் எல்லாம் இயல்பாக நெருக்கமாக பேசினார்கள். வாழ்க்கை விபரங்களை பகிர்ந்து கொண்டார்கள். முக்கியமாக தன்பாதில் அமித், புபனேஷ்வருக்கு அருகில் பிரதீக், வாபியில் வேலை செய்யும் QC தொழிலாளி, ரேணிகுண்டாவில் படிக்கும் மாணவர், கட்டுமானத் துறையில் safety engineer வேலை செய்யும் 25 வயது இளைஞர் என யாரும் தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.

கோட்டாவிலிருந்து ரத்லாம் வரையிலான பயணத்தில் தொழிலாளர்கள் நெருக்கமாகி விட்டார்கள். ரத்லாமில் இறங்க வேண்டாம், வடோதராவில் இறங்கி மும்பைக்கு ரயிலை பிடிக்கலாம் என்று வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ரத்லாம் - சூரத் பாதையில் ராஜ்குமாரும், வாபி பையனும் நெருக்கமாக பேசினார்கள். ரத்லாம் - சூரத் ரயிலில் கூட்ட நெரிசலில் பெண்களும், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்கார்வதற்கு சண்டை போட்டு இடம் வாங்கிக் கொடுத்தேன்.

ஆள், இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை, தென்னிந்தியர் என்று பலர் ஊகித்துக் கொண்டனர்.

திங்கள், மார்ச் 25, 2019

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

ஞாயிறு, மார்ச் 24, 2019

லிடியன் நாதஸ்வரம் - உலக இசை அரங்கில் ஒரு தமிழ்ப் புயல்

லிடியன் நாதஸ்வரம் என்ற பையன் அமெரிக்காவில் நடக்கும் World’s Best என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று $10 லட்சம் (சுமார் ரூ 7 கோடி) வென்றிருக்கிறான்.


12 வயது லிடியன் பியானோ மேதையாக இருக்கிறான். ஒரே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளை வாசிப்பது, அதி வேக கதியில் வாசிப்பது என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாய் பிளக்க வைக்கிறான்.

ஹேரி பாட்டர் பின்னணி இசை, அதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபிள் இசை, பின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் - ஒரு கையால் அதையும், ஒரு கையால் இதையும் வாசிக்கிறான். “Oh my God, you ought to be kidding me” என்று கத்துகிறார் ஒருங்கிணைப்பாளர். அடுத்து ஜூராசிக் பார்க் இசை, தனது கை விரல்கள் தோற்றுவிக்கும் மாயத்தைக் கேட்டு அவனது முகத்தில் குழந்தைத்தனமான குதூகலம், சூப்பர் மேன் அடுத்து.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னாலும் பியானோ வாசிக்க முடியும் என்று ஒரு எளிய வாசிப்பை செய்து காட்டி விட்டு, "impressed?" என்று கேட்க, "ஆம்" என்று அப்பாவி தமிழ் முகத்துடன் பதில் சொல்கிறான், லிடியன்.

மொசார்ட்டின் டர்க்கிஷ் மார்ச் என்ற மெட்டை கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கிறான். ”பியானோவுடன் நிலாவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா வாசிக்க விரும்புவதாகச்" சொல்கிறான்.


flight of the bumble bee என்று ஒரு தேனீ பறக்கும் ஓசையை இசையாக வடிக்கிறான். 108 beats per minute – metronym அமைத்துக் கொண்டு அதை வாசிக்கிறான், நடுவர்களும் பார்வையாளர்களும் உண்மையிலேயே வாயைப் பிளக்கின்றனர். அதன் பிறகு 325 beats per minute

அவனது அப்பாவும் பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். லிடியன் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் பயிற்சி பள்ளியில் பயின்றிருக்கிறான்.


விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போலவே பக்காவான செட், ஒருங்கிணைப்பவர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று நிறைந்த அரங்கத்துக்கு வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டுகின்றன. இறுதிக் கட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் லிடியனும் உடல் வித்தைகள் செய்யும் குழுவான குக்கிவானும் இருக்கின்றனர். கடைசியில் லிடியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெறுகிறான்.

லிடியன் முகத்தில் ஒரு புன்னகை கீற்றைத் தவிர பெரிதாக கொண்டாட்டமோ, குதித்தலோ, முட்டி மடக்குதலோ இல்லை. ஆழமான பையனாக இருக்கிறான். அவனது அப்பாவும் அமைதியானவராக இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சேர்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், குக்கிவான் குழு ஆரவாரம் செய்து கொள்கின்றனர்.

யூடியூபில் லிடியன் முதலிடம் பெறும் வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு செய்தி, scroll.in செய்தி, விகடன் சினிமாவில் ஒரு வீடியோ, ஏ.ஆர் ரஹ்மான் லிடியனை பாராட்டி பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை ஊடகங்களில் எதையும் காணவில்லை. தமிழ்நாடு, இந்தியாவில்தான் இருக்கிறதா?

லிடியனுக்கு நமது கைத்தட்டல்களையும், பாராட்டுதல்களையும் பரிசாக்குவோம்!

வியாழன், மார்ச் 21, 2019

இந்துத்துவர்களை புலம்ப வைத்த 3 விளம்பரங்கள்

மீபத்தில் புரூக் பாண்ட் ரெட் லேபல் டீக்கான கும்பமேளா விளம்பரமும், சர்ப் எக்செல் டிட்டெர்ஜென்ட் பொடிக்கான விளம்பரமும் இந்துத்துவா படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின.

சர்ப் எக்செல் விளம்பரத்தில் ஒரு சிறுமி ஹோலி சாயக் கறைகள் பட்டு விடாமல் இசுலாமிய சிறுவனை தொழுகைக்கு மசூதி அழைத்துச் செல்கிறாள். இருவரும் 10-12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இது லவ் ஜிகாத் விளம்பரம் என்று பக்தர்கள் குரல் எழுப்பினார்கள். சர்ப் எக்செல்-ஐ புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தனர்.புரூக்பாண்ட் ரெட் லேபல் டீ விளம்பரத்தில் தன் வயதான அப்பாவை கும்பமேளா கூட்டத்தில் தொலைத்து விட்டுப் போக முயற்சிக்கும் மகன் மனம் திருந்துவதைப் பற்றியது. இறுதிக் காட்சியில் அப்பாவும் மகனும் மண்சட்டியில் ரெட்பேல் டீ குடிக்கின்றனர்.


கும்பமேளாவில் பல வயதானவர்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்படுகின்றனர் என்று ஒரு செய்தியையும் அது சொல்கிறது. அன்றாட நுகர்பொருள் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் போட்டி நிறுவன முதலாளியான பாபா ராம்தேவ் தனது போட்டியாளரை கண்டித்திருக்கிறார். இந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக அந்த வெளிநாட்டு பிராண்டை புறக்கணிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலாக அவரது பிராண்டை வாங்க வேண்டுமாம்.

இந்த இரண்டு பிராண்டுகளும் ஹிந்துஸ்தான் யூனி லீவருக்கு சொந்தமானவை.

யூனிலீவரின் பிராண்டுகளை புறக்கணிக்கும்படி சொல்லும் ஒவ்வொரு மெசேஜுக்கும் பதிலாக பலர் அந்தச் சலவை பொடியை கூடுதல் கிலோக்கள் வாங்கப் போவதாக தெரிவித்திருக்கின்றர். சர்ப் எக்செல் விளம்பரத்தை யூடியூபில் 1 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். மொத்தம் 1.28  லட்சம் லைக்குகள், 22,000 டிஸ்லைக்குகள். 5,161 கமென்டுகள்.

"அன்றாட நுகர்வு பொருட்களைப் பொறுத்தவரையில் நுகர்வோர் பிராண்ட் நிறுவனத்தின் மீது சொல்லப்படும் சித்தாந்த ரீதியான குற்றச்சாட்டுக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அதனால் என்ன வகையான பிரபலமும் சாதகமானதுதான்" என்கிறார்கள் சந்தைப்படுத்தல்  நிபுணர்கள். சென்ற ஆண்டு நைக் பொருட்களை புறக்கணிப்பதாக நடந்த இயக்கத்தைத் தொடர்ந்து அதன் விற்பனை அதிகரித்திருக்கிறது. #metoo விளம்பரத்தைத் தொடர்ந்து ஜில்லெட் பிளேட்டுக்கு எதிரான பிரச்சாரமும் விற்பனையை பாதிக்கவில்லை என்று பி&ஜி சொல்லியிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போன்றது இந்த பிக் பஜார் விளம்பரம். மே 2017-ல் வெளியிடப்பட்ட இதுவும் 1 கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.


இஸ்லாமிய பெண் மருத்துவர், ரம்சான் நோன்பு திறத்தல், சீக்கிய அம்மாவின் அன்பும் நேசமும், பெண் மருத்துவரின் முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த புன்னகை - பார்க்கப் பார்க்க திகட்டாத விளம்பரம்.

மதவெறியும், வெறுப்பும், பிரிவினை பிரச்சாரமும் சாதாரண உழைத்துப் பிழைக்கும் மக்களுக்கு அன்னியமானவை என்பதுதான் விஷயம்.

செய்தி ஆதாரம் : Can #Boycott be good for business and brands?

வியாழன், மார்ச் 14, 2019

சைக்கோ ராட்சசர்கள் - பொள்ளாச்சியில் மட்டும்தானா?

ராட்சசன் படம் வந்தது 2018-ல். பொள்ளாச்சி சைக்கோ ராட்சசர்கள் 2012 முதலாகவே தமது வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராட்சசன் திரைப்படத்திலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி சைக்கோக்கள் பண்ணை வீடு, பங்களா வீடு, கார் என்று குற்றம் நடத்த வசதியான இடத்தை சொத்தாக வைத்திருக்கின்றனர்.

பணத் திமிரும், அதிகார போதையும், ஆணாதிக்க வக்கிரமும் ஒன்று கலந்த சைக்கோக்கள் பொள்ளாச்சி கிரிமினல்கள். இவர்களால் 7 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடூரத்தைக் கண்டு 2019-ல் நாம் பதைக்கிறோம். அந்தப் பெண்கள் வதைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக அது நமது கவனத்துக்குக் கூட வரவில்லை, அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூட இல்லை. ஏன்? நக்கீரன் கோபால் சொல்வது போல கடைசியாக புகார் கொடுத்த பெண் தைரியமாக அதைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் பல பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள்.

புகார் கொடுத்தால்தான் விசாரிப்போம் என்கிறது போலீஸ். அதாவது, யாரும் புகார் கொடுத்திருக்கா விட்டால் போலீஸ் அதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இதில் பொள்ளாச்சிக்கு ஏதாவது தனிச்சிறப்பு இருக்கிறதா என்ன? மற்ற ஊர்களில் அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும், அவரது திமிரெடுத்து அலையும் மகன்களும் இல்லையா? பணக்கார தறுதலைகளுக்கு பண்ணை வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையா? அங்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம்?

"பெண்கள் பாவம் மயங்கி விட்டார்கள், காரைக் கண்டு ஏமாந்து விட்டார்கள், செல்ஃபோன் சனியனை பயன்படுத்தி சீரழிந்து போய் விட்டார்கள்" என்று நக்கீரன் கோபால் உட்பட பலர் புலம்புகிறார்கள். "செல்ஃபோன் வந்த போதே நான் சொன்னேன், இது கையிலேயே இருக்கும் சனியன்" என்று என்கிறார் நக்கீரன் கோபால்.

ராட்சசன் திரைப்படத்தில் செல்ஃபோன், பண்ணை வீடு எல்லாம் காட்டி அந்தக் குழந்தைகளை மயக்கவில்லை, சைக்கோ கொலைகாரன். பள்ளி நிகழ்ச்சிகளில் மேஜிக் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குழந்தைகளை கவர்கிறான். சோப்புக் குமிழ் விட்டே சிறு குழந்தையை மயக்குகிறான். மேஜிக் ஷோக்களும், பெண்கள் பள்ளிக்கு போவதும், சோப்புக் குமிழ் விடுவதும் சனியன்கள் என்று நக்கீரன் கோபால் குமுறினால் எப்படி இருக்கும்?

பிரச்சனை அங்கு இல்லை.

1300 வீடியோக்கள் மொத்தம் இருக்கின்றன என்று நக்கீரன் கோபால் ஒரு புறம் சொல்ல, பாலியல் வீடியோக்களை தேடும் தளத்தில் பொள்ளாச்சி வீடியோ, பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ என்ற தேடுதல்கள் முதலிடம் பிடித்திருப்பதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்.

"என் இணையம், என் ஃபோன், நான் வீடியோ பார்ப்பேன்" என்று வக்கிரத்தை தேடும் உலகத்தில், "என் பண்ணை வீடு, என் கார், என் பணம் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற நினைப்பு ஆதிக்கம் செலுத்தும் உலகத்தில், "நீதாம்மா பத்திரமா இருந்துக்கணும்" என்றும், "ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமாக வளர்க்கணும்" என்றும் பேசிக் கொண்டே இருந்தால் போதுமா?

"உன் ஃபோட்டோவை வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். "அப்படி யாராவது மிரட்டினால் கவலைப் படாதீர்கள்" என்று பெண்களுக்கும், "பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை விட்டு ஆண் குழந்தைகளை ஒழுக்கமாக வளருங்கள்" என்று பெற்றோருக்கும் அறிவுரைகள் சொல்கிறோம்.

ஒருவன் காதலிப்பது போல நடித்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அங்கு காதலனின் அம்மா போல நடிப்பதற்கு ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து வதைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் நக்கீரன் கோபால் சொல்கிறார். வீடியோக்களின் சில பகுதிகளையும் காட்டுகிறார்.

அந்தப் பண்ணை வீட்டில் வேலை செய்தவர்கள், அந்த சைக்கோ கிரிமினலின் அம்மாவாக நடித்த பெண் இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

புகார் வந்த பிறகும் புகார் கொடுத்தவரை அடிக்கும் வகையில் அ.தி.மு.க காலிகளுக்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

“காவி சொந்தங்களே, நமது கூட்டணியை தேர்தலில் பாதிப்பதற்காக இந்தப் பிரச்சனையை கிளப்புகிறார்கள்" என்று பேசும் பா.ஜ.க/பார்ப்பன கும்பலுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

முகிலன் காணாமல் போனது பற்றி கேட்ட போது "தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க முடியாது" என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாரே. அது போல இந்தப் பிரச்சனையில் "ஒவ்வொரு பண்ணை வீட்டு நிகழ்வுகளுக்கும் நான் பொறுப்பு கிடையாது" என்று சொல்லலாம்.

இவர்களுக்கும் அறிவுரை உண்டா? பெற்றோர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மட்டும்தான் அறிவுரையா?

அந்த சைக்கோ கிரிமினல்களில் ஒருவன் "பல பெண்கள் தனக்கு ஆதரவு" என்றும் வீடியோவில் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். நித்தியானந்தா மடத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு ஆதரவு என்று மார் தட்டிக் கொண்டான் அந்த சைக்கோ.

“நமக்கெதுக்கு வம்பு" என்று ஒதுங்கிப் போவது, "என்னை மட்டும் நான் கவனித்துக் கொண்டால் போதும், என் குடும்பத்துக்கு எது நல்லது என்று மட்டும் பார்த்தால் போதும்" என்றும் தினம் தினம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே அதற்கும் 7 ஆண்டுகளாக தொடர்ந்த இந்தக் கொடூரத்துக்கும் தொடர்பு இல்லையா?

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் படியாக அவர்களது குடும்பங்களும், வேலை செய்யும் இடங்களும், படிக்கும் இடங்களும் ஏன் இல்லை? பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக புகார் சொல்ல விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குடியிருப்புகளில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? கல்லூரியில், பள்ளிக் கூடத்தில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? ஏதாவது பிரச்சனை என்றால் இந்தக் கமிட்டியில் முறையிட்டால் நியாயம்/தீர்வு கிடைக்கும் என்று ஏன் இல்லை?

பொள்ளாச்சி வெளிச்சத்துக்கு வந்து விட்டது, வெளிச்சத்துக்கு வராமல் துன்புறுத்தப்படும் எத்தனை பெண்கள் இந்தக் கொடூர சமூகத்தில் இருக்கிறார்களோ!

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

ஞாயிறு, மார்ச் 10, 2019

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

 1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
 2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
 3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
 4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
 5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
 6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

சனி, மார்ச் 09, 2019

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
 1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
 2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
 3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
 4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
 5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
 6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்