வெள்ளி, மே 22, 2009

மழைக்காலம் மீண்டும் வரும்

அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல்
உற்றுளி தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

வியாழன், மே 21, 2009

வாய்ச் சொல் வீரர்கள்

இத்தனை ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நாமெல்லாருமே ஒரு வகையில் காரணம்தான்.

ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?

கொடுங்கோலை எதிர்த்துப் போராடும் மக்களை பாதுகாப்பான தொலைவில் சுகமாக இருந்து கொண்டு 'இன்னும் பலமாக அடி, பக்கத்தில் கிடக்கும் கல்லைத் தூக்கி எறி, நாங்க எல்லாம் இருக்கிறோம்' என்று வாய் வார்த்தைகளை மட்டும் கொட்டி விட்டு ஒவ்வொரு மரணத்துக்கும் பிறகு இரங்கல் செய்தியும், துக்கமும் வெளிப்படுத்துவதோடு நின்று விடுகிறோம்.

அடையாள வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட நமது பணிக்கு பாதிப்பில்லாத நாளில் வருகிறதா என்று பார்த்து அன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். வேறு முக்கியமான நாளில் வந்திருந்தால் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம்.

இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்' அப்படி படுகொலை நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் விளையாடப் போகும் போது, கோபப்பட்ட நாம் அதற்குத் துணை போகும் இந்திய அரசாங்கத்தின் குடையின் கீழ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அரசுக்கு வரி செலுத்தப் போவதில்லை, அரசுடன் ஒத்துழைக்கப் போவதில்லை' என்று ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

வெறும் வார்த்தை ஜாலங்களையும், தந்தி அனுப்புவதையும் காட்டி மக்களின் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கருணாநிதியைச் சாடிய அதே நேரத்தில் நாம் என்ன அதிகமாகச் செய்து விட்டோம்? அதே வார்த்தை ஜாலங்கள்தான், வலைப்பதிவில் ஒரு இடுகைதான்.

'நம் எல்லோரின் கைகளிலும் இரத்தம்' என்று ரீடிஃப் டாட் காமில் பத்ரகுமார் என்பவர் எழுதியிருந்தார். 1980களில் இலங்கையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவராம். 'விடுதலைப் புலிகளை வசதிப் படும் போது வளர்த்து விட்டு, இந்திய நோக்கம் மாறும் போது அவர்களை ஆட்டுவிக்க முயற்சித்து தோற்றவுடன் பொறுமையாக கெட்டிக்காரத்தனமாக அவ்வளவு பேரையும் அழிக்கத் துணை போனோம். இந்த கொலைப்பழி பரம்பரை பரம்பரையாகத் தொடரும்' என்று எழுதியிருந்தார்.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக டில்லி போகத் தெரிகிறது, ஈழத் தமிழரின் இன்னல்களைக் குறித்து தந்தி அனுப்ப மட்டும்தான் முடிகிறது என்று சொல்வதற்கு தகுதி கிடையாது. நம்முடைய வேலை என்றால் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம். ஈழத்துயரங்களுக்கு பதிவதோடு நின்று விடுகிறோம். அவ்வளவு அக்கறை என்றால் படகேறி வட இலங்கையில் இறங்கப் போக வேண்டும். அதனால் என்ன துன்பம் வருகிறதோ அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் வெற்றாக கதைத்துக் கொண்டிருப்பதில் பலனுமில்லை, நியாயமுமில்லை.

நம்ம நாலாவது வீட்டில் இருக்கக் கூடியவர் என்ற முகம், தாய், தந்தையர், மனைவி, மக்கள் என்று புகைப்படங்கள். இதைப் போல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் தம்மைப் பலி கொடுத்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஆதரவு என்ற பெயரில் வெற்று ஊக்குவிப்பைக் கொடுப்பதுதான் நம்மால் முடிந்திருக்கிறது. இனிமேல் இது போல வெற்று வாய் வார்த்தைகளைக் கொட்டுவதை நிறுத்தி விட வேண்டும்.

செவ்வாய், மே 19, 2009

யார் பயங்கரவாதி!

செய்தித் தளங்களில் எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ரீடிஃப் டாட் காமில் போட்டிருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பத் தலைவர், அப்பாவி இளைஞர் என்றுதான் முகங்களைக் காட்டியது. தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என்று வில்லன் சித்திரிப்புக்கு உட்பட்டு விட முடியாத படங்கள். உண்மையில் வயிறு கலங்கியது. இப்படி ஒரு கொக்கரிப்பா!

யாசர் அராஃபத்தை இசுரேல் கடைசி நாட்களில் துன்புறுத்தியது, சதாம் உசைனை அமெரிக்கா அவமானப்படுத்தியது போன்று இவரையும் பொதுமக்கள் பார்வையில் இழிவுபடுத்துவதாக இறங்கியிருக்கிறார்கள்.

செய்திகள் பொய்யானவை என்று பல பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். பார்க்கப் போனால் பயங்கரவாதம் என்ற பெயரில் பொதுமக்களையும், எந்த பாவமும் அறியாதவர்களையும் கொன்று குவிப்பதை விடுதலைப் புலிகள் செய்ததே இல்லை என்றுதான் தெரிகிறது. வன்முறையும் பயங்கரவாதமும் கண்டிக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள ராணுவத்தின் இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு மிகப் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளின் உயிர்க் கொலைகள் வரும். அவர்களால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஆயுதம் ஏந்திய சிங்கள ராணுவத்தினர், தமக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் நினைத்த அரசியல் தலைவர்கள். பொது இடங்களில் குண்டு வைத்து கண்மண் தெரியாமல் கொன்று குவிப்பது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆயுத வசதிகளைப் பயன்படுத்தி தென் இலங்கையில் பல பயங்கரவாதச் செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். தமது விமானத்தில் பறந்து போய் கூட இலங்கை அரசின் விமானப்படைத் தளத்தைத்தான் தாக்கினார்களே தவிர பொதுக் கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்க முனையவில்லை. மனித நெறிகளும், மக்களபிமானமும் இது வரை இருந்த எந்த சிங்களத் தலைமையையும் விட புலிகளிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.

இதை எல்லாம் வசதியாக மூடி மறந்து விட்டு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஊடகங்களும், 'எங்க அப்பாவைக் கொண்ணவங்க' என்று புலம்பிக் கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி வாரிசுகளும். காலம் பதில் சொல்லட்டும்.

திங்கள், மே 18, 2009

தேர்தல் முடிவுகள் - சில குறிப்புகள்

தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னது போலவே திமுக கூட்டணி அதிகமான வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரசு பெருந்தலைகளுக்குப் பின்னடைவு, மணிசங்கர அய்யர், தங்கபாலு, பிரபு, ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லோரும் தோற்பார்கள் போலத் தெரிந்தது. ப சிதம்பரம் தோற்று விட்டதாக செய்தி வந்த பிறகு மறு எண்ணிக்கை, மறு முறையீடு என்று முந்தி விட்டார். காலை நாளிதழில் முடிவு அவர் வெற்றி என்றுதான் போட்டு விட்டார்கள்.

பாமக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார். பாஜகவின் கனவுகள் கன்னியாகுமரியிலும், ராமநாதபுரத்திலும் கலைந்து போயின. திமுகவின் ஹெலன் டேவிட்சன் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் கன்னியாகுமரியிலும், திடீர் ஹீரோ ரித்தீஷ் ராமநாதபுரத்திலும் வெற்றி பெற்று விட்டார்கள்.

பெருந்தலைகள் டி ஆர் பாலு, அழகிரி, ராஜா, தயாநிதி மாறன் வெற்றி பெற்று விட்டார்கள். தா பாண்டியன், வைகோ மண்ணைக் கவ்வி விட்டார்கள்.

1. மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,
  • கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
  • மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
  • பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
    இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • ராஜஸ்தான், தில்லி, ஜம்மு காஷ்மீர் பெரும் பின்னடைவு.
  • மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் வாலாட்டுவது பெருமளவுக்கு எடுபடவில்லை.
2. காங்கிரசு கட்சிக்கு
  • உத்திரபிரதேசம், தில்லி, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் (குறைந்த அளவில்) ஆகிய நான்கு மாநிலங்களிலும் தனி வெற்றி.
  • மேற்கு வங்கம், தமிழ்நாடு, காஷ்மீர் மாநிலங்களில் கூட்டணி வெற்றி.
3. மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. இந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டு ஆட்சியை இன்னும் மேம்படுத்தினால் அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்புகள் மேம்படலாம். அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

4. பொதுவுடமைக் கட்சிகள் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் தமது பிடியை வெகுவாக தளர விட்டிருக்கிறார்கள். சமாளித்து தலையெடுப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது.

5. திமுக அரசை நீக்க வேண்டும், மாயாவதி அரசை நீக்க வேண்டும் என்உற மிரட்டும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசில் செல்வாக்கு பெற முடியாது. மம்தா பானர்ஜி மட்டும் மேற்கு வங்க அரசுக்கு எதிராக மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கலாம். சோனியா காந்தியின் ஜனநாயக உள்ளுணர்வு அதற்கு இடம் கொடுக்காது என்று நம்பலாம்.

6. நரேந்திர மோடி, குஜராத்தில் போன தடவையை விட ஒரு இடம் அதிகம் வெற்றி பெற செய்திருக்கிறார். 'தோல்விக்குக் காரணம் அத்வானிதான், மோடி பாணி வெறுப்பு அரசியலைத் தீவிரப்படுத்தினால்தான் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று கட்சி முடிவு செய்தால் அவரது முக்கியத்துவம் அதிகமாகலாம்.

7. பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது. குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

8. ஜெயலலிதா தனது உயர் குதிரையிலிருந்து இறங்கி வர வேண்டியிருக்கும். விஜயகாந்தின் கூட்டணி கிடைத்தால்தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புகள் அதிகமாகும். அதிலும் தனியாக விஜயகாந்த் நின்று, திமுக/காங்கிரசு கூட்டணி தொடர்ந்தால் விஜயகாந்த் பேர் சொல்லுமளவுக்கு இடங்களில் வெற்றி பெற்று மற்ற இடங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு போய் விடுவார். அதே உறுதியுடன் தனித்துச் செயல்பட்டால் 2016ல் விஜயகாந்துக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். இதற்கிடையில் என்னென்ன மாற்றங்கள் வரப் போகின்றனவோ!

9. அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும். திமுக காங்கிரசுடன் சேர்ந்திருப்பதான் பாஜகவுடன் உறவாடிய பாவத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது. இது வரை உறவாடியவர்களுக்கும், இனிமேல் சேர்ந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் கடுமையான எண்ணத் தடையை உருவாக்கக் கூடிய முடிவுகள்.

சோ ராமசாமிக்கு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தமிழகத்தில் தாக்கம் இல்லை என்று தான் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று மட்டும்தான் சொல்லிக் கொள்ள முடியும். பாஜக 170, 200 என்று பேசிக் கொண்டிருந்தது, திமுக செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது எல்லாமே கசப்பு மருந்துகள்தான். அதிலும் விஜயகாந்தின் தேமுதிக வாக்குகளைப் பிரிப்பது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று தான் சொன்னது நடந்திருக்கிறது என்று சொல்லலாம்.

மற்றபடி பாஜகவுக்கு ஒரு சில மாநிலங்களில்தான் பின்னடைவு. காரணங்களை ஆராய்ந்து செயல்பட்டால் அடுத்த முறை வெற்றி பெற்று விடலாம் என்பார். போன தேர்தலிலும் அதையேத்தான் சொல்லியிருந்தார்.

கொக்கரிக்கும் எல்லோரும் நாசமாகப் போகட்டும்

ஆயிரம் ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்து, பல லட்சம் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்கி வெறியாட்டம் ஆடும் சிங்கள ராணுவமும், இந்தியப் பத்திரிகைகளும், இந்திய அரசியல் தலைவர்களும் நாசமாகப் போகட்டும்.

சனி, மே 16, 2009

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்

'சின்னச் சின்னக் கட்சிகள் ஆட்சி அமைத்தால் ஊழல் அதிகமாகும். பெரிய கட்சிகள்தான் நிலையான நல்ல ஆட்சி கொடுக்க முடியும். காங்கிரசும், பிஜேபியும் தலா 150 தொகுதிகளுக்கு அருகிலும், அவர்கள் கூட்டணிகள் 200 தொகுதிகளுக்கு அருகிலும் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்புகள். மூன்றாவது அணிக் கட்சிகள் 100 தொகுதிகளுக்கு அருகில்தான் வாய்ப்பு பெறும்.'

'ராஜீவ் காந்தி கட்சித் தாவல் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது ஒரு பெரிய பிற்போக்கு நடவடிக்கைழ காங்கிரசு என்பது பல்வேறு மாநிலங்களின், பல்வேறு சமூகப் பிரிவினர்களின் கூட்டணியாக இருந்து வந்தது. பிடிக்காதவர்கள் கட்சியை உடைத்துக் கொண்டு போகலாம், வேறு கட்சிக்குத் தாவலாம் அல்லது தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம்.

1984 தேர்தலுக்குப் பிறகு கிடைத்த பெரும்பான்மையை இழந்து விடக்கூடாது என்ற ஆர்வத்தில் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். எந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் அவரது பதவி பறிக்கப்பட்டு விடும். அவரது தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும்.

அதனால் பெரிய மாறுதல்கள் நடந்து விடவில்லை. ஒற்றை ஒற்றையாக கட்சித் தாவுவது குறைந்து போய் கட்சியில் மூன்றில் ஒரு பகுதியினர் தனியாக உடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அடுத்த 20 ஆண்டுகளில் அதுதான் கணக்காக இருந்தது. ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிர்ப்பு அணிக்கு மூன்றில் ஒரு பங்காவது ஆதரவு இருக்கிறதா என்றுதான் முயற்சிகள் நடந்தன.

2003ல் சட்டத்தைத் திருத்தி மூன்றில் ஒரு பங்கு கட்சியை மீறினாலும் பதவி பறிக்கப்படும் என்று ஆக்கி விட்டார்கள். இப்போது கட்சி மாற்ற வேண்டிய உறுப்பினர்களை தமது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டு வெளியில் வரச் சொல்கிறார்கள்.

ஆகக் கட்சித் தாவல் முழுமையாக நின்று விடப்போவதில்லை. வெளியில் போக வழியில்லாததால் உள்ளே வருவது குறைந்து போனது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா உறுப்பினர்களும் கட்சித் தலைமை சொல்வதைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்பது கருத்துச் சுதந்திரத்தை பெரிதாக முடக்கிப் போடுவது. அதனால்தான் பெரிய தேசிய கட்சிகள் வலுவிழந்து, மாநிலக் கட்சிகள், சின்னச் சின்னக் குழுக்களை சார்ந்த கட்சிகள் வளர ஆரம்பித்தன.

குறைந்த பட்ச சுயமதிப்பு இருக்கும் தலைவர் தனியாகக் கட்சி ஆரம்பித்து விடுகிறார். வெற்றி பெற்றால் மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறுப்பினர் பதவிக்கு ஆபத்து இல்லாமல் வெளியில் வந்து கொள்ளலாம்.

கட்சித் தாவல் சட்டம்தான் இந்திய அரசியலில் பல கட்சிகள் வருவதற்கான முக்கிய காரணம். மாற்றி வாக்களிக்கும் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தடுக்கத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் அரசியலில் ஊழலும் பணபலமும் குறைந்து விட்டதா என்ன? இன்னும் பல மடங்கு அதிகமாகத்தான் செய்திருக்கிறது. கருத்துரிமையை, மாறுபடும் உரிமையைப் பறித்ததுதான் பலனாக இருக்கிறது. அதற்கான நிவாரணத்தையும் நமது மக்களாட்சி முறை உருவாக்கிக் கொண்டு விட்டது.'

திங்கள், மே 11, 2009

கனவுகள்

தமிழ்நாட்டில் எந்த ஊருக்குப் போனாலும் தரமான உணவு யாருக்கும் கிடைக்க வேண்டும். வீடுகள், உணவு விடுதிகள், சத்திரங்கள் இருக்க வேண்டும். எல்லா வீடுகளுக்கும் குடிதண்ணீர் வீட்டு பயன்பாட்டு தண்ணீர் வீட்டுக்கு உள்ளேயே வந்து விழ வேண்டும். தண்ணீர் விலைக்கு விற்கப்படுவது நின்று போக வேண்டும்.

இயற்கை விவசாய முறையில் விளைந்த பண்டங்கள் தாராளம் கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். பொதுமக்கள் உயர்ந்த விலை கொடுத்து உணவு வாங்கும் அளவுக்கு வளம் பெற்றிருக்க வேண்டும்.

இலவசங்கள், சோம்பேறியாக்கும் அரசுத் திட்டங்கள் ஒழிக்கப் பட வேண்டும். நாடெங்கும் முழு மதுவிலக்கு செயல்படுத்தப்பட வேண்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப் பட வேண்டும். உலக நாட்டின் நுட்பங்கள் எல்லாம் தமிழ் மொழியில் தரமான புத்தகங்களாகக் கிடைக்க வேண்டும்.

நாட்டின் எல்லா கிராமங்களிலும் அகலப்பட்டை இணைய வசதி இருக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களாக பணி புரிய திறமையானவர்கள் முன் வர வேண்டும்.

அடிப்படை சுகாதார அறிவு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். வேதி மருந்துகள் தவிர்த்த மருத்துவ வசதி பொது மருத்துவமனைகளில் உயர்தரமாக கிடைக்க வேண்டும்.

நல்ல சாலைகள், வீட்டுக்குள் குடிநீர், நடந்து போகும் தூரத்தில் உயர்தரமான பள்ளிக்கல்வி, உடல் நலம் பேண மருத்துவ வசதிகள், சட்ட ஒழுங்கு பராமரிப்பு அரசாங்கத்தின் கடமைகளாக இருக்க வேண்டும்.

மின்சாரம், தொலைதொடர்பு, பொழுதுபோக்கு இவற்றை ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கண்காணிப்பில் தனியார் தொழில்கள் வழங்க வேண்டும். தேவைப்படுபவர்கள் காசு கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களுக்கு இலவசங்களாக எதை எதையோ அள்ளிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் படிப்பதற்கும், உடல் நிலை பராமரிப்பதற்கும், தரமான குடிநீருக்கும் காசு செலவழிக்க வைக்கிறார்கள்.

மதத்தின் பேரால், சாதியின் பேரால் கட்சிகள் இயக்கங்கள் தடை செய்யப்படும். மத நிறுவனங்கள் சொத்து சேர்ப்பது தடை செய்யப்படும். மக்களின் காணிக்கையின் பேரில் இயங்க முடியும் கோயில்களைத் தவிர மற்றவை பொது அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டு விட வேண்டும்.