சனி, ஏப்ரல் 29, 2006

டாடாவில் ஆறு ஆண்டுகள் - 1

தோல் தொழில் நுட்பம் படிக்க சேர்ந்தது முதல் வேலை கிடைக்குமா, எதிர்காலம் என்ன ஆகும் என்று கடுப்பேத்திக் கொண்டிருந்தவர் சுனில் என்ற ஒரு வருட மூத்த மாணவர். கடைசி வருடம் வரும் போது டாடா நிறுவனத்தின் தோல் பிரிவில் எப்படியாவது வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். டாடா நிறுவனத்தின் வளாக நேர்முக அறிவிப்பு வந்ததும் தவறாமல் என் பெயரைக் கொடுத்து விட்டேன்.

நேர்முக நாளும் வந்தது. என்னுடைய வழக்கமான ரப்பர் செருப்பு, பேன்டில் சொருகப்படாத அரைக்கைச் சட்டையுடன் நானும் மற்ற மாணவர்களுடன் காத்திருக்க ஆரம்பித்தேன். சரக்கு மூளையில் இருகிறது, உடையில் மிடுக்கு காட்டுவது எல்லாம் எதற்கு என்பது நம்ம எண்ணம்.

முதலில் ஒரு பலியாடு வந்தது.

"என்னடா, என்ன ஆச்சு, என்ன கேட்டாங்க,"

"போடா புக் எல்லாம் வச்சுக்கிட்டு கெமிஸ்ட்ரி கேள்வியா கேக்கிறார்டா!" என்று கடுப்பாக சொன்னான்.

அடுத்து போய் விட்டு வந்தது இன்னும் கொஞ்சம் தெம்பான பார்ட்டி. முகம் இருண்டு கிடந்தது.

"டேய், எக்ஸாம்ல் சாய்ஸ்ல விட்டத எல்லாம கேக்கறாங்கடா, யாரையும் எடுக்கப் போறதில்ல போல" என்று இறுக்கமாகச் சொல்லி விட்டு போய் விட்டான்.

'இந்த பசங்க எல்லாம் அலட்டிக்கிறானுங்க, ஒழுங்கா படிக்கிறது கிடையாது, நம்ம போய் ஒரு கலக்கு கலக்கிடலாம்' என்று நினைத்துக் கொண்டு நிமிர்த்திக் கொண்டு கான்ஃபரன்சு ரூமுக்குள் நுழைந்தேன். செக்கச் செவேல் என்று ஹீரோ மாதிரி ஒருவர்
நடு இருக்கையில் அமர்ந்திருக்க அவருக்கு இடது புறம் சாதுல்லா, எங்கள் துறைத் தலைவர் இருந்தார்.

"கம் சிவகுமார், திஸ் இஸ் மிஸ்டர் ஓ கே கௌல் டாடா வைஸ் பிரசிடன்டு, ஹி இஸ் அல்சோ அவர் காலேஜ் அலும்னி." இது சாதுல்லா.

ஒகே மிஸ்டர் சிவகுமார் என்று ஆரம்பித்தார் கௌல் . அப்புறம் ஆரம்பித்தது அந்த சீனத் தண்ணீர் சித்தரவதை. மனுசன் கையில் ஒரு கத்தை காகிதங்கள் வைத்துக் கொண்டு அதில் எழுதியிருக்கும் கேள்விகள் எல்லாம் கேட்கிறார். கொலஜனில் உள்ள அமினோ ஆசிட்டுகள் என்ன? போன மாத அமெரிகன் தோல் வேதியாளர் ஆய்வுப் பத்திரிகையில் முக்கியக் கட்டுரையின் தலைப்பு என்ன? செட்டிங் இயந்திரத்துக்கும், ஷேவிங் இயந்திரத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேள்விகள் வந்து விழ தலை கால் தெரியவில்லை. தட்டுத் தடுமாறி சில பதில்கள் வாயிலிருந்து தப்பின. ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய தடுமாற்றம் வேறு.

"என்ன இதெல்லாம், நீங்க எல்லாம் படிப்பதே இல்லையா! இவ்வளவு நல்ல லைப்ரரி இருக்கிறது. இனி மீதமிருக்கும் மூன்று மாதங்களிலாவது ஒழுங்காக வசதிகளைப் பயன்படுத்தப் பாரு" என்று அறிவுரை வேறு. எல்லாமே ஆங்கிலத்தில்தான். இதற்கிடையில் கொஞ்சம் சினிமா நகைச்சுவை நடிகர் போல இருந்த ஒருவர் கௌலின் வலது புற இருக்கையில் இருந்து கொண்டார். அவர்தான் மனித வளப் பிரிவுத் தலைவர் டி கே ஸ்ரீவஸ்தவா என்று பின்னர் தெரிந்தது.

அந்த மனிதர் வேறு இடைஇடையிடையே நானும் இருக்கிறேன் என்று நோண்டி வெறுப்பேற்றினார். கௌல் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு வழியாக நேர்முகம் முடிந்து உடைந்த மனதுடன் வெளியே வந்தேன். என்னுடைய ஜோல்னா பை (என்னுடைய இன்னொரு முத்திரை), மாட்டிக் கொண்டு யாருடனும் பேசாமல் வெளியே வந்து விட்டேன்.

"டேய் சிவா என்னடா செய்யப் போற, உனக்கு கிடைச்சுடுமா" என்று அனுதாப நண்பர்கள் ஒவ்வொருவராக மரத்தடிக்கு வந்து விட்டனர். நேர்முகத்தில் கலந்து கொண்ட எல்லோரும் கோபமாக இருந்தோம். "டேய் இவங்க யாரையும் எடுக்கப் போவதில்லை. சும்மா கண் துடைப்புக்கு இண்டர்வியூ வச்சிருக்காங்க அதான் இப்படி நோகடிச்சிருக்காங்க" என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டு மனதை ஆற்றிக் கொண்டு கிளம்பினோம்.

தாம்பரத்துக்கு போகும் பேருந்தில் கண்டதெல்லாம் இருண்டதாகத் தெரிந்தது. டாடாவில் சேரா விட்டால் என்ன என்பதை நினைத்துக் கூடப் பார்க்காததால் ஏமாற்றம் மிகப் பாரமாக மனதில் அழுத்தியிருந்தது. வீட்டுக்கு வந்து அக்காவிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். "கவலப்படாத, இது இல்லைன்னா நிறைய கம்பெனி, இவங்க கூட ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ மாதிரி பண்ணியிருக்கலாம். உன்னை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள்" சொன்னாள்.

அடுத்த வாரம், டாடா தேர்ந்தெடுத்த பட்டியல் வந்தே விட்டது. அக்கா சொன்னது நடந்தே விட்டது. சிவகுமார், வேதநாரயணன், சுந்தர், அருண்குமார் என்று நான்கு பெயர்கள் அறிவுப்பு பலகையில் மிளிர்ந்தன. சுந்தரும், அருண்குமாரும் குண்டு பார்ட்டிகள், நானும் வேதநாரயணனும் ஒல்லிப் பிச்சான்கள். சுந்தரும், வேதநாரயணனும் சென்னை வாழ் மாநகர மாணவர்கள். நான் நாகர்கோவில் சிவகுமார், அருண்குமார் கடலூர் காரன். எல்லோருக்கும் பொதுவானது எல்லாருமே பழங்கள். கல்லூரியில் அப்பாவியாக கடவுளுக்குப் பயந்து நல்ல வாழ்க்கை வாழும் பசங்களுக்குச் செல்ல பெயர் பழம். கௌல் ஒரே மாதிரியாத்தான் பிடித்திருக்கிறார்.

ஜனவரியில் இது நடந்து மே வரை வேறு எந்த தகவலும் இல்லை. நாங்களே முடிவு செய்து ஜூன் மாதக் கடைசி வாரம் சேர்வதாக தேவாஸ் முகவரிக்கு தந்தி அடித்து விட்டோம். அதற்கும் எந்தவிதமான பதில் இல்லை. நமக்கு வேலை உண்டா அல்லது நம்மை எல்லாம் மறந்தே போய் விட்டார்களா என்று ஒரே பயம். பயத்தை ஒருவொருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளாமலேயே, அகில்யாநகரி எக்ஸ்பிரஸ் என்ற கொச்சின் - இந்தூர் ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து முன் பதிவு செய்து கொண்டோம்.

ஊருக்கெல்லாம் போய்ச் சொந்தக்காரர்களுக்கெல்லாம் டாடா போகிறேன் என்று தகவல் சொல்லி விட்டு சென்னை வந்தாச்சு. கொச்சியிலிருந்து வந்து இரவு பதினொன்று நாற்பத்தைந்துக்கு கிளம்பிய ரயிலில் கிளம்பி விட்டோம்.

வியாழன், ஏப்ரல் 27, 2006

மீண்டும் ஈழப் போர

இலங்கையில் வன்முறை அதிகரித்துள்ளது. ஈழத்தமிழர்கள் தமது சிங்கள சகோதரர்களுடன் அமைதியாக வாழ வழி காண இறைவனைப் பிரார்த்திப்போம்.

செவ்வாய், ஏப்ரல் 25, 2006

நிலச் சூதாட்டம்

"இருக்கிற காசில் ரெண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போடு, இரண்டு வருஷத்தில நாலு மடங்கு ஏறி விடும். தங்க விலதான் எப்பவும் ஏறிக் கொண்டே இருக்கும், பத்து பவுன் வாங்கி வைத்தால் நல்ல பாதுகாப்பு." கையில் நாலு காசு கிடைத்தால் நமக்கு வரும் முதல் எண்ணம் இதுதான்.

பணத்தை முதலீடு செய்வதை மூன்று வகைகளாகப் பிரிப்பேன். முதல் வகை சூதாட்டம் - சூதாட்ட அரங்கிற்கு சென்று குறிப்பிட விளையாட்டில் பண்த்தைக் கட்டினால், பல மடங்கு கிடைக்கலாம். போனால் எல்லாம் போச்சு.

இரண்டாவது வகை ஆக்கம் செய்யும் முதலீடுகள். இந்தக் காசை ஒரு தொழிலில் போட்டு அதில் விளையும் பொருட்களை விற்று பணத்தைப்் பெருக்குவது இதில் சேரும். தொழில் சொந்தத் தொழிலாகவோ, பிறரது தொழிலாகவோ இருக்கலாம்.

மூன்றாவது வகை - மேலே இரண்டுக்கும் இடையில் சூதாட்டத்துக்கு கொஞ்சம் அருகில் இருப்பது. Speculation எனப்படும் இத்தகைய முதலீடுகள் மதிப்பில் உயர்வது உங்கள் கையில் இல்லை. பிறரது செயல்கள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள்தான் இந்த முதலீடுகளை வளரச்செய்யும்.

கூடுவாஞ்சேரி அருகில் ஒரு லட்சத்துக்கு நான்கு ஆண்டுகள் முன்பு வாங்கிப் போட்ட மனை இன்று ஐம்பது லட்சத்துக்கு விலை போவது, வாங்கியவர் வியர்வை சிந்தி உழைத்ததால் நடந்து விடவில்லை. பக்கத்தில் புதிய தொழிற்பேட்டை வந்ததும், அரசு நல்ல சாலைகள் போட்டதும், பிறர் அந்தப் பகுதியில் மனை வாங்க முற்பட்டதும்தான் காரணம்.

இந்த வகையான மதிப்பு அதிகரிப்பின் பயன் சமூகத்துக்கே போய்ச் சேர வேண்டும் என்றுதான், அரசு நில விற்பனை மீது வரி விதிக்கிறது. அதையும் ஏய்ப்பதுதான் மற்ற வகையில் நேர்மையானவர்கள் கூட செய்ய வேண்டியிருக்கிறது.

சீனா போன்ற பொதுவுடமை நாடுகளில், எல்லா நிலங்களும் அரசுடமை. தேவைக்கேற்ப நீண்ட கால பயன்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் தனி மனிதர்களும், நிறுவனங்களும் அரசிடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனி மனிதர்கள் தங்கம் வாங்குவதும் இது போலத்தான்.

சன் டிவியின் ஏக போக அநியாயங்கள் - 9

ஏற்கனவே சொன்னது மாதிரி, சன் குழுமத்தின் நிலை மற்ற நிறுவனங்களிலிருந்து மாறுபட்டது. ஜெயா டிவிக்கு இதே ஆதிக்கம் கிடைத்தால் நிலைமை இன்னும் பத்து மடங்கு மோசமாக இருக்கலாம். ஆனால் தனது திறமையாலும் மற்றும் சில சாதகமான சூழ்நிலைகளாலும் தன்னை வலுவாக்கிக் கொண்ட சன் குழுமத்திற்கு ஏகபோக நிறுவனம் என்ற வகையில் பொறுப்புகள் அதிகம்.

ஒரு ஏகபோக நிறுவனம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. அப்படி நடந்து கொள்வதுதான் அந்த நிறுவனத்துக்கும் வணிக அளவிலும் நல்லது.

கூகுளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு வையவிரிவு வலையில் தேடுதல் சந்தையிலும், தேடல் பக்கங்களில் விளம்பரங்களை காட்டும் சந்தையிலும் பெரும் ஆதிக்கும் செலுத்துகிறது கூகுள். தன்னுடைய விளம்பரங்களுக்கு சாதகமாகவோ, போட்டியாளர்களின் விளம்பரங்களை கட்டுபடுத்தும் விதமாகவோ தன்னுடைய நிரலை மாற்றி அமைக்காமல் நியாயமான முறையப் பின்பற்றுகிறது கூகுள்.

என்னுடைய ஜிமெயில் பட்டியலின் மேலே யாஹூவின் விளம்பரம் தெரிகிறது. கூகுளின் நிறுவன கொள்கையே, தீங்கு செய்யாதே என்பதுதான். ஆரம்பத்திலேயே தாம் மிகப் பெரும் சக்தியாக வளருவோம் என்று உணர்ந்து அதை தவறாக பயன்படுத்து விடக்கூடாதி என்று தன்னை நெறிப்படுத்திக் கொண்ட கூகுள் போன்று சன் டிவி செயல்பட்டால், தொழில் முறையில் பெரிதும் வளர்ந்து உலக ஊடகத் துறையில் தன் முத்திரையைப் பதித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

END

தினமலர் == கட்டுரை மலர - 1

"செய்திகளே அப்படியே தரும் ஒரே நாளிதழ்" என்று சில நாட்களுக்கு முன் தினமலர் விளம்பரம் செய்தது. பொய் சொல்கிறோம் என்று கூச்சமே இல்லாமல் சொல்லப்பட்ட பச்சைப் பொய் அது.

விகடனோ, குமுதமோ ஏன் துக்ளக்கோ படிக்கும்போது அவை செய்தித்தாள்கள் இல்லை, பத்திரிகைகள் என்று மனதில் கொண்டு ் படிக்கிறோம். அவற்றில் எழுதப்பட்டவை எழுதுபவரின் சொந்தக் கருத்துகள் கலந்து உள்ளன என்று தெரியும்.

இந்து, தினமணி, தினகரன், தினமலர் போன்ற நாளிதழ்கள் (செய்தித் தாள்கள்) பெரும் பகுதியில் நடந்த செய்திகளை கூறுவதுதான் வழக்கம். ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், கருத்துகள் பகுதிகளில் தம்முடைய கருத்துகளைக் கலந்து எழுதுவார்கள்.

இதை உடைத்து எறிந்தது தினமலர். உடைத்ததும் இல்லாமல், தான் செய்தித் தாளாகத் தான் செயல் புரிவதாக விளம்பரமும் செய்து வருகிறது.

எனக்கு நினைவு தெரிந்து எங்கள் வீட்டில் வாங்கிய செய்தித்தாள் தினமலர்தான். தினத்தந்தி டீக்கடையில் படிக்கத்தான் சரி, தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்குவார்கள், தினமணி படிக்க முடியாதது, தினமலரில்தான் உள்ளூர் செய்திகள் நிறைய வரும். எங்கள் ஊரில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் இறந்து விட்டால் அன்னாருக்கு நினைவு அஞ்சலி கொடுக்க பயன்படும் பத்திரிகை தினமலர்தான்.

எங்க அம்மாவின் கருத்துப்படி, ஊரில என்ன நடக்கிறது யார் யார் போய் சேர்ந்த்துட்டா என்று தெரிந்து கொள்ள தினமலர்தான் சரி. இந்துப் பத்திரிகை வாங்கும் எங்க பக்கத்து வீடுகளில் எல்லாம் தினமலர் எங்கள் வீட்டிலிருந்து வாங்கிச் சென்று படிப்பார்கள்.

நான் தினமலர் படித்தது 1980- 90 ஆண்டுகளில்.

தினமலரில் கீழ்த்தரமான செய்தி வெளியீட்டின் முதல் உதாரணம் எனக்குப் பட்டது, 1987 வாக்கில். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிற்கும் நிழல் யுத்தம் நடந்து வந்தது. அரசு அனுப்பும் மசோதாக்களை அங்கீகரித்து அனுப்பாமல் காலம் தாழ்த்துவது, பிரதமரை அலட்சியம் செய்வது என்று குடியரசுத் தலைவர் பதட்டத்தை உருவாக்கி வந்தார். போபோர்சு விவகாரத்தில் ராஜீவும் கேள்விகளைச் சந்தித்து வந்தார்.

ஒரு நாள் காலையில் தினமலரின் முதன்மை தலைப்புச் செய்தி

பிரதமர் டிஸ்மிஸ

அது என்னவாம், பிஜி நாட்டில் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றி பிரதமரை பதவியிறக்கம் செய்து விட்டது. அதைத்தான் நமது செல்ல நாளிதழ் இப்படி தலைப்பு போட்டது. மலிவான உத்தி என்று அப்போதே எனக்குப் பட்டது.

எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி....?்?

"சன் டிவியைப் எதிர்த்து எழுதும் நீங்கள் நடுநிலையாளர் என்று காட்டிக் கொள்ளாதீர்கள். நான் அதிமுக ஆதரவாளன் என்று கட்சிக் கொடியை மேலே போட்டுக் கொண்டு வலைப்பூ எழுதுங்கள்" என்று ஒரு நண்பர் கேட்டுக் கொண்டார்.

என்னுடைய நோக்கில் திமுக, அதிமுக இரண்டுமே எரிகிற கொள்ளிகள்.

இரண்டில் எது தேறுமோ, எது குறைந்த சேதம் விளைவுக்குமோ அதற்கு வாய்ப்பளிப்பதுதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. 1996ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மாநிலமே திரண்டு திமுகவிற்கு ஆட்சிப் பொறுப்பை அளித்தது.

2004ல் இப்படியே விட்டால், இந்த அம்மா தன்னை அரசியாக முடிசூட்டிக் கொள்வார்கள் என்று 39 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர் மக்கள்.

2006 தேர்தலில் அப்படித் தலை போகும் பிரச்சனை என்ன?

ஊடகங்கள் என்ற கண்ணாடியின் மூலம்தான் மக்கள் உலகையும், சமூகத்தையும் பார்க்கிறார்கள். ஊடகத்துறை ஒரே கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், திரிக்கப்பட்ட கருத்துகளை அளிக்கும் வண்ணம் வளர்ந்து விட்டது, அவ்வாறு வளர அரசியல் கருவிகள் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்கிடமளிப்பது.

நிலைமை இன்னும் மோசமாகி விடாமல் தடுக்க, திமுகவுக்கு கூடுதல் அரசியல் பலம் கிடைக்காமல் இருப்பது நல்லது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, கூட்டணிக்கட்சிகளை பெரிதும் நம்பி ஆட்சி அமைக்கும் நிலை வருவது மாநிலத்துக்கு நல்லது.

ஆனால், தம்மை ஓரளவே சார்ந்திருக்கும் மத்திய அரசையே தமது குடும்ப தொழில் நன்மைக்கேற்ப வளைக்க முனையும் திமுக தலைமை, மாநில அரசு அதிகாரத்தைத் தனியாகவோ கூட்டாகவோ கைப்பற்றி விட்டால் இன்னும் தீவிரமாக தமது ஊடக ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனையும்.

ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.

திங்கள், ஏப்ரல் 24, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 8

ஒரு தமிழ் தொழில் நிறுவனம், வலிமை பெற்று தேசிய அளவில், உலக அளவில் பெரிதாகினால் நமக்கெல்லாம் பெருமைதானே. தனது சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தினால்தான் பிற இடங்களில் போக வலு கிடைக்கும். சன் டிவி, உலகைப் பிடிக்குமளவு வளரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கான எனது சில பரிந்துரைகள் (காசா பணமா, பரிந்துரைத்து வைப்போம்!)

1. தொலைக் காட்சியின் பெயரை சூரியன் தொலைக்காட்சி என்று மாற்றுகிறோம்.
2. நிறுவனத்தின் அலுவலகத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து, நடுநிலையான இடத்துக்கு மாற்றுகிறோம்.
3. திமுக சார்பு நிலையில் இருந்து வந்த எமது செய்தி அறிக்கைகள், செய்தி அலசல்கள் நடுநிலைக்கு மாறுகின்றன.
4. எமது நிறுவனத்தில் கட்சி சார்பாக இருப்பவர்கள், திமுக கட்சி சார்பில் தொடங்கப்படும் உதயசூரியன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாற ஊக்குவிக்கப்படுவார்கள்.
5. கேபிள் வினியோகம், மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒன்றற்கு ஒன்று தனித்து செயல்படுமாறு அமைப்புகளை ஏற்படுத்துகிறோம்.
6. உலகத் தரத்தில் இயல்பு மொழியில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோம்.
7. சுமங்கலி நிறுவனத்தில் புதிய ஓடைகளை சேர்ப்பதிலும், இருக்கும் ஓடைகளை வழங்குவதிலும், வெளிப்படையான ஒரு முறையைக் கடைபிடிப்போம்.

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 7

உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே.

இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிறது.

திருக்குறள் கதைகள் என்று ஒரு மெகாத் தொடர் ஆரம்பிக்கலாம். 1330 பகுதிகள் ஓட்டலாம். பழைய பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகளாக இல்லாமல் இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் எப்படி பொருந்துகிறது என்று திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தி தொடர் எடுத்து, வாழ்வியல் நூலான திருக்குறள் காட்டும் வழிக்கு ஒரு மறுமலர்ச்சி உருவாக்கலாம்.

ஐம்பெருங்காப்பியங்கள் என்று தமிழரின் வரலாறு பாடும் காப்பியங்களை ஒளிவடிவாக்கலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், வேட்டி/ஜிப்பா போட்ட தமிழ் "அறிஞர்களால்" மட்டுமே நினைக்கப்படாமல், கடைக்கோடித் தமிழனுக்கும் அவை கூறும் கருத்துக்கள் போய்ச் சேரச் செய்யலாம்.

இதையெல்லாம் செய்ய நிறைய செலவாகும், வணிக வெற்றி கிடைக்காது என்று முயற்சி கூடச் செய்ய மாட்டார்கள் இவர்கள். ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு இந்தப் பொறுப்பு கண்டிப்பாக உண்டு. வணிக வெற்றி இவர்கள் நினைத்தால் தானாகக் கிடைத்து விடும். "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திருக்குறளின் 1330 குறள்களும் காட்சி வடிவில்" என்ற கனைப்புடன் விளம்பரங்கள், சரியான நேர ஒளிபரப்பு, தரமான திரைக்கதை, உயர்தர படமாக்கம் என்று இருந்தால தமிழர்கள் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொள்ளவா போகிறார்கள்.

சரி தற்கால இலக்கியத்தை, வாழ்வியல் நூல்களை எடுத்துக் கொள்வோம். பாரதியின், பாரதி தாசனின் எத்தனை ஆக்கங்கள் சன் டிவியில் "சித்தி" போல திரை வடிவம் பெற வைக்க முடியும்.

இதை எல்லாம் செய்தால் தமிழின் பெருமை உலகெங்கும் பெருகும். எப்படி?

இனி ஒரு விதி செய்வோம்

பாரதி தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய போது இருந்ததை விட இப்போது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

700 ரூபாய்க்கு ஒருவர் என்ற விலையில் சாப்பிடும் உணவகங்களும் உள்ளன. அந்த எழுநூறு ரூபாயில் முழு மாதமும் குடும்பம் நடத்துபவரும் உள்ளனர். நியாயவிலைக் கடையில் விலை குறைவாக அரிசி விற்பது, முட்டாள்தனமான பொருளதாரக் கொள்கையாக இருக்கலாம். சத்துணவுத் திட்டம் பள்ளிக் கூடங்களை சாப்பாட்டுக் கூடங்களாக மாற்றி இருக்கலாம். கோயில்களில் அன்னதானம் சோம்பேறிகளை ஊக்குவிப்பதாக இருக்கலாம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரு சமூக பாதுகாப்பு வலை என்று வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும், குடும்பமும், வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டால், மதிப்புடன் பசியாற ஒரு இடம் இருக்க வேண்டும். நியாய விலையில் அரிசி கிடைக்காவிட்டால், நிச்சயமாக பட்டினி கிடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து விடும்.

ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானியங்களை எதிர்க்க முனையும் முன், நாம் இருக்கும் அறையை ஒரு முறை சுற்றிப் பார்க்க வேண்டும். கடந்த மூன்று வேளைகளில் நாம் சாப்பிட்ட உணவுகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் பெயரில் இருக்கும் சொத்துகளின் மதிப்புகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாளை முதல், சமையல் எரிவாயுவின் மான்யம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மிச்சமாகும் பணம் அரிசி மீதான மானியத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவித்தால், எத்தனை நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் போர்க் குரல் கொடுக்க ஆரம்பித்து விடும்? சமையல் எரிவாயுவுக்கு மாதம் 200 ரூபாய் அதிகமாக செலவழித்தால், பிட்சா ஹட் போகும் வாய்ப்பை இழந்து விடுவோமே!

அதே பணம், ஏழையின் பையில் மிச்சப்பட்டால், ஒரு வேளை இன்று உணவகத்தில் மேசை துடைக்கப் போகும் அந்த வீட்டுக் குழந்தை அடுத்த மாதம் முதல் பள்ளிக்குப் போக ஆரம்பித்து விடலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 23, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 4

இயந்திரம் சார்ந்த பொருளாதரத்துக்கு எதிரானது காந்தியம். கோடிக் கணக்கான மக்கள் வாழும் இந்தியப் பொருளாதாரத்தில் இயந்திரத்தால் மலிவாகச் செய்யப்படும் பொருட்கள் கிராமச் சமூகங்களை அழித்து, பல லட்ச மக்களை அடிமை ஊழியத்துக்கு செலுத்தி விடும் என்கிறார் காந்தியடிகள்.

பல் தேய்க்கும் பசையை எடுத்துக் கொள்வோம். பாரம்பரியமாக ஆல்/வேம்புக் குச்சிகளால் பல் துலக்கி வந்த நாம் இப்போது முற்றிலும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் சார்ந்த பொருட்களுக்கு மாறி விட்டோம். அதைத் தயாரித்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல் என்று மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிடுகின்றன.

தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆலங்குச்சி, வேப்பங்குச்சிகளைப் பண்படுத்தி, பொதி செய்து கவர்ச்சியாக சந்தைப்படுத்தும் முறையை நாம் உருவாக்கியிருந்தால் தொழில் நுட்ப முன்னேற்றத்தை நம் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவதோடு, நமக்கு பொருந்திய முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கலாம்.

அதே மாதிரி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்பொருளையும் ஆராய்ந்து பாருங்கள். மெக்டொனால்டு அல்லது பிட்சா ஹட் என்பது ஒரு கோட்பாடு. பாரம்பரிய உணவுப் பொருட்களை தரமாகச் சமைத்து வாடிக்கையாளருக்கு வசதியாக வீடு தேடி கொண்டு கொடுப்பது என்பது பரபரப்பான உலகில் சிலருக்குத் தேவைப்படலாம். அந்தக் கோட்பாட்டை மட்டுமில்லாமல், பாலாடைக் கட்டி நிறைந்த நம் தட்பவெப்பத்துக்கு முற்றிலும் பொருந்தாத மேற்கத்திய உணவையும், அந்தக் கோட்பாட்டோடு இறக்குமதி செய்துள்ளோம். நம் பாரம்பரிய உணவை பிட்சா ஹட் போல தயாரித்து வழங்கும் தொழில் நம் நாட்டுக்கு சரியான வளம் சேர்த்திருக்கும்.

காந்தியடிகள் கணினி மயமாக்குதலை ஆதரித்திருப்பாரா, எதிர்த்திருப்பாரா?

நம் நாட்டு பண்பாட்டை அழித்து விடும் எதையும் அவர் எதிர்த்திருக்கக் கூடும். அமெரிக்காவில் அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு புரியும்படியுமான உவமானத்தில் வடிவமைக்கப்பட்ட கணினி இடைமுகங்களை இங்கும் இறக்குமதி செய்து நமது தொண்டைகளுக்குள் திணித்துக் கொண்டுள்ளோம். மேசைத் தளம் என்றில்லாமல் நமக்கு அறிமுகமான ஒரு உவமானத்தின் அடிப்படையில் கணினிகள் உருவாக்கினால், நம் கிராமங்களிலும் மக்கள் வசதியாகப் பயன்படுத்தும் வண்ணம் கணினிகளை வடிவமைத்தால் அது உண்மையான முன்னேற்றம். நம்முடைய தனித்தன்மை எங்கே போயிற்று? நம்முடைய வளங்களை எல்லாம், வாரி வெளியே போட்டு விட்டு, அமெரிக்க கலாச்சாரத்தை டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானா?

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 6

இங்கு நாம் விவாதிப்பது எல்லாம், சன் டிவிக்கு மட்டுமில்லாமல், இயங்கு தள சந்தையில் ஏகபோகம் செலுத்தும் மைக்ரோசாப்டு, ரயில் போக்குவரத்தில் இந்தியன் ரயில்வே, பழைய தூர்தர்ஷன், பழைய தொலைதொடர்பு துறை, நமது மின் வினியோக துறை போன்ற பல ஏகபோக வலிமை பெற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும்.

தன்னுடைய குறுகிய கால லாபம், நலனை மட்டுமின்றி, பொறுப்புள்ள நிறுவனமாக செயல்பட்டால் என்ன நடக்க வேண்டும். முதலில் சுமங்கலி நிறுவனத்தில் செயல்பாடுகள் குழுமத்தின் பிற நிறுவனங்களிலிருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். எந்த ஓடைக்கு எந்த இடம், எந்தெந்த ஓடைகளுக்கு நல்ல இடம் என்பதெல்லாம், வெளிப்படையான, நியாயமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒரு மளிகைக் கடையில் எந்தப் பொருள்களை முன் காட்சிப்பகுதியில் வைக்கிறார்கள். பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தொலைக் காட்சி நிறுவனங்களைப் போல, மளிகைக் கடைகள் கேபிள் நிறுவனம் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சென்னை நகரம் முழுவதும் ஒரே விநியோக நிறுவனம், அதே குழுமத்தின் மற்றொரு நிறுவனம் சோப்புகளையும் தயாரிக்கிறது என்பது போன்றதுதான் சுமங்கலியும், சன் டிவியும். புதிதாக ஏதாவது சோப்பு சந்தைக்கு வந்தால் தன் சோப்பு விற்பனை பாதிக்கக் கூடாது என்று அதை கடைகளில் வைக்கவே மறுக்கவோ, அல்லது கடையின் ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு வைக்கவோ செய்தால் தானாகவே அந்த விநியோக நிறுவனத்தின் சோப்பு முதலிடத்தைப் பிடித்து விடும்.

இப்போது அந்த மாதிரி நிலை இல்லை. ஒரு கடைக்காரர் எந்த சோப்பை வாடிக்கையாளரின் கண்ணில் படுமாறு வைப்பார்?

புதிதாக வந்த தரமான சோப்பை ஒரு கடை விற்பனைக்கு வைக்க மறுத்து அடம் பிடித்தால், அவருக்குத்தான் இழப்பு.

மக்களிடையே பிரபலமான சோப்பை கடையில் எல்லோருக்கும் தெரியுமாறு வைப்பது, அதை வைத்து வாடிக்கையாளரை கடைக்குள் கவர்ந்த்து விடலாம் என்று. புதிதாக வந்த சோப்புக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் கூடுதல் சலுகைகள் கடைக்காரருக்கு கொடுத்தால், அது கூட முன்னிடத்தைப் பிடித்து விடலாம்.

தரமற்ற அல்லது மக்களிடையே பிரபலம் இல்லாத சோப்புகள் கடைகளை விட்டு ஓடி விடும். புதிதாக எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் தேவையான இடம் கிடைக்கும்.

சுமங்கலி நிறுவனம் சன் குழுமத்தின் கையில் இல்லாமல் இருந்தால் கிட்டத்தட்ட இதேமாதிரிதான் இருக்கும் தொலைக்காட்சி ஓடைகளும், புதிதாக வரக்கூடிய ஓடைகளும் பார்வையாளர்களின் கண்களுக்குப் போய் சேரும்.

இதே மாதிரியான ஒரு முறையைத்தான் கூகிள் நிறுவனம் அட்சென்சு எனப்படும் விளம்பரங்களை தேடல் முடிவுப் பக்கங்களில் காண்பிக்கும் சேவைக்குப் பயன்படுத்துகிறது. இணைய உலகில் விளம்பரச் சேவையில் புரட்சியையே நடத்தி விட்டது இந்த முறை.

சனி, ஏப்ரல் 22, 2006

திமுக ஆட்சி அமைத்தால / அதிமுக ஆட்சி அமைத்தால

திமுக ஆட்சி அமைத்தால்

நன்மைகள்
1. அதிகாரம் பரவலாக்கப்படும். முதலமைச்சருக்கு பயந்து நடுங்கிக் கொண்டு இல்லாமல் அமைச்சர்களும் மற்ற நிர்வாகிகளும் தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும்.
2. முதல்வர் பத்திரிகைகளும், தோழமைக் கட்சிகளும் எளிதில் அணுகும்படியாக இருப்பார்.
3. மத்திய அரசுடன் நல்லுறவு பேணப்பட்டு தமிழகத்துக்கான திட்டங்கள் சரிவர நிறைவேறும்.

தீமைகள்
1. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கழகங்களைப் பொறுத்தவரை அதிகாரம் == ஊழல். பரவலான அதிகாரம் என்பது பரவலான ஊழல் என்றே பொருள்படும்.
2. வட்டார குண்டர்களுக்கு மீண்டும் துளிர்த்து விடும்.
3. கருணாநிதியின் குடும்பத் தொழில்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகி விடும்.

அதிமுக ஆட்சி அமைத்தால்
நன்மைகள்
1. யாராயிருந்தாலும் (வீரப்பன், ஜெயேந்திரர், சரவணபவன் முதலாளி, எஸ் ஏ ராஜா, பேட்டை தாதாக்கள்) தப்பு செய்தால் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற ஒரு பயத்தால் கலவரங்கள், வன்முறைகள் தொடர்ந்து குறைவாக இருக்கும்.
2. உறுதியான தலைமையால் நிர்வாகத்தின் முடிவுகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு பலன்கள் கிடைக்கத் தொடங்கும். வட்டங்கள் மாவட்டங்களின் வால் ஆடுவது ஒரு அளவுக்குள்ளேயே இருக்கும்.
3. தேசிய அளவில் காங்கிரசு, பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தீமைகள்
1. அண்டை மாநில முதல்வர்களையும், மத்திய அரசையும், அமைச்சரவை சகாக்களையும், பத்திரிகைகளையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் தலைமையால், தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகள் சிக்கலாகிக் கொண்டே போகும்.
2. சசிகலா குடும்பத்தின் கெடுபிடிகள் மற்றும் சொத்துக் குவிப்புக்கு இன்னும் ஊக்கம் கிடைத்து விடும்.
3. பெரும்பான்மை மதவாத குழுக்களுக்கு புத்துயிர் வர வாய்ப்புகள் ஏற்படும்.

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும் - 3

பொறியியல் பட்டதாரிகள், ஆட்சிப்பிரிவு அதிகாரிகள், மேலாண்மை வல்லுநர்கள் இவர்களால் மட்டுமே நல்ல ஆட்சியைத் தந்து விட முடியுமா?

லோக் பரித்ரன் என்று தேர்தலில் போட்டியிடும் அமைப்பு அதுவே போதும் என்று நினைக்கிறது. அப்படி என்றால், இப்போதைய அரசு இயந்திரம், அரசியல்வாதிகளை நீக்கி விட்டு வேலை செய்தால் போதுமே!

அரசியல்வாதி என்பதுடன் ஒட்டியுள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு அரசியல் தலைவரின் பணி என்ன? திறமையான நிர்வாகம்? நிர்வாகம் செய்ய அதற்கென பயிற்சி எடுத்துள்ள அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கும் மேலே அவர்களையும் வேலை வாங்கும் ஒரு அரசியல் தலைவர் என்ன பங்களிக்கிறார்?

நான்கு வருடம் படித்தால் பொறியியல் பட்டம், ஐந்து வருடம் படித்தால் மருத்துவராக பணிபுரியலாம், ஆட்சிப்பிரிவு பயிற்சி பெற்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகலாம். மேலாண்மை பட்டம் பெற்றால பன்னாட்டு நிறுவன நிர்வாகி ஆகி விடலாம்.

அரசியல்வாதிக்கு மட்டும் ஏன் தகுதி எதுவும் விதிப்பதில்லை என்பது படித்தவர்கள் மத்தியில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒன்று. குற்றப்பத்திரிகையில் பெயர் வந்தவர்கள், பள்ளிக்கூடத்தினுள் காலெடுத்தே வைக்காதவர்கள் போன்ற அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாகி விட்டது என்று புலம்புகிறோம். உச்ச நீதி மன்றம் குற்றம் புரிந்தவர்களை தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தால் அதை வரவேற்று ஆரவாரம் செய்கிறோம். அதே சூட்டில், படிப்பு தகுதி இல்லாதவரையும் அரசியலில் நுழைய தடை விதிக்கவில்லை என்று கேள்வி எழத்தான் செய்கிறது.

சரி, பெரிய படிப்பு படித்து குற்றமே செய்யாத ஒருவர் சரியான தலைவராகி விட முடியுமா? காமராசர் எப்படித் தலைவர் ஆனார்?

இந்தியா முழுவதும் பயணம் செய்து முடித்த சிலரைப் பாருங்கள். விவேகானந்தர், காந்தியடிகள் போன்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைப் பார்த்து, அவர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டார்கள். ஒரு பிரச்சனை எழும்போது, அதற்கான தீர்வாக ஒரு முடிவு செய்யும் போது அத்தகைய தலைவரின் மனபிம்பத்தில் அந்த பிரயாணத்தின், மூலை முடுக்குகளில் எல்லாம் சந்தித்த மக்களின் வேறுபட்டகவலைகள் தோன்றி அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு உருவாகும்.

அரசியலில் நுழைய, தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் அமர விளையும் ஒவ்வொருவரும், குறைந்தது ஐந்து வருடங்களாவது முழு நேரமும் மக்களிடையே தொண்டு செய்திருக்க வேண்டும் என்று தகுதி வரைமுறை விதிக்கலாம். ஒரு தயாநிதி மாறனோ, அன்புமணி ராமதாஸோ தமது படித்த மூளையைப் பயன்படுத்தி குருட்டாம்போக்கில் பெரும்பான்மையினருக்கு நல்லது பயக்கும் முடிவுகளை எடுக்க முடியலாம். ஆனால், ஒரு கருணாநிதியோ, ஜெயலலிதாவோ ஏன் ஸ்டாலினோ புரிந்து கொள்ளும் அளவில் மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்குப் புரிய வழியே இல்லை.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூட ஆரம்ப காலங்களில் மக்களிடையே செலவிட்ட நேரத்தின் அடிப்படையில் இப்போது சமாளித்து வருகிறார்கள். அவர்களது பல முடிவுகள் அதிகாரிகளின் புத்திசாலித்தன முடிவுகளாகவே அமைந்து விடுகின்றனவே ஒழிய, ஒர் அரசியல்வாதியின் முத்திரை அதில் காணாமல் போய் விடுகிறது. படித்த நடுத்தர வர்க்கம் அத்தகைய ஆட்சியைப் போற்றிப் புகழ்ந்தாலும், பெரும்பான்மை மக்களுக்கு அது போய்ச் சேராமல் போய் விடுகிறது.

மன்மோகன்சிங் ஆட்சி இதே காரணத்துக்காக இப்படி உப்பு சப்பில்லாமல்தான் இருக்கப் போகிறது. பெரிய பெரிய ஆட்சிப்பணி அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட அரசியல்வாதியின் உத்தரவுக்கு கட்டுப்படுமாறு நமது அரசியலமைப்பு இருப்பது காரணத்தோடுதான்.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 3

முசுலீம்கள், தலித்துகள், இந்துக்கள், பொதுவுடமைக் கட்சியினர் ஏன் காங்கிரசு கட்சியினர் கூட காந்தியை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். இந்தியாவுக்கு மக்களாட்சி முறையின் விதையை ஊன்றி அந்தப் பண்பாட்டை அரசியல் கலாச்சாரத்தில் வளர்த்த பெருமை காந்தியையே சேரும்.

அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு தன் மனதுக்குப்பட்டவற்றை பிற தலைவர்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்திருக்க முடியும். சாதி சம்பந்தமாக அம்பேத்கார் எழுதிய ஒரு மடலில், சாதி ஒழிந்தால்தான் அதன் பேரில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்று உறுதிபட குறிப்பிடுகிறார். அதற்கான பதிலில், தான் அம்பேத்காரின் கருத்தைப் புரிந்து கொள்வதாகவும், அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதின் நியாயத்தை ஒத்துக் கொள்வதாகவும், ஆனால் அதனுடன் மாறுபடுவதாகவும் காந்தி எழுதுகிறார். சாதியை ஒழிக்க முனையாமல், அந்த முறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அழித்து விட போராட வேண்டும் என்று, அந்த ஏற்றத் தாழ்வுகள் அழிந்த பிறகு, சாதிமுறை நமக்கு குறைபட்டதாகத் தெரிந்தால் அதையும் ஒழிப்பதைப் பற்றி சிந்த்திக்கலாம் என்பதுதான் தனது கொள்கை என்று எழுதுகிறார்.

இதற்கு தொடர்புடைய ஒரு செய்தி. போரூரில் ஒரு தட்டி வைத்துள்ளார்கள், அதில் அம்பேத்காரின் ஒரு மேற்கோள் எழுதப்பட்டுள்ளது.

"சாதிதான் சமூகம் என்றால், காற்றில் விஷ விதைகள் பரவட்டும்"

இது காந்தியின் கொள்கைக்கு அம்பேத்காரின் பதிலடியாக இருக்குமோ?

வெள்ளி, ஏப்ரல் 21, 2006

தமிழகத் தேர்தல்கள் - 2

அற்பனுக்கு வாழ்வு வந்த கதையாக தன்னை முடிசூட்டப்பட்ட அரசியாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய ஆசைகளை எல்லாம் பதவியைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முனைய அதிமுக ஆட்சி மாநில மக்களின் வெறுப்பை ஈட்டிக் கொண்டது. மகாமகத்தில் குளிக்கப் போனதிலிருந்து, சென்னை நகர சாலைகளின் போக்குவரத்தை முடக்கி வைப்பது, வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் நடத்துவது, நிலங்களை வாங்கிக் குவிப்பது என்று போட்ட ஆட்டம், அடுத்த தேர்தலில் தமிழகமே ஜெயலலிதாவுக்கு எதிராக திரண்டது. திமுக அதன் பலனை அறுவடை செய்து ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தல் நடந்த சமயம் நான் வேலை முன்னிட்டு இந்தூரில், தங்கியிருந்தேன். தமிழகத்தைப் பார்த்து அந்த ஊர் ஆட்கள் எல்லாம் சிரித்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு, ஐக்கிய முன்னணி அரசு, மீண்டும் பாஜக அரசு என்று அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி ஆதரிக்கும் மத்திய அரசுகள் அமந்தன.

பாஜக என்ற நச்சு சக்திக்கு தமிழகத்தில் முதலில் காலூன்ற வழி செய்த இழி பெருமையை ஈட்டிக் கொண்ட ஜெயலலிதாவின் அடியொற்றி, திமுகவும் தமது பதவி ஆசைக்கு, தனது கொள்கைகள் என்று அது வரை சொல்லி வந்ததற்கு முற்றிலும் எதிரான பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.

தனது ஐந்தாண்டு ஆட்சி சாதனைகளை முன் வைத்து சாதிக் கட்சிகளின் கூட்டணியுடன், மதக் கட்சியையும் மடியில் கட்டிக் கொண்டு நின்ற திமுக அடுத்த தேர்தலில் தோற்றுப் போனது வருத்தமானது என்றாலும், பாஜக கூட்டுக்கு சரியான தண்டனை என்று நினைத்துக் கொண்டேன்.

ஆணவத்துடன் பாஜகவை மட்டும் கூட்டாகக் கொண்டு தேர்தலை எதிர் கொண்ட ஜெயலலிதா கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.

இந்தத் தேர்தலில் மாநிலத்தை எதிர்கொள்ளும் உடனடி ஆபத்து கருணாநிதி குடும்பம் நடத்தி வரும் நெறிபிறழ்ந்த தொழில்களும், அதற்கு கூச்சமில்லாமல் துணை போகும் அந்தக் கட்சியின் அதிகார மையங்களும்தான். ஐந்து வருடங்கள் அவர்கள் கையில் மாநில நிர்வாகமும் போய் விட்டால், பல துறைகளில் நடக்கப்போகும் ஊறுகள் அடுத்த பத்து ஆண்டுகளில் கூட சரி செய்ய முடியாததாகப் போய் விடும்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தனக்கு அளிக்கப்பட்ட துணி துறை இணை அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய சகோதரர் குடும்பம், சம்பந்த்தப்பட துறையில் தொழில் செய்வதால் மறுத்து விட்டாராம் இன்றைய நிதிஅமைச்சர் ப சிதம்பரம். அந்த அரசியல் நேர்மை எங்கே, தமது தொழிலுக்கு சாதகமான துறைகளை மிரட்டிப் பெற்றுக் கொண்டுள்ள திமுக தலைவர் எங்கே?

என்னுடைய விருப்பம் என்னவென்றால் முடிவுகள் கீழ் வருமாறு அமைய வேண்டும்:

திமுக : 80
அதிமுக : 80
(நடுநிலைமை :-)
தேமுதிக : 50
மதிமுக : 10
காங்கிரசு : 10
பாமக : 5 (தமிழ் நாட்டின் சிவசேனா இவர்கள்)

தேமுதிகவை நம்பி கூட்டணி அரசு அமைய வேண்டும். கேட்பாரில்லாமல் ஆடும் இந்தத் தலைகளுக்கு கேள்வி கேட்க ஒரு கூட்டம் வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 2

அந்த இனிப்பு விவகாரத்துக்கு வருவோம். இனிப்பு என்பது ஒரு சுட்டிதான். அடிப்படைத் தேவைகளுக்கு அல்லது தனது பணிக்குத் தேவையானவற்றைத் தவிர்த்து அதிகமாக புணர்வது எதுவுமே திருட்டுதான்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பணக்கார குழந்தைக்கு அதன் பெற்றோர் பெருமளவில் விலை உயர்ந்த பொம்மைகளை வாங்கிக் குவித்தால், நாட்டின் இன்னொரு பகுதியில் பல ஏழை குழந்தைகள் பொம்மை கிடைக்காமல் இருக்க நேரிடும்.

இதை விளக்க சில அனுமானங்களை செய்து கொள்ளலாம். சில உண்மைகளையும் மனதில் கொள்ளுவோம்.

பொருளாதார உண்மை : இந்த உலகின் வளங்கள் அளவுக்கு அடங்கியவை. எந்த வளத்தையும் ஒரு வகையில் பயன்படுத்தி விட்டால் பிற பயன்பாடுகளுக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது.

அனுமானம் : உலகில் பொம்மைகள் செய்வதற்கான தொழில்களும், பொம்மைகளைவாங்கி விளையாடும் குழந்தைகளும் தமக்கு முற்றிலும் மன நிறைவு கிடைக்கும் நிலையில் உள்ளனர். பத்து ரூபாய்க்கு ஒரு பொம்மை என்ற விலையில் நாட்டில் எல்ல குழந்தைகளுக்கும் ஒரு பொம்மை விளையாடக் கிடைக்கிறது, பொம்மை செய்யும் வியாபாரிகளுக்கும் நியாயமான லாபம் கிடைக்கிறது. ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளும் ஒரே அளவில் பொம்மை வைத்து விளையாடி மகிழ்ச்சியாக உள்ளனர்.

இப்போது ஒரு பணக்காரத் தந்தை தன் குழந்தைக்கு அதிக எண்ணிக்கையிலோ உயர்ந்த தரத்திலோ பொம்மை கொடுக்க வேண்டும் என்று முனைகிறார். அவ்வாறு கிடைக்க ஒரு வழி, ஏற்கனவே தகுதர பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியை அணுகி அதிக பணம் கொடுத்து கூடுதல் பொம்மைகளைத் தனக்கு விற்க தூண்டுதல். வியாபாரிக்கு மகிழ்ச்சிதான், அதிக விலைக்கு கூடுதல் பொம்மைகளை விற்று விடுகிறார்.

இப்போது பத்து ரூபாய்க்கு பொம்மை வாங்க வரும் ஒரு தந்தைக்கு பொம்மை இல்லை. அதை சமாளிக்க, பொம்மைகளின் விலை சற்றே உயர்ந்து விடுகிறது. பத்து ரூபாய்க்கு வாங்கி விட முடியும் பதினொன்று ரூபாய் மிக அதிகம் என்ற குடும்பங்களின் குழந்தைகளுக்கு பொம்மை இல்லாமல் போய் விடும்.

இது இத்தோடு முடிந்து விடவில்லை. வியாபாரியின் கையில் கூடுதல் லாபம். அதை இன்னும் அதிகரிக்க என்ன வழி என்று பார்க்கிறார். பணக்காரர், கூடுதல் கூறுகள் சேர்க்கப்பட்ட பொம்மையை இன்னும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார் என்று ஊகித்துக் கொண்டு, தகுதர பொம்மைகளின் உற்பத்தியைக் குறைத்து விட்டு, புதிய ரக உயர் விலை பொம்மைகளை செய்கிறார். தகுதர பொம்மைகளின் எண்ணிக்கைகள் குறைய, விலை இன்னும் ஏறுகிறது. இன்னும் பல குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் அடைவது நின்று விடுகிறது.

போட்டியாளர்களின் பொம்மைகளிலிருந்து தன்னுடையதை வேறுபடுத்தி அதிக விலை ஈட்ட, விளம்பரங்கள் வர ஆரம்பிக்கன்றன. பளபளக்கும் பொதிகளில் பொம்மைகள் கடைகளுக்கு வந்து சேருகின்றன. இப்படி ஒவ்வொரு வகையிலும், கூடும் செலவினங்கள், பத்து ரூபாய் பொம்மைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விலையைக் கூட்டிக் கொண்டே வருகின்றன.

இதுதான் சந்தை பொருளாதாரத்தின் இயங்கு முறை. இதை ஒவ்வொருவரின் மன ஆசைக்கு விட்டு விடுவது, முதலாளித்துவம். அரசே வினியோகம் செய்வது பொதுவுடமை தத்துவம். ஒவ்வொருவரும் சுயமாக தேவையற்றவற்றைத் துறந்து விடுவது காந்தியம்.

வினோபாவின் பூதானத் திட்டம் இந்த அடிப்படையில் பிறந்தது. காந்தியடிகளின் செல்வப்பாதுப்பாளர் தத்துவம் இதைத்தான் வலியுறுத்துகிறது. சந்தைப் பொருளாதரத்தின் குறைபாடுகளால் செல்வம் ஒரு இடத்தில் குவிந்து விடுவது இயற்கைதான். அதை தன் மனம் போல ஆளாமல் சமூகத்தின் சொத்து தமது பாதுகாப்பில் வந்து சேர்ந்துள்ளது என்ற பொறுப்போடு பயன்படுத்துவது காந்தியம் போதிக்கும் வழி முறை.

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 5

ஒரு தொழில் நிறுவனத்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது, போட்டிதான். சந்தையில் தனக்குரிய இடத்தைப் பிடிக்க தக்க வைத்துக் கொள்ள பிற போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், புதிய பொருட்கள் என்ன வெளி வருகின்றன, போட்டியாளர் பொருட்களில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்று துடிப்புடன் இருக்கும் நிறுவனம், தன் சேவைகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஒரே நிறுவனமாக சந்தையில் இருந்தால் இந்த வாய்ப்பு தொலைந்து போகிறது. புதிய கண்டுபிடிப்புகள், மேம்பாடுகளுக்கு, நிறுவனத்தின் ஊழியர்களையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஊழியர்களுக்கு அத்தகைய ஊக்கத்தை அளித்து அவர்களது ஆர்வத்தைப் பேணுவதிலும் சிரமம் இருக்கும். புதிதாக மேம்பாடுகள் எதையும் அளிக்காத நிறுவனத்தைப் பார்த்து நுகர்வோரும் அதிருப்தி அடையத் தொடங்குவார்கள்.

பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சேவைகளை அளிக்க, பொருளின் தொழில் நுட்பச் சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகும். வெளிப்படையான சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு நுகர்வோருக்கு சேவை அளிக்க முடியும். இங்கு எல்லா சுமையும் ஒரே நிறுவனத்தின் கையில்.

அந்த நிறுவனமே போட்டி பிரிவுகளாக பிரித்து பல தரப்பட்ட பொருள்/சேவைகளை அளிக்கலாம். ஆனால், எந்த அளவுக்கு பிரிப்பது என்ற முடிவு எளிதானது அல்ல.

சன் குழுமத்தைப் பொறுத்த வரை ஏகபோக ஆதிக்கம் இருப்பது, தொலைக்காட்சி சேவை வினியோகம் செய்யும் கேபிள் சேவையில்தான். அதைப் பயன்படுத்தி ஒளிபரப்புத் துறையில் தம்முடைய ஓடைகளை மட்டும் வளர்க்க முனைகின்றனர். புதியதாக வருபவர்களையும், வர நினைப்பவர்களையும், முதலீடு செய்ய பெரிதும் தயங்க வைத்து விடுகிறது சுமங்கலி நிறுவனத்தின் ஆதிக்கம்.

இதனால் ஒளிபரப்பு சந்தையிலும் முழு ஆதிக்கம் இல்லாவிட்டாலும், பேராதிக்கம் செலுத்தி வரும் சன் குழுமத்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தேக்கத்தை அடைந்து விட்டன.

நான் பொழுதுபோக்கு ஓடைகளை அதிகம் பார்ப்பதில்லை. செய்தி ஓடையைப் பொறுத்த வரை, என்டிடிவியில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் நம்ம ஊர் செய்தி ஓடைகளில் ஏன் நடப்பதில்லை? என்டிடிவியின் தி பிக் ஃபைட், வி த பீப்பிள் போன்ற மேடைகள் சன் நியூஸிலோ ஜெயா டிவியிலோ எப்போதும் பார்க்க முடியப் போவதில்லை. அரசு முன் வந்து கேபிள் விநியோகத்தை நெறிப்படுத்தினால் புதிய நடுநிலை ஓடைகள் இந்த வெளியை நிரப்ப முடியும்.

கிரிக்கெட் ஒளிபரப்பைப் பார்க்கலாம். தமிழ் நாட்டில் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்துக்கு, உரிமையைப் பெற்ற விளையாட்டு ஓடையுடன் ஒப்பந்தம் செய்து தமிழில் வர்ணனையோடு ஒளிபரப்பு செய்ய ஒரு ஓடை முன்வரலாம். இது ஒரு உதாரணம்தான். இதைப் போல பல புதிய முயற்சிகளை தொழில் முனைவர்கள் எடுக்க சுமங்கலி என்ற தடைக் கல் காரணமாக உள்ளது.

தமிழகத் தேர்தல்கள் - 1

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல, 1977ல் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்த தேர்தல். மருங்கூர் என்ற ஊரில் எங்கள் தாத்தா வீட்டில் வளர்ந்த்து வந்த எனக்கு ஒரு காட்சி நினைவு இருக்கிறது.

தினமும் மாலை இருள் படர்ந்து சற்று நேரத்தில் எங்கள் தெருவின் மறு மூலையில் ஒரு கூட்டம் தீப்பந்தங்களுடன், உரக்க முழக்கம் எழுப்பியபடி ஒரு கூட்டம் தெரியும். பத்து பதினைந்து நிமிடங்களில் எங்கள் வீட்டுக்கு முன் வந்து சேர்ந்து விடும் அந்த கூட்டத்தில் எல்லாமே இளவட்டங்கள். "அத்த ரெட்ட இலக்கு ஓட்டுப் போட்டுடுங்க", "ஆச்சி ரெட்ட இலய மறந்திராதீங்க" என்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பெண்மணியும் உறவு கொண்டாடும் அளவுக்கு நெருக்கமான இளைஞர்கள்களின் கூட்டம் அது.

அந்தத் தேர்தலின் முடிவுகள் வரும்போது, நாகர்கோவிலில் எங்கள் வீட்டில் நடந்தது இது:
"தமிழ்நாட்டு முதலமைச்சர் யாருன்னு ஸ்கூல்ல கேள்வி வந்தா என்ன எழுதுவே" - அப்பா அண்ணனிடம்.
"எம்ஜிஆர்" புத்திசாலித்தனமாக பதில் அளித்து விட்ட திருப்தியுடன், அண்ணன்.
"ஏய் அப்படி எல்லாம் எழுதி விடாதே, ஏதோ நடிகன் பெயரை எழுதி விட்டேன்னு சொல்லிடுவாங்க. எம் ஜி ராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்." நடிகர் முதல்வராகி விட்ட வியப்பும், ஓரளவு திருப்தியும் நிலவியதாக நினைவு.

அடுத்த தேர்தல்1980 நாடாளுமன்ற தேர்தல். ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர் கட்சியை இரண்டே இரண்டு இடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் திமுக-காங்கிரசு கூட்டணி தோற்கடித்து வெற்றி வாகை சூடிய தேர்தல் அது. "இந்திராகாந்தி வந்தால் வெலவாசி எல்லாம் குறஞ்சிடும்" இரண்டரை வருடம் முன்பும் இப்போதும் என்று அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் என்ற மளிகைச்சாமான்களின் ஒப்பீடு விலைப்பட்டியல் வினியோகிக்கப்பட்டது. "தாய்க்குலமே ஏமாத்திட்டயே" என்று எம்ஜிஆர் கதறி இருப்பார் என்றார் எங்கள் அப்பா.

நாங்கள் எல்லாரும் ஜனதா கட்சி அனுதாபிகள். மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்ற காரணத்தைக் காட்டி எம்ஜிஆரின் இரண்டரை வருட ஆட்சியைக் கலைத்தது புதிதாக அமைந்த மத்திய காங்கிரசு அரசு. திமுகவும் காங்கிரசும் ஆளுக்கு 117 இடங்களில் வெற்றி பெற்றால், கருணாநிதிதான் முதல்வர் என்ற ஒப்பந்தத்துடன் போட்டியிட்டன.

எம்ஜிஆர் தன்னுடைய வழக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்றார். "அநியாயமா கலச்சுப் போட்டாங்களே" என்ற பரிவுடன், பெரு வெற்றியைக் கொடுத்தனர் மக்கள். கருணாநிதியை முதல்வர் என்று அறிவித்ததால்தான் கூட்டணி தோற்றது என்று குற்றம் சாட்டியது காங்கிரசு. சில நாட்களிலேயே கூட்டணி முறிந்தது.

அடுத்த தேர்தல் 1985ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, எம்ஜிஆர் உடல் நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்த போது நடந்தது. இதற்குள் அதிமுக, காங்கிரசு கூட்டணி ஏற்பட்டு விட்டிருந்தது. எம்ஜிஆர் வாய்ப்பாடு எனப்படும், நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசு/அதிமுக 2:1 என்ற விகிதத்திலும், சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் போட்டியிட்டன.

"இந்த அமைச்சர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்து விடாதீர்கள். எம்ஜிஆர் திரும்பி வந்தால் நான் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்து விடுகிறேன்."
"பத்து ஆண்டு தண்டனை போதாதா"
என்றெல்லாம் கருணாநிதியின் ஆதங்கள் வெளிப்பட்ட தேர்தல் இது. மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன. சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரசு அங்கீகரிக்கப்பட்டது. கருணாநிதி மேலவையில் எதிர்க்கட்சி தலைவராயிருந்தார். திமுக மேலவையில் வைத்திருந்த செல்வாக்கைப் பொறுக்க முடியாமல், அந்த அவையையே ஒழித்து விட்டார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டு, காங்கிரசும் தனியாகப் போட்டியிட நான்கு முனை தேர்தல் நடந்தது 1989ல். நான் ஆதரித்த ஜானகி அணி ஒரே ஒரு இடத்தைத் தவிர எல்லா இடங்களிலும் மண்ணைக் கவ்வி ஜெ அணியுடன் ஐக்கியமாகி விட்டது.

இரண்டுபட்ட ஊரில் கொண்டாடும் விதமாக, திமுக ஆட்சி பீடத்தில் ஏறியது. புதிய அதிமுகவும், மத்தியில் ஆட்சியை இழந்து விட்ட காங்கிரசும் கை கோர்த்துக் கொண்டன. கலைஞர் ஆட்சியை ஆளுநர் பரிந்துரை இல்லாமலே கலைத்து, மத்தியில் சந்திரசேகரின் அற்பாயுசு ஆட்சியை தள்ளி விட்டு, இன்னும் ஒரு முறை சட்ட மன்ற / நாடாளுமன்ற தேர்தல் சேர்ந்து நடந்தது.

தாம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் காலையில் பால் போட வந்த பால்காரர், ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்று விட்டார்களாம் என்று கூறிச் சென்றார். திமுகவின் பிரச்சார கொடிகள், சொத்துகள் காங்கிரசு குண்டர்களால் சூறையாடப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட, அதிமுக/காங்கிரசு கூட்டணி மாநிலத்திலும், காங்கிரசு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தன.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 1

"இந்தியா போன்ற ஏழைகள் நிறைந்த நாட்டில் இனிப்புப் பண்டங்களையும் சுவைக்காக மட்டுமான பொருட்களையும் உண்பது திருடுவதற்குச் சமமாகும்". - காந்தி

நான் சம்பாதித்த காசு, எனக்குப் பிடித்த இனிப்பு, இதை சாப்பிட்டால் என்ன ஆகி விடும்? சம்பாதித்ததையெல்லாம் தானம் செய்து விட வேண்டுமா என்ன? இதெல்லாம் நடக்க கூடிய ஒன்றா? அந்தப் பைத்தியக் கார கிழவர் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க ஆரம்பித்தால் எல்லோரும் கிராமங்களில் போய் மாட்டு வண்டியில் போய்க் கொண்டியிருக்க வேண்டியதுதான். நடக்கிற விஷயத்தைப் பார்ப்போம்.

காந்தியின் கனவுகள், பொருளாதாரக் கொள்கைகளை அவருடன் சேர்த்தே எரித்து சாம்பலை கடலில் கரைத்து விட்ட நமக்கு இன்று காந்தியின் பெயரைத் தாக்குவது, அவரது எண்ணங்களை எள்ளி நகையாடுவது, அவரின் தலைமையை குறை கூறுவது எல்லாமே ஒரு மதிப்புச் சின்னமாகி விட்டன.

முப்பது கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அந்த அரை நிர்வாண பக்கிரியின் கொள்கைகள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் செல்லுபடியாகுமா?

உலகெங்கும் உள்ள மக்களுக்கு, தூய குடிநீர், சுகாதாரமான உணவு, தரமான கல்வி சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சாத்தியமாகுமா?

"ஏழைகள் ஏழைகளாக இருப்பது அவர்களின் தலை எழுத்து" என்று ஒதுக்கித் தள்ளும் இந்து மதம், "சாமர்த்தியமிருந்தால் முன்னேறி வரட்டுமே" என்று சவால் விடும் மேற்கத்திய நாகரீகம், "எம்முடைய வழியே சரியான வழி, உலகின் எல்லா நாடுகளும் எம் வழிக்கு வந்து விடுங்கள்" என்று அறை கூவும் அமெரிக்க ஆணவம், "கொலை செய்து சொர்க்கம்" என்று மூளைச் சலவைச் செய்யப்பட்ட இளம் தீவிரவாதிகள் என்று மனித குலம் சந்திக்கும் சவாலுக்கெல்லாம் விடையாக காந்தி என்ன செய்திருப்பார்?

எம்ஜிஆர் - 2

எம்ஜிஆர் செய்த இன்னொரு நல்ல முடிவு தொழில்கல்வி சேர்க்கைக்கு நேர்முக முறையை ஒழித்து நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்றிருந்த நிலை மாறி, மாநிலத்தின் எந்த மூலையிருந்தும் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்குரிய இடம், வெளிப்படையான முறையில் கிடைக்க வழி வகுத்தது நுழைவுத் தேர்வு முறை.

இதை எல்லாம் செய்த பிறகு பார்த்தால் தொழில் கல்விக்கான இடங்களுக்குப் போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகி விட்டது. சமூக வாய்ப்புகளில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு முறை தந்தக் கோபுரங்களின் கதவுகளை அவர்களுக்கும் திறக்க முன் வந்த போது, அதுவரை நமக்கெல்லாம் எங்கே இடம் கிடைக்கப் போகிறது என்று இருந்து விட்ட பெருவாரியான மாணவர் கூட்டம், புதிய நம்பிக்கையில் தொழிற்கல்விக் கூடங்களினுள் நுழைய முற்பட்டனர்.

இதற்கான விடைதான் தனியார் பொறியியல் கல்லூரிகள். அவற்றை ஆரம்பித்து வைத்த பெருமையும் எம்ஜிஆரைத்தான் சேரும். பணம் பண்ணும் தொழிற்கூடங்களாக மாறி விட்டதாக பழிக்கப்படுபவையாக பல கல்லூரிகள் இருந்தாலும், பல தரமான கல்வியை பரவலாக கிடைக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளன. அப்படி உருவாக்கப்பட்ட இளம் பொறியாளர் படைதான், மாநிலத்தின் தகவல் தொடர்பு துறை வளத்துக்கு வழி வகுக்கிறார்கள்.

எம்ஜிஆர் ஒரு கோமாளி, சினிமா நடிகர், அவருக்குப் பொருளாதாரம் தெரியாது, அவருக்கு நிர்வாகம் புரியாது, என்றெல்லாம் கூறப்படுவதில் பெருமளவு உண்மை இருக்கலாம். ஒரு தலைவர் பல்துறை வல்லுநராக இருக்க வேண்டியது தேவையில்லை. தன்னை நம்பி அதிகாரத்தைக் கொடுத்த மக்கள் கூட்டத்தில் மிக நலிந்த மனிதனையும் வாழ வைக்க வேண்டும் என்ற பெருங்கருணை உள்ளம்தான் தலைவரை உருவாக்குகிறது.

எம்ஜிஆருக்கு அந்த கருணை உள்ளம் இருந்தது என்று நான் நினைக்கிறேன். பெண்களும், வறியவர்களும் படும் பாடுகளை உணர்ந்து அதைத் தீர்க்க தேவையான எல்லாம் செய்ய முனைந்தார் அவர். நியாய விலை அரிசிக்காகவே மத்திய அரசுகளுடன் (முதலில் ஜனதா அரசு, பிறகு காங்கிரசு அரசு) நல்லுறவை வலிய ஏற்படுத்திக் கொண்டார் என்று கூட கூறலாம்.

மக்களுக்கு இலவசத் திட்டங்களை அறிவித்து அவர்களை சோம்பேறி ஆக்கி விட்டார் என்பது இன்னொரு குறைபாடு.

இருவர் படத்தில் ஒரு காட்சி. படத்தில் முதல்வராக வரும் பாத்திரம் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மேடை ஏறும் முன்பு அவரது அமைச்சரவை சகா ஒருவர், "உங்க பேரச் சொல்லி கொள்ள அடிக்கிறாங்க, ஊழல் மலிந்து விட்டது, மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள்" என்று கூற முதல்வர் எதுவும் பதில் கூறாமல் மேடை ஏறி விடுவார். அடுத்தக் காட்சியில், முதல்வர் தனது உரையில் "அடுத்த மாதம் முதல் எல்லா முதியோருக்கும் வேட்டி சேலை வழங்கப்படும்" என்று அறிவிப்பதாகக் காட்டுவார் மணிரத்தினம்.

இந்தக் காட்சி எம்ஜிஆரின் ஆட்சி பாணியை படம் பிடித்துக் காட்டி விட்டது.

1980ல் திமுக, காங்கிரசு கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 38/40 தொகுதிகளை வென்ற பின்னர், அதே கூட்டணியுடன் எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்து நடத்திய தேர்தலில், தனிப் பெரும்பான்மை வெற்றி பெற்றார் எம்ஜிஆர். தம் மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், எதிர்க் கட்சியின் ஆதரவுகளை வெட்டி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு சாகும் வரை நல்லுறவைப் பேணி தமிழகத்தின் நலன்களை பாதுகாத்துக் கொண்டார்.

அவர் பெயர் சொல்லி தன்னை வளர்த்துக் கொண்டு, அவர் அமைத்த கட்சியின் பெயரில் வாக்குகள் திரட்டி ஆட்சியில் அமர்ந்த அம்மையார், தன்னுடைய அகங்காராத்தாலும், தன் மூப்பாலும் மத்திய அரசையும், பக்கத்து மாநிலங்களையும் பகைத்துக் கொண்டு மாநில நலன்களை தமது ஆணவத்தீயில் இரையாக்கி வருகிறார்.

வியாழன், ஏப்ரல் 20, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள - 4்

ஒரு நிறுவனம் ஏகபோக நிலையை அடைந்த பிறகு என்னவெல்லாம் நடக்கலாம்? திறமையாக நிர்வகிக்கப்பட்டு வரும் அத்தகைய நிறுவனம் நிரந்தரமாக நினைத்ததையெல்லாம் செய்து கொள்ளலாம் என்ற முக்தி நிலையை அடைந்து விடுகிறதா என்ன?

இல்லை. ஏகபோக சந்தையில் இயங்கும் நிறுவனத்தின் பலத்தை மட்டுப்படுத்த பல காரணிகள் உள்ளன. அவற்றில் பல, ஆண்டுகள் ஓடிய பிறகே தமது வேலையைக் காட்ட முடியும். சில உடனேயே இயங்க முடியும்.

அரசன் அன்று கொல்வான் என அரசாங்கத்தின் முறைப்படுத்தும் நடவடிக்கைதான் உடனடி பரிகாரம். ஏற்கனவே சொன்னது போல பல நாடுகளில் இதற்கான சட்டங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட போட்டியாளர் நிறுவனமோ, வாடிக்கையாளர்களோ, கொடுக்கும் புகாரின் அடிப்படையில் விசாரணை துவக்கி பாதிப்பை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களை அரசுக் குழு பரிந்துரைக்கும். நிறுவனத்தை இரண்டாக பிரிக்க உத்தரவிடுவதிலிருந்து, கடுமையான
அபராதம் விதிப்பது, நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, போட்டியாளர்களின் தொழிலை வளராவிடா வண்ணம் செய்யத் தடை விதிப்பது என்று இந்த பரிகாரங்கள் பல உருவில் வரலாம்.

நம்மத் தொலைக்காட்சி குழுமத்தின் விஷயத்தில் அரசு செயல்படத் தவறி விட்டது. அது ஆதரவுக் கட்சி மத்திய அரசில் பங்கு வகிப்பதாலா அல்லது வேறு ஏதாவது பொருளாதாரக் கொள்கை முடிவாலா என்பது நமக்குத் தெரியப் போவதில்லை.

இது மாதிரி அரசுக் கட்டுப்பாடுகளை தீவிரமாக எதிர்க்கும் பொருளாதார வல்லுநர்களும் இருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் பார்த்தால், எந்த ஏகபோக வலிமையும் நிரந்தரமாக நீடிக்கப் போவதில்லை, அடிப்படை பொருளாதார தொழில் சக்திகள் அதைக் கவனித்துக் கொள்ளும் என்பது அவர்களது வாதம்.

அப்படி என்ன சக்திகள்?

அப்படி என்ன சக்திகள் ஏகபோக வலிமையை எதிர்த்து செயல்படும்?

பாதிக்கப்பட்ட போட்டியாளர்களின், வாடிக்கையாளர்களின் வெறுப்பும், விரோதமும் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மற்ற எல்லா கோணங்களிலும் எதிர்க்க அவர்களை தூண்டி விடும். அரசால் நடத்தப்பட்ட தொலை தொடர்பு சேவைகள், தூர்தர்ஷன் என்ற பெயரில் வழங்கப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இவை போட்டிருந்த தளைகள் முதல் வாய்ப்பில் (செயற்கைக் கோள் ஒளிபரப்பு வாய்ப்பு) உடைத்தெறியப்பட்டன. வாடிக்கையாளர்கள் வெறியுடன் முன்னாள் ஏகபோக நிறுவனத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள்.

இப்போது கூட, பல பத்திரிகைகளின் திமுக எதிர்ப்பு நிலை, சன் குழுமத்தின் ஆதிக்கத்துக்கு எதிரான அவற்றின் எதிரடிதான் என்று சிலர் சொல்கிறார்கள்.

இரண்டாவது பொருளாதாரக் காரணி நிறுவனத்தின் மெத்தனப் போக்கு.

மோடி என்ற மோடி மஸ்தான் - 2

நரேந்திர மோடி பாணி தீவிர அரசியலில் ஒரு பயங்கரம் என்ன என்றால் அவர்கள் தமது கொள்கைகளிலும், பின்பற்றும் வழிகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் கொண்டிருப்பார்கள். முற்போக்கு தாராள அரசியல்வாதிகளுக்கும் பொதுவாக சாதாரண மனிதர்களுக்கும் இருக்கும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சுய சந்தேகங்கள் இவர்களுக்கு வருவதே இல்லை. இளம் வயதிலியே, தமது தேர்ந்தெடுத்த வழியில் இறங்கி விடும் இவர்களுக்கு பிறரின் கருத்துகளிலும் நியாயம் இருக்கக் கூடும் என்ற எண்ணமே வந்து விடாது.

பொதுவாக மதத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் இப்படி மாறி விடுகின்றன. அது எந்த மதமாக் இருந்தாலும் சரி. எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் இந்து மதமாயிருந்தாலும், மனித நேயமே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதிக்கும் கிறித்துவ மதமாயிருந்தாலும், வாழ்க்கையையே தவமாய் நடத்தும் இசுலாமாயிருந்தாலும், மதத்தீவிரவாதம் என்று வந்து விட்டால் அது மனித நலன்களுக்கு எதிராக மாறி விடுகிறது.

எம் ஜி ஆர் என்ற "அவமானம"

எண்பதுகளில் தனது அன்பாலும் மற்ற சில கேள்விக்குரிய முறைகளாலும் தமிழக மக்களை கட்டி ஆண்ட எம்ஜிஆர், அறிவுஜீவிகளுக்கு ஒரு அவமானமாகவே இருந்து வந்தார், வருகிறார்.

தமிழகம் சினிமாவுக்கு மயங்கி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பின் தங்கிய மாநிலம். சினிமா நடிகர் ஆட்சி என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகளாலும் ஏளனப்படுத்தப்பட்ட எம்ஜிஆரின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன நடந்தது?

முதலில் கல்வி. இருபது ஆண்டுகள் பின்னோக்குப் பார்வையில், எம்ஜிஆர் எடுத்த சில கொள்கை முடிவுகள், தமிழகத்தின் எதிர்காலத்தை வளர்ச்சிப்பாதையில் திடமாக நடக்க வைத்தன என்று சொல்லலாம். அந்த நேரத்தில் எள்ளி நகையாடப்பட்ட அவரது திட்டங்கள் இன்று நாட்டின் பிற மாநிலங்களிலும், ஏன் பிற நாடுகளிலும் கூட போற்றிப் பின்பற்றப்படுகின்றன.

சத்துணவுத் திட்டம். மக்களை பிச்சைக் காரர்கள் ஆக்கப் பார்க்கிறார்கள், இந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்தால் குடும்பத் தலைவர்களுக்கு வேலை கிடைத்து குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்துணவு கிடைக்குமே! இவ்வளவு பணத்துக்கு மாநிலம் எங்கே போகும்? பள்ளிக் கூட ஆசிரியர்கள் எல்லாம் இனிமேல் சமையல்காரர்கள் ஆகி விட வேண்டியதுதான் என்றெல்லாம் கடுமையாக விமரிசிக்கப்பட்ட சத்துணவுத்திட்டம் ஒரு தலைமுறையாக குழந்தைகள் பசி இல்லாமல் படிக்கவும், வளரும் வயதில் சத்தான உணவால் மூளை முதிர்ச்சி தடையின்றி நிகழவும் வழி செய்தது.

தொடக்கத்தில் ஆசிரியர்களேயே பொறுப்பாளர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் திட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இன்று உலகுக்கே வழி காட்டியாக திகழ்கிறது தமிழகம்.

சத்துணவில் பல்லி, சத்துணவு சாப்பிட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி என்று நாளிதழ்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகள் வெளியிட்டன, ஒவ்வொரு முறை அத்தகைய செய்தி வரும்போதும் நான் அப்போதே என்று திட்டத்தின் எதிரிகள் தம்மையே பாராட்டிக் கொண்டனர்.

அந்த எதிரிகளும் வாயடைத்து, தாம் ஆட்சிக்கு வந்ததும், சத்துணவை இன்னும் சிறப்பாக்குவேன் என்று பேச வைத்தது, எம்ஜிஆரின் நிர்வாக வெற்றி.

அடுத்ததாக கல்விக் கூடங்களிலும், வேலை வாய்ப்பிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது. இன்று உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்தால் வானம் இடிந்து விழுந்து விடும் என்று அதை எதிர்ப்பபவர்கள் 20 வருடங்களாக 69% ஒதுக்கீட்டை செயல்படுத்தி வரும், தமிழகத்தைப் பார்க்கலாம். பெருவாரியான மக்களுக்கு வாய்ப்புகள் திறக்க, இன்றைக்கு இந்தியாவிலேயே மக்கள் வளத்தில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

எம்ஜிஆரின் ஆட்சி தமிழகத்தின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன என்பதற்கு இன்னும் சில கொள்கை முடிவுகள் உதவின.

இன்றைக்கு அவரது பிச்சையில் தனது அரசியல் வாழ்வையும் பதவியையும் அடைந்த ஒரு அம்மையார், அவர் பெயரை தேர்தல் வரும்போது மட்டும் வேண்டா வெறுப்பாக பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.

புதன், ஏப்ரல் 19, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 3

ஏகபோக வலிமையை பெறும் வழி தொழில் நுட்ப மேன்மை மூலமாகவோ, கடின உழைப்பாலோ, திறமையான நிர்வாகத்தாலோ வந்திருக்கலாம். ஒரு நிறுவனம் ஏகபோக வலிமை பெற்ற பிறகு அரசாங்கமும், அந்த நிறுவனமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு பேச்சு.

பொருளாதாரக் கோட்பாடுகளின்படி போட்டி இருக்கும்போது, நுகர்வோருக்கு சரியான விலையில் பொருட்கள்/ சேவைகள், மிக உயர்ந்த தரத்தில் கிடைக்கிறது. ஏகபோக வலிமை இருக்கும்போது, அவர்கள் வைப்பதுதான் விலை என்ற நிலைமையோ, அவர்கள் கொடுப்பதுதான் சேவை என்ற நிலைமையோ அல்லது இரண்டுமோ ஏற்பட்டு விடும். நுகர்வோரின் நுகர்வு அதிகப்படியை இந்த ஏகபோகி கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுகிறார்.

சரி, தமிழகத்தில் தொலைக்காட்சி சேவைகளைப் பற்றிப் பேசலாம். அதற்கு ஒரு சின்னக் கணக்கு, ஆங்கில மொழியில் எத்தனை செய்தி ஓடைகள் உள்ளன? இந்தியில் எத்தனை உள்ளன? தமிழில் எத்தனை உள்ளன? கடைசி கேள்விக்கு விடை எல்லோருக்கும் தெரியும். ஒன்று.

ஏன் ஒன்றே ஒன்று? தமிழர்களுக்கு செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும், விவாதிப்பதிலும் ஆர்வம் இல்லையா? இன்னொரு கணக்கு அதற்கு விடையளிக்கும். தமிழில் எத்தனை செய்திப் பத்திரிகைகள் உள்ளன? தெருமுனைக் கடைக்கு போனால் முகப்பு தாங்காமல் நிரம்பி வழிகின்றன.

இல்லாவிட்டால், இருக்கும் அந்த ஓடை (சன் நியூஸ்), உயர் தரமாக, எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளதால் பிறர் உள்ளே வரத் தயங்குகின்றனாரா? இதற்கு விடை எல்லோருக்கும் தெரியும்.

இன்னொரு கோணத்தில், ஏன் ஒரு விகடன் குழுமமோ, குமுதம் குழுமமோ, இந்து பத்திரிகைக் குழுமமோ தமிழ் நாடு சார்ந்த தொலைக் காட்சி ஓடையைத் தொடங்க முனையவில்லை? அவர்களுக்கு என்ன பயம்.

இவை எல்லாம் ஒரு நிறுவனம் சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கண்ணியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்போது விளையும் நிகழ்வுகள்.

சரி, இப்படி ஒரு ஏகபோக ஆதிக்கத்தை பிடித்து விட்டால், அந்த நிறுவனம் என்றென்றும் ராசாதானா? இதற்கும் தெளிவான விடை ஒன்று உள்ளது.

ஆள முயலும் அவலங்கள்

நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எமது அரசு தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு ஈட்டிக்கொள்ளும் வன்மை, தரமான கல்வி, கிடைப்பதற்கு என்னென்ன தேவையோ அதை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும்.

கோயம்பேடு சந்தையில் அழுகித தூக்கி எறியப்பட்ட காய்கறிகளை அள்ளிச் செல்ல மூன்று சக்கர வாகனங்களில் வரும் உணவு விடுதியினரைப் பற்றி படித்த் நினைவு இருக்கிறதா? நியாய விலைக் கடைகளில் புழுத்துப் போய் விட்ட அரிசி வழங்கப்படுவதைப் பற்றிய செய்தியை படித்து விட்டு உச் கொட்டாதவர்கள் யாரேனும் உண்டா?

அத்தகைய உணவு விடுதியிலும், அத்தகைய அரிசியைச் சமைத்தும் சாப்பிடும் நிலையில் இன்று தமிழகத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

வெளியூர் போக வேண்டி இருந்தால் மறு சிந்தனையே இல்லாமல் 12 ருபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொள்கிறோம்.

இன்று ராணிப் பேட்டை புறவழிச் சாலையில் ஒருவர் என்னிடம் இருசக்கர வண்டியில் ஏற்றிச் செல்லக் கேட்டார்.

'பேருந்துகள் நிற்காத திசை நோக்கி போகிறீர்களே, எப்படி ஆற்காடு போவீர்கள்'
' பேருந்து கட்டணத்துக்கு காசு இல்லை, இப்படியே சமாளித்து போய்க் கொள்ள வேண்டியதுதான்'

'5 கிலோ மீட்டர் பேருந்து கட்டணம் கூட பையில் இல்லாமல் இருக்கிறீர்களே என்ன தொழில் செய்கிறீர்கள் ?ய
'நமக்கெல்லாம் பீடி சுத்துவதுதான் வேலை. மாசத்துக்கு பதிமூணு நாள்தான் வேல இருக்கும். 1300 ரூபா வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்வது.'

நானும் வேறு ஏதும் புதுமையாக செய்து விடாமல், போகும் தூரம் வரை அவரை ஏற்றிச் சென்று விட்டு டாட்டா சொல்லி விட்டேன்.

இரவு 10.30க்கு போரூரில் இறங்கி உணவு விடுதியில் சாப்பிடச் சென்றால் மேசை துடைக்க குழந்தை தொழிலாளி. வெளியே வந்தால் டாஸ்மாக் ஆதிக்கத்தில் தள்ளாடும் குடி மக்கள்.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு தேர்தல். இதில்
  • எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விஜயை கூட்டிக் கொண்டு போய் விட்டார்,
  • என்னுடைய கூட்டங்களை தொலைக்காட்சியில் காட்டவில்லை,
  • எனக்கு கௌரவத்துக்குரிய எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவில்லை,
  • எமது சாதியினருக்கு அதிகாரத்தில் பங்கு தரப்படவில்லை
என்றெல்லாம் துள்ளிக் குதிக்கும் அரசியல்வியாதிகள்.

கும்பிக்கு கூழில்லை என்றாலும் தடவிக் கொள்ள சந்தனத்தை வைத்துக் கொள் என்று வாக்குறுதி அளிக்கும் தலைவர்கள் (தலைவன் என்று போட்டால் ஒரு காட்சி சார்பாம்). 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அனுபவமாம், எது முடியும் எது முடியாது என்று தலைவருக்குத் தெரியுமாம். 50 வருடம் பொது வாழ்க்கையில் இருந்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது புரியவில்லையா இந்தத் தன்னிகரற்ற தலைவருக்கு.

தமிழ் மக்களை ஆளத் துடிக்கும் தலைவருக்கும் தலைவிக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் சொத்துகளையெல்லாம் தானம் செய்து விட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் எனக்குச் சாப்பாடு என்று இறங்கத் தயாரா?

ஒருவருக்கு குடும்பம், குழந்தை குட்டிகள் இல்லை, மற்றவரோ ஆயிரம் பிறைகள் கண்டு கொள்ளுப் பேரர்களையும் பார்த்தாயிற்று. யாருக்காக இந்த சொத்துகளை கட்டிக் காக்கிறீர்கள்? மக்களுக்கு சேவை புரிவதே உமது உயரிய எண்ணம் என்றால், முழு நேர சமூகப் பணியில் இறங்கி விடலாமே?

டோண்டு ராகவ அய்யங்கார் அவர்களுக்கு

யாருடைய சாதியையும் தெரிந்து கொள்ளவோ, அப்படித்தெரிந்தாலும் அதைப் பொருட்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் நான் உங்கள் பொருட்டு ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

தன்னுடைய சாதி இன்னது, அதில் தான் பெருமை கொள்கிறேன் என்று கூறும் யாருமே பரிதாபத்துக்கும் கண்டனத்துக்கும் உரியவர்கள். அய்யங்கார் என்பது நீங்கள் 10 வருடம் படித்துப் பெற்ற பட்டமா என்ன (வேதம் புதிது வசனம்)? அதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது? சாதியை சொல்லிச் சொல்லியே எம்மை ஒடுக்கிய சமூகத்துக்கு முன் என் உறுதியை காட்டுவதுதான் இப்படிச் சொல்வது என்கிறீர்களே இதே மாதிரி ஒவ்வொருவரும் தமது அழுக்குப் பக்கங்களை வெளியே விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டால், இணைய உலகும், வெளி உலகும் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடும்.

தன்னுடைய அடையாளத்தையும், பாரம்பரியத்தையும் ஒவ்வொருவரும் பேற்றிப் பேணி பெருமை கொள்வது இயற்கைதான். ஆனால் மெத்தப் படித்து, இந்த இந்திய திருநாட்டின் முக்கிய நகரங்களில் பல ஆண்டுகள் பணி புரிந்து விட்ட உங்களுக்கு இந்த சாதி அடையாளம் என்ற பேதிக்குறிகள் புரையோடி விட்ட புற்று நோய், அதை வெட்டி எறிவதை விட வேறு வழி இல்லை என்று இன்னும் புரியாமல் போய் விட்டது என்று வியப்பாக உள்ளது.

'சாதி எல்லாம் அழிந்து விட்டது. இந்த காலத்தில் எங்கே சாதி உள்ளது. பேருந்தில் பக்கத்தில் இருப்பவன் என்ன சாதி என்று கேட்டுக் கொண்டா இருக்கிறோம், இன்னும் சாதி பெயர் சொல்லி ஏன் எம்மை பழிக்கிறீர்கள்' என்று கூறிவதும் சிரிப்புக்குரியது. இந்து நாளிதழில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் சாதி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுவது நிற்கும்போதுதான் சாதி ஒழிந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளலாம்.

சாதி எப்போது ஒழியும் என்று தெரியுமா? உன் சாதி என்ன என்று கேட்பவனையும், என் சாதி இன்ன என்று சொல்பவனயும் நாக்கைத் துணித்துத தண்டனை அளிப்போம் என்று இந்தச் சமூகம் துணிந்தால் நடக்கலாம்.

அது வரை சாதி என்ற அடையாளத்தோடு நீங்கள் பிறந்து விட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆதாயங்களுடன் வாழ்ந்து விட்ட குழுவினருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பதை விட்டொழியுங்கள்.

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 2

சரி, ஏகபோக ஆதிக்கம் என்றால் என்ன? 100 சதவீதம் சந்தையையும் கையில் வைத்திருந்தால்தான், ஏகபோகம் என்று இல்லை. தொழிலின் தன்மையை பொறுத்து 70 சதவீதம் சந்தையை பிடித்து விட்டாலே கூட ஏகபோக வலிமை வந்து விட்டது என்று கருதலாம். போட்டியாளர் என்று வலிமையுடன் வேறு யாரும் செயல்படாத நிலை ஏற்பட்டு விட்டாலே, ஏகபோகம் என்று அரசு கருத ஆரம்பிக்கலாம்.

ஏகபோகம் என்று ஆகி விட்டால் என்ன மாற வேண்டும்? சாதாரண போட்டி நிறைந்த சூழலில் நியாயமாகக் கருதப்படும் பல நடவடிக்கைகள் ஏகபோக வன்மை பெற்றவுடன் தவறாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக,
  • தனது பொருட்களை வினியோகிக்கும் முகர்வர், போட்டியாளரின் பொருளையும் வினியோகிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போடுவது போட்டி நிறைந்த சூழலில் சரியான அணுகுமுறை.
  • தனது பிரபலமான ஒரு பொருளுடன் அவ்வளவு பேர் பெறாத ஒரு பொருளை இணைத்து விளம்பரப்படுத்துவதும், வினியோகிப்பதும் பொதுவாகக் கையாளப்படும் ஒரு உத்தி.
இந்த இரண்டு உத்திகளுமே, ஒரு ஏகபோக சந்தையில் சட்டவிரோதமாகி விடுகின்றன. பயனர் கணினிகளுக்கான இயங்குதள சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்டு நிறுவனம், தனது வலை உலாவி இன்டெர்நெட் எக்ஸ்புளோரரை இலவசமாக இயங்குதளத்துடன் சேர்த்து வழங்கி நெட்ஸ்கேப்பு நிறுவனத்தை திவாலுக்கு தள்ளியது சட்ட விரோதம்.

போட்டி இயங்கு தளஙகளை விற்றால், விண்டோசு உரிமத்தின் விலையை ஏற்றி விடுவதாக கணினி விற்கும் நிறுவனங்களை மிரட்டி, போட்டி இயங்குதளங்களின் இளம் வேர்களிலேயே வெந்நீர் ஊற்றி விட்ட உத்தியும் சட்ட விரோதம்.

சரி இப்போது சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வருவோம்.

தமிழகத்தில் சுமங்கலி கேபிள் நிறுவனம் பல நகரங்களில் ஏகபோக பலம் பெற்றுள்ளது. அதைப் பயன்படுத்தி அதே குழுமத்தைச் சேர்ந்த, சன் தொலைக்காட்சியின் தொழிலை பாதுகாத்து வளர்க்கும் முகமாக, போட்டியாளர்களின் ஓடைகளை தரக் குறைவாக ஒளிபரப்புவது, சரியாக ஒத்துழைக்காத ஓடைகளை வரிசையில் மிகக் கீழே கொடுப்பது, புதிதாக வரும் போட்டி ஓடைகளுக்கு சரியான வாய்ப்புகள் அளிக்காமல் இருட்டடிப்பு செய்வது எல்லாமே தவறுகள்.

இன்னும், அதே குழுமத்தைச் சேர்ந்த சூரியன் பண்பலையை மட்டும் முதல் வரிசையில் இடமளித்து கேபிள் மூலமாக ஒலிபரப்பும்போது, போட்டியான ரேடியோ மிர்ச்சியையோ, எஃப்எம் கோல்டையோ அப்படி ஒலிபரப்ப வழி செய்யாமல் இருப்பது தவறு.

சன் தொலைக்காட்சியில், கட்டணமே இல்லாமலோ, மிகக் குறைந்த கட்டணத்திலோ, குங்குமம் பத்திரிகைக்கு விளம்பரம் செய்தால், ஏகபோக வலிமை பெற்ற நிறுவனம் என்ற முறையில், பிற பத்திரிகைகளுக்கும், அதே கட்டணத்தில் விளம்பரம் செய்யும் உரிமையை அளிக்க வேண்டும்.

இதை எல்லாம் கண்காணிக்க எம்ஆர்டிபி சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன் மூலம் மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அது தன்னுடைய ஏகபோக வலிமையை போட்டியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் பயன்படுத்தியதாக கண்டுபிடித்தால் அதற்கான சட்ட மூலமான நிவாரணங்களை செயல்படுத்துமாறு உத்தரவிட அதிகாரம் உண்டு.

சன் தொலைக்காட்சி குழுமத்தின் இந்த உத்திகளால் நமக்கு என்ன குறை வந்து விட்டது? அதற்கு அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

வஞ்சகர்களின் ஏமாற்று வேலைகள்

சென்னையில் தாஜ் ஓட்டலுக்கு எதிர் வரிசையில் காதர் நவாஸ்கான் சாலை என்று ஒரு சாலை உள்ளது. அந்த சாலையின் தொடக்கத்தில் இடது பக்கத்தில் ஒரு தள்ளு வண்டியில் சாப்பாடு விற்கும் கடை. வலது பக்கத்தில் குப்பைகள் குவிக்கப்படும் இடம். சற்றே நடந்த பிறகு சாப்பாட்டுக் கடையிலிருந்து ஏப்பம் விட்டால் கேட்டு விடும் தூரத்தில் உள்ளது ஒரு புடவைக்கடை.

அந்தச் சாப்பாட்டுக் கடையில் சாப்பாட்டு விலை 10 ரூபாய்க்கு மேலே இருக்காது. புடவைக்கடையில் புடவைகள் பத்தாயிரம் ரூபாய்களுக்குக் குறைந்து கிடைக்காது. புடவைக்கடைக்குள் நுழையும் பணம் காய்த்த மாந்தருக்கு, அந்த சுகாதாரமற்ற சூழலில் பசியாறி விடப்படும் ஏப்பங்களோ மற்ற எந்த வாயு ஓசைகளோ கேட்டு விடாது.

இருபாதாயிரத்துக்கு சேலை செய்ய பயன்பட்ட முதலீட்டையும், முயற்சிகளையும், தரமான உணவு சாலையோரம் சாப்பிட வந்த மனிதருக்கு கிடக்குமாறு செலவிட முடியாதா?

இந்தியா ஒளிர்கிறது, பங்குச் சந்தைகள் பத்தாயிரத்தை தாண்டி விட்டன என்ற கூக்குரல்களுக்கிடையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு வாங்கித் தொலைக்க வேண்டுமே என்ற சலிப்போடு இல்லாமல் உண்மையான கரிசனத்தோடு தரம் குறைந்த உணவை உண்ணும் குடிமக்களின் நலனைப் பேண விழையும் தலைவன் எங்கே?

குளிர்ச்சியூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் உண்ட உணவு செரிக்கும் முன் மேன்மேலும் வளங்களை வாரி உண்டு கொண்டிருக்கும் - இந்த அழுகிய காய்கறியில், புழுத்த அரிசியில் சமைத்த உணவு எப்படி இருக்கும் என்று கனவிலும் கண்டிராத - தலைவர்களா இந்த குடிமகன்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யப் போகிறார்கள்?

தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகும் போது கூட, குளிரூட்டப்பட ஊர்தியை விட்டு வெளியே வந்து மக்கள் வாழும் சூட்டை உணர முன் வந்து விடாத எந்த தலைவன் இந்த உழைப்பாளிகளின் வாழ்க்கையை உயர்த்தி விடப் போகிறான்!

ஆட்சிக்கு வந்தால் இரண்டு ரூபாய்க்கு அரிசி, பத்து கிலோ வாங்கினால் 10 கிலோ இலவசம், 15 கிலோ நேரடியாக இலவசம் என்றெல்லாம் உறுதியளிக்கும் தலைவர்களின் வீட்டில் அந்த நியாய விலைக் கடை அரிசியில்தான் சமையல் நடக்கும் என்று உறுதியை எப்போது அளிப்பார்கள்?

இருபத்தைந்து கோடி சொத்துக்களை ஆண்டு வரும் தலைவனா, இருபத்தைந்து ரூபாயில் குடும்பம் நடத்தும் குடிமக்களின் தேவைகளை உணர்ந்து விடப்போகிறான்!

'ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள்' என்று சொல்லும் விதமாக, முல்லை பெரியார் அணையிலிருந்து வரும் தண்ணீர் பற்றவில்லையென்றால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி தருகிறோம், எமது குடும்பத் தொலைகாட்சி அலை வரிசையின் நிகழ்ச்சிகளை கண்டு களித்து பசி ஆறுங்கள் என்று வாக்குறுதி அளிக்கும் மாட்சி என்னே மாட்சி.

குழந்தைகள் படிக்கத் தரமான பள்ளிக்கூடங்கள் இல்லை என்று கவலைப்பட வேண்டாம், அப்பாமார்களுக்கும் எதிர்காலத்தில் வளர்ந்தவுடன், இந்தக் குழந்தைகளுக்கும், எமது தோழியின் தொழிற்சாலையில் தயாராகும் மதுவை அரசு வினியோகக் கடைகளில் வசதியாக குடித்து மகிழ வசதி செய்துள்ளோமே என்று மார் தட்டும் பரிவு என்ன?

தமிழ் நாட்டில் குடிநீர் வசதி இல்லாத கிராமங்களும் நகரங்களும் ஒழிக்கப்பட்டு விட்டன. வெள்ளை டப்பாக்களில் அடைத்து 25 ரூபாய்க்கு 20 லிட்டர் என்று விற்கப்படும் தண்ணீரை வாங்க முடியாத ஏழை குடிமகனுக்கு பொது வினியோகத்தில் தூய நீர் வழங்க ஏற்பாடு செய்தாயிற்று என்றுதானே இந்த தலைவர்கள் வண்ணத் தொலைக்காட்சியைப் பற்றியும், மது விற்பனையில் வரும் வருவாய் பற்றியும் பீற்றிக் கொள்கிறார்கள்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது, இங்கு மாந்தர் தம்மை எத்திப் பிழைக்கும் வீணர்களை வீழ்த்தும் நாள் ஒன்று வருகுது. நாய்கள் குரைத்து விடாமல் இருக்க அவ்வப்போது பொறை பிசுகோத்துகளை வீசி எறிந்து விட்டு தமது குடும்ப நலனை மட்டும் வளர்த்துக் கொள்ளும் பாதகர்கள் எல்லாம் பதில் சொல்லும் நாள் ஒன்று வருகுது.

செவ்வாய், ஏப்ரல் 18, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 1

பொருளாதாரக் கோட்பாடுகளின்படி, சில துறைகளில் ஒரே ஒரு நிறுவனம் முழுச்சந்தையையும் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதை ஏகபோக சந்தை என்பார்கள். (monopoly market)

பொதுவாக நன்றாக நடக்கும் தொழிலுக்கு போட்டியாளர்கள் உருவாவதுதான் இயல்பு. ஆனாலும், அரசு கொள்கைகளாலோ, மூலப்பொருட்களின் கொள்முதலை கட்டுப்பத்துவதன் மூலமோ செயற்கை ஏகபோகங்களும், சநதையில் எண்ணிக்கை சார்ந்த செலவுக் குறைப்புகளால் வரும் இயற்கை ஏகபோகங்களும் உருவாகி விடுகின்றன.

தொலை தொடர்பு துறையில், இந்திய அரசின் நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்தது போன்றவை அரசு உருவாக்கிய ஏகபோகம். டிபியர் நிறுவனம், வைரக்கற்களின் கொள்முதலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வைரச் சந்தையில் ஏகபோகம் செலுத்துவது இரண்டாவது வகை செயற்கை ஏகபோகம்.

தொலைக்காட்சி ஓடைகளை நுகர்வோருக்கு வழங்கும் சேவை, மின் வினியோகம், குடிநீர் வினியோகம் போன்றவை இயற்கை ஏகபோக தொழில்கள். ஒரு கேபிள் நிறுவனம் எல்லா தெருவிலும் தனது வலைப்பின்னலை அமைத்து விட்டால் புதிதாக ஒரு வீட்டுக்கு இணைப்புக் கொடுக்க செலவு மிகக் குறைவாகவே இருக்கும். இன்னொரு நிறுவனம் அதனுடன் போட்டி போட, தொடக்க முதலீடு மிக அதிகமாக தேவைப்படுவதால், போட்டி உருவாவது தவிர்க்கப்பட்டு விடும்.

ஏகபோக தொழில்கள் தனியார் கையில் இருந்தால் அவர்கள் அந்த சக்தியை தவறாக பயன்படுத்தி நுகர்வோருக்கும் சமூகத்துக்கும் ஊறு விளைவிக்கும் சாத்தியங்கள் இருப்பதால், அரசுகள் அதைத் தடுக்க முனைகின்றன.

இயற்கை ஏகபோகங்களை அரசே நடத்த முனைவது ஒரு வழி.

போட்டியால் முதலீடுகள் வீணானாலும் பரவாயில்லை என்று, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சந்தையில் செயல்பட சட்டப்படி வழி செய்து கொடுத்து, வழி நடத்தும் குழுமம் ஒன்றின் மூலம் எல்லோரும் ஒழுங்காக நடப்பதை உறுதி செய்து கொள்வது மற்றொரு வழி.

தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் உடன் தனியார் நிறுவனங்களையும் போட்டி போட அனுமதித்து, டிராய் மூலம் நெறிப்படுத்துவது இப்போது நடப்பது.

தம்முடைய ஏகபோக சந்தை வலிமையை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துவதை விசாரித்து தடுக்க வழி செய்யும் சட்டங்கள் எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளிலுமே உள்ளன. அமெரிக்காவின் ஆன்டி டிரஸ்டு சட்டங்கள் புகழ் பெற்றவை.

சமீபத்தில் மைக்ரோசாப்டு நிறுவனம், இயங்கு தளச் சந்தையில் தனக்கு இருக்கும் ஏகபோக வலிமையைப் பயன்படுத்தி பிற மென்பொருட்கள் சந்தையை தனக்கு சாதகமாக சட்ட விரோதமாக திருப்பியது என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. ஐரோப்பாவிலும், அதே குற்றம் சாட்டப்பட்டு மைக்ரோசாப்டு பரிகாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சரி இது எல்லாத்துக்கும், சன் டிவிக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள்.

நரேந்திர மோடி என்ற மோடி மஸ்தான்.

ஜெயலலிதாவின் ஆணவமும், மற்றவரை மதிக்காத போக்கும் ஊரறிந்தவை. லல்லு பிரசாத் யாதவின் ஊழல்களும், கோமாளிப் பேச்சுகளும் ஊடகங்களின் பசிக்கு நல்ல இரை போட்டன. கருணாநிதியின் குடும்ப அரசியலை அவர் அரசியல் எதிரிகள் வாய் கிழிய கண்டிக்கலாம்.

இவை எல்லாவற்றையும் விட பயங்கரமானது, அபாயகரமானது நரேந்திர மோடியின் அரசியல். நர்மதா பசாவோ இயக்கத்தின் மேதா பாட்கருக்கு போட்டியாக உண்ணாவிரதம் இருந்த கீழ்மைத்தனம் இப்போது குஜராத்தில் பெரும் வீரமாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். பாட்கருக்கு ஆதரவாக பேசிய அமீர்கானுக்கு பதில் அளித்த விதமும் மோடி பாணி அரசியலுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

நூற்றுக்கணக்கான இசுலாமிய உயிர்களைக் குடித்த வெறித்தனம் இவரது அரசியல் பாணியின் முத்திரை. இதில் அபாயம் என்னவென்றால், அதை எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம், குஜராத்துக்கு வெளியே இருப்பவர்கள மட்டுமே். குஜராத்தில், நீதிமன்றங்கள் கூட தமது பணியை சரிவர செய்ய முடியாத சூழலை உருவாக்கி விட்ட பாசிச பாணி அது.

எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும், மனசாட்சி உள்ளவர்களும், வாய் மூடி மௌனிகளாக ஆகி விடும் அரக்க அரசியல் மோடி பாணி அரசியல். எதிர்த்து நில்லும் மனத்திண்மையை அழித்து விடும் தந்திரங்கள் நிறைந்தது இந்த பாணி அரசியல்.

ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில், குஜராத்தில் இது எல்லாம் நடக்கிறது என்று வாளாவிருப்பது ஆபத்து. களைச்செடிகள் போல கண் மூடி திரும்பி பார்ப்பதற்குள் தம் நச்சு வேர்களை நாலாபுறமும் பரப்பி விடும் கொடிய பாணி இந்த அரசியல்.

நம் நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை இருப்பவர்கள், மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும், மோடிக்கு எதிரான நிலையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திங்கள், ஏப்ரல் 17, 2006

அரசியலும் கல்வியும் - 2

சரி, அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும்?

பதவியைப் பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய நோக்கமா? பதவி இல்லாமல் என்ன தொண்டுகள் புரிந்தீர்கள்? கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவது நடக்குமா? முதலில் இருக்கும் வசதிகளைத் தகுதிகளை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களுக்கு சேவை செய்யப் பழக வேண்டும். அதுதான் முதற்படி.

பெரிய நிறுவனங்களை நன்கு நிர்வகிக்கத் தெரியுமே, தேர்தலும், அரசு நிர்வாகமும் எந்த மூலைக்கு என்று ஒரு கை பார்க்க கிளம்புபவர்களும் இருக்கிறார்கள். சேர்த்து வைத்த உபரிப் பணத்தை எல்லாம் தேர்தலில் இறக்கி வெற்றி பெற்று விடலாம் என்று முயற்சித்தவர்கள் பலர் உண்டு. அடிப்படையில் சேவை மனப்பான்மை இல்லாமல் அரசியலில் நன்கு செயல்பட முடியாது.

எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்து பின்னர் முதலமைச்சர் ஆனாரே, நான் கூடத்தான் பேர் பெற்ற நடிகன், அடுத்த முதல்வர் நானே என்று மார் தட்டி மண்ணைக் கவ்விய கதைகளும் நாம் பார்த்துள்ளோம்.

மீண்டும் சொல்வதானால், நடிகராக இருந்தாலும், வழக்கறிஞராக இருந்தாலும், கல்வியாளராக இருந்தாலும், தொழில் அதிபராக இருந்தாலும் சக மனிதருக்கு தொண்டு செய்ய வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்று உண்மையான நோக்கம் இருப்பது மட்டுமே அரசியலில் நுழையத் தேவையான தகுதி.

அரசியலும் கல்வியும்

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும்?

"நம்ம நாட்டில் அரசியல் அயோக்கியர்களின் புகலிடமாகி விட்டது. படித்தவர்கள் அரசியலுக்கு
வந்தால்தான் உருப்படும்."

இப்படிப் பேசி விட்டு ஓட்டுப் போடாமலேயே காலத்தைக் கழித்து விடுகிறோம்.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மக்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்களில்
எல்லாம் படித்தவர்கள் மட்டும்தான் இருந்தார்களா என்ன?

காந்தியின் கல்வித் தகுதிதான் அவரைப் பெரிய தலைவராக்கியதா? காமாரசருக்கு என்ன தகுதி
இருந்தது? நெல்சன் மாண்டேலா படித்துக் கிழித்து விட்டதாலா தம் மக்களின் அடிமைத் தளைகளை
உடைக்க முடிந்தது? கொடுங்கோல் ஆட்சி புரிந்த பலர் மெத்தப் படித்த மேதைகள்தாம்.