வியாழன், பிப்ரவரி 19, 2009

தருமங்கள்

'சத்தியம் ராமலிங்க ராஜூ செய்வது எதுவும் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாதது கிடையாது. சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக்கங்கள் தவறு செய்வதை நியாயப்படுத்தும் போது எந்த அளவில் நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது மட்டும்தான் பார்க்க முடியும்'

'நீங்கள் ______ நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறீர்கள். அங்கு ஒழுக்க நெறிகள் எப்படி இருந்தது?'

'குழுமத்தின் தலைமையிடமிருந்து ஒழுங்கு தவறாமல், சட்டத்துக்குட்பட்டுதான் நடக்க வேண்டும் என்று தெளிவான வழிநடத்தல் இருக்கிறது. ஆனால் தனித்தனி நிறுவன தலைவர்கள் இதைக் கடைபிடிக்கிறார்களா என்றால் கிடையாது. நிறுவனத் தலைவரகளும், துறை தலைவர்களும் பல சட்டங்களை மீறிக் கொண்டுதான் இருந்தார்கள். என்ன, தலைமை அலுவலகத்துக்கு தெரிந்து விடாதபடி பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவுதான். கண்காணிக்கும் தணிக்கைக் குழுக்களுக்கெல்லாம் போக்கு காட்டுவது என்பது பெரிய சிக்கலே இல்லை'

அவர்களே அப்படி என்றால், நிறுவனத் தலைமையே எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செயல்படும் நிறுவனங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.'

'ஆமாமா, பொதுவா எல்லா நிறுவனங்களிலும் அப்படித்தான் நடக்கிறது. நீங்கள் வருமான வரிக்கு சரியான கணக்கைக் காட்டுகிறீர்களா என்ன!, யாருமே காட்டுவது கிடையாது. நான் கூட வருமான வரியைப் பொறுத்த வரை முழு வருமானத்தையும் காட்டுவதில்லை. சரி, தப்பு என்று கிடையாது, எது நடைமுறைக்குப் பொருந்தும் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வேன் என்று இறங்கி விட்டால் உங்கள் மனைவி குழந்தைகள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள், ஒதுங்கி விடுவார்கள்'

பதில் சொல்லவில்லை. 'சத்தியம் நிறுவனத்தில் நடக்கும் தணிக்கை நடவடிக்கைகள் போல _________ நிறுவனத்தில் நடத்தினால் என்னென்ன பூதங்கள் வெளி வரும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பொருளாதார சுணக்கம் வந்ததன் தாக்கத்தில்தான் சத்தியத்தின் தகிடுதத்தங்கள் வெளியில் வந்தன.'

'பொருளாதார நெருக்கடி என்று ஆட்குறைப்பு செய்வது புத்திசாலித்தனம் ஆகாது என்பது என் கருத்து. சரக்கு கையிருப்பைக் குறையுங்கள், மற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துங்கள், விற்பனைத் தரத்தை மேம்படுத்துங்கள். ஆனால் ஆட்களைப் பொறுத்த வரை இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு திறமைகளை மேம்படுத்தி கூடுதல் வியாபரம் பெற முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம்'

'ஆமாமா, எதுக்கு ஆள் எடுத்தோம் என்று தெரியாமல் எல்லோரும் எடுத்தார்கள். இப்போ எல்லோரும் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆனால் அது சரி கிடையாது. நாம் பணம் சம்பாதித்தோம், சம்பாதிப்பது குறைந்து விடக் கூடாது என்று ஆட்களைக் குறைப்பது நியாயம் கிடையாதுதான். ஆனால் அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்கள்.'

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

தலைமை

கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.

- ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

ஈழத்தில் எரியும் நெருப்பு

வேலை நிறுத்தம்

இன்றைக்கு வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு. வேலை நிறுத்தம் என்றால் வழக்கத்தை விடத் தாமதமாகத் தூங்கி எழுந்து, இன்னும் விளக்கமாக சமைத்து சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்திருந்து, நண்பர்களுடன் தொலைபேசியில் அளவளாவி இன்புற்றிருப்பது இல்லைதான். கடமையை விடுத்து ஒதுங்கும் அந்த நாளில் எந்த காரணத்துக்காக வேலை நிறுத்தம் செய்கிறோமோ அது குறித்த எண்ணங்களை வளர விட்டு, அதை நிறைவேற்றுவதற்காக நம்மால் முடிந்த அளவு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, நோன்பு இருக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று ஈழத் தமிழர் நலப் பாதுகாப்புக் கூட்டணி அறிவித்ததுமே நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் சேர வேண்டும் என்று தோன்றி விட்டது. இதுவே நேற்றைக்கு தோல் கண்காட்சி தினத்தன்று அமைந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? கற்பனையான கேள்விகளுக்குப் பதில் இல்லைதான். அப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் எது சரி என்று படுகிறதோ அதைச் செய்திருப்பேன். அதற்காக போலியான நியாயங்களைக் கற்பித்திருக்கத் தேவையில்லை.

நாம் மட்டும் வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தால் போதுமா? எல்லாமே வழக்கம் போல நடந்து கொண்டிருந்தால் நம் நிலைமை என்ன? என்று தோன்றியது. நேற்று முழுவதும், தமிழகம் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு விட்டது போலவும், அதன் மூலம் மாநில மத்திய அரசுகளுக்கு எதிராக பெரும் கருத்தலை உருவானது போலவும் கனவுகள். எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்தில் பக்கத்து வீடுகளில் சமையல் சத்தங்கள் கேட்கின்றன. அலுவலகத்துக்குப் போகின்றவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகி விட்டார்கள். பள்ளி வாகனங்கள் வரும் சத்தமும் கேட்கின்றது.

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் பார்க்க விரும்பும் மாறுதலாக நாம் வாழ முயற்சிக்கலாம். ஆனாலும் பெரிய ஏமாற்றம்தான். குறைந்த பட்ச மனிதாபிமான உணர்வு கூட இல்லாமல் தன் வாழ்க்கை, தன் சோறு, தன் வேலை என்று இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இனத்துக்கு விடிவு காலமே கிடையாது.

தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகள்

போன சட்ட மன்றத் தேர்தலின் போது, தமிழ் பகைவர் செயலலிதாவின் ஆட்சி வருவது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சியை விட மேலானது என்று எழுதியிருந்தேன். தமிழ் நலம் விரும்புபவர்கள் நம்ம ஆட்சிதான் என்று இளைப்பாறி விடும் அபாயம் கருணாநிதியின் ஆட்சியில் இருக்கும். செயலலிதா ஆட்சியில் தமிழ் நலம் விரும்பிகள் விழிப்புடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ், மக்கள் நலன் எல்லாவற்றையும் வியாபாரக் கருவிகளாகவே பயன்படுத்தும் கீழ்த்தரமான வியாபாரி கருணாநிதி. அவரைத் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்வது தமிழர்கள் தம்மைத் தரம் தாழ்த்திக் கொள்வதாகவே முடிந்துள்ளது. தனது குடும்ப வியாபாரத்துக்கு தமிழ் அரசியலை பயன்படுத்திக் கொள்கிறார்.

பதவி வெறி பிடித்தவருக்கு பைத்தியம் முற்றியே போய் விட்டது. பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈழத் தமிழர் நலனை விற்று விட்ட அவருக்கும் அவரது கட்சிக்கும் கிடைக்கும் மரண அடிகளில் இனிமேல் பதவிகளுக்கே வாய்ப்பில்லாமல் போய் விட வேண்டும்.

திமுக ஆட்சி வந்த பிறகுதான் விடுதலைப் புலிகளுக்கும் குளிர் விட்டு திமிரான நடவடிக்கைகளாக, 'ராஜபக்சே வெற்றி பெற உதவியது', 'கருணாவை பகைத்துக் கொண்டது' என்று நடந்து அதற்கான விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் ஆதரவு கட்சிகள் பிரிந்து கிடக்கிறார்கள். வைகோ செயலலிதா அணியில் போனதை கிண்டலடிப்பவர்கள் அங்கு போயும் தனது கொள்கையில் பிறளாமல் இருக்கும் அவருடைய மாண்பை பாராட்ட முடியாதாது ஆச்சரியம்தான்.

கொலைகார இந்திய அரசு

இந்திய அரசு ஈழத் தமிழர்களின் குருதியை கையில் படர விட்டுக் கொண்டிருக்கிறது. அஸ்ஸாமில் இந்திரா காந்தி தேர்தல் நடத்திக் காட்டிய போது, ரத்த வெள்ளத்தில் இந்திராகாந்தியும் சஞ்சய் காந்தியும் படகு விடுவதாக 'ஆகா இன்ப நிலாவினிலே' என்று பாட்டுப் பாடுவதாக துக்ளக் அட்டைப் படக் கேலிச் சித்திரம் வெளியிட்டது. இன்றைக்கு கருணாநிதியின் தமிழக ஆட்சிப் பொறுப்பும் அப்படி ஈழத் தமிழர்களின் பிணங்களால் அமைக்கப்பட்ட மேடையின் மீதுதான் வீற்றிருக்கிறது.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா வடோதராவும் ஆயிரம் பிறவி எடுத்தாலும் கழுவிக் கொள்ள முடியாத பாவக் கறையை சுமக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் துணை போன மன்மோகன் சிங், ப சிதம்பரம், பிரணாப் முகர்ஜி எல்லோருக்கும் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிந்து போக வேண்டும். 'பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்.' ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பழி வாங்குவதற்காகவா சோனியா காந்திக்கு காங்கிரசு தலைமைப் பதவி கிடைத்தது? அதற்காகவா இந்த அரசுக்கு வாக்களித்து ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது?

வெட்கங்கெட்ட இந்திய அரசு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு விளையாட அனுப்பியிருக்கிறது. 'அங்கிருந்து ஒரு அணி வந்து குண்டுகளை சிதற விட்டு மக்களைக் கொன்று கொண்டிருக்கும் போது இங்கிருந்து ஒரு அணி போய் கிரிக்கெட் விளையாடுவது முட்டாள்தனம்' என்று பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்து மாற்றாக, தமது மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கு விளையாடி மகிழ்விக்க 11 தண்டச்சோற்றுத் தடிராமன்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

வங்காள மொழி பேச வேண்டும். அல்லது இந்தி மொழி பேச வேண்டும். அந்த மக்களின் உணர்வுகள்தான் இந்தியக் குடியரசில் மதிக்கப்படும். தமிழராகப் பிறந்தவர்கள் வயிறு எரிந்து கொண்டிருக்கும் போதும் கிரிக்கெட் விளையாடி மகிழ்வதற்கு இந்திய அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எந்த மன உறுத்தலும் இல்லை. ப சிதம்பரத்தில் ஆரம்பித்து அன்புமணி வரை பதவி சுகத்துக்காகத்தானே இதை எதிர்த்துப் பேசாமல் இருக்கிறார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் இந்தச் சுற்றுப்பயணத்தைக் குறித்து நாளிதழ்களிலும், இணையத் தளங்களிலும் படிக்கவே கூடாது என்று விலகியிருக்க முடிந்தது. கொஞ்சம் கூட மக்களின் உணர்வைப் புரிந்து மதிக்கத் தெரியாத பொறுக்கிகள்தான் டெண்டூல்கர் முதலான கிரிக்கெட் வீரர்கள் என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இனிமேலும் முழு மனதுடன் இந்திய அணி ஆடும் எந்த கிரிக்கெட் விளையாட்டையும் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இந்தியக் குடிமகன் என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டிய தருணம் இது. இந்திய நாட்டின் ஒரு முக்கிய பகுதியான தமிழ்நாட்டின் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை ஒரு புறம் வைத்துக் கொண்டாலும், மனித நெறிகளின் அடிப்படையில் கூட இந்திய அரசு செய்தது மிகப்பெரிய தவறு.

ஈழம் மலர்கிறது

ஈழத் தமிழர்களை ஒடுக்குவது சிங்கள ஆட்சியாளர்களால் முடியாத ஒன்று. விடுதலைப் புலிகளுக்கு இறுதிப் போர் என்று சவால் விட்டுக் கொண்டு மகிந்த ராஜபட்சே, இந்து ராம், துக்ளக் சோ, செயலலிதா, இப்போது திமுக கருணாநிதி, காங்கிரசின் சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நடத்தும் இந்தப் போர் தமிழர்களை இன்னும் வலுவாக்கி தமிழீழம் மலர்வதை துரிதப்படுத்தி விடும். தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கு வன்முறையும் போரும் ஒரு போதும் சாத்தியமாகாது.