திங்கள், செப்டம்பர் 21, 2009

எப்போதும் நட்சத்திரம் - தமிழ்மணம்

இணையத்தில் தமிழ் மொழியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன. தமிழ் டாட் நெட் என்று மடற்குழு ஆரம்பித்து, டிஸ்கி தகுதரம் உருவாக்கி குறியாக்கத்தை நெறிப்படுத்தியதில் ஆரம்பித்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஆயிரக்கணக்கான தமிழ் பயனர்களின் கூட்டு உழைப்பில் தமிழ் நிறைய சாதித்திருக்கிறது

வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை தமிழ் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்று சொல்லப்படும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து தாக்கம் குறையாமல் செயல்படுகிறது தமிழ்மணம். அப்படி வலைப்பதிவுகள் என்றாலே தமிழ்மணம் என்ற உருவகம் ஆரோக்கியமானதுதானா என்று பல விவாதங்களும் நடந்திருக்கின்றன, நடக்கின்றன. அது ஒரு புறம்.

என் பார்வையில் தமிழ்மணத்தின் வெற்றிக்கான அடிப்படை காரணம் அதன் வடிவமைப்பிலிருந்து ஒவ்வொரு கொள்கை முடிவுகளிலும் அடங்கியிருக்கும் 'பதிவர்களும் படிப்பவர்களும்தான் தமிழ்மணத்தை செலுத்துகிறார்கள்' என்ற எண்ண ஓட்டம்தான். ஆரம்பத்திலிருந்தே முகப்பு பக்கத்திலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி பதிவர்களின் மற்றும் பின்னூட்டங்களின் போக்குதான் தமிழ்மணத்தை செலுத்தி வருகிறது. contentஐ நெறிப்படுத்தி வழங்கும் போது தனது அடையாளம் தெரியாமல் பின்னணியில் மறைந்து கொள்கிறது தமிழ்மணத்தின் பயன்பாட்டு முறை.

பதிவு எழுதும் ஒவ்வொருவரும் தமிழ்மணத்தில் பங்கேற்பது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார்கள். கூடவே ஒவ்வொரு பதிவுக்கும் புதுப்புது உத்திகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் செய்து வருகிறது தமிழ்மணம்.

 1. பதிவர் புதிய இடுகையை எழுதிய உடன், புதுப்பிக்கும் பெட்டியில் முகவரியை கொடுத்து தகவல் கொடுத்தல்.
 2. மறுமொழி ஒன்று இடப்பட்டால், அந்த இடுகை மறுமொழி பட்டியலில் காண்பிக்கப்படுதல்
 3. வாசகர் பரிந்துரைக்கும் இடுகைகளின் பட்டியல்
 4. சூடான இடுகைகளின் பட்டியல்
 5. வாரம் ஒரு பதிவரை நட்சத்திரமாக காட்டுவது.
இவற்றில் சிலவற்றில் சர்ச்சைகள், சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வாசகர்களுக்காக, வாசர்களால் செலுத்தப்படும் திரட்டி என்ற உணர்வை தமிழ் மணம் ஏற்படுத்துகிறது.

காசியின் மூளையில் உதித்த இந்த சேவை வடிவம் பெற்று வளர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு TMI நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்ட பிறகும் புதுப்புது வடிவங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுகளை மட்டும் கொண்டு ஒரு சமூகமாக இயங்குவது தமிழ்பதிவர்களைத் தவிர வேறு எந்த மொழியிலும் இணையத்தில் நான் பார்த்ததில்லை. அதற்கு தமிழ்மணத்தின் பணிதான் முதல் முழுக் காரணம்.

மிகவும் தேவையான ஒன்றாக செய்ய வேண்டியது, நீண்டகால பதிவர்கள், தொடர்ந்து பதிபவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள், இவர்களுக்கு ஒரு அடையாளமும், அங்கீகாரமும் கொடுப்பது. நட்சத்திர வாரம் என்ற முறை அதை ஓரளவுக்குச் செய்கிறது. ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த முறை மூலம் முழுமையான அங்கீகாரங்கள் கொடுப்பது சாத்தியமில்லைதான்.

Hall of Fame போல 10 சிறந்த பதிவர்கள், 10 சிறந்த வாசகர்கள் என்று பட்டியல்கள் ஏற்படுத்தலாம்.

நன்றி, வாழ்த்துக்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

தமிழ்மணத்துடன் திருப்பதி

சனிக்கிழமை காலையில் எழுந்திருக்கும் வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை. இந்த வார இறுதியில் திருப்பதி போய் வரலாம் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு நினைத்த போது தமிழ்மணம் நட்சத்திரமாக இருப்பதால் இடுகைகளை வெளியிடுவதற்கும், பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிப்பதற்கும் 2 நாட்கள் வெட்டு விழுந்து விடுமே என்று தோன்றியது. அடுத்த வாரம் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் போட்டு - துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், தரை துடைத்தல், பதிவிடுதல் - செயல்பட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இன்றுதான் திருப்பதி போக வேண்டும் என்று தோன்றி விட்டது. போன தடவைகள் போல சிரமப்படாமல் சரியான தயாரிப்புகளுடன் போக வேண்டும். கடையில் பயணப்பை ஒன்றை வாங்குவதையும் வேலை பட்டியலில் சேர்த்து விட்டு, இதற்கு மேல் மனம் போன போக்குத்தான் என்று முடிவு செய்து கொண்டேன். இரண்டு நாட்களுக்கான இடுகைகளை இன்று காலையிலேயே போட்டு அந்தந்த நேரத்தில் வெளியாகுமாறு அமைத்து விட வேண்டியதுதான்.

பாத்திரம் தேய்த்து, தரை தூத்து துடைத்து, துணி துவைத்து, குடிக்கும் தண்ணீர் பிடித்து வைத்து, தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு இடுகைகள் போட உட்கார்ந்தால், இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. சாப்பிட்ட களைப்பில் கண்ணும் அசத்தியது. சிறிது நேரம் குட்டித் தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால், மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஏதோ பராமரிப்பு வேலையாம், நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.

கடைக்குப் போய் பயணப் பையும், அதை பூட்டுவதற்கான பூட்டும், எதிர் வீட்டு நண்பிக்காக 3 பலூன்களும் வாங்கிக் கொண்டு வந்தேன். பூட்டிய பைகளைத்தான் நடந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை மேலே கொண்டு கொடுக்கும் சேவையில் ஏற்றுக் கொள்வார்கள் என்று போன தடவை தெரிந்தது. குளிப்பதற்கு சோப்பு, செருப்பை பொதிந்து வைக்க ஒரு பிளாஸ்டிக் பை, தூங்குவதற்கு ஒரு போர்வை, லட்டு வாங்கி வர ஒரு பிளாஸ்டிக் பை என்று நினைத்து நினைத்து பொதிந்து கொண்டேன். செல்பேசியை அணைத்து வைத்து விட்டு பணப்பை, வீட்டு சாவியுடன் பையை தோளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

ராமாபுரம் வாகனச் சாலைக்கு வந்தால் முனையிலேயே ஒரு ஆட்டோ நிறுத்தி ஏற்றிக் கொண்டார். போரூர் போகும் சாலை வரை சேவை, 7 ரூபாய்க்கு. ஆட்டோவிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். போன முறைகள் போலில்லாமல், இருட்டிய பிறகு மலை ஏறி, இரவில் அங்கு தூங்கி விட்டு அதிகாலையில் கோயிலுக்குப் போய் விட்டு ஞாயிறு மாலைதான் சென்னை வந்து சேருவோம் என்று திட்டம். போன முறை எல்லாம் ஒன்பதரை மணி போக கிளம்பியது போலில்லாமல் இப்போதே பதினொன்றரை ஆகி விட்டிருந்தது.

திருப்பதி பேருந்து ஒன்றும் வந்து விடவில்லை. வெள்ளவேடு போகும் வண்டியில் பூவிருந்தவல்லி. அரசு விரைவுப் பேருந்து தகவல் கூண்டில் 12.10க்கு ஒரு குளிரூட்டப்பட்ட வண்டி, 1.15க்கு ஒரு சொகுசு வண்டி, 2.30க்கு இன்னொரு குளிரூட்டப்பட்ட வண்டி என்று தகவல். 'இப்போ வர்ற நேரம்தான்' என்று நேரக்காப்பாளர் சொன்னார். வெயில் சுள்ளென்று அடித்தது. அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் போது வரிசையாக வேலூர் போகும், காஞ்சிபுரம் போகும், ஏன் பேரம்பாக்கம் போகும் வண்டிகள் கூட ஒன்றுக்கு இரண்டு, மூன்று, நான்கு என்று நகர்ந்து கொண்டிருந்தன. திருப்பதி வண்டிகளைக் காணவில்லை. கடைசியில் விரைவுப் பேருந்து கழகப் பேருந்து வராமல், விழுப்புரம் கோட்ட பேருந்து ஒன்று வந்தது. அதுவும் விரைவுச் சேவைதான்.

அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். திரையில் காட்சிப் படங்கள். பேருந்து வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. திருத்தணி தாண்டியதும் நல்ல மழை பிடித்தது, காசிபவனில் சாப்பிட நிறுத்தும் போது கொட்டிக் கொண்டிருந்தது. நனைந்து கொண்டே போய் வெஜிடபிள் புலாவ் சாப்பிட்டுக் கொண்டேன். அங்கிருந்து புறப்பட்ட பேருந்து புத்தூர், நகரி என்று எந்த ஊருக்குள்ளும் நுழையாமல் புறவழிச்சாலைகளிலேயே ஓடியது.

முதல் தடவை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருவள்ளூர் - திருப்பதி. திருப்பதி பேருந்து ஊர் ஊராக நுழைந்து கொண்டு சேர்த்தது. இரண்டாம் முறை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருவள்ளூர் - திருத்தணி - திருப்பதி. திருப்பதிக்குப் போகும் போது தனியார் பேருந்து கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல கூட்டம் ஏற்றி திருப்பதி கொண்டு போனார்கள். இந்த முறை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருப்பதி. தாமதமாக புறப்பட்ட மணி நேரங்களை சமாளித்து நாலரை மணிக்கெல்லாம் திருப்பதி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டார்கள்.

வழக்கம் போல அங்கிருந்து அலிப்பிரி நோக்கி நடை. 5 கிலோமீட்டர்கள். அலிப்பிரிக்கு சிறிது முன்பாக பேருந்து நிழற்குடை ஒன்றில் செருப்பை பையில் போட்டு, பையைப் பூட்டி எடுத்துக் கொண்டேன். சாமான்கள் எடுத்துச் செல்லும் பிரிவில் பையை ஒப்படைத்து விட்டு வெறுங்கையோடு நடக்க ஆரம்பித்தேன். அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குள் போகும் வழியில், உள்ளே செலுத்திக் கொண்டிருந்தார் ஒருவர். அவரது செலுத்தலுக்கு உட்பட்டு அந்தக் கோவிலுக்குள் போனேன். தலையில் காலணியை வைத்து பாதசேவை செய்வதற்கு 5 ரூபாய் கட்டணம். அதில் கலந்து கொள்ளாமல், சாமியைக் கும்பிட்டுக் கொண்டு சுற்றி வந்தேன். வெளியில் வரும் போது கை நிறைய கற்கண்டுகள் கொடுத்தார்கள்.

ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டேன். ஏறும் போது களைப்பாக இருந்தால் சாப்பிடலாம் என்று மற்றவற்றை பையில். 'எங்கும் உட்காராமல் ஒரே மூச்சில் மேலே கொண்டு சேர்த்து விடு' என்று ஒரு மானசீக வேண்டுதல். அது கொஞ்சம் அதிகமோ என்று காலி கோபுரம் வரை, 1000 படிகள் வரை என்று மனம் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. போன தடவைகளின் பாடங்களின் படி சீரான காலடிகள், கால்களைத் தவிர உடலின் மற்ற பகுதிகள் அதிராமல் நடக்க வேண்டும், கையில் பாரம் எதுவும் இருக்கக் கூடாது என்று மூன்றும் கடைப்பிடித்த படி ஏற ஆரம்பித்தேன்.

450 படிகள் என்ற எண்ணிக்கை முதலில் கண்ணில் பட்டது. நூறுகளாக ஏறி 1000 படிகள் தாண்டியாச்சு. இன்னமும் மார்பில் கனமோ, 'இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது' என்ற உணர்வோ எட்டிக் கூடப் பார்க்கவில்லை. மழை தூற ஆரம்பித்தது. ஏறும் முயற்சியில் சூடாகும் உடம்புக்கு இதமாக மழைத்துளிகள் விழுந்தன. சோர்வைப் போக்கி நடக்க வைப்பதற்காகவா இந்த மழை. எங்கும் நிற்காமல், மழைக்குக் கூட ஒதுங்காமல் நடந்து கொண்டே இருந்தேன்.

காளி கோபுரம் வரும் போது மழை நன்கு பலத்திருந்தது. விரல் அடையாளம் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டேன். 5 மணி 35 நிமிடங்கள். அங்கு வரிசையில் 2 பேர்தான் நின்றிருந்தார்கள். ஓரிரு நிமிடங்கள் ஒதுங்கி நின்று விட்டு நடையைத் தொடர்ந்தேன். 2050 படிகளில் காளி கோபுரம். அடுத்த ஒரு கிலோமீட்டரில் மான் பூங்கா. சாலையைக் கடந்து அடுத்த கட்டம். கால்கள் மட்டும் நடந்து கொண்டே இருந்தன. காளி கோபுரத்துக்குப் பிறகு ஒரு துண்டு கற்கண்டு.

இருட்ட ஆரம்பித்தும் விளக்குகள் போட்டிருக்கவில்லை. அரையிருட்டில் நடை, மேற்கூரை இல்லாத இடங்களில் வெளிச்சம். ஏறும் மலை ஏறி இறங்கும் இடம் வந்தது. விளக்குகளும் தலை காட்ட ஆரம்பித்திருந்தன. வாகன சாலை ஓரமாக நடை. ஏழே கால் மணிக்கெல்லாம் ஏறி முடித்திருந்தேன். மாதவ நிலையத்தில் கீழே கொடுத்த பையைப் பற்றிக் கேட்டால் இன்னும் தள்ளி சுட்டினார்கள். கோயிலை நோக்கிய திசையில் ஓரிரு நூறு மீட்டர்கள் தாண்டி பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம். நினைத்திருந்தது போலவே பை இன்னும் வந்திருக்கவில்லை. '7.25 ஆவுது சார், எட்டரைக்கு வாங்க, கிடைத்து விடும்'.

ஓய்வெடுக்க, அந்த அலுவலகத்துக்கு வெளியிலேயே தரையில் உட்கார்ந்து கொண்டேன். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு சாமான் வண்டி வந்து நின்று எல்லா பைகளையும் இறக்கி கொண்டு போனார்கள். அடையாளச் சீட்டுடன் உள்ளே போய் பையை எடுத்துக் கொண்டேன்.

வழியில் தெரிந்த கட்டிடங்களை நோக்கிப் போய் கீழே வரவேற்பறையில், தங்கும் அறை கிடைக்குமா என்று கேட்டால், ஒரு பெரியவர் வருத்தம் தெரிவித்து விட்டு, பயணிகள் வசதிக் கட்டிடம் என்ற இடங்களில் ஒரு லாக்கர் வாங்கிக் கொண்டு குளித்து தயாராகி விடலாம் என்று இரண்டு இடங்களை சுட்டினார். கொஞ்சம் தள்ளி இருக்கும் கட்டிடத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அடையாளமும் சொன்னார்.

பயணிகள் வசதிக் கூடம் - 3 அது. அங்கும் பொருள் அடைக்கும் லாக்கர் எதுவும் காலியாக இல்லை. மேல் மாடிக்குப் போய் ஒரு கூடத்துக்கு வெளியில் பலர் இருந்தது போல நானும் பையை வைத்து விட்டு, போட்டிருந்த உடைகளை மாற்றி காயப் போட்டு விட்டு புதிதாக வாங்கியிருந்த துண்டுடன் குளிக்கப் போய் விட்டேன். தலை துவட்ட துண்டு, தேய்த்துக் கொள்ள சோப்பு, மாற்று உடைகள் என்று எல்லாமே தேவைக்கு இருந்தன. குளித்து விட்டு வரும் போது பை அப்படியே இருந்தது.

'நாம் இல்லாத நேரத்தில் யாராவது பையை எடுத்துக் கொண்டு விட்டால், என்ன செய்வோம்' என்ற எண்ணத்தோடு மாற்றுடை மாட்டிக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டேன். பை போனால், ஒரு செருப்பு, புதிதாக வாங்கிய பை, பூட்டு, ஒரு போர்வை, அழுக்கான உடைகள்தான் போகும் என்று மனதளவில் தயாரித்துக் கொண்டேன்.

கோவிலுக்குள் போனால் இரண்டு, இரண்டரை மணி நேரம் ஆகும் என்று போன முறைகளின் அனுபவம். கோயிலின் முன்புறமாக போகும் போது பிரதான நுழைவாயிலில் போய்க் கேட்டுப் பார்க்கலாம் என்று கூட ஒரு முயற்சி எட்டிப் பார்த்தது. கடைசியில் விதிக்கப்பட்ட பாதையில் நடந்து வைகுண்டம் வரிசை நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். நடந்தே மலையேறி இலவச டோக்கன்கள் பெற்றவர்களுக்கு மட்டும் என்று போட்ட நுழைவாயிலில் போன தடவைகளில் ஒரு சிலர் மட்டும்தான் வரிசையில் நின்றிருந்தார்கள். இப்போது பெரிய வரிசை. இன்றைக்குக் கதை கந்தல்தான் என்று நினைத்துக் கொண்டே நின்றேன். எதிர்பார்த்தது போலவே காத்திருக்கும் அறை ஒன்றில் உட்கார அனுப்பி விட்டார்கள்.

அங்கு சாப்பிடுவதற்கு உப்புமா கொடுத்தார்கள். அதை ஒரு இலையில் வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இங்கு காத்திருத்தலே மணிக்கணக்கில் ஆனால், திரும்பி விடலாமா என்று எண்ணம் எட்டிப் பார்த்த அதே நிமிடத்தில் கதவைத் திறந்து போக அனுமதித்தார்கள். போன முறைகளில் போன கீழ் தள வழியைத் தவிர்த்து நேராக மேல் தளத்திலேயே வரிசை நகர்ந்தது. அரை மணி நேரத்துக்குள் கோவிலை ஒட்டிய பாதைக்குள் வந்து விட்டிருந்தோம். ஒன்பதரை, ஒன்பதே முக்கால் மணிதான் இருக்கும். கோயிலுக்குள் நுழைந்த பிறகு மண்டபத்துக்குள் திருப்பி விடும் பாதையில் போக வேண்டியிருந்தது. அங்கும் நெரிசல் இல்லாமல் ஓடி ஓடி வெளியில் வந்து, நேராக போகும் வாசலுக்கு அருகிலான வரிசையில் கடைசியில் நின்று கொண்டேன். கொடிக்கம்பம் இருக்கும் வாசலை திறக்கும் போது அதில் விட்டு விடுவார்கள்.

வரிசையில் நின்றவர்கள் போவதற்கு அனுமதி கிடைத்த பிறகு வரிசை நகர ஆரம்பித்த பிறகு, கொடிக்கம்ப வாசலில் நின்றிருந்த சேவகர், என் கண்களைப் பார்த்து அழைத்தவாறே வாசலைத் திறந்தார். முதல் ஆளாக அந்த வாசலில் போய் கோவில் வாசலின் கூட்டத்தில் போய்க் கலந்தேன். பகவான் சன்னிதிக்குள் போகும் போது வரிசையின் நடுவில் சுழலில் மாட்டிக் கொண்டது போல நின்றிருந்தேன். எப்படிக் கும்பிடுவது என்று தெரியாத அளவுக்கு நகரும் நேரம் நீண்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு. சாமிக்கு அருகில் வரும் போது வரிசையில் ஏதோ குளறுபடியில் ஓரிரு அடிகள் வெற்றிடமாகவே ஏற்பட்டது.

இதற்கு மேல் பார்க்க என்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடு, ஒரு கை தோளைப் பிடித்து தள்ளியது. வெளியில் வந்து விட்டேன். வெளியில் வந்து கையில் கிடைத்த லட்டுவை வாயில் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று பை வைத்திருந்த நிலையம்.

ஞாயிற்றுக் கிழமை காலைக்குள் திரும்பி விடலாம். பையும் துணிகளும் வைத்தது வைத்தது போல இருந்தன. துணிகளை மடித்து பையில் வைத்து எடுத்துக் கொண்டேன். காலில் செருப்பு அணிந்து சாலைக்கு வந்து பேருந்துக்கு கை காட்டினேன். திரும்பும் போது நடக்கப் போவதில்லை. ஓட்டுநர் நிறுத்தி ஏற்றிக் கொண்டார். உட்கார இடமில்லை. வழியில் நிறுத்தி என்னை அழைத்து அவருக்குப் பின்புறமிருந்த கம்பியில் உட்கார்ந்து பிடித்துக் கொள்ளச் சொன்னார். கிட்டத்தட்ட அவரது முகத்துக்கு நேர் பின்னால் பக்கவாட்டில். நானே பேருந்து ஓட்டும் உணர்வு, பேருந்து ஓட்டும் முயற்சிகள் மட்டும் அவரது.

அந்த மலை இறக்கம் மறக்க முடியாத ஒன்று. பேருந்துக்கு முன்பு ஒரு ஜீப் போய்க் கொண்டிருந்தது. வளைவுகளுக்கு முன்பு வேகத்தைக் குறைத்து, ஜீப்பை போக விட்டுத் திரும்புகிறார். கொஞ்சம் கணிப்பு தவறினாலும், திரும்பும் போது தேவையான வேகம் ஜீப்பை இடித்து விடும். ஜீப்பும் வேகத்தை எதிர்பாராமல் குறைத்து விடக் கூடாது. பேருந்தின் பின்னால் இன்னும் வாகனங்கள்.

ஹேர்பின் வளைவுகளில், ஓட்டுனர் கையால் பேருந்தைத் தள்ளுவது போன்ற எத்தனத்துடன் திருப்ப வேண்டியிருக்கிறது. அலிப்பிரி வரை விரித்த கண்களை மூடவே மனம் வரவில்லை. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். பேருந்து நிறுத்தத்தில் நேரம் பார்க்கும் போது சரியாக 12 மணி காட்டியது. சுமார் பத்தரை மணிக்கு சாமி தரிசனம் செய்திருப்பேன். 11 மணிக்கு பேருந்து பிடித்து 12 மணிக்கு பேருந்து நிலையம்.

அரசு விரைவுப் பேருந்து கழகத்தின் சொகுசுப் பேருந்து. 100 ரூபாய் கட்டணம். ஏறி சொகுசாக சாய்ந்து கொண்டேன். 'ஊர் ஊராக நின்று, கடைகடையாக தேநீர் குடித்து 7 மணிக்குத்தான் கொண்டு சேர்ப்பான்' என்று யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். நல்ல தூக்கம். எழுந்து கொண்டது, 'ரெட்ஹில்ஸ் கேட்டது யார்' என்று நடத்துனர் குரல் கொடுத்த போது. நான்கு மணி தாண்டியிருந்தது. அதன் பிறகு தூங்கவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கிக் கொண்டேன். இறங்கியதும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூப்பிட, ராமாபுரத்துக்கு 120 ரூபாய் சொன்னார். 300க்குக் குறைந்து ஆரம்பிக்கவே மாட்டார்கள். 10-12 கிலோமீட்டர் தூரத்துக்கு எனது கணக்குப்படி சரியான கட்டணம்தான். கொஞ்சம் முரண்டு பிடித்து ஏறிக் கொண்டேன்.

சூரியன் பண்பலையின் நேரடி பாடல் நிகழ்ச்சி (பணப்பாக்கம் சுகுமார்?) ஓட விட்டிருந்தார். அருமையான பாடல்களுடன், வழியில் சில்லறை மாற்ற தானியங்கி பண எந்திரத்தில் பணம் எடுத்து 120 ரூபாய்களையே கொடுத்து அனுப்பி வைத்தேன்.

இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகள்

மென்பொருள் துறையில் நிலவரங்கள்
கடந்த ஒரு ஆண்டு கால பொருளாதாரச் சுணக்கத்தின் போது வளர்ந்த நாடுகளுக்கு மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனங்களின் விற்பனை முறைகளில் பெரிய மாற்றங்கள் நடந்திருப்பதாக தெரிகின்றது. time and materials என்ற முறையில் இத்தனை பேர் இத்தனை நாள் வேலை பார்த்தார்கள் என்று கணக்குக் காட்டி அதன் பேரில் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பது மாறி, இன்ன வேலை இன்ன நாளுக்குள் முடித்தால் இவ்வளவு கட்டணம் என்ற fixed price ஒப்பந்தங்கள் அதிகமாகியிருக்கின்றன.

இதனால், தலைகளின் எண்ணிக்கைக் காட்டுவதற்காக பெருமளவு பொறியியல் பட்டதாரிகளை எடுத்து benchல் வைத்திருக்கும் பழக்கம் பெரிதும் குறைந்து விடும்.

முன்னணி மென்பொருள் சேவை நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு நண்பரின் தகவலின்படி, மொத்தத் திட்டப்பணியில் சுமார் 40% நிரல் எழுதுதல், சோதனை செய்தலில் செலவிடப்படுகிறது. 60% மற்ற பணிகளில் செலவாகிறது.

வெறும் நிரலாக்கம் மட்டும் தெரிந்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறையவதற்கான சாத்தியங்கள்தான் தெரிகின்றன.

கணினி அறிவியல், கணினி பயன்பாடு அல்லது தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்கள், இன்னொரு துறையில் தமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணம் : கணக்கியல், வணிகவியல், மேலாண்மை, சமூகவியல்.

கணினி அறிவியலில் உயர் நிலை ஆராய்ச்சி செய்யத் தேவைப்படும் சில ஆயிரம் பேர்களுக்கு மட்டும்தான் வெறும் கணினியியலில் தேவைகள் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. மற்றவர்களுக்கு கணினி பயன்பாடு குறித்த அறிவு, எழுதத் தெரிவது போன்ற அடிப்படைத் தேவையாக இருக்கும். அதற்கு மேல் ஒரு வித்தை, ஒரு துறையில் வல்லமை இருப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பொதுவான ஒரு குறிப்பு

என்ன செய்தாலும் தகவல் பரிமாற்றத் திறமைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, பன்மொழி வன்மை என்று நம்மிடம் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்ளும் திறமைகள் எல்லா காலத்துக்கும் தேவையான ஒன்று.

படிப்பது, பயணம் செய்வது, புதியவர்களை சந்திப்பது, செவி மடுத்துக் கேட்பது என்று உள்ளதை உள்வாங்கிக் கொள்ளும் திறமை மேலே சொன்னதின் மறுபுறம். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை.

காலம் கருதுதல்

'எதைச் செய்வது எதை விடுவது, ஒரு நாளில் 24 மணி நேரம்தானே இருக்கிறது?'

இப்படிச் சலித்துக் கொள்ளாதவர்கள் குறைவுதான். (இந்த பிரச்சனை இல்லாதவர்கள் தமது திறமைகளுக்கேற்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லலாம் :-)

செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதற்கு திட்டமிடலும், கண்காணித்தலும், சரிசெய்துகொள்ளலும் தேவை.

ஒரு கண்ணாடி குடுவையில் பெரிய கற்களை போட்டு நிரப்பிய பிறகு இருக்கும் இடைவெளிகளில் சின்னச் சின்னக் கற்களை நிரப்ப இடம் இருக்கும். அதற்கும் மேல் மணல் துகள்களை புகுத்தி விடலாம். இதுக்கு மேல் என்ன அடைக்க முடியும் என்று நினைத்தால், தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வைக்கலாம்.

இது பற்றிய குட்டிக்கதையை மின்னஞ்சல்களில் படித்திருக்கலாம். செய்ய வேண்டியவற்றை
 • செய்தே தீர வேண்டியவை (பெரிய கற்கள்),
 • செய்தால் நன்றாக இருக்கும் (சின்ன கற்கள்),
 • செய்யா விட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் (மணல் துகள்கள்),
 • முடிஞ்சா செய்தால் போதும் (தண்ணீர்)
  என்று பிரித்துக் கொள்ளலாம்.
அப்போது பெரிய கற்களுக்காக போட்ட திட்டம் ஒரு போதும் தவறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

காலை 8 மணிக்கு மேலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று திட்டம். எப்படியாவது 8 மணிக்கு போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டால் அது தவறிப் போய் தாமதமாகப் போகும் சாத்தியங்கள் அதிகம்.

வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கலாம், வண்டி பஞ்சர் ஆகி விடலாம், யாருக்காவது உதவி செய்ய நிற்க வேண்டி நேரலாம். இது போன்ற காரணங்களால் முக்கியமான சந்திப்புக்கு தாமதமாகி விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

 • முதலில் கல்லைப் போடுங்கள் - 8 மணிக்கு அலுவலகத்தில் மேலாளருடன் சந்திப்பு.
 • அதைச் சுற்றி சரளைக் கற்களை புகுத்துங்கள் - 7.30 முதல் 8 வரை அலுவலகத்தில் மின்னஞ்சல்கள் படிப்பு
 • கொஞ்சம் மணல் துகள்களை சேருங்கள் - வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் (அரை மணி நேரம் ஆகும்) வழியில் ஒரு காபி. 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பாமல், காபி குடிக்க 15 நிமிடங்களைச் சேர்த்து 6.45க்குக் கிளம்பி விட வேண்டும்.
 • கடைசியில் தண்ணீர் - 6.30 முதல் 6.45 வரை செய்தித்தாள் படிக்க வேண்டும்.
அதாவது 6.30க்கு முழுவதும் தயாராகி விட வேண்டும்.

இப்போது ஏதாவது காரணத்தால் தாமதம் ஏற்பட்டால் செய்தித் தாள் படிப்பதை ரத்து செய்யலாம், அதையும் தாண்டி தாமதமாகும் வாய்ப்பு தெரிந்தால் காபி குடிக்கும் நிறுத்தத்தை விடுத்து நேராக அலுவலகம் போய் விடலாம். என்ன செய்தும் நினைத்த நேரத்துக்குப் போய்ச் சேர முடியவில்லை. 7.45க்குத்தான் போக முடிந்தது என்றால் மின்னஞ்சல் படிப்பதைத் தள்ளிப் போட்டு விட்டு 8 மணிக்கு சந்திப்புக்குத் தயாராக இருக்கலாம்.

முக்கியமான ஒரு பணியைச் சுற்றி மற்ற சின்னப் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டால், சமூக சூழல்களில் மற்றவர்களுக்குக் கொடுத்த திட்டங்களை தவறாமல் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

இந்தியம்

 • சாதி அமைப்புதான் இந்துமதம், இந்துமதத்தை ஒழித்தால்தான் சாதி முறை ஒழியும் என்பது சரிதானா?

 • அயோத்தியில் கோவில் கட்டுவதும், செங்கல் பூஜை செய்வதும்தான் இந்து மதமா?
 • ராமர் பாலம் என்று சச்சரவு எழுப்பி முன்னேற்றப் பணிகளுக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் இந்து மதமா?

 • கோடி கோடியாக சுரண்டி குவித்து விட்டு திருப்பதிக்குப் போய் உண்டியலை நிறைப்பதுதான் இந்து மதமா?
 • நிர்வாணச் சாமியார்கள் சூலாயுதத்துடன் அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் குளிப்பதுதான் இந்து மதமா?

 • மற்ற மதங்களுடன் பகையை வளர்த்து சமூகங்களை மோத விட்டு ரத்தம் குடிக்க முயல்வதுதான் இந்து மதமா?
 • பிள்ளையார் சிலைகளை தெரு முனைகளில் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதுதான் இந்து மதமா?
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா அமைப்புகளும், இந்து மதத்தை ஒழித்துக் கட்டி விட முயலும் கடவுள் மறுப்பு அமைப்புகளும் இவற்றில்தான் தம்மை நிலைநாட்டிக் கொள்கின்றன.

ஆதரவாளர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டும் இந்த மதம் ஆண்டாண்டு காலமாக மக்களிடையே தளைத்து நிற்பதற்குக் காரணம் மேலே என்ன?

யார் உண்மையான இந்து? இந்து மதம் எங்கு வாழ்கிறது?
 • யாரும் நம்முடைய தலைவன் இல்லை? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை உணர்ந்து தனக்கு சரி எனப்படுவதைச் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்து மதம்.
 • தன்னுடைய நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல், ஆன்மீகத்தை வீடு என்று நான்கு சுவர்களுக்குள்ளோ, இன்னும் சிறப்பாக தனது மனதுக்குள் மட்டும் பேணிக் கொள்பவர் இந்து.
 • எம்மதமும் சம்மதமே, பூமியில் ஓடும் எல்லா நதிகளும் கடலைப் போய்ச் சேருவது போல, எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் இறுதியில் இறைவனைப் போய்ச் சேருவார்கள் என்று மனத் தெளிவுதான் இந்து மதம்.
 • ஆங்கே ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்று தனது செல்வங்களை அடுத்தவர் நலனுக்குப் பயன்படுத்து பொருளாதாரப் பொறுப்புணர்ச்சிதான் இந்து மதம்.
 • வெயிலில் வாடி வருபவருக்குத் தண்ணீர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் மாண்புதான் இந்துமதம்.
 • நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வலிமை நம் கையிலேயே இருக்கிறது என்று தன்னம்பிக்கை பாவிப்பது இந்து மதம்.
 • பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று தன்னிடம் மாறுபட்டவர்களையும் புரிந்து கொள்ள முற்பட்டு பகைமை ஒழித்து வாழும் நட்பு இந்து மதம்.
சாதிப் பெயரை குறிப்பிடாமலே, பழகுபவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

பகட்டும், கபடமும், ஏய்த்தலும் நிரம்பிய கோயில்களுக்குப் போகாமலேயே நிம்மதியாக இருக்க முடிகிறது.

ராமர் பாலம் என்று பிதற்றுவது மடத்தனம் என்று தெளிவாகத் தெரிகிறது. அயோத்தி ராமர் கோவிலுக்காக செங்கல் பூஜையும், கரசேவையும் மக்களைச் சுரண்டும் முயற்சிகள் என்று கண்டிக்க முடிகிறது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்று ஆன்மீகத்தை பாட்டிலில் அடைத்து விற்க முயலும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இதுதான் இந்து மதம் எனக்கு.

சில மீள்பதிவுகள் (2006 - ஏப்ரல்/மே)

துரோகிகளை விட விரோதிகள் மேல். விரோதியின் கையில் அதிகாரம் இருந்தால் விழிப்பாக இருந்து நமது நலன்களை பாதுகாத்துக் கொள்வோம். துரோகிகள் முதுகில் குத்தும் போது எல்லாமே முடிந்து போயிருக்கும்.

2006ம் ஆண்டில், தமிழினத்தின் விரோதியான ஜெயலலிதாவைத் தோற்கடித்து, 'நட்பான' கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தமிழருக்கு என்ன நடந்திருக்கிறது?
 1. ஈழத்தமிழர் வாழ்க்கை காரிருளில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது.
 2. நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசும் அமைச்சர்கள் அதட்டப்படுகிறார்கள், இந்தியாவில் இந்தியில்தான் பேச வேண்டும்.
 3. மைல் கல்லுகள், பர்லாங்கு கல்லுகளில் முதல் கல் - தமிழ், இரண்டாவது கல் - ஆங்கிலம், மூன்றாவது கல் - இந்தி என்று தமிழக முதல்வரே ஏற்றுக் கொண்டு மும்மொழித் திட்டம் வந்து விட்டது.
2006ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எழுதிய சில பதிவுகளிலிருந்து...

எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி

என்னுடைய நோக்கில் திமுக, அதிமுக இரண்டுமே எரிகிற கொள்ளிகள்.

இரண்டில் எது தேறுமோ, எது குறைந்த சேதம் விளைவுக்குமோ அதற்கு வாய்ப்பளிப்பதுதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. 1996ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மாநிலமே திரண்டு திமுகவிற்கு ஆட்சிப் பொறுப்பை அளித்தது.

2004ல் இப்படியே விட்டால், இந்த அம்மா தன்னை அரசியாக முடிசூட்டிக் கொள்வார்கள் என்று 39 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர் மக்கள்.

2006 தேர்தலில் அப்படித் தலை போகும் பிரச்சனை என்ன?

ஊடகங்கள் என்ற கண்ணாடியின் மூலம்தான் மக்கள் உலகையும், சமூகத்தையும் பார்க்கிறார்கள். ஊடகத்துறை ஒரே கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், திரிக்கப்பட்ட கருத்துகளை அளிக்கும் வண்ணம் வளர்ந்து விட்டது, அவ்வாறு வளர அரசியல் கருவிகள் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்கிடமளிப்பது.

நிலைமை இன்னும் மோசமாகி விடாமல் தடுக்க, திமுகவுக்கு கூடுதல் அரசியல் பலம் கிடைக்காமல் இருப்பது நல்லது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, கூட்டணிக்கட்சிகளை பெரிதும் நம்பி ஆட்சி அமைக்கும் நிலை வருவது மாநிலத்துக்கு நல்லது.

ஆனால், தம்மை ஓரளவே சார்ந்திருக்கும் மத்திய அரசையே தமது குடும்ப தொழில் நன்மைக்கேற்ப வளைக்க முனையும் திமுக தலைமை, மாநில அரசு அதிகாரத்தைத் தனியாகவோ கூட்டாகவோ கைப்பற்றி விட்டால் இன்னும் தீவிரமாக தமது ஊடக ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனையும்.

ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.

திமுக ஆட்சி அமைத்தால், அதிமுக ஆட்சி அமைத்தால்

திமுக ஆட்சி அமைத்தால்

நன்மைகள்
1. அதிகாரம் பரவலாக்கப்படும். முதலமைச்சருக்கு பயந்து நடுங்கிக் கொண்டு இல்லாமல் அமைச்சர்களும் மற்ற நிர்வாகிகளும் தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும்.
2. முதல்வர் பத்திரிகைகளும், தோழமைக் கட்சிகளும் எளிதில் அணுகும்படியாக இருப்பார்.
3. மத்திய அரசுடன் நல்லுறவு பேணப்பட்டு தமிழகத்துக்கான திட்டங்கள் சரிவர நிறைவேறும்.

தீமைகள்
1. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கழகங்களைப் பொறுத்தவரை அதிகாரம் == ஊழல். பரவலான அதிகாரம் என்பது பரவலான ஊழல் என்றே பொருள்படும்.
2. வட்டார குண்டர்களுக்கு மீண்டும் துளிர்த்து விடும்.
3. கருணாநிதியின் குடும்பத் தொழில்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகி விடும்.

அதிமுக ஆட்சி அமைத்தால்
நன்மைகள்
1. யாராயிருந்தாலும் (வீரப்பன், ஜெயேந்திரர், சரவணபவன் முதலாளி, எஸ் ஏ ராஜா, பேட்டை தாதாக்கள்) தப்பு செய்தால் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற ஒரு பயத்தால் கலவரங்கள், வன்முறைகள் தொடர்ந்து குறைவாக இருக்கும்.
2. உறுதியான தலைமையால் நிர்வாகத்தின் முடிவுகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு பலன்கள் கிடைக்கத் தொடங்கும். வட்டங்கள் மாவட்டங்களின் வால் ஆடுவது ஒரு அளவுக்குள்ளேயே இருக்கும்.
3. தேசிய அளவில் காங்கிரசு, பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தீமைகள்
1. அண்டை மாநில முதல்வர்களையும், மத்திய அரசையும், அமைச்சரவை சகாக்களையும், பத்திரிகைகளையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் தலைமையால், தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகள் சிக்கலாகிக் கொண்டே போகும்.
2. சசிகலா குடும்பத்தின் கெடுபிடிகள் மற்றும் சொத்துக் குவிப்புக்கு இன்னும் ஊக்கம் கிடைத்து விடும்.
3. பெரும்பான்மை மதவாத குழுக்களுக்கு புத்துயிர் வர வாய்ப்புகள் ஏற்படும்.

கலைஞர் அவர்களின் குறுமதி

தமிழகத்தில் அரசை தலைமை ஏற்றுள்ள் கருணாநிதியை தாக்கிக் குறை கூறி எழுதப்படும் பதிவு இது.

முதலில் சமீபத்திய நிகழ்வுகள்.

1. நாங்கள் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 15,000 ரூபாய் கொடுக்கிறோம். எதிர்க் கட்சியினர், அவர்கள் வாக்களித்த அரைப் பவுன் தங்கத்தைக் கொடுக்கட்டும் நாம் இணைந்து திருமணங்களை நடத்துவோம் என்று பேட்டியில் கூறி விட்டு, அதே பேட்டியில், எதிர்க் கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பது தெரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இவர் 15,000 ரூபாய் கொடுப்பாராம், தோற்று எதிர்க்கட்சியில் அமையப்போகும் மாற்றுக் கட்சியினர் தங்கம் கொடுக்க வேண்டுமாம். அவ்வளவு நக்கல், கேட்டால் அவர்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொடுக்கலாமே என்று கவிதை எழுதுவார்.

2. "சிறுத்தைகள் உலாவும்போது, சிங்கங்கள் உலாவக் கூடாதா! மிருக சாதிகள் அடித்துக் கொள்வது இயல்புதானே"

இது இயல்பாக இலக்கிய மனதிலிருந்து வந்த சொற்றொடர்கள்தான். இயல்பான சிந்தனைகளே இப்படி இருந்தால் இவர் முயன்று சிந்தித்து நடத்தும் திட்டங்கள் எப்படி இருக்கும்?

3. வைகோ திமுக கூட்டணியை விட்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை யசோதரா காவியம் என்ற கதையுடன் ஒப்பிட்டு எழுதியது
இவ்வளவு வயதுக்கு அப்புறம், இத்தனை கோடி மக்கள் வழி நடக்கக் காத்திருக்கும் போது, எத்தகைய மன ஓட்டம் இது மாதிரியான ஒப்பீட்டைச் செய்யத் தூண்டியிருக்கும்.

ஆரம்பம் முதலே தனது சுயநல நோக்கங்களுக்காகத்தான் தமிழ், தமிழ் நாடு என்று கலைஞர் பேசி வந்திருக்கிறாரே தவிர, மக்களின் மீது அன்பு பொங்கி அவர் ஆட்சியிலிருக்கும் போதோ, எதிர்க் கட்சியிலிருக்கும் போதோ செய்த பணிகளை யாராவது பட்டியலிட்டால் உதவியாயிருக்கும். அவர் செய்த ஒவ்வொரு திட்டத்துக்கும், அவரது தனி வாழ்க்கை நலம் காரணமாக இருந்திருக்கும்.

4. இலவசத் தொலைக்காட்சித் திட்டம்

மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தோன்றிய தலைவர்களில் யாருக்கு என்ன திட்டம் தோன்றியது:
அ. மா கோ இராமசந்திரன் - பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம், முதியோர்களுக்கு வேட்டி சேலை, ஏழைப் பெண்களுக்கு திருமணத் திட்டம்.
ஜெ ஜெயலலிதா - பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டி, இலவச அரிசி, பள்ளித் தேர்ச்சி பெற்றால் கணினி

ஆ. மு கருணாநிதி
இலவசமாக தொலைக்காட்சி

முதல் பிரிவு, பசிப்பிணி, வறுமைப்பிணி, அறியாமைப் பணி தீர்க்க வேண்டும் என்று கொடுக்கப்படுபவை. இரண்டாவது பார்ப்பவரை மந்தமாக்கும் முட்டாள்பெட்டி. அறுபது ஆண்டு காலம் அரசியல் பார்த்து விட்ட தலைவருக்கு தோன்றிய திட்டம் இது.

5. ஆடம்பர வீடு
திருக்குவளையில் ஏழைத் தந்தைக்கு மகனாகப் பிறந்து போராட்டங்களைச் சந்தித்து, எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்திய தலைவரின் வீட்டை என்டிடிவியின் காட்டினார்கள். வீட்டை இல்லை, வீட்டின் வரவேற்பறையை. அவரது மகள் திருமதி கனிமொழி தொலைக்காட்சி நிருபருடன் பேசுகிறார். அவர்கள் அமர்ந்திருந்த மென் இருக்கைகள் மட்டுமே இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிருக்கும். அவர் போகும் ஊர்தி இலட்சக்கணக்கான மதிப்பிலிருக்கிறது.

அவமானமாக இல்லை! தன்னைத் தலைவராகக் கொண்டாடும் தொண்டர்கள் எங்கே, இவரின் வாழ்க்கைத் தரம் எங்கே?

ஏன்? ஓட்டு வீட்டில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்டிடிவி நிருபர் தமிழினத் தலைவரை பேட்டி காண்பதுதானே தமிழ் நாட்டின் இயல்புக்குப் பொருத்தம். காணி நிலம் வேண்டும், பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் வேண்டும் என்று கனவு கண்ட தமிழன் வாழ்ந்த அதே நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் தமிழினத் தலைவரா?

என்ன செய்து விட்டார் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்?

6. ஸ்டாலின் உயர்ந்த சாதி தகப்பனுக்கு மகனாகப் பிறக்காததுதான் ஒரே தவறாம். ஏன் ஐயா, ஸ்டாலினின் வயதில் இருக்கும் சராசரித் தமிழனின், கலைஞர் வயதில் இருக்கும் ஒர் சராசரி தகப்பனின் நிலைமையை விட என்ன குறைந்து விட்டது உங்களுக்கு. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

7. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக வெளி நாடெல்லாம் அனுப்பு மருத்துவம் பார்த்தாரே தமிழினத் தலைவர்? அவரது தொண்டர்களில் எத்தனை பேருக்கு அந்த வசதி கிட்டிடும்?

8. தொண்ணூற்றி சொச்சம் இருக்கைகளே இருந்தாலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஏன் மனமில்லை? இதையே ஜெயலலிதா செய்திருந்தால் இன்றெல்லாம் பதிவுகள் தூள் பறந்திருக்கும்? கவிதைகள் முரசொலியை நிறைத்திருக்கும். என்ன ஒரு ஆணவம் என்று நாடே குமுறியிருக்கும். செய்திருப்பவர் பெருந்தலைவராயிற்றே, எந்த முணுமுணுப்பும் இல்லை.

கலைஞர் மீது சுமத்தப்படும் புகழ் மொழிகளும், பட்டங்களும், தகுதிகளும் அவருக்கு உண்மையிலேயே பொருந்துமா? அவர் செய்பவையும், சொல்பவையும் படித்த வசதி படைத்த மக்களுக்கு ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

ஆள்பவரின் செங்கோலின் கீழ்தானே நாடு சிறக்க வேண்டும். இத்தகைய குறுமதியுடைய தலைவர் எப்படித்் திரும்ப திரும்ப ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்?

தமிழகத் தேர்தல்கள்

அற்பனுக்கு வாழ்வு வந்த கதையாக தன்னை முடிசூட்டப்பட்ட அரசியாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய ஆசைகளை எல்லாம் பதவியைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முனைய அதிமுக ஆட்சி மாநில மக்களின் வெறுப்பை ஈட்டிக் கொண்டது. மகாமகத்தில் குளிக்கப் போனதிலிருந்து, சென்னை நகர சாலைகளின் போக்குவரத்தை முடக்கி வைப்பது, வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் நடத்துவது, நிலங்களை வாங்கிக் குவிப்பது என்று போட்ட ஆட்டம், அடுத்த தேர்தலில் தமிழகமே ஜெயலலிதாவுக்கு எதிராக திரண்டது. திமுக அதன் பலனை அறுவடை செய்து ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தல் நடந்த சமயம் நான் வேலை முன்னிட்டு இந்தூரில், தங்கியிருந்தேன். தமிழகத்தைப் பார்த்து அந்த ஊர் ஆட்கள் எல்லாம் சிரித்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு, ஐக்கிய முன்னணி அரசு, மீண்டும் பாஜக அரசு என்று அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி ஆதரிக்கும் மத்திய அரசுகள் அமந்தன.

பாஜக என்ற நச்சு சக்திக்கு தமிழகத்தில் முதலில் காலூன்ற வழி செய்த இழி பெருமையை ஈட்டிக் கொண்ட ஜெயலலிதாவின் அடியொற்றி, திமுகவும் தமது பதவி ஆசைக்கு, தனது கொள்கைகள் என்று அது வரை சொல்லி வந்ததற்கு முற்றிலும் எதிரான பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.

தனது ஐந்தாண்டு ஆட்சி சாதனைகளை முன் வைத்து சாதிக் கட்சிகளின் கூட்டணியுடன், மதக் கட்சியையும் மடியில் கட்டிக் கொண்டு நின்ற திமுக அடுத்த தேர்தலில் தோற்றுப் போனது வருத்தமானது என்றாலும், பாஜக கூட்டுக்கு சரியான தண்டனை என்று நினைத்துக் கொண்டேன்.

ஆணவத்துடன் பாஜகவை மட்டும் கூட்டாகக் கொண்டு தேர்தலை எதிர் கொண்ட ஜெயலலிதா கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.

இந்தத் தேர்தலில் மாநிலத்தை எதிர்கொள்ளும் உடனடி ஆபத்து கருணாநிதி குடும்பம் நடத்தி வரும் நெறிபிறழ்ந்த தொழில்களும், அதற்கு கூச்சமில்லாமல் துணை போகும் அந்தக் கட்சியின் அதிகார மையங்களும்தான். ஐந்து வருடங்கள் அவர்கள் கையில் மாநில நிர்வாகமும் போய் விட்டால், பல துறைகளில் நடக்கப்போகும் ஊறுகள் அடுத்த பத்து ஆண்டுகளில் கூட சரி செய்ய முடியாததாகப் போய் விடும்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தனக்கு அளிக்கப்பட்ட துணி துறை இணை அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய சகோதரர் குடும்பம், சம்பந்த்தப்பட துறையில் தொழில் செய்வதால் மறுத்து விட்டாராம் இன்றைய நிதிஅமைச்சர் ப சிதம்பரம். அந்த அரசியல் நேர்மை எங்கே, தமது தொழிலுக்கு சாதகமான துறைகளை மிரட்டிப் பெற்றுக் கொண்டுள்ள திமுக தலைவர் எங்கே?

என்னுடைய விருப்பம் என்னவென்றால் முடிவுகள் கீழ் வருமாறு அமைய வேண்டும்:

திமுக : 80
அதிமுக : 80
(நடுநிலைமை :-)
தேமுதிக : 50
மதிமுக : 10
காங்கிரசு : 10
பாமக : 5 (தமிழ் நாட்டின் சிவசேனா இவர்கள்)

தேமுதிகவை நம்பி கூட்டணி அரசு அமைய வேண்டும். கேட்பாரில்லாமல் ஆடும் இந்தத் தலைகளுக்கு கேள்வி கேட்க ஒரு கூட்டம் வேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 18, 2009

சிப்பிக்குள் முத்து - 5

இது ஒரு தொடர் ஆனால் கதையில்லை

'உன் குழந்தை இன்னும் சின்னப் பொண்ணு இல்லம்மா. வளர்ர வயசு. உன் வறட்டு கொள்கைகள் படி குருணைக் கஞ்சியும், அவித்த காய்கறியும் மட்டும் போதாது. இன்னும் நல்ல சத்தான உணவு எல்லாம் கொடுக்கப் பாரும்மா. கொஞ்சம் வண்ண மயமா ஆடைகள் வேணும். பாட்டு கேட்க ரேடியோ, டிவி வேணும். ஒன்னை மாதிரியே துறவியா குழந்தையும் வளரணுமா!'

இவங்க சொல்றது சரிதான். வீட்டில் நடைமுறைகளை மாற்ற ஆரம்பித்தாள். பாசாங்கு, பொய், ஒருவரை ஒருவர் ஏய்த்தல் இவை இல்லாத ஒரு சூழலில் தன் வீடு இயங்குவது மனதை நிறைத்தது. இப்படியும் வாழ முடியும் என்று உலகுக்குக் காட்டுவோம். யாழினிக்கு இன்னும் கொஞ்சம் பண வசதி, இன்னும் நிறைய ஆடம்பரங்கள் தேடினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை குழந்தை.

மனதில் போட்ட திட்டங்களும் வகுத்த வழிகளும் சரியாக ஓடிக் கொண்டிருந்தன. கணவரின் நினைவும், அந்த வீட்டின் உறவும் மனதில் ஆடும் போது மட்டும் எல்லாம் வெறுமையாகத் தெரியும். 'என்ன ஒரு வாழ்க்கை. குழந்தைக்கு தந்தை இல்லாமல், அவருக்கு ஒரு நல்ல வீட்டை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் என்ன ஒரு பிறவி நான்'. என்று கழிவிரக்கம் பொங்கும். பல்லைக் கடித்துக் கொண்டு அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற வீம்புடன் தாக்குப் பிடித்தாள்.

எப்போதோ சில தருணங்களில் மனம் பொறுக்காமல் ஒரு வாழ்த்து அட்டை ஒரு வாழ்த்துக் குறுஞ்செய்தி என்று அனுப்புவாள். சில சமயம் பதில் வரும். சில சமயம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கும். என்னதான் செய்கிறார் என்று துப்பு விசாரிக்கக் கூட தன்மானம் இடம் கொடுப்பதில்லை. 'அதுக்காக இப்படி விட்டேத்தியா இருக்க முடியுமா! எப்படி இருக்கார் என்ன செய்கிறார்னு தெரிஞ்சுகிட்ட குறைஞ்சா போயிடுவே' என்று நான்கு முறை இடித்த பிறகு பொது நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி விசாரித்தாள்.

'நானும் கூட அவரிடம் பேசி நிறைய நாளாச்சு. கொஞ்சம் பொறுங்க. பேசிட்டுச் சொல்றேன்' ... 'நான் பேசினேன். நல்லா இருக்காராம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் எடுத்திருக்கிறாராம். வீட்டில் புது திரைச்சீலைகள் கூட மாட்டியிருக்கிறாராம்'

மனதுக்குள் சுழித்துக் கொண்டாள். 'பெரிய திரைச்சீலை. என்ன மாட்டியிருப்பார்னு தெரியாதா! வாழ்க்கையில தேவையானதை விட்டுட்டு வெற்றுப் பொருட்கள் பின்னால் ஓடிக்கிட்டிருக்கார்'.

கல்லூரியில் கூடப் படித்த வசந்தியை அவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாள். இவர்களது பக்கத்து வீடு காலியாக இருப்பதை அறிந்து தனது கணவருடன் கலந்தாலோசித்து குடும்பத்துடன் இவர்கள் பக்கம் வந்து விட்டாள். 'ஏதோ ஒரு இடத்தில் இருக்கப் போறோம், உன் பக்கத்தில் இருந்து ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கலாமே!'

பதின்மப் பருவத்துக்குள் நுழைந்திருந்த யாழினிக்கு வசந்தியைக் கண்டாலே ஆகவில்லை. ஆரம்பத்தில் ஏதாவது சொல்லி அவளது கண்டிப்புகளைத் தட்டிக் கழிக்கப் பழகிக் கொண்டிருந்தாள். 'அப்படி எதுவும் இல்லை. நீ சொல்வதை அவள் கேட்டு நடந்தே தீர வேண்டும்' என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். வசந்தி ஒருத்திக்குத்தான் கட்டுப்படுவாள் என்று ஆகி விட்டாள் யாழினி. அம்மாவின் அன்புக்கட்டளைகளுக்கு செவி சாய்த்தாலும் வசந்தி அத்தையிடம் மட்டும்தான் பயம்.

அப்பா என்று ஒரு மனிதரைக் குறித்து கேள்விப் பட்டிருக்கலாம். அது இல்லாதது போலவே நடந்து கொண்டாள். வெளியில் நண்பர்களிடம் அப்பா குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் அம்மாவிடம் எதுவும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அந்த மனிதருக்கு திடீரென்று கதவு திறந்து கொண்டது போலிருக்கிறது. தொலைபேசி சந்திக்க அழைத்தார். பார்த்தார்கள், பேசினார்கள், மறுபடியும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்வது மாறி விடவில்லை என்று புரிந்தது. இவள் புண்பட்டு விட மறுத்தாள். காயப்படுத்தவும் முயற்சிக்கவில்லை.

வீட்டுக்கு அழைத்துப் போனார். நிறைய பணம் செலவழித்து வீட்டை பளபளவென்று வைத்திருந்தார். ஒவ்வொரு அறையிலும் வசதிகள் வழிந்தன. ஆனால் ஒரு வெறுமை தெரிந்தது. சம்பளத்துக்கு செய்த வேலைகளும், காதலின்றி வாங்கப்பட்ட பொருட்களும் உயிரின்றி தெரிந்தன. 'இந்த வீடு தன் தலைவியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது'. என்று ஒரு டயலாக்.

'தலைவியின் இருப்பை தாங்கிக் கொள்ள உங்களுக்கு முடியுமா என்று தெரியவில்லையே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விடை கிடைத்து விட்டது. மனிதர் உள்ளுக்குள் மாறியிருக்கவில்லை. யாழினியைப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு நினைப்பு இருந்தது என்று புரிந்தது. இந்த நிலையில் அவளின் மனதில் ஒரு புதிய பொறுப்பைக் கொண்டு வருவதற்கு முன்பு நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா அப்பாவைப் பார்த்து வருகிறாள் என்று யாழினிக்குத் தெரிந்தது. அவளது முகத்தில் அதுவரை தெரியாத ஒரு சின்னஞ் சிறிய புது மலர்ச்சி தெரிந்தது. இந்தக் குழந்தையை இப்படி தவிக்க விடுகிறோமே என்று குற்றவுணர்வில் தவித்தாள். எங்களிருவருக்கும் இடையில் உறவு பலப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அவர் வெளியூர் போக வேண்டியிருந்த நேரம் வீட்டில் வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்க கூடவே யாழினியும். 'ஓ! வீடு அவ்வளவு அழகா இருக்கு இல்ல! அப்பா உண்மையிலேயே கிரேட்மா. பாவமும் கூட' என்று நிபுணர் கருத்தும் சொல்லி விட்டாள். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று கேட்கவும் செய்தாள். 'இன்னும் நேரம் வரலைம்மா! கொஞ்ச நாள் போகட்டும்' அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

அப்பா மாறவே இல்லை என்று சில பல பலத்த வாக்குவாதங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டு ஒதுங்கி விட்டாள்.

சிப்பிக்குள் முத்து - 4

இது ஒரு தொடர், ஆனால் கதை அல்ல

'ஏண்டி, எவ்வளவு திமிரு இருந்தா ஒரு ஆம்பிளைய வீட்டை விட்டுத் துரத்தி விட்டு நீ தனியா வீட்டை எடுத்துக்க பார்ப்பே! இது என்ன உங்க அப்பன் கொடுத்த சொத்தா! அவரு சம்பாதிச்சு கட்டின வீடு. இந்த நிமிஷமே பெட்டியை எடுத்துக்கிட்டு வெளியில் போய் விடு'

அந்த அபாண்டத்தில் உறைந்து போனாள். கனவில் கூட நினைத்திராத ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டு. அவர் முகத்தைப் பார்க்க முயன்றாள். ஏதாவது குற்றவுணர்ச்சியின் குறுகுறுப்பு தெரிகிறதா! முகத்தின் இறுக்கம் போய் விட்டிருந்தது. உள்ளிருக்கும் உணர்வுகள் இவளுக்குப் புரிந்தன.

சே என்று ஆகி விட்டது. உலகமே தனக்கு எதிராக ஆனது போல உணர்ந்தாள். எல்லாம் போனாலும் தன்மானத்தோடு இருந்தோம் என்ற கழிவிரக்கம் பொங்கியது. கூலிக்கு வந்தவர்களுக்கு படியளப்பவரை திருப்திப் படுத்த வேண்டும். வீட்டிலிருந்து இவளது பொருட்கள் வெளியில் எடுத்துக் குவிக்க ஆரம்பித்தார்கள். குன்றிப் போனாள். 'இது என்ன வக்கிரம் இந்த மனிதர்களுக்கு. நான் எங்கு போவேன். இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பேன்.'

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். 'நான் வேணும்னா போய் பேசட்டுமா'. 'இல்லைங்க வேணாம். உங்க வீட்டில இருந்து கொள்ள மட்டும் இடம் கொடுங்க. கொஞ்ச நாள்ல வேறு இடம் பார்த்துக்கிட்டு போகிறேன்'. மாலதியம்மா தான் தங்கியிருந்த இடத்திற்கு இரண்டு பேரையும் அழைத்துப் போனார்.

இந்தக் கெட்ட கனவிலிருந்து வெளியில் வர எத்தனை யுகங்கள் பிடிக்குமோ கடவுளே! குழந்தை மலங்க மலங்க விழித்தாள். தனியாக எப்படி இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கப் போகிறேனோ! இது வரை தனியாகத்தான் வளர்த்தது வசதியாக மறந்து போயிருந்தது.

வாழ்க்கை அது போக்கில் ஓடத்தானே செய்கிறது. அடுத்த நாளும் விடிந்தது. குழந்தை பள்ளிக்குப் போக வேண்டும். அவளது வாழ்க்கையில் ஒரு சுயம் ஆரம்பித்திருந்தது. மிகச் சிறிய அளவில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அற்புதத்தை அவதானித்துக் கொண்டிருந்தாள்.

தான், தன் கருத்துக்கள், தனது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது உதவிக் கரங்கள் நீண்டன. கல்லூரியில் கூடப் படித்த நெருங்கிய தோழி நடந்ததை அறிந்து ஓடோடி வந்தாள். 'என்னடீ இது, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இப்படி இன்னொருத்தங்க வீட்டில் இருப்பதுதான் உனக்கு தெரிஞ்சுதா! (நல்ல வேளை மாலதி அதைக் கேட்டிருக்கவில்லை). குழந்தை எப்படி நார்மலா வளரும். நாங்க வாங்கிப் போட்ட பிளாட் நுங்கம்பாக்கத்தில் சும்மாத்தான் கிடக்குது. நீ அதை எடுத்துக்கோ! வாடகை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்"

நன்றி சொல்லக் கூடத் தெரியாமல் அதை ஏற்றுக் கொண்டாள். குழந்தைக்கு அவளுக்கே அவளுக்கு என்று ஒரு அறை கிடைத்து விட்டது. கீழே இறங்கிப் போனால் மாலையில் விளையாட ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம். திரும்ப மேலே கொண்டு வருவது பெரும் பாடாக இருக்கும். சிரிப்பும், கலகலப்பும், சிணுங்கல்களும், கண்ணீரும், பேச்சு அருவியும் என்று குழந்தை வாழ்க்கை பொலிந்து கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல தனது தொழில் முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டாள். குடியிருப்போர் நலச் சங்கத்தில் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். இந்தக் குடியிருப்பு மேம்பட்டால், எனக்கும், என் குழந்தைக்கும் (பிற்காலத்தில் இங்கு வந்து விடப் போகும் என் கணவருக்கும் என்று ரகசியமாகச் சேர்த்துக் கொண்டாள்) நல்லதுதானே என்று ஏதோ பிடித்து ஆட்டுவதைப் போல உழைத்துக் கொண்டிருந்தாள்.

நிறுவனம் ஒன்றுக்குப் போய் வேலை செய்யவில்லையே தவிர நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் திட்டமிட்டு ஒழுங்கு அமைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தாள்.
'இவ்வளவு புத்திசாலித்தனமான குழந்தையை மட்டும் கான்வென்டு பள்ளிக்கு அனுப்பி இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைச்ச எவ்வளவு நல்லா இருக்கும். குழந்தைக்கு சுய இரக்கம் வந்து விடும். நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே!' இந்தக் கேள்வி மட்டும் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். பலருக்கு அதை நம்பவே முடியாமல் இருந்தது.

'ஏம்மா, நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சா இன்னும் நல்லா இருக்குமோ!' என்று குழந்தையே கேட்கும் நேரங்கள் மட்டும் வயிற்றில் கத்தியைச் சொருகும் உணர்வைக் கொடுக்கும். ஒருவேளை நாம் செய்வது தவறோ! மனதைத் திடப்படுத்திக் கொண்டு நூறாவது முறையாக தனது நம்பிக்கையை விளக்குவாள்.

ஏழாவது மாடியில் வசிக்கும் அம்மா ஒரு பெரிய நூல் தொகுப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு நூலகம் போல இருக்கும். யாழினியை புத்தகங்களுக்கு அறிமுகப்படுத்துவதை தனது கடமையாக எடுத்துக் கொண்டார். அவளுடன் சேர்ந்து அம்மாவும் நிறைய படிக்கலானாள்.

தன் மீதும் தனது வாழ்க்கை மீதும் ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு தனது பழைய கல்லூரித் தோழர்களை தொடர்பு கொள்வதில் இருந்த தயக்கத்தை விட்டொழித்து அவர்களை வீட்டுக்கு வரவேற்க ஆரம்பித்தாள். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் யாழினியோடு போய் வந்தாள். நெருக்கமான நட்பு என்று சொல்லிக் கொள்ளும் வட்டம் வளர்ந்து கொண்டே போனது.

'பெரியவங்க எல்லோரிடமும் மதிப்பு காட்டணும். அவங்க சொல்லுவதை கவனமா கேட்டு நம்மை நாமே வளர்த்துக்கொள்ளப் பார்க்கணும்'

இதற்கிடையில் மாலதியம்மாவுக்கு பணியிட மாற்றம் கிடைத்து அவர் தன் ஊருக்குத் திரும்பிப் போய் விட்டார். 'மறக்காம வாரா வாரம் தொலைபேசணும், விடாம தொடர்ந்து கடிதம் போடணும்' என்று பல உறுதி மொழிகள் வாங்கிக் கொண்டு புறப்பட்டு போனார்.

சிப்பிக்குள் முத்து - 3

இது ஒரு தொடர் ஆனால் கதையல்ல

அக்கம் பக்கம் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளி என்று போய்க் கொண்டிருந்தார்கள். யாழினியை பள்ளியில் சேர்க்கும் நாள் வரும் போது, எல் கே ஜி, யு கே ஜி எல்லாம் தவிர்த்து இரண்டாவது தெருவில் இருந்த மாநகராட்சி நடத்தும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் கொண்டு விட்டாள்.

நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அதிர்ச்சி. 'இந்தக் குழந்தையையும் உன்னைப் போலப் பைத்தியமாக வளர்த்துக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கப் போகிறாயா' என்று கத்திக் கொண்டு போனாள் அம்மா. 'இந்தக் காலத்தில் யாராவது தமிழ் மீடியம் படிப்பாங்களா! அதுவும் அரசாங்கப் பள்ளியில. அப்புறம் சேரிக் குழந்தைகளுடன்தான் சேரும். பிச்சைக்காரியாகத்தான் வளரும்' இது மோகன்.

'இந்த ஊரில் பிறந்து, இந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டு வளரும் என் குழந்தை இந்த ஊர் குழந்தைகளுடன் இந்த ஊர் படிப்பைப் படிக்கட்டும். அப்படி மாநகராட்சி பள்ளியில் ஏதாவது குறை இருந்தால், என் குழந்தை சாமர்த்தியமா மாற்றிக் காட்டுவா'

'இன்னும் நீ வளரவேவில்லை. காலேஜில படிக்கும் போது இருந்த அதே கனவு காணும் ஆதர்ச வாதியாகத்தான் இருக்கிறாய், குழந்தையின் எதிர்காலத்தை நினைச்சாத்தான் கலக்கமா இருக்கு'

'என் குழந்தை பிறந்த பொழுது நான் பிளாஸ்டிக்கில் செய்த மூத்திரத் துணியைப் பயன்படுத்தவே இல்லை. பருத்தித் துணியைத்தான் கட்டி விடுவேன். அதை நனைத்ததும், நான் எழுந்து மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதுதான் அவளுக்கு இயல்பாக இருந்தது. நிறைவாக வளர்ந்தாள். அப்போ என்னைப் பைத்தியம் என்று சிரித்தவர்கள் ஏராளம். ஆனால் இன்னைக்குப் பாருங்க. குழந்தையின் தோலுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமா இருக்க பருத்தித் துணியைப் பயன்படுத்துங்க என்று எவ்வளவு பேர் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க'

'இன்னைக்கு மாநகராட்சிப் பள்ளியில் சேரிக் குழந்தைகளுடன் படிக்கப் போகும் இந்தக் குழந்தையின் வளர்ச்சிதான் சிறப்பா இருக்கும்ணு 10 வருஷத்துக்கு அப்புறம் பாருங்க'

குழந்தைக்குப் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வருமானத்தையும் ஈட்டிக் கொண்டிருந்தாள். பெரிய செல்வச் செழிப்பில் புரள வேண்டும் என்ற கனவு இல்லை. யாழினி நிறைவான ஒரு வாழ்க்கையை நடத்த வழி காட்ட வேண்டும். அது போதும். அப்படி உருவாக்கும் வழியில் இன்னும் பலர் நடக்க வழி செய்ய முடியும் என்றும் கனவுகள் வளர்ந்தன.

நாளொரு கேள்வியும், பொழுதொரு சந்தேகமுமாக துளைக்க ஆரம்பித்தாள். நட்பு வட்டங்களும் விரிந்தன. நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அறிமுகமான ஒரு பெண்மணி தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பணி மாற்றம் கிடைத்து விட, பள்ளிக்குப் போகும் குழந்தைகளையும் கணவரையும் பாதிக்காமல், இவர் மட்டும் இங்கு தங்கி பணி புரிய திட்டமிட்டு வந்திருந்தார். வாரா வாரம் போய் விட்டு வரலாம்.

மாலதியம்மா, முதல் நாளிலிருந்தே யாழினியின் மீது காதலாகிப் போனார். 'இந்தக் குழந்தை பெரிய ஆளா வருவா! இவளை எப்படி ஆக்கிக் காட்டுறேன் பாரு!' என்று பாசத்தைப் பொழிந்தார். அவரது இரண்டு பையன்களும் வளர்ந்து கல்லூரிக்குப் போகும் பருவம். ஒரு பெண் குழந்தையை வளர்க்க தனது கனவுகளை எல்லாம் செயல்படுத்த முனைந்தார்.

'நான் ஒருத்தியே அவளை வழி நடத்திக் கொண்டிருந்தா அவளுக்கு முதிர்ச்சி வராது. மாலதியம்மா இருக்கும் போது நிச்சயமா நிறையக் கற்றுக் கொள்வாள்.'

'யாழினிமா, இனிமேல் இந்த பெரியம்மா சொல்வதைக் கேட்டு நடக்கணும். சரியா!'

இது என்ன கலாட்டா என்று குழப்பத்துடன் தலையாட்டியது குழந்தை.

'குழந்தைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும், கால்பந்து விளையாடத் தெரியணும். நாலு இடத்துக்குப் போய்ப் பழகணும்' என்று வீட்டிலும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 'ஆமாமா, இதெல்லாம் உலகத்தில் உருப்படத் தேவையானதில்லையா, எனக்கு இது நாள் வரை எப்படி இது தெரியாம போச்சு' என்று சலித்துக் கொண்டு மாலதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முயன்றாள்.

மாலதிக்கு இருவரின் மீதும் பாசமான பாசம். குழந்தையின் நடையிலும், பேச்சிலும் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்தது. வெளியாட்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக ஆரம்பித்தாள். மாலதி பெரியம்மாவுடன் சேர்ந்து கொண்டு பெண்ணும் அம்மாவும் மாலை நேரங்களில் விருந்துகளுக்குப் போனார்கள். காபி ஷாப்புகளுக்குப் போனார்கள். மனமகிழ் மன்றங்களுக்குப் போனார்கள்.

அடிக்கடி திரைப்படங்களுக்கும் இழுத்துப் போனாள். இந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தின் வட்டம் பெரிதாக ஆரம்பித்தது. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் ஆர்வத்துடன் பழக ஆரம்பித்தார்கள்.

எங்கூட வேலை பார்க்கும் மிஸஸ் டிசோசாவையும் அவங்க அக்கா மிஸஸ் பெர்னாண்டசையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவங்க மாதிரி பழக்கம் எல்லாம் இருந்தாத்தான் யாழினிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அந்த நட்பு பச்சென்று பிடித்துக் கொண்டது.

யாழினியும் அம்மாவும் நடத்தும் பொய்யில்லாத சிறிய வாழ்வும், யாழினி கற்கும் மாநகராட்சிப் பள்ளிக் கல்வியும், அன்பே நிரம்பிய நட்புணர்வும் பலரை கவர்ந்தன. எதிர்பாராத திசைகளிலிருந்து உதவிகளும், நட்புகளும் வளர்ந்தன.

இதற்கிடையில் மோகனுடனான உறவின் விரிசல்கள் வளர்ந்து விட்டிருந்தன. யாழினியைப் பார்ப்பதே இல்லை மோகன். அவள் காலையில் பள்ளிக்குப் போன பிறகுதான் தனது படுக்கை அறையிலிருந்து வெளியில் வருவான். இரவில் அவள் தூங்கி வெகு நேரம் ஆன பிறகுதான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான்.

நடு இரவுகளில் இரண்டு பேருக்கும் வாய் வார்த்தை முற்றி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதும் தவறாமல் நடந்து கொண்டிருந்தது.

'இப்படியே இருந்தால் சரிப்படாது. வீட்டில் ஒரு பகுதியில் நானும் குழந்தையும் இருந்து கொள்கிறோம். மற்ற பகுதியில் அவர் இருந்து கொள்ளட்டும். என் பகுதிக்குள் அவர் வர வேண்டாம், அவர் பகுதிக்குள் நான் வர வேண்டாம்.' என்று அவளே முடிவு செய்தாள். பேச்சு வார்த்தை என்பது இயல்பாக நடப்பது என்பது மறந்தே போயிருந்தது. அவரிடம் நேரம் பார்த்து பேச ஆரம்பித்ததுமே, 'ஆமாமா இந்த எலி வளைக்குள் இரண்டு குடித்தனம். உருப்பட்ட மாதிரிதான். நீயே இந்த வீட்டில் இருந்துக்கோ' என்று எழுந்து போய் விட்டார்.

'உண்மையிலேயே வேறு இடம் பார்த்துக் கொள்கிறாரா' என்று ஆசுவாசம்தான் தோன்றியது. வெட்கமாகவும் இருந்தது தனது சுயநலத்தை நினைத்து. என்ன இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கிய கூடு அல்லவா! ஓரிரு வாரங்கள் தலையைக் காட்டவில்லை. திடீரென்று ஒரு நாள், தடதடவென்று கதவைத் தட்டும் ஓசை. இவள் போய் கீழே போனால், முகம் இறுகிப் போய் கடுப்புடன் அவரும் கூட தடித்தடியாக நான்கு குண்டர்களும்.

சிப்பிக்குள் முத்து - 2

இது ஒரு தொடர் ஆனால் கதை அல்ல

அலுவலகத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மூட்டை கட்டச் சொல்லி விட்டார்கள். கிட்டத்தட்ட ஆரம்ப கட்டத்தில் வந்து விட்டிருந்தாள். 'எது போனாலும் போகட்டும். எனக்கென்று ஒரு துணை இருக்கிறதே. அவர்களது கனவு வீடு முழு உருப்பெற்று நனவாகி எழுந்து நின்றது. அதைப் பார்க்கும் போது பூரித்துப் போனது.

' எல்லாம் கெட்டுப் போனாலும், சாகும் வரை துணையென்று இருக்க ஒரு இணை இருக்கிறாரே' என்று திருமணம் செய்து கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்தாள். அவருக்கு என்ன கட்டாயமோ, இழுத்த இழுப்புக்கு வந்து கொண்டிருந்தார், சிலசமயம். பல சமயம் வன்மையான எதிர்ப்புகள், கருத்து வேறுபாடுகள். என்ன நடந்தது என்று திரும்பிப் பார்க்கக் கூடத் தவிர்க்க நினைக்கும் அளவில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் உடைந்த கனவுகள், சரிந்த கோட்டைகள் ஏராளம்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. இவ்வளவு நாள் 'காதலித்து'க் கைப்பிடித்ததாலோ என்னவோ தேன்நிலவு காலம் என்றெல்லாம் கூட தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சலிப்புத் தட்டியிருந்தது அவருக்கு. வேறு ஏதாவது நிறுவனத்தில் சேருவதற்கு முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை. 'நம்முடைய வருமானத்தை இவர் எதிர்பார்ப்பாரா என்று தெரியவில்லையே! அதை விடுவோம். வீட்டை நல்லபடியாக வைத்து அவருக்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.'

அவரது அலுவலகப் பணிகளுக்கு நான் எப்படி உதவ முடியும். அலுவலக நண்பர்களுக்கு விருந்து அளிக்க அவருடன் பேசி உற்சாகமாக ஏற்பாடுகள் செய்தாள். அவருடன் பேசி என்னென்ன மாதிரி உதவிகள் வேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். அலுவலக வாழ்க்கையில் வெற்றியடைந்தால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்னிலும் திரண்டு விடாதா என்று தன்னை அதில் மூழ்கடிக்க ஆரம்பித்தாள். பணி அவருடையதா அல்லது இவளுடையதா என்று சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு கட்டம் வந்து விட்டது. தான் வெளியாள்தான் என்பது உறைக்கவே இல்லை அவளுக்கு. பைத்தியம் போல ஓடிக் கொண்டிருந்தாள்.

உள்ளத்தில் ஏமாற்றங்களுடனும் வெறுமையுடனும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வயிற்றில் ஒரு உயிர் அசையும் உணர்வும் கனவும் கற்பனையும் எண்ணங்களும் உடலைத் தழுவின. சில நாட்களுக்கு உறைக்கவேவில்லை. நாமும் ஒரு தாயாக முடியுமா! குழந்தைகள் குழந்தைகள் என்று உருகிக் கொண்டிருந்த நாம் இதுவரை நமக்கு ஒரு குழந்தை என்று நினைத்துப் பார்க்கவே இல்லையே! என் வயிற்றிலும் ஒரு உயிர் உருவாகிறது!

அதற்குக் காரணமான கணவரின் மீது அன்பு பொங்கியது. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உறுதிமொழிகள் முளைத்தன. அவர் விட்டேற்றியாக இருந்தார். 'என்ன வேணும்னாலும் செய். எனக்கு வேண்டியதை குறைத்து விடாதே' என்று சொல்லாமல் சொன்னார். முற்றிலும் நோகடிக்கும் நேரங்களில் மட்டும் உதவுவதாக வந்து இவளிடமிருந்து சுடு சொல் வாங்கி காயப்பட்டு ஒதுங்கினார். 'பிறக்கும் குழந்தைக்கும் எனக்கும் தொடர்பே வேண்டாம்' என்று ஒதுங்க ஆரம்பித்தார்.

'இப்போ உங்க பணி வாழ்க்கைக்கு தொந்தரவா இருக்கும் என்றால் இந்தக் கருவை வேணும்னா கலைச்சுரலாம். அப்புறம் நமக்கு குழந்தையா பிறக்காமல் போய் விடும்' தனக்குத் தெரிந்த வழியை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லிப்பார்த்தாள். சொல்வதில் நம்பிக்கையே இல்லாமல் பேசுவது அவருக்கு வெள்ளிடை மலையாகத் தெரிந்தது. 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வாழ்நாள் முழுசும் என் குழந்தையை கலைக்கச் சொன்ன பாதகன் என்று பேச்சுக் கேட்க வேண்டி வரும். ஒன் விருப்பப்படியே பெத்து வளர்த்துக்கோ' மூச்சு விட முடிந்தது.

இவளது வாழ்வும், பேச்சும், மூச்சும் வயிற்றில் வளரும் குழந்தையைச் சுற்றி வர ஆரம்பித்தது. வீட்டு வேலைகளை செய்ய உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டாள். குழந்தைக்கு சரியாக சாப்பாடு கிடைக்க வேண்டுமே, அதற்கு பார்த்துப் பார்த்துக் கடைக்குப் போய் பரிந்து பரிந்து ஊட்டினாள், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு. தனக்குப் பிடிக்காத உணவுகளைக் கூட குழந்தைக்கு வேண்டுமே என்று சாப்பிட்டுக் கொண்டாள்.

அவருக்குக் கிடைக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது. அவர் வேறு உறவுகளைத் தேடிக் கொண்டார். அவரது அலுவலகப் பணிகளில் மூழ்க ஆரம்பித்தார். அலுவலக நட்பு ஒரு பெண்ணின் வீட்டில் நண்பர்களின் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. இவள் தன் குழந்தைக்கு கொடுத்த நேரம் போக மீதி கணவனுக்கு உதவி செய்ய முற்பட்டு அது அவருக்கு இன்னும் ஆத்திரத்தை வரவழைக்க ஆரம்பித்தது.

வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று வாக்குவாதங்கள் முளைத்தன. இந்த நேரத்தில் சம்பாதிக்கவும் முடியாமல் வீட்டில் குழந்தை பெற உட்கார்ந்து விட்ட இவள் மீது மோகனுக்கு ஆத்திரம் அதிகம். அதை சரிவர வெளிப்படுத்த முடியாமல் அவ்வப்போது வன்முறையாக வெடித்துக் கொண்டிருந்தது.

உள்ளத்துக்கும் உடலுக்கும் எந்த ஆதரவும் இல்லாமல் வயிற்றில் வளரும் இன்பப்பந்தை சுமந்து கொண்டிருந்தாள். இந்தக் குழந்தை தான் பார்த்த சிறுமைகளுக்கும் முடங்கல்களுக்கும் உட்பட்டு விடக் கூடாது என்று நினைத்துக் கொள்வாள். மருத்துவமனைக்குப் போய் வருடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் படத்தை எடுத்துக் கொண்டாள். அதைப் பார்த்து குட்டிப் பாதம், சின்னக் கை என்று கற்பனை செய்து பூரிக்கப் பார்த்தாள். மற்ற எல்லோருக்கும் வேடிக்கையாகவும் கிண்டலாகவும் இருந்தது அவளது நடவடிக்கைகள்.

அவளது எண்ணங்களும் நினைப்புகளும் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பி விட்டிருந்தன. கூடவே கணவரின் அலுவலகப் பணிகளிலும் தனது மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருந்தாள். குழந்தை பிறந்து விட்டால் தன்னால் அவ்வளவு செய்ய முடியுமா?

வாரங்கள் உருண்டோடின. குழந்தை பிறக்க வேண்டும். மருத்துவமனைக்குப் போக வேண்டுமா? எந்த மருத்துவமனைக்கு? இடையில் கிடைத்த ஒரு நல்லுணர்வு இடைவெளியில் ஒரு முனைப்பெடுத்து மருத்துவமனை கூட ஏற்பாடு செய்து விட்டார். தயாரிப்புகள் சுறுசுறுப்பாக செய்தாள். உதவிக்கு வைத்திருந்த அம்மாவும் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் பெரிய அளவில் வாக்குவாதங்களும், புண்படுத்தலும், சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.

வலி எடுத்து மருத்துவமனைக்குப் போகும் நேரம் வரும் போது கணவன் கூட வர வேண்டும் என்று அவளுக்கு எதுவும் நினைப்பில்லை. 'சண்டை போட்டுக்கிட்டு முறைச்சிட்டு இருந்தா இருக்கட்டும்' என்று வீம்போடு கிளம்பி விட்டாள். உதவிக்கு பக்கத்து வீட்டுப் பையன். அவனை அப்படிப் பயன்படுத்திக் கொள்வது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவனுக்கு ஏதோ பரிவு, ஆர்வமாகவே உதவிகள் செய்தான்.

"நான் குழந்தை பிறந்ததும் வந்து பார்க்கக் கூட மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஏதோ பெரிய ஆள் மாதிரி பேசினாயே, தனியாகவே எப்படி இருந்தது" என்று பிற்பாடு கேட்ட போது எதுவும் வருத்தம் வரவில்லை. இதில் என்ன சொல்லிக்காட்ட இவ்வளவு இருக்கிறது என்றுதான் தோன்றியது.

பிறந்த நாளிலிருந்தே குழந்தைக்கு தரித்திரம்தான் வாய்த்திருந்தது. தாயின் கவனிப்பைத் தவிர அன்பு எந்தத் திசையிலிருந்தும் வரவில்லை. உதவிக்கு வந்த நண்பன் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வர இவள் மனது இடம் கொடுக்கவில்லை. எப்படியாவது வளரட்டும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துப் பார்த்து பாலூட்டி, சீராட்டி, நீராட்டி, தன்னால் முடிந்த உடை மாட்டி அழகு பார்த்திருந்தாள்.

தந்தை முற்றிலும் ஒதுங்கியிருந்தார். அவளுக்குத் தாங்க முடியவில்லை. கணவனின் அரவணைப்பும், அவருடன் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட நட்புறவுகளும் தனக்கு மறுக்கப்படுகின்றன என்று பொங்கி பொங்கி வந்தது. அந்தச் சின்னஞ் சிறு உயிர் அவளது உடலையும், மனதையும் உயிரையும் முழுமையாக ஆக்கிரமித்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மல்லுக்கட்டி சண்டைக் காரியாகிப் போனாள். கணவருக்கு மிகவும் நல்லதாகப் போய் விட்டது.

தனது வாழ்க்கை தொலைந்து போனதே என்ற ஆத்திரத்துடன் இவளையும் குழந்தையும் இழித்துப் பேசவும் தயங்கவில்லை. மூன்றாவது நபர் மூலமாக அவர் தன்னைக் குறைத்துச் சொன்னது தெரிய வந்த போது குன்றிப் போனாள். அவர் மீது இருந்த அன்பும், ஒரு காலத்தில் பொங்கி வழிந்த காதலும் வெறுப்பாக உருப்பெற்றன. 'இந்தக் குழந்தைக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது'

வீட்டில் சமையல் நின்று போக ஆரம்பித்தது. குழந்தைக்கு மம்மு செய்தால் அதில் ஒரு பகுதியை தானும் சாப்பிட்டுக் கொண்டாள். அவரும் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. முகத்தில் வாட்டம் சில சமயங்களில் தெரிந்தது. தனக்குத் தெரிந்தபடி நட்புகளையும் உறவுகளையும் வளர்த்து வாழ்வை வேறு திசையில் செலுத்திக் கொண்டிருந்தார்.

இவளும் குழந்தையும் ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டால், நண்பர்களை வரவேற்று விருந்துகள் நடத்துவது ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தாங்க முடியாத ஆத்திரம் வந்தாலும், போகப் போக பழகி விட்டது.

இவளது ஒவ்வொரு செயலும் வாழ்க்கையை குலைத்துக் கொண்டிருந்தது. குழந்தை ஒட்டிக் கொண்டிருந்தது. இவளை விட்டு வேறு யாரிடமும் போவதற்குக் கூட மறுத்தது. குழந்தைக்காக மட்டும் வாழ்வதாகப் போனது. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒருவருக்கொருவர் அன்பைச் சொரிய ஒரு வாழ்க்கைத் துணை, அப்பாடா என்று இளைப்பாற ஒரு வீடு, அதில் குழந்தை வளர வேண்டும்' என்றுதான் அவள் கனவு கண்டிருந்தாள். எல்லாமே கனவாகவே போய்க் கொண்டிருந்தன.

இன்னமும் கணவரது விவகாரங்களில் தன்னால் முடிந்தவற்றை செய்ய முயன்று கொண்டிருந்தாள். அதில் கருத்து வேறுபாடுகள் பலமாக வெடித்தன. இந்த நிலைமை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்!

மோசத்திலிருந்து மிக மோசமாக போனது நிலவரம். இருவருக்கும் உறவே அற்றுப் போகும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு வளரும் வயதுக்கான ஆகாரங்கள் கொடுக்க முடியாமல். குருணைக் கஞ்சி காய்த்து புகட்டி பசியாற்றும் நாட்கள் அடிக்கடி வந்தன. கஞ்சி குடித்து வளரும் குழந்தைகள் சாதிக்க முடியாதா என்ன என்று வழக்கம் போல தனது தத்துவ மனதால் சமாதானப் பட்டுக் கொண்டாள். குழந்தையை பக்கத்து வீட்டு அம்மாவின் பராமரிப்பில் விட்டு விட்டு பகுதி நேர வேலைகளுக்கு ஓடினாள். அதில் வரும் காசில் ஒரு ஆப்பிள் வாங்கிக் கொடுத்து விட முடியாதா!

என்ன ஆனாலும், கணவனிடம் காசு என்று கேட்டு விடக் கூடாது. அவருக்கு மனதில்லாமல் பொருள் வாங்கி இந்தக் குழந்தைக்குக் கொடுத்து விடக் கூடாது என்று ஒரு வீம்பு. அவனிடம் இவளை விட அதிகமான வீம்பு. 'ஒரு பொம்பளைக்கு என்ன அப்படி ஒரு இறுமாப்பு. எல்லாத்தையும் தானே பார்த்துக்குவோம் என்று திமிர். இறங்கி வராமலா போய் விடுவா' என்ற கடுப்பு.

இப்படி எதிரும் புதிருமான பகை உணர்வு பொங்கும் இரண்டு பேர் ஒரே கூரைக்குள் இருக்க வாழ்க்கை நரகமாகிப் போனது. குழந்தைக்கும் கவனிப்பு குலைந்தது. அவரது வாழ்க்கையும் சீரழிந்தது. ஆனாலும் விட்டு விடுதலையாக இருவருக்கும் மனமில்லை. இழுத்துக் கொண்டே போனது.

குழந்தை அம்மாவைப் போலவே வளர்ந்து வந்தாள். முகம் மலர்ந்து சிரிக்கையில் அம்மாவுக்கு உலகே மறந்து போகும். பக்கத்து வீடுகளில் போய் நட்பு பிடித்துக் கொண்டு வந்தாள். சக வயதுக் குழந்தைகளுடன் விளையாடப் போனாள். அவர்களைப் போல உடுப்புகளும், அவர்களிடம் இருப்பதைப் போல பொம்மைகளும் தன்னிடம் இல்லை என்று குறை சொல்லத் தெரியாத பருவம் அது. அவளது உலகில் மகிழ்ச்சி வருத்தம் என்று பிரித்துப் பார்க்கும் பேதம் வந்து விடவில்லை.

சிப்பிக்குள் முத்து - 1

இது ஒரு தொடர், ஆனால் கதை அல்ல

நினைவு தெரிந்த நாளிலிருந்தே பொறுப்பேற்றுக் கொள்வது என்பது அவளுக்கு இயல்பாகவே வந்தது. வீட்டில் கடைசிப் பெண்ணாக பிறந்ததால் அவளது அம்மா சின்னக் குழந்தைகளை எப்படி வளர்த்தார் என்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. குழந்தைப் பருவத்தில் அவளுக்கு விருப்பமான கடமைகளில் ஈடுபடாமலேயே வளர்ந்து விட்டாள்.

உடலும் வளர்ந்து உள்ளமும் வளர்ந்து வெளியுலகில் அடியெடுத்து வைத்து, உலகில் தனக்கென இடத்தில் தனக்கென பணிகளை உருவாக்கிக் கொள்ளும் பாதையில் நடக்கும் போது ஒரு தவிப்புடனேயே இருந்து கொண்டிருந்தாள். ஏதோ குறைகிறது. மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கையை "அனுபவித்துக்" கொண்டிருக்கும் போது இதில் அனுபவிக்க என்ன இருக்கிறது என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

சீக்கிரம் வளர்ந்து உலக வாழ்க்கையில் முற்றிலுமாக மூழ்கி, குடும்பம் ஒன்றை உருவாக்கி, வீட்டு சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலும் ஈடுபடத்தான் மனம் துடித்தது. பணி செய்ய வேண்டும், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டும், வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக் கூடாது என்பதை எல்லாம் படித்து துடிதுடிப்புடன் மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.

வேலைக்குப் போகும் போது அக்காவின் குடும்பத்தில் தங்கியிருந்து அவளது குழந்தைகளை சீராட்ட ஆரம்பித்தாள். வேலையில் அவளைப் போல சமர்த்து கிடையாது. நல்ல சம்பளம், நல்ல பேர், தேவைக்கு மேல் அங்கீகாரங்கள். ஆனால், நிறைவளித்தது அந்த குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம்தான். அக்காவுக்கும் பெருமையோ பெருமை. என் தங்கச்சி எவ்வளவு சமர்த்தா குழந்தைகளை பார்த்துக் கொள்கிறாள். குழந்தைகளும் சித்தியின் மீது பாசத்தை பொழிந்தன.

அக்காவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கவிருக்கும் போது இவளையே பார்த்துக் கொள்ளச் சொல்லித் தீர்மானித்து விட்டார்கள். இவளுக்கும் கொள்ளாத மகிழ்ச்சி. என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டார்களே. அக்கா தங்கச்சியின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தாள்.

குழந்தை பிறந்த நாட்களில் தனது அலுவலகப் பணிகளுக்குக் கூட இரண்டாம் இடம் கொடுத்து விட்டு முழு மூச்சாக குழந்தை வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தாள். இந்தக் குழந்தை வலிகள், ஏமாற்றங்கள் இல்லாமல் வளர்த்து மலர்ந்து விட்ட பிறகு நாம் நினைத்தால் அலுவலத்தில் ஒரு தம் பிடித்து மேலே வந்து விட முடியாதா என்ன! இரவுகளும், பகல்களும் விழித்தாள். குழந்தைக்கு தேவைகள் போக நேரம் இருந்தால்தான் அலுவலகம் போவது. உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று நண்பர்கள் உபதேசிக்கும் அளவு மாற்றம் தெரிந்தது.

இதற்கிடையில் கல்யாணமே எனக்கு வேண்டாம் என்று பதின்மப் பருவ வீம்பு கனிந்து கல்யாணம் செய்தால்தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்பது உறைத்தது. மனதுக்குப் பிடித்த நண்பரை மனதுக்கினியவர் ஆக்கிக் கொள்ள முற்பட்டாள். அவருக்கு இவள் மீது அளப்பிலா காதல். ஆனால் அக்கா குடும்பத்துக்காக இப்படி தனது வாழ்க்கையை குலைத்துக் கொள்வதாக ஒரே வாக்குவாதம்.

'ஒருவனை மனதால் நினைத்து விட்டால், வேறு யாரையும் இந்த பிறவியில் நினைக்க மாட்டாள் தமிழச்சி' என்றெல்லாம் உறுதி பூண்டு அவருக்கு பொறுமையாகவும் சண்டை போட்டும் தனது கருத்துக்களை விளக்க முயன்று கொண்டிருந்தாள். அவரும் பிடியை விட்டு விடவேவில்லை. அவரது மனம் கோணக் கூடாதே இன்று சில மாலைகளில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை விட்டுப் போய் இரண்டையும் நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு முழு கவனம் கிடைக்கவில்லை. முக்கியமான தருணங்களில் அவரது கெடுபிடிக்கு ஈடு கொடுக்கப் போய் அக்காவுக்குக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு பக்கம் திருமணம் செய்யும் முன்னாலேயே சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு கொள்கை. மோகனிடம் பேசி அவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் பார்த்து பெரிய மகிழ்ச்சி. அது வரை தான் சேமித்த சேமிப்புகளைப் போட்டு புறநகரில் நல்ல ஒரு மனை வாங்கினார்கள். நிலம் வாங்குவது இவள் பொறுப்பு, வீடு கட்டுவது அவரது பொறுப்பு, செலவு என்று பேச்சு. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று நிறுவிக் காட்டும் பெருமை இரண்டு பேருக்கும். அந்த அலைச்சல்களிலின் போது குழந்தை நினைவாகவும், குழந்தையுடன் செலவிடும் நேரங்களில் அவருடன் போட்ட சண்டைகளின் வாட்டமுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

குழந்தை வளர்ப்பிலும் உறுதியான கருத்துக்கள் உண்டு. குழந்தையை தன் போக்கில் வளர விட வேண்டும். பெரியவர்களின் விருப்பங்களை குழந்தையின் மீது திணிக்கக் கூடாது. 'ஒன்றரை வயது குழந்தை பாட்டுப் பாடிக் காட்ட வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு ஒப்பனை செய்து காட்சிப் பொருளாக்க வேண்டும்.' என்பதெல்லாம் மடத்தனம் என்பது இவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

அவள் அக்காவுக்கு நாளாக நாளாக ஏமாற்றம். 'நம்ம குழந்தையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவாளோ! மூத்த இரண்டு குழந்தைகளும் நினைவு தெரிந்த பிறகுதான் இவள் பார்த்துக் கொள்ளும் நிலைமை வந்தது. இந்தச் சின்னதை ஆரம்பத்திலிருந்தே இப்படி ஆக்கி விட்டால் என்ன ஆவது.'

அக்கா வீட்டின் வரவேற்பு நின்று போக ஆரம்பித்தது. ஒட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்து புதிய ஆயாக்களுடன் உலகைக் காண ஆரம்பித்திருந்தன. குட்டிப் பாப்பாவைப் பார்த்துக் கொள்ள கொஞ்சம் தூரத்து உறவான அத்தை ஒருத்தியை பல குழந்தைகளை வளர்த்து அனுபவம் கொண்டிருந்த அத்தையைக் கொண்டு வந்து விட்டார்கள். வீடு இவளுக்கு அன்னியப்பட ஆரம்பித்தது.

'வேலையை முடித்து விட்டு வந்தால் உன் அறைக்குள் இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். சாப்பிடலாம். கடைக்குப் போகலாம். அத்தை, அக்கா, அத்தானுடன் வம்பளக்கலாம்.' குழந்தைகள் பார்க்கும் போது ஹாய் ஹலோ சொன்னார்கள். உரக்க ஆரவாரம் செய்தார்கள். அத்தோடு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அத்தை குட்டிப் பாப்பாவை முழு உரிமை எடுத்துக் கொண்டிருந்தாள்.

இந்தக் குழந்தைக்கு என்னென்ன செய்ய வேண்டும். எப்படி எப்படி வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கண்ட கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போயின. இதற்கிடையில் மனதில் கொண்டிருந்த மோகனும் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். 'உன்னை நம்பி என் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள முடியாது.' என்று வேறு நட்புகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அதை இவளால் தாங்கிக் கொள்வது முடியத்தான் செய்தது. 'என் கணவன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைப்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம். அவர் பலருடன் நட்பாக இருக்கட்டுமே, என் கணவராகவும் பிற்காலத்தில் இருந்து கொள்ளலாம்' என்று தன் மனதில் சமாதானம் செய்து கொண்டாள்.

இதற்கிடையில் வீடு கட்டும் பணி வேறு. யாரோ கட்டி வைத்த வீட்டில் போய் நாம் வாழக் கூடாது. நாமே பார்த்துப் பார்த்துக் கட்ட வேண்டும் என்று ஒரு பொறுப்பாளரை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் அலைந்து கொண்டிருந்தார்கள். அதில் கருத்து வேறுபாடுகள். தாம் பிடித்த பிடியில் எளிதில் விட்டுக் கொடுத்து விடாத பிடிவாதக் காரர்கள்தான் இரண்டு பேருமே. நாளொரு சண்டையும் பொழுதொரு வாக்குவாதமுமாக வீட்டை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான செலவு அனைத்தும் மோகனின் வருமானத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது.

அக்காவை ஒரு நாள் எதிர் கொண்டு, வேறு இடத்துக்குப் போய் விடுவதாகச் சொன்னாள். 'ஏண்டி, நான் உனக்கு இவ்வளவு செய்த பிறகு இப்படித் திடீர்னு விட்டுட்டுப் போவதாகச் சொன்னால் எப்படி' என்று கண்ணீர் விட்டாள். 'நீ இல்லாமல் குழந்தைங்க எல்லாம் ஏங்கிப் போய் விடாதா' என்று காரணமும் சொன்னாள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவளுக்கே தெரியும். குழந்தைகள் இன்றைக்கு டிபனுக்கு மேகி நூடுல்ஸ் இல்லை, ரவா உப்புமா என்று சொன்னது போலக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு விளையாடப் போய் விட்டார்கள்.

வலித்தது, நிறைய வலித்தது. அந்த நேரத்தில் மனதுக்கு ஒத்தடம் கொடுத்திருக்கக் கூடியவர் அவரது கவலைகளில் மூழ்கியிருந்தார். வளர்ந்து கொண்டே போகும் வீட்டைப் பற்றியும், அதற்கு செலவாகும் பணத்தைப் பற்றியும், அதற்கென்று எடுத்த கடனைப் பற்றியும்தான் அவரது பேச்சு இருந்தது. 'அக்கா வீட்டை விட்டுப் போகிறாயா, நல்லது. இனிமேலாவது வேலையில் அதிக கவனம் செலுத்து. நம்ம வீட்டு பணிகளுக்கு நேரத்தைச் செலவளி ' என்று கிட்டத்தட்ட கொண்டாட்டமாக பேசி விட்டார்.

அவரது கரிசனத்தை நம்பி நான் இருக்கக் கூடாது. நான் சுயமாக மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் எங்கள் உறவு ஆரோக்கியமாக இருக்கும்' என்று உறுதி பூண்டு பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் கவனம் செலுத்தினாள். இன்னொரு ஊரில் இருந்த அலுவலகத்தின் கிளைக்கு மாற்றல் கிடைத்து சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்தது.

அங்கு தங்குவதற்குக் கிடைத்த இடத்தில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி. அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறக்க இருந்தது. அவர்கள் வீட்டில் கட்டண விருந்தாளியாக பலரை நேர்முகம் கண்டு இவள் அவர்கள் மனதுக்குப் பிடித்துப் போனாள். ஏற்கனவே அக்காவின் குழந்தைப் பிறப்பில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள். புதிய அலுவலகத்தில் வேலையில் இறங்கி விடவே இல்லை. முதல் அலுவலகத்தில் ஆரம்பத்தில் செய்த சாதனைகள் எல்லாம் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் சறுக்கும் போது கை கொடுத்தன். இங்கோ ஆரம்பத்திலிருந்தே கெட்ட பெயர்தான்.

மோகனோ உள்ளும் வெளியுமாக அலைக்கழிந்து கொண்டிருந்தார். இவளையும் அலைக்கழித்தார். அலுவலகப் பணி, நட்பு, மனதுக்கு நிறைவளிக்கும் சின்னஞ்சிறு ஒரு உயிர் என்று மூன்று படகுகளில் கால் வைத்து இழுபட்டுக் கொண்டிருந்தாள்.

அலுவலகப் பணியில் சாண் ஏறினால் முழம் சறுக்கம் என்று வீழ்ச்சி மட்டும் தொடர்கதையாக இருந்தது. அதில் கவனம் செலுத்த மனமே வரவில்லை. அதற்கு மூன்றாவது இடம்தான். இந்த ஐரோப்பியக் குழந்தைக்கு நினைவு தெரிய ஆரம்பித்த பிறகு இவள் அவ்வளவு தேவையாக இல்லை. குழந்தையின் தேவைகளை இவளால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இடைவெளி வளர்ந்து கொண்டே போனது. 'இது என்ன பெரிய விஷயம். எல்லா இடத்திலும் மனிதர்கள் ஒன்றுதான். இந்தக் குழந்தைக்கு நான் பணி செய்ய முடியாதா என்ன. அன்பு மட்டும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம்' என்று விடாப்பிடியாக முயன்று கொண்டிருந்தார்கள்.

குழந்தையின் பெற்றோரும் பொறுமையான புரிவுணர்வுடன் இவளுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த வகையில் இவளுக்கு உதவி செய்தார்கள். அது நிச்சயமாக போதுமானதாக இருக்கவில்லை. 'இப்படி ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னால் ஓடிக் கொண்டே இரு' என்று நாளொரு சச்சரவும் பொழுதொரு தொலைபேசி சண்டையுமாக உறவு வலுவிழந்து கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளில் குழந்தைக்கு தான் எந்தவிதத்திலும் உதவியாக இல்லை என்று இவளுக்கு உறைத்தது. குழந்தையின் அம்மாவுக்கும் தெரிந்தது. தொடர்பை வெட்டுவதை அந்த அம்மாவே செய்தார். 'ஓரிரு மாதங்களில் நாங்கள் எங்க ஊருக்குத் திரும்பப் போறோம். அதுவரை நீதான் குழந்தையை பார்த்துக்கணும்' காரணங்கள் என்னவென்று இரண்டு பேருக்குமே புரிந்தது.

'நானா இருந்தால் அப்படிச் சொன்ன அந்தக் கணமே பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பேன். வெட்கங்கெட்ட பெண் நீ. அதற்குப் பிறகும் அவங்க வீட்டில் தங்க உனக்கு எப்படி மனசு வந்தது'. காயப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே ஒருவர் பேசுவாரா என்ன!

வியாழன், செப்டம்பர் 17, 2009

செருப்பாலடியுங்கள்

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது என்டிடிவியின் தேர்தல் நிகழ்ச்சிகளை வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மனதில் பதிந்த படத் துணுக்குகள் இரண்டு:

1. இந்தியா ஒளிர்கிறது என்று மேல்தட்டு மக்களின் வீடுகளில் எல்லாம் சாண்டலியர்களுக்கு மெருகேற்றி விட்ட மிதப்பில் தேசிய ஜனநாயக முன்னணி அலட்டிக் கொண்டிருந்த தேர்தல். அந்த முன்னணியின் முன்னணி கட்சியின் இளம் தலைமுறை தலைவர் (50 வயது ஆகி விட்டிருந்தது) பிரமோத் மகாஜன்.

தேர்தல் அன்று காலையில் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று காண்பிக்கும் போது, இவர் தனது வீட்டில் இருக்கும் உயர்தர தனியார் உடற்பயிற்சி அறையில் ஓட வைக்கும் கருவியில் ஓடிக் கொண்டே பேசுவதாக காண்பித்தார்கள்.

2. தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைத்து - திமுக, காங்கிரசு, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என்ற முன்னணி தேர்தலில் நாற்பதையும் தமதாக்கிய தேர்தல். அந்தக் கூட்டணியின் தலைவர் மு கருணாநிதியை Follow the leader என்ற நிகழ்ச்சியில் பின்தொடர்ந்தார்கள். அவரது வீட்டின் முன்னறை, ஊர்தி நிறுத்தும் முன்பகுதி, ஊர்தி கிளம்பிப் போவது என்று காண்பித்தார்கள்.

அந்த வீட்டின் அமைப்பும் உள் அலங்காரங்களும் தமிழக மக்கள் தொகையில் மேல்தட்டு ஒரு 5% மக்களுக்கு மட்டும் சாத்தியமாகக் கூடிய ஆடம்பரத்தில் இருந்தன.

இந்த இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு அதிர்ச்சியளிக்கும் காட்சிகளாக எனக்கு தோன்றின. அரசியல்வாதிகள் என்றால் கதர் வேட்டி கட்டிக் கொண்டு மக்களிடம் உண்டியல் குலுக்கி வாழ்வார்கள். திரைப்படங்களில் வரும் அதிரடி வில்ல அரசியல்வாதிகள்தான் அடாவடி செய்து செல்வத்தில் கொழிப்பார்கள் என்ற கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை உலுக்கி எழுப்பியது.

'ஜெயலலிதா எத்தனை சோடி செருப்புகள் வைத்திருந்தார், எத்தனை புடவைகள் வைத்திருந்தார், எவ்வளவு பணம் செலவழித்து வளர்ப்பு மகனுக்குத் திருமணம் செய்வித்தார்' என்று தகவல்கள் பத்திரிகைகளில் நிரம்பிய 1990களில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் கோபமும் அடுத்த 10 ஆண்டுகளில் முழுவதுமாக மாறி விட்டனவா என்ன?

'அரசியலில் வந்து விட்டார் என்பதற்காக குடிசையில்தான் வாழ வேண்டுமா என்ன' என்று எதிர்க்கேள்வி கேட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள் கருணாநிதியின் அடிப்பொடிகள். 'முதலமைச்சர் ஆகி விட்டார் என்பதால் பெண்ணுக்கு உரிய புடவை, அணிகலன்கள் ஆசையெல்லாம் விட்டுக் கொடுத்த வேண்டுமா' என்று ஜெயலலிதாவுக்கு சப்பைக் கட்டியிருந்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

இரண்டு சப்பைக்கட்டுக்கும் என்னுடைய பதில் 'ஆமாம், அரசியல்வாதியாகி பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அடிப்படைத் தகுதி எளிய வாழ்க்கை வாழ்வதும், தமது மக்களின் வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வதும்தான்.' குடிமக்கள் பட்டினியிலும், வேதனையிலும் வாடும் போது கேக் தின்னச் சொன்ன மேரி அரசிக்கும், பிலிப்பைன்சின் இமல்டா மார்க்கோசுக்கும் இந்த கயவாளிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

குளிரூட்டப்பட்ட ஊர்தியில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்! சொரணை கெட்ட மக்கள் கல்லாலடித்து விரட்டாமல், ஆரத்தி எடுத்து காலில் விழுந்து பிச்சைக் காசு வாங்கி வாக்களிக்கிறார்கள்.

கம்யூனிசக் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் தாம் என்ன தொழில் செய்தாலும் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் கட்சி நிதிக்குக் கொடுத்து விட்டு கட்சி நிர்ணயித்த சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

சிக்கனம் கடைப்பிடிக்கச் சொல்லும் காங்கிரசு தலைமை தமது புதுதில்லி அரண்மனை வீடுகளை விட்டுக் கொடுத்து, சாதாரண ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு வசிக்கப் போகட்டும். தமது கட்டுப்பாட்டிலுள்ள அறக்கட்டளைகளை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி அல்லது அரசு கொடுக்கும் ஊதியத்தில் தமது வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்ளட்டும்.

அப்படி வாழ மனதில்லை என்றால், அரசியலை துறந்து நல்லதொரு தொழில் செய்து சம்பாதித்து மனம் போல வாழட்டும்.

செருப்பாலடிக்கப்பட வேண்டிய நாய்களை இன்று அரசுக் கட்டிலில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வலைப்பதிவர்கள்

தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தது 2004ல். சில மாதங்களுக்குப் பிறகு நானும் எழுத ஆரம்பித்து நிறைய நேரம் செலவழித்து அந்த ஆர்வம் ஓய்ந்து போய் விட்டது.

ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எழுதி மகிழ்வித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், கொஞ்ச காலம் எழுதி ஒதுங்கி விட்டவர்கள், எழுதுவதில் பெரிதாக கவராவிட்டாலும் இணையத்துக்கு வெளியிலான சாதனைகளில் மதிப்பைப் பெற்றவர்கள் என்று நிறைய பேரை தெரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு தமிழ் பதிவுலகில் துருவ நட்சத்திரங்கள்
1. பத்ரியின் எண்ணங்கள்
2. டோண்டு ராகவன்
3. லக்கி லுக்
4. ஆசிப்மீரானின் வேதம்
5. கண்ணபிரான் ரவிசங்கர்
6. துளசிகோபால்

ஒளி வீசி பயனளித்து இப்போது அடக்கி வாசிப்பவர்கள்
1. மோகன்ராஜ் - கைப்புள்ள
2. டிபிஆர் ஜோசப்
3. உருப்படாதது
4. ரோசா வசந்த்
5. முத்து தமிழினி

வலைப்பதிவுகள் மூலம் அறிமுகமாகி நிஜ உலகில் வியக்க வைப்பவர்கள்
1. பாலபாரதி
2. அதியமான்
3. வினையூக்கி
4. முனைவர் இளங்கோவன் (புதுவை)

வாசிப்பனுபவங்களுக்கு நன்றி.

திருப்பதி பயணம்

வீட்டில் ஒரு திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட தொங்கும் அட்டை இருந்தது. அதை முன்னறையில் மின்பொத்தான்கள் இருக்கும் பட்டியின் ஓரத்தில் பொருத்தியிருந்த ஆணிகளில் தொங்க விட்டிருந்தேன். ஏதோ மாற்றங்கள் செய்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து தூங்கும் அறையில் சன்னலில் நிறுத்தும் கம்பியில் சொருகி தொங்க விட்டேன்.

இரவில் தூங்கப் போகும் போது மின்விசிறியை இயக்கியதும் கம்பியிலிருந்து நழுவி தரையில் விழுந்து விடும். காலையில் எழுந்திருக்கும் போது எடுத்து திரும்ப மாட்டுவேன். இப்படியே இரண்டு மூன்று வாரங்கள் போய்க் கொண்டிருந்தன. 'என்னடா இது, சாமி படத்தை இப்படி மேலும் கீழுமாக அலைக்கழிக்கிறோமே' என்று படத்தை எடுத்து அலமாரியின் சாவியில் மாட்டினேன். அடிக்கடி திறந்து மூடாத அலமாரிதான். சாவியின் முன்பகுதியைத் தாண்டிய குழிவான பகுதியில் தொங்கிக் கொள்ள காற்றில் விழவும் செய்யாது.

திருப்பதிக்குப் போவது குறித்து விவாதம் நடந்தது. பணம் கொடுத்து வசதியாக கடவுளைப் பார்ப்பது சரிதான் என்று வக்காலத்து வாங்கினேன். அது கொஞ்சம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

'வியாழக்கிழமை எப்படிப் புறப்பட வேண்டும், எப்படிப் போக வேண்டும், காசு எவ்வளவு வேண்டும், தயாரிப்புகள் என்னென்ன வேண்டும்' என்று எதுவும் முன்தயாரிப்புகள் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை. திநகரில் வழிபாட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம், தங்கும் இடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

செல்பேசியை விட்டு விடலாம். புறப்படுவதற்கு முன்பு செல்பேசியை அணைத்து வைத்து விட்டேன்.

'முடிந்த வரையில் குறைந்த செலவு செய்ய வேண்டும், சொகுசுப் பேருந்துகளைத் தவிர்த்து குறைந்த செலவில் போக வேண்டும். மலைக்கு நடந்தே போக வேண்டும். காசு கொடுத்து சிறப்பு தரிசன அனுமதி வாங்கி போகக் கூடாது. பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டாலும் இலவச தரிசனத்தில்தான் போக வேண்டும்.'

ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து மவுண்டு பூந்தமல்லி சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். திருப்பதி போகும் பேருந்துகள் இப்படித்தான் போகும். அடுத்த பல நிமிடங்களில் எதுவும் வரவில்லை. பூந்தமல்லி போய் பேருந்து பிடிக்கலாம் என்ற முடிவில் மேப்பூர் போகும் பேருந்தில் ஏறி பூந்தமல்லி சீட்டு வாங்கிக் கொண்டேன்.

பூந்தமல்லியில் இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். கூட்டமாகத்தான் இருந்தது. நேரம் பார்க்கக் கூட கைத்தொலைபேசி இல்லை. உத்தேசமாக, அடுத்தவர் கையில் கடிகாரத்தைப் பார்க்க முயற்சித்தேன். அரசு விரைவுப் பேருந்துக் கழகத்து கூண்டில் ஒருவர் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார். திருப்பதி போகும் பேருந்து 7.40க்கு குளிர் சாதனப் பேருந்து, 9 மணிக்கு சொகுசுப் பேருந்து என்று போட்டிருந்தார்கள். குளிரூட்டப்பட்ட பேருந்து வரும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் ஓடியிருந்தது. திருப்பதி பேருந்து வேறு எதுவும் வரவில்லை.

ஓசூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று பேருந்துகள். ஒன்றிரண்டு திருத்தணி வண்டிகளும். திருத்தணி வண்டிகளில் உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்தேன். வெயிலுக்கு ஒதுங்கி பக்கவாட்டுச் சாலை முனையில் நிற்றல், திரும்பவும் சாலையில் எட்டிப் பார்த்தல், வரும் பேருந்துகளை எட்டிப் பார்த்தல் என்று நேரம் நகரந்து கொண்டிருந்தது. அரக்கோணம் போகும் வண்டி வந்தது. அதில் உட்கார இடம் இல்லை. அதைத் தொடர்ந்து வந்த திருவள்ளூர் வண்டியில் ஏறிக் கொண்டேன். பூந்தமல்லி திருவள்ளூர் வண்டி, உட்கார வசதியாக இடம் கிடைத்தது.

பெங்களூரூ நெடுஞ்சாலையில் அரக்கோணம் சாலையில் திரும்பி விட்டது. திருமழிசையில் கல்லூரி மாணவ மாணவியர் ஏறினார்கள். இரண்டு பெண்கள் புத்தகச் சுமையை என்னிடம் கொடுத்து விட்டார்கள்.

இன்னொரு உயரமான பெண்ணும், அவள் அருகில் இன்னொரு மாணவனும், ஏதோ காதல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் திருவள்ளூர் பேருந்து நிலையத்துக்கு முன்னதாகவே இறங்கி விட, இவர்கள் இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில்தான் இறங்கினார்கள். திருத்தணி பேருந்து நின்றிருந்தது. நேரக் காப்பாளர் அல்லது தகவல் மைய அலுவலரைக் கேட்டால் திருப்பதி பேருந்து இங்கு வராது, சாலைக்குப் போக வேண்டும் என்று சொன்னார்.

சாலை நிறுத்தத்தைத் தாண்டி காத்திருந்த சிலருடன் நின்று கொண்டேன். எல்லோருமே திருப்பதி பேருந்துக்குத்தான் நிற்கிறார்கள். அது பேருந்து நிற்க அனுமதிக்கப்பட்ட இடம் இல்லை என்று தோன்றினாலும், இவ்வளவு பேருக்கு உள்ளது நமக்கும் என்று நின்று கொண்டேன். கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பிறகு தொலைவில் பேருந்து தெரிந்தது. முன் கண்ணாடியில் திருப்பதி பெருமாளின் தலை படம் பதித்திருந்தார்கள்.

எல்லோருக்கும் வழி விட்டு நின்றதில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன் பக்கம் வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தெரியும் படி முன் இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டேன். திரைப்படம், விஷால் நடித்த தூத்துக்குடியை முன்னிறுத்திய கதை. விஷாலின் மாமா பிரபு, விஜயகுமார், நாசர், (நதியா என்று பின்னர் தெரிந்து கொண்ட) விஜயகுமாரின் மகள், பானு என்ற நாயகி. அதிகமாக போரடிக்காமலே போனது. அதில் காவல் துறையினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அறைக்குள் வண்டியை விட்டு அவர்களை எந்தத் துறையினர் என்று தப்பாகவே ஊகித்து அடி வாங்கும் நகைச்சுவைக் காட்சி. இதைக் குறிப்பிட்டு எழுதி என்ன படம் என்று டோண்டு தனது பதிவில் கேட்டிருந்தார். முந்தைய நாள் படித்தது, காலையில் படம்.

படத்தின் பெயர் தெரியவில்லை. பின்னர் கேட்டதில் தாமிரபரணி என்று தெரிந்தது. பேருந்து நின்ற அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்து விட்டது.

திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கும் போது என்ன நேரம்? 11.30க்குக் கொண்டு விட்டு விடுவார்கள் என்று யாரோ சொன்னது காதில் விழுந்திருந்தது. அந்தக் கணக்கில் திருமலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அலிப்பிரி வரை போவதற்கு இலவச பேருந்து உண்டு என்று நினைவிருந்தது. திருமலை 5 கிலோமீட்டர் என்று பலகை இருந்தது. 1 மணி நேரத்துக்குள் நடந்து விடலாம்.

வழியில் ஒரு சுற்றுப்பாதையில் உயிரியல் பூங்கா இருந்தது. அதுதான் கோயில் நுழைவாயில் என்று ஒரு எட்டிப் பார்த்து விட்டு திரும்பி நடந்தேன். அலிப்பிரி பேருந்து மையத்தைத் தாண்டிய பிறகு கண்ணுக்கு பாதுகாப்புச் சோதனைச் சாவடி தெரிந்தது.

அலிப்பிரி மலை அடிவாரத்தில் சாலையின் வலது புறமாக நுழைந்தால் நிறைய பேர் அப்போது வந்திருந்தார்கள். 'திருமலைக்கு ஏறிப் போகும் பாதை மிகவும் புனிதமானது. வரலாற்று சிறப்பு மிக்கது. பல நூற்றாண்டுகளாக பெரிய மகான்கள் நடந்து போன பாதை. அதில் காலணி அணியாமல் போகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று பலகை.

'அனைத்தும் இலவசம். கால்நடையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். மொட்டை போடுதலும் இலவசம். பல மணி நேரம் காத்திருக்காமல் தரிசனமும் உடனேயே பெறுங்கள் என்று ஒரு அறிவுப்புப் பலகை. இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கவே இல்லை. நான் நடந்தும் போய் தரிசன வரிசையிலும் காத்திருக்க வேண்டாம் என்று அருள் பாலிக்க இப்படி நிகழ்ந்திருப்பதாக தோன்றியது. பகுத்தறிவு அந்த எண்ணத்தை விரட்டியது. கீழே இருந்த கோயிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று புளியோதரை வாங்கிக் கொண்டேன். அதை சாப்பிட்டு விட்டு தண்ணீரும் குடித்து விட்டு மலையில் ஏற ஆரம்பித்தேன்.

இருதய நோய், நுரையீரல் நோய், மூட்டு வலி உள்ளவர்கள் நடந்து போக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை. படிகளில் 50 படிகளுக்கு ஒரு முறை எண்ணிக்கை பொறித்திருந்தார்கள். ஆயிரம் வரை கொஞ்சம் முனைந்து விடாமல் ஏறி விட்டேன். ஓரிரு முறை மட்டும் உட்கார்ந்து போனேன். அடுத்த ஆயிரத்தை விடாமல் ஏறி விடுவேன் என்று முடிவு செய்தேன்.

குறைந்தது 10, 15 தடவை உட்கார்ந்துதான் போக முடிந்தது. பல முறையில் மலை ஏறுபவர்கள். ஒவ்வொரு படியிலும் சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டே ஏறுபவர்கள், சூடம் ஏற்றிக் கொண்டே ஏறுபவர்கள், குனிந்து தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே ஏறுபவர்கள் என்று ஏற்றத்தை இன்னும் கடினமாக்கிக் கொள்கிறார்கள். அடுத்த நாள் இறங்கி வரும் போது ஒருவர் ஒவ்வொரு படியிலும் வலது இடமாக நடந்து ஏறிக் கொண்டிருந்தார்.

புதன், செப்டம்பர் 16, 2009

தப்பும் தண்டனையும்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு

கஸ்தூர்பா திலகம் என்பது பரணீதரன் அறுபதுகளில் எழுதிய தொடராம். ஸ்ரீதராகவும் மெரீனாவாகவும் எழுதியவர் பரணீதரன் என்ற பெயரில் எழுதிய முதல் தொடர் இதுவாம். அதன் பிறகு அதே பெயரில் திருத்தல யாத்திரைகள் பற்றிய தொடர்களை எழுதியிருக்கிறார்.

இந்த நூலை நேற்றைக்கு வித்லோகா புத்தகக் கடையில் வாங்கிக் கொண்டேன்.

என்ன ஒரு வாழ்க்கை! "மகாத்மாவாம், மகாத்மா, துப்புக் கெட்ட மனிதன்" என்று உதறித் தள்ளிக் கொண்டு போக வழியிருக்கவில்லை என்றா சொல்ல முடியும். அன்னையிடம் இருந்த ஆத்மாவின் புனிதம்தான் அவரைக் கடைசி வரை காந்தியுடன் வாழ்ந்து துன்பங்களை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.

நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கும் போது மணி ஏழே கால். கடந்த இருபது நாட்களில் பல நெகிழ்வுகள். காலை மாலை தியானம் செய்வது, ஒதுக்கிய உணவு வகைகளைத் தவிர்ப்பதில் மட்டும் அதிக விட்டுக் கொடுத்தல் இல்லை. தூக்கம், படிக்கும் புத்தகங்கள், எழுதுவதில் சுணக்கம் என்று பல சறுக்கல்கள். "ஏன் ஆனந்த விகடன், குமுதம் படிப்பதைத் தவிர்க்க வேண்டும், என்ன தப்பு?" என்ற கேள்வியும் புரிகிறது, இப்போது.

ஒரு கஸ்தூரிபாவின் வாழ்க்கையையோ, அறிவியல் உண்மைகளையோ படிக்கும் போது கிடைக்கும் நல் அமைதியும் மனத் தெளிவும், பிரகாஷ் ராஜின் வாழ்க்கை வரலாற்றை அவர் சுவையாகச் சொல்ல அல்லது நமீதாவின் கைப்பிடிக்க நான்கு ஆண்கள் போட்டி போடும் நிகழ்ச்சியைப் பற்றி படிப்பதால் கிடைத்து விடுவதில்லை. எதை உண்கிறோம் என்பதில் இருக்கும் கவனம், எதைப் படிக்கிறோம் என்பதிலும் இருக்க வேண்டும்.

பழம் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று சாத்துக்குடி தோலை நகத்தால் உரிக்கும் போது நக இடுக்கில் புகுந்து கொண்டது ஒரு கனத்தத் தோல் துணுக்கு. இரண்டு மூன்று நாட்கள் சிறிய தொந்தரவைக் கண்டு கொள்ளவில்லை. சனிக் கிழமை காலை முதல் வலி வருத்த ஆரம்பித்து விட்டது. அன்று முழுவதும் பல வேலைகள் வேறு. பெங்களூரிலிருந்து வந்திருந்தவருடன் சுற்றியது விவாதங்கள் என்று மாலை ஏழு மணியானதும் வெளியே போய் சீன உணவு சாப்பிடலாம் என்று ஏற்பாடு. "எங்களுக்காக ஒரு நாள் விட்டுக் கொடுங்கள்" என்றதற்கு நானும் போக ஒப்புக் கொண்டிருந்தேன்.

கை வலி உறுத்திக் கொண்டே இருந்தது. பெருவிரல் நகத்துக்குள்ளே பழுப்பு வைத்து கொப்புளத்தின் நடுவில் கறுப்பாக தெரிந்தது. சாத்துக்குடித் தோல் துணுக்குத்தான் இன்னும் உள்ளே இருக்கிறது. அதை மட்டும் வெளியே எடுத்து விட்டால் சரியாகிப் போய் விடும் என்று கறுப்பு புள்ளியை நோக்கி குண்டூசி நுழைத்துக் கொண்டேன். இரண்டாவது முரட்டுச் செயல்.

உடனடியாக வலி குறைந்து, அரைக் கிண்ணம் சூப்பும் ஒரு சில கரண்டிகள் நூடில்ஸும் சாப்பிட முடிந்தது. வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் வலியும் சீழும் புது உயரத்தைத் தொட்டிருந்தன. ஞாயிறு முழுவதும் வலியிலேயே ஓட்டிக் கொண்டேன். யாரிடமும் சொல்லவும் இல்லை. மாலையில் நண்பன் வந்து பார்த்த போது மருத்துவரைப் பார்க்கச் சொன்னான். அவன் ஆராய்ச்சி, உணவுக் கட்டுப்பாடுகள் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

திங்கள் காலையில் அலுவலகத்துக்குப் போகும் போது இரவுத் தூக்கம் சரிவர இல்லாமல் உடலெல்லாம் சோர்ந்திருந்தது. வலி விண் விண்ணென்று தெரித்தது. எப்படியாவது இந்த வலி போனால் போதும் என்ற தவிப்பு. ஒரு மணி நேரத்துக்குள் எல்லோரிடமும் பேசி விட்டு மருத்துவமனை போய் விட்டு வீட்டுக்குப் போய் விடுவதாகக் கிளம்பி விட்டேன்.

கேதார் மருத்துவமனையில் அவசர மருத்துவர் ஒரு பெண்மணி. கையைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தார். அவர் தொடும் போது வலியில் கையை பின்னிழுத்துக் கொண்டேன். 'இந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு நாட்கள் மாத்திரை சாப்பிடுங்கள், அதன் பிறகு இதைக் கீறி விடலாம் என்று மாத்திரை எழுதிக் கொடுத்தார். முப்பது ரூபாய் மருத்துவருக்குக் கட்டணம். இருபத்தி எட்டு ரூபாய் மருந்து கட்டணம். ஒரு மாத்திரை சாப்பாட்டுக்கு முன்னால் மூன்று வேளையும், இன்னொன்று சாப்பிட்ட பிறகு காலையிலும் மாலையிலும். வீக்கத்தைத் தடுக்கவாம்.

வீட்டுக்கு வந்து மாத்திரைகளை ஆரம்பித்து விட்டேன். மூன்றாவது தவறு??

மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்த உடன் வலி நின்று ஒரு மாதிரி விறுவிறுப்பான உணர்வு மட்டும். அரை மயக்கத்தில் திங்கள் பகல் முழுவதும் கழிந்தது. இரவிலும் விழிப்பும் தூக்கமுமாகக் கழிந்தது. செவ்வாய் காலையிலும் அலுவலகத்துக்கு மட்டம். நாள் ஏற ஏற கை கொப்புளம் பெருத்துக் கொண்டே போனது, மாத்திரைகளை உள்ளே தள்ளும் போது கிடைக்கும் ஆறுதல் ஓரிரு மணி நேரம்தான் நீடிக்கிறது. மீண்டும் பொறுமை போனது.

'அலுவலகமும் போக முடியவில்லை. நாளைக்குப் போய் கீறி விட்டால் இன்னும் ஒரு நாள் "வீணாகி" விடும். இன்றே மருத்துவமனைக்குப் போய்க் கீறி விட்டுக் கொள்வோம் என்று கிளம்பி விட்டேன். நல்ல வேளையாக தங்கச்சி வண்டி ஓட்ட பின்னால் சவாரிதான்.

மருத்துவமனையில் இன்னொரு பெண் மருத்துவர். கையைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு. "எத்தன நாளா வச்சிட்டு இருக்கீங்க, எலுமிச்சம் பழம் எல்லாம் வச்சிப் பார்த்திருப்பீங்களே" என்ற கிண்டல்களுக்கிடையே கீறி விட்டு விடுவதாகச் சொன்னார். வலிக்கும், கையை இழுக்கக் கூடாது என்று பல எச்சரிக்கைகளுடன் திறமையாகக் கையைப் பிடித்துக் கையில் வெட்டு பிளேடை வாங்கிக் கொண்டார். வலியைக் காணவில்லை. கொப்புளத்தை உடைத்து துடைக்கிறார். தோலை இடுக்கியால் இழுத்துப் பிடித்து உள் அழுக்குகளை அழுத்தி வெளியேற்றுகிறார். ஒரு வித விறுவிறுப்பான உணர்ச்சியைத் தவிர வேறு வலி எதுவும் இல்லை.

"என்ன சத்தமே காணோமே" என்று கிண்டலுடன் வந்த வயதான செவிலியை மற்றவர் அடக்கி விட்டாலும், வலியே இல்லாத போது சத்தம் போட வழியும் இல்லை. ஆனால் முழுவதுமாகத் துடைத்து விடாமல் அந்த விறுவிறுப்பு தடுத்து விடக் கட்டுப் போட்டு விடுவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்து விடுமாறும் சொன்னார். நல்லா மருத்துவர். மிகத் திறமையாக வெட்டித் தூய்மை செய்திருந்தார். இன்னொரு செவிலி கட்டுப் போட்டு விட, ஏற்கனவே சொல்லியிருந்த டிடி ஊசி போடச் சொன்னார்கள்.

இடுப்பில் போட வேண்டும் என்று ஊசியை எடுத்துக் கொண்டு வந்ததுதான் தெரியும். உடனேயே போய் விட்டால் அந்த வயதான செவிலி. "என்னா போட்டாச்சா" என்று கேட்டுத்தான் உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது. வலி என்ற உணர்ச்சியே இல்லை. கிளம்பும் போது நூற்றைம்பது ரூபாய்க்கு இன்னும் மாத்திரைகள்.

சீழ் எல்லாம் வடிந்து விடக் கைக்கு நிம்மதி. இரவும் ஓரளவு நிம்மதியானத் தூக்கம். இன்றைக்கு மாத்திரைகளை ஆரம்பிக்க வேண்டாம். தேவைப்பட்டால் காலையிலிருந்து பார்க்கலாம் என்று விட்டு விட்டேன். பல எண்ணங்கள், மருந்துகளின் விளைவுகளை நினைத்து கலக்கம். இரண்டு நாட்கள் முப்பது ரூபாய் மாத்திரை சாப்பிட்டு வலி எல்லாம் கொன்று போட்டிருக்கிறது. இப்போது என்னவோ என்று புரியாத தவிப்பு.

உடம்புக்கு வரும் பெரும்பாலான நோய்கள், நாம் கவனக் குறைவாக இருந்ததால், நமது தவறுகளால் வருகின்றன. நோய்க்கு மருந்து உடலுக்கும், மனதுக்கும் வேண்டும். உடலைச் சரி செய்து கொள்வது போல அதே நேரத்தில் மனதுக்கும் பாடங்கள் கிடைக்கின்றன. புதிய புதிய மருந்துகளால் உடலுக்கு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறோம். மனதிற்கு பாடங்களே இல்லை!

மழையில் விளையாடிய குழந்தைக்கு மதியத்திலிருந்தே காய்ச்சல். மாலை ஏழு மணிக்கு ஒரு விருந்துக்குப் போக வேண்டும். 'ஒரு குரோசின் கொடுத்தால் காய்ச்சல் தணிந்து விடும்' என்று மாத்திரை கொடுத்து கேளிக்கைக்குப் போகும் கணவன் மனைவி தெரியும். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை, வாந்தி, காய்ச்சல். "எங்காவது வந்தாலே இவனால் தொந்தரவுதான்" என்று அம்மா சலித்துக் கொள்ள எப்படியோ மனதைச் சமாதானம் செய்து கொண்டு தற்காலிக நிவாரணம் மருந்துகளால் வாங்கி அந்தக் குழந்தை அலைக்களிக்கப்படுகிறது.

மருந்துகள் கண்டிப்பாக வேண்டும். உடலின் குணப்படுத்தலுக்கு உதவி செய்யும்படி அவற்றைப் பயன்படுத்தினால் சரி. கிருமிகளைக் கொல்ல அவற்றுடன் போராட மாத்திரைகளைப் புரிந்து கொள்ளலாம். கவனமாகத் தோல் உரிக்காத, குண்டூசி வைத்துக் கிளறிய செயல்களுக்குப் பாடம் எப்படிக் கிடைக்கும்? கை குணமாகும் போது வலியுடன் வாழ்வது ஒரு வழியா? அந்த வலியைக் கொன்று விட்டால் அப்புறம் இதே தவறைத் திரும்பச் செய்ய உரிமம் கிடைத்து விடுகிறதே!

சமோசா சாப்பிட்டால் செரிக்காது என்று ஜெலூசில் சாப்பிட்டு விட்டு சமோசா சாப்பிடுபவர்கள் எத்தனை பேர்! உடலை அலைக்களித்து நமது சிற்றின்பங்களுக்கு ஒத்துழைக்க அதைப் பாழ்படுத்திக் கொள்கிறோம்.

சுருக்கமாக, புதன் கிழமையும், அதன் பின்னரும் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வாங்கி வந்திருந்த மாத்திரைகளைத் தொடவே இல்லை. புதன் கிழமை காலை ஓரளவு போனது. மதியம் மீண்டும் வலி ஆரம்பித்தது. இரவில் வலியுடன் கூடிய தூக்கம். அன்று முழுவதும் வேலையைத் தொடர்ந்து இரவும் அலுவலகத்தில் தங்க வேண்டி இருந்தது. வியாழக் கிழமை வலி உச்சக் கட்டத்தை அடைந்தது. தீப் பிடித்தது போல எரிச்சல். உட்கார முடியவில்லை, நடக்க முடியவில்லை. அரை மயக்க நிலையில் படுத்துக் கிடந்தேன்.

மாலையில் சீக்கிரமாகக் கிளம்பி வீட்டுக்கு வந்ததும், 'மாத்திரை சாப்பிடாமல் மருத்துவமனை போனால் திட்டுதான் விழும். நாமே அவிழ்த்துப் பார்ப்போம்' என்று பார்த்தால் சீழ் விரல் கடை வரை பரவியிருந்தது. அவிழ்க்கும் போதே உடைந்து விட, மருந்துக் கடையில் பஞ்சும், சல்ஃபோனின் பொடியும் கட்டுத் துணியும் வாங்கி வந்தேன்.

நீரில் செவ்லான் விட்டு வலிக்காமல் துடைத்து விட்டு, நிறையப் பொடி போட்டுக் பஞ்சு வைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டேன். அப்புறம் படுத்தது அடுத்த நாள் காலையில்தான் எழுந்திருந்தேன். காலையில் திறந்து பார்த்து மீண்டும் துடைத்துக் கட்டு. அன்று வேலை சுமுகமாகச் செய்ய முடிந்தது. மாத்திரை சாப்பிடாத கலவரம் இன்னும் இருந்தது.

வெள்ளி மாலையில் இன்னும் தெளிவு. ஆனால் இன்னும் சீழ் உருவாவது நிற்கவில்லை. இதற்கிடையில் ஒரு ஆயுர்வேத களிம்பு என்று ஒரு நண்பர் அன்புடன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் போடவில்லை. சனிக் கிழமை வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் ஒரு சுற்று அடிக்க முடிவு செய்யவும் முடிந்தது.

சில எண்ணங்கள், செயல்பாடுகள், கற்றல்கள்

மூன்று மாதங்களுக்கு முன்பு

அதிகாலை துயில் எழுதல்

எத்தனை ஆண்டுகள் கடைபிடித்தாலும் பழக்கமாகி விடாத ஒன்று அதிகாலையில் எழுந்திருப்பது. ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கும் போதும் இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்கவே முடிந்ததேயில்லை. அதைத் தாண்டி எழுந்திருக்க வலுவான காரணம் ஒன்று இருக்க வேண்டும்.

முதல் நாளில் ஏதோ உந்துதலில் எழுந்து விடுவோம். இரண்டாவது நாள் மிகவும் கடினமான கட்டம். காலையில் உடற்பயிற்சி செய்ய எழுந்திருப்பதிலும் அப்படித்தான். மூன்றாவது ஆளில் இரண்டாவது நாளை விடக் கொஞ்சம் குறைவான சுணக்கம் இருக்கும். அதைத் தாண்டி விட்டால் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு மனதளவிலான சுணக்கம் ஆரம்பிக்கும். இதை செய்யத்தான் வேண்டுமா, செய்வதால் என்னென்ன எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன என்று அலசி, பழக்கத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிகள் ஆரம்பிக்கும்.

பள்ளியில் படிக்கும் போது காலையில் எழுந்து ஓட ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டு நண்பனும் நானும். வீட்டில் ஆரம்பித்து ஆசாரி பள்ளம் சாலை போய் ராணித் தோட்டம் வரை எல்லாம் ஓடுவோம். இன்னொரு கட்டத்தில் பாலிடெக்னிக் மைதானத்தில் 10 சுற்று ஓடுவது என்று செய்து கொண்டிருந்தோம். வேகமாக ஓடுவது கிடையாது. கிட்டத்தட்ட வேகமாக நடக்கும் கதியில்தான் ஓட்டம் இருக்கும். ஆனால் உடலெல்லாம் வேர்த்து தொப்பலாக நனைந்து போய் விடும்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை பேருந்தைப் பிடிக்க அண்ணா சாலையில் சில நூறு அடிகள் ஓட வேண்டியிருந்தது. பேருந்தில் ஏறியதும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, அடைத்தது. 'என்ன இது இதைக் கூட செய்வதற்கு தவிப்பாக இருக்கிறது' என்று உறைக்க, அடுத்த நாளிலிருந்து வீட்டிற்கு எதிரிலிருந்து வற்றிய ஏரி மைதானத்தில் ஓடி உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதுவும் பல நாட்கள் போய்க் கொண்டிருந்தது.

இந்தூரில் காலையில் எழுந்ததும், ஆறரை மணிக்கு தொழிற்சாலை போகும் பேருந்தைப் பிடிப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கப் போவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அதிகாலையில் எழுந்து செயல்பட ஆரம்பிப்பது ஒரு குணமாக எப்போதுமே இருந்திருக்கிறது. சாங்காயிலும் சில நாட்கள் அதிகாலையில் எழுந்து ஓடி வருவதைச் செய்திருக்கிறேன்.

கணினியில் லினக்சு

கணினியில் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஓப்பன் சூசே ஒரு பகிர்வில், இல்ல அடைவுக்காக தனியாக ஒரு பகிர்வு, கணினி துவங்க தேவைப்படும் கோப்புகளுக்கு ஒரு பகிர்வு இருந்தன. கூடவே பல மாதங்களுக்கு முன்பு நிறுவிப் பார்த்து பயன்படுத்தாமலே வைத்திருக்கும் பெடோரா கோர் இயங்குதளம் இன்னொரு பகிர்வில் இருந்தது. fedora coreஐத் தூக்கி விட்டு அந்த இடத்தில் உபுண்டு நிறுவிப் பார்க்கலாம். சேமிப்பு இடம் போதவில்லை, என்று சில வாரங்களாக நெருக்கடியில் இயங்கிக் கொண்டிருந்தேன்.

உபுண்டு நிறுவும் பயன்பாடு இயங்க ஆரம்பித்து சேமிப்புத் தகடு பகிர்வு தேர்வு செய்யும் திரை காண்பிக்கும் போது 4 GB சும்மா இருப்பதும் தெரிந்தது. தேவையான பகிர்வுகளைத் தவிர மற்றவற்றை அழித்து விடலாம். அது எவை என்று தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு முறை ஓப்பன் சூசே உள்ளே போய் பகிர்வு பெயர்களை குறித்துக் கொண்டு மீண்டும் நிறுவலை ஆரம்பித்தேன். பெடோரா பகிர்வையும், swap பகிர்வையும் அழித்ததும் இரண்டும் சேர்ந்து 25 GBக்கும் அதிகமாக காலி இடம் கிடைத்தது. அதில் 15GB உபுண்டுவுக்காக மீதி கோப்புகளை சேமிக்கப் பயன்படுத்தலாம்.

இப்படி வடிவமைத்து விட்டு நிறுவலைத் தொடர விட்டேன். பகிர்வுகள் மறுவடிவமைக்கப்பட்டு கோப்புகள் நிரப்பப் படும் போது கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிழை வந்தது. வட்டு அணுகும் கருவியில் இருக்கும் பிரச்சனையால் நிறுவல் பாதியிலேயே நின்று போனது. கணினியை இயக்கியதும் இயங்குதளத்தை தேர்ந்தெடுப்பதற்கான பயன்பாடு பெடோரா கோர் பகிர்வில் இருந்தது. இந்த நிறுவல் முழுமையாக முடிந்திருந்தால் அந்த பயன்பாட்டை உபுண்டு மாற்றி அமைத்து வழக்கமாக உபுண்டு அல்லது ஓப்பன் சூசே தேர்ந்தெடுப்பதாக வந்து விடும். இப்படி பாதியில் நின்ற பிறகு கணினியை மீண்டும் இயக்கினால், grubன் முனைய இடைமுகம்தான் வந்தது.

எப்படி சூசேக்குள் போவது என்று புரியவில்லை. கொஞ்ச நேரம் முயற்சி செய்து பார்த்தேன். ஓரிரு கட்டளைகள் கொடுத்தால் உள்ளே போய் விடலாம். அந்த கட்டளைகள் என்ன எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. மீண்டும் உபுண்டுவுக்குள் போய் grub மறு நிறுவல் செய்ய முயற்சித்தேன். அதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அருகிலிருந்த கணினிக்குப் போய் இணையத்தில் grub command line என்று தேடியதில் தெளிவாக விளக்கியிருந்த ஒரு பக்கம் கிடைத்தது. முதலில் root பகிர்வை குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து kernel கோப்பைக் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு boot என்று சொன்னால் உள்ளே போய் விடலாம்.

சில முறை முயற்சித்து உள்ளே போய் விட்டேன். root பகிர்வை குறிப்பிடுவதற்கு grubன் இலக்கணம் கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. அங்கிருந்தே grub புதிதாக நிறுவி கணினியை இயக்கியதில் சூசே ஆரம்பித்து விட்டது. இதற்குள் மணி 10 தாண்டி விட்டிருந்தது.

ஓப்பன் ஆபிஸ் அடுத்த பதிவு வந்திருக்கிறது என்று ஒரு தகடு கொடுத்திருந்தார். ஆனால் அதில் இருந்தது டெபியனுக்கான பொதிகள். இந்த மாதம் இதுவரை எவ்வளவு தகவிறக்கம் ஆகியிருக்கிறது என்று பார்த்து விட்டு ஓப்பன் ஆபிசை தகவிறக்கிக் கொள்வது என்று முடிவு செய்தேன். கிட்டத்தட்ட 170 MB. ஆறு நிமிடங்களில் தகவிறக்கம் முடிந்து விடும் என்று ஃபயர்ஃபாக்சின் கணக்கீடு.

அது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க காலையில் செய்து முயற்சிகளால் கிடைத்திருந்த 25 GB இடத்தைப் பயன்படுத்துவதில் இறங்கினேன். இல்ல அடைவில் இடத்தை நிரப்பிக் கொண்டிருந்த பெரிய அடைவுகளை /storage என்று 10 GB பகிர்வுக்கு நகர்த்தினேன். postgresqlன் பல்வேறு பதிப்புகளை நிறுவி வைத்திருந்த அடைவுகளை /data என்ற 15 GB பகிர்வுக்கு நகர்த்திக் கொண்டேன்.

இப்போது எல்லா அடைவுகளிலும் பாதிக்கு மேலும் கீழுமாக இடம் நிரம்பியிருந்தது. ஏதாவது செய்தால் திடீரென்று இடம் போதாமல் போய் விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. இதற்கிடையில் ஓப்பன் ஆபிசு தகவிறக்கம் முடிந்திருக்க அதை இல்ல அடைவுக்கு நகர்த்தி கோப்பை பிரித்து நிறுவிப் பார்த்தேன். ஏற்கனவே இருந்த பயன்பாட்டை பாதிக்காமல் தனியாக /opt அடைவில் நிறுவி முடிந்தது. இயக்கி பார்த்தால் முதல் முறை ஆரம்பிப்பதற்கு நீண்ட நேரம் பிடித்தது. என்ன மேம்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. ஒரு வாரம் பயன்படுத்திப் பார்த்து விட்டு வசதியாக இருந்தால் பழைய பதிப்பை நீக்கி விட்டு இதை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

கற்பதும் கற்பிப்பதும்

அறிக்கை உருவாக்கும் அமைப்பு குறித்து விளக்குவதாக ஏற்றுக் கொண்டிருந்தேன். அதற்கான தயாரிப்புகளை ஆரம்பித்தேன். என்னென்ன தரவுத்தள tableகள் இருக்கின்றன என்று பட்டியலிடுதல் முதலில். இதை ஆவணப்படுத்துவது விக்கி பயன்பாட்டில் செய்ய வேண்டும். அதற்காக விக்கியில் சில மாற்றங்கள் செய்து கொண்டேன். ஓரிரு பக்கங்களில் யாரோ குப்பைகளை நிரப்பியிருப்பதைப் பார்த்து பதிவு செய்யாத பயனர்கள் உள்ளடக்கத்தை மாற்றும் வசதியை ரத்து செய்தேன். அதற்கும் இணையத்தில் தேடி வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்தக் குறிப்புகளையும் பதிந்து கொண்டேன்.

psqlல் html வடிவில் வெளியீடு வரும்படி அமைத்துக் கொண்டு அதை நகல் செய்து ஒட்டி மாற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அட்டவணைக்கும் ஒரு தலைப்பு என்று போட்டுக் கொண்டே வந்ததில் விக்கி பயன்பாடை அவற்றின் சுருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டது. வரிசையாக 10க்கும் அதிகமான அட்டவைணைகள். அவற்றையும் இனவாரியாகப் பிரித்துக் கொண்டேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு குறிப்பு.

அதை முடித்த பிறகு என்னென்ன செயல்படு கோப்புகள் இருக்கின்றன என்ற பட்டியல். அதில் பட்டியல் மட்டும்தான் ஏற்படுத்த முடிந்தது. ஓரளவு முழுமையான ஆவணமாக்கல் வந்து விட்டது என்று தெரிந்ததும் நிறுத்தி விட்டு எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.

தொடர் மேம்பாடுகள்

செய்யும் வேலையை துல்லியமாக பதிவு செய்து கொள்வது பல வகைகளில் உதவும். நாம் நிவதி நிறுவிக் கொடுக்கும் நிறுவனங்களுக்குச் சொல்வது போல, தினசரி பணியின் மேற்பார்வை, பணிகளை அலசிப் பார்ப்பது, முடிவுகள் எடுக்க உதவுது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுப்பது என்று பல நிலைகளில் உதவியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க ஆரம்பித்த இந்த கருவி நன்றாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. அன்றாட வரவு செலவு கணக்குகள், ஆதாய அறிக்கை, வருகைப்பதிவு, சம்பளச் சீட்டு உருவாக்கல், வேலைப்பதிவுகள், வேலைத் திட்டமிடல் என்று நிறுவனத்தின் செயல்பாடுகளை அனைத்தையும் பதிந்து கொள்ளும் கருவியாக உருவெடுத்து விட்டிருக்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு - சில குறிப்புகள்

முந்தைய நாள் நன்கு வெயிலடித்திருந்ததால் சுடுதண்ணீர் நிறைய நிரம்பியிருந்தது. இன்றைக்கு சூரிய சக்திக் கலனின் சூட்டை இழக்காமல் தடுக்கும் பூச்சை மேம்படுத்துவதற்கு தொலைபேச வேண்டும். சுடுதண்ணீரை ஒரு பீங்கான் கோப்பையில் பிடித்து, அரைத்து வைத்திருந்த துளசி, சுக்குப் பொடியையும் சிறிதளவு தேனையும் சேர்த்து சூடாகக் குடித்து விட்டு அடுத்த வேலை.

மின்சார அளவு நாள் முழுமைக்கும் போதுமானதாகத்தான் தெரிகிறது. எல்லா வேலைகளையும் முடித்துக் குளித்து தியானமும் செய்த பிறகுதான் வெளியுலகச் செய்திகளை உள்ளே விட வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இயக்கியைப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்து விட்ட நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டும் குறையவேவில்லைதான்.

படிக்கும் அறைக்குள் வந்து செய்தித் தளங்களை இயக்கினேன். இதைப் படித்து விட்டு நியூ கினியா நாட்டைப்பற்றிய விபரங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்ஈழத்தில் நடக்கப் போகும் உலகத் தமிழ் மாநாடு குறித்த செய்திகளை மேய்ந்து விட்டு வலைத்தளத்தில் எழுதியவற்றை பதிந்து விட்டேன்.

உலகத் தமிழ் மாநாட்டை தொலைதொடர்பாக நடத்தாமல் பங்கேற்பவர்கள் எல்லோரும் நேரில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அத்தனை ஆண்டுகள் போரில் அவதிப் பட்ட மக்கள் உருவாக்கிய சாதனைகளை உலக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அதே மாநாட்டின் parallel அமர்வுகளாக சிங்கள மொழி வளர்ப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மூன்று நாட்கள். போக வேண்டும் என்றுதான் ஆசை. மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விடும்.

ஒன்பதரை மணிக்கு தொழில் நுட்ப ஆய்வுக் கூட்டம். அது சீக்கிரமாக முடிந்து விட்டால் கருத்தரங்கையும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்கை ஒரு திரையில் ஓட விட்டுக் கொண்டேன். அமைப்பாளர்கள் அரங்கில் நாற்காலிகளை அமைத்திருந்தார்கள். இது போல நேரடி விவாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் சிக்கல் மட்டும் குறைந்தபாடில்லை. ஒன்பதரைக்குள் ஒவ்வொருவராக ஆய்வுக்கூட்டத்துக்கு வந்து விட்டார்கள்.

அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்து விட கருத்தரங்கு ஒலியை உயர்த்தினேன். கூட்டத் திரை நகர்ந்து பொதுப்படையாக வைத்திருந்த கணினித் திரைகள் ஓட ஆரம்பித்தன. கருத்தரங்கில் அறிமுக உரைகள் மூன்று முடிந்து முதல் உரையாளர் பேச ஆரம்பித்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்குறிப்பு. இன்றைக்கு மொழி மாற்றத்தின் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வங்காள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் போது பலருக்கு சறுக்கி விடுகிறது. புதிய மொழிமாற்றி இன்றுதான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் ஒலிபரப்பை மாற்றி வங்காள மொழியில் அவர் பேசுவதை ஒலிக்க விட்டேன். காதில் தேமதுரம் பாய்வது போன்ற உணர்வைத் தரும் மொழி. அவரது குரல் தமிழிலும் நன்கு ஒலிக்கிறது. உரையை மொழி மாற்றம் செய்து, பேசுபவரின் குரலிலேயே விரும்பிய மொழியில் கேட்டுக் கொள்ளும் வசதி பெரிய வரப்பிரசாதம்தான்.

அடுத்த பேச்சாளர் இந்தியில் ஆரம்பித்தார். இந்தியில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் மாணவி. இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் இயக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதி வெளியிட்டது. அவரது குரல் மட்டுமில்லாமல் மனமும் ஒலிப்பதாகத் தோன்றுவதற்கு இன்னும் ஒரு காரணமாகப் போய் விட்டது.

கருத்துச் சிதறல்கள் அறையை நிறைக்க ஆரம்பித்தன. நேற்று இரவில் எனக்குப் படிக்க அனுப்பியிருந்த பதிப்பிலிருந்து மேலும் பல மாறுதல்கள் செய்து இன்னும் செதுக்கி விட்டிருந்தார். 10 நிமிடங்களுக்கான உரை. ஆரம்பிக்கும் போது நேரடியாகக் கலந்து கொண்டிருந்த 15 பேரைத் தவிர வெளியிலிருந்து 20 பேர் இணைந்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்று முனையம் காட்டியது.

இந்த நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பின்மாலை, ஜப்பானில் பிற்பகல், சீனாவில் வேலை நேரம், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை ஆரம்பிக்கும் பொழுது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் அதிகாலையாக இருக்கும். நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிக்க பல இணைப்புகள் சரசரவென்று உள்ளே நுழைந்தன.

சரியாக 10 நிமிடங்களில் உரை முடித்து விட்டது. அதற்குள் 3368 கருத்துரைகளும் 216 விளக்கத் தேவைகளும் வந்து விட்டிருந்தன. விளக்கத் தேவைகளில் பார்ப்பவர்களின் தெரிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று அறிவிப்பு வந்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை. அது தொடர்பாக இருந்த ஐயங்களும், பதற்றங்களும் கேள்விகளில் நன்றாகவே தெரிந்தன. அப்படித் திட்டமிடுவதால் குடியேற்றத்துக்கான செலவுகள் 3% மட்டுமே அதிகமாகும் என்ற கணக்கீடுகள். இந்த ஆராய்ச்சியுரையின் முடிவால் குடியிருப்பில் கலந்து கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப் போகிறது.

அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க நிறுவனத் திரையிலும் உரையாடல் வேண்டுகோள்கள் நிறைந்து விட்டிருந்தன. அடுத்த சனிக்கிழமை ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியுமா? நேரடி விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தாலும் இது போன்ற வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், அவர்கள் விழாவுக்கு எனது கருத்துரையை அனுப்புகிறேன் என்று பதில்.

வெளியில் வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. அறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவியின் ஹம் ஓசை இன்னும் ஒரு ஜதி உயர்ந்தது.

முன்பெல்லாம் flexi-timings என்று நிறுவனங்களில் ஒரு முறையை செயல்படுத்துவதைப் பற்றி பெரிதாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்த்துக் கொள்வது, தேவைப்படும் போது மட்டும், முக்கியமாக குழு சந்திப்புகள், விவாதங்களுக்கு மட்டும் அலுவலகத்துக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் வருவது என்று நடைமுறை பேசப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போது என்னென்ன சிக்கல்கள் வரும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பது ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஒரு பொத்தானைத் தட்டினால் 'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்தவர்கள் நம்மை அணுகலாமா' என்று வெளிப்படுத்திக் கொள்ளலாம். நமது வேலை திரையை, நமது உருவத்தை மற்றவர்கள் பார்க்கலாமா என்று அமைத்துக் கொள்ளலாம். அதைப் போல யார் யார் எங்கெங்கு என்னென்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று மூன்றாவது திரையின் வலது ஓரத்தில் பார்த்துக் கொள்ளலாம். சுஜாதா இணையத்தை அறிமுகம் செய்து எழுதிய புத்தகத்தின் தலைப்பைப் போல உலகம் உண்மையிலேயே வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது, அந்த எட்டு மணி நேரத்தில் குறைந்தது 6 மணி நேரம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு அவர்கள் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. சிலர் சரியாக 6 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பொது இணையத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 'என் வாழ்க்கையை எனது சுயத்தை வைத்துக் கொள்வது எனது உரிமை' என்று வாதம்.

இப்படி எழுதும் போது கணினித் திரை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தகவலையும் போட்டு விட்டால், புருவங்கள் முடிச்சிட நான் உட்கார்ந்திருப்பதை, நிறுவன சகாக்களும், உறவினர்களும், நண்பர்களும் - இணைப்பில் உள்ள, அணுகல் கொடுத்துள்ளவர்கள் - பார்த்துக் கொள்ளலாம்.

உரையை விண்வெளி கழகத்தின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான பேர் படித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவில் நடக்கும் உள்நாட்டு போராட்டத்தைக் குறித்த விவாதம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா என்ன முடிவெடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கும் அமர்வு. யார் யார் எப்படி வாக்களிப்போகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு தரப்பிலிருந்தும் இரண்டிரண்டு பேர் பேசினார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த தாய்வானிலிருந்து செயல்பட்டு வந்த தேசியக் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு, பெய்ஜிங்கிலிருந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு, தேசிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பு சட்டம் வகுத்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மூன்றாவது தரப்பு. அரை மணி நேரத்தில் விவாதங்கள் முடிந்தன. முதலில் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு. ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தனது தேர்வை குறிப்பிட்டதும், அவர்களது தொகுதி, தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இவர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்று பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

அடுத்த 1 மணி நேரத்தில் பொது வாக்கெடுப்பு நடக்கும். தமது தொகுதி உறுப்பினர் அளித்த வாக்கை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமது வாக்கை மாற்றி அளிக்கலாம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து மாற்று வாக்குகளைக் கழித்து விட்டு உறுப்பினரின் வாக்கின் மதிப்பை எடுத்துக் கொள்வார்கள்.

தினசரி நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ள யாருக்கும் நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. உறுப்பினரின் முடிவில் ஒரு சில வாக்குகள் மட்டுமே மாற்றாக பதிவாகும். இது போன்று முக்கியமான நேரங்களில், பங்கெடுப்பு பல ஆயிரங்களாக, சில நேரங்களில் பாதிக்கும் அதிகமாகக் கூடப் போக நேரிடும்.