புதன், ஏப்ரல் 20, 2011

போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள்


hm@nic.in

மதிப்புக்குரிய உள்துறை அமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்களுக்கு,

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு பல போர்க்குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டியிருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 2008-09 ஆண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன என்ற தமது அச்சத்தை பல வழிகளில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நேரத்தில் இந்திய அரசு இந்தக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இலங்கை அரசை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளில் ஆதரித்து அதன் செயல்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழு அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில் இந்தியக் குடிமகன் என்ற முறையில் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.

1. போர்க்குற்றங்கள் செய்த இலங்கை அரசை நமது இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது.
2. ஐக்கிய நாடுகள் சார்பாக போர்க்குற்ற விசாரணை ஆணையத்தை உடனடியாக உருவாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
3. நீண்ட கால நோக்கில் இலங்கையின் வடக்கு கிழக்கை பகுதிகளை பன்னாட்டு படைகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு மூலம் மக்கள் பிரநிதிகளைக் கொண்ட அரசாங்கம் உருவாக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

உங்கள் உண்மையுள்ள,

மா சிவகுமார்,
(முழுமுகவரி)

==================================
http://pmindia.nic.in/feedback.htm

Dear Sir,

Several media outlets have reported that a U.N.-appointed panel has found "credible allegations" that war crimes were committed in the Sri Lanka's war with the LTTE.

People of Tamil Nadu have been voicing their apprehensions about these war crimes even during 2008-09.

As a citizen of India I request you to
1. not to support Sri Lanka government anymore.
2. take an active role in setting up a War Crime Tribunal to go into these atrocities.

Your sincerely,
  
Ma Sivakumar

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்கள்

சானல் 4 தொலைக்காட்சியில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் பேட்டி


'என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியக்கூடாது' என்று முயற்சித்து வெற்றியும் பெற்றது இலங்கை அரசு. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரையும் அருகிலேயே வர விடவில்லை.

1. இலங்கை நடத்தும் விசாரணை எதுவும் உண்மைகளை வெளிக் கொண்டு வராது. போர்க்குற்றங்களை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்.

2. இலங்கை இடுக்குகளில் மறைந்து கொண்டது. சீனா இலங்கையை பாதுகாப்பு கவுன்சிலில் பாதுகாத்தது. இந்தியா மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பாதுகாத்தது.

3. எந்த பெரிய நாடும் இலங்கையில் நடந்ததை புறக்கணிக்க முடியாதபடி இந்த அறிக்கை இருக்கிறது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன்.

4. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளிவந்த பிறகு, சீனா கூட எதுவும் செய்ய முடியாது. லிபியா, சூடான் போன்ற நாடுகளைப் பொறுத்த வரை சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதே போல இலங்கைக்கும் நடக்கும்.

5. இலங்கை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவும், கிரிக்கெட் விளையாடவும் அனுமதிக்கப்பட வேண்டுமா? ராஜபக்சே உலகில் சுற்றி வர அனுமதிக்கப்பட வேண்டுமா?

குறிப்பிட்ட தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்தான் இந்தக் குற்றங்களுக்கு முழுப்பொறுப்பாளிகள்.

7. இலங்கை அரசு என்ன நடக்கிறது என்பதை வெற்றிகரமாக மூடி மறைத்திருந்தது.

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம்




சென்ற தடவை தேர்தல் நடந்ததே, இதை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? உருட்டுப் பேச்சுகளும் மிரட்டு விழிகளும். கரட்டுப் பார்வைகளும், கத்திக் குத்துகளும், காலை இடறி விடுவதும், மோட்டார் ஏறி ஆள் சாவதும், இவைகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? வாதத்துக்கு வாதம், புள்ளி விவரத்துக்கு புள்ளி விவரம், வேண்டுகோளுக்கு வேண்டுகோள், அது நடந்தது.

இந்தத் தடவை என்ன நடக்கிறது?

'ஓட்டுக்குப் பணம் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். காங்கிரஸ்காரர்கள்' என்று கேள்விப்பட்டு நம்முடைய தோழர்கள் 'பணம் வாங்காதே!' என்று கூச்சலிட்டுக் கொண்டு போனால், உடனே டெலிஃபோன் செய்து, போலீஸ் பாராவைக் கொண்டு வந்து போட்டு நம்முடைய தோழர்களைத் தடுத்து 'ஆகட்டும் உங்கள் வேலை ஆகட்டும்' என்று போலீசே பாதுகாப்புத் தருகிறார்கள்.

நான் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லுகிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு 'நீங்கள் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறீர்கள்.'

நீங்களே ஆரம்பியுங்கள், என்ன கெட்டு விட்டது? நீங்கள் பாதுகாப்பாக இருந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பணம் கொடுப்பதை விட நீங்களே, 'நிறைய்ய போலீஸ் வந்திருக்கிறது. இன்னின்ன தெருவுக்கு நாலு போலீஸ் பணம் கொடுக்கும்' என்று தண்டோரா போட்டு விட்டுக் கொடுங்கள்.

என்ன செய்வீர்கள் அதனாலே? என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதானே உங்கள் எண்ணம்? என்னைத் தோற்கடிப்பதாலே உங்களுக்குக் கிடைக்கிற லாபம் என்ன? என்னைத் தோற்கடிப்பதாலே நீங்கள் எதைத் தூய்மைப்படுத்தப் போகிறீர்கள்? என்னைத் தோற்கடித்து விட்டால்  உங்களுடைய எந்தக் கொடி வானத்திலே பறக்கப் போகிறது?

துணிவோடு நீங்கள் இருப்பீர்களானால்!

பணத்தையும் கொடுத்து வெங்கடேச பெருமாள் படத்தை வைத்தார்களாம். ஆக, உங்களுக்கு என்னை எதிர்க்க வக்கில்லை வழியில்லை, ஏழுமலை ஏறி அவரை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். பரவாயில்லை, அவர்தானே வருகிறார், வரட்டும்.

ஆக, என்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறீர்கள்? ஒரு சாதாரண அரசியல் கட்சியிலே உள்ளவன் என்று மதிக்கவில்லை. 'அண்ணாதுரையைத் தடுக்க வேண்டுமானால் 5 ரூபாய் கூட போதாது. தீராத வல்வினை எல்லாம் தீர்த்து வைப்பவனைக் கொண்டு வந்து அவன் படத்தின் கீழ் 5 ரூபாயை வைத்து எடுத்துக் கொள்' என்று சொல்லுகிறீர்கள்.

அதை நீட்டுகிற போது தாய்மார்களைக் கேட்கிறேன் 'உற்று அந்தப் படத்தைப் பாருங்கள்'.

அந்தத் தெய்வம் எதற்காக ஏழுமலைக்கு அப்பாலே இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? நாட்டிலே இருக்கிற அக்கிரமம் தாள மாட்டாமல் தொலைவாகப் போயிருக்கிறது. நல்லவர் கஷ்டப்பட்டாகிலும் அங்கு வரட்டும் என்பதற்காகத்தான் அங்கே போயிருக்கிறதே தவிர,  நாட்டில் அக்கிரமம் இல்லை என்றால் நம்முடைய வரதராஜப் பெருமாள் இப்போது ஊரோடு ஊராக இருந்திருக்க முடியும்.

நீங்கள், உங்கள் தொல்லை தாளமாட்டாமல் ஏழு மலைக்கு அப்பால் இருக்கிறவரை, மறுபடியும் அழைத்துக் கொண்டு வந்து 'அதர்ம காரியத்துக்கு நீ துணை செய்' என்றால் உண்மையிலே துணை செய்வாரா?

வெங்கடேசப் பெருமாள் படத்தின் பேரிலே 5 ரூபாயை வைத்து அதை யாராவது வாங்கினால் வெங்கடேசப் பெருமாளிடத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்கிறேன் அவர்கள் இது வரையிலே கும்பிட்ட கோவிந்தனுக்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தைப் போல கோவிந்தன் ஏது கோபாலன் ஏது என்று பேசுகின்றவர்கள் கூட அவ்வளவு துரோகம் செய்ததில்லை என்பதை அருள் கூர்ந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பூரத்தைக் கொழுத்தி கோவிலில் அடித்து விட்டு கால் ரூபாய் நான் வாங்கியதில்லை என்று பொய்ச் சத்தியம் செய்பவனைக் கூடச் சாதாரணமாகக் கருதலாம்.  வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து அதன் பிறகு 5 ரூபாய் நோட்டை வைத்து அதை எடுக்கப் போகிற நேரத்தில் தாய்மார்களும் பெரியவர்களும் ஒரு தடவை முகத்தைப் பாருங்கள். வெங்கடேசப் பெருமாள் எதற்காக இருக்கிறார் என்பதை பாருங்கள். ஐந்து ரூபாய் நோட்டு வாங்கிக் கொடுக்கவா இருக்கிறார்.

கை கால் பிடிப்பு வந்தால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
புத்திக் கோளாறு ஏற்பட்டால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
மலடிகள் அந்தக் கோவிலுக்குப் போய் வந்தால் பிள்ளை பிறக்கும் என்கிறார்கள்.
சொத்து இல்லாதவர்கள் அந்தக் கோயிலுக்குப் போய் வந்தால் அற வழியிலே சொத்துச் சம்பாதிக்கலாம் என்கிறார்கள்.

பக்தர்கள் பலமாதிரி அதைப் பற்றிச் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தேவதையைக் கொண்டு வந்து 5 ரூபாய் நோட்டை அதன் பேரிலே வைத்தால்!

நான் இதைக் கூட எண்ணியிருப்பேன். 5 ரூபாயை எடுத்து விட்டு வெறும் வெங்கடேசப் பெருமாளைக் காட்டியிருந்தாலாவது, 'ஓ,  வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பு இருக்கிறது' என்று எண்ணுவேன். எனக்கு இப்பொழுது எதற்கு மதிப்பு என்றே தெரியவில்லை, 5 ரூபாய் நோட்டுக்கு மதிப்பா, வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பா, இந்த இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றின் மேல் வைக்கிறார்களே அது மதிப்பா என்று தெரியவில்லை. அதை விடக் கூடாநட்பா இது!

வெங்கடேச பெருமாள் படத்தின் பேரில் 5 ரூபாய் நோட்டை வைத்து வோட்டரிடத்திலே நீட்டுகிறீர்களே அதை விடக் கூடா நட்பா இது? இவர் என்ன வெங்கடேச பெருமாள், நான் மேலெடுத்த 5 ரூபாய் நோட்டா? இதைக்காட்டி உங்களுடைய வாக்குகளை நாங்கள் தட்டிப் பறிக்க விரும்புகிறோமா?

இதை எண்ணிப் பாருங்கள். ஆகையினால் அந்தப் பணத்தைத் தொடுவதற்கு கை கூச வேண்டும். அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு கண் கூச வேண்டும். அதைத் தொடுகிற போது இதயத்திலே இது வரையிலே இருந்த வந்த எல்லா நியாய உணர்ச்சியும் பொங்கி வழிய வேண்டும். அது வழியுமானால், அந்தப் பணம் பாவத்தின் சின்னம். அந்தப் பணம் உரிமைச் சீட்டைத் தட்டிப் பறிப்பதற்காக, ஊர்ச்சொத்தை அடித்து உலையிலே போடுகிறவர்கள் நமக்குத் தருகின்ற லஞ்சத் தொகை என்று கருத வேண்டும்.

நண்பர்களே அந்த 5 ரூபாய் நமக்கு எத்தனை காலத்துக்கு வரும்? நீங்கள் அருமையாகப் பெற்றெடுத்த ஒரு குழந்தைக்கு பட்டுச் சட்டைத் தைக்க வேண்டும் என்றால் கூட அந்த 5 ரூபாய் காணாது. ரெண்டு நாளைக்கு நிம்மதியாகச் சாப்பிடலாம். நாலு தடவை அந்த சாப்பிட்ட சந்தோஷத்திலே இருக்கலாம்.

அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டாமா? என்னுடைய முகத்தைப் பார்க்கிற நேரத்தில் ஐந்து ரூபாய்க்காகவா நமக்காக பாடுபட்ட ஒருவனுக்குக் கெடுதல் செய்தோம் என்று உங்கள் உள்ளம் உங்களை உறுத்தாதா? எண்ணிப்பாருங்கள்.

இல்லை, இவ்வளவுக்கும் பிறகு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கருதினால் அதைச் சில பேர் செய்ததைப் போல திருப்பியாவது கொடுங்கள்.  அதிலே இருக்கிற அந்த பாவத்தைப் போக்கி நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அதை உபயோகிக்கிறோம்.

இல்லை, இன்னும் கூட ஒன்று சொல்கிறேன். இதை அப்படியே எங்களிடத்திலே கொடுங்கள். அதற்குப் பிறகு யார் உங்களுக்குக் கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரர்களிடத்திலே  திருப்பித் தர நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த பாவ காசு கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் இதை நம்பி ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள்.

என் பேரிலே கோபம் யாருக்காவது இருந்தால் தனியாக கூப்பிட்டு நாலு வார்த்தை ஏசுங்கள். என் பேரிலே ரொம்ப அருவெறுப்பு இருந்தால் நான் ஒண்டிச் சண்டியாக வரும்போது அடித்துக் கூடப் போடுங்கள். ஆனால், நாட்டைப் பாழாக்காதீர்கள்.

நல்ல தருணம்! ஜனநாயகம் வளர்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண காசுக்காக மயங்கி ஜனநாயகம் வளர்வதற்கு நீங்கள் கேடு செய்யாதீர்கள் என்று பணிவன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

'உனக்கு என்ன இந்தக் காங்கிரசு ஆட்சியிடத்திலே இவ்வளவு பெரிய கோபம்' என்று யாராவது கேட்டீர்களானால் நான் சொல்லுவேன். காங்கிரசு என்ற கட்சியின் பேரிலே கூட அல்ல.

இடுப்பிலே நாம் கட்டுகிற வேட்டி வெள்ளையாகத்தான் எடுத்துக் கட்டிக் கொள்கிறோம். நடந்து போகிறபோது அந்த வேட்டி தானாக அவிழ்ந்து போய் குப்பைக் கூளத்தில் விழுவதில்லை. ஊரில் இருக்கிற குப்பை கூளம் எல்லாம் காற்றால் அடிக்கப்பட்டு வேட்டியில் ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிக் கொண்ட உடனே 'இது என்னுடைய வேட்டி, இந்த அழுக்கு எங்களூர் அழுக்கு, இருக்கட்டும்' என்றா சும்மா இருக்கிறோம்.

வெளுப்பவனை அழைத்து அதைக் களைந்து போடவில்லையா. வெளுத்துக் கொடுங்கள் என்று கேட்கவில்லையா.  அவன் அதை எடுத்துக் கொண்டு போய் ஆற்றுத் தண்ணீரில் அழுந்தத் தோய்த்து கற்பாறையில் ஓங்கித் துவைக்கிற போது பக்கத்திலே நின்று கொண்டு

'அப்பா அப்படி அடிக்காதே, அது ஆறே முக்கால் ரூபாய் வேட்டி,  நான் அருமையாக வாங்கியது அதை அந்த அடி அடிக்காதே' என்று சொன்னால், சொல்ல மாட்டோம், சொன்னால் வெளுப்பவன் என்ன சொல்லுவான் ,

'அய்யா நீ ஏற்றி வைத்திருக்கிற அழுக்கு இந்த அடிக்குக் கூடப் போகாது, இது இன்னமும் வெள்ளாவி வைத்து எடுத்தால்தான் அழுக்குப் போகும் போல இருக்கிறது. எண்ணைய் சிகண்டு ஏறி விட்டது' என்று அல்லவா சொல்லுவான்

அதே போல ராஜாஜி அவர்கள் காங்கிரசை கடுமையாகத் தாக்குகிறார் என்று நேரு பண்டிதரும் மற்றவர்களும், ''அய்யோ இந்த அடி அடிக்கிறாரே' என்றால், அதிலே இருக்கிற எண்ணைய் சிகண்டு அவருக்குத் தெரிகிறது, அடிக்கிறார். அவருக்கென்ன வேட்டியின் மீதிலா கோபம். எண்ணெய் ஜிகண்டின் பேரிலே கோபம்.

ஆனால் சிலபேர், வேட்டி அழுக்கானாலும் சுலபத்திலே எடுத்துப் போட மாட்டார்கள். மேற்பக்கத்தில் அழுக்கானால் உள்பக்கத்தில மடிப்பு வருமாறு கட்டிக் கொள்வார்கள், இடுப்புப்பக்கம் அழுக்கானால் கால்பக்கத்தைக் கட்டிக் கொள்வார்கள். கால்பக்கத்தில் அழுக்கானால் இடுப்புப் பக்கத்தில் கட்டுப் போடுவார்கள்.

'இது உனக்கு எப்படி இவ்வளவு விபரமாகத் தெரியும்' என்று நீங்கள் கேட்பீர்கள். எனக்கே அது பழக்கம்.
எனக்கு அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்னுடைய குருநாதர் அருள் பெரியார் ராமசாமிக்கு அந்தப் பழக்கம். ஆகையினால்தான் அந்த விஷயத்தை அவ்வளவு விபரமாக நான் சொல்லுகிறேன்.

அதைப் போல காங்கிரஸ் கட்சியுடைய ஆட்சி பூராவிலும் அழுக்கேறி விட்டிருக்கிறது.

சனி, ஏப்ரல் 16, 2011

செத்த வீட்டில் புலம்ப மட்டும் தெரிந்த சமூகம்


மாரிமுத்து என்ற மீனவரின் உடலை பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்து விட்டு அடக்க முடியாத சோகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர் ராமநாதன் கோட்டைப்பட்டிணத்திலிருந்து பேசினார்:

'சம்பவம் நடந்து 14 நாட்களுக்குப் பிறகு உடல் கரையில் ஒதுங்கியிருக்கிறது. தலை இல்லை.  மனசே சரியில்லை. எங்கோ பிறந்து எங்கோ உயிரிழந்து எங்கோ அடக்கம் செய்யப்படுவதாக அவரது தலைவிதி ஆகியிருக்கிறது.

என்ன தவறு செய்தார்கள் இந்த மீனவர்கள்! பிழைக்கத் தொழில் செய்யப் போவது ஒரு குற்றமா?

ஏப்ரல் 6ம் தேதியே 'மூன்று உடல்கள் பிண அறையில் வைத்திருப்ப'தாக ஒரு காவலர் யாழ்ப்பாணத்திற்குப் போன ராமேசுவரம் மீனவர்களிடம் வாய் தவறிச் சொன்னதாக நிரபராதி மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் சொன்னாராம்.

நீங்க என்ன வேண்டும் என்றாலும் சத்தம் போடுங்க, நாங்க அடிக்கிறது அடிப்போம், கொல்வோம் என்ற செய்தியைத்தான் சிங்களப் பேரினவாத ராணுவம் தமிழர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

இழவு வீட்டில் கூடி இருந்து அழும் சமூகமாக ஆகி விட்டிருக்கிறோம்!.'

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

மின்னஞ்சலில் அனுப்பியவர் சென்னையில் வசிக்கும், வேலூர் பரப்புரையில் பொறுப்பேற்று பணியாற்றிய திரு கண்ணன்

காங்கிரசு எதிர்ப்பு முன்னணி

நடந்து முடிந்த 2011 தேர்தலில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 20 வருடமாக சட்டமன்ற காங்கிரசு வேட்பாளராக இருந்த "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரன் 5 வது முறையாக போட்டியிடும் வேலூர் சட்டமன்ற தொகுதியில் "காங்கிரசு எதிர்ப்பு முன்னனி" என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டதில் "சர்வதேச தமிழர் கழகம்",  "சேவ் தமிழ் இயக்கம்",  "தமிழ் தேசிய மாணவர் இயக்கம்" மற்றும் "தமிழக இளைஞர் எழுச்சி பாசறை" போன்ற அமைப்புகளின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த 2ஆம் தேதியில் "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரனுக்கு எதிராக குறிப்பாக நாங்கள் பரப்புரையை தொடங்கிய காரணத்தை நாங்கள் சொல்லதேவையில்லை. இந்த கடும் பரப்புரை தொடங்க எங்களுக்கு உறுதுணையாகவும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த சுயேச்சை வேட்பாளர் மற்றும் தேர்தலை புறக்கணித்த அரசியல் கட்சியின் அமைப்பை சார்ந்தவர்களுக்கும்"கருஞ்சட்டைகாரர்" அமைப்பை சார்ந்தவர்க்கும், தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளார்க்கும் நாங்கள் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியினையும் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளோம். மேலும் எங்களுக்கு தங்க இடம் கொடுத்த "மெளன புரட்சியாளர்" பேராசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

முதல் நாள் சத்துவாச்சாரியில் குட்டி யானையில் ஒற்றை ஒலி பெருக்கி மற்றும் துண்டறிக்கையுடன் தொடங்கிய பரப்புரை மெதுவாக சூடுபிடித்ததற்கு காரணம் மக்கள் ஆதரவுதான்.

"விரட்டி அடிப்போம்!, விரட்டி அடிப்போம்!
தமிழின விரோத காங்கிரசு கட்சியை
விரட்டி அடிப்போம்!",

தோற்கடிப்போம்!, தோற்கடிப்போம்!
தமிழின விரோதி ஞானசேகரனை
தோற்கடிப்போம்!",

"கொத்து கொத்தாய் மக்களைய் கொன்ற
இன அழிப்பு நடத்திய
ஆயுதம் கொடுத்து உதவி செய்த
சிங்களவனின் கூட்டாளி!
தமிழர்களின் பகையாளி!
காங்கிரசை தோற்கடிப்போம்!",

"கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
தமிழ்த்தேசிய வளங்களேல்லாம்!
கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பினோம்
20 வருடமாய் கோட்டைக்கு அனுப்பினோம்
ஞானசேகரனை கோட்டைக்கு அனுப்பினோம்
கேட்டதுண்டா! கேட்டதுண்டா!
ஞானசேகரன் கேட்டதுண்டா!
கேட்கவில்லை!, கேட்கவில்லை!
ஞானசேகரன் கேட்கவில்லை!
பாலாற்று தண்ணியை கேட்கவில்லை!
பென்னையாற்று மணற் கொள்ளையை கேட்கவில்லை!
காவிரி நீரை கேட்கவில்லை!
தமிழக மின்சாரத்தை கேட்கவில்லை!
நரிமண எண்ணெய்யை கேட்கவில்லை!
நெய்வேலி நிலக்கரியை கேட்கவில்லை!
அவன் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்!
தமிழ் மக்களின் உயிர் மட்டுமே!
ஈழத்தமிழர்களின் உயிர் மட்டுமே"!!!

என்ற முழக்கங்களோடு வேலூர் விதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் துண்டறிக்கைகளுடன் பரப்புரையை தொடங்கினோம்.

இரண்டாவது நாள் வாகனத்தின் இருபக்கங்களிலும்(வலது,இடது) பாதகைகள் கட்டப்பட்டன. ஒரு பக்கத்தில் ஞானசேகரனையும் மறுபக்கத்தில் காங்கிரசை எதிர்த்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதேவாகனத்தில் கூடுதலாக இன்னொரு ஒலிவாங்கியும், ஒலி பெருக்கியும் சேர்க்கப்பட்டன.

'நாங்கள் உங்களிடம் ஒட்டு கேட்டு வரவில்லை, இந்த கட்சிக்கு போடுங்கள், இந்த சின்னத்திற்கு போடுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள் இங்கே பாலாறும், தேனாறும் ஓடும்எனச்சொல்லவில்லை.'

'1 1/2 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்திலே 2 லட்சம் மக்களை கொன்ற காங்கிரசு கட்சியை துரத்தியடியுங்கள்.'

'20 வருடமாய் ஞானசேகரனை கோட்டைக்குஅனுப்பினீர்கள். அவர் இந்த வேலூர் மக்களுக்கு செய்ததுதான் என்ன?'

'பாலாற்றிலே தண்ணீர் வர போராடினாரா? ஆனால் உண்ணாவிரதம் இருந்து நம்மையெல்லாம் ஏமாற்றினார். ஆந்திராவிலே காங்கிரசுதான் ஆள்கிறது, ஞானசேகரனும் காங்கிரசுதான், ஏன் இவர் அவர்களிடம் பேசி தண்ணீர் வர வைக்க முடியாதா?'

'பென்னை ஆற்றிலே மணற்கொள்ளை, என்றாவது அம்மணற்கொள்ளையை தடுக்க முயற்சி செய்திருக்கிறாரா? ஆனால் அந்த மணற்கொள்ளையில் உரிய பங்கை பெற்றுக்கொள்வதில் மட்டும் கவனமாகஇருந்துகொண்டிருக்கிறார்.'

'வேலூர் மக்கள் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததுண்டா?'

'அறிவு நூற்பாலையை புதிப்பித்திருந்தால் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்குமே? செய்தாரா இந்த ஞானசேகரன்!!!'

'காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தை நடத்த ஏதாவது முயற்சி செய்ததுண்டா? ஆனால் பஞ்சமி நிலங்களை தகாத முறையில் அடைந்து அதனை அவருடைய உறவினர்களுக்கு விற்றுவிட்டார்.'

'சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ அலுவலகச்சாலையில் வர இருந்த மேம்பாலத்தை, சுயபயன்பாட்டுக்காக அவர் வீட்டருகே போட்டுக்கொண்டவர்தானே இந்த ஞானசேகரன், அந்த மேம்பாலம் அங்கே இல்லாததால்இதுவரை 144 உயிர்கள் பலியாகியுள்ளனவே. '

'புது பொலிவுடன் அமைய இருந்த வேலூர் பேருந்து நிலையத்தை, அவருடைய சுயலாபத்திற்க்காக சிறிய அளவில் அமைத்து விட்டார்,'

'சுற்றுச்சுழலை கவனத்தில் கொள்ளாமல் பன்னாட்டுநிறுவனங்களிடம் கையுட்டு வாங்கி முறையான அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் அமைந்திட காரணமாக இருந்தார்.'

'சாதாரண குடும்பத்தில் பிறந்த ஞானசேகரனின் சொத்துமதிப்பு இன்று 2000 கோடிக்கு மேல், எப்படி அவரால் இவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது. அவர் என்ன களை பறித்தாரா, நாத்து நாட்டாரா?நம்முடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து சம்பாறித்ததுதானே தமிழர்களே!!!'

'வேலூரில் அமைய இருந்த பல்கலைகழகங்களை கூட பணம் பெற்றுக்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தவர்தானே, இந்த ஞானசேகரன்.'

'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கிட ஐ.டி நிறுவனங்கள் அமைக்க முயற்சித்தாரா!!!'

'ஞானசேகரன் பகுதி பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை, பேசவில்லை. அப்படியென்றால் தமிழ்நாட்டு பிரச்சனையையாவது பேசியிருக்கிறாரா?'

'உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து காவிரியில் தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசுக்கு எதிராக பேசியிருக்கிறாரா!!!'

'20 வருடமாய் வேலூரின் சட்டமன்ற வேட்பாளராய் இருந்த ஞானசேகரனை கஸ்பா பகுதி வாழ்மக்கள் பள்ளிகூடம் கட்டி தாராததால், அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து ஞானசே கரனை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பெண்கள் செருப்பு, முறம், விளக்குமாற்களை வைத்துக்கொண்டு எதிர்ப்புகளை பதிவுச்செய்தார்கள்.'

'சாவு விட்டிலே பிணமாகவும், திருமண விட்டிலே மாப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஞானசேகரனை தோற்கடிப்போம்.'

'இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? ஆனால் அவன் கூட குஜாராத் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினார்கள் என சுட்டுக்கொன்றதிலையே, இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, அண்டை நாடு என கூறிக்கொள்கிறோம், அவன் தானே நம்முடைய தமிழக மீனவர்களை தினம் தினம் சுட்டுகொண்டிருக்கிறான் தமிழர்களே, '

'இதைப்பற்றி என்றைக்காவது ஞானசேகரன் கவலைபட்டதுண்டா?'

'ஈழத்து படுகொலையையும் பேசமறுக்கிறார், "மாவீரன்" முத்துக்குமரன் மற்றும் "மாவீரன்" சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்கின்றார். அப்படியென்றால்அவர் சட்டசபையிலே பேசியதெல்லாம் என்ன? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது, பயங்கரவாதம் பெருகிவிட்டது, தீவிரவாதம் வளர்ந்து விட்டது, ஈழதமிழர்களை கொன்றழிக்கவேண்டும் என்றல்லவா பேசினார்.'

"உலக தமிழர்களின் எதிரியான" ஞானசேகரனை தமிழர்களாகிய நாம் வீட்டுக்கு அனுப்பவேண்டும் தமிழர்களே வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

'வெள்ளைக்காரன் போனான், கொள்ளைக்காரன் வந்தான் என்பார்கள். வெள்ளைக்காரனாவது பள்ளி, மருத்துவமனை, தொழிற்நிறுவனங்கள் நிறுவினான். இந்த வெள்ளைக்காரனுக்கு பிறந்த இந்த கள்ளப்பிள்ள காங்கிரசு இந்தியாவையே பட்டாபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறான். முதலில் நேரு, இந்திரா, ராஜிவ் இப்பொழுது சோனியா நாளை ராகுல். இவர்களேன்ன மன்னர் ஆட்சி நடத்துகிறார்களா!!!'

'ஈழத்தில் மட்டும் தமிழர்களை இவர்கள் கொன்றழிக்கவில்லை, காசுமீரத்திலே 70000 மக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அங்கே 500000 ராணுவத்துருப்புக்களையும் நிறுத்திவைத்துள்ளார்களே!!!' பஞ்சாபிலே சீக்கியர்களை கொன்றழித்தது இந்த காங்கிரசு. வட கிழக்கு பகுதிகளில் அப்பாவி பழங்குடி மக்களை "மாவோஸ்டுகள்" என்ற பெயரிலே பச்சைவேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தகாங்கிரசு.'

'தமிழக மீனவர்படுகொலைக்கு காரணமாக இருந்துக் கொண்டிருப்பது இந்த காங்கிரசு.'

'பாபர் மசூதி இடிப்பு மதவாத சக்திகளுடன் கைக்கோர்த்த காங்கிரசை தடைசெய்வோம். கொலைக்கார காங்கிரசை தடைச்செய்ய வேண்டும், பயங்கரவாத காங்கிரசை தடைச்செய்ய வேண்டும்'

என தோழர்களின் குரல்கள் மண்டி தெரு, பழையபேருந்து நிலையம், அலங்கா, கஸ்பா, திருவள்ளுவர்சிலை, காகிதப்பட்டறை, பெருமுகை, ரங்காபுரம், சி.எம்.சி மருத்துவமனை இன்னும் சில பகுதிகளில் 9ஆம் தேதி இரவு வரை ஒலித்துக்கொண்டே இருந்தது.

6 ஆம் தேதி நாங்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் அளித்தது. திணமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, இந்து, நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழன், ஜெயா, சன் செய்தி நிறுவனங்களுக்கு காங்கிரசு எதிர்ப்பு கருத்துகளை வழங்கினோம்.

இம்மாபெரும் பணிக்கு உண்மையில் மக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்தது, குறிப்பாக துண்டறிக்கையை அனைவரும் படித்தனர், கீழே போட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. பொதுமக்களே எங்களுக்கு குளிர்பானங்கள், தேநீர் மற்றும் திண்பண்டங்களை கொடுத்து மகிழ்ந்தார்கள்.

ஒர் அம்மா, 'நீங்க எத்தனை பேர் இருக்கிறீங்க'னு கேட்டாங்க.
'ஏம்மா கேட்கறீங்க'னு கேட்டோம்.
'அட சும்மா சொல்லுப்பா'னு கேட்டாங்க.
'நாங்க பத்துபேர் இருக்கிறோம்'னு சொன்னோம்.

உடனேஎல்லோருக்கும் குளிபானம் வாங்கி கொடுத்துட்டு,
'என்னல இதத்தான் செய்ய முடியும் தம்பி. நீங்க எல்லாம் செய்யறது பெரிய வேலை தம்பின்'னு சொல்லிட்டு போயிட்டாங்க.

பார்ப்பனர் ஒருவர் எங்கள் அருகே வந்து,
 'நீங்க நல்ல வேலை செய்றேல், ஆனா எங்களத்தான் சேர்த்துக்க மாட்றேல், நேக்கு சீமான் ரொம்ப பிடிக்கும். நீங்கதான் முதலியார், செட்டியார், வன்னியர்சொல்றேல். நாங்க மட்டும் தான் தமிழன்னு சொல்றோம்' என்றார்.

நாங்கள் அவரிடம் கூறினோம், 'அப்படின்னா எங்களோட வந்து துண்டறிக்கை கொடுங்களேன்'னு கேட்டோம்.

அவர் 'நாளை வர்ரேன்'னு சொன்னார். ஆனால் வரவில்லை.

இரண்டு பெரியவர்கள் 'நீங்கள் செய்யும் இந்த பணியினை பராட்டுகின்றோம், மேலும் இது போன்ற இளைஞர்களையெல்லாம் ஒன்று சேருங்கள்' என்றார்.

காக்கிசட்டைக்கூட எங்களுக்கு உதவி செய்தது, சில இடங்களில் எங்களுடன் தோழமையுடன் பழகினார்கள். சில இடங்களில் பொது மக்களே ஒலிவாங்கியை வாங்கி ஞானசேகரனையும் காங்கிரசையும் தாறுமாறாக விமர்சித்தார்கள்.

நாங்கள் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது, எங்களுடைய வாகனம் அருகே பரப்புரை செய்துகொண்டு வந்த வேறுகட்சியை சேர்ந்த மற்றொரு வாகனத்தை பொதுமக்களே பேச்சை நிறுத்தும்படி தடுத்து நிறுத்தினார்கள்.

ஒரு சிலர் நன் கொடை கொடுக்க முன்வந்தார்கள். அச்சகம் மற்றும் பாதகை செய்யும் இடங்களிலும் கூட எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். எங்கள் வாகன ஒட்டிகளான சிறு பொடியன்கள், எந்த வித சலிப்பும் இல்லாமல் உற்சாகத்துடன் எங்களுடன் இணைந்துப் பணியாற்றினார்கள்.

மணி ஒசைவரும் முன்னே, யானை வரும் பின்னே என்பார்கள், அதே போல எங்களுடைய பறை இசை எல்லோரையும் உசுப்பி விட்டது.(எங்களில் யாருக்குமே முறையாக பறை இசைக்க தெரியாதுஎன்பதுதான் முக்கியமான ஒன்று)

ஞானசேகரன் எங்களை முடக்க பல வழிகளிள் தொல்லை கொடுக்க முயன்று கொண்டே இருந்தார். முதலில் எங்கள் வாகனத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி முடக்க முயற்சித்தது. எங்களிடம் எல்லாஆவணங்களும் சரியாக இருந்ததால் உடனே வாகனத்தை மீட்டு வந்து விட்டோம்.

இரண்டாவது முறையாக பரப்புரை செய்யும் அனைத்து பகுதிகளையும், தெருக்களின் பெயர்களையும் மற்றும் நேரம் முதல் கொண்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறை எங்களுடைய பரப்புரையதடுக்க முயற்சித்தார்கள். நாங்கள் உடனே அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு உடனே தகவல் கொடுத்தோம், வேலூர் தேர்தல் அதிகாரியிடமும் முறையிட்டோம். செய்தி அறிந்த உடன்பத்திக்கையாளர்களும் மற்றும் உள்ளூர் தோழமை அமைப்புகளும் உடனே பிரச்சனைக்கூரிய இடத்திற்கு வந்து காவல்துறையிடம் பேசிமுடித்தார்கள். அதன் பின்பு நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம்.

நடிகர் விஜய் ரசிகர்களும் எங்களுக்கு பேராதரவு தந்தார்கள், குறிப்பாக நடிகர் விஜய் நாகபட்டினத்தில் மீனவர்களுக்காக நடத்திய பொதுகூட்டம் இவர்களைமட்டுமல்ல பொதுமக்களையும்கவனிக்க வைத்துள்ளது.

இந்த பரப்புரையின் மூலம் நாங்கள் சில விடயங்களை உற்று கவனித்தோம், பல விடயங்களை மக்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். சென்னையில் இருந்து 150 கி.மி தொலைவில் உள்ள வேலூர்மக்களுக்கு ஈழப்பிரச்சனை முழுமையாக சென்றடையவில்லை என்பதே வருத்தமான ஒன்று.

ஒரு சிலர் 'ஈழம் எங்கிருக்கிறது, ஈழம் என்றால் என்ன? எப்போது 2 லட்சம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.'

வேறு சில இயக்கங்கள் ஈழப்போரின் புகைப்படங்களைப் போட்டு பரப்புரை செய்தார்கள், அந்த துண்டறிக்கைகள் பொதுமக்களை பெரிதும் பாதித்தது. துண்டறிக்கைகளை பார்த்த உடனே கீழே போட்டுவிட்டார்கள், ஒரு சிலர் 'இது என்ன விபத்தா' என்று கேட்டார்கள்.

பெரும்பான்மையான மக்கள் சீமானை அறிந்து வைத்துள்ளார்கள். எங்களைப் பார்த்து பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள், 'சீமான் கட்சிக்காரங்க வந்துட்டாங்க. நிறைய தொலைப்பேசி அழைப்புகள் சீமான் எப்ப வரார், சீமான் எத்தனை மணிக்கு வரார்.'

இதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது சீமானை மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள், சீமானும் மக்கள் நேசிக்கும் போராட்டங்களை கையில் எடுத்து விதியில் இறங்கி போராடினால், நிச்சயம் அதுமக்கள் இயக்கமாக மாறும்.

வேலூரில் நடைப்பெற்ற சீமான் பொதுகூட்டத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், சரியாக 9.15 காங்கிரசை எதிர்த்து இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள்என்ற உடனே கூட்டம் மள மளவென களைய ஆரம்பித்துவிட்டது. 9 ஆம் தேதியே (சனிக்கிழமை இரவோடு) நாங்களும் பரப்புரையை முடித்துக்கொண்டோம்.

வேலூர் பயணம் எங்களுக்கு பெரிய பாடம், நிறைய மக்களிடமிருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த பரப்புரையில் வேலூர் பகுதியை சார்ந்த தோழர்களை விட மற்றப்பகுதி தோழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. நாங்கள் வெறும் ஈழப்பிரச்சனையே மட்டும் பேசியிருந்தால் நிச்சயம் எங்களுக்கு மக்களிடம் இந்த வரவேற்பு இருந்திருக்காது. நாங்கள் வேலூர்வாழ்மக்களின் பிரச்சனைகளை பேசியது மக்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் நிச்சயம் ஒரு இளைஞராவது மக்களுக்காக உழைக்கவும், மக்களுக்காக வீதியிலே இறங்கி போராடவும் தயாராக பாதைதெரியாமலும், சரியான தலைமையும் இல்லாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைய சமுதாயத்தை நாம் கண்டெத்தால், நிச்சயம் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மக்கள் தலைவர்கள் தானாக உருவாகுவதில்லை, மக்கள்தான் தனக்கான தலைவர்களை உருவாக்குகிறார்கள்.

"மக்களிடம் செல்வோம்,
மக்களிடம் கற்றுக்கொள்வோம்,
மக்களை பயிற்றுவிப்போம்,
மக்களை அரசியல் படுத்துவோம்..."

பல்வேறு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் இந்த பரப்புரையில் கலந்துக்கொண்ட மறைமுக ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!!!!




















புதன், ஏப்ரல் 13, 2011

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே பதினேழு இயக்க தோழர்கள் மீது காங்கிரெஸ் குண்டர்கள் பயங்கர தாக்குதல்

மின்னஞ்சலில் வந்தது - Muthamizh Vendhan

தமிழகமெங்கும் மே பதினேழு இயக்க தோழர்கள் காங்கிரெஸ் எதிர்ப்பு இயக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன்  இறுதி பகுதியாக ஏப்ரல் 11 - ம் தேதி சென்னை பகுதி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நேற்று சென்னை திரு.வி.க நகர் தொகுதியில், புளியந்தோப்பு பகுதியில்  தமிழீழ படுகொலை செய்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினை புறக்கணிக்க வேண்டும் என தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.தமிழீழப்படுகொலை,  மீனவப் படுகொலை, காசுமீர படுகொலை, சட்டிஸ்கர் பழங்குடி படுகொலைகள் படுகொலை, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒடுக்குமுறை சட்டங்கள், அணு உலை ஒப்பந்தம்- கூடங்குளம்-கல்பாக்கம் பாதிப்புகள் குறித்து  மக்களிடம் விளக்கி கொண்டு இருந்த போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர்  பிரச்சார தோழர்களை சூழ்ந்து கொண்டு மிரட்ட ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து தோழர்களை தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்து பின்னர் அவர்களை தாக்க ஆரம்பித்தார்கள். தோழர்களின் துண்டறிக்கைகள் பிடுங்கி எடுக்கப்பட்டன, சட்டைகள் கிழிக்கப்பட்டன, கேமரா, செல்பேசி பிடுங்கபட்டது. தோழர் ஒருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் அலுவலகத்திற்குள் இழுத்து சென்று தோழர்களை  கடுமையாக மிதிக்கவும், அடிக்கவும் ஆரம்பித்தார்கள். தோழர்கள் ஒருவருக்கு மூக்கில் குருதி வரவும், மற்றொருவருக்கு மயக்கமும் வந்தது.  பிறகு அங்கு வந்த காவல் துறை தோழர்கள் ஐந்து பேரை மீட்டு சென்றது. பொதுமக்கள் மட்டுமே தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து குறைத்தார்கள்.ஒரு விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர் எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்று வருத்தப்பட்டு கொண்டே காவல் நிலையம் வரை வந்தார். தோழர்கள் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைக்கப்பட்டனர்.  காவல் நிலையத்தை முற்றுகை இட்ட காங்கிரஸ் கட்சியினர் காவல்நிலையத்தில் இருந்த தோழர்களை தொடர்ந்து தாக்க முற்பட்டனர். தோழர்கள் கையில் இருந்த கையிருப்பு, செல்பேசி, துண்டறிக்கைகள்  உட்பட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செய்தியை கேள்விப்பட்டு அங்கு வந்தார்.  தோழர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. தோழர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்தனர். அது முடியாது போக அவரை காரினுள் வைத்து அடித்து மிதித்தனர். பிறகு அவரது சட்டையை கிழித்து காரில் மோதி அடித்து இழுத்து வந்தனர். இவை அனைத்தும் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.  இதர தோழர்களையோ, வழக்கறிஞர்களையோ தொடர்பு  கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. தோழர்களின் நிலையை அறிய வந்த மற்றுமொரு தோழரையும் செல்பேசி உட்பட இதரவற்ரையும் பறித்து அறையில் அடைத்தனர். நூறு பேருக்கு மேல் கூடிய காங்கிரெஸ் குண்டர்கள் தோழர்களை உண்மைக்கு புறம்பான சட்டத்தில் கைது செய்ய சொல்லி வற்புறுத்தினார்கள். பணம் பட்டுவாடா அதிமுக கட்சி சார்பாக மக்களிடம் கொடுக்க வந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கலைஞர் தொலைக்காட்சி உட்படஇதர ஊடகங்களில் பொய் செய்தி பரப்பினார்கள். இதை கவனித்த தோழர்  ஒருவர் மற்றுமொரு  தொலைகாட்சியை வரவழைத்து உண்மைநிலையை விளக்கிய போது அவரையும் தாக்கினார்கள் காங்கிரஸ் குண்டர்கள். அவரது கண்ணாடி உடைக்கப்பட்டது. அவரை இதர தோழர்கள் மீட்டனர். ஒருகட்டத்தில் வழக்கறிஞர்கள்  எவரையும் உள்ளே அனுமதிக்காதவாறு காங்கிரஸ் குண்டர்கள் தடுத்தனர். தவறான பொய் வழக்கை பதிவு செய்ய சொல்லி வற்புறுத்திய காங்கிரஸ் கும்பல் காவல் நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்டு மிரட்டினார்கள். தோழர்கள் அடைத்து வைத்து இருந்த அறைக்குள் புகுந்து தாக்கவும் முற்பட்டது இந்த குண்டர்கள் கூட்டம். பயங்கரவாதிகள் என்றும் , விடுதலை புலிகளின் தூண்டுதலால் இவர்கள் இப்படி பரப்புரை செய்கிறார்கள் என்றும் புகார் செய்து அடிக்க முற்பட்டது. தோழர்கள் கொண்டு வந்து இருந்த பைகளில் இருந்த அனைத்தையும் எடுத்து பின்பு அதில் இருந்த குறுந்தகடுகளையும் எடுத்து தொலைக்காட்சி பெட்டியில் போட்டு அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களே சிறிது நேரத்தில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை எடுத்து வந்து குறுந்தகடுகளை போட சொல்லி பார்த்தனர். அனைத்தும் காவலர்கள் முன்னிலையில் நடந்தது .   இரவு நெடுநேரம் மிரட்டி காவல்நிலையத்தில் தவறான புகாரை அளித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது காங்கிரஸ் குண்டர்கள் கும்பல். தாக்கியவர்களின் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் தாக்கப்பட்டவர்களின் மீது வழக்கை பதிவு செய்ய வைத்தது காங்கிரஸ். பிரசார தோழர்களை காவல் நிலையத்தில் சந்திக்க வந்த தோழரின் காரும் காவல் நிலையத்தில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது.    கடுமையான விசாரணைகளுக்கு பிறகு , தாக்கியவர்களை பற்றிய எந்த வழக்கும் இல்லாமல்  நள்ளிரவிற்கு பின் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பிணையில்  விடுவிக்கப்பட்டனர்.

மே பதினேழு இயக்கத்தினர் வழங்கிகொண்டிருந்த கையேடு (Booklet) இணைக்கப்பட்டுள்ள
து

























வியாழன், ஏப்ரல் 07, 2011

சோனியாவின் வேதனை!

'மீனவர்கள் சிலர் கொல்லப்பட்டது வேதனை அளித்தது, இனிமேல் யாரும் கொல்லப்படாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறோம்' என்கிறார் சோனியா காந்தி (சென்னை கடற்கரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது).
  • ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் வேதனை அளித்தது. 
  • உடனடியாக புலனாய்வுக் குழு அமைத்து கொலை செய்தவர்களைத் தேடிப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினோம். 
  • விசாரணையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. 
  • எமது இனத்தைச் சார்ந்த இயக்கம் என்று பார்க்காமல், அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொண்டோம்.

மீனவர் கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்ன விசாரணை செய்தீர்கள்? அதற்குப் பின்னால் இருந்த, அதற்கான உத்தரவைப் பிறப்பித்த இலங்கை தலைவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?

இந்தியாவின், தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமலேயே தமது வீரத்தாலும் போராட்டத்தாலும் தமக்கென்று ஒரு தாயகத்தை உருவாக்கிக் கொண்டார்கள் ஈழத் தமிழர்கள். இலங்கை அரசின் தயவில்லாமல், தமது பகுதிகளில் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

ராஜீவ் காந்தியின் கொலையை காரணம் காட்டி, அதற்குப் பழி வாங்குவதாக அதை எல்லாம் அழித்து, 2 லட்சம் மக்களைக் கொன்றொழித்து, 3 லட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் அடைக்க இலங்கை அரசுக்கு உதவி செய்தது என்ன நியாயம்? இந்தக் கொலைகளுக்கு, இந்த இன ஒழிப்புக்கு என்ன தண்டனை உங்களுக்குக் கிடைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளை யாரும் அந்தப் பொதுக்கூட்டத்தில் கேட்கவில்லை. வந்தவர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்ற பண்பாட்டில் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் மனதில் இந்தக் கேள்விகள் குமுறிக் கொண்டிருக்கின்றன.

வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்


நேற்று வேலைகளை முடித்த பிறகு மாலையில் வேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சதீஷ் என்பவருக்குத் தொலைபேசினேன்  'வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கிறோம். மண்டி தெரு என்ற இடத்தில்' என்றார்.

பழைய பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்கி வெளியில் வந்து கடைத்தெருவிற்குள் நடந்தேன். பிரதான வீதியிலேயே சத்தம் கேட்டது. ஒரு டாடா ஏஸ் வண்டியில் ஒலி அமைப்பு வைத்து, பக்கவாட்டில் தட்டிகளைக் கட்டி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சதீஷ் பிரதான பேச்சாளர். துண்டறிக்கை வினியோகிக்க நான்கைந்து பேர். துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த கண்ணனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் கையிலும் துண்டறிக்கை நகல்களைக் கொடுத்து வினியோகிக்கச் சொன்னார். சதீஷ் ஓய்வெடுக்கும் போது கண்ணன் ஒலிபெருக்கியைக் கையில் எடுக்கிறார். இடை இடையே 'கோஷம்' என்ற பெயரில் ஒருவர் சொல்ல, நான்கைந்து பேர் சொன்னதைத் திருப்பிச் சொல்வதைச் செய்தார்கள்.

'காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'
'காங்கிரசைத் தோற்கடிப்போம்'
'ஞானசேகரனைத் தோற்கடிப்போம்'
'நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள்'

'நாங்கள் யாருக்கும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பொய் வாக்குறுதி அளிக்க வரவில்லை. காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்கிறோம்'

'ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொலை செய்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

'கேட்டாரா, கேட்டாரா ஞானசேகரன் கேட்டாரா
- பாலாற்றுப் பிரச்சனையைக் கேட்டாரா
- குடிநீர் பிரச்சனையைக் கேட்டாரா
- அவர் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்
- தமிழர்களின் உயிரை மட்டும்

'ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்.'

'தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள இனவெறி அரசுக்கு
ஆயுதம் கொடுக்கும் காங்கிரசுக் கட்சி,
காங்கிரசு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்'

'நம்முடைய விரலால் நம் கண்ணையே குத்துவது போல, நமது வரிப்பணத்தைக் கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும் அளித்துத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

கொத்துக் கொத்தாய் தமிழர்களைக்
கொன்று குவித்த
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்

'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, 15வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. உங்களது வாக்குகளைக் கேட்க எல்லாக் கட்சியினரும் வருவார்கள். நாங்கள் கேட்பதெல்லாம், காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்பதுதான்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவித்தார்கள். நாம் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். ஊடகங்களாலும், காவல்துறையாலும், உளவுத் துறையாலும் நம்மை செயலிழக்க வைத்திருந்தார்கள். இப்போது நம் கையில் ஒரு ஆயுதம் கிடைத்திருக்கிறது. வாக்குச் சீட்டு என்ற ஆயுதம். அதைப் பயன்படுத்தி காங்கிரசைத் தமிழ்நாட்டில் வேரறுப்போம்'

'ஈழத்து மக்களுக்காக நாம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்திப் போராட வேண்டாம். வரலாறு நம் கையில் ஒரு வலுவான ஆயுதத்தைத் தந்திருக்கிறது. வாக்குச் சீட்டு. அதைப் பயன்படுத்தி காங்கிரசை விரட்டியடிப்போம்'


'20 ஆண்டுகளாக நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். ஞானசேகரன் என்ன செய்தால் பாலாற்றுப் பிரச்சனையைத் தீர்த்தாரா? பாலாற்றில் தண்ணீர் வரத்தே இல்லை. அதைப்பற்றி காங்கிரசு ஆளும் ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் வரச் செய்தாரா?

'மணற்கொள்ளையை எதிர்த்தாரா? இல்லை இல்லை! அதற்குத் துணை போனார்?'

'அரசியலுக்கு வரும் போது சாதாரண நடுத்தரக் குடும்பத்தனராக வந்த ஞானசேகரன் இருபது ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடிசொத்து சேர்த்திருக்கிறாரே! இதெல்லாம் எங்கிருந்து வந்தது? நமது வரிப்பணம்தான்'

'நாங்கள் யாருக்கும் வோட்டு கேட்டு வரவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். காங்கிரசுக் கட்சிக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். ஞானசேகரனுக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக் கூடிய யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'


இப்படி முழக்கங்களுடனும், கோஷங்களுடனும் வண்டி மக்கள் நடமாட்டம் நிறைந்த தெருக்கள் வழியே நகர்ந்தது. அகலமான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை நிறுத்தக் கூடிய இடங்களில் 10 நிமிடங்கள் நின்று கோஷம் எழுப்பினார்கள்.

வண்டியின் இரு பக்கங்களிலும் ஈழப்படுகொலையின் நிழல்படங்களை ஃபிளெக்சு தட்டிகளாகக் கட்டியிருந்தார்கள். துண்டறிக்கையில்,

=============
தமிழக வாக்காள பெருமக்களே!
மக்கள் எதிரி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை. இந்தியா - இலங்கை கூட்டு சதி. கொலைவெறி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில். அடிப்படை மனிதாபிமான உதவிகளை கூடச் செய்யத் தடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை. சிங்கள படைக்கு ஆயுதம் கொடுத்து காட்டிக் கொடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> தமிழர்களின் பாரம்பரிய நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தமிழர்கள் அனுமதி இல்லாமல் தாரை வார்த்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 70,000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்களை கொன்று குவித்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> பாபர் மசூதியை இடித்த சங்கப் பரிவாரக் கும்பலின் கள்ளக் கூட்டாளி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> காங்கிரசுக் கொள்கை காந்தியம்(?), காந்தியின் கொள்கை மதுவிலக்கு. மதுவில் தள்ளாடுது வேலூர். தமிழர்களே! என்ன செய்வதாய் உத்தேசம்?

>> ஆரம்பப் பள்ளியில் ஏழைக் குழந்தைகள், ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. மறுபக்கம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடு ஸ்பெக்ட்ரம் ஊழல். கூட்டுக்களவாணி காங்கிரசு கும்பலுக்கா உங்கள் வாக்கு?

>> 60 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழல். ஊழலின் ஊற்று காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

தொடர்புக்கு : காங்கிரசு எதிர்ப்பு முன்னணி  - தமிழ்நாடு
9444204740/9042274271

குறிப்பு: இந்த முன்னணியில் இணைந்து வேலை செய்ய ஆர்வமுள்ள தமிழ் 
இளைஞர்கள் மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 

ஊர் கூடி தேர் இழுப்போம் தமிழர்களே.
=============

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனம் எதையும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வேலூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் வண்டி ஓட்டுனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள  தன்னார்வலர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். உள்ளூர் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு பேர்.

அகலமான கடை வீதியின் (மண்டி வீதி) இரண்டு பக்கங்களிலும் இருக்கும் கடைகளில் துண்டறிக்கையைக் கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஒலிபெருக்கியில் பேசுவதைக் கேட்டதும், எட்டிப் பார்க்கிறார்கள். என்னவென்று ஒரு கேள்வியுடன் நிற்கிறார்கள். அப்போது துண்டறிக்கையைக் கொடுத்ததும் ஆர்வமாக வாங்கிக் கொள்கிறார்கள்.

'நீங்க இந்த மாதிரி பிரச்சாரம் செய்தா தொந்தரவு எதுவும் வராதா? எதிர்க் கட்சி ஆளுங்க உங்களை மிரட்ட மாட்டாங்களா'
'நம்ம கருத்துக்களைச் சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அதைத்தானே செய்கிறோம்'

'நீங்க எந்தக் கூட்டணி? எந்தக் கட்சி?'
'எந்தக் கட்சியும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளால் மனம் நொந்து கோபத்தில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த களம் இறங்கியிருக்கிறார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ள பிரச்சாரம் செய்கிறீர்கள்'

'மொதல்ல கை கொடுங்க! நல்ல உருப்படியான பணியைச் செய்கிறீர்கள்.'
'நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். உங்க நண்பர்கள் உறவினர்களிடம் செய்தியைக் கொண்டு செல்லுங்கள்'
'ஏற்கனவே செய்துகிட்டுத்தான் இருக்கிறோம்'

'ஏய், இது நம்மக் கட்சி, ரெட்ட இல'
'நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தச் சின்னத்துக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்கத்தான் நாங்கள் வருகிறோம்'

நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தோம். சாலையின் இரண்டு புறம் இருக்கும் கடைகள், நடந்து செல்பவர்கள், கடந்து செல்லும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் என்று கொடுத்தோம். எந்த இடத்திலுமே கொடுக்கப்பட்ட துண்டறிக்கை தரையில் வீசப்பட்டதைப் பார்க்கவில்லை. வாங்கியவர்கள் எல்லாம் கவனமாகப் படித்துப் பார்த்தார்கள்.

இந்தப் பகுதியில், சிஎம்சியில் சிகிச்சைக்காக வந்திருக்கும் வெளிமாநில மக்களும் காணப்படுவார்கள்.

'தமிழ் நஹீ மாலூம். யே கோன்சா பார்ட்டி கா?'
'கிசீ பார்ட்டி கா நஹீ. காங்கிரஸ் பார்ட்டி கோ வோட் ந தேனே கா'

மிகவும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மணி நேரத்தில் கடந்து செல்வார்கள். வண்டி மெதுவாக நகர்ந்து பக்கவாட்டுத் தெருக்கள் பக்கம் வந்தது. சாட் வண்டி ஒன்றின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தேன்.

'காங்கிரசு தமிழ்நாட்டில எதுக்கு? திமுக 25 வருஷம் முன்பாகவே காங்கிரசை விரட்டி அடிக்க வைச்சாங்க. இந்தக் கருணாநிதிதான் கூட்டணி வச்சு உயிர் கொடுத்திருக்கிறாரு'
'ஆமா 1967ல் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் சங்கு ஊதியாச்சு. ஆனால் அதற்குப் பிறகு, கருணாநிதியும் எம்ஜிஆரும் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்'

பக்கவாட்டுத் தெருக்கள் குறுகலானவை. வண்டி போகும் பின்னால் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன. அதனால் நிற்கவே செய்யாமல், நகர்ந்து கொண்டே போனோம்.

எதிரில் வருபவர்கள், என்ன சத்தம் என்று பார்த்துக் கொண்டே நிற்பவர்கள் கையில் 'ஐயா வணக்கம்', 'சார்' என்று சொல்லி துண்டறிக்கையை கொடுத்தோம். கொஞ்சம் வட இந்திய முகமாக தெரிந்தால் கொடுக்கவில்லை.

நான்கைந்து தெருக்களைத் தாண்டி சிஎம்சி பிரதான நுழைவாயில் இருக்கும் சாலைக்கு வந்தது. இங்கு பேருந்துகளும் வாகனங்களும் நெருக்கமாகப் போகும் இடம். சாலையின் எதிர் பக்கத்துக்குப் போய் துண்டறிக்கை கொடுக்க வாய்ப்பில்லை. மெதுவாக நகர்ந்து சாலை சந்திப்பைக் கடந்து கோட்டையின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தினோம்.

'நீங்க சத்தம் போடுங்கடா பாடுங்களா! ஒன்னும் கிழிக்க முடியாது' என்று ஒருத்தன் திட்டுறான். என்று சொல்லியபடி ஒருவர் தாமதமாக வந்தார். 'திட்டுறவங்க திட்டட்டும். நாம நம்ம கோஷத்தைப் போடுவோம்'

அங்கிருந்து வேலூர் பைபாஸ் வந்தோம். துண்டறிக்கை கையிருப்பு தீர்ந்து விட்டிருந்தது. 40-50 மட்டுமே மிஞ்சியிருந்தது. 'பர்வீன் டிராவல்ஸ் எங்க இருக்கு? அதில் அனுப்பியிருக்காங்களாம். போய் வாங்கிக் கொள்ளலாம்' என்று விசாரித்தார்கள்.

இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் நண்பர் ஒருவரின் வீட்டில் கன்னிகாபுரத்தில் தங்கியிருக்கிறார்கள்.

'காலையில் வண்டியை சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டான். அனுமதிச் சீட்டின் ஒரிஜினல் வண்டியில் இருக்கணுமாம். நம்மிடம் ஜெராக்ஸ் காப்பிதான் இருந்தது.'

'வேறு தொகுதிகளிலும் இது போன்று பிரச்சாரம் செய்ய ஏதாவது சுயேச்சை வேட்பாளரின் அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்'

மிகவும் தெளிவாக, தேவையில்லாத விஷயங்களை இழுக்காமல் தமிழர் விரோதம் என்ற ஒரே முழக்கத்தை வைத்து பிரச்சாரத்தை வடிவமைத்திருந்தார்கள். 2ம் தேதி ஆரம்பித்தார்களாம். 11ம் தேதி வரை பிரச்சாரம் தொடரும். இன்னும் 6 நாட்கள்.

'தமிழ் அமைப்புகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்'
'என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்'

புறநகர்ச்சாலையில் நகர்ந்தோம். துண்டறிக்கைகளை மக்கள் கூடும் இடங்களில் வினியோகிக்கலாம் என்று சேர்த்து வைத்துக் கொண்டோம். புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் போது சிஎம்சி நோக்கிப் போகும் சாலையின் முனையில் நிறுத்தினார்கள். அது ஒரு பேருந்து நிறுத்தம். இங்கு வினியோகிக்கலாம்.

பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், கடந்து போகிறவர்கள், வந்து நிற்கும் பேருந்தில் இருப்பவர்கள் என்று வினியோகித்தோம். நிற்கும் பேருந்தின் முன் பகுதி சன்னல்களில் ஒருத்தரும், பின்பகுதி சன்னல் வழியாக இன்னொருவரும் துண்டறிக்கைகளைக் கொடுத்தோம். வண்டியின் ஒலிபெருக்கி மூலமாக பேச்சு கேட்கும் போது துண்டறிக்கை கொடுப்பது எளிதாக இருந்தது.

எட்டரை மணி வாக்கில் முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

தமிழ் இளைஞர்களின் கோபம் - #defeatcongress

'மே 2009க்குப் பிறகு பல மாதங்கள் சோர்வடைந்த மன நிலை இருந்தது. தமது உரிமைகளுக்காக போராடிய, ஒழுக்கமான ஒரு மக்கள் கூட்டம் இப்படி கவனிப்பாரில்லாமல் அழிக்கப்படும் இந்த உலகில் நேர்மை, ஒழுக்கம் என்று நாம் வாழ்ந்து என்ன பலன்? நாளைக்கே ஆதிக்க சக்திகள், நம்மை அடித்துத் தெருவில் நாய் போல இழுத்துக் கொண்டு போனாலும் கேட்பதற்கு நாதி இருக்காது. நமது நம்பிக்கைகள், எண்ணங்கள் அனைத்துமே தவறா என்ற சோர்வு'

'அதிலிருந்து எழுந்து வெளிவர பல மாதங்கள் ஏற்பட்டன. வெளியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கமும் முயற்சிக்கும் வன்மையும் தளர்ந்து விட்டிருந்தன. பல அனுபவங்களுக்குப் பிறகு ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக செயல் முனைப்புகளை ஆரம்பிக்க முடிந்தது.'

'எல்லாமேதான் முடிஞ்சாச்சு, இனிமேல் இவனுங்க என்ன செய்யப் போகிறானுங்க என்று கேட்கிறார்கள்'

'நாளைக்கு நமது குழந்தைகளும் சந்ததியினரும் 21ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இலங்கையின் வட பகுதியில் சீரிய அரசு நடத்திய ஒரு இயக்கத்தையும், அந்த இயக்கம் அழிக்கப்பட்ட வரலாற்றையும், மக்கள் படுகொலைகளையும் பற்றிப் பேசும் போது, 'அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வசித்தவர்கள் என்ன செய்தார்கள், புழுக்களாக தின்று செரித்து கள்ளுண்டு மயங்கிக் கிடந்தார்களா' என்று ஏசும் போது, அந்தப் புழுக்களின் நடுவில் ஒரு சில புழுக்கள் சிறிது துடிக்கவாவது செய்தன' என்ற அளவிலாவது பேசப்பட வேண்டும்.

'தமிழ்நாட்டில் பல லட்சம் பேரிடம் ஈழ நிகழ்வுகள் தொடர்பாக கோபம், ஆத்திரம், வெறுப்பு இருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது மனச்சிறைகளுக்குள் வருந்திக் கொண்டிருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படக் கூட வாய்ப்பில்லாமல் இருக்கிறது'

இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பதற்கு வைகோவும் நெடுமாறனும் வந்திருந்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்திருக்கிறார்கள்

'சார், நான் கன்னியாகுமரிக்குப் போறேன். மத்தியானம் கிளாசில் இருக்க மாட்டேன்' என்று சொல்லிட்டு ஓடிட்டான் என்று ஒரு கல்லூரி ஆசிரியர் சொன்னார். 'நீங்க வரலையா' என்று என்னையும் கேட்கிறான்'.

'நான் எதனால் தூண்டப்பட்டு அங்கே போனேன் என்று தெரியவில்லை. ஆனால், தகவல் அறிந்த உடன் அங்கு போய் நின்று விட்டேன்' என்று இன்னொரு நண்பர்.

கவிஞர் காசி ஆனந்தன் பேசியதை தனது செல்பேசியில் பதிவு செய்திருந்தார்.

இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று தொலைக்காட்சிகளோ, நாளிதழ்களோ செய்தி வெளியிடக் கூடச் செய்யவில்லை. தமிழனுக்கு கிரிக்கெட்டையும், திரைப்படங்களையும் காட்டி விட்டால் அவன் மெய் மறந்து இருந்து விடுவான் என்ற ஊடகச் சதியில் ஆளும் வர்க்கத்தின் கைப்பிடியில் இருக்கும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகளும், தினகரன், தினத்தந்தி, தினமலர், தினமணி நாளிதழ்களும் இன உணர்வுகள் பரவி விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

'அவன் எங்க ஊர்க்காரன்ங்க, நான் சாப்பிட்ட சாப்பாடு சாப்பிடுபவன், நான் வாழும் முறையில் வாழ்பவன், நான் பேசும் மொழியில் பேசுபவன், எங்க ஊர் பெண்கள் போலவே அந்த ஊர் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறவர்கள்'

கோபத்திலும் ஆத்திரத்திலும் சொற்கள் பீறிட்டன. ஈழத்துப் படுகொலைகளைப் பற்றிப் பேசும் போது கண்கள் நிரம்பி விடுகின்றன.

'ஆமாய்யா, நாங்கதான் கொன்னோம். அதுக்காக என்ன செய்யப் போறீங்க'. ராஜீவ் காந்தியின் படுகொலையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது என்று வாதிட்டவர்களிடம் இப்படிப் பேசினாராம்.

2009ல் கட்சி பிரிவுகளைத் தாண்டி 75000 மக்களை திரட்டி ஊர்வலமும் கூட்டமும் நடத்தினார்களாம். அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்தது இது. அவர் பேசியவுடன் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தார்களாம்.

பிரின்ஸ் என்பவர் இப்படிப் பேசியவரைக் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டாராம். அந்த பிரின்ஸ்தான் இப்போது குளச்சல் தொகுதியின் காங்கிரசு வேட்பாளர்.

அவரை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். மீனவர்களின் பிரதிநிதி ஒருவராவது சட்டசபைக்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. லூர்தம்மாள் சைமன், அதன் பிறகு என்ற இன்னொருவர் தவிர்த்து மீனவர் யாரும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

'மக்களிடையே ஈழம் குறித்த விழிப்புணர்வும், கோபமும் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தது என்றுதான் சொல்லி வந்திருக்கிறோம். அதைக் காங்கிரசு என்று உணர்த்தும் பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது'

'சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காணொளி ஒன்று அடங்கிய குறுந்தகடை வினியோகித்தோம். காட்சிகளைக் காட்டும் போது பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் காங்கிரசு பெயர் வந்ததும், "நீங்க ஓட்டு கேட்கத்தானே வந்திருக்கீங்க" என்று சொல்லி விட்டார்கள்'

'இப்போதும் துண்டு பிரசுரங்களை விட காணொளிகளை குறுந்தகட்டில் வினியோகிப்பது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% எழுத்தறிவு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடலோரக் கிராமங்களில் 50% மட்டுமே படித்தவர்கள் இருக்கிறாரகள். அதிலும் பெரும்பான்மை இளைய தலைமுறையினர். அதனால் வாசிக்கும் பழக்கம் குறைவு. ஆனால் எல்லோருக்கும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இருக்கிறது. '

'அதனால் குறுந்தகடுகளாக வினியோகித்தால், ஊர் இளைஞர்களே நகல் எடுத்து எல்லோரும் பார்க்கும்படி செய்து விடுவார்கள்'.

'தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் தமிழ் உணர்வாளர்களின் பிரச்சாரத் தாக்கம் தேர்தலில் இருந்தது என்று வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைச் செய்ய வேண்டும்.'

'காங்கிரசை தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டு விடும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தோல்விக்கான காரணம் தமிழர்களுக்கு எதிரான செயல்கள் என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரம் செய்ய வேண்டும்'

'இணையத்திலும் டுவிட்டர், ஃபேஸ்புக் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் மூலம் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்.'

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணி புரிந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் விரக்தியாகத்தான் பேசினார். 'நாம் என்ன செய்து என்ன? மக்களிடம் போய்ச் சேர்க்க முடியாது. ஊடக பலமும் பண பலமும் இருக்கும் இடத்தில் நமது முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகின்றன'

'அதற்காக வாளாவிருந்து விடாமல், நம்மால் முடிந்த துரும்பை நகர்த்திப் போடுவது கடமை'

குளச்சல் தொகுதியில் #defeatcongress

"காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது" என்ற பரப்புரையை (உள்ளடக்கம் கீழே) ஒரு A4 அளவு தாளில் இரண்டு பிரதிகள் வரும்படி அச்செடுத்து நகல் செய்து வைத்திருந்தார் நண்பர். (ஒரு தாளில் 2 பக்கங்கள் அச்சிடுதல் என்ற வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்).

வெளியூரிலிருந்து வருவதாகச் சொன்ன இன்னொரு நண்பரும் சேர்ந்து கொள்ளப் புறப்பட்டோம். (மொத்தம் 6 பேர்). தென்னை, ரப்பர் மரங்கள் சூழ வீடுகள் இருக்கும் கிராமம். தொடர்ச்சியான தோட்டங்கள், நடுநடுவே வீடுகள், குளுகுளுவென்ற சூழல். வீடு வீடாக போய் துண்டு பிரசுரத்தைக் கொடுத்தோம். பெரும்பாலான இடங்களில் நின்று பேசவில்லை.

கையில் கொடுக்கும் போதே 'காங்கிரசுக்கு ஓட்டு போடக் கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்' என்று சொல்லிக் கொடுத்தோம். ஈழப் படுகொலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளடக்கிய வெளியீடு ஒன்றும் கைவசம் இருந்தது.

'தமிழர்களுக்கு எதிராக, ஈழப் படுகொலைகளுக்கு ஆதரவாக, மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத காங்கிரசு கட்சிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்கு வீதம் குறைய வேண்டும். வெற்றி வீதம் குறைய வேண்டும். அப்படிக் குறைந்ததற்குக் காரணம் ஈழப் படுகொலைகளும், மீனவர் மீதான தாக்குதல்களும்தான் என்ற கருத்து வெளியாக வேண்டும்' 

அதற்காகத்தான் இந்த பிரச்சாரம்.

அதிமுக வேட்பாளரின் பிரசுரங்களுடன் கூட வந்து சேர்ந்து கொள்ள முயன்ற ஒருவரை சிறிது நேரத்துக்குப் பிறகு வெட்டி விட்டோம்.

'எந்தக் கட்சி சார்பாகவும் நாங்கள் வரவில்லை. காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க என்று மட்டும் சொல்கிறோம்'

'அப்ப யாருக்கு ஓட்டு போடணும்?'

'காங்கிரசு தவிர்த்த மற்ற வேட்பாளர்களில் உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்'

'காங்கிரசுக்கு எதிரான எங்கள் பிரச்சாரம் மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம். குளச்சல் தொகுதியில் அதிமுகவுக்கும், விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், கிள்ளியூர் தொகுதியில் போட்டி காங்கிரசு வேட்பாளருக்கும் ஆதாயம் கிடைக்கலாம். ஆனால், எங்கள் நோக்கம் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் கட்சிக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது என்பதை காட்டுவதே. அதனால் ஒரு ஓட்டு ஆனாலும் காங்கிரசுக்கு போடாதீர்கள். காங்கிரசின் வாக்கு சதவீதம் குறைய வேண்டும். காங்கிரசுடன் எதிர்காலத்தில் யாரும் கூட்டணி அமைக்கும் தேவை இருக்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகளில் காங்கிரசுக்கு இடம் இல்லாமல் போக வேண்டும்.'

இந்தப் பகுதி மக்கள் பரம்பரை பரம்பரையாக காங்கிரசு ஆதரவாளர்கள். சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி, நேசமணியின் கட்சி என்ற ஆதரவுடன் பலமாக இருக்கிறது காங்கிரசு. காங்கிரசுடன் கூட்டணி வைப்பதன் மூலம் திமுக / அதிமுக கால் ஊன்ற ஆரம்பித்தார்கள். காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேரும் போது எதிர்த்து நிற்பவர்களுக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து போகும்.

தீவிர காங்கிரசு ஆதரவாளரான ஒருவருடன் பேசும் போது, காந்தியின், நேருவின், நேசமணியின் காங்கிரசு இல்லை என்பதையும், தமிழர்களுக்கு நல்லது நடக்க காங்கிரசின் சக்தி குறைக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டார். 'இப்போ புரியுது, என் வோட்டு காங்கிரசுக்குக் கிடையாது' என்று வந்து விட்டார்.

பெண்கள் சிலரிடம், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமைகளை மறந்திருக்க மாட்டோம். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். நம்ம மீனவர்களை கடலில் சுடுகிறார்கள். வயதான அந்த அம்மா, இங்க மருத்துவ சிகிச்சைக்குத்தானே வந்தார், அவரை உள்ளே கூட விடாமல் விரட்டி அடித்தார்களே' என்று சொன்னதும் புரிதல் முகத்தில் தெரிந்தது.

பார்வதி அம்மாவுக்கு மருத்து சிகிச்சை மறுத்தது பெண்களை வருத்தப்படுத்திய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு ஈழத் தமிழருக்கு எதிரான மத்திய அரசின் கொள்களின் ஒரு வெளிப்பாடு. அதைக் குறியீட்டாக வைத்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வீட்டுச் சுவரில் கைச்சின்னத்துக்கு விளம்பரம் பெரிதாக வரைந்திருந்தவரிடம் போய்ப் பேசினோம். 

'ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்த வைகோவை ஆணவத்துடன் வெளியேற்றிய ஜெயலலிதாவை முதலில் ஒழிக்க வேண்டும். அதுக்கு இந்தத் தடவை நான் காங்கிரசுக்கு ஓட்டு போடுவேன்'. 
'உங்கள் நிலைப்பாடு புரிகிறது. எங்கள் கருத்துக்களையும் யோசித்துப் பாருங்கள்' என்று சொல்லி வந்தோம்.

வழியில் நின்ற பேருந்தின் ஜன்னல் வழியாக பிரசுரங்களைக் கொடுத்தோம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்த இரண்டு நண்பர்கள் திருவட்டாரில் இருந்து வந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கடைகளிலும் வீடுகளிலும் வினியோகித்தோம். படித்தவர்கள், சிந்தனையாளர்கள், இளைஞர்கள் மத்தியில் ஈழ நிகழ்வுகளைப் பற்றிய கோபமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வும் இருக்கிறது.

சேரிக்கரை பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி, பள்ளியாடி ரயில் நிலையம் வரை போனோம்.

ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடமும் துண்டறிக்கையைக் கொடுத்து விட்டு சில நண்பர்களிடம் புகைப்படப் புத்தகத்தைக் காட்டினோம்.

வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் போன்றவர்கள் சேர்ந்து மூன்றாவது அணி ஏற்படுத்தியிருந்தால்  'யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்கும் மக்களிடம், இந்த அணிக்குப் போடுங்கள் என்று சொல்லியிருக்கலாம்'



வினியோகித்த பிரசுரத்தின் உள்ளடக்கம்


தேர்தல் பிரச்சாரத்தில் பொதுவாக ஏதாவது ஒரு கட்சியின் சார்பில் அந்தக் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளைக் கேட்டு வருவார்கள்


நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து அந்தக் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை தராதீர்கள் என்று கேட்க வருகின்றோம்.
யாருக்கு? ஏன்?

இன்றைய காங்கிரஸ் கட்சி காந்தியின் நேருவின் காமராசரின் நேசமணியின் காங்கிரஸ் இல்லை.
  • பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு நமது மக்களை அடகு வைக்கும் கட்சி
காங்கிரஸ்
  • தமிழ்நாட்டின் உரிமைகளையும்,
    தமிழ் மொழியின் வளர்ச்சியையும்,
    தமிழ் இனத்தின் எதிர்காலத்தையும் அலட்சியப்படுத்தும் கட்சி
காங்கிரஸ்
  • மக்களுக்காக பணி புரியாமல் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு பதவிகளைப் பிடிக்கும் போலி தலைவர்களின் கட்சி
காங்கிரஸ்
  • 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிரையும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதரத்தையும் பலியிட்டது
காங்கிரஸ்
  • லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமான கட்சி
காங்கிரஸ்

நமது குழந்தைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாழ, கௌரவத்துடன் வாழ, நமது மக்கள் தலைநிமிர்ந்து நடக்க
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்

காங்கிரசின் குற்றங்களுக்குத் தண்டனையாக தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை முழுவதுமாக ஒழிப்போம்

காங்கிரசுக்கு எதிரான உங்கள் வாக்கு,
நமது சுயமரியாதைக்கு ஒரு சாட்சி.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

#defeatcongress

2009ல் தமிழ் இனப்படுகொலை நடந்து முடிந்தது. அதன் பிறகு ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு அரசியல் தீர்வு எதுவும் கிடைத்து விடவில்லை.

இனப் படுகொலைக்கு அரணாக இருந்த மத்திய அரசுக்குத் துணையாக தமிழ்நாட்டில் கூலி வேலை செய்த கருணாநிதி 2010ல் உலகச் செம்மொழி மாநாடு என்று  கொண்டாடிக் கொண்டார்.

2011ல் இலங்கை அரசுடன் கூட்டாக கிரிக்கெட் உலகக் கோப்பை  நடத்தி இரு நாடுகளின் இறையாண்மையையும் குடிமக்களின் தேசபக்தியையும் உறுதி செய்து கொண்டு விட்டது இந்தியா.

Hail Cricket!

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்குத் திரட்டிய நிதி ஒப்படைப்பு


பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து தொழிலுக்குப் போக முடியாமல் இருக்கும் மீனவர் ராஜா முகமதுவுக்கு இணைய நண்பர்கள் வழங்கிய நிதியை ஜெகதாபட்டிணத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போய் கொடுத்தோம்.

நிதி விபரங்கள்


ஜெகதாபட்டிணம் விசைப்படகு சங்க நண்பர்கள் ஜாகிர், நஸீர் மற்றும் பிற நண்பர்களும் உடன் இருக்கிறார்கள்.

மார்ச் முதல் வாரத்தில் பார்த்ததை விட உடல்நிலை பெரிதும் தேறி நடமாட ஆரம்பித்திருக்கிறார் திரு ராஜா முகமது. முழுவதும் குணமாகி மீண்டும் தொழிலுக்குப் போக பல மாதங்கள்  ஆகலாம்.  வலது கையில் இருக்கும் காயத்தினால் அந்தக் கை செயல்பட முடியாமல் இருக்கிறது.

இணைய நண்பர்கள் செய்த இந்த உதவிக்கு திரு ராஜா முகமதுவும் அவரது மனைவியும்  உளமார்ந்த நன்றி கூறினார்கள. 'நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனாங்க. நீங்க எல்லாம் சேர்ந்து உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி' என்று ராஜா முகமதுவின் கண்கள் கலங்கின.