புதன், மே 11, 2011

7. இலங்கை குடியரசும் பேரினவாதத்தின் பின்னணியும் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

II. சண்டையின் வரலாறு மற்றும் அரசியல் பின்னணி
24. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆயுதப் போருக்குப் பிறகு, மே 19, 2009ல் இலங்கை அரசாங்கம் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் (விடுதலைப்புலிகள்) மீதான தனது வெற்றியை அறிவித்தது. இறுதிக் கட்டப் போர் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறுவது குறித்த எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. அவற்றைப் பற்றி பொதுச்செயலாளருக்கு அறிவுரை வழங்கும்படி குழு பணிக்கப்பட்டது.

சிக்கலான, விவாதக்குட்பட்ட இலங்கையின் அரசியல் வரலாற்றை பகுப்பாய்வது குழுவின் பணியில் அடக்காது என்றாலும், கடைசிக் கட்டப் போர் நிகழ்வை அது தொடர்பான அரசியல் மற்றும் சமூக சூழலில் பொருத்திப் பார்க்க, வரலாற்றின் சில கூறுகளை கருத்தில் கொள்வதை குழு அவசியமாகக் கருதுகிறது.

25. இலங்கை ஜனநாயக சோஷலிய குடியரசு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 18 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இலங்கையில் வாழும் 2.1 கோடி மக்கள் இனத்தாலும், மொழியாலும் வேறுபட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

74% பேர் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களர்கள், 18 சதவீதம், தமிழ் பேசும் பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் (இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் முறையே 13 சதவீதம் மற்றும்  5 சதவீதம்), 7 சதவீதம் மூர்கள் மற்றும் மலாய்கள் அடங்கிய இசுலாத்தைக் கடைப்பிடிக்கும் பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள், 1 சதவீதம் சிறு தேசிய குழுக்களான பர்கர்கள், மற்றும் வெத்தாக்கள் இன்னும் பிற குழுக்கள்(5), கிருத்துவர்கள் சில சமூகங்களில் சிறு சதவீதத்தினராக இருக்கிறார்கள்.

26.  முதலில் போர்ச்சுக்கீசியர்கள், பிறகு டச்சுக்காரர்கள், இறுதியாக பிரித்தானியர்கள் என்று தொடர்ந்த நான்கு நூற்றாண்டுகள் குடியேற்ற ஆட்சிக்குப் பிறகு பிரித்தானியர்களிடமிருந்து 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றது(6). 

சுதந்திரம் பெற்றதிலிருந்து வெவ்வேறு இனக் குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலை குழுவினால், பேரினவாத சிங்கள அரசின் கீழ்  இலங்கை ஆட்சி செய்யப்படுகிறது, அதில் சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மக்களாட்சியின் உறுதியான அடையாளங்களான பொது வாக்குரிமை, பல கட்சி முறை, சிறப்பான தேர்தல் முறை, இவற்றுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயர்ந்த படிப்பறிவு வீதங்கள், குறைந்த குழந்தை இறப்பு வீதம் போன்ற முக்கியமான மனித மேம்பாட்டு சாதனைகளுக்கு நடுவில் அவற்றுக்கு முரணாக நீண்ட உள்நாட்டுப் போர் வரலாறு இலங்கைக்கு இருக்கிறது.

A. இன உணர்வும் அரசியலும்.
27. அரசியல் மற்றும் இன அடிப்படையில் அதிகமாகி வந்த பிரிவுகளின் வன்முறை வெளிப்பாடுதான் ஆயுதம் தாங்கிய போராட்டம். சிங்கள மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை போராட்டமாக அது வெளிப்பட்டது.

1. தேசியஇன உணர்வின் எழுச்சி
28. சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் மேல்தட்டு மக்கள், குறுகிய கால அரசியல் லாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மத மற்றும் இன உணர்வுகளைத் தூண்டி விட்டார்கள். அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பல இனஇயல்புடன் கூடிய அரசை உருவாக்கும் நீண்ட கால கொள்கைகள் பின்பற்றப்படாததால், மாற்றங்களினாலும் பிரிவுகளினாலும், ஒன்றுபட்ட தேசிய அடையாளம் உருவாவது பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சிங்கள-புத்த தேசியம் உருவாகி புத்த மதத்தின் புனித இடமான இலங்கையின் சிறப்பு பாதுகாப்பாளர்களாக சிங்களர்களுக்கு சிறப்பு இடம் இருக்கிறது என்று வாதிட்டது. இந்தக் கூறுகள், அரசின் தன்மை, நிர்வாகத்தன்மை மற்றும் இனங்களுக்கு இடையேயான உறவில் அழிவுக்கு வழிவகுத்த தொடர்ந்து பீடிக்கும் விளைவுகளுக்கு காரணமாக அமைந்தன.

(5) மலையகத் தமிழர்கள், உள்நாட்டுத் தமிழர்கள் அல்லது தோட்டத் தமிழர்கள் என்றும் அறியப்பட்ட இந்தியத் தமிழர்கள், பிரித்தானியர்கள் தென் இந்தியாவிலிருந்து 19வது மற்றும் 20வது நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டங்களில் வேலை செய்ய இலங்கைக்கு அழைத்து வந்த தொழிலாளர்களின் வழி வந்தவர்கள் ஆவார்கள். பல ஆண்டுகள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அவர்கள் இலங்கையின் மிகவும் வறிய, ஒதுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாக இருக்கிறார்கள்.

முஸ்லீம்கள், இலங்கையின் தனிப்பட்ட தேசிய இனமாக கருதப்படுகிறார்கள்.
மக்கள் தொகை புள்ளி விபரங்கள் http://www.statistics.gov.lk/page.asp?page=Population தளத்திலிருந்து.

(6) 1972 அரசியல் சட்டத்தின்படி, பெயர் மாற்றப்பட்டதற்கு முன்பு சிலோன் குடியரசு என்று அறியப்பட்டது.

(தொடரும்)

2 கருத்துகள்:

saarvaakan சொன்னது…

தொடர்ந்து படித்து வருகிறேன்.அருமையான அவசியமான பணி நண்பரே.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சார்வாகன்,
நன்றி.

மொழிபெயர்ப்பில் என் பங்கு 12 பக்கங்கள் மட்டுமே. உலகெங்கும் உள்ள மற்றவர்கள் பிற பக்கங்களை மொழிபெயர்த்து வருகிறார்கள். எல்லாம் முடித்த பிறகு தொகுத்து வெளியிடுவார்கள்.

அதற்கிடையில் சிறு பகுதிகளாக நான் மொழிபெயர்த்ததை வெளியிடலாம் என்று இங்கு பதிகிறேன்.

அன்புடன், மா சிவகுமார்