திங்கள், டிசம்பர் 26, 2011

தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்

15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது.  15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.

15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது.  மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது.  அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர்.

மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது.  அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.

'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.

அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.

நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.

ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது.  அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.

அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல  பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

7 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

கட்டுரை அருமை

ஆனால் உடல் உழைப்பு சார்ந்த அடிமை வியாபாரத்திற்கும்
அறிவு சார்ந்த (IT, ITES) அடிமை வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

(industrial work slaves Vs Knowledge based slaves)

அறிவு சார்ந்த அடிமை வணிகத்தால் பல நன்மைகள் விளைந்து உள்ளன, அடிமைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்
குறிப்பாக இந்தியாவில்.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை
அடிமைகள் ஒருவருக் ஒருவர் தங்கள் பெயரை விளித்து அழைக்கலாம்
கடை நிலை அடிமையும் கார் வைத்துக் கொள்ள முடியும், காரப்பாக்கதில் வீடு வாங்கலாம்
கணினியின் உதவியால் கவிஞர், எழுத்தாளர் ஆகலாம். ...

ராம்ஜி_யாஹூ சொன்னது…

no sir more concept

ராம்ஜி_யாஹூ சொன்னது…

Hi

It is very difficult to scroll down , in this format (view style ) of blog. Is it because of google chrome.
But i found difficult to read the last paragrapah and comments portions. I found the same difficulty in MTM blog too.

could you please change the format/design/view style

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ராம்ஜி யாஹூ,

//வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை
அடிமைகள் ஒருவருக் ஒருவர் தங்கள் பெயரை விளித்து அழைக்கலாம்
கடை நிலை அடிமையும் கார் வைத்துக் கொள்ள முடியும், காரப்பாக்கதில் வீடு வாங்கலாம்
கணினியின் உதவியால் கவிஞர், எழுத்தாளர் ஆகலாம்.//

:-)

இவற்றுக்குக் தனிநபர்களாகவும் சமூகமாகவும் கொடுக்கும் விலைகள் அதிகம்.

(பதிவின் வடிவமைப்பையும் மாற்றி விட்டேன், சுட்டிக் காட்டியதற்கு நன்றி)

ஜோதிஜி சொன்னது…

தொடக்கத்தின் ஒப்பீடுகள் சர் சர் என்று இழுத்துக் கொண்டு செல்கின்றது. ஆனால் அறிவு சார்ந்த அடிமைகளைப் பற்றி டக்கென்று முடிந்து போய்விட்டது. இதைப்பற்றி இன்னோரு பதிவு விரிவாகக்கூட எழுதலாம்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஜோதிஜி,

//அறிவு சார்ந்த அடிமைகளைப் பற்றி டக்கென்று முடிந்து போய்விட்டது. இதைப்பற்றி இன்னோரு பதிவு விரிவாகக்கூட எழுதலாம்.//

நம்மில் பலர் கண்கூடாக பார்க்கும் நடைமுறை என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் நேரடியாக தொடர்பில்லாதவர்களுக்காக விபரமாக எழுதலாம். எழுதுகிறேன்.

நன்றி.

univerbuddy சொன்னது…

Hi,
I come here from your post in Vinavu. I appreciate your post and your blog too.
//பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள்.//
//அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள்.//
By seeing these 2 statements, I think that you ignore an important fact: Islamic slavery. Those ‘ஆப்பிரிக்க வியாபாரிகள்’ are none other than Muslims. During their jihad raids, they captured people and enslaved them. It is they who supplied slaves to Europeans. To get the full picture, please read http://www.islam-watch.org/authors/65-khan/809-islamic-slavery-part-1.html