வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பேஸ்புக் கணக்கு ஒழிப்பு


பேஸ்புக் கணக்குகள் நீக்குதல்

பேஸ்புக் கணக்குகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து விட்டேன். பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடினால் இரண்டு லிங்குகள் கிடைத்தன. எல்லாமே பேஸ்புக்கின் உதவிக் குறிப்புகள்தான். (http://www.facebook.com/help/search/?q=how+do+i+delete+my+account)

முதல் குறிப்பில், கணக்கில் புகுபதிகை செய்து அமைப்புகள் போய், கணக்கை முடக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும். அலுவலக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட, குறைவான செயல்பாடுகள், நண்பர்கள் கொண்ட கணக்கில் லாகின் செய்திருந்தேன்.

அதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கத்தில் 'நண்பர்கள்' புகைப்படங்கள் வரிசையாக வைத்து, "இன்னார் உங்களை தேடுவார், அன்னார் உங்களை தேடுவார்" என்று உணர்வுரீதியான அழுத்தம் தரும் பக்கம். அதிலும் உறுதி சொன்ன பிறகு அடுத்த பக்கத்தில் "ஏன் பேஸ்புக் கணக்கை முடக்க விரும்புகிறீர்கள்?' என்ற கருத்தெடுப்பு. 'பாதுகாப்பு குறித்த கவலை' என்று தேர்ந்தெடுத்தேன். அடுத்த பக்கத்தில் கடவுச்சொல்லை உறுதி செய்து, captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும். அதற்கடுத்த பக்கத்தில் வெளியில் அனுப்பி விட்டார்கள். மின்னஞ்சலுக்கு, இப்படி "உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கணக்கை பயன்படுத்த விரும்பினால், உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்தால் போதும், உங்கள் விபரங்கள், அமைப்புகள் இப்போது இருந்தபடியே திரும்ப கிடைத்து விடும்' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

இன்னொரு கணக்கு தனிப்பட்ட மின்னஞ்சலுடன் இணைந்தது. பொதுவாக பேஸ்புக்கில் எதையும் எழுதவோ, தகவல் அறிவிக்கவோ செய்யாமல் இருந்தாலும், பேஸ்புக்கில் செயல்படும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய அழைப்பை ஏற்பது மட்டும் செய்து கொண்டிருந்தேன். அப்படி நிறைய அழைப்புகள் சேர்ந்து வாரத்துக்கு நான்கைந்து முறையாவது எட்டிப் பார்க்கும் கணக்காக அது இருந்தது. அதில் நுழைந்து கணக்கை நீக்குவது பற்றிய தேடலின் இன்னொரு சுட்டிக்குப் போனேன். 'நீங்கள் கணக்கை நிரந்தரமாக முற்றிலுமாக அழிக்க விரும்பினால்' என்ற தலைப்பில் அதன் விளைவுகளை விளக்கி விட்டு, 'அப்படி விரும்பினால் இந்தச் சுட்டியை கிளிக்கவும்' என்று ஒரு சுட்டி இருந்தது. அதை கிளிக்கியதும் கடவுச்சொல்லை உறுதி செய்து captcha உள்ளிட்டதும் 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைத்து விபரங்களும் அமைப்புகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும். அதற்குள் நீங்கள் விரும்பினால் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் மூலம் லாகின் செய்து அதைச் செய்யலாம்' என்று அறிவிப்பு. அதே விபரம் மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டிருந்தார்கள்.

பேஸ்புக் கணக்கை நீக்குவதில் அதிக மனப் போராட்டம் ஏற்பட்டு விடவில்லை. புகைப்படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள் என்று எதிலுமே பேஸ்புக்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் சேர்த்த புகைப்படங்களில் எனது படத்தில் டேக் செய்திருந்தது மட்டும் எனது டைம்லைனில் வந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்தது போய் விடுமே என்ற வருத்தம் இல்லை.

பேஸ்புக் மீதான ஆரம்ப அணுகுமுறை

ஏன் பேஸ்புக் கணக்கை நீக்க வேண்டும்? இணையத்தில் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் பெரிதும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிந்தாலும், அவற்றை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மாறவில்லை. டுவிட்டர், கூகுள்+, கூகுளின் பிற சேவைகளில் கணக்கு இருக்கிறது. அவ்வப்போது குறைந்த அளவிலான கருத்து தெரிவிப்புகளையும் செய்கிறேன். பிளாக்கர் மூலம் வலைப்பதிவுகளில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கின் மீது ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் நிறைய இருந்தது. பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க பயனர்கள் ஸ்லாஷ்டாட்டில் வைத்த விமர்சனங்களை நிறைய படித்திருந்தேன். அப்போது பேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் என்று சமூக வலைத்தளங்களின் போட்டி தணிய ஆரம்பித்து பேஸ்புக் முன்னணியில் வர ஆரம்பித்திருந்த சமயம். 'பேஸ்புக்கில் சுய தகவல்களுக்கு பாதுகாப்பு, அந்தரங்கம் இல்லை' என்பதுதான் அந்த விமர்சனங்களின் சாராம்சம்.

என்னைப் பொறுத்த வரை 'அந்தரங்கமாக தகவல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வலைப்பதிவில் கூட  நாட்குறிப்பு என்ற பெயரில் முடிந்த வரை மற்றவர்களை குறிப்பிடாமல் எனது தினசரி வாழ்க்கையை பதிவு செய்து வந்தேன். ஆனால் 'பேஸ்புக்கின் கவர்ச்சியில் சிக்கி தம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது' என்பது லாஜிக்கான வாதமாக இருந்தது. அந்த வாதத்தை நிரூபிப்பது போல நடைமுறையில் பல செய்திகள், நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

பேஸ்புக்கின் வெற்றி அடிப்படை

பேஸ்புக்கின் அடிப்படை கோட்பாடு, 'யாருக்கும் அந்தரங்கம் இல்லை' என்பதுதான். 'பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதுதான்' பேஸ்புக்கின் வணிக அடிப்படை. அடிப்படையில் பேஸ்புக்கின் வடிவமைப்பு, பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பொதுவில் வெளியிடும் வகையில் இருந்தது/இருக்கிறது. அந்தரங்க பாதுகாப்பு ஆர்வலர்களின் தொடர்ந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேஸ்புக் கூடுதல் பாதுகாப்புகளை அடிப்படை வடிவமைப்பின் மீது ஏற்படுத்திக் கொண்டது.

அதன் மூலம், இப்போது ஒருவர் 'விரும்பினால்', தனது விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், அப்படி எத்தனை பேர் 'விரும்பு'வார்கள்? அப்படிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்த பேஸ்புக் என்ன செய்கிறது? என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை.

'பயனர்களின் தனித் தகவல்களை சரக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தனது பயன்பாட்டை வடிவமைப்பது' என்றுதான் பேஸ்புக் செயல்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அரை மனதோடு, குறை சொல்பவர்களின் வாயை மூட செயல்படுத்தப்பட்டவைதான்.

பேஸ்புக்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை

விண்டோஸ் (3.1, 95, 98, Me) தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதை நெட்வொர்க் சூழலில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்க வைக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதே சுமைதான் NT அடிப்படையிலான XP முதலான இயங்குதளங்களுக்கும் இருக்கிறது. ஆரம்ப வடிவமைப்பில் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த மென்பொருள் பயன்பாட்டையும் அதன் பிறகு வெளிச்சேர்க்கைகள் மூலம் பாதுகாப்பானதாக மாற்ற முடியாது. இதே பிரச்சனை பேஸ்புக்குக்கும் இருக்கிறது.

பேஸ்புக்கில் சேருபவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உணர்வு, 'நாம் நமது நண்பர்களின் மத்தியில் இருக்கிறோம்' என்பது. நண்பர்கள் ஏற்பாடு செய்யும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உணர்வுதான் பேஸ்புக்குக்குள் ஏற்படுகிறது. பார்ட்டியில் சந்திக்கும் போது ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு, தெரியாதவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு சமூக வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்கிறோம். அதே போன்ற தோற்றமும் உணர்வும் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது.

நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், நண்பர் கோரிக்கைகளை அனுப்புவதும் இயல்பான ஒன்றாக படுகிறது. முகத்துக்கு நேர் பேசுவதில் தயங்கும் இளைஞர்கள் கூட கணினியின் முன்பு கிடைக்கும் முகமிலி வசதியில் நண்பர்கள் ஊடே சகஜமாக பேச, எழுத, எதிர்வினை புரிய முடிகிறது. நண்பர்களை கோரிக்கை அனுப்புவதற்கு பேஸ்புக் தொடர்ச்சியாக பரிந்துரைகளை செய்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல பார்ட்டி ஒருங்கிணைப்பாளராக விருந்தில் கலந்து கொண்டிருக்கும் எல்லோரையும் மகிழ்ச்சியாக பிறருடன் சேர்ந்து நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து தருகிறது.

விருந்தில் ஏற்படும் தொடர்புகள் வளர்ந்து சிலருடன் தனிப்பட்ட ஆழமான உறவாக வளர்வதற்கும் பேஸ்புக்கில் வசதி கிடைக்கிறது. அது காதல், திருமணம் என்று கூட வளர்ந்து போகலாம்.

80 கோடி பேர் கலந்து கொள்ளும் விருந்து

இதுதான் பேஸ்புக்கின் அடிப்படை. அது ஒரு மிகப்பெரிய பார்ட்டி, அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உள்ளே நுழைவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை (மின்னஞ்சல், பெயர்) காண்பித்தால் போதும். உள்ளே நுழைந்த பிறகு நீங்கள் அதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவரிடமும் உறவாடும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவில் உருவானதால் பேஸ்புக் நடத்தும் இந்த பார்ட்டி/விருந்து என்பது மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அது செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான, வசதியான சூழலில் என்ன நடக்கிறது என்பதன் விளைவுகள்தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் செய்திகளில் படிக்கும் கேள்விப்படும் நிகழ்வுகள்.

இந்த அடிப்படையின் மிகப்பெரிய சிக்கல், அந்த பார்ட்டி ஒரே ஹாலின் கீழ், சுமார் 80 கோடி பயனர்களும் ஒரே குழுவாக புழங்குவதாக இருப்பதுதான். சுமார் 80 கோடி பேர் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத பார்ட்டியாக இருந்தாலும் நிகர்நிலை உலகில் அது சுமார் 30 முதல் 40 பேர் வரை புழங்கும் பார்ட்டியைப் போல  எளிமையாக இருக்கிறது. அதில் நண்பர்களுடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளலாம். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், பார்ட்டிக்குள் வந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் நம்பத் தகுந்தவர்தான் என்ற அடிப்படையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கையான குழுவின் மத்தியில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், புகைப்படங்களை காட்டலாம். 'இவற்றை செய்யும் போது நமக்கும் இருக்கும் உணர்வு 30 முதல் 40 பேர் வரை கலந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் குழுவில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால், உண்மையில் 80 கோடி பேர் அதே அறையில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்'.

1. அவர்களை அழைத்த பேஸ்புக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறது.
2. அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள்.
3. நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் 80 கோடி பேரில் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது.

செயற்கையான பாதுகாப்பு உணர்வுடனான, உண்மையில் அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சூழலில் இயங்குவதுதான் பேஸ்புக்கின் பிரச்சனையே. தேவைப்படும் சமூக பாதுகாப்புகளை உண்மையாகவே செயல்படுத்தி விட்டால், பேஸ்புக்கின் வணிக மாதிரியே இல்லாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான்

1. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் அவரது உறவு நிலையை மாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். அந்த இளைஞரைப் பொறுத்த வரை அவர் தனிப்பட்ட முறையில் தனது புரொபைலில் ஒரு மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலியோ 'அது உலகின் முன்பு பகிரங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது' என்பதை உணர்ந்து மனம் உடைந்து தனது உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. தயக்கத்துடனும் கூச்சத்துடனும் பார்ட்டிக்குள் நுழைந்து ஓரமாக ஆரஞ்சு ஜூசை சிப்பிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை குறிபார்த்து, அவரது அழகைப் புகழ்ந்து, அவரது உடையை பாராட்டி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, தனியறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்முறை செய்யும் காமக் கொடூரர்களுக்கான களம் இது. அத்தகைய காமக் கொடூரர்கள் பேஸ்புக்கின் அடிப்படையையும் அதில் கலந்து கொள்ள வரும் பலதரப்பட்ட பயனர்களின் மன உணர்வுகளையும் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய புரிதலும், நண்பர்களின் ஆதரவும் இல்லாத மதுரைப் பொண்ணுகள் எண்ணெய்க் காகிதத்தில் மோதி மாட்டிக் கொள்ளும் பூச்சிகளாக மாட்டிக் கொள்கிறார்கள்.

3. சிலர் பேஸ்புக் மூலமாக, பார்ட்டியில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானதா என்று கூட சரிபார்க்க  முடியாது. ஒரு பெண் பயனரிடம் அவரது பேஸ்புக் நணபர் புரபோஸ் செய்ய அவரும் அதை ஏற்றுக் கொள்ள, அந்த காதலர் 'நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, உன் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வை' என்று கேட்க இவரும் அனுப்பி வைத்திருக்கிறார். அதை அவன் இணையத்தில் பரவலாக போஸ்ட் செய்து விட்டிருக்கிறான்.

இவை எதுவும் பேஸ்புக்கின் தவறு இல்லை என்பது உண்மை. பேஸ்புக் ஒரு களம் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிஜ உலகில் மனிதர்களிடம் என்னென்ன சிக்கல் இருக்கிறதோ அந்த சிக்கல்கள்தான் பேஸ்புக்கில் வெளிப்படுகின்றன. அந்த சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்கும்படியான களத்தை உருவாக்கி, அத்தகைய சிக்கல்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வு ஏற்படாதவாறு போலியான சூழலை ஏற்படுத்தி, பயனர்களை சிக்க வைப்பதுதான் ஏற்படுத்துவதுதான் பேஸ்புக் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சிக்கல்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பேஸ்புக்கில் உங்களுக்கு நண்பர் கோரிக்கை விடுப்பவர் தெருவில் சந்திக்கும் முன்பின் தெரியாத நபர். பார்ட்டியில் சந்திக்கும் நண்பர் வட்டத்துக்குள் உள்ள நபர் இல்லை.

2. பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும், நாற்சந்தியில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர் போன்றது. நண்பர்கள் குழுவுக்குள் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் பார்க்கும் படியான வெளிப்பாடு இல்லை.

3. யாரும் பார்க்கவில்லை என்று பார்ட்டி ஹாலின் பக்கவாட்டு அறைக்குள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வில் செய்யும் செயல்களும் உலகுக்கே தெரிகின்றன. தனி அறையைச் சுற்றி பல காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்ளே நடப்பவை சக நண்பரால் பொதுவில் வெளியிடுப்படும் என்ற எண்ணத்துடனேயே எதையும் செய்ய வேண்டும்.

3. பேஸ்புக் மூலம் ஏற்படும் எந்த நட்பு அல்லது உறவு, ரயில் பயணத்தில் பேச்சு கொடுத்து ஏற்படும் நட்பு/உறவு போன்றது மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த சமூக ஆதாரமும் நம்பகமும் அதில் இல்லை. நிஜ உலகில் எப்படி உறவுகளை எச்சரிக்கையுடன் சரி பார்க்கிறோமோ அப்படி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூடுதலாக, தமிழ் பயனர்களைப் பொறுத்த வரை பேஸ்புக் இடைமுகம் மட்டும்தான் தமிழில் இருக்கிறது, அதன் செயல்பாடுகள் அனைத்துமே மேற்கத்திய பார்ட்டியின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதனால் தனியாக  பாதிப்பு இல்லை என்றாலும் சின்னச் சின்ன வழிகளில் மேற்கத்திய பார்ட்டிகளுக்கு பரிச்சயமானவர்கள் சமாளித்துக் கொள்ளும் சிக்கல்கள் அவற்றிற்கு அறிமுகம் இல்லாதவர்களை வீழ்த்தி விடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும்  முற்றிலும் விரோதமானது.

திங்கள், பிப்ரவரி 13, 2012

வாழ்வின் ஆதாரம்


அறிவு முயற்சியில் சலிப்பு

வாசிப்பது, எழுதுவது சலித்துப் போவதற்கு முக்கிய காரணம் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவுதான்.

'உலகின் எல்லா நிகழ்வுகளையும் விளக்குவதற்கான தத்துவத்தை வந்தடைந்து விட்டோம்' என்று தோன்றி விட்டால் பார்ப்பது, படிப்பது எல்லாவற்றையும் அந்த தத்துவத்துக்குள் பொருத்திப் பார்ப்போம். ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொல்பவை காதில் விழுந்தாலும் மூளைக்குள் போவதில்லை. நாம் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் என்ன பொருந்துமோ அதை மட்டும் எடுத்து அதில் பொருத்திக் கொள்கிறோம். 'அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஏற்கனவே தெரியும், பார்த்தால் அதைத்தான் சொன்னார்' அவர் வேறு ஏதாவது சொல்லியிருந்தாலும், நமக்குத் தேவையானதை மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து அவரது 'அறியாமை'யை நீக்குவதற்கு நமக்குத் தோன்றிய கருத்தை அவர் காதில் போட விளைகிறோம். அவரும் நம்மைப் போன்ற ஆளாக இருந்து விட்டால் அவருக்குள்ளும் இதே போன்ற பதிவுதான் ஏற்படும். இரண்டு செவிடுகள் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் பல நேரங்களில் நடக்கிறது.

தத்துவ சட்டகங்கள்

நாம் இது வரை தெரிந்து கொண்டவை,  இப்போதைய அறிவு நிலை இவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொருத்தி வைத்திருக்கிறோம். அப்படி ஒரு சட்டகம்தான் வாழ்க்கையின் பிடிப்பு. அது குறிப்பிட்ட மதக் கோட்பாடாக இருக்கலாம், அல்லது அரசியல் கட்சியாக இருக்கலாம் அல்லது தத்துவநிலையாக இருக்கலாம். புதிதாக சந்திக்கும், தினசரி நிகழ்வுகளை அந்த சட்டகத்துக்குள் பொருந்துகிறதா என்று மட்டும் அவ்வப்போது சரி பார்க்கிறோம். ஏதாவது ஒன்று கொஞ்சம் கரடு முரடாக பொருந்தாமல் இருந்தால் அதன் ஓரங்களை மடக்கி திணித்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் சுருட்டி மடக்கி வைத்துக் கொள்கிறோம்.

ஒரு நாள் என்ன செய்தாலும் பொருந்தி போகாத ஒரு நிகழ்வு அனுபவம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சட்டகம் உடைய வேண்டும். அல்லது அதை மாற்றி அமைக்க வேண்டும். அதைச் செய்யும் துணிச்சல் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் தைரியம் தேவை.

அறிவியலிலும் உலக அளவில் இப்படி நடக்கிறது.

நாம் ஏற்படுத்தும் விதிகள் அமைத்துக் கொள்ளும் சட்டகங்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டும் என்று உலகத்துக்கு விதி இல்லை. உலகமும், விலங்குகளும் தாவரங்களும், மனிதர்களும் நமது அறிவியல் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

நமது அப்போதைய விதிகளுக்குள் கட்டுப்படாத ஒரு சோதனை அளவீடை சந்திக்கும் போது, பல விஞ்ஞானிகள் அதை ஏதோ பரிசோதனை முறையில் தவறு என்று ஒதுக்கி விடலாம் (அப்படியும் பல தவறான அளவீடுகள் கிடைக்கின்றன). மீண்டும் ஒரு முறை பரிசோதனையை கவனமாக செய்து பார்க்கிறார் அந்த விஞ்ஞானி, மீண்டும் அதே அளவீடு. அந்த அளவீட்டை அப்போதைய அறிவியல் கோட்பாடு சட்டகத்தினுள் விளக்க  முடியவில்லை. மீண்டும் ஒரு முறை பரிசோதனையை தவறு ஏற்படக் கூடிய சாத்தியங்களை எல்லாம் விலக்கி விட்டு பரிசோதிக்கிறார். அப்போதும் அதே அளவீடு. இப்போதுதான் அதை கவனமாக பதிவு செய்து ஒரு அறிவியல் அறிக்கையாக வெளியிடுகிறார்.

முதலில் அதைப் படிப்பவர்கள் நம்பிக்கையற்று எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களில் சிலர் இப்போது நிலவி வரும் நம்பிக்கைக்கு மாற்றான அந்த முடிவுகளை உடைத்துக் காட்ட அல்லது உறுதி செய்ய தாமும் அறிக்கையில் கொடுத்துள்ள பரிசோதனை முறையைப் பின்பற்றி செய்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதே அளவீடு கிடைக்கலாம் (அல்லது அப்போதைய சட்டகத்துக்குட்பட்ட அளவீடு கிடைக்கலாம்). அதே புதிய அளவீடு கிடைத்தால், அவர்களும் தமது சோதனைகளை வெளியிடுவார்கள்.

இப்போதுதான் உலகம் புதிய அறிவியல் கோட்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகிறது. இப்படி உண்மையிலிருந்து நமது நம்பிக்கைகளை சட்டகங்களை தொடர்ந்து பரிசோதித்து மாற்றிக் கொள்ள அல்லது தேவைப்பட்டால் முற்றிலும் உடைத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் the world refuses to be classified உலகம் வகைப்படுத்தப்படுவதற்கு உட்படுவதில்லை.

ஒத்துப் போதலும் நிராகரிப்பும்

'நம்முடைய வகைப்படுத்தல்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டுமா' என்பது அடுத்த கேள்வி.

மனித குலத்தின் அறிவுகளை வகைப்படுத்தல் மூலம் இயற்கையில் நடப்பவற்றை முன்கணிக்கவும் அவற்றைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யவும், அல்லது அவற்றை மாற்றி அமைக்க ஏற்பாடுகள் செய்வதும் சாத்தியமாகிறது. உலகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் விளக்கும் படியான முழுமையான சட்டகம் என்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. குறிப்பிட்ட கால கட்டத்தில் நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறிவியலின் அடிப்படையில் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆராய்ச்சி செய்து இந்த சட்டகத்துக்கு மாறான முடிவுகளை தேடும் விஞ்ஞானிகளைத் தவிர மற்ற அனைவரும் அந்த சட்டகங்களின் விதிகளை ஏற்றுக்  கொண்டு செயல்படுகிறார்கள். அதுதான் சாத்தியமான நடைமுறை.

நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றின் அடிப்படையில்தான் நமது அறிவு உருவாகிறது. நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றை தனித்தனியாக நினைவில் வைத்திருக்காமல் ஒரு சட்டகத்துக்குள் அமைத்துக் கொள்வதன் மூலம் பகுத்தறிவும் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

அத்தகைய சட்டகங்களுக்குள் பொருந்தாத அனுபவங்களை விளக்க சட்டகத்தை மாற்றி விரிவுபடுத்த அல்லது புதிய சட்டகத்தை உருவாக்க அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் மிகச் சிலர் வேலை செய்கிறார்கள்.
புதிய சட்டகம் பழைய நிகழ்வுகளுக்கான விளக்கத்தையும் உள்ளடக்கியிருப்பதோடு, பழைய சட்டகத்தை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறது.  அந்த மேம்பட்ட சட்டகத்தின் அடிப்படையில் நாம் மேம்பட்ட வாழ்க்கையை நடத்துகிறோம்.

வாழ்க்கை போராட்டங்கள்

1. மனிதர்கள் சந்திக்கும் அடிப்படையான சவால், இயற்கையுடனான போராட்டம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பொருத்தமாக பயன்படுத்துவது, இயற்கை சக்திகளை எதிர் கொள்வது இவற்றுக்கான போராட்டம்தான் அறிவியல்.

2. வேலைப் பிரிவினை செய்து கொண்ட பிறகு அதனால் ஏற்படும் சமூக உறவுகளிடையே ஏற்படும் போராட்டம் இன்னொரு போராட்டம், முழுக்க முழுக்க மனிதரால் உருவாக்கப்பட்டது. மனித சமூகமும் அப்போதைய நடைமுறையைப் பின்பற்றி பல பிரிவுகளான சட்டகமாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதங்கள், மொழிக் குழுக்கள், தேசங்கள், 20ம் நூற்றாண்டின் நாடுகள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சட்டகம் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் செயல்படுகிறோம்.

3. மூன்றாவதாக ஒவ்வொருவரும் சந்திக்கும் போராட்டம் தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியது. 'நாம் எப்படி சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் நமது பாத்திரம் என்ன' இந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். குடும்பம், சாதிக் குழு, இனக்குழு, மொழிக் குழு, தேசம், நாடு என்று ஒவ்வொரு படிநிலையாக நமது இடத்தை பொருத்திக் கொண்டிருக்கிறோம். இந்த படிநிலைகள் மனிதரால் அப்போதைய தேவைக்கு உருவாக்கப்பட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை, புரிந்து கொள்வதுமில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டகத்துக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

மாறும் வழிமுறை

அறிவியலில் ஏற்படும்  மாற்றங்களைப் போல சமூக உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. மனித அறிவு வளர வளர, புதிய புதிய தகவல்கள் தெரிய வர, ஏற்கனவே இருந்த சட்டகத்தை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதற்கான அல்லது உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்குதவற்கான தேவையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும்.

அறிவியலில் பின்பற்றுவது போல, ஒருவர்  சொன்னதாலேயே அறிவியல் கோட்பாடு உருவாகி விடாது. அவர் சொல்வதை சக விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். அது வரை தெரிந்த உண்மைகளையும் இனிமேல் பரிசோதனைகளில் செய்யும் அளவீடுகளையும் விளக்க வேண்டும். பரிசோதனையில் என்ன அளவீடு கிடைக்கும் என்று கணிக்க வேண்டும். இப்படி பல ஆண்டுகள் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அறிவியல் சட்டகம் மாறுகிறது அல்லது உடைக்கப்படுகிறது.

அதே போல, இன்றைக்கு இருக்கும் அறிவியல் விதிகள்தான் இறுதியானவை. இனிமேல் புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை. எல்லோரும் அப்படியே சொன்னதை செய்து கொண்டு வாழ்ந்தால் சொர்க்கம்தான் என்று அறிவியல் சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.

சமூக அமைப்புகளிலும் இது பொருந்துகிறது. சமூகத்தின் செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட சட்டகங்கள் அவற்றுக்கான விதிகள், அவற்றைப் பின்பற்றுவது அவசிய தேவை. யாரோ ஒரு சோம்பேறியின் மனதில் உதித்த கற்பனை கனவுகளின் அடிப்படையில் மற்றவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

சட்டகத்துக்குள் பொருந்தாத உண்மையை அதே போல ஒருவர் நடைமுறையில் உணர்ந்து, அதை வெளியிட்டு, பலர் அதை நடைமுறையில் பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்த பிறகு அந்த புதிய தரவு சட்டகத்துக்குள் பொருந்தும் படி சட்டகம் விரிவுபடுத்தப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

புதன், பிப்ரவரி 01, 2012

பொருளாதார பாடம் கசப்பது ஏன்?


இப்போதைய வாசிப்பு

இப்போது 3 புத்தகங்கள் வாசிக்கும் மேசையில் இருக்கின்றன.

  • முதலாவது அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற அ.அனிக்கின் எழுதிய சோவியத் வெளியீடு. 
  • இரண்டாவது A History of Capitalism (1500-2000) என்ற Michael Beud எழுதிய புத்தகம். பிரெஞ்சு பொருளாதார பேராசிரியரான அவர் 1980ல் ஆரம்பித்து 1999 பதிப்பில் நூற்றாண்டின் இறுதி வரைக்குமான வரலாற்றையும் சேர்த்து பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. 
  • மூன்றாவதாக கம்யூனிஸம் என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம். 

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற புத்தகம் மனித சமூகத்தில் பொருளாதார சிந்தனைகளின் வரலாற்றை விவரிக்கிறது. அரிஸ்டாட்டில் அரசியல் பொருளாதாரம் பற்றி கொண்டிருந்த கருத்துக்களில் ஆரம்பித்து 16ம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்திலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், ஹாலந்திலும் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த, பொருளாதார கோட்பாடுகளில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பற்றி விளக்குகிறது.

கேபிடலிசத்தின் வரலாறு என்ற புத்தகம் 18ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்தான வளர்ச்சிகள், 18ம் நூற்றாண்டின் புரட்சிகள், தொழில் மயமான வளர்ச்சி, காலனி ஆட்சி, உலகப் போர்கள், 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்து நிகழ்வுகள் என்று புள்ளிவிபரங்களுடனும் தகவலுடனும் பேசுகிறது.

அரவிந்தன் நீலகண்டனின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸிலிருந்து துவங்குகிறது. மார்க்சியம் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கம்யூனிசம் என்பது ஒரு வில்லத்தனமான கோட்பாடு என்பதை நிறுவுவது அந்த புத்தகத்தின் நோக்கம். மார்க்ஸ், எங்கெல்ஸ், அதன் பிறகு ரஷ்ய தலைவர்கள், சீனா, கம்போடியா, கியூபா என்று சோசலிச நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தனது பார்வையில் வண்ணம் அடித்து விளக்குகிறர். கம்யூனிசம் என்பது பஞ்சம், படுகொலை , பேரழிவுக்கு வழி வகுக்கும் என்பது புத்தகத்தின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை சொல்லப்படுகிறது.

பொருளாதாரம் வாசிப்பு அனுபவங்கள்

நான் முதலில் பொருளாதாரம் பற்றி படிக்க ஆரம்பித்தது கல்லூரியில். தோல் தொழில்நுட்பம் படித்தாலும், கல்லூரியின் இறுதி ஆண்டில் 7வது பருவத்தில் ஒரு மேலாண்மை பாடமாக பொருளாதாரம் இருந்தது.  அந்த வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பிடித்திருந்தன. அதிலிருந்து தேடிப்பிடித்து சில அமெரிக்க பொருளாதார பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அமெரிக்க தகவல் மையத்தின் நூலகத்தில் உறுப்பினராக இருந்ததால் Economics  என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து புத்தகங்களை படிக்க முடிந்தது.

டிமாண்ட், சப்ளையிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி, சந்தைகள், நுகர்வோர், போட்டி, போட்டியின்மை, ஏகபோகம், குடும்பங்களின் வருமானம், தனிநபரின் நிறைவு, உற்பத்தியில் செலவுகள், தேசிய வருமானம், வேலை வாய்ப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், வரி விதிப்பு, அரசின் அவசியம், அரசின் பணிகள், உலக வர்த்தகம் என்று எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான தலைப்புகள் இருந்தன.

இவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருந்தது பால் சாமுவேல்சன் எழுதிய புத்தகம். அதுதான் பல பல்கலைக் கழங்களில் பாடநூலாக பின்பற்றப்பட்டது. 1980களிலேயே 12வது பதிப்பு வந்து விட்டதாக நினைவு. இப்போது 20வது பதிப்புக்கு அருகில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிந்தைய பதிப்புகளில் நார்ட்ஹவுஸ் என்பவருடன் இணைந்து நூலை எழுதி வெளியிட்டார்.

பொருளாதார பாடத்தில் இரண்டு பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, எப்படி முடிவுகள் எடுக்கின்றன என்பதைப் பற்றியது, மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, நாடுகள், சமூங்கள் எப்படி செயல்படுகின்றன, முடிவுகள் எடுக்கின்றன, பிற நாடுகளுடன் உறவாடுகின்றன என்பதைப் பற்றியது.

மைக்ரோ எகனாமிக்ஸ் கொஞ்சம் விறைப்பாக செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். மேக்ரோ எகனாமிக்ஸ் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் நமது வாழ்க்கைக்கு மைக்ரோ எகனாமிக்ஸ்தானே தேவையானது என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் நாம் எப்படி முடிவு எடுக்கிறோம், எப்படி பொருட்களை நுகர்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி பேரம் பேசுகிறோம் என்பதை விளக்குகிறது.

பொருளாதார பாடப்புத்தகங்களை தவிர 20ம் நூற்றாண்டின் மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் எழுதிய பொதுவான புத்தகங்களையும் படித்தேன். குறிப்பாக கேல்பிரித் என்பவர் எழுதிய affluent society முதலான புத்தகங்கள். ஆல்வின் டோப்ளர் எழுதிய future shockIn search of excellence என்ற ஆய்வு நூல். முந்தையதில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித வாழ்க்கை எப்படி மாறும் என்று பக்கம் பக்கமாக விளக்கியிருப்பார். இரண்டாவது நூலில் அமெரிக்காவின் தலை சிறந்த நிறுவனங்கள் எப்படி தரத்தையும், வாடிக்கையாளர் சேவையையும் சாதிக்கின்றன என்று பல நிறுவனங்களை ஆய்வு செய்த நூல். Small is beautiful என்ற நூல் சூமாகர் எழுதியது. 20ம் நூற்றாண்டின் பெரும் நிறுவனங்கள், பெருமளவிலான உற்பத்தி என்பது மாறி சிறு அளவிலான உற்பத்தியாக உருமாறும் என்பது அவரது கோட்பாடு.

கல்லூரியில் படித்த மற்ற எந்த பாடத்தையும் விட இந்த பொருளாதாரம் தொடர்பான வாசிப்பு மிகவும் பொருள் பொதிந்ததாக தோன்றியது.

நடைமுறை பொருளாதார வாசிப்பு

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் இத்தகைய புத்தகங்களை படிப்பதை தொடர்ந்தேன். கையில் காசு கிடைத்ததால் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகம் வாங்கிக் கொண்டேன். இந்தூரின் நடைபாதைக் கடைகளில் வாங்கி குவித்தவை தனி. அந்தக் கட்டத்தில் சுமார் 1994 வாக்கில் தினமும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். மன்மோகன் சிங்/நரசிம்ம ராவ் சந்தைப் பொருளாதாரத்தை அவிழ்த்து விட்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த கால கட்டம். சுமார் 2 ஆண்டுகள் அந்த நாளிதழை படித்துக் கொண்டிருந்தேன்.

எகனாமிக் டைம்ஸ் இந்தூருக்கு பம்பாயிலிருந்து வரும். மாலையில்தான் வீட்டுக்குக் கொண்டு போடுவார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்து பயணத்தில் அதைப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவும், எகனாமிக் டைம்சும் குப்பை பத்திரிகைகளாக மாறுவதற்கு முந்தைய கட்டம். இந்திய பொருளாதாரம், வணிக நிறுவனங்கள், அரசு கொள்கைகள், பங்குச் சந்தை, விலை வாசி என்று பொருளாதாரம் சார்ந்த விபரங்களை அதில் படிக்க முடிந்தது.

படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமில்லாத தலைப்புகள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவை செய்திகளுக்கு துணையாக அணிவகுக்க ஆரம்பித்திராத காலகட்டம் அது.

இந்த நாளிதழிலும் மைக்ரோ எகனாமிக்ஸ் குறைந்த அளவிலேயே வந்தது. முதலீட்டு ஆலோசனைகள், வரி விதிப்பு தொடர்பான கேள்வி பதில் என்று ஓரிரு பக்கங்களோடு அது நின்று விட்டிருந்தது. எந்த ஒரு செய்தி அலசலையும் எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டின் அரசியல், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி. உலக பொருளாதார நிலைமை இவை மூன்றுமே தலை காட்டி விடும்.

டாடா ஸ்டீல் பற்றி அலசல் இருந்தால் அதில் இந்த மூன்று முக்கிய காரணிகளையும் பற்றி பேசியிருப்பார்கள். நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, மொத்த வருமானம், லாபம், எதிர் கால திட்டங்கள் இவற்றின் பின்னணியிலேயே பேசப்பட முடியும்.

மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது செயற்கையானது என்று தோன்றினாலும், நமக்கென்ன தெரியும், மெத்தப்படித்த பொருளாதார ஆசிரியர்கள் அப்படிப் பிரித்து விளக்கினால் ஏதாவது பொருள் இருக்கத்தான் செய்யும் என்று அதை மனதுக்குள்ளேயே அழுத்திக் கொள்வேன். மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது இளங்களை பொருளாதார வகுப்புகளில் மார்ஷல் என்ற இங்கிலாந்து பேராசிரியர் எழுதிய மைக்ரோ எகனாமிக்ஸ் பாட புத்தகங்கள்தான் முதன்மையாக போதிக்கப்படுகின்றன என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். எகனாமிக்ஸ் படிக்க யாரும் ஆர்வமாக முன் வராதது புரிந்தது போல இருந்தது.

2006ல் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆன பிறகு சாமுவேல்சனின் புத்தகத்தில் தரப்படுள்ள கோட்பாடுகளை சிறு சிறு பதிவுகளாக எழுதலாம் என்று முயற்சித்து கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளையும் எழுதினேன். அப்போது எகனாமிக் டைம்ஸ் படிக்க முடியாதபடி (எனக்கு) ஆகி விட்டிருந்தது.

பொருளாதார வரலாற்று நாயகர்கள்

சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகத்தில் பொருளாதாரவியலின் வரலாறுஆதம் ஸ்மித்திடமிருந்து ஆரம்பிக்கும். அவர்தான் நவீன பொருளாதாரவியலின் தந்தை. நாடுகளின் செல்வத்துக்கு காரணங்களைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர்.

அடுத்ததாக டேவிட் ரிக்கார்டோ என்பவர்.

மூன்றாவதாக காரல் மார்க்சின் மூலதனம் என்ற ஆய்வு நூல், அதன் விளைவுகள்.

1930களில் கீன்ஸ் என்ற இங்கிலாந்து பிரபு எழுதிய நாட்டின் வேலை வாய்ப்பு, வளர்ச்சி பற்றிய புத்தகம்.

1960களில் மில்டன் பிரீட்மேன், கால்பிரித் போன்றவர்களுடன் முடியும்.

முந்தைய பதிப்புகளில் காரல் மார்க்சுக்கு நான்கைந்து பக்கங்கள் ஒதுக்கி அவர் கணித்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள், அது எப்படி தவிர்க்கப்பட்டு வருகிறது என்று விளக்கியிருப்பார்கள். சமீபத்திய பதிப்புகளில் அது ஒரு பெட்டிக் குறிப்பு அளவுக்குச் சுருங்கியிருந்தது.

பொருளாதாரவியலில் முரண்நிலைகள்

பொருளாதார துறையில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே எதிரெதிர் கோட்பாட்டு முகாம்கள் செயல்பட்டே வந்திருக்கின்றன. ஆதம் ஸ்மித், கீன்ஸ், பிரீட்மேன் போன்றவர்கள் ஒரு முகாம் என்று வைத்துக் கொண்டால் ரிகார்டோ, மார்க்ஸ், கேல்பிரித் போன்றவர்களை எதிர் முகாமில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த கோட்பாட்டு முரண்பாடுகளைப் பற்றி அந்த பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை.

தண்ணீர்

சாமுவேல்சனின் புத்தகத்தில் ஒரு முக்கியமான கேள்வி.

'பொருளின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது' என்பது ஒரு கோட்பாடு. 'அப்படியென்றால் மிகவும் பலனளிக்கும் தண்ணீரின் விலை குறைவாகவும், பயன் மதிப்பு இல்லாத வைரத்தின் விலை மிக அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன?' என்பது கேள்வி.

அதாவது புத்தகம் சொல்லித் தரும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் முரண்பாடு காட்டும் கேள்வி. வைரத்துக்கும் தண்ணீருக்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக வெளிப்படையாக தெரிந்தாலும் இதை மாதிரி மற்ற பொருட்களிலும் இதே முரண்பாடுகள் இருக்கின்றன.

அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். 'பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (marginal utility)' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.

ஒரு பொருளாதார மனிதனுக்கு முதல் 1 லிட்டர் தண்ணீரின் பயன்பாடு வைரத்தை விட உயர்ந்தது. தண்ணீரே கிடைக்கா விட்டால் வைரத்தைக் கூட கொடுத்து குடிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீர் வாங்கத் தயாராக இருப்பார். அடுத்தடுத்து 1000 லிட்டர், 10000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் போது அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது, ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிடச் சாப்பிட திகட்டுவதைப் போல. வைரத்தின் உயர்ந்த விலைக்குக் காரணம் அது குறைவாக கிடைப்பது, அதனால் இறுதி அலகின் பயன்பாடு அதிகம். தண்ணீரின் அதிக விலைக்கு காரணம் அது அதிகமாக கிடைப்பது.

இது பாடப் புத்தகம் நிறைய கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று படித்து விட்டு நகர்ந்து விடுவோம். அதை நம்பி நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அலசலில் மிகப்பெரிய ஓட்டை இது கேள்வியை அதற்கு தொடர்புள்ள முக்கியமான பகுதியை விட்டு விட்டு பரிசீலிக்கிறது என்பதே. தண்ணீர் அதிகமாக கிடைப்பதற்கு காரணம் என்ன? வைரம் குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் கிடைப்பதை நிர்ணயிப்பது எது?


இந்த கேள்விக்குள் எங்கு வருவோம் என்றால், தொழிற்சாலையின் உற்பத்தி செலவுகள் பற்றி பேசும் போது. ஒரு தொழிலாளர் அல்லது இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி கூடுதல் அலகைப் பொறுத்தது என்று இன்னும் ஒரு சிக்கலான கோட்பாட்டை அறிமுகம் செய்வார்கள். அதனால்தான் மைக்ரோ எகனாமிக்ஸ் வறட்சியாக பட்டது என்று நினைக்கிறேன்.


நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தருணம்

ஒருவருக்கு வயிற்று வலி என்றால் அதற்கு பல காரணங்கள்  இருக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எல்லா உறுப்புகளுக்கும் அதில் பங்கு அல்லது அதன் விளைவில் பங்கு உண்டு. வயிற்று வலி காரணமாக சரியாக சாப்பிடா விட்டால் உடம்பில் எந்த உறுப்புக்கும் சக்தி கிடைக்காத நிலை ஏற்படும். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் யாராவது வயிற்று வலியைப் பற்றி பேசவோ, ஆய்வு செய்யவோ, மருந்து கொடுக்கவோ முயற்சிக்கிறார்கள் என்றால் நமக்கு சிரிக்கத் தோன்றும்.

அதே முயற்சிதான் பொருளாதார பாடத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார பாடத்திலிருந்து விரிவடைந்து முழு பொருளாதாரத்துக்கும் உலக சமூகத்துக்கும் அப்படித்தான் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார்கள். ஆதம் ஸ்மித்தின் பொருளாதார மனிதனின் சுயநலத்தில் ஆரம்பித்து, கீன்ஸின் முழு வேலை வாய்ப்புடனான சமூகத்தை உருவாக்க அரசின் பங்கு என்பது வரை முழுமையை புறக்கணித்து விட்டு பகுதிக்கு மட்டும் களிம்பு போடும் வேலையை செய்கிறார்கள்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி செய்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?

சார்புக் கொள்கையை உருவாக்கிய 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு குவாண்டம் அறிவியலை ஏற்றுக் கொள்வதில் மறுப்பு இருந்தது. 'கடவுள் பகடையாடுவதில்லை' என்று சொல்லி அதை நிராகரித்தார். குவாண்டம் கோட்பாடுகளின்படி ஒரு துகளின் இடம் அல்லது வேகம் இரண்டையும் முற்றிலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அது கடவுளால் கூட முடியாது என்பது அதன் நீட்சி. கடவுளை நம்பும் ஐன்ஸ்டைனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் குவாண்டம் அறிவியலுக்குள் அவர் வேலை செய்யவில்லை.

இயற்கை அறிவியலிலேயே அறிவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் போது சமூக அறிவியலான பொருளாதாரவியலில் இந்த தாக்கம் இரண்டற கலந்து இருந்தது.

அறிவியல் அணுகுமுறை தரும் முடிவுகள்

பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்ந்து, பொருளின் விலையின் இரண்டு பக்கத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சி தரும்படி இருந்தன. ரிக்கார்டோதான் பொருளின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் ஆராய்ச்சி செய்து முழுமையாக வெளிப்படுத்தியவர். அதன் விளைவுகளை விளக்கிச் சொல்ல அவரது வளர்ப்பும் சூழ்நிலையும் வழி தரவில்லை. அவர் காலத்திய மற்ற அறிஞர்கள் அவரை நிராகரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

காரல் மார்க்ஸ் அந்த விளைவுகளை அவற்றின் இயல்பான இறுதி நிலை வரை விளக்கி மூலதனம் எழுதினார். அதற்கான நேர்மையான பதில் இன்று வரை முதலாளித்துவ பொருளாதாரவியலில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேக்ரோ, மைக்ரோ எகனாமிக்ஸ், இறுதி அலகின் கூடுதல் பயன்பாடு,  என்று செயற்கையாக கோட்பாடுகளை உருவாக்கி மழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த கோட்பாடுகள் தலை சிறந்த அறிஞர்களால் வளர்த்து நிறுவப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

விளைவுகளை நான் காலனி படையெடுப்புகளாக, உலகப் போர்களாக, கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளாக, போபால் விபத்தாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக, 2G ஊழலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்கள். காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள். இஸ்லாமிய ஜிகாத், நாடு பிடிக்கும் ஆசை, இன வெறி, சர்வாதிகாரி என்று பல காரணங்கள் பல வழிகளில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் எந்த பிரச்சனையும் இது வரை தீர்ந்ததாக வரலாறு இல்லை. பிரச்சனைகள் மறக்கப்பட்டு விடுகின்றன, அல்லது அடுத்து வரும் இன்னொரு பிரச்சனையால் மறைக்கப்பட்டு விடுகின்றன.

பொருளின் மதிப்பு

பொருளின் விலை அல்லது மதிப்பு குறித்த கேள்விதான் இதற்கு அடிப்படை. பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது எது?

பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.

இங்கு இரண்டாவதாக புரிந்து கொள்வதற்கு சிரமமான கடைசி அலகின் கூடுதல் மதிப்பு என்ற கோட்பாடு தேவையே இல்லை. ஒரு பொருள் எவ்வளவு பயன் மதிப்பு உடையதாக இருந்தாலும் அதன் உற்பத்தி உழைப்புதான் அதன் விலையை தீர்மானிக்கிறது. பயன் மதிப்பு இல்லாத பொருளுக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டாலும் விலை அந்த அளவு கிடைக்காமல் போய் விடலாம். உதாரணமாக ஒருவர் பல நாட்கள் உழைத்து ஒரு ஓவியம் வரைகிறார், யாரும் அதை வாங்க முன்வரவில்லை (பயன் மதிப்பு இல்லை) என்றால் அதற்கு விலை இல்லை, அல்லது விலை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பயன் மதிப்பினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை உற்பத்தி செலவுதான் என்பதை கவனிக்க வேண்டும். அந்த உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் அதன் உற்பத்தி நின்று விடும்.

பயன் மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு செயற்கையானது. அதை தாங்கிப் பிடிக்க செயற்கையான பல நடவடிக்கைகள் தேவை, கீன்சின் முழு வேலை பொருளாதார கோட்பாட்டிலிருந்து பிரீட்மேனின் பணக் கொள்கை வரை பல வழியில் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.