அறிவு முயற்சியில் சலிப்பு
வாசிப்பது, எழுதுவது சலித்துப் போவதற்கு முக்கிய காரணம் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவுதான்.
'உலகின் எல்லா நிகழ்வுகளையும் விளக்குவதற்கான தத்துவத்தை வந்தடைந்து விட்டோம்' என்று தோன்றி விட்டால் பார்ப்பது, படிப்பது எல்லாவற்றையும் அந்த தத்துவத்துக்குள் பொருத்திப் பார்ப்போம். ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொல்பவை காதில் விழுந்தாலும் மூளைக்குள் போவதில்லை. நாம் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் என்ன பொருந்துமோ அதை மட்டும் எடுத்து அதில் பொருத்திக் கொள்கிறோம். 'அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஏற்கனவே தெரியும், பார்த்தால் அதைத்தான் சொன்னார்' அவர் வேறு ஏதாவது சொல்லியிருந்தாலும், நமக்குத் தேவையானதை மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்ந்து அவரது 'அறியாமை'யை நீக்குவதற்கு நமக்குத் தோன்றிய கருத்தை அவர் காதில் போட விளைகிறோம். அவரும் நம்மைப் போன்ற ஆளாக இருந்து விட்டால் அவருக்குள்ளும் இதே போன்ற பதிவுதான் ஏற்படும். இரண்டு செவிடுகள் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் பல நேரங்களில் நடக்கிறது.
தத்துவ சட்டகங்கள்
நாம் இது வரை தெரிந்து கொண்டவை, இப்போதைய அறிவு நிலை இவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொருத்தி வைத்திருக்கிறோம். அப்படி ஒரு சட்டகம்தான் வாழ்க்கையின் பிடிப்பு. அது குறிப்பிட்ட மதக் கோட்பாடாக இருக்கலாம், அல்லது அரசியல் கட்சியாக இருக்கலாம் அல்லது தத்துவநிலையாக இருக்கலாம். புதிதாக சந்திக்கும், தினசரி நிகழ்வுகளை அந்த சட்டகத்துக்குள் பொருந்துகிறதா என்று மட்டும் அவ்வப்போது சரி பார்க்கிறோம். ஏதாவது ஒன்று கொஞ்சம் கரடு முரடாக பொருந்தாமல் இருந்தால் அதன் ஓரங்களை மடக்கி திணித்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் சுருட்டி மடக்கி வைத்துக் கொள்கிறோம்.
ஒரு நாள் என்ன செய்தாலும் பொருந்தி போகாத ஒரு நிகழ்வு அனுபவம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சட்டகம் உடைய வேண்டும். அல்லது அதை மாற்றி அமைக்க வேண்டும். அதைச் செய்யும் துணிச்சல் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் தைரியம் தேவை.
அறிவியலிலும் உலக அளவில் இப்படி நடக்கிறது.
நாம் ஏற்படுத்தும் விதிகள் அமைத்துக் கொள்ளும் சட்டகங்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டும் என்று உலகத்துக்கு விதி இல்லை. உலகமும், விலங்குகளும் தாவரங்களும், மனிதர்களும் நமது அறிவியல் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
நமது அப்போதைய விதிகளுக்குள் கட்டுப்படாத ஒரு சோதனை அளவீடை சந்திக்கும் போது, பல விஞ்ஞானிகள் அதை ஏதோ பரிசோதனை முறையில் தவறு என்று ஒதுக்கி விடலாம் (அப்படியும் பல தவறான அளவீடுகள் கிடைக்கின்றன). மீண்டும் ஒரு முறை பரிசோதனையை கவனமாக செய்து பார்க்கிறார் அந்த விஞ்ஞானி, மீண்டும் அதே அளவீடு. அந்த அளவீட்டை அப்போதைய அறிவியல் கோட்பாடு சட்டகத்தினுள் விளக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை பரிசோதனையை தவறு ஏற்படக் கூடிய சாத்தியங்களை எல்லாம் விலக்கி விட்டு பரிசோதிக்கிறார். அப்போதும் அதே அளவீடு. இப்போதுதான் அதை கவனமாக பதிவு செய்து ஒரு அறிவியல் அறிக்கையாக வெளியிடுகிறார்.
முதலில் அதைப் படிப்பவர்கள் நம்பிக்கையற்று எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களில் சிலர் இப்போது நிலவி வரும் நம்பிக்கைக்கு மாற்றான அந்த முடிவுகளை உடைத்துக் காட்ட அல்லது உறுதி செய்ய தாமும் அறிக்கையில் கொடுத்துள்ள பரிசோதனை முறையைப் பின்பற்றி செய்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதே அளவீடு கிடைக்கலாம் (அல்லது அப்போதைய சட்டகத்துக்குட்பட்ட அளவீடு கிடைக்கலாம்). அதே புதிய அளவீடு கிடைத்தால், அவர்களும் தமது சோதனைகளை வெளியிடுவார்கள்.
இப்போதுதான் உலகம் புதிய அறிவியல் கோட்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகிறது. இப்படி உண்மையிலிருந்து நமது நம்பிக்கைகளை சட்டகங்களை தொடர்ந்து பரிசோதித்து மாற்றிக் கொள்ள அல்லது தேவைப்பட்டால் முற்றிலும் உடைத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் the world refuses to be classified உலகம் வகைப்படுத்தப்படுவதற்கு உட்படுவதில்லை.
ஒத்துப் போதலும் நிராகரிப்பும்
'நம்முடைய வகைப்படுத்தல்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டுமா' என்பது அடுத்த கேள்வி.
மனித குலத்தின் அறிவுகளை வகைப்படுத்தல் மூலம் இயற்கையில் நடப்பவற்றை முன்கணிக்கவும் அவற்றைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யவும், அல்லது அவற்றை மாற்றி அமைக்க ஏற்பாடுகள் செய்வதும் சாத்தியமாகிறது. உலகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் விளக்கும் படியான முழுமையான சட்டகம் என்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. குறிப்பிட்ட கால கட்டத்தில் நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறிவியலின் அடிப்படையில் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆராய்ச்சி செய்து இந்த சட்டகத்துக்கு மாறான முடிவுகளை தேடும் விஞ்ஞானிகளைத் தவிர மற்ற அனைவரும் அந்த சட்டகங்களின் விதிகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். அதுதான் சாத்தியமான நடைமுறை.
நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றின் அடிப்படையில்தான் நமது அறிவு உருவாகிறது. நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றை தனித்தனியாக நினைவில் வைத்திருக்காமல் ஒரு சட்டகத்துக்குள் அமைத்துக் கொள்வதன் மூலம் பகுத்தறிவும் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.
அத்தகைய சட்டகங்களுக்குள் பொருந்தாத அனுபவங்களை விளக்க சட்டகத்தை மாற்றி விரிவுபடுத்த அல்லது புதிய சட்டகத்தை உருவாக்க அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் மிகச் சிலர் வேலை செய்கிறார்கள்.
புதிய சட்டகம் பழைய நிகழ்வுகளுக்கான விளக்கத்தையும் உள்ளடக்கியிருப்பதோடு, பழைய சட்டகத்தை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறது. அந்த மேம்பட்ட சட்டகத்தின் அடிப்படையில் நாம் மேம்பட்ட வாழ்க்கையை நடத்துகிறோம்.
வாழ்க்கை போராட்டங்கள்
1. மனிதர்கள் சந்திக்கும் அடிப்படையான சவால், இயற்கையுடனான போராட்டம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பொருத்தமாக பயன்படுத்துவது, இயற்கை சக்திகளை எதிர் கொள்வது இவற்றுக்கான போராட்டம்தான் அறிவியல்.
2. வேலைப் பிரிவினை செய்து கொண்ட பிறகு அதனால் ஏற்படும் சமூக உறவுகளிடையே ஏற்படும் போராட்டம் இன்னொரு போராட்டம், முழுக்க முழுக்க மனிதரால் உருவாக்கப்பட்டது. மனித சமூகமும் அப்போதைய நடைமுறையைப் பின்பற்றி பல பிரிவுகளான சட்டகமாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதங்கள், மொழிக் குழுக்கள், தேசங்கள், 20ம் நூற்றாண்டின் நாடுகள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சட்டகம் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் செயல்படுகிறோம்.
3. மூன்றாவதாக ஒவ்வொருவரும் சந்திக்கும் போராட்டம் தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியது. 'நாம் எப்படி சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் நமது பாத்திரம் என்ன' இந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். குடும்பம், சாதிக் குழு, இனக்குழு, மொழிக் குழு, தேசம், நாடு என்று ஒவ்வொரு படிநிலையாக நமது இடத்தை பொருத்திக் கொண்டிருக்கிறோம். இந்த படிநிலைகள் மனிதரால் அப்போதைய தேவைக்கு உருவாக்கப்பட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை, புரிந்து கொள்வதுமில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டகத்துக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.
மாறும் வழிமுறை
அறிவியலில் ஏற்படும் மாற்றங்களைப் போல சமூக உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. மனித அறிவு வளர வளர, புதிய புதிய தகவல்கள் தெரிய வர, ஏற்கனவே இருந்த சட்டகத்தை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதற்கான அல்லது உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்குதவற்கான தேவையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும்.
அறிவியலில் பின்பற்றுவது போல, ஒருவர் சொன்னதாலேயே அறிவியல் கோட்பாடு உருவாகி விடாது. அவர் சொல்வதை சக விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். அது வரை தெரிந்த உண்மைகளையும் இனிமேல் பரிசோதனைகளில் செய்யும் அளவீடுகளையும் விளக்க வேண்டும். பரிசோதனையில் என்ன அளவீடு கிடைக்கும் என்று கணிக்க வேண்டும். இப்படி பல ஆண்டுகள் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அறிவியல் சட்டகம் மாறுகிறது அல்லது உடைக்கப்படுகிறது.
அதே போல, இன்றைக்கு இருக்கும் அறிவியல் விதிகள்தான் இறுதியானவை. இனிமேல் புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை. எல்லோரும் அப்படியே சொன்னதை செய்து கொண்டு வாழ்ந்தால் சொர்க்கம்தான் என்று அறிவியல் சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.
சமூக அமைப்புகளிலும் இது பொருந்துகிறது. சமூகத்தின் செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட சட்டகங்கள் அவற்றுக்கான விதிகள், அவற்றைப் பின்பற்றுவது அவசிய தேவை. யாரோ ஒரு சோம்பேறியின் மனதில் உதித்த கற்பனை கனவுகளின் அடிப்படையில் மற்றவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
சட்டகத்துக்குள் பொருந்தாத உண்மையை அதே போல ஒருவர் நடைமுறையில் உணர்ந்து, அதை வெளியிட்டு, பலர் அதை நடைமுறையில் பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்த பிறகு அந்த புதிய தரவு சட்டகத்துக்குள் பொருந்தும் படி சட்டகம் விரிவுபடுத்தப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.
2 கருத்துகள்:
Keep an open mind, I guess is the
essence of what you are saying!
yes, and dont live within your comfort zones. Do what you believe is right!
கருத்துரையிடுக