இணைய இதழ்களும் இளைய தலைமுறையும் என்ற தலைப்பின் நோக்கம் இணைய இதழ்கள் இளைய தலைமுறையினரை எப்படி கவர்ந்திருக்கின்றன என்று பார்ப்பதுதான். அவர்கள்தான் எதிர்கால வாசகர்களாக மாறப் போகிறார்கள். அதனால் அது தொடர்பான போக்குகளை தெரிந்து வைத்திருப்பது ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
தகவல் பரிமாற்றத்துக்கான இந்த தொழில்நுட்ப மாற்றம் அடிப்படையானதா அல்லது கடந்து போகும் மேகமாக கலைந்து போய் விடுமா என்ற கேள்வி. இந்த மாற்றம் இனி வரும் ஆண்டுகளில் நிலை பெற்று உலக மக்களின் படிக்கும், தகவல் பெறும் முறைகளில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் என்பதுதான். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது?
நவீன அச்சு தொழில் நுட்பம் 1436ல் கூட்டன்பெர்கால் கண்டுபிடிக்கப்பட்டு 1456ல் கூட்டன்பெர்க் பைபிள் வெளியிடப்பட்டது. ரோட்டரி பிரின்டிங் பிரஸ் 1843ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடகங்களை குறிப்பிடும் சொல்லான பிரஸ் என்பது பிரின்டிங் பிரஸ் என்ற ஆங்கில சொல்லிலிருந்து வந்தது.
புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 15ம் நூற்றாண்டில் அதை பயன்படுத்துவது எவ்வளவு குழப்பமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதை விளக்க ஒரு காணொளியை பார்க்கலாம்.
அச்சிட்ட புத்தகங்கள், இதழ்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக நமக்கு பயன்பட்டு வருகின்றன. படைப்பாளர், பதிப்பாளர், அச்சு நுட்பத் துறையாளர், வினியோகிப்பு சங்கிலி, வாசகர் என்று நீண்ட காலமாக பழகிப் போன முறை ஒன்று நம்மிடையே இருக்கிறது. அதன் மொழி, அதன் முறைகள் நமக்கு பழகி போயிருக்கின்றன. அந்த பழக்கத்திலிருந்து நாம் சீக்கிரம் மாறி விட முடியுமா? புத்தகங்களும் அச்சு இதழ்களும் முழுக்க முழுக்க இணைய இதழ்களால் இல்லாமல் செய்யப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது?
'என்ன இருந்தாலும் புத்தகம் போல வருமா? கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, தாளின் மணத்தை முகர்ந்து கொண்டு படிப்பது போல வருமா? புத்தகத்தை படித்துக் கொண்டு படிக்கலாம், டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், பூங்காவில் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், படித்த இடத்தைக் குறிக்க விளிம்பை மடக்கிக் கொள்ளலாம், அடிக் கோடிடலாம், குறிப்புகளை எழுதி கொள்ளலாம். இதெல்லாம் கணினியில் அல்லது மின்னணு கருவிகளில் முடியுமா' என்று வாசகர்களாக நமக்குள் கேள்வி எழுகிறது.
முதல் விஷயம் தாளின் வாசனை தரும் கவர்ச்சி. புத்தக வாசனை என்பது புத்தகத்தில் இருக்கும் தகவல், படைப்புடன் இணைத்துதான் நமக்கு கிளர்ச்சியை தருகிறது. அதை ஒதுக்கி விடலாம். மற்ற விஷயங்கள் அனைத்துமே சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட e-book படிப்பான்களில் தீர்வு காணப்பட்டு விட்டது. அவற்றில் e-இங்க் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணை உறுத்தாமல், காகித எழுத்துக்களை படிப்பது போலவே படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் கிண்டில் சாதனத்தின் 2007ம் ஆண்டு பதிப்பு பற்றிய ஒரு காணொளியை பார்க்கலாம்.
நாம் பார்த்தது போல இந்த கருவியில் படிக்கும் போது புத்தகங்களின் வலது பக்க மேல் முனையை மடித்துக் கொள்ளலாம், குறிப்பு எடுத்துக் கொள்ளலாம், தெரியாத விபரங்களை தேடி பார்த்துக் கொள்ளலாம். இதன் எடை சுமார் 170-300 கிராம் மட்டுமே, அதாவது சாதாரண ஒரு பேப்பர் பேக் நாவலின் அளவுதான். அதனால் இதை சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், படுத்துக் கொண்டு ஒற்றை கையால் பிடித்து பயன்படுத்தலாம்.
அமேசான் கிண்டில் அடிப்படை வடிவம்
கூடவே இந்த கையடக்க கருவியில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களுக்கான பேக் அப் இன்னொரு கணினியில், அல்லது பென் டிரைவில் வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களை இணையத்தில் வாங்கி சேமித்துக் கொள்ளலாம். கருவி உடைந்து விட்டால் புதிய கருவி வாங்கி பேக் அப்பிலிருந்து புத்தகங்களை ஏற்றிக் கொள்ளலாம். வீடு மாற்றும் போது பெட்டி பெட்டியாக புத்தகங்களை சுமந்து மாற்ற வேண்டியதில்லை. இதன் அமெரிக்க விலை 79 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4,000 ரூபாய்). யாருக்காவது புத்தகம் இரவல் கொடுக்க வேண்டுமானால் மின்னஞ்சலில் அனுப்பி கொள்ளலாம்.
இவ்வளவு இருந்தும் ஏன் இது இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை?
இதற்கு காரணங்கள்
1. இணைய/மின்னணு கருவி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது.
2. பதிப்பக துறையில் படைப்புக்கான ஊதியம் பெறுவதற்கான மாதிரி இன்னமும் முழுமை பெறாமல் இருப்பது.
முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பெரும்பகுதி மக்கள் இணையத்தில் இணைந்துள்ள மின்னணு கருவிகளை வாங்க முடிந்தாலும், தகவலை படைத்தவர், பொதிபவர், வினியோகிப்பவர் இவர்களுக்கு எந்த வகையில் ஊதியம் அளிப்பது என்ற முக்கியமான கேள்வியில்தான் இணைய வழி வினியோகம் சிக்கி நிற்கிறது. பாடல்களாகட்டும், திரைப்படங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், இணைய இதழ்களாகட்டும் பணம் சம்பாதிக்கும் வழி முறை இன்னமும் தெளிவாகவில்லை.
வாசகர்கள் சந்தா கட்டி படிக்கும் மிகச் சில இணைய பத்திரிகைகளை தவிர மற்ற அனைத்து இணைய இதழ்களும் விளம்பர வருமானத்தையே நம்பி இருக்கின்றன. அல்லது நிறுவனத்தின் மற்ற பகுதிகள் இணைய பிரிவுக்கு ஆதரவு தருகின்றன. இணைய பிரிவின் மூலம் மற்ற பகுதிகளுக்கு விளம்பரமும் விற்பனை அதிகரிப்பும் கிடைக்கிறது.
சந்தா கட்டி படிக்கும் இதழ்களாக தமிழில் ஆனந்த விகடன் முதலான இதழ்கள், ஆங்கிலத்தில் இந்தியா டுடே, பன்னாட்டு அளவில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்றவை இருக்கின்றன.
புதிய கருவிகளான கிண்டில், ஐ-பேட் போன்றவற்றில் பயனாளரிடம் இதழை அல்லது புத்தகத்தை விற்று வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் வினியோகிப்பாளருக்கு என்ன பங்கு, படைப்பாளிக்கு என்ன பங்கு, பதிப்பாளருக்கு என்ன பங்கு என்ற சச்சரவு இன்னும் முழுமையாக தீரவில்லை. பெரிய நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் போன்றவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத பத்திரிகைகள், அறிவியல் வெளியீடுகள் என்று சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இது போன்ற கருவிகளில் வாங்கும் புத்தகங்களை நகல் எடுக்கவோ பிறருக்கு அனுப்பவோ முடியாது. வாங்கிய புத்தகங்கள் விற்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஒரு முறை அமேசான் ஒரு புத்தகத்தை விற்ற பின் ஏதோ காப்புரிமை பிரச்சனை ஏற்பட, அதை வாங்கியவர்களின் கருவிகளிலிருந்து அந்த புத்தகத்தை நீக்கி விட்டது பெரிய பிரச்சனையானது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த வணிக ரீதியான மாதிரிகள் உருவாக்கப்பட்டு விட்ட பிறகு வினியோக வீச்சு பெருமளவு விரிந்து விடும். கார்னிங் கண்ணாடி நிறுவனம் உருவாக்கிய எதிர்கால சாத்தியங்கள் பற்றிய காணொளியை இப்போது பார்க்கலாம்.
கவன சிதறல்கள்
கிண்டில், ஐ-பேட் போன்ற கருவிகள் பல வண்ண திரையுடன் வீடியோ, இணைய இணைப்பு, மியூசிக் பிளேயர் என்று பல்லூடக கருவியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றால் புத்தகம் படிக்கும் கவனம் கலைகிறது என்று பலர் புகார் சொல்கிறார்கள்.
இணையத்தின் மிகப் பெரிய பிரச்சனை கவனச் சிதறல்தான். இந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு இருக்கும் சுட்டி மூலமாக அல்லது இன்னொரு தத்தலில் வீடியோ ஒன்றை பார்க்க தாவி விடுகிறோம். அந்த கவனச் சிதறலை கணக்கில் எடுத்துக் கொண்டு இணைய இதழ்கள் இயங்க வேண்டியிருக்கிறது. கவனச் சிதறலை தம் பக்கம் ஈர்க்கவும், தம் பக்கம் வந்தவர்களை தமது தளத்திலேயே இருக்கும் படி தளத்தை வடிவமைப்பதும் தேவையானதாக இருக்கிறது.
இணைய இதழ்கள் புதிய கட்டுரைகள் அல்லது செய்திகள் வெளியானதும் அவற்றுக்கான சுட்டிகளை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது இப்போது பரவலான வழக்கமாகி விட்டது. ஒரு கட்டுரையின் பக்கவாட்டில் அல்லது இறுதியில் தொடர்புள்ள முந்தைய செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை இணைக்க முடிகிறது.
இன்னொரு முக்கிய கூடுதல் வசதி வாசகர் பின்னூட்டம். தினமலர் இணைய இதழில் ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக்கணக்கான பேர் கருத்து சொல்கிறார்கள். (அவர்கள் அனைவருமே ஒரே ஆளா என்று சில சமயம் சந்தேகம் ஏற்பட்டதுண்டு). பின்னூட்டம் எழுதுவதும், வெளியாவதும் எளிதானதாக இருப்பதால் இணைய இதழ்களுக்கு அவை ஒரு முக்கிய உயிரோட்டமாக இருக்கின்றன.
இணைய இதழ்களுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் இருக்கின்றன. தொழில் முறை ஊடகவியலாளர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் பல மடங்கு திறமையை காட்ட வேண்டியிருக்கும். ஒரு வலைப்பதிவுக்கும், ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுதான் இணைய இதழ்களின் வலிமை.
ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் எப்படி தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும். மடிக்கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இணையத்தில் ஒரு வலைப்பதிவு, டுவிட்டர் கணக்கு, பேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்வது அவசியத் தேவை. வலைப்பதிவுகள் மூலம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு வளர்ந்த பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் சிலரை நாம் அனைவரும் அறிவோம்.
அச்சு பத்திரிகைகள், நாளிதழ்கள் என்ன செய்ய வேண்டும்?
நிச்சயம் இணைய இதழ்களுக்கு போக வேண்டும். அச்சு இதழில் விளம்பர வருமானம் குறைவாக இருக்கும் இதழ்கள் கூட இணையத்தில் வெளியாவதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பிக்கலாம். கூகுள் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட்ஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
4 கருத்துகள்:
உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது. சற்று நீளமாக உள்ளது. இரண்டு பகுதிகளாக பதிவடலாம்
நன்றி முரளிதரன். இனிமேல் நீளமான இடுகைகளை வெளியிடும் போது நீங்கள் சொல்வது போல பகுதிகளாக பிரித்து பதிவிடுகிறேன்.
தங்கள் வலைப்பூ , இந்த வார என் விகடனில் , தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .
இணையத் தமிழன், விஜய் .
http://inaya-tamilan.blogspot.in/
தமிழில் கிண்டிலில் படிக்க வேண்டுமா?
http://kindlevikatan.wordpress.com
கருத்துரையிடுக