செவ்வாய், நவம்பர் 21, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

தூள் படத்தின் ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தொழிற்சாலைக்குள் வெடிமருந்தை வைத்து விட்டு நீண்ட கயிற்றில் தீவைத்து வெடிக்க முயற்சிப்பார்கள். நாயகன் விக்ரம் ஓடிப்போய் அந்தத் தீ வெடிமருந்தை அடைந்து விடாமல் நாசத்தைத் தவிர்த்து விடுவார். தமிழர் நான்கு பேர், அதுவும் படித்த அறிவுஜீவிகள் சிலர் கூடும் இடத்தில் இயல்பாகவே இருக்கும் வெடிக்கும் பொருளுக்கு முன்னால் தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டார், "வலைப்பூக்களில் சாதியைக் குறித்த விவாதங்கள் தேவையா?" என்ற விவாதத்தைத் துவங்கி வைத்த பாலபாரதி.

டி பி ஆர் ஜோசப், முதலில் எழுந்து இந்த விவாதமே இங்கு தேவையா? என்று கொஞ்சம் சூட்டைத் தணித்தார். 'மும்பையில் வலைப்பதிவர்கள் செய்தது போல ஒரு சங்கமாகப் பதிவு செய்து நிருபர்களுக்கான உரிமைகளைப் பெற முயற்சிக்கலாம், அது போன்ற நடைமுறை செயல்களைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை செலவிடலாம்' என்பது அவர் கருத்து.

சென்னைப் பட்டிணம் கூட்டு வலைப்பதிவு ஆரம்பித்து ஆரம்ப கால சந்திப்புகளிலேயே இத்தகைய வளர்ச்சியை வலியுறுத்தியிருந்தார் பாலபாரதி. சாந்தி அக்கா என்ற பதிவைப் போட்ட அதே பாலபாரதிதான் அனானி ஆட்டம் என்று வரவேற்கும் பதிவுகளையும் போடுகிறார். தனி ஒருவராக வெற்றிகரமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய இவர் செய்யக் கூடியது நிறைய இருக்கிறது.

சிமுலேஷன் "வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை. அதற்கு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.

முன்பு மிக மோசமாக இருந்த வலைப் பதிவுச் சூழல் இப்போது மோசம் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளதாக ரோஸா வசந்த் கூறினார். 'முன்பெல்லாம் குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசுவதே பாவம் என்று இருந்த நிலை போய் இப்போது சுதந்திரமாக அடித்துக் கொள்ளும் நிலை இருப்பது மேல்தான். இது இன்னும் முன்னேறி ஆரோக்கியமான சூழல் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.

"அலுவலகத்தில் வேலை பற்றி விவாதிக்கும் போது நாம் சாதி பற்றி பேசுகிறோமா? உருப்படியாக வேலை நடக்கும் இடங்களில் சாதிப் பேச்சை எடுப்பது எதிர்மறையாகத்தான் முடியும்" இது நான்.

"சாதி என்பது ஒரு நடைமுறை உண்மை. அதை விவாதிக்க மாட்டோம் என்று கண்ணை மூடிக் கொண்டால் பிரச்சனை மறைந்து விடுமா என்ன? ஒடுக்கப்பட்ட குழுவினர் ஒன்று சேர்ந்து செயல்பட இந்தத் தளமும் உதவட்டுமே" என்று அருள்குமார் சாதி பற்றிய விவாதங்கள் தவிர்க்க வேண்டியவை அல்ல என்று கருத்து சொன்னார்.

"அடிப்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு மனக்கஷ்டங்களும் நேர விரயமும் ஆகலாம். ஆனால் வெறும் பார்வையாளராக படித்து விட்டுப் போகும் தம்மைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களை அத்தகைய விவாதங்கள் காட்டுகின்றன" என்று பூபாளன் என்ற வாசகர் கூறினார்.

"பாலபாரதி குறிப்பாகச் சொன்ன ஒரு விவாதம் அறிவுபூர்வமாகத்தான் நடைபெற்றது என்பது தன் கருத்து" என்று ஓகை சொன்னார்.

கூட்டம் முடிந்து வளசரவாக்கம் நோக்கிப் போகும் போது கூட வந்த கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த நண்பர், அவர்கள் ஊரிலும் "இது போல கூட்டங்களில் காரமான விவாதங்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரக் கூட்டம் ஐந்து ஆறு மணி நேரத்துக்கு நீடித்து விடும். இங்கும் அது மாதிரி நடக்கப் போகிறதோ என்று பயந்தேன், ஆனால் சுருக்கமாக முடிந்து விட்டது" என்றார். அவர்கள் அடித்துக் கொள்வது இலக்கிய வாதங்களில்தானாம்.
அவரது பார்வையில் சென்னையில் மூன்று வேறுபாடுகள், "பலப் பல நிறங்களில் சுவர் வண்ணங்கள், சுவரொட்டிகள், பல வகையான உணவுகள், அதிக மக்கள் கூட்டத்தினாலோ வேறு எதனாலோ விளையும் குப்பைக் குவியல்கள்,"

இடைவேளையில் கிளிநொச்சியின் அகிலன், சாவின் நிழலில், குண்டு வீச்சின் பயத்தில் வாழும் வாழ்க்கையை விவரித்தார். குண்டு வீச்சினால் மரணம் அடைந்த குழந்தைகளைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்கு முன் அவரை மாமா என்று அழைத்து விளையாடிய, தாயும் தந்தையும் இல்லாத குழந்தைகளை அடிபட்டு பிணமாகப் பார்த்த துயரத்தை விவரித்தார். எவ்வளவுதான் குறை இருந்தாலும் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத பகுதி ஈழம் என்று தமிழ்நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த கட்டம் என்று நான் கட்டுரை வாசிக்க இருந்தேன். பல நாட்கள் முன்னர் பாலா சொன்ன அன்றே ஒரு பக்கம் எழுதி வைத்து விட்டாலும் அதை விரிவுபடுத்தி எழுதுவதை கடைசிவரை தள்ளிப் போட்டு ஞாயிறு மதியம்தான் அச்செடுத்து முடித்தேன். அந்தக் கட்டுரையைத் தனி பதிவாக வெளியிடுகிறேன்.

"எல்லோரும் சுஜாதா ஆக முடியாது. ஆயிரம் பேர் எழுதும் வலைப்பதிவு உலகில் பத்து பேர் பெரிய எழுத்தாளராக உருவாகலாம். ஆனால், ஒவ்வொருவரும் தமது துறை அறிவைத் தமிழில் தர முயற்சிக்கலாம், முயற்சிக்க வேண்டும்" என்று ராமகி ஐயா கேட்டுக் கொண்டார். "அரசியல் பற்றிய விவாதங்கள், திரைப்பட விவாதங்கள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றையே முழு நேரமும் செய்யாமல் பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சமூகத்துக்குப் பலன் அளிக்கும்படியான ஆக்கங்களை உருவாக்குங்கள் என்று அவரது வேண்டுகோள்".

"வலைப்பதிவு பற்றிய தொழில் நுட்ப நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது. மென்பொருள் துறையில் பணி புரியும் மற்றும் வலைப்பதிவு நுணுக்கங்களைக் கற்று உணர்ந்தவர்கள் கூட்டாக பிறருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். மீள்பதிவு எப்படி போடுவது என்று தெரியாமல் இருந்த தான் பொன்ஸ் விளக்கிய பிறகு அதைக் கற்றுக் கொள்ள முடிந்தது" என்று பாலா ஆரம்பித்து வைத்தார்.

"பின்னூட்டத்தில் சுட்டி கொடுப்பது எப்படி என்று கூடத் தெரியாமல் இருக்கலாம். ஒருவர் கொடுத்த பின்னூட்டத்தை சிறிது மாற்றி வெளியிட என்ன வழி என்று தெரியாது. இதற்கெல்லாம் தெரிந்தவர்கள் தமது அறிவைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்" இது லக்கிலுக்.

"சென்னையில் நடைபெற்ற பிளாக்கேம்பில் பங்கேற்ற விக்கி என்ற விக்னேஷ், தமிழ்பதிவர்களுக்காக இது போன்ற தொழில் நுட்ப சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம்" என்று முன் வைத்தார். என்னென்ன முக்கியமான கேள்விகள் என்று திரட்டி அவற்றில் பத்துப் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து செயல்முறை விளக்கம் கூட அளிக்கலாம். அவருடைய வழிகாட்டலில் ஒரு கூட்டு வலைப்பதிவும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

பிளாக்கர் பீட்டாவிற்கு மாறி தான்படும் அவதிகளை விவரித்த மரபூர் சந்திரசேகரன், பொருள்வாரியாக பதிவர்களை, பதிவுகளை தேடுவதற்கு வசதிகள் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிறைய பேசுவார்கள் என்று நான் எதிர் பார்த்திருந்த வரவனையான், எஸ்கே ஐயா, முத்து தமிழினி இவர்களெல்லாம் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 'இது போன்ற சந்திப்புகளில் பொதுவாக சில தலைப்புகளைத் திரட்டி வரும் நாட்களில் எல்லோரையும் எழுத வரவேற்கலாம்' என்று எஸ்கே சொன்னார்.

இட்லிவடையின் புகைப்படப் பிரதிநிதி வந்து படங்கள் எடுத்துச் சென்றார். அவர்தான் இட்லிவடை என்று அவர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சிலர் சொன்னார்கள். இட்லி வடை என்பவர் உயரமாக, ஒல்லியாக, வெள்ளையாக, பல ஆண்டுகள் எழுத்து அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம். இது போன்ற ஊகிப்புகளைக் குழப்ப இரண்டு மூன்று பேராக ஒரே முகமூடி பேரைப் பயன்படுத்துவதும் வாடிக்கை.

முகமறிய விரும்பிய பல பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதாரப் பேராசிரியர் சிவஞானம்ஜி ஐயா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடற்குழுக்கள் மூலம் தெரிந்திருந்த ராமகி ஐயா இவர்களை ஒருவழியாக பார்த்து பேச முடிந்தது.

7 கருத்துகள்:

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

பதிவுக்கு நன்றி!

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.//

சரியாகச் சொன்னீர்கள்.

நமக்கெல்லாருக்குமே ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். அதுபோன்றதொரு கண்ணோட்டம்தான் வலைப்பூ என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்ற கண்ணோட்டமும். அதில் தவறொன்றும் இல்லை.

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.

பொழுதுபோக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஹாம் (Ham) என்ற தொலைத்தொடர்பு பொறியாளர்களின் சங்கமும். அது உலகெங்கும் நடைபெற்ற விபத்துககளை, , இயற்கை பேரழிவுகளப் பற்றிய விவரங்களைநொடிப்பொழுதில் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டுச் செல்லக் கூடிய வல்லமையுள்ளதென கண்டெறிந்தபோதுதான் அதனுடைய முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் புரிந்தது.

ஏன்.. சுநாமியின் பேரழிவு ஆசியக் கண்டத்தைத் தாக்கியபோது அதனுடைய நிவாரண அலுவல்கள் முடுக்கிவிட்டது இரு நபர்களின் வலைப்பூக்கள்தான் என்பதை நாம் மறந்துவிட முடியுமா?

வலைப்பூக்களை எழுதுபவர்கள் அமெச்சூச் எழுத்தாளர்களாக இருக்கலாம்.. ஆனால் அதிலும் திறமையுள்ள உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்படாத எத்தனையோ எழுத்தாளர்களூம் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வலைஞர்களால் ஆக்கபூர்வமாகவும், அதிகார மற்றும் பதவி மோகம் இல்லாமல் செயல்பட முடியும் என்பதை நமக்கு நாமே நிரூபித்துக்கொள்ளத்தான் நமக்கு ஒரு அமைப்பு வேண்டும் என்று நினைக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

பதிவுக்கு நன்றி.

டிபிஆர்ஜோ சொன்னதை வழி மொழிகின்றேன்.

துளசி கோபால் சொன்னது…

சொல்ல விட்டுப்போனது:

எனக்குப் பதவி மோகம் இல்லை:-))))

மா சிவகுமார் சொன்னது…

வாய்ப்புகளைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தும் சமூகங்கள்தாம் முன்னேற முடியும்.

நன்றி பால, ஜோசப் சார், துளசி அக்கா.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

மா. சிவகுமார், நன்கு தொகுத்தெழுதியுள்ளீர்கள். அந்த சந்திப்பில் பேசப்பட்ட மற்றொரு கருத்து - அதிக பின்னூட்டங்கள் வரவேண்டுமென்றே அரசியல், சினிமா அல்லது ஜாதீ(?) யைத் தொடாமல், விஞ்ஞானம், மருத்துவம், வரலாறு போன்றவற்றை எழுதுபவர்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் திரு ராம.கி ஐயா சொன்னார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சந்திரசேகரன்,

'ஒரு இடுகையின் வெற்றி/தோல்வி என்பது வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மட்டும் பொறுத்து இல்லாமல், அவற்றின் தரத்தையும் பொறுத்துதான் இருக்கிறது' என்பதை மனதில் கொண்டால் பல குழப்பங்கள் தீர்ந்து விடும் :-)


அன்புடன்,

மா சிவகுமார்