செவ்வாய், ஜூலை 20, 2021

தீண்டாத வசந்தம்

க்களின் வாழ்க்கை எப்படி சொல்லப்பட வேண்டும், வாழ்வையும், மகிழ்ச்சியையும், திறமைகளையும், அதன் ஊடான கொண்டாட்டத்தையும், அந்த வாழ்வானது தொடர்ந்த வன்முறைக்குக் கீழ் நிகழ்வதையும் சித்தரிப்பது என்பது தீண்டாத வசந்தத்தில் நடக்கிறது. சொல்லப் போனால், ஏழு தலைமுறைகள் (Roots) நாவலை விட "தீண்டாத வசந்தம்" ஒரு படி உயர்ந்தது. அந்த நாவலின் வடிவத்தின் சுவடுகள் இங்கு நிறையவே காணப்படுகின்றன. ஆனால், அதை விட ஆழமாக, உழைப்பின் மேன்மையையும், அதை சுரண்டும் அற்பத்தனத்தையும், அதோட இணைந்த அரசியலையும் அற்புதமாகக் காட்டுகிறது, தீண்டாத வசந்தம்.

எல்லண்ணாவும் சுபத்ராவும், ரூத்தும், ரூபேனும், எல்லண்ணாவின் அத்தை பூதேவியும் அவரது அம்மா அப்பா பிச்சையும், அம்மா லிங்காலுவும், பிச்சையின் மச்சான் எங்கட நரசுவும் என மறக்க முடியாத நபர்கள். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான கோர்வையான கதையோட்டம், பாத்திரப் படைப்பு.

நாகண்ணா, உறுமி சந்திரப்பா, நாகண்ணாவின் அப்பா நாரிகானும், நாரிகானும் மாத்தையாவும் நடத்தும் வீரப் போரும், சுபத்திராவின் ஆவேசப் போரும், எல்லண்ணாவின் பயணங்களும், அவரது பையன் சிவண்ணாவும் சசிரேகாவும், தாது வருஷப் பஞ்சம், கலைகளிலும் இலக்கியத்திலும் நிலவும் ஆளும் சாதியினரின் ஆதிக்கம், வெள்ளைக்கார ஆட்சியிலும் கிருத்துவ மதத்திலும் கூட இடம் பிடிக்கும் சாதி ஆதிக்கம், பஞ்ச நிவாரண பணியிலும் தீண்டாமை, சிவய்யா சிமோன் ஆவது, அதிலிருந்து ரூபன், ரூத், இம்மானுவேல், மேரி, ஜெசி, ரூபி என போராட்ட பாரம்பரியத்தை 300 பக்கங்களில் சொல்லி விடுகிறார், கல்யாண் ராவ்.

சின்னச் சின்ன வாக்கியங்களாக இருப்பதைப் பற்றி கல்யாண் ராவிடம் பத்திரிகை பேட்டியில் கேள்வி கேட்கிறார்கள். ஆமாம், அப்படித்தான் மக்களின் இலக்கியம் உள்ளது என்கிறார். மக்களின் வாழ்வும், போராட்டமும் கதைகளாக பாடல்களாக கட்டப்பட்டு ஊரெங்கும் பரவுகிறது. தாய் நாவலில் பாவெல் கற்றுக் கொண்டு பேசும் உழைப்பின் பெருமையை, இரத்தத்தோடும் வாழ்வோடும் உணர்ந்த சமூக மக்கள் உள்ளுணர்வாக கொண்டாடுகிறார்கள்.

ஆளும் வர்க்க அரசியல், கணக்குப் பிள்ளை, ரெட்டி, பறையர், சக்கிலியர், வண்ணார் என்று சாதிகளின் பெயர்களையும் பொருத்தமாக மொழி பெயர்த்து ஆந்திராவில் நடக்கும் தமிழ்க் கதையாகவே ஆக்கி விட்டார் மொழிபெயர்ப்பாளர். இதே கதை தமிழகத்தின் ஆயிரம் கிராமங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் நடந்திருக்க வேண்டும்.

கர்ணன் படத்தில் தீண்டாத வசந்தத்தின் வரிகளைப் பார்க்க முடிந்தது. தீண்டாத வசந்தத்தில் வரலாற்றின் வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களின் இலக்கியத்தில் இருக்கும் தொடர்ச்சி இந்தப் படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

1980-களில் லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சுஜாதா, ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வாசித்து ஒரு கட்டத்தில் பாலகுமாரன் மிகப்பெரிய படைப்பாளியாகத் தெரிந்தார். சென்னைக்கு வந்த பிறகு தமிழ் இலக்கிய உலகின் விளிம்பை எட்டிப் பார்த்த போது, 'இவர்கள் எல்லாம் வணிக எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்தான் உலகத் தரத்திலான சிறுகதை எழுத்தாளர்' என்றார்கள். அவரிடம் செல்லம்மாவுக்கு வைத்தியம் பார்க்கும் துணிக்கடையில் வேலை பார்க்கும் பிள்ளையின் மேல்சாதி வறுமைக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. 'உலகத்தின் 20 படைப்பாளிகளில் தானும் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் ஜெயமோகனின் கதைகளில் உழைக்கும் மக்களின் வாழ்வு டிராமாத்தனமாக காட்டப்படுவதாகத்தான் இருந்தது.

இவ்வளவு வாசிக்கக் கூடிய பழக்கம் இருந்தும், 2004-ல் வெளியான தீண்டாத வசந்தம் நூலை 18 ஆண்டுகளாக வாசிக்காமல் இருந்தது, வெட்கமாக இருந்தது. பலமுறை நூலின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ் புனைவு வாசிப்பதில் சலிப்பும் விலகலும் ஏற்பட்டிருந்தது. வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்று வாழ்க்கை நகர்ந்து விட்டிருந்தது. இலக்கிய வாசிப்பு என்றால் ஆங்கிலத்தில் டால்ஸ்டாய் எழுத்தையும், அமெரிக்க எழுத்துக்களையும், பிரிட்டிஷ் எழுத்துக்களையும் வாசிப்பது என்றாகி விட்டது.

Roots நாவலை கல்லூரியில் படிக்கும் போது, அமெரிக்கன் நூலகத்தில் எடுத்து வாசித்து விட்டேன். War and Peace நாவலை டாடாவில் வேலை செய்யும் போது வாசித்து விட்டேன். அவற்றின் பிரம்மாண்டமும் ஆழமும் பார்த்த பிறகு குட்டையில் மீன் பிடிப்பதாக அமையும் தமிழ் படைப்புகளை (எனக்கு அறிமுகமானவற்றை) படிப்பதில் சலிப்பு ஏற்பட்டது, அதன் மீது ஒரு இகழ்வும் இருந்தது.

எரியும் பனிக்காடு என்ற நாவல் பிடித்தமானது. ஆனால், “தீண்டாத வசந்தம்"தான் தமிழின் நாவல். எப்படி பா. ரஞ்சித்தின் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்க்கையை கொண்டு வந்ததோ, அதில் நிரம்பியிருக்கும் கொண்டாட்டங்களையும், திறமைகளையும், உழைப்பையும், போராட்டங்களையும் சேர்த்து கொண்டு வந்ததோ, மாரி செல்வராஜின் படைப்புகள் எப்படி திரையுலகை புரட்டிப் போட்டனவோ, அது போல புரட்டிப் போட்டிருக்கும் படைப்பு தீண்டாத வசந்தம்.

எஸ் ராமகிருஷ்ணன் 100 தமிழ் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார். அதில் எதுவும் இது போன்ற வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கவில்லை.

கல்யாண் ராவின் எழுத்தில் வாழ்வும் உண்டு, வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அரசியலும் உண்டு. காங்கிரஸ் அரிசன சேவா சங்கம் வருகிறது, அதிலும் ரெட்டிகள் இருக்கிறார்கள், அம்பேத்கரின் விமர்சனம் வருகிறது, கிருத்துவ மதப் பிரச்சாரம் வருகிறது, அதையும் ஆளும் சக்திகள் தமதாக்கிக் கொள்கிறார்கள், யாராலும் கைப்பற்ற முடியாத சக்தியாக கம்யூனிசம் வருகிறது. அதை ஒடுக்குகிறார்கள். ராமானுசத்தையும் போராடும் தோழர்களையும் அடித்து கொன்று விடுகிறார்கள். இம்மானுவேல் நூற்றுக் கணக்க்கான, ஆயிரக்கணக்கான மக்களின் தோழனாக மரிக்கிறான். ரூத்-ஆல் எழுத முடியாத இமானுவேலின் வாழ்க்கையை அடுத்த நாவலாக எழுத வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர். இமானுவேல், ஜெசி, மேரி, ரூபி இந்தத் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு காவியமாக இருக்கும்.

சாதியை அழித்தொழிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தோழர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அதில், சாதி ரீதியான வேலைப் பிரிவினை எப்படி தனிநபரை ஒடுக்குகிறது என்று அம்பேத்கர் விளக்குவதைச் சொல்லியிருந்தார்கள். அருந்ததி ராய் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் அவரால் வாழ்வைச் சொல்ல முடியவில்லை. வாழ்க்கையில் இருந்து விலகிய பாத்திரங்களின் பார்வையிலிருந்துதான் வாழ்வை பார்க்க முடிகிறது, அவரால். அது அவரது தவறில்லை, அவர் பிறந்த இந்திய சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் பிரச்சினை.

சங்கிகள் நடத்திய கிளப் ஹவுஸ் விவாதத்தில், ‘பிராமணனான என்னை பூசை செய்ய விடவில்லை' என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்லி, கோயில்களில் பிற சாதியினர் அர்ச்சகர் ஆக முடியாது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். “என்னை ஏன் பூசை செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்" என்று கொதிக்க முடியவில்லை அவருக்கு. இது ஒரு மனித விரோத, முன்னேற்றத்துக்கு விரோதமான கட்டமைப்பு

அதை மிகப் பிரமாதமாக, வரலாற்றோடு அதன் அநீதிகளோடு, அதன் ஓட்டங்களோடு கொண்டு வந்திருக்கிறது, தீண்டாத வசந்தம். அதை இன்னொரு முறை படித்தால்தான் முழுமையாகப் புரியும். பரியேறும் பெருமாள் படத்தை 2 முறையோ 3 முறையோ பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போது அது ஒரு புதிய வாழ்வைக் காட்டியது.

பா ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜூக்கும் கல்யாண் ராவுக்கும் வணக்கங்கள். வாழ்வின் திரையை விலக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

தாய் நாவலையும் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பாவெலும் அவனது அம்மாவும் தொழிலாளர்களும் தொழிற்சாலையும், தோழர்களும் அம்மாவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அது சோசலிச யதார்த்தவாத படைப்பாம். அப்படி என்றால் கல்யாண் ராவின் படைப்பை என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழருக்கும் "சாதியை அழித்தொழிப்பது" மட்டுமின்றி "தீண்டாத வசந்தமும்" கட்டாய பாடமாக இருக்க வேண்டும். அரசியலையும் வாழ்வையும் அவை கற்றுக் கொடுக்கின்றன.


கருத்துகள் இல்லை: