ஒரு சின்ன வேண்டுகோள்:
நாம் வலைப்பதிவுகளில் விவாதிப்பதால் நரேந்திர மோடியின் வெற்றி தோல்வியோ, அப்சல் குரு வழக்கின் முடிவோ தீர்மானிக்கப்பட்டு விடப் போவதில்லை. எனக்கு சரி எனப்படுவதை நான் எழுதுகிறேன். அதில் என்ன தவறு என்று உங்களுக்குப் படுகிறதோ அதை விளக்குங்கள். தேவையில்லாமல் என்னையோ, மற்றவர்களையோ திட்டுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. அப்படித் திட்டுவதால் எனக்குப் பெரிய வருத்தமும் இல்லை.
என்னுடைய பார்வையில் ஏன் அத்வானியும், நரேந்திர மோடியும் குற்றவாளிகள், தேசத் துரோகிகள்?
- வல்லவன் வகுத்ததே நீதி என்று இருப்பது ஒரு முறை - பழைய மன்னராட்சி
- கூட்டத்தில் அதிகமான பேர் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நீதி என்று இருப்பது இன்னொரு முறை - கும்பல் சார்ந்த அமைப்புகள் (தோல்வியடைந்த சீன, சோவியத் பரிசோதனைகள்)
அவற்றுக்கு மாற்றுதான் அரசியலமைப்பு ஒன்றை வகுத்து, ஒரு பகுதியின் எல்லா மக்களும் அதை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவது. அரசியல் சட்டப்படி ஒவ்வொரு பணியையும் செய்ய தெளிவாக வரையறுக்கப்பட்ட முறைப்படி வெவ்வேறு பதவிகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- சட்டம் இயற்ற சட்டசபை/நாடாளுமன்றம்,
- நிர்வாகத்தை நடத்த அரசு அதிகாரிகள்,
- வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம்,
- இவை எல்லாவற்றையும் கண்காணிக்க ஊடகத் துறை,
- நாட்டுக்கு பாதுகாப்புக்கு படைகள்
என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
பக்கத்து வீட்டுக்காரருடனோ, மாற்று குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்தால், 'அவர் ஆள் திரட்டி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்' என்ற அச்சமில்லாமல், இரண்டு பேரும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதித் துறையை அணுகி பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
- 'நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது. ஆளைத் திரட்டி நாங்கள் அவமானம் என்று கருதும் ஒரு கட்டிடத்தை இடித்துப் போடுவோம். எங்கள் கருத்தை ஏற்காத மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை' என்று செயல்பட்டவர்கள் (அத்வானி தலைமையிலான கூட்டம்) அரசியலமைப்பை அசைத்துப் பார்த்தார்கள்.
அவர்கள் செய்ததை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
என் முடி அலங்காரம் பிடிக்கவில்லை என்று நான்கு தெருவில் இருக்கும் மக்கள் கூட்டமாக வந்து எனக்கு மொட்டை அடித்து விட்டால் அதுவும் நியாயமாகி விடும். - 'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.
- 'குறிப்பிட்ட நிகழ்ச்சி, குறிப்பிட்ட குழுவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைத்தேன், அதனால் அந்தக் குழுவினரைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்க கூட்டம் வெறி கொண்டு திரிந்த போது, அதிகாரத்தில் இருந்த நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கொஞ்சம் ஆதரவும் கொடுத்தேன். அப்படி இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்' என்று சொல்லும் முதலமைச்சர் (நரேந்திர மோடி) இந்திய இறையாண்மையை உடைத்துப் போட்ட பெருங்குற்றவாளி.
தொடர்புடைய முந்தைய இடுகைகள்