விபரங்கள் வினையூக்கியின் இந்தப் பதிவில்
செல்லாவின் நச் கவரேஜ்
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு
புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்!
நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து
புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!
அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தாவும், வினையூக்கியும் நானும் ஒன்பது மணி வாக்கில் (வாடகை) காரில் பாண்டிச்சேரி சற்குரு உணவகத்தை அடைந்தோம். சாப்பிடப் போகும் இடத்தில் முகுந்த், ஓசை செல்லா உட்கார்ந்திருந்த மேசையில் சேர்ந்து கொண்டோம்.
நல்ல திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமான பங்கேற்பாளர்கள்.
இரா சுகுமாரன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து உரை ஆற்ற, முகுந்த் தமிழ் எழுத்துருக்கள், e-கலப்பை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகுமாரன் குறள் மென்பொருளைக் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து தமிழ்99 முறையில் தட்டச்சிடுவது குறித்துப் பேச முனைவர் இளங்கோவன் வந்தார். அதில் என்னையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஆற்றொழுக்காகப் போயிருக்க வேண்டிய அந்த அறிமுகத்தில் என்னுடைய குறுக்கீடுகளும் சேர்ந்தன. வகுப்பறை போன்ற சூழல் உருவாகி விடக் கூடாது என்று முனைந்து கொஞ்சம் un-conference பாணியைக் கொண்டு வர முயன்றோம்.
இயங்கு தளங்களைக் குறித்த அமர்வின் முன்னுரையில் சூடான விவாதத்துக்கு ஒரு அடித்தளம் அமைந்து விட்டது. ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் கலகலப்பாக பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார். உபுண்டு லினக்சு பற்றிய அவரது 10 நிமிட ஆரம்பத்திற்கு அப்புறம் சூழல் பரபரப்பாக மாறி விட்டது. முகுந்த் 'மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று ஓரிரு நிமிடங்கள் மைக்ரோசாப்டு நிறுவனத்தின் பங்களிப்பையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு மேலும் அந்த அரசியல் தத்துவ விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று உபுண்டுவில் தமிழ் இடைமுகம், பயன்பாடுகள் என்று ராமதாஸ் இறங்கினார்.
அந்த அரை மணி நேர அமர்வின் இறுதியில் 'உபுண்டு குறுவட்டு, நிறுவும் விளக்கக் கையேடு அடங்கிய பொதியை விருப்பமிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு காணிக்கை போடலாம்' என்று அறிவித்தார் ராமதாஸ். அடுத்த சில நிமிடங்களிலேயே 50 பொதிகளும் ஆர்வலர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன.
இணையத்தில் தமிழ் இதழ்கள், இணையத் தமிழ் இதழ்கள், தமிழ் வலைத்தளங்கள் என்று ஒரு தொகுப்பை முனைவர் இளங்கோவன் வழங்க அத்துடன் உணவு இடைவேளை வந்தது. இலை போட்டு வடை பாயாசம், இனிப்புடன் சாப்பிட்டு விட்டு மதிய அமர்வுகள்.
பேராசிரியர் இளங்கோ வலைப்பதிவு என்றால் என்ன, எப்படி பிளாக்கர் மூலம் ஒரு கணக்கு ஆரம்பித்து பதிய ஆரம்பிக்கலாம் என்று கச்சிதமாக விளக்கினார். அவரது அமர்வின் ஆரம்பத்தில் 'கூடவே கணினியில் செய்முறை பயிற்சியும் ஆரம்பித்து விடலாமா' என்று நாங்கள் கேட்டது கொஞ்சம் அதிகப்படியாகப் போய் அவர் சூடாக பதிலளித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மக்கள் கணினிகளைச் சூழ்ந்து கொண்டு ஜிமெயில், பிளாக்கர், பதிவுகள் என்று அலையில் கால் நனைத்தார்கள்.
தொழில் நுட்ப அமர்வுகளாக, திரட்டிகளில் இணைத்தல், ஒலி ஒளி இடுகைகள், செய்தியோடைகள், வோர்ட்பிரஸ் பயன்பாடு என்று பலனுள்ள அமர்வுகள் தொடர்ந்தன.
மொத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பட்டறை. கல்லூரி தமிழ்த் துறை மாணவிகள், பேராசிரியை, தமிழ் ஆர்வலர்கள் என்று பல பெண்கள் மிக ஆர்வத்துடன் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் உருவாக்கி இணைய உலகிற்குள் அடி எடுத்து வைக்க வழி செய்து கொடுத்த நிகழ்ச்சி.
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுவை நண்பர்கள், அருமையான அமர்வுகளை வழங்கிய இளங்கோவன், இளங்கோ, செறிவூட்டிய ஓசை செல்லா, முகுந்த், வினையூக்கி, நந்தகுமார், உபுண்டு ஆமாச்சு, நான் என்று நிறைவான ஒரு நாள்.
பின்குறிப்பு
கோவை, சென்னை, புதுவை - மூன்று பட்டறை கண்டவர்கள் என்ற சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மா சிவகுமார், வினையூக்கி மற்றும் முகுந்த். கழகங்களின் மேடைப் பேச்சாளர், இலக்கிய உலகின் பட்டிமன்ற பேச்சாளர் என்று வரிசையில் 'பட்டறை பேச்சாளர்' என்று ஒன்றை உருவாக்கும் காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.
7 கருத்துகள்:
வணக்கம் சிவா...
நீங்கள் நண்பர்களுடன் வந்தது மகிழ்ச்சி.
எங்கள் மாணவிகள்,என்னுடன் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு
அக்கறையோடு மின்னஞ்சல் முகவரி,
வலைப்பதிவு செய்துகாட்டி அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றுவிட்டீர்கள்.
நண்பர்கள் அனைவரும் சொன்னதுபோல்
என் கட்டுரையை என் வலைப்பதிவில்
இட்டுள்ளேன்.படிக்க முடியவில்லை
என்றாலும்
நேரம் கிடைக்கும்பொழுது
பாருங்களேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க.
வாழ்த்து(க்)கள் சிவா & கோ.
இன்னும் பல முக்கிய நகரங்களில் பட்டறைகள் நடத்துங்க.
தமிழால் ஒன்று படுவோம்.
ஹாட் ட்ரிக் அடித்த உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவிற்கு நன்றி
நிகழ்ச்சி நடத்தியதில் உங்களுக்கு உள்ள பங்கும் பெரிது.
ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றி
சுகுமாரன்
மா.சி,
புதுவையில் மட்டும் அல்ல எங்கு நடந்தாலும் உங்கள் பங்களிப்பு இல்லாமல் நடந்தால் அது பட்டறையாகவே இருக்காது :-))
வினையூக்கி பதிவில் சொன்னதை மீண்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்,
பெரு நகரங்களில் மட்டும் ஏற்படும் கணினி விழிப்புணர்வு மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக புதுவையில் பட்டறை நடத்தியவர்களுக்கும் உங்களைப்போன்ற பங்களிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்! இது அப்படியே தொடர்ந்து கிராமங்களிலும் பட்டறை நடக்கும் காலம் வர வேண்டும்(ரொம்ப பேராசை தான் )
சிவா, உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைக்கின்றன. பாராட்டுக்கள்.:-)
வாங்க முனைவர் இளங்கோவன்,
//எங்கள் மாணவிகள்,என்னுடன் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அக்கறையோடு மின்னஞ்சல் முகவரி, வலைப்பதிவு செய்துகாட்டி //
ஒரு புதிய உதயமாக இருந்தது அந்த அனுபவம். பேராசிரியை ஒருவர் காட்டிய ஆர்வம் மறக்க முடியாதது.
//நேரம் கிடைக்கும்பொழுது பாருங்களேன்.//
நேரம்தான் குதிரைக் கொம்பாகப் போய் விட்டது :-) ஜனவரி முதல் கொஞ்சம் பரபரப்பு குறையும் என்று நினைக்கிறேன்.
நல்ல அனுபவங்களுக்கு உங்களுக்கும் மற்ற புதுவை நண்பர்களுக்கும் நன்றி.
துளசி அக்கா,
//இன்னும் பல முக்கிய நகரங்களில் பட்டறைகள் நடத்துங்க.//
ஆஸி, நியூசியிலும் ஒரு பட்டறை நடத்துங்களேன். இது போன்று நூறு நூறு பட்டறைகள் நடக்க வேண்டும். நாம் பெறும் பலன்கள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும்.
வணக்கம் செல்லா,
//ஹாட் ட்ரிக் அடித்த உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்!//
நீங்க முதல் பட்டறையில் விளையாடாத கேப்டனாக இருந்து விட்டீர்கள், இல்லை என்றால் இந்தப் பட்டியலில் நீங்களும் உண்டு :-)
சுகுமாரன்,
பல வாரங்களாக உழைத்து வெற்றிகரமாக நடத்திக் காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
வவ்வால்!
//இது அப்படியே தொடர்ந்து கிராமங்களிலும் பட்டறை நடக்கும் காலம் வர வேண்டும//
இது பேராசை இல்லை. குறைந்தபட்ச தேவை. கல்வி என்பது விளக்கு என்றால், இணைய அறிவு என்பது நமது மக்களின் வாழ்க்கைக்கு இன்னொரு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
காசி,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக