ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் பயணம் (மே 11, 2008). காலையில் ஐந்தரை மணிக்கு கார் வருமாறு சொல்லியிருந்தோம். அலுவலகத்தில் வண்டியில் ஏறி விட்டு வினையூக்கி வீட்டில் அவரையும் அழைத்துக் கொண்டு கத்திப்பாராவுக்கு பேருந்தில் வந்து காத்திருப்பதாகச் சொன்ன பாலபாரதியும் சேர்ந்து கொள்ள ஆறு மணிக்குள் நெடுஞ்சாலையைப் பிடித்து விடுவதாகத் திட்டம். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.
5 மணிக்கு வினையூக்கியின் தொலைபேசி அழைப்பு. தயாராகி காத்திருப்பதாக தகவல். பாலபாரதியிடமிருந்து குறுஞ்செய்தி, பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டார். அலுவலகத்துக்கு சரியாக ஐந்தரை மணிக்கு வந்து விட்டேன். கணிச் சுவடி மற்றும் விசைப்பலகை ஒட்டிகளை ஒரு பையில் போட்டு எடுத்து வைத்திருந்தேன். பாலாவின் மடிக்கணினியில் சூசே லினக்சு நிறுவத் தேவையான தட்டுகளடங்கிய பொதியையும் மடிக்கணினி பையில் எடுத்துக் கொண்டிருந்தேன்.
வண்டி வரும் அடையாளமே தெரியவில்லை. யாருக்குத் தொலைபேசி கேட்க வேண்டும் என்று எண்ணும் வாங்கி வைத்திருக்கவில்லை. ஓட்டுனர் ஐந்து மணிக்கே வந்து இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்திருக்கிறார். அவரிடமும் என் தொலைபேசி எண் இருக்கவில்லை. போன ஒரு தடவை போல, தேநீர் தயாரித்து குடித்து, பாலபாரதி கேட்ட அறிவுமதியின் தொலைபேசி எண்ணை மின்னஞ்சலிலிருந்து எடுத்து கொடுத்து விட்டு சரி, பேருந்திலேயே கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் தெரு முனையில் வழி கேட்டுக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அதற்குள் பேச ஆரம்பித்திருந்த வினையூக்கிக்கான தொலைபேசி அழைப்பில் நிலவரத்தைச் சொல்லி 10 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னேன்.
வினையூக்கியின் வீட்டில் அவர் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டார். வடபழனியை தவிர்த்து கே கே நகர் வழியாக நூறடி சாலைக்கு வந்து அசோகா தூண் சுற்றி கிண்டி வந்தோம். கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலம் ஏறி இறங்கி பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பாலபாரதி தொலைபேசியிருந்தார். தவிர்க்க முடியாத தம்முடன் தாண்டி நின்றிருந்தார்.
ஏறியவுடன் ஓட்டுனரிடம் 'உங்க பேரென்ன?' என்று ஒரு அதட்டலாகக் கேட்டு விட்டு உட்கார்ந்தார். 'பாட்சா'. பாட்சா பாயாக மாறி விட்ட ஓட்டுனர் மிகவும் உற்சாகமாக கடைசி வரை வண்டி ஓட்டினார். ஒரு மனிதரின் பெயர் கேட்பதன் மூலம் நட்பு சூழலை உருவாக்கி விட்டாரே என்று வியந்து கொண்டேன். வாய் விட்டுச் சொல்லவில்லை.
அப்போது ஆரம்பித்த பேச்சு போகும் போதும் வரும் போது ஒரு சில மணித்துளிகள் தவிர்த்து ஓயவே இல்லை. வினையூக்கி சிறிது நேரத்துக்கெல்லாம் மௌனமாகி விட்டார். கேட்டால், 'காது கொடுத்துக் கொண்டிருக்கிறேன்' என்று அரை மயக்கத்தில் பதிலளித்தார். ஒன்று, எங்கள் விவாதங்கள் அவ்வளவு செறிவாக இருந்திருக்க வேண்டும். அல்லது சகிக்க முடியாத அறுவையாக இருந்திருக்க வேண்டும்.
வழக்கம் போல எனக்கு நல்ல பசி வந்து விட்டது. பாலாவுக்கும் சரி வினையூக்கிக்கும் சரி, வழக்கமாக தூங்கி எழுந்திருக்காத நேரம். பாலபாரதி ஆய் சரியாக போகாத விபரங்களை சொல்லி வந்தார். போகும் போது இயற்கை உந்துதல்களை பேச மறுக்கும், தயங்கும் போக்குக்குச் சவுக்கடியாக பாலபாரதி சொன்ன கருத்துக்களோடு நகர்ந்தது.
'தலைக்கு சாயம் அடித்துக் கொள்ளுங்க' என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'ஏதாவது ஒருத்தன் சொன்னா அப்படியா செய்றேன் என்று கேட்டுக்க வேண்டியதுதானே, உடனேயே முடியாது என்று ஏன் சொல்லணும்'. 'அதுக்காக பொய் சொல்ல முடியுமா, மனதுக்கு பட்டதைத்தான் சொல்வேன்.'
வழியில் சாலையோரமாக ஒரு சின்ன ஊரில் நிறுத்தினார்கள். தேநீர் கடையில் பிஸ்கட்டுகள், முறுக்குகள்தான் இருந்தன. நான் தேநீர் குடிப்பதே இல்லை என்று முடிவு கட்டி எனக்குச் சொல்லாமலே விட்டு விட்டார் பாலா. அடுத்த கடையில் சுடச் சுட வடைகள் போட்டு விற்றுக் கொண்டிருக்க அதில் நான்கு வாங்கி ஆளுக்கொன்று கபளீகரம் செய்தோம். சந்தடி சாக்கில் எனக்கும் இனிப்பு குறைவாக, கடுப்பம் குறைவாக ஒரு தேநீர் சொல்லிக் கொண்டேன்.
திண்டிவனம் வரை சாலை உயர் தரமாக இருக்க, தாண்டிய பிறகு வேலை நடந்து கொண்டிருப்பதால் ஒரு அகலப் பாதையில் இரு திசையிலும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு ஊரில் ஏதோ ஊர்வலம் என்று ஒரு பக்கச் சாலை அடைபட்டிருந்தது. வாகன ஓட்டி பாட்சா எதிர்த் திசையில் ஏறி பிற வண்டிகளைத் தாண்டி நின்று கொண்டார். தவறு என்று தெரிந்தும் நமக்கு நேரம் மிச்சப்படுகிறது என்று தெரிந்ததும் தடுக்காமலேயே இருந்து விட்டோம்.
விழுப்புரம் வருவதற்கு சற்று முந்தைய இடத்தில் ஒரு சின்ன ஊரில் திருமண விழாவுக்காக சாலையோரத்தில் மண மக்களின் புகைப்படங்களை அழகு படுத்தி பெரிய தட்டிகளை வைத்திருந்தார்கள். மிக்க ரசனையோடு பெண்ணை அழகிய, மகிழ்ச்சி காட்டும் முகத்துடனான கோணங்களில் வைத்திருந்த தட்டிகள் மிக்க நிறைவைக் கொடுத்தன. ஏதோ கணினி வரைகலை நிறுவனத்தைச் சார்ந்தவரின் திருமணம் என்று நினைத்துக் கொண்டோம்.
ஒன்பது மணி தாண்டி சிறிது நேரத்தில் விழுப்புரத்துக்குள் நுழைந்து விட்டோம். என் பசி அதற்குள் அடங்கி மந்தமாகி விட்டிருந்தது. புதுச்சேரி சாலையில் கல்லூரி இருக்கிறது. புதுச்சேரி போகும் சாலையின் திசைகாட்டிக்கு அருகிலேயே சாப்பிடும் விடுதிக்கான விளம்பரம்.
அதைப் பிடித்துக் கொண்டு நேராக விடுதிக்கு முன் வண்டி நிறுத்தச் சொன்னோம். நல்ல கூட்டம். முதலில் கிச்சடி, தொடர்ந்து தோசை. கடைசியில் பாதி காபி. சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு வழி கேட்டு வந்து சேரும் போது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. முனைவர் இளங்கோவன் தமிழ் 99 குறித்து உரையை ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் தொடங்கியதாக இரா சுகுமாரன் சொன்னார்.
வகுப்பறை போல எல்லோரையும் உட்கார வைத்து கணினிகளை சாட்சியாக வைத்து தமிழ்99ன் அருமை பெருமைகளை நுணுக்கங்களை விவரித்துக் கொண்டிருந்தார். 'இது பட்டறைங்க, ஆராய்ச்சி அறை இல்லீங்க' என்று மனதுக்குள் கூவிக் கொண்டே வந்த களைப்பாறினோம். வாய்ப்பு கிடைத்ததும் நடை முறை பயிற்சியை ஆரம்பிக்க முயற்சி செய்தோம்.
'எல்லோரும் கணினிகளின் அருகில் போய் விடுங்க. சொல்வதை எல்லாம் உங்கள் கைப்பட செய்து பார்த்தால்தான் மனதில் நிற்கும். நாங்க முன்னால் நின்று கொண்டு பேச நீங்கள் ஞாயிற்றுக் கிழமை அரைத்தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் இல்லை. நீங்கள் பயிற்சி செய்ய ஏற்கனவே விபரம் தெரிந்தவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பதுதான் நல்ல முறை' என்று நாற்காலிகளை திசை திருப்ப வைத்து கணினிகளுக்கு முன்பு எல்லோரையும் நகரச் சொல்லி விட்டேன்.
சில நிமிட கலங்கலுக்குப் பின்பு எல்லோரும் கணினிகளின் முன்பு உட்கார்ந்து கொண்டார்கள். கணினி முன்பு இடம் கிடைக்காமல் உட்கார்ந்திருந்த ரமேஷ் என்ற பையனை திரையில் விளக்கம் காட்டுவதற்காக காட்சித் திரை பொருத்தப்பட்ட கணினியை இயக்கிக் கொண்டிருந்த அருண பாரதிக்கு அருகில் போகச் சொல்லி ரமேஷூக்கு கணக்கு ஏற்படுத்தி செய்முறை விளக்கம் காட்டச் சொன்னேன்.
முதல் முயற்சியில் நான்கைந்து பேர் மின்னஞ்சல் முகவரி தொடங்க முடிந்தது. அடுத்தடுத்தவர்கள் கடவுச் சொல், கணக்குக்கான பெயர் எல்லாம் சரியாக கொடுத்து சமர்ப்பிக்கும் போது ஏதேதோ பிழை காட்டி உருவாக்க மறுத்தது. கூகுளில்தான் எல்லோரையும் நுழைத்து விட்டுக் கொண்டிருந்தோம்.அப்படியே பிளாக்கருக்குப் போய் விடலாமே!
ஒரு கட்டத்தில் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்து ஒரு வலைப்பதிவு உருவாக்குவதையும் சொல்லி முடிக்க ஏழெட்டு பேர் அதற்குள் உருவாக்கி விட்டிருந்தார்கள். அது வரை முடியாதவர்களை வேர்ட்பிரெஸ் கணக்கு உருவாக்கி வலைப்பதிவு போடச் சொன்னோம். கணினிகளில் தமிழில் எழுதும் வசதி, எழுத்துரு வசதி இல்லாமல் இருந்தது. அதனால் எல்லா வேலையும் ஆங்கிலத்தில்தான் நடந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 100 பேர் அரங்கத்தில் இருந்தார்கள். தமிழ்நம்பி பிஎஸ்என்எல்லில் அவருக்கு இருக்கும் தொடர்புகளையும், அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் மூலம் மற்ற ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறார்கள். வசதியான கணினி பயிற்சி அறை. 37 கணினிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.
கோ சுகுமாரன் உடனுக்குடன் புகைப்படங்களையும் நிகழ்ச்சி விபரங்களையும் புதுவை பதிவர்கள் வலைப்பதிவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.
வலைப்பதிவுகளில் படங்களை, ஒலி ஒளிக் கோப்புகளை இணைப்பது குறித்து வினையூக்கி பேசினார்
'எல்லாமே ஆங்கிலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்துருக்கள் எழுது கருவிகள் குறித்த அமர்வை முடித்து விட்டால்தான், எல்லோரும் தமிழில் தட்டச்ச முடியும்' என்று சொல்லி முனைவர் இளங்கோவன் அடுத்த அமர்வை ஆரம்பித்தார்.
அந்த அமர்வின் நடுவில் அமைச்சர் வந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ சலிப்பில் ஒதுக்கமான நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் பரிவாரம் வந்தது. கல்லூரி முதல்வர், விழுப்புரம் நகராட்சி தலைவர், அமைச்சர் பொன்முடி மூவருக்கும் நாற்காலி. அமைச்சரின் உதவியாளர் பேச்சாளர்களை ஒருங்கிணைத்தார்.
பேசுவதற்காக ஒலிவாங்கி மேடை, நாற்காலிகள், மேசைகள், பொன்னாடை போர்த்துதல், வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை, நன்றியுரை என்று ஒவ்வொன்றாக முறையாக செய்தார்கள். பேசிய எல்லோருமே ஓரிரு நிமிடங்களுக்குள் தமது பேச்சை சிற்றுரையாக முடித்துக் கொண்டது சிறப்பு. அமைச்சர் மட்டும் நீளமான உரை. பொருட்பிழை எதுவும் இல்லாமல், எழுதி கொண்டி வந்திருந்த குறிப்புகளிலிருந்து பொருத்தமாக பேசினார்.
பேச்செல்லாம் முடிந்து எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள் என்ற கட்டத்தில், 'அமைச்சருக்கும் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்' என்று முனைவர் இளங்கோவின் காதில் சொல்ல, அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு ஒலிவாங்கியில் கழகத் தமிழில் கொஞ்சம் புகழ் மாலைகள் சூட்டி விட்டு இரண்டு நிமிடங்களில் அமைச்சர் பொன்முடிக்காக் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறோம் என்று அறிவித்தார்.
அருண பாரதி சுறுசுறுப்பாக கணக்கு உருவாக்க ஆரம்பித்தார். நானும் கூட்டத்தை முன்பக்கத்தில் கடந்து திரை பொருத்திய கணினிக்கு அருகில் அருண பாரதி செய்வதை ஒலிபெருக்கியில் சொல்லும் பொறுப்பை எடுத்தேன். நான்கைந்து நிமிடங்களில் பொன்முடி2008 என்று அடையாளத்தில் ஜிமெயில் கணக்கு, கலைஞர் என்ற பெயருடன் ஒரு வலைப்பதிவும் உருவாக்கி, முதல் இடுகையைப் போட்டுக் காண்பித்து விட்டார்கள். உரத்த கைத் தட்டல்களுடன் அதை நிறைவு செய்தது கூட்டம்.
அத்துடன் அமைச்சர் குழாம் புறப்பட்டு போய் விட முனைவர் இளங்கோவன் தமிழ் எழுத்துருக்கள், தட்டச்சுவது குறித்த அமர்வைத் தொடர்ந்தார். ஒரு மணி தாண்டி விட்டது. பசி எடுக்க ஆரம்பித்தது. அவர் தனது பேச்சை முடித்து இடைவெளி விட்ட நேரத்தில், தமிழ் 99 விசைப்பலகை ஒட்டிகள் குறித்த அறிவிப்பை செய்து 2 ரூபாய்கள் நன்கொடை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
சர சரவென்று 100 ரூபாய்களுக்கு மேல் வாங்கிக் கொண்டார்கள் அன்பர்கள். கறுப்பு, வெள்ளை என்று இரண்டு ரகங்கள். சில ஒட்டிகளில் எழுத்துக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. பாரி முதன் முதலில் என்னிடம் கொடுத்த ஒட்டிகளைப் போல தரம் இல்லை என்று தோன்றியது. இவை தமிழ்நம்பிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டிகள்.
மதிய உணவுக்கு அழைத்தார்கள். மூன்று வகை கலந்த சோறு, அப்பளம். முன் நடைபாதையில் வட்டமாக உட்கார்ந்து, அதற்குள் வந்து சேர்ந்தி விட்டிருந்த விக்கி, அவர் நண்பர், பாலபாரதி, வினையூக்கி, பாட்சா என்று நன்கு சாப்பிட்டு முடித்தோம். தமிழ்நம்பியிடம் வினையூக்கிக்கு ஒரு நேர்முகம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்ற வகையில் அவரது அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டுமே!
ஆர்வம் குறையாமல் எல்லோரும் சாப்பாட்டுக்குப் பிறகு கூடி விட்டார்கள். எல்லோருக்கும் சுவையாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கச் சொன்னார்கள். தமிழ்மணம், தமிழ்ப்பதிவுகளின் எண்ணிக்களை, தேன் கூடு, தமிழ் வெளி, தமிழ் பிளாக்ஸ் என்று பல தளங்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளை விளக்கிக் கொண்டிருந்தேன். கூகிள் ரீடரில் இணைப்பது குறித்த அமர்வை ஒரு நண்பர் தொடங்க, அது சிறிது நேரம் தொடர்ந்தது. பாலபாரதி, விக்கி, நான் என்று இடையிடையே பங்களிப்பு செய்து கொண்டிருந்தோம்.
பாலாவின் கணினியில் சூசே லினக்சு நிறுவும் வேலையை ஆரம்பித்தோம். நல்ல வேளையாக வந்த சிக்கல்கள் எல்லாம் சுலபமாக அவிழ்ந்து ஒரு மணி நேரத்துக்குள் அவரது கணினியின் ஒரு பிரிவில் லினக்சு வேலை செய்ய ஆரம்பித்து விட்டிருந்தது.
கடைசியாக இயங்குதளங்களில் தமிழ் என்று ஒரு அமர்வில் நான் பேச வேண்டும். அதற்கு முன்பே இரா சுகுமாரன் தமிழ் மென்பொருள் கருவிகள் குறித்து பேசி விட்டிருந்தார். விண்டோசு, லினக்சு என்று நான் தயக்கமாகத்தான் பேச ஆரம்பித்தேன். எதிர்பார்த்திராத ஒரு அமைதி, ஆர்வத்தை உணர முடிந்தது. சில நிமிடங்களிலேயே நான்கைந்து பேர் லினக்சு குறித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.
பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அவர்கள். அவர்கள் பள்ளிகளில் லினக்சு நிறுவப்பட்ட கணினிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிய ஆர்வமாக இருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக