திங்கள், மே 11, 2009

கனவுகள்

தமிழ்நாட்டில் எந்த ஊருக்குப் போனாலும் தரமான உணவு யாருக்கும் கிடைக்க வேண்டும். வீடுகள், உணவு விடுதிகள், சத்திரங்கள் இருக்க வேண்டும். எல்லா வீடுகளுக்கும் குடிதண்ணீர் வீட்டு பயன்பாட்டு தண்ணீர் வீட்டுக்கு உள்ளேயே வந்து விழ வேண்டும். தண்ணீர் விலைக்கு விற்கப்படுவது நின்று போக வேண்டும்.

இயற்கை விவசாய முறையில் விளைந்த பண்டங்கள் தாராளம் கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். பொதுமக்கள் உயர்ந்த விலை கொடுத்து உணவு வாங்கும் அளவுக்கு வளம் பெற்றிருக்க வேண்டும்.

இலவசங்கள், சோம்பேறியாக்கும் அரசுத் திட்டங்கள் ஒழிக்கப் பட வேண்டும். நாடெங்கும் முழு மதுவிலக்கு செயல்படுத்தப்பட வேண்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப் பட வேண்டும். உலக நாட்டின் நுட்பங்கள் எல்லாம் தமிழ் மொழியில் தரமான புத்தகங்களாகக் கிடைக்க வேண்டும்.

நாட்டின் எல்லா கிராமங்களிலும் அகலப்பட்டை இணைய வசதி இருக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களாக பணி புரிய திறமையானவர்கள் முன் வர வேண்டும்.

அடிப்படை சுகாதார அறிவு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். வேதி மருந்துகள் தவிர்த்த மருத்துவ வசதி பொது மருத்துவமனைகளில் உயர்தரமாக கிடைக்க வேண்டும்.

நல்ல சாலைகள், வீட்டுக்குள் குடிநீர், நடந்து போகும் தூரத்தில் உயர்தரமான பள்ளிக்கல்வி, உடல் நலம் பேண மருத்துவ வசதிகள், சட்ட ஒழுங்கு பராமரிப்பு அரசாங்கத்தின் கடமைகளாக இருக்க வேண்டும்.

மின்சாரம், தொலைதொடர்பு, பொழுதுபோக்கு இவற்றை ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கண்காணிப்பில் தனியார் தொழில்கள் வழங்க வேண்டும். தேவைப்படுபவர்கள் காசு கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களுக்கு இலவசங்களாக எதை எதையோ அள்ளிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் படிப்பதற்கும், உடல் நிலை பராமரிப்பதற்கும், தரமான குடிநீருக்கும் காசு செலவழிக்க வைக்கிறார்கள்.

மதத்தின் பேரால், சாதியின் பேரால் கட்சிகள் இயக்கங்கள் தடை செய்யப்படும். மத நிறுவனங்கள் சொத்து சேர்ப்பது தடை செய்யப்படும். மக்களின் காணிக்கையின் பேரில் இயங்க முடியும் கோயில்களைத் தவிர மற்றவை பொது அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டு விட வேண்டும்.

6 கருத்துகள்:

பீர் | Peer சொன்னது…

கனவு மெய்பட வேண்டும்.

Dr.Sintok சொன்னது…

//கனவு மெய்பட வேண்டும்.//
சத்தியமாக நடக்காது....:(

துளசி கோபால் சொன்னது…

இதோ நான் தூங்கப்போறேன்.
கனவு நானும் காணவேண்டாமா?

ஆசையாத்தான் இருக்கு.....ஆனால் அரசியல்வியாதிகள் விடாதே இதையெல்லாம் நடத்த(-:

KARTHIK சொன்னது…

// பள்ளி ஆசிரியர்களாக பணி புரிய திறமையானவர்கள் முன் வர வேண்டும்.//

இது ஒன்னு நடந்தாக்கூட போதும்.

Arun SAG சொன்னது…

பொது உடமை மென்பொருள் (free software) பயன் படுத்தப்பட வேண்டும், பாடத்திட்டதில் இருந்து மைக்ரோசாப்ட் போன்ற மக்களை ஏமாற்றும் நிறுவனங்களின் பாடங்கள் அகற்றபட வேண்டும். (vendor neutral syllabus)

மா சிவகுமார் சொன்னது…

Chill Peer நன்றி. Dr Sintok, சத்தியமாக நடக்கும்! :-)

துளசி அக்கா,
பகல் கனவுகள்தான் பலிக்குமாம், தூக்கத்துக் கனவுகளைப்பற்றி அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது :-)

கார்த்திக்,
நாம் எல்லாம் அதை ஏன் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

அருண்,
//பொது உடமை மென்பொருள் (free software) பயன் படுத்தப்பட வேண்டும்,//

இதை எப்படி விட்டேன்!. நல்ல வேளை சேர்த்து விட்டீர்கள். நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்