திங்கள், மே 18, 2009

தேர்தல் முடிவுகள் - சில குறிப்புகள்

தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னது போலவே திமுக கூட்டணி அதிகமான வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரசு பெருந்தலைகளுக்குப் பின்னடைவு, மணிசங்கர அய்யர், தங்கபாலு, பிரபு, ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லோரும் தோற்பார்கள் போலத் தெரிந்தது. ப சிதம்பரம் தோற்று விட்டதாக செய்தி வந்த பிறகு மறு எண்ணிக்கை, மறு முறையீடு என்று முந்தி விட்டார். காலை நாளிதழில் முடிவு அவர் வெற்றி என்றுதான் போட்டு விட்டார்கள்.

பாமக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார். பாஜகவின் கனவுகள் கன்னியாகுமரியிலும், ராமநாதபுரத்திலும் கலைந்து போயின. திமுகவின் ஹெலன் டேவிட்சன் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் கன்னியாகுமரியிலும், திடீர் ஹீரோ ரித்தீஷ் ராமநாதபுரத்திலும் வெற்றி பெற்று விட்டார்கள்.

பெருந்தலைகள் டி ஆர் பாலு, அழகிரி, ராஜா, தயாநிதி மாறன் வெற்றி பெற்று விட்டார்கள். தா பாண்டியன், வைகோ மண்ணைக் கவ்வி விட்டார்கள்.

1. மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,
  • கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
  • மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
  • பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
    இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • ராஜஸ்தான், தில்லி, ஜம்மு காஷ்மீர் பெரும் பின்னடைவு.
  • மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் வாலாட்டுவது பெருமளவுக்கு எடுபடவில்லை.
2. காங்கிரசு கட்சிக்கு
  • உத்திரபிரதேசம், தில்லி, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் (குறைந்த அளவில்) ஆகிய நான்கு மாநிலங்களிலும் தனி வெற்றி.
  • மேற்கு வங்கம், தமிழ்நாடு, காஷ்மீர் மாநிலங்களில் கூட்டணி வெற்றி.
3. மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. இந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டு ஆட்சியை இன்னும் மேம்படுத்தினால் அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்புகள் மேம்படலாம். அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

4. பொதுவுடமைக் கட்சிகள் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் தமது பிடியை வெகுவாக தளர விட்டிருக்கிறார்கள். சமாளித்து தலையெடுப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது.

5. திமுக அரசை நீக்க வேண்டும், மாயாவதி அரசை நீக்க வேண்டும் என்உற மிரட்டும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசில் செல்வாக்கு பெற முடியாது. மம்தா பானர்ஜி மட்டும் மேற்கு வங்க அரசுக்கு எதிராக மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கலாம். சோனியா காந்தியின் ஜனநாயக உள்ளுணர்வு அதற்கு இடம் கொடுக்காது என்று நம்பலாம்.

6. நரேந்திர மோடி, குஜராத்தில் போன தடவையை விட ஒரு இடம் அதிகம் வெற்றி பெற செய்திருக்கிறார். 'தோல்விக்குக் காரணம் அத்வானிதான், மோடி பாணி வெறுப்பு அரசியலைத் தீவிரப்படுத்தினால்தான் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று கட்சி முடிவு செய்தால் அவரது முக்கியத்துவம் அதிகமாகலாம்.

7. பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது. குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

8. ஜெயலலிதா தனது உயர் குதிரையிலிருந்து இறங்கி வர வேண்டியிருக்கும். விஜயகாந்தின் கூட்டணி கிடைத்தால்தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புகள் அதிகமாகும். அதிலும் தனியாக விஜயகாந்த் நின்று, திமுக/காங்கிரசு கூட்டணி தொடர்ந்தால் விஜயகாந்த் பேர் சொல்லுமளவுக்கு இடங்களில் வெற்றி பெற்று மற்ற இடங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு போய் விடுவார். அதே உறுதியுடன் தனித்துச் செயல்பட்டால் 2016ல் விஜயகாந்துக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். இதற்கிடையில் என்னென்ன மாற்றங்கள் வரப் போகின்றனவோ!

9. அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும். திமுக காங்கிரசுடன் சேர்ந்திருப்பதான் பாஜகவுடன் உறவாடிய பாவத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது. இது வரை உறவாடியவர்களுக்கும், இனிமேல் சேர்ந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் கடுமையான எண்ணத் தடையை உருவாக்கக் கூடிய முடிவுகள்.

சோ ராமசாமிக்கு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தமிழகத்தில் தாக்கம் இல்லை என்று தான் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று மட்டும்தான் சொல்லிக் கொள்ள முடியும். பாஜக 170, 200 என்று பேசிக் கொண்டிருந்தது, திமுக செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டது எல்லாமே கசப்பு மருந்துகள்தான். அதிலும் விஜயகாந்தின் தேமுதிக வாக்குகளைப் பிரிப்பது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று தான் சொன்னது நடந்திருக்கிறது என்று சொல்லலாம்.

மற்றபடி பாஜகவுக்கு ஒரு சில மாநிலங்களில்தான் பின்னடைவு. காரணங்களை ஆராய்ந்து செயல்பட்டால் அடுத்த முறை வெற்றி பெற்று விடலாம் என்பார். போன தேர்தலிலும் அதையேத்தான் சொல்லியிருந்தார்.

6 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

// 6. நரேந்திர மோடி, குஜராத்தில் போன தடவையை விட ஒரு இடம் அதிகம் வெற்றி பெற செய்திருக்கிறார். 'தோல்விக்குக் காரணம் அத்வானிதான், மோடி பாணி வெறுப்பு அரசியலைத் தீவிரப்படுத்தினால்தான் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று கட்சி முடிவு செய்தால் அவரது முக்கியத்துவம் அதிகமாகலாம்.//

அண்ணா குஜராத்த பொருத்தவரைக்கும் மோடி நல்லா செயல் பட்டிருப்பதாகா சொல்லுராங்க.
இதனைக்கும் இலவசம்குரதே அங்க இல்லையாம் விவசாயத்துக்கு கூட அங்க கரண்ட் இலவசம் கிடையாதாம்.

மொத்தத்துல இந்த தேர்தல்ல பாமக அடிவாங்குனது சந்தோசமே.
இது அவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

//மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. இந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டு ஆட்சியை இன்னும் மேம்படுத்தினால் அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்புகள் மேம்படலாம். அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.//

இது நீங்கள் சொன்னது.

//பாஜகவுக்கு ஒரு சில மாநிலங்களில்தான் பின்னடைவு. காரணங்களை ஆராய்ந்து செயல்பட்டால் அடுத்த முறை வெற்றி பெற்று விடலாம் என்பார். போன தேர்தலிலும் அதையேத்தான் சொல்லியிருந்தார்.//

இது சோ சொல்வதாக நீங்கள் சொல்வது. எந்த இடத்தில் நின்று யார் சொல்கிறீர்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.

பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.

பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.

ஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.

பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு... அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.

Boston Bala சொன்னது…

முக்கியமான அலசல். நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

//அண்ணா குஜராத்த பொருத்தவரைக்கும் மோடி நல்லா செயல் பட்டிருப்பதாகா சொல்லுராங்க.
இதனைக்கும் இலவசம்குரதே அங்க இல்லையாம் விவசாயத்துக்கு கூட அங்க கரண்ட் இலவசம் கிடையாதாம்.//

இலவசம் என்பது யாருக்கு எது கொடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

வாழ்நாள் முழுவதும் உடலுழைப்பு செய்து சமூகப் பாதுகாப்பு எதுவும் இல்லாத 70 வயது முதியவருக்கு பொங்கலுக்கு வேட்டியும் சட்டையும் கொடுப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா!

பள்ளிக்குப் போகாமல் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு சத்துணவு போடுவதில் என்ன தவறு!அதனால் அவர்களுக்குக் கல்வி கண் திறப்பது சமூகத்திற்கு முன்னேற்றம் இல்லையா!

கல்வியையும் உடல் நலம் பேணுதலையும் வியாபாரமாக்கும் தனியார் அணுகுமுறைக்கு மாற்றாக எல்லோருக்கும் சமச்சீரான இலவசக் கல்வியை அரசாங்கம் வழங்குவதில் என்ன குறை காண முடியும்!

குஜராத்தில் என்ன நடக்கிறது என்று நான் நேரில் பார்க்கவில்லை. பொதுவாக வியாபார பிரிவினருக்கு ஊக்கம் தரும்படிதான் பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் இருக்கும். குஜராத்தில் தொழில் முனைவோர் அதிகம்.

அதைத் தவிர்த்து குறிப்பிட்ட மதத்தவரை அச்சுறுத்தி நிர்வாகம் நடத்துவதில் என்ன பெருமை என்று எனக்குப் புரியவில்லை.

//பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.//

அனானி, இப்படி ஊடகங்கள் சொல்வதை மட்டும் பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை. ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டிய படி அலசி ஆராய்ந்துதான் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். பாஜகவின் உண்மை முகம் தெரிந்தவர்கள் யாரும் அருகில் போகக் கூட அருவெறுக்கத்தான் செய்வார்கள்.

//பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.//

தலித்துகளின் பிரநிதியாக காட்டிக் கொண்டு கட்சி ஆரம்பித்தாலும் பிற்பாடு மற்ற சாதியினரையும் அணைத்துச் செல்ல முனையும் மாயாவதியின் அணுகுமுறைக்கும், நரேந்திர மோடி, வருண் காந்தி என்று வெறுப்பை விதைக்கும் பாரதீய ஜனதா கட்சியின் அணுகுமுறைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

மாயாவதி அகில இந்தியாவிலும் தான் தனியாக வெற்றி பெற்று சர்வாதிகாரி ஆகி விட வேண்டும் என்று முயற்சிக்காமல், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் கட்சிகளுன் ஒத்துப் போய் கூட்டணி அமைத்து செயல்பட்டால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கலாம்.

//பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும்.//
உண்மைதான். சங்கத்தின் கோட்பாடுகளை செயல்படுத்தும் கரங்கள்தான் பாரதீய ஜனதா கட்சி. தொடர்பைத் துண்டித்துக் கொண்டால் எதுவும் மிஞ்சாது. பாஜக அழிந்து ஒழிந்து போவதே இந்திய நாட்டுக்கு நல்லது.

//முக்கியமான அலசல்.//

நன்றி போஸ்டன் பாலா.

அன்புடன்,
மா சிவகுமார்

-/சுடலை மாடன்/- சொன்னது…

//சோ ராமசாமிக்கு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தமிழகத்தில் தாக்கம் இல்லை என்று தான் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று மட்டும்தான் சொல்லிக் கொள்ள முடியும்.//

தமிழ்நாட்டில் ஈழத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன என்று சொல்வதே சரி. சன், கலைஞர், ஜெயா போன்ற பெரிய தமிழ்த் தொலைக்காட்சிகள் ஈனத்தனமான அரசியல் செய்பவை. மக்கள் தொலைக் காட்சி மட்டுமே ஈழத்துச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கின்றதென அறிகிறேன். ஆனால் மக்கள் தொலைக்காட்சி இன்னும் பரவலான செல்வாக்குடன் இருப்பதாகத் தெரியவில்லை. நாளிதழ்களில் தினமலம் போன்ற இதழ்களும், இந்து போன்ற ஆங்கில இதழ்களும் இலங்கை அரசின் ஊதுகுழல்களாக இருந்து பொய்களை எழுதித் தள்ளுகின்றன. இப்படியிருக்க தமிழக மக்கள் மத்தியில் ஈழத்தில் நடக்கும் கொலைகள் கொண்டு சேர்க்கப் படவில்லை. எனவே மக்கள் ஈழச்செய்திகளை அறிந்து கொள்ளுவதற்குக் கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஈழத்து உணர்வாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு உழைத்த நான்கு காங்கிரசு அமைச்சர்கள் தொகுதிகளிலும் காங்கிரசு தோற்கடிக்கப் பட்டிருக்கிறது. சிதம்பரம் தோற்கடிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்ட பின் ஏதேதோ தில்லுமுல்லு செய்திருக்கிறானென்று நம்பப் படுகிறது. அப்படியே இருந்தாலும் நாடாளுமன்றத்தொகுதிக் கணக்குப் படி பார்த்தால் (சிதம்பரத்தின் ஊழல் பணபலத்தையும், கார்த்திக் சிதம்பரத்தின் இரவுடித்தனத்தையும் மீறிக்) கிடைத்த மூவாயிரம் வாக்குகள் பெரிதல்ல. எனவே ஈழத்தில் நடப்பதை நன்கு அறிந்தார்களென்றால் தமிழக மக்கள் தெளிவாகத் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே சோமாறி சொல்வதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாமென்று நினைக்கிறேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

மா சிவகுமார் சொன்னது…

சுடலை மாடன்,

ஈழ போராட்டத்தின் பாதிப்பு தமிழகத் தேர்தலில் ஆழமாகவே தெரிந்தது. ப சிதம்பரம், ஈ வி கே எஸ் இளங்கோவன், பிரபு, தங்கபாலு என்ற முக்கியஸ்தர்கள் எல்லோரையும் திணற வைத்த அலை, திமுகவின் கட்சி பலத்தாலும், பண தாக்குதலாலும் மற்ற தொகுதிகளில் அணை போடப்பட்டது என்று தோன்றுகிறது. ஜெயலலிதாவின் போலி பாசாங்குகள் இன்னொரு காரணம், அவரை நம்பி மோசம் போக பல பிரிவினரும் தயாராக இல்லை.

மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிருந்தால் உண்மையான தாக்கம் தெரிந்திருக்கும். (10 தொகுதிகளுக்குக் குறையாமல் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கலாம்). வாக்கு சதவீதத்தை பார்த்தால் கூட இத்தகைய கூட்டணி 25% வாக்குகளைத் தொட்டிருக்கும்.

சோ, இந்து ராம் போன்றவர்கள்தான் அதிகார கொள்கைகளுக்கு உரம் போடுகிறார்கள் என்பது நடைமுறை உண்மை.

அன்புடன்,
மா சிவகுமார்