செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகஇகவும் இணையமும்

http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/

http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர

மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.

திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.

மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.

அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்

1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.

2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில்  கருத்தாக்கம் செய்வது  முக்கியமான பணி.

இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சுதந்திரம்!!!

"நிலம் வாங்கணும் என்றால் என்னிடம் கேட்டிருந்தால் அறிவுரை சொல்லியிருப்பேனே எந்த நிலத்தை வாங்கலாம், எதை வாங்கக் கூடாது என்று. இது போல அரசு நிறுவனத்தின் நிலத்தில் கை வைத்து மாட்டிக் கொண்டாயே" என்று ஊழல் செய்ததாக வழக்கில் சிக்கிய அப்போதைய முன்னாள் முதல்வருக்கு  (செல்வி ஜெயலலிதா) அப்போதைய  முதல்வர் (திரு கருணாநிதி) கருத்து சொன்னார்.

எதைச் செய்தால் மாட்ட முடியாது என்று அலசி ஆராய்ந்து புத்தி கூர்மையுடன் ஊழல் செய்யும் திரு கருணாநிதியின் சாமர்த்தியத்தின் உச்சக்கட்டம் இந்த ஆட்சிக் காலம்.
  • குழந்தையின் கையில் கிலுகிலுப்பை வாங்கித் தருவதாகச் சொல்லி கழுத்தில் போட்டிருக்கும் நகையை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கிலுகிலுப்பையையும் பறித்துக் கொள்கிறார்கள்.
  • ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, நகையை மட்டும் திரும்பக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.
  • குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு நகையின் பயன்பாடும் இல்லை. கிலுகிலுப்பையின் பலனும் இல்லை. 
குழந்தை - எல்நெட் கார்பொரேஷன்
கிலுகிலுப்பை - ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர்
நகை - எல்நெட் கார்பொரேஷனின் சொத்துக்கள்
திருடர்கள் - எல்நெட் மற்றும் ஈடிஎல்லின் நிர்வாகிகள்

பெற்றோர்கள் - எல்காட், தமிழக அரசு, எல்காட்டின் சிறுபான்மை பங்குதாரர்கள்
  1. ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர் என்ற நிறுவனத்திற்கு எல்நெட் கார்போரேஷனின் சொத்துக்களை பயன்படுத்தி விட்டு ஈடிஎல்லின் உரிமை, ஆதாயத்தில் பங்கு எல்லாவற்றையும் தனியார் அடித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான ஊழல் வெளியில் வந்திருக்கிறது.
  2. இந்த விபரங்களின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு விசாரிக்க முனைந்த எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர்கள் சுறுசுறுப்பாக பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  3. கிரிமினல் மூளைகளின் ஊழல் வேலை ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல இருக்கிறது.  இந்தச் சில கோடிகளுக்கு இவ்வளவு 'உழைத்திருக்கிறார்கள்' என்றால் பத்தாயிரக் கணக்கான கோடிகள் அடித்த விவகாரங்களில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்!
ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை களவாடிய ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்தி தகுந்த தண்டனை கிடைக்க வைப்பது அவசியம். அது தானாக, ஒரே நாளில் நடந்து விடப் போவதில்லை. திரு உமாசங்கர் போல பொறுமையாக, விடா முயற்சியுடன் வழக்கை எழுப்பி உண்மையை நிலை நாட்ட வேண்டியிருக்கும்.
  • இந்தக் கட்டத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், ஏற்படப் போகும் பொருளாதாரப் பேரழிவில் மக்கள் சிக்கி, பெரும் இன்னலுக்கு வழிவகுக்கும்.
  • 100 கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, 60,000 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லும் போது அது வெறும் எண்களாகப் போய் நமது மனதை மரக்க வைத்து விட்டது. இந்தப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயும், சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரை வாட்டும் வகையில் போய் முடியும்.
  • 60,000 ரூபாய் அடித்ததில் 6,000 கோடி ரூபாய் தேர்தல் லஞ்சமாக வாக்காளர்களுக்குக் கொடுத்து காசு வாங்கியவர்களை மகிழ்வித்து விட்டாலும், மீதி 54,000 கோடி ரூபாய்கள் நாட்டுப் பொருளாதாரத்தில் பாய்ந்து, பொருட்களின், குடியிருப்பின், கல்வியின், மருத்துவ சேவையின் விலை உயர்வாக மக்களை வாட்ட ஆரம்பிக்கும். 
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க, பொறுப்புள்ள ஒவ்வொருவரும் தமது குரலை உரக்க ஒலிப்பது இன்றைய தேவை.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை

நேற்று ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போயிருந்த போது வினியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் எழுதியிருந்தது. Communist Workers Platform (CWP) என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் பிரசுரத்தில் "படியுங்கள் மாற்றுக் கருத்து" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் தேடினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவும் கிடைத்தது.
http://sattavizhippunarvu.blogspot.com/2010/07/cwp.html

==========

நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவம் ஆகும். இங்கு நிலவுவது முதலாளித்துவ லாப நோக்கப் பொருளாதாரம். லாப நோக்கம் உழைப்பவரையும் நாட்டின் வளங்களையும் சுரண்டி தனியார் கொழுக்க வழிவகுத்துக் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையில் நமது நாட்டில் உழைப்பாளர் இருப்பது மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முதலாளிகளுக்கு வாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருகிறது, சுரண்டலின் விளைவாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுகிறது. அது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தித் தேக்க நெருக்கடியினை தோற்றுவிக்கிறது.

நமது நாட்டின் அரசு இந்த முதலாளித்துவத்தின் நலன்களுக்காக அடிப்படையில் இருக்கக்கூடிய அரசு. அது உருவாக்கும் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுபவையே. மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுவதால் உற்பத்திப் பொருள் விற்பனை குறைந்து ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளே உற்பத்தியை முழுவீச்சில் தொடரமுடியாமல் திணறுகின்றன, இந்நிலையில் குன்றி வரும் முதலீட்டு வாய்ப்புகளை எப்படியாவது முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தருவதும் அரசின் பணியாக உள்ளது. நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் சுமத்துகிறது. அதனை எதிர்த்து கிளம்பும் உழைக்கும் மக்கள் இயக்கங்களை நசுக்குவதும் திசை திருப்புவதும் முதலாளித்துவ அரசின் முக்கிய பணிகளாக உள்ளன.

முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பொதுநல அரசு என்ற பாவனையில் அரசு அதன் கைவசம் வைத்திருந்த பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றையும் கூட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது . அதைக் கொண்டே உழைக்கும் வர்க்க இயக்கத்தை நசுக்கப் பயன்படும் அடக்குமுறை கருவிகளை மென்மேலும் வலிமைப்படுத்துகிறது.

முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் இன்றைய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோய்க் கொண்டுள்ளன. அமைப்பு வெகு வேகமாக பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு மக்கள் சந்தித்து கொண்டுள்ள பிரச்னைகள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோசலிச அமைப்பை நிறுவுவது உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் இன்றைய நிலையில் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும். அந்த முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றத்தை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டு உண்மையான சமூக மாற்ற சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத் திசைவழியில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதே கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (CWP) அமைப்பாகும்.
==========

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் - கற்கால மனிதர்களின் சட்டம்

இரானில் திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று விதித்த தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவோம்.

http://english.aljazeera.net/news/middleeast/2010/08/2010812141953137551.html

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

கீழ்சேவூர் காந்தி - அங்காடித் தெரு - The City of Joy

கீழ்சேவூர் காந்தி

கதவைத் திறந்து வெளியில் வரும் போது குடியிருப்பில் காவல் வேலை பார்ப்பவர் உரக்க பாடிக் கொண்டிருந்தார். வீட்டுக் கதவுக்கு நேரெதிரே எதிர் வீட்டின் முன்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார்.

காலையில் தினகரன் வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். 'புத்தகம் ஏதாவது இருக்கிறதா' என்று என்னிடம் கேட்டு வாங்கிக் கொள்வார். வழுக்கைத் தலை, இருந்த முடிகளில் முழுநரை, சிரித்த முகம், மென்மையான பேச்சு.

'உங்க பேரு என்ன, ஊரு என்ன, எப்படி இங்க வந்தீங்க' என்று பேசியது இல்லை. நமக்குள்ளேயே ஆழ்ந்து நமது வேலையிலேயே ஓடிக் கொண்டிருந்து விட்டு மனிதர்களை அணுகத் தெரியாமலே போய் விட்டது.

"நல்லா பாடுறீங்க!" என்றேன். அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. திரும்ப உரக்கச் சொன்னேன்.
எழுந்து வந்து விட்டார்.

'நான் வே ஷம் எல்லாம் கட்டுவேங்கய்யா! ராமர் வே ஷம், விஷ்ணு வே ஷம் எது தேவையோ அதைக் கட்டுவேன்'

திரைப்படங்களில் பார்த்த விஷ்ணு போன்ற முகவெட்டு இருக்கிறது அவருக்கு. என்ன, முகத்தில் சதைப்பற்று கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.

காய்ந்து விட்ட துணிகளை எடுத்து வீட்டில் போட்டு விட்டு வெளியில் புறப்படும் எண்ணத்தில் வந்திருந்தேன்.

'பக்த பிரகலாதாவில் மகாவிஷ்ணுவா வருவேன்'

'அப்போ சிங்க முகம் வைச்சு நடுக்கணும் இல்லையா?'

'அது இல்லையா, அது பெரிய கதை. இரணியன், இரணியாக்கதன்னு இரண்டு பேரு. ஒரு முனிவர் உண்டே, எதுக்கெடுத்தாலும் கோபம் வரும்? துர்வாசர்! ஒரு தடவை விஷ்ணுவப் பார்க்க வரும் போது துவாரகபாலர்கள், விஷ்ணு தூங்கிக் கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்கள்."

என்று ஆரம்பித்து காட்சிகளை ஒவ்வொன்றாக கோர்வையாகச் சொல்ல ஆரம்பித்தார். பிரகலாதன் கதை தெரிந்திருந்தாலும், இவர் சொன்ன விபரங்கள் புதுப்பித்தலாகத்தான் இருந்தன. சாபம் வாங்கிய துவாரபாலர்கள் - ராவணன்/கும்பகர்ணன், சிசுபாலன்/(இன்னொரு பெயர்) , இரணியன் /இரணியாக்கதன் என்று பிறந்து விஷ்ணுவின் கையாலேயே கொல்லப்பட்டு திரும்ப வைகுண்டம் போனார்களாம். அதில் இரணியனுக்குப் பிறந்தது பிரகலாதன்.

பிரகலாதனுக்கு விஷ்ணு பக்தி தாயின் வயிற்றிலேயே ஊட்டப்பட்டது, பள்ளிப் படிப்பு, அப்பாவை எதிர்த்து நின்றது என்று வேகமாகச் சொல்லி முடித்தார்.

கையில் துணிகளுடன் நின்று கொண்டிருந்த என்னுடைய அவசரம் உணராமல் இருந்தால் இன்னும் நீளமாகக் கூடப் பேசியிருப்பார்.

'எங்க ஊர் விழுப்புரம் பக்கம், கீழ் சேவூர்'

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக தினமும் பார்ப்பவரிடம் இப்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் பெயர் காந்தி.

அங்காடித் தெரு
சிறந்த படைப்புகளில் கவனித்த ஒன்று எந்த மனிதர்களுமே செயற்கையான வில்லன்களாக இருக்க மாட்டார்கள்.
  • கடை முதலாளிக்கு குறைந்த செலவில் நிறைய விற்க வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.
  • மேலாளருக்கு வேலைக்கு நிற்கும் இளைஞர்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும், முதலாளிக்கு விசுவாசமாக உழைக்க வேண்டும். அவ்வப்போது தனது வக்கிரத்தையுமசொரிந்து கொள்ள வேண்டும்.
  • காதலியை மறுக்கும் இளைஞனுக்கு கிராமத்தில் மணிஆர்டருக்குக் காத்திருக்கும் குடும்பம் முக்கியம்.
  • 'வேணாம்னா போ', 'வெளியூருக்குப் போறோம்னு அதிக சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது' என்ற அம்மாவுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடும் இந்த வேலைக்காரர்கள் என்ற கவனம்.
இப்படித் தத்தமது கட்டாயங்களுக்கு, தத்தமது நலனுக்காக மட்டும் இயங்கும் மக்கள் நிரம்பிய நகரத்தில், கிராமங்களிலிருந்து தமது வாழ்க்கையையும் அடையாளங்களையும் தொலைத்து விட்டு வந்து சேரும் இளைஞர்கள் நகர வாழ்க்கையின் மனசாட்சிக்கு வெளியிலேயே வைக்கப்பட்டு விடுகிறார்கள்.

காலையில் நாளிதழ் வீசிப் போகும் பையன், துரித தபால் கொண்டு வந்து கொடுத்து கையெழுத்து வாங்கிப் போகும் இளைஞன், தொலைபேசியில் அழைத்து பில் கட்டச் சொல்லும் பெண் என்று பலர் ஒரு இயந்திரமாகவே பங்கு பெறுகிறார்கள்.

'என் வீடு, என் உறவுகள், என் நண்பர்கள் என்று பட்டியலை கவனிக்கவே மனம் நிறைந்து விடுகிறது. ஆயிரக் கணக்கான வெளி வட்டங்களுக்கு எங்கிருந்து இடம் கிடைக்கும்?' ஒரு மனிதர் 150 உறவுகளைத்தான் பேண முடியும் என்று ஆராய்ச்சி செய்தார்களாம். அதற்கு மேல் உள் வாங்காமாலேயே இருந்து விடுவது பைத்தியம் பிடித்து விடாமல் இருக்க ஒரு தற்காப்புதானாம்.

அப்படியே உறுத்தி கேள்வி எழுந்தால் 'அவன் சின்ன வயதில் சரியா படிக்கலை, அதான் இப்படி கஷ்டப்படுகிறான்' என்று ஒரு விளக்கம் சொல்லி நகர்ந்து விடுகிறோம்.

தந்தை விபத்தில் இறந்ததால், குடும்பத்தின் கடன் சுமையால் 'கெட்டும்' பட்டணம் சேரும் சோகங்கள் உறுத்த இடம் கொடுப்பதே இல்லை.

The City of Joy

அத்தகைய சோகங்களை எல்லாம் பிழிந்தெடுத்து அத்தியாயம் அடுத்து அத்தியாயமாக சகதியிலும், சாக்கடையிலும், அழுகும் சதை நாற்றத்திலும், குப்பையில் பொறுக்கிய உணவுப் பொருட்களிலும், உறிஞ்சப்படும் ரத்தத்திலும் நம்மை மூழ்கடிக்கிறார் டொமினிக் லேப்பியர்.

'இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்' என்று "தேசபக்தர்"களால் பழிக்கப்படக் காரணமாக இருந்த புத்தகம். சைதாப்பேட்டையில் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை விரிப்பில் கிடைத்தது. ஏதோ தனியார் சங்கத்துக்காக அழகாக பைண்டு பண்ணி வைத்திருந்த பதிப்பு. புத்தகத்துக்குள் 50 ரூபாய் என்று ஒரிஜினல் விலை பொறித்திருந்தார்கள், விற்றவர் 60 ரூபாய் வாங்கிக் கொண்டார்.

பிச்சை எடுக்கும் குழந்தைகள், நடைபாதையில் தூங்கும் மக்கள், கொத்து வேலைக்கு வரும் வேற்று மொழி பேசுபவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், மருத்துவமனைக்கு வெளியே சாப்பாடு விற்பவர்கள் என்று நகரத்தில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பின் ஒரு வரலாறு.

அவர்கள் எல்லோருமே 'சின்ன வயதில் சரியாகப் படிக்காமல்' பட்டணத்து அவல வாழ்வில் வந்து சேர்ந்து விடவில்லை.
  • கைக்கும் வாய்க்குமாக வானம் பார்த்த விவசாயம் செய்த குடும்ப மூத்த மகன், ஒரு பருவம் மழை பொய்த்ததும் குடும்ப நலனுக்காக மனைவி குழந்தைகளுடன் நகரம் வருகிறார்.

    பட்டினி, குழந்தைகள் குப்பையில் பொறுகிக் கொண்டு வரும் உணவு, ரத்தம் கொடுத்து சம்பாதிக்கும் பணம், கடைசியில் கை ரிக் ஷா இழுக்க ஆரம்பித்தல், நடைபாதையிலிருந்து ஒரு சேரி, அங்கிருந்து துரத்தப்பட்டு இன்னொரு சேரி, மகளுக்கு கல்யாணம் செய்து வைத்ததோடு உயிரை விடுகிறார். கல்யாணச் செலவுக்காக இறந்த பின் தன் எலும்புகளை முன் கூட்டியே விற்று விடுகிறார்.

  • மண்பானை செய்யும் பரம்பரையினர் பிளாஸ்டிக் குடங்கள் படை எடுத்ததும் வாழ்வாதாரம் இழந்து பட்டணம் வருகிறார்கள்.

  • காட்டில் வாழும் பழங்குடி மக்கள், நகர நாகரீகத்தின் நில ஆதிக்கத்தில் உதைக்கப்பட்டு நகரத்தில் வந்து விழுகிறார்கள்.

  • மூன்றாவது பாலினர், கலப்பு பாலினர் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நகரத்துக்குள் தஞ்சம் புகுகிறார்கள்.
எல்லோருமே கனவுகளும், சுய மதிப்பும், பெருமையும் நிறைந்த மனிதர்கள்.
  • அறைக்குள் தூங்கும் போது எலிகள் சுற்றி விளையாடுகின்றன
  • கரப்பான் பூச்சிகள் ஓட்டப் பந்தயம் நடத்துகின்றன.
  • கைகால் நகர்த்த முடியாமல் இருப்பவரின் கால் கைகளை எலிக்கள் கரம்பித் தின்று விடுகின்றன.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், மழை நீரும் மல நீரும் கலந்து வீட்டுக்குள் நிரம்பி நிற்கிறது.
இப்படி மூச்சு முட்ட முட்ட வாசகரை முக்கி எடுக்கிறார் ஆசிரியர். அமெரிக்காவிலிருந்து சேவை செய்ய வரும் மருத்துவ இளைஞர், இந்தச் சூழலிலிருந்து வெளி வந்து மூச்சு இழுக்க டாக்சியில் ஏறி ஐந்து நட்சத்திர விடுதிக்குப் போகிறார். இந்தச் சூழலிலேயே மூழ்கி விட வேண்டும் என்று போலந்து பாதிரியார் வந்து தங்கி விடுகிறார்.

இந்தப் புத்தகத்தை இன்னொரு முறை படிக்க முடியுமா? தெரியவில்லை. சில வாரங்கள் கழித்து, ஏதாவது நிகழ்வை மறுபடியும் வாசிக்க தோன்றலாம். அதில் ஆரம்பித்து புத்தகத்தை முழுவதும் படித்து விடலாம்.

பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.