ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சுதந்திரம்!!!

"நிலம் வாங்கணும் என்றால் என்னிடம் கேட்டிருந்தால் அறிவுரை சொல்லியிருப்பேனே எந்த நிலத்தை வாங்கலாம், எதை வாங்கக் கூடாது என்று. இது போல அரசு நிறுவனத்தின் நிலத்தில் கை வைத்து மாட்டிக் கொண்டாயே" என்று ஊழல் செய்ததாக வழக்கில் சிக்கிய அப்போதைய முன்னாள் முதல்வருக்கு  (செல்வி ஜெயலலிதா) அப்போதைய  முதல்வர் (திரு கருணாநிதி) கருத்து சொன்னார்.

எதைச் செய்தால் மாட்ட முடியாது என்று அலசி ஆராய்ந்து புத்தி கூர்மையுடன் ஊழல் செய்யும் திரு கருணாநிதியின் சாமர்த்தியத்தின் உச்சக்கட்டம் இந்த ஆட்சிக் காலம்.
  • குழந்தையின் கையில் கிலுகிலுப்பை வாங்கித் தருவதாகச் சொல்லி கழுத்தில் போட்டிருக்கும் நகையை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கிலுகிலுப்பையையும் பறித்துக் கொள்கிறார்கள்.
  • ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, நகையை மட்டும் திரும்பக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.
  • குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு நகையின் பயன்பாடும் இல்லை. கிலுகிலுப்பையின் பலனும் இல்லை. 
குழந்தை - எல்நெட் கார்பொரேஷன்
கிலுகிலுப்பை - ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர்
நகை - எல்நெட் கார்பொரேஷனின் சொத்துக்கள்
திருடர்கள் - எல்நெட் மற்றும் ஈடிஎல்லின் நிர்வாகிகள்

பெற்றோர்கள் - எல்காட், தமிழக அரசு, எல்காட்டின் சிறுபான்மை பங்குதாரர்கள்
  1. ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர் என்ற நிறுவனத்திற்கு எல்நெட் கார்போரேஷனின் சொத்துக்களை பயன்படுத்தி விட்டு ஈடிஎல்லின் உரிமை, ஆதாயத்தில் பங்கு எல்லாவற்றையும் தனியார் அடித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான ஊழல் வெளியில் வந்திருக்கிறது.
  2. இந்த விபரங்களின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு விசாரிக்க முனைந்த எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர்கள் சுறுசுறுப்பாக பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  3. கிரிமினல் மூளைகளின் ஊழல் வேலை ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல இருக்கிறது.  இந்தச் சில கோடிகளுக்கு இவ்வளவு 'உழைத்திருக்கிறார்கள்' என்றால் பத்தாயிரக் கணக்கான கோடிகள் அடித்த விவகாரங்களில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்!
ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை களவாடிய ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்தி தகுந்த தண்டனை கிடைக்க வைப்பது அவசியம். அது தானாக, ஒரே நாளில் நடந்து விடப் போவதில்லை. திரு உமாசங்கர் போல பொறுமையாக, விடா முயற்சியுடன் வழக்கை எழுப்பி உண்மையை நிலை நாட்ட வேண்டியிருக்கும்.
  • இந்தக் கட்டத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், ஏற்படப் போகும் பொருளாதாரப் பேரழிவில் மக்கள் சிக்கி, பெரும் இன்னலுக்கு வழிவகுக்கும்.
  • 100 கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, 60,000 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லும் போது அது வெறும் எண்களாகப் போய் நமது மனதை மரக்க வைத்து விட்டது. இந்தப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயும், சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரை வாட்டும் வகையில் போய் முடியும்.
  • 60,000 ரூபாய் அடித்ததில் 6,000 கோடி ரூபாய் தேர்தல் லஞ்சமாக வாக்காளர்களுக்குக் கொடுத்து காசு வாங்கியவர்களை மகிழ்வித்து விட்டாலும், மீதி 54,000 கோடி ரூபாய்கள் நாட்டுப் பொருளாதாரத்தில் பாய்ந்து, பொருட்களின், குடியிருப்பின், கல்வியின், மருத்துவ சேவையின் விலை உயர்வாக மக்களை வாட்ட ஆரம்பிக்கும். 
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க, பொறுப்புள்ள ஒவ்வொருவரும் தமது குரலை உரக்க ஒலிப்பது இன்றைய தேவை.

8 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

சிவா,
என்னாதிது... :-))

ஒரே அமர்க்களமாய் இருக்கு
புதிய வடிவமைப்பு

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

நாம வேறு பணிகளில் மூழ்கி இருக்கும் போது உலகம் வெகு வேகமாக முன்னேறி விட்டிருக்கிறது :-)

பிளாக்கரில் புதிய வார்ப்புருக்கள், வடிவமைப்புக்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். அவற்றைக் கண்டு கொள்ளாமலே இருந்தேன்.

இப்போது சில நாட்களாக எல்லாவற்றையும் reset செய்யும் வகையில் வலைப்பதிவுகளையும் மறுவடிவமைத்தேன். அதுதான் நீங்கள் பார்ப்பது :-)

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

அது சரிதான். மத்திய அமைச்சர் பெருமக்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள். லோக்கர் அரசியல்வாதிகளில் வா மற்றும் உ எல்லாம் இணைந்திருக்கிறார்கள். கூட்டுக்களவாணித்தனம் நடக்கிறது.

பாண்டியன், புதுக்கோட்டை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வலைச்சர வாரத்தில் உங்கள் தளம் குறித்த பார்வை நேற்றைய பகிர்வில்...

படிக்க... http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_20.html

நட்புடன்
சே.குமார்
Http://vayalaan.blogspot.com

மா சிவகுமார் சொன்னது…

நன்றி குமார்.

வானவன் யோகி சொன்னது…

மிக அற்புதமாக,அதுவும் தங்களின் பணியூடாக, எப்படி இவ்வளவு அபாரமாக எழுத முடிகிறது உங்களுக்கு மட்டும்.

விடயங்கள், மக்களுக்கு வார்க்கப்பட்ட விடங்கள்

தாங்கள் அதைத் தெரிவித்த விதங்கள்...

வாழ்த்துக்களும்..... பாராட்டுக்களும்...உங்களின் சமூகப் பிரக்ஞைக்காக....!!!

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வானவன் யோகி,

வேலை நிறைய இருந்த நேரத்தை விட இப்போது எழுதுவதே குறைவுதான் :-) உங்கள் பாராட்டுக்கு நன்றி.
அன்புடன் / மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாளாக இந்தியாவில் இடைவிடாமல் டுவீட்டப்படும் buzz word இது தான்.

http://www.dnaindia.com/blogs/post.php?postid=318

இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும்.