கதவைத் திறந்து வெளியில் வரும் போது குடியிருப்பில் காவல் வேலை பார்ப்பவர் உரக்க பாடிக் கொண்டிருந்தார். வீட்டுக் கதவுக்கு நேரெதிரே எதிர் வீட்டின் முன்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார்.
காலையில் தினகரன் வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். 'புத்தகம் ஏதாவது இருக்கிறதா' என்று என்னிடம் கேட்டு வாங்கிக் கொள்வார். வழுக்கைத் தலை, இருந்த முடிகளில் முழுநரை, சிரித்த முகம், மென்மையான பேச்சு.
'உங்க பேரு என்ன, ஊரு என்ன, எப்படி இங்க வந்தீங்க' என்று பேசியது இல்லை. நமக்குள்ளேயே ஆழ்ந்து நமது வேலையிலேயே ஓடிக் கொண்டிருந்து விட்டு மனிதர்களை அணுகத் தெரியாமலே போய் விட்டது.
"நல்லா பாடுறீங்க!" என்றேன். அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. திரும்ப உரக்கச் சொன்னேன்.
எழுந்து வந்து விட்டார்.
'நான் வே ஷம் எல்லாம் கட்டுவேங்கய்யா! ராமர் வே ஷம், விஷ்ணு வே ஷம் எது தேவையோ அதைக் கட்டுவேன்'
திரைப்படங்களில் பார்த்த விஷ்ணு போன்ற முகவெட்டு இருக்கிறது அவருக்கு. என்ன, முகத்தில் சதைப்பற்று கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.
காய்ந்து விட்ட துணிகளை எடுத்து வீட்டில் போட்டு விட்டு வெளியில் புறப்படும் எண்ணத்தில் வந்திருந்தேன்.
'பக்த பிரகலாதாவில் மகாவிஷ்ணுவா வருவேன்'
'அப்போ சிங்க முகம் வைச்சு நடுக்கணும் இல்லையா?'
'அது இல்லையா, அது பெரிய கதை. இரணியன், இரணியாக்கதன்னு இரண்டு பேரு. ஒரு முனிவர் உண்டே, எதுக்கெடுத்தாலும் கோபம் வரும்? துர்வாசர்! ஒரு தடவை விஷ்ணுவப் பார்க்க வரும் போது துவாரகபாலர்கள், விஷ்ணு தூங்கிக் கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்கள்."
என்று ஆரம்பித்து காட்சிகளை ஒவ்வொன்றாக கோர்வையாகச் சொல்ல ஆரம்பித்தார். பிரகலாதன் கதை தெரிந்திருந்தாலும், இவர் சொன்ன விபரங்கள் புதுப்பித்தலாகத்தான் இருந்தன. சாபம் வாங்கிய துவாரபாலர்கள் - ராவணன்/கும்பகர்ணன், சிசுபாலன்/(இன்னொரு பெயர்) , இரணியன் /இரணியாக்கதன் என்று பிறந்து விஷ்ணுவின் கையாலேயே கொல்லப்பட்டு திரும்ப வைகுண்டம் போனார்களாம். அதில் இரணியனுக்குப் பிறந்தது பிரகலாதன்.
பிரகலாதனுக்கு விஷ்ணு பக்தி தாயின் வயிற்றிலேயே ஊட்டப்பட்டது, பள்ளிப் படிப்பு, அப்பாவை எதிர்த்து நின்றது என்று வேகமாகச் சொல்லி முடித்தார்.
கையில் துணிகளுடன் நின்று கொண்டிருந்த என்னுடைய அவசரம் உணராமல் இருந்தால் இன்னும் நீளமாகக் கூடப் பேசியிருப்பார்.
'எங்க ஊர் விழுப்புரம் பக்கம், கீழ் சேவூர்'
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக தினமும் பார்ப்பவரிடம் இப்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் பெயர் காந்தி.
அங்காடித் தெரு
சிறந்த படைப்புகளில் கவனித்த ஒன்று எந்த மனிதர்களுமே செயற்கையான வில்லன்களாக இருக்க மாட்டார்கள்.
- கடை முதலாளிக்கு குறைந்த செலவில் நிறைய விற்க வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.
- மேலாளருக்கு வேலைக்கு நிற்கும் இளைஞர்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும், முதலாளிக்கு விசுவாசமாக உழைக்க வேண்டும். அவ்வப்போது தனது வக்கிரத்தையுமசொரிந்து கொள்ள வேண்டும்.
- காதலியை மறுக்கும் இளைஞனுக்கு கிராமத்தில் மணிஆர்டருக்குக் காத்திருக்கும் குடும்பம் முக்கியம்.
- 'வேணாம்னா போ', 'வெளியூருக்குப் போறோம்னு அதிக சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது' என்ற அம்மாவுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடும் இந்த வேலைக்காரர்கள் என்ற கவனம்.
காலையில் நாளிதழ் வீசிப் போகும் பையன், துரித தபால் கொண்டு வந்து கொடுத்து கையெழுத்து வாங்கிப் போகும் இளைஞன், தொலைபேசியில் அழைத்து பில் கட்டச் சொல்லும் பெண் என்று பலர் ஒரு இயந்திரமாகவே பங்கு பெறுகிறார்கள்.
'என் வீடு, என் உறவுகள், என் நண்பர்கள் என்று பட்டியலை கவனிக்கவே மனம் நிறைந்து விடுகிறது. ஆயிரக் கணக்கான வெளி வட்டங்களுக்கு எங்கிருந்து இடம் கிடைக்கும்?' ஒரு மனிதர் 150 உறவுகளைத்தான் பேண முடியும் என்று ஆராய்ச்சி செய்தார்களாம். அதற்கு மேல் உள் வாங்காமாலேயே இருந்து விடுவது பைத்தியம் பிடித்து விடாமல் இருக்க ஒரு தற்காப்புதானாம்.
அப்படியே உறுத்தி கேள்வி எழுந்தால் 'அவன் சின்ன வயதில் சரியா படிக்கலை, அதான் இப்படி கஷ்டப்படுகிறான்' என்று ஒரு விளக்கம் சொல்லி நகர்ந்து விடுகிறோம்.
தந்தை விபத்தில் இறந்ததால், குடும்பத்தின் கடன் சுமையால் 'கெட்டும்' பட்டணம் சேரும் சோகங்கள் உறுத்த இடம் கொடுப்பதே இல்லை.
The City of Joy
அத்தகைய சோகங்களை எல்லாம் பிழிந்தெடுத்து அத்தியாயம் அடுத்து அத்தியாயமாக சகதியிலும், சாக்கடையிலும், அழுகும் சதை நாற்றத்திலும், குப்பையில் பொறுக்கிய உணவுப் பொருட்களிலும், உறிஞ்சப்படும் ரத்தத்திலும் நம்மை மூழ்கடிக்கிறார் டொமினிக் லேப்பியர்.
'இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்' என்று "தேசபக்தர்"களால் பழிக்கப்படக் காரணமாக இருந்த புத்தகம். சைதாப்பேட்டையில் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை விரிப்பில் கிடைத்தது. ஏதோ தனியார் சங்கத்துக்காக அழகாக பைண்டு பண்ணி வைத்திருந்த பதிப்பு. புத்தகத்துக்குள் 50 ரூபாய் என்று ஒரிஜினல் விலை பொறித்திருந்தார்கள், விற்றவர் 60 ரூபாய் வாங்கிக் கொண்டார்.
பிச்சை எடுக்கும் குழந்தைகள், நடைபாதையில் தூங்கும் மக்கள், கொத்து வேலைக்கு வரும் வேற்று மொழி பேசுபவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், மருத்துவமனைக்கு வெளியே சாப்பாடு விற்பவர்கள் என்று நகரத்தில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பின் ஒரு வரலாறு.
அவர்கள் எல்லோருமே 'சின்ன வயதில் சரியாகப் படிக்காமல்' பட்டணத்து அவல வாழ்வில் வந்து சேர்ந்து விடவில்லை.
- கைக்கும் வாய்க்குமாக வானம் பார்த்த விவசாயம் செய்த குடும்ப மூத்த மகன், ஒரு பருவம் மழை பொய்த்ததும் குடும்ப நலனுக்காக மனைவி குழந்தைகளுடன் நகரம் வருகிறார்.
பட்டினி, குழந்தைகள் குப்பையில் பொறுகிக் கொண்டு வரும் உணவு, ரத்தம் கொடுத்து சம்பாதிக்கும் பணம், கடைசியில் கை ரிக் ஷா இழுக்க ஆரம்பித்தல், நடைபாதையிலிருந்து ஒரு சேரி, அங்கிருந்து துரத்தப்பட்டு இன்னொரு சேரி, மகளுக்கு கல்யாணம் செய்து வைத்ததோடு உயிரை விடுகிறார். கல்யாணச் செலவுக்காக இறந்த பின் தன் எலும்புகளை முன் கூட்டியே விற்று விடுகிறார். - மண்பானை செய்யும் பரம்பரையினர் பிளாஸ்டிக் குடங்கள் படை எடுத்ததும் வாழ்வாதாரம் இழந்து பட்டணம் வருகிறார்கள்.
- காட்டில் வாழும் பழங்குடி மக்கள், நகர நாகரீகத்தின் நில ஆதிக்கத்தில் உதைக்கப்பட்டு நகரத்தில் வந்து விழுகிறார்கள்.
- மூன்றாவது பாலினர், கலப்பு பாலினர் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நகரத்துக்குள் தஞ்சம் புகுகிறார்கள்.
- அறைக்குள் தூங்கும் போது எலிகள் சுற்றி விளையாடுகின்றன
- கரப்பான் பூச்சிகள் ஓட்டப் பந்தயம் நடத்துகின்றன.
- கைகால் நகர்த்த முடியாமல் இருப்பவரின் கால் கைகளை எலிக்கள் கரம்பித் தின்று விடுகின்றன.
- துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், மழை நீரும் மல நீரும் கலந்து வீட்டுக்குள் நிரம்பி நிற்கிறது.
இந்தப் புத்தகத்தை இன்னொரு முறை படிக்க முடியுமா? தெரியவில்லை. சில வாரங்கள் கழித்து, ஏதாவது நிகழ்வை மறுபடியும் வாசிக்க தோன்றலாம். அதில் ஆரம்பித்து புத்தகத்தை முழுவதும் படித்து விடலாம்.
பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக